செவ்வாய், 12 மார்ச், 2024

சிறுகதை  :  நடைபாதை ஓவியன்  -  எஸ்.  குமார் 

 நடைபாதை ஓவியன்

எஸ் குமார்

கபாலி கண் விழித்தபோதே உடம்பெல்லாம் வலித்தது.கண்களில் எரிச்சலும் வாயில் கசப்பும் அப்படியே இருந்தன.

அன்று மூன்றாவது நாள். காய்ச்சல் சற்றும் தணிந்த மாதிரியே தெரியவில்லை.

எப்பொழுதாவது காய்ச்சலோ தலைவலியோ வந்து போகும்.  ஃபார்மசியில் மாத்திரை வாங்கிப் போடுவான். சரியாகி விடும். ஆனால் இந்த முறை தான் இப்படி வாட்டி எடுக்கிறது.

ஏதாவது விஷக் காய்ச்சலாக இருக்க வேண்டும்.  இரண்டு நாட்களாகக் கோணிச் சாக்கில் கொசுக்கடியில் முடங்கிக் கிடந்தாயிற்று. இன்று முடிகிறதோ இல்லையோ, தொழிலுக்குப் போய்த்தான் ஆக வேண்டும்.

அவனைப் போன்றே கால்கள் சூம்பிப் போன எத்தனையோ பேரை அவன் இந்த நகரத்தில் பார்த்திருக்கிறான். கொஞ்சம் வசதி, வாய்ப்பு உள்ளவர்கள் மூன்று சக்கர சைக்கிள் உதவியுடன் எஸ் டி டி பூத்தோ, பெட்டிக் கடையோ வைத்துப் பிழைத்துக் கொண்டிருந்தார்கள்.

வாய்ப்பில்லாதவர்கள் தெருக்களில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

நல்லவேளை, அவன் கைகளும் சூம்பிப் போகாததோடு அவை அற்புதமாகச் சித்திரம் வரைகிற ஆற்றலையும் பெற்றிருந்தன.

அவன் அடிக்கடி நினைத்துக் கொள்வான், இந்தத் திறமை மட்டும் இல்லாமல் போயிருந்தால் அவனும் பிச்சை தான் எடுத்திருக்க வேண்டும்.

நாள்தோறும் மனிதர்கள் நடந்து போகிற ஒரு பரபரப்பான சாலையைத் தான் அவன் பகடியில்லாமல் குத்தகைக்கு எடுத்திருந்தான்.

அதிகாலையில் தேநீர் குடிக்கவும் பேப்பர் படிக்கவும் மனித நடமாட்டம் துவங்கும்போது அவன் தன் வேலையை ஆரம்பித்தாக வேண்டும்.

வண்ணச் சாக்குகளும் வண்ணப் பொடிகளும் அவன் கையில் வடிவம் பெறத் துவங்கும்.

அலுவலகங்கள், கடைகள், பள்ளிகளை நோக்கி மனித நடமாட்டம் உச்சம் பெறும்போது அவன் கைவண்ணம் அங்கே உயிர் பெற்றிருக்கும்.

அந்தக் கலைத் திறத்தின் மீது ஏற்படும் மரியாதையும் அவன் தோற்றத்தின் மீது ஏற்படும் பச்சாதாபமும் அவர்களை நெகிழ்த்தும்.உதிரும் சில்லரைக்குப் பஞ்சமிருக்காது.

அப்படி அவன் சில்லரை புழங்கும் மனிதனாக இருந்ததாலேயே சில பெண்கள் அவனைச் சினேகம் பிடிக்க முயன்றார்கள். அவன் எப்பொழுதோ குடும்பஸ்தனாகி இருக்க வேண்டும்.

ஆனால்,

அவன் தானே சபிக்கப்பட்ட ஆத்மாவாக சுயபாரத்தையே தாங்க முடியாமல் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிற வேளையில் குடும்ப பாரத்தையும் எப்படிச் சுமப்பது என்ற எச்சரிக்கை உணர்வில் அந்த உறவுகளை ஒதுக்கி விட்டான்.

அன்றாடம் கிடைக்கிற வருமானத்தில் அவனால் பசியற்ற வயிறும் அழுக்கற்ற உடம்புமாக காலத்தைத் தள்ள முடிந்தது.

எப்பொழுதாவது இந்த மாதிரி காய்ச்சல், சளி என்று வந்து போகும். இந்த முறை தான் படாதபாடு படுத்துகிறது.

அன்ன, ஆகாரம் இல்லாமல் இரண்டு நாட்கள் ஓடி விட்டன. இன்றும் அப்படி இருந்து விட முடியாது.

சற்று தள்ளியிருந்த ஜாதிக்காய் பெட்டியில் வண்ணச் சாக்குகளும் பொடிகளும் இருந்தன.

அவற்றை எடுத்துக் கொண்டு, தனது சக்கரம் வைத்த பலகையின் மீது உட்கார்ந்தான்.அப்பொழுதே கண்கள் இருட்டிக் கொண்டு வந்து அவனை உடம்பு புரட்டித் தள்ளியது. கைகளை ஊன்றிச் சமாளித்துக் கொண்டான்.

சற்று நேரம் அப்படியே உட்கார்ந்திருந்து விட்டு, மனவலிமையைக் கூட்டிக் கொண்டபின் ஒரு கையை உந்தித் தன் வாகனத்தைத் தள்ளினான்.

பெரும் சிரமத்துடன் வழக்கமான இடத்தை வந்தடைந்தபோது கடைகள் திறக்கப் படவில்லை.

ஒரே ஒரு டீக்கடை மட்டுமே திறந்திருந்தது. அங்கேயும் ஓரிருவர் தான் இருந்தனர். சற்றுத் தள்ளி இரண்டு நாய்கள்.

காய்ச்சலின் துன்பமும் இரண்டு நாள் கொலைப்பட்டினியும் அவனைச் சோர்ந்து போக வைத்திருந்தன. ஒரு வாய் காபி குடித்தால் சற்று தெம்பாக இருக்கும். ஓவியம் வரையவும் சக்தி கிடைக்கும்.

மெல்ல பலகையை உந்தித் தள்ளியபடி டீக்கடையை நெருங்கினான்.

“அண்ணே”

“என்னய்யா?”

“ஒரு காபி வேணும்”

அவன் சட்டென்று காபி போட்டு விடவில்லை.

“சாயங்காலம் காசு தர்றேன்”

“அதானே பார்த்தேன், காலையிலேயே கடனா?’

“ரெண்டு நாளா ஜொரம்,இந்தப் பக்கம் வரவேயில்லை. அதான் கையில காசு இல்லே.

சாயங்காலம் கண்டிப்பாக் கொடுத்துடறேன்”

“சரி சரி”

அவன் காபி போட்டு, அருகில் கொண்டு வந்து கொடுத்தான்.

ஜுரவாயின் கசப்புக்குக் காபி இதமாக இருந்தது. கடைசி சொட்டு வரை உறிஞ்சிக் குடித்தான்.

க்ளாசை ஓரமாக வைத்தான்.

“க்ளாசை இங்கே வச்சிருக்கேன். எடுத்துக்கங்க.ரொம்ப நன்றி.சாயங்காலம் காசு கொடுத்துடறேன்”

அவன் வண்டியை உந்தித் தள்ளியபடி பழைய இடத்துக்கு வந்தான்.

ஊர்ந்து சென்று அருகில் கிடந்த காகிதங்களைப் பொறுக்கி எடுத்து அவன் அந்த நடைபாதையின்

ஒரு பகுதியைச் சுத்தம் செய்தான்.

பிறகு,

வெள்ளைச் சாக்கைப் பயன்படுத்தி கோட்டு வெளியுருவத்தை வரைந்தான்.

அந்த நேரத்தில் யாராவது பார்த்தால் மனிதனா, தெய்வமா, ஆணா, பெண்ணா என்று குழம்ப வைக்கும் அந்தக் கோட்டுருவத்துக்குள் அவன் மனக்கண்ணுக்குள் மஹாவிஷ்ணு உறைந்திருந்தார்.

அவன் தன் மனக்காட்சியைத் தனக்குள்ளாகவே சிலாகித்துக் கொண்டு மேலும் வரையத் துவங்கினான்.

சில நிமிடங்களிலேயே சோர்வு அவனை வாட்ட, கண்களை இருட்டிக் கொண்டு வந்தது.சூரியன் வேறு சுட்டெரிக்கத் துவங்கினான்.

பனிக்கத் துவங்கியிருந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்தான்.

டீக்கடையை மூடி விட்டிருந்தார்கள். மற்ற கடைகளும் திறக்கப் படவில்லை.

சோர்வையும் பசியையும் மீறி அவனுக்குள் ஆச்சரியம் தலைதூக்கியது.

என்ன ஆயிற்று?

அந்தக் கேள்வியை ஒதுக்கி விட்டு அவன் மீண்டும் தன் வேலையில் மும்முரமானான்.

கொஞ்சம்கொஞ்சமாக சித்திரம் முழுமையை எட்டியது. ஆடை, அணிகலன்கள், அவற்றின் வண்ணங்களென்று நிறைய நகாசு வேலைகள் செய்து முடித்தபோது உடல் வெலவெலத்துப் போயிருந்தது. சூரிய வெப்பம் தாளாமல் வியர்வை வழிந்தது.

சற்றுத் தள்ளியிருந்து அதனை அழகு பார்த்தான்.  பிறகு தான் சூழ்நிலையின் அநித்தியம் அவனுக்கு உறைத்தது. இன்னமும் எந்தக் கடையும் திறக்கப் படவில்லை. தவிர, வழக்கமாக அந்த நேரத்தில் வரும் பஸ்கள் எவையும் வரவில்லை.

என்ன தான் ஆயிற்று இன்று?

பொதுவாகவே இந்த நேரம் சாலை பரபரப்பாக இருக்கும். கடைகள் களை கட்டி விடும்.

நடைபாதையில் மனித நடமாட்டம் இருக்கும். பஸ்களைத் தவிர கார்கள், ஆட்டோக்கள் என்று சாலையில் பெருத்த ஓசை இருக்கும்.

இப்பொழுதோ அத்துவானமாய் வெறிச்சோடி,ஓசையின்றி. ஏன்?  

உடம்பின் உபாதைகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, அவன் பட்டபாடெல்லாம் வீண்தானா?

மனமும் சோர்ந்துபோக போஸ்டர்கள் ஒட்டப் பட்டிருந்த சுவரின் மீது சரிந்தபடி, தளர்ந்து உட்கார்ந்திருந்தான்.

ஏதோ ஓர் ஆட்டோ வேகமாக ஓடி வளைவில் திரும்பியது.மற்றபடி சாலை துடைத்து விட்ட மாதிரி இருந்தது.

ஏற்கனவே சோர்ந்திருந்த அவன் கண்களைக் கண்ணீரும் திரையிட்டு மங்க வைத்தது.

திடீரென்று ஆளரவமும் நடமாட்டமும் வந்தது.சாலை உயிர்த்தது. இருபது, முப்பது பேர்

உருட்டுக்கட்டைகள், சைக்கிள் செயினுடன் வலம் வந்தார்கள்.

“தோ பார்ரா, இவனை”

“இன்னிக்குப் பார்த்து படம் வரைஞ்சி வச்சிருக்கான்.”

“தலைவர் கார் மேலே கல்லை விட்டு அடிச்சிருக்காங்க. ஒரே குபாரா இருக்கு.

கொலைமுயற்சின்னு கண்டிச்சி அறிக்கையெல்லாம் வந்திருக்கு.ஊரே பந்த் பண்ணுது. இந்த நொண்டி நாய் படம் வரைஞ்சி வச்சிருக்கு. இன்னா தெனாவட்டுடா இவனுக்கு…”

அவன் ஆக்ரோஷமாக இவனை நோக்கி வந்தான்.

இவன் தன் வலிவற்ற கைகளை உயர்த்தி அவர்களை வணங்கினான்.

“எ…எனக்குத் தெரியாதுங்க”

“ஊரெல்லாம் இதே பேச்சாயிருக்குது. இவனுக்குத் தெரியாதுன்னு….”

“அட, அவன் தான் தெரியாதுன்னு சொல்றானே, வுடுபா” என்று இன்னொருவன் அவனை இழுத்துச் சென்றான்.

கூட்டம் நகர்ந்து காணாமல் போனது.

ஊரே பந்த் பண்ணுது….

அப்படியென்றால்… இன்று யாரும் வர மாட்டார்களா? அவன் சித்திரம் சீந்தப்படாதா? அவன் உழைப்பு வீண் தானா?....ஐயோ….

நெஞ்சே நின்று விடும் போலிருந்தது.

உடல் மேலும் தளர்ந்து சரிய அவன் அந்த நடைபாதையின் மீது மல்லாக்க விழுந்தான்.

*** *** ***

மாலை.

மெல்ல மெல்ல கெடுபிடிகள் தளர்ந்தன.

அங்கொன்றும் இங்கொன்றுமாக கடைகள் திறக்கப் பட்டன.

மனித நடமாட்டமும் துவங்கியது.

நடைபாதை உயிர் பெற்றது.

பேச்சுமூச்சற்று விழுந்து கிடந்த அவனையும் அவன் வரைந்த ஓவியத்தையும் பார்த்தபடியே மக்கள் நடந்துக் கொண்டிருந்தார்கள்.

அவனுடைய கோலத்தைப் பார்த்து இரக்கப்பட்ட ஒருவர் அருகே சென்று சோதித்துப் பார்த்தார்.பிறகு,

“போயிடுச்சி” என்றார்.

“பாவம்…எவ்வளவு அழகா வரைவான்…அவ்வளவு தான் அவன் கொடுத்து வச்சது….”

அவரவர்களும் பாக்கட்டைத் துழாவி சில்லரையை வீசினார்கள்.

மஹாவிஷ்ணுவையே மறைக்கும்படி சில்லரை விழத் துவங்கியது.

அவனுடைய கலைத்திறனுக்காகவும் கடைசி பயணத்துக்காகவும்.

*** *** ***

35 கருத்துகள்:

  1. வித்தியாசமான சூழலில் கதை. இப்படிப்பட்ட கதைகள் தெருவில் ஓவியம் வரைபவர்களைப் பார்க்கும் பார்வையில் மாற்றத்தைக் கொண்டுவரும்.

    முடிவு சாதாரணம். ஒரு ஆத்மாவை கடன்காரனாகச் சாகடித்துவிட்டாரே கதை ஆசிரியர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லைன்னே நினைக்கிறேன். கடைப்பகுதியை சுத்தம் செய்கிறான். அதன் பின் மாலையில் விழும் பைசா....வரைபவனுக்குத்தான் தெரியாது..ஆனால் பைசா வந்துவிட்டது! அவன் கொடுத்திருப்பான் கண்டிப்பாக. ஏமாற்றும் மனம் இல்லையே அப்புறம் என்ன? மரணம் என்பது அதெல்லாம் பார்த்து வருவதில்லையே.

      கீதா

      நீக்கு
  2. முடிவு இதுதான் என்று தெரிந்துவிட்டது. அரசியல் ரௌடி கும்பல் வரும் இடத்தில் கொஞ்சம் திக் திக்....அங்கேயே முடிவை எதிர்பார்த்தேன். அது தொடர்ந்தது என்றாலும் முடிவு அதுதான்.

    கதைக்களம் வித்தியாசம். விளிம்பு நிலை மனிதனின் கதை. இப்படி ஓவியம் வரைபவர்களைப் பார்க்கிறேன், இங்கும். மனம் சங்கடப்படும். இக்கதையும் மனதை கொஞ்சம் சங்கடப்படுத்தியது

    மனதை தொட்ட கதை.

    இயல்பான எழுத்து. எழுத்திற்கு வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை, மரணம் எப்பொழுது வேண்டுமென்றாலும் நிகழும். சாமான்யனுக்கு அந்த இறுதி நாள் வரை வாழ்க்கை ஒரு போராட்டமே!

      நீக்கு
  3. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. ஐந்து மணிக்கெல்லாம் வந்தாயிற்று.. முதல் சில வரிகளைப் படித்ததுமே கதையின் நிறைவு மனதிற்குள் வந்து விட்டது...

    வரும் காலத்தில் இந்தக் கதைகள் பேசப்படலாம்...

    இன்றைய பொழுதில் இதை மறப்பதற்கு மிகவும் முயற்சிக்க வேண்டும்....

    பதிலளிநீக்கு
  5. அப்புசாமி சீதாப்பாட்டி என்று சிருஷ்டித்துக் கொண்டு பாக்கியம் ராமசாமி அவர்களது அந்தக் காலத்துக்
    கதைகள் நினைவுக்கு வருகின்றன...

    பதிலளிநீக்கு
  6. ஏதாவது திடீர் திருப்பம் வராதா என்ற நினைவுடன் தொடர்ந்தால்.....

    பதிலளிநீக்கு
  7. கதை ஒரு ரிப்போர்ட் ஆக இருக்கிறது. முடிவை ஊகம் செய்ய முடிகிறது. வரைந்த ஓவியம் என்ன என்பதையும் விளக்கி அது தற்போதைய நிலையை எடுத்துக்காட்டுவதாக இரண்டு வரிகள் சேர்த்திருக்கலாம். முயற்சிக்கு பாராட்டுகள்.
    ஆசிரியர் கடலூர் மாவட்டததை சார்ந்தவரோ?
    Jayakumar

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  9. கதை மனதை நெகிழ வைத்து விட்டது. இவர்களை போன்றவர்களின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது. உடல் குறை இருந்தாலும் பிச்சை எடுக்காமல் தனக்கு தெரிந்த முறையில் படம் வரைந்து மற்றவர்களை மகிழ்வித்து காசு பெற்று வாழ்ந்து இருக்கிறார்.
    தன் இறப்புக்கும் காசு சேர்த்து கொடுத்து விட்டு போய் விட்டார்.

    பதிலளிநீக்கு
  10. நன்றி, ஊனமுற்றவர்களிலும் கலைஞர்கள், வணிகர்களாக தொழில் நடத்துபவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டியவர்கள்.

    பதிலளிநீக்கு
  11. தொடர்ந்து கோயில்,
    பிரார்த்தனைகள்,
    கடைத்தெரு வயாபார
    சமாச்சாரங்கள், கடைசியில் எல்லோரும் நல்லவரே, சுப முடிவு என்றிருக்கும் எபி கதைக்களத்திற்கு வழக்கத்துக்கு மாறான சப்ஜெக்ட். அதுவே தனித்தன்மையான வாசிப்பு அனுபவத்தைக் கொடுத்து கதையை நடத்திச் செல்கிறது.
    வாழ்க்கையில் மட்டுமல்ல, கதைகளிலும் ஒரே மாதிரி என்றில்லாமல் அப்பப்போ ஏதாவது வித்தியாச வாசிப்பு அனுபவம் கிடைத்தால் அது தனித்தன்மை கொண்டதாய் சிறக்கிறது.
    புரிவது ரொம்ப சிம்பிள்.
    எல்லாம் மனுஷ மன விதவித போக்குகள் தான். அந்த மாற்று விஷயத்தைப் புரிந்து கொண்டு இந்தப் பகுதிக்கு வித்தியாசமான கதையைத் தந்திருக்கும்
    நண்பருக்கு வாழ்த்துக்கள். அடுத்த செவ்வாய் ஒன்றிற்கு இன்னொரு வித்தியாசமான பொருளைத் தொட்டதான கதையைக் கொடுங்கள்.
    தங்கள் முயற்சிக்கு நன்றி, நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி அண்ணா அவர்களது தனித்துவமான கருத்திற்கு நெஞ்சார்ந்த நன்றி..

      இப்போது தான் தஞ்சை ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் இருந்து திரும்பினேன்..

      நீக்கு
  12. 'இல்லேன்னே நினைக்கிறேன்' என்று ஆரம்ப பின்னூட்டத்தை மறுத்து தான் சொல்ல வந்ததைத் தெளிவாகச் சொன்ன சகோதரி தி.கீதா,

    தன் இறப்பிற்கும் காசு சேர்த்துக் கொடுத்து விட்டுப் போய் விட்டார்'
    என்று ஓவியரின் ஆத்ம சுகத்திற்கு நியாயம் வழங்கி நுணுக்கமான கருத்தைப் பதிந்த சகோதரி கோமதி அரசு --

    ஆகியோரின் வித்தியாசமான பின்னூட்டங்கள் மனசில் நிற்கின்றன.

    பதிலளிநீக்கு
  13. இனம் புரியாத வேதனையை தந்த கதை. இது போலுள்ளவர்கள் உழைத்து வாழ்பவர்கள் எத்தனையோ பேர் கஷ்டப்படுகிறார்கள். யாரும் அவர்களைக் கண்டு கொள்வதில்லை. இப்படிப்பட்ட சம்பவங்கள் உண்மையில் நடந்திருக்கும் தானே. நடப்பவைதான். முடிவு வேதனை.

    நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதை மனதை கலங்க வைக்கிறது. இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொருவரின் முடிவு எப்போது வருமென்று யாருக்குத்தான் தெரியும்..! இந்தக்கதையிலும், கதையின் முடிவும், அந்த கதாபாத்திரத்தின் முடிவும் யதேச்சையாக வந்து நம் மனதை தொட்டு விட்டுப் போகிறது.

    இப்படிப்பட்டவர்கள் இன்னமும் பிறந்து இப்படியான சுழலுடன் வளர்ந்து தமக்கென்று பொக்கிஷமாக இறைவன் அளித்திருக்கும் திறமைகளை பறைசாற்றி இறுதியில் ஜெயித்தோ , தோற்றோ வாழ்கிறார்கள். கதாசிரியரின் கை தேர்ந்த எழுத்துடன் நம் மனதையும் கலங்க வைத்து சென்ற நடைபாதை ஓவியனை மறக்க இயலாது. கதாசிரியருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  15. மனதை கனக்க வைத்து விட்டது கதையின் முடிவு.

    பதிலளிநீக்கு
  16. இப்படிப்பட்ட விளிம்புநிலை மனிதர்களை பார்த்திருக்கிறேன். அவர்களின் ஒரு நாள் எப்படியிருக்கும்? என்ற கற்பனை, அது கடைசி நாளாகி விட்ட சோகம், சாயந்திரம் காசு தருகிறேன் என்ற சொல்லி காப்பாற்றிய நாணயம்... மனம் கணத்தாலும் நிறைவு!

    பதிலளிநீக்கு
  17. பிச்சை எடுக்காது 'தன்கையே தனக்குதவி" என சித்திரம் வரைந்து வயிற்றுப் பசி தீர்க்கும் அவன் பாராட்டப்பட வேண்டியவன்.

    அப்படியே விழுந்து மரணிப்பது இறுதியில் மிகுந்த சோகம்.

    பதிலளிநீக்கு
  18. விளிம்பு நிலை மனிதர்கள் குறித்து நமக்குச் சொல்லும் கதை. கதையின் முடிவு சோகம். இப்படி பலர் இருப்பது நிதர்சனம்.

    பதிலளிநீக்கு
  19. பரிவையின் கதை தானே? அவர் தரத்துக்கு இன்னும் எழுதி இருக்கலாம். என்றாலிம் இதுவும் நன்/று. இம்மாதிரிக் கதைகள் நிறைய வந்திருப்பதால் முடிவெல்லாம் எதிர்பார்க்க முடிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை கீதா அக்கா.  இவர் வேறு எஸ் குமார்.  சாவி முதலான பத்திரிகைகளில் இவர் கதை வந்திருக்கிறது.  ஏற்கெனவே அறிமுகத்தோடு ஒரு கதை வெளியிட்டிருந்தோம்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!