என்னுடைய துரோகம் மன்னிக்கப்பட்டது, அல்லது பெரிதாக மதிக்கப்படாமல் மறக்கப்பட்டது! வயதும் காரணம்! அவன் அதை பெரிதாக நினைக்கவில்லை. நினைக்கவில்லை என்றும் சொல்ல முடியாது........ என்று முடித்திருந்தேன் சென்ற வாரம்....
கொஞ்ச நாள் போயிருக்கும் என்று ஞாபகம். எங்கள் மாங்காய் சேட்டைகளை நிறுத்த முடியாது. ஏற்கெனவே வெகு தூரத்தில் காவல், அதுவும் கம்மியாக இருக்கும் எதிர் காம்பவுண்டில் மஞ்சநாரி மாங்காய் சாப்பிட்டு பல்கூசி போயிருந்தோம். பழமானால் மிக இனிக்கும் மஞ்சநாரி காயிலே புளிப்பதென்ன கன்னி இளமானே என்று பாடவேண்டும்! பல்கூசினாலும் பழக்கம் கூசா வயது! மஞ்சநாரி மாங்கா திருட்டில் எங்களுக்கு தெனாவெட்டு அதிகம். காவல் இல்லை என்பதால் அங்கேயே காம்பவுண்டு சுவரின் மீதே அமர்ந்து நியூஸ் பேப்பரில் உப்பு, காரப்பொடி வைத்துக் கொண்டு மாங்காயை கல்லால் உடைத்து தொட்டுத்தொட்டு சாப்பிட்டு கூசுவோம்! எங்கள் ஏரியா 7 ம் நம்பர் பஸ் எங்களைத் தாண்டிச் செல்லும். தெரிந்தவர்கள் எங்களை பஸ்ஸிலிருந்து பார்த்த வண்ணம் செல்வார்கள்.
அங்கிருக்கும் பெரிய வீடுகளில் ஒவ்வொரு வீட்டு மாங்காய்க்கு ஒவ்வொரு ருசி. ஒரு ருசியை சுவைத்து, இன்னொரு ருசியை விடமுடியாது!
அடுத்த சனி ஞாயிறில் ஜட்ஜ் வீடு. ஏறி எல்லாம் குதிக்க முடியாது. சுற்றிலும் கம்பி வேலி. பார்த்தால் தெரியும். இதற்கு தனி வழி வைத்திருந்தோம். என்ன செய்ய, அவர்கள் வீட்டிலும் மாமரம் இருந்ததே... கம்பிகேட் ஒன்று இருக்கும். அதைத் திறந்து மூடலாம். அதன் சமீபம் நாங்கள் கிரிக்கெட் விளையாடுவோம்.. வேண்டுமென்றேதான். பந்து அடிக்கடி உள்ளே போகும் அங்கிருப்பவர்களிடம் அனுமதி கேட்டு, கதவைத் திறந்து உள்ளே சென்று சமர்த்தாக எடுத்து வருவோம். இந்தப் பக்கம் அந்தப் பக்கம் திரும்ப மாட்டோம். தினசரி பார்த்து அவர்களுக்கும் அலுத்த காட்சி. அதுவும் பலமுறை. எனவே காவல் பலவீனப்படும்.
சனி ஞாயிறில் திருட்டு அரங்கேறும். உள்ளே சென்றதும் இரண்டு மோட்டார் ரூம் இருக்கும். இரண்டுக்கும் நடுவில் தென்னம் ஓலை போன்ற தடுப்பும் இருக்கும். அங்கிருந்து கொஞ்ச தூரத்தில் மாமரங்கள். இங்கு ஒரு செட் விளையாடிக் கொண்டிருக்க, இருவர் மட்டும் நழுவி அங்கே சென்று விடுவோம். மறைவில் காத்திருந்து நேரம் பார்த்து மாங்காய் 'எடுக்க'ப்படும்! பெரும்பாலும் யாரும் கவனித்ததே இல்லை. சட்டென யாராவது வந்து விட்டாலும் சட்டென குனிந்து புதரில் பந்தைத் தேடுவோம்- 'அடித்தவனை' திட்டிக் கொண்டே! அல்லது மோட்டார் ரூம் அருகே ஒளிந்திருப்போம். 'விளையாட்டு வீரர்கள்' சிறு சிரிப்புடன் எங்களை மறைமுகமாக கவனித்தவாறிருப்பார்கள். இங்கும் ஒவ்வொரு வாரம் ஒவ்வொரு ஆள் உள்ளே சென்று கைவரிசை காட்டுவான்.
இங்கு இந்தமுறை மாங்காய் திருடுவது என் முறை. உள்ளே சென்று பதுங்கி இருந்தேன். நேரத்துக்காக காத்திருந்தபோது இரண்டு ஆட்கள் வந்து விட, காவலுக்கிருந்த கண்ணன் வினோதமான ஒரு காரியம் செய்தான்... "அய்யய்யோ... ஓடி வந்துடுடா..." என்றபடியே வெளியே ஓடிப்போனான். திரும்பிப் பார்த்தால் வாசலில் இருந்த கிரிக்கெட் டீம் காணாமல் போயிருந்தது. அவன் சொல்லா விட்டால் வந்தவர்களுக்கு தெரிந்திருக்காது. உடனே திரும்பிச் சென்றிருப்பார்கள்.
பந்தெடுக்க வந்தேன் என்கிற பொய் எடுபடவில்லை. MGR பட கிராமத்து அடியாள் மாதிரி சட்டை போடாமலிருந்த இருவரில் ஒருவர் என் கையை முறுக்கியதில் அப்ரூவர் ஆனேன்.
"எவ்வளவு நாளா நடக்குது இது?"
"இல்லேண்ணே... இப்போதான் முதல்.. பசங்க ஒண்ணு பறிச்சிட்டு வாடான்னு சொன்னாங்க.. இல்லாட்டா விளையாட்டுல சேர்த்துக்க மாட்டாங்க..." கண்கலங்கி, கையை நேராக்கிக் கொள்ள முயன்றேன். வலித்தது. 'இனிமே மாங்காயே திருடக் கூடாதுடா...' (பிரசவ வைராக்கியம்) ஜட்ஜ் வீடு என்பதால் ஜெயிலில் போட்டு விடுவார்களோ என்று பயமாய் இருந்தது.
"விடுப்பா... போகட்டும்.. டேய்.. எவ்ளோ மாங்காடா பறிச்சே?"
"இன்னும் ஒண்ணு கூட இல்லண்ணே.."
இன்னொருவனுக்கு என்னை விட்டு விட மனமில்லை.
"இத்தனூண்டு இருந்துகிட்டு நம்மள ஏமாத்தறான் பாரேன்..." என்றபடியே என்னை அங்கிருந்த மோட்டார் ரூம் கதவைத் திறந்து உள்ளே தள்ளினான்.
"அண்ணே.. வேணாம்ணே... என்னண்ணே பண்றே.. விபரீதமாயிடும்" இன்னொருவன் பதறினான், 'நாளை நமதே நல்ல திருடன்' மாதிரி. அவன் திருடனா, நான் திருடனா?
"சட்டையை கழட்டுறா.." கழற்றினேன். "கொடு" கொடுத்தேன்.
"அப்படியே நில்லு. மோட்டார் ஓடுது.. பக்கத்துல போய் அது மேல பட்டே பஸ்பமாயிடுவே.. நகராம நில்லு... நான் போயி ஜட்ஜையாவையும், போலீஸையும் அழைச்சுட்டு வர்றேன்"
மாங்காய் திருட்டுக்கு ஜட்ஜும், போலீஸும்... அதுவும் திருடாத மாங்காய்க்கு!
நான் உடையத் தயாராயிருந்தேன். இன்னொருவன் அவனிடமிருந்து சட்டையை வாங்கி என்னிடம் வீசினான். "சொக்காயை மாட்டுறா தம்பி"
அன்று இது மாதிரி கண்ணனுக்கு என்னென்ன அனுபவங்கள் ஏற்பட்டதோ...
இதற்குள் இங்கிருந்து ஓடிய கூட்டம் கண்ணன் தலைமையில் நேராக என் வீட்டுக்கு சென்றது. என் அண்ணனிடம் விஷயத்தைச் சொல்லி அழைத்து வந்தான் கண்ணன். அண்ணனும் அவர் நண்பரும் ஏற்கெனவே என் அப்பா சார்பில் எனக்காக 'சில விஷயங்களை' சமாளி த்த / ப்பவர்கள்தான் - அப்பாவுக்கு தெரியாமல்தான்! பெரிய விவாதம் எல்லாம் எதுவும் இல்லாமல் அவர்கள் இருவரும் என்னை வெளியே மீட்டார்கள். கண்ணன் வந்து என் கையைப் பிடித்து அழைத்துப் போனான்.
முதல்வன் அவனை முறைப்பதைப் பொருட்படுத்தாமல் அந்த இரண்டாமவன் என்னை அழைத்து இரண்டு மாங்காய்களை என்னிடம் கொடுத்து அனுப்பினான். அவனைப் பொறுத்தவரை நாங்கள் அங்கு இதுவரை மாங்காய் திருடவில்லை. ஆசை, அனுபவமின்மையால் மாட்டிக் கொண்டு விட்டோம். எங்களுக்கல்லவா தெரியும், வருடா வருடம் ருசிக்கிறோம் என்று! ஏன், முந்தைய வாரம் கூட...!
அரைமணியில் மறுபடி அங்கே வாசலில் எங்கள் கிரிக்கெட் டீம் விளையாட தயாராவதையும், அது அங்கிருந்து விரட்டப்படுவதையும் இங்கே எங்கள் வீட்டு வாசல் சிமெண்ட்டிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தோம் நானும் கண்ணனும். மாங்காய் மொத்த டீமுக்கும் பங்கு பிரிக்கப்பட்டிருந்தது.
அப்புறம் மாங்காய் திருடவில்லை. கண்ணனின் அண்ணன் ஓரிருமுறை வாண்டையார் வீட்டு மாங்காய்கள் நான்கைந்து கொண்டு வந்து எங்களிடம் கொடுத்துச் சென்றான்.. என் அண்ணனின் நண்பர் "இன்னிக்கி எந்த ஜெயிலிலிருந்து உன்னை பெயில்ல எடுக்கணும்?" என்று கிண்டல் அடிப்பார். இதோ.. போன வாரம் கூட அவரைப் பார்த்து விட்டுதான் வந்தேன்!
கண்ணன் ஏன் என்னை காட்டிக் கொடுத்தான்? அதே சமயம் ஏன் என்னைப்போல் காணாமல் போகாமல் உடனே சென்று என் அண்ணனையும் அவர் நண்பரையும் அழைத்து வந்தான்? ஏன் எனக்கும் கண்ணன் மேல் கோபம் வரவில்லை? வேதாளக் கேள்விகள்!!
இப்போது நினைத்தாலும் புன்னகைக்க வைக்கும் இன்னொரு துரோகம் இருக்கிறது. அதுவும் 'வயசுக்காலத்து' துரோகம்தான்! நேரம் கிடைத்தால் பின்னர் அது பற்றியும் அசை(பிளேடு) போடுகிறேன்!
======================================================================================================
சிவாஜியின் கல்யாண செலவு இவ்வளவு கம்மியா? சிம்பிளாக கோயிலில் முடிந்த சூப்பர் ஸ்டாரின் திருமண வரலாறு!
நாடகத்தில் தீவிரமாக நடித்துக் கொண்டிருந்த போது அனைவரையும் போல அடுத்தக்கட்டமாக சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை சிவாஜிக்குள்ளும் இருந்தது. அப்போது அவரது பெயர் சிவாஜி கணேசன் அல்ல வெறும் கணேசன். வீர சிவாஜியாக அவரது நடிப்பைப் பார்த்து பெரியார் அவருக்கு பிற்காலத்தில் அளித்த பட்டமே சிவாஜி. பட்டம் பெயருடன் நிலைத்து, கணேசன், சிவாஜி கணேசனானார்.
நூர்ஜகான் நாடகத்தில் சிவாஜியின் நடிப்பைப் பார்த்து வியந்த பி.ஏ.பெருமாள் தனது பராசக்தி படத்தில் சிவாஜியை நாயகனாக்கினார். பராசக்திக்கு முன்பு அதே பி.ஏ.பெருமாளின் பரிந்துரையில் அஞ்சலிதேவி தயாரித்து நடித்த பூங்கோதையில் நடிக்க சிவாஜிக்கு வாய்ப்பு கிடைத்தது. பூங்கோதையே முதலில் வெளியாகியிருக்க வேண்டும். பராசக்தி சிவாஜியின் முதல் படமாக வெளிவந்தால் அவரது சினிமா வாழ்க்கைக்கு அது அனுகூலமாக இருக்கும் என பி.ஏ.பெருமாள் கேட்டுக் கொள்ள, அதன்படி பூங்கோதை வெளியீட்டை அஞ்சலி தேவியும், அவரது கணவரும் தள்ளி வைத்தனர். பராசக்தி சிவாஜியின் முதல் படமாக வெளிவந்து சரித்திரம் படைத்தது. பராசக்தி, பூங்கோதை என்று இரண்டு படங்களில் சிவாஜி ஒப்பந்தமாகி நடிக்க ஆரம்பித்ததும், இதுதான் அவர் திருமணம் செய்ய ஏற்ற நேரம் என்று முடிவு செய்த சிவாஜியின் தாயார் ராஜாமணி அம்மாள், 1952 மே 1 ம் தேதி சிவாஜிக்கும், அவரது முறைப்பெண் கமலாவுக்கும் திருமணத்தை நடத்தி வைத்தார்.
சுவாமிமலையில் திருமணம் எளிமையாக நடந்தது. பி.ஏ.பெருமாள், எம்ஜி ராமச்சந்திரன், கலைஞர் மு.கருணாநிதி, கண்ணதாசன், டி.ஏ.மதுரம், எஸ்.வி.சகஸ்ரநாமம், கிருஷ்ணன் - பஞ்சு ஆகியோர் திருமணத்தில் கலந்து கொண்டனர்.
தனது திருமணத்துக்கு சிவாஜி செலவளித்த மொத்தத் தொகை 500 ரூபாய். இதனை ஒரு பேட்டியில் அவரே தெரிவித்திருந்தார். அந்த நேரத்தில் அதிகம் செலவளிக்க என்னிடம் பணம் இல்லை, இருந்ததே அவ்வளவுதான் என்று கூறியிருந்தார். பிற்காலத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சரான கலைஞர், எம்ஜி ராமச்சந்திரன் கலந்து கொண்ட, நடிகர் திலகத்தின் திருமணத்தின் மொத்தச் செலவே 500 ரூபாய் என்பது ஆச்சரியமான உண்மை.
நியூஸ்18 தமிழ்
========================================================================
ஏகாந்தமாய்
இப்படியுமா விடியும் ஒரு நாள் ?
வார விடுமுறை தினம் என்று நினைவு. மொகதிஷுவின் அந்தச் சிறு கடைவீதியில் மதியம் சுற்றிக்கொண்டிருக்கையில், உமன் ஆப்ரஹாம் எதிரே தென்பட்டார். எடுத்த எடுப்பிலேயே.. “இன்னிக்கு நேரம் சரியில்லே. ஒரு மோசமான நியூஸ் காதுல விழுந்துருக்கு.. ஆனா இன்னும் கன்ஃபர்ம் ஆகல ..” என்று முகத்தில் கவலைக் குறிகள் படர இழுத்தார்.
”அப்படி என்ன அந்த நியூஸுல?” என்று நான் கேட்கையில், ”மிஸ்டர் லூ தவறிப்போய்ட்டாருன்னு கேள்விப்பட்டேன்..” என்று குரலைத் தாழ்த்தி ஷாக் கொடுத்தார் ஆப்ரஹாம். “யார் சொன்னது இதை?” என்று பதற்றத்துடன் வினவுகையில், “மொகதிஷு ஹாஸ்பிட்டல்ல ஒரு மலையாள சிஸ்டர் வேல பார்க்குறாங்க. அவங்களப் பாத்துப் பேசிக்கிட்டிருக்கும்போது இது கெடச்சது !” என்றார்.
திடுக்கென்றது.
”என்ன ஆச்சு அவருக்குத் திடீர்னு? ஒடம்புகிடம்பு சரியில்லாமலா இருந்தார்?” என்று கேட்டதற்கு, “ஒன்னுமே புரியல. யாராவது விபரம் சொன்னாத்தான் தெரியும்” என்று சோகமாக நகர்ந்துவிட்டார் அவர்.
லூவுக்கு என்ன வயசிருக்கும்? முகமுதிர்ச்சி, உடல் வாகு, உடல் மொழி ஆகியவை நினைவில் ரெஃப்ரெஷ் ஆக, அறுபதுகளில் இருந்திருக்கவேண்டும் என்று மனதில் பட்டது.
சுறுசுறுப்பாக, ஆரோக்யமாகத்தானே தென்பட்டார். என்ன ஆகியிருக்கும்
திடீரென்று? விடை தெரியாக் கேள்விகளில் பின்னிக்கொண்டு விழிக்க ஆரம்பித்தது மனம். மேற்கொண்டு யாரிடம் என்ன கேட்பது… யாராவது தென்பட்டு, அவருக்கும் விஷயம் தெரியவந்திருந்தால் சொல்லலாம். ஷாப்பிங்கைத் தொடரும் மனநிலை உடனே போய்விட்டிருந்தது. ஏதோ பேருக்குக் கொஞ்சம் வாங்கிக்கொண்டு வீட்டுக்குத் திரும்பினேன்.
தொலைதூர நாடொன்றில் ஒரு இந்தியரின் உயிர் போனால், அதன் விளைவுகள் அவர் வேலைபார்த்த கம்பெனியையும், குடும்பத்தையும் தாண்டி, எங்கெங்கோ எப்படி எப்படியோ பரவுமே. அவரோடு மொகதிஷுவில் வசித்துவந்த மகன் சாஸ்திரியின் முகம் நினைவில் வந்தது. ம்… வெளிநாட்டுக்கு அப்பாவும் பிள்ளையுமாய் வேலை தேடி வந்து.. கிடைத்து.. நாலு காசு சம்பாதிக்க
ஆரம்பித்திருக்கையில், இப்போ ஏன் இந்த துக்க நிகழ்வு … இந்தச் செய்தியே தப்பானதாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று மனம் ஒருபுறம் ஏங்கலானது.
பக்கத்து வீட்டில் வசித்த ரவீந்திரனோடு ஆப்ரஹாமுக்கு நல்ல நட்புண்டு. சில மாலைப்பொழுதுகளில் அவரைப் பார்க்க அரட்டை அடிக்க என, அங்கே அடிக்கடி வருவார். என் வீட்டுக் கதவையும் தட்டிக் கூட்டிச் செல்வார். மூவரும் ரவீந்திரனின் வீட்டில் உட்கார்ந்து, டீ குடித்தவாறு பேசிக்கொண்டிருப்போம். சில சமயம் என் வீட்டிலும் அது தொடரும். அந்த மாலையிலும் தலைகாட்டினார் ஆப்ரஹாம். என் வீட்டுக் கதவைத் தட்டியவர், என்னையும் அங்கு வரச் சொல்லிவிட்டு ரவீந்திரனின் வீட்டுக்குள் நுழைந்தார்.
ரவியின் வீட்டுக்குப் போனபோது மிஸ்டர் லூவைப்பற்றிய பேச்சு தவிர்க்கமுடியாது ஓடிக்கொண்டிருக்க, நானும் சேர்ந்து கொண்டேன்.
“என்ன ஆச்சு? காலையில்.. கேள்விப்பட்டது சரியான நியூஸ்தானா.. என்ன?” என்றேன்.
“அதை ஏன் கேக்கறீங்க..? ” என்ற புதிராக ஆரம்பித்த ஆப்ரஹாம் மேற்கொண்டு சொன்னது அதிர்ச்சியை வேறுதளத்திற்கு நகர்த்திவைத்தது.
“ காலையில் முதலில் கேள்விப்பட்டவுடன், அட..இப்படியாகிப் போச்சே.. சரி ..மிஸ்டர் லூவின் வீட்டுக்குப் போய் அவரது மகனிடம் இரங்கலைச் சொல்வோம். ஏதாவது உதவி தேவைப்படுதான்னும் கேட்போம்..னு நெனச்சு நானும் ரவியும் அங்கே மதியம் போனோமா… லூ வீட்டு காலிங் பெல்லை அழுத்திவிட்டு, கதவு திறக்கக் காத்திருந்தோம்.
லூவின் மகனிடம் எப்படி ஆரம்பிக்கிறது.. என்னத்தச் சொல்றது.. அந்த வீடே கந்தர்வகோலமா ஆகிப்போயிருக்குமேன்னு மனசெல்லாம் பதற்றம். சில நொடிகளில் கதவு திறந்தது. பார்த்தால்…
“வாங்க.. வாங்க!” என்று சிரிச்சுகிட்டே வரவேற்கிறாரு மிஸ்டர் லூ ! ஒரு கணம் ஆடிப்போனோம். பிறகு சமாளிச்சிக்கிட்டு உள்ளே போய் உட்கார்ந்து காலைக் குழப்பம்பற்றி ஏதும் உளறிடாம சமாளிச்சோம்.
அஞ்சு நிமிஷம் ஏதேதோ பேசிக்கிட்டிருந்துவிட்டு பொறப்பட்றோம்.. காரியம் இருக்குன்னு சொல்லிட்டு.. புடிச்சோம் ஓட்டம் அங்கேர்ந்து..!” என்று அந்த திக்திக் சீனை விளக்கினார் ஆப்ரஹாம்.
“அப்பாடி.. ஆண்டவன் எப்படியோ லூவைக் காப்பாத்திட்டான்” என்று சாந்தமானது என் மனம்.
”என்னதான் ஆச்சு பின்னே? சிஸ்டர் ஏன் அப்படி அபத்தமாச் சொன்னாங்க ஒங்ககிட்டே..?” என்று விடாமல் வினவினேன் ஆப்ரஹாமிடம்.
“அட, அதை விடுங்க.. இந்த சிஸ்டர்கள்லாம் யாரோடையும் பழகறது இல்லே… இங்கேயிருக்கிற இந்தியர் யாரோட பேரும் சரியாக்கூட இவங்களுக்கெல்லாம் தெரியாது. எதையோ பாத்து, குழம்பிப்போய் யார் பேரையோ சொல்லிட்டுப் போய்ட்டாங்க.. நானும் ’லூ வயசானவராச்சே.. ஏதாவது ஆகியிருக்குமோ..’ ன்னு நம்பி, ஒங்ககிட்டயும் ரவிகிட்டயும் சொன்னேன்.. ” என்றார்.
”நல்ல காலம் லூவுக்கு ஒன்னும் ஆகல. வேற இந்தியர் யாருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லையே.” என்று மேற்கொண்டு கேட்க, ரவி சொன்னார். “ உண்மையான நியூஸே வேற.. அது வேற லெவல் பயங்கரம்..” என்று பதற்றக்கதையைத் தொடர,
“என்ன சொல்றீங்க ரவி?” என்றேன் திடுக்கிட்டு.
அவர் சொன்ன விஷயம் என்னை உறைய வைத்தது. ’திக்குதெரியாத இந்த ஆஃபிரிக்கக் காட்டில்.. இன்னும் யார் யாருக்கு என்னென்ன அதிர்ச்சிகள்
பாக்கியிருக்கிறதோ..’ என்று சஞ்சலத்தில் உழன்றது பாழும் மனம்.
(மேலும் கொஞ்சம் வரும்)
=====================================================================
கவிதைக்கு.....
கலாப்ரியா பகிர்ந்துள்ள ஞானக்கூத்தனின் கவிதை. இது கணையாழி ஏப்ரல் 1970 இல் வெளி வந்ததாம்.
"மோசிகீரா!(மகிழ்ச்சியினால்
மரியாதையை நான் குறைத்ததற்கு
மன்னித்தருள வேண்டும் நீ.)
சங்கக் கவிதை யாதொன்றும்
பார்த்ததில்லை நானின்னும்.
ஆனால் உன்மேல் அளவிறந்த
அன்பு தோன்றிற்று இன்றெனக்கு
அரசாங்கக் கட்டிடத்தில்
தூக்கம் போட்ட முதல்மனிதன்
நீதான் என்னும் காரணந்தான்."
இங்கு சொல்லப்பட்டிருக்கும் அரசாங்கத் கட்டிடத்தில், அதாவது ஆபீஸில் தூங்கும் ஜோக் வெகு சகஜம், பிரபலம். அவற்றைப் பார்க்கும்போது எப்படி ஆபீஸில் தூங்க முடியும் என்று தோன்றும். பரபரப்பான வேலைக்கு நடுவே யாரும் பார்க்காமல் தூங்க முடியுமா என்று நினைப்பேன். சில மேலதிகாரிகள் அவர்கள் அறைகளுடனே இணைக்கப்பட்டிருக்கும் ஓய்வு அறையில் மதியம் கொஞ்ச நேரம் தூங்குவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், சமீபத்தில் பார்த்துமிருக்கிறேன்!
ஆனால் என்னுடைய பரபரப்பான பணி மாடலில் அதற்கு வாய்ப்பே இல்லை, ஏனினி, இவ்வளவு வருட பணியில் அதற்கு மட்டும் குறி வைப்பானேன் என்று இயற்கைக்கு தோன்றி இருக்க வேண்டும். மிகச் சமீபத்தில் கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட, சட்டென லீவு எடுக்க முடியாத இரண்டு அடுத்தடுத்த நாட்களில் சற்றே மறைவாய் சென்று, யார் கண்ணிலும் படாமல் இரண்டு மணிநேரம் தூங்கி அரசாங்க வேலையின் அந்தக் கடமையையும் முடித்தேன்!!
================================================================================
அரிய...
=====================================================================================================================
இணையத்திலிருந்து....
================================================================================================
நியூஸ் ரூம்
News room 28.3.24- தமிழகத்தில் கர்நாடக சங்கீத கலைஞர் T.M.கிருஷ்ணாவுக்கு, மியூசிக் அகாடமி சங்கீத கலாநிதி விருது அறிவித்திருப்பது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது போல, கேரளாவில் மோகினியாட்டக் கலைஞர் சத்தியபாமா, சக கலைஞர் ஒருவரை "அவர் காக்கா நிறம்" என்று கூறியதும், மோகினியாட்டம் என்ற பெயரிலேயே 'அழகு' இருப்பதால், வசீகரமாகவும், நிறமாகவும் இருப்பவர்தான் மோகினியாட்டம் ஆட வேண்டும்" என்றதோடு நிற்காமல், "கருப்பாக இருக்கும் யாராவது அழகிப் போட்டிகளில் வென்றிருக்கிறார்களா?" என்று வேறு கேட்டிருப்பது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. - கலையுலகத்திற்கு போர்க்காலமா?
- சென்னை,வடபழனியில் மதுரையிலிருந்து வந்து, சாலை ஓரத்தில் தங்கி, கூலி வேலை செய்து கொண்டிருந்த சுப்பிரமணி என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார். விசாரணையில் அவரைப்போலவே சாலையோரத்தில் தங்கி கூலி வேலை செய்து கொண்டிருந்த சரவணன் என்பவரும், புவனேஸ்வரி என்பவரும் தினமும் இரவில் சேர்ந்து மது அருந்துவார்களாம். சம்பவம் நடந்த அன்று சுப்பிரமணியன் தன் சகாக்களுக்கு மதுவை குறைவாக வழங்கினார் என்று அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அதில் சரவணன், புவனேஸ்வரி இருவரும் சுப்பிரமணியை கல்லால் தாக்கியதில் அவர் இறந்திருக்கிறார். சரவணன், புவனேஸ்வரி இருவருமே கைது செய்யப்பட்டிருக்கின்றனர். - மது அரக்கன்தான்!
- மூளையில் 'சிப்' பொருத்தப்பட்ட முதல் மனிதர் தன் சிந்தனைகளால் கணினியை கட்டுப்படுத்தி செஸ் விளையாடியதை எலன் மஸ்க்கின் நியூரோலிங் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. - நியூரோசயின்ஸில் ஒரு மைல் கல்.
- தாயின் 50வது பிறந்தநாளை ரிசார்ட் ஒன்றில் கொண்டாட ஏற்பாடு செய்திருந்த நீச்சல் தெரியாத மகள், மது அருந்திவிட்டு நீச்சல் குளத்தில் இறங்கியதால் இறந்த பரிதாபம் சென்னையில் அரங்கேறியுள்ளது. - குற்றவாளி மதுவா? மங்கையா?
- அமெரிக்காவும், இந்தியாவும் தங்களுக்குள் நிலவி வந்த ஏழு வர்த்தக பிரச்சனைகளுக்கு சுமுகமாக தீர்வு கண்டுள்ளதாக உலக வர்த்தக அமைப்பில் அறிவித்துள்ளன.
- பஞ்சாபிலிருந்து கோவைக்கு விமானத்தில் வந்து, அங்கிருந்து ஊட்டிக்கு காரில் சென்று கொண்டிருந்த வட இந்திய குடும்பத்தினரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்த ரூ69,000 ரொக்கத்தை பறக்கும் படை காவலர்கள் கைப்பற்றியுள்ளனர். "சுற்றுலாவுக்கு வந்த நாங்கள் கை செலவுக்காக வைத்திருந்த பணத்தை நீங்கள் பறிமுதல் செய்து விட்டீர்கள், இப்போது எங்களிடம் ஒரு பைசா கூட இல்லை"என்று அந்த குடும்பத்து பெண் கதறி அழுத வீடியோ வைரலாகியதை
அடுத்து, அந்தப் பணம் திருப்பி கொடுக்கப் பட்டிருக்கிறது.
- தமிழகத்தில் நேற்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கியது. முதல் நாளான தமிழ்த் தேர்வுக்கு 1763 பேர் ஆப்சென்ட். - அதிர்ச்சி! (ஆப்சென்ட் என்பதற்கு தமிழில் என்ன?)
- சவ ஊர்வலங்களில் மாலை மற்றும் பூக்களை தெருவில் வீசி எறிய தடை! - அப்பாடா!
====================================================================================================
நமது பூமி முக்கால் பங்கு நீரால் சூழப்பட்டது என்றாலும் கூட, உலகில் உள்ள மொத்த நீரில் வெறும், 2.5 சதவீதம் மட்டுமே நம்மால் பயன்படுத்தத் தக்க நன்னீர், மீதம் 97.5 சதவீதம் உப்பு நீர் தான்.
பல நாடுகளில் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை. இந்தச் சூழலில் தான் கடலுக்குக் கீழே நன்னீர் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நன்னீரின் அளவு ஓராண்டில் சூரியனால் ஆவியாகும் பூமியின் மொத்த நீரை விட அதிகம்.
அமெரிக்காவில் உள்ள 'உட்ஸ் ஹோல்' கடலாய்வு நிறுவனத்தைச் சேர்ந்த இரு விஞ்ஞானிகள் இங்கிலாந்தின் கண்டத்தட்டை ஆய்வு செய்தபோது, கடலுக்குக் கீழ் நன்னீர் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.
நன்னீரை கண்டுபிடிக்க, கடல் மீது செல்லும் கப்பல்களில் இருந்து மின்காந்த அலைகளைக் கடல் தரை நோக்கிச் செலுத்துவர். மின்காந்த அலைகளை உப்பு நீர் நன்றாகக் கடத்தும், நன்னீர் கடத்தாது. இதைக் கொண்டு எது நன்னீர், எது உப்பு நீர் என்பதை எளிதில் அறிய முடியும்.
பனிக்காலத்தில் கடல் மட்டம் குறைவாக இருந்தது. அப்போது தரையில் இருந்த நன்னீர் பனியாறு கடல் மட்டம் உயர்ந்தபோது கடல்தரையின் கீழேயே தங்கி இருந்திருக்க வேண்டும். இதுவே இப்போது கடல்தரைக்குக் கீழே நன்னீர் கிடைக்கக் காரணம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
கடலடி நன்னீரைக் கொண்டு கச்சா எண்ணெய்யை வெளியே எடுக்க முடியுமா என்று எண்ணெய் நிறுவனங்கள் ஆராய்ந்து வருகின்றன.
உலகின் வேறு கடற்பகுதிகளில் உள்ள நன்னீரை எவ்வாறு கண்டுபிடிப்பது, கண்டுபிடித்த பின் அந்த நீரை எவ்வாறு வெளியே பயன்பாட்டிற்கு எடுப்பது, அவ்வாறு எடுப்பதினால் என்னென்ன சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும் என்று கடல்சார் விஞ்ஞானிகள், புவியியலாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள்.
=================================================================================================
பொக்கிஷம் :-
இன்றைய வியாழன் கதம்பம் பல்வேறு பகுதிகளுடன் நன்றாகிருந்தது
பதிலளிநீக்குசுருக்கமாக சொல்லி விட்டீர்கள்! நன்றி நெல்லை.
நீக்குசிறு கடைகளில் விற்கும் தீனிகள் (தேங்காய் பர்பி, மைசூர்பாக், பாதுஷா..) பலவும் சுகாதாரக்கேடு (பன், கேக்குகள் உட்பட). ஆனால் யாரும் இதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை.
பதிலளிநீக்குநீங்கள் சொல்லும் தீனிகளை சிறு கடைகளில் பெரும்பாலும் யாரும் வாங்குவதில்லை!
நீக்குகற்பக கணபதி
பதிலளிநீக்குகனிவுடன் காக்க..
முத்துக்குமரன்
முன்னின்று காக்க..
தையல் நாயகி
தயவுடன் காக்க..
வைத்திய நாதன்
வந்தெதிர் காக்க..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
வாழ்க நலம்.
நீக்குநமது தளங்களில் பின்னூட்டமிட்டு விட்டு பின் தொடரும் ஆப்ஷனை க்ளிக் செய்து விட்டு வந்து விடுவேன். அந்த போஸ்டுக்கு வரும் பின்னூட்டங்களும், பதில்களும் எனது மெயில் பாக்ஸுக்கு வந்து விடும். Follow செய்ய எளிதாக இருக்கும். இரண்டு நாட்களாய் இது எனக்கு வேலை செய்யவில்லை. எனக்கு மட்டும்தானா? நண்பர்களின் அனுபவம் என்ன? மறுபடி நினைவு வைத்துக்கொண்டு தளத்துக்கு வந்து பார்த்தால்தான் மற்ற நண்பர்களின் கருத்துகளையும், நம் கருத்துக்கான பதிலையும் படிக்க முடியும் என்கிற நிலை.
பதிலளிநீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... வணக்கம்.
நீக்குஇந்த மாங்காய் விளையாட்டில் தான் லால் பகதூர் (சாஸ்திரி) க்கு ஞானம் விளைந்ததாக ஏழாம் வகுப்பில் படித்தது..
பதிலளிநீக்குலால் பகதூர்க்கு தோட்டக்காரன் வழங்கிய அறிவுரையை இன்றளவும் நான் கடைப்பிடித்து வருகின்றேன்...
ஹிஹிஹிஹி..அவர் எனக்கு அதைச் சொல்லவில்லை!
நீக்குஏகாந்தமாய்
பதிலளிநீக்குஏகாந்தம்...
கை வண்ணம் அருமை..
__/\__
நீக்குகருத்துக்கு நன்றி
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமையாக உள்ளது. மாங்காய் திருட்டு இன்னமும் தொடர்கிறதா ? (இன்னமும் முழுதாக படிக்கவில்லை. படித்து விட்டு வருகிறேன்.) பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இன்னமுமா? அதாவது இந்த வாரமும் என்ற பொருளிலா? ஆம்.. இன்றோடு நிறைவு பெறுகிறது.
நீக்குஏதோ புண் உடைய ஒருவர் பானி பப்பானி விற்பதைக் கண்டு ஒதுங்கினேன்.
பதிலளிநீக்குஅத்தோடு சரி...
:))
நீக்குஜட்ஜ் வீட்டிலேயே திருடிய கில்லாடிகள் நீங்கள் தான். இந்த மாங்காய் திருட்டுகள் நடைபெற்ற ஊர் எதுவோ? என்ன என்றாலும் வாங்கித் தின்னும் மாங்காயை விட திருடித் தின்னும் மாங்காய்க்கு நல்ல ருசி இருக்கும் அதுவும் பகிர்ந்து சாப்பிடும்போது. துரோகம் என்பதை விட மாங்காய் புராணம் என்று தலைப்பு வைத்திருக்கலாம். காரணம் மாங்காய் தான் கதாநாயகன.
பதிலளிநீக்குசட்டப்படிப்பு அறிவை மிகவும் விரிவாக்குகிறது!!!!! அன்றைய ஜட்ஜ் முத்துசாமி ஐயர் எங்கே? மரங்களுக்கு கல்யாணம் செய்ய ஆணையிடும் இன்றைய ஜட்ஜ் எங்கே? ஹூம் அவ்வளவு தான் ஜட்ஜ்களின் .....
சிவாஜி கல்யாணத்திற்கு செலவு செய்த 500 ரூபாய் இன்றைய 1 லட்சம் ரூபாய்க்கு சமம். 500 ரூ சராசரி ஒரு கணக்கப்பிள்ளையின் 10 மாத சம்பளம்.
நானும் மதியம் சாப்பிட்டபின்பு சுமார் 20 நிமிடம் கோழித்தூக்கம் ஆபீஸில் போட்டிருக்கிறேன். அவ்வாறு தூங்கி எழுந்தபின்பு கிடைக்கும் ஒரு கிளியர் சென்ஸ் அபாரமானது.
யார் பூனைக்கு மணி கட்டுவது? மது ஒழிப்பு என்பது கண் துடைப்பாகி விட்டது.
கடல் நீரின் அடியில் நன்னீர் என்பது புதிய செய்தி. RO கடலுக்கு அடியிலும் இயற்கையாகவே நடக்கிறதோ?
இடைக்கால நிவாரணம் ஜோக் பரவாயில்லை.
24 மணி நேரம் தண்ணீர் வரும் ஜோக்கைப் படித்து விட்டு 24 மணி நேரம் குழாயில் தண்ணீர் வரும் எங்கள் வீட்டில் பைப்பை திறந்தால் அதிர்ச்சி. தண்ணீர் வரவில்லை. டேங்க் தண்ணி தான் சரணம்.
Jayakumar
ஊர் தஞ்சாவூர்! மாங்காய் புராணம் என்று தலைப்பிட்டால் படிப்பவர்கள் குறைவு! ஏதோ துரோகம் ப்ரெய் பெரியதாக வரப்போகிறது என்று நினைக்க வைத்து மாங்காயில் முடித்தேன்!
நீக்குசெய்தியிலும் ஜட்ஜ்! அன்றைக்கும் இன்றைக்குமான வித்தியாசத்தை ஜட்ஜ் செய்ய முடியவில்லை!!
இன்றைய நடிகர்கள் கோடிகளில் அல்லவா செலவு செய்கிறார்கள்.
எனக்கு இப்போதுதான் ஆபீசில் தூங்கும் பாக்கியம் கிடைத்தது! அதையும் விட்டு வைப்பானேன் என்று....!
இப்போதைக்கு பெங்களூருதான் கடும் தண்ணீர்ப் பஞ்சத்தில் தவிக்கிறது. நன்றி JKC ஸார்...
பெங்களூர் நிலைமை ஆச்சர்யமாக இருக்கு. எங்கள் வளாகத்தில் மதியம் 12-6 தண்ணீர் வராது. நேற்றுத்தான் எல்லா வாஷ்பேசினுக்கும் ஏரேடர் பொருத்தினார்கள். இன்னும் ஒன்றரை மாதங்கள் இருக்கின்றன.
நீக்குஅது சரி... இந்தத் தடவை, காவேரித் தண்ணீர் வேணும்னு தமிழகத்தில் குரல் எழும்புமா என்ன?
அதற்குதான் இந்த நாடகமோ...
நீக்குஎனக்குத் தோணுது மேகதாட் அணை, இனி காவிரியில் தமிழகத்துக்கு, உபரி நீர் இருந்தால் மாத்திரம் அனுப்புவது என்று பல நடக்கும். பாஜக, காவிரி ஆணையத்தை அமைத்து அதற்கு உரிமை கொடுத்த பெரிய அச்சீவ்மெண்டை டெல்டா மக்கள் யோசிக்கவில்லை என்பது வருத்தத்துக்குரியது.
நீக்குவளைகுடா நாடுகளில் உணவு த் துறையின் விதிமுறைகள் மிக மிகக் கடுமையானவை..
பதிலளிநீக்குஇங்கே அதைப் போன்றவை எந்த விதத்தில் இயங்குகின்றன என்பது தெரியாததால் வீட்டுக்கு வெளியே உணவகங்களில் நுழைவதில்லை..
அப்படியே நுழைய வேண்டிய அவசியம் ஏற்பட்டாலும் சிவ மங்கள உணவகங்கள் தவிர்த்த வேறெதிலும் நுழைவதில்லை..
உங்கள் கட்டுப்பாட்டை போற்றுகிறேன்.
நீக்குஇன்னொன்று ABC XYZ என்றும் மாங்காய் தேங்காய் என்றும் பெயர் வைத்துக் கொண்டுள்ள எதையும் திரும்பிப் பார்ப்பதில்லை..
பதிலளிநீக்குமறுபடியும்....
நீக்குஉங்கள் கட்டுப்பாட்டை போற்றுகிறேன்.
இதோ
பதிலளிநீக்குஹரிகேச நல்லூர் ஐயா சொல்லிக் கொண்டு இருக்கின்றார்
கன்னிராசிக்காரர்கள் வெளியில் எதையும் சாப்பிட வேண்டாம் என்று!..
அதாவது பெண்கள் ராசி உள்ளவர்கள். ஏனென்றால், அவங்களுக்கு அந்தப் பெண்கள் கையாலேயே உணவு கிடைத்துவிடுமே... என்ன நான் சொல்றது?
நீக்குஇன்று
பதிலளிநீக்குஹரிகேச நல்லூர் ஐயா அவர்களும் சொல்கின்றார்
கன்னி ராசிக்காரர்கள் வெளியில் எதையும் சாப்பிட வேண்டாம் என்று!..
நான் கன்னி ராசி இல்லை! ஹிஹிஹி...
நீக்குஅது சரி!..
நீக்கு/// முதல் நாளான தமிழ்த் தேர்வுக்கு 1763 பேர் வரவில்லை.. ///
பதிலளிநீக்குவாழ்க தமிழ்..
வாழ்க வாழ்கவே!..
தமிழ்க்'காவலர்களை'க் கண்டு பயந்து விட்டார்கள் போல... தாய் மொழியை சரியாக படிக்க முடியாதவர்கள் லிஸ்ட்டில் தமிழர்கள்தான் முதலிடமாம்.
நீக்கு/// சவ ஊர்வலங்களில் மாலை மற்றும் பூக்களை தெருவில் வீசி எறிய தடை! - அப்பாடா!.. ///
பதிலளிநீக்குமிக மோசமான நடைமுறை தடை செய்யப்பட்டது நல்லதே..
இதே போல இன்னொன்று
குத்தாட்டம்..
அதையும் தடை செய்தால் நல்லது..
உண்மை. தடை செய்ய வேண்டிய விஷயங்கள் இன்னும் நிறையவே இருக்கும்.
நீக்குசுத்த சன்மார்க்க நடைமுறைகளில் இவ்வாறு செய்வதில்லை..
பதிலளிநீக்குபூப்பெய்திய சடங்குகளுக்கு எதிர்ப்பு கிளம்பி வெகு நாளாயிற்று..
பதிலளிநீக்குஆனால் செயற்கை கோழி உற்பத்தியும் விற்பனையும்
விதவிதமான சாக்(கு)லேட் தின்று தீர்ப்பதும்
அமோகமாக இருக்கின்றது..
:((
நீக்கு.. முதல் நாளான தமிழ்த் தேர்வுக்கு 1763 பேர் வரவில்லை.. //
பதிலளிநீக்குதமிழ் செய்த புண்யம். என்னே அதன் பாக்யம் !
:))
நீக்குஸ்வாரஸ்யமான அரட்டை...
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குவியாழன் அன்று பதிவிற்கு மூன்று ஆசிரியர்களின் படைப்புகள் உள்ளன. புதனுக்கோ கௌதமன் சார் மட்டும் பாடு படுகிறார். அப்பாதுரை சாரும் வருவதில்லை. வாசகர்களும் கேள்வி கேட்க தயங்குகிறார்கள். சார் பதிவு எப்படியோ ஒப்பேற்றிக் கொண்டு போகிறார். `
பதிலளிநீக்குஏகாந்தன் சாரின் கட்டுரையை புதனுக்கு மாற்றினால் புதனின் ஆளில்லாப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தது போலவும் இருக்கும். மேலும் புதன் அன்று கௌதமன் சாரின் பிளஸ் பாயிண்ட் ஆன படமும் போட்டது போல் இருக்கும். ஆசிரியர்கள் ஏகாந்தன் சாரைக் கலந்தாலோசித்து முடிவெடுக்கலாம்.
பள்ளிக்கால நினைவுகள் - அழியாத கோலங்கள் என்ற தலைப்பில் எ பி வாசகர்கள் பங்களிப்பில் ஒரு புதன் தொடர் பதிவும் ஆரம்பிக்கலாம்.
Jayakumar
நாங்களும் யோசித்துக் கொண்டிருக்கிறோம், என்ன செய்யலாம் என... நல்ல யோசனைகள். நன்றி. பார்ப்போம்.
நீக்குஜெயகுமார் சார் சொல்லியிருப்பது நல்ல யோசனை.
நீக்குகருத்துரைகள் நமது மின்னஞ்சலுக்கு வருவதில்லை - எனக்குத் தெரிவி என்பதை டிக் செய்தாலும் அதன் பிறகு அது மறைந்து விடுகிறது. கூகுள் பிளாக்கர் கமெண்ட் பக்கத்தில் ஏதேனும் மாற்றம் செய்திருக்கிறார்களா எனப் பார்க்க வேண்டும்.
பதிலளிநீக்குஅதேதான்.. இரண்டு நாட்களாய் தொல்லையாய் இருக்கிறது!
நீக்கு/// கருத்துரைகள் நமது மின்னஞ்சலுக்கு வருவதில்லை.. ///
பதிலளிநீக்குநான் இந்த வேலை எல்லாம் வைத்துக் கொள்வதில்லை..
எனக்கு ஆரம்பத்திலிருந்தே இந்த வழக்கம் உண்டு. அதுதான் வசதியாக இருக்கிறது. ஆனால் வேலை முடிந்த உடன் டெலிட் செய்து விடுவேன்!
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வியாழன் கதம்பம் சுவாரஸ்யமாக உள்ளது. மாங்காய் திருட்டில் இன்றைய கதாநாயகனாக தங்களின் தைரியத்திற்கு பாராட்டுக்கள்.
/மறைவில் காத்திருந்து நேரம் பார்த்து மாங்காய் 'எடுக்க'ப்படும்! பெரும்பாலும் யாரும் கவனித்ததே இல்லை. சட்டென யாராவது வந்து விட்டாலும் சட்டென குனிந்து புதரில் பந்தைத் தேடுவோம்- 'அடித்தவனை' திட்டிக் கொண்டே!/
ஹா ஹா ஹா. நல்ல முன்யோசனைகள். மாங்காய் திருட்டுக்களின் இந்த சுவாரஸ்யங்களை இப்போதுதான் படித்து அறிகிறேன்.
/அன்று இது மாதிரி கண்ணனுக்கு என்னென்ன அனுபவங்கள் ஏற்பட்டதோ.../
சிக்கிக்கொண்ட அந்த நேரத்திலும், நண்பனை நினைத்து இப்படி யோசிக்க ஒரு நல்ல மனது வேண்டும். அதுதான் நல்ல நண்பர்களின் அழகு.
/கண்ணன் ஏன் என்னை காட்டிக் கொடுத்தான்? அதே சமயம் ஏன் என்னைப்போல் காணாமல் போகாமல் உடனே சென்று என் அண்ணனையும் அவர் நண்பரையும் அழைத்து வந்தான்? ஏன் எனக்கும் கண்ணன் மேல் கோபம் வரவில்லை? வேதாளக் கேள்விகள்!!/
இன்றைய முதல் பகுதி கட்டுரையில் இதுபோன்ற நிறைய வரிகளை ரசித்தேன். நன்றாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. நன்றி. திருட்டு பற்றி நான் எழுதி இருந்ததை ரசித்த ஆள் நீங்கள்தான் போல.. எனவே இனி பழைய நினைவுகள் என்று அடுத்த அறுவை தொடர வேண்டாம் என்று நினைக்கிறேன்!
நீக்குஏன் அப்படி? பழைய நினைவுகளை, நினைவு கூர்ந்து சுவாரஸ்யம் குன்றாமல் தருவது ஒரு பெரிய கலையல்லவா? அந்த திறமை தங்களிடம் நிறையவே இருக்கிறது. மேலும் அதை படிக்கும் அனைவருமே தங்கள் கடந்த சிறுவயது சொந்த வாழ்க்கையோடு சேர்த்துப் பார்த்து விரும்பி ரசிப்பார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். அதை அறுவையென யாரும் நினைக்க மாட்டார்கள்.
நீக்குசின்ன வயதில் இந்த மாதிரி திருட்டு வேலை செய்து (சின்னப் பசங்களின் கள்ளத்தனம்) மாங்காய், புளியங்காய் அல்லது மற்றவை சாப்பிட்டபோது நமக்கிருந்த அந்த சந்தோஷம், பையில் அதிக பைசாவுடனும், எந்த மாங்காயைத் தேர்வு செய்து வாங்கலாம் என்ற அதிக ஆப்ஷனுடனும் இருக்கும் இந்தக் காலத்தில், நமக்கு வாங்கும்போது சந்தோஷம் வருமா? நல்ல ரசனையாக எழுதியிருக்கீங்க (ஏன்னா..இந்த மாதிரி அனுபவத்தைத்தான் தைரியமாக பகிரத் தோணும். இன்னும் கொஞ்சம் வயது ஆனபிறகு சைட் அடித்த அட்வெஞ்சர், அதனால் ஏற்பட்ட களேபரம்லாம் பகிர முடியாது இல்லையா?)
பதிலளிநீக்குஅதைத்தான் அடுத்து எழுதலாம் என்று இருந்தேன் நெல்லை. வேண்டா,ஆ? புளியங்காய் அடித்த அனுபவங்கள் உண்டு. வேறு சில அனுபவங்களும் உண்டு. பக்கத்து வீடு எதுவென்று தெரியாத அபார்ட்மெண்ட் யுகம் இது. ஹவுசிங் யூனிட்டில் குடி இருந்தோம். ஏராளமான நண்பர்கள்... ஏராளமான அனுபவங்கள்.. நினைவுகள்... மாங்காய் திருட்டு அனுபவம் எழுதியதை ரசித்ததற்கு நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கதம்பத்தில் மற்ற பகுதிகளும் நன்றாக உள்ளது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களது திருமணம் எளிய முறையில் நடைபெற்றதை படித்தறிந்தேன். அந்தக் காலத்தில் கட்டாய ஆடம்பரங்கள் இல்லாமல் இருந்ததும் ஒரு சௌகரியமே. கடைசியில் அந்த பூங்கோதை படம் எப்போது வெளிவந்ததோ?
சகோதரர் ஏகாந்தன் அவர்களது பக்கம் திகதிக்கென்றிருந்தது. அடுத்தவாரம் அதிர்ச்சிகளின் விளக்கம் தெரிய வரும்வரை பதற்றந்தான்.
சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களின் செய்தி அறை பக்கங்களில் பல செய்திகளை அறிந்து கொண்டேன். பொது தேர்வில் ஒரு பாடத்திற்கு வருகை ஒழிப்பாக (வருகை இல்லாமல்) செய்து விட்டால் இவர்கள் எப்படி மேற்படிப்புக்கு செல்வார்கள்? படிப்பே தேவையில்லையென நினைப்பவர்களோ?
அரிய புகைப்படங்கள் நன்று. இணையத்திலிருந்து தந்த செய்திகளை பார்த்து அறிந்து கொண்டேன். அதில் இறுதியில் உள்ளவை தாங்கள் இங்கு ஏற்கனவே பகிர்ந்ததுதான் என நினைவுக்கு வந்தது. அனைத்தும் வியப்பையும், அதிர்ச்சியையும் தருபவை.
கடலுக்கடியில் நன்னீர் பற்றிய தகவல்களும், பொக்கிஷ நகைச்சுவை பகுதிகளும் நன்றாக உள்ளது. தண்ணீர் பிரச்சனைகளுக்கு நல்லதொரு தீர்வை ஆண்டவன் விரைவில் தர வேண்டும். இன்றைய அத்தனை பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா. அரிய புகைப்படங்களில் எது ஏற்கெனவே பகிர்ந்தது என்று தெரியவில்லை. பார்க்கிறேன்.
நீக்குஅரிய புகைப்படங்கள் அல்ல. அதன் பின் வந்த இணையத்திலிருந்து தந்த தகவல்கள். அந்த புதையல் எடுக்கும் விதங்களைப்பற்றி விவரித்தது. அதை இங்கு படித்தாக நினைவு. ஒரு வேளை எங்கோ படித்ததை இங்கு என சொல்லி விட்டேனோ என்னவோ? நன்றி.
நீக்குபடித்துப் பதறுமாறு ஆகிவிட்டதா !
நீக்குமாங்காய் திருட்டு விஷயத்திற்கு இவ்வளவு மாய்ந்து மாய்ந்து எழுதுவானேன் என்று தோன்றியது. எழுதற விஷயம் 'அட!' என்று பிரமிக்கிற மாதிரி இருந்தால் ஒரு பக்கம் சுவாரஸ்யம் கூடும், இன்னொரு பக்கம் எபி பதிவுகள் மற்றவர்கள் பேசாத விஷயங்களைப் பேசி பதிவுலகில் வித்தியாசமாய் தெரியும். எபி ஒரு மெச்சூரிட்டி நோக்கி பயணப்பட வேண்டிய காலகட்டமாக நினைக்கிறேன். அனியாய
பதிலளிநீக்குகுழம்தைத் தனங்கள் சகல பகுதிகளிலும் மாற வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு.
முயற்சிக்கலாம் ஜீவி ஸார்.
நீக்குஏகாந்தன் ஸார் .தன் கட்டுரையை கதை சொல்வது போல வெகு சுவாரஸ்யமாய் வடிவமைக்கிறார். நான் ரசிக்கும் ஒவ்வொரு இடத்தையும் எடுத்துச் சொல்லி பாராட்ட வேண்டும் என் விருப்பம். உடல் நிலை ஒத்துழைக்க வில்லை. மன்னிக்கவும்.
பதிலளிநீக்குகருத்தான வார்த்தைகளுக்கு நன்றி ஜீவி சார்.
நீக்குஉற்சாகமாக எல்லாவற்றையும் கவனித்துவருகிறீர்கள். உடல் ஆரோக்யத்தில் கவனம் செலுத்தவும்.
பதிவு அருமை. மாங்காய் திருடுவதில் அனேக கஷ்டங்கள் இருந்தாலும் தொடர்ந்து திருடியது வியக்க வைக்கிறது. பயம் அறியாத வயது ஒரு காரணம். மாங்காவை நன்பர்களுடன் ரசித்து ருசித்து சாப்பிட்ட சுவை காரணம் என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஏகாந்தன் சார் பதிவு படிக்கும் போது அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று திக் திக் என்று இருந்தது.
பொக்கிஷபகிர்வுகள்அருமை. செய்திகள் அனைத்தும் படித்தேன்.
நன்றி கோமதி அக்கா. நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிடும் சுவாரஸ்யமும், அந்த வயதுக்குரிய த்ரில்லும்தான் காரணம்!
நீக்குஅடேங்கப்பா! ஜட்ஜ் வீட்டில் மாங்காய் ”எடுக்க” எத்தனை விதமான உத்திகள் :)! எப்போதாவது மாட்டி விட வேண்டுமெனும் எண்ணம் நண்பர் கண்ணன் மனதில் பதிந்து விட்டுருக்கிறது. அதே நேரம் உங்களுக்கு பெரிதாக ஏதும் பாதிப்பு வந்து விடக் கூடாது என்கிற அக்கறையும் இருந்திருக்கிறது.
பதிலளிநீக்குதொடர்ந்து மலரட்டும் நினைவுகள்!
உண்மை. அந்த கண்ணன் இப்போது எங்கே இருக்கிறான் என்பதே தெரியாது! நன்றி ராமலக்ஷ்மி.
நீக்கு