செவ்வாய், 12 அக்டோபர், 2021

சிறுகதை : கடலை மிட்டாயும், குச்சி ஐஸும், தாத்தாவும் - கீதா ரெங்கன்

 

கடலை மிட்டாயும், குச்சி ஐஸும், தாத்தாவும்

 “உன் தாத்தாவுக்கு இன்னிக்குத் திதி. நல்லபடியா முடிஞ்சுதுடா”

அம்மாவின் ஃபோன்.

‘தாத்தாவின் திதி!’ இதெல்லாம் எனக்கு நினைவில் இருப்பதில்லை.

கோயில்பட்டி கடலைமிட்டாய், தெருவில் மணி அடித்துக் கொண்டே போகும் ஐஸ் வண்டிக்காரர், குடும்பத்து நிகழ்வுகள் என்று தாத்தாவின் நினைவுகள் எப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கிறதே!

தாத்தாவின் ட்ரான்ஸிஸ்டர் என் மேசையில் இப்போதும் என்னோடு பேசிக் கொண்டுதான் இருக்கிறது.

திதி என்றதும் தாத்தாவின் கடைசி நாட்களுக்கு மனம் தாவியது. நினைவுகளுக்குள் நினைவாய் அடுக்கடுக்காய்ச்  சிறுவயது வரை சென்றது.

**************

“உங்கப்பாக்கு உடம்பு சரியில்ல, உடனே கிளம்பி வரச்சொன்னாங்க, உங்கம்மா”

அந்தி சாயும் சமயம் பாட்டி, தாத்தாவின் பக்கத்து வீட்டு அண்ணா, அப்பாவிடம் சொல்லிவிட்டுச் சென்றார்.  ஃபோன் வசதி இல்லாத கிராமத்து நாட்கள்.

“யோகீ அம்மா கிட்ட சொல்லி எல்லாரையும் கிளப்பு. மில்லுக்கு லீவு போடணும். போட்டா சம்பளம் கிடைக்காது. என்ன செய்யறதுன்னு பார்க்கணும். நான் போய் முதலாளிக்குச் சொல்லிட்டு வரேன். உன் தாத்தாவுக்கு 75 வயசு இப்ப. கடைசிக் காலமோன்னு தோணுது. முன்னாடி ஒரு ஜோசியர் ….”

“ப்பா ப்ளீஸ்….தாத்தாக்கு ஒண்ணுமிருக்காது. எல்லாம் நல்லாயிடுவார். நீ போயிட்டு வாப்பா”

கோடை விடுமுறை தொடங்கிய நேரம். அந்த வருடமேனும் நாங்கள் பேரன் பேத்திகள் எல்லாரும் பாட்டி தாத்தா இருந்த கிராமத்திற்குச் செல்வதற்கு வாய்ப்பு கிடைக்குமா என்று யோசித்திருந்த நேரத்தில் அப்படியான ஒரு தகவல். தாத்தா, பாட்டி இருந்த கிராமம், நாங்கள் இருந்த கிராமத்திலிருந்து இரண்டரை மணி நேரப் பயணம்.

பேருந்தின் ஜன்னலருகில் இருக்கை. சுகமானக் காற்று. தெளிவான வானில் நட்சத்திரக் கூட்டம். ‘தாத்தாவும் இப்படி நட்சத்திரமாகி விடுவாரோ?’

தாத்தாவுடனான சிறுவயது நினைவுகள். இரவில் திண்ணையில் உட்கார்ந்து தன் மடியில் என்னை அமர்த்திக் கொண்டு வானில் ஒவ்வொரு நட்சத்திரமாகக் காட்டி அஸ்வினி, பரணி என்று சொல்லுவார். துருவ நட்சத்திரம் காட்டி துருவன் கதை.

“இன்னிக்கு நீ என்னெல்லாம் செஞ்ச?”

சொல்லுவேன்.

“பொய் சொன்னியா? தங்கைய அடிச்சியா?”

கண்டு பிடித்துவிடுவார். மறைமுகமாகச் சுட்டிக் காட்டப் பொருத்தமான நல்லொழுக்கக் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், புராணக் கதைகள், ராமாயணம், மகாபாரதம் என்று எத்தனையோ….கூடவே கதைத்தல்களும்…

காலையில் அவரோடுதான் காலை உணவு சாப்பிட வேண்டும். மாலையில் பூங்காவிற்கு என் கையைப் பிடித்து அழைத்துச் செல்வார். நான் தைரியமாக வளர வேண்டும் என்று பழக்கப்பட்ட குதிரைக்காரரின் குதிரையின் மீது ஏற்றிக் குதிரைச் சவாரி, கடற்கரைக்குச் சென்றால் கட்டுமரத்தில், தோணியில் செல்ல வைப்பார். இப்படிச் சொல்லப்படாத அன்புச் சட்டங்கள் பல!

தாத்தா செய்யும் பூஜை, பஜனை, பிரசாதமாகப் பஞ்சாமிருதம் கலப்பது என்று எத்தனையோ மனம் கதனகுதூகலமாக இருந்த நாட்கள். 

தைரியமாக வளர்ந்து வந்த வேளையில் குடும்பத்தில் வருத்தம் தருவதான மாற்றங்கள். தவறான முடிவுகள், அப்பாவின் வேலை என்று அம்மா வழிப்பாட்டியின் கிராமத்திற்கு இடம் பெயர்தல் என்று வாழ்க்கைச் சக்கரம் புரண்டது.

பேரன் பேத்திகள் எல்லோரிடமும் தாத்தாவிற்கு அலாதிப் பிரியம் என்றாலும் நான் முதல் பேரன் என்பதாலோ என்னவோ அவருடனான நெருக்கம் சற்று அதிகம்தான்.

விடுமுறை நாட்களில் மட்டுமே தாத்தாவுடனான நாட்களாகியது. அதுவும் குறையத் தொடங்கிப் போக முடியாத சூழலில் தாத்தா எங்களைப் பார்க்க வாரா வாரம் ஞாயிறு அன்று வந்துவிடுவார். தாத்தாவுடன் இருந்த வரையில் என்னைத் தைரியமான ஆண்பிள்ளையாக வளர்த்தார். அதனாலோ என்னவோ, அம்மாவின் வீட்டில் என்னை ஜவான் என்றே அழைத்தனர்.

“ஊர் ஸ்டாப்க்கு வந்தாச்சு. இறங்கணும். ஜவானை தட்டி எழுப்பு. பஸ்ல வந்தாலே தூக்கந்தான்”

அம்மாவின் குரல் கேட்டு நினைவுகள் முற்றுப் புள்ளி வைக்காமல் காத்திருந்தது.

எல்லோரையும் பார்த்ததில் பாட்டிக்குக் கொஞ்சம் நிம்மதி. 

“யோகீ, உன் தாத்தா பேச்சில்லாம கிடக்கறார் பாரு. மூச்சு மட்டும்தான், அவர் இருக்கார்ன்னு அடையாளம்” விசும்பினாள், 70 வயது கிழவி!

கிராமத்தின் அருகில் பெரிய மருத்துவமனைகள் எதுவும் இல்லாததால், வீட்டிலேயே மருத்துவர் வந்து பார்த்துவிட்டு, ஏதோ ட்ரிப்ஸ் போய்க் கொண்டிருந்தது.

“என்னாச்சு?”

“இன்னிக்கு மதியம் சாப்டப்புறம் திடீர்னு மயங்கிட்டார். கொஞ்சம் காய்ச்சல். அதுக்கு மருந்து. இப்ப இப்படிச் சொருகி வைச்சுட்டுப் போயிருக்கார் ஊர் டாக்டர். ”

தாத்தாவுக்குச் சிறுநீரில் மட்டும்தானே சர்க்கரை. மற்ற எல்லாமே நார்மலாகத்தான் இருந்தது. ஆனால், இரு வாரம் முன் எங்களைப் பார்க்க வந்த போது சற்று தளர்ந்தாற்போலத்தான் இருந்தார். வயது, வெயில் காரணம் என்றுதானே நினைக்கத் தோன்றியது. திடீரென்று என்ன ஆகியிருக்கும்? அப்பா, ஜோசியர் என்று சொன்னது பலித்திடுமோ? மனம் தவித்தது.

“டாக்டர் வேற எதுவும் சொல்லலையா?”

“ஊசி குத்தி ரத்தம் என்னவோ கொண்டு போனார். சொன்னாலும் எனக்கென்ன புரியும்?”

Ignorance is bliss! இக்னொரன்ஸ் இஸ் ப்ளிஸ்! சில சமயங்களில் இது சரிதானோ?

கோமா போன்றும் தெரியவில்லையே. இடையில் கண் விழித்துப் பார்த்து மீண்டும் மூடிக் கொண்டாரே.  பேசினால், தொட்டால் எந்தவித அசைவும் இருக்கவில்லை. மனதில் குழப்பங்களுடன் எல்லோரும் உறங்கினார்கள்.

நான் தாத்தவின் அருகில் கட்டிலில் டிரிப்ஸைக் கவனித்துக் கொண்டு……ஏதேதோ நினைவுகளில் உறங்கிட மறுநாள் அம்மாவின் குரலில் திடுக்கிட்டு விழித்தேன். ட்ரிப்ஸ் என்னாச்சு? தாத்தாக்கு ஏதேனும் ஆகிவிட்டதோ?

நல்ல காலம் ட்ரிப்ஸ் தீர்ந்திருக்கவில்லை. ராத்திரி டாக்டர் வந்து மருந்து கொடுத்து மாற்றிவிட்டுச் சென்றதாகப் பாட்டி சொன்னாளே.  தாத்தா அப்படியேதான் இருந்தார். சுவாசக்காற்றும் அப்படியே இருந்தது.

பாட்டி அவ்வப்போது விசும்பினாலும் இயந்திரகதியாக வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள். வாழ்க்கை என்பது அவ்வளவுதான் போலும்? அடுத்தடுத்த நொடிகளில் அதன் போக்கில் நகர்ந்து கொண்டேதான் இருக்கிறது!

அப்பாவுக்கு லீவு தருவதில் முதலாளிக்கு விருப்பமில்லை. சம்பளம் கட் ஆனால் செலவுக்கு என்ன செய்வது என்று அப்பா ஊருக்குக் கிளம்பிச் சென்றார்.

“யோகி, அந்தக் கீதை பொஸ்த்தகம் ஸ்வாமி பக்கத்துல இருக்கு பாரு. பல்லு தேச்சு குளிச்சுட்டு, எடுத்து தாத்தாக்குக் கேக்கறாப்ல வாசி.”

தாத்தாவின் கடைசிக் காலம் என்று பாட்டிக்கு மனதில் தோன்றியிருக்குமோ? அல்லது தாத்தா தினமும் கீதை வாசிப்பார் என்பதாலா? கேட்டு எழுந்துவிடுவார் என்ற நம்பிக்கையா?

நான் பிறக்கும் சமயம் தாத்தா பகவத்கீதை வாசித்துக் கொண்டிருந்தாராம். கண்ணனின் பெயர்களில் ஞானேஸ்வரன் பெயரை வைக்கலாமா? அல்லது யோகினாம்பதி-யோகிகளின் தலைவன்- யோகீஸ்வரன் என்ற பெயரை வைக்கலாமா என்று யோசித்து யோசித்து, யோகீஸ்வரன் என்ற பெயர் வைத்ததாகப் பாட்டி சொல்லுவாள்.

*********

இப்போது எனக்குச் சிரிப்பு வந்தது. எதற்கு என்று தெரியாமல் புரியாமல் எதையோ எண்ணிச் சிரிப்பது வழக்கம்தானே! இதற்குப் புரிந்துதான் சிரித்தேன். யோகியும் இல்லை, யோகமும் இல்லை! பாவம் தாத்தா! என்னைப் பற்றி எத்தனையோ கனவுகள் அவருக்கு இருந்திருக்கும் போல! நான் என்னவாக வேண்டும் என்று நினைத்திருப்பார்? தெரியவில்லை. ஆனால், அவர் இருந்திருந்தால் அவர் என்னுள் விதைத்த நல்லவை வீணாகவில்லை என்று மகிழ்ந்திருப்பாரோ?

**********

தாத்தாவின் அருகில் அமர்ந்து பகவத் கீதையை வாசிக்கத் தொடங்கினேன். உதடு வாசித்தது மனம் லயிக்கவில்லை.

தாத்தாவின் நிரந்தரமான பயண நாள் நெருங்கிவிட்டதோ? பூமிக்குள்ளாகவா? வானை நோக்கியா? எங்கு செல்வார்?

‘கெட்டது செஞ்சா நரகம், பூமிக்குள். நல்லது செஞ்சா சொர்கம், வானில் கடவுள் கிட்ட’ என்று தாத்தா சொன்ன ஏதோ ஒரு கதையின் நினைவு.

நரகம், பூமிக்குள் என்றால், மீண்டும் இந்த உலகில் பிறப்பதும் கஷ்டப்படுவதும்தானோ? கஷ்டமில்லாத வாழ்க்கை என்றால் சொர்கமா? அல்லது பிறக்க மாட்டாரோ? சந்தோஷமும், நிம்மதியும் நம் மனதில்தானே?

‘புனரபி ஜனனம், புனரபி மரணம்’ தாத்தா மீண்டும் பிறப்பாரோ? பிறந்தாலும் என்னைவிடச் சிறியவராகத்தானே இருப்பார்? எப்படி அடையாளம் காண்பது?

அவர் பாவ புண்ணிய அக்கவுன்ட் என்னவாக இருக்கும்? வேண்டாம் பாவம் தாத்தா. கஷ்டப்படுவார் என்றால் பிறக்கவே வேண்டாம். அந்த வயதிலே சிந்தனைகள், விடையில்லாத கேள்விகள்.

தாத்தாவிடம் ஒரு சிறிய அசைவு. தாத்தா ஏதோ சொல்வது போலத் தெரிந்தது. “யோகீ……கடலைமிட்டாய், குச்சி ஐஸ்” என்று முனகியவர் கையைத் தூக்க முயன்றார் முடியவில்லை. மீண்டும் மயக்கம். அந்த வார்த்தைகள் வியப்பை ஏற்படுத்தியது. அட! அடையாளம் தெரிகிறதே. நினைவும் இருக்கிறதே!

  
“பாட்டி, கடலைமிட்டாயும் ஐஸும் அங்க இருக்கா?”

“ஆமா. உனக்கெப்படித் தெரியும்? மறந்தே போய்ட்டேன் எடுத்துத் தரேன்”

“ ‘யோகீ கடலைமிட்டாய் ஐஸ்’னு’ சொல்லிட்டு திரும்ப மயக்கமாகிட்டார்”

“அவருக்குச் செல்லப் பேரனாச்சே. உன் குரல் கேட்டு முழிச்சிருப்பாரோ?” பாட்டி அருகில் வந்து அவரை உலுக்கிப் பார்த்துவிட்டு அசைவில்லாததால் அழத்தொடங்கினாள்.

தாத்தாவின் வார்த்தைகள், நினைவுகளுக்கு மீண்டும் ரிவர்ஸ் கியர் போட்டது.

தாத்தா கொஞ்சம் முன்கோபிதான். ஆனால் அது சில நொடிகள்தான். மிகவும் நேர்மையானவர். இரக்க குணம் அதிகம். பாட்டிக்கும் தாத்தாவிற்கும் சண்டைகள் என்று வந்ததில்லை. இருவருக்குமே பெரிய ஆசைகளும் இருந்ததில்லை. கடனில்லா வாழ்க்கை அவ்வளவே.

ஐஸ், கோயில்பட்டி கடலைமிட்டாய், இஞ்சி மிட்டாய் எல்லாமும் விற்கும் கடையில் தாத்தாவுக்குக் கணக்கெழுதும் வேலை.

“பிள்ளைங்க வந்துருக்குல்லா. ஐஸும், கடலை முட்டாயும் எடுத்துட்டுப் போம் வேய். நான் காசு எதுவும் கேக்கலைலா. ஒரு பத்து பத்து எடுத்துட்டுப் போறீரு. ன்னா” என்று கடை உரிமையாளர் சொன்னாலும் தாத்தா ஓசியில் கொண்டு வர மாட்டார். பைசாவை ட்ராயரில் போட்டுக் கணக்கு எழுதி வைத்துவிட்டுத்தான் வருவார்.

கோடையின் சுட்டெரிக்கும் வெயிலில் நான் கோலியும், கிட்டிப்புல்லும் ஆடிக் கொண்டிருந்தாலும், தாத்தா தூரத்தில் வருவதைக் கண்டால் விளையாட்டைப் பாதியில் விட்டு ஓடிவிடுவேன். வெயிலில் அந்தக் கரிய உருவம் பளிச்சென்று தெரியும்!

எப்போதும் வெள்ளை வேட்டி, லைட் கலர் ப்ளெயின் சட்டைதான். மதிய உணவிற்கு வரும் தாத்தா கண்டிப்பாக பாலைஸ், சேமியா ஐஸ் உருகிடாமல் இருக்க சிறிய ஐஸ் பெட்டியில் போட்டுக் கொண்டுவருவார்.

“தாத்தா சேமியா ஐஸ், பாலைஸ்?” அவருக்குத் தெரியும் எனக்கு இரண்டுமே பிடிக்கும் என்று. அதுவும் அந்த சேமியா, ஐஸுடன் வாயில் கடிபடும் போது …..

“ஆமா, வீட்டுக்குள்ள வா. மத்தவங்க எங்க?”

“வீட்டுக்குள்ள தாயக்கட்டம் விளையாடறாங்க. தாத்தா கடலைமிட்டாய்?”

“ராத்திரி வரப்ப கொண்டு வரேன்”

தாத்தாவின் கையைப் பிடித்துக் கொண்டு துள்ளிக் குதித்துக் கொண்டு நடப்பேன்.

அம்மாவின் குரல் நினைவுகளுக்கு இடைவெளி போட்டது.

“யோகீ, தாத்தாக்கு டிரிப்ஸ் மட்டும்தானா…..அது எப்படிக் காணும்?  கஞ்சி ஏதாவது கொடுக்கலாமா?”

“டாக்டர் வந்து மருந்து கொடுக்கற நேரம் தானேம்மா இப்ப? கேப்போம் விவரமா”

அவரின் கையைத் தொட்டுப் பார்த்தேன். இப்போது நான் அப்படித் துள்ளினால் இந்தக் கை அதைத் தாங்குமா?

“யோகீ எல்லாரையும் சாப்பிடக் கூப்பிடு. பருப்பும் கீரையும், ரசமும் செஞ்சுருக்கேன்.” பாட்டியின் அழைப்பு.

பருப்பும் கீரையும்….மீண்டும் மனம் இடைவெளியை நிரப்புவதற்குத் தொடர்ந்தது.

“போறுமே! ஐஸ் கொண்டு வந்தாச்சா? அம்புட்டுத்தான். பருப்பு செஞ்சுருக்கேன். அரைக்கீரைய மசிச்சு வைச்சுருக்கேன்.  எல்லாம் வீணாப் போகும்”

“பாட்டி நாங்க கீரை பருப்பு எல்லாம் சாப்பிட்டுருவோம். நீ கைல உருட்டிப் போடறியா”

எல்லார் வீட்டிலும் செய்யும் கீரையும், பருப்பும் தான். ஆனால் பாட்டியின் பருப்பும், கீரையும் தனி மணம் போல் தோன்றும். மையான பருப்பிற்கு நெய்யும், மையாக மசித்த கீரை தேங்காய் எண்ணை வாசத்துடனும்….

இடையில் சாதம் வடித்த கஞ்சியில் உப்பிட்டு, பெருங்காயம் கலந்து மோர் ஊற்றித் தரும் போது நாங்கள் போட்டி போடுவோம்.

அதென்ன ரகசியமோ! பாட்டியின் கைமணம் எத்தனை வருடங்களானாலும் மாறியதே இல்லை.

தாத்தா உணவருந்தியதும் ட்ரான்ஸிஸ்டரை காதருகில் வைத்துக் கொண்டு உட்கார்ந்து ஒருமணி நேரம் ஓய்வுக்குப் பின் கடைக்குச் சென்றால் இரவு 7.30 மணிக்கு வருவார். தாத்தா கொண்டு வரும் கடலைமிட்டாய்க்கு நாங்கள் காத்திருப்போம்.

பாட்டியின் குரல் சிறுவயது நினைவுகளை சற்று நேரம் நிறுத்தியது.

“எப்ப வேணுமோ எடுத்துக்கோங்க” தாத்தா வாங்கி வைத்திருந்த கடலை மிட்டாயையும், ஐஸ் பெட்டியையும் காட்டினாள்.

 “தாத்தா போன முறை உங்களை வந்து பாத்தப்ப என்னதான் ‘நாங்க அங்க வரோம்னு’ நீ சொன்னாலும், கொஞ்ச வருஷமா நீங்க யாரும் லீவுக்கு வராததால அவருக்குச் சந்தேகம். அவருக்குத்தான் உங்களை எல்லாம் பார்க்காம இருக்க முடியாதே. வழக்கம் போல பார்க்க வரப்ப உங்க எல்லாருக்கும் தரணும்னுதான் அதே கடைலதான் கடலைமிட்டாய், ஐஸ்பெட்டி நேத்திக்குக் காலைல வாங்கினார் சாப்டுட்டுக் கிளம்பலாம்னு…. அதுக்குள்ள இப்படி…..”. மீண்டும் விசும்பினாள்.

தாத்தா எங்களைப் பார்க்க வருவதாக இருந்தார் என்பதைக் கேட்டதும் என் மனம் வேதனையில் தவித்தது. வேண்டாம். ஒவ்வொரு முறை அவர் வந்து செல்லும் அந்த வேதனையான நிகழ்வும் மனம் அதிலிருந்து மீள்வதும் படும் பாடும்…. 

தாத்தா பாட்டிக்கும், அம்மா வழிப்பாட்டிக்கும் ஏனோ ஒத்துப் போகவில்லை. தாத்தா வருவதை அம்மா வழிப் பாட்டி விரும்பியதில்லை. ஆணவக் கோபம். தாத்தா எங்களைப் பார்க்க வந்த போதெல்லாம் முதலில் வீட்டின் நடை வரை வருவதற்கு அனுமதி இருந்தது. அதன் பின் திண்ணையானது. அதன் பின்  தாத்தா வரக் கூடாது என்றானது. தாத்தா தன் பெண்ணையும் கொடுத்த இடம் என்பதால் அமைதியாக இருந்தாரோ?

எனக்குப் பெரியவர்களிடம் பேசிப் பஞ்சாயத்து செய்யும் வயது இல்லை. கல்லூரிப் பருவம் ஆனாலும் தைரியம் இல்லை. பேச்செடுத்தால் சண்டைதான் வரும்.

உறவுக்குள் எவ்வளவு வன்மம்? அந்த அளவிற்கு என்ன நடந்திருக்கும்? ஆணவத்தினால், புரிதல் இல்லாமல் மூளையை மழுங்கடிக்கும் கோபம்தான் எத்தனைக் குடும்பங்களில் பாதிப்பையும் பிரிவையும் ஏற்படுத்துகிறது! அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்படுகிறதே!

இறைவன் கூட மன்னிப்பார் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் மனிதர்களுக்குத்தான் முடிவதில்லை. விசித்திரமான மனிதர்கள். இந்தக் கோபதாபங்களினால் என்ன லாபம்? மனம் கேடாகிப் போவதைத் தவிர….

என்னென்னவோ சிந்தனைகள் மோதியது.

தாத்தாவுக்கு எங்களைப் பார்க்காமல் இருக்க முடிந்ததில்லை. சுட்டெரிக்கும் வெயிலிலும் கூட வந்துவிடுவார். பேருந்து நிற்கும் இடத்திலிருந்து கிராமத்திற்கு 1 மைல் நடக்க வேண்டும். 

வீட்டிற்கு வரக் கூடாது என்று ஆன பின், கோயில் வாசலில் உள்ள சிறிய திண்டில் அமர்ந்து யாரேனும் கண்ணில் படும் போது சொல்லிவிடுவார். அப்படி எத்தனை நேரம் அங்கு காத்திருந்திருந்திருக்கிறாரோ தெரியவில்லை. அவர் சொன்னதுமில்லை.

அப்படி அவர் ஒரு முறை வந்தும் எங்களைப் பார்க்க முடியாமல் திரும்பிச் சென்றதை ஊர்க்காரர் ஒருவர் சொல்லித் தெரிந்ததும் வேதனையிலிருந்து மீள பல நாட்கள் ஆனது.

இரண்டு வாரங்களுக்கு முன் தளர்ந்த நிலையில் தாத்தா வந்து திரும்பிச் சென்ற போது தேரடி வரை எங்களைத் திரும்பி திரும்பிப் பார்த்துக் கொண்டே கையை அசைத்துச் சென்றார்…மனம் தாங்காமல் ஓடிச் சென்று அவர் கை பிடித்துச் சொன்னேன்….

“தாத்தா நாங்க அங்க வரோம். நீ அலையாத”

அனுமதி கிடைக்குமா என்று தெரியாத நிலையிலும் தைரியமாகச் சொன்னேன்…. அப்போது நினைத்துக் கொண்டேன். நான் வேலையில் சேர்ந்ததும் தாத்தா, பாட்டியை என்னோடு வைத்துக் கொள்ள வேண்டும் என்று. அப்போது யாரும் என்னைத் தடை செய்ய முடியாதே! ஆனால் அது….

“ஏய் யோகி இங்க பாரு….தாத்தா அசையறாப்ல இருக்கு பாரு” பாட்டியின் குரல் நினைவுகளைக் கலைத்தது.

“அசைவு எதுவும் இல்லை பாட்டி. உனக்குப் பிரமை.”

“எனக்கு எல்லாமே பிரமையாத்தான் இருக்கு இப்ப. என்னத்த சொல்ல?”

தாத்தாவின் அதே நிலையில் 5 நாட்கள் கடந்த நிலையில் 6 வது நாள் தாத்தா “அலமேலு, அலமேலு” என்றார். தாத்தாவின் தங்கை. தங்கையிடம் அதீத பாசம். நாங்கள் பாசமலர் என்று கேலி செய்வோம். தாத்தாவின் மூச்சில் கொஞ்சம் சிரமங்கள் ஏற்பட்டது.

டாக்டர் வந்தார். முந்தைய நாள் வரை கொஞ்சம் நம்பிக்கை கொடுத்தவர்….. டிரிப்ஸை உருவினார். ஒன்றும் பேசவில்லை. அமைதியாகச் சென்றுவிட்டார்.

பல சமயங்களில் ஆழ்ந்த அமைதியே பல செய்திகளை உரக்கச் சொல்லிவிடும். மனித மனதின் ரேகைகள் உட்பட!

“மூச்சு சரியா இல்லியே. கடுதாசி போட்டா போய்ச்சேரவே நாளாகுமே. யோகீ நீ போய், அலமேலுக்கு ஒரு தந்தி கொடுத்துட்டு வரியா? தந்தி கிடைச்சு அலமேலு வர வரை இவர் பொழைச்சுக் கிடக்கணுமே. அப்பாவையும் வரச் சொல்லிடு”

பாட்டிக்கு யதார்த்தத்தை எதிர்கொள்ளும் தைரியம் வந்துவிட்டதோ? தாத்தா இல்லாத வாழ்க்கைக்குத் தயாராகிறாளோ?

எங்களைக் காண தாத்தாவால் வர இயலவில்லை. நாங்களும் வருவது சந்தேகம் என்று இங்கு இப்படி அழைத்துவிட்டார் போலும். தாத்தாவிற்கு வீட்டில் உறவுகள் எப்போதும் வந்து சென்று கொண்டிருக்க வேண்டும். வீடு கலகல என்று இருப்பது அத்தனை விருப்பம்….ஆனால் இப்படியா?

தந்தி கொடுத்த அன்று இரவே, அலமேலுப்பாட்டியும், அப்பாவும் வந்து விட்டார்கள்.

தன் அண்ணாவை அந்த நிலையில் பார்த்த அலமேலுப்பாட்டியின் அழுகையை யாராலும் நிறுத்த முடியவில்லை. தாத்தாவின் அருகிலேயே தூங்காமல் இருந்தாள்.

மறு நாள் எப்போதும் போல் விடிந்து அந்த நாள் நித்யக் கடன்களுக்கு ஆயத்தமானது. அலமேலுப் பாட்டி தாத்தாவை விட்டு நகரவே இல்லை. தாத்தாவின் கையைப் பிடித்துக் கொண்டு “அண்ணா நான், உன் அலமேலு வந்திருக்கேன் பாரு….பாரு.. இங்க பாரு அண்ணா அண்ணா என்று அரற்றிக் கொண்டிருந்தாள். ஆச்சரியம்!

“அலமேலு வந்திட்டியா…?” தாத்தா கண் விழித்துப் பாட்டியைப் பார்த்தார். சுவாசம் தாறுமாறானது. விக்கல் தொடங்கியது. அலமேலுப் பாட்டிக்குத் தன் அண்ணா கண் விழித்துப் பார்த்ததில் சந்தோஷம் என்றாலும் அழுகையை அடக்க முடியவில்லை. பாட்டியும் அழத் தொடங்கிட….அலமேலுப் பாட்டி அழுகையினூடேயே

“யோகீ ஓடிப் போய் பால் கொண்டு வாடா சீக்கிரம்……”

ஓ தாத்தாவின் உயிர் தனக்கு நெருங்கினவர்களின் அருகாமையை விரும்பிக் காத்திருந்திருந்ததோ!

பாலை அலமேலுப் பாட்டி தாத்தாவின் வாயில் விட, தாத்தா விக்கலினூடே அலமேலு, யோகீ என்று குழற பால் கடைவாய் வழியே வழிந்தது.

நான் விக்கித்து நின்றேன். தாத்தா தளர்வுடன் திரும்பி திரும்பிப் பார்த்துக் கையசைத்துக் கொண்டே விண்ணை நோக்கிச் சென்று புகையாய்க் கண்ணிலிருந்து மறைவது போல் தோன்றியது.

எறும்பு மொய்த்துக் கொண்டிருந்த நமுத்துப் போன கடலைமிட்டாயும், குச்சி ஐஸின் குச்சிகள் மட்டும் கூடத்தின் ஓரமாய்.

***********

என் மொபைல் ஃபோன் ரிங்க் டோன். சட்டென்று நினைவிலிருந்து விடுபட்டேன். மகனின் அழைப்பு.

“அப்பா, உன் பேரன் உன்னை ரொம்ப மிஸ் பண்றாம்பா. நீ சொல்ற மாரல் ஸ்டோரீஸ், உன் ஆர்ட், அவன் கேள்விக்கு நீ சொல்ற பதில் எல்லாத்துக்கும்  உன்னை ரொம்பத் தேடறான்பா. நீ வரப்ப போன வாட்டி கொண்டு வந்தியே அதே கோயில்பட்டிக் கடலைமிட்டாயும் உன் பேரனுக்கு வேணுமாம்!”

“தாத்தா, நான் யோகக்காரன்தான்!”

= = = = = =

63 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் அன்பின் கீதாமா.
    அனைவருக்கும் இறைவன் மன ஆரோக்கியம்,
    உடல் நலம் கொடுக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம், கௌ அண்ணா மற்றும் எபி ஆசிரியர்கள் அனைவருக்கும் என் நன்றிகள் பல.

      கௌ அண்ணா உங்க படம் அருமையா இருக்கு.

      மிக்க நன்றி கௌ அண்ணா

      கீதா

      நீக்கு

  2. மிட்டாய்,குச்சி ஐஸ் என்றதும் இன்னோரு திங்கக் கிழமையோ என்று பார்த்தேன் மா!!!
    இங்கே மழை காற்று வெளியில் உறுமிக் கொண்டிருக்கிறது.

    நிற்கட்டும். நிதானமாகப் படிக்கிறேன்.
    மன்னிக்கணும் கீதாமா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிட்டாய்,குச்சி ஐஸ் என்றதும் இன்னோரு திங்கக் கிழமையோ என்று பார்த்தேன் மா!!!//

      ஹாஹாஹாஹா கதைல கூட திங்க வ நுழைக்காமல் இருக்க முடிவதில்லை!!!!!!

      அம்மா ப்ளீஸ் மன்னிப்பு என்றெல்லாம் ஏன் பெரிய வார்த்தை எல்லாம் சொல்கிறீர்கள்? இதில் என்ன இருக்கும்மா மெதுவா படிச்சுக்கலாமே.

      கீதா

      நீக்கு
  3. பதிவிட்ட அன்பு ஸ்ரீராமுக்கும் இனிய காலை வணக்கம்.
    நலமுடன் இருங்கள்.

    பதிலளிநீக்கு
  4. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்க்கையிலும் ஆரோக்கியம் சிறக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  6. நல்ல கதை. தாத்தாவுக்கும் பேரனுக்குமான நெருக்கத்தைச் சொல்லிச் சென்றிருக்கிறார் தி/கீதா! குடும்பச் சூழ்நிலையால் தாத்தாவின் அருகில் இருக்க முடியாமல் போன வேதனை கதை முழுவதும் நிரவிக் கிடக்கிறது. கடைசியில் யோகீஸ்வரனின் பேரனும் அதே மாதிரி இருப்பது வியப்பாக இல்லை. விதை ஒன்று போட்டால் அது தானே முளைக்கும். பாரம்பரியம் தொடர்வதில் சந்தோஷமாக உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விதை ஒன்று போட்டால் அது தானே முளைக்கும்.//

      ஆமாம் கீதாக்கா.

      பாரம்பரியம் தொடர்வதில் சந்தோஷமாக உள்ளது.//

      மிக்க நன்றி அக்கா. தாத்தா பாட்டி, பேரன் பேத்திகள் உறவு மிக அற்புதமான உறவு, அவசியம் என்று நினைப்பவள் நான். (தாத்தா பாட்டி இருக்கும் குடும்பங்களில்) நல்ல விதத்தில் கிடைக்கப் பெறும் குழந்தைகள் பாக்கியசாலிகள்.

      இப்போதெல்லாம் கூட்டுக் குடும்பமே இல்லை எனும் நிலையில் என்ன சொல்ல முடியும். எனவேதான் அட்லீஸ்ட் அடுத்த தலைமுறைகள் இந்த உணர்வைத் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பதுண்டு.

      உணர்வுகள் என்பதே இல்லாத உலகம் ஆகிவிடுமோ என்றும் எனக்குத் தோன்றுகிறது.

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
  7. காலையில் மனதை கலங்க அடித்து விட்டீர்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை அண்ணா!!! என்ன சொல்ல!

      மிக்க நன்றி துரை அண்ணா

      கீதா

      நீக்கு
  8. எத்தனை அருமையான பாசம்.
    வேண்டாத கசப்பு ஒரு மனித உயிரின்
    சந்தோஷத்தைக் கெடுக்கிறதே.
    பாவம் தாத்தா. பேஏரன் பேட்டிகளிடம் பாசம் வைக்காத தாத்தா ஏது?



    கோயில்பட்டிக் கடலைமிட்டாய் வாங்கி வர நாங்களும் மறக்கவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேண்டாதக் கசப்புதான் பல குடும்பங்களில் பாசத்தை உடைத்துப் பிரிவை உண்டாக்குகிறது அடுத்த சந்ததியினர் வரை வேரூன்றிச் செல்கிறது. இதில் என்ன சாதிக்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை.

      கோயில்பட்டிக் கடலைமிட்டாய் வாங்கி வர நாங்களும் மறக்கவில்லை.//

      !!!!!!!!

      மிக்க நன்றி அம்மா

      கீதா

      நீக்கு
  9. தாத்தா சொல்லும் கதைகள் அப்படியே என் அப்பாவை நினைவில்
    கொண்டுவந்தது.

    எளிய மக்களுக்கே உரித்தான நேர்மை,
    நாணயம் .
    அம்மாவழித்தாத்தாக்களை அப்பா வழி உறவுகள்
    கேலி செய்வது பரம்பரையாக நடக்கிறதோ.:((

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாத்தா சொல்லும் கதைகள் அப்படியே என் அப்பாவை நினைவில்
      கொண்டுவந்தது.//

      ஸ்வீட்!!

      இக்கதையில் அப்பா வழித்தாத்தா பாட்டி...

      பொதுவாக அப்பா வழிதான் அம்மா வழி உறவுகளைக் கேலி செய்யும் உதாசீனப்படுத்தும். ஒவ்வொருவரையும் கேட்டால் பல கதைகள் கிடைக்கும்!!

      மிக்க நன்றி அம்மா

      கீதா

      நீக்கு
  10. தாத்தாவுக்கு எங்களைப் பார்க்காமல் இருக்க முடிந்ததில்லை. சுட்டெரிக்கும் வெயிலிலும் கூட வந்துவிடுவார். பேருந்து நிற்கும் இடத்திலிருந்து கிராமத்திற்கு 1 மைல் நடக்க வேண்டும். ////////////////////////////


    இதே வெய்யிலில் தான் என் தந்தையும் வந்து
    கனு, கார்த்திகை,பொங்கல் தீபாவளி என்று
    சீர் செய்து போவார்.

    கௌதமன் ஜியின் ஓவியம் அருமையாகப் பொருந்துகிறது/

    அன்பின் கீதா , மனம் துயரப்பட்டாலும்
    மிகச் சிறப்பான உணர்வுகளை எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள்.

    இந்த அருமையான நினைவுகளை வருங்காலக் குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும். மிக நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதே வெய்யிலில் தான் என் தந்தையும் வந்து
      கனு, கார்த்திகை,பொங்கல் தீபாவளி என்று
      சீர் செய்து போவார்.//

      பாவம் தான். இப்போதெல்லாம் காலம் மாறிவிட்டது

      அம்மா இனி வருங்காலக் குழந்தைகளுக்குக் கிடைக்குமா என்பது கொஞ்சம் சந்தேகம்தான்.

      ஒன்று குடும்பப் புரிதல் என்று இருக்கிறது. இதில் பலதும் அடங்கும்.

      இரண்டாவது குழந்தைகள் எங்கேயோ அம்மா அப்பாக்கள் எங்கேயோ..எல்லாம் வீடியோகாலில் தான்..

      மூன்றாவது குழந்தைகளே லேட்டாக மணம் புரியும் போது, அல்லது மணமே புரியாமல், அல்லது குழந்தைகள் வேண்டாம் என்று இருப்பது என்று வாழ்க்கைச் சூழல் மாறியுள்ளது.

      பல தாத்தா பாட்டிகளுமே கூட மாறிவிட்டதால்...

      மிக்க நன்றி வல்லிம்மா

      கீதா

      நீக்கு
    2. ஆ இதுக்குப் பெரிய கமென்ட் போட்டேனே காணாமல் போய்விட்டதே!!

      இதே வெய்யிலில் தான் என் தந்தையும் வந்து
      கனு, கார்த்திகை,பொங்கல் தீபாவளி என்று
      சீர் செய்து போவார்.//

      பாவம் இல்லையா. ஆனால் இப்போதெல்லாம் பலதும் மாறிவிட்டது. அது ஒரு புறம் நல்ல விஷயம். மறுபுறம் ஒட்டு உறவாடல் இல்லாமல் போகிறது.

      இனி வரும் குழந்தைகளுக்குக் கிடைக்குமா என்று சொல்ல முடியாது அம்மா

      ஒன்றாவது குடும்பத்தில் புரிதல் வேண்டும். இதில் எல்லாம் அடங்கும்.

      இரண்டாவது குழந்தைகள் எங்கோ இருக்க தாத்தா பாட்டிகள் எங்கோ. வீடியோ கால்தான்

      மூன்றாவது, குழந்தைகள் மணம் புரியும் வயது. தாமதமாகும் போது தாத்தா பாட்டிகள் இருக்க வேண்டும்...அல்லது நல்ல நிலையில் இருக்க வேண்டும்.

      நான்காவது, சில குழந்தைகள் மணம் புரிவதில்லை அல்லது குழந்தை வேண்டாம் என்று இருப்பது..

      ஐந்தாவது தாத்தா பாட்டிகளும் கூட அவர்களின் அட்டிட்யூட் மாறிவருகிறது.

      இப்படிப் பல இருக்கும் போது அரிதாகித்தான் வருகிறது.

      மற்றொரு கருத்து கீதாக்காவிற்குக் கொடுத்துள்ள பதிலில் சொல்லியிருக்கிறேன் அம்மா

      மிக்க நன்றி அம்மா.

      கீதா

      நீக்கு
    3. அன்பின் கீதாமா,
      தாத்தா பாட்டிகள் மாறக் கூடாது.
      என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அவர்கள் பிரியப்பட்டுச் செல்லம் கொஞ்சின
      குழந்தைகளின் திருமணத்தைப் பார்க்கக் கொடுத்து
      வைக்கவில்லை.
      என்னுடைய தீராத் துயரம் இது.
      நானும் குழந்தைகள் விஷயத்தில் பாசத்தைத் தவிர வேற சொல்லக் கூடாதுன்னு நினைக்கிறேன்.

      நீக்கு
  11. கடைசி திருப்பம் நன்று.

    சாதம் வடித்த கஞ்சியில் உப்பிட்டு, பெருங்காயம் கலந்து மோர் ஊற்றித் தரும் போது நாங்கள் போட்டி போடுவோம்// இப்படி ஒரு ஐட்டம் இருக்குதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாதம் வடித்த கஞ்சி கலந்த நீரில் தாத்தா வேட்டி அலசி உலர்த்திப் பார்த்திருக்கிறேன்.

      நீக்கு
    2. மிக்க நன்றி அப்பாதுரை ஜி!!!

      இப்படி ஒரு ஐட்டம் இருக்குதா?//

      கீது!! நல்லாருக்கும்.

      இப்பவும் நான் கேரளா அரிசி வடித்த கஞ்சியை இப்படிப் பயன்படுத்துவேன். அரிசி வடித்த கஞ்சியில் சூப் செய்யலாம். ரொம்ப நல்லாருக்கும்

      துப்கா ந்னு திபெத், நேபால், பூட்டான் பகுதிகளில் அரிசி வடித்துக் குழைத்து அதில் சூப் செய்வதுண்டு. நான் படம் எடுத்து வைத்திருக்கிறேன் ஆனால் குறிப்பு இன்னும் எழுதவில்லை. எழுதியதும் வரும்.

      நன்றி அப்பாதுரை ஜி

      கீதா

      நீக்கு
  12. கேஜிஜி சித்திரங்கள் தரமுயர்ந்து வருகின்றன.

    பதிலளிநீக்கு
  13. // இறைவன் கூட மன்னிப்பார் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் மனிதர்களுக்குத் தான் முடிவதில்லை..//

    அருமை.. அருமை..

    பதிலளிநீக்கு
  14. அனைவருக்கும் முகம் மலர இனிய காலை வணக்கங்கள்! அனைவரும் நலமுடன் வாழ, எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன் .
    இன்றைய கதை அருமை! எங்கள் சிறுவயது நினைவுகளை நினைவுபடுத்தியது. தாத்தா, பாட்டியுடன் வளரும் குழந்தைகள் அதிர்ஷ்டம் உள்ளவர்கள் தான். இக்கதையில் வருவது போல, சூழ்நிலை, அப்பாவின் வேலை பொருட்டு அம்மாவின் ஊரில் வளர்ந்தவள் நான். தாத்தா, பாட்டியிடம் வசித்த சிறுவயது நினைவுகள் பசுமையாய் என்றென்றும். நல்லதொரு கதைக்கு நன்றி கீதாக்கா !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வானம்பாடி காயத்ரி! ஆமாம் தாத்தா பாட்டியுடன் வளரும் குழந்தைகள் அதிர்ஷ்டம் உள்ளவர்கள்தான்.

      கீதா

      நீக்கு
    2. மிக்க நன்றி கில்லர்ஜி.

      இக்கதையை எழுதி முடித்த போது, இரு தலைமுறைகளின் பாசத்திற்காக ஏங்கும் ஒருவர் நினைவுக்கு வந்தார். அவரும் தாத்தா ஆனவர்தான்!

      கீதா

      நீக்கு
  15. எனக்குப் பிடிக்குமேன்னு மனைவி வாங்கிவைத்திருந்த கடலைமிட்டாயைக் கொஞ்ச நேரம் முன் தான் காலிபண்ணினேன். இங்கே வந்தால் கடலைமிட்டாய், குச்சி ஐஸ், தாத்தா! ஞாபகம் வருதே ஒன்னொன்னா..
    சேமியா ஐஸ் காலம் வருமோ.. நிலை .. மாறுமோ ?

    தாத்தா எல்லோரையும் கூப்பிட்டு வீட்ல உட்காரவச்சுட்டுத்தான், நிதானமா கிளம்பி போயிருக்காரு. மிச்சத்த மேலேர்ந்து பாத்துப்பாரு. வெவரமான மனுஷன்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏகாந்தன் அண்ணா, சேமியா ஐஸ் இப்போதும் கிராமங்களில் கைவண்டி ஐஸ் பெட்டிகளில் வைத்து ஆங்காங்கே கிடைக்கிறது. முன்பு போல் நிறைய பார்க்க முடியுமா என்று தெரியவில்லை. இப்ப கொரோனா காலத்தில் இல்லாமல் போயிருக்கலாம்.

      நீங்க சாப்ட கடலைமிட்டாய் கோயில்பட்டி கடலைமிட்டாயா??!!! அதுவுமே இப்போது எப்படி இருக்கிறது அதே தரமா என்று தெரியவில்லை. இஞ்சி மிட்டாய் கடலைமிட்டாய் ரொம்ப ஃபேமஸ்.

      தாத்தா எல்லோரையும் கூப்பிட்டு வீட்ல உட்காரவச்சுட்டுத்தான், நிதானமா கிளம்பி போயிருக்காரு. மிச்சத்த மேலேர்ந்து பாத்துப்பாரு. வெவரமான மனுஷன்..!//

      சிரித்துவிட்டேன்.

      மிக்க நன்றி ஏகாந்தன் அண்ணா

      கீதா

      நீக்கு
  16. படிக்க படிக்க ஒரு குறும்படம் பார்ப்பது போல காட்சிகள் விரிந்தன.‌அருமையான நடையில் ஓர் நல்ல கதை.பாராட்டுகள் கீதா!

    பதிலளிநீக்கு
  17. //நான் பிறக்கும் சமயம் தாத்தா பகவத்கீதை வாசித்துக் கொண்டிருந்தாராம். கண்ணனின் பெயர்களில் ஞானேஸ்வரன் பெயரை வைக்கலாமா? அல்லது யோகினாம்பதி-யோகிகளின் தலைவன்- யோகீஸ்வரன் என்ற பெயரை வைக்கலாமா என்று யோசித்து யோசித்து, யோகீஸ்வரன் என்ற பெயர் வைத்ததாகப் பாட்டி சொல்லுவாள்.//


    நீங்கள் பிரந்த நேரத்தில் உங்கள் அப்பா வழி தாத்தா கீதை படித்துக் கொண்டிருந்த காரணத்தால் கீதா என்று பெயரிட்டதாக சொல்லி இருக்கிறீர்கள், அப்பாவழி அம்மாவின் பெயரையும் வைத்தார்கள் என்று சொன்னது நினைவுக்கு வந்தது.

    என் "பெயர்க் காரணம்" பதிவில் சொன்னது


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹை கோமதிக்கா! நினைவு வைச்சிருக்கீங்களே!!! சூப்பர் சூப்பர். ஆமாம் அதைத்தான் இங்கு இந்தக் கதையில் பயன்படுத்திக் கொண்டேன். ஆமாம் அப்பா வழி அம்மாவின் பெயர் எனக்கு. அதுதான் அஃபிஷியல் பெயர். கதைக்கு முதல் பாயின்ட் மட்டுமே எடுத்துக் கொண்டேன்.

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  18. எல்லார் வீட்டிலும் செய்யும் கீரையும், பருப்பும் தான். ஆனால் பாட்டியின் பருப்பும், கீரையும் தனி மணம் போல் தோன்றும். மையான பருப்பிற்கு நெய்யும், மையாக மசித்த கீரை தேங்காய் எண்ணை வாசத்துடனும்….

    இடையில் சாதம் வடித்த கஞ்சியில் உப்பிட்டு, பெருங்காயம் கலந்து மோர் ஊற்றித் தரும் போது நாங்கள் போட்டி போடுவோம்.

    அதென்ன ரகசியமோ! பாட்டியின் கைமணம் எத்தனை வருடங்களானாலும் மாறியதே இல்லை.//

    படிக்க படிக்க மனம் நெகிழ்ந்து கண்ணீர் வந்து பதிவை மேலே படிக்க விடாமல் நினைவுகளில் ஆழ்ந்து போகிறேன் கீதா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலருக்கும் அக்காலக்கட்ட நினைவுகள் வரலாம் உங்களுக்கும் வந்தது மகிழ்ச்சி. இவை இணையத்தில் இருக்கும் போது அடுத்த தலைமுறையினர் அதுவும் இனி பிறக்கப் போகும் தலைமுறையினர் தமிழ் கற்பவர்கள் இருந்தால் இவற்றை வாசிக்க நேர்ந்தால் அதுவரை இவை யாவும் இணையத்தில் இருந்தால் நாம் எழுதுவதை அவர்கள் வாசித்து இப்படியும் வாழ்க்கை முறை இருந்திருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாமே என்றுதான்.

      ஏனென்றால் இனி வரும் காலங்களில் தாத்தா பாட்டி வளர்ப்பு என்பதெல்லாம் அரிதாகும் சூழல்.

      நீங்கள் உங்கள் பேரனைக் குறித்து எழுதும் போதெல்லாம், கீதாக்கா குஞ்சுலு பற்றிச் சொல்லும் போது, வல்லிம்மா அவங்க பேரன், பேத்தி பற்றிச் சொல்லும் போது, இப்போது பானுக்கா தன் பேத்திகள் குறித்திச் செல்லும் போது, என் பெரிய மாமா இன்னும் வளர்ந்த பேரன் பேத்தியுடன் பேத்திக்குக் கல்யாணம் ஆகி 22 வயதாகும் பேரனுடன் அன்போடு வாழ்ந்து வருவதை எல்லாம் நினைக்கும் போது மனம் மிகவும் சந்தோஷப்படும். இப்போது வரை எனக்குத் தெரிந்த வட்டத்தில் இவை. எல்லாம் கலந்து கட்டித்தான் கதையில் வந்தவை.

      உங்கள் பேரனும் கூட வளர்ந்து வரும் போது உங்களைப் பற்றியும் தன் தாத்தாவைப் பற்றியும் எழுதக் கூடும்!

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
    2. என் மகன் தன் தாத்தா, பாட்டியைப் பற்றிச் சொல்லுவது உட்பட...

      கீதா

      நீக்கு
  19. உறவுகளை பற்றி சொன்னது எல்லாம் மிக அருமை.நீங்கள் எழுதிய அனைத்தையும் மனம் அசை போட்டது. கதை சொன்ன விதம் அருமை.

    KGG சார் படமும் பொருத்தமாக இருந்தது.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதிக்கா..மேலே சொன்ன கருத்துகள் தான் அடிப்படை கதைக்கு...என் மகன் தற்போது அவ்வப்போது அசை போடுவது போல உங்கள் பேரனும் அசை போடுவார். நிச்சயமாக.

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  20. இப்படி பெரிசுகள் காண்பித்த அன்பின் ஆழத்தை, அவ்வப்போது மற்றதுகள் தெளிக்கும் மன அழுத்தத்தை வெளிக்கொணரும் கதைகள் தேவைதான்

    பதிலளிநீக்கு
  21. நினைவுகள்.... அழகாக கதையை நகர்த்தி இருக்கிறீர்கள். கடைசி வரிகளில் சொன்ன விஷயம் சிறப்பு.

    கதாசிரியர் கீதாஜிக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!