================================================================================================================
ஒருவரால் தேவையில்லை என தூக்கி வீசப்படும் பழைய பொருட்களானது, மற்றொருவருக்கு சிறந்த பரிசாக மாற முடியும் என்பதை நிரூபித்து வரும் இரு நண்பர்கள் பற்றிய கதை இது.. நன்றி JKC ஸார்..
========================================================================================================
Thank you JKC Sir..
===================================================================================================================================================
நான் படிச்ச கதை (JKC)
வீடும் கதவும்
கதையாசிரியர்:
இமையம்
பகுதி
இரண்டு
முதற்பகுதியின் சுட்டி =====>இங்கே<=====
கதை இதுவரை.
சகுந்தலா,
ரேவதி இருவரும் பள்ளி, கல்லூரி தோழிகள். படிப்பு
முடிந்து வெவ்வேறு திசையில் பறந்து சென்றவர் பல ஆண்டுகளுக்குப் பின் சந்திக்கின்றனர்.
சகுந்தலா
ஊராட்சி ப்ரெசிடெண்ட். ரேவதி பள்ளி ஆசிரியை.
சகுந்தலா
தன்னுடைய மகளின் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க ரேவதியின் வீட்டிற்கு வருகிறார். கணவர், பிள்ளைகள் என்று யாரும்
வீட்டில் இல்லாத நேரத்தில் அவர்கள் மீண்டும்
கல்லூரி காலத்திற்கு திரும்புகின்றனர். சுதந்திரமாக உரையாடும் போது அவர் அவருடைய கணவர்களின் ஆளுமையைப் பற்றியும் உரையாடல் திசை திரும்புகிறது.
சகுந்தலாவின்
கணவர் ஒரு அரசியல்வாதி. மனைவியின் பெயரை முன் நிறுத்தி அரசியலில் புகுந்து புகழ், அதிகாரம்,
செல்வம், எல்லாம் சம்பாதித்து குடிப்பழக்கத்தையும்
தொடர்கிறார். எல்லோருடைய எல்லா செயல்களையும் அவரே தீர்மானித்து முடிவு செய்கிறார்.
மற்றவர்கள் அவர் கூறுவதைத்தான் செய்ய வேண்டும், கடைபிடிக்க வேண்டும்.
சகுந்தலாவின்
கணவர், சகுந்தலாவை ப்ரெசிடெண்ட் என்ற பெயர் பலகையாக மட்டுமே வைத்திருக்கிறார் என்ற உண்மையை ரேவதியிடம் சகுந்தலா
அறியாது கூறிவிடுகிறார். அப்போது ரேவதியும் அவருடைய கணவரின் அடக்குமுறையைப் பற்றி கூற
முதலில் தயங்கினாலும் பின்னர் கட்டுப்படுத்த முடியாமல் கூறி விடுகிறார். அந்தக் கதை
இந்த இரண்டாம் பகுதியில் இடம் பெறுகிறது.
வீடும் கதவும்
பகுதி இரண்டு
ரேவதி பால் குண்டானை எடுத்து அடுப்பில்
வைத்தாள். ஃப்ரிட்ஜில் இருந்த பாலை எடுத்து ஊற்றிக் கொதிக்கவைத்தாள். கொதித்துக்கொண்டிருந்த
பாலின் மீது டீத்தூளைக் கொஞ்சம் போட்டாள். பொங்கிவிடாமல் இருக்க அடுப்பைக் குறைத்துவைத்தாள்.
சகுந்தலா ரேவதிக்குப் பக்கத்தில் வந்து
நின்றுகொண்டு, “உங்க சார் எப்படி இருக்கார்… எப்ப வருவார்?’’ எனக் கேட்டாள்.
“நல்லா இருக்கார்’’ என அழுத்தம் திருத்தமாகச்
சொன்னாள்.
“எதுக்கு இழுத்தாப்ல சொல்றே?’’
இரண்டு டம்ளர்களில் டீயை ஊற்றினாள்.
ஒரு டம்ளரை எடுத்து சகுந்தலாவிடம் கொடுத்தாள்.
“மத்தவங்க டீ போட்டு தந்து, அதை வாங்கிக்
குடிக்கிறப்ப இருக்கிற சுகமே தனிதான்’’ எனச் சொல்லிவிட்டு டீயை ஒரு வாய் குடித்தாள்.
பிறகு சிரித்துக்கொண்டே, “உனக்கு ஒண்ணும் சர்க்கரை வியாதி இல்லையே?’’ எனக் கேட்டாள்.
“இருக்கு… நீ வந்ததால சர்க்கரையைக் குறைச்சிப்போட
மறந்துட்டேன்.’’
“அதானே பார்த்தேன். வாத்தியார், பேராசிரியர்களுக்கு
எல்லாம் சர்க்கரை வியாதி இல்லாம இருக்காதே” – சகுந்தலா சிரித்தாள்.
அமைதியாக இருந்த ரேவதியைப் பார்த்த சகுந்தலா,
கேலியாகச் சொன்னாள், “நம்ம ரூம்மேட்லயே நீதான் அழுத்தம் பிடிச்சவ. எதையும் வெளியே சொல்ல
மாட்டே. என்னை மாதிரி ஓட்டைவாயும் இல்லை. `நீ பெரிய திருடி’னு நம்பகூடப் படிச்ச எல்லாருக்குமே
தெரியும்’’ – கலகலவெனச் சிரித்தாள். ரேவதியும் சிரித்தாள். ஆனால், சத்தம் வெளியே வரவில்லை.
பிறகு, “வா… ஹாலுக்குப் போவோம்’’ எனச்
சொல்லிவிட்டு, ஹாலுக்கு வந்து முன்பு போலவே சோபாவில் உட்கார்ந்துகொண்டாள். பின்னாலேயே
வந்த சகுந்தலாவும் முன்பு போலவே உட்கார்ந்துகொண்டு டீயை ரசித்துக் குடிக்க ஆரம்பித்தாள்.
“என்ன திடீர்னு டல்லாயிட்ட?’’
ரேவதி வாயைத் திறக்கவில்லை. டம்ளரில்
இருந்த டீயையே பார்த்தாள். பிறகு, ஓடிக் கொண்டிருந்த தொலைக்காட்சியைப் பார்த்தாள்.
சுவரில் மாட்டியிருந்த சபாநடேசனுடைய போட்டோவைப் பார்த்தாள். திரும்பவும் டீ டம்ளரைப்
பார்த்தாள். சகுந்தலாவை மட்டும் பார்க்கவில்லை.
சந்தேகப்பட்ட சகுந்தலா கேட்டாள், “என்னாச்சு?’’
ரேவதி, சிறிது நேரம் எதுவும் பேசவில்லை;
ஒரு வாய் டீ குடித்தாள்; அங்கும் இங்குமாகப் பார்த்தாள். அதனால் மிகவும் முக்கியமான
கேள்வியைக் கேட்பது மாதிரி சகுந்தலா கேட்டாள்…
“நீ சந்தோஷமா இருக்கியாடி?’’
“இல்லாம என்ன?’’ – மொட்டையாகப் பதில்
சொன்னாள் ரேவதி. பெரிதாக மூச்சுவிட்டாள். நிதானமான குரலில் சொன்னாள்…
“நான் முதன்முதல்ல வேலைக்குப் போனப்ப,
எல்லாம் சேர்த்து 910 ரூபாய்தான் சம்பளம். இப்ப, 64 ஆயிரம். சம்பளம் கூடியிருக்கு.
வீடு மூணு மாடி ஆகியிருக்கு. வீட்டுல பொருட்கள் எல்லாம் கூடியிருக்கு. ரெண்டு ஏ.சி
இருக்கு. கார் இருக்கு. பேங்க்ல பணம் இருக்கு. ரெண்டு பிள்ளைகளும் வேலைக்குப் போயிருச்சுங்க.
லாக்கர்ல நகைகள் இருக்கு. வீட்டுவாசல்ல வெளிநாட்டு நாய் கட்டியிருக்கு. அதுக்கு மட்டும்
ஒரு நாளைக்கு 200 ரூபாய் செலவு ஆகுது. எல்லாம் இருக்கு. காலேஜ்ல நீயும் நானும் சிரிச்சோமே
அந்தச் சிரிப்பு மட்டும் இல்லை’’ – பேச்சை நிறுத்திவிட்டு, ஒரு வாய் டீ குடித்தாள்.
என்ன தோன்றியதோ பாதி டம்ளரில் டீ இருக்கும்போதே, குடிக்கப் பிடிக்காதவள் மாதிரி டம்ளரை
தரையில் வைத்தாள். சகுந்தலாவின் கையை எடுத்து, மடியில் வைத்துக்கொண்டு உடைந்துபோன குரலில்
சொன்னாள்.
“பணம், நகை, கார், வீடு, புருஷன், புள்ளைங்க…
எல்லாம் இருக்கு. ஆனா, சந்தோஷம் மட்டும் இல்லை’’ – ரேவதியின் கண்களில் நீர் திரண்டு
நின்றதைப் பார்த்துப் பதறிப்போன சகுந்தலா, “என்னடி சொல்றே… எதுக்கு கண்ணு கலங்குது?’’
எனக் கேட்டாள்.
சகுந்தலா கேட்டது, தன்னையே பார்ப்பது
என எதையும் கவனிக்காத ரேவதி, ரொம்பவும் தாழ்வான குரலில் சொன்னாள், “நம்ம படிக்கிறப்ப
எங்க அப்பா மாசத்துக்கு
25 ரூபாதான் மணியார்டர் அனுப்புவார். உனக்குத் தெரியும். அந்தப் பணத்தை வாங்குறப்ப
மனசுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கும் தெரியுமா? மனசு நிறைஞ்சிருக்கும். ஆனா,
64 ஆயிரம் ரூபாய் வாங்கிறப்ப அது இல்லை’’ – ரேவதியின் கண்களில் மீண்டும் நீர் வழிந்தது.
சகுந்தலாவைப் பார்க்காமல் தனக்குத்தானே சொல்லிக்கொள்வது மாதிரி சொன்னாள்…
“அப்பா அம்மாகூட புள்ளையா இருக்கோம்
பாரு… அதோடு முடிஞ்சுபோகுது சந்தோஷம்… சிரிப்பு… வாழ்க்கை… எல்லாம்.’’
ரேவதியின் பேச்சும் அழுகையும், சகுந்தலாவை
ஆச்சர்யப்பட வைத்தன. பொதுவாக அதிகம் பேசக்கூடிய ஆள் அல்ல. அதிகம் சிரிக்க மாட்டாள்.
சத்தம்போட்டுக்கூடப் பேச மாட்டாள். பத்து வார்த்தைகள் பேசினால் ஒரு வார்த்தைதான் பேசுவாள்.
அவளா அழுகிறாள், அவளா கூடுதலாகப் பேசுகிறாள் என ஆச்சர்யப் பட்ட சகுந்தலா, மேலும் நெருக்கமாக
நகர்ந்து உட்கார்ந்து, ரேவதியின் கைகளை எடுத்து தன் மடியில் வைத்துக்கொண்டு கேட்டாள்…
“என்னடி ஆச்சு… உனக்கு?’’
“காலையில எங்க அம்மா வந்துட்டுப் போச்சு.
கவர்மென்ட் ஆஸ்பத்திரியில சுகர் மாத்திரை வாங்க வந்துச்சாம்’’ – சிறிது நேரம் பேசாமல்
இருந்துவிட்டுச் சொன்னாள்… “எங்க அம்மா சுகர் பேஷன்ட் தெரியுமா? நான் 64 ஆயிரம் ரூபாய்
சம்பளம் வாங்குறேன். எங்க அம்மா கவர்மென்ட் ஆஸ்பத்திரியில இலவச மாத்திரைக்கு வரிசையில
பொழுது முழுக்க நிக்குது…’’ – ரேவதியின் கண்களில் நீர் நிறைந்துவிட்டது.
“நீ வாங்கித் தரவேண்டியதுதானே?’’
“பணம்?’’
“என்னடி சொல்றே?’’
“உண்மையைத்தான் சொல்றேன். எங்கிட்ட ஏது
பணம்?’’ – கண்ணீரை மறைப்பதற்காக தொலைக்காட்சியைப் பார்த்தாள். புதிதாகப் பார்ப்பது
மாதிரி ஷோகேஸில் உள்ள பொருட்களைப் பார்த்தாள். வீட்டில் உள்ள மற்ற பொருட்களையும் ஒவ்வொன்றாகப்
பார்த்தாள். ஒவ்வொரு பொருளையும் பார்க்கப் பார்க்கத்தான் அவளுக்குக் கண்ணீர் கூடுதலாக
வந்தது.
“சம்பளப் பணத்தை என்ன செய்யுற?’’
“ஏ.டி.எம் கார்டு அவர்கிட்டதான் இருக்கு.’’
“நீ பணத்தை எடுத்துத் தரவேண்டியதுதானே?’’
“தபால்ல ஏ.டி.எம் கார்டு வந்த அன்னிக்குப்
பார்த்ததுதான். இந்தப் பத்து வருஷத்துல அதை எடுத்துக்கிட்டுப் போயி நான் ஒரு நாளும்
பணம் எடுத்தது இல்லை. பின்நம்பர்கூட எனக்குத் தெரியாது’’ – முகத்தைத் தாழ்த்திக்கொண்டாள்.
முந்தானையால் கண்களைத் துடைத்தாள். சிறிது
நேரம் எதுவும் பேசவில்லை. ரேவதியின் பேச்சு, சகுந்தலாவை அமைதியாக்கிவிட்டது. என்ன பேசுவது
எனத் தெரியாமல் உட்கார்ந்திருந்தாள்.
கையில் போட்டிருந்த வளையல்களை மேலேயும்
கீழேயும் நகர்த்திவிட்டபடியே ரேவதி சொன்னாள், “ஏ.டி.எம் கார்டு வந்த இந்தப் பத்து வருஷத்துல
என் சம்பளப் பணத்தை நான் மொத்தமா ஒருமுறைகூட கண்ணால கண்டது இல்லை. ஸ்கூல்ல சம்பளம்
வாங்குறப்ப இருந்த சந்தோஷம் இப்ப இல்லை. சம்பளம் வாங்குற அன்னிக்கி மத்தியானம் சாப்பிட்டதுமே
சாப்பாட்டு டப்பாவை, கேரியரைக் கழுவி வெயில்ல காயவெச்சிருவோம். சம்பளத்தை வாங்கி மூணு
முறை எண்ணுவேன். அப்புறம் ஹேண்ட் பேக்குல வெச்சா திருடன் அடிச்சிட்டுப்போயிடுவான்னு
சாப்பாட்டு டப்பாவுல, கேரியருல வெச்சு எடுத்தாருவேன். ஸ்கூல்ல இருந்து வீடு வரைக்கும்
சாப்பாட்டுக் கூடை நினைப்பாவே இருக்கும். இப்ப எதுவும் இல்லை. அப்ப லோன் போட்டா அஞ்சு
ஆயிரம் ஆறாயிரம்தான் வரும். அதை ஒரு கோடி ரூபாயைத் தூக்கிட்டு வர்ற மாதிரி வருவேன்.
எல்லா டீச்சர்ஸும் அப்படித்தான் செய்வாங்க. இப்ப எதுக்குப் பணம்னு ஆகிப்போச்சு.
910 ரூபாய் கொடுத்த சந்தோஷத்தை 64 ஆயிரம்
கொடுக்கலை’’ – ரேவதியின் கண்கள் கலங்கின.
“காரணம் இல்லாம எதுக்கு நீ அழுவுற?’’
– ரேவதியின் தோளில் தட்டினாள் சகுந்தலா.
“சம்பளத்துல ஒரு எட்டணா மாத்தி சொல்ல
முடியாது தெரியுமா? சம்பளம், அக்கவுன்ட்ல ஏறின மறுநிமிஷமே மெசேஜ் வந்துரும். அதுவும்
அவருக்குத்தான் வரும்.’’
“உன் செல் நம்பர் என்னாச்சு?’’
“முதல்ல அவர்தான் செல்போன் வாங்கினார்.
அப்புறம் நாலைஞ்சு வருஷம் கழிச்சுத்தான் எனக்கு வாங்கினேன். அதனால அவர் நம்பரை பேங்க்ல
கொடுத்தாச்சு.’’
தொலைக்காட்சியைப் பார்த்தாள் ரேவதி.
பிறகு, ஹாலை ஒரு பார்வை பார்த்தாள். சுவரில் சிரித்தபடி தொங்கிக்கொண்டிருந்த சபாநடேசன்
போட்டோவைப் பார்த்தாள். அடுத்து மகனுடைய மகளுடைய போட்டோக்களைப் பார்த்தாள். போட்டோக்களில்
எல்லாரும் நன்றாகச் சிரித்துக்கொண்டிருந்தார்கள். ரேவதி, சகுந்தலாவை மட்டும் பார்க்கவில்லை.
அப்போது சோர்ந்துபோய் சகுந்தலா சொன்னாள்,
“நம்ப ரூம்மேட் நாலு பேர்ல நீ ஒருத்திதான் டீச்சராப்போய் வசதியா, சந்தோஷமா இருக்கேன்னு
நினைச்சேன்.’’
“தினமும் இருபது ரூபாய் பஸ்ஸுக்குனு
டேபிள் மேல வெச்சிடுவார். அதுவும் சில்லறையா.’’
“நீ கூடுதலா கேட்கவேண்டியதுதானே… உனக்குத்
துப்பு இல்லை?’’
“ `டீ குடிக்க, காபி குடிக்க காசு தாங்க’னா?’’
– ரேவதி கேட்டவிதம், அவள் ரொம்பவும் கோபமாக இருக்கிறாள் என்பதைக் காட்டியது. சிறிது
நேரம் பேசாமல் இருந்துவிட்டு சகுந்தலா கேட்காமலேயே சொன்னாள், “முன்னெல்லாம் ஸ்கூலுக்கு,
புடவைக் காரங்க சம்பளம் வாங்குற அன்னிக்கு வருவாங்க. இருநூறு ரூபா புடவையை முந்நூறு
ரூபானு சொல்வோம். ரெண்டு மூணு புடவை எடுத்தா இருநூறு முந்நூறு ரூபா ரகசியமா கிடைக்கும்.
அதைத்தான் டீச்சர்ஸ் அப்பா அம்மாவுக்குக் கொடுப்பாங்க. இல்லைனா தம்பி, தங்கச்சிக்குக்
கொடுப்பாங்க. நானும் அப்படிச் செஞ்சிருக்கேன். எனக்குனு எடுக்கிற புடவையை என் அம்மாவுக்கு,
தம்பி பொண்டாட்டிக்குக் கொடுத் திருக்கேன். இப்ப அந்த மாதிரி எல்லாம் செய்ய முடியாது.
மளிகைக்கடை, துணிக்கடைனு எல்லாத்துலயும் கம்ப்யூட்டர் பில் வந்திருச்சு. காபிக்குக்கூட
கம்ப்யூட்டர் ‘பில்’தான். ஒரு ரூபா மாத்தி சொல்ல முடியாது. `பில் எங்கே?’னு கேட்பார்.’’
“நீ பணம் கேட்டா, உங்க சார் கொடுக்க
மாட்டாரா?’’
“ `டீ குடிக்க, காபி குடிக்க, தலைவலி
மாத்திரை வாங்க காசு கொடுங்க’னு நான் கேட்கணுமா? நான் கேட்க மாட்டேன்’’ – வீம்பாகச்
சொன்னாள் ரேவதி.
“அவர் வாத்தியார்தானே? மனுஷங்களைப் புரிஞ்சிக்க
வேணாம்? அப்புறம் என்ன வாத்தியார்?’’ – கோபமாகக் கேட்டாள்.
“நீ எதுக்கு சாதாரண விஷயத்துக்கு எல்லாம்
அழுவுற… `பணம் கொடுங்க’னு நீ கேட்டு, அவர் `தர முடியாது’னு சொன்னாரா?’’ – சகுந்தலா
அதிகாரமாகக் கேட்டாள்.
“இல்லை… எவ்வளவு கேட்டாலும் எண்ணி டேபிள்
மேல வெச்சிடுவார்.’’
“அப்புறம் என்ன?’’
“நீயே எடுத்துக்கனு சொல்ல மாட்டார்.
எண்ணாம வைக்க மாட்டார். அதுதான் சிக்கல்’’ – ரேவதியின் கண்களில் நீர் நிறைந்துவிட்டது.
“நீ ஏன் அவர்கிட்ட கேக்குற… நீயே எடுத்துக்க
வேண்டியதுதானே? அப்பா – அம்மாவுக்குக் கொடுக்கிறதுக்கு இல்லாத பணம், வேற எதுக்கு இருக்கு?’’
“உனக்குப் புரியலை சகுந்தலா. அது ஒரு
ஃபீலிங். சில விஷயங்களைப் பேசாம, நினைக்காம இருக்கிறதுதான் மனசுக்கு நல்லது. மீறி நினைச்சா
என்னென்ன பூதம் எல்லாம் வருமோ. நீ என் ஃப்ரெண்ட். உங்கிட்ட உண்மையைச் சொல்லாம, வேற
யார்கிட்ட சொல்லப் போறேன்… என் பணம்தான். ஆனா, நான் செலவுசெய்ய முடியாது. இந்த வீடு
என் பேர்லதான் இருக்கு. மூணு பிளாட்டும் என் பேர்லதான் இருக்கு. பேங்க்ல லோனும் என்
பேர்லதான் இருக்கு” எனச் சொன்ன ரேவதி, சிறிது நேரம் பேசாமல் இருந்தாள். பிறகு, நிதானமாகச்
சொன்னாள்.
“ஊர்க்காரங்க, சொந்தக்காரங்க, தெரிஞ்சவங்க,
வேண்டினவங்கனு யாராச்சும் வீட்டுக்கு வந்துட்டுப் போகும்போது, ‘இந்தா… இதை பஸ்ஸுக்கு
வெச்சுக்கங்க’னு பத்து ரூபா என் இஷ்டத்துக்குக் கொடுத்தது இல்லை. அவர்கிட்ட சொல்லித்தான்
கொடுக்கணும். அப்படி சொல்லும்போது எல்லாம் எவ்வளவு அசிங்கமா இருக்கும் தெரியுமா? ஊர்ல
என் தம்பி மூணு பிள்ளைங்களை வெச்சுக்கிட்டுக் கஷ்டப்படுறான். அவன் பிள்ளைங்களுக்கு
பொங்கல், தீபாவளிக்குக்கூட ஒரு துணி எடுத்துத் தர முடியலை. நூறு இருநூறு மறைச்சுக்
கொடுக்கலாம். அது அசிங்கம். என் பணத்தை நானே திருடணுமா? வெக்கமா இருக்குடி.’’
“நீ பேசுறது புதுசா இருக்கு’’ – லேசாகச்
சிரித்தாள் சகுந்தலா.
“எங்க தாத்தா காலத்தில் இருந்து, எங்க
அப்பா காலத்தில் இருந்து, என் தம்பி காலம் வரைக்கும் எங்க வீட்டுல வேலைசெஞ்சவர் போனவாரம்
செத்துப் போயிட்டார். `இருநூறு ரூபாய்க்கு மாலை வாங்குங்க’னு சொன்னேன். அம்பது ரூபாய்க்கு
மாலை வாங்கிப் போட்டார். அன்னிக்குப் பூராவும் நான் சாப்பிடவே இல்லை. அவர் செத்தது
ஒரு கஷ்டம். இருநூறு ரூபாய்க்கு மாலை வாங்கி என் இஷ்டத்துக்குப் போட முடியலையேனு இன்னொரு
கஷ்டம். மனசு ரொம்பப் பாரமாகிருச்சு. சாவு செலவுக்கு வெச்சுக்கனு ஆயிரம் – ரெண்டாயிரம்னு
கொடுக்க முடியலை” – ரேவதியின் கண்களில் நீர் பீறிட்டது.
“சின்ன விஷயத்தை எல்லாம் பெருசு பண்ணாதே.”
“இது என் ஏ.டி.எம் கார்டு. என்கிட்டதான்
இருக்கும்’னு சொல்லி, சம்பளத்தை தானே எடுத்து செலவுசெய்ற ரகம் ஒண்ணு இருக்கு. எங்க
போனாலும் நானும் கூட வருவேன்னு சொல்லி ஜோடி போட்டுக்கிட்டுப் போற ரகம் ஒண்ணு இருக்கு.
ஏ.டி.எம் பின்நம்பர்கூடத் தெரியாத என்னை மாதிரி ஒரு ரகமும் இருக்கு. டீச்சர்ஸ்ல இப்படி
மூணு வகைகள் இருக்கு.’’
“எது அதிகம்?’’
“என் ரகம்தான்’’ – ரேவதி லேசாகச் சிரித்தாள்.
பிறகு, லேசாக உற்சாகம் வந்த மாதிரி சொன்னாள்… “புருஷன் டீச்சரா இல்லாம வேற டிபார்ட்மென்ட்ல
இருக்கிற வீட்டுல பரவாயில்லை. புருஷனும் டீச்சரா இருந்தா கதை முடிஞ்சிரும். ஒரு பைசா
மாத்தி சொல்ல முடியாது’’ – முன்பைவிட இப்போது ரேவதி கூடுதலாகச் சிரித்தாள்.
“வீட்டுக்கு வீடு பிரச்னை தான்.’’
“அது இல்லைடி சகுந்தலா, ஒரு கடைக்குப்
போறோம், நம்ம கையால நாலு காசு செலவு செய்யணும்னு ஒரு ஆசை இருக்காதா? நான் செலவுசெஞ்சாலும்
இந்த வீட்டுக்குத்தானே செலவுசெய்யப்போறேன்… என்ன வாழ்க்கை?’’ – உடைந்துபோன குரலில்
சொன்னாள்.
“மாசம் 64 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற
உனக்கே இந்த நிலைமைனா என்னைப் பத்தி என்ன சொல்றது?’’- சகுந்தலா சிரித்தாள். பிறகு,
“எங்க வீட்டுக்குப் பணம் எப்படி வருது, எப்படி போகுதுனு எனக்குத் தெரியாது. கேட்டா,
‘உங்க அப்பன் வீட்டுல இருந்து கொண்டாந்தியா?’னு கேட்பார். அதனால நான் வாயைத் திறக்கிறது
இல்லை. மீறி வாயைத் திறந்தா `பிரசிடென்டுங்கிற திமிர்ல பேசுறியா?’னு கேட்பார்’’ எனச்
சொல்லும்போது அவளுடைய செல்போன் ஒலித்தது.
“அவர்தான் கூப்பிடுவார்’’ – ரேவதியிடம்
சொல்லிவிட்டு போனை எடுத்து “ஹலோ’’ எனச் சொன்னாள்.
“இன்னும் கால் மணி நேரத்துல பஸ் ஸ்டாண்டுக்கு
வரணுமா… ரெண்டு பேரும் சேர்ந்து போயிடலாமா? சரி, நான் வந்துடுறேன். வெச்சுருங்க’’
– போனை வைத்தாள்.
“சரி… நான் கிளம்பட்டுமா?’’
“என்ன அவசரம்? ரொம்ப நாள் கழிச்சு இன்னிக்குத்தான்
வந்திருக்க. இப்பத்தானே பேச ஆரம்பிச்சோம். இன்னும் ஒண்ணுமே பேசலை.’’
“அவர் பஸ் ஸ்டாண்டுக்கு கால் மணி நேரத்துல
வந்துருவார். இப்ப போனா ரெண்டு பேரும் வண்டியிலேயே போயிருவோம். இல்லைனா நான் டவுன்
பஸ் பிடிச்சுப் போறதுக்குள்ள நேரமாகிடும்; திட்டுவார்.”
“திரும்ப எப்ப வருவ?’’
“நீ போன் பேசு. வர்றேன். கல்யாணத்துக்கு
மறக்காம வந்துடு.’’
“வராம எப்படி இருப்பேன்? நீ சீக்கிரம்
போறியேனுதான் வருத்தமா இருக்கு. சாப்பிடக்கூட ஒண்ணும் கொடுக்கலை.’’
“உங்கிட்ட பேசிக்கிட்டிருந்ததே எனக்குப்
போதும். உன் பையன் ரமேஷுக்குக் கல்யாணம் முடிக்கலையா?”
“அவன் ஏதோ கூட வேலைசெய்யுற புள்ளையை
லவ் பண்றான்னு நினைக்கிறேன். அந்தப் பொண்ணு வேற சாதிபோல. இவர் `முடியாது’னு சொல்லிட்டார்.
`படிச்சிட்டா, வேலைக்குப் போயிட்டா எல்லாரும் பெரிய சாதியா ஆகிட முடியுமா?’னு கேட்கிறார்.
என்னத்தைச் சொல்ல? ரெண்டு வருஷமா இழுத்துக்கிட்டுக் கிடக்கு. இப்ப பொண்ணு வேற மெட்ராஸுக்குப்
போயிருக்கா. என்ன நடக்கப்போகுதோ?’’
“ஒண்ணும் நடக்காது. கவலப்படாம இரு.”
“மனசுல உள்ளதைப் பேசக்கூட எனக்கு ஆள்
இல்லைடி’’ – ரேவதியின் கண்கள் கலங்கின.
“சாதாரண விஷயத்தைப் பெருசு பண்ணாம இரு.
ஒவ்வொரு வீட்டுக்கும் வாசலும் இருக்கு; கதவும் இருக்கு. நீ வீடா இருக்க… உங்க சார்
கதவா இருக்கார். உலகம் பூரா அப்படித்தான். சரி, நான் கிளம்புறேன்’’ எனச் சொல்லிவிட்டு
பையை எடுத்துக்கொண்டு வெளியே வரும்போது, வாசலில் கட்டியிருந்த வெளிநாட்டு நாய் எழுந்து
நின்றுகொண்டு சகுந்தலாவையே முறைத்துப் பார்த்தது!
-அம்ருதா – பிப்ரவரி 2016
என்னுரை.
கதை இயல்பான ஒன்றாக உள்ளது என்றாலும்
சில குறைகளை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. சகுந்தலாவின் கையொப்பம் போலும்
அவருடைய கணவர் தான் போடுவார் என்பது சரி என்று தோன்றவில்லை, அதுவும் KYC என்ற பெயரில்
பல இடங்களிலும் நேரில் செல்ல வேண்டிய நிலை உள்ளபோது. அதே போல் எதிர்பாராத செலவுகளுக்காக
வீட்டில் சிறிது பணம் ரேவதியின் கைவசம் இருப்பு வைக்கவில்லை என்பதையும் நம்ப முடியவில்லை.
.
இக்கதையின் ஆசிரியர் சில திரைப்பட உத்திகளையும்
கதையில் புகுத்தியுள்ளார். திரைப்படங்களில் குறிப்பால் உணர்த்துவது இயக்குனரின் சாமர்த்தியம்.
உதாரணமாக உயிர் பிரிவதை விளக்குச் சுடர் அணைவது
போல் காட்டுவது என்பது. கதையில் அத்தகைய உருவகங்கள்/குறிப்புணர்த்தல்கள் சில.
ரேவதியின் வீட்டில் வெளிநாட்டு நாய்
சகுந்தலாவை விரோதமாக முறைத்து பார்ப்பது. வீட்டிற்கும், ரேவதிக்கும் ஒரு பாதுகாப்பு,
காவல் இருக்கிறது என்பதை தெரியப்படுத்துகிறது. ரேவதியின் கணவரின் மாரு உருவம். ‘ஏன்
வந்தாய், எதற்கு வந்தாய்’ என்ற கேள்வி அதன் பார்வையில் அடங்கியுள்ளது என்பதே குறிப்பு.
ரேவதி டீ கலக்கும்போது சீனியை அதிகம்
போட்டதும் சந்தோச மிகுதியால் என்பது குறிப்பு.
எஸ்ரா எப்படி இக்கதையை சிறந்த கதைகளில்
ஒன்றாக தேர்ந்தெடுக்கவில்லை என்பது புரியவில்லை. இயல்பான நடை. சரளமான உரையாடல் என்று
சிறப்புகள் கொண்டுள்ளது. துவக்கம், நடு, முடிவு என்ற க நா சு வின் இலக்கணத்திற்கு கட்டுப்
பட்டதாக இருக்கிறது.
சிலர்
சிரிப்பார் சிலர் அழுவார்
சிலர்
அழுவார் சிலர் சிரிப்பார்
……................
சகுந்தலா
சிரித்துக்கொண்டே அழுகின்றார்
ரேவதி
அழுதுகொண்டே சிரிக்கின்றார்.
’செல்லாத பணம்’ நாவலுக்காக 2020 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.
‘இயல்பு வாத இலக்கிய போக்கின் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவர்’ என்று அவருடைய தூய ‘தமிழில்’ ஜெயமோகன் கூறுகிறார்.
குழன்
‘இயல்பு வாத இலக்கிய போக்கின் முதன்மையான படைப்பாளிகளில்
ஒருவர்’ என்று அவருடைய தூய ‘தமிழில்’ ஜெயமோகன் கூறுகிறார்.
மேலும் விவரங்களுக்கு =====>இங்கே தெரிந்து கொள்ளலாம்<=====
======>கதையின் சுட்டி<======
இமையம் என்ற அண்ணாமலை ஆசிரியரைப் பற்றிய குறிப்பு கடைசி பாரா விட்டுப்போய் விட்டது. முடிந்தால் சேர்த்துக் கொள்ளவும்.
பதிலளிநீக்குபழைய செருப்பு மீள் உபயோகம் பற்றிய செய்தி இடம் பெறவில்லை.
//கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவரான இமையம், ஆசிரியர், எழுத்தாளர், திராவிட இயக்கச் சிந்தனையாளர் என பல முகங்களைக் கொண்டவர். அண்ணாமலை என்ற இயற்பெயர் கொண்டவரான இமையத்தின் முதல் படைப்பு 'கோவேறு கழுதைகள்' 1994 ஆண்டு வெளியானது.
’செல்லாத பணம்’ நாவலுக்காக 2020 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.
‘இயல்பு வாத இலக்கிய போக்கின் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவர்’ என்று அவருடைய தூய ‘தமிழில்’ ஜெயமோகன் கூறுகிறார்.//
Jayakumar
சேர்த்து விட்டேன் ஸார். பழைய காலணி பாரிய செய்தியில் 'ஒரு நண்பர்கள் பற்றிய கதை இது என்கிற வரியை க்ளிக் செய்தால் செய்தி இருக்கும் பக்கத்துக்கு செல்லும்.
நீக்குகாலணி பாரிய -- காலணி பற்றிய
நீக்குஒரு நண்பர்கள் -- இரு நண்பர்களும்
(என்று வாசிக்கவும்)
சாந்தி அறக்கட்டளை..... ஏற்கனவே படித்திருந்தாலும் இதுபோன்ற செய்திகள் உற்சாகம் கொள்ள வைக்கின்றன.
பதிலளிநீக்குபோனால் எதுவுமே நம்மோடு வராது. நல்ல காரியம் செய்து உயர்நிலைக்குச் செல்லலாம். அரசாங்கப் பணத்தை எடுத்து மக்களுக்குப் பிச்சையளித்து, அரசாங்கப் பணத்தில் கட்டும் கட்டிடங்களுக்கு தங்கள் குடும்பப் பேரை வைத்து, தனக்கென்று லட்சம் கோடிகளைப் பதுக்கிக்கொள்ளும் ஈனர்களைத்தான் மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுப்பதால் நல்லவர்கள் எவரும் அரசியலுக்கு வருவதில்லை
உயர்ந்த மனிதர்கள்வாழ்க! சேவை தொடரட்டும்.
பதிலளிநீக்குஇமையத்தின் கதைகள்படித்துள்ளேன்.
இது படிக்கவில்லை. மற்றைய கதைகளைவிட வித்தியாசமானது. சிறந்தது என கூறமுடியாதுள்ளது.
யானை - மனதை நெகிழ வைத்த சம்பவம். குட்டியை அரவணைத்துப் படுத்துக் கொண்டிருக்கும் தாய்...அதைச் சொல்ல வார்த்தைகள் இல்லை ரொம்ப ரசித்தேன்.
பதிலளிநீக்குபழைய செருப்பு புதியதாக மாறுவதோடு அதன் மூலம் பலருக்கும் உதவுவதும் ஒரு வித்தியாசமான சிந்தனை மற்றும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. சூப்பர் மாற்றி யோசிக்கும் அந்த இளைஞர்களுக்கு வாழ்த்துகள்!
கீதா
சாந்தி சோஷியல் சர்வீஸ்/அறக்கட்டளைக்கு வெளியில் வசூலிக்காமல் நல்ல காரியங்கள் செய்வது மிகவும் போற்றத்தக்க விஷயம்.
பதிலளிநீக்குகீதா
சகுந்தலாவின் பகுதியை விட, ரேவதியின் பகுதியில் உரையாடல்கள் மற்றும் அழுத்தம் இருப்பதாகப் படுகிறது எனக்கு.
பதிலளிநீக்குஇருவரின் பகுதியிலும் சில உரையாடல்கள் என்னை வெகுவாகப் பாதித்தது. பல பெண்களின் வாழ்க்கை அதாவது என் தலைமுறையினர் அதுக்கு சற்று அடுத்த தலைமுறை வரை இப்படியான பெண்களைப் பார்க்கலாம். சதவிகிதம் கூடுதல் ஆனால் இப்போது அதாவது இவர்களின் குழந்தைகளின் தலைமுறையில் சதவிகிதம் வெகு குறைவு இப்படியான பெண்களைப் பார்ப்பது.
அண்ணா, கேவொய்சி 2002 - 2003 ல் அறிமுகப்படுத்தப்பட்டது என்று நினைக்கிறேன். அது வந்த பிறகும் கூட தில்லுமுல்லுகள் நடக்கத்தானே செய்கின்றன! அப்படி எடுத்துக் கொள்ளலாம் சகுந்தலா கேஸை. அதுவும் அரசியல்வியாதி ஆளு வேற. எதிர்க்கட்சி ஆஅட்சிக்கு வரப்ப மாட்டாம இருந்தா சரி!!!!!! சகுந்தலாவுக்கு அந்த ரிஸ்க் இருக்கு!
ரேவதி விஷயம் - நீங்கள் சொல்லியிருக்கும் குறைபாட்டை கதையின் குறையாக எடுத்துக் கொள்ள முடியவில்லை அண்ணா. ஆசிரியர் ரொம்பச் சரியாகச் சொல்லியிருக்கிறார். எதிர்பாரா செலவுக்குக் கூட பணம் வைக்காமல் கொடுக்காமல் செல்லும் கணவன்௳அர்கள் உண்டு. அதையும் நான் நேரில் கண்டதுண்டு. எங்கள் குடும்பத்திலே உண்டு. இது எங்கள் தலைமுறைப் பெண்களின் கதை. இப்போது கண்டிப்பாக இப்படிப் பார்க்க முடியது. அடுத்த நிமிஷம் டிவோர்ஸ்தான்!
இயல்பான கதை. யதார்த்தமான கதை. ஆனால் என்னவோ ஒரு குறை....நெருக்கமான தோழிகள்னு சொல்லியும் இருவரும் ஒவருக்கொருவர் கஷ்டங்கள் பகிரும் போது அதை உள்வாங்கி ஆறுதல் சொல்லும் வகையில் இல்லை. மாறாக....உன் கஷ்டம் இவ்வளவுதானே ஆனா என் கஷ்டம் பாருன்னு சகுந்தலா சொல்வது....நெருடுகிறது.....தனக்கும் மனைவி, பெண் என்ற மரியாதை இல்லை தன் வீட்டில். அப்படியிருக்க ரேவதி தன் சுயமரியாதை பரிபோவது பற்றிச் சொல்லும் போது அதை ஏன் அவளால் ஏற்க முடியவில்லை. ஏற்க முடியவில்லை எனும் போது அங்கு நெருங்கிய தோழிகள் என்பது அடிவாங்குகிறது.
ஒரு வேளை இது யதார்த்தம் அதாவது இரு பெண்கள் தோழிகளாக இருந்தாலும் இப்படியும் என்பதாலும், என் சிந்தனை இதற்கு அப்பாற்பட்டு இருப்பதாலோ என்னவோ இப்படித் தோன்றியது
கீதா
உரையாடல்கள் மூலம் மட்டுமே கதையை சொல்லியிருக்கிறார் ஆசிரியர். இரண்டு பெண்கள் சந்திக்கும்போது நடக்கும் தகவல் பரிமாற்றம் இயல்பான ஒன்றாக அமைந்திருக்கிறது.
நீக்குஇட ஒதுக்கீடு இருந்தாலும் கூட ஆண்கள் பெண்களை கட்டுப்படுத்துவது என்பதை தவிர்க்கமுடியாது என்று கதை உணர்த்துகிறது. .
Jayakumar
சாந்தி கேண்டீன் போய் இருக்கிறேன். அவர்களின் சேவை பாராட்டபட வேண்டியது.
பதிலளிநீக்குதாயுடன் சேர்ந்த குட்டி யானை நெகிழ்வு.
ஒருவருக்கு வேண்டாம் என்பது இன்னொருவருக்கு தேவையாக இருக்கும் என்பது உண்மை.
ரேவதி டீச்சர் போல ஒரு டீச்சர் எனக்கு இருந்தார், அவர் வாங்கு சம்பளத்தை அப்படியே கணவரிடம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அடி, உதை தான். டீச்சரின் கணவர் கல்லூரி பேராசிரியர்.
பதிலளிநீக்குஇரண்டு பெண்களின் உரையாடல் மூலம் அவர்களின் கணவர் குணம், மனநிலை புரிகிறது. இருவரும் பொறுமையானவர்கள் என்று தெரிகிறது.
இதைத் தான் எபியில் எங்கோ சொல்லியிருந்தேன்.
நீக்குகணவர் சொல்லி மனைவியின் குணம், மன நிலைகளை யாராவது கதை வடிவில் சொல்ல மாட்டார்களா என்றிருக்கிறது.
மனைவியை தனக்காக நியமிக்கபப்ட்டிருக்கும் P A என்னும் அளவிலேயே பெரும்பாலான கணவன்மார்கள் பார்வை இருக்கிறது. அவர்கள் வாழும் காலத்தில் அவர்களின் பெருமையை அவர்களிடம் சொல்லி விட்டால் தலைக்கனம் ஏறிவிடும் என்பது போன்ற மனநிலை. மனைவியின் பிரிவிலேயே அவர்கள் அருமை தெரியும் பல கணவன்மார்களுக்கு.. அப்போது பேசி என்ன பயன்!
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை. அன்பினால் தவித்த தாய் யானையுடன். குட்டி யானையை சென்று சேர்த்தமைக்கு வனத்துறையினருக்கு பாராட்டுக்கள்.
வேண்டாத காலணிகளை புதிதாக மாற்றம் செய்து ஏழைகளுக்கு தரும் திட்டத்தில், உதவுபவர்களை வாழ்த்துவோம்.
இன்றைய கதை பகிர்வும் நன்றாக உள்ளது. சென்ற வார தொடர்சியாகையால் அந்தப் பகுதியை வாசிக்காததால், இரு பகுதிகளையும் வாசித்தேன். கருத்தில் சகோதரி கீதா ரெங்கன் அவர்கள் சொல்வது போல், இன்றைய காலப் பெண்கள் தங்கள் பிரச்சனைகளை தாங்களே வழி நடத்த ஒரளவு சுதாரித்து கொண்டு விட்டனர். ஆனால் அந்தக் காலத்திற்கும், இந்தக் காலத்திற்கும் நடுவிலான சில/ பல பெண்கள் இப்படி விபரமறிந்தும் விபரமில்லாதவர்களாக கணவரின் கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்தார்கள். கதாசிரியர் கதையை நன்றாக எழுதி உள்ளார்.பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வீட்டுக்கு வீடு வாசப்படி.
பதிலளிநீக்குகதையைப் பற்றி கருத்துக்கள் கூறியவர்க்கு நன்றி.
Jayakumar