சனி, 23 அக்டோபர், 2021

3 கி.மீ., தூரத்தை மூன்றே நிமிடங்களில் கடந்து...

 சென்னை : குப்பையில் கிடந்த, 100 கிராம் தங்க நாணயத்தை, போலீசாரிடம் ஒப்படைத்த துாய்மை பணியாளர்களுக்கு, போலீசார், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

சென்னை, திருவொற்றியூர், அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் கணேஷ் ராமன், 36. தனியார் கூரியர் நிறுவன ஊழியர். அவர் மனைவி, ஷோபனா, 34. இந்த தம்பதிக்கு, இரு பிள்ளைகள் உள்ளனர். கணேஷ், மார்ச் மாதம், 100 கிராம் எடையுள்ள தங்க நாணயத்தை வாங்கி, மனைவி பயன்படுத்திய பழைய வளையல் கவரில் போட்டு, கட்டிலுக்கு அடியில் வைத்திருந்தார்.

இது தெரியாத மனைவி, நேற்று முன்தினம் மாலை, வீட்டை சுத்தம் செய்த போது, அந்த கவரை எடுத்து, குப்பைத் தொட்டியில் போட்டு விட்டார். வீட்டிற்கு வந்த கணவர், வளையல் கவரை கேட்ட போது, குப்பை தொட்டியில் போட்டதாக கூறியதும் அதிர்ச்சியடைந்தவர், சாத்தாங்காடு காவல் நிலையத்தில், தங்க நாணயம் மாயமானது குறித்து புகார் அளித்தார்.

இது குறித்து, துாய்மை பணி மேற்கொள்ளும் ராம்கி, தனியார் ஒப்பந்த நிறுவன மேற்பார்வையாளர் செந்தமிழ் செல்வனிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, குப்பை தரம்பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மேரி என்ற ஊழியர், தங்க நாணயத்தை மீட்டு, மேற்பார்வையாளரிடம் ஒப்படைத்துள்ளார்.

துாய்மை பணி அதிகாரிகள், தங்க நாணயத்தை சாத்தாங்காடு குற்றப்பிரிவு ஆய்வாளர் ராஜேஷ்வரியிடம் ஒப்படைத்தனர். இதன் மதிப்பு, 4.5 லட்ச ரூபாய் என தெரிகிறது. உடனடியாக பாதிக்கப்பட்ட நபர்களை வரவழைத்து, தங்க நாணயத்தை சரி பார்த்த பின், அதை பத்திரமாக மீட்டு கொடுத்த துாய்மை பணியாளர்கள் கையாலே தம்பதியிடம், நேற்று மதியம், போலீசார் வழங்க செய்தனர்.

குப்பையில் கிடந்த, 100 கிராம் தங்க நாணயத்தை மீட்டு, போலீசாரிடம் நேர்மையாக ஒப்படைத்த, துாய்மை பணியாளர்களுக்கு, தங்கத்தின் உரிமையாளர்கள், போலீசார், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

=====================================================================================================


லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில், தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்ற தந்தையை காக்க கோரி, மகள் விடுத்த அழைப்பை ஏற்று, 3 கி.மீ., தொலைவை 3 நிமிடங்களில் கடந்து வந்த போலீசார், தற்கொலையை தடுத்து நிறுத்தி உள்ளனர்.


உ.பி.,யின் கவுசாம்பி மாவட்டத்தில் ஒரு கிராமத்திலுள்ள ஒரு வீட்டில், தன் தாயுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால், தந்தை தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சிப்பதாகவும்; விரைந்து வந்து காப்பாற்றும் படியும் போலீஸ் அவசர உதவி எண்ணை (முதலில் 100 தற்போது 112) அழைத்து மகள் கோரியுள்ளார்.

போலீசாருக்கு இந்த அழைப்பு பகல் 2:10 மணிக்கு வந்துள்ளது. தங்களது வாகனத்தை அதிவேகமாக இயக்கிய போலீசார், 3 கி.மீ., தூரத்தை மூன்றே நிமிடங்களில் கடந்து, 2:13க்கு போலீசார் சம்பவ இடத்தை அடைந்தனர். ஜன்னல் வழியாக தந்தை தூக்கில் தொங்குவதைக் கண்ட போலீசார் கதவை உடைத்து தூக்கிட்டிருந்தவரை மீட்டனர். உடனடியாக முதலுதவி கொடுத்து அவரை காப்பாற்றி, மருத்துவமனைக்கு அனுப்பினர். துரிதமாக செயல்பட்ட துணை ஆய்வாளர் ஷிவ்தாஸ் மற்றும் ஓட்டுநர் பிரேம் நாராயண் ஆகியோரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

===================================================================================================

52 கருத்துகள்:

  1. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    எல்லோரும் என்றும் ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க இறைவன்

    அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. மிக நல்ல செய்திகளைக் கொண்டு வரும் சனிக்கிழமைக்கும் எங்கள் ப்ளாகுக்கும்
    மிக நன்றி.
    பதிவிட்ட ஸ்ரீராமுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. தொலைந்த தங்கம் அதுவும் 100 க்ராம்!!!

    நம்மூரில் குப்பைகளை ஆராய்ந்து பிறகு
    அப்புறப்படுத்தும் அருமை பிரமாதம்.

    தங்கத்தை வெளியில் வைப்பார்களா.
    அதுவும் தலையணைக்கு அடியில்!!!!

    எத்தனை நாட்கள் உழைப்பில் வாங்கியதோ.
    இறைவன் நல்லவர்கள் ரூபத்தில் உதவிக்கு வந்திருக்கிறார்.அந்தப் பெண் மேரிக்கு நல்ல உதவி செய்திருந்தால் நன்றாக
    இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எவ்வளவு அலட்சியம் என்று எனக்கும் தோன்றியது.  மேரியைப் பாராட்ட வேண்டும்.  நூறு கிராம் என்ன சிறிய பொருளா?!!

      நீக்கு
    2. ஒரு முறை என் மகன் வாங்கிய விலை அதிகமான புது ஷு ஒன்றை ஷு ரேக்கில் வைக்காமல் கீழே வைத்திருந்தான். நான் காலி அட்டைப் பெட்டி என்று நினைத்து குப்பையோடு வைத்து விட்டேன். என் வீட்டில் வேலை செய்த பெண் அதை திறந்து பார்த்து விட்டு,"புது ஷீம்மா இங்கே வெச்சிருக்கீங்களே?" என்றாள்.

      நீக்கு
    3. ஹா.. ஹா.. ஹா... நாங்கள்லாம் கடையிலேயே வைச்சுட்டு வந்துடுவோம்!

      நீக்கு
    4. // ஒரு முறை என் மகன் வாங்கிய விலை அதிகமான புது ஷு ஒன்றை ஷு ரேக்கில் வைக்காமல் கீழே வைத்திருந்தான். நான் காலி அட்டைப் பெட்டி என்று நினைத்து குப்பையோடு வைத்து விட்டேன். என் வீட்டில் வேலை செய்த பெண் அதை திறந்து பார்த்து விட்டு,"புது ஷீம்மா இங்கே வெச்சிருக்கீங்களே?" என்றாள்.// எனக்கும் அதே மாதிரி அனுபவம் நிகழ்ந்தது. என் மருமகள் அவளுக்காக வாங்கி வந்திருந்த புது ஜோடி செருப்புகள், குப்பைக் கூடைக்கு அருகில் பெட்டியோடு வைத்திருந்தாள். நான் அது காலி டப்பா என்று நினைத்து குப்பைகளோடு சேர்த்து தூக்கிப் போட்டுவிட்டேன். குப்பை எடுப்பவர்கள் அதை எடுத்துச் சென்றுவிட்டார்கள். அது திரும்பக் கிடைக்கவில்லை. மருமகள் சில நாட்களுக்கு என் பேச்சு கா விட்டுவிட்டாள்! என்ன செய்வது!

      நீக்கு
    5. என்னோட நல்ல ஷூவை, கோபத்தில் கவனிக்காமல், கண்ட கண்ட ஷூலாம் குறுக்க வச்சிருந்தா மனுஷன் நடக்க முடியலை.போய் குப்பைல போடுன்னு சொன்னேன், என் பெண் போய் தூரப்போட்டுட்டு வந்துட்டா (6வது அவ படிக்கும்போது). பிறகு, நல்ல ஷூவை வெளில குப்பைக்கூடைல போட்டுட்டு வந்துட்டயே.. அப்பா கோபத்தில் சொன்னாலும், நீ கவனிச்சுருக்க வேண்டாமா என்று கேட்டேன்...

      அதுபோல, பஹ்ரைனிலிருந்து கிளம்பிவரும்போது, என் சோனி வீடியோ கேமராவை குப்பைக்கூடையில் (ரோடில் இருப்பது) போட்டுட்டு வீட்டுக்குள்ள வர்றேன்.. என் பையன் இந்தியாவிலிருந்து கூப்பிட்டு, தான் வீடியோ கேமராவை பிரித்து மேய்ந்து உள்ள என்ன என்ன இருக்குன்னு கத்துக்க விரும்புவதாகவும், கொண்டுவருமாறும் சொன்னான். உடனே வெளியில் சென்று பார்த்தால், அதற்குள், அதனை எடுத்துக்கொண்டுபோயிருந்தார்கள் (கேமராவை மட்டும்)

      நீக்கு
    6. செருப்பு வைத்திருக்கும் பெட்டியைத் தூக்கும்போது கைகளில் காலிப்பெட்டிக்கும் உள்ளே பொருள் உள்ள பெட்டிக்கும் உள்ள வித்தியாசம் புலப்படுமே! அல்லது திறந்தாவது பார்க்கத் தோணுமே!

      நீக்கு
    7. வீட்டில் பூஜை, ஹோமங்கள் முடிந்து அந்த நிர்மால்யத்தை (சரியா?)ச் சுத்தம் செய்கையில் நான் கைகளை விட்டு நன்கு அலசிப் பார்ப்பேன். பலசமயங்களில் அர்ச்சனை செய்த பூக்களில், சின்னச் சின்னப் பித்தளைப் பூஜைப் பொருட்கள் கலந்திருக்கும். ஆகையால் நன்கு அலசிப் பார்த்துடுவேன். அப்படியும் சில மாதங்கள் முன்னர் விளக்கைத் தூண்டும் பித்தளைக்குச்சிப் பூக்குப்பைகளில் எப்படியோ கலந்து போயிருக்குப் போல! பின்னர் வேறே வாங்கினோம். இப்போ அதை ஸ்வாமி அலமாரியில் சின்ன ஆணி அடிச்சு மாட்டியாச்சு. கீழே வைப்பதில்லை.

      நீக்கு
    8. நாங்களும் பூஜையறையில் பூஜைக்கு மறுநாள் க்ளீனிங்கில் எவ்வளவோ ஜாக்கிரதையாய் இருந்தும் சின்னஞ்சிறு கிருஷ்ணர், சின்னஞ்சிறு நாகர் ஆகியோரைத்த தொலைத்திருக்கிறோம்! மலேசிய முருகன் கையில் இருந்த வேலை தொலைத்தது சமீபத்து சாதனை!

      நீக்கு
    9. முருகன் கைவேலை நாங்கள் தனியாக வைத்திருப்பதால் அதோடு வேல் கொஞ்சம் நீளமாகவும் இருப்பதால் சட்ட்னு கைகளுக்குப் பிடிபடும். என்னதான் கவனமாக இருந்தாலும் சில/பல சமயங்களில் இழப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடிவதில்லை. :(

      நீக்கு
    10. // செருப்பு வைத்திருக்கும் பெட்டியைத் தூக்கும்போது கைகளில் காலிப்பெட்டிக்கும் உள்ளே பொருள் உள்ள பெட்டிக்கும் உள்ள வித்தியாசம் புலப்படுமே! அல்லது திறந்தாவது பார்க்கத் தோணுமே!// அது லைட் வெயிட் செருப்பு. செருப்பை விட அது வைத்திருந்த அட்டைப் பெட்டி கனமாக இருந்ததால், வித்தியாசம் தெரியவில்லை!

      நீக்கு
  4. தந்தையைக் காப்பார்ரிய மகள் ரொம்பப் பாவம். எத்தனை துடித்துப் போனதோ.
    எத்தனை ரூபங்களில் சோதனை வருகிறது:((
    அவர்கள் உடனே வந்து சிகித்சையும் கொடுத்துக் காப்பாற்றி இருக்கிறார்களே.

    ஒரு துர்மரணம் தடுக்கப் பட்டது. மிகப் பெரிய நல்ல செய்தி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவ்வளவு வேகமாக செல்ல முடியுமா என்கிற கேள்வி எனக்குள் எழுந்தது!

      நீக்கு
    2. //அவ்வளவு வேகமாக செல்ல முடியுமா என்கிற கேள்வி எனக்குள் எழுந்தது!// நீங்கள் டூ வீலர் ஓட்டாததால் இந்த சந்தேகம். என்னைப்போல் மெதுவாக ஓட்டுகிறவர்களே மூன்று கிலோ மீட்டர்களை ஐந்து நிமிடத்தில் கடக்கும் பொழுது காவல்துறைக்கு கடினமா என்ன?

      நீக்கு
    3. அதெல்லாம் சரிதான்.  ஆனால் சாலையில் டிராஃபிக், மற்றும் இதர தடைகள் இருப்பதை மறந்து விடுகிறீர்களே...

      நீக்கு
  5. தங்கத்தை மீட்டுக் கொடுத்த மேரிக்கு மரியாதையும் வணக்கமும். நல்லவர்களால் நிறைந்துள்ளது உலகு!

    தந்தையைக் காப்பாற்ற அந்தப் பெண் சமயோசிதமாகச் செயல்பட்டிருக்கிறாள்..காவல் அதிகாரிகளும் தாமதியாமல் விரைந்து சென்று காப்பாற்றியது சிறப்பு. அவர்களுக்கும் நன்றி.
    மீண்டும், நல்லவை நடக்கின்றன, நல்லவர்கள் இருக்கிறார்கள்..அவர்களால் சுழல்கிறது பூமி..
    பகிர்விற்கு நன்றி ஸ்ரீராம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.  நல்லவர்கள் இன்னும் முற்றிலும் இல்லாமல் போய்விடவில்லை என்பதைக் காட்டவே சனிக்கிழமைப் பதிவுகள்.  நன்றி கிரேஸ்...

      நீக்கு
  6. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் ஆரோக்கியமும் செழிப்பும் மேலோங்கிப் பிரச்னைகள் அடியோடு விலகிடப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  7. இரண்டுமே படித்த செய்திகள். இந்த வாரம் இரு நல்லவர்கள் மட்டுமே? இருவருக்கும் பாராட்டுகள். 100 கிராம் தங்கத்தை அலட்சியமாகவா வைப்பார்கள்? வீட்டில் ஒரு பீரோ கூடவா இல்லை? என்னவோ போங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இந்த வாரம் இரு நல்லவர்கள் மட்டுமே? //

      நம் கண்ணில் பட்ட வரை, மீடியாக்கள் கண்ணில் பட்ட வரை!

      //100 கிராம் தங்கத்தை அலட்சியமாகவா வைப்பார்கள்?//

      சிலபேர் பாதுகாப்பாக வைப்பதாக நினைத்துக்கொண்டு வழக்கமான இடத்தில வைக்காமல் வேறு வித்தியாசமான இடத்தில வைப்பதாக நினைத்துக்கொண்டு இப்படிச் செய்வதுண்டு!

      நீக்கு
  8. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  9. வறுமையில் செம்மை என்பதுதான். தூய்மைப் பணியாளர் மேரி நிஜமாகவே தூய்மையானவர்தான். ராம்கி, செந்தமிழ் செல்வன் இவர்களையும் பாராட்ட வேண்டும்.

    பதிலளிநீக்கு
  10. தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றிய காவல்துறை அதிகாரி ஷிவ்தாஸ், ஓட்டுனர் பிரேம் நாராயண் சேவை சிறப்பானது.
    தற்கொலைக்கு முயன்றவர் எழுந்ததும் செல்லமாக இரண்டு தட்டு தட்டினாலும் தவறில்லை.

    பதிலளிநீக்கு
  11. தங்கம் வாங்கிய மகராசனுக்கு அதை மனைவியிடம் சொல்ல மனமில்லையா? ஏன் தலையணைக்கடியில் வைக்க வேண்டும்? யாராவது ஜோதிடர் தங்கம் வாங்கிய அதை தலையணைக்கடியில் வைத்து தூங்குங்கள் என்று பரிகாரம் சொல்லியிருப்பாரோ..??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருவேளை கணவன் அப்போதுதான் அவரைப்பார்த்து "தங்கமே..  ஒன்னத்தான் தேடி வந்தேன் நானே..." என்று பாடுவார் என்று எதிர்பார்த்திருப்பரோ!

      நீக்கு
    2. மனைவியின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்க நினைத்திருப்பாரோ என்னவோ. அவருக்கே சர்ப்ரைஸ் கிடைத்துவிட்டது!

      நீக்கு
  12. 100 கிராம் தங்கம் வியப்பாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் முற்பகல் வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    இன்றைய இரு பாஸிடிவ் செய்திகள் அருமை.

    தங்கத்தை பத்திரமாக காப்பாற்றி தந்த தூய்மை பணியாளர் மேரி அவர்களின் நேர்மையான செயலும், தங்கத்தை விட மதிப்பான உயிரை காப்பாற்றி தந்த காவல்துறை அதிகாரிகள் செயலும் சிறந்தவை. அவர்களை மனமாற பாராட்டுவோம். இத்தகைய நல்ல செய்திகளை படிக்கத் தந்த எ.பிக்கும் மனமார்ந்த நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  15. தங்கத்தை மனைவி எதிர்பாராத போது கொடுத்து வியப்பில் ஆழத்த நினைத்து இருப்பார் போலும் !

    தங்கத்தை எடுத்தும் தனக்கே வைத்துக் கொள்ள ஆசை படாமல் உரியவர்களிடம் சேர்த்து விட்டது மிகவும் பாராட்டவேண்டிய நற்செயல்.
    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் மேரிக்கு , வாழ்க வளமுடன்.

    தந்தையின் உயிரை காப்பாற்றி கொடுத்த காவல்துறை அதிகாரிகளுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  16. பிறர் பொருள் மீது ஆசைப்படாத அந்த ஏழைப் பெண்ணைக் கண்டு ஊரார் சொத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும் குணமுடையோர் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்..

    நலம் வாழ்க எங்கெங்கும்..

    பதிலளிநீக்கு
  17. கருத்து உரைத்தவர்கள் எல்லோருக்கும் எங்கள் நன்றி.

    பதிலளிநீக்கு
  18. இரண்டு செய்திகளும் சிறப்பு. சம்பந்தப்பட்டவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!