வியாழன், 4 ஜனவரி, 2024

இடது கை சமூக நீதி

 வலதுகை கொடுப்பது இடது கைக்கு கூட தெரியக்கூடாது...

அன்னிக்கி கேன்டீன்ல நின்னுக்கிட்டிருந்தேன்.  ஒருத்தர் வந்து நாலு இட்லி பார்சல் கேட்டாரு.  தலையாட்டிய முதலாளி 'ஜி பே'யில் பணம் வந்துடுச்சுன்னு 'கன்ஃபார்ம்' ஆனதும் 'பையன்'கிட்ட எடுத்து கொடுக்கச் சொன்னாரு..  இப்பல்லாம் கைல யாரு காசு கொடுக்கறாங்க...   

அவன் கொடுத்ததும் வாங்கிகிட்டு போக திரும்பினவ கஸ்டமர்  நின்னு மறுபடி திரும்பினாரு...

இட்லிய பையன் கைலயே கொடுத்தாரு...  நொட்டங்கையில தராத..  சோத்தாங்கைல தா ன்னு சொல்லி கைமாத்தி வாங்கிப் போனாரு...

பையன் முதலாளிய பார்த்து முழிச்சான்.  பையன்னா ஸ்கூல் போற வயசுன்னு நெனக்கப் போறீங்க...  அவனுக்கு இருக்கும் 22, 23  வயசு..   தொழிலால பையன்னு கூப்பிடறாங்க 

மொதலாளி பையன திருத்துவாருன்னு பாத்தேன்..  அவரு சொன்னாரு..  "அதுக்குதான் சொல்றது இதையெல்லாம் ஒரு தட்டுல வச்சு நீட்டு..  அவங்க எடுத்துக்குவாங்க" ன்னு.

"மொதலாளி..  அப்பவும், அந்தத் தட்டையும்  சோத்தாங்கைலதான் தரணும்" னு  மறுபடி நின்னு சொல்லிட்டு போனாரு அந்த கஸ்டமர்.  "அதான் மருவாதி..".  ன்னு சொல்லிகிட்டே போயிட்டாரு...

நம்ம உடம்புலேயே இருந்தாலும் இடது கைக்கு அவ்ளோதாங்க மரியாத..  என்னதான் அது அலம்பிக்கற கையா இருந்தாலும் மத்த வேலைகள் அதுல செய்யாமலா இருக்கோம், சொல்லுங்க...  ஒத்த கைய வச்சு என்ன செய்ய முடியும்?  ரெண்டு கையும் சேந்தாதான் சத்தம், மிச்ச வேலை எல்லாமே..

இதுல பாருங்க வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக் கூடாதாம்...  ஒதுக்கி வைக்கறாங்க...  பாவங்க...  என்னங்க நியாயம் இது?!

சமூக நீதி சமூக நீதின்னு எங்கெங்கேயோ போய் குரல் கொடுக்கறோம்..  இதை யாரும் பேசறதில்ல...

வயசுல, அந்தஸ்துல பெரியவங்கள பாக்கச்சொல்ல பீச்சாங்கையால குட்மார்னிங் கூட சொல்லக் கூடாதாம்..  தெரியுமா?  அட...  'ஹாய்'னு கூட சோத்தாங்கைலதான் சொல்லணுமாம்.

நான் வலது கைல வணக்கம் வச்சாலும் எங்க ஆபீசர் என்னவோ இடது கையதான் ஆட்டிட்டு போறாரு..  நான் எப்பவும் அவருக்கு லெஃப்ட்ல நிப்பேன்.  அப்பவும் நியாயமா வலது கைலதான சொல்லணும்?   விடுங்க..  பெரியவங்க செஞ்சா பெருமாள் செஞ்ச மாதிரி...  நாம அங்க சமூக நீதி சாம்பார் நீதில்லாம் பேச முடியாது..

முன்ன நான் ஒரு வெத்தல பாக்கு கடைல ஏதோ ஒரு சாமான் வாங்கச் சொல்ல, இப்படிதான் கடைக்காரரு  சாப்பிட்டிக்கிட்டிருந்தாப்ல..   சரி, லேட்டாவுதுன்னு அடுத்த கடை பாக்கலாம்னு நான் நகரச்சொல்ல, யாவாரத்த விட மனசில்லாத அவரும் எழுந்து வந்துட்டாப்ல..  'ஐயையே..  என்னங்க இது..  சாப்பாட்டுக்கு நடுவுல..ன்னு நான் நிசம்மாவே பதற, அவர் என்ன வேணும்னு கேட்டு, நான் கேட்டத பீச்சாங்கைலதான் எடுத்தாரு..  வலது கை எச்சி இல்ல...  ஆனா கொடுக்கச்சொல்ல சோத்துக்கை முழங்கை படறாமாதிரி வச்சு என் கைல தந்தாரு..  எடுத்தது எந்தக் கையா இருந்தாலும் அவுரு லெஃப்ட்ல கொடுக்கலியாம்...  'ரைட்டா'தான் கொடுக்கறாராம்..  நானும் பெரிசா ஒண்ணும் பதில் சொல்லாம வாங்கிட்டு வந்தேன்னு வச்சுக்கோங்க..  ஆனா அவரு இடது கைலயே கொடுத்திருந்தாலும் நான் ஒண்ணும் நினைச்சிருக்க மாட்டேன்.  ஏன்னா நமக்கு இந்த போலி சமூக நீதியெல்லாம் கிடையாதுங்க...

இதை எதிர்த்து ஒரு கையெழுத்து இயக்கம் நடத்தி அம்பது லச்சம் பேர்கிட்ட  கையெழுத்து வாங்கலாம்னு பார்க்கறேன்.  என்ன சொல்றீங்க?  யார் யார்லாம் ரைட்டுன்னு சொல்றீங்களோ - அதாவது நான் சொல்றதுக்குபா - அவங்கள்லாம் கைய தூக்குங்க...  இடது கைய தூக்கலாம் தப்பில்லே..  நம்ம கொள்கையே அதானே!  ஒரு சங்கம் ஆரம்பிப்போம்.

என் பாஸ் கூட தினசரி எனக்கு காஃபி கொடுக்கச்சொல்ல லெஃப்ட்லதான் தர்றாங்க..  காபியைப் போட்டுக்கிட்டு, அவங்க குடிக்க வாகா வலது கைல அவங்க காஃபியையும், என்கிட்டே நீட்டறதுக்கு வாகா இடது கைல என் காஃபியையும் எடுத்துக்கிட்டு வந்து நீட்டுவாங்க...  நானும் இந்த கேன்டீன் சம்பவம் வந்தவரைக்கும் அதை கவனிச்சதே இல்லை.  நீட்டி,  என் பக்கத்துலயே சேர் போட்டு உக்காந்து சேந்துதான் காபி குடிப்போம்.

அப்புறமா மக்யாநா மொதக்கொண்டு மனசுல பட்டுகிட்டே இருந்துச்சு..  ஒருவாட்டி சொல்லவும் சொன்னேன்.  பாஸும் 'என்னடா புது மனசுன்னு ஒரு பார்வ பாத்துட்டு கொஞ்ச நா கஷ்டப்பட்டு சோத்து கைல காஃபி தந்தாங்க..  அப்புறம் மறுபடி பழைய மாதிரிதான்..  எனக்கும் பழகிப்போச்சு..  அவிங்களுக்கும் பழகிப்போச்சு.....

இத்த எளுதி ஆச்சு ஒரு மாசம்...   இந்த வாரம் வெளிய விட்டுடலாம்னு முடிவு பண்ணி இருந்த சமயம்..   ஒரு மருந்து வாங்க புது  நண்பர் வீடு சென்றுவரவேண்டிய வேலை இருந்தது.   வலது கையால அவர் கொடுத்த மருந்தை வலது கையால வாங்கிட்டு வந்தோம்.  வழியில் சங்கீதா தேசி மானே ஹோட்டலில் டிஃபன் சாப்பிட்டோம்.  அப்போது எதிரில் அமர்ந்திருந்த ஒரு நாகரீக ஜோடி மேலே கண்ணு விழுந்துச்சு.  கண்ணு அப்படியே கலங்கிடுச்சுங்க...  அந்தப் பொண்ணு சோத்தாங்கைல ஃபோனு..  விரல்கள் விளையாட  ஃபோனை நோண்டிகிட்டே...

பீச்சாங்கைல..  இல்ல வேணாம்..   இடது கையால சாப்பிட்டுக்கிட்டிருந்துச்சு..  ஸ்பூன் கீன்லாம் இல்ல..  கைல கைல...  இவ்ளோ நீதி பேசற நானு சோத்தாங்கைலதான் சாப்பிட்டுக்கிட்டிருந்தேன்...  ஆனா அந்தப் பொண்ணு...  நம்ம இயக்கத்துக்கு கொ ப செ கிடைச்ச மாதிரி ஒரு ஃபீலிங்கி...

பீச்சாங்கை சமூக நீதி காத்த வீராங்கனை...

ஃபோட்டோ எடுத்துருப்பேன்..  எதிர்ல உட்கார்ந்திருந்த அத்தோட நண்பன் அப்படி ஒண்ணும் சாஃப்ட்டான ஆளா தெரியாததால விட்டுட்டேன்..

===============================================================================================
ஸ்ரீவேணுகோபாலன் 



ஜெயகாந்தன் எழுத்துக்களில் அவருக்கு மிகுந்த மரியாதை இருந்ததே தவிர ஜெயகாந்தன் நடந்துகொள்வதையும் அவரது சில பேச்சுக்களையும் எழுத்துக்களையும் கடுமையாகவே விமரிசிப்பார். 

ஒருமுறை இவரது எழுத்துக்களை ஜெயகாந்தன் மிக மோசமாக விமரிசித்துவிட மிகக் காட்டமாக அவருக்கு இவர் தொடுத்த வினாக்கள் அந்த சமயத்தில் மிகுந்த விவாதத்துக்குள்ளானது. ‘எழுத்தில் சமுதாய ஆன்மிகப்பார்வை வேண்டுமென்று சொல்லியிருக்கிறார் ஜெயகாந்தன். சும்மா அர்த்தமில்லாமல் இப்படி ஏதாவது வார்த்தைகளைப் போட்டுத் தப்பிக்க வேண்டாம். தெரியாமல்தான் கேட்கிறேன். அதென்ன சமுதாய ஆன்மிகப்பார்வை? முதலில் அந்த வார்த்தைக்கு ஜெயகாந்தன் அர்த்தம் சொல்லட்டும்’ என்று கோபப்பட்டார் ஸ்ரீவேணுகோபாலன்.
தமிழ் இலக்கிய அரங்கில் அவருக்கான இடம் எது என்பதுபற்றிக் கவலையில்லை. ஆனால் இத்தனை வருடங்களும் அவருக்கென்று ஒரு இடம் இருந்தது என்பதுதான் முக்கியம். அவருக்கென்று பரந்ததொரு வாசகப்பரப்பு இருந்தது. அவர் பெயரைப் போட்டாலேயே பத்திரிகைகள் விற்பனை ஆயின. அவரை மட்டும் நம்பியே மாத நாவல்கள் ஆரம்பிக்கப்பட்டன. புகழ் வெளிச்சம் அவர் மீது எவ்வளவு இருந்தபோதிலும் அடக்கமும் பணிவுமாக அவர் தம்மை வெளிப்படுத்திக்கொண்டார் என்பதுதான் இன்றைய நிலையில் முக்கியம். பல லட்சக்கணக்கான வாசகர்கள் ஒரு முப்பது நாற்பது வருடங்களாகச் சலிக்காமல் அவரைப் படித்து வந்தார்கள் என்பது ஒன்றும் அவ்வளவு சாதாரணமானதல்ல.

- அமுதவன் பக்கங்கள்​ -  நன்றி திரு கந்தசாமி R - ஃபேஸ்புக் 

=====================================================================================================

வயல்கள் மறைந்தன 
வீடுகள் மலர்ந்தன
800 கோடி  


நீரால் நிறைந்த கண்களில் 
மிதக்கும் உன்  நினைவுகள் 


கடப்பாரை மண்வெட்டியுடன் 
காத்திருக்கிறார்கள் 
மின்வாரியமும், 
மாநகராட்சி ஊழியர்களும் 
புதிய சாலை அமைந்ததும் 
தோண்டி வேலை செய்ய 

==============================================================================================

ஏகாந்தமாய் 


வந்து வாய்த்த சோமாலியா..!


ஆச்சு.. அமைச்சகத்தில் சேர்ந்து சில வருடங்களை உருட்டியாச்சு.  ஃபாரின் போஸ்டிங் என்கிற பெயரில் என்னை அப்போது நெருங்கப் பார்த்தன ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு நாடுகள். சிரியா, ஈரான், இவற்றின் தலைநகர்களான முறையே டமாஸ்கஸ், தெஹ்ரான் ஆகியவற்றில் இயங்கிவந்த இந்திய தூதரகத்துக்கு மாற்றலுக்கான வாய்ப்புகள் வாசல் கதவைத் தட்டின. 'அவசரமாகப் புறப்படு' என்றார்கள். மேலும் ஒரு வருடம் டெல்லியில் அமைதியாகப் பொழுதைக் கழிக்க விரும்பியதால், அயல்நாட்டுக்கு மூட்டை முடிச்சைத் தூக்கிக்கொண்டு அவசரமாகப் பறக்கும் மனநிலையில் அப்போது நானில்லை. அயல்நாட்டு அசைன்மெண்ட்டிற்கு அடுத்த வருடம் என்னை அனுப்பினால் போதும் என்று எழுதிக்கொடுத்தேன்.

வேறுவழியின்றி ஏற்றுக்கொண்ட அமைச்சகம், எனக்காகவே ஒரு அபூர்வமான போஸ்ட்டிங்கை ரிசர்வில் வைத்திருந்ததோ அப்போது?

அடுத்த வருடம், மீட்டிங் முடிந்து, மந்திரி கையெழுத்திட்டபின் போஸ்ட்டிங்ஸ் லிஸ்ட் வெளியானபோது, ஆஃபிரிக்காவின் வடகிழக்கிலிருக்கும், பலர் தவிர்த்துவந்த, சோமாலியாவின் தலைநகரான மொகதிஷுவிற்கு (Mogadishu) என்னை போஸ்ட் செய்துவிட்டிருந்தார்கள்! 

வெளியுறவுத்துறை என்பதனால், மோசமான அயலகப் போஸ்ட்டிங்குகள் – போர்/உள்நாட்டுக் கலவரங்கள் நடக்கும் நாடுகள் உட்பட – இப்படி ஏதாவதொன்று, எப்போவாவது வரத்தான் போகிறது. வயசான காலத்தில் இப்படி ஏதாவது கிடைத்து சிக்கித் தவிப்பதைவிட, சின்ன வயசிலேயே ஒரு கடுமையான அசைன்மெண்ட்டை முடித்துவிடுவோம் என்றும் தோன்றியதால், மொகதிஷு போஸ்ட்டிங்கை ஏற்றுக்கொண்டேன்.

ஒரு நாள், அட்மினிஸ்ட்ரேஷன் டிவிஷன் சென்று மாற்றலுக்கான ஃபார்மாலிட்டிகளை செய்துகொண்டிருக்கையில், அங்கே பணிபுரிந்த ஒரு நல்லவன் –என்னைப்பற்றி ஓரளவு தெரிந்தவன்போலும்-
என்னைத் தனியாகத் தள்ளிக்கொண்டுபோய், சொன்னான்: 

“போகாதே அங்கே! நிலமை கொஞ்சமும் சரியில்ல. அங்கே போயிருக்கிற அம்பாசடரும் ஒரு மாதிரியான அதிகாரி.. நீயோ எல்லாத்துக்கும் தலையாட்டுற ஆள் இல்லை. மிஞ்சிப் போனே… மூணே மாசத்தில் திரும்பி வரும்படி ஆயிடும்.. உன் ரெக்கார்டும் கெட்டுப்போயிடும்!”

இப்படி ஒரு சீரியஸான எச்சரிக்கையை, கொஞ்சமும் நான் அங்கே எதிர்பார்க்கவில்லை. உண்மையில் மனது கலவரப்பட்டது.  இருந்தும், சரியான, ‘காலத்தாற்செய்யப்பட்ட’ அந்த புத்திமதியை அப்போது அலட்சியம் செய்துவிட்டேன். விதி யாரை விட்டது. 

நான் சோமாலியாவில் ’அனுபவிக்க’ வேண்டுமென்று இருந்திருக்கிறதே..

பயணத்திற்கான இதர ஏற்பாடுகளோடு, அஃபீஷியல் பாஸ்போர்ட்களுக்கும் விண்ணப்பித்தேன். ஓரிரு நாட்களிலேயே தயாராகி, அவை கைக்கு வந்தன. பின்னர், மொகதிஷுவில் மூன்று வருஷம் ஒப்பேத்துவது ரொம்பவே கஷ்டம் என்று கேள்விப்பட்ட நிலையில், குடும்பத்துடன் அங்கு சென்று மாட்டிக்கொள்ளாமல், நான் மட்டும் போவதாக முடிவுசெய்திருந்தேன். 

எனக்கான ஏர்டிக்கெட் புக் செய்கையில், அஃபீஷியல் ரூட்: டெல்லி- பாம்பே- நைரோபி-மொகதிஷு என்று அறிவுறுத்தினார்கள்.  அப்போதெல்லாம், வெளியுறவுத்துறை ஊழியர்கள்/அதிகாரிகள் பணி நிமித்தம் வெளிநாடுகளுக்குப் பயணிக்கையில் கூடுமானவரை, இந்திய அரசின் விமான நிறுவனமான ’ஏர் இந்தியா’வில்தான் பயணிக்கவேண்டும் என்கிற கட்டாயம் இருந்தது. டெல்லியிலிருந்து நைரோபி(கென்யா) வரை ஏர் இந்தியாவில். நைரோபியிலிருந்து மொகதிஷுவிற்கு ‘சோமாலி ஏர்லைன்ஸ்’ மூலம் பயணம் என அரசு டிக்கெட் கிடைத்தது. அனுபவம் ஏதுமில்லா அரைகுறை வயதில், முதன்
முதலாக அஃபீஷியல் பாஸ்போர்ட், அரசாங்கத்திடமிருந்து விமான
டிக்கெட் எனக் கையில் வருகையில், எதற்கும் ஓவராக எக்ஸைட்
ஆகிற ஆளில்லை நான் என்கிறபோதிலும், மனது கொஞ்சம்
குதூகலித்தது. இருண்ட கண்டத்தின், மொகதிஷு என்கிற நகரம்….
இடறவில்லை மனதில் அப்போது.

ஒரு நன்னாளில் (அன்று அஷ்டமியோ, நவமியோ என்று பஞ்சாங்கம் சொல்லியிருந்ததைப் பின்னாளில்தான் அறிய நேர்ந்தது!) டெல்லியின் இரவில் ஏர் இந்தியாவில் ஏறி, பாம்பேயில் மாறி, அடுத்தநாள் காலையில் போய்ச் சேர்ந்த முதல் அயல்நாடாக, கென்யா அமைந்தது. தலைநகரான நைரோபியில் இறங்கினேன்.

அடுத்த மூன்று மணிநேரத்தில், மொகதிஷுவுக்குப் போகவிருக்கும் சோமாலி ஏர்லைன்ஸ் புறப்படும் என டிக்கெட்டில் இருந்ததை நம்பியவாறு(!), நான் லவுஞ்சில் உட்காரப்போனேன்.  என்னோடு வேறு யாரும் அங்கிருந்து மொகதிஷு வருகிறார்களா எனத்
தெரிந்துகொள்ளும் ஆர்வம் அதிகமாகியது.

சோமாலி ஏர்லைன்ஸ்பற்றியும் விஜாரிப்போமே என இன்ஃபர்மேஷன்
டெஸ்க்கை அணுகிப் பேசினேன். அங்கே அவர்கள் சொன்னது என்னைத் திடுக்கிடவைத்தது. அன்று சோமாலி ஏர்லைன்ஸ் கிடையாதாம்.. ”என்ன! டிக்கெட்டில் இருக்கிறதே.. இதோ..” என்று காட்ட, ”ஏர் இந்தியா டெஸ்க்கில் போய்க் கேளுங்கள். அவர்கள் சொல்வார்கள்” என்றார்கள். ஆஃபிரிக்க பயணங்களில் என்னவெல்லாம் கஷ்டம் வரும் என்பதற்கான முகப்புகள்,
அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துவிட்டன எனத் தோன்றியது.

ஏர் இந்தியா டெஸ்க்கில் ஒரே நிதானம்! ” சோமாலி ஏர்லைன்ஸில் ஏதோ ப்ராப்ளம் என்று செய்தி வந்திருக்கிறது. நாளைக்குத்தான் அது இங்கிருந்து புறப்படும். நாங்கள் டிக்கெட்டை மாற்றித் தருகிறோம்”
என்று வாங்கிக்கொண்டு ’மாற்றி’த் தந்தார்கள். நாளை வரை எங்கு தங்குவது, என்னோடு மொகதிஷுவிற்கு வேறு யாரும் பாசெஞ்சர்கள் இருக்கிறார்களா என்று கவலையோடு விஜாரித்தேன். 

”இன்று இரவு தங்க ஹோட்டல் ஏற்பாடு செய்கிறோம். கவலைப்படாதீர்கள்.” என்றார் அந்த ஏர் இந்தியா அலுவலர். இரண்டு மணி நேர காக்கவைத்தலுக்குப் பின் ”நைரோபி சிட்டியில் இருக்கும் அம்பாசடர் ஹோட்டலில் இன்று தங்கலாம். ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டது.

"அதோ அந்த கேட்டில் எங்கள் வேன் நிற்கிறது” என்றவுடன் ஒருசிலருடன் ஓடிப்போய் ஏறிக்கொண்டேன். அன்று மாலை நைரோபி சிட்டியைப் பார்க்கையில் எதிர்பார்த்ததைவிட நன்றாகவே இருந்தது. ஆங்கிலம் பேசினால் அந்தக் கருப்பர்களுக்குப் புரிந்தது.  திருப்பி ஆங்கிலத்திலேயே பதிலும் சொன்னார்கள்! இப்படித்தானே மொகதிஷு நகரமும் இருக்கும்.. என்று அப்பாவித்தனமாய் கற்பனை செய்துகொண்டேன்…

**

[ அடுத்த வாரம்...]



==================================================================================================

நியூஸ் ரூம் 

பானுமதி வெங்கடேஸ்வரன் 


- காஞ்சிபுரம் மாவட்டம் செம்பூரில் பழங்கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான கற்கோடரி, கற்கோடரி செய்ததற்கான மூலக்கற்கள் மற்றும் சிதிலங்கள் கண்டறியப் பட்டுள்ளன.

- ஓட்டுனர்கள் பற்றாக்குறையால் '108' ஆம்புலன்ஸ் நிறுத்தம்.

- போலீஸ் ஸ்டேஷனில் நின்ற லாரியில் திருட்டு.

- டில்லியிலிருந்து ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பெங்களூர் திரும்பிய ஸ்ரேயா சமாரியா என்னும் தொழிலதிபர் ஒருவர் தன்னுடைய பர்ஸை விமானத்தில் மறந்து வைத்து விட்டதை உணர்ந்து அந்த நிறுவனத்தின் கால் சென்டரை ஒன்றை அழுத்தி, இரண்டை அழுத்தி தொடர்பு கொண்டிருக்கிறார். அதன் கால் சென்டர் ஊழியர் அலட்சியமாக பதில் சொன்னால் காண்டாகி, "என் பர்ஸில் வெடிகுண்டு வைத்திருக்கிறேன் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும்" என்று உதார் விட்டிருக்கிறார். மிரண்டு போன விமான நிறுவனம் விமானத்தை சோதனை செய்து அவருடைய பர்ஸை கண்டு பிடித்து அவருடைய மிரட்டல் பொய் எனவும் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக அவரை கைது செய்த போலீஸ் அவரை எச்சரித்து அனுப்பினர். - ஹாஹாஹா.. கால் சென்டர் ஊழியரை கண்டித்தார்களா?

- யு.பி.ஐ. பரிவர்த்தனைகள் டிசம்பரில் புதிய உச்சம். விமான பயணியர் எண்ணிக்கையும் டிசம்பரில் புதிய உச்சம்.

- 13,000 கோடியில் பசுமை ஹைட்ரஜன் ஆலையை இந்தியாவில் அமைக்க விரும்பும் சிங்கப்பூர் நிறுவனத்தை தங்கள் மாநிலத்திற்கு இழுக்க, தமிழகம், ஒடிசாவிற்கிடையே போட்டி.

==========================================================================================

நஞ்சுக்கொடி 

ஒரு யு டியூப் வீடியோ பார்த்தேன்.  ஆடு குட்டி போட்டதும் அதன் நஞ்சுக் கொடியை ஏன் இப்படி ஆல மரத்தில் துணியில் இறுக்கிக் காட்டுகிறார்கள் தெரியுமா என்று கேட்டு பதில் சொன்னார்.  மண்ணில் புதைத்தாள் கூட அந்த மண் கெட்டு விஷமாகி விடுமாம்.  ஆனால் ஆலமரத்தில் இபப்டி கட்டும்போது சில நாட்களிலேயே ஆலமரத்தின் தன்மையால் அதன் விஷத்தன்மை சென்று விடுமாம்.  உயிர்களுக்கோ, பூமிக்கோ, பிற தாவரங்களுக்கோ பாதிப்பில்லை.

=======================================================================================

பொக்கிஷம் :- 

ஆரம்ப கால இளையராஜா பற்றி...

சுஜாதாவின் முன் எச்சரிக்கையை கவனிக்கவும்.  

இது மாதிரி துணுக்குகள் எழுத்துகள் படிக்க முடிகிறதோ..

என்னிடம் இந்தப் புத்தகமும் இருக்கிறது..  படிக்க வேண்டும்.

படிக்க எடுத்துப்போன புத்தகத்தில் புகுந்து  விளையாடியுள்ள நண்பர்..


முன்னுரிமை கோரிக்கை!

அரசாங்க கொள்கை!

72 கருத்துகள்:

  1. அனைவருக்கும் வணக்கம்.

    இடது கையால் சாப்பிடும் பழக்கமுள்ளவர்களைக் கண்டிருக்கிறேன். இப்போதும் காண்பதற்கு ஒரு மாதிரித்தான் இருக்கும்.

    எதையும் வலது கையால் கொடுக்கணும், வலது கையால்தான் வாங்கணும் என்னும் பழக்கம் உண்டு. இடது கை, அலட்சியம் என்று மனதில் தோன்றும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை... வணக்கம். இது சும்மா ஜாலி மூடில் எழுதப்பட்டது. இடது கையால் கொடுத்தால் அலட்சியம் அவமரியாதை என்றெல்லாம் எண்ணக் கூடாது என்பதுதான் நான் நினைப்பது.

      நீக்கு
  2. ஶ்ரீவேணுகோபாலன் என்ற புஷ்பா தங்கதுரை எங்க ஊரான கீழந்த்தத்தைச் சேர்ந்தவர். புன்னால் கே கே நகரில் வசித்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  கே கே நகரில்தான் வசித்தார்.   திருமணமே செய்து கொள்ளவில்லை.

      நீக்கு
    2. ஸ்ரீவேணுகோபாலன் வசித்தது கே.கே. நகரா? அண்ணா நகரா? அவர் சகோதரி மஸ்கட்டில் இருந்தார்.

      நீக்கு
    3. ஆம்.  கே கே நகரில்தான் வசித்தார்.  ஜெயகாந்தனும் கே கே நகரில்தான் வசித்தார்.

      நீக்கு
  3. இடது கையால் எல்லா வேலைகளையும் செய்வது சாப்பிடுவது, கை குடுப்பது உட்பட, தற்போது பாசன் ஆகிவிட்டது. கவனித்திருக்கலாம் கிளிண்டன், ஒபாமா போன்ற தலைவர்கள் கூட இடது கையால் ஒப்பிடுவதை.

    காடாக இருந்த இடம்
    வயலாக மாறியது.
    வயலாக இருந்த இடம்
    காடானது மீண்டும்.
    கான்கிரீட் காடு.

    சாலையைத் தோண்ட காத்திருப்போர் பட்டியலில் BSNL மற்றும் TWAD விட்டுப்போயினவே!

    பட்டம் ஜோக் பிரமாதம். பிரசவ ஜோக்கும் அது போல.

    கோழி கதை ருசியக்கதையின் தழுவல் என்று நினைக்கிறேன்.

    Jayakumar​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேஷன் ஆகி விட்டது என்று நீங்கள் சொல்கிறீர்கள்.  ஒபாமா கிளிண்டன் கதை வேறு. தமிழ்நாட்டில் அது இன்னும் அவமரியாதையாகத்தான் பார்க்கப்படுகிறது!!

      // பட்டியலில் BSNL மற்றும் TWAD விட்டுப்போயினவே! //

      அது புரிதலில் வந்து விடும்!  ஜோக் பிரமாதம் என்பது ஆச்சர்யம்.  கோழி கதை போல பல கதைகளை வெளிநாட்டிலிருந்து கொணர்ந்திங்கு சேர்த்திருப்பார்கள் அப்போது.

      நன்றி JKC  ஸார்.

      நீக்கு
    2. காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது என்பது போல் விலைவாசி என்று எழுதியவுடன் பட்டம் எவ்வளவு ஜோராக பறக்கிறது.

      நீக்கு
  4. சென்னைப் பையனே! நீங்க சொல்ல காணும் பீச்சாங்கைய தூக்கியாச்சு!

    அதென்னவோ இடது கையை ஒதுக்கித்தான் வைக்கறாங்க. பாத்தீங்கனா அதுதான் அதுதான் உன்னதமான வேலைய செய்யுது! என்ன சொல்றீங்க!

    ரெண்டு கையாலயும் தானே வெத்தலபாக்கு வைச்சு தாம்பாளத்த நீட்டுவோம். ரெண்டு கையாலயும் வாரி வாரி வழங்கும் வள்ளல்னும் சொல்லுவோம்! சரி விடுங்க. நமக்கு நம்ம கருத்து அவிங்களுக்கு அவங்க கருத்து.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலது காலைத்தான் நான் முதலில் வைப்பேன், எங்கே நுழைந்தாலும். எந்தக் கையை உபயோகிப்பது (பிரதான கையாக) என்பது மூளையின் செயலாம். அதனால் இடது கையில் சாப்பிடறாங்களாம். எனக்கு அது எப்போதுமே வினோதமா இருக்கும். துபாயில் ஒரு முறை சம்பளத்தை இடது கையால் கொடுத்ததை நான் விரும்பவில்லை.

      நீக்கு
    2. இடது கை நீதி பற்றி சும்மா ஜாலிக்கு எழுதியதுதான் கீதா...  கொஞ்சமாய் பகடி!

      நீக்கு
    3. இடதுகை செயல்பாடு உள்ளவர்கள் இயல்பானவர்களை விட அதிக புத்திசாலிகளாக இருப்பார்களாம். படித்திருக்கிறேன்.

      நீக்கு
  5. சிலருக்கு இடது கை பழக்கம் உண்டே! அவங்க சாப்பிடுவது கூட இடது கையாலதான் சாப்பிடுவாங்க. ஒரு சிலர் மட்டும் ஸ்பூன் பயன்படுத்துவாங்க.

    ரெண்டு கையும் சமமா பயன்படுத்துங்கன்னுதான் மருத்துவ உலக அறிவுரை. அதான் மூளையின் செயல்பாட்டுக்கு நல்லதாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் இப்போதுதான் இடதுகையால் சாப்பிடும் ஒரு நபரைப் பார்த்தேன்.  வியந்தேன்!

      நீக்கு
  6. சங்கீதா மனே - மனே என்பது அகம். நாம மனை என்றுசொல்கிறோமே அப்படி.

    மக்யானா? மறுநா என்பது அப்படி வந்திடுச்சோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // மக்யானா? மறுநா என்பது அப்படி வந்திடுச்சோ? //

      மறுநாள் என்பதை பேச்சு வழக்கில் அபப்டி சொல்வார்கள்.  மானே அர்த்தம் தெரியும்.  தேசி?  தேசம் என்று பொருளோ?

      நீக்கு
    2. ஓ! மக்யானா அதைத்தான் அப்படிச் சொல்றாங்களா!

      தேசி - ஆமா நம்ம ஊர்!

      கீதா

      நீக்கு
  7. ’வந்து வாய்த்த சோமாலியா’வில்:
    ’ஆஃபிரிக்காவின் வடமேற்கிலிருக்கும்' என்பதற்கு பதிலாக, ‘ஆஃபிரிக்காவின் வடகிழக்கிலிருக்கும்’ என வாசிக்கவும். தவறுக்கு திருத்தம், வருத்தம்!

    பதிலளிநீக்கு
  8. இடது கை புழக்கத்தைப்பற்றி சுவாரஸ்யமான்கச் சொல்லி அசத்தி விட்டீர்கள் ஸ்ரீராம்!!

    பதிலளிநீக்கு
  9. ஹோட்டல் பெண்மணி நிகழ்வு சுவாரஸ்யமாக இருந்தது ஜி.

    இப்போது எங்கும் கல்லாவில் காசு விழுவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். பெரும்பாலும் எல்லாம் டிஜிட்டல் காசுதான்!

      நீக்கு
  10. அனைவருக்கும் காலை வணக்கம்!

    பதிலளிநீக்கு
  11. எங்கள் குடும்பத்தில் இ.கை.பழக்கம் நிறைய பேருக்கு உண்டு. என் இரண்டாவது அக்கா. சிறு வயதில் அதிஉ தவறு என்று தவறாக நினைத்து மாற்றி விட்டார்கள். அதனால் படிப்பில் கஷ்டப்பட்டார்.
    என் கடைசி நாத்தனார், என் மகன், என் கடைசி அக்காவின் பெண், அவளுடைய பெண், என் அண்ணா பேத்தி என்று ஒரு கும்பல் இருக்கிறது. இதில் என் அக்கா பெண் மட்டும் சாப்பிடுவதும் இடது கையால்தான். அவள் சாப்பிடுவதை சிலர் அதிசயமாக பார்ப்பார்கள். ஒரு முறை நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது, ரிஜிஸ்டர் தபால் வந்தது, அவன் இடது கையால் கையழுத்துப் போட்டு வாங்கி விட்டான். எவ்வளவு சௌகரியம்!
    ஒரு முறை திருச்சி மாணிக்க விநாயகர் கோவிலில் சிதறு காய் போட வேண்டியிருந்தது. அவன் இடது கையால் உடைப்பதைப் பார்த்த ஒரு பெண்மணி,"தம்பி இடது கையால் தேங்காய் உடைக்கிறார், வலது கையால் உடைக்கச் சொல்லுங்கள்" என்றார். "அவன் இடது கை பழக்கம் உள்ளவன், அந்தக் கையால் உடைத்தால்தான் அவனுக்கு வாகாக இருக்கும்" என்று நான் சொன்னதை அந்தப் பெண்மணியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதைத்தான் பதிவிலும் சொல்லி இருக்கிறேன்.  வழிவழியாய் வந்த சில விஷயங்களை சிலரால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை!

      நீக்கு
  12. ஜெயகாந்தன் பற்றிய விஷயங்கள் - நாணயத்தின் இருபக்கம் போலத்தானே பிரபலங்களாக இருந்தாலும் அவர்களும் மனிதர்கள்தான். பொதுவெளியில் இருப்பதால் எல்லோருக்கும் தெரிய வருகிறது. விமர்சனங்கள் வரும் தான். எழுத்துலகில் கொண்டாடப்பட்டவர் தான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுவாரஸ்யமான பிரபல எழுத்தாளர் சண்டைகள் எல்லாம் அவ்வப்போது இருந்திருக்கும்.  அதில் ஹேமா ஆனந்ததீர்த்தன் சண்டை மட்டும்தான் கொஞ்சம் படித்திருக்கிறேன்.

      நீக்கு
  13. சென்னை முகப்பேரு பெருமாள் கோவிலில் ஒரு முறை பிரசாதம் கொடுத்தவர் இடது கையால் கொடுத்தார். "வலது கையால் கொடுங்கள்" என்று நான் கேட்டதும் அதன்படி செய்தார். "ஆனால் இருக்குற கும்பலில் அந்தக் கை, இந்தக் கை.." என்று முணுமுணுத்ததாக எனக்கு பின்னால் வந்த என் மகள் சொன்னாள்.. :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யார் கொடுத்தாலும் அர்ச்சகர் அப்படி கொடுத்திருக்கக் கூடாதுதான்!

      நீக்கு
  14. மூன்றும் ஹைக்கூ கவிதைகளும் சூப்பர் ஸ்ரீராம். அது சரி டெலிஃபோன் டிபார்ட்மென்டும் சேர்த்துக்கோங்க. ஹையோ உண்மைதான் அதெப்படி நகரத் திட்டம் இல்லாம செய்து அரசு செலவைக் கூட்டுவதோடு அப்புறம் இவ்வளவு செலவாச்சு அவ்வளவு ஆச்சுன்னு இது கமிஷன் வேற....ஊழல் வேற...எல்லாம் நம்ம தலைலதான் விழும்.

    வீட்டுல பட்ஜெட் போடுவது போலத்தானே நாட்டிலும்!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா. 
       
      ரோடு போடுகிறவர்கள் இப்படி பள்ளம் தோண்டும் துறைகளுடன் முதலிலேயே பேசி, உங்கள் வேலைகளை முடித்துக் கொண்டால் நாங்கள் ரோடு போடுவோம் என்று சொல்லலாம்.  இவர்களுக்குள் ஒரு ஒருங்கிணைப்பே இருக்காது.

      நீக்கு
    2. எங்கள் தெருவில் எப்போதும் தோண்டிக்கொண்டே இருப்பார்கள். இதுவரை ரோடை போட்டவுடன் தோண்டியவர்கள் கார்பொரேஷன் மழைநீர் வடிகால், வாட்டர் போர்டு நிலைவிலுள்ள பைப் அல்லாது மேலும் ஜப்பான் குடிநீர் திட்டம். BSNL டெலிபோன் கேபிள் (வீட்டு இணைப்பு.) தற்போது CNG வீடுகளுக்கு சப்ளை பைப் போடுகிறார்கள்.
      Jayakumar

      நீக்கு
  15. மேலை நாடுகளில் நிறைய பேருக்கு இடது கை பழக்கம் இருக்கும். அவர்கள் "நாங்கள் குறைவாக இருப்பதால் புறக்கணிக்கப்படுகிறோம், மாடிப் படிகளில் வைக்கப்படும் பிடிமானம் வலது கைகாரர்கள் சார்பாகத்தான் வைக்கப்படுகின்றன" என்றெல்லாம் குரல் கொடுத்திருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  இதுவும் ஒரு கோணம்தான்.  மேல்நாட்டிலேயே அப்படியா?

      நீக்கு
  16. //நீரால் நிறைந்த கண்களில்
    மிதக்கும் உன் நினைவுகள் // அடடா! எங்கேயோ போய் விட்டீர்கள்!

    பதிலளிநீக்கு
  17. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  18. ஏகாந்தன் அண்ணாவின் திரில்லர் அனுபவம் தொடங்கிவிட்டது! சுவாரசியமாக இருக்கிறது. ஆவலும் கூடுகிறது. சோமாலியா எப்படி இருக்கும் அங்கு உங்கள் அனுபவங்கள் எல்லாம்.

    என் அப்பா இலங்கையில் இந்திய தூதரகத்தில் இருந்தார். நல்லாதான் இருந்தது. பாஸ்போர்ட் செக்ஷனில். நான் மூன்றாம் வகுப்பு வரை அங்குதான் படித்தேன். ஆனால் பாருங்க விதி, பிரச்சனை தொடங்கியதும், எனக்கே சில நினைவுகள் இருக்கின்றன. அடிக்கடி கர்ஃப்யூ. நாங்கள் குடும்பம் தாத்தா பாட்டி எல்லோரும் 1972-73ல் வந்துவிட்டோம். பிரச்சனை அதிகமானதும் 1975ல் அப்பாவும் வந்துவிட்டார். அதன் பின் எல்லாம் தலைகீழ்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சோமாலியா என்றால் எனக்கு உடனே ஒரு பரிசுபெற்ற புகைப்படம் நினைவுக்கு வரும்.  உடம்பில் சதையே இல்லாமல் ஒரு குழந்தை..  அதன் பின்னால் ஒரு கழுகு.

      நீக்கு
    2. எனக்கும் இன்று அது நினைவு வந்தது ஸ்ரீராம்....சோ௳அலியா என்றாலே பல படங்கள் அப்படித்தான் எலும்பும் தோலுமாக இருக்கும் படங்கள் பஞ்சம் என்று பார்த்தவை தான் நினைவுக்கு வரும்.

      கீதா

      நீக்கு
    3. அடராமா! பஞ்ச சோமாலியா அல்ல, நான் பார்த்தது, சொல்லப்போவது..

      ரெகுலராக நடந்துகொண்டிருந்த அரசாட்சி புரட்சியாளர்களால் வீழ்த்தப்பட்டு, உள்நாட்டுக்கலவரங்கள், இனக்கலவரங்கள் எல்லாம் வெடித்தபின், அடிப்படைவாத ஆயுதமேந்திகள் இஷ்டத்துக்கும் எதிரிகளோடு சாதாரணர்களையும் சுட்டுத்தள்ளியபின் ஏற்பட்டதே இந்த விபரீத சூழல். அகதிகளாக மக்கள் வெளியேறிய ஆரம்பித்ததும், பஞ்சமும், பட்டினியும் நாட்டை கதிகலங்கவைத்ததும் - 1990-களில். அப்போ பீடித்த வியாதி இன்னும் விலகவில்லை.

      நான் இருந்தது அதற்கு முந்தைய, அரசியல் ரீதியாக, அமைதியான காலகட்டம். மக்கள் ஏழைகளாக ஆனால் கொஞ்சம் ஜாலியாக இருந்த சமயமது...

      நீக்கு
  19. போலீஸ் ஸ்டேஷன்ல நின்ன லாரியில் திருட்டு! வியப்பே இல்லை. நம்ம காவல்துறை மேல என்னவோ பெரிய நம்பிக்கை வருவதில்லை.

    கால் செண்டர் ஊழியரைத்தான் கண்டிக்கணும் முதல்ல.

    அதென்ன பசுமை ஹைட்ரஜன் ஆலை! அந்த ஆலை அமைக்க பசுமை அழியும்தானே!!

    கீதா

    பதிலளிநீக்கு
  20. நஞ்சுக்கொடி விஷயம் ரொம்பவே பிரமிப்பு! புதிய தகவல். நன்றி ஸ்ரீராம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் வியப்புதான்.  தகவலும் உண்மையாகதான் இருக்க வேண்டும்!

      நீக்கு
  21. வாழ்க வாழ்க...

    இன்று இப்போதுத் தான் வர முடிந்தது...

    பிரார்த்தனை மானசீகமாக!..

    பதிலளிநீக்கு
  22. வலக் கரத்தினால் மங்கல காரியங்களும் இடக் கரத்தினால் அமங்கல காரியங்களும் என்று வகுத்து வைத்திருக்கின்றனர்..

    எனது சித்தப்பாவிற்கு நான் மயான காரியங்கள் செய்த பின் அந்த உளைச்சல் ஒரு வருடம் வரை இருந்தது..

    இது நமது சனாதனத்தில் மட்டுமே.. பிற ச்மயத்தாரைப் பற்றிக் கவலை இல்லை..

    பதிலளிநீக்கு
  23. பொக்கிஷம் பகுடியில் இளையராஜா பற்றிய விஷயத்தில் சொல்லப்பட்டிருக்கும் பாடல்களை இப்ப கேட்டுப் பார்க்க வேண்டும்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேட்டுப்பார்த்து சொல்லுங்கள்.

      நீக்கு
    2. முன்ன இதெல்லாம் தெரியாம கேட்ட பாடல்கள் அவர் சொல்வதை இப்ப இருக்கான்னு கேட்டாலும் எனக்குப் புரிய வேண்டுமே!!!!! ஸ்ரீராம்...ஹாஹாஹா பார்க்கிறேன்

      கீதா

      நீக்கு
  24. சுஜாதாவின் முன்னெச்சறிக்கை!! ரசித்த விஷயம்.

    விலை வாசி பட்டம்!!! நல்ல கற்பனை! இப்ப இன்னும் உயரே பறக்கும்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதற்கு ஒரு காரணமும் இருந்தது.  சாவி ஒருமுறை  சுஜாதாவை இது மாதிரி ஒரு படைப்புக்கு கடிந்து கொண்டாராம்.  

      நீக்கு
    2. //சுஜாதாவின் முன்னெச்சறிக்கை!! ரசித்த விஷயம்.// எங்கள் வீட்டில் அப்போது தமிழ் படிக்கத் தெரிந்த சின்னபெண்கள்(நான் உட்பட),பையன்கள் நிறைய இருந்ததால் எங்கள் பெரிய அக்கா அந்த புத்தகத்தை ஒளித்து வைத்து விட்டார்கள். பின்னாளில் காயத்ரி புத்தகமாக வந்த பொழுது வாங்கி படித்தேன், என் அக்கா ஏன் ஒளித்து வைத்தார் என்று புரியவில்லை:))

      நீக்கு
  25. சுந்தாவின் 'பொன்னியின் புதல்வர்' தலைப்பு பார்த்ததுமே கல்கி பற்றிய புத்தகம் என்று தோன்றியது. வாசிக்கும் ஆர்வம்.

    பிரசவம் - டக்கென்று சிரித்துவிட்ட்டேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  26. புதிய திருப்பம் கோழியின் கதை சூப்பர்! யதார்த்தம். இப்பவும் அதேதான் நடக்கிறது. ரீடர்ஸ் டைஜஸ்டில் வரும் இப்படியானவை ரொம்ப நன்றாக இருக்கும். நான் ஓசியில் நூலகத்தில் வாசித்ததுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
  27. இடது கை பழக்கம் பற்றி மெட்ராஸ் மொழியில் நன்றாக பேசினீர்கள்.

    என் அத்தை பையன் இடது கை பழக்கம் உடையவன்.
    நடிகை சாவித்திரி இடது கையால் அழகாய் எழுதுவார்.
    இரண்டு கையில் இரண்டு வெவ்வேறு மொழிகளை எழுதும் குழந்தைகள் காணொளி பார்த்தேன்.

    இடது கையில் ஒரு பொருளை வைத்து விட்டால் அதை தேடி கொண்டே இருக்க வேண்டும் மறந்தார் போல இடது கையில் வைத்து விட்டேன், தேடுகிறேன் என்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காந்தி ஒரே சமயத்தில் இரண்டு கையாலும் எழுதக்கூடியவர் என்று படித்த நினைவு.

      நீக்கு
  28. அமுதவன் பக்கங்கள்​ படித்தேன், எழுத்தாளர்கள் இடையே கருத்து மோதல்கள் இருக்கும் தான். ஒவ்வொருவருக்கும் வாசகர்கள் இருந்தார்கள்.

    உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது.

    //திருப்பி ஆங்கிலத்திலேயே பதிலும் சொன்னார்கள்! இப்படித்தானே மொகதிஷு நகரமும் இருக்கும்.. என்று அப்பாவித்தனமாய் கற்பனை செய்துகொண்டேன்…//
    கற்பனை போல நடப்பு சரியாக இல்லை போலும் .

    நியூஸ் ரூம் , பொக்கிஷ பகிர்வுகள் எல்லாம் படித்தேன்.

    இரவல் புத்தகத்தில் எப்படி கிறுக்க மனம் வருகிறதோ?

    காத்து இருப்பவர் கேட்ட கேள்வி சிரிப்பை வரவழைத்து விட்டது.





    பதிலளிநீக்கு
  29. பழைய கதை போலவே சில இடங்களில் நடக்கிறது. பாடு பட்ட உழைத்தவரும் உழைக்க தயார் இல்லாதவரும் பலனை ஒன்று போல அடைவது என்ன நியாயம் தெரியவில்லை. உழைக்காதவனுக்கும் உழைத்தவன் லாபத்தில் பங்கு கொடுக்க சொல்வது என்ன தீர்ப்பு?

    பதிலளிநீக்கு
  30. வணக்கம் சகோதரரே

    வியாழன் கதம்பம் அருமை. இடது, வலது கைகளின் பழக்க வழக்கங்கள் பற்றிய பதிவு படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது. நானும் சிலபேர் இடது கையால் உணவுகளை எடுத்து சாப்பிடுவதை பார்த்துள்ளேன். காப்பி போன்ற பானங்களையும், இடது கையால் அருந்துவதும் ஒரு ஸ்டைலாகவே சில பேர் கருதுவர்.

    மங்கல காரியங்களுக்கு இடது கை ஒத்து வராது என நாம் பழக்கி வைக்கப்பட்டுள்ளோம். ஆனால் எப்போதுமே இடதுகையின் உதவியின்றி வலது கையானது செயல்பட ஒத்துக் கொள்ளாது. இன்னமும் இதைக்குறித்து பலவற்றை சொல்லிக் கொண்டே போகலாம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  31. இடது கையை ஒருபடி இறக்கமாகப் பார்க்கும் சமூக நீதி மாற வேண்டுமெனும் ஆதங்கத்தை வடித்த விதம் ரசிக்க வைத்தது. கவித்துளிகள் அருமை. குறிப்பாக மூன்றாவது.

    தொகுப்பு நன்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!