நான்
தரிசனம் செய்த கோயில்கள் –
நெல்லைத்தமிழன்
ஐந்து துவாரகைகள் யாத்திரை – பகுதி 10
போர்பந்தரில் காந்தி பிறந்த வீட்டையும் அதனைத் தொட்டடுத்து இருந்த நினைவில்லத்தையும் பார்த்த பிறகு ஆட்டோ நிறுத்தப்பட்டிருந்த இட த்தை அடைந்தோம். அங்கு அருகிலேயே கட்டிப் பெருங்காயம் (ஒவ்வொன்றும் ஒரு சாக்லேட் அளவு சைஸ், மூட்டையில் வைத்திருந்தார்கள்) மற்றும் பலவித பொருட்களை விற்றுக்கொண்டிருந்தார்கள். இதற்கு முன்பு (2020ல் சென்ற பஞ்ச த்வாரகா யாத்திரை) சென்றிருந்தபோது, ஸ்ரீநாத் துவாரகையில் கவரப்பட்டு பெருங்காயம் வாங்கினேன், மனைவி இதெல்லாம் வேண்டாம் என்றாள். பிறகு வீட்டில் உபயோகித்தபோது அது பெருங்காயமா இல்லை ஒருவேளை புண்ணாக்குத் தூளை வாங்கிவந்துவிட்டோமா என்று எனக்குச் சந்தேகம் ஏற்பட்டது. (மனைவி நம்மை சிறுமையாகப் பார்க்க விடமாட்டோமுல்ல. அப்படி நம்மை ஒரு மாதிரி பார்த்தால், அது சரி..எனக்கு அன்றைக்கு ஜலதோஷத்தினால் வாசனை சரிவர தெரிந்திருக்காது, நீ, கண்டிப்பாக வாங்கவேண்டாம், பெருங்காயம் மாதிரியே வாசனை வரலைன்னு ஸ்ட்ராங்கா சொல்லியிருக்கலாமே என்று ப்ளேட்டைத் திருப்பிப் போடக்கூடத் தெரிந்திருக்காதா? ஹா ஹா) அனைவரும் வந்து சேர்ந்த பிறகு ஆட்டோக்களில் பேருந்து நிறுத்தியிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தோம். 7 பேர்கள் ஒரு ஆட்டோவில், மொத்தம் 300 ரூபாய், போக வர. யாத்திரையில் இப்படிப்பட்ட ஆட்டோ செலவு மற்றும் தனியாக தங்குமிடம் கேட்டு வாங்கிக்கொண்டால் அந்தச் செலவு நம்மைச் சேர்ந்தது.
போர்பந்தர் நிலக்கடலைக்குப் பெயர் போனது. பெரிய அளவு நிலக்கடலை. உப்பு சேர்த்த நிலக்கடலை கொறிப்பதற்காக ஒரு ½ கிலோ வாங்கிக்கொண்டேன். பெரிய அளவு விதையுள்ள பச்சை திராட்சை ½ கிலோ வாங்கினேன். பேருந்து பிரயாணம் ரொம்ப நேரம் என்றால் கொறிக்க உபயோகமாக இருக்கும்.
பிறகு அங்கிருந்து 130 கிமீ தூரத்தில் உள்ள சோம்நாத்தை நோக்கிப் பேருந்து சென்றது. சுமார் 1 மணிக்கு சோம்நாத்தை அடைந்தோம். பேருந்து நிறுத்துவதற்காக பிரம்மாண்டமான வளாகம் உண்டு. அங்கு பேருந்து நின்ற பிறகு, ஷேர் ஆட்டோவில் (7 பேருக்கு 100 ரூபாய்), ராமானுஜ கூடம் என்ற இட த்தை அடைந்தோம். சோம்நாத் கோவிலின் நேர் கோட்டில் உள்ள சாலையில் அமைந்துள்ளது இந்த இடம்.
பெரும்பாலும் எங்கள் லக்கேஜ்கள் பேருந்தின் மேலோ அல்லது டிக்கியிலோ இருக்கும். அதை ஒவ்வொரு இடத்திலும் இறக்க மாட்டோம். ஆனால் எப்போதும் கையில் ஒரு பையில், தட்டு டம்ளர் மற்றும் மருந்து வைத்துக்கொள்வோம். (நான் ஒரு டவலும் வைத்துக்கொள்வேன். எங்கேனும் உட்கார வேண்டும் என்றால் துண்டை விரித்து அதன் மீது உட்கார்ந்துகொள்வேன். இல்லையென்றால் வெள்ளை வேஷ்டி அழுக்காகிவிடும். கறையாகிவிட்டால் கஷ்டம்). அதை மாத்திரம் எடுத்துக்கொண்டு ராமானுஜ கூட த்தை அடைந்தோம்.
அங்கு மதிய உணவாக கதம்ப சாதம், வற்றல், தயிர்சாதம் கொடுத்தார்கள் (இதெல்லாம் யாத்திரை நடத்துபவர் பண்ணினது). அன்று என்ன விசேஷம் என்று தெரியவில்லை, எங்கள் குழுவுக்கு ராமானுஜ கூட த்திலிருந்து இரண்டு வாளி ஸ்ரீகண்ட் கொடுத்தார்கள் (இது குஜராத்தி இனிப்பு. அவங்க பூரிக்கு ஸ்ரீகண்ட் தொட்டுப்பாங்க. எனக்கு ரொம்பவே பிடித்தமான இனிப்பு. அமுல் பிராண்டும், நிறைய வகை ஸ்ரீகண்ட் தயாரிக்கறாங்க, மேங்கோ ஸ்ரீகண்ட், ஏலக்காய் ஸ்ரீகண்ட் என்று பலவிதம். பஹ்ரைனில் இருக்கும்போது எப்போதாவது, ஹோட்டலில் பூரி ஸ்ரீகண்ட் சாப்பிடுவேன். வீட்டில் அமுல் ஸ்ரீகண்ட் வாங்கி வைத்துக்கொண்டு, ஸ்பூன் ஸ்பூனாகச் சாப்பிட்டதில் எடை வெகுவாக ஏறிவிட்டது. பிறகுதான் ஸ்ரீகண்டின் செய்முறையை அறிந்து, சாப்பிடுவதை அறவே தவிர்த்தேன்) அதனை எல்லோருக்கும் ஒரு கரண்டி இலையில் போட்டார்கள். ரொம்ப சுவையாக இருந்தது.
எங்கள் பைகளை மண்டபத்தின் ஒரு இடத்தில் வைத்துவிட்டு, ஷேர் ஆட்டோவில், சோம்நாத்தில் உள்ள முக்கிய இடங்களை தரிசிப்பதற்காகச் சென்றோம். ஒருவருக்கு 20 ரூபாய்தான்.
சோம்நாத்தில் முக்கியமாக தரிசிக்கவேண்டிய கோவில்கள்/இடங்கள், ஸ்ரீகிருஷ்ணர் உடல் தகனம் செய்யப்பட்ட பிரபாஸ் தீர்த்தக் கரை, அங்கேயே இருக்கும் பலராமர் இவ்வுலகிலிருந்து மறைந்த இடம், மூன்று நதிகள் சங்கமமாகும் இடம், சூரியனுக்கான கோவில், ஆதிசங்கரர் தபஸ் செய்த இடம், பஞ்சபாண்டவர்கள் வந்த இடம் என்று பல உள்ளன. ஒவ்வொரு இடத்திலும் அதிக நேரம் ஆகாது என்றாலும், தரிசிக்கத் தவறவிடக்கூடாத இடங்கள் அவை.
இந்த யாத்திரையில் எந்த எந்த இடங்களைப் பார்த்தோம் என்பதை ஒவ்வொன்றாகக் காண்போம்.
சாலையின் ஒரு முனை சோம்நாத் கோவில் என்றால், மறு புறம் நோக்கித்தான் எங்கள் ஆட்டோ சென்றது. சோம்நாத் கோவில் பற்றி எழுதும்போது அப்போதிருந்த நிலைமையை எழுதுகிறேன்.
முதலில்
நாங்கள் சென்றது திரிவேணி சங்கம ம் என்ற Gகட்டம். இங்கு ஹிரண், கபில மற்றும் சரஸ்வதி
ஆறுகள் சங்கமிப்பதாக ஐதீகம். இந்த மூன்று ஆறுகளூம் அரபிக்கடலில் சங்கம ம் ஆகின்றன (சோம்நாத்தில்). சரஸ்வதி நதி, பிறப்பிற்கும், கபில நதி வாழ்விற்கும், ஹிரண் நதி இறப்பிற்கும்
ஒப்புமையாகச் சொல்கின்றனர். இங்கு தீர்த்தமாடுவது விசேஷம் (நாங்கள் குளிக்கவில்லை. தண்ணீரை
ப்ரோட்சித்துக்கொண்டோம்)
சீகல் எனப்படும் கடற்கரைப் பறவைகள் மிக அதிக அளவில் இருந்தன.
அங்கிருந்து கிளம்பி வெகு அருகில் இருந்த தேஹோத்சர்க் எனப்படும் இடத்திற்குச் சென்றோம். ஜரா எனப்படும் வேடனால் அம்பெய்யப்பட்டு ஸ்ரீகிருஷ்ணர் விராவல் என்ற இடத்தில்தான் உயிர் நீத்தார் என்று படித்திருக்கிறேன். ஆனால் இங்கு என்ன சொல்கிறார்கள் என்றால், அங்கு வேடனால் அடிபட்ட பிறகு, காயமுற்ற கிருஷ்ணர் மெதுவாக நடந்து வந்து ஹிரண்ய ஆற்றுக்கரையை அடைந்து அங்கு சிறிய குகையில் உயிர்நீத்தார், அவருடைய சரம உடல் நதிக்கரையில் எரியூட்டப்பட்டது என்று. இன்னொரு புத்தகத்தில், ஸ்ரீகிருஷ்ணரைத் தேடி வந்த அர்ஜுன ன், அவரது பூத உடலைப் பார்த்து, அதனை நதிக்கரை வரையில் சுமந்துவந்து எரியூட்டினான் என்று எழுதியிருந்ததைப் படித்துள்ளேன். (இவர் ஒருவேளை கூடவே அந்தக் காலத்தில் இருந்திருப்பாரோ என்று நாம் சந்தேகப்படும்படியாக, அதாரிடேடிவ் ஆக இந்த மாதிரி விஷயங்களில் சந்தேகம் தெளிவிக்கும் நம் கீதா சாம்பசிவம் மேடம் இப்போதெல்லாம் வனவாசம் போயிருக்கிறாரோ என்று எண்ணும்படியாக இணையம் பக்கமே தலைவைத்துப் படுப்பதில்லை. அவர் வந்தால் ஒருவேளை இப்படித்தான் நடந்தது என்று சொல்லக்கூடும்)
தேகோத்சர்க் வளாகம்
இந்த வளாகத்திலேயே 4 கோவில்கள் இருக்கின்றன. வளாகத்தில் நுழைந்தாலே ஒரு தெய்வீக இட த்திற்கு வந்திருக்கிறோம் என்று தோன்றியது. இந்த வளாகம் ஹிரண்ய நதிக்கரையில் அமைந்துள்ளது. மரங்கள் சூழ்ந்த இடம். சோம்நாத் கோவிலிலிருந்து 1 ½ கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. தேகத்தினுடனே ஸ்வர்கத்தை அடைந்தார் என்று குறிப்பிடும்படியாக தேகோத்ஸ்வர்க் என்ற பெயரா இல்லை தேகோத்சர்க் என்பதற்கு வேறு அர்த்தம் உண்டா என்பதை தில்லி வெங்கட் நாகராஜன் அவர்கள் வந்து சொல்லலாம்.
முதலில் இருக்கும் கோவில் கீதா மந்திர் எனப்படுகிறது. பளிங்குச் சுவற்றில் கீதையை எழுதியிருக்கிறார்கள். கோவிலின் மூலவர், ஸ்ரீவேணுகோபாலர். ஆநிரை பின்னிற்க, குழலூதும் பாணியில் அமைந்த திருவுருவம்.
அந்தக்
கோவிலின் அருகிலேயே பலராமர் கோவில் அமைந்துள்ளது. இங்குதான் பலராமர் குகை எனப்படுவது
அமைந்திருக்கிறது.
ஸ்ரீ
கிருஷ்ணர் உடல் தகனத்திற்குப் பிறகு, தான் வந்த காரியம் முடிந்தது என்று
எண்ணிய பலராமர்,
இங்கிருந்த
குகைக்குள் நுழைந்து மனித உடலை விட்டுவிட்டு, ஆதிசேஷன் உருவமெடுத்து இந்த உலகை
விட்டு நீங்கினார். இந்தக் குகைக்குள், ஆதிசேஷன் உருவம்
சுவற்றில் அமைந்துள்ளது.
இது
மிகப் புராதானமான இடம்.
குகை போன்ற இடத்தில் நுழைந்த பிறகு, பலராமர்
தன்னடிச்சோதிக்கு எழுந்தருளிய இடம் வருகிறது. சுவற்றில்
ஆதிசேஷன் திருவுருவம்.
சுவற்றில்
உள்ள ஓட்டை,
குகைப்பகுதி
உள்ளே இருக்கிறது என்று காட்டுகிறது. பலராமர் பாதச் சுவடுகள்.
யுகங்கள் கழித்து இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன் என்பதற்கான புகைப்படம். (கடவுள் நேரே வந்து, பக்தா…உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டால், கொஞ்சம் இரு.. முதலில் ஒரு புகைப்படம் உன்னுடன் எடுத்துக்கொள்கிறேன், பிறகு யோசித்து என்ன வேண்டும் என்று கேட்கிறேன் என்று சொல்லிவிடுவார் போல இந்த ஆள் என யோசிக்காதீர்கள். எல்லாம் ஒரு நினைவுக்குத்தான். இது பற்றி எழுதும்போது ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. விஷயம் சின்னது, ஆனால் எழுத்தில் நெடியதாக வருகிறது. கர்னாடக வைணவ பக்தர்கள் திருப்பதிக்குச் சென்று வருடா வருடம் நாலாயிர திவ்யப்ப்ரபந்தம் சேவிப்பது நடந்துகொண்டுவருகிறது. நானும் இரண்டு வருடங்கள் சென்றிருக்கிறேன். முதல் முறை சென்றிருந்தபோது, எங்கள் ஆச்சார்யர், நாங்கள் ஆண்டவன் என்று அழைப்போம், திருப்பதியில் இரண்டு மாத தவத்திற்காகத் தங்கியிருந்தார். வருடத்தில் இரண்டு மாதங்கள் ஒவ்வோர் இடத்தில் தங்குவார்கள். அங்கிருந்து வேறு இடத்திற்கு நகர மாட்டார்கள். நிறைய உணவுக் கட்டுப்பாடு உண்டு. இதனைப்பற்றி எழுத ஆரம்பித்தால் நீண்டுவிடும். பிறகு ஒரு சமயத்தில் எழுதுகிறேன். ப்ரபந்தம் சேவிப்பது மூன்று நாட்களில் முடிந்தது. நான்காவது நாள் ஆண்டவன் ஸ்வாமிகள் அங்கு வந்து எங்களுக்கு ஆசியும் ப்ரபந்தம் சம்பந்தமாக சொற்பொழிவும் நிகழ்த்தினார். நான் அந்தப் படங்களை எல்லாம் எடுத்தேன். ஆனா பாருங்க..புகைப்படம் எடுப்பவனை, அவருடன் சேர்த்து யாருமே படம் எடுக்கவில்லை. அதனால் அன்று இரவு, அவர் தங்கியிருந்த ஆச்ரமத்துக்குச் சென்று, அவரிடம், எல்லோரையும் உங்கள் அருகில் இருக்கும்போது புகைப்படம் எடுத்த நான், எந்தப் புகைப்படத்திலும் இல்லை. அதனால் ஒரு நினைவுக்காக உங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவா என்று விநயத்துடன், கொஞ்சம் தைரியமாகக் கேட்டேன். அவர் இந்தக் கோரிக்கையை எண்ணிச் சிரித்துவிட்டு, அருகிலிருந்தவரிடம் புகைப்படம் எடுக்கச் சொன்னார். அது பெரிய நினைவு அல்லவா? )
பலராமர் கோவிலை அடுத்து, ஸ்ரீ லக்ஷ்மி நாராயணர் கோவில் அமைந்துள்ளது. அங்கு லக்ஷ்மி நாராயணரை தரிசனம் செய்தோம். அதை ஒட்டியே, காசி விஸ்வநாதர் கோவில்/சன்னிதி அமைந்துள்ளது. மிகச் சிறிய சிவன் சன்னிதி என்றாலும் மிகப் புராதானமானது அது.
இதற்குப்
பிறகு வளாகத்தில் இருந்த ஸ்ரீ கிருஷ்ண பாதம் என்ற, Gகோலோgக் Dhதாம் என்கிற ஸ்ரீகிருஷ்ணர்
எரியூட்டப்பட்ட (அவரது பாதம் அமைக்கப்பட்ட) சிறிய இட த்தைத் தரிசனம்
செய்தோம்.
பிரபாஸ்
நதிக்கரை என்பதால்,
அங்கு
அந்த நினைவுக்கான இடத்தை அமைத்திருக்கிறார்கள். அதனை பிரதட்சணம் செய்து வணங்கினோம்.
ஸ்ரீகிருஷ்ணர், வேடனால் அம்பு எய்யப்பட்ட இடம் BHAபால்கா தீர்த்த என்று அழைக்கப்படுகிறது (அது விராவல் என்ற இட த்தில் இருக்கிறது). எரியூட்டப்பட்ட இடம், மஹா காளி கோவில் அருகில் இருக்கிறது. இதனைத்தான் தேஹோசர்க், உடல் மறைந்த இடம் என்று அழைக்கின்றனர். இந்தப் பகுதியில் இருக்கும் ஆஹிர் சமூகப் பெண்கள், இந்த துக்கத்தைக் குறிக்க இப்போதும் கருப்பு நிற உடைகளையே அணிகிறார்களாம்.
ஸ்ரீகிருஷ்ணர்
தகனம் செய்யப்பட்ட இட த்தையும், அவருடைய அண்ணன் பலராமர் இந்த உலகை விட்டு நீங்கிய
இடத்தையும் தரிசித்த பிறகு மனது கனக்கிறது. அடுத்து எங்கு சென்றோம் என்பதை
அடுத்த வாரம் பார்க்கலாமா?
(தொடரும்)
நின்று நிதானமாக ஒவ்வொரு இடத்தையும் சவுகரியமாக பார்க்க நல்ல உணவு வசதியுடன் பயண ஏற்பாடுகள் செய்த பயண முதல்வர் பாராட்டுக்குரியவர்.
பதிலளிநீக்குகுஜராத் என்றாலே கிருஷ்ணர் சம்பதப்பட்ட ஏராளமான கோயில்கள் உள்ளன போலும். எல்லாக்கோயில்களுக்கும் வாசகர்களையும் அழைத்துச்சென்று அங்குள்ள கோயில்களின் புகைப்படங்களையும் சென்ற விதம் மற்றும் செலவு போன்ற குறிப்புகளோடு தந்தது சிறப்பு.
பஞ்ச துவாரகையில் இனி வரும் பகுதிகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
Jayakumar
வாங்க ஜெயகுமார் சார். பஞ்ச துவாரகை யாத்திரையில் கோவில் சம்பந்தப்படாத இடங்களும், காந்தி பிறந்த வீடு போன்று, வரும். நான் செல்லும் யாத்திரைக் குழுவினர், உணவு விஷயத்தில் சூப்பர். தங்குமிடம் மாத்திரம், பாதி இடங்களில் சுமார்.இதற்கு பல காரணங்கள் உண்டு
நீக்குகற்பக கணபதி
பதிலளிநீக்குகனிவுடன் காக்க..
முத்துக்குமரன்
முன்னின்று காக்க..
தையல் நாயகி
தயவுடன் காக்க..
வைத்திய நாதன்
வந்தெதிர் காக்க..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
வாழிய நலம் துரை செல்வராஜு சார்.
நீக்குஐந்து மணிக்கெல்லாம் பதிவைப் படித்து விட்டேன்..
பதிலளிநீக்குஎப்படியோ பெருங்காயம் பதிவிற்குள் வந்து அமர்ந்து கொண்டது..
சொல்லாத சொல்லுக்க்கு விலையேதும் இல்லை..
ஹா ஹா ஹா. போர்பந்தரில் நடந்தது அது
நீக்குகாற்றாக எங்கும் கலந்தாய் போற்றி..
பதிலளிநீக்கு- என்கின்றார் திருநாவுக்கரசர்..
கற்பூரம் காற்றில் கலந்ததாகவே இருக்கட்டும்...
ஸ்தூலதிருமேனியைப் பற்றிய செய்திகள் இருந்தாலும்
ஒரு ஓரமாகவே இருக்கட்டும்.. அவை முன்னிலைப் படுவதில விருப்பம் இல்லை...
கண்ணன் என்றும் நம்முடன் இருக்கின்றவன்..
நீங்கள் சொல்வதில் அர்த்தம் உண்டு. இருந்தாலும் ஸ்தூல உருவமாக நடமாடிய இடங்கள் அவை என்பதால் முக்கியத்துவம். இவர்கள் ரத்தமும் சதையுமாக பாரத தேசத்தில் நடமாடியவர்கள்.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாழ்க வளமுடன் கோமதி அரசு மேடம்.
நீக்குபயண விவரம், வாங்கிய பொருட்கள் விவரம், உணவு வழங்கபட்டதின் விவரங்கள் எல்லாம் அருமை.
பதிலளிநீக்குபுராண கதைகள், படங்கள் மிக அருமை.
//குகை போன்ற இடத்தில் நுழைந்த பிறகு, பலராமர் தன்னடிச்சோதிக்கு எழுந்தருளிய இடம் வருகிறது. சுவற்றில் ஆதிசேஷன் திருவுருவம்.//
சிவலிங்கமும் , சூலமும் தெரிகிரதே! அதற்கு புராணவரலாறு ஏதும் இல்லையா?
//யுகங்கள் கழித்து இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன் என்பதற்கான புகைப்படம்.//
பலராமர் பாதசுவடுகள் அருகே படம் எடுத்துக் கொண்டது நல்லது. அங்கே போய் வந்த நினைவாய் இருக்கும்.
ஆண்டவன் அருகில் நின்று படம் எடுத்து கொண்டதும் மகிழ்ச்சியான விஷயம் தான். போற்ற வேண்டிய விஷயம் தான். குருவின் நினைவு வரும் போது அடிக்கடி பார்த்து கொள்ளலாம்.
வாங்க கோமதி அரசு மேடம். பொதுவா கோகுலத்திலும், மற்ற பகுதிகளிலும் சிவன் சன்னிதிகள் உண்டு. பிரபாஸ தீர்த்தக் கரையில் உள்ள காசி விசுவநாதர் ஆலயத்தின் வரலாறு தெரியவில்லை
நீக்குஸ்ரீ லக்ஷ்மி நாராயணர் மந்திர், ஹிரண்ய நதி, மற்றும் கிருஷ்ணர் பற்றி சொல்லி அவர் இருந்த, இறந்த இடங்களை படங்கள் மூலம் தரிசனம் செய்து கொண்டேன். ஆநிரைகளை காத்தவன் வீடு ஆநிரைகளின் வீடு.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி. அடுத்த பதிவை தொடர்கிறேன்.
நன்றி கோமதி அரசு மேடம்.
நீக்குகரந்தை ஜெயகுமார் சாரையும் திண்டுக்கல் தனபாலன் அவர்களையும் எங்கள் பிளாக்கில் பார்க்க முடிவதில்லையே. அவர்கள் நலமா?
பதிலளிநீக்கு@ அன்பின் நெல்லை..
பதிலளிநீக்கு/// இவர்கள் ரத்தமும் சதையுமாக பாரத தேசத்தில் நடமாடியவர்கள்... ///
இப்படியான உணர்வை மாற்றியதில் மேலைக் கல்வி முறைக்குப் பெரும் பங்கு உண்டு..
மேலைக் கல்வி முறைக்கு மட்டும்தானா? இல்லை ஆட்சியாளர்களும் காரணமா?
நீக்குவழக்கம் போல தகவல் தொகுப்பு அருமை..
பதிலளிநீக்குநன்றி துரை செல்வராஜு சார்
நீக்குபடங்கள் வழக்கம் போல அழகு.
பதிலளிநீக்குஇப்பதிவு வழக்கத்தைவிட சுவாரஸ்யமாக இருந்தது தமிழரே...
நன்றி கில்லர்ஜி
நீக்கு(மனைவி நம்மை சிறுமையாகப் பார்க்க விடமாட்டோமுல்ல. அப்படி நம்மை ஒரு மாதிரி பார்த்தால், அது சரி..எனக்கு அன்றைக்கு ஜலதோஷத்தினால் வாசனை சரிவர தெரிந்திருக்காது, நீ, கண்டிப்பாக வாங்கவேண்டாம், பெருங்காயம் மாதிரியே வாசனை வரலைன்னு ஸ்ட்ராங்கா சொல்லியிருக்கலாமே என்று ப்ளேட்டைத் திருப்பிப் போடக்கூடத் தெரிந்திருக்காதா? ஹா ஹா) //
பதிலளிநீக்குஇதுதா முதல்ல கண்ணுல பட்டுச்சு!!!!!! ஹாஹாஹாஹா வீட்டுக்கு வீடு வாசப்படி போல!!! ஹூம்.....நாங்க சொன்னா கேக்கறதுக்கு ஆள் இருந்தா தானே!!!
பெருங்காயம் எல்லாம் ராஜஸ்தான்ல பார்த்து வாங்கணும். பிரபலம் அங்கு. இப்படி மூட்டைல இருக்கறத வாங்கக் கூடாது. என் தங்கை பெண் ஜெய்பூர் சுத்திப் பார்க்க போனப்ப அங்க பெருங்காயம் நல்லாருக்கும்னு சொல்ல வாங்கிருக்க செம மணமாம். கட்டிகளும், பொடியுமெ. எனக்கும் வாங்கிருக்கா ஆனா இன்னும் இங்கு வந்து சேரலை!!!
கீதா
ஜெய்ப்பூர்ல எங்க வாங்கறது? என்ன பெயர் சொல்லணும்? எதையாவது ஆசை மூட்டி, கருப்பு கட்டியா எதையாவது வாங்கிடப் போகிறேன் (உங்களை நம்பி.. ஹா ஹா ஹா)
நீக்குஹ்ஹாஹாஹா நெல்லை உங்களுக்குக் கடை பெயர், ஆன்லைன்ல வாங்குறது தருகிறேன். பொருளோடு சேர்த்து போஸ்டல் சார்ஜ் 80 ரூபாய்.
நீக்குகீதா
அனுப்புங்க. அத்தோடு நீங்க வாங்கும் பெருங்காயம் பற்றியும் சொல்லுங்க.
நீக்குவறுத்த உப்பிட்ட கடலை, திராட்சை...ம்ம்ம்ம்ம் நடத்துங்க...பாருங்க எனக்கு இந்தத் திங்கற விஷயங்கள்தான் முதல்ல கண்ணுல படுகிறது!!.
பதிலளிநீக்குஆஹா பூரிக்கு ஸ்ரீகன்ட் செமையா இருக்கும் நெல்லை. ஸ்ரீகன்ட் வீட்டில் செய்ததுண்டு. இந்தக் காம்பினேஷன் சாப்பிட்டதுண்டு. கொஞ்சமாதான். இப்பலாம் ம்ஹூம். ரொம்பப் பிடிக்கும் ஆனா சுத்தமா நஹி! ஆசைய வேற கிளப்பிட்டீங்க. செய்துடலாமான்னு வேறு தோன்றுகிறது மாங்காய், மாம்பழம் இப்பதான் வரத் தொடங்கியிருக்கிறது. ரொம்ப காணலை...
கீதா
மாம்பழம் இப்போ கிலோ 200 ரூக்கு கொஞ்சம் குறைவு. கொஞ்சம் காத்திருங்கள். இப்போ பச்சை திராட்சை கிலோ 50 ரூ, மார்க்கெட்டில் வரவு குறைவாகிடுச்சு (சீசன் முடிந்த து). இனி மாம்பழம், பலாப்பழம்தான்.
நீக்குஸ்ரீகண்ட், ரொம்பவே வெயிட் போடும். ஆனால் ருசி கீதா ரங்கன்(க்கா)
ஹாஹாஹா ரொம்ப தின்னா வெயிட் போடும் தான். நாம என்ன கிலோ கணக்கிலா சாப்பிடப் போறோம். நிஜமாகவே ருசினா ருசி ....எனக்கு ரொம்பப் பிடிக்குமே ஆனா ஸ்வீட்டாச்சே
நீக்குகீதா
நல்லா இனிப்பு செய்யத் தெரிந்தவங்களுக்கு டயபடீஸ் என்பதால் சாப்பிட முடிவதில்லை. நல்லா சாப்பிடலாம் என்று வருபவர்களுக்காவது செய்து தரலாம். பரவாயில்லை... தில்லி இனிப்பு வகைகள் ஏப்ரல் முடிவில் கிடைக்குமா? ஹி ஹி ஹி
நீக்குதீரம் படங்களும், சீகல் நிறைய இருக்கும் படங்கள் செம.
பதிலளிநீக்குகீதா மந்திர்னு இப்படி ஓல்டா இருக்கலாமோ!!!! ஹாஹாஹா....
உள்ளே அழகு...
ஹிரண்ய நதி படமும் செமையா இருக்கு.
உங்கள் அனுபவங்கள், ஆண்டவனோடு புகைப்படம் எடுத்தது இங்கு சன்னதியில் உள்ள புகைப்படம் எல்லாமே சூப்பர் போங்க.
இப்ப உள்ள ஆண்டவன் சுவாமிகளா இல்லை இதற்கு முன்னானவர் என்று நினைக்கிறேன் எங்கள் மாமியார் குடும்பத்திற்கு உறவு. எங்க குடும்பத்துல இரு ஆசிரமங்களோடும் சுவாமிகளோடும் நெருக்கமாக இருக்கறவங்க உண்டு.
கீதா
அந்த கீதா வேற... இந்த கீதா வேற.
நீக்குஒவ்வொரு குடும்பத்திலும் சிலர் ஆச்ரமத்தோடு நெருக்கமாக இருப்பது இருக்கும்.
அதென்ன அந்த கீதா ? இந்த கீதா ....!!!! புரியவே இல்லை ஹ்ஹிஹிஹிஹி
நீக்குகீதா
அந்த கீதா மந்திருக்கு வயசானாலும் அப்படியே பழைமை மாறாம இருக்கும். இந்த கீதா (ரங்கன்)வுக்கு வாரம் ஏற ஏற மாறிக்கிட்டே இருக்கும் (வயசு குறைஞ்சுக்கிட்டே இருக்கும்னு சொல்ல வந்தேன்)
நீக்குபடங்கள் எல்லாம் ரொம்ப நல்லாருக்கு நெல்லை
பதிலளிநீக்குகீதா
நன்றி கீதா ரங்கன்
நீக்குபஞ்ச துவாரகை யாத்திரையில் கிருஷ்ணர் எரியூட்டப்பட்ட இடம்,பலராமர் சோதிக்கு எழுந்த இடம் என தரிசித்தோம்.
பதிலளிநீக்குஉங்கள் பயணத்தில் நாங்களும் பல முக்கியத்துவமான இடங்களையும் கண்டு களிக்கிறோம். மிக்க நன்றி.
உங்கள்யாத்திரைகள் தொடரட்டும் நாங்களும் தொடர....வருகிறோம்.
வாங்க மாதேவி... நன்றி
நீக்கு
பதிலளிநீக்கு@ அன்பின் நெல்லை
/// மேலைக் கல்வி முறைக்கு மட்டும்தானா? இல்லை ஆட்சியாளர்களும் காரணமா?.. ///
மேலைக் கல்வி சரில்லை என்று பல ஆண்டுகளுக்கு முன்பே தெரியும்..
இருந்தும் ...
ஆட்சியாளர்கள்தாம் பெரும்பாலும் காரணம். நிறைய வரலாற்று மாற்றங்கள், கெட்ட நிகழ்வுகளைப் பற்றி எழுதாமை, இந்திய அரசர்களைப் பற்றிக் கண்டுகொள்ளாதது, நன்னெறியை அப்படியே மறந்துவிட்டது என்று பலவற்றைச் சொல்லலாம்.
நீக்குவணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பஞ்ச துவாரகா யாத்திரை பதிவும் அருமையாக உள்ளது.
நல்ல விளக்கமுடன் பல விபரங்கள் படித்து தெரிந்து கொண்டேன். எல்லா படங்களும் மிக அருமையாக உள்ளது. புண்ய நதி தீரங்கள் படங்கள், ஸ்ரீ பலராமர் ஸ்ரீ கிருஷ்ணர் பற்றிய படங்கள் என அனைத்தும் அற்புதம். தாங்கள் ஸ்ரீ பலராமர் தன்னுடைய உடலை துறந்து சென்ற இடத்தில் நினைவுக்காக எடுத்துக் கொண்ட படமும் அருமையாக உள்ளது.
தாங்கள் இந்த கோவில் யாத்திரையில் எங்கெல்லாம் தங்கியது, உணவருந்தியது, மற்றும் செல்லுமிடங்களைப்பற்றிய விபரங்கள் என ஒன்று விடாமல் எல்லாவற்றையும் விபரமாக சொல்லி வருவதால் நாங்களும் உங்களுடன் பயணித்து அனைத்து இடங்களையும் தரிசித்த ஒரு திருப்தியான உணர்வை பெற முடிகிறது. இதற்கே உங்களுக்கு ஆயிரம் கோடி நன்றிகள்.
ஸ்ரீ கிருஷ்ணர் உடல் தகனம் என்ற செய்தியை என்மனமும் ஏனோ ஏற்க மறுக்கிறது. இறைவனின் அவதாரமாக பிறந்திருந்தும் , மனிதவுடல் எடுத்து ஒரு மனிதனாக வாழ்ந்ததினால் இந்த முடிவோ.. என நினைக்கும் போது என் மனதும் கனத்துப் போகிறது. அந்த இடத்தையும் மனசஞ்சலத்துடன் தரிசித்துக் கொண்டேன். உங்களால்தான், உங்கள் பதிவுகளின் வாயிலாகத்தான் இப்படி ஓர் இடங்களை கண்டு அதைப்பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ள முடிகிறது. மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம்... மனிதனாகப் பிறந்ததால்தான் இராமன் நிறைய துன்பங்கள் (மனைவியைப் பிரிந்து) அனுபவிக்க நேர்ந்தது. கடைசியில் தன் அவதார ரகசியம் தெரிந்து சரயு நதியில் நடந்து உலகைவிட்டு மறைந்தார். அவர் மறைந்தவுடன் வானத்தில் அவர் காட்சி தந்தார் என்று இதிஹாசம் சொல்கிறது. கிருஷ்ணருக்குத் தன் பிறப்பின் ரகசியம் தெரியும், அதற்கு ஏற்றபடி பல இடங்களில் தன் சக்தியை வெளிப்படுத்தியிருக்கிறார் (ஞானக் கண் கொடுத்து, பிறகு அதனை மறக்கச் செய்திருக்கிறார்). அதனால் தான் இவ்வுலகை விட்டு நீங்கும் தருணம் வந்தபோது அதனை ஏற்றுக்கொண்டிருக்கிறார். அர்ஜுனன் கிருஷ்ணரைத் தேடி வந்து அவர் உடல் இருக்கும் இடத்தைப் பார்த்து, அதனைத் தன் தோளில் சுமந்து இங்கு தகனம் செய்வதாக இதிகாசங்கள் சொல்கின்றன.
நீக்குஇந்த இடங்களின் தரிசனம் நம் மனதில் எண்ண அலைகளைத் தோற்றுவிக்கும்.
உங்கள் கருத்துக்கு நன்றி
கிருஷ்ணர் தகனம் செய்யப்பட்ட இடமும் பலராமர் இவ்வுலகை விட்டு நீங்கிய அந்த இடங்கள், நதிகள் படங்கள் என்று எல்லாமே நல்ல விளக்கங்களுடன் மிக அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள், நெல்லைத்தமிழன்.
பதிலளிநீக்குவட இந்தியாவில் பொருட்கள் வாங்கும் போது கொஞ்சம் கவனமாகத்தான் வாங்க வேண்டும். போலியானவை கிடைக்கும் என்று தோன்றுகிறது இல்லையா?
எப்படியோ உங்கள் சுவாமிகளுடன் படம் எடுத்துக் கொண்டீர்களே! அவரும் அனுமதித்திருக்கிறாரே. இறைவன் சித்தம்.
துளசிதரன்
வாங்க துளசிதரன் சார்... நன்றி.
நீக்குநான் முதன் முதலில் ஏமாந்தது பம்பாயில். அங்கு எக்ளர்ஸ் போன்ற பல சாக்லேட்டுகள் விலை மலிவாகக் கிடைத்தன.(1990). அதை நான் சென்னைக்கு வாங்கிவந்த பிறகுதான் தெரிந்தது, அவை போலி கம்பெனிகளின் தயாரிப்பு என்று. (ஆனால் பம்பாயில் அப்போது கிடைத்த குல்ஃபி... ஆஹா). வட இந்தியா என்று சொல்லக்கூடாது, எங்குமே போலிகள் அதிகம். தற்போது கருங்காலி மாலைகள் என்று ஒரே போலி, தமிழகத்தில். வட இந்தியாவில் ஸ்படிக மாலையில் போலிகள் உண்டு. தமிழகத்தில் ருத்திராட்ச மாலையில் போலிகள் அதிகம்
Dehotsarg - தேஹோத்சர்க் - தேகத்தினை விட்ட இடம்! தேஹோத்ஸ்வர்க் அல்ல!
பதிலளிநீக்குஉங்கள் பயண அனுபவங்கள் அனைத்தும் நன்று. சோம்நாத் சென்ற போது எங்கள் பயணங்களில் வெகு சில இடங்கள் மட்டுமே சென்றோம்.