செவ்வாய், 9 ஜனவரி, 2024

சிறுகதை : புன்னகை - துரை செல்வராஜூ

 புன்னகை

துரை செல்வராஜூ

*** *** *** ***

" வாங்க அம்மா வாங்க!... வாங்க அக்கா வாங்க!.. "

பதிவு செய்யப்பட்ட கரகரப்பு அலறல்.. 

ஒலிபெருக்கியுடன்  - எதிர்ப் புறத்தில் குட்டியூண்டு வண்டி ஒன்று வந்து நின்றது.. 

" வாங்க அம்மா வாங்க!... வாங்க அக்கா வாங்க!.. "

வீட்டுக்குள்ளிருந்த முத்தையன் வாசலுக்கு வந்தார்..

" ஏங்க... உங்களத்தானே!.. "

" என்ன?.. " - என்பது போல திரும்பிப் பார்த்தார்..

சேலையை இடுப்பில் செருகிக் கொண்டு எதிரில் வந்து நின்றாள் மரகதம்..

" என்ன விக்கிறான்னு.. "

" எதையாவது  விக்கட்டும்... யாராவது வாங்கட்டும்.. நீங்க சும்மா இருந்தா போதும்.. "

" தேவையா இருந்தா வாங்கலாமே ன்னு நெனச்சேன்.. "

" அதெல்லாம் நாங்க பார்த்துக்கறோம்... நீங்க சிவனே ன்னு இருங்க.. "

" நீயே இந்த மாதிரி சொன்னா?... "

" வேண்டாம்.. அப்பா.. விசாரிக்க வேண்டாம்..  விட்டுடுங்க.. வேடிக்கை பார்க்கக் கூட போகாதீங்க.. பழம் ஏதும் வாங்கனும் ன்னா சிட்டிக்குப் போறப்ப வாங்கிக்கலாம்... "

" நீயுமா.. அமுதா!.. "

மனைவியும் மகளும் ஏன் இப்படிச் சொல்கின்றார்கள் என்பது முகத்திற்கு முன்னால் ' ஙொய்ங்.. ' என்று சுழன்றது..

கிழக்கு மேற்கு என - பரந்து விரிந்திருந்த புது வசந்தம் குடியிருப்பில் அந்தப் பக்கம் மூன்றாவது குறுக்குத் தெரு.. இந்தப்  பக்கம் ஆறாவது குறுக்குத் தெரு..

ஆறாவது குறுக்குத் தெருவில் முதல் வீடு சொந்தமாக அமைந்து  குடியேறி ஒரு வருடம் ஆகின்றது.. 

இந்த குறுக்குத் தெருவின்  ஓரமாகத் தான் அவ்வப்போது சந்தைக் கடைகள்.. 

தற்கால வழக்கப்படி யாரும் யார் வேலையிலும் குறுக்கிடுவது இல்லை..

போனால் போகட்டும் என்று சின்னச் சின்ன பார்வைகள்.. அவ்வளவே..

இப்படியாகப்பட்ட ஒருநாளில் கிலோ நாப்பது ங்கற சத்தத்தோட ஆப்பிள் வண்டி ஒன்று வந்து நின்றது.. முதல் ஆளாக முத்தையன் சென்று பார்த்தார்..  

பாதிக்கு மேல் சரியில்லாத பழங்கள் அவை.. ஒன்றும் திருப்தியாக இல்லை.. அத்துடன் திரும்பி வந்திருக்கலாம்... 

ஆனால், விதி யாரை விட்டு வைத்தது!..

அங்கிருந்து நகர்ந்தபோது -  ' பார்த்து எடுத்துக்குங்க சார்.. ' - என்ற குரல் தடுத்தது..

சரி என்று ஓரளவு நல்ல பழங்களாக எடுத்து எடையிடக் கொடுத்த போது கிலோ அறுபது என்று சொல்லப்பட்டது..

அடிபட்ட பழத்துக்கா அறுபது என்று நினைத்துக் கொண்டார் முத்தையன்..

" அப்படி ஏதும் முதல்ல சொல்லலையே!.. "

" ஏன் ஒங்களுக்குத் தெரியாதா?.. "

" இந்த விலைக்கு எனக்கு வேண்டாம்.. " - என்றார் முத்தையன்..

" சரி..  பொறுக்கி எடுத்தத எல்லாம் போட்டுட்டு கிடக்குற பழத்துல ஒரு கிலோ எடுத்துக்குங்க.. நாப்பது.. நாப்பதேய்!.. "

தான் இங்கு வந்ததே தவறு என்று அவருக்குத் தோன்றியது..

" எனக்கு பழமே வேணாங்கறேன்... "

" இந்த வார்த்தை ய பழத்தையெல்லாம் போட்டு புரட்டுறதுக்கு முன்னால சொல்லி இருக்கணும்.. "

" பழம் வேணாம் ன்னு நகர்ந்தப்போ நீங்க தானே பார்த்து எடுத்துக்குங்க ன்னு கூப்பிட்டீங்க.. "

" அப்படித்தான் கூப்புடுவோம்.. இப்படியான நல்ல பழத்தை எல்லாம் வெச்சித் தான் இந்த சேதாரத்தை வித்துத் தீர்க்கணும்.. நீங்க பாட்டுக்கு வண்டிக் கிட்ட வந்து நல்ல பழத்தை பொறுக்கி எடுத்தா தனி வெலை தான்.. ஒன்னும் தெரியாத மாதிரி பேசாதீங்க.. "

சின்னச் சின்ன வார்த்தைகள் சச்சரவாகி விட்டன... அக்கம் பக்கத்தினர் வாசலுக்கு வந்தார்கள்..  வேடிக்கை  பார்த்தார்கள்.. போய் விட்டார்கள்.. 

விதியை நொந்து கொண்ட முத்தையன் அதற்கு மேல் எதுவும் பேசாமல் காசைக் கொடுத்து விட்டு வந்தார்..

' எட்டி எடு ஏழு பைசா.. நான் தொட்டுத் தந்தா எட்டு பைசா.. ' என்ற பழைய பாட்டு நினைவுக்கு வந்தது..

அதற்குப் பின் - வீட்டு வாசலில் நடக்கின்ற சிறு சிறு வியாபாரங்களில் முத்தையன் தலையிடுவதே இல்லை..

அவரவர் சாமார்த்தியம் அவரவருக்கு..

அடுத்து ஒருநாள் அங்கிருக்கும்  டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் பிரச்னை.. 

பொருட்கள் வாங்கியதற்கு கொடுக்கும் பணத்தில்  மீதமாகும் சில்லறையைத் திருப்பிக் கொடுக்காமல் சாக்லேட்களுடன் புன்னகை சிந்தினார்கள்.. 

கேட்டதற்கு,  ' நீங்க தான் சரியான சில்லறை கொண்டு வரணும்!.. ' என்று அறிவுறுத்தி அதிகப்படியாக புன்னகைத்தார்கள்.. 

இங்கே என்று இல்லை.. இதைத் தாண்டி கடைத் தெருவிலும் இப்படித் தான் நடக்கின்றது....

போகும் கடை எல்லாவற்றுக்கும் சில்லறைக் காசுகளை மூட்டை கட்டிக் கொண்டு போக வேண்டும் என்றால் எப்படி?..

மகள் அமுதாவின் கல்லூரித் தோழியின் அப்பா தான் வர்த்தக சங்க செயலாளர்.. அவரிடம் இதைப் பற்றி சொன்னதற்கு முதலில் புன்னகைத்த அவர் மிகப் பெரிதாகச் சிரித்து வைத்தார்..

நீதியும் நேர்மையும் மேலுக்கு முடியாமல் கிடப்பதாக கூடுதல் தகவலும்  கொடுத்தார்.. அதுதான் சிந்திக்க வைத்தது..

நாட்கள் ஓடிக் கொண்டிருக்க -

இப்போதெல்லாம் பொழுதுக்கும் முத்தையன் அமைதியாக இருக்கின்றார்..

திருவையாத்துல இருந்து தார் கணக்கில் வாழைப்பழம் வாங்கி வந்து இங்கே எடை போட்டு விற்பதைக் கண்டு கொள்வதில்லை..

" அரக்கிலோ அம்பது.. காக்கிலோ முப்பது. முப்பது!.. " - என்று தட்டுத் தடுமாறும் கணக்கில் கூப்பாடு போடுவதையும் காது கொடுத்துக் கேட்பதில்லை.. 

அவரது மன உறுதிக்கு ஒரு சோதனை மதுரையில் உறவினர் வீட்டுக் கல்யாணம் என்று வந்தது..

கல்யாணம் நிகழ்ந்த மறுநாள்.. 

மயிலாடுதுறை விரைவு வண்டியில் குடும்பத்தினருடன் திரும்பிக் கொண்டிருந்த போது தான் அது நடந்தது..

ஜங்ஷனை விட்டு நகர்ந்த ரயில் - வைகையின் மீது விரைந்து கொண்டிருந்த போது -

" கடலை மிட்டாய்.. கடலை மிட்டாய்.. கோயில் பட்டி கடலை மிட்டாய் சார்.. "

சிறுவர்கள் இருவர் மெதுவாக வந்தனர்.. ஒருவனுக்குப் பார்வை இல்லை என்பதும்  மற்றவனுக்குக் குறைவு என்பதும் புரிந்தது.. 

பார்வைக் குறைவு உடையவனைப் பற்றிக் கொண்டு மற்றவன்..  இருவர் கையிலும் சிறு சிறு பைகள்..  அவர்களைத் தடுத்து நிறுத்தினார் முத்தையன்..

" ஒரு பாக்கெட் பதினைஞ்சு..   ரெண்டு இருபத்தஞ்சு ரூபாய் சார்.. "  -  என்றபடி சில பாக்கெட்டுகளை நீட்டினர்.. 

முத்தையன் ஆவலுடன் நோக்கினார்.. கடலை மிட்டாய் என்றால் மிகவும் இஷ்டம்..

பார்ப்பதற்கு கடலை மிட்டாய்கள்  நன்றாகத் தான் இருந்தன..

அருகில் இருந்த மரகதமும் அமுதாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்..

" நாலு பாக்கெட் கொடுடா தம்பி... " 

நூறு ரூபாயை நீட்டினார் முத்தையன்..

" சில்லறை இல்லீங்க.. சார்.. இப்போ தான் வர்றோம்.. "

" நாலு பாக்கெட்டுக்கும் அறுபது ரூபாய்  எடுத்துக்க!.. "

 " அம்பது ரூபாய் கொடுங்க.. சார்..  அது போதும்..  இதுலயே எங்களுக்கு ஆதாயம் இருக்கு.. இன்னும் இருபது பாக்கெட் வித்ததுன்னா போதும்..  திண்டுக்கல் ல எறங்கி மதுரைக்குத் திரும்பிடுவோம்..."

" அப்போ இருபது பாக்கெட் கொடு தம்பி!.. "

முத்தையன் மனைவியைப் பார்த்தார்.. 

மரகதம் புன்னகையுடன் கைப் பையில் இருந்து பணத்தை எடுத்து  நீட்டினாள்..

பார்வை குறைந்திருந்த சிறுவர்களின் கண்களில் புன்னகை ததும்பியிருந்தது..

***

31 கருத்துகள்:

  1. இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாமோ என்று ஏங்க வைக்கும்
    யதார்த்த எழுத்து நடையும் கருணை உள்ளமும் கை கோர்த்து உலா வருகின்ற காட்சி.
    இருந்தும் இன்னும் எழுதியிருக்கலாமோ என்ற எதிர்பார்ப்பு ஏங்கல்.
    மென்மேலும் சிறப்புகள் கொண்ட கதையமைப்புகள் வசமாக வாழ்த்துக்கள், தம்பி.

    பதிலளிநீக்கு
  2. மன்னிக்கவும். வழக்கம் போல உங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி என்று சொல்லாமல் பின்னூட்டங்களுக்கு ஏற்ற உங்கள் எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டீர்கள் என்றால் அதுவும் வாசிப்பவர்களுடன் கதை பற்றிப் பேசியதாகவும் இருக்கும். கதையில் சொல்லாத விஷயங்களையும் சொன்ன மாதிரி இருக்கும்.
    முயற்சித்துத் தான் பாருங்களேன். கைக்கு சிரமமாய் இருந்தால் வேண்டாம்.

    பதிலளிநீக்கு
  3. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    கோவிந்த ராஜர் குறைவறக் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    திருப்பதியில் இருந்து -
    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. இன்று கதைக் களம் காண்பதற்கு வருகை தரும் அன்பு நெஞ்சங்களுக்கு நல்வரவு..

    திருப்பதியில் இருந்து
    அன்பின் வணக்கம்..

    பதிலளிநீக்கு
  5. இன்று எனது கதையினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  6. கண் கவரும் படங்களுடன் எழிலூட்டிய சித்திரச் செல்வர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

    கௌதம் ஜி அவர்கள் ரொம்பவும் உற்சாகமாகி விட்டார்!..

    பதிலளிநீக்கு
  7. அன்பின் கருத்துரைகளுக்கு சற்று பொறுத்து பதில் அளிக்கின்றேன்...

    இங்கே திருப்பதியில் குளிர் சாரல் ..

    கை விரல்கள் நடுங்குகின்றன..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கு அமெரிக்காவில் கணப்பு அடுப்பு அருகில் விரல் நடுக்கத்துடன் உட்கார்ந்து தான் நானும் இதை எழுதினேன். அனுபவ பூர்வமாக சிரமங்களை உணர்வேன். ஆதலால் இன்று வேண்டாம். அடுத்த கதைக்கு முடிந்த்தால் பார்த்துக் கொள்ளலாம். உடல் நலம் முக்கியம்
      அன்புடன்,
      ஜீவி

      நீக்கு
  8. யதார்த்தமான நிகழ்வுகள் சிறப்பு ஜி

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

    கதை நன்றாக உள்ளது.

    /நீதியும் நேர்மையும் மேலுக்கு முடியாமல் கிடப்பதாக கூடுதல் தகவலும் கொடுத்தார்.. அதுதான் சிந்திக்க வைத்தது../

    ஆகா.. உண்மையிலேயே சிந்திக்க வைத்த வரிகள். இறுதியில் அவ்விரண்டையும் ஒன்று சேர்ந்து காண்கையில், முத்தைய்யனின் கனிவு வெளிப்பட்டதை குறிப்பிட்டது கதையின் சுவாரஸ்யமான மிகச் சிறந்த இடம்.

    மிக அழகாக உங்கள் மனதில் எழும் எண்ணங்களை இப்படி சிறு கதைகளாக வடிவமைத்து கொடுப்பதில் தங்களுக்கு நிகர் தாங்களே...! மனம் நிறைந்த பாராட்டுக்கள் சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. கதை நன்றாக இருக்கிறது.
    நீதியும் , நேர்மையும் கடைபிடிக்கும் நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள் இந்த சிறுவர்கள் போல.

    //பார்வை குறைந்திருந்த சிறுவர்களின் கண்களில் புன்னகை ததும்பியிருந்தது..//

    அருமை.

    செய்யும் தொழிலில் நேர்மை உள்ள சிறுவர்கள் கண்கள் ஒளிவீசுகிறது.

    பதிலளிநீக்கு
  11. கதை நன்றாக இருக்கிறது துரை அண்ணா.

    கூவி விற்கப்படும் பொருட்களின் தரம் பல சமயங்களில் ஏமாற்றி விடுவதுண்டு. நடைமுறையில் நடப்பது.

    கீதா

    பதிலளிநீக்கு
  12. கௌ அண்ணா, படங்கள் நல்லாருக்கு. பொண்ணு அமுதா அப்பாவை ரொம்பவே மிரட்டறா போல!!!!!!! அமுதாவின் வகையான கெட்டப்புகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  13. அதுவ்ம் கரெக்ட்டா வேண்டாம் அப்பா ன்னு சொல்லும் இடத்தில் ஸ்டைலா !! படம்

    கீதா

    பதிலளிநீக்கு
  14. கதை நன்றாக இருக்கிறது. இப்படியான விற்பனைத் திறன் உள்ளவர்களிடமிருந்து தப்புவது சிரமமே. பார்வைத்திறன் இல்லாத சிறுவர்களுக்கு உதவ முடிந்தது மன நிறைவைத்தரும். அங்கு பட்ட காயத்துக்கு இங்கு மருந்து என்று நினைத்து ஆறுதல் அடையலாம் முத்தையன்.

    கேஜிஜி சார் வரைந்த படங்கள் நன்றாக இருக்கின்றன.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவை நான் வரைந்த படங்கள் அல்ல - பொருத்தமான படங்களை இணையத்தின் சில குறிப்பிட்ட தளங்களிலிருந்து இறக்குமதி செய்து அவற்றுக்கு சில ஒப்பனைகள் மட்டும் ஆங்காங்கே செய்து போட்டவை. நான் வரைந்த படங்களில் மட்டுமே என்னுடைய இனிஷியல்ஸ் - kgg - என்று போடுவேன். அப்படி இனிஷியல்ஸ் போடவில்லை என்றால் அவை நான் இறக்குமதி செய்து அலங்காரம் செய்த படங்கள் என்று தெரிந்துகொள்ளவும்.

      நீக்கு
  15. அன்றாட நிகழ்வுகள் அருமையான கதையாக வந்துள்ளது . வாழ்த்துகள்.

    படங்களும் அழகு கூட்டுகின்றன.

    பதிலளிநீக்கு
  16. நல்லபடியாக வீடு திரும்பி விட்டோம்..

    ஓம் வேங்கடேசாய நம:

    பதிலளிநீக்கு
  17. மிக யதார்த்தமான நடை.

    ஒன்றில் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இழுத்து ஏமாற்றும் தந்திரம், அதற்கான வியாக்யானங்கள் சொல்லும் மனம்.

    இன்னொரு பக்கம், ஒன்றும் இல்லாதபோதும் நேர்மையை ஏந்தி நிற்கும் சிறுவர்கள்.

    முத்தையன், மரகதம், வாடிக்கையாளர்களின் எண்ணவோட்டத்தை மிக நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

    மிகவும் பிடித்திருந்தது.

    பதிலளிநீக்கு
  18. இங்கும் பல கடைகளில் பொருளைத் தொட்டுவிட்டு, வாங்கவில்லை என்றால் சண்டைக்கு வருவார்கள் என்பது எனக்குத் தெரியும். அதனால் விலை கேட்கும்போது பொருளைத் தொடவே மாட்டேன்.

    ஒரு முறை கோபமாகப் பேசினால் அந்தக் கடை பக்கமே நான் செல்லமாட்டேன்.

    ஆனாலும் அறம் உள்ள பல வியாபாரிகளை (சாதாரண நிலையில் இருக்கும் மார்க்கெட் வியாபாரிகள்) நான் கண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  19. கௌதமன் சாருக்கு வயதாக ஆக. இளமை திரும்புதுன்னு நினைக்கிறேன். முழுக் கதையிலும் பெண்ணைப் பற்றி ஒரு வார்த்தைதான் வந்திருக்கு. அந்தப் பெண்ணின் ஓவியத்தைப் போட்டிருக்கிறாரே. முத்தையன், மரகதம்மாள், ஏன்.. காந்கறி விற்பவர் என்று யாருமே அவர் மைன்டில் புகவில்லை போலிருக்கு. சரியான அர்ஜுன்ன் இவர்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!