புதன், 3 ஜனவரி, 2024

முதியவர்களுக்கு என்ன அறிவுரை வழங்குவது?

 

அப்பாதுரை கேட்ட 'ஐந்து' கேள்விகள் என்று சென்ற வார அப்பாதுரை பக்கத்தில் குறிப்பிட்டிருந்தேன். அப்புறம் அவர் அதில் ஒரு கேள்வியை வெளியிடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டதால், அந்தக் கேள்வியை இங்கே வெளியிடவில்லை. (ஆனால் - அந்தக் கேள்விக்கு திருவாளர் & மட்டும் பதில்  கூறியிருந்தார்!) 

அந்தக் கேள்வியும் & ன் பதிலும் வேண்டும் என்போர் - ஆண் வாசகர்கள் மட்டும் - தனியாக வாட்ஸ்ஆப் செய்தி அனுப்பவும். நாராயண நாராயண! வாசகிகள் risk எடுக்கவேண்டாம்! 

அப்பாதுரை : 

1. முதியவர்களுக்கு என்ன அறிவுரை வழங்குவது?

$ 8 ல் வளையாதது 80 இல் வளை யும் என்று நினைத்து உடலை வருத்திக் கொள்ளாதீர்.

# கூடுமானவரை மௌனமாக எந்த சச்சரவுகளிலும் தலையிடாமல் இருக்கப் பழகுங்கள். 

உங்கள் அன்பு ஆனாலும் கோபம் ஆனாலும் வெளியிடாமல் இருக்கப் பழகிக்கொள்ளுங்கள்.

& இளையவர்களுக்கு அறிவுரை வழங்காதீர்கள்! 

2. ஐம்பதாண்டுகளுக்கு முன் ஏற்கமுடியாதவற்றுள் எவற்றை இன்று ஏற்றுக் கொள்கிறோம்? 

$ வீட்டில் சமைக்காத உணவு. 

# கலப்பு திருமணம், இளம் பெண்கள் இளைஞர்கள் நட்போடு பழகுவது, மனதில் பட்டதை பெரியவர்கள் எதிரிலே இளைஞர்கள் பயப்படாமல் பேசுவது.

3. தென்னிந்தியாவுக்கு வரும் வட இந்தியர்கள் முதலில் அதிர்ச்சி அடைவது எதைப் பார்த்து?

$ கடல். 

# பெரும்பாலும் யாவரும் ஹிந்தி புரியாமல் இருப்பதைப் பார்த்து.

4 . சிறு வயதில் உங்கள் சகோதர சகோதரிகள் உங்களுக்கு இழைத்த மறக்க முடியாத நல்லதும் கெட்டதும் யாவை?

$ சொன்னால் சண்டை சச்சரவுகள் வரலாம்.

# சிறிதும் பெரிதுமாக நிறைய இருக்கிறது. வெளியே சொன்னால் வீண் சச்சரவு.

& காலம் சென்ற அக்காவின் அறிவுரைகளும், அவ்வப்போது கோபத்துடன் என்னைக் கிள்ளியதும்! 

கீதா ரெங்கன்: 

பெண்கள் - புகுந்த வீடு என்று சொல்வது போல் ஏன் ஆண்கள் - புகுந்த வீடு என்று சொல்வதில்லை??!!!

# மணமகள் பிறந்த வீட்டை விட்டு கணவன் வீட்டில் புகுகிறாள் அதனால் புகுந்த வீடு. மாப்பிள்ளைக்கு இது  செல்லாதல்லவா

ஜெயகுமார் சந்திரசேகர்: 

பாராளுமன்றத்திலும் சரி, சட்டசபையிலும் சரி, அரசு அலுவகங்களிலும் சரி, அண்ணாச்சி கடையிலும் சரி ' கேள்வி கேட்டால் அடிக்க வருகிறார்களே, ஏன்? என்ன காரணம்? விளக்க முடியுமா? (இந்த கேள்வி கேட்டதற்கு நீங்கள் அடிக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன் )

# தமிழ் தோல்விகள் குறித்த கேள்விகளை அதிகாரத்தில் இருப்பவர்கள் விரும்புவதில்லை. மற்றபடி அண்ணாச்சி கடையில் கேள்வி கேட்டால் ஆட்சேபம் தெரிவிக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

& நாடாளுமன்றம், சட்டசபைகளில் 'கேள்வி நேரம்' என்றே சில நேரங்கள் இருக்கின்றனவே! . அங்கே அப்போது கேட்கப்படும் கேள்விகளுக்கு அரசு சார்பில் பதில் கொடுத்துத்தான் ஆகவேண்டும். 

சுதந்திரம் இல்லாத கட்டுப்பாட்டு முன்னேற்றம், சுதந்திரத்தோடு கூடிய தடுமாற்றம், இவற்றில் எது நல்லது? 

# தடுமாற்றத்தை விட முன்னேற்றம்தான் விரும்பத்தக்கது.

எ பி என்றில்லை, எல்லா தளங்களிலும் பதிவுகளுக்கு வாசகர்கள் வருகை குறைந்துள்ளது, தமிழ்மணம் இருந்த காலத்தில் இருந்த பதிவு எழுதுவதிலோ, வாசிபபதிலோ இருந்த ஆர்வம் சென்று விட்டது. இது எதனால்?

# படிப்பதற்கு அளவுக்கு அதிகமாக விஷயங்கள் இருக்கும் பொழுது மிகச்சிறந்த தரத்தை கொடுக்க முடிந்தால் மட்டுமே வாசகர்களை ஈர்த்து வைக்க முடியும். வெள்ளமாக தகவல்கள் நாலா பக்கங்களிலிருந்தும் வருவதால் படிப்பவர்களுக்கு அலுப்பு ஏற்பட்டிருக்கக் கூடும்.

நெல்லைத்தமிழன் : 

1. கடவுள் என்று நாம் வழிபடுகிறோமே... அந்தக் கடவுள் சாதாரண பரதேசி கோலத்திலோ அல்லது ஏலியன்கள் ஓவியங்கள் பார்க்கிறோமே அந்த வடிவத்திலோ இல்லை கூன் விழுந்த கிழவர் வேடத்திலோ வந்தால் நம்மால் அவரை கடவுள் என்று ஏற்றுக்கொண்டு பணிய முடியுமா இல்லை அவர் மந்திரவித்தை காண்பித்தால்தான் நம்மால் நம்ப முடியுமா?  

$ கடவுள் என்றொரு 3d வடிவம் ஒருநாள் எதிரே வரும் என்று ஒரு நம்பிக்கை உங்கள் மனதில் இருந்தாலும் நான் இன்னார் என்று உங்களுக்கு விளங்கும்படி வேடமணிந்து வருவார் என்று எதை வைத்து எதிர் பார்க்கிறீர்கள்?

# வேண்டியவருக்கு வேண்டியபடி அருள் இறைவன்,  அன்பர்கள் அடையாளம் கண்டு கொள்ளும் உருவத்தில்தான் வருவார் அல்லவா? கண்ணால் பார்த்த மாத்திரத்தில் கடவுளின் மகிமையையும் கருணையையும் மனிதன் புரிந்து கொள்வான் என்பது என் நம்பிக்கை.

& ஸ்ரீமத் பாகவதத்தில் ஒரு காட்சி. சிறுவன் துருவன் நாரதர் சொன்ன தகவலின் படி, விஷ்ணுவை வேண்டி கடுந்தவம் செய்கிறான். அவனுடைய தவத்தின் தீவிரம் கண்டு, துருவனுக்கு தரிசனம் கொடுக்கத் தீர்மானிக்கிறார் பகவான். அப்படி தரிசனம் கொடுப்பதற்கு முன் விஷ்ணு, நாராதரை அழைத்து, " துருவனுக்கு என்னைப் பற்றி எப்படி விவரித்திருக்கிறாய் " என்று கேட்டு, நாரதர் துருவனுக்கு தன்னை எப்படி விவரித்திருந்தாரோ அதே கெட்டப்பில் காட்சி அளித்தாராம். 

கேட்டவரக்குக் கேட்டபடி கண்ணன் வந்தான்;

கேள்வியே பதிலாகக் கண்ணன் வந்தான் ! 

2. இணையம் என்று ஒன்று இல்லாவிட்டால் முகம் தெரியாத நாம் நல்ல நெருங்கிய நட்பில் இருக்க முடியுமா? கண்ணால் பார்த்திராத எ.பி ஆசிரியர்கள், வாசகர்களுடனான நட்பு எப்படி நம் மனதில் உருவாகிறது?   

$ டெஸ்லா எடிசன் இவர்கள் எல்லாம் பிறக்காத போதும் மனிதர்கள் கதைத்துக் கொண்டுதான் இருந்தார்கள். 

# இணையம் இல்லாவிட்டால் பரவும் சாத்தியம் இல்லை என்பது தெளிவாகவே தெரிகிறது.

3.  நம்மால் தாய் தந்தை இருவரிடமும் ஒரே அளவில் பக்தி/பாசம் காட்டமுடியாததன் காரணம் என்ன? அதுபோலவே நம் குழந்தைகளிடமும் நாம் ஒரே அளவில் பாசத்தைக் காட்டுகிறோமா? எதனால் அந்த வித்தியாசம் ஏற்படுகிறது?  

$ தாய் தந்தை இருவரிடமும் ஒரே பாசம் என்றொரு அளவிட முடியாத அன்பு,பயம்,மரியாதை போன்ற பல உணர்ச்சிக் கலவையை எப்படி அளப்பது?

# செலுத்தும்  அன்பும் பெறப்படும் அன்பும் அவரவர் எதிர்பார்ப்பின் அடிப்படையில் இருக்கிறது. இதனால் ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது.

4. பெரும்பாலும் வயதாக வயதாக பக்தி, கோவில் உலா என்று மனது செல்வதன் காரணம் என்ன?-இள வயதில் அவற்றில் நம்பிக்கை கொள்ளாமல் அலட்சியமாக இருந்தபோதும்.  

# முதிர்ச்சியும் தன் வினைகள் பற்றிய அச்ச உணர்வு இவையே காரணம் என்று எனக்குத் தோன்றும்.

5. போட்டி வைப்பதையும் பரிசு கொடுப்பதையும் நிறுத்திவிட்ட காரணம் என்ன? உலகளாவிய recession எபி குழுமத்திலும் வந்துவிட்டதா?

# நிர்வாக ஆசிரியர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.

$ நிர்வாக ஆசிரியர்தான் பதில் சொல்ல வேண்டும். 

& நிர்வாக ஆசிரியர்தான் பதில் சொல்லவேண்டும். 

காலையில் இறைவன் அலங்காரத்துடன் வீற்றிருக்கிறார். மக்கள் சாரிசாரியாக வருகிறார்கள். எத்தனைபேர், இறைவா எனக்கு வாழ்க்கை கொடுத்ததற்கு நன்றி, இந்தத் தவறுகளைச் செய்கிறேன், மன்னித்து குறைந்த தண்டனை கொடு, எப்போதும் உன்னை நினைக்க அருள் செய்னு வேண்டுவாங்க?

# பலர் கேட்கலாம்.  நமக்கு எப்படித் தெரியும் ?

& எல்லோரும் பொன்முடி என்று நினைத்துவிட்டீர்களா! 

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

1. a.இப்போதும் தினசரி நாட்காட்டியில் தேதி கிழிக்கும் பழக்கம் உண்டா?

$ உண்டு. 

# உண்டு. 

& தினசரி காலண்டர் வாங்கிய வருடங்களில் செய்தது உண்டு. 

b. இப்போதும் டெலிஃபோன் நம்பர்களை சிறிய நோட்டில் குறித்து வைத்துக் கொள்வதுண்டா(hard copy)? 

$ உண்டு. 

# இல்லை. 
& இல்லை. 

c. இப்போதும் கடிதம் எழுதுவதுண்டா?

$ கடிதங்கள் whatsapp ஆகி பல நாட்கள் ஆகிற்று. 

# இல்லவே இல்லை. 

& இல்லை. 

காரில் தொலைதூர பயணங்கள் மேற்கொள்ளும்போது எப்படிப்பட்ட பாடல்களை கேட்க விரும்புவீர்கள்?

$ இளைய ராஜா

பால முரளி

கிஷோர்...

இவை மட்டுமே எங்கள் ஓட்டுனருக்கு பிடித்தவை. 

# பாடல் பயணத்தின் போது கேட்பதில்லை.. 

& கார் டிரைவர் அவருக்குப் பிடித்த பாடல்களைப் போட்டுக்கொண்டு கார் ஓட்டுவார். நான் கேட்பது இல்லை. 

= = = = = = = =

KGG பக்கம் & அப்பாதுரை பக்கம் அடுத்த வாரம் பார்ப்போம். 

= = = = = = = =

2023 ஆம் ஆண்டில் புதன் கேள்வி பதில் பகுதியில் அதிக கேள்விகள் கேட்டவர்கள்  :

நெல்லைத்தமிழன் மற்றும் பானுமதி வெங்கடேஸ்வரன். 

இருவருக்கும் வாழ்த்துகள். 

அடிக்கடி நிறையக் கேட்கவும் ! 

= = = = = = = = = = = 


67 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரையும் நலமாக வாழ வைக்க வேண்டுமென இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். .

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அமெரிக்காவில் புத்தாண்டு பிறந்துவிட்டதா! புத்தாண்டு வாழ்த்துகள்.

      நீக்கு
  4. சமீப சுருக் இந்திய பயணத்தில் பற்றிக்கொண்ட வைரஸுடன் இழுபறி. பிறகு சந்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலிமையற்ற வைரஸ் என்ன செய்துவிட முடியும்? கவலை வேண்டாம்.

      நீக்கு
    2. விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகள்.

      நீக்கு
  5. நெல்லையின் கடவுள் கேள்வி சுவாரசியமானது.
    கடவுள் என்றதும் மாயாஜாலம், மந்திரவித்தையை சிலர் எதிர்பார்க்கிறோம் சரி, ஆனால் கடவுள் மந்திர வித்தை காட்டினால் பயம் உண்டாகும், தவிர நம்பிக்கை உண்டாகுமா தெரியவில்லை.
    நிறைய எழுதலாம் இந்தக் கேள்வியை வைத்து :-)

    பதிலளிநீக்கு
  6. //பெண்கள் - புகுந்த வீடு என்று சொல்வது போல் ஏன் ஆண்கள் - புகுந்த வீடு என்று சொல்வதில்லை??!!!
    # மணமகள் பிறந்த வீட்டை விட்டு கணவன் வீட்டில் புகுகிறாள் அதனால் புகுந்த வீடு. மாப்பிள்ளைக்கு இது செல்லாதல்லவா​//

    ​கேரளத்தில் ஆண்களுக்கு தான் புகுந்த வீடு இருந்தது சிறிது காலம் முன்பு வரை. தற்போது கூட்டு குடும்பம் முறை இல்லாததால் தனி வீடாக இருக்கின்றனர்.

    இந்த வாரக் கேள்விகள் சென்னை மழை.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இலங்கைத் தமிழரிடையே மகன் பெண் வீட்டில் குடியேறும் வழக்கம் இப்போதும் உண்டு. இது பற்றி விளக்கமாகவே அலசலாம்.

      நீக்கு
    2. நான் மேலே போட்டது போகலை...மீண்டும் போடலாம்னு வந்தா ஜெ கே அண்ணாவும், நெல்லையும் சொல்லிட்டாங்க. கேரளம் இலங்கை - வாழ்வியலில் நிறையத் தொடர்பு உண்டு.

      கீதா

      நீக்கு
  7. //கீதா ரங்கன்... புகுந்த வீடு// - பாரம்பர்யச் ஒல்லை எபி ஆசிரியர்கள் அறியாத்து ஆச்சர்யம்தான். ஒரு வேளை நெல்லையில்தான் பாரம்பர்யம் இருக்கிறதோ என்னவோ.

    ஆண்களுக்கான பதம், வேட்டாம் என்று குறிப்பிடப்படும் வேற்று ஆம்/அகம். பெண்கள் இன்னொரு இல்லத்தில் புகுவதால் புகுந்த வீடு. ஆணுக்கு மனைவியின் பெற்றோரின் வீடு (அதாவது அவளின் பொறந்தாம்- பிறந்த விடு) வேறு வீடு. இந்த வேறு வீடு என்ற சொல், வேறு எந்த வீட்டிற்கும் கிடையாது... அதாவது மச்சின்னின் வீட்டைக்கூட இப்படிக் குறிப்பிடுவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளக்கமான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    2. ஆமா நெல்லைப்பகுதின்னு இல்லை நெல்லை என் மாமியார் வீட்டிலும் வேட்டாம், வேட்டகம் சொல்வதுண்டு.

      வேற்று அகம் ஆமாம் அதுதான் வேட்டாம்.

      ஆனால், பெண்கள் கணவன் வீட்டில் புகுவது என்பது போல் ஏன் ஆண்கள் பெண்கள் வீட்டில் புகுவது என்ற வழக்கம் இல்லை? கிரஹப் பிரவேசம் என்பது போல். இருவருக்குமே இரு குடும்பங்களும் புதுசு....புது வீடுதானே.

      பெண் கணவன் வீட்டில் இருந்து அவர்களைத் தெரிந்து கொள்வது போல ஆணும் மனைவி வீட்டில் இருந்து அவர்களைத் தெரிந்து கொள்ளலாமே! இங்கும் அங்கும் என்று....

      கௌ அண்ணா ஒரு கரு கொடுத்த நினைவு இருக்கா? நம்ம ஏரியாவில்? கல்யாணத்துக்கு முன்ன இருவரும் மாறி மாறி வீட்டில் இருந்து முடிவு எடுப்பது என்ற கரு!

      இதைத் திருமணம் முடிந்த பின்னும் செய்யலாமே! ...இப்போது இக்காலத்தில் அதற்கான தேவை இல்லைதான்.என்று நினைக்கிறேன்....
      இதுக்கு மேலே நான் சொல்லலை....ஏன்னா, அடிக்கடி நான் சொல்லும் புலம்பல் கருத்து வந்துவிடும்! அதனால இப்படியே இங்கு நிறுத்திக் கொள்கிறேன்.

      கீதா

      நீக்கு
    3. திருமணத்தில், தாலி கட்டி முடிந்ததும் பெண்னை கணவன் வீட்டில் கொண்டு சென்று இனிப்பு வழங்கும் ஒரு சடங்கு உண்டு. அது போல ஏன் கணவனை மனவியின் வீட்டிற்கு அழைத்துச் சென்று இனிப்பு வழங்குவது இல்லை.

      மருமகள் வீட்டிற்கு வந்ததும் திருமகள் வந்தாள் விளக்கேற்ற, லக்ஷ்மி வந்தாள் என்று சொல்கிறோம் (அதுக்கப்பறும் அது வேறுகதையாகுது அதை விடுங்க)....ஒரு வேளை பெண் சீருடன் வருவதாலா?
      மருமகன் வீட்டிற்கு வந்தால் ஏன் எதுவும் சொல்வதில்லை!! ஒரு வேளை முந்தைய காலத்தில் வரதட்சிணை, பெண் வீட்டில் நகை நட்டு கேட்டு வாங்குதல் போன்றவை இருந்ததாலா? அல்லது ஏதேனும் அப்படிச் சொல்வதுண்டா? நான் இதுவரை அறிந்ததில்லையா என்று தோன்றியதால் இப்படியான சந்தேகங்கள்.

      நான் கல்லூரி படிச்சிட்டிருந்தப்ப, அக்காலத்துல பெண் பார்க்க வந்தா டௌரி தான் முதல்ல பேசப்பட்டது. நான் சொல்வேன் கௌரி கல்யாணம் இல்லை. டௌரி கல்யாணம்னு!!!

      ஆனா இப்பல்லாம் வேறு விதமாகத்தான் இருக்கிறது....டௌரி கல்யாணம்!

      கீதா

      நீக்கு
    4. /அது போல ஏன் கணவனை மனவியின் வீட்டிற்கு அழைத்துச் சென்று இனிப்பு வழங்குவது// - வழக்கம் உண்டு.

      பெண் எப்போதுமே விளக்கேற்ற வந்த மஹாலக்ஷ்மி என்றே சொல்வார்கள். சீர்/பணம் என்று அதனைக் கொச்சைப்படுத்தக் கூடாது. பெண் இல்லாத வீடு, வீடாகவே இருக்க முடியாது.

      டௌரி - இதனைப் பற்றி நிறையவே எழுதமுடியும். எப்போதுமே, இன்னொருவர் கஷ்டத்தில் நமக்கு வரும் பணம் என்பது உபயோகமில்லாதது. இந்த டௌரி பிஸினஸே, இரண்டு நூற்றாண்டுகளுக்குள்தான் ஆரம்பித்து தற்போது முடியும் தறுவாயில் இருக்கிறது என்று நினைக்கிறேன். பெண்ணின் படிப்பும், Global awarenessம், அவர்கள் அருகி வருவதும்தான் இதற்குக் காரணம்

      நீக்கு
    5. // கௌ அண்ணா ஒரு கரு கொடுத்த நினைவு இருக்கா? நம்ம ஏரியாவில்? கல்யாணத்துக்கு முன்ன இருவரும் மாறி மாறி வீட்டில் இருந்து முடிவு எடுப்பது என்ற கரு!// இருக்கு - கதையின் பெயர் : Su Do Ku.

      நீக்கு
  8. @நெல்லை
    புதுமைப்பித்தன் கடவுளும் கந்தசாமி பிள்ளையும் என்று ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். இணையத்தில் படித்து பாருங்கள். சிறிய கதை தான்.

    அதே போல் கடவுள் வந்திருந்தார் என்று சுஜாதா ஒரு கதை எழுதியிருக்கிறார். முடிவு எதிர்பாராததாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடவுள் வந்திருந்தார் படித்துள்ளேன். முடிவு மறந்து போய் விட்டது.

      நீக்கு
  9. Art of Living...வாழும் கலை கோர்ஸில் கணகளை மூடிக்கொண்டு, எதிரே உட்கார்ந்திருப்பவரின் கையைத் தொட்டுக்கொண்டு, கடவுள் எதிரே உள்ளவரின் உருவத்தில் வந்திருந்தால் அவரை அடையாளம் கண்டுகொள்ள முடியுமா என நினைத்துப் பாருங்கள் என்பார்கள். அந்த கோர்சில் பல நாம் அறிய வேண்டிய த்த்துவங்கள்.

    பதிலளிநீக்கு
  10. @கீதா
    வேண்டாத எவெராவது நுழைவதை "புகுந்தது" என்று கூறுவது வழக்கம்.ஆமை புகுந்த வீடு, அமீனா புகுந்த வீடு, பாம்பு புகுந்த வீடு, என்ற வரிசையில் மருமகள் புகுந்த வீடு என்பதும் வந்து விட்டது. அதாவது மாமியாருக்கு மருமகள் என்றுமே ஆகாதவள். அதே சமயம் வந்த என்ற சொல் நல்லவர்களுக்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது. பிள்ளை வந்த ராசி, மருமகள் வந்த ராசி, தலைவர் வந்த வீடு, என்றெல்லாம் கூறுகிறோம்.

    இந்த ஆராய்ச்சி சரிதானே?
    Jayakumar​

    பதிலளிநீக்கு
  11. கேள்வி பதில்கள் கண்டோம்.

    இலங்கை தமிழரிடம் பெரும்பாலும் பெண் புகுந்த வீட்டுக்குப் போகமாட்டார் .ஆண்தான் பெண் வீட்டிற்கு வரும் வழக்கம் . சில ஊர்களில் பெண் புகுந்த வீட்டுக்குப் போகும் வழக்கமும் இருக்கிறது.

    எங்கள் பகுதியில் அம்மம்மாவின் அம்மா காலத்திற்கு முன்பிருந்தே பெண் தனது தாயாருடன் இருக்கும் வழக்கம்தான் இருந்தது
    .எங்கள் வீட்டிலும் அம்மம்மா, அவரின் அம்மா எல்லோரும் எங்களுடன்தான் இருந்தார்கள்.

    பெண் பிறந்த வீட்டில் இருப்பதில் ஓரளவு வசதிகளும் உண்டு. பிறந்த நாளிலிருந்து பழகிய பழக்கங்களை மாற்றத் தேவையில்லை.ஆண் வேலைக்கு சென்று விடுவதால் வீட்டில் தங்கும் நேரமும் குறைவு. வீட்டில் வந்த மாப்பிள்ளை என குறைகூறாமல் போற்றி முதலிடம் வைத்திருப்பார்கள்.மாப்பிள்ளையும் குடும்பத்தை நடத்தி செல்லும் தலைவனாக இருப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வீட்டில் வந்த மாப்பிள்ளை என குறைகூறாமல் போற்றி// - இது நம்ம பழக்கவழக்கத்தையொட்டி அமைவது. அதாவது தமிழகத்தில் பொதுவாக 'விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள்', 'மாப்பிள்ளை மாமனார் வீட்டில் அதிகம் தங்கக்கூடாது', சில நாட்களில் சாதம் ரசம் மாத்திரமே போடும்படி ஆகிவிடும்-அதாவது சாப்பிடக் குனியும்போது இலையில் முகம் தெரியும்படி நிலைமை ஆகிவிடும், என்றெல்லாம் சொல்வார்கள். அதே சமயம் மருமகள் என்பவள் மெதுவாக வீட்டின் அதிகாரியாக மாறிவிடுவாள். அதுபோலவே உங்கள் வழக்கத்தில் மாப்பிள்ளை, புகுந்த வீட்டின் அதிகாரியாக ஆகிவிடுவார், அவர்தான் எதிர்கால குடும்பத் தலைவன் என்பதால் அவருக்கு உரிய மரியாதை கொடுப்பார்கள்.

      புதன் கேள்வி - ஆமாம் இந்த இரண்டு வழக்கத்தில் எது சிறந்தது? ஏன்?

      நீக்கு
    2. ஆனால், கேள்வியை கொஞ்சம் simplify செய்து எனக்கு அனுப்பவும். இரண்டு வழக்கம் என்ன என்பதை சுருக்கிச் சொல்லவும்.

      நீக்கு
  12. 1. முதியவர்களுக்கு - வயசாகும் போது தனியாக இருக்க முடியாத நிலை வந்தால், இதுவரை இருந்த பிடிவாதங்களைத் தளர்த்திக் கொண்டு குழந்தைகள் அவங்களோடு இருக்க மனதைப் பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும்.

    2. # பதிலை டிட்டோ செய்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  13. கீதாவின் கேள்விக்கு கீதாவின் பதில் - இது நம் எல்லோருக்கும் தெரிந்த பதில்தான். ஏன் என்பதற்கு வித்தியாசமான பதில் கிடைக்குமா என்று பார்த்தேன்.

    ஆனால் சில ஆண்களுக்கு மனைவியின் வீடு புகுந்த வீடாக இருக்கிறது......பு வீ யாக மாறுவதும் உண்டு!!!!! எனக்குத் தெரிந்து சமீபகாலமாக திருமணமாகும் பெண்கள் கணவ்ன் வீட்டில் வந்துஇருக்கிறார்களா?!!! என்றால் இல்லை என்பேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  14. எ பி என்றில்லை, எல்லா தளங்களிலும் பதிவுகளுக்கு வாசகர்கள் வருகை குறைந்துள்ளது, //

    வேறுவாசிப்புகள் இருக்கலாம். வேலைகள் நேரமின்மை அலல்து வாசித்துவிட்டு கருத்திடாமல் போயிருக்கலாம்....

    //தமிழ்மணம் இருந்த காலத்தில் இருந்த பதிவு எழுதுவதிலோ, வாசிபபதிலோ இருந்த ஆர்வம் சென்று விட்டது. இது எதனால்?//

    அது நம் பதிவுகளைச் சேர்க்க உதவியது என்பதை ஏற்கிறேன் ஆனால் மற்றபடி எனக்கு அந்த ரேங்க்...வாக்கு போடுவது, சும்மா யார் முன்னிலையில் இருக்காங்கன்னு தினமும் பார்ப்பது அதுக்குப் பாராட்டுவிழா..தரமில்லாத பதிவுகள் மேலே இருப்பது.... வாக்கு போடலைனா வாக்கு போடு போடு ன்னு ....அது நம் personal Space ல் தலையிடுவது போல எனக்குத் தோன்றியது. என் தனிப்பட்டக் கருத்து. என்னைப் பொருத்தவரை இப்போது அந்தப் பிரச்சனை டென்ஷன் இல்லாமல் இருக்கிறது என்பேன். பிடித்தால் நேரமிருந்தால் எழுதலாம். இல்லைனா கடந்து செல்லலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ்மணம் ரேங்க் என்பது அரசியலாக இருந்ததோடு பல பிரச்சனைகளையும் எழுப்பியது என்பது என் அனுபவம்.

      எழுத்து என்பது ரேங்கிற்கு உட்படுத்தப்படக் கூடாது என்பதும் என் தனிப்பட்டக் கருத்து

      கீதா

      நீக்கு
    2. # பதில் சூப்பர்! மிகவும் பிடித்தது.

      கீதா

      நீக்கு
    3. நான் தமிழ்மணம் வைத்துத்தான் பல பதிவுகளுக்குச் சென்றேன். அது போன பிறகு, நான் செல்லும் தளத்தில் இருக்கும் லிங்க்கை வைத்து சில பல தளங்களுக்குச் செல்வேன்.

      ரேங்கில் அரசியல் இருந்திருக்கலாம் (எனக்கு +1 போடுங்க என்ற நிர்பந்தம்). ஆனால் அது நல்ல தளங்களின் தேன்கூடாக இருந்ததென்னவோ உண்மை.

      நீக்கு
    4. //எழுத்து என்பது ரேங்கிற்கு உட்படுத்தப்படக் கூடாது// - நம்ம ஊர்ல ஒரு கருத்துக்கு வாசகர்களின் ஆதரவை வைத்தா மக்கள் வாக்களிக்கறாங்க? பத்திரிகை, இணையம் செய்திகளைப் பார்த்தால் ஆளும் கட்சிக்கு 98 சதவிகித மக்கள் வாக்களிக்கக் காத்திருக்கிறாங்க என்ற அர்த்தம்தான் வரும்.

      நீக்கு
    5. த ம பற்றி தி கீ அவர்களின் கருத்துதான் என் கருத்தும். த ம நிர்வாகம் ஏதோ தில்லுமுல்லு செய்து சில வலைப்பதிவுகளை மட்டும் மிகைப்படுத்தி புள்ளிவிவரங்கள் கொடுத்து வந்தார்கள் - அவர்களின் கடைசி காலத்தில்.

      நீக்கு
  15. நெல்லை - கடவுளுக்கு நாம் உருவம் கொடுத்துப் பார்ப்பதால்தான் இப்படித் தோன்றும். எந்த உருவமும் கொடுக்காமல் சக்தியாகப் பார்க்கறப்ப தோன்றாது.

    //மந்திரவித்தை காண்பித்தால்தான் நம்மால் நம்ப முடியுமா? //

    ஹாஹாஹா அப்படித்தானே பலரும் வழிபடறாங்க!!!!! வேண்டினால் டொட்டடைய்ங்குனு (சினிமால வராப்ல) வந்துவிடுவார்னு!

    கீதா

    பதிலளிநீக்கு
  16. நெல்லையின் கேள்வி - இணையம் என்று ஒன்று இல்லாவிட்டால் கண்டிப்பாக இந்த நட்புகள் கிடைத்திருக்காது....டிட்டோஒ நெல்லை.

    இதைத்தான் நான் அடிக்கடி கில்லர்ஜி பதிவில் அவர் டெக்னாலஜி பத்தி அவர் கருத்தைப் பதிவு போடும் போது நான் சொல்வது,

    கீதா

    பதிலளிநீக்கு
  17. நெல்லை - 4 - உங்களுக்கு வயசாகிடுச்சுனா எல்லாருக்குமா ஆகிடுச்சு!!!!!!!!!!!!!!!!!!!!!! ஹாஹாஹாஹா
    மீக்கு இல்லையாக்கும். இப்பவும் அமைதியான இயற்கை சூழ் இடங்களுக்குப் போக ரொம்ப ஆசை. காட்டிற்குப் போக ரொம்ப ஆசை. வாய்ப்புதான் இல்லை. இந்த இடங்களில் அமைதியாக அமர்ந்து ஓரள்வு சுத்தமான அந்தக் காற்றை உள்ளிழுத்து கண்ணை மூடி எதையும் யோசிக்காம இயற்கையோடு அனுபவித்துஇருக்கணும்! புத்துணர்வும் சக்தியும் கிடைத்தது போல இருக்கும்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //காட்டிற்குப் போக ரொம்ப ஆசை.// - வானப்ப்ரஸ்த பருவம் வந்துவிட்டது என்று உண்மையை எழுதறீங்களே... ஹா ஹா ஹா

      நீக்கு
    2. // இந்த இடங்களில் அமைதியாக அமர்ந்து ஓரள்வு சுத்தமான அந்தக் காற்றை உள்ளிழுத்து கண்ணை மூடி எதையும் யோசிக்காம இயற்கையோடு அனுபவித்துஇருக்கணும்!// ஆஹா !!

      நீக்கு
  18. பானுக்கா - நாட்காட்டி இப்பல்லாம் வாங்குவதே இல்லை. இருந்த காலத்தில் கிழித்தது உண்டு.

    ஃபோஒன் நம்பர் பெரும்பாலும் மொபைலில். சில சமயம் சில எண்களை மட்டும் நோட்டில் குறித்துக் கொள்வதுண்டு.

    கடிதங்கள் - இல்லை. முன்பு இமெயிலில் உண்டு ஆனால் இப்போது அதுவும் அலுப்பாகிவிட்டது. முடியலை. ஏனென்றால் பெரும்பாலும் தட்டும் வேலை...எனவே பெர்சனல் விஷயங்களை மெயிலில் தட்ட முடிவதில்லை ஃபோனில் பேசுவதே என் preference.

    அதிகக் கேள்விகள் கேட்ட நெல்லைக்கும், பானுக்காவுக்கும் வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கு நன்றி. வாழ்த்துவோம்.

      நீக்கு
    2. //அதிகக் கேள்விகள் கேட்ட நெல்லைக்கும், பானுக்காவுக்கும் வாழ்த்துகள்!// நன்றி கீதா

      நீக்கு
  19. கேள்விகளும், பதில்களும் அருமை.
    பின்னூட்ட கருத்துக்களும் நன்றாக இருக்கிறது.
    நிறைய மாற்றங்கள் வாழ்க்கை முறையில் ஏற்பட்டு உள்ளது.
    முதியவர்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் அருமை.

    மாதேவி சொன்னது போல இலங்கையில் பெண் புகுந்த வீட்டுக்கு போக மாட்டார். அதிரா முன்பு ஒரு பதிவில் சொல்லி இருந்தார்.

    கேரளத்திலும் சில வீட்டு பழக்கம் அப்படித்தான்.


    பதிலளிநீக்கு
  20. நெல்லைத்தமிழன் மற்றும் பானுமதி வெங்கடேஸ்வரன்.

    இருவருக்கும் வாழ்த்துகள். //

    நானும் உங்களுடன் சேர்ந்து வாழ்த்து சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  21. //கடவுள் ஒருநாள் உலகை காண தனியே வந்தராம் கண்ணில் கண்ட மனிதரை எல்லாம் நலமா என்றாராம்//
    என்ற சாந்தி நிலையம் பாடல் நினைவுக்கு வந்தது.
    இதோ எந்தன் தெய்வம் முன்னாலே ஒரே ஒரு புன்னகையில் கண்டனே!
    இரண்டு பாடல்களும் நினைவுக்கு வந்தன். இரண்டு பாடல்கள் சொல்வதும் பாசம் உள்ள மனிதரிடம், கள்ளம் இல்லா குழந்தையிடம் கடவுள் இருக்கிறார் என்பதுதான்.

    நிறைய தருணங்களில் கடவுள் போல வந்து வழி காட்டினீர்கள், கடவுள் போல் வந்து உதவினீர்கள் என்று சொல்லி இருப்போம்.
    அப்போது எல்லாம் அவர் வந்து இருக்கிறார்.

    பிசிராந்தையாரும், கோப்பெருஞ்சோழனும் நேரில் காணாமலேயே நட்பாக இருந்து இருக்கிறார்கள்.
    அதுபோல இணையம் மூலம் கண்ணால் பாராமலே நட்பு ஏற்படுகிறது. ஒத்த கருத்துக்கள் பாலமாக இணைக்கிறது.

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்விகளும், பதில்களும் அருமை. முதியோர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்ற பதில் சிறப்பு.

    கடவுள் நமக்கு இடர்கள் வரும் போது சமயத்தில், நம் விதிப்பயன்களின் மூலமாக மனிதராக வந்து உதவுவார். அப்போது நாம் கடவுளைக் கண்டோம் என உணர்வோம் .

    நம் ஆன்மாவை கண்டுணர்ந்தால், எப்போதும் கடவுளை நம்மிடையே தக்க வைத்துக் கொள்ளும் பக்குவத்தை உணரலாம் என பல ஆன்மிக நூல்கள் கூறுகிறது. அதற்கு கடும்பயிற்சி செய்ய வேண்டும், அப்படிச் செய்தால், பிறவிப் பெருங்கடலில், இந்தப்பிறவியில் இல்லையெனினும், அடுத்தடுத்ததில் கிடைக்கலாம்.அதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டும்.

    சென்ற வருடம் அதிக வினாக்களை தொடுத்து நம் அனைவரின் ஐயம் தீர்த்த சகோதரர் நெல்லைத் தமிழருக்கும், சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களுக்கும் அன்பான வாழ்த்துகள். நன்றிகள் பகிர்வுக்கு மிக்க நன்றி .

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!