பொதுவாய் கடாரங்காயில் மிளகாய் மட்டும் சேர்த்து கார ஊறுகாயாக மட்டும் தான் எல்லோரும் போடுவது வழக்கம். வெல்லம் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த ருசியான ஊறுகாய் செய்யும் விதம் பற்றி என் சினேகிதி ஒருவரின் மூலம் தெரிந்து கொண்டேன். இந்த கடாரங்காய் வெயில் காலத்திலும் சரி, குளிர் காலத்திலும் சரி காய்கறி சந்தையில் கிடைக்கும். அதுவும் தஞ்சையில் நல்ல மஞ்சள் நிறத்திலும் அழகான பச்சை நிறத்திலும் கிடைக்கும். ஊறுகாய் செய்து ஜாடியில் நிரப்பி வைத்தால் ஒரு வருடமானாலும் கெடாது. இனி ஊறுகாய் செய்யும் விதம் பற்றி....
கடாரங்காய் இனிப்பு ஊறுகாய்
மனோ சாமிநாதன்
தேவை:
கடாரங்காய்-4
மிளகாய் வற்றல்- 3 கப்
வெந்தயம்- 2 ஸ்பூன்
பெருங்காயப்பொடி- 1 ஸ்பூன் அல்லது கட்டிப்பெருங்காயம்- ஒரு பெரிய துண்டு
வெல்லம்- அரை கிலோ
மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்
நல்லெண்ணை- அரை லிட்டர்
தேவையான கல் உப்பு
செய்முறை:
மிளகாய் வற்றலை சிறிது நல்லெண்ணையில் கை விடாமல் மெதுவான தீயில் வறுத்தெடுக்கவும்.
கட்டிப்பெருங்காயமானால் எண்ணெயில் பொரித்தெடுத்து வைக்கவும். தூள் பெருங்காயமென்றால் ஊறுகாய் செய்யும்போது பொடி வகைகளைச்சேர்க்கும்போது சேர்த்துக்கொள்ளலாம்.
வெந்தயத்தை சில துளிகள் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.
இவையெல்லாம் நல்ல வெய்யிலில் சில மணி நேரங்கள் காய வைத்து பின்னர் சன்னமாக பொடிக்கவும்.
கடாரங்காய்களை 1 செ.மீ அளவில் துண்டுகளாக அரிந்து விதையெடுத்து வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் பாதி நல்லெண்ணையை ஊற்றி காய்ந்ததும் கடாரங்காய் துண்டுகளைப்போட்டு மெதுவான தீயில் வதக்கவும்.
மஞ்சள் தூள் உப்பு சேர்த்து மேலும் வதக்கவும்.
காய் வெந்ததும் தூள்களை சேர்த்து வதக்கவும்.
காய் பதமாக வெந்து சுருள வந்ததும் பொடித்த வெல்லத்தை சேர்த்து கிளறவும்.
மீதியுள்ள நல்லெண்ணையையும் ஊற்றி கிளறவும்.
ஊறுகாய் லேகியப்பதமாக சுருள வரும்போது, எண்ணெய் மேலே கசிந்து வரும்போது இறக்கவும்.
கடாரங்காய் இனிப்பு ஊறுகாய் செய்முறை புதிது. அருமை.
பதிலளிநீக்குஇனிய பாராட்டிற்கு அன்பு நன்றி நெல்லைத்தமிழன்!!
நீக்குபடத்தைப் பார்த்தேன். குலாப் ஜாமூன் போல் இருந்தது. புளிப்பு, இனிப்பு, காரம், உப்பு, கொஞ்சம் துவர்ப்பு சேர்ந்து ஐஞ்சுவையுடன் ஊறுகாய் ருசிக்கும்
பதிலளிநீக்குJayakumar
ரொம்பவும் அழகாக விவரித்திருக்கிறீர்கள்! உண்மையில் இந்த ஊறுகாய் அப்படித்தான் ஐஞ்சுவையுடன் இருக்கும். அதுவும் நல்ல வெல்லம் கிடைத்து விட்டால் அத்தனை அருமையாக இருக்கும்! இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி!!
நீக்குகற்பக கணபதி
பதிலளிநீக்குகனிவுடன் காக்க..
முத்துக்குமரன்
முன்னின்று காக்க..
தையல் நாயகி
தயவுடன் காக்க..
வைத்திய நாதன்
வந்தெதிர் காக்க..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
கடாரங்காய் இன்னமும் கிடைக்கின்றதா என்ன!?..
பதிலளிநீக்குஅருமையான தஞ்சாவூர் பக்குவம்.. இதே முறையில் நாரத்தங்காயிலும் செய்யலாம்..
பதிலளிநீக்குபாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் துரை.செல்வராஜ்!
நீக்குபெரும்பாலும் எல்லா சீசன்களிலும் கடாரங்காய் தஞ்சையில் காய்கறி சந்தைகளில் கிடைக்கும்!!!
ஊறுகாயில் இனிப்பு வகை புதிதாக இருக்கிறது.
பதிலளிநீக்குபடமே ஆசையை தூண்டுகிறது.
அருமையான பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி கில்லர்ஜி!
நீக்குமனோ அக்கா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆஹா கிடாரங்காய் ஊறுகாய் சுண்டி இழுக்கிறதே. அருமையான செய்முறை சொல்லியிருக்கீங்க மனோ அக்கா. அளவுகளை நோட் செய்துகொண்டேன்.
பதிலளிநீக்குகீதா
இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி கீதா!
நீக்குநம் வீட்டிலும் இதே போன்று கிடாரங்காய், நார்த்தங்காயில் செய்வதுண்டு. என் மாமியார் செய்வார். நார்த்தங்காயில் அவர் செய்வதை நார்த்தங்கா பச்சடி என்பார். நானும் நார்த்தங்காய், கிடாரங்காயில் செய்வதுண்டு எல்லாம் சும்மா கண்ணளவுதான்.
பதிலளிநீக்குநம் வீட்டில் வெந்தயம் எண்ணைய் விடாமல் வெறும் வாணலியில் வறுத்து பெருங்காயமும் அப்படிச் செய்து பொடித்து ரெடியாக வைச்சுக் கொள்வதுண்டு.
நீங்க எண்ணையில் பொரித்ததையும் குறித்துக் கொண்டு அளவுகளைப் பார்த்து குறித்துக் கொண்டு விட்டேன். சப்பாத்திக்கும் , ப்ரெட்டில் வைச்சு சாப்பிடவும் ரொம்ப நல்லா இருக்கும். புளிச்ச தோசைக்கும் கூட தொட்டுக் கொள்வோம் நம்ம வீட்டில்.
ஊறுகாய் செய்வதே இப்ப அபூர்வமாகிவிட்டது அதிலும் வெல்லம் சேர்ப்பதால் இப்ப செய்வது அபூர்வம்.
வட இந்தியர்கள் குறிப்பாகக் குஜராத், பக்கம் ச்சுண்டா,சுந்தா என்று புளிப்பு மாங்காயில் செய்வாங்க.
மிக்க நன்றி மனோ அக்கா.
கீதா
அருமையாக, விரிவாக எழுதியிருக்கிறீர்கள் கீதா! என் சினேகிதி இந்த ஊறுகாய்க்கான சாமான்களை வறுத்து ஒரு தாம்பாளத்தில் பரப்பி வெய்யிலில் காய வைத்திருக்கும் விதமே அத்தனை அழகாய் இருக்கும்.
நீக்குமெழுகு போன்ற மண்டை வெல்லத்தில் செய்தால் அத்தனை சுவையாக இருக்கும்!
இப்போது சில வேலைகளுக்காக தஞ்சை வந்திருக்கிறேன். மூன்று மாதங்களுக்கு முன்னேயே கடாரங்காய் ஊறுகாய் செய்து குளிர் சாதன பெட்டியில் வைத்து விட்டு சென்றிருந்தேன். வந்ததுமே தயிர் சாதத்துக்கு தொட்டுக்கொள்ள வசதியாக இருந்தது.
மனோ அக்கா vellam ஆமாம் மெழுகு போன்ற மண்டை வெல்லம.....அதுதான் சமையலுக்கு இப்படியானதுக்கு ரொம்ப சுவை....உங்க குறிப்பு பார்த்ததும், இனிப்பு இப்பல்லாம் செய்யலைநாலு, செய்துவிட வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது மனோ அக்கா...
நீக்குகீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குஇன்றைய திங்கள் சமையல் பகுதியில் தங்களின் கிடாரங்காய் ஊறுகாய் செய்முறைகள் மிக நன்றாக உள்ளது. நீங்கள் குறிப்பிட்டுள்ளவைகளை கவனமாக குறித்துக் கொண்டேன். படங்கள் கண்களை ஈர்கின்றன. கிடாரங்காய் நார்த்தங்காய் கார ஊறுகாய்களை முன்பு சாப்பிட்டுள்ளேன். இது போல் இனிப்பு கலந்து இதுவரை செய்ததில்லை. இந்த காய்கள் எங்கள் ஏரியாவில் அதிகமாக பார்க்கவில்லை. ஒரு வேளை நான் பார்க்காத போது வந்து விற்பனை ஆகி விடுகிறதோ என்னவோ? எலுமிச்சை ஊறுகாய் எப்போதும் வீட்டில் இருக்கும். ஆனால் ஊறுகாய் பயன்பாடு வீட்டில் முன்பு போல் இப்போது இல்லை. இந்தக்காய் கிடைக்கும் போது தங்கள் செய்முறையின்படி செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அருமையான பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி கமலா ஹரிஹரன்!
நீக்குகிடாரங்காய் ஊறுகாய் செய்முறையும் படங்களும் அருமை.
பதிலளிநீக்குதிருவெண்காட்டில் இருக்கும் போது பக்கத்து வீட்டு மாமி கொடுப்பார்கள் கிடாரங்காய், நல்ல மஞ்சளாக கொடுப்பார்கள் .செய்முறையும் சொல்லி தந்தார்கள். வெந்நீரில் சிறிது நேரம் போட்டு எடுத்து விட்டு ஊறுகாய் போட சொல்லி கொடுத்தார்கள்.
இங்கும் சில நேரம் கிடைக்கும் மிக பெரிதாக .
தகவல்களுக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி கோமதி அரசு!
பதிலளிநீக்குநல்ல ஊறுகாய் குறிப்பு.
பதிலளிநீக்குஇந்தக் காய் பற்றி நான் அறிந்திருக்கவில்லை. எமது நாட்டில் கிடைக்குமா ?தெரியவில்லை.
இதே போல் வெல்லம் சேர்த்து எலுமிச்சம்பழம், நாரத்தங்காய், மாங்காய் போன்றவற்றிலும் செய்திருக்கோம். தேப்லா, மேதி பராத்தா, ஆலு, மூலி பராத்தாவகைகளுக்குத் தொட்டுக்க நன்றாக இருக்கும். முன்னெல்லாம் அடிக்கடி பண்ணி வைச்சுப்பேன். இப்போச் செலவாவது இல்லை.
பதிலளிநீக்கு