திங்கள், 20 மார்ச், 2023

"திங்க"க்கிழமை  :  மூன்று விதமா புளி உப்புமா -  கீதா சாம்பசிவம் 

 முதல்லே புளி உப்புமா: இரண்டு, மூன்று விதம் இருக்கு இதிலே.

எல்லாத்தையும் சொல்லிடறேன். உங்க செளகரியம் போல் செய்துக்கலாம். 

முதல்முறை:  நீங்க மட்டுமே வீட்டில். கேட்கணுமா??  எஞ்சாய்!!! இதுக்கு அவசரப் புளி உப்புமா தான் சரி. அரிசி மாவு ஒரு கப் எடுத்துக்குங்க. வெங்காயம் பிடிக்கும்னால் ஒரு வெங்காயம்(பெரியது) பொடிப் பொடியாய் நறுக்கிக்கணும். மி.வத்தல், (இதுக்கு மி.வத்தல் தான் நல்லா இருக்கும்.) நாலு, உப்பு, கருகப்பிலை, பெருங்காயப் பொடி, தாளிக்கக் கடுகு, உ.பருப்பு, நல்லெண்ணெய் ஒரு சின்னக் கிண்ணம்.புளி ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு எடுத்து ஊற வைச்சுக் கரைச்சு வைச்சுக்கவும். கரைச்சு வச்ச புளி ஜலத்தில் அரிசி மாவைக் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்க்கவும். உப்பையும் சேர்த்தே கலக்கவும். மாவு நல்லாக் கெட்டியா வர வரைக்கும் சேர்த்து உருண்டையாப் பந்து போல் வந்ததும் கொஞ்ச நேரம் வைக்கவும். இரும்பு வாணலி இருந்தால் நல்லது. இல்லாட்டி ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் காய வைத்துக் கடுகு, உ.பருப்பு தாளிக்கவும். கருகப்பிலை, மி.வத்தல் போடவும். மி.வத்தலைக் கிள்ளிச்(ரங்க்ஸைக் கிள்ளறாப்போல் நினைச்சுக்கலாம்)சேர்க்கவும். வெங்காயம் சேர்ப்பதாய் இருந்தால் இப்போச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும், பிசைந்து வைத்த அரிசிமாவுக்கலவை இதில் போட்டுக் கைவிடாமல் கிளறவும். எண்ணெய் தேவையா என்னனு உங்களுக்கே கிளறும்போது புரிஞ்சுடும். உதிரியாக வந்ததும் எடுத்துச் சூடாகச் சாப்பிடவும். இது ஒரு பாரம்பரிய உணவு. இப்போ மிகச் சில வீடுகளிலேயே செய்யறாங்க. அடுத்து இதையே அரைச்சுச் செய்யறதைப் பார்ப்போம்.

அரைச்சுச் செய்யற புளி உப்புமா   . அரைக்கத் தேவையான பொருட்கள்: பச்சரிசி ஆழாக்கு(சுமார் 250 கி) அல்லது ஒரு கப், மி.வத்தல் 4 அல்லது 6 அவங்க காரத் தேவைக்கு ஏற்ப, புளி ஒரு நெல்லிக்காய் அளவு, உப்பு, பெருங்காயம், பச்சரிசியை ஒரு இரண்டு மணி நேரமாவது ஊற வைக்கணும். அப்புறம் மிக்சியில் (இப்போ கல்லுரல், ஆட்டுக்கல் எல்லாத்துக்கும் எங்கே போறது? இருந்தாலும் தான் ரங்க்ஸ் தலையில் போட்டுடறாங்க போல!) அதனாலே பார்த்தாலே ரங்க்ஸ் பயந்துக்கப் போறார். மிக்சியில் எல்லாத்தையும் போட்டு நல்லா அரைங்க. கெட்டியா அரைச்சுக்கணும். அடுத்துத் தாளிக்க நல்லெண்ணெய் ஒரு கிண்ணம், கடுகு, உளுத்தம்பருப்பு, கருகப்பிலை. வாணலியில் நல்லெண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுந்து போட்டுக் கருகப்பிலையும் போட்டுத் தாளிக்கவும். வெங்காயம் சேர்ப்பதானால், பொடிப் பொடியாக நறுக்கின வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும். அரைச்சு வைச்ச விழுதை இதில் போட்டு நல்லா உதிர் உதிரா வர வரைக்கும் கிளறவும். இது ருசி தனியா இருக்கும்.

அடுத்து முதல்நாளே புளி சேர்க்காமல் மற்ற சாமான்களைப் போட்டு அரைத்து வைத்துக்கொண்டு, மறுநாள்மாவு புளிச்சிருக்கும் இல்லையா? அதை  இதேபோல் தாளிதம் செய்து கிளறலாம். இது ருசி தனியா இருக்கும். மூன்று முறைகளும் செய்து பார்த்துட்டுச் சொல்லுங்க.  

12 கருத்துகள்:

  1. செய்முறை பிடிக்காத உப்புமா மாதிரியே இருக்கு, ஒண்ணுமே விளங்கலை. 

    பதிலளிநீக்கு
  2. இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. இடையிடையே நகைச்சுவையுடன் புளிச்சுவையும்!..

    ஆகா!..

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  5. புளி உப்புமா மூன்று வகையும் நன்றாக இருக்கிறது.
    செய்து பார்க்கிறேன்.


    பதிலளிநீக்கு
  6. ஒரே பதிவில் மூன்று புளிகளா ?

    பதிலளிநீக்கு
  7. கீதாக்கா அடி பொளி செய்முறைகள்....

    இந்த மூன்றுமே நம் வீட்டிலும் செய்முறைகள். பிறந்த வீட்டில் இப்படிச் செய்வதுண்டு. புகுந்த வீட்டில் அவ்வளவாகச் செய்வதில்லை.

    இதில் நாலாவது ஒன்றும் நம் பிறந்த வீட்டில் செய்வதுண்டு. புளிக்குப் பதிலாக, நல்ல புளித்த மோரில் -கொஞ்சம் கெட்டியாக இருந்தாலும் நல்லதுதான் - மாவை, - முதல் செய்முறை போலப் பிசைந்து வைத்துக் கொண்டு, வாணலியில் உதிர்க்க வேண்டியதுதான்...மற்றவை எல்லாம் இதே தான்.

    என் மூன்றாவது மாமா (இப்போது இல்லை) ரொம்பப் பிடித்த டிஃபன். இதில் எந்த வகை செய்தாலும் பிடிக்கும். நல்ல உதிரி உதிரியாக பெருங்காய வாசனையுடன் இருக்கும்.

    நம் வீட்டில் வெங்காயம் மட்டும் சேர்த்ததில்லை இதுவரை இந்த புளி உப்புமாவிற்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. புளி உப்புமா செய்முறைகள் நன்றாக இருக்கிறது .
    நகைச்சுவையுடன் கூறியுள்ளார்கள்.

    பதிலளிநீக்கு
  9. புளி உப்புமா செய்ய ஸ்ரீரங்கம் வந்து ரங்ஸ்ஸஐ கிள்ளணுமா? இது புதுமையா இருக்கே

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் கீதா சாம்பசிவம் சகோதரி

    நலமாக இருக்கிறீர்களா? பதிவு நன்றாக எழுதியுள்ளீர்கள். திங்களுக்கான புளி உப்புமா செய்முறை மூன்று விதத்திலும் நன்றாக உள்ளது. நான் அரிசி மாவு கொண்டுதான் செய்வேன். சமயங்களில், புளித்த தயிர் இருந்தால் அதைக் கொண்டு கலந்து மோர் மிளகாய் தாளித்துக் செய்வேன். அதுவும் நன்றாக அமைந்தால் வாய்க்கு ருசியாக இருக்கும். தங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    இரு நாட்களாக என்னால் வலைத்தளம் வர இயலவில்லை. அதனால் தாமதமான வருகை. நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. இனிமேலே சமையல் குறிப்புப் போட்டால் அது யார் எழுதினதுனு போடாதீங்க கேஜிஜி/ஸ்ரீராம். யாருனு தெரிஞ்சுக்கவாவது வருவாங்க இல்லையா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வர வர போணியே ஆவதில்லை. :(

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!