சனி, 2 மார்ச், 2024

சோலார் மிலிடரி டெண்ட் மற்றும் நான் படிச்ச கதை

 











===============================================================================================

கல்வான் பள்ளத்தாக்கில் உறைபனியில் இருக்கும் நம்முடைய ராணுவ வீரர்களுக்கு இந்த சோலார் மிலிடரி டெண்ட்களை கொடுத்ததற்காக உயர்திரு Sonam Wangchuk அவர்களுக்கு பல கோடி நமஸ்காரங்கள்.


=======================================================================================================

 

நான் படிச்ச கதை (JKC)

இருட்டு உலகம்

கதையாசிரியர்: சி. மதிவாணன்

முன்னுரை

இந்தக் கதையை கதை என்று சொல்வதைக் காட்டிலும் ஒரு நாட்குறிப்பு எனக்கூறலாம். ஆசிரியரே கதையின் முக்கிய பாத்திரமாக மாறி அன்றைய நாட்குறிப்பை விளக்குவது போல் கதை உள்ளது. அவ்வாறு விளக்கும் போது அவருக்கு நிகழ்ந்த, ஏற்பட்ட, நிகழும், வரப்போகும் பிரச்ச்சினைகளையும் பட்டியல் இடுகிறார். 

இவர் (கதை சொல்பவர்)  ஒரு DTP டிசைனர். அச்சகத்தில் தொழில் தொடங்கியது கம்பாசிடராக. காலம் மாற, கொஞ்சம் கொஞ்சமாக தொழில் மாற்றங்களை படித்து தற்போது கோரல் ட்ரா வில் வேலை செய்கிறார்.  

பிரச்சினைகள் இல்லாதவர் இல்லை. ஆனால் இவருக்குள்ள பிரச்சினைகளை படிக்கும்போது ஒரு அனுதாபம் தோன்றுகிறது. அதுவே இக்கதையின் சிறப்பு. இனி அப்பிரச்சினைகள் சிலவற்றை தருகிறேன். 

1.    உடல் பிரச்சினை:  வலது கை சுவாதீனம் அற்றது, செயலிழந்தது. //தேவர்மகன் படத்தில், ‘என்ன ஒரே கஷ்டம்… திங்கிறதும், கழுவுறதும் ஒரே கையாயிடுச்சி’, என்று வடிவேலு பேசியது எப்போதும் என் நினைவுக்கு வரும்.// 

2.    மனப்பிரச்சினை: பலதரப்பட்ட கவலைகள். சொன்ன நேரத்திற்கு வேலையை முடிக்க முடியாதது. படிப்பை முடிக்கப்போகும் மகள், அவளுடைய திருமணம். 

3.    பணப்பிரச்சினை: மகளுடைய படிப்பிற்கு அடுத்த நாள் 3000 ரூபாய் கட்ட வேண்டும். இங்கோ பஸ்ஸுக்கு காசு போதாமல் முந்தின ஸ்டாப்பில் இறங்கி நடக்க வேண்டிய நிலை. 

4.    தொழில் பிரச்சினை: தற்போதைய தொழில் DTP டிசைனர். வாடகைக்கு கடை, சொந்த கம்ப்யூட்டர், பிரிண்டர், உண்டு. ஆனாலும் மின்சாரம் அடிக்கடி தடைபடுவதால்  ஏற்படும் வேலை தடங்கல், மற்றும் முடித்த பக்கங்கள் கம்ப்யூட்டரில் காணாமல் போவது. 

5.    கொள்கை பிரச்சினை:  முயன்றும் முன்னேற முடியாமல் இருப்பதால் இடது சாரி கொள்கைகள் மீது ஈர்ப்பு.

இக்கதையின் மற்றுமொரு சிறப்பு. கதையில் வரும் விவரங்கள் செயற்கையாக இல்லாமல்  இடம் பொருள் ஏவல் எல்லாம் சரியாக, குறை ஒன்றும் கூறமுடியாமல் கச்சிதமாக எழுதியிருப்பது.  ஆனால் முடிச்சு என்ற ஒன்றோ, முடிவு என்ற ஒன்றோ கதைக்கு அமையாதது ஒரு குறையே. 

கதையை கொஞ்சம் எடிட் செய்து தந்திருக்கிறேன். சில புலம்பல்களை நீக்கி இருக்கிறேன்.  மின்வெட்டின் காரணமாக உண்டான எரிச்சலில் உலகத்தையே இருட்டடிப்பு செய்து “இருட்டு உலகம்” என்று ஆசிரியர் தலைப்பு வைத்து இருக்கிறார். இனி கதையைக் காண்க.

இருட்டு உலகம்

கதையாசிரியர்: சி.மதிவாணன் <===(சுட்டி)

காலையில் கடையைத் திறந்தபோதே எனக்கு எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது. முதலில் காலையில் என்று சொல்வதே தவறு. காலை 9 முதல் 12 வரை மின்வெட்டு நேரம் என்பதால் 11 மணிக்குத்தான் வந்து சேர்ந்தேன். பக்கத்து அச்சகத்து மெஷின்மேனை அழைத்து ஷட்டரைத் தூக்கிவிடச்சொன்னேன். அப்புறம் கம்ப்யூட்டரைப் பார்க்கும்போதுதான் அந்த எரிச்சல் வந்தது. 

நான் சமயநல்லூர் பக்கத்தில் உள்ள ஒரு குக்கிராமத்திலிருந்து மதுரை பெத்தாணியாபுரம் வந்து சேர்வது காலை 10 மணிக்கு முன்பு சாத்தியமில்லை. ஆனால், காலை 9 மணிக்கு கரெண்ட் போய்விடும் என்பதால் பக்கத்து அச்சகத்துக்காரர் என் கடைச் சாவியை வாங்கி வைத்திருந்தார். காலை 6 மணிக்கே வந்து மாஸ்டர் எடுத்து ஓட்ட வேண்டும் என்றார். அவருக்கும் கொஞ்சம் கம்ப்யூட்டர் தெரியும் என்பதால் சாவியைக் கொடுத்திருந்தேன். அதில்தான் பிரச்சனை.

எனக்கு வலது கை வராது. அதாவது விரல்கள் ஒன்று சேர்ந்து இயங்காத நிலையில் இருந்தன. ஒரு கவளம் சோற்றை எடுத்து வாயில் வைக்க முடியாது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மிகவும் சிரமப்பட்டு விரல்களை இயக்கினாலும் ஏதேனும் இரண்டு விரல்கள் விலகிக்கொள்ள சோறு வாய்க்குச் செல்லாது. தட்டிலோ, தரையிலோ விழும். அதனால் இடது கையால் ஸ்பூன் பிடித்துச் சாப்பிடுகிறேன். தேவர்மகன் படத்தில், ‘என்ன ஒரே கஷ்டம்… திங்கிறதும், கழுவுறதும் ஒரே கையாயிடுச்சி’, என்று வடிவேலு பேசியது எப்போதும் என் நினைவுக்கு வரும்.

அதனால் எனது கம்யூட்டரின் மவுஸ் இடது கைக்கு அருகே இருக்கும். அந்தப் புண்ணியவான் மவுசை வலது பக்கத்துக்கு மாற்றிவிட்டு அப்படியே விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்.

என் கடை என்பது பத்துக்குப் பத்து அறை. முதல் மாடியில் இருந்ததால் பின்பக்கச் சுவரின் உயரத்து ஜன்னல் வழியே கொஞ்சம் காற்றும் வெளிச்சமும் வரும். ஷட்டரைத் திறந்து வைத்து கண்ணாடிக் கதவையும் திறந்துவைத்திருந்தால் நல்ல வெளிச்சமும், நகரின் தூசி நிறையவும் வரும். பேருந்துப் பயணம் அப்புறம் நடை, மாடி ஏறியது என்று எனக்கு வியர்த்துக் கொட்டியது. சற்று வெளியே நிற்கலாம் என்று வெளியே நின்றேன். வியர்வை அடங்கியவுடன் உள்ளே வந்தேன். சில நிமிடங்களில் மின்சாரம் வந்துவிட்டது. ஆனால், -மணி 12 இல்லை. இன்று முன்னமேயே மின்சாரம் வந்துவிட்டது. அப்படியானால் எப்போது போகும் என்றும் சொல்ல முடியாது. இன்று அந்த கடைசி 10 பக்கத்தை முடித்து அனுப்பி காசு பார்க்க வேண்டும். என் மகளின் எம்சிஏ புராஜக்ட்டுக்கு நாளை மூவாயிரம் தருவதாகச் சொல்லியிருக்கிறேன்.

படபடப்புடன் மவுசை இடமாற்றம் செய்யப் பார்த்தேன். வரவில்லை. எதிலோ சிக்கிக்கொண்டிருந்தது. டேபிளின் கீழே குனிந்து, சிக்கலை விடுவித்து மவுசை இடது பக்கத்திற்குக் கொண்டுவந்தேன். என்ன செய்திருந்தார் அந்த ஆள் என்று கோபம் வந்தது. கீ போர்டு தள்ளு பலகையில் வெறுமனே இடமாற்றம் செய்திருந்தால் இந்த சிக்கல் வருமா? எனக்கு வியர்த்துக்கொட்டியது.. என்ன முட்டாளாகி விட்டேனோ..? மின்சாரம்தான் வந்துவிட்டதே என்று நினைத்துக்கொண்டு சுவிட்சைப் போட்டேன்.

அப்புறம் யுபிஎசை ஆன் செய்துவிட்டு கம்யூட்டரை ஆன் செய்தேன். நீல நிறத்திற்கு ஸ்கிரீன் மாறி டிஸ்க் செக் செய்ய வேண்டும் என்றது. இந்த மெஷினில் இதுதான் முதல் முறை.. வழக்கமான நான் ஸ்கேன் டிஸ்க் கேட்டால் ஓடவிட்டுவிடுவேன். டிஸ்க்கில் பிழை ஏற்பட்டு விட்டால் என் பிழைப்பு பிரச்சனையாகிவிடும். ஆனால், இன்று யோசித்தேன். மைக்ரோசாப்ட்காரன் நீலத்தில் நொடிகளைக் கழித்து எண்ணிக் காட்டிக்கொண்டிருந்தான். ஒரு வேளை ஸ்கேன் டிஸ்க் ஓடும்போது மின்சாரம் போய்விட்டால்…? யுபிஎஸ்தான் இருக்கிறதே என்று ஸ்கேன் செய்ய அனுமதித்தேன். எல்லாம் ஓடி முடிந்தவுடன் பேட் செக்டார் வந்திருப்பதாக மெஷின் சொல்லியது. சரி பார்க்கலாம் என்று வேலையை ஆரம்பித்தேன்.

கோரல்டிராவில் இன்னும் பத்து பக்கங்களேயிருந்தன. எனக்கு வேகமாக தட்டச்சு செய்ய முடியாது. ஆனால், வரைகலை நன்கு வரும். இடது கையைக்கொண்டே வேலை செய்வேன். பெரும்பாலும் மவுஸ்தான். தேவைப்பட்டால் இடது கை ஆள்காட்டி விரலால் கொஞ்சம் தட்டச்சு செய்துகொள்வேன். சில சமயம், வலது கை தானே வந்து கொஞ்சம் வேலை செய்யும். அப்புறம் சோர்ந்துவிடும்.

இடது கையால் கண்ணாடியைக் கழற்றி மேஜையில் வைத்தேன். கண்களை அழுத்தித் தேய்த்துக்கொண்டேன். ஆயாசமாக வந்தது. 45 வயதில் எத்தனை பிரச்சனைகளைச் சமாளிப்பது என்று கேட்டுக்கொண்டேன்.

நாற்காலியில் சற்று சாய்ந்து நிமிர்ந்தபோது மறுபடியும் மின்சாரம் போய்விட்டது. நிமிர்ந்து பார்த்தால் கம்யூட்டர் ரீ ஸ்டார்ட் ஆகிக்கொண்டிருந்தது. என்ன ஆயிற்று யூபிஎஸ்சுக்கு…? விலை குறைவு என்று ஆப் லைன் யூபிஎஸ் வாங்கியதின் விளைவாயிது?

கம்யூட்டர் பூட் ஆவதற்குள் யூபிஎஸ்சை அணைத்தேன். செய்த வேலைகள் சேதமாகியிருக்குமா என்ன? தெரியவில்லை. ஆனால் நான் செய்த எல்லாம் பாழாகி ஏணியிலிருந்து விழுந்தவனாகக் காலத்தைச் சந்தித்துக்கொண்டிருக்கிறேன்.

கீபோர்டை நகர்த்தி வைத்துவிட்டு மேஜையில் கவிழ்ந்தேன். தலைக்கு மேலிருந்த பேன் கடைசி சுழற்சிகளில் கிறக்… கிறக்கென்று பயணித்து நின்றது. அறையை மௌனம் சூழ்ந்தது.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்று ஒலியெழுப்பும் சைக்கிளை நம்பித்தான் என் வாழ்க்கை துவங்கியது. அப்போது நாங்கள் காளவாசலின் பின்புறம் இருந்தோம். வாடகை வீடு. நானும் என் மனைவியும் கம்போஸ் செய்வோம். ஒரு செஸ் அளவுக்கு கம்போஸ் ஆனவுடன், பக்கம் கட்டி, செஸ்சில் மாட்டி சைக்கிளின் பெடலில் செஸ்சை நிறுத்தி, சீட்டுடன் இணைத்துக் கட்டி, தள்ளிக்கொண்டே சிலிண்டர் பிரஸ்சுக்குப் போவேன். அந்த சைக்கிளை நான் ஏறி மிதித்ததில்லை. அதற்காக அல்ல அந்த சைக்கிள். செஸ்சை ஏற்றிச்செல்லும் படகு என்று வைத்துக்கொள்ளுங்களேன். செஸ்சின் கனத்தை சமாளிப்பது மிகக் கடினம். 16 பக்கத்துக்கு ஈயத்தை அடுக்கினால் என்ன கனம் இருக்கும் தெரியுமா?

சிலிண்டர் பிரசில் செஸ்சை இறக்கி வைத்துவிட்டு, ஓடி முடிந்த செஸ்சை திருப்பி இதே பாணியில் எடுத்துக்கொண்டு வருவேன். வந்தவுடன் மேஜையின் மீதுள்ள கல்லில் கிடத்தி மரச்சம்மட்டியால் தட்டிப் பிரித்து என்று ஆரம்பித்து வியர்வைச் சிந்த ஆரம்பிப்பேன். அப்புறம் டிஸ்ரிபூஷன் போட ஆரம்பித்தால் மதியம் ஆகிவிடும். அதற்குள் என் மனைவி 4 பக்கம் முடித்திருப்பாள்..

ஒரு நாளைக்கு ஒரு செஸ் என்பதை இரண்டாக்கி அப்புறம் இன்னும் ஒன்று கூட்ட என்று முயற்சியெடுத்து கடைசியில் இரண்டு சிலிண்டர் ஓடும் பிரசுக்குச் சொந்தக்காரன் வரை உயர்ந்தேன். அதற்கு முக்கியக் காரணம் என் மனைவி. பள்ளிக்குப் போய் எழுதப் படிக்க, லேசாகத் தெரிந்தவள்தான். எங்கள் கல்யாணத்திற்குப் பின் என் தொழிலுக்கு இழுபட்டு சைடு பார்த்து கம்போஸ் செய்யும் அளவுக்கு கற்றுக்கொண்டாள். எந்தக் கிறுக்கல் கையெழுத்தையும் படித்துவிடுவாள். அவள் இல்லையென்றால் நானில்லை.

ஆனால், நான் சிலிண்டர் அளவுக்கு வளர்ந்தது சரியான நேரத்தில் இல்லை. அப்போதுதான் ஆப்செட் வளரத் துவங்கியிருந்தது. போட்டோ கம்போசிங் செய்து அதனை அட்டைகளில் வெட்டி ஒட்டி, டிசைன் செய்து ஆப்செட்டில் பிரிண்ட் செய்ய ஆரம்பித்திருந்தார்கள். அப்புறம் லேசர் வந்தது, வென்ட்சுராவை வைத்துக்கொண்டு மொத்த பக்கத்தையும் வடிவமைக்கத் துவங்கினார்கள். நான் சட்டென்று ஆப்செட்டுக்குத் தாவினேன். ஒரு மெஷின்தான் போட முடிந்தது. பிளேட் மேக்கிங் யூனிட் போட முடியவில்லை. இதற்குள் தட்டுத் தடுமாறி சமயநல்லூரில் சின்னதாக வீடு கட்டிக் குடியேறியிருந்தேன்.

மறுபடியும் பேனின் கிறக் கிறக் சப்தம் கேட்டு நிமிர்ந்தேன். டியூப் லைட் துடித்து உயிர் பெற்றது. கம்யூட்டரை இயக்கினேன். இந்த முறையும் ஸ்கேன் டிஸ்க் கேட்டது. அப்புறம் இயக்கம் துவங்கியபோது அவசரமாக கோரலை இயக்கி நான் வேலை செய்து கொண்டிருந்த பைலைத் திறந்தேன். முடியவில்லை. ‘கரப்டடு’ என்றது. பேக்அப் பைலைத் தேடி திறந்தால் கடைசி இரண்டு பக்கங்களைக் காணவில்லை.

நொந்துகொண்டு வேலையை ஆரம்பித்தேன். பத்துப் பதினைந்து நிமிடம் போயிருக்கும். ஏறக்குறைய வேலை நிறைவடையும்போது அச்சகத்துக்காரர் ஒருவரை அழைத்து வந்தார். 3 ஆவதற்கு இன்னும் சில நிமிடங்கள் இருந்தன. அவசரமாக மாஸ்டர் எடுக்க வேண்டும். எடுத்துவிட்டால் அச்சகத்துக்காரர் மற்றதொரு பிரசில் கொடுத்து- அங்கே அப்போது கரண்ட் வந்துவிடும்- ஓட்டிக்கொள்வேன் என்றார். சரி எனக்கும் இரண்டு மாஸ்டர் என்றால் இன்றைய பஸ் டிக்கெட் போக கையிலும் காசு நிற்கும் என்பதால் அவசரமாக சிடியைத் திறந்து இரண்டு பக்கங்களை பிரிண்ட் செய்தேன். பிரிண்ட் முடிந்து மாஸ்டர் வெளியே வந்த சில நிமிடங்களில் மின்சாரம் போய்விட்டது. நல்லவேளை இந்த முறை யூபிஎஸ் காலை வாறவில்லை. கம்ப்யூட்டரை ஷட்டவுன் செய்தேன். வெகு நேரம் எடுத்தது… ஏதோ பிரச்சனை உருவாகிக்கொண்டிருப்பது தெரிந்தது.

திரும்பிப் பார்த்தால் அந்த கஸ்டமர் உட்கார்ந்திருந்தார். நீல நிற ஜீன்ஸ், டீ சர்ட்டில் இருந்தார். என் வயது இருக்கும் போலத் தெரிந்தது. நான் வைத்திருந்த காலச்சுவடு இதழைப் புரட்டிக்கொண்டிருந்தார். அவர் அவசரமாக பிரிண்ட் எடுத்தது ஓர் கம்யூனிஸ்ட் கட்சியின் துண்டறிக்கை.

‘சார்.. நீங்க டிசைனரா?’ என்று கேட்டேன். நிமிர்ந்தவர் என் வலது கையைக் கவனிப்பது தெரிந்தது.

‘இல்லை கட்சிக்காரன்’, என்று அவர் சொன்னார்.

எனக்கு கம்யூனிஸ்ட் கட்சிகளைப் பிடிக்காது. தேர்தலுக்குத் தேர்தல் இடம் மாறுவார்கள். அவர்கள் சொல்லும் காரணத்தின் மீது அவர்களுக்கே நம்பிக்கை இருக்காது என்பது எனது நம்பிக்கை. ‘சிபிஐயா? எம்மா?’, என்று கேட்டேன்.

‘எம்-எல்’, என்றார் அவர்.

’ஓஹோ.. அந்த ரெண்டு கட்சியும் ரொம்ப கெட்டுப்போய்விட்டார்கள்’, என்றேன். அவர் என்னை உற்றுப் பார்த்தார்.

‘அரசியலில் ஆர்வமா?’, என்று ஆரம்பித்தார். நான் உஷாராகிவிட்டேன். என்னைப் போன்றோருக்கு அரசியல் ஒத்து வராது. ‘இல்லை சார்.. பேப்பர் படிக்கிறதுதான் நான் பார்க்கிற அரசியல் வேலை’, என்று விலகிக்கொண்டேன்.

அவர் ஒன்றும் பெரியதாக அலட்டிக்கொள்ளவில்லை. காலச்சுவடு படிக்க ஆரம்பித்தார்.

சற்று நேரம் கழித்து நான் சாப்பிடத் தயாரானேன். கரெண்ட் வருவதற்குள் சாப்பிட்டுவிட வேண்டும். ஒரு மரியாதைக்காக ‘சார் நான் சாப்பிடப் போறேன்.. நீங்க?’ என்றேன்.

‘சாப்பிட்டுட்டேன்’ என்றார்.

‘காப்பி சாப்பிட்டுட்டு வாங்களேன்?’ என்று அவரை வெளியே அனுப்ப முயற்சித்தேன். இடது கரத்தால் நான் ஸ்பூன் பிடித்து சாப்பிடும் அழகை மற்றவர்கள் பார்ப்பதை என்னால் சகித்துக்கொள்ள முடியாது.

‘இல்ல சார்.. நான் டீ காப்பி குடிக்கிறதுல்ல’ என்றார். இதற்குள் நான் எனது டிபன் பாக்சை எடுத்திருந்தேன். இனிதான் சிக்கலே ஆரம்பிக்கும். உதவாத வலது கையால் பிடித்துக்கொண்டு இடது கையால் மூடியைத் திறக்க வேண்டும். சாப்பாடு கொட்டிவிட்டால் வயிற்றில் மண்தான்.

என்னைக் கவனித்த அவர், ‘இருங்க சார்’, என்றபடி எழுந்து என்னிடமிருந்து வாங்கி மூடியைத் திறந்தார். அப்புறம் கீபோர்டை தள்ளிவைத்துவிட்டு அங்கே பாக்சை வைத்துவிட்டு கரண்டியை எடுத்து என் கையில் கொடுத்தார்.

‘சார்.. நீங்க டீ காப்பி சாப்பிட மாட்டீங்களா?’, என்று கேட்டேன்.

‘முடிந்தவரை சாப்பிட மாட்டேன். அது எங்கள மாதிரி ஆளுங்களுக்குக் கட்டுப்படி ஆகாது… மதுரையில ஒரு டீ ஏழு ரூபா சார்’, என்றார்.

அவர் என் கண்களையேப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்புறம் மெதுவாகக் கேட்டார், ‘என்ன ஆச்சு உங்க கைக்கு?’

இந்தக் கேள்வியை நான் எதிர்பார்த்தேன். பலருக்கும் பதில் சொல்லிய எரிச்சலில் இருந்தேன். ஆனால், அவர் குரல் மிக மென்மையாக இருந்தது. அவரது கண்ணில் பரிவிருந்தது. இடையில் நான் விக்கியபோது தண்ணீர் பாட்டிலைத் திறந்து கொடுத்திருந்தார். நல்ல மனுஷன் என்று பட்டது.

என் கைக்கு என்ன ஆனது என்று சொன்னேன். முதலில் கால்கள் இயங்க மறுத்ததையும் அப்புறம் கைகள் இயங்க மறுத்ததையும் அதற்காக எனது முதுகுத் தண்டு மற்றும் கழுத்தில் அறுவை செய்துகொண்டதையும் சொன்னேன்.

அவர் சம்பந்தமேயில்லாமல், ‘மொதல்ல நீங்க என்ன தொழில் செஞ்சிங்க?’, என்று கேட்டார்.

இதற்குள் நான் மிகவும் இளகிவிட்டிருந்தேன். இதுபோன்றதொரு கேட்கும் செவியிடம் பேச வேண்டும் என்று நான் வெகுநாளாக் காத்துக்கொண்டிருந்தேன். எனது சைக்கிள் துவங்கி ஆப்செட் வரை வந்து பின்னர் அறுவை சிகிச்சைக்கென்று அனைத்தையும் இழந்து இப்போது குக்கிராமத்தில் குடியிருந்துகொண்டு மிச்சமிருப்பதை வைத்து டிடிபி செண்டர் நடத்துவது வரை சொன்னேன்.

அவர் என்னை உறுத்துப்பார்த்தார். அப்புறம், ‘தொழிலால் ஏற்படும் நோய் அல்லது ஈய விஷ பாதிப்பு என்று மருத்துவர்கள் சொன்னாங்களா?’, என்று கேட்டார்.

இதுவரை இதுபோன்ற செய்தியை நான் கேட்டதில்லை.

‘ஏங்கேக்குறிங்க? எந்த டாக்டரும் அது மாதிரி சொல்லல. கழுத்துலயும் முதுகுலேயும் ஜவ்வுல பிரச்சனை, எலும்பு தேய்ஞ்சிடுச்சின்னு அதுக்குதான் ஆப்ரேஷன் செஞ்சாங்க’, என்ற விவரத்தைச் சொன்னேன்.

‘இல்ல சார்.. நீங்க கம்போசிங்ல இருந்ததால ஈய விஷம் ஒங்க நரம்புகள பாதிச்சிருக்கலாம்.. எதுக்கும் நல்ல டாக்டராப் பார்த்து கேளுங்க‘, என்றார்.

நல்ல டாக்டர் எங்கே இருக்கிறார்கள்? ஒரு ஆள் வரும்போது எத்தனை பக்கமாக இருக்கும் எத்தனை காசு தேறும் என்று நான் யோசிப்பது போல நோயாளிகளைப் பார்க்கும்போது காசு கணக்குப் பார்க்கும் டாக்டர்களைத்தான் இதுவரை நான் பார்த்திருக்கிறேன்.

இந்த கம்யூனிஸ்டுகாரர் சொன்னது சரியாக இருக்குமோ என்று சந்தேகம் வந்தது. அது சரி… இவர் என்ன படித்தவர்? கேட்டுவிட்டேன்.

அவர் வாய்விட்டு சிரித்தார். ‘காலேஜ எட்டிப் பார்த்திருக்கிறேன். கெமிஸ்ட்ரி’

’ஓ அதா இந்த விஷயம் ஒங்களுக்குத் தெரிந்திருக்கிறது’.

அவரோ மேலும் சிரித்தார். ‘காலேஜ்ல இதல்லாம் படிக்க முடியாது சார். இன்னும் சரியா சொன்னா நா அரியர் வச்சிருக்கிற ஆளு’, என்றார்.

என்னால் நம்ப முடியவில்லை. ’ஆனா, படிக்கிறதுங்கறது தொடர்ந்து நடக்கிறது சார்’, என்றவர், ‘மனுஷனா இருக்கிற எவனும் படிக்கனும்.. நான் கம்யூனிஸ்ட்.. அதனால, ஒலகம் மொத்தத்தையும் படிக்கனும்’, என்று முடித்தார்.

எனக்கு இவர் கம்யூனிஸ்ட் இல்லை என்று பட்டது. கம்யூனிஸ்டுகாரர்கள் படிப்பார்களா என்ன?

அப்புறம் நோட்டீஸ் அடித்து வந்தவுடன் அவர் புறப்பட்டுவிட்டார்.

நான்கு மணிக்குக் கரண்ட் வந்தவுடன் நான் என் வேலைகளை ஆரம்பித்தேன். கம்ப்யூட்டர் மிக மெதுவாக இயங்குவது தெரிந்தது.

இறுதி சரிபார்த்தலுக்குப் முன்பு பார்ட்டியை அழைத்து 6 மணிக்கு பின்பு சிடி கொண்டுவந்து கொடுத்துவிடுவதாகச் சொல்லி பணத்தையும் நினைவூட்டினேன். பணமில்லை என்றால் என் மகளைச் சமாளிக்க முடியாது.

அந்த பார்ட்டி ஒரு பப்ளிஷர். எனக்குக் கைகொடுத்து காப்பாற்றுபவர். நிச்சயம் பணம் எடுத்து வைத்திருப்பார்.

இன்றைக்கு என்ன ஆனதென்று தெரியவில்லை. மறுபடியும் பவர் போய்விட்டது. கொஞ்ச நேரம் கழித்து மின்சாரம் வந்து சிஸ்டத்தை இயக்கியபோது பூட் ஆகவில்லை. டிஸ்க் பெயிலியர் என்று செய்தி வந்தது. என் தலையில் இடி இறங்கியது.

‘என்ன ஆகிருக்கும்..? என்னோட அத்தனை வேலையும் இதுலதான இருக்கு…?’ பேக் அப் டிரைவ் வாங்க யோசித்து காசில்லாமல் விட்டுவிட்ட என் முட்டாள் தனத்தை நொந்துகொண்டேன். ‘அதெல்லாம் சரி.. இப்ப பார்ட்டி பணம் கொடுப்பாரா மாட்டாரா?’, என்ற கேள்வி பெரியதாக எனக்குள் எழுந்தது. நாளைக்குத்தான் என் மகளுக்குப் பணம் கட்ட கடைசி0 நாள்.

என் மகள் நான் வளமாக வாழத்துவங்கியபோது பிறந்தவள். இப்போது நான் அளிக்கும் வறண்ட வாழ்க்கையால் வெறுத்துப்போயிருப்பவள். பணம் இல்லையென்றால், ‘மூவாயிரத்துக்குக் கூடத் துப்பில்லையா?’ என்று கேட்பாள்.

பப்ளிஷரை அழைத்து விவரத்தைச் சொன்னேன். ‘என்னயா, ஒன்னோட எழவா போச்சி.. சரிசரி.. சரி செஞ்சி காலைய எடுத்துகிட்டு வா’, என்றவர் சட்டென்று கட் செய்துவிட்டார்.

இனி செய்ய எதுவுமில்லை என்று நினைத்தவனாக கடையை ஏறக்கட்டிவிட்டுப் புறப்பட்டேன். என் உடல் நிலைக்கு இப்போது புறப்பட்டால்தான் திருவாளவாயநல்லூர் போய் சேர முடியும். விவசாயம் படுத்துப்போனதால் நிறைய பேர் அங்கிருந்து மதுரைக்கு வேலைக்குப் போகிறார்கள். நானோ வாழ்க்கை கெட்டுப்போனதால் திருவாளவாயநல்லூருக்குக் குடிபோனேன். வீடு ரொம்ப மலிவான ஒத்திக்கு அந்த ஊரில் கிடைத்தது. சமயநல்லூரில் இருந்த வீட்டை விற்று டிடிபி என்று முடிவெடுத்தபோது எனக்குத் தெரிந்த நண்பர் சொல்லி அந்த வீட்டுக்குப்போய் சேர்ந்தேன்.

மெயின் ரோட்டில் இறங்கி திருவாளவாயநல்லூர் நோக்கி நடந்தேன். இப்போதெல்லாம் இந்த ஊரை டிவி நல்லூர் என்று சொல்கிறார்கள்.

வழியில் பெரியாம்பிள்ளை வேகமாக சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அவர் வீட்டின் ஒரு பகுதிதான் நான் ஒத்திக்கு வாங்கியிருக்கும் வீடு. என்னைக் கண்டு சைக்கிளை நிறுத்தினார்.

‘0சார்.. சைக்கிள்ல உக்காருங்க, நான் கொண்டுபோய்விட்றேன்’, என்றார். எனது உடல் நிலையை நன்கு அறிந்தவர். அப்படி செய்தால் நல்லது என்று பட்டது. என் கை நடுக்கம் அதிகரித்திருந்தது. வழக்கமாக மெல்லிய அதிர்வு போல இருக்கும். பஸ் ஏறியதிலிருந்து கிடுகிடுவென நடுக்கம் இருந்தது.

‘வேணாமையா.. என்னைக்கும் நடக்கிறதுதானே? அதுசரி இப்ப எங்க வேகமா போறீங்க?’, என்று பேச்சை மாற்றினேன்.

‘அத ஏங்கேக்குறிங்க.. கரெண்ட் வருது போவுது.. வாழை தார் போடற நேரம்.. மோட்டார எடுத்துவுட்டு தண்ணி வாய்க்கால்ல ஒடறதுக்குள்ள கட்டய புடிங்கிடிறானுங்க.. விடற தண்ணியெல்லாம் வாய்க்கால்ய இஞ்சிடுது.. அதான் கரெண்ட் வந்தவுடனே ஓடி வாரேன்.. இன்னிக்கு ராத்தூக்கம் இல்லாம ஒக்காந்து தண்ணி பாய்ச்சனும்.. இல்லன்னா.. வாழ மட்டுமில்ல.. நானுந் தரிசுதான்’, என்றார் சோகமாக..

‘சரிங்கையா போங்க… போயி வேலையைப் பாருங்க’, என்றபடி நடந்தேன். ஒருவேளை இவர் வாழையைக் காப்பாற்றிவிடலாம். ஆனால் எனது டிஸ்க்கைக் காப்பாற்ற முடியுமா என்று யோசித்தபடி நடந்தேன். இப்போது கால்களும் நடுங்கத் துவங்கின.

அந்த கம்யூனிஸ்டு கட்சிக்காரர் சொன்னது உண்மையோ என்று தோன்றியது. ‘இருக்காது.. பாதி படிப்புக்காரன் சொல்றத நம்பிகிட்டு’ என்று என்னைத் தேற்றிக்கொண்டேன். அது சரி பெண்ணை எப்படி சமாளிப்பது என்ற கேள்வி எழுந்தது.

அவள் என்ஜினியரிங் போக ஆசைப்பட்டாள். தனியார் கல்லூரியில் கட்டுவதற்கு என்னிடம் காசில்லை. அப்புறம் மீனாட்சி காலேஜில் பிசிஏ சேர்த்துவிட்டேன். அரசாங்கக் கல்லூரி என்றவுடன் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டவள் இன்னும் இறக்கவில்லை. எப்படி சமாளிக்கப்போகிறேன் நான் பெற்ற சனியனை?

யோசனை செய்தவனாக ஊருக்கு வெளியே தெரிந்த முதல் தெரு விளக்கின் கீழ் அமர்ந்துவிட்டேன். அதற்கு மேல் நடக்க கால்கள் ஒத்துழைக்கவில்லை. சற்று நேரத்தில் மறுபடியும் கரெண்ட் கட். ஊரே இருட்டில் மூழ்கியது…

எழுந்து நடப்பதற்கு மலைப்பாக இருந்தது. ஆனாலும் வேறு வழியில்லை.

======> கதையின் சுட்டி. <=====




19 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள் அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை. இன்னமும் முதலில் இருந்து முழுதாக படிக்கவில்லை. செய்திகள் சற்று பொடிதாக இருக்கின்றன. பொடி எழுத்துக்களை பெரிதாக்கி படித்து விட்டு வருகிறேன். கடைசி செய்தி மட்டுமே சுலபமாக படிக்க முடிந்தது.

    உறைபனியால் தவிக்கும் ராணுவ வீரர்களுக்கு சோலார் மிலிடரி டெண்ட்களை கொடுத்ததற்காக உயர்திரு Sonam Wangchuk அவர்களை பாராட்டுவோம். அவரின் இந்த செயலால் ராணுவ வீரர்கள் பயன பெறுவதற்கு அவருக்கு மனமார்ந்த நன்றி.

    இன்றைய கதைப்பகிர்வும் நன்றாக உள்ளது. மின்வெட்டினால், தாம் செய்யும் பிரிண்டிங் சார்ந்த தொழிலில் கதை நாயகர் தாம் பெறும் சிரமங்களை சொல்லியிருக்கிறார். அவருக்கென்று ஏற்பட்டிருக்கும் உடற்சார் பிரச்சனைகள் வேறு.. அந்த மகளின் படிப்பு நல்லதாக முடிந்து விட்டால், அவளாவது நல்ல வேலைக்குப் போய் அந்த குடும்பத்தை அன்போடு கவனித்துக் கொள்ள வேண்டுமென கதை படிக்கும் போது மனம் பரிதவிக்கிறது. இப்படியும் நம்நாட்டில் சிரமபடுபவர்கள் நிறைய பேர் உள்ளனர். கதை மனதை கனக்கச் செய்கிறது.

    கதைப்பகிர்வுக்கு சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. தாங்கள் தந்த சுட்டியிலும் போய் படிக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பெரும் ரயில் விபத்தை தடுத்து நிறுத்திய அந்த துணிச்சல் மிக்க முதியவர்களை பாராட்டுவோம். அந்த கீழே விழுந்த லாரியின் ஓட்டுனர் மற்றும் உதவியாளர்கள் உயிர் சேதமின்றி தப்பித்து விட்டனரா என்பது தெரியவில்லை. எல்லா விபத்துக்களும் பயங்கரமானதுதான்..

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. இரயிலை நிறுத்திய தம்பதியர் பாராட்டுக்குரியவர்கள்.

    பதிலளிநீக்கு
  5. இந்த வயதிலும் கூட, பாதி ராத்திரியிலும் கூட, லாரி கவிழ்ந்து, நிகழ்வு நடந்ததைக் கவனித்து ரயில் வருவதையும் அறிந்து தடுத்து நிறுத்தியது மிகவும் பாராட்டப்பட வேண்டியவிஷயம். அனைவரும் காப்பாற்றப்பட்டிருக்கின்றனரே! நினைத்தாலே பதற்றம் வருகிறது. எவ்வளவு பாராட்டினாலும் வாழ்த்தினாலும் தகும்.

    மிக அருமையான நல்ல செய்தி.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. விண்வெளிக்குச் செல்ல இருக்கும் நம் வீரர்களை வாழ்த்துவோம். தென்னகத்திலிருந்து இருவர் இருப்பது மகிழ்வான விஷயம்.

    மின் கோபுரம் சாய்ந்தால் உடனடி தீர்வு, ராணுவத்தினருக்கு ரெடிமேட் பாலம், குளிரில் பயன்படுத்த டென்ட் போன்றவை மிக நல்ல செய்திகள். அதுவும் நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை மகிழ்வான விஷயம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. கதையில் முடிச்சு, முடிவு என்று இருக்க வேண்டுமா? அதுதான் இலக்கணமா என்ன? ஏன் Linear narrative ஆக இருக்கக் கூடாது? இந்தக் கேள்விகள் என் மனதில் அடிக்கடி எழும்.

    அப்படிப்பட்ட ஒரு கதைதான் இது. Cause and effect ரீதியில் ஒவ்வொரு நிகழ்வும் அடுத்தடுத்து அப்படியே அடுத்த நிகழ்வுக்குக் கோர்வையாகச் செல்லும் வகை. ஒரு நாளில் தனக்கு நேரும் அனுபவத்தை இந்தக் கதாபாத்திரம் அப்படிச் சொல்லிச் சொல்கிறார். பக்கத்து வீட்டு நட்பிடம் சொல்வது போல...ஒரு நாளில் என்பது நமக்கு ஒரு உதாரணம் அதாவது தினமுமே இப்படித்தான் பெரும்பாலும் என்பதாக. மின்வெட்டு இருந்த காலங்களில் சிறிய ஊர்களில் எவ்வளவு அவதிப்பட்டார்கள் என்று தெரியும். காஞ்சிபுரம் பகுதியில் நூற்பாலைகளில், வீட்டில் மின்சாரத் தறி வைத்திருந்தவர்கள் எல்லாருமே மிகவும் கஷ்டப்பட்டார்கள்.

    தனக்கு நேரும் இன்னல்கள், தன் தொழிலில் வரும் இடர்பாடுகள் என்று அவற்றிற்கு முடிவு இல்லை என்பதால் கதையில் முடிவை எதிர்பார்க்காஅல் அன்றைய தினம் முடிவது எப்படி என்பதுதான் கதை என்பது என் தனிப்பட்டக் கருத்து. அப்படி ஒரு தினத்தின் நிகழ்வை கதையாக எழுதும் போது அதில் வேறு என்ன முடிவை எதிர்பார்க்க முடியும்?

    எனக்குத் தோன்றியது //எழுந்து நடப்பதற்கு மலைப்பாக இருந்தது. என்பதோடு// முடித்திருக்கலாமோ.
    அடுத்த வரி தேவையில்லை என்றே தோன்றியது. அந்த வரிதான் ஏதோ வேற வழியில்லை என்ன செய்ய என்று போகிற போக்கில் பேசுவது போல இருப்பதால் கதையின் மூடை மாற்றிவிடுகிறதோ அதனால்தான் முடிவு இல்லை என்று உங்கள் கருத்தில் சொல்லியிருக்கீங்க என்று தோன்றுகிறது.

    மெதுவாக இருட்டில் எழுந்து நடந்தேன் எதிர்காலத்தை நோக்கி…அலல்து நாளை விடியலை நோக்கி.... என் மனதில் பட்டது. ஒரு art film style . பிரச்சனைகள் ஒவ்வொன்றாய் வருவதும் பயமுறுத்துவதும் தொடர்கதைதானே!! ஆனால் நான் இப்படிச் சொல்வது சரியல்லதான். எழுத்தாளர் சொல்லும் முடிவை மாற்றிச் சொல்ல நமக்கு உரிமை இல்லை சொல்லவும் கூடாதுதான்.

    ஆனால் கதையைப் பற்றிய கருத்து எனும் போது டக்கென்று அவர் சொல்லியிருக்கும் முடிவை மாற்றுகிறேன் என்பதை விட அதே அர்த்தத்தில் அவர் சொல்லியிருந்த அந்த வரியை இப்படிச் சொல்லியிருந்தால் அர்த்தமே சற்று மாறி கதையின் mood ஐ மாற்றிவிடும் என்று தோன்றியதால்.

    ஏனென்றால் மிக இயல்பாக உண்மையில் நடப்பதை அப்படியே சொல்லிக் கொண்டு போகும் போது முடிவின் ஒரு வரி கூட கதையை தூக்கி நிறுத்தும். என்னடா இது இப்படி என்று நினைத்து வாசித்து வரும் போது கதையின் கடைசி வரி நமக்கு சட்டென்று மனநிலையை மாற்றிவிடக் கூடும் என்பதோடு….ஹா சூப்பர் முடிவு நச் என்று சொல்லத் தோன்றும். இருட்டு உல்கம் என்ற தலைப்பிற்கும் அர்த்தம் சேர்த்திருக்கும். கதையின் சாராம்சமும் அடங்கியிருக்கும்.

    யுபிஎஸ் இல்லாத காலங்களில் வைத்துக் கொள்ள முடியாத காலங்களில் அடிக்கடி நடந்து கொண்டிருந்த இப்பவும் மேசைக் கணினி பயன்படுத்துபவர்கள் ஏன் மடிக்கணினியில் கூட பேட்டரி உயிர் விடும் நிலையில் (இதைப் பற்றி உயிட்வெட்டு எனும் கதையில் ஆசிரியர் சொல்கிறார் கூடவே இருட்டு என்பதும்….மின்வெட்டு இக்கதையிலும் இடம் பெறுகிறது!! ஐயா ஆட்சி, அம்மா ஆட்சி என்று இரு ஆட்சிகளைப் பற்றி வருகிறது) ஏற்படும் இந்தப் பிரச்சனைகளை மிக துல்லியமாக நுணுக்கமாகச் சொல்லியிருக்கிறார். மடிக்கணினியை விட மேசைக் கணினியில் கூடுதல். பவர் போனால் யுபிஎஸ் இல்லை என்றால் பல பிரச்சனைகள் வரும். அவர் சொல்லியிருந்த அனைத்தும் நம் வீட்டிலும் அனுபவங்கள்…இப்போதும்தான். அந்தத் தொழில் தவிர. பொருத்திப் பார்க்க முடிந்தது.

    ஆனால் கணினி பற்றித் தெரியாதவர்களுக்கு இக்கதை எவ்வளவு தூரம் புரிந்து கொள்ள முடியும் என்பதை விட ஒன்றி வாசிக்க முடியும் என்று தெரியவில்லை. போர் அடிக்கலாம் என்பதோடு, சும்மா தன் கஷ்டத்தை சொல்லியிருக்கார் என்று கடந்துவிடக் கூடும். ஆனால் கதாபாத்திரத்தின் கஷ்டத்தைப் புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      தாங்கள் கூறியது அனைத்தும் உண்மை. டேபிள் கணினியின் பயன்பாடு எங்கள் இரண்டாவது மகன் வீட்டில் வாங்கி உபயோகிக்கும் போது சிறிது (நிறைய அளவு இல்லையெனினும்) அறிந்திருக்கிறேன். அவரின் எம்.சி.ஏ படிப்புக்காக வாங்கினார். அதன் அப்போதைய விலைகளும், எங்களுக்கு குழந்தைகளின் படிப்பு செலவுகளுடன் கொஞ்சம் அதிகந்தான். ஆனால், படிப்புக்காக அதன் பயன்பாடுகளின் பொருட்டு வாங்கி அவர் பயன்படுத்தும் போது ஏற்படும் மின் வெட்டுக்களின் தொந்தரவுகளில் அவர் சிமரப்படுவதை நானும் உணர்ந்துள்ளேன்.

      அந்த அனுபவங்களின் வாயிலாக இந்தக் கதையை படிக்கும் போது ஒருவித மனத் தவிப்புடன்தான் படித்தேன். அனுபவங்களின் வலிகளை சுமந்த நல்ல கதை. தங்களின் அருமையான கருத்துக்கு நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. மிக்க நன்றி கமலாக்கா. கணினி இருப்பவர்கள் பலரும் இத்தகைய பிரச்சனைகளைச் சந்தித்திருப்பார்கள். அதுவும் மின் வெட்டு இருக்கும் பகுதிகளில் இருக்கறவங்க

      அக்கா தண்ணிப் பிரச்சனை தீர்ந்ததா அன்றோடு?

      கீதா

      நீக்கு
    3. எங்கே...! . பிரச்சனை தினமும் அதே மாதிரி தொடர்ந்து கொணடேதான் இருக்கிறது. தீர்ந்த பாடில்லை.

      நீக்கு
  8. ஆசிரியரின் மற்றொரு கதையும் இதே மின்சாரம் போவதால் ஏற்படும் பிரச்சனைகள். இக்கதையில் மேசைக்கணினி. அந்தக் கதையில் மடிக் கணினி. பேட்டரி மாற்றினாலும் கூட அதில் சார்ஜ் தங்கும் நேரம் பொருத்து பார்த்து பார்த்து மின்சாரம் இணைக்க வேண்டும். அக்கதையும் ரொம்ப யதார்த்தம்.

    மின் வெட்டு என்றால் பேட்டரி சார்ஜ் குறையும் போது வேலை செய்வது கடினம். தற்போதைய என் நிலை அதுதான். ஆனால் இங்கு தினமும் 1/2 மணி நேரம் மின் வெட்டு உண்டு. எப்போது என்பது தெரியாது. பராமரிப்பு தினங்களில் சில மணி நேரங்கள் மின்தடை இருக்கும். மழைக்காலங்களில் மழை பெய்யும் போது அணைத்துவிடுவார்கள். மரங்கள் கம்பிகளில் தட்டும் பகுதியில் மரக்கிளைகளை வெட்டும் போது மின் தடை இருக்கும் மணி நேரங்களுக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. ரயில் விபத்தை தடுத்த தம்பதிக்கு வாழ்த்துக்கள், பாராட்டுகள்.

    //கல்வான் பள்ளத்தாக்கில் உறைபனியில் இருக்கும் நம்முடைய ராணுவ வீரர்களுக்கு இந்த சோலார் மிலிடரி டெண்ட்களை கொடுத்ததற்காக உயர்திரு Sonam Wangchuk அவர்களுக்கு பல கோடி நமஸ்காரங்கள்.//

    நாமும் வணக்கம் சொல்வோம். அதுவும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்பது பெருமை.

    பதிலளிநீக்கு
  10. கதை ஒரு நாள் குறிப்பு மாதிரி தான். ஒரு நாளில் அவர் படும் சிரமங்கள் படிக்கவே மலைப்பாக இருக்கிறது.

    உடல் நிலையும் சரியில்லை, மின்சாரமும் அவரை தொந்திரவு செய்கிறது.


    //அவர் என்னை உறுத்துப்பார்த்தார். அப்புறம், ‘தொழிலால் ஏற்படும் நோய் அல்லது ஈய விஷ பாதிப்பு என்று மருத்துவர்கள் சொன்னாங்களா?’, என்று கேட்டார்.//

    அவர் சொல்லும் காரணம் சரியாக இருக்கலாம்.
    45 வயதில் இவ்வளவு சிரமங்களும் அதனால் தான் இருக்கலாம்.

    //அதற்கு மேல் நடக்க கால்கள் ஒத்துழைக்கவில்லை. சற்று நேரத்தில் மறுபடியும் கரெண்ட் கட். ஊரே இருட்டில் மூழ்கியது…

    எழுந்து நடப்பதற்கு மலைப்பாக இருந்தது. ஆனாலும் வேறு வழியில்லை.//

    படிக்கும் போது எனக்கும் மலைப்பு வந்து விட்டது.

    நாளை மகளுக்கு பீஸ் கட்ட என்ன செய்வார் என்ற எண்ணம் மனதில் வந்து மனதை கனக்க வைக்கிறது.

    வெயில் காலம் வந்தால் மின் வெட்டு உண்டு. காலத்துக்கு ஏற்ற கதை. மின்சாரத்தை நம்பி எத்தனை தொழில்கள் இருக்கிறது.
    ஒவ்வொருவரும் என்ன என்ன கஷ்டங்கள் பட போகிறார்களோ!

    பதிலளிநீக்கு
  11. விண்வெளி வீரர்களுக்கு வாழ்த்துகள்.

    ராணுவ வீரர்களுக்கு சோலார் நற்செய்தி.

    ரெயிலை நிறுத்திய தம்பதி என அனைவருக்கும் பாராட்டுகள்.

    கதை நாட்குறிப்பு போலத்தான் செல்கிறது.அவரின் பல துயரங்களும் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  12. வந்தவர்க்கும் வந்து கருத்துகள் கூறியவருக்கும் நன்றி. சில பதிவுகளாக கீதா ரங்கன் அவர்கள் நீண்ட கருத்துரைகள் கூறி ஊக்கம் தருகிறார்கள், அவர்களுக்கு எக்ஸ்ட்ரா நன்றி.

    பதிலளிநீக்கு
  13. சி. மதிவாணன் அவர்களின் கதை வாசிப்பு நேர்த்தியான அனுபவமாயிற்று. இந்தப் பகுதியில் பகிர்தலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  14. சோலார் மில்லிட்டர் டென்ட் முதல், விண்வெளி செல்லும் வீரர்கள் செய்தி, மின்சார கோபுரம் சாய்ந்தால் உடனடித் தீர்வு என்று எல்லா செய்திகளும் தகவல்களும் அருமை. ரயில் விபத்தைத் தடுத்த அந்த தம்பதியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  15. இன்றைய ஜெயசேகர சந்திரசேகரன் சாரின் நான் வாசித்த கதை பழைய நினைவுகளைக் கொண்டு வந்தது. கணினியின் பயன்பாடு வந்த சமயத்தில் இப்படியான டேட்டா சென்டர்கள், பிரின்ட் அவுட் எடுப்பவை மின்சாரம் கட் ஆகும் போது பல சங்கடங்களை ஏற்படுத்திய காலம்.

    அந்தக் கஷ்டங்களை ஒரு தொழில் ரீதியிலும் அதனால் தன் குடும்பத்திலும் நேரும் கஷ்டங்களை ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கைப் பிரச்சனைகளை மிக அழகாக இயல்பாகச் சொல்லிச் செல்கிறார். வேறு வழியில்லை கடந்துதானே ஆக வேண்டும் என்ற ஒரு முடிவில் எழுந்து நடக்கிறார்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  16. சோலார் மிலிட்டரி டெண்ட் முதற்கொண்டு செய்திகள் அனைத்தும் சிறப்பு. அனைவருக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!