திங்கள், 4 அக்டோபர், 2021

'திங்க'க்கிழமை ;  சொதி - கீதா ரெங்கன் ரெஸிப்பி 

 

சொதி

எபி நட்புகள், வாசகர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கத்துடன் இன்று சொதி பற்றிக் கொஞ்சம் கதைத்தல் மற்றும் இலங்கை சொதி செய்முறை.

சொதி – நான் அறிந்த வரையில் – நாகர்கோவில், திருநெல்வேலிப் பக்கங்களில் மறுவீடு அழைப்பிற்கு அதாவது திருமணம் ஆனதும் மாப்பிள்ளையையும் பெண்ணையும் பெண் வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுக்கும் நிகழ்வில் இந்தச் சொதி கண்டிப்பாக இடம் பெறும்.  திருநெல்வேலிப் பக்கங்களில் ‘மாப்பிள்ளைச் சொதி’ என்றே சொல்வதுமுண்டு.  கேரளத்தில் வெஜிட்டபிள் ஸ்ட்யூ.

இந்த வகைகளும் வீட்டில் செய்வதுண்டு.

இலங்கை சொதி, நாகர்கோவில் திருநெல்வேலி சொதி, கேரளத்து வெஜிட்டபிள் ஸ்ட்யூ எல்லாமே அடிப்படையில் தேங்காய்ப்பாலில் செய்வது கிட்டத்தட்ட ஒரே போன்றுதான் என்றாலும் சிறு வித்தியாசங்கள் உண்டு.

திருநெல்வேலி சொதியில் கண்டிப்பாகப் பாசிப் பருப்பு சேர்ப்பதுண்டு. வெங்காயம், பூண்டு இஞ்சி, ஜீரகம் உண்டு. ஆனால் மாசாலாப் பொருட்கள் தாளித்தோ அல்லது தாளிக்காமலோ செய்வது.

நாகர்கோவில் சொதி, கேரளத்து வெஜிட்டபில் ஸ்ட்யூ  சின்ன வெங்காயம்/பெரிய வெங்காயம், பீன்ஸ், காரட், உருளைக்கிழங்கு காய்கள் சேர்த்து மசாலா பொருட்கள் பட்டை கிராம்பு எல்லாம் தாளித்துச் சேர்த்துச் செய்வது. பாசிப்பருப்பு, வெந்தயம் சேர்ப்பதில்லை.

இலங்கை சொதி அசைவத்திலும் செய்கிறார்கள்.

அடிப்படையில், வெங்காயம், தக்காளி, மிளகாய்கள், வெந்தயம், ஜீரகம், கருகப்பில்லை, தேங்காய்ப்பால்.

இவற்றோடு காய்கள் சேர்த்தும் அல்லது உருளைக்கிழங்கு மட்டும் சேர்த்தும் செய்யலாம்.

என் பாட்டி, அத்தை இதை அத்தையின் தோழியான மங்கை ஆன்டியிடம் கற்றனர். அவர் இலங்கைத் தமிழர். நான் இலங்கையில் இருந்த போது ஹோட்டலுக்குச் சென்றால் இடியாப்பமும் சொதியும் விரும்பிச் சாப்பிடுவேன். எங்கள் வீட்டிலும் இடியாப்பம் என்றால் சொதி செய்யப்படும்.

என் அம்மா இதில் பீன்ஸ், காரட், உருளைக் கிழங்கு சேர்த்தும் செய்வார்.

மங்கை ஆண்டி சொல்லிக் கொடுத்து என் பாட்டி, அத்தை, அம்மா மூலம் நான் அறிந்ததுதான் இங்கு செய்திருப்பது. மங்கை ஆன்டி சென்னையில் குடியேறிய பிறகு, நான் சென்னையில் இருந்த போது மங்கை ஆன்டியிடம் தெரிந்து கொண்டது…

இதில் வேரியேஷன்ஸ் சிலர் பூண்டும் சேர்த்துச் செய்வார்கள். சிலர் பூண்டு இஞ்சி சேர்த்தும், பூண்டு ஜீரகம் மிளகைத் தட்டிப் போட்டும் செய்வதுண்டு என்றும் சொன்னார். நான் அவர் சொன்னபடி இந்த வேரியேஷன்ஸிலும் செய்வதுண்டு என்றாலும் பெரும்பாலும் செய்வது இங்கு கொடுத்திருப்பதுதான்.

இலங்கை சொதியானாலும் சரி, திருநெல்வேலி, நாகர்கோவில் அல்லது கேரளத்து வெஜிட்டபில் ஸ்ட்யூ வானாலும் சரி இடியாப்பம், சாதம், சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

எங்கள் வீட்டில் இதை சூப் போலவும் நாங்கள் சாப்பிடுவோம்.

வெங்காயம் சாப்பிடாதவர்களுக்காக, வெங்காயம் சேர்க்காமல் மற்றபடி இதே முறையில் செய்து கொடுப்பதுண்டு. மாமனார் மாமியார் விரும்பிச் சாப்பிட்டதுண்டு.

இதோ செய்முறை

(பெட்டிக்குள் கடைசியில் விடுபட்டது......இரண்டாம் பால் கலந்த பிறகு 5 நிமிடம் கழித்து முதல் பாலைச் சேர்த்து அடுப்பை ஆஃப் செய்துவிடலாம் அந்தச் சூடே போதும், இல்லை என்றால் இரண்டு நிமிடம் வைத்துக் கிளறிவிட்டு ஆஃப் செய்துவிடலாம். கொதிக்க விட வேண்டாம்.)

எபி ஆசிரியர்களுக்கு, வாசகர்களுக்கு, நட்புகளுக்கு எல்லோருக்கும் மனமார்ந்த நன்றிகள். 

மீண்டும் ஒரு செய்முறையுடன் சந்திப்போம். 

41 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    எல்லோரும் மன, உடல்,வாழ்க்கை நலம்
    பெற்று என்றும் வளமாக இருக்க இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. பெயரே முதன்முறையாக கேள்விப்படுகிறேன்.

    படம் அழகாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா ஜி... நான் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் சாப்பிட்டதில்லை!

      நீக்கு
    2. திருநெல்வேலி பக்கம் மிகவும் பிரசித்தி.

      நீக்கு
    3. கில்லர்ஜி இது தென்னகத்தில் ரொம்ப ஃபேமஸ், மற்றும் இலங்கையில்/யாழ் ரொம்ப பிராபல்யம்.

      மிக்க நன்றி கில்லர்ஜி

      கீதா

      நீக்கு
  3. அன்பின் கீதா ரங்கனின் சொதி படங்கள்
    மிக அருமை.

    இத்தனை வெரைட்டியா சொதியில்.!!!!
    எனக்குத் தெரிந்து சென்னையில் சாப்பிட்டது
    வெள்ளை வர்ணத்தில் இருக்கும்
    நெல்லை சொதி.
    அதற்கும் ஸ்டூவுக்கும் நிறைய வித்தியாசம் இல்லை.

    நீங்கள் சொல்லி இருக்கும் முறை மிக எளிதாக இருக்கிறது.

    அளவுகளும் செய்முறையும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 3மிக்க் நன்றி அம்மா.

      நெல்லை சொதி.
      அதற்கும் ஸ்டூவுக்கும் நிறைய வித்தியாசம் இல்லை.//

      நெல்லை சொதியில் பாசிப்பருப்பு சேர்ப்பதுண்டு. மற்ற வகைகளில் அது கிடையாது ஆனால் அதில் வேறு வேறு சில சின்ன சின்ன வித்தியாசங்கள் அவ்வளவே அம்மா.

      இது இலங்கை வகை...ரொம்ப சிம்பிள் தான்.

      மிக்க நன்றி அம்மா

      கீதா

      நீக்கு
  4. படங்கள் எடுப்பதில் நல்ல தெளிவு தெரிகிறது. நுணுக்கமாக ஒவ்வொரு
    ஸ்டெப்பிலும் படங்கள் எடுத்துப்
    போட்டிருக்கிறீர்கள்.

    வண்ணங்கள் எடுப்பாகத் தெரிகின்றன.
    பார்த்தவுடன் மனதில் பதிவது எளிது.
    என் கேரளா தோழி,
    இதைத் தினமுமே செய்வாள். தேங்காய் இல்லாமல் சமைக்கவே தெரியாது:)

    சப்பாத்தியும் உண்டு.
    சாதமும் உண்டு. இந்த மாதிரி செய்யும் போது
    மேல் தெளிவைக் குடிக்கக் கொடுப்பாள்.
    அடியில் இருக்கும் காய்கள்களை சாதத்தோடு
    பிசைந்து கொண்டு அப்பளமும் .நேந்திரங்காய் வறுவலும்
    தினசரி உண்டு. அங்கு சென்று வந்தால் உடம்பே தே. எண்ணெய் வாசனை வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி இல்லை அம்மா.

      என் கேரளா தோழி,
      இதைத் தினமுமே செய்வாள். தேங்காய் இல்லாமல் சமைக்கவே தெரியாது:)

      சப்பாத்தியும் உண்டு.
      சாதமும் உண்டு. இந்த மாதிரி செய்யும் போது
      மேல் தெளிவைக் குடிக்கக் கொடுப்பாள்.//

      ஸ்ட்யூ...ஆமாம் சூப் போலவும் குடிக்கலாம் நன்றாக இருக்கும்.

      பால் கறி என்று இலங்கைத் தமிழ்ப்பகுதிகளில் செய்வதுண்டு முருங்கை, சின்ன வெங்காயம் மட்டும் போட்டு அல்லது முருங்கை, பீன்ஸ், கேரட் சின்ன வெங்காயம் ஜீரகம் தாளித்து அதுவும் சூப்பரா இருக்கும்...

      மிக்க நன்றி அம்மா

      கீதா

      நீக்கு
  5. அரைப்பது இல்லை.அது ஒரு ப்ளஸ் பாயிண்ட்!!
    தேங்காய்ப் பால் அது இரண்டாவது + பாயிண்ட்.

    கிள்ளிப்போட்டு ,வதக்கி, வேகவைத்த உ.கிழங்கும்
    சேர்த்தால் ஆச்சு.
    பூண்டு கூட இல்லை. ம்ம். எனக்கு மிகவும் பிடித்திருக்கு. அன்பு வாழ்த்துகளூம் பாராட்டுகளூம்
    கீதாமா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேங்காய் மட்டும் அரைத்துப் பால் எடுக்க வேண்டுமே. அல்லது ரெடிமேடாகக் கிடைப்பதைப் பயன்படுத்தலாம் தான்.

      ஆமாம் மற்றபடி அரைத்தல் இல்லை

      இலங்கை வகையிலும் சிலர் பூண்டு சேர்ப்பதுண்டு அம்மா. ஒரு வேளை என் அத்தை அம்மா எல்லாம் பூண்டு சேர்க்காமல் செய்வதால் இப்படி மங்கை ஆண்டி சொல்லிக் கொடுத்திருக்கலாம். என்னிடம் சொல்லும் போது பூண்டும் சேர்ப்பதுண்டு என்றுதான் சொன்னார்கள் ஆனால் இந்த ருசி நன்றாகவே இருப்பதாலும் மற்ற சொதி வகைகளில் இருந்து வித்தியாசப்படுத்துவதாலும் இப்படி...

      மிக்க நன்றி அம்மா. ரொன்ப டேஸ்டியா இருக்கும் அதுவும் வெந்தயம் சேர்ப்பதால் செய்தவுடன் சாப்பிடாமல் கொஞ்சம் வைத்திருந்து சாப்பிட்டால் டேஸ்ட் ரொம்ப ரொம்ப நன்றாக இருக்கும் அம்மா

      மிக்க நன்றி அம்மா

      கீதா

      நீக்கு
  6. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  7. சிறப்பு மேடம்.
    காய்கரிகள் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு கூட இது போன்ற சுவையான வகைகள் பயனலிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அரவிந்த் முயற்சி செய்யலாம்...மிக்க நன்றி அரவிந்த்

      கீதா

      நீக்கு
  8. அனைவருக்கும் காலை வணக்கம். சொதி திருநெல்வேலி ஸ்பெஷல் மட்டுமல்ல ஶ்ரீலங்கா ஸ்பெஷலும் கூட.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அக்கா. நான் முதலில் தெரிந்துகொண்டது இலங்கையில் தான் அதைத்தான் செய்வதும் வழக்கம். அப்புறம் தான் திருநெல்வேலி அத்தையிடமிருந்து அந்த சொதி, நாகர்கோவிலில் இருந்ததால் நாகர்கோவில், கேரளம் அயல்கார் அல்லே ஸோ அவங்க செய்வதும் தெரிந்து கொண்டு செய்வது...

      மிக்க நன்றி பானுக்கா

      கீதா

      நீக்கு
  9. சொதி நான் கேள்விப்பட்டதுதான் ஆனால் சாப்பிட்டதில்லை! செய்முறை விளக்கமும் படங்களும் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ ஆ ஆ மதுரை உண்மையாவா?!!!! செங்கோட்டைக்காரர் நீங்க அடிப்படையில். கேரளத்துக்காற்று ஒரு புறம்...திருநெல்வேலிக் காத்து மறுபுறம் இலங்கை சொதி விடுங்க...திருநெல்வேலி சொதி சாப்பிட்டதில்லை என்பது ஆச்சரியமாக இருக்கு! இப்ப நீங்கதான் சமையல் கில்லாடி ஆயிற்றே செஞ்சுருங்க..

      மிக்க நன்றி மதுரை.

      கீதா

      நீக்கு
  10. இதை செய்ததை விட, செய்யும் போது புகைப்படங்கள் எடுத்ததை விட, அவைகளை கொலாஜாக அமைத்து அதற்குள் எழுதியிருக்கும் பொறுமையை போற்ற வேண்டும்.

    பதிலளிநீக்கு
  11. ' சொதி' குறிப்பு அருமை கீதா! அதற்கு முன் 'சொதி'யின் பல்வேறு வகைகள் பற்றின விளக்கங்கள் மிக மிக அருமை! இங்கு கேர‌ள உணவகங்களில் ' சிக்கன் ஸ்டியூ' எப்போதும் கிடைக்கும். அவர்கள் தேங்காய்ப்பால், பச்சை மிளகாய், இஞ்சி அதிக அளவில் சேர்ப்பார்கள். எனக்கு திருநெல்வேலி சொதி மிகவும் பிடிக்கும். கொஞ்சமாக பாசிப்பருப்பு சேர்த்து செய்தால் மிக சுவையாக இருக்கும். கும்பகோணம் கடப்பா சட்னியும் கிட்டத்தட்ட இதே மாதிரி தான்! ஆனால் தேங்காய் மிகக் குறைவாக இருக்கும்!
    சாதத்தை விட ஆப்பத்திற்கும் இடியாப்பத்திற்கும் இந்த சொதி நல்ல பக்கத்துணை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் மனோ அக்கா தேங்காய்ப்பால் பச்சை மிளகாய் இஞ்சி சேர்ப்பாங்க அது அசைவம் என்பதால் சற்றுக் கூடுதலாகச் சேர்ப்பாங்க...காய்வகைகளில் அவ்வளவு இருக்காது.

      ஆமாம் திருனெல்வேலி சொதியில் பாசிப்பருப்பு அது தனிச் சுவைதான்...ஆனால் நீங்க சொல்ற மாதிரி கொஞ்சமாகச் சேர்க்க வேண்டும்.

      ஆமாம் கும்பகோணம் கடப்பா...நீங்கள் சொல்லியிருப்பது போலத்தான்....அரைத்துச் சேர்ப்பாங்க

      அதே இடியாப்பம் ஆப்பம் க்கு செம கோம்போ மிக்க நன்றி மனோ அக்கா

      கீதா

      நீக்கு
    2. //கும்பகோணம் கடப்பா சட்னியும் கிட்டத்தட்ட இதே மாதிரி தான்!// ஆமாம், எனக்கும் அப்படி தோன்றியது.ஆனால் கடப்பாவில் தேங்காய் அரைத்து சேர்க்க வேண்டும். கசகசாவும் உண்டு.

      நீக்கு
  12. எல்லோருக்கும் முன்னாடி வந்து காலையிலேயே பிரார்த்தனை செய்து பின்னர் "இதுதான் எனக்கு தெரியுமே" என்று சொல்லும் கீசாக்கா வும், அவரை எப்போது கலாய்க்கும் நெல்லையும் ஏன் இது வரை வரவில்லை?

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹஹா அதானே!!

      நெல்லைக்கு !!!!!!!!!????? (பெயரில் என்னவோ நெல்லை!! ஆனா ஹாஹாஹா) சொதி அவ்வளவாக விருப்பம் கிடையாது!!!!!!!!! அது எந்த வகையாக இருந்தாலும்..

      கீதா

      நீக்கு
  13. எங்கள் நாட்டு சொதி. பகிர்ந்தமைக்கு நன்றி.படங்களும் நன்று.

    தினமும் எங்கள் வீடுகளில் வித்தியாசமான சொதிகள் உண்டு.
    காயைப் பொரித்து எடுத்தும் செய்வோம் இதற்கு புளி கரைத்து விடுவோம் சிறிது மிளகாய் பொடியும் சேர்ப்போம்.
    http://sinnutasty.blogspot.com/2010/05/blog-post_23.html?m=1 எனது பகிர்வின் ஒரு லிங்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாதேவி மிக்க நன்றி.

      ஆமாம் வித்தியாசமான சொதிகள் உண்டு அங்கும். அதுவும் தினமும் பால் கறிதானே பெரும்பாலும். அதுவும் தெரியும். அங்கிருந்த வரை நான் பல வகை ருசித்திருக்கிறேன். வீட்டிலும் அம்மா, அத்தை பாட்டி எல்லாரும் செய்வாங்க. விதம் விதமாய். மங்கை ஆன்டி சொல்லிருக்காங்க. ஆமாம் புளி கரைத்துவிட்டு மி பொடியும் சேர்த்துச் செய்வதுண்டு. இன்னும் வகைகள் உண்டே. இங்கு இது ஒன்று மட்டும் பகிர்ந்தேன். உங்கள் சுட்டியும் பார்க்கிறேன் மாதேவி.

      மிக்க நன்றி மாதேவி.

      கீதா

      நீக்கு
  14. இலங்கை சொதி அருமை.
    படங்களும், செய்முறையும் அருமை.
    சொல்லிய விதமும் அருமை.
    எங்கள் கல்யாணங்களில் (திருநெல்வேலியில்)கல்யாணம் முடிந்த மறுநாள் சொதி சாப்பாடு சிறப்பு . சொதி வைத்தால் இஞ்சி துவையல் உண்டு, கண்டிப்பாய் உண்டு.
    வாழைக்காய் சிப்ஸ், உருளை காரக்கறி உண்டு.
    அதை நீங்கள் சொன்னதற்கு நன்றி.


    மாதேவி முன்பு சமையல் குறிப்புகள், பதிவுகள் அழகாய் போடுவார்கள். மீண்டும் தொடர்ந்தால் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  15. ஆஹா..... இன்றைக்கு சொதி செய்முறையா இங்கே? வாவ்.... பத்மநாபன் அண்ணாச்சி வீட்டில் இந்த சொதி, தீயல் போன்றவற்றை சுவைத்தது உண்டு.

    பதிலளிநீக்கு
  16. அருமையான குறிப்பு கீதா அக்கா ...

    பதிலளிநீக்கு
  17. சொதி சாப்பிட வேண்டும் என்ற ஆவல் உண்டு.. ஆனாலும் வாய்ப்பு கூடி வரவில்லை...

    இங்கு கொரானாவுக்குப் பிறகு ஏகப்பட்ட உணவகங்கள் மூடப்பட்டு விட்டன..

    ஊருக்குத் திரும்பியதும் தான் செய்து பார்க்க வேண்டும்..

    நல்லதொரு குறிப்பு..
    மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  18. இந்த சொதி பற்றி முதல் முதல் கேள்விப் பட்டது திருநெல்வேலி ஜானகிராமன் ஓட்டலில். நாங்க அவியல்னு நினைச்சோம். கடைசியில் (ஆரம்பத்திலிருந்தே) அது சொதியாம். பூண்டு நிறையப் போட்டிருந்தாங்களா! ஹிஹிஹி, நமக்கு வேணாம்பானு ஒதுக்கிட்டோம். :)

    பதிலளிநீக்கு
  19. கும்பகோணம் கடப்பாவும் பிடித்தமானது அல்ல. கும்பகோணத்தில் ஓட்டல்களுக்குப் போனால் சாம்பார் உண்டா என்று கேட்டுக்கொண்டே நுழையும்படி இருக்கும். ஏனெனில் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு ஓட்டலில் கடப்பா போடுவார்கள். நான் கடப்பா என் மாமனாருக்காகப் பண்ணி இருக்கேன். ஆனால் அன்னிக்கு நாங்கல்லாம் சட்னி அல்லது மி.பொடிதான். :))))

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!