அஹோபில நவ நரசிம்ஹர் யாத்திரை– பகுதி 6
யாத்திரைப் பகுதியைத் தொடர்வதற்கு முன்பு இந்த அஹோபிலத்தையும் அங்கு உள்ள நவ நரசிம்ஹர் கோயில்களைப் பற்றியும் அறிவோம்.
இந்தப்
பகுதியில் அஹோபில க்ஷேத்திரத்தில் எந்த எந்தக் கோயில்கள் உள்ளன, எங்கு உள்ளன, அந்தத் தலங்களின்
விக்கிரஹங்கள் எப்படி இருக்கின்றன என்பதைச் சுருக்கமாகப் பார்க்கலாம். வெறும்ன, இந்தக் கோவிலுக்குச்
சென்றேன், அடுத்தது அந்தச்
சன்னிதிக்குச் சென்றேன் என்றால் அவற்றின் முக்கியத்துவம் தெரியாமல் போகலாம். அதனால் theory portionக்குத் தயாராகுங்கள். இணையத்தில் https://sivatemple.wordpress.com/ என்ற தளத்தில் பழைய
புகைப்படங்களைப் பார்த்தேன்.
அவற்றில்
சிலவற்றையும் உபயோகித்திருக்கிறேன். (நான்
பெரும்பாலும் மூலவர் புகைப்படங்களை எடுப்பதில்லை. ஆனால் படங்களைப் பார்த்தால்தான் நாம்
சேவித்த திருத்தலங்கள் நினைவுக்கு வரும். அதிலும்
நவ நரசிம்ம க்ஷேத்திரங்களையும் இரு நாட்களில் தரிசித்துவிட்டு, எந்தக் கோவிலில்
நரசிம்மர் எந்த வடிவத்தில் இருந்தார் என்பதே நினைவில் இருக்காது. அந்த ஒரு காரணத்துக்காகவே
இணையத்தில் கிடைத்த படங்களை இங்கு பகிர்கிறேன்). மேல் குறிப்பிட்ட தளத்தில் எழுதியிருப்பதைப்
படித்த எனக்கு தற்போதைய அஹோபிலத்தையும் அதன் வளர்ச்சியையும், புராதானத்தையும் இன்னும்
தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது. யாம்
பெற்ற இன்பம் மற்றவர்களும் பெறட்டுமே.
கருடாத்ரி
மலையில், ஒன்பது நரசிம்ஹர்
கோவில்களும் எங்கெங்கு இருக்கின்றன என்பதைக் காட்டும் படம் இது. இதனை நல்லமல்ல மலைத்தொடர்
என்றும் சொல்கின்றனர்.
ஜ்வால
நரசிம்ஹர், அஹோபில, மாலோல, க்ரோத, காரஞ்ச, பார்கவ, யோகாநந்த, சத்ரவட மற்றும் பாவன
நரசிம்ஹர் கோவில்கள் என ஒன்பது கோவில்கள் இந்த மலைத்தொடரில் இருக்கின்றன.
நாராயணனை நரசிம்ம ரூபமாகத் தரிசிக்கும் ஆர்வத்துடன் கருட பகவான் இத்தலத்தில் அமர்ந்து கடுந்தவம் செய்ய, அவருக்கு நெருப்பின் உக்கிரத்தோடு, அம்மலைத்தொடரில் ஒரு உயரமான குகையில் காட்சியளித்தார். பெரிய குகையில் காட்சி தந்ததால், இடத்தின் பெயர் அஹோபிலம் என்றானது. அஹோபிலம், மேல் அஹோபிலம், கீழ் அஹோபிலம் என்று இரண்டு தளங்களாக அமைந்துள்ளது. உக்ர ரூபமாக அறியப்பட்ட நரசிம்மர் தன் மற்றத் தோற்றங்களையும் சேர்த்து ஒன்பது நரசிம்மர்களாக எழுந்தருளியிருக்கிறார்.
கீழ் அஹோபிலத்தில்தான் நாம் இதுவரை கண்ட, பிரஹலாத வரதனின் ஆலயம் அமைந்துள்ளது. மேல் அஹோபிலத்தில் மலைச்சாரலின் மடிப்புகளில், மறைவான குகைப்பகுதிகளில் நரசிம்மர் அருள்பாலிக்கிறார். இந்த அஹோபிலம், இருள் அடந்து கருங்கானகமாக இருக்கும் நல்லமலைப்பகுதியில் அமைந்துள்ளது (நல்ல-கருமை. தெலுங்கு). இந்த மலைப்பகுதியில்தான் கிருத யுகத்தில் ஹிரண்யனின் அரண்மனை அமைந்திருந்தது. ஆயிரம் தூண்கள் கொண்ட அவனது அரண்மனை மண்டபத்தில் ஒரு தூணைப் பிளந்து நரசிம்மர் வெளிப்பட்டார்.
ஜ்வாலா நரசிம்ஹர் (1)
நரசிம்மர்
வெளிப்பட்ட இடம்,
உக்ரஸ்தம்பம்
என்று அழைக்கப்படும் பகுதி.
இங்கு
செல்வது மிகக் கடினம்.
யாத்திரையிலும்
இந்த இடத்திற்குக் கூட்டிச் செல்வதில்லை. வயது
அதிகமானவர்கள் இந்த இடத்திற்குச் செல்லமுடியாது. கவனக் குறைவாக சில அடிகள்
எடுத்துவைத்தாலும் அதலபாதாளத்துகுச் செல்லவேண்டியதுதான். நரசிம்மர், ஹிரண்யனை சம்ஹாரம் செய்த
இடத்தில்தான் ஜ்வாலா நரசிம்மர் சன்னிதி அமைந்துள்ளது. இந்தச் சன்னிதிக்குப் போகும் வழியில்
மழைக்காலத்தில் பாறையின் மீதிருந்து நீர்வீழ்ச்சி சீறிப் பொழியும். அதனால்தான் அந்த இடத்தைக்
கடந்து சன்னிதியை அடைவதற்கு தடிமனான இரும்புச் சங்கிலி பதிக்கப்பட்டிருக்கிறது. இந்த குகை ஆலயம், கருடாசலம், வேதாசலம் மலைகளுக்கு
இடையே அமைந்திருக்கும் ‘அச்சலச்சாயா மேரு’ என்றழைக்கப்படும்
மலைக்குன்றில் உள்ளது.
குகை ஆலயத்திற்குச் சற்றுத் தள்ளி, பாறைகளின் இடுக்கில் அமைந்திருக்கிறது ரத்தகுண்டம். இதில்தான் நரசிம்மர் தன் குருதிக் கரங்களைக் கழுவிக்கொண்டார். இந்தச் சுனையில் நீரின் ப்ரதிபலிப்பு சிவப்பாக இருக்கிறது.
அஹோபில நரசிம்ஹர் (2)
கருடாத்ரி, வேதாத்ரி மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள பள்ளத்தாக்கில் பவநாசினி நதிக்கரையில் அமைந்துள்ளது அஹோபில நரசிம்மர் ஆலயம். இதுதான் மேல் அஹோபிலத்தின் பிரதான ஆலயமாகக் கருதப்படுகிறது. கீழ் அஹோபிலத்திலிருந்து சுமார் 8 கிமீ தூரத்தில் மலைப்பகுதியில் அமைந்துள்ள ஆலயம் இது. ஆலயம் ஒரே தளமாக இல்லாமல், குன்றத்தின் அமைப்புக்கேற்றவாறு ஏற்ற இறக்கத்தோடு அமைந்திருக்கிறது. உருவத்தில் சிறியவராக இருந்தாலும் உக்கிரம் அதிகம். மூலவருக்கு அருகிலேயே லக்ஷ்மி சமேதராக உற்சவர். இந்தக் குகையின் இன்னொரு புறத்தில், ஒரு சிவலிங்கமும், அதன் அருகிலேயே ராமரின் திருக்கோலமும் அமைந்துள்ளது. ஆதிசங்கரர், காபாலிகர்களிடம் தன் கரத்தை இழந்தபோது இங்கு வந்து லக்ஷ்மி நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்திரத்தை இயற்றி இழந்த கரத்தைப் பெற்றாராம். அவர் ஸ்தாபித்த சிவலிங்கம் இதுவாம். அவரே நரசிம்ம சுதர்சன சக்கரத்தையும் பிரதிஷ்டை செய்தாராம். இதை அடுத்து, மஹாலக்ஷ்மியின் அம்சமான செஞ்சுலக்ஷ்மித் தாயார் பத்மாசனத்தில் வீற்றிருக்கும் சந்நிதி அமைந்துள்ளது.
இந்த நரசிம்மரைத்தான் திருமங்கையாழ்வார் பாடியிருக்கிறார். அதனால் இந்தக் கோவில்தான் அஹோபில திவ்யதேசமாக க் கொள்ளப்படுகிறது. திருமங்கையாழ்வார்,
அம்
கண் ஞாலம் அஞ்ச* அங்கு ஓர் ஆள் அரி ஆய்*
அவுணன்
பொங்க ஆகம் வள் உகிரால்* போழ்ந்த புனிதன் இடம்*
பைங் கண் ஆனைக் கொம்பு கொண்டு* பத்திமையால்*
அடிக்கீழ் செங் கண் ஆளி இட்டு இறைஞ்சும்* சிங்கவேழ்குன்றமே
தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணா, திரிந்த ஆனைச் சுவடு பார்க்கும், தினைத்தனையும் செல்ல ஒண்ணா, சென்று காண்டற்கரிய கோயில் என்றெல்லாம் ஆழ்வார் இந்தத் தலத்தைப் பற்றிப் பாடுகிறார். அஹோபிலம் என்னும் பெயரை, சிங்க வேள் குன்றம் என்று ஆழ்வார் அழைக்கிறார். ஆனால் தற்காலத்தில் ஓரளவு பேருந்து வசதியில் கொஞ்சம் சுலபமாக இந்தத் தலத்தை தரிசனம் செய்துவிட முடிகிறது.
இந்த
ஆலயத்தின் முன்புறம் சிறிது தூரத்தில் பைரவ குண்டம் எனப்படும் திருக்குளம் உள்ளது.
மாலோல நரசிம்ஹர் (3)
அடுத்து வேதாத்ரி மலைக் குன்றங்களில் கனகபாயா ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது மாலோல நரசிம்மரின் சிறிய குகை ஆலயம். நரசிம்மரின் கோபம் தணிந்து மகாலக்ஷ்மியுடன் எழுந்தருளிய தலம் இது. நவ நரசிம்மர்களில், எந்த மூர்த்தியை அடிப்படையாக வைத்து உற்சவ விக்ரஹம் அமைப்பது என்ற கேள்வி எழுந்தபோது, நாராயணனே, மாலோல நரசிம்மராக க் காட்சியளித்துச் சந்தேகத்தைத் தீர்த்துவைத்தாராம். இந்த உற்சவ விக்ரஹமே, அஹோபில மட ஜீயர் எங்கு சென்றாலும் தன்னுடன் எடுத்துச் சென்று ஆராதனை செய்வது.
க்ரோட நரசிம்ஹர் (4)
இந்த மாலோல
நரசிம்மர் ஆலயத்திலிருந்து சிறிது தொலைவிலேயே மலைப்பகுதியில் க்ரோட நரசிம்மர் சன்னிதி
இருக்கிறது.
இரண்டு
அவதாரங்களின் கலவையாக (வராக நரசிம்மர்) வித்தியாசமாகக்
காட்சியளிக்கிறார் இந்தச் சந்நிதியில். இதன்
அருகிலேயே, இராமானுஜர் தவம் செய்த
சிறிய குகை இருக்கிறது.
இதுவும் குகைக்கோவிலாகும். மண்டபத்துடன் கூடிய இந்தக் கோவில் ஒரு காலத்தில் புதர் மண்டிக் கிடந்த து. இந்த குகைக்கோவிலில் இரண்டு விக்கிரஹங்கள் உள்ளன. ஒன்று லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி, மற்றது வராஹ நரசிம்ஹ ஸ்வாமி. வராஹரின் இட து கையில் பூதேவி அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். இந்தக் கோவிலின் அருகில் உள்ள தீர்த்தம் வராஹ தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. மழைக்காலத்தில், மேலேயிருந்து நீர்வீழ்ச்சியாக வரும் நீர், படிகள் வரை நிரம்பி ஓடுமாம்.
காரஞ்ச நரசிம்ஹர் (5)
கருடாத்ரி
மலைத்தொடரின் மேற்குப்புறம் அமைந்திருக்கிறது காரஞ்ச
நரசிம்மர் ஆலயம். மேல் அஹோபிலத்துக்கு
வரும் சாலையில்,
மேல்
அஹோபிலத்துக்கு ஒரு கிமீ முன்பு,
மரங்களின்
நிழலில் ரம்யமாகக் காட்சியளிக்கிறது இந்த ஆலயம். இங்கு இடதுபுறம் ஆஞ்சநேயர் சன்னிதி உள்ளது. ஆஞ்சநேயர், நரசிம்மரின் சந்நிதி
நோக்கி முகத்தைத் திருப்பி வணங்கியபடி உள்ளார். ஆஞ்சநேயர், நரசிம்மரை, இராமராகத் தரிசிக்க விரும்பியதால், வில்லுடன் கூடியதாக இந்த
நரசிம்மர் எழுந்தருளியிருக்கிறார். (ஆஞ்சநேயர், கரஞ்ச விருக்ஷம்-கருங்காலி மரத்தின் கீழே
தவம் இருந்ததால்,
காரஞ்ச
நரசிம்மர்)
மிகுதியை அடுத்த பகுதியில் வரும் வாரத்தில் பார்ப்போம்.
செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை..
பதிலளிநீக்குவாழ்க தமிழ்..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பதிலளிநீக்குபிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
வாங்க துரை செல்வராஜு சார்.. முதல் வருகைக்கு நன்றி
நீக்குஞாயிற்றுக் கிழமைகள் அர்த்தமுள்ளதாக இருக்கின்றன..
பதிலளிநீக்குபடங்கள் பதிவிலிருந்து, படங்களுடன் கூடிய யாத்திரைப் பதிவாக மாறியிருக்கிறது. எபி ஆசிரியர்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஶ்ரீராம், அதிகப் படங்கள் இருப்பதாக எண்ணிகிறாரோ என்று தெரியவில்லை
நீக்குஇல்லை.
நீக்குபோர் அடிக்காமல் இருந்தால், விருப்பமான சப்ஜெக்ட்டாக இருந்தால் எவ்வளவு படங்கள் இருந்தாலும் தெரியாது. மேலும் ஒரே மாதிரி படங்கள் ரிப்பீட் ஆவதில்லை. சுவாரஸ்யமான, அத்தியாவசியமான விவரங்களைத் தொகுத்து அதனுடன் படங்களை இணைப்பது சிறப்பு பெறுகிறது.
ஒரே ஒரு குறைதான்...
அது...
பின்னூட்டம் காணாமல் போகிறது. வெளியிடுங்கள்
நீக்குDone.
நீக்குமனதில் இனம்
பதிலளிநீக்குபுரியாத உணர்வு...
என்னவென்று சொல்வது!..
ஏதேதோ எண்ணங்கள்...
எல்லாம் அவன் செயல்..
அவனருளால் எல்லாம் நல்லதே நடக்கும். வரும் வியாழனில் முடிந்தால் தஞ்சை மாமணிக் கோவில்களை, குறிப்பாக நரசிம்மரைத் தரிசனம் செய்யுங்கள்.
நீக்குஎன்ன காரணம்னு தெரியலை... இந்தியா வந்தபிறகு எனக்கு நிறைய யாத்திரைகளும், கோயில் தரிசனங்களும் வாய்க்கின்றன. திருநீர்மலை தவிர மற்ற வைணவ திவ்யதேசங்களின் தரிசனம் ஒன்றும் மேற்பட்ட முறை கிடைத்தது.
நீக்குஇந்த மாதம் குருவாயூர் மற்றும் ஏழு ஆலயங்கள் தரிசம் வாய்த்தது, அதில் மூன்று திவ்யதேசங்கள். தொடர்ந்து திருவில்லிபுத்தூர், திருத்தங்கல், கூடலழகர், மதுரை மீனாட்சி என ஆலயங்களின் தரிசனம். நாளை மறுநாள் காசி, கயா, திரிவேணி சங்கம்ம் யாத்திரை (அம்மாவுக்கு கயா ச்ராத்தம்). அதைத் தொடர்ந்து மேல்கோட்டை வைரமுடி சேவை. கொஞ்சம் இடைவெளி விடலாம் எனத் தோன்றும்படி பயணங்கள் அமைகிறது. இதனால் ப்ரபந்தங்கள் கற்றுக்கொள்வதில் சுணக்கமேற்படுகிறது.
குஜராத்தில் மாத்ருகயா போய் (சித்தாப்பூர்) அம்மாவின் ஸ்ராத்தம் செய்யலாம். நாங்க 2018 ஆம் ஆண்டில் பிப்ரவரியில் போனோம். கசப்பான அனுபவங்கள். ஆதலால் எதுவும் எழுதவில்லை. :(
நீக்குஎங்களுக்கு மாத்ருகயா சொல்லப்படவில்லை. அதனால் அங்கு செல்லும் வாய்ப்பு இல்லை
நீக்குசரியாப் போச்சு போங்க! பகவான் ஸ்ரீகிருஷ்ணரே துவாரகையிலிருந்து அங்கே வந்து தேவகிக்குப் பிண்டம் வைத்ததாகச் சொல்லுவார்கள். பரசுராமரும் அங்கே தான் தன் தாய் ரேணுகா தேவிக்குக் கர்மா பண்ணினார் என்பார்கள்.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குஅங்கண் ஞாலம் அஞ்ச அங்கோர் ஆளரியாய்
பதிலளிநீக்குஅவுணன் பொங்க ஆகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதன் இடம்
பைங்கண் ஆனைக் கொம்பு கொண்டு பத்திமையால்
அடிக்கீழ் செங்கண் ஆளி இட்டு இறைஞ்சும் சிங்கவேள் குன்றமே..
அவதாரங்களிலேயே குறுகிய காலத்தில் வெளிப்பட்டு, குறுகிய காலமே இருந்தது நரசிம்ம அவதாரம். கஷ்டங்கள் தாக்கும்போது, உக்ரம் வீரம் மகாவிஷ்ணும், ஜ்வலந்தம் சர்வதோ முகம், ந்ருசிம்ஹம் பீஷணம் பத்ரம் ,ம்ருத்யுர் ம்ருத்யும் நமாம்யஹம் எனச் சொன்னால் அவனருள் உடனே கிட்டிவிடாதா?
நீக்குஸ்ரீ நரசிம்ஹ..
நீக்குஜெய நரசிம்ஹ..
ஜெய ஜெய நரசிம்ஹ..
//எனச் சொன்னால் அவனருள் உடனே கிட்டிவிடாதா?// - எழுதிவிட்டேனே தவிர, கும்பகோணம் அருகிலுள்ள திவ்யதேசத்தில், தனியாக உத்யோக நரசிம்ஹர் சன்னிதி கோவில் வளாகத்தின் வலது மூலையில் உண்டு. சென்றமுறை தரிசனம் செய்தபோது, உன்னை நம்பி சில வருடங்களுக்கு முன்பு வேண்டிக்கொண்டேன், கைவிட்டுவிட்டாயே என்று சொல்லிவிட்டு கோவிலை விட்டு வெளியே வந்துவிட்டேன். பிறகு, எந்தக் காரணத்திற்காக எதை இறைவன் செய்கிறான் என்பது யாருக்குத் தெரியும் என்று மனதில் தெளிவு வர, திரும்பவும் கோவிலின் உள் சென்று அவன் சந்நிதிக்குச் சென்று சேவித்துவிட்டு வந்தேன். அந்தக் கோவிலின் படத்தை விரைவில் பகிர்கிறேன்.
நீக்குஇங்கு சனிக்கிழமை மாலை நவ நரசிம்ஹர் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி. ஓவிய வடிவம் அழகு.
பதிலளிநீக்குஉக்ரஸ்தம்பம் இருக்கும் இடத்தைப்பார்க்கும் போது மெய்சிலிர்க்கிறது. ஜ்வாலா நரசிம்மர் , மற்றும் அனைத்து கோவில்கள் விவரங்களும், படங்களும் நன்றாக இருக்கிறது. பழைய , புதிய படங்கள் அருமை. அனைத்தையும் தரிசனம் செய்த நிறைவு ஏற்பட்டு விட்டது.
மாலோல பழைய புதிய நரசிம்மர், மகாலக்ஷ்மியை வணங்கி கொண்டேன்.
கூடல் அழகரை தரிசனம் செய்து வந்து விட்டீர்களா? நல்ல தரிசனம் ஆகி இருக்கும் என்று நினைக்கிறேன்.
பதிவு அருமை தொடர்கிறேன்.
ஆஞ்சநேயர், நரசிம்மரின் சந்நிதி நோக்கி முகத்தைத் திருப்பி வணங்கியபடி உள்ளார். ஆஞ்சநேயர், நரசிம்மரை, இராமராகத் தரிசிக்க விரும்பியதால், வில்லுடன் கூடியதாக இந்த நரசிம்மர் எழுந்தருளியிருக்கிறார். (ஆஞ்சநேயர், கரஞ்ச விருக்ஷம்-கருங்காலி மரத்தின் கீழே தவம் இருந்ததால், காரஞ்ச நரசிம்மர்)//
காரஞ்ச நரசிம்மர் பெயர் காரணம் தெரிந்து கொண்டேன்.
கூடலழகர் தரிசனம் மிகச் சிறப்பாக அமைந்தது. அதன் அருகிலிருந்த மதன வேணுகோபாலன் கோயிலுக்கும் முதன்முறை செல்லும் பாக்கியம் கிட்டியது
நீக்குமதன வேணுகோபாலன் கோயில் நானும் பார்த்து பதிவு போட்டு இருக்கிறேன். அருமையான கோவில் இந்தக் கோவில் கருடசேவையும் போட்டு இருக்கிறேன்.
நீக்குவாங்க கோமதி அரசு மேடம்... தென் திருப்பேரை அரவிந்த லோசனர், இந்தக் கோவிலில் இருந்துதான் நிறைய உபன்யாசங்கள் சொல்லுவார். அதனை நினைவில்கொண்டு, சட் என்று இந்தக் கோவில் தட்டுப்பட்டதால், சென்றேன். நல்ல தரிசனம். மிகப் பழைய கோவில். சிதிலமடைந்ததால் எடுத்துக்கட்டியிருக்கிறார்கள். உங்கள் சுட்டியைத் தாருங்கள். பார்க்கிறேன்.
நீக்குவாரியார் ஸ்வாமிகள், சந்தான கோபாலாச்சாரியார், மஞ்சக்குடியார், ஸ்ரீவாஞ்சியம் போன்றவர்கள் அங்கே தான் கதை சொல்லுவார்கள். ஸ்வாமி ஹரிதாஸ்கிரி அவர்களுக்கு மிகவும் பிடித்த கோயில். அடிக்கடி போவோம். எங்க திருப்பாவை வகுப்பின் மார்கழி மாத பஜனையும் மதனகோபால ஸ்வாமி கோயிலில் தான் ஆரம்பிக்கும். இங்குள்ள ஒரு பதினாறு கால் மண்டபத்தைப் பெயர்த்து எடுத்து வெளிநாட்டுக்கு (இங்கிலாந்து?) அனுப்பியதாகவும் சொல்லுவார்கள்.
நீக்குசௌராஷ்ட்ராக் கிருஷ்ணன் கோயில் என்றும் சொல்லுவோம்.
நீக்கு//இங்குள்ள ஒரு பதினாறு கால் மண்டபத்தைப் பெயர்த்து எடுத்து வெளிநாட்டுக்கு// - அடப்பாவீகளா... விஜிபி முன்னால தென் மாவட்டக் கோவில் கற்றூண்கள், சிலைகளைத் திருடினமாதிரி இப்படியும் செய்திருக்கிறார்களா? கோவிலின் மாடத்துக்குக் கீழ் உள்ள பகுதி மாத்திரம் பழைய தோற்றத்தில் இருந்தது. மற்றவை சமீபகால கட்டுமானம்.
நீக்குசௌராஷ்ட்ரா கிருஷ்ணன் கோவில் - ஓ...இதிலும் உண்மை இருக்கிறது. மதுரைல சௌராஷ்டிரர்களும் அதிகம் அல்லவா?
பக்தி பதிவு. கொஞ்சம் ஊன்றி வாசிக்க வேண்டிய பதிவு. தகவல்களை ஒழுங்குபடுத்த மிகவும் சிரமப் பட்டிருப்பீர்கள். முயற்சிகளுக்கு பாராட்டுக்கள். தொடர் முடிந்ததும் மின் நூலாக தொகுத்து வெளியிடலாம்.
பதிலளிநீக்குJayakumar
கொஞ்சம் சிரம்ம்தான் ஜெயகுமார் சார். எனக்கே நிறைய தகவல்கள் புதிது. ரொம்பவே ஆர்வத்துடன் ஒழுங்குபடுத்தினேன்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
எபியில் மட்டும் வெள்ளிக்குப் பிறகு ஞாயிறு என்றிருக்கக் கூடாதா என்று நினைக்கின்றது பித்துப் பிடித்த மனம்..
பதிலளிநீக்குஎல்லாப் பக்கங்களுமே ஒரே மாதிரி இருந்தால் சிறப்பல்லவே... சனி நல்ல நிகழ்வுகள் மனதுக்குப் புத்துணர்வைத் தருகின்றன. நீங்களும் சனிக் கிழமை, கதை எழுதலாமே.... செவ்வாயில் தொடர் ஆரம்பித்திருப்பதால்.
நீக்குவணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே.
பதிலளிநீக்குஅருமையான பதிவு. அஹோபிலம் நவ நரசிம்ஹர் கோவில் பதிவு நன்றாக உள்ளது. படங்கள் பழையன, இப்போதுள்ள புதியனவாக இருப்பது என இணைத்து வெளியிட்டிருப்பது சிறப்பு. நீங்கள் கோவிலின் அமைப்பை பற்றியும், இறைவனார்களின் விபரங்களைப் பற்றியும் நல்ல விபரமாக சொல்லியதில் கோவிலுக்கே சென்ற திருப்தியை அடைந்தேன். லக்ஷ்மி நரசிம்மர் தரிசனம் பெற்றுக் கொண்டேன்.
இங்கெல்லாம் இனி என்னால் செல்ல முடியுமா என்பதை நினைத்துப் பார்க்க இயலவில்லை. உங்கள் பதிவு மூலமாக ஸ்ரீ நரசிம்மர் தரிசனம் கிடைக்குமாறு "அவன்" அருளியுள்ளான் இந்த திருப்தி ஒன்றே என் மனதை குளிர வைக்கிறது. . பதிவில் கோவிலைப்பற்றி நன்றாக விபரமாக கூறியமைக்கு என் மனமார்ந்த நன்றி. மேலும் தொடர காத்திருக்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நிறையபேர்கள் டோலியில் பயணம் செய்கிறார்கள். இந்த யாத்திரை சிறிது கஷ்டம்தான். ஆனால் இறைவன் கூப்பிட்டுவிட்டால், செல்வதற்குக் கடினமா என்ன?
நீக்குபுல் டெம்பிள் ரோடு செல்லும்போதெல்லாம் உங்கள் நினைவு வரும். இன்னும் அந்தக் கோவிலுக்குச் செல்லும் நேரம் வாய்க்கவில்லை (காரணம் அந்தப் பக்கம் செல்லும்போதெல்லாம் நடைப்பயிற்சிக்கான அரை டவுசரில் இருப்பதுதான்..என்ன செய்ய?)
வணக்கம் சகோதரரே
நீக்குஉண்மைதான்.. இறைவன் எங்கு, எப்போது அழைக்கிறானோ அங்கு, அப்போது நம்மால் சென்று விட முடியுந்தான். அவன் அப்படி அழைக்காத வரை நாம் எத்தனை பிரம்மபிரயத்தனம் செய்தாலும் அது பலனளிக்காது. சாஸ்வதமான உண்மை.
தாங்களும் புல்டெம்பிள் விநாயகரையும் , நந்திகேஷ்வரையும் ஒருநாள் கண்டிப்பாக சென்று தரிசனம் செய்து விட்டு வருவீர்கள். அப்போது உங்கள் அற்புதமான எழுத்துக்களில் அந்தப்பதிவு கண்டிப்பாக மிளிரும்.
இன்று கூட மாலை அங்கு செல்வதற்கு குழந்தைகள் வழி வகுக்கிறார்கள். தெய்வ கிருபையால் "அவன்" தரிசனம் கிடைக்க வேண்டும். பார்க்கலாம். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கூட்டத்தில் பாருங்கள். ஒருவேளை நான் இருக்கலாம். ஹா ஹா ஹா. இரண்டு நாட்களாக சிறிது உடல் நிலை சரியில்லை (Cold & cough & என் பிடிவாதம்). நாளை மறுநாள் 8 நாள் பயணம்.
நீக்குநீங்கள் என்னவோ பசவணகுடி அல்லது அருகில்தான் இருக்கணும்னு நினைக்கிறேன்.
சில தினங்களாக நரசிம்ஹ ருண விமோசன ஸ்தோத்திரம், நரசிம்ஹ கவசம் கேட்டுக் கொண்டிருக்கின்றேன்..
பதிலளிநீக்குஅதன் இசையமைப்பினால் அன்றைக்கு இரவு உறங்கும் போது பரவசம் கலந்த பய உணர்வு..
இப்போது மாலை வேளையில் மட்டுமே..
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே..
நான் எதையும் வெளியில் சொல்லத் தயங்குவேன். சொன்னால் அனுபவம் கிட்டுவது நின்றுவிடும் என்ற நம்பிக்கை.
நீக்குபல நேரங்களில் இரவுகளில் மனம் சஹஸ்ரநாம்ம் சொல்லுவதை, அதிலேயே இருப்பதை எண்ணி வியப்புறுவேன்.
கருத்துகள் மறைவதால் பிறகு வருகிறேன்.
பதிலளிநீக்குஇந்த முறை, 36 வருடங்களுக்குப் பிறகு மதுரை மீனாட்சி கோயிலுக்குச் சென்றிருந்தேன். கேமரா கொண்டுபோக முடியாது. சிற்பங்களின் சிறப்பை இன்று எழுதுகிறேன். ஜீவி சாருக்கு நன்றி
எத்தனையோ ஜென்மத்துப் புண்ணியத்தால் தஞ்சை யாளி நகரில் பிறந்து வளர்ந்து தற்போது சற்றே அருகில் வசிக்கின்றேன்..
பதிலளிநீக்குநம சிவாயனும் எதிரிலேயே..
நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போலத் தான்
ஹரனும் ஹரியும் என்பதில் நம்பிக்கை..
இறைவன் ஒருவனே...எவ்வளவு அருகில் இருந்தாலும், முடிந்தபோதெல்லாம் தரிசனம் செய்தால் அதன் மகிழ்ச்சியே தனிதான். திருக்கண்டியூர் ஹரசாப விமோசனப் பெருமாளும் அருகில்தானே
நீக்குஅழகிய படங்கள் தரிசனம் கிடைத்தது.
பதிலளிநீக்குதகவல்கள் நன்று.
நன்றி கில்லர்ஜி
நீக்குஅஹோபில ஷேத்திர விவரிப்புகளை ஆழ்ந்து வாசித்தேன்.
பதிலளிநீக்குபுரிந்து கொள்கிற மாதிரி தந்திருப்பதற்கு நன்றி, நெல்லை.
நன்றி ஜீவி சார். எனக்கே நான் ஜாங்கிரி சுத்துகிறேனே, ஸ்ரீராம் மாதிரி நறுக்குனு எழுதத் தெரியலையே என்று தோன்றும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை.
நீக்குமலையும் மலை சார்ந்த இடங்களின் இயற்கை அழகே அழகு. கோயிலின் கோபுர நுழை வாயில் தோற்றம் முதல் படத்தில் சுற்றிலும் சூழ்ந்த மலையழகில்
பதிலளிநீக்குஎடுப்பாகத் தெரிகிறது. முன்பிருந்த கோபுரத் தோற்ற படம் கொடுத்தமைக்கு நன்றி, நெல்லை.
பழைய கோபுரத்தின் தோற்றத்தைப் பார்க்கும்போது எவ்வளவு சீர்படுத்தியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. அவைகளை வரும் சந்ததியினர் இன்னும் சிறப்பாக வைத்துக்கொள்ளவேண்டும்.
நீக்குநவ நரசிம்ஹர் தரிசனம் பெற்றோம்.
பதிலளிநீக்குபழைய படங்கள் புதிய படங்கள் என பகிர்ந்து காணத் தந்துள்ளது மிகவும் நன்று. கண்டு மகிழ்ந்தோம்.
விரிவாக பகிர்ந்திருப்பது சிறப்பு. படங்கள் நேரில் தரிசித்த உணர்வை தந்தன மிக்க நன்றி.
வாங்க மாதேவி. படங்களைக் கண்டு மகிழ்ந்ததற்கு நன்றி
நீக்குநவ நரசிம்ம அவதாரத் தோற்றத்தை ஒரே ஓவியத்தில் பார்த்தது
பதிலளிநீக்குபிரத்யேகமான அனுபவம். அந்த அனுபவத்தைக் கொடுத்தமைக்கு நன்றி, நெல்லை.
ஒவ்வொரு விக்ரஹக படத்தையும் பெரிது பண்ணிப் பார்த்து கீழே நீங்கள் இட்டிருக்கும் குறிப்பை வாசித்து உள்வாங்கிக் கொண்டு மீண்டும் விக்ரஹகத்தை மனத்திலிருத்தி நமஸ்கரித்து இந்த வார தரிசன அனுபவம் விசேஷம்.
பதிலளிநீக்குநன்றி, நெல்லை.
நன்றி ஜீவி சார். எனக்குமே அது ஒரு அனுபவம்.
நீக்குநெல்லையின் கோவில் பதிவுகளை சனியன்று வெளியிட்டு சனி செய்திகளை ஞாயிறன்று வெளியிடலாம். சிந்திக்கவும்
பதிலளிநீக்குJayakumar
எபி க்கென்று ஒரு வரிசை உண்டு. அதை மாற்றுவது சரியல்ல. பொதுவா ஞாயிறு, ஆசிரியர்களின் பயணப் படங்கள் மாத்திரமே வரும் (வந்தது, பல வருடங்களாக). பயணங்களில் ஒன்று முடிந்தபோது, நான் எழுத அனுமதித்தார்கள். அவ்ளோதான்.
நீக்குஜெயகுமார் சார்... கதை என்பது ரசனைக்குரியது. அது எந்த genre ஆக இருந்தாலும், எழுதும் விதத்தை ரசிக்கலாம். இருந்தாலும், சோக அல்லது பிறழ் கதைகளாக இருக்கும்போது காலையில் வாசிக்க சங்கடமாக இருக்கும். பெரும்பாலானவர்கள் அதிகாலையிலேயே வந்து கருத்திடுவதால். இப்படி நாம் selectionஐ குறுக்கிக்கொண்டால் பலவற்றை அறியமுடியாமல் போகும் என்பதும் வாஸ்தவம்தான்.
தனிப்பட்ட முறையில், நீங்கள் மலையாள இலக்கிய, பழமை சம்பந்தப்பட்ட கதைகள், வரலாறு போன்றவை சார்ந்த கதைகள் போன்றவற்றை எழுதினால் எனக்குப் படிக்க ஆசை.
நீக்குஇது என்ன திடீரென்று கிழமைகளைப் பற்றி விரக்தியான கருத்தோட்டங்கள்?
நீக்குஞாயிறு என்பது கண்ணாக
வியாழன் என்பது
பெண்ணாக
செவ்வாய் கோவைப் பழமாக
சனியுடன் சேர்ந்து கைகோர்த்து
சேர்ந்தே நடந்தது
எபி பதிவுகளாக..
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம
அப்படி இல்லை ஜீவி சார்... சனிக்கிழமை, ஏதேனும் பெருமாள் தரிசனம் கிடைப்பது நல்லது என்று துரை செல்வராஜு சார் நினைக்கிறார்னு தோணுது (அவர் அதிகாலையில் எபிக்கு வருவார். அவர் பதிவும் வெளியிட்டுடுவார்). அதனால் எழுந்த எண்ணவோட்டம்.
நீக்குஎனக்குக்கூடத் தோன்றும், பாயசத்தோடு விருந்து முடிந்துவிடலாகாதா, எதற்கு மோர் சாதம் என்று நீட்டுகிறார்கள் என...
துரை செல்வராஜூ சார் இதில் எங்கே வந்தார்?..
நீக்குபடங்கள் அருமை. தகவல்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குநன்றி ராமலக்ஷ்மி மேடம்
நீக்குஜீவி சார், மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் சிற்பங்கள் மிக அருமையாக இருக்கும் என்று எழுதியிருந்தார். திருக்குறுங்குடி போன்று பல இடங்களில் உள்ள சிற்பங்களைக் கண்டு களித்தவன். என்னவோ, சிற்பங்களை நான் பைக்குள் எடுத்துக்கொண்டு போய்விடுவேனோ என்ற பயத்தில் திருவில்லிபுத்தூரில் படங்களெடுக்க (கோவில் நுழைவு பிரகாரத்தில்) அனுமதிக்கவில்லை. அப்புறம் 9 மணிக்கு ஆபீசர் வந்தபிறகு கடிதம் கொடுத்தால் அனுமதி கிடைக்கும் என்றார்கள். எனக்கு நேரம் வாய்க்கவில்லை.
பதிலளிநீக்குமதுரைக்கு 4 மணிக்குப் பதில், 2 மணிக்கே (மதியம்) போய்ச்சேர்ந்ததால், உடமைகளை இரயில் நிலைய க்ளோக் அறையில் வைத்துவிட்டு, மீனாட்சியம்மன் கோவில் இருந்த திசை நோக்கி, மதிய உணவுக்குப் பிறகு நடந்தோம் (அதைப்பற்றிய விவரங்கள் பின்பு). மீனாட்சியம்மன் கோவிலில், அலைபேசி, பை, ofcourse செருப்பு, என்று எதையும் கொண்டுசெல்லத் தடை. அவைகளை வைப்பதிலும் பெரும் குழப்பம். உள்ளே வரிசை, டிக்கெட் வாங்குவது, அதற்குரிய வரிசை என்று எதிலும் ஒரு ஒழுங்கு கிடையாது. குருவாயூர் அனுபவம் மலை என்றால் மீனாட்சியம்மன் கோவில் அனுபவம் மடு.
சுந்தரேசுவரர் சன்னதிக்கு வெகு முன்னால் இருக்கும் மண்டபத்தில் உள்ள சிற்பங்கள் wonders என்று சொன்னால் மிகையில்லை. அவ்வளவு திருத்தமான, உலோகத்தில் வடித்தவை போன்ற சிற்பங்கள். எப்படிப்பட்ட திறமை. பிறகு மற்ற மண்டபங்கள், ஆயிரம்கால் மண்டபச் சிற்பங்கள், அங்கிருக்கும் மியூசியத்தில் உள்ள உலோக மற்றும் கற்சிற்பங்கள் என....நம் சிற்பப் பாரம்பர்யமே, பாண்டிய நாட்டின் சிற்பக் கலையைப் பெருமிதமாகச் சொல்கிறது. நீ பார்த்ததெல்லாம், எங்கள் நாட்டின் பகுதிகள், ஆனால் தலைநகரத்தில் அதையெல்லாம் விடச் சிறப்பு வாய்ந்த சிற்பங்கள் என்று சொல்லமல் சொல்லியது. ஜீவி சாருக்குத்தான் நன்றி சொல்லணும். (அடுத்த முறை எப்படி அவற்றைப் படங்கள் எடுப்பது என்று யோசிக்கணும்)
யாளிகளைப் பற்றி பேச்சு வந்த பொழுது
நீக்குமதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் மண்டிக்கிடக்கும் யாளிகளின் நினைவு வந்து சொன்னேன்.
இவ்வளவு சீக்கிரத்தில் நீங்கள் அங்கு சென்று பார்த்து வந்து விவரித்தது குறித்து மகிழ்ச்சி. தனிப் பதிவாகவும் போடுங்கள். எபிக்கு சொந்த பந்தமாக மதுரைக்காரர்கள் நிறைய இருக்கிறார்கள். ரசிப்பார்கள்.
படங்கள் எடுக்க முடியாதது பெரும் வருத்தம். யாளிகளைவிட, அங்குள்ள சிற்பங்கள் உண்மையில் அதிசயம்தான்.
நீக்குஎபிக்கு சொந்தபந்தங்கள் சொல்லும், கோபு ஐயங்கார் கடை, நாகப்பட்டினம் ஒரிஜினல் நெய் மிட்டாய் கடை, பிரேமா விலாஸ் சென்றேன் (றோம்). நல்லா சாப்பிட்டோம் என்று சொல்லும்படியா மதிய உணவு அமையலை. மதிய உணவு வயிரை மாத்திரம் நிரப்பிவிட்டதால் கோபு ஐயங்கார் கடையில் சாப்பிட இயலவில்லை. நாகைபட்டினம் ஒரிஜினல்... எல்லாமே காலையில்தான் கிடைக்கும், இப்போ உள்ளதெல்லாம் பாக்கி உள்ளதுதான் என்று அலட்சியமாகப் பேசினார்கள்.
கோபு ஐயங்கார் கடையில் மதிய வேளையில் சென்றதால் வெள்ளையப்பம், காராவடை, தவலவடை, பஜ்ஜி சாப்பிட்டிருக்கலாம். விட்டுட்டீங்க. போகட்டும் நாகப்பட்டினம் ஒரிஜினல் நெய் மிட்டாய்க்கடைனு நீங்க போனது மேலகோபுர வாசலில் தானே? அங்கே காலம்பரவே சுடச் சுட எல்லாம் காலி ஆயிடும். அதிலும் அந்த உ.கி.மசாலா, பனிரண்டு மணிக்கப்புறமா கிடைப்பது கஷ்டம். எங்க பையர் இந்த முறை போயிட்டுக் கடையே இல்லைனு ஏமாந்து போயிட்டார். அன்னிக்கு லீவு போல!
நீக்குமாலை 4 மணிக்கு ஓபன் செய்தார்கள். அப்போ பசியில்லை. அதனால் கடையை புகைப்படம் மாத்திரம் எடுத்துக்கொண்டேன். எனக்கென்னவோ நாகை ஒரிஜினல் நெய்மிட்டாய்கடை உணவுகள் கவரும் என்று தோன்றவில்லை. இரண்டும் (கோபு, நாகை) ஒரே வரிசையில்தான் இருக்கின்றன
நீக்குஆமாம், இது அந்தக்கோடின்னா நாகப்பட்டினம் இந்தக் கோடி. நாகப்பட்டினம் நெய்மிட்டாய்க்கடையில் பாரம்பரிய முறைப்படியான பக்ஷணங்களே கிடைக்கும். காராசேவு நல்ல கார,சாரமாக நன்றாக இருக்கும். நெய்யிலேயே செய்த ஜிலேபி (விலை அதிகம் தான்) நெய் விட்டுக் கிளறிய அல்வா போன்றவை அங்கே சிறப்பு.
நீக்குஎன் மனதில், நாகப்பட்டினம் நெய்மிட்டாய் கடையைப் பற்றி பெரிய அபிப்ராயம் வரவில்லை. அந்தக் காலத்தில் நன்றாக இருந்திருக்கலாம். இப்போது அப்படி இருக்க வாய்ப்பு இல்லை.
நீக்குபடங்கள் சூப்பர், நெல்லை. உக்ரஸ்தம்பம் போனீங்களா? யாத்திரை கூட்டிச் செல்பவர்களுடன் போனால் போக முடியாதுதான் நீங்கள் சொல்லிருப்பது போல்...
பதிலளிநீக்குநாங்கள் எங்கள் குடும்பம் என்று தனியாகச் சென்றதால் இரண்டு நாள் தங்கியிருந்து உக்ரஸ்தம்பம் சென்று வந்தோம் என் மாமனார் 80 ந் போது அவரும் ஏறினார் எங்களோடு, பேரன் பேத்திகளோடு!!!! மாமியார் வரவில்லை. பெண்களில் நான் மட்டும் சென்றேன்!!! எனக்கு இப்படியானவைதானே பிடிக்கும்!!
ஜ்வால நரசிம்ஹர், அஹோபில, மாலோல, பாவன நரசிம்ஹர் இந்தப் பெயர்கள் மட்டுமே என் மனதில் நிற்பவை. ஜ்வால - அங்கு அஅப்போது அருவி சின்னதாக வீழ்ந்து கொண்டிருந்தது எனக்கு அதனூடே அதில் நனைந்து சென்றது ரொம்பப் பிடித்தது. கோயிலுக்குள் சென்று மற்றவர்கள் வரும் முன் நான் வெளியில் வந்து அதில் நின்று கொண்டிருந்தேன்....சில்லுன்னு!!!
ரசித்த இடம் அதுவும் உக்ரஸ்தம்பமும்...மலையும்
கீதா
இன்னமும் உக்ரஸ்தம்பம் செல்லவில்லை. என்றைக்காவது வாய்ப்பு கிடைக்குமா என்று யோசிக்கிறேன்.
நீக்குஜ்வால நரசிம்மர் கோவிலுக்குப் போகும் வழியில் (30 அடி தூரத்தில்) நீங்கள் சொல்வதுபோல ஜில் ஜில் என கொஞ்சம் தண்ணீர் விழுந்தது. சிறிய அருவியாக இருந்திருந்தால் நன்றாகவே இருந்திருக்கும் (மொபைலைக் காப்பாற்ற வேண்டியிருக்கும்). ஆனால் மழைக்காலத்தில் நினைத்துப்பார்க்க இயலாது.
எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது (சென்றமுறை) தவறவிட்டுவிட்டேன். ஒருத்தர் சென்றால் மற்றவர்களும் கிளம்பினால், அது ஆபத்தான வழி, ஜாக்கிரதையாகச் செல்லவில்லை என்றால் பரலோகம் என்பதன் காரணமாக யாருக்குமே யாத்திரை நடத்துபவர் அனுமதி தருவதில்லை (பெருமாள் வந்த இடம். அங்கு நம் காலடி வைப்பது தகாது என்ற செண்டிமெண்டால் அடித்துவிடுவார் ஹா ஹா ஹா)
தகவல்கள் சூப்பர். மலை அழகு! அதுவும் பசுமையாக இருக்கும் காலத்தில் போக வேண்டும்.
பதிலளிநீக்குகோயில் சிற்பங்கள் அவ்வளவு அழகு...அஹோபில நரசிம்மர் - அங்கு நதியில் நீர் இருந்ததா? நாங்கள் சென்றிருந்த போது மணல்தான்....ஆங்காங்கே ஏதோ நூல் போலத் தேங்கியிருந்தது....
கீதா
நதி ஓடவில்லை. ஆங்காங்கே தண்ணீர் தேங்கியிருந்தது. மழைக்காலத்தில் வெள்ளப் பிரவாகமாக பிரம்மாண்டமாக இருந்திருக்கும் கீதா ரங்கன்
நீக்குஇன்று வீட்டு வேலைகள் சுத்தம் செய்தல், ப்ளம்பர் வேறு இனிதான் வருவார் என்று போகிறது, எனவே கருத்தைச் சுருக்கிக் கொண்டு ஓடுகிறேன், நெல்லை....
பதிலளிநீக்குகீதா
ஞாயிறுதானே இந்த மாதிரி வேலைகளுக்கான தினம். சென்றுவாருங்கள்.
நீக்குஎத்தனை விவரங்கள், அசர வைக்கிறது...
பதிலளிநீக்குநன்றி திண்டுக்கல் தனபாலன்.
நீக்குநம் நாட்டில், குறிப்பாகத் தென்னாட்டில், ஒவ்வொரு கோவிலும் ஒரு உலகைக் காட்டும்..
பதிலளிநீக்குஉண்மைதான் ஏகாந்தன் சார். பல கோவில்கள் சிற்பக் களஞ்சியம். அதிலும் புராண நிகழ்வுகள், இதிஹாசங்கள் என்று பலப் பலச் சிற்பங்கள்
நீக்கு