வியாழன், 18 ஜனவரி, 2024

"இதுவே இப்பதான் கண்டு பிடித்திருக்கியா"

     கற்றுக்கொள்ள விஷயங்களா இல்லை எனக்கு?  அவ்வப்போது சிறு விஷயங்களையும் இப்போதுதான் தெரிந்து கொள்கிறேன்.

அதில் ஒன்று சமீபத்தில்தான் கற்றுக் கொண்ட இந்த விஷயம்.

லிப்டில் ஏறி இறங்கி கொண்டிருப்பது வழக்கம்தான்.  எந்த மாடியில் இருந்தாலும் லிப்ட் அருகே வந்த உடன் மேல் நோக்கு  பொத்தானோ அல்லது கீழ்நோக்கு பொத்தானோ எதையோ ஒன்றை அமுக்கி விட்டு காத்திருப்பேன்.  லிப்ட் வந்து திறந்த உடன் எத்தனாவது தளம் செல்லவேண்டும் என்று லிப்ட்மேனிடம் சொல்வேன். ஒருவேளை ஆள் இல்லாத  காலி லிப்ட் என்றால் நான் செல்ல வேண்டிய தளத்துக்கான பொத்தானை அமுக்கி அங்கு சென்று விடுவேன்.

அப்படி பயணிக்கும்போது 

தரைத் தளத்திலிருந்து ஏழாவது மாடி செல்ல வேண்டுமென்றால் சமயங்களில் இரண்டு மூன்று தளங்களில் நின்று, திறந்து, ஆளில்லாமல் இருக்கக் கண்டு திரும்ப மூடி நகரும் லிப்ட்.

"பொத்தானை அமுக்கி விட்டு பொறுமை இல்லாமல் போய்விட்டார்களோ" என்று ஒருமுறை லிப்ட்மேனிடம் கேட்டேன்.

"அப்படியும் இருக்கலாம்.  அல்லது கீழே இறக்கி விட்டு வந்தேனே அவர்களும் அமுக்கி இருக்கலாம்.."

"புரியவில்லை"

"மேலே கீழே என்று மாற்றி மாற்றி அமுக்கி விடுவார்கள்.  உள்ளே வந்ததும் கீழே செல்ல வேண்டும் என்பார்கள்.  திரும்ப மேலே வரும்போது அங்கு மறுபடி நின்று விடும்!"

புரிந்து கொண்டேன்.

நான்தான் இப்படி என்று நினைத்துக் கொண்டிருந்தால் என்னைவிட விஷயம் அறிந்தவர்கள் எல்லாம் கூட அதே தவறைச் செய்தார்கள்.

எனக்கும் நான் கற்றுக் கொண்ட விஷயத்தை இன்னொருவருக்கு சொல்லிக் கொடுக்க வாய்ப்பு ஏற்பட்டது!  அதில் ஒரு அல்ப சந்தோஷம்.

நானும் அவரும் ஏழாவது மாடி செல்ல வேண்டும்.  முதல் தளத்தில் இருந்தோம்.  லிப்ட் நான்காம் தளத்தில் இருக்க. இவர் கீழ் நோக்கி இருக்கும் பொத்தானை அமுக்கினார்.  

"ஸார்..  நாம் மேலே ஏழாவது மாடி செல்ல வேண்டும்" என்றேன்.

"அது சரி.. லிப்ட் மேலே இல்ல இருக்கு>" என்றார் அவர்.

என்ன என்றால் நான்காவது தளத்தில் இருக்கும் லிப்ட் முதல் தளத்திற்கு வர விரும்புகிறாராம்.  வந்தபிறகு அவர் செல்ல வேண்டிய தளத்தின் எண்ணை அமுக்குவாராம்.

அவருக்கு எடுத்துச் சொல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

"நாம் இப்போதே மேலே செல்ல வேண்டும் என்பதால் நீங்கள் மேலே செல்லும் பட்டனைத்துதான் அமுக்க வேண்டும்.   நீங்கள் எங்கிருந்து அமுக்கினாலும் லிப்டில் அது ஒளிர்ந்து நீங்கள் இருக்கும் தளத்துக்கு வருவதோடு நீங்கள் மேலே செல்ல வேண்டும் என்கிற கட்டளையையும் அது தாங்கி நிற்கும்.  நீங்கள் இப்படி அமுக்கினால் உங்களை இறக்கி விட்டு திரும்பும்போது இங்கே ஆளே இல்லா விட்டால் கூட இங்கே நின்று மறுபடி நின்று திறக்கும்."

"அப்படியா?  ஓகே ஓகே...அப்படியும் அது சில சமயம் கீழே செல்கிறதே..."

"அது முன்னரே உள்ளே இருப்பவர்கள் முதல் கட்டளையாக கீழே கொடுத்திருப்பார்கள்"

"எம் டி வரும்போது இப்படி மேலே கீழ் விளையாடிக் கொண்டிருந்தால் அவருக்கு கடுப்பாகாதா?"

"அப்படி ஆக விட மாட்டார்கள்.  உள்ளே பாருங்கள்.  ஒரு ஸ்பீக்கர் இருக்கிறது.  கீழே லிப்டுக்கு வெளியே ஒரு தொலைபேசி இருக்கும் அதில் சொல்லி விடலாம்.  உள்ளே லிப்ட்மேன் ஒரு சாவி வைத்திருக்கிறார் பாருங்கள்...  அதை போட்டு விட்டால் நம்ம பல்லவன் LSS பஸ் மாதிரி நிற்காமல் எங்கே செல்ல வேண்டுமோ அங்கே சென்று விடும்"

இதேபோல அவ்வப்போது வேறு சிலருக்கும் விளக்கம் சொல்லி வந்தேன்.  எனவே எனக்கொரு திருப்தி,  தெரியாது இருந்தவன் நான் மட்டும் இல்லை!

புதிதாகப் பார்க்கும் விஷயங்களில் மட்டுமல்ல, பழைய விஷயங்களிலும் நான் ஏதாவது கற்றுக் கொள்ள இருக்கிறது என்பது அவ்வப்போது நிரூபணமாகிறதுதான்!

இந்த விஷயம் ஏற்கெனவே தெரிந்தவர்கள், ரமணா யூகி சேது மாதிரி "இதுவே இப்பதான் கண்டு பிடித்திருக்கியா" என்று புன்னகையுடன் கடந்து விடுங்கள். 

இதைத்தவிர வேறு விஷயம், வேறு (திராவிட ) மாடல்  இருந்தாலும் சொல்லிக் கொடுங்கள்!  தெரிந்து கொள்கிறேன்.

சில வருடங்களுக்குமுன் வரை எனக்கு லிப்ட் என்றாலே அலர்ஜி.  தனியாக லிப்டில் ஏறமாட்டேன்.  எதை அமுக்கவேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று தெரியாது விழிப்போமோ என்று பயம்.  அதனாலேயே இது மாதிரி விஷயங்கள் கொஞ்சம் (?) லேட்டாக தெரிகின்றன!  இப்பவும் சில இடங்களில் தளத்தின் எண் பொத்தானை அமுக்கியதும் ஆட்டோமேட்டிக் கதவுகள் மூடிக்கொள்ளும் முன் ஒரு கம்பிக்கதவை நாம் கையால் மூடவேண்டிய லிப்ட்கள் இருக்கின்றன.  சரியாக மூடாவிட்டால் அது இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்துக் கொண்டே இருக்கும்.  மேலும் நாம் மூடாமல் சென்று விட்டால் அது எங்கு நிற்கிறதோ அங்கேயே நின்று தொணதொணத்துக்கொண்டே கொண்டேயிருக்கும்.  அந்த கம்பிக்கு கதவு மூடினால்தான் பிற தளங்களிலிருந்து வரும் அழைப்புகளை ஏற்று அது மேலே, கீழே செல்லும்!

முன்னர் ஒருநாள் ஒரு கார்ப்பரேட் ஆஸ்பத்திரியில் லிப்டில் ஏறி மேலும் கீழும் அலைந்து ஏற்பட்ட அசடு வழிந்த ஒரு அனுபவத்தையும் சொல்லி இருக்கிறேன்.

==========================================================================================

Face Book ல்  திரு ரவி சாரங்கன் அவர்களுடைய நட்பு பட்டியலில் நானும் இருக்கிறேன்.  அரசு அலுவலகம் ஒன்றில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் என்று நினைவு.  அவருக்கு ஜோசியம், ஜாதகம் முதலான விஷயங்கள் தெரியும்.  சமீபத்தில் அவர் Face Book ல்ஒரு தொடர் தொடங்கி இருக்கிறார்.
அதிலிருந்து ஒரு பகுதி..

பெண் ஜாதகம்
பொதுவா ஆண்களுக்கு கிடைக்கும் அத்தனை பலன்களும் பெண்களின் ஜாதகத்தில் இருக்கும் அடிஷனலாக சில கர்பப்பை போன்ற விஷயங்களை பற்றி இருக்கும்.
இது மேலோட்டமான ட்ரான்ஸ்லேஷன். சில மஹா வித்யாதரர்கள் சொல்வது. ஆனால் மகரிஷி பராசரர் சொல்லும் அர்த்தம் வேறு, மனித இனங்களில் ஆண் தன்மை பெண் தன்மை இரண்டும் கலந்த தன்மை என 3 விதம் இருக்கு
ஒருவர் ஜாதகத்தில் லக்னம் என்ன தன்மையோ (ஆண் ராசி, பெண் ராசி) அவரது தசாம்ஸத்தில் அதே அல்லது மாறி இருப்பதை கொண்டு அவரை பற்றி சொல்லலாம்.
டைம் இருப்பவர்கள் படிக்கலாம்
ஒருவர் பார்க்க ஆணாக இருப்பார் (ஆண் தன்மை என்பது தன்னை பற்றி மட்டுமே யோசிப்பது Selfish) ஆனால் பெண் தன்மை (பெண் என்பது தர்மம் இரக்கம் அடுத்தவரை பற்றி யோசித்தல், தாய்மை என்பதாகும்) கொண்டிருப்பார், பெண்ணுக்கும் இதே போல
இது உடலை வைத்து மட்டுமல்ல , ஆத்மா & கர்மா (கடமை Duty - not only professional) வை கொண்டு சொல்வது
அடியேன்,பெண் சொன்னாள், அப்பா நீ மன்னிக்கு ரெண்டாவது பிள்ளை பிறக்கும் என சொன்னே ஆனால் பெண் பிறந்துட்டது உன் வாக்கு பலிக்கலை என நினைத்தேன் இப்ப இது படுத்தறது, பேசறது எல்லாம் அப்படியே ஆம்பிளை தான் நெத்தில திருமண் இட்டுவிட்டால் பார்க்க அப்படியே அண்ணா தான் என்றாள்.
அடியேன் கூட ஜாதகத்தில் ஆண் குழந்தை எனில் ஆண் குழந்தைதான் பிறக்கும் என பலகாலம் நினைத்திருந்தேன் ஆனால் மகரிஷி பராசரரின் மூல நூல் படித்தபின் புரிந்து கொண்டேன். இன்னொன்றும் இருக்கு பெண் குழந்தை அல்லது ஆண் குழந்தை என்பது சில சமயம் தோற்றத்திலும் சரியாகவந்துவிடும்.
மேலும் ஒருவருடைய மென்மையான தாய்மை (அம்மா தானே குழந்தையை காப்பவள்) குணம் பிறவியிலிருந்தே இருக்கும் - தாயுமானவர் என இறைவனை சொல்வது இதனால்.
பெண்ணாக பிறந்து, பெண் ராசியில் பிறந்து, அல்லது ஆண்ராசியில் பிறந்து, தசாம்ஸத்தில் ஆண் ராசியாக இருந்து விட்டால் செல்ஃபிஷாகவும் தானே அதிகாரியாகவும் எவரையும் ஆட்டிப்படைப்பவராவார். இதை நாம் ரியல் லைஃபில் பார்க்கலாம் மாமியார் கொடுமை என அதே போல இந்த காலத்திலும் தன் பெண்ணை தன்னுடைய எதிர்கால வாழ்க்கைக்காக பலி கொடுப்பது - பல பெண்களுக்கு திருமண தடை ஏற்படுவதற்கு இதுவும் ஒருகாரணம், அப்படி திருமணம் ஆனால் அம்மாவின் அதிகாரம் அதனால் கணவன் மனைவிக்குள் பிரச்சனை என சில காரணங்கள் இருக்கு.
ஒரு பெண்ணின் துன்பமயமான வாழ்க்கைக்கு ஒரு உதாரண ஜாதகம் கொண்டு எப்படி அறிவது என்பதை நாளை எழுதுகிறேன்.

================================================================================================

நியூஸ் ரூம் 
பானுமதி வெங்கடேஸ்வரன் 




News room 18-01-24

- ஆறுகள், கடலில் பிலாஸ்டிக் கழிவுகள் சேருவதை தடுத்து அகற்ற தடுப்பான்கள் அமைக்கப்படும் என தமிழக சுற்றுச் சூழல் துறை செயலர் சுப்ரியா சாஹு அறிவிப்பு.

- நாட்டில் புத்தொழில் எனப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்குவதற்கானா சிறந்த சூழலை தரும் மாநிலங்கள் தர வரிசையில் தமிழகம் முதலிடம்.

- அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளருக்கான தேர்வில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெற்றி. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி குறைவான வாக்குகள் பெற்றதால் போட்டியிலிருந்து விலகினார்.

- உலகின் சிறந்த அரிசியாக இந்தியாவின் பாஸ்மதி அரிசி தேர்வு. இரண்டாவது இடத்தில் இத்தாலிய அர்போரியாவும் மூன்றாவது இடத்தை போர்ச்சுகலின் கரோலினா அரிசியும் பிடித்துள்ளன.

- இந்தியாவில் உடலுறுப்பு தானம் செய்வதற்காக பதிவு செய்திருப்போர்கள் எண்ணிக்கை 17 சதவிகிதம் உயர்வு. 

- 156 போலி டாக்டர்கள் கர்னாடகாவில் கண்டுபிடிப்பு.

- தூய்மையான நகரங்களாக இந்தூர்,சூரத் தேர்வு. முதல் பத்து இடங்களில் தமிழகத்தை சேர்ந்த ஒரு நகரம் கூட இல்லை. திருச்சிக்கு 112வது இடம்.

=================================================================================================================


அந்தக் காலப் படங்களின் கதாநாயகி பாரதி
உயர்ந்த மனிதன்’, 'நாடோடி’, 'அவளுக்கென்று ஒரு மனம்’, 'தங்கச் சுரங்கம்’, 'மாயமோதிரம்’ என்று அந்தக் காலப் படங்களின் கதாநாயகி பாரதி இன்றும் சின்னத்திரையில் பிஸியாக இருக்கிறார்!
அசப்பில் வைஜயந்திமாலா பாலி சாயலில் இருக்கும் பாரதி, பேசுவதும் நடப்பதுமே அபிநயம் நிறைந்த நாட்டிய நாடகம் போல் இருக்கிறது. ''சினிமா நடிகைகள் அமைதியான குடும்ப வாழ்க்கை நடத்த முடியாது என்ற எண்ணத்தைப் பொய்யாக்கி வாழ்ந்து வருகிறேன்'' என்று பெருமையுடன் சொல்லும் பாரதி, தன் வாழ்க்கை பற்றிய சில சுவாரஸ்யமான அனுபவங்களை விவரித்தார். அவரது பேட்டியிலிருந்து...
மகாராணி கல்லூரியில் பி.யூ.ஸி. முதல் வருஷம் படித்துக் கொண்டிருந்தேன். கல்லூரியில் நான் கலந்துகொண்ட நடன நிகழ்ச்சியின் போட்டோக்களை நோட்டீஸ் போர்டில் ஒட்டி வைத்திருந்தார்கள். நடிகர் கல்யாண்குமார் அப்போது புதுமுகம் தேடிக் கொண்டிருந்த நேரம்... என்னை நடிக்க கூப்பிட்டார்கள். எனக்குப் பிடிக்கவில்லை.
சினிமா பார்க்ககூட தியேட்டருக்கு எங்களைக் கூட்டிப்போகாத கன்சர்வேடிவ் குடும்பம் என்னுடையது. யாராவது ஆண் சற்று நேரம் தொடர்ந்தாற்போல உற்றுப் பார்த்தால் தர்மசங்கடமாக இருக்கும்.
எனக்கு நடிப்பதில் துளியும் இஷ்டமில்லை. என் கல்லூரி ஆசிரியர்களோ, ''நீ அழகா இருக்கே. நல்லா நடனமாடுறே. தேடி வந்த வாய்ப்பை தவறவிடாதே!'' என்று அறிவுரை சொன்னார்கள். கல்லூரியை விட்டுப் போக மனமில்லாமல் விருப்பமின்றி நடிக்க ஆரம்பித்தேன்.
இரண்டு வருடம் ரொம்ப கஷ்டப்பட்டேன். தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, இந்தி என்று பல மொழிப் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. அந்தந்த மொழிப் படங்களில் நடிக்கும்போது அந்தந்த மொழியைக் கற்றுக் கொள்வேன். அப்படி இன்று எனக்கு எட்டு மொழிகள் தெரியும்.
தமிழில் முதல் படமே பெரிய பேனர். 'உயர்ந்த மனிதன்’ படத்தில் நடித்தேன். அடுத்து பத்மினி பிக்சர்ஸின் 'நாடோடி’ படத்தில் எம்.ஜி.ஆரோடு நடித்தேன்.
தெலுங்கில் 'அனக அனகா’, 'ஒக்க தண்ட்ரி’, 'ஆட பில்லல’, 'தண்டரி புட்டிந்தி கௌரவம்’ ஆகிய படங்கள் எனக்குப் பேரும் புகழும் பெற்றுத் தந்தன.
கன்னடத்தில் கிருஷ்ணதேவராயா படம் வெள்ளிவிழா கண்டதோடு எனக்கு மாநில விருதையும் பெற்றுத் தந்தது.
முதலில் மனதுக்குள் அழுது கொண்டே நடித்த நான், பிறகு இது கடவுள் கொடுத்த வரம் என்று சமாதானம் ஆகிவிட்டேன். இதுதான் தொழில் என்று ஆனபிறகு அதில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.
பள்ளி - கல்லூரிகளில் விளையாட்டில் ஆர்வமும், திறமையும் அதிகம். பின்னாளில் விளையாட்டு வீராங்கனை ஆவேன் என்று கற்பனை செய்தேன். ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கனவு கண்டேன்.
ஆனால், விதி வலியது. அது கொண்டு செல்லும் பாதையில்தான் போக வேண்டும். காலத்தின் கைகளில் நாம் வெறும் பொம்மைதான் என்பதை காலம் எனக்கு உணர்த்தியது.
தொழில் என்றான பிறகு நடிப்பில் அதிகக் கவனம் செலுத்தினேன். என் முதல் 'டேக்’ டைரக்டர் சொன்னபடி செய்ததால் ஓகே ஆகிவிட்டது. நான் ஒரு சின்சியர் ஸ்டூடண்டாக இருந்தது எனக்குப் பெருமளவு உதவியது. நடிப்பிலும் நடனத்திலும் பிரகாசிக்க வேண்டும் என்ற ஆசை பிறந்தது.
ஒவ்வொரு தொழிலும் ஒவ்வொரு மாதிரி, சினிமா தொழிலின் இயல்பும் எல்லோருக்கும் தெரியும். கடவுள் எல்லோருக்கும் அறிவைக் கொடுத்திருக்கிறார். அதை வைத்து வாழ்க்கையை அமைத்துக் கொள்வது அவரவர் பொறுப்பு.
எனக்கு வம்பு பேசுவதும், வெட்டி அரட்டை அடிப்பதும் பிடிக்காது. படப்பிடிப்பு தளத்தில் நடித்து முடித்து அடுத்த ஷாட்டுக்கு காத்திருக்கும்போது கையில் ஏதாவது புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டுவிடுவேன். அல்லது, ஸ்ரீராமஜெயம் எழுதுவேன்.
நடிகையின் வாழ்வில்...
நான் தமிழில் நடிக்க வந்த போது என் பெயரை மாற்ற வேண்டும் என்று எம்.ஜி.ஆர். சொன்னார். அவர்கள் சொன்ன எதுவும் எனக்குப் பிடிக்கவில்லை. அறுபது வயதுக்காரிக்கான பெயர்போல் இருந்தது. அதோடு என் அப்பா, அம்மா எனக்கு வைத்த பெயரை நான் ஏன் மாற்றிக்கொள்ள வேண்டும்? முடியாது என்று மறுத்துவிட்டேன்.
நான் எப்போதும் கால் மேல் கால் போட்டு அமர்வது வழக்கம். எனக்கு அது வசதியாக இருக்கிறது (பேசும்போதும் கால் மேல் கால் போட்டுத்தான் அமர்ந்திருந்தார்). ஆனால் மற்றவர்கள் என்னிடம், 'கால் மேல் கால்’ போடாதீர்கள். அதுவும் எம்.ஜி.ஆர். முன்னால்’ என்று எச்சரித்து வைத்திருந்தார்கள்.
கால் மேல் கால் போட்டால் என்ன? தரையில் வைத்தால் என்ன? மரியாதை மனதில் இருந்தால் போதாதா என்று விவாதித்தாலும் மற்றவர்கள் சொன்னதால் எம்.ஜி.ஆர். முன் கால் மேல் கால் போடாமல் அமர்ந்திருப்பேன். அவர் அந்த இடத்தைவிட்டு நகர்ந்த அடுத்த விநாடியே ஆட்டோமேடிக்காக கால்மேல் கால் போட்டுக் கொண்டு விடுவேன்.
ஒரு முறை அவர் வருவதைக் கவனிக்காமல் நான் கால் மேல் கால் போட்டிருந்ததை எம்.ஜி.ஆர். கவனித்துவிட்டார். பந்துலு சார் எம்.ஜி.ஆரிடம் 'அவ சின்னப்பெண். தெரியாம செய்துட்டா’ என்றாராம். எனக்கு இப்படிப் போலி மரியாதை தருவதில் நம்பிக்கை இல்லை.
என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை நன்றாகக் கவனித்து அதில் இருந்து பாடம் கற்றுக்கொள்பவள். சினிமா நடிகைகளுக்கு இயல்பான, அமைதியான குடும்ப வாழ்க்கை கிடையாது என்ற நிலை இருந்தது. அதை மாற்றி நடிகைகளாலும் எந்தப் பிரச்னையும் இன்றி குடும்பம் நடத்த முடியும் என்று நிரூபிக்க விரும்பினேன்.
சினிமாக்காரரைத் திருமணம் செய்ய விரும்பவில்லை. என் பணம், புகழ் பார்த்து வந்தால் பலனில்லை. சுற்றி எவ்வளவோ பார்த்துவிட்டோம். அப்பா, அம்மா பார்த்து வைக்கிறவரை திருமணம் செய்துகொள்வோம் என்று நினைத்தேன்.
இதற்குள் தங்கைகளுக்குக் கல்யாணமாகிவிட்டது. '21, 22 வயசுல இன்னும் கல்யாணம் பண்ணாம இருக்கீங்களே’ என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். பந்துலு இயக்கத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது நல்ல கணவன் கிடைக்க ராகவேந்திரரை வேண்டிக் கொள்ள சொன்னார்கள். நல்ல மனதோட ஒரு மனிதர் கணவராகக் கிடைத்தால் அவரோடு மந்திராலயம் வருவதாக வேண்டிக்கொண்டேன்.
நடிகையின் வாழ்வில்...
'மனபௌகித சொசெ’ என்ற படத்தில் நடிக்கும்போது நான் சீனியர். விஷ்ணுவர்தன் ஜூனியர். அவருக்கு என்னிடம் பயம். இருவரின் குடும்பமும் கன்சர்வேடிவ். அவர் முதலில் என் பெற்றோரிடம்தான் நன்றாகப் பழகி நல்ல பேர் எடுத்தார். என் பெற்றோர்தான் இவரைப் பற்றி என்னிடம் பேச்செடுத்தார்கள். என் வேண்டுதலின்படி என்னை நேசிக்கிற மனிதரே எனக்குக் கணவராக ஆனதும் கணவரோடு மந்திராலயம் போய் நன்றி சொன்னேன்.
இனிமையான, அமைதியான குடும்ப வாழ்க்கை நடத்தினேன். நானே கடைக்குப் போய் பொருட்களை வாங்கி வருவேன். திருமணமான மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கணவர்தான் 'உனக்குப் பிடித்தால் தொடர்ந்து நடி’ என்றார். எனக்குப் பிடித்த, பொருந்துகிற வேடங்கள் கிடைக்கும்போது நடிக்கிறேன்.
இனிய குடும்பம், திருப்தியான தொழில் என்று சந்தோஷமாக இருக்கிறேன்.''

தமிழச்சி கயல்விழி பேஸ்புக் - நன்றி திரு R . கந்தசாமி ஸார்.
=================================================================================

ஏகாந்தமாய் 


பால் வேணுமாக்கும் . . ?

அன்று மாலை தப்லியால் அறிமுகமானான் எதிர்த்த வீட்டுக்காரன்.  சந்திர பல்லப் தப்லியால் என்று முழுப்பெயரைக் கொஞ்சம் பெருமையாகச் சொல்லிக்கொண்ண்டான், முப்பதுகளில் இருந்த அந்த உ.பி.வாலா! ஒரு வருடமாக இங்கே வேலை பார்க்கிறான்.  அவனுக்கும் ஏனோ முதல் போஸ்டிங்காக சோமாலியாதான் கிடைத்திருக்கிறது. சீனியர். ஊருக்கு நாம்தான் புதுசு.  இவனிடமிருந்து ஏதாவது தெரிந்துகொள்வோம் என்கிற
சிந்தனையில் அவனிடம் அவ்வப்போது பேசுவேன்.  சோமாலியர்களைப்பற்றியோ, மொகதிஷுவைப்பற்றியோ,
ஆஃபீஸைப்பற்றியோ, எதைப்பற்றி என்ன நான் கேட்டாலும், அந்தப்பக்கம் இந்தப்பக்கம் பார்த்துக்கொள்வான்.  

முதலில் ( பஸ் ஸ்டாப்புலகூட அக்கம்பக்கம் யாரும் நிக்கறதில்லே...  அப்படி என்னத்தடா பாக்கறே என்று எரிச்சலானேன். வேகமாகச் சூடேறும் ப்ரகிருதி நான்.) இறுக்கமான முகபாவனையோடு, சுற்றிவளைத்து பதில் சொல்வான். அல்லது அசட்டுச் சிரிப்பொன்றை வழியவிட்டவாறே பார்ப்பான். நாம் என்ன கேட்டோம்.. இவன் என்ன சொல்கிறான் என நம்மையே குழப்பும் குணத்தினன். சுபாவப்படி
வேகமாக வார்த்தைகளை விட்டுக்கொண்டிருந்த நான், சில நாட்களில் உஷாரானேன். இவனிடம் ஜாக்ரதையாக இருக்கவேண்டும். சிம்பிளாகக் காட்டிக்கொள்ளப் பார்க்கிறான்..  சிக்கலான பேர்வழி என்பது குறிப்பாக அவனது ஆஃபீஸ் நடவடிக்கைகளில் பின்னர் புரிய ஆரம்பித்தது. உ.பி.-யைப் பற்றி இவ்வளவு போதும்!

அடுத்தநாள் காலை ஆபீஸுக்குப் போகவேண்டுமே. தப்லியாலுடன் புறப்பட்டேன். வீட்டிலிருந்து கொஞ்சம் நடந்தோம். ரோடு
ஆகாசத்துக்கே வழிகாட்டுவதுபோல மேல்நோக்கி எகிற, ஏறி ஏறி நடந்தோம். சுமார் 200 மீட்டர் தூரம் தாண்டியவுடன் திடீரென சரிந்த அந்த ரோடு, சரிந்தவாறே நீண்டு திடுமென குறுக்கே வெட்டிய பெரிய சாலையில் சந்தித்தது. அதைக் கடந்து எதிர்ப்புறம் போனதும் தப்லியால், ”இங்கே நிற்போம்!” என்றான். நடந்தே ஆபீஸுக்குப் போய்ச் சேரவேண்டியதுதான் போலருக்கு என நினைக்க ஆரம்பித்த சமயம். அவனைத் துழாவுவதுபோல் பார்க்க, ”பஸ் இங்கேதான் நிற்கும்” என்றான். 

'ஓ.. பஸ் ஸ்டாப்பா இது?'  எந்த ஒரு பெயர்ப்பலகையோ, வேறெந்த குறிப்புமோ இல்லாது மொழுக்கென்று இருந்தது அந்த இடம். பக்கத்தில் சின்னச் சின்னப் பெட்டிக்கடைகள்.  சில நிமிடக் காத்திருப்பு. சிவப்பு நிறத்தில் ஒரு மினிபஸ். பழைய ஜெர்மனியில் மெர்சிடிஸ் பென்ஸ் தொழிற்சாலையிலிருந்து வெளிவந்த முதல் பேட்ச் பஸ்களில் ஒன்றாக இருப்பதற்கான உடற்கூறுகள்.. சரியாக சர்வீஸ் செய்யப்படாததால் சத்தம்போட்டவாறு கோபமாக எங்கள் அருகில் வந்து நின்றது.

உள்ளே 10-12 பேர். இடமிருக்க, ஏறி உட்கார்ந்தோம். ”என்னிடம் லோகல் கரன்சி இல்லை!” என்றேன் கொஞ்சம் பரிதாபமாக.

”பரவாயில்லை. இதெல்லாம் அப்புறம் செட்டில் செய்துகொள்வோம்..” என்றவாறு டிக்கெட் வாங்கினான் தப்லியால். அந்த வகையில் ஓகே..

பத்து நிமிஷத்தில் எங்களை இறக்கிவிட்டு புகை, தூசிக் கலவையைப் பரப்பியவாறு நகர்ந்து சென்றது பஸ். குறுகிய சாலையோரமாய் நடந்தோம். நாலைந்து நிமிடத்தில் ஒரு திடீர்த் திருப்பத்தில், கொஞ்சம் விசாலமான தெருவிற்கு வந்திருந்தோம்.

தெளிவான வடிவத்தில் ஒரு மாடிக்கட்டிடம். நெருங்கியவுடன் கவனித்தேன். மங்கலான பித்தளை போர்டு சுற்றுச்சுவரின் வலதுபுறத்தில் பதிந்திருந்து, ’எம்பஸி ஆஃப் இண்டியா, மொகதிஷு, சோமாலியா’ என்றது. பெல் அழுத்தினான் தப்லியால். லோக்கல் செக்யூரிட்டி கேட் திறக்க, நாங்கள் உள்ளே சென்றோம். கீழ் தளத்தில் அட்மினிஸ்ட்ரேஷன், அக்கவுண்ட்ஸ், பாஸ்போர்ட், விசா, ரிசப்ஷன், சின்ன லைப்ரரி என அமைந்திருந்தது. மேலே அம்பாசடரின் அலுவலகம், சில ரகசிய அறைகள்..

ஆரம்ப அறிமுகங்களுக்குப் பின் என் சீட்டிற்கான சாவிகள், சில முக்கிய கோப்புகள், ரெஜிஸ்தர்கள், இத்தியாதிகள் தரப்பட்டன.

தூதர் அலுவலகத்திலிருந்து வந்த ஜூனியர் அஃபீஷியல் ஒருவன், முக்கியமான ஃபைல்கள், கேஸ்கள், அன்றைக்கான அர்ஜெண்ட்
பேப்பர்கள் என்று ஒரு ஃபார்மாலிட்டிபோல, வேகமாகச் சொல்லிவிட்டு மேலே ஓடிவிட்டான். வேலையின் பளு, தீவிரத்தன்மை சில நிமிடங்களிலேயே தெரிய ஆரம்பித்தது. கொஞ்ச நேரம் பைல்களைப் புரட்டிக்கொண்டிருந்தேன். எல்லைக் காவல்படையின் ஜவானான எம்பஸி செக்யூரிட்டி கார்ட், சஃபாரி
ட்ரெஸ்ஸில் மிடுக்கியவாறிருந்த கோவிந்தன் பிள்ளை என்னிடம் வந்து, ”சார் கொஞ்சம் வெளியே வாங்க, வாசல்ல விஸா லைன் நிக்குது பாருங்க, ஒங்க சப்ஜெக்ட்தான் இது!” - என்றான். வெளியே சென்றேன். கட்டிடத்திற்கு வெளியே ஒரு மூலையில், சுற்றுச்சுவரின் சிறுகதவு திறந்திருக்க, உள்ளே பூரான் போல் ஊர்ந்துவந்து நின்றுகொண்டிருந்தது 15-20 கொண்ட சிறு கூட்டம். 

பெண்கள்தான் பிரதானம். தலைகலைந்து, சோம்பலாக சில இளைஞர்கள்..
பிள்ளையின் ஓவர் உருட்டலில், தங்களுக்கு ஒத்து வராது என்றபோதிலும், கஷ்டப்பட்டு க்யூவில் நிற்க முயன்றார்கள்.

லோக்கல் ஸ்டாஃப் ஒருவன் விஸா அப்ளிகேஷனை வாங்கி சரிபார்த்து, அவர்களுக்கு ஏதேதோ சோமாலியில் சொல்லிக்கொண்டிருந்தான். கொஞ்சம் நோட்டம் விட்டுவிட்டு உள்ளே போனேன்.

சீட்டில் உட்கார்ந்து ஏற்கனவே வந்திருந்த சோமாலி பாஸ்போர்ட்கள், இந்திய பாஸ்போர்ட்களை அவற்றிற்கான விண்ணப்பங்களுடன் கவனிக்க ஆரம்பித்திருந்தேன். அருகிலிருந்த சீட்டில், ஜெய்பகவான் சிங்- இருபதுகளின் மத்தியில் இருந்த ஹரியானாக்காரன் – நட்பாகப் புன்னகைத்தான். ”டென்ஷன் மத் லோ.. இதர் காம்.. ஆராம் ஸே சலேகா!” (டென்ஷன் எடுத்துக்காதே... இங்கே சாவகாசமாகத்தான் எல்லாம் நகரும்) என்று சிறு முன்னுரை தந்தான். வந்து மூணுமணி நேரமாவது ஆகியிருக்கும். ஒரு காப்பி குடித்தால் தேவலை என்றது
மனம். “இந்த ஆஃபீஸில் டீ, காஃபி ஏதாவது கிடைக்குமா..  வழியிருக்கா? அல்லது வெளியிலேர்ந்துதான் வரவைக்கணுமா!” என்று ஜெய்பகவானிடம் மெல்ல விஜாரித்தேன். 

” வெளியிலேர்ந்து இங்கே ஒன்னும் வராது டியர்! இந்தியாவை விட்டு நீங்க வெளியே வந்துட்டீங்க.. இது சோமாலியா.. ஆஃப்ரிக்கா! “ என்றவன் என் முக
மாறுதலைக் கவனித்தவனாய், “டென்ஷன் வேண்டாம். டீ கிடைக்கும். சொல்றேன்..” என்றவன், “ஹேய்! அஹ்மத்! கம் ஹியர்!  “ என்று இரைந்தான். ஒரு குண்டு சோமாலிப்பையன் பின்புறத்திலிருந்து வேகமாக வந்து எதிர்நின்றான். 

“சார் இண்டியாவிலேர்ந்து வந்து, நம்ப எம்பஸில ஜாய்ன் பண்ணிருக்காரு.
இதான் அவர் சீட். நல்ல டீ போட்டு கொண்டுவா அவருக்கு..  எனக்கும் கொடு!” என்று சொல்லி அவனை விரட்டினான். 

”யெஸ் ஸார்!” என்று தலைதாழ்த்திய அஹ்மது, கட்டிடத்தின் பின்பக்கம்
காணாமல் போனான்.

எனக்குள் கொஞ்சம் உற்சாகம். அவ்வளவு மோசமில்லை நம்ம ஆஃபீஸ்.. என்று நினைத்தவாறு வேலையைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்தேன். சற்று நேரத்தில் அஹ்மது உள்ளே பிரவேசித்தான். என் டேபிளில் ஒன்றும், ஜெய்பகவானின் டேபிளில் ஒன்றுமாக, இரண்டு சூடான கிளாஸ்களை டக், டக் என சத்தமெழுப்பவைத்தான். கிளாசைப் பார்த்தவன் திடுக்கிட்டேன்.
கரும்பழுப்பு நிறத்தில் முக்கால் டம்ளர் அளவுக்கு உயர்ந்து நின்றிருந்த திரவம் ‘வெல்கம் டு சோமாலியா!’ என்று மிரட்டியது.

பாலும் சேர்க்கணும்னு தனியா சொல்லியிருக்கணுமோ இந்த சாம்பிராணிக்கு என்று நினைத்தவாறு ஜெய்பகவானைப் பார்த்து, ”பால் தீர்ந்துபோயிடுச்சுபோல? ப்ளாக் டீயை வச்சிட்டுப் போய்ட்டானே” என்றேன். 

பிரகாசமாக சிரித்தான் ஜெய்பகவான். (ஒரு இளம் பெண்ணிடம் காணப்படவேண்டிய முல்லைப்பல்வரிசை..  இவனுடைய வாய்க்குள் வந்தமர்ந்துகொண்டதெப்படி என ஒருகணம் நேரம்காலம் தெரியாமல் ஆச்சர்யப்பட்டது மனம்.)

”தூத் (dhoodh) சாஹியே ?” (பால் வேணுமா(க்கும்)? – என்றவனின் முகத்தில் மேலும் சிரிப்பு. (டேய்.. சிரிக்கறத நிறுத்து மொதல்ல!  தப்லியால் என்னடான்னா, எதையோ பறிகொடுத்தவன் மாதிரி மூஞ்சிய வச்சிக்கிட்டுப் பேசறான். ஒனக்கு என்னடான்னா..  வார்த்தைக்கு முன்னாடி சிரிப்பு வந்து விழுந்துடுது)

”ஏன்.. இல்லையா?”- கேட்டேன்

”ஹ்ம்..” என்று இழுத்தவனின் முகத்தைவிட்டு அந்தச் சிரிப்பு ஓடிவிட்டிருந்தது. ”ஃப்ரெஷ் மில்க் இங்க கெடைக்காது... நாளைக்குக் கொஞ்சம் மில்க் பௌடருக்கு அரேஞ்ச் பண்ணுவோம்” என்றுவிட்டு யோசனையில் ஆழ்ந்தவனாய், தன் பேப்பர்களைப் பார்க்கத் தொடங்கினான் ஜெய்பகவான்.
பால் கிடைக்காது. மில்க் பௌடருக்கு ’அரேஞ்ச்’ பண்ணனுமா? அப்ப?
ஈஸியாக் கெடக்கிற சங்கதிகள் இல்லே, இங்கே இதெல்லாம்! இப்ப புரியுது, (அமைச்சரகத்தில்) மொகதிஷு ஏன் ’சி’ க்ளாஸ் போஸ்ட்டிங்குன்னு.. வகைப்படுத்தி வச்சிருக்கான்னு என்று சுருண்டு கொண்டது மனம். இன்னும் என்னென்ன பிரச்னைகள் எதிர்வருமோ..

சரி, வந்தாச்சு. பார்த்திடுவோம் ஒரு கை.. என்று வேறுவழியில்லாமல் தன்னைத்தானே சாந்தப்படுத்திக்கொண்டது.

டீ யை மெல்லக் குடித்துப்பார்த்தேன். வாய்கொள்ளாத் தித்திப்பு.  கொட்டிட்டான்! சீனிக்கு இங்கே பஞ்சமில்லையோ..  பிறகுதான்
தெரிந்தது. சோமாலிகள் டீயோ காப்பியோ குடிக்கையில், சீனியை கிளாசில் தாராளமாகப் போட்டு கலக்கோ கலக்கு என்று கலக்குவார்கள். ஒரு கட்டத்தில் மேலும் கரையாமல் சீனி அடியில் நிற்பதைப் பார்த்தால்தான் சரியான அளவு சீனியைப் போட்டிருக்கிறோம் என்கிற திருப்தி அவர்களுக்கு ஏற்படும்.  தாங்களும் அப்படித்தான் குடிப்பார்கள். மற்றவர்களுக்கும் அதே
கைங்கர்யம்தான்!

**

==============================================================================

தினமலரிலிருந்து எடுத்தது....!



================================================================================

கதை கதையாம் காரணமாம்....!

கோபத்தில் கொட்ட நினைக்கும் 
வார்த்தைகளை 
திரட்டி எடுத்து 
கோப்பையில் கொட்டி 
எழுத்துகளை மாற்றி போட்டு 
திருத்தி அமைத்து 
நல்ல வார்த்தை அமைக்க 
நாளெல்லாம் முயல்கிறேன் 
அடுத்த ஆறுமாதம் 
அஷ்டமத்து சனியாம் 
ஏறுமாறாகத்தான் அமைகின்றன 
எத்தனை முறை முயன்றாலும் 

 ==========================================================================================

ஏற்கெனவே தெரிந்ததுதான் என்றாலும்...




==================================================================================================
பொக்கிஷம்  :
போட்டிக்காரன்!

புத்தி வந்த புருஷன்!

சபாஷ்..  சரியான சமாளிப்பு!

ஹா..  ஹா...  ஹா..  அப்பவுமா?

என்ன வசதி!

சாமர்த்தியங்கள்..

84 கருத்துகள்:

  1. ஸ்ரீராம், காலை வணக்கம்.
    லிஃப்டில் எனக்கு இந்தக் குழப்பத்தை விட இன்னொன்று வரும். முதல் தளம், தரைத்தளம், அடித்தளம்......சில லிஃப்ட் களில் இந்த தரைத்தளம் 0 என்று இருக்கும். அதன் பின் -1 என்று இருப்பது அதற்கும் கீழே இருக்கும் ஸ்டோர் ரூம் அல்லது பார்க்கிங்க். சில இடங்களில் அதை 0 என்று போட்டு முதல் தளத்திற்கு 1....சில இடங்களில் அடித்தளம் பார்க்கிங்காக இருக்கும்.

    பெரும்பாலும் மாடிப்படிகளைத்தான் பயன்படுத்துவதுண்டு. அப்படி ஏறும்படி ஆனால், கீழே பார்க்கிங்க் இருக்கா என்பதைப் பார்த்துக் கொண்டு உள்ளே சென்றதும் 0, -1...எல்லாம் நோட் செய்து கொண்டு எந்தத் தளம் போணுமோ....6 வது தளம் ஆனால் சிலப்போ 7 அமுக்கணும் இப்படிப் பார்த்துக் கொண்டு....

    அதுவும் பல அடுக்குமாடிக் குடியிருப்புகளில் எனக்கு இந்தக் குழப்பம் வரும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா..  வணக்கம்.  என் கிளை அலுவலகத்திலும் நீங்கள் சொல்லும் 0 -1 பிரச்னை இருக்கிறது.  நான் இதில் சொல்ல மறந்து விட்டேன்.  அதை நான் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை (ஹிஹிஹி)  எனவே அங்கு இரண்டு தளம்தான் கீழே என்பதால் படி இறங்கி விடுவேன்.    மால்களில் பிரச்னை இல்லை.  பார்க்கிங் 1 பார்க்கிங் 2 என்று நம்பர் இருக்கும்.  எங்கள் அலுவலகத்தில் பார்க்கிங் செல்ல B அமுக்கவேண்டும்!  பேஸ்மெண்ட்!

      நீக்கு
    2. ஆமாம் சில இடங்களில் B என்று இருக்கும்.

      கீதா

      நீக்கு
    3. லிஃப்டில் ஏறியதும் எந்தத் தளம் செல்லணுமோ அதை அழுத்தியதும் உடனே நான் ஸ்டாப் பட்டனையும் அழுத்திட்டால் லிஃப்ட் எங்கேயும் நிற்காது. நாம் செல்ல வேண்டிய தளம் வந்து தான் நிற்கும்.

      நீக்கு
  2. எப்ப கற்றுக் கொண்டால் என்ன ஸ்ரீராம்! கற்றுக் கொண்டோமா அவ்வளவுதான்!

    ஆனால் சிலர் இருக்காங்க..."ஐயே இது கூட உனக்குத் தெரியாதான்னு" திட்டும் அறிவு ஜீவிகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லவேளை யாரும் சொல்லவில்லை.  ஆனால் சிரிப்பார்கள், அவர்களே உடன் வந்து உதவுவார்கள்!  இப்போ இப்போ தேவலாம்!

      நீக்கு
  3. ராசியில் ஆண் பெண் என்ற பாகுபாடு உண்டு என்பது வினோதம்.
    ஜோதிடம் என்பது முடிவெடுக்க முடியாத நிலையில் ஒரு முடிவை தரும் ஒரு வழிகாட்டி என்பதே எனது புரிதல்.

    அடுக்கு மாடி குடியிருப்புகளில் வீட்டு எண்கள் அவரவர் இஷ்டத்துக்கு வைத்திருக்கிறார்கள். வீட்டு எண்ணை வைத்து எத்தனையாவது தளம் என்பதை அறிய முடிவதில்லை. உதாரணமாக C6 என்பார்கள். மாடி எண் தெரியாது.

    கோபத்தில் கொட்டிய வார்த்தை
    'மடையா'
    திருத்தி அமைக்க முயன்றேன் முடியவில்லை
    'மடையர்கள்' முட்டாள்கள் இல்லை
    சொன்னது பின் வந்த கட்டுரை.
    நான் தான் மடையன்

    பொக்கிஷத்தில் சிறந்த ஜோக் விலை உயர்ந்த கேள்வியும், மாமியார் வரவும்தான்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில கட்டிடங்களில் வீட்டு என்னை வைத்து தளம் கண்டுபிடிக்க முடியும்.  லாட்ஜ்களில் இருப்பது போல...  ஜோசியம் பற்றி நானொன்றும் அறியேன்!  நன்றி JKC  ஸார்...

      நீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள் அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் காலை வணக்கம்!

    பதிலளிநீக்கு
  6. லிஃப்ட் விசயம் சுவாரஸ்யமாக இருந்தது ஜி.

    நமது ஊரில் எல்லா விசயங்களும் மக்களிடம் தாமதமாகவே செல்கிறது.

    காரணம் இன்னும் நாமும் சாதிக்கலாம் என்ற எண்ணம் மக்களிடையே வரவில்லை ஆகவேதான் கூத்தாடிகளை கடவுளாக பார்க்கிறார்கள்.

    பொது இடங்களில் எடுக்கப்படும் காணொளிகளில் ஹே... என்று கையசைக்கும் குறுகிய வட்டத்துக்குள்தான் இன்னும் நாம் வாழ்கிறோம்.

    இதை அரசுதான் அடுத்த கட்டத்துக்கு உயர்த்த வேண்டும்

    பதிலளிநீக்கு
  7. ஜாதகம் பற்றிய விஷயங்கள் - மீ எஸ்கேப். அந்தப் பரம்பொருள் சரணம்!

    ஆனால் அதில் ஒரு லைன் பற்றிச் சொல்லணும்னா

    ஒரு பெண்ணின் திருமண வாழ்க்கை யில் பெண்ணின் பெற்றோர் புகுந்தால் அதாவது எதிர்மறையாக முடுக்கிவிட்டுப் புகுந்தால் பையன், அவன் பெற்றோருக்குப் பிரச்சனை என்பதோடு குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது. இது பையனின் பெற்றோருக்கும் பொருந்தும். இது யதார்த்தம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி ஒரு குடும்பத்தை நெருக்கத்தில் நான் அறிவேன். வேண்டாம் என்றாலும் கேட்க மாட்டார் அந்த பெண்மணி,

      நீக்கு
    2. சில பெண்கள் பெண்ணாகத் தோற்றத்தில் இருந்தாலும் ஆண் தன்மை அதிகரித்திருப்பதன் காரணம் இப்போத் தெரிந்து கொண்டேன். ரவி சாரங்கன் கலக்குகிறார். ஜாதகங்களையும் பார்த்துப் பலன்கள் சொல்லுவாரா?

      நீக்கு
  8. மதுவிற்பனை குறைய வேண்டும் என்றுதான் நினைக்கிறோம் - ஹாஹாஹாஹா. முரண்!

    ஆறுகள் கடலில் ப்ளாஸ்டிக் தடுப்பு - நல்ல யோசனை. அதுக்கு முன்ன தண்ணீர் பாட்டில்களில் வெளியில் தண்ணீர் சுத்தம் என்றாலும் கண்ணிக்குத் தெரியாத ப்ளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக மைக்ரோஸ்கோப் படத்துடன் ஆய்வு ஒன்று வெளியாகி இருக்கு. இதுக்கும் ஒரு தடுப்பான் இருந்தால் நல்லது. எல்லாரும் மெட்டல் பாட்டிலில் தண்ணீர் கொண்டு செல்வது தான் நல்லது. ஸ்ரீராம் கொண்டு செல்வது போல்!

    பாஸ்மதி அரிசி தகவல் எனக்கும் கூகுள் அனுப்பியது,

    கீதா

    பதிலளிநீக்கு
  9. கன்செர்வேட்டிவ் குடும்பம் என்று சொல்லும் பாரதியை எப்படி நடிக்க அனுமதிச்சாங்க அவங்களுக்கும் பிடிக்கலையே சினிமா, முதலில். ஆச்சரியமாக இருக்கிறது. பாரதி நடிகை யார் என்று நினைவுக்கு வரவில்லை. குறிப்பிட்டிருக்கும் படங்கள் எதுவும் பார்த்ததில்லை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பட்டம்மாளை பாட அனுப்பியது போலதான்!

      நீக்கு
    2. பாரதி நடித்த படங்கள் நிறையப் பார்த்திருக்கேன். அமைதியான ஆரவாரமற்ற நடிகை. சிறப்பான நடிப்பு/அலங்காரம்

      நீக்கு
  10. ஒரு இளம் பெண்ணிடம் காணப்படவேண்டிய முல்லைப்பல்வரிசை.. இவனுடைய வாய்க்குள் வந்தமர்ந்துகொண்டதெப்படி என ஒருகணம் நேரம்காலம் தெரியாமல் ஆச்சர்யப்பட்டது மனம்.)//

    சிரித்துவிட்டேன்!!! ஏகாந்தன் அண்ணா'ஸ் டிப்பிக்கல் வரி!

    யம்மாடியோவ் சர்க்கரை அதிகம்! சர்க்கரை க்குப் பஞ்சமில்லை போல. விவரணம் ஏதோ ஒரு இனம் புரியாத சஸ்பென்ஸுடன் தொடர்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  11. லிப்ட் ரசனை.

    கறுப்பு ரீ ஹா...ஹா.
    நமக்கு குடித்துப் பழக்கம் அளவான சீனியுடன்.

    பொக்கிசம் புத்தி வந்த புருசன்.
    கோடையில் குழாயில் காற்று வருவது. சிரிக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
  12. குட்டி இங்கிலாந்து - நீலகிரி தகவல் அறிந்து கொண்டேன்.

    இங்கும் ஓசூரில் ஒரு மலைப்பகுதி (கிருஷ்ணகிரி ஓசூர் நடுவில்) லிட்டில் இங்கிலாந்துன்னு இருக்கிறது. கூகுள் படங்கள் காட்டினாலும், விளக்கம் வேறாக இருப்பதால் சரியாகச் சொல்லாததால், அது பற்றிக் குழப்பமாக இருப்பதால், படங்களைப் பார்த்தால் அது அப்படியான பகுதி போன்ற தோற்றம் இல்லை போகவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
  13. அஷ்டமத்துச் சனி (ஹிஹிஹி) கவிதை சூப்பர்!!!! ரசித்தேன். வழக்கம் போல்........நிரப்பிக் கொள்க!

    பாருங்க, ஸ்ரீராம், நல்ல காலம் கவிதை வரிகளில் அது விளையாடவில்லை!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  14. மடையர்கள் - மடை திறத்தல் பற்றிய தகவல்கள் தெரிந்திருந்தாலும் மடையர்கள் என்பது இப்படியான சொல் என்பது இப்போதுதான் தெரிகிறது, ஸ்ரீராம்.

    மடையர்கள் ஓகே....அப்ப பெண்பால்?!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதற்கு பெண்பால் கிடையாது.

      நீக்கு
    2. ஆமா இருக்காதுதான் பெண்கள் புத்திசாலிகள்னு சொல்றாங்களா இல்லை பெண்கள் மடை திறந்த வெள்ளம் போல் பேசுவாங்கன்றதுனாலயா!!!!!!!!!!!!!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
  15. விலை உயர்ந்த கேள்வியின் அர்த்தம் புரிய ரொம்ப நேரமாச்சு!! ஹூம் !!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி...  ஆண்கள் கஷ்டம் ஆண்களுக்குத்தான் தெரியும்!

      நீக்கு
  16. கெமிஸ்ட்ரி இல்லாத ஜோடி போல! மின்சார வெட்டு இருந்தாலும் மின்சாரம் பாயணுமே!!! பாய வேண்டாமோ!!

    கீதா

    பதிலளிநீக்கு
  17. நான் ரொம்பச் சிரிச்ச ஜோக் - அந்த ஒட்டகச் சிவிங்கி!!!! எப்பவுமே நாலுகாள்களை வைத்து வரும் துணுக்குகள் தனி!! கற்பனை அபாரம் யாரோ இதன் கர்த்தா!

    கீதா

    பதிலளிநீக்கு
  18. கோடைக்காற்று, விடுமுறை ஜில்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  19. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  20. ஸ்ரீராம், நீங்கள் சொல்லியிருப்பது போல் தகவல்கள் இது வரை தெரியாது என்றாலும் லிஃப்டில் மேலே செல்ல வேண்டும் என்றால், மேலே செல்லும் பொத்தானை அழுத்துவதும் கீழே செல்ல வேண்டும் என்றால் கீழே செல்லும் பொத்தானை மட்டுமே நான் அழுத்துவதுண்டு.

    ஆனால் பலரும் நீங்கள் சொல்லியிருப்பது போல் இரண்டையும் மாற்றி மாற்றி அல்லது மேலிருக்கும் லிஃப்டை கீழே கொண்டு வர கீழ் பொத்தானை அழுத்துவதைப் பார்த்திருக்கிறேன்.

    நான் இப்படிச் செய்ததில்லை என்றாலும் இத்தனை நாட்கள் நான் நினைத்தது, இப்படிக் கீழ் பொத்தானை அமுக்கினால் லிஃப்ட் வேகமாகக் கீழே வந்துவிடும் போல என்று. ஆனால் நீங்கள் அறிந்து கொண்ட விஷயத்தை எங்களோடும் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி. ஏன் அப்படிச் செய்ய வேண்டும் என்று தெரிந்து கொண்டோமே.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  21. சில சமயங்களில் நாம் செல்ல வேண்டியத தளத்திற்கு அழுத்தியும், லிஃப்ட் நிற்காமல் மேலே நேரே செல்வதைக் (நீங்கள் பேருந்து பற்றி சொன்ன உதாரணம் நகைச்சுவை சிரிப்பை வர வழைத்துவிட்டது) கண்டதுண்டு. அப்படி என்றால் நீங்கள் சொல்லியிருப்பது போல் அதிகாரிகள் செல்வதற்கு அப்படிச் செய்கிறார்கள் என்பதை இப்போது தெரிந்து கொண்டேன். நல்ல தகவல். நன்றி, ஸ்ரீராம்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  22. ஜாதகம் பற்றி இப்படியும் இருக்கிறதா? ஆண்களுக்குப் பெண்மை குணங்களும் பெண்களுக்கு ஆண் தன்மை குணங்களும் சற்றுக் கூடுதலாக இருப்பவர்கள் இருக்கிறார்களே (பாலினம் மாறுவது பற்றி அல்ல பொதுவாக) ஒரு வேளை அதைத்தான் இது குறிக்கிறதோ என்று தோன்றுகிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் புதிதுதான்.  ஏற்றுக்கொள்ளக் கூடியதாய் இருந்தது.  அவர் ஜாதகங்கள் பற்றி முகநூலில் தொடர் போல எழுதுகிறார்.

      நீக்கு
  23. நடிகை பாரதி தெரியும். அவர் சொல்லியிருப்பது போல் பிரச்சனை இல்லாத திருமண வாழ்க்கை. கணவர் விஷ்ணுவர்தன் இப்போது இல்லை இப்போது அவர் பல சீரியல்களில் நடித்து வருகிறார்தான்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  24. ஏகாந்தன் ஸாரின் தொடர் ரெம்ப விறு விறுப்பாகச் செல்கிறது. அவரது அனுபவங்கள் சுவாசியமாக இருப்பதோடு அடுத்து என்ன என்று அதுவும் நமக்கெல்லாம் செய்திகள் மூலமாக அறிந்திருக்கும் சோமாலியா பற்றி அன்றைய வருடங்களில் எப்படி இருந்திருக்கும் என்று அறியும் ஆர்வம் கூடுகிறது. அருமையான தொடர்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  25. மடையர்கள் என்பதன் அர்த்தம் இப்படி ஒரு விளக்கம் இருக்கிறதா அருமை.

    பொக்கிஷங்கள் பகுதியில் நகைச்சுவைத் துணுக்குகளை ரசித்தேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  மடையர்கள் பற்றி முன்னரும் படித்திருக்கிறேன்.  நன்றி துளஸிஜி.

      நீக்கு
  26. லிஃப்ட் பற்றி விளக்கமாய் நீங்கள் தெரிந்து கொண்டதை சொல்லி இருக்கிறீர்கள். மற்றவர்களுக்கும் சொன்னது நல்லது.

    எங்கள் குடியிறுப்பு வளாகத்தில் உள்ள லிஃப்ட் அடிக்கடி பழுது அடைந்து நின்று விடுகிறது. கையில் செல் இல்லாமல் ஏற முடியாது. ஒரு தடவை நான் தனியாக மாட்டிக் கொண்டேன். பிறகு போன் செய்து குடியிருப்பு பொறுப்பாளர் வந்து இயங்க வைத்தார், சில நிமிடம் தான்.

    இன்னொருவர் மாட்டிக் கொண்டார் அவரை ஒரு மணி நேரம் கழித்து தான் வெளியே கூட்டி வர முடிந்தது, கரண்ட் கட் ஆனால் ஜெனரேட்டர் போட்டு விடுவார்கள் உடனே, அன்று லோ கரண்ட். அதனால் அவரை கதவை திறந்து உள்ளே ஸ்டுல் கொடுத்து ஏற சொல்லி தூக்கி விட்டார்கள்.

    சரியாக கதவை அடைக்காத பழைய லிஃப்டை இயங்க வைக்க யாராவது கீழே போய் கதவை சரியாக மூடிய பின்தான் இயங்கும்.

    இராண்டாம் மாடிக்கு ஒருவர் நான்காம் மாடி ஒருவர் என்றால் இருவரும் இரண்டு நம்பர்களையும் அழுத்த வேண்டும். இரண்டில் நின்று கதவு திறந்தவுடன் , மூன்றாம் நம்பருக்கு போகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில பழைய குடியிருப்புகளில் மிகப் பழைய மாடல் லிப்ட் வைத்திருப்பார்.  அது நிறைய தொந்தரவு செய்யும்தான்.  ஆனாலும் எத்தனை மாடி ஏறி இறங்க முடியும் அக்கா?  ஏற்கெனவே கால் வலி...  (எனக்கும்தான்!)

      நீக்கு
  27. லிஃப்ட் குறித்த சிந்தனைகள் நன்று. பலருக்கும் இந்தத் தொல்லைகள் உண்டு. சில ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் இருக்கும் லிஃப்ட் இயக்க வேண்டுமெனில் அங்கே தங்கி இருக்கும் அறைக்கான ஒரு Chip Based Card கொடுத்து இருப்பார்கள். அதனை அதற்கான இடத்தில் காண்பித்த பிறகே தேவையான எண்ணை அமுக்க வேண்டியிருக்கும்.

    மற்ற தகவல்களும் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  அதே பிரச்னை சில அபார்ட்மெண்ட்களிலும் உண்டு.  ஜீவி சார் முன்னர் இருந்த குடியிருப்பில் அது மாதிரி முறை இருந்தது.

      நீக்கு
  28. வணக்கம் சகோதரரே

    முதல் பகுதி எண்ணங்களில் லிப்ட் குழப்பம் பற்றி விவரித்தது அருமை. அவசியம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது. நிறைய அடுக்கு மாடி கட்டிடங்கள், பெரிய மால்கள் போன்றவற்றில் ஒவ்வொரு மாடிக்கும் செல்ல ஆட்கள் உதவியாக இருப்பார்கள். நான்கு, ஐந்து மாடி கட்டிடங்களுக்கான மின்தூக்கியை நாமேதான் நிர்வகித்துச் செல்ல வேண்டும். எங்கள் வீட்டு லிப்டிலும் மூன்றாவது மாடியிலிருந்து கீழே இறங்கும் போது முன்பு உறவினர்கள் மாட்டிக் கொண்டனர். ஏதோ பழுது காரணமாகவோ , என்னவோ முதல் மாடியிலேயே அந்தரத்தில் நின்ற அவர்களை எப்படியோ சிரமப்பட்டு இறக்கினார்கள். பேசாமல் படிகளை உபயோகித்து கீழிறங்கி சென்று விடலாம். கால்களுக்கு பலம். சிலர் வீட்டுக்குள்ளேயே மாடி படிகள் வைத்து மாடி கட்டியும் அதற்கும் லிப்ட் வைத்துக் கொள்கிறார்கள்.

    மற்றவைகளையும் படித்து விட்டு வருகிறேன். இன்று கொஞ்சம் வேலைகளினால் தாமதமாகி விட்டது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கெல்லாம் உதவிக்கு ஆட்கள் இருப்பவர்கள்தான்.  அந்த மாதிரிங்களில் லிப்டில் ஏறுவதில்லை எனக்கும் தயக்கமில்லை.

      நீக்கு
  29. வணக்கம் சகோதரரே

    ஜாதக விஷயங்கள் படித்து தெரிந்து கொண்டேன். நம்பினால், முழு நம்பிக்கை அதன் மேல் ஏற்படும். எதையுமே இறைவன் விட்ட வழியென்று மனதை சமாதானப்படுத்திக் கொண்டால் சஞ்சலங்களிலிருந்து கொஞ்சம் விலகலாம்.

    நடிகை பாரதி பற்றி எப்போதோ பத்திரிக்கையில் படித்துள்ளேன்.இப்போது இங்கு படிக்கும் போது விபரங்கள் நினைவுக்கு வந்தன. சிறந்த நடிகை.அவர் கணவரும் சிறந்த நடிகர். ஒரே துறையில் இருவரின் மனம் லயிக்கவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

    ஏகாந்தன் சகோதரரின் பக்கம் எப்போதும் நகைச்சுவை மிளிர நன்றாக உள்ளது. ஒரு காஃபி டீக்கு வெளிநாட்டுக்குச் சென்றால் எவ்வளவு கஸ்டப்பட வேண்டியுள்ளது.. ஆனால், செல்ல வேண்டிய சூழ்நிலைகளுக்கு வளைந்து செல்ல மனம் பக்குவப்படவும் வேண்டும் என்பதை அவரின் கட்டுரையில் புரிந்து கொள்ள முடிகிறது.

    தங்களின் கவிதை அருமை. சனி ஏழரையில், வந்தாலும், அஸ்டமத்தில் வந்தாலும், ஜென்மசனியாக வந்தாலும் சரி வாக்குச்சனியாக மாறி விடும் போலும்...ஹா ஹா ஹா..

    மடை திறந்த வெள்ளம் ரசித்தேன்.

    செய்தி அறை பக்கங்கள் சுவாரஸ்யமாக இருக்கிறது. இந்த போலி மருத்துவர்கள் பயத்தினால், நான் பற்களுக்கும் சரி, கீழே விழுந்து காயங்கள் வரும் போதும் மருத்துவரிடம் சென்று மருத்துவம் எடுத்துக் கொள்ள பயப்படுகிறேன். :)))

    ஜோக்ஸ் அனைத்தும் சுவையாக இருக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // நம்பினால், முழு நம்பிக்கை அதன் மேல் ஏற்படும். எதையுமே இறைவன் விட்ட வழியென்று மனதை சமாதானப்படுத்திக் கொண்டால் சஞ்சலங்களிலிருந்து கொஞ்சம் விலகலாம். //

      நல்ல கொள்கை. ஆனால் எத்தனை பேரால் அப்படி இருக்க முடியும்! அனைத்தையும் ரசித்ததற்கு நன்றி கமலா அக்கா.

      நீக்கு
    2. அஷ்டமத்துச் சனியோ அர்த்தாஷ்டமச் சனியோ எல்லாம் பாடாய்த் தான் படுத்தி எடுக்கின்றன.

      நீக்கு
  30. பெண் ஜாதகத்திற்கும் கடைசி நகைச்சுவைக்கும் பொருத்தம் இருக்கு போலவே!

    பதிலளிநீக்கு
  31. உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது.
    மற்ற பகுதிகளும் படித்தேன்.

    பதிலளிநீக்கு
  32. மற்றவர்கள் தொடாத விஷயங்களுக்கு வருவோம்:

    1. நாட்டில் புத்தொழில் தொடங்குவதற்கான சிறந்த சூழலைத் தரும் மாநிலங்களின் தர வரிசையில் தமிழகம் முதலிடம்.

    2. தூய்மையான நகரங்களுக்கான பட்டியலின் முதல் பத்து இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நகரம் கூட இல்லை.

    --- இந்த இரண்டு விஷயங்களுக்கும் (இதனால் தான் இது, அதனால் தான் அது) என்கிற மாதிரி ஏதாவது ஒற்றுமை இருக்கிறதா?

    அப்படி இருப்பின் இரண்டில் எதை இழப்பது
    தமிழகத்தின் சொந்த நலனுக்கு நல்லது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏதோ பத்திரிகையில் வரும் செய்திகளை நம்பி படிக்கிறோம், எடுத்துக் போடுகிறோம்.  அதில் எந்த அளவு உண்மையிருக்கும் என்று நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?  இதெல்லாம் சும்மா கணக்கு..  ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத கணக்கு..

      நீக்கு

    2. நான் சொல்லியிருப்பது பத்திரிகை செய்தி பற்றியல்ல. ஒன்றுக்கு ஒன்று தொடர்பானது. உங்கள் சிந்தனையைக் கிளர்த்தத்தான்.

      நீக்கு
  33. நடிகை பாரதி விஷயத்தில் அதை முக நூலில் பகிர்கிற அளவுக்கு தமிழச்சி கயல்விழியை ---

    அதை எடுத்துப் போட R. கந்தசாமியை --

    எது கவர்ந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

    எபியில் இதைப் பகிர உங்களை?--

    மூன்று பேருக்கும் வெவ்வேறு கோணங்களா, அல்லது ஒன்றேவா என்ற யூகித்தலும் ஒரு வித சுவாரஸ்யம் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவர எதுவுமில்லை.  பிரபலமானவர்களைப் பற்றிய சில தகவல்கள் எப்போதுமே சிலருக்கு படிக்க ஆர்வம் இருக்கும், அவ்வளவுதான்.  மற்றபடி பாரதி படத்தில் வந்தால் அவரைக் கண்டுபிடிப்பது கூட எனக்கு சிரமம்!

      நீக்கு
  34. பேருந்துப் பாதையில்
    ஊட்டி நகருக்குள் நுழைகின்ற தருணத்தில்
    'மலைகளின் ராணி' என்று அழகாக எழுதப்பட்ட அறிமுகப் பலகை ஒன்று கண்ணுக்குத் தட்டுப்படும்.

    ராணி சரி --

    ராஜா?.. இளவரசி?..

    யார், யார்? -- என்றொரு நினைவுச் சரடு மனசில் புரண்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​கேரளாவை இயற்கையின் கடவுள் என்று சொன்னோமானால் இயற்கையின் சாத்தான் என்று ஒரு இடம் இருக்குமா என்ன!

      நீக்கு
    2. மலைகளில் இளவரசியும் உண்டு.
      ராஜாவும் உண்டு.
      வேண்டுமானால் புதனுக்குக் கேட்டுப் பாருங்கள்.

      நீக்கு
    3. இருக்கட்டும்.. அப்போ மந்திரி யார்?!!

      நீக்கு
    4. கொடைக்கானலை மலைகளின் இளவரசி என்கின்றனர். ஆனால் ஊட்டி அளவுக்குக் கொடைக்கானலில் அழகும் இல்லை; கவர்ச்சியும் இல்லை. குறிஞ்சி ஆண்டவர் கோயிலையும், பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலையும் தவிர்த்தால் பார்க்க எதுவும் இல்லை.

      நீக்கு
  35. கார்ட்டூன் கைவண்ணங்களைப் பார்க்கும் பொழுது ---

    இந்த மாதிரித் திறமைகள் இப்பொழுதும் பத்திரிகைகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கிப் பார்த்தால்தான் தெரியும்.   அது போகட்டும், முன்னர் இருந்த அளவு எண்ணிக்கையில் பத்திரிகைகள் இப்போதும் வெளிவருகின்றன என்று நினைக்கிறீர்களா?  இப்போது வெளிவரும் பத்திரிகைகள் எவ்வளவு என்று எளிதாக கணக்கிட்டு விட முடியுமா?  அபப்டியே வெளிவரும் பத்திரிகைகளை மக்கள் வாட்சாப்ப்பை விட்டு வெளிவந்து படித்து விடுகிறார்கள் என்று சொல்லி விட  முடியுமா?!!

      நீக்கு
  36. ஏகாந்தன் ஸாரின் எழுத்து நடையின் சரளம் மயக்குகிறது. வாசிக்க வைக்கும் கலை அறிந்தவராய் இருக்கிறார்.

    வியாழனும் புதனும்
    மலையும் மடுவும் தான்.
    சில உள்ளடக்க விஷயங்களை ஒன்றுக்கொன்று மாற்றி முயற்சித்தால் நேர்படுத்தலாம் என்று இத்தனைக்கும் இடுக்கில் ஒரு யோசனை ஓடியது.

    பதிலளிநீக்கு
  37. ஸ்ரீராம், கவிதை மிக அருமை. கவிதை எழுதத் தெரியாத எனக்கு உங்கள் கவிதைகளும் கற்பனையும் வியக்க வைப்பவை. அதில் இதுவும். ஜோசியப் பகுதி ஒன்று பகிர்ந்து கொண்டதால் அதற்கு இணையாக உங்கள் கவிதையும் இணைத்திருப்பதிலும் கூட உங்கள் கற்பனை வெளிப்படுகிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!