இயக்குனர் ஏமாற்றி விட்டார்.
அவரும் பாவம் என்ன செய்வார், இசையமைப்பாளர் இப்படி செய்தால்?
அதாவது திருவிளையாடல் படம் நாமெல்லோரும் பார்த்திருப்போம். அதில் வரும் பாடல்கள் ஒரு நாள் போதுமா, இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை, பார்த்தா பசுமரம், பாட்டும் நானே பாவமும் நானே பாடல்கள். இவை எல்லாம் ஒரே கதைக்கான சம்பவத்துக்கான பாடல்கள்.
ஹேமநாத பாகவதர் பெரிய பாடகர். வெற்றி கொள்ள முடியாத திறமை மிகுந்தவர். ஆனால் அல்லது அதனால் அகம்பாவம் மிக்கவர். பாண்டியன் அரண்மனையில் வந்து பாடுகிறார். போட்டிக்கு பாண்டிய நாட்டிலிருந்து யாராவது ஒரு ஆளை ஓரண்டை இழுக்கிறார்!! யாருக்கும் துணிவில்லை. இந்த இடத்தில் எல்லாம் பாலையா அவர்கள் நடிப்பைப் பார்க்க கண்கோடி வேண்டும்.
யாரும் முன்வராத காரணத்தால் வலுக்கட்டாயமாக பாணபத்திரரை போட்டியில் இறக்கி விடுகிறார் பாண்டிய மன்னர்.
டி ஆர் மகாலிங்கம்தான் பாணபத்திரர். அவர் பதறிப்போய், பயந்துபோய் சிவபெருமான் சன்னதியில் ஒரு பாட்டுப்பாடி உதவி கேட்கிறார். உணர்ச்சி வேகத்தில் மயங்கிச் சரிகிறார். கலைஞர்கள் எல்லாம் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டவர்கள் யு ஸீ..
சிவபெருமான் நைஸாக ஒரு விறகு வியாபாரி போல மனித ரூபம் எடுத்து வெளிவந்து போட்டிக்குச் செல்கிறார். போட்டி கூட இல்லை. ஹேமநாத பாகவதர் வீட்டுத் திண்ணையில் பாடியதும் (பாணபத்திரர் பாடியதிலிருந்து கொஞ்சம் எடுத்து 'கத்துகிறார்'!) பாகவதர் மிரண்டு, பயந்து பதறி ஓடி விடுகிறார்.
After T. M. Soundararajan's death in May 2013, M. Ramesh of Business Line wrote: "The unforgettable sequences from ... [Thiruvilaiyadal] ... have forever divided the world of Tamil music lovers in two: those who believe that the [Oru Naal Podhuma] of the swollen-headed Hemanatha Bhagavathar could not be bested, and those who believe that Lord Shiva's Paattum Naane Bhavamum Naane won the debate hands down
இந்தக் காட்சி அமைப்புக்கு இயக்குனர் பாடல்கள் கேட்டதும் இசை அமைப்பாளர் கே வி மகாதேவன் 'ஒரு நாள் போதுமா' பாடலை பல்வேறு ராகங்களில் அமைக்கிறார். ஒவ்வொரு சரணமும் ஒவ்வொரு ராகம் என்கிற வகையில் அமைக்க, ஏ பி நாகராஜன் முதலில் அந்தப் பாடலைப் பாட சீர்காழி கோவிந்தராஜனை அழைக்கிறார். அவர் மறுத்துவிட பாலமுரளிக்கு வாய்ப்பு. நடுவில் பாணபத்திரரை அறிமுகம் செய்ய 'இல்லாததொன்றில்லை' என்கிற பாடல் சிம்மேந்திரமத்திமம் ராகத்தில் வந்தாலும் ஆபேரி ராகத்தில் 'இசைத்தமிழ் நீ செய்த' பாடலும், 'பாட்டும் நானே' பாடல் கௌரி மனோகரி ராகத்திலும் அமைத்து தயார் செய்கிறார்.
சில சமயங்களில் நாம் சாதாரணமாக செய்யும் சமையல் சிறப்பாகவும், பார்த்துப் பார்த்து செய்யும் சமையல் சுமாராகவும் அமைந்து விடும் இல்லையா? அதுபோல இந்தப் பாடல்கள் அமைந்து விட்டன போலும். அதற்காக இல்லைதான். குதிரை ரேஸில் மூக்கை மட்டும் முன்னால் நுழைக்கும் குதிரை போல முந்தி விடுகின்றன!
எனக்கு இந்தப் பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் என் மனதுக்குள் வரிசை அமைவது ஆபேரி, ராகமாலிகை, சிம்மேந்திரமத்திமம் அப்புறம் கௌரிமனோஹரி. சொல்லப்போனால் வெற்றி பெற்ற TMS பாடலைவிட பாலமு ரளி பாடலும், டி ஆர் மகாலிங்கம் பாடலும் மகா இனிமையாக இருக்கும். குழைவும் திறமையாக பாலமுரளி பாடல் என்றால், டி ஆர் மகாலிங்கம் குரலுக்கு சொல்லவே வேண்டாம்.
இசைத்தமிழ் நீ செய்த என்று அவர் எடுப்பதே நல்ல (ஸ்தாயி) உயரத்தில்தான். அதுவும் தனது குரலின் உயரத்தை சோதித்துக் கொள்ள முதலில் ;இசைத்தமிழ் நீ செய்த; வரிகளை வசனமாக நல்ல உயரத்தில் பாடிவிட்டு அப்புறம்தான் பாடலுக்குள் நுழைவார். ஒவ்வொரு சரணத்திலும் அவர் எட்டும் உயரம் அதற்கும் மேல். 'பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன' என்று பாடும்போதே (தன்னைத்தானே அவர் பேசும் தமிழ் என்று சொல்லிக் கொள்கிறார் என்று நினைக்கக் கூடாது. அது கண்ணதாசன் கைவண்ணம்) உயரம்தான். ஏழு கட்டை எட்டு கட்டை என்பார்களே, எனக்கு அது சொல்ல வரவில்லை!
கடைசி சரணத்தில் 'உன் ஊருக்கு பழி நேர்ந்தால் உனக்கன்றி எனக்கில்லை' என்று பாடும்போது குரல் கீச்சிடாமல் என்ன உயரத்தில் பாடுகிறார் என்று கேட்டுப்பாருங்கள். உங்களால் முடிகிறதா என்றும் (எங்காவது என்றாவது தனியாக இருக்கும்போது கதவை எல்லாம் சாத்திக்கொண்டு) முயற்சி செய்து பாருங்கள். (கதவை உடைத்துக்கொண்டு யாரும் வந்துவிட்டால் நான் பொறுப்பல்ல!). அந்த உச்சஸ்தாஹியிக்காக மட்டுமில்லை, பாடலின் சுகம், ராகத்தின் சுகம். ஆபேரி.
என்ன சாமர்த்தியம் பாருங்கள்... 'உன் ஊருக்கு பழி நேர்ந்தால் உனக்கன்றி எனக்கில்லை' என்று பொறுப்பை இறைவன் மேல் போட்டு விட்டார். அப்புறம் எப்படி அவர் சும்மா இருப்பார்? சமீபத்தில் கூட பாருங்கள் ஈரோடு இடைத்தேர்தலில் இதே டெக்னிக்கை தான் ஈ வி கே எஸ் பயன் படுத்தி இருப்பார். "நான் நிற்கவில்லை. இந்தத் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின்தான் நிற்கிறார்" என்றார். பதறிப்போன உடன்பிறப்புகள் செலவாய் செலவு செய்து ஜெயிக்க வைத்தார்கள். வேட்பாளருக்கு குங்குமத்தை அழித்துக் கொள்வதைத்தவிர வேறு வேலையில்லை. அதுபோல சிவனும் கிளம்பி விடுகிறார், இவரின் வெற்றியை உறுதி செய்ய...
சரி, சரி விஷயத்துக்கு வருகிறேன்.
பாடல்களைக் கேட்ட இயக்குனருக்கு எனக்கு வந்த அதே சந்தேகம் அதே உணர்வு வந்திருக்க வேண்டும். என்ன செய்வது? அப்படி நினைத்துக் கொள்கிறேன், மாற்றியும் போட / பாட முடியாது. என்ன செய்யலாம்? பாடுவது இறைவன் என்பதால் இயல்பாகவே மக்கள் அந்தப் பாடலை எடைபோட மாட்டார்கள். 'அவர்கள் மனம் சட்டென அதன் பக்கம் அமர்ந்து விடும். கவலை குறைந்தது! கூடவே கொஞ்சம் கிராஃபிக்ஸையும் சேர்த்து நகாசு வேலைகள் செய்து மக்கள் மனதில் அந்தப் பாடலை ஜெயிக்க வைத்து விட்டார்.
பொதுவாகவே இயக்குனர் திட்டமிட்டு காட்சிப் படுத்துவதுதானே ரசிகர்கள் அல்லது பார்வையாளர்கள் மனதில் பதியும்! ஸைக்காலஜி! எனவே உங்கள் ஆர்டர் ஆஃப் பிரிஃபரன்சும் மாறிவிட்டது. அதற்குதான் காட்சிகளை பார்க்காமல், நினைக்காமல் பாடல்களை பாடகர்களுக்காகக் கேட்டு பழக வேண்டும் என்பது!!
நான், 'பாட்டும் நானே' நல்ல பாடல் இல்லை என்று சொல்ல வரவில்லை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். இந்த மூன்று பாடல்களை வரிசை முறை பற்றி மட்டும் சொல்கிறேன்.
"இல்லை ஸ்ரீ.. அது உங்க அபிப்ராயம். எனக்கு அதுதான் முதல்.." என்று சொல்கிறீர்களா? சரி.. அது உங்கள் விருப்பம்!
தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று..
பதிலளிநீக்குதமிழ் வாழ்க..
வாழ்க.. வாங்க துரை செல்வராஜூ அண்ணா... வணக்கம்.
நீக்குமிக அற்புதமான பதிவு..
பதிலளிநீக்குசொல்லுதற்கு ஏதும் இல்லை..
ஒன்றுமேயா இல்லை?! நன்றி அண்ணா.
நீக்குஏதாவது சொல்லப் போய் சாமி குத்த்ம் ஆகிடப் போகுது!..
நீக்குஅதெல்லாம் ஆகாது. இறைவனும் பேச்சு சுதந்திரத்தை அனுமதிப்பவன்தான்.
நீக்குசாந்நித்யமான பாடல்கள்.. காட்சியமைப்புகள்..
பதிலளிநீக்குஇணையாவது யாதொன்றும் இல்லை..
ஆம். ஏ பி என் எல்லாம் தமிழகத்துக்கு கிடைத்த பெரிய வரம்.
நீக்குசந்நிதியில் இருந்து வெளிப்பட்ட சிவம் பாணபத்திரர் மீது ஒரு பார்வை பதிக்கும்.. பாருங்கள்!..
பதிலளிநீக்குஆகா!..
:))
நீக்குதிருவிளையாடலுக்குள் திருவிளையாடல்களை வைத்த தமிழின் திருவிளையாடலே திருவிளையாடல்!.
பதிலளிநீக்குஇசையரசர்கள். கவியரசர்கள்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
//இறைவனும் பேச்சு சுதந்திரத்தை அனுமதிப்பவன்தான்.//
பதிலளிநீக்குஅதையும் தான் பார்த்தோமே!..
அரசவையுள் இருந்த நக்கீரர் பொற்றாமரைக் குளத்துக்குள் இருந்து எழுந்து வந்ததை!..
அது சொன்ன பாடம் வேறல்லவா?
நீக்குஎன்னதான் பேச்சு சுதந்திரம் என்றாலும்
பதிலளிநீக்குஅது எதிர் வழக்காடியதாகத் தான் கொள்ளப்பட்டது..
மேலிடத்தைப் பகைத்துக் கொள்ளக் கூடாது ..
ஆனால்,
இது எல்லாவற்றுக்கும் மேல்!..
இல்லை, நேர்மை பாராட்டப்பட்டது. நக்கீரன் மீண்டு(ம்) வந்தார்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வெள்ளி பாடல்கள் கேட்க கேட்க திகட்டாதவை. இறைவன் மேல் வரும் பக்திப் பாடலையும் இணைத்து நீங்கள் வழக்கப்படி யான வெள்ளிக்காக எடுத்து சொன்னவிதம் அதை விட அட்டகாசம். இந்தப்படம், இந்த பாடல்களும் என்றுமே மறக்க முடியாதவை.
/(எங்காவது என்றாவது தனியாக இருக்கும்போது கதவை எல்லாம் சாத்திக்கொண்டு) முயற்சி செய்து பாருங்கள். (கதவை உடைத்துக்கொண்டு யாரும் வந்துவிட்டால் நான் பொறுப்பல்ல!). /
ஹா ஹா ஹா. எனக்கெல்லாம் எந்த ஒரு பாடலுக்கும் இதே கதிதான். அதனால் கதவை மூடிக் கொண்டெல்லாம் நான் முயற்சிப்பதேயில்லை. கதவு பாவம்... இந்த மாதிரி உச்ச ஸ்தாயி பாடல்களை வாய்குள்ளேயே முணுமுணுத்து கொண்டிருக்கும் போது வாய் விட்டு யாராவது திட்ட வந்தால் நிறுத்தி விடுவேன்.. :) .
தங்கள் அருமையான எழுத்துக்களை ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மிக்க நன்றி கமலா அக்கா. நான் எங்காவது வெளியில் செல்லும்போது சுற்றுவட்டாரத்தில் நீண்ட தூரத்துக்கு ஆளே இல்லை என்று உறுதி செய்து கொண்டு சில பாடல்களைக் கத்தியிருக்கிறேன்!
நீக்குவிறகு வெட்டியாக வந்த ஈசன் //(பாணபத்திரர் பாடியதிலிருந்து கொஞ்சம் எடுத்து 'கத்துகிறார்'!)/
நீக்குஅது போலவா? ஹா ஹா ஹா
பாணபத்திரர் பாடறதைக் கேட்டுட்டு அவர் பாடிய பாடல்கள்லேருந்து கொஞ்சம் எடுத்து கத்தினேன் என்று சிவன் - சிவாஜிதான் சொல்வார்!
நீக்குஏலவார் குழலியின் கூந்தல் வாசம் ஈசன் ஒருவனுக்குத் தானே தெரியும்!..
பதிலளிநீக்குஇதை நக்கீரர் ஏன் உணர்ந்து கொள்ள வில்லை?..
இறைவனாரின் நாசி நக்கீரருக்கு இல்லை. நக்கீரனுக்கு பாண்டியன் மேல்தான் கோபம் வரவேண்டும். சும்மா இருக்காமல் எதையாவது கிளப்பி விட்டு கடுப்பேத்திட்டான் என்று!
நீக்குஅதானே!..
நீக்குகட்டழகு
பதிலளிநீக்குமேனியைப்பார் - பொட்டும்
பூவுமா - நீட்டி கட்டையிலே
படுத்துவிட்டா காசுக்காகுமா...?
வட்டமிடும்
காளையைப்பார் வாட்ட
சாட்டமா - கூனி வளைஞ்சி
விட்டா ஒடம்பு இந்த ஆட்டம்
போடுமா...?
பார்த்தா பசுமரம்...
படுத்து விட்டா நெடுமரம்...
சேர்த்தா வெறகுக்காகுமா ? ஞான தங்கமே...
தீயிலிட்டா கறியும் மிஞ்சுமா ?
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா ?..
நீக்குஞானத் தங்கமே...
நீக்குதவறுகளுக்கு மன்னிக்கவும்... நன்றி...
நீக்குதவறா... தவறென்ன இதில்? நானும் பாடிப்பார்த்தேன். உங்கள் கூட்டுப் பாடலில் இணைந்தேன்.
நீக்குஇது, சமீபத்தில் வாரணாசியில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தைக் காட்டுகிறது. இது பற்றி நான் எபியில் நேரம் வாய்க்கும்போது எழுதுகிறேன்
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா... வணக்கம்.
நீக்குபாடல்கள் அனைத்தும் அருமை.
பதிலளிநீக்குகேட்டு மகிழ்ந்தேன். ஒரு நாள் போதுமா பாட்டு என் அப்பாவுக்கு பிடித்த பாட்டு. என் அப்பாவின் நினைவு நாள் பதிவில் பகிர்ந்த பாட்டு.
டி ஆர் மகாலிங்கம் பாடலும் மிகவும் பிடிக்கும். கேட்டு மகிழ்ந்தேன்.பகிர்வுக்கு நன்றி.
ஓ.. அப்படியா? வருகைக்கும் கருத்துக்கும் கோமதி அக்கா.
நீக்குமுதல் பாடலில் டி.எஸ் பாலையா மற்றும் இந்த பாட்டில் வரும் அனைத்து நடிகர்களும் நன்றாக நடித்து இருப்பார்கள்.
பதிலளிநீக்குஆமாம். ஏ பி என் படங்களில் நடிப்புக்கு கேட்க வேண்டுமா என்ன!
நீக்குஇந்தப் படமும் பாடல்களும் ரொம்ப ப் பிடித்தவை......
பதிலளிநீக்குஉங்கள் பாடல்கள் காட்சி ஆராய்ச்சி செம ரசித்து வாசித்தேன் ஸ்ரீராம்...
ஒரு வரி புரியவில்லை இதோ வருகிறேன்
கீதா
நன்றி கீதா.
நீக்குசில சமயங்களில் நாம் சாதாரணமாக செய்யும் சமையல் சிறப்பாகவும், பார்த்துப் பார்த்து செய்யும் சமையல் சுமாராகவும் அமைந்து விடும் இல்லையா? அதுபோல இந்தப் பாடல்கள் அமைந்து விட்டன போலும். //
பதிலளிநீக்குஇதுதான் புரியவில்லை ஸ்ரீராம். ஒப்பீடு
கீதா
போட்டிப் பாட்டு.. பார்த்து செய்யுங்கன்னு இயக்குனர் சொல்லி இருப்பார். பாலமுரளிக்கு போட்ட பாட்டை எல்லாம் ஜஸ்ட் லைக் தட் ஒரு தேங்காய்த்துவையல் ஒரு பச்சை மோர்க்குழம்பு செய்தா மாதிரி போட்டு இட்டு.. ஜெயிக்கற பாட்டை கவனமாக அமைக்கும்போது பார்த்து பார்த்து அளவெடுத்து செய்தும் சொதப்பிய சமையல் மாதிரி ஆர்டினரி ஆகி விட்டது.
நீக்குஉங்கள் இருவரின் அனுமானம் தவறு என்றே நான் நினைக்கிறேன். ஹேமநாத பாகவதரை நாட்டில் யாருமே போட்டியில் தோற்கடிக்க முடியவில்லை. அப்படீன்னா அவர் பாடப்போகும் பாடல் சூப்பரோ சூப்பராக இருக்கவேண்டும். அப்படித்தான் அந்தப் பாடலின் இசையும். ஆனால் அவர் வீழ்வது ஆணவத்தாலே. அதனால்தான் பாடல் வரிகளில் ஆணவம் இழையோடும். இந்தப் பாடலைத் தோற்கடிக்க, தெய்வீக உதவி வேண்டும். அதனால்தான் டிஎமெஸ் பாடலில், தெய்வம் நினைத்தால் இயற்கை அதன் நினைப்புப்படி ஆடும் என்று காட்டும்விதமாக பாடலைக் கொண்டுபோயிருப்பார். அங்கு இசைக்கு முக்கியத்துவம் இல்லை, ஆனால் பாடலின் வலிமைக்கு முக்கியத்துவம். நாம் இரண்டு பாடலின் இசையமைப்பைப் போட்டுக் குழப்பிக்கொள்கிறோம் என்று நினைக்கிறேன். அதனால்தான், சிவாஜி பாடலின் ஆரம்பமே நன்றாக இருந்திருக்காது (ஞ்ஞே...என்றெல்லாம் ஆரம்பிப்பார்)
நீக்குஇசைத்தமிழ் அந்தப் பாடலும் சரி சிம்மேந்திரமத்யமத்தில் தொடங்கும் "இல்லாததொன்றில்லை'"// ஹை பிச்சோ பிச்சு!!! பிச்சு உதறுகிறார்.
பதிலளிநீக்குஇது தொடக்கம் சிம்மேந்திரமத்யமம்...வாழ வைத்தாய்ன்னு உச்சஸ்தாயி ஹையோ...
சொல்லாலும் மனதாலும் சுடர் கொண்டு தொழுவோரை - வரிகள் வேறு ராகம்....அதற்கு அடுத்தாற்போல் வரும் கல்லான உருவமும் அது வேறு...அந்த வரிகள் முடித்து இசைத்தமிழ்னு தொடங்கும் வகையில்....
கீதா
ஆமாம் ஒவ்வொரு சரணத்திலும் வேறு ராகம். சொல்ல மறந்தேன்!
நீக்குஆமாம் பால முரளி, டி ஆர் எம் பாடல்கள் செமையா இருக்கும்...ரசித்துக் கேட்டேன் இப்பவும். கேட்டுக் கொண்டேதான் இங்கு கருத்திடல்....
பதிலளிநீக்குநீங்கள் டி எஸ் பாலையா பத்தி சொல்லியிருக்கும் அந்த வரி அப்படியே வழி மொழிகிறேன்...என்னா நடிப்பு அந்த சீன் ..
அதே போலத்தான் திமோவில் ரயிலில் போகும் போது பாலையா.....செம....
கீதா
காதலிக்க நேரமில்லை நினைவுக்கு வரவில்லையா?
நீக்குகுழைவும் திறமையாக பாலமுரளி பாடல் என்றால், டி ஆர் மகாலிங்கம் குரலுக்கு சொல்லவே வேண்டாம். //
பதிலளிநீக்குஅதே அதே....டி ஆர் எம் எப்படி இப்படி உச்சஸ்தாயியில் பாடுகிறார் கணீரென்று...குரல் வெண்கலக் குரல்னு சொல்லலாம். அப்படி உச்சஸ்தாய்யிலும் சொற்கள் என்ன தெளிவு பாருங்க...உச்சஸ்தாயி போகும் போது பலரும் கொஞ்சம் தொண்டையைக் கொஞ்சம் அமுக்கிக்குவாங்க, ஆனா இவர்...தொண்டையை திறந்து பாடுகிறார். அந்த அளவிற்கு அவரது தொண்டை Vocal Chords விரியுது!!!
கீதா
God's gift.
நீக்கு;இசைத்தமிழ் நீ செய்த; வரிகளை வசனமாக நல்ல உயரத்தில் பாடிவிட்டு அப்புறம்தான் பாடலுக்குள் நுழைவார். //
பதிலளிநீக்குஆமா....உச்சியிலும் இறைவானு சொல்லி மேல போகும் போதும் அகாரம் எப்படி வருது...
எனக்கில்லைன்னு கடைசில போவது 7 அலல்து 8 கட்டைதான்
சூப்பர் சிங்கரில் பாடிய எவரும் இந்தக் கட்டையை எட்டும் விதத்தில் பாட்டைத் தொடங்கவில்லை நான் பார்த்தவரையில்...
கீதா
யாராலுமே முடியாது என்று நினைக்கிறேன். அவ்வை ஷண்முகியில் கமல் பாடிப் பார்த்து விட்டு எத்தனை கட்டை என்று விரல் காட்டுவார், நினைவிருக்கிறதா?
நீக்குஹல்ல்ல்ல்ல்லோ....முத்துச்சிற்பி அவர்களின் (சூப்பர் சிங்கர்) பாடல்களைக் கேட்டுப்பாருங்கள். சித்ரா அவர்கள், ஐயையோ இந்தக் கட்டையில் என்னால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது என்றார்
நீக்குகடைசி சரணத்தில் 'உன் ஊருக்கு பழி நேர்ந்தால் உனக்கன்றி எனக்கில்லை' என்று பாடும்போது குரல் கீச்சிடாமல் என்ன உயரத்தில் பாடுகிறார் என்று கேட்டுப்பாருங்கள்.//
பதிலளிநீக்குஆமா ஸ்ரீராம் அதைத்தான் மேலே சொல்லிருக்கிறேன்...தொண்டையை சுருக்கிக் கொள்ளாமல் தெளிவாகவும் அது ஆச்சரியமான வரப்பிரசாதம்.
//உங்களால் முடிகிறதா என்றும் (எங்காவது என்றாவது தனியாக இருக்கும்போது கதவை எல்லாம் சாத்திக்கொண்டு) //
ஹாஹாஹஹாஅ பின்ன முயற்சி செய்யாமல் விடுவதுண்டா? அப்ப அந்த வயசுல, என் மாமி (குரல் கணீர் நல்ல உயரம் செல்லும்) என்னை அப்படித்தான் சொல்வாங்க உன் குரல் நல்ல கனமான குரல் மேலே போகும் பாடுன்னு....அதுவும் இதைப் பாடுன்னு.....அப்போது எட்டியது. ஆனால் பயிற்சி செய்தாதானே? ஹிஹிஹி....இப்பப் பாடிப் பார்த்தால் 5 கட்டையைத் தாண்டாது! அப்படினா தொடங்கும் போது எந்தக் கட்டைல தொடங்கணும் பாருங்க....தொடங்கினா...யாருக்கும் கேக்காது!!ஹிஹிஹிஹி
கீதா
மறைந்த என் மாமா அவ்வப்போது முஅயற்சித்துப் பார்ப்பார். அவர் குரல் சாதாரணமாக உச்சஸ்தாயியை சாதாரணமாக எட்டும். அவருக்கு குரல் கீச்சி விடும்.
நீக்குஎனக்கு பதின்ம வயது வரை குரல் கிரீச்சிடாமல் உச்சஸ்தாயிக்குச் செல்லும். என்னால் மெதுவாகப் பாடமுடியாது. நான் பாடினால் ரொம்ப தூரம் கேட்கும். பிற்காலத்தில் ஒரு அளவுக்கு மேல் உச்சஸ்தாயிக்கு குரல் போகாதபோது, காலம் போயிடுச்சு என்று தோன்றும். சமீப வருடங்களில் அந்தப் பகுதியில் குரலை மாற்றிவிடுவேன். அதை எங்க வீட்டில் எல்லோரும் விரும்புவதில்லை. இது புரியலைனா பிற்கு பாடி அனுப்புகிறேன்.
நீக்குதிருவிளையாடல் டட பாடல்கள் அந்த காலத்தில் கொடிகட்டிப் பறந்த பாடல்கள்.
பதிலளிநீக்கு.பாடல்களை நன்கு அலசி ஆய்ந்ததுள்ளீர்கள். பகிர்வு நன்று.
நன்றி மாதேவி.
நீக்குஸ்ரீராம், வரிசை பற்றி, இயக்குநர் காட்சி பற்றி சொன்னது முதலில் கொஞ்சம் குழப்பமாக இருந்தது. புரிந்தது பின்னர்... இயக்குநருக்கு சந்தேகம் வந்திருக்கும்னு நினைக்கறீங்களோ? பாட்டும் நானே பாடலைப் பிரபலப்படுத்த...அப்படிச் செய்திருக்கக் கூடும் என்று....
பதிலளிநீக்குஅந்தப் பாட்டும் நல்ல காட்சியமைப்பு...(கொஞ்சம் மிகை உண்டுதான்!!!)
அந்தப் பாட்டும் கொஞ்சம் கடினமான பாடல்தான்..கௌரி மனோஹரி.....நல்ல இசை கே வி மஹாதேவன் செமையா போட்டிருக்கிறார்...
கீதா
திரும்பத் திரும்பக் கேட்கும்போது அவருக்கு தோன்றி இருக்காதா என்ன.. காட்சியமைப்புக்கு எவ்வளவு ரிகர்சல் பார்த்திருப்பார்....
நீக்குஎழுத்தாளர் ஜனா அவர்கள் கூட கே வி எம் பற்றி பதிவு போட்டிருந்தார்.
பதிலளிநீக்குஅவர் பிறந்த தினம் ஒட்டி
கீதா
நானும் படித்தேன்.
நீக்குமுகநூலில் அதிகமாய்ப் பார்த்தது கேவிஎம் பற்றிய பதிவு தான்.
நீக்குஇசை பற்றியும், ராகங்கள், சங்கீதம் குறித்தும் நன்கு அறிந்த உங்களைப் போன்றவர்கள் இப்படி அலசி ஆராய்ந்து பாடல்கள் பற்றியும் அதன் வரிசைக்கிரமம், நீங்கள் ரசித்த விதத்திலும் குறிப்பிட்டு எழுதி இருப்பது மிக மிக அருமை. எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் இப்படிச் செய்யலாமோ? ஆனால் ஒரே படத்தின் பாடல்களாக இருக்காது. இங்கே திருவிளையாடல் படப் பாடல்களில் பாடி இருப்போரில் யார் உசத்தி? யார் சுமார் எனச் சொல்லுவதும் கடினம். அவரவர் வழியில் திறமைசாலிகளே! இந்தப் படம் வந்தப்புறமா டி.ஆர். மஹாலிங்கம் அவர்களை இரண்டு, மூன்று வீட்டு விசேஷங்களில் பார்த்திருக்கேன். அப்போப் படங்கள் பற்றியோ தன் பாடல்கள் குறித்தோ அவர் பேசிப் பார்க்கவில்லை. ஆனால் அவர் உள்ளே வரும்போதே அந்தப் பட்டு வேஷ்டியிலிருந்து சுகந்தமான வாசனைத் திரவியம் மணம் முன்னால் வரும். அந்தக் காலத்துப் பெரிய அம்பாசடர் கார். தென்கரையிலிருந்து அதில் தான் வருவார்.
பதிலளிநீக்குநானும் வரை நேரில் பார்த்திருக்கிறேன். அவர் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். ஆஸ்பத்திரியில் அவருக்கு தென்றலோடு உடன்பிறந்தாள் பாடல் பாடிக் காட்டினேன்.
நீக்குசெந்தமிழ்த் தேன்மொழியாள் பாட்டைத்தான் சொல்றீங்கனு நினைக்கிறேன். அதிலே வரும் அடுத்த வரியை நாங்க தெள்ளாதன என்றே சொல்லி/நினைத்துக் கொண்டிருந்தோம். பின்னர் தான் தெரிந்தது அது நிலாவெனச் சிரிக்கும் மலர்க்கொடியாள் என்று வருவது. :)))))) சில சொற்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் பின்னர் அது ஓர் காமெடியாக மாறி இருந்திருக்கு.Captain! Captain! Who is the girl? என்பதை நானெல்லாம் காப்டன், காப்டன், குஸ்தி கேர்ல்? எனச் சொல்லிக் கொண்டிருப்பேன். அது ஒரு கனாக்காலம். :)))))
நீக்குதிருவிளையாடல் படம் ஒரு க்ளாசிக். எத்தனை முறை பார்த்திருப்பேனோ! இதை மதுரைக் கோயிலில் படம் பிடிக்கையில் நாங்க மேலாவணி மூலவீதி வீட்டில் தான் இருந்தோம். பின்னால் மேல/வடக்குச் சித்திரை வீதிகளில் ஷூட்டிங் நடப்பதாய்க் கேள்விப்பட்டு அப்பா, அண்ணா, தம்பி, பெரியப்பா பிள்ளை இன்னும் தெருக்காரங்க எல்லாம் போனாங்க. நானெல்லாம் சும்மாவே வெளியே போக முடியாது. இதிலே ஷூட்டிங் எங்கே பார்க்க முடியும்:? மொட்டை மாடிக்குப் போய்ப் பின்னாடித் தெருவிலே ஏதேனும் தெரியுதானு பார்த்தேன். அம்புடுதேன்.
பதிலளிநீக்குஷூட்டிங் பார்த்தால் படம் பார்க்கும் ஆசை போய்விடும் என்று தோன்றும் எனக்கு!
நீக்குஇதற்கு இன்னொரு உதாரணம்.....சமையல் அறையில் நின்றுகொண்டு எப்படிப் பண்ணுகிறார்கள் என்று முழுவதையும் பார்த்தால் சாப்பிடும் ஆசை குறைந்திருக்கும்
நீக்குஅதனால்தான் சமைப்பவர்கள் குறைவாக சாப்பிடுவார்கள்.
நீக்குஇவையெல்லாம் தமிழ் வாழும் வரையில் நினைவில் நிற்கும் பாடல்கள் ஜி
பதிலளிநீக்குஆமாம் ஜி. நன்றி.
நீக்குஹாலாஸ்ய மகாத்மியம் என்று ஒரு வடமொழி நூல்.
பதிலளிநீக்குஆச்சரியம் என்னவென்றால் இந்த ஹாலாஸ்ய மகாத்மியம் நூலில் சிவபெருமான் மதுரையில் நடத்திய திருவிளையாடல்கள் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது.
அப்படியா?
நீக்குஆமாம், ஸ்ரீராம்.
நீக்குஸ்கந்த புராணத்தில்
வியாஸர் இந்த ஹாலாஸ்ய மஹாத்மியம் பற்றி சொல்லியிருக்கிறாராம்.
இது வழி வழி ஒருத்தருக்கு ஒருத்தர் சொல்லித் தெரிந்த புராணக்கதையாம். நந்திதேவர், ஜனத்குமாரர் என்ற முனிவருக்கு சொல்ல அதனை ஜனத்குமாரர் வியாஸருக்கு சொல்ல ஸ்கந்த புராணம் உலகுக்காக உருவாகிறது.
தெரிந்துகொண்டேன்.
நீக்குஎன்னதான் திரைப்படத் திருவிளையாடல் பற்றி நாம் பேசினாலும் திருவிளையாடல் புராணம் என்றாலே
பதிலளிநீக்குபரஞ்சோதி முனிவர் என்ற மகான் தான் சட்டென்று நம் நினைவுக்கு வருவார். மலைக்கத்தான் வேண்டும்.
அன்னை தமிழில் இவர் ஆக்கிய படைப்பே திருவிளையாடல் புராணம். மொத்தம் 3363 செய்யுள்கள். அவற்றை மூன்று காண்டங்களாகப் பிரித்து தமிழ் பேசும் நல்லுலகத்திற்கு அருளியிருக்கிறார்.
பரஞ்சோதி முனிவர் தன் படைப்புக்கு ஹாலாஸ்ய மகாத்மியத்தைத்தான்
துணையாகக் கொண்டார் என்று மொழி அறிஞர்கள் சொல்கிறார்கள்.
நன்றி ஜீவி ஸார்.
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குதிருவிளையாடல் படத்தில் யார் நன்றாக நடிக்கவில்லை? பாலையாவும், நாகேஷும் டாப் க்ளாஸ்! "வரகுணா இந்த அற்ப பரிசுக்காக நான் இங்கு வரவில்லை(அரசன் கொடுக்கும் பரிசு அற்ப பரிசாம்) இதைப்போன்ற பாராட்டுதல்களையும், பரிசுகளையும் பார்த்து எனக்கு சலித்து விட்டது சலித்து விட்டது"(எப்படி..?) தெனாவெட்டு என்றால் அதுதான். பாடல்கள் இனிமையில் நீங்கள் சொன்னது சரியாக இருக்கலாம். பாடல் காட்சி என்று எடுத்துக் கொண்டால், என் விருப்பம் 'பாட்டும் நானே, பாவமும் நானே'தான். அந்தப் பாடல் தொலைக் காட்சியில் ஒளிபரப்பப்பட்டால் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் விட்டு விட்டு வந்து பார்ப்பேன். சிவாஜியின் நடிப்பு அப்படி. அடி வயிற்றிலிருந்து அவரே பாடுவது போல இருக்கும். அதுவும் 'நான் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாமே அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா' என்ற வரிகளைப் பாடும் பொழுது சிவாஜியின் முகபாவம்... ! அந்த வரிகளுக்கு அப்படி யாராவது நடிக்கட்டும் அவருக்கு ஒப்பாரும், மிக்காரும் உண்டா என்று யோசிக்கலாம்.
பதிலளிநீக்குபி.கு.: அதற்காக சிவாஜியோடு நடிப்பு போய் விட்டது என்று நான் கூறவில்லை. எனக்கு தனுஷும் பிடிக்கும். ஏன் சிம்பு கூட பிடிக்கும்.
ரசனையான பின்னூட்டத்துக்கு நன்றி பானு அக்கா.
நீக்குஎனக்கென்னவோ அந்தக் காட்சியில் சிவாஜி நடிப்பு பெரும்பாலும் பிடிக்கவில்லை. ரொம்பவே ஓவர் ஆக்டிங் என்றே தோன்றும். ரொம்ப அலட்டல். சிவாஜி அவர்களே சொல்லியிருந்தபடி, பி, சி ரசிகர்களுக்கு இந்த மாதிரி ஓவர் ஆக்டிங் (அல்லது அழுத்தமான நடிப்பு) அவர்கள் மனதைக் கவரும்.
நீக்கு//பாடும் பொழுது சிவாஜியின் முகபாவம்...// - அப்போது என் மனதில்... எல்லாம் கிராபிக்ஸ்... இதுல இவரால்தான் எல்லாம் நடப்பதுபோல என்னா பில்டப்பு என்றுதான் தோன்றும். என்ன சொல்றீங்க?
சிவாஜியின் சில பேட்டிகள் பார்க்கும்போது கொஞ்சம் தலைக்கனம் இருக்குமோ என்று தோன்றும். கூடவே இருந்தாலும் தப்பில்லை என்றும் தோன்றும். எனக்கு பாலமுரளி பற்றியும் இதே அபிப்ராயம் உண்டு. ஒரு கொசுறு தகவல்.. இன்று 4/4/23 அன்று மதியாயம் முதல் பாலமுரளி பாடல்களாகக் கேட்டுக் கொண்டிருந்தேன்,
நீக்கு//"நான் நிற்கவில்லை. இந்தத் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின்தான் நிற்கிறார்"// - ஹா ஹா ஹா. பின்ன.... நண்டுகள் போல காலை வாரத் தயாராக இருக்கும் கதர்ச்சட்டைகளை நம்ப அவருக்கு என்ன பைத்தியமா பிடித்திருந்தது? அவருக்குத் தெரியாதா எப்படியெல்லாம் உள்ளடி வேலை செய்வார்கள் என்று
பதிலளிநீக்குஇளங்கோ நல்ல விவரம். இசுடாலின் ஏமாந்து விட்டார்! ஆனால் பாருங்கள் இப்போது இளங்கோவனும் ஆஸ்பத்திரியில்!
நீக்குஇந்தப் பதிவு நான் வாரணாசி சென்ற மறுநாள் வெளிவந்திருக்கிறது. மற்றவர்கள் எல்லோரும் அலஹாபாத் சென்றுவிட, நானும் மனைவியும் முதலில் கங்கையில் அக்கரைக்கு படகில் சென்று குளித்துவிட்டு பிறகு எல்லா Ghatகாட்டையும் (அதாவது மணிகர்ணிகா முதல்) படகில் பார்த்துவிட்டு, அஸ்ஸி காட்டில் இறங்கினோம். பிறகு காசி விஸ்வநாதர் முதலிய கோவில்களுக்குச் சென்றுவிட்டு, அறைக்குத் திரும்பி உணவு உண்டுவிட்டு, ஏசியை ஆன் செய்து தூங்க ஆரம்பித்து, மறுநாள் காலை வரை நன்கு தூங்கினோம் (இடையில் இரவு டிபனாக சப்பாத்தி சாப்பிட்ட நினைவு). அதனால் இந்தப் பதிவுக்கே வரவில்லை. பிறகு மறந்தும் விட்டது.
பதிலளிநீக்குஆனால் குறிப்பாக உங்கள் அபிப்ராயம் என்ன என்று தெரிந்து கொள்ள நான் காத்திருந்தேன்!
நீக்குஎன்னுடைய பாணி பின்னூட்டம் கொஞ்சம் வள வள. அதனால் அந்தத் தினம் தவறிவிட்டால் பிறகு பின்னூட்டம் எழுதுவது சரியாக வராது, படைப்பாளியும் படிக்கத் தவறிவிடலாம்.
பதிலளிநீக்குபடைப்பாளிக்கு பின்னூட்டம் எப்போது வந்தாலும் சந்தோஷம்தான். கடமைக்கு இல்லாமல் ரசனையுடன் அனுபவித்துப் பின்னூட்டமிடும்போது சந்தோஷமாகவே இருக்கும்.
நீக்குஇன்றைய பதிவு மிகவும் சிறப்பு. இதில் என்னைக் குழப்புவது, பாடல்களின் ராகங்களையும் குறிப்பிட்டு, ஸ்ரீராம், எது சிறப்பாக இருந்ததுன்னு சொல்கிறார் என யோசிக்க வைத்தது.
பதிலளிநீக்குஎனக்கும் 'பாட்டும் நானே' மூன்றாவது பரிசுக்குத்தான் தகுதியானது என்ற எண்ணம் உண்டு.
ஒரு நாள் போதுமா - இந்தப் பாடலை எவ்வளவு ஆணவமாகவும் தன்னம்பிக்கையுடனும் பாடணுமோ அந்தப் bபாவத்தை பாலையா அவர்களும் அவருடைய குழுவினரும் கொண்டுவந்திருப்பார்கள். சறுக்கும் வாய்ப்புள்ள சங்கதிகள். சீர்காழி, தன் குரல் தோற்றதாக இருந்துவிடக்கூடாது என்று எண்ணியிருக்கிறார் போலிருக்கிறது. பாலமுரளி ஒரு லெஜெண்ட். அதனால் அந்தப் பாடல் இன்றுவரை நிலைத்து நிற்கிறது.
இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை - பாடகரின் குரலினாலும் ஸ்தாயினாலும் இந்தப் பாடல் நிலைத்து நிற்கிறது. எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
இந்த மாதிரி, ஒரு படத்தின் பாடல்களை எடுத்துக்கொண்டு விளக்கமாகவும் ரசனையாகவும் எழுதியிருப்பது பிடித்திருக்கிறது.
ஆபேரி உருக்கும் ராகம். ஸ்ரீரஞ்சனி மயங்க வைக்கும் ராகம். என்னைப்பொறுத்த வரை சில ராகங்கள் என் பேவரைட். இதேபோல ராகங்களை வைத்துதான் அலச வேண்டும் என்றில்லை. வேறு மாதிரியும் யோசித்து வைத்திருந்தேன். நீங்கள் சொல்வது போல நேரம்தான் இல்லை.
நீக்குஇதே பாணியில் எழுதினால் மிகவும் நன்றாக இருக்கும். அதற்கு உழைப்பும் நேரமும் தேவை (உங்களுக்கு இப்போது இருக்கிறதா என்பது சந்தேகம்).
பதிலளிநீக்குஅப்படி எழுத நிறைய படங்கள் உண்டு. கற்பகம், 'பா' வரிசைப் படங்கள், கர்ணன்..... என்று பெரிய லிஸ்ட் உண்டு. நிறைய பாடல்கள் கர்னாடக இசையை அடிப்படையாகக் கொண்டது என்பதால் காலத்தால் அழிக்க முடியாதபடி நிலைத்து நிற்கின்றன.
நானும் யோசித்து வைத்திருக்கிறேன். பார்ப்போம். நேரம் கிடைக்கும்போது இப்படியும், மற்ற சமயங்களில் சுருக்கமாகவும்!
நீக்குமாறுபட்ட பாணியில் எழுதப்பட்ட பதிவு என்பதால்தான் வறுபுறுத்தி உங்களை படிக்க வைத்தேன்!