வியாழன், 23 மார்ச், 2023

மனைவி ஊரில் இல்லாதபோது...

 நீண்ட தூர பயணங்களுக்கு நீங்கள் ரயிலில் செல்வதை விரும்புவீர்களா இல்லை பஸ்ஸில் செல்வதை விரும்புவீர்களா

என்கிற கேள்விக்கு பெரும்பாலானோரின் பதில் ரயில் என்றே இருக்கும்.  ஏனென்று கேட்டால் கழிவறை உள்ளிட்ட வசதிகளை சொல்லலாம்.  அல்லது படுத்துக் கொண்டு பயணிக்கும் வசதி பற்றிச் சொல்லக்கூட்டும்.  

இப்போதெல்லாம் பஸ்ஸில் கூட படுத்துக்கொண்டு பயணம் செய்யும் பெர்த் வசதி வந்து விட்டது என்றாலும் ரயிலைதான் பாதுகாப்பான பயணத்துக்கு தெரிவு செய்வார்கள் மக்கள்.

எனக்கென்னவோ ரயில் பயணத்தைவிட பஸ் பயணமே பிடிக்கும்.  ஏனென்று சொல்லத் தெரியவில்லை.  

ரயில்வே ஸ்டேஷனையும் வெளியூர் செல்லும் பஸ் ஸ்டாண்ட் களையும் கம்பேர் செய்தால் எனக்கு ஒன்று தோன்றும்.

ஏதோ ஒரு இனம் தெரியாத சொல்ல முடியாத சோகம் ஒன்று ரயில் நிலையங்களில் காணப்படும்.  

அதே பஸ் நிலையங்களில் ஒரு பொதுவான உற்சாக மனநிலைதான் தோன்றும்.  

ரயில் நிலையங்களில் பயணம் செய்வோரில் பாதி பேர் உம்மென்ற முகத்துடன் இருப்பார்கள்.  வழியனுப்புவோரில் நிறையபேர் கண்கலங்கி சோகத்தில் மூழ்கி இருப்பார்கள்.  பஸ் நிலையத்தில் ஊருக்கு செல்வோரும், வழியனுப்புவோரும் ஒரு உற்சாக மனநிலையில் தான் பெரும்பாலும் காணப்படுவார்கள்.  எனக்குதான் அப்படித் தோன்றுகிறதோ என்று அலுவலகத்தில் ஓரிரண்டு பேசும்போது சொன்னால், ஆமாம் சார்..  உண்மைதான் நீங்கள் சொல்வது என்கிறார்கள்.

இதெல்லாமே காரணமாக இல்லாமல் ஒரு இறுக்கமான, சோகமான நிலைதான் ரயில் நிலையங்களில் தென்படுவதாக தோன்றும் எனக்கு.  ஆனால் இதற்காகததான் பஸ் பயணத்தை விரும்புகிறேன் என்று தவறாக நினைக்க வேண்டாம்.  அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை.

முடியாத வயதில் என் அப்பா மதுரைக்கும் சென்னைக்கும் வந்து சென்று கொண்டிருந்தார்.  அவர் சொல்லும் நாட்களில் எங்களால் உடன் செல்ல முடியாத நிலையாய் இருக்கும்.  பயணத்தை ஒத்திப்போடவும் சம்மதிக்க மாட்டார். திடீரென எங்களிடமோ இல்லை யாரிடமாவது சொல்லி இரண்டு நாட்களில் பயணத்துக்கு டிக்கெட் வாங்கி தயாராகி விடுவார்.  அது மாதிரியான கடைசி சில சமயங்களில் ரயில் புறப்படும் நேரம் எனக்கும் கண் கலங்கும், அவருக்கும் கண் கலங்கும்.  முகத்தைத் திருப்பிக் கொள்வார்.  காட்டிக்கொள்ள மாட்டார்.

என் பாஸும் என் மாமியாரும் யார் ஊருக்கு கிளம்பினாலும் கண்கலங்கி விடுவார்கள்.

நான் சொல்லும் ரயில் நிலையங்கள் என்பது சென்ட்ரல், எக்மோர் போன்ற ரயில் நிலையங்களை.   மின்சார ரயில் கடக்கும் நிலையங்கள் அல்ல.  அவை  இயந்திரமயமானவை.  செங்கல்பட்டிலிருந்து சென்ட்ரலோ, பீச் ஸ்டேஷனோ, மாம்பமோ வரும் அலுவலகப் பயணிகள் ரயிலுக்குள் ஒரு அவசர உலகத்தை சிருஷ்டித்துக் கொண்டு வருகிறார்கள்.   பாட்டும் கூத்தும், பயணத்தில் படிக்கும் புத்தகங்களும், ஒன்றுமே இல்லாமல் தாண்டிச் செல்லும் இடங்களை வெறித்துக்கொண்டும் என்று தினசரி இயந்திர வாழ்க்கை.

எனக்குத் தோன்றியதைச் சொன்னேன்.

==========================================================================================================

கொத்தமங்கலம் சுப்புவின் மெகா கூட்டுக் குடும்பம்
‘இந்தக் காலத்தில் ஏதுங்க கூட்டுக் குடும்பம்? எல்லாம் அபார்ட்மென்ட் வாழ்க்கை ஆகிப்போச்சு!’ என சலிக்கிறீர்களா? சென்னை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள இந்த அபார்ட்மென்ட் இன்றைக்கும் 70 பேர் கொண்ட ஒரு பிரமாண்ட கூட்டுக் குடும் பத்தைச் சுமந்திருக்கிறது.
விசாரித்துப் பார்த்தால், இது பழம்பெரும் எழுத்தாளர் கொத்தமங்கலம் சுப்புவினுடைய குடும்பம்! அவர் எழுத்தில் இனித்த ‘தில்லானா மோகனாம்பாளை’ இன்றைக்கும் மறக்க முடியுமா? குடும்பச் சித்திரங்களைப் படைத்த அவரின் குடும்பம் இன்றைக்கும் உறுதிபட ஒன்றுபட்டிருப்பது பர்ஃபெக்ட் பொருத்தம்!
‘‘எங்க அப்பாவுக்கு நாங்க 14 பிள்ளைங்க. ‘அக்னி நட்சத்திரம்’ படத்துல கார்த்திக் வசிக்கிற வீடா வருமே... அதுதான் எங்க வீடு. இப்ப அதையே இடிச்சி 14 வீடு கொண்ட அபார்ட்மென்டா கட்டிக்கிட்டோம். பில்டிங் மாறியிருக்கலாம்... ஆனா, குடும்பம் அப்படியேதான் இருக்கு!’’ - பெருமிதமாகப் பேசுகிறார் வாரிசுகளில் மூத்தவரான விஸ்வநாதன் சுப்பு.‘‘அப்பாவுக்கு மூணு மனைவிகள்.
முதல் தாரமான எங்க அம்மாவுக்கு நானும் என் அண்ணனும்தான் பிள்ளைகள். அப்பாவுக்கு சொந்த ஊர் தஞ்சாவூர் பக்கம் கன்னேறி ஏந்தல். எங்க அம்மா ஊரான கொத்தமங்கலத்தை தன் பேரில் சேர்த்துக்கிட்டார். என்னோட மூணு வயசுலயே எங்க அம்மா இறந்துட்டாங்க. சின்னம்மா லட்சுமி அம்மா மடியிலதான் நாங்க வளர்ந்தோம். அவங்களுக்கு 10 குழந்தைகள். மூணாவதா, நடிகை சுந்தரிபாய் அம்மாவை அப்பா கல்யாணம் பண்ணிக்கிட்டார்.
அப்பா ஜெமினி கதை இலாகாவில் அங்கம் வகிச்சவர். சினிமா, நாவல், தொடர்கதைகள்னு அப்பா எழுத்துத் துறையில கொடி கட்டிப் பறந்தப்ப வாங்கிப் போட்ட குட்டி பங்களா இது. ஒரு பெரிய கூடம், ரெண்டு பக்கமும் நாலு நாலு அறைகள். ஒரே ஒரு சமையலறை... இதுதான் பங்களாவின் அமைப்பு. சுந்தரிபாய் அம்மாவுக்குப் பிறந்த 2 பிள்ளைகளோட சேர்ந்து மொத்தம் 14 பேர் இங்கேதான் தவழ்ந்து வளர்ந்தோம்.
ஏற்கனவே எங்க வீட்ல பாட்டிகள், தாத்தாக்கள், சித்தப்பா - சித்திகள்னு உறவுக்காரர்கள் கூட்டம் அலைமோதும். அதனால சின்னம்மாவோட வரவு யாருக்கும் ஒண்ணும் வித்தியாசமா படலை. ஏதோ கூடுதல் பலம் இந்தக் குடும்பத்துக்கு கிடைச்சிட்டது போலத்தான் உணர்ந்தோம். நாங்க யாருமே வெவ்வேறு அம்மாவுக்குப் பிறந்தவங்கனு எந்தக் காலத்திலும் நினைச்சதில்லை.
அப்பா வீட்ல இருக்கும்போது வீடே அமைதியா இருக்கும். சில சமயம் ரொம்ப அமைதி அதிகமாயிடுச்சுன்னா அப்பாவே கூடத்துக்கு வந்து எல்லாரையும் கூப்பிட்டு ஆரவாரமா விளையாடச் சொல்லுவார். அதுக்கும் சரின்னு ஆட்டம் போடுவோம். சரியோ தப்போ... அப்பா பேச்சுக்கு மறுபேச்சு இல்ல.
இதுதான் எங்க வீட்டு ரூல்ஸ். எங்களை ஒண்ணா பிணைச்சு இருந்ததும் அதுதான். 1976ல அப்பா இறந்தப்போ ரெண்டு பெண்கள் ரெண்டு பிள்ளைகளுக்குத்தான் கல்யாணம் ஆகியிருந்தது. கேப்டன் இல்லாத ஷிப் மாதிரி ஆகிடுச்சேனு வருங்காலத்தை நினைச்சு அரண்டு போயிட்டோம்!’’ என நிறுத்துகிற விஸ்வநாதனைத் தொடர்கிறார் அவர் மனைவி விமலா.
‘‘தொடக்கம் சரியா இருந்தா, எல்லாம் சரியா இருக்கும். எங்க கல்யாணத்தப்பவே ‘குடும்பம் ஒண்ணாதான் இருக்கும். அதைப் பிரிக்கக் கூடாது’னு கண்டிஷன் போட்டாங்க. அதே கண்டிஷனை அடுத்தடுத்த கல்யாணப் பேச்சு தொடங்கும்போதும் யாராவது முன்மொழிஞ்சுடுவாங்க. ஒரு கட்டத்துல எங்க குடும்பத்தைப் பத்தி எல்லாருக்கும் தெரிஞ்சுடுச்சு. கூட்டுக் குடும்பமா வாழ சம்மதம் இருக்குறவங்கதான் இங்கே பெண் கொடுக்கவே வந்தாங்க!’’ என்கிறார் அவர் புன்னகையுடன்.
‘‘கல்யாணம் ஆன புதுசுல எனக்குக் கூட பயம்தான். ரெண்டு மாமியார், எட்டு நாத்தனார்கள், ஐந்து மச்சினர்கள் இருக்குற குடும்பம்னா யாருக்குத்தான் பயம் இருக்காது? ஆனா, போகப் போக எல்லாம் பழகி சகஜமாகிடுச்சு!’’ என்கிறார் அந்த வீட்டின் இன்னொரு மருமகளான வித்யா.
‘‘இப்படிப்பட்ட கூட்டுக் குடும்பங்கள் எல்லா விதத்திலும் வசதிங்க. என்னைத் தேடி வீட்டுக்கு வர்ற ஃப்ரெண்ட் எல்லாம் நான் இல்லாட்டி கூட மற்ற அண்ணன், தம்பிகள் கூட பேசிட்டிருப்பாங்க. அண்ணன் தம்பிகளோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் எனக்கும் ஃப்ரெண்ட்ஸா இருப்பாங்க. இப்படி நம்ம நட்பும் பரந்து விரியும். அதனால முன்னேற்றமும் அதிகம் இருக்கும்!’’ என்கிறார் சுந்தரிபாயின் மகனான முரளி.
‘‘எங்க 14 பேரோட விழுதுகள் இப்ப 70 பேரா வந்து நிக்குது! அடுத்த தலைமுறை வந்தாச்சு. அவங்களுக்காக எல்லாரும் ஒரே கேம்பஸ்ல வசிக்க முடியாத சூழல். சிலர் இந்த ஃப்ளாட்டுகளை வாடகைக்கு விட்டுட்டு வெளிநாட்லயும் சிலர் வெளி மாநிலங்கள்லயும் இருக்காங்க!’’ எனத் துவங்குகிறார் சுவாமிநாதன். பதினான்கு உடன்பிறப்புகளில் ஒருவர்.
‘‘ஒரே வீட்ல இருக்கும்போது கூட இல்லாத நெருக்கத்தை டிஜிட்டல் டெக்னாலஜி கொடுக்குது. எல்லாரும் எப்பவும் எங்க பாக்கெட்லயே இருக்குற மாதிரி இருக்கு. ஆனா, இப்பவும் குடும்பத்துல ஒரு விசேஷம்னா உலகத்தின் எந்த மூலையில இருந்தாலும் ஒண்ணு கூடிடுவோம்!’’ எனக் கட்டை விரலை உயர்த்திக் காண்பிக்
கிறார் அவர்.
- டி.ரஞ்சித், நன்றி: குங்குமம்

=====================================================================================


தெரியாத பாதைகளில் பிரிந்து போகிறோம்.. சில பயணங்கள் சுகமானவை; சில சுமையானவை. கூடு திரும்பும் நாள் என்று தெரியாமல் கிளம்பும் பயணம் கனமானது.


ரயில்கள் தாண்டிச் சென்ற பின் 
தனிமையில் தவித்த 
தண்டவாளங்கள் 
ஆர்வத்துடன் காத்திருக்கின்றன 
அடுத்தடுத்த ரயில்களுக்காக 

இறங்கிச் சென்ற மக்கள் 
கடந்து சென்ற பின்னும் 
அங்கேயே அமர்ந்து 
காதலுடனும் நட்புடனும் 
நேரம் போக்கும் சிலரால் 
கலகலப்பையும் கொஞ்சம்
காட்டுகிறது  
ரயில் நிலையம்   

ஓய்வெடுக்கும் வியாபாரிகள் 
இயந்திரகதியான இயக்கத்தில்
அடுத்த ரயிலின் 
பேரிரைச்சலுக்காகக் 
காத்திருக்கிறார்கள் 
கையில் 
வியாபாரத் தட்டுகளுடன் 

வெளியில் வந்தால் 
சற்று தூரத்தில் 

தூர்ந்து போன பாதைகளின் 
முடிவில் 
தொலைவில் தெரிகிறது 
பயனிழந்துபோன 
பழைய ரயில் நிலையம் ஒன்று 
பயன்பட்ட பழைய 
நாட்களின் 
நிறமிழந்துபோன நினைவுகளோடு 
முற்றிலுமாய் தான் 
காணாமல் போகும்
அந்த முடிவு நாளுக்காக
மௌனமாகக் காத்திருக்கிறது ​

அருகிலேயே பட்டுப்போன 
மரமொன்றும் 
பசுமையாய் தான் வளர்ந்திருந்து 
நிழல் தந்த 
காலங்களின் நினைவுகளோடு 
சாய்ந்து நிற்கிறது 
காலத்தின் எச்சங்களாக 

வெளியில் வந்து 
வேகமாய்ச் சென்று மறையும் 
சுயநல 
மக்கள் கூட்டத்தில் 
தன் 
சோகங்களை சொல்லமுடியாமல்
நினைவில் வந்து 
திரும்பிப் பார்க்கும் 
ஒருவனுக்காகக் காத்திருக்கிறது 
சிதிலமடைந்த அந்தக் கட்டிடம் 
================================================================================================

பார்த்ததில் ரசித்தது..


====================================================================================================

படித்ததில் பகிர ஆசைப்பட்டது...


=======================================================================================

பொக்கிஷம்..

அப்படியே தங்கமாயிருந்தால் பொக்கிஷம்தான்!

ஜிகுஜிகுஜிகு ரயில் வண்டி...எஞ்சின் வேகம் ரயிலின் வேகம் என்பின்னாலே நீ தொடராதே...

மோட்டார் வண்டியும் புகை விடுவது போல இருக்கிறது இல்லை?!

பயணங்கள் தொடர்கின்றன...


போன வாரமே பானு அக்கா எங்கே ஜோக்ஸ் என்று கேட்டிருந்தார்...



மனைவி ஊரில் இல்லாதபோது..



106 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம். இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.

    பதிலளிநீக்கு
  2. மாம்பழமோ வரும் அலுவலகப் பயணிகள் ....... :) மாம்பழம் - மாம்பலம்.....


    எனக்கு இரயில், பஸ், விமானம்,, கப்பல் எதில் பயணித்தாலும் பிடிக்கும் ஶ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருத்தி விட்டேன். நன்றி.

      பிடிக்கும் என்பது சரி.  உணர்வுகளை சொன்னேன்.   நான் கூட்டமாயிருந்தால் பஸ்ஸிலோ, மின்வண்டியிலோ ஏற மாட்டேன்!  நசுங்கி கொண்டு செல்வது பிடிக்காது!

      நீக்கு
  3. 70 பேர் கொண்ட கூட்டுக்குடும்பம் - பிரமிப்பாக இருக்கிறது. விட்டுக்கொடுத்துப் போவதன் சுகம் அறிந்தவர்கள்......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

      நீக்கு
    2. நல்ல நட்பே பொருள் ஊடாடக் கெடும். உறவினர்களையும் பிரிக்கும். 14 பேர் கூட்டுக் குடும்பம் 70 பேர் தனி ஃப்ளாட்டாகிவிட்டது

      நீக்கு
  4. இரயில் நிலையம் குறித்த கவிதை நன்று. கூடு திரும்பும் நாள் எது என்று தெரியாத பயணம் - வேதனை தான்.

    பதிலளிநீக்கு
  5. பதிவின் மற்ற பகுதிகளும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  6. //ரயில் நிலையங்களில் பயணம் செய்வோரில் பாதி பேர் உம்மென்ற முகத்துடன் இருப்பார்கள்.  வழியனுப்புவோரில் நிறையபேர் கண்கலங்கி சோகத்தில் மூழ்கி இருப்பார்கள்.  பஸ் நிலையத்தில் ஊருக்கு செல்வோரும், வழியனுப்புவோரும் ஒரு உற்சாக மனநிலையில் தான் பெரும்பாலும் காணப்படுவார்கள்.  எனக்குதான் அப்படித் தோன்றுகிறதோ என்று அலுவலகத்தில் ஓரிரண்டு பேசும்போது சொன்னால், ஆமாம் சார்..  உண்மைதான் நீங்கள் சொல்வது என்கிறார்கள்.//

    //இறங்கிச் சென்ற மக்கள் 
    கடந்து சென்ற பின்னும் 
    அங்கேயே அமர்ந்து 
    காதலுடனும் நட்புடனும் 
    நேரம் போக்கும் சிலரால் 
    கலகலப்பாகவே இருக்கிறது ரயில் நிலையம்   //

    இப்படி கட்டுரையில் ஒரு மாதிரியும் , கவிதையில் ஒரு மாதிரியும் எழுத உங்களால் தான் முடியும்.


    எல்லா ரயில்படங்களும் வெளி நாடு படங்களாகத் தோன்றுகின்றனவே? இந்தியப் படங்கள் கிடைக்கவில்லையா?

    அமெரிக்காவில் கார் ரெஜிஸ்ட்ரேசன் நம்பர் நாமே தேர்ந்தெடுக்கலாம். ஆனால் இது ஆஸ்திரேலியா. 

    நச்சுன்னு 3 ஜோக். நல்லா இருக்கு. 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதைக்கு பொய்யழகு இல்லையா?  மேலும் சோகமான நிலையத்தில் சிலநேரம் கலகலப்பாக இருக்கும் இடம் பற்றிச் சொல்ல வேண்டாமா? !!

      இணையத்தில் கிடைத்த படங்கள் அவ்வளவுதான்! 

      தண்டவாளத்தில் என்ன வெளிநாடு, உள்நாடு!!!

      நன்றி JKC ஸார்..

      நீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  8. ரயில் பயணம் குழந்தைகளுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும், ஜன்னலோரத்திற்கு போட்டி போடும் குழந்தைகள். குடும்பத்துடன் ஒரு பெட்டி முழுவதும் அமர்ந்து போவது மகிழ்ச்சி அளிக்கும் ஸ்ரீராம். பேச்சு, பேச்சு, சீட்டு விளையாட்டு, உணவு கட்டி கொண்டு வந்து சாப்பிடுவது, குழந்தைகளை தொட்டில் கட்டி தூங்க வைத்து என்று அந்த காலத்து ரயில் பயணம் நன்றாக இருக்கும்.

    இப்போது குடும்பமாக போனாலும், லேப் டாப், ஐபேட், கைபேசியில் ஏதாவது பார்ப்பது, அனுப்புவது என்று இருக்கிறார்கள். அக்கம் பக்கம் பேச அந்த காலத்து பெரியவர்கள் தவித்து போகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் அந்தக் காலத்திலும் ரயிலில் சென்றிருக்கிறேனே...   ஆனாலும் ஒரு பொதுவான உணர்வு.

      நீக்கு
  9. இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருள்புரிய பிரார்த்திப்போம். வாங்க துரை செல்வராஜூ அண்ணா.. வணக்கம்.

      நீக்கு
  10. கொத்தமங்கலம் சுப்புவின் கூட்டு குடும்ப செய்தி படிக்க நன்றாக இருக்கிறது. காத்திருத்தல் கவிதை நன்றாக இருக்கிறது, சோகம் இழையோடுகிறது.
    டெல்லியில் நிலநடுக்கம் இரண்டு நாள் முன்பு ஏற்பட்டு இருக்கிறது.
    எல்லோரும் உணர்ந்து வீட்டை விட்டு வெளியே வந்து இருக்கிறார்கள்.பொக்கிஷ பகிர்வுகள், நகைச்சுவை எல்லாம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். டெல்லி நிலநடுக்கம் பற்றி நானும் படித்தேன். நன்றி கோமதி அக்கா.​

      நீக்கு
  11. எல்லா பயணங்களைவிட நான் இதுவரை பயணிக்காத கப்பல் பயணமே பிடித்து இருக்கிறது.

    தண்டவாளக்கவிதை அருமை ஜி கடைசி நகைச்சுவை சிறப்பு

    பதிலளிநீக்கு
  12. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள்.
    அனைவரும் நலமுடன் வாழ இறைவன் நல்லதொரு துணையாக இருப்பார் இறைவனுக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கம். பிரார்த்திப்போம்.

      நீக்கு
    2. நாம் எல்லோரும் நம் கர்மவினைகளைப் புசிக்கிறோம். புண்ணியத்துக்கு கஷ்டமும் பாவத்திற்கு சௌகரியத்தையும் அனுபவிக்கிறோம். இறைவன் சாட்சி பூதம் மட்டுமே.

      பாகற்காய் குழம்பு செய்து தான் கசக்கிறதே என்று நொந்துகொண்டு குழம்பை வெங்காய சாம்பார் ஆக்கு என இறைவனைத் துணைக்கு அழைக்கலாமா என எனக்குத் தோன்றும்

      நீக்கு
    3. நல்லவேளை என்னை அம்பானியாக மாற்று அதானியாக மாற்று என்று வேண்டிக்கொள்ளாமல் இருந்தால் சரி!

      நீக்கு
    4. போற வர்றவன், வாழ்கைல ஒண்ணையும் அச்சீவ் செய்யாதவன், சொந்தமா வீடு சம்பாதிக்காதவன்லாம் ஏதோ பிச்சைக்காரனை விமர்சிப்பதுபோல ஆகிவிடும் நிலைமை.. பெரியாளாக ஆசைப்பட்டால்

      நீக்கு
    5. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

      பயணங்கள் நலமாக இருந்தனவா? காசி பயணங்கள் நல்லபடியாக முடிந்து இறைவனை தரிசித்து விட்டு வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி.

      /நாம் எல்லோரும் நம் கர்மவினைகளைப் புசிக்கிறோம். புண்ணியத்துக்கு கஷ்டமும் பாவத்திற்கு சௌகரியத்தையும் அனுபவிக்கிறோம். இறைவன் சாட்சி பூதம் மட்டுமே./

      உண்மை.. ஆனாலும், நாம் இந்த உலகில் பிறந்ததிலிருந்தே நம்மை சுற்றியுள்ள உறவுகளின் மனதையோ, அவர்களால் நமக்கு வரும் நன்மையையோ, அதன் விளைவால் வரும் தீமையையோ, தாங்கள் கூறியபடி அன்றாடம் செய்யும் பதார்த்தங்களின் சுவையையோ மாற்றி விடு என அவனிடம் கேட்பது, அவன் நம்மை படைக்கும் போதே நம்மோடு சேர்த்து இணைத்திருக்கும் ஆசையெனும் புத்தகத்தின் சில பக்கங்கள்தானே அதை விட்டு எதிர்மறை எண்ணங்களை விட நேர்மறை எண்ணங்கள் சிறப்பானவை என்ற வாழ்வியல் பக்கங்களும் அதில் இருக்கின்றனவே.....! அதன்படி அவன் துணை என்றும் நம்மோடு உள்ளதென்ற நம் எண்ணம் தவறா? தங்கள் கருத்துக்கும் நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்

      நீக்கு
  13. //அது மாதிரியான கடைசி சில சமயங்களில் ரயில் புறப்படும் நேரம் எனக்கும் கண் கலங்கும், அவருக்கும் கண் கலங்கும். முகத்தைத் திருப்பிக் கொள்வார். காட்டிக்கொள்ள மாட்டார்.

    என் பாஸும் என் மாமியாரும் யார் ஊருக்கு கிளம்பினாலும் கண்கலங்கி விடுவார்கள்.//

    நெகிழ்வான பகிர்வு.
    எனக்கும் ஊருக்கு கிளம்பும் போது கண்ணீர் வந்து விடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  மாமியார் பாஷையில் யாராவது ஊர் சென்று விட்டால் "வீடு வெளியாக இருக்கிறது" என்பார்கள்.  பாஸும் அப்படிக் சொல்வார்.

      நீக்கு
    2. 'வீடு வெளியாகி இருக்கிறது"
      ரசித்தேன்.
      வெட்டவெளி போல இருக்கும் தான் யாரும் இல்லையென்றால் நான் உணர்ந்து கொண்டு இருக்கிறேன்.

      எங்கள் வீட்டில் "வெறிச் என்று இருக்கு என்னவோ போல இருக்கு" என்பது.

      நீக்கு
    3. அர்த்தம் ஒன்றுதான் அக்கா.

      நீக்கு
  14. எனக்கு இந்தியா வந்த புதிதில் பஸ் பயணம்தான் பிடிக்கும். ஸ்லீப்பர் வந்தது இன்னுமொரு சௌகரியம். எல்லா ஊர்களுக்கும் சொகுசுப் பேருந்து இருப்பதும் காரணம், டிக்கெட் கிடைப்பதிலும் பிரச்சனை இருக்காது.
    ஒரு வருடத்துக்கும் மேலாக இரயில் பயணம்தான். அதுதான் தண்ணீர் தைரியமாகக் குடிக்கவும், அவசியமானபோது கழிவறை இருக்கு என்ற தெம்புக்கும் காரணம்
    வாரணாசிக்குச் சென்ற பயணத்தில் இரண்டாம் வகுப்பு ஏசி, திரும்ப பெங்களூருக்கான பயணம் சில காரணங்களால் மூன்றாம் வகுப்பு ஏசி
    இனி தமிழக அல்லது குறைந்த தூரப் பிரயாணம் ஸ்லீப்பர் ஏசி ஓகே. வடநாட்டுப் பிரயாணம் 2ம் வகுப்பு ஏசி என முடிவெடுத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  15. //சிலர் இந்த பிளாட்டுகளை வாடகைக்கு விட்டுட்டு...//
    சொந்த அண்ணன் - தம்பி உறவுகள் 'சிலராகி' விட்டது பாருங்கள். காலத்தின் போக்கில் ஏற்படும் மாற்றங்கள் கொடுமையாயினும்
    அதுவும் பழகி விடுவது தான் விசித்திரம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது' என்ற வைக்கம் முகமது பஷீரின் கதை தான் நினைவுக்கு வந்தது.
      பஷீரெல்லாம் ஜெஸி ஸாருக்கு பழக்கப் பட்டிருப்பாரா தெரியவில்லை. எஸ்ஸார் வழியே என் வழி என்று அவர் பரிந்துரைப்பதை இவர் நமக்குப் பரிந்துரைத்து...

      நீக்கு
    2. என்ற அப்பூப்பனு ஒரு ஆன உண்டாயிருண்ணு மலையாளத்தில் வாசித்திருக்கிறேன்.

      நீக்கு
    3. ஆஹா. மலையாள வார்த்தை உச்சரிப்புகள் என்னைக் கவர்ந்த ஒன்று.

      என் இளம் வயதில் சாரதா நடித்த துலாபாரம் படம் பார்த்து தியேட்டரில் விக்கி விக்கி அழுதிருக்கிறேன்.

      நீக்கு
  16. ஸ்லீப்பர் பஸ்ஸில் தெரியாத நபரோடு இரட்டை படுக்கையில் பயணிக்க முடியாது

    இரயிலில் நூறு ரூபாய் கொடுத்து ஹெட்போன் வைத்துக்கொள்ளாமல் போனை அலற விட்டுக்கொண்டிருக்கும் ஜந்துகளோடு பிரயாணிப்பது அவஸ்தை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  ஆனால் நான் பஸ்ஸில் ஸ்லீப்பர் பஸ்ஸில் இப்படி இரட்டை சீட்டில் 2014 லேயே வந்திருக்கிறேன்.

      நீக்கு
  17. ஸ்லீப்பர் பஸ்ஸில் தெரியாத நபரோடு இரட்டை படுக்கையில் பயணிக்க முடியாது

    இரயிலில் நூறு ரூபாய் கொடுத்து ஹெட்போன் வைத்துக்கொள்ளாமல் போனை அலற விட்டுக்கொண்டிருக்கும் ஜந்துகளோடு பிரயாணிப்பது அவஸ்தை.

    பதிலளிநீக்கு
  18. நாலு பேரோடு, உறவினர், குடும்பமாகப் பயணிக்க , கொண்டுசெல்லும் உணவை உண்டு, சிரித்துப் பேசி மகிழ இரயிலைவிட்டால் வேறு வழியில்லை. டாக்சில டிரைவர் இருக்கும்போது குடும்ப விஷயத்தைப் பேசமுடியாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனாலும் நான் சொல்ல வந்ததது ரயில் நிலையம், பஸ்ஸ்டேன்ட் பற்றி..

      நீக்கு
  19. கூட்டுக் குடும்பமாக இதுவரை இருந்தது என்று சொல்லிக்கொள்ளும் விஷயமாகிவிட்டது பாருங்கள். மாற்றம் ஒன்றே மாறாதது. ஒருத்தர் அவர் ஃப்ளாட்டை விற்றால் முடிந்தது. எல்லாம் பழங்கதையாகப் போக

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிளாட்டில் ஒரு வீட்டோடு ஒரு வீடு இன்டர் கனெக்ஷன் வைத்து கட்டி விட்டால் ஆயிற்று!

      நீக்கு
  20. நில நடுக்கம் -- என்ற வார்த்தை யோசிக்க வைத்தது. நிலத்திற்க்கு நடுக்குமா என்ன?

    பதிலளிநீக்கு
  21. 'அப்படியே தங்கமாக இருந்திருந்தால்' -- தங்கத்தை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்? இதுவாவது கரன்ஸி நோட்டாகக் கொடுக்கும் பொழுது
    கூடச் சேர்ந்தாவது துணையாகப் போய் தேவைக்கு கைகொடுக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால், நாட்டு மக்களுடன் இரவு பத்துமணிக்கு முக்கியச் செய்தியுடன் பிரதமர் பேசுகிறார் என்றால் கரன்சிக்காரங்களுக்கு ஹார்ட் அட்டாக் வராதோ?

      நீக்கு
    2. தங்கம் சேமிப்பில் இருந்தால் கரன்ஸியை விட மதிப்பானதாச்சே...

      நீக்கு
    3. இல்லை, ஸ்ரீராம்.
      நடுத்தர வர்க்கத்தினருக்கு
      அது புழக்கத்திற்கு உபயோகப்படாத ஒரு உலோகம்.. எந்த அர்த்தத்தில் என்றால் வாங்கினால் விற்கவும் முடியாது. விற்றால் வாங்கவும் முடியாது. வீட்டுப் பெண்களின் ஆசைக்காக நகையாக வைத்திருக்கிறோம்.
      அந்த மட்டில் தான் அதற்கான உபயோகம். யோசித்துப் பார்த்தால் புரியும்.

      நீக்கு
    4. இல்லை, ஸ்ரீராம்.
      நடுத்தர வர்க்கத்தினருக்கு
      அது புழக்கத்திற்கு உபயோகப்படாத ஒரு உலோகம்.. எந்த அர்த்தத்தில் என்றால் வாங்கினால் விற்கவும் முடியாது. விற்றால் வாங்கவும் முடியாது. வீட்டுப் பெண்களின் ஆசைக்காக நகையாக வைத்திருக்கிறோம்.
      அந்த மட்டில் தான் அதற்கான உபயோகம். யோசித்துப் பார்த்தால் புரியும்.

      நீக்கு
  22. குடும்பத்தோடு எதில் சென்றாலும் மகிழ்ச்சி தான்... மற்றபடி நீங்கள் சொன்னது தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணம் என்று சொல்வதைவிட நான் பொதுவாக ரயில் நிலையங்கள் பஸ் நிலையங்கள் பற்றிய பொதுவான அபிப்ராயத்தைச் சொல்ல வந்தேன்!

      நீக்கு
  23. துணைவி இல்லாத போதும் திட்டுவது போல் இருந்தால் தான், கூட்டு துணைவியர் குடும்பம் உருவாகாது...!

    பதிலளிநீக்கு
  24. இன்று எல்லாம் சிக்குபுக்கு....சிக்குபுக்கு..... ரெயில் வண்டியாக இருக்கிறதே :) அனைத்தும் அருமை.
    கவிதை நன்று.

    ஜோக்ஸ் ரசனை. அதுவும் கடைசி. அது தானே மனைவி ஊரில் இல்லை துணிவு வந்தது ;)

    பதிலளிநீக்கு
  25. நீண்ட தூர பயணங்களுக்கு நீங்கள் ரயிலில் செல்வதை விரும்புவீர்களா இல்லை பஸ்ஸில் செல்வதை விரும்புவீர்களா//

    சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே தான்.....பேருந்தில் வசதிகள் வந்தாலும் அதென்னவோ ரயில்தான் பிடித்திருக்கிறது. கழிவறை இருக்கிறது என்பதால் மட்டுமில்லை.....அதுவும் ஜன்னல் இருக்கை என்றால் சுகம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் கேள்வியிலிருந்து தொடங்கினாலும் நான் சொல்ல வந்தது....நிலையங்கள் பற்றி!

      நீக்கு
  26. ஏதோ ஒரு இனம் தெரியாத சொல்ல முடியாத சோகம் ஒன்று ரயில் நிலையங்களில் காணப்படும்.

    அதே பஸ் நிலையங்களில் ஒரு பொதுவான உற்சாக மனநிலைதான் தோன்றும். //

    வித்தியாசமான அவதானிப்பு! இது வரை இப்படித் தோன்றியதே இல்லை எனக்கு, ஸ்ரீராம்...

    கீதா

    பதிலளிநீக்கு
  27. என் பாஸும் என் மாமியாரும் யார் ஊருக்கு கிளம்பினாலும் கண்கலங்கி விடுவார்கள்.//

    ப்ளஸ் ஒன்.....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் பாஸும் அவர் மாமியாரும் ஊருக்குப் போனால் கீதா ரங்கனுக்கு ஏன் கண் கலக்குது? ப்ளஸ் ஒன்கிறாரே

      நீக்கு
  28. தினப்படி கடக்கும் ஷட்டில் ரயில்கள் இயந்திரத்தனமான வாழ்க்கை ஆமா எனக்கும் இது தோன்றும் ஸ்ரீராம்...அதுல ஏறினாலே நமக்கும் நம்மை அறியாம ஒரு சீரியன்ஸ்னஸ் வந்துருதேன்னு எனக்குத் தோன்றும்...இந்த ரயில்களில் நாம பலவிதமான எண்ணக் கலவைகள், உணர்ச்சிக்கலவைகள் உள்ள மனிதர்களைப் பார்க்கலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  29. கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் கூட்டுக் குடும்பம் வியப்பாக இருக்கிறது. இப்போதைய தலைமுறைகள் வேறு வேறு இடங்களில் பிழைப்புக்காகப் போகப் போக குடும்பம் சுருங்கிடுமோ என்றும் தோன்றுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  30. ரயில் - கவிதை ரொம்ப நல்லாருக்கு ஸ்ரீராம். முதல் பகுதிக்கு இணையான பகுதி...
    //சோகங்களை சொல்லமுடியாமல்
    நினைவில் வந்து
    திரும்பிப் பார்க்கும்
    ஒருவனுக்காகக் காத்திருக்கிறது
    சிதிலமடைந்த அந்தக் கட்டிடம் //

    இதை வாசித்ததும் ஏனோ கொத்தமங்கலம் சுப்பு - கூட்டுக் குடும்ப அபார்ட்மென்ட் நினைவுக்கு வந்தது! இந்த வரிகளுக்குள் ஒரு கதையே அடங்கியிருப்பது போல் இருக்கிறது,

    கீதா

    பதிலளிநீக்கு
  31. நில நடுக்கத்தை விலங்கினங்கள் எளிதாக உணர்த்திடுவாங்க. எறும்புகள் பத்தி ஆராய்ச்சியே இருக்கு., அது போல ஜப்பானில் அடிக்கடி நிலநடுக்கம் வரும் வாய்ப்பு இருப்பதால் அங்கு மீன் தொட்டிகள் வைச்சிருப்பாங்களாஅம் பெரும்பாலும் வீடுகளில். நிலநடுக்கம் வரப் போகுதுன்னா மீன்கள் தொட்டியின் கண்ணாடிச் சுவற்றில் போய் முட்டிக் கொள்ளுமாம். அதிலிருந்து தெரியும் என்று வாசித்த நினைவு.

    இப்படி ஒவ்வொரு உயிரினமும் ஒவ்வொரு வகையில் வெளிப்படுத்துவதுண்டு என்று வாசித்தது நினைவுக்கு வருது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுனாமி வந்தபோது அந்த ஏரியாவில் ஒரு நாய் கூட மாட்டவில்லையாம்!

      நீக்கு
  32. பொக்கிஷங்கள் ரசித்தேன், ஸ்ரீராம்.,

    ஆஞ்சுகிட்ட பிரார்த்தனை ஹாஹாஹா ....ஆமாம் சூரியன் ரொம்ப ரௌத்திரம்!!

    ஹாஹாஹா நாய் ஜோக் - அதானே

    பெண்டாட்டி ஊருக்குப் போயிட்டான்னு ஆவி ஒரு சில நொடிகள் குறும்படம் எடுத்தார் ஆனா முடிச்சு வெளியிட்டாரா என்று தெரியலை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது சரி பெண்டாட்டினா இப்படி பயப்படுவது போல ஏன் நிறைய துணுக்குகள் வருது!!!?

      கீதா

      நீக்கு
    2. பாம்பென்று தாண்டவும் முடியாமல் பழுதென்று மிதிக்கவும் முடியாமல் இருப்பதாலா?

      நீக்கு
    3. இது, ஆபீஸ்ல தூங்கறது போன்ற ஜோக்குகள் எல்லாம் தவிர்க்க முடியாதவை.

      நீக்கு
  33. இன்றைய ரயில் வண்டி ஸ்பெஷல் அருமை..

    ரயிலில் பயணிப்பது மகிழ்ச்சி என்றால்

    சற்று தூரத்தில் ரயிலைப் பார்ப்பதும் மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  34. என்ன தான் வந்தே பாரத் வண்டிகள் வந்து விட்டாலும் பூதாகாரமாக
    புக் புக் என்று புகை விட்டுக் கொண்டே வரும் அந்த நீராவி இஞ்சினுக்கே கம்பீரம்..

    பதிலளிநீக்கு
  35. அப்படியெல்லாம் ரயில் நிலயங்களில் சோகமாக நான் உணர்ந்ததில்லை. முன்பெல்லாம் ரயிலில் பயணிப்பவர்கள் நன்றாக பழுகுவார்கள். இப்போது அவரவர் செல்லே அவரவருக்குத் துணை.

    பதிலளிநீக்கு
  36. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை.

    ரயில் பயணங்கள் பேருந்தை விட சுகமானவைதான். ஆனால் விரைவாக தான் நினைக்கும் இடத்திற்கு சென்று விட விருப்பம் கொண்டவர்கள் பேருந்தை விரும்புவார்கள். என் கணவருக்கு பேருந்துதான் பிடிக்கும். அவருக்காக முன்பெல்லாம் நாங்களும் சம்மதிப்போம். எங்கள் உறவுகளில் சிலர் விரைவு ரயிலை விட பாசஞ்சர் ரயிலை விரும்புவார்கள். ஒவ்வொரு நிலையமாக நின்று அது போவதில், அப்படி ஒரு ஆனந்தம். இதற்குள் நிறைய நட்புகளும், அவர்களைப்பற்றிய செய்திகளும், ரயிலில் விற்க வரும் சாமான்களை வாங்கிக் கொள்வதிலும் அப்படியொரு நிறைவு. மனிதர்கள் பலவிதம்.

    எனக்கும் யாரையாவது வழிபனுப்ப வந்தாலும், இல்லை நான் முன்பு அம்மா வீட்டிலிருந்து விடைபெற்று ரயிலில் கிளம்பும் போதும் கண்கள் நிறைந்து விடும். மனதில் ஒரு இனம் புரியாத சோகம் மறுநாள் காலை செல்லுமிடம் வரும் வரை குடி கொண்டிருக்கும்.

    இன்று தங்கள் கவிதையும் அற்புதம். படிக்க படிக்க அந்த பழைய சோகம் தொற்றிக் கொள்கிறது. பட்டுப் போன மரத்திற்கும், அந்த பாழடைந்த கட்டிடத்திற்கும் இருக்கும் தவிப்பு கவிதை படிக்கையில் மனத்தோடு ஒட்டிக் கொள்கிறது. மிகவும் ரசித்தேன்.

    சோகங்களும் அவ்வப்போது அதை நினைக்கும் போது ஒரு சுமையாகி மாறாமல், பட்ட காயங்களின் வடுவாக நின்று போகும் மனதின் சலனங்களும், நம்மை புரட்டிப் போட்டு நம் மனதின் தவறுகளை சரி செய்ய முயற்சிக்கும் ஒரு கருவியை போன்றதுதான்..பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா.  பயணம் இதில் என்பதைவிட நிலையங்கள் பற்றியே பேச நினைத்தேன்!  கவிதை பாராட்டுக்கு நன்றி.

      நீக்கு
  37. வணக்கம் சகோதரரே

    கொதத்தமங்கலம் சுப்பு அவர்களின் உறவுகள் கூட்டுக் குடும்ப செய்தி அருமை. எல்லோருக்கும் இது அமைவதில்லை. எங்கள் அப்பா வழி உறவில் ஒரு குடும்பம் மதுரையில் நாற்பது, பேருடன் (அம்மா, அண்ணன் தம்பி, சித்தப்பா, பெரியப்பா என) ஒன்றாக இருந்ததை கண்டு விட்டு வந்து என் அப்பா சொல்லிக் சொல்லி வியந்தது இன்னும் என் நினைவுக்குள் இருக்கிறது.

    பொக்கஷப்பகிர்வு அருமை. அந்தக் கால நாணயங்கள் மறக்க முடியாதவை. படங்கள் அனைத்தும் ஒரு ரயிலோடு பயணித்ததைப்போன்ற திருப்தியை தந்தது. ஜோக்ஸ் அருமை. இறுதி நகைச்சுவை ஜனகராஜ் நடித்த ஒரு திரைப்படத்தை நினைவு படுத்துகிறது.

    இன்று காலையிலிருந்தே சற்று உடல்நிலை குறைபாடு. அதனால் தாமதம். வேறு ஒன்றுமில்லை. இன்று ஜலத்தின் நினைவு நாள். அது ஒரு தோஷமாக என்னை வந்து பீடித்து விட்டது...))) பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா. உடல்நிலை சரியில்லையா என்ன ஆச்சு?

      நீக்கு
    2. அதுதான் இன்று முழுவதும் "ஜலதோஷம்" இன்று காலையிலிருந்தே பாடாக படுத்துகிறது. நாளை சரியாகி விடும். தங்களின் அன்பான விசாரிப்புக்கு நன்றி

      நீக்கு
    3. இன்று உலக தண்ணீர் தினம் அல்லவா?

      நீக்கு
    4. //இன்று ஜலத்தின் நினைவு நாள். அது ஒரு தோஷமாக என்னை வந்து பீடித்து விட்டது...))) //

      நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு கமலா.

      நீக்கு
    5. கமலா அக்கா இது மாதிரியான சுவாரஸ்யமான வார்த்தைப் பிரயோகங்களில் வல்லவர்.

      நீக்கு
  38. கொத்தமங்கலம் சுப்புவின் கூட்டுக்குடும்பம்.. அவியல் குடும்பமா இருக்குதே! வாழ்க.. வாழ்க பலமுடன் !

    பதிலளிநீக்கு
  39. .... அப்பா ஜெமினி கதை இலாகாவில் அங்கம் வகிச்சவர். சினிமா, நாவல், தொடர்கதைகள்னு அப்பா எழுத்துத் துறையில கொடி கட்டிப் பறந்தப்ப.. //

    அரபிக்கடல்லயாவது அவரது பேனாவை நட்டுவச்சு.. மரியாத செய்யலாம்னு அரசுக்குத் தோணாமப்போயிருச்சே...

    பதிலளிநீக்கு
  40. கவிதை அருமை! ரயில் வண்டிகளின் படமும் அப்படியே. நகைச்சுவை துணுக்குகளுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!