சனி, 27 ஜனவரி, 2024

ஐ எஃப் எஸ் அதிகாரி சுதா ராமன் மற்றும் 'நான் படிச்ச கதை'

 

18 ஏக்கர் ஓட்டேரி ஏரியை புதுப்பித்து உயிர் கொண்டுத்த பெண் வனத்துறை அதிகாரி! வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள ஓட்டேரி ஏரி முழுவதுமாக வற்றிப் போய் வறண்டிருந்ததைக் கண்டு அதனை சீரமைக்க திட்டமிட்ட இளம் ஐ எஃப் எஸ் அதிகாரி சுதா ராமன் தன் கடின உழைப்பால் ஏரியை புதுப்பித்துள்ளார்.  [ Thank you JKC Sir...]


===========================================================================================



=========================================================================================================================================================================================================================

 

நான் படிச்ச கதை (JKC)

 

முன்னுரை 

சிறுகதைகளின் தொகுப்பான https://www.sirukathaigal.com/  தளத்தில் ஏறக்குறைய 1900 எழுத்தாளர்களுடைய 17000 கதைகள் உள்ளன. முல்லை முத்தையா என்ற முல்லை பதிப்பக உரிமையாளர் அதிகமாக 222 சிறுகதைகள் பங்களித்துள்ளார். அடுத்து இரண்டாமிடத்தில் அன்னூர் கே ஆர் வேலுச்சாமி என்பவரின் 136 கதைகள் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இந்த பெயர் இலக்கிய உலகில் பிரபலமல்லாத பெயராக உள்ளதே என்று ஆராய்ந்தேன். 

சிறுகதைகளின் முக்கிய அம்சம் கதை என்பது தெரியும். கதை உண்மையாக “நடந்த கதை” யாக அல்லது நிஜத்தில் நடக்க முடியாத வெறும் “கற்பனைக் கதை”யாக இருக்கலாம். இவை இரண்டு பாகக்கட்டுப்பாடுகளிலும் உட்படாத மூன்றாம் வகை “இப்படியும் நடக்கலாம்” என்ற கற்பனை அல்லாத கற்பனைக் கதை. 

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற ரீதியில் அன்னூர் வேலுச்சாமியின் இரண்டு  கதைகளை வாசித்தேன். ‘கோபுர கலசம்’ மற்றும் ‘வெள்ளைச்சோளம்.’ கோபுர கலசம் “இப்படியும் நடக்கலாம்” என்ற வகையை சேர்ந்தது. அது இப்பகுதியில் இடம் பெறுகிறது. 

புகழ், மரியாதை என்று வரும்போது அதற்காக உழைத்தவர் புறக்கணிக்கப்பட்டு வேறு ஒருவர் தம் செல்வாக்கால் அவற்றை தட்டிப் பறிப்பதை விளக்கும் கதை  இது. இது எல்லோருக்கும் புரிவதே. ஆனால் அதற்குப்  பிறகும் “இப்படியும் நடக்கலாம்” என்ற முறையில் கதையின் அடுத்த முடிவு புனையப்பட்டுள்ளது. முடிவை ஊகியுங்கள். கதையைப் படித்தபின் சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

 

கோபுர கலசம்!

 கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

 

சுப்பையனுக்கு பெருமாள் சுவாமி மீது அளவற்ற பக்தி சிறுவயதிலிருந்தே இருந்த காரணத்தால் சனிக்கிழமை நாள் முழுவதும் உண்ணாமல் விரதமிருந்து தான் குடியிருக்கும் குடிசை வீட்டிற்கு அருகிலிருக்கும் தோட்டத்தில் உள்ள துளசி இலைகளைப்பறித்து மாலையாகக்கட்டிக் கொண்டு வந்து கோவிலில் உள்ள அர்ச்சகரிடத்தில் கொடுத்து விட்டு மனமுருகி, கண்களில் கண்ணீர் பெருக வணங்கி விட்டு அன்று நாள் முழுவதும் கோவிலைச்சுற்றிலும் உள்ள பகுதியில் நிறைந்து கிடக்கும் குப்பைகளை சுத்தம் செய்து விட்டு இரவு துவங்கிய பின் வீட்டிற்கு செல்வார். 

ஒரு சனிக்கிழமை ஊரின் முக்கியஸ்தர்கள் ஒன்றாகக்கூடி கோவில் கும்பாபிசேகம் நடத்த முடிவு செய்து அதற்கு செலவு செய்ய பக்தர்களிடம் வசூல் செய்வதென முடிவு செய்தனர். அங்கு வந்திருந்தவர்கள் சிலர் பணமும் கொடுத்தனர். சிலர் எவ்வளவு கொடுக்கப் போகிறோம் என்பதையும் சொல்லிக்கொண்டு இருந்தனர்.

மற்றவர்கள் கும்பாபிசேகம் செய்ய பணம் கொடுப்பதை பார்த்துக்கொண்டிருந்த சுப்பையனுக்கும் தானும் ஏதாவது கொடுக்க வேண்டுமென யோசனை வர, கோவில் எவ்வளவு பெரிதாகக் கட்டினாலும் கலசம் எனும் கும்பத்துக்கு தீர்த்த அபிசேகம் செய்வதைத் தானே முதன்மையாகப்பேசுகின்றனர். எனவே அந்த கும்பமெனும் கலசத்தை பெருமாளுக்கு தான் வாங்கி கொடுத்து விட வேண்டுமென முடிவு செய்து சபையில் தன் விருப்பத்தைச் சொன்னபோது அங்கிருந்தவர்கள் கந்தை வேட்டி கட்டியிருந்த ஏழை சுப்பையனை ஏளனமாகப் பார்த்து சிரித்தனர்.

“நீ தெனமும் உன்ற மாட்ட மேய்க்கப்போவியே அந்த தோட்டத்து முதலாளியே அவ்வளவு பணம் கொடுக்க முடியாம பத்து பேர் சேர்ந்து கலசம் செய்யலாம்னு சொல்லறாரு. குடிசைல குடியிருந்துட்டு, ஒரு மாட்ட சொந்தமா வெச்சு மேய்க்கிற உன்னால கொடுக்கவே முடியாது. அப்படிக்கொடுக்கோணும்னா எங்காவது போய் திருடிட்டு வந்து தான் கொடுக்கோணும்” என பேச “நாராயணா…‌” என தனது இரண்டு காதுகளையும் கைகளில் பொத்திக்கொண்டு, கண்ணீர் மல்க “என்ற மாட்ட வித்துக்கொடுத்துப்போடலாம்னு முடிவு பண்ணிப்போட்டனுங்க. உங்களுக்கு நாளைக்கே பணத்தக்கொடுத்துப்போடறேன்” என உறுதி கூறி விட்டு மாட்டு வியாபாரி வீட்டுக்கு சென்றவர் அன்றே பணத்தை கோவில் தர்மகர்த்தாவிடம் கொடுத்தார்.

“நீ எதுக்கு திருடங்கணக்கா வந்து ஊட்ல ஆறுகுட்டையும் சொல்லாம மாட்டப்புடிச்சுட்டு போன? நம்முளுக்குன்னு இருந்த ஒரே சொத்து அந்த மாடு மட்டும் தான். ஒன்ன ரெண்டு நாள்ல கண்ணுப்போட்டிருச்சுன்னா மாடு கறக்கற பால வித்து கூலி வேலைக்கு போகாம பொழைச்சுக்கலாம். ஒன்னி வேல வெட்டிக்குத் தாம் போகோணும். அதுக்கும் வயசான காலத்துல ஒடம்புல தெறனில்ல…” என கண்ணீர் மல்க கண்டபடி திட்டிப்பேசிய மனைவியின் பேச்சையும் பொறுத்துக்கொண்டார்.

அன்று காலை கும்பாபிசேகம் நடைபெறவிருந்த கோவிலுக்கு மனைவியுடன் சென்றார் சுப்பையன். கூட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருந்தது. ‘கோவிந்தா’ எனும் கோசம் விண்ணை முட்டியது. தான் கொடுத்த பணத்தில் வாங்கி கோபுரத்தின் மீது வைத்திருந்த கலசம் தங்க நிறத்தில் மின்னியது கண்டு மகிழ்ச்சியடைந்தார்.

பாதுகாப்புக்கு காவலர்கள் நின்றிருந்தனர். கும்பாபிசேகம் செய்ய ஹோம குண்டத்திலிருந்து கலசதீர்த்தத்தை எடுத்துக்கொண்டு புரோகிதர்கள் கோவில் கோபுரத்துக்கு செல்ல கட்டப்பட்டிருந்த தற்காலிக படிகளில் ஏறினர். சுப்பையனும் ஏற முற்பட்ட போது அங்கே நின்றிருந்த ஒருவர் “கலசம் செய்ய பணம் கொடுத்தவர் மட்டும் தான் ஏறோணும். இதபாரு இவருதான் அவரு” என வெள்ளையும் சொல்லையுமாக நின்றிருந்த ஒருவரைக்காட்ட, அந்த நபர் மட்டும் மேலே ஏற அனுமதித்த காவலர்கள் சுப்பையனை ‘வெளியே போ’ என கழுத்தைப்பிடித்து தள்ளிய போது எழுபது வயதின் உடல் தளர்வினாலும், ‘தான் செய்த கலசத்தை பிறர் செய்ததாகக் கூறுகிறார்களே…?’ எனும் மனச்சோர்வினாலும் கீழே விழுந்து, பின் தள்ளாடி மனைவியின் பிடியால் எழுந்தவர் கண்களில் கண்ணீர் ஆறாக ஓடியது.

கீழிருந்தே கலசத்தின் மீது ஊற்றப்பட்ட தீர்த்தத்தை கைகளில் ஏந்தியவாறு பிடித்து தன்மீதும், மனைவி மீதும் தெளித்து விட்டு பெருமாளை தரிசனம் செய்ய கூட்டம் நிரம்பியிருந்ததாலும், பெரிய மனிதர்கள் மட்டும் கோவிலுக்குள் நிற்பதாலும் வெளியில் நின்ற படி மனதால் நினைத்து வணங்கி அங்கே கொடுத்த அன்னதானத்தைக்கூட வாங்க மனமின்றி வீடு சென்றவருக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது.

மாடு வாங்கிய வியாபாரி மாட்டுடன் நின்றிருந்தார். “செனை மாடு வகுறு இத்தன பெருசா இருந்தத என்ற வேவார அனுபவத்துல பாத்ததில்லை. வகுறு பெருசா வீங்கியிருக்கற மாதர தெரியுதுன்னு சந்தைல ஆறும் வாங்க மாட்டேன்னு சொல்லிப்போட்டாங்க. நீ வேற வேவாரிக்கு வித்து எனக்கு பணத்தக்கொடுத்துப்போடு. இல்லேன்னா நல்லபடியா கன்னு போட்டுச்சின்னா…. சொல்லியனுப்பு” எனக்கூறி கட்டுத்தரையில் மாட்டைக்கட்டிவிட்டுச்சென்று விட்டார் வியாபாரி கண்ணப்பன்.

மாட்டின் வயிறு இயல்புக்கு மாறாக பெரிதாக இருப்பதால் ஏதாவது கட்டியாக இருக்கலாம். மாடு இறக்க நேரலாம் என வியாபாரி கணித்ததால் திரும்பவும் மாடு விற்றவரிடமே விட்டுச்சென்றுள்ளார் என்பது வியாபாரிக்கு மட்டுமே தெரியும்.

“கலசம் வெக்கிறதுக்கு மாட்ட வித்தது தப்புன்னு பெருமாளே நெனைச்சுப் போட்டாரு. வித்த மாடு திரும்பி வந்தது அந்தக்கடவுளோட கட்டளை. கன்னு போடற வரைக்கும் நம்ம கிட்டயே இருக்கட்டும்” என கூறிய சுப்பையன் நம்பிக்கையுடன் இரவு படுத்து உறங்கினார். ஆனால் அவரது மனைவியோ கண் கலங்கியவாறு அடிக்கடி எழுந்து மாட்டை கவனித்தவாறு இருந்த போது மாடு படுத்தவாறு ஒரு கன்றை ஈன்றது.

கணவனை எழுப்பி கவனித்த போது இன்னொரு கன்றும் மாடு ஈன்றதில்‌ சுப்பையன் ஆச்சர்யத்தில் திக்குமுக்காடிப்போனார்.

ஒரே பிரசவத்தில் மாடு இரண்டு கன்றுகளை ஈன்ற செய்தியால் காலையில் குடிசை வீட்டின் முன் ஊரே கூடியிருந்தது. மாட்டை ஏற்கனவே வாங்கியிருந்த வியாபாரி ஒரு செல்வந்தரின் விருப்பத்திற்காக மேலும் இரண்டு மாடுகளை சுப்பையனுக்கு பரிசாகக் கொடுத்து விட்டு முன்பு கொடுத்த பணத்தையும் கேட்காமல் இரண்டு கன்றுகளுடன் மாட்டைப் பிடித்துச் சென்றார். கடவுள் கொடுத்த வரமாக எண்ணிய ஏழை சுப்பையன் வியாபாரி கொடுத்த இரண்டு மாடுகளில் ஒரு மாட்டை தான் வைத்துக்கொண்டு, இன்னொரு மாட்டை பெருமாள் கோவிலுக்கு தானமாக வழங்கினார்.

பின்னுரை.

குறை என்று ஒன்றும் இல்லாமல் கதை இருப்பதில்லை. எனக்கு புலப்பட்ட இரண்டை இங்கு குறிப்பிடுகிறேன்.

1.    வழிபாடு  உள்ள கோயில்களில் கோபுர(விமான)  கலசம் கட்டாயம் இருக்கும். அப்படி உள்ள கோயில்களின் கலசத்தைத்தான் கும்பாபிஷேகத்திற்கு புதுப்பிப்பார்கள். புதிய கோயில்களுக்குத் தான் புதிய கலசம் செய்யப்படும். 

2.    செல்வந்தர் கன்று போட்ட மாட்டை விலை கொடுத்து வாங்கியது அல்லாமல் வேறு இரண்டு மாடுகளையும் தானமாக தந்தது நம்ப முடியாதது.

ஆசிரியர் குறிப்பு:

அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார்.

அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார்.

மனைவி டிப்ளமோ டெக்ஸ்டைல்ஸ் படித்ததால் சொந்தமாக துணிக்கடை வைத்து நடத்துகிறார். மகன் பொறியியல் படித்து விட்டு தற்போது வேலையில் இருக்கிறார்.மகள் மருத்துவப்படிப்பு இறுதியாண்டு படித்து வருகிறார்.

சிறுவயது முதல் எழுத்தார்வம் உள்ளவராகவும்,தினமும் புத்தகம் வாசிப்பவராகவும் இருந்துள்ளார்.

1988 முதல் 1998 வரை  சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், துணுக்குகள், கேள்வி-பதில் என பிரபல வார,மாத இதழ்களில் எழுதி வந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு 2022 முதல் தமது எழுத்துப்பணியை துரிதப்படுத்தி,பல புத்தகங்களை வெளியிட்டு வருகிறார்.

ஜோதிட ஆராய்ச்சி கட்டுரைகளை பல ஜோதிட இதழ்களில் எழுதியதோடு தொலைக்காட்சி,வானொலியில் ராசிபலன்களை வழங்கியவர், தற்போது தனது பெயரிலேயே யூடியூப் சேனல் ஆரம்பித்து ராசிபலன்களை கூறி வருகிறார். தவிர பக்திப் பாடல்களை எழுதி இசையுடன் வெளியிட்டு வருகிறார்.

வெளிவந்துள்ள இவரது நூல்கள்:

நலியும் நவீனம்-சிறுகதைகள்-2022

மனப்புதையல்-தத்துவங்கள்-2022
மூக்கணாங்கயிறு-தத்துவங்கள்-2022

காலப்பிறையகம்-அனுபவ சாஸ்திரம்-2022

அகப்பிரகணம்-தத்துவங்கள்-2022
வீதியில் கிடந்த வீணை-சிறுகதைகள்-2022

அலுவலக முகவரி:

அன்னூர் K.R.வேலுச்சாமி,

3/429- ஸ்ரீ வேலன் காம்ப்ளக்ஸ்,

கிருஷ்ணா கார்டன்,

அல்லிக்காரன்பாளையம்,

NM மருத்துவமனை அருகில்,

கோவை ரோடு,

அன்னூர்-641653,

கோவை மாவட்டம்,

தமிழ்நாடு செல்: 9842236995

மின்னஞ்சல்: srivelanastro@gmail.com

YouTube channel name: Annur KR Velusamy

நன்றி.  

கதையின் சுட்டி ===èகோபுர கலசம்!


21 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திக்கு நன்றி. ஓட்டேரி ஏரியை தன் உழைப்பால் புதுப்பித்த பெண் அதிகாரிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    இன்றைய கதை பகிர்வும் அருமை. இறைவனுக்கு தொண்டு செய்த சுப்பையனுக்கு இறைவன் தந்த பரிசு இரட்டை மாடுகள். அதிலும் ஒரு மாட்டை அவர் கோவிலுக்கு தானமாக தரச் செய்தது அவரின் நல்ல மனதுக்கு துணையாக இருக்கும் இறைவன்தான். கதை நன்றாக உள்ளது இவரின் கதையை இப்போதுதான் படிக்கிறேன். நல்லதொரு கதாசிரியரை அறிமுகப்படுத்திய சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. என்னதிது..?:)) எல்லோரும் எங்கே போய் விட்டீர்கள்? சனிக்கிழமை பிஸியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      நன்றி. வேறு ஒன்றுமில்லை. இன்று இவ்வளவு நேரமாகியும் யாரையும் காணவில்லையே என விஸ்வநாதன் சாரையும் துணைக்கழைத்துக் கொண்டு வந்து விசாரித்தேன். ஹா ஹா ஹா நான்தான் இப்படி நடுவில் திருவிழாவில் காணாமல் போகும் குழந்தை மாதிரி போய் விடுவேன். இன்று இங்கு யாரையும் காணவில்லையே என பரிதவிப்புடன் வந்து உங்களை சிரமபடுத்தி விட்டேன் போலிருக்கிறது தங்களின் உடனடி பதில்களுக்கு நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  4. ஓடையை புனரமைத்த செயல் சிறப்பு. அந்த வனத்துறை அதிகாரிக்கு பாராட்டுக்கள்.

    சிறுகதைகள் தளம் நானும் அவ்வப்போது சென்று பார்க்கும் தளம். கதை நன்றாகவே இருந்தது. அறிமுகத்திற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. சுதா ராமன் அவர்களை வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு

  6. இளம் ஐ எஃப் எஸ் அதிகாரி சுதா ராமன் தன் கடின உழைப்பால் ஏரி

    ஓட்டேரி ஏரி புதுப்பிக்கபட்டது மகிழ்ச்சி. அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள், பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  7. கதை பகிர்வு நன்று.
    வயிறு பெரிதாக இருக்கிறது என்றதும் இரட்டை கன்று என்று நினைத்தேன், அது போல இரண்டு கன்று.

    இறைவனுக்கு செய்த தொண்டுக்கு கிடைத்த பரிசு செல்வந்தர் இரண்டு மாடு தானம் கொடுத்தது என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. வனத்துறை அதிகாரி சுதா அவர்களின் உழைப்பில் ஓட்டேரி ஏரி புதுப்பிக்கப்பட்டது மிக மகிழ்வான விஷயம். வாழ்த்துவோம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. வருகை புரிந்தோர்க்கும் கருத்து கூறியோர்க்கும் நன்றி.
    Jayakumar​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெ கே அண்ணா இப்போதுதான் நான் கதைக்கான கருத்து போட வந்தேன். இன்று தாமதமாகிவிட்டது.

      இந்தக் கதையின் உள்ளர்த்தம் நம்பிக்கை. அதாவது புத்திக்கு அப்பாற்பட்ட கேள்விகள் இல்லாத ஒரு துளிக்கூட சந்தேகம் இல்லாத நம்பிக்கை. நாம் எத்தனைதான் இறைவனை தொழுதாலும் எத்தனை பேருக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கு? ஏதேனும் ஒன்று நடக்காவிட்டால் இறைவனிடம் புலம்புகிறோம்தானே! ஆனால் அவருக்கு இறைவனிடம் பக்தி அதையும் தாண்டிய பக்தி கூட சில சமயம் ஆட்டம்காணும்....ஆனால் இந்த நம்பிக்கை தாமதமாகவேனும் ஒரு நாள் பலிக்கும். எனக்கு இதுதான் தோன்றியது.

      அடுத்தது, அந்த வியாபாரி கொடுத்த பணத்தை வாங்காததும், இரண்டு மாடு கொடுத்ததும் கூட அந்த செல்வந்தருக்காக என்று தோன்றினாலும், அவரும் ஒரு கணக்கு வைத்திருப்பார் என்றும் தோன்றுகிறது.

      தனக்கு வந்த இரண்டில் ஒன்றை இறைவனுக்குத் தானமாகக் கொடுத்ததும் கூட அந்த பற்றற்ற இறை நம்பிக்கைதான்!

      இப்படியும் நடக்கும். ஏன் எத்தனையோ அதிசயங்கள் நாம் நம்ப சிரமமாக உள்ளவை நடக்கலையா அது போல இதுவும். இப்படியும் நடக்கலாம்.

      கீதா







      நீக்கு
  10. ஓட்டேரி புதுப்பிக்கப்பட்டது பாராட்டப்பட வேண்டியது.

    கதை பகிர்வு நன்று. கலச அபிஷேகத்துக்கு சுப்பையனை தடுத்தது படிக்கும் போது சற்று கவலையை வர வைத்தது.

    மாடு திரும்பி வந்து இரு கன்றுகள் போட்டது இறைவன் அருளே. கன்றை கோவிலுக்கு வழங்கியது சுப்பையாவின் நன்மனம்.

    பதிலளிநீக்கு
  11. ஐ எஃப் எஸ் அதிகாரி சுதா ராமன் அவர்களின் செயல் மிகவும் பாராட்டிற்குரியது. சாதாரண விஷயமில்லை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  12. நல்லதொரு கதையை இங்கு பகிர்ந்ததற்கு மிக்க நன்றி ஜெயகுமார் சந்திரசேகரன் சார்.

    இறை பக்தி என்பது இப்படி இருக்கும் போது அந்த பக்தி நன்மை பயக்கும் என்ற ரீதியில் கூட எடுத்துக் கொள்ளலாம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!