நான்
தரிசனம் செய்த கோயில்கள் –
நெல்லைத்தமிழன்
ஐந்து
துவாரகைகள் யாத்திரை –
பகுதி
13
சோம்நாத்தில் இருக்கும் கோவில்களைத் தரிசித்த பிறகு, சோம்நாத் ஜ்யோதிர் லிங்கத்தையும் தரிசித்த பிறகு, பேருந்தில் ஏறி, சுமார் 7 கிமீ தூரத்தில் உள்ள விராவல் என்ற இடத்தை மதியம் 4 மணி வாக்கில் அடைந்தோம். இங்குதான் ஸ்ரீகிருஷ்ணர், ஜரா என்ற பெயருடைய வேடனால் அம்பு எய்யப்பட்டு உயிர் நீத்த இடம். இந்த இடம் ஒரு காலத்தில் காட்டுப் பகுதி. ஸ்ரீகிருஷ்ணர் அமர்ந்திருந்தது ஆலமரத்தின் அடியில் என்று சொல்கிறார்கள். கோவில் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. சன்னிதியிலேயே பட்டுப்போன மரத்தின் அடிப்பகுதி இருந்தது. கோவில் சமீபத்தில் அமைக்கப்பட்டிருந்தாலும், இடம் தொன்மையானது. அவ்வப்போது கட்டப்பட்ட சிறு கோவில்கள் மறைந்து பிறகு சமீபத்தில் நன்றாகக் கட்டப்பட்டிருக்கலாம்.
இந்த
இடத்தை BHபால்க தீர்த்தம்
என்கிறார்கள்.
பால்கா தீர்த்தம் – விராவல் – ஸ்ரீகிருஷ்ணர்
வேடனால் அம்பெய்யப்பட்டு உயிர் துறந்த இடம்.
ஸ்ரீகிருஷ்ணர்
வேடனால் கொல்லப்பட்டதைச் சித்தரிக்கும் கோவில் கர்பக்ரஹம். அருகில் ஆலமர
அடிப்பாகத்தைக் காணலாம்.
ஸ்ரீகிருஷ்ணர்
வேடன் செலுத்திய அம்பால் உயிர் பிரிந்த காட்சியை சன்னிதானத்தில் காணலாம்.
இது என்னடா புது வேடம் என்று நினைக்காதீர்கள். ஆங்காங்கே கீழே அமரவேண்டும் என்றால், வேஷ்டி அழுக்காகிவிடுகிறதே என்ற கவலை வந்துவிடுகிறது. அதனால் உட்காருவதற்கு முன்பு தயாராக வைத்திருக்கும் துண்டைக் கட்டிக்கொண்டுவிடுவேன். தனியாக துண்டை கீழே விரித்தால், எழுந்திருக்கும்போது எடுத்துக்கொள்ள மறந்துவிடும் என்பதால். தரிசனம் செய்யப் போகும்போது, துண்டைக் கழற்ற சில நேரங்களில் மறந்துவிடும். அவ்ளோதான் விஷயம்.
சன்னிதியின் நுழைவாயில் சிற்பம் மற்றும் அழகிய மேல் விதானம்.
கோவில் அருகில் இருந்த குளம். அடுத்த
பகுதியில் வாழை மரங்களுடன் கூடிய சிறு தோட்டம்.
கோவிலின் வெளியே பலவித கற்களும், கடல்
சம்பந்தப்பட்ட பொருட்களும் விற்கிறார்கள். கோமதி
துவாரகையை விட விலை மிக அதிகம்.
கோவிலில் தரிசனம் செய்த பிறகு, அருகிலிருந்த இடத்திலேயே மாலை காபி கொடுத்தார்கள். என்ன இனிப்பு, காரம் வழங்கினார்கள் என்பது நினைவுக்கு வரவில்லை. அங்கிருந்து 6 மணி வாக்கில், அஹமதாபாத்தை நோக்கிப் பிரயாணிக்க ஆரம்பித்தோம்.
அஹமதாபாத் சுமார் 400 கிமீ தூரம். வழியில் சுமார் 9 மணிக்கு ஒரு பெட்ரோல் பங்கில் நிறுத்தி (அங்குதான் ரெஸ்ட் ரூமும், தண்ணீரும் கிடைக்கும்), கோதுமை ரவை உப்புமா, தக்காளி தொக்கு, தயிர்சாதம் சாப்பிட்டோம். பயணம் தொடர்ந்து, அதிகாலை 3 ¼ மணிக்கு அஹமதாபாத் ஸ்வாமிநாராயணன் கோவிலை அடைந்தோம். இது மிகப் பெரிய வளாகம். கோவில், தங்குமிடம், தங்குபவர்களுக்கான சமையல் செய்யும் மிகப் பெரிய இடம் மற்றும் நடுவே பெரிய மைதானம் போன்றவற்றைக் கொண்டது. அவரவர்களுக்கு அறை கொடுத்தார்கள். நல்ல சௌகரியமான இடம்.
யாத்திரையில் கலந்துகொள்பவர்களுக்கு இரவு தங்குவதற்கு பொதுவாக ஹால் இருக்கும். அறை (separate room, suitable for a family of two) தரும் வாய்ப்பு இருந்தால், தேவைப்பட்டவர்களுக்கு ரூம் தருவார்கள். அதற்கான வாடகை நாம் கொடுக்கவேண்டும். நாங்கள் எப்போதுமே, தனி அறை கிடைக்கும் வாய்ப்பு இருந்தால் தரச்சொல்லிவிடுவோம். காரணம் நிம்மதியான தூக்கம், நல்ல ரெஸ்ட் ரூம். அறை வாடகையும் பொதுவாக ஒருவருக்கு 500 ரூபாய்க்கு அதிகமாக எங்குமே இருப்பதில்லை.
யாத்திரையில்
தங்குமிடம் கொடுத்தாலும்,
பொதுவாக
அகால நேரமாக அமைந்துவிடும். ரூம் அலாட் செய்து, சாவி வாங்கி, நம் உடமைகளைக் கொண்டுபோய்
வைத்துவிட்டு,
அடுத்த
நாள் எத்தனை மணிக்குத் தயாராக இருக்கவேண்டும் என்பதைக் கேட்டுக்கொண்டு, நம் அறைக்குச் சென்று
படுப்பதற்குள் வெகுநேரமாகிவிடும். இங்கும் நாங்கள் படுத்துக்கொள்ள 4 மணி ஆகிவிட்டது.
இரவில் தங்க நிறமாகப் பளபளத்த ஸ்வாமி நாராயணன் கோவில் வளாக வாயில்.
எங்களுக்குக் கொடுத்த வசதியான அறை. 500 ரூபாய்
என்று நினைவு.
காலை 6 ½ மணிக்கெல்லாம் குளித்துத் தயாராகிவிட்டோம். காபி குடித்த பிறகு, வளாகத்திலிருந்த அழகிய கோவிலுக்குச் சென்று தரிசித்தோம்.
இந்தக் கோவிலிலிருந்து (தங்குமிடத்திலிருந்து) எல்லா சன்னிதிகள், வளாகம் முழுமையும் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தோம். 10 மணி வாக்கில் காலை உணவுக்குப் பிறகுதான் மற்றக் கோவில்களுக்குப் பிரயாணிக்கப் போகிறோம்.
10 மணிக்குத்தான் சாப்பாடு, அதனால் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிவிட்டு 9 மணிக்கு கோவிலுக்குப் போனால் போதும் என்று இருந்துவிட முடியாது. பொதுவா காலை காபி 6 மணிக்கு (அல்லது 5 ½ க்கு) இருக்கும் என்பதாலும், அந்தச் சமயத்தில்தான் அன்றைய ப்ரோக்ராம் சொல்லப்படும் என்பதாலும், காபி வேண்டுமோ இல்லை வேண்டாமோ, அந்த நேரத்தில் நாம் அங்கு சென்றுவிட வேண்டும்.
கோவிலின்
மற்றும் வளாகத்தின் அழகிய புகைப்படங்களை அடுத்த வாரமும் தொடர்வோம். அதன் பிறகு எங்கெல்லாம்
சென்றோம் என்பதையும் பார்ப்போம்.
(தொடரும்)
நல்ல விவரணம். அழகான படங்கள். யாத்திரை மொத்தம் எத்தனை நாட்கள்? இன்னும் பாக்கி உள்ள இடங்கள் யாவை?
பதிலளிநீக்குJayakumar
வாங்க ஜெயகுமார் சார். யாத்திரை பத்து நாட்கள், பஞ்ச துவாரகை, ஶ்ரீகிருஷ்ணர் சம்பந்தப்பட்ட இடங்கள் என்று நீளும். கடைசியில் குருஷேத்திரத்திற்குப் பிறகு தில்லியில் முடியும். ஞாயிறு படங்கள் என்று இருந்ததை, யாத்திரைத் தொடர் படங்களாக எடுத்துக்கொண்டது. இந்தத் தொடர் செப்டம்பர் வரை செல்லும், இடையில் முகலாயர் வரலாற்றுடன்.
நீக்குகில்லாடி தான் நீங்கள். 10 நாள் யாத்திரையை 10 மாத தொடராக நீட்ட உங்களால் மட்டுமே முடியும் அதுவும் சுவாரசியத்துடன். முகலாய வரலாற்றுக்கும் ஸ்ரீ கிருஷ்ணா யாத்திரைக்கும் சம்பந்தம் உண்டோ?
நீக்குJayakumar
யாத்திரை என்பதில் செய்திகள் இல்லை. குறிப்பிட்டால் மூன்று வாரங்களில் முடிந்துவிடும். ஆனால் சென்ற கோவில்கள் சம்பந்தமான புகைப்படத் தொடராகத்தான் நீங்க இதனைப் பார்க்கணும். அப்படியே கோவில் விஷயங்களையும் நான் எழுதுகிறேன். நாளை யாராவது இந்த யாத்திரை மேற்கொண்டால் எதை எதையெல்லாம் பார்க்கணும் என்பதற்கான குறிப்புகள்.
நீக்குஸ்ரீகிருஷ்ணா யாத்திரையில் கோகுலத்திற்குச் செல்வதற்கு முன்பு ஆக்ராவில் இறங்கினோம். அப்போது காலையில் தாஜ்மஹல் மற்றும் ஆக்ரா கோட்டைக்குச் சென்றேன். அதனைத்தான் ஜவ்வாக இழுத்திருப்பேன். படிக்க போரடிக்காது என்ற நம்பிக்கைதான்.
சென்ற வாரத்தில் என் மாமியார், அவருடைய மாமியாரின் பெற்றோர் (உறவை நீங்களே கண்டுபிடிச்சுக்கோங்க), நடந்தே பத்ரி வரை சென்று தரிசனம் செய்திருக்கிறார்களாம். ஒரு நாளைக்கு சுமார் 15-20 கிமீ தட்டு முட்டுச் சாமான்களோடு நடந்து, பிறகு தங்கி, அடுப்பில் சமைத்து (விறகு/கரி) சாப்பிட்டு, உறங்கி, மறு நாள் எழுந்து இதே போன்று நடந்து... என்று யாத்திரை செய்திருக்கிறார்களாம். இப்போ போக்குவரத்து வசதிகள் பெருகிவிட்டன. அதனால் யாத்திரை மிகவும் சுலபமாக இருக்கிறது ஜெயகுமார் சார்
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ப்ரார்த்தனைக்கு நன்றி கமலா ஹரிஹரன் மேடம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கோவில் யாத்திரை பகிர்வும் நன்றாக உள்ளது. படங்கள் அனைத்தும் எப்போதும் போல நன்றாக எடுத்துள்ளீர்கள். விரால் கோவில் ஸ்ரீ கிருஷ்ணர் படங்களைப் பார்த்தும் மனசு லேசாக பாரமானது. மனித வாழ்வை இறுதி வரை வாழ்ந்து காட்டிய இறைவன் ஸ்ரீ கிருஷணரை தரிசித்துக் கொண்டேன்.
எங்கள் அண்ணாவும் இப்படித்தான் உடை அழுக்காகமல் இருக்க வேஷ்டி மேலே ஒரு துண்டை சுற்றிக் கொள்வார்கள். உங்கள் படத்தை பார்த்ததும், அவர் நினைவு வந்தது.
தாங்கள் மேற்கொண்ட பயணங்களைத் பற்றிய விவரம் அருமையாகவும், கோர்வையாகவும் எழுதியுள்ளீர்கள்.அதனாலேயே நாங்களும் உடன் பயணித்த திருப்தி தங்கள் பதிவை படிக்கையில் வருகிறது. நன்றி.
அடுத்துச் சென்ற ஸ்வாமி நாராயணர் கோவில் படங்களும் நன்றாக உள்ளது. கோபுர தரிசனம் பெற்றுக் கொண்டேன். அதன் அழகிய வேலைப்பாடுகளும் நன்றாக உள்ளது. கோவிலின் மற்றைய படங்களை காண ஆவலோடிருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரஹரன் மேடம். எனக்கு யாத்திரை செல்வதிலும், திவ்யதேசங்கள் எனப்படும் வைணவக் கோவில்களுக்குச் செல்வதிலும், வரலாற்றுடன் தொடர்புடைய இடங்களைக் காண்பதிலும், சிற்பங்களைப் படம் பிடிப்பதிலும் ஆசை உண்டு. இங்கு அவற்றைத் தொடராக வெளியிடும் வாய்ப்பு மகிழ்ச்சிக்குரியதுதான்.
நீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி
மனித வாழ்வை வாழ்ந்து காட்டிய இறைவன் இராமர் மறைந்த இடமான குப்த கட்டாவிற்கும் பலமுறை சென்றிருக்கிறேன். அது இன்னோரு தொடரில் வரும் கமலா ஹரிஹரன் மேடம்.
நீக்குவிரால் கோவில் ????
நீக்குவிராவல் என்பதில் அவர் தட்டச்சில் தவறாகிவிட்டது. போனை வைத்துப் பதிவு எழுதுபவர் அவர். அதனால் இதனை நான் குறிப்பிடவில்லை.
நீக்குஉண்மை சகோதரரே. நான் அப்போதே கவனித்தேன். பதில் திருத்தம் தர வீட்டின் சூழ்நிலைகள் (தண்ணீர் பிரச்சனை. :)) ) ஒத்துழைக்கவில்லை.
நீக்கு"விராவல் " கோவில் என்றுதான் தட்டச்சு செய்தேன். ஒரு முறைக்கு இருமுறையாக பிழை திருத்தத்தை பார்க்கும் போது கூட சரியாகத்தான் இருந்தது. அதில் முதலில் இணக்கமாக இருந்த "வ"மட்டும் கருத்தில் காட்டும் போது "வழுக்கி" எங்கோ போய் விட்டது. (தண்ணீர் இல்லா காட்டில் இருக்கும் போது கூட இந்த வழுக்கல். ஹா ஹா ஹா) தாங்கள் என் நிலைமையை புரிந்து கொண்டிருப்பதற்கு மிக்க நன்றி.
உங்க வீட்டில் தண்ணீர் பிரச்சனை எப்படி இருக்கு? இங்க எங்க வளாகத்துல மதியம் 12 மணிலேர்ந்து மாலை 6 மணி வரைல தண்ணீர் வராது. மற்றபடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இதுல பிரச்சனை என்னன்னா, ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பாத்ரூமிலும் இரண்டு பக்கெட் தண்ணீர் பிடிச்சு வச்சுக்கறாங்களாம் (வேலைக்காரி சொன்னார்). பிறகும் அதை உபயோகிக்கறாங்களா இல்லை தூரப்போட்டுடறாங்களான்னு தெரியலை. இந்த ஐந்து வருடத்தில் இதுவே முதல் முறை. இப்போ இங்க இருக்கறவங்க, இடைல இடைல 2 மணி நேரம் தண்ணீர் வராட்டா பரவாயில்லை, இப்படி ஒரேடியா ஆறு மணி நேரம் தண்ணீர் வராமல் இருக்கறதுக்கு என்று சொல்றாங்க. பார்க்கலாம் அடுத்த மாதம் என்ன ஆகப்போறதுன்னு.
நீக்குகற்பக கணபதி
பதிலளிநீக்குகனிவுடன் காக்க..
முத்துக்குமரன்
முன்னின்று காக்க..
தையல் நாயகி
தயவுடன் காக்க..
வைத்திய நாதன்
வந்தெதிர் காக்க..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
வாழிய நலம் துரை செல்வராஜு சார்.
நீக்குவிராவல் ஸ்ரீகிருஷ்ணா கோவில் தரிசனம் பெற்றோம்.படங்கள் நன்றாக இருக்கின்றன.
பதிலளிநீக்குசுவாமி நாராயணன் கோவில் தகதகக்கிறது.
வளாகம் பெரியதாக, பார்க்க பிரமிப்பாக இருக்கிறது.
வாங்க மாதேவி. நலமா?
நீக்குவாழ்வை வாழ்வாக வாழ்ந்து காட்டிய வள்ளலை வனங்கிக் கொண்டேன்..
பதிலளிநீக்குவாங்க துரை செல்வராஜு சார். வாழ்வை வாழ்வாக வாழ்ந்து காட்டியவர் இராமர். கிருஷ்ணருக்கு, தான் கடவுளின் முழு அம்சம் என்பது எப்போதுமே தெரிந்திருந்தது. அது தேவையான இடத்தில் வெளிப்படுத்தவும் செய்தார்.
நீக்குவாங்க துரை செல்வராஜு சார். வாழ்வை வாழ்வாக வாழ்ந்து காட்டியவர் இராமர். தான் கடவுள் என்பதை எப்போதும் அறிந்து அதன்படி தன் சக்தியை அவ்வப்போது காட்டியவர் கிருஷ்ணர்.
நீக்குஅழகிய கலையம்சம் கொண்ட கோவில்களின் கோபுரங்கள், விதானங்கள் , தூண்கள் என்று எல்லாமே அழகு! யாத்திரை விபரங்கள் அனைத்தும் மிக அருமை!
பதிலளிநீக்குவாங்க மனோ சாமிநாதன் மேடம். நன்றி
நீக்குஎனக்கும் பயணிப்பதிலும் சிவ வைணவக் கோயில்களுக்குச் செல்வதிலும் வரலாற்றுத் தொடர்புடைய இடங்களைக் காண்பதிலும் சிற்பங்களைப் படம் பிடிப்பதிலும் நிறையவே ஆசை...
பதிலளிநீக்குஇருந்தாலும் நேரம் கூடி வருவதில்லை.. எல்லாவற்றுக்கும் மேலாக பொருளாதாரம்.. உடல் நிலை..
நேரம் கூடி வரும். பொருளாதாரம் மிக முக்கியமில்லை. திருவலஞ்சுழி, கும்பகோணம் இராமசாமி கோவில் மற்றும் பலவற்றை பேருந்தில் சென்று, படங்கள் எடுத்துப் பதிவாக்கினால் பல வாரங்களுக்கு வருமே
நீக்குபயண விவரங்கள் அனைத்தும் அருமை..
பதிலளிநீக்குபடங்கள் வழக்கம் போல!..
நன்றி துரை செல்வராஜு சார்.
நீக்கு@ அன்பின் நெல்லை..
பதிலளிநீக்கு/// திருவலஞ்சுழி, கும்பகோணம் இராமசாமி கோவில் மற்றும் பலவற்றை பேருந்தில் சென்று, படங்கள் எடுத்துப் பதிவாக்கினால் பல வாரங்களுக்கு வருமே.. ///
திருவலஞ்சுழி பிரச்னை இல்லை..
ராமசாமி கோயில் முன்மண்டபத்தில் அவ்வப்போது பிரச்னை..
பல வருடங்களுக்கு முன்பு இரண்டு கோயில்களைப் பற்றியும் பதிவில் சொல்லி இருக்கின்றேன் - பட்ங்களுடன்...
சொன்னா நம்ப மாட்டீங்க. கும்பகோணத்தில் ஒரு திருமணத்துக்குச் செல்வதற்கு முன்பு இந்தக் கோவிலுக்குச் சென்றிருந்தேன். அப்போ முன் மண்டபத்தில் ஏராளமான படங்கள் எடுத்தேன். யாரும் ஒன்றும் சொல்லவில்லை. கோவிலின் வெளிப்பிரகாராத்திலும் படங்கள் எடுத்துக்கொண்டோம். விரைவில் பதிவிடுகிறேன்.
நீக்குபுகைப்படங்கள் அனைத்தும் மிகவும் அழகாக இருக்கிறது
பதிலளிநீக்குநன்றி கில்லர்ஜி
நீக்குமகாபாரதப்போர் முடிந்ததும் தன் குலமே அழிந்து போனது கண்டு
பதிலளிநீக்குஆத்திரத்தில் தன்னைப் பார்க்க வந்திருந்த கிருஷ்ணரை "உன் யாதவ குலமும் இப்படித் தான் அழிந்து போகட்டும்" என்று காந்தாரி சாபம் இடுகிறாள். கிருஷ்ணரும் தான் வைகுண்டம் செல்ல வேண்டிய காலம் நெருங்கி விட்டதை உணர்ந்து "ததாஸ்து" (அப்படியே ஆகட்டும்) என்று ஏற்றுக் கொள்கிறார். பின் நிகழ்வுகள் தான் ஜடா சமாச்சாரங்கள்.
சொல்லப் போனால் எல்லாமே பகவான் கிருஷ்ணரின் லீலைகள் தாம்.
இது மட்டுமல்ல...
நீக்குஇளைஞன் ஒருவனுக்கு கர்ப்பிணி போல வேடங்கட்டி - முனிவர் ஒருவரிடம் காட்டி என்ன பிள்ளை பிறக்கும்?.. என்று கேட்க,
அவர் சினத்துடன் " உலக்கை பிறக்கும்.. அதுவே உங்கள் குலத்தை அழிக்கும்.. " என்று கொடுத்த சாபமும் சேர்ந்து கொண்டதாகப் படித்திருக்கின்றேன்..
எல்லாம் அவன் செயல்!..
இதெல்லாம் பகவானின் லீலைட்கள் என்று அர்த்தம் தொனிக்கும் விதத்தில் கிருஷ்னர் இறப்பு சம்பந்தப்பட்ட வார்த்தை குறிப்புகள் இருந்திருக்கலாம் என்பதே நான் சொல்ல வந்தது.
நீக்குIt was God's will that created the events that unfolded. நடப்பது, நடந்தது எல்லாம் நன்மைக்கே. அதிலிருந்து நாம் கொள்ளத்தக்கவைகளைப் புரிந்துகொண்டு கொள்ளவேண்டும்.
நீக்குபரித்ராணாய ஸந்தூனாம்
நீக்குவிநாசாய ச துர்கிருதாம்
தர்ம ஸம்ஸத்தாபனார்த்தாய
ஸம்பவாமி யுகே யுகே
நல்லோரைக் காப்பதற்கும் தீயோரை அழிப்பதற்கும்
தர்மத்தை நிலை நாட்டுவதற்கும்
யுகங்கள் தோறும் நான் உதிக்கிறேன்.
சகலமும் கிருஷ்ணார்ப்பணம்..
தம்பி, நீங்கள் சொல்லும் விஷயத்தில் சம்பந்தப்பட்ட முனிவர் விஸ்வாமித்திரர் என்று வாசித்த நினைவு.
பதிலளிநீக்குஅந்த முனிவரின் பெயர் சட்டென நினைவுக்கு வரவில்லை..
நீக்குகலியின் தொடக்கம் ஆதலால் யாதவப் படையினர் மது மாந்திக் களித்திருந்த வேளையில் பழைய விஷயங்கள் வெளிவரத் தொடங்கின..
குருக்ஷேத்திரப் போரில் அவன் செய்தது நியாயமா இவன் செய்தது நியாயமா என்று ஆரம்பித்த சச்சரவு கைகலப்பில் முடிந்தது.. நதிக்கரையில் முளைத்திருந்த கோரைகளைப் பிடுங்கி ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ள அவை இரும்பு உலக்கைகளாகி மாண்டு போயினர்...
இதற்குக் காரணம் இளைஞன் ஒருவனுக்கு பிள்ளைத்தாச்சி வேடமிட்டு முனிவரிடம் என்ன பிள்ளை பிறக்கும் என்று முனிவரைக் கேட்க அதற்கு அவர் உலக்கை பிறக்கும் என்று கொடுத்த சாபம்..
அப்படியே வயிற்றைக் கிழித்துக் கொண்டு உலக்கை வந்ததும் அதை அராவி பஸ்பமாக்கி ஆற்றங்கரையில் வீசிட - அதுவே உரமாகி கோரைப் புல்லாகி வளர்ந்து கோபம் மூண்ட வேளையில் உலக்கையாகி யாதவ குலத்தை அழித்தது..
பதின்ம வயதில் படித்த வியாசர் விருந்து..
ஒரு குலம் அழிய ஒரு காரணம் வேண்டும். கிருஷ்ணர் யாதவ குலத்தில் பிறந்திருந்தாலும், குலத்திலுள்ளவர்கள் விதி வசத்தால் அழிய நேரிட்டது. பிழைத்திருந்தவர்கள் ஸ்ரீகிருஷ்ணர், அவருடைய சாரதி மற்றும் பலராமர். யாதவ குல சம்ஹாரம் நடந்தது பிரபாஸ் நதிக்கரையில் (அந்த நதியைப் பற்றி சென்ற வாரங்களில் பார்த்தோம்). இதற்குப் பிறகுதான், வந்த காரியம் முடிந்தது என்று ஸ்ரீகிருஷ்ணர் விராவல் காட்டிற்குச் சென்று ஆலமரத்தடியில் துயிலமர்ந்தார், பிறகு இவ்வுலகை விட்டு உயிர் நீத்தார். அவருடைய அந்திமக் கிரியை பிரபாஸ தீர்த்தம் அருகில் நடந்தது. அதன் பிறகு பலராமர், அங்கிருந்த குகை ஒன்றில் நுழைந்து தன் உருவத்திற்கு (சேஷ) மாறி, தன்னுலகம் நோக்கிச் சென்றார். இதனையும் பார்த்தோம்.
நீக்குவழக்கம் போல படங்களும் அவற்றை எடுத்த விதமும் அட்டகாசம்.
பதிலளிநீக்குநன்றி ஜீவி சார்.
நீக்குவட இந்தியத் தலங்களில் இடத்திற்குத்தான் (அந்த அந்த பூமிக்குத்தான்) முக்கியத்துவம். இது இந்த இடத்தில் நடந்தது என்று பலவற்றைச் சரியாக சுட்டிக் காண்பிக்க இயலாது, வேறு யுகம் என்பதால். அந்த நினைவுகளைக் கொண்டுவருவதற்காகத்தான் ஆங்காங்கு, இந்த இடத்தில் அந்திமக் கிரியை நடந்தது, இது ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த/வளர்ந்த இடம் என்றெல்லாம் சுட்டிக் காண்பிப்பது. குருக்ஷேத்திரம் வரை செல்லும்போது இது புரியும்.
ஆமாம், நெல்லை.
நீக்குஇந்த இடத்தில் ஒரு யுகத்தில் இது நடந்தது என்ற எண்ணக் குவிப்பும் அந்த இடத்தில் நாம் இப்பொழுது நின்று கொண்டிருக்கிறோம் என்ற சிலிர்ப்பும் உன்னத உணர்வு தான். அந்த அடிப்படையில் வட இந்திய தலங்கள் அழைக்கப்படுவதின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால் இறைவன், இறைசக்தி என்பதனை உள்ளார்ந்த உணர்வுகளுடன் புரிந்து கொள்ள நாம் பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
நீக்குஇறைவனை நாம் eternal force (without beginning or end, lasting for ever and always existing) என்று மனத்தில் பிரதிஷ்டை செய்து துதிக்க வளர்க்கப்பட்டு பழக்கப்பட்டிருக்கிறோம். இந்த ஆழ்ந்த உணர்வு தான் இடைஞ்சலாக குறுக்கே வருகிறது..
அதற்கு ஏற்ப வார்த்தைகளை பிரயோகப்படுத்தினால் நம்மளவில் ஒரு திருப்தி ஏற்பட்டு விடும். அதே நேரத்தில் உங்கள் விளக்கத்தையும் என்னால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
பதிவு அருமை. எனக்கு தான் நேரம் இல்லை படிக்க . மருத்துவரிடம் போய் கொண்டு தங்கை வீட்டுக்கு போய் கொண்டு என்று போகிறது. அடுத்த மாதம் 16 தேதிக்கு மேல் தான் வலை பக்கம் வர முடியும் என நினைக்கிறேன்.
பதிலளிநீக்குவிராவல் கோவில் விவரங்கள், படங்கள் அனைத்தும் அருமை.
அடுத்து ஸ்வாமி நாராயணர் கோவில் படங்களும் செய்திகளும் பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு உதவும்.
தங்கும் இடம் வசதியாக இருக்கிறது.
புகைபடங்கள் எல்லாம் மிக அருமை.
நன்றாக எடுத்து இருக்கிறீர்கள்.
கோமதி அரசு மேடம்....வருகைக்கு நன்றி... மெதுவா வாங்க. உடல் நிலையைப் பார்த்துக்கோங்க. நேரம் கிடைக்கும்போது எப்படி இருக்கீங்கன்னு எழுதுங்க.
நீக்குஶ்ரீராமாவதாரத்திற்கும் ஶ்ரீகிருஷ்ணாவதாரத்திற்கும் உள்ள வித்தியாசங்கள் என்று வாட்சப் மெசேஜ் ஒன்றில் பார்த்தே. அதை இங்கு பகிரலாம் என்று தோன்றியது.
பதிலளிநீக்கு1.ஶ்ரீராமர் சூரிய வம்ஸம். ஶ்ரீகிருஷ்ணர் சந்திர வம்ஸம்.
2.ஶ்ரீராமர் நடுப்பகலில் அவதாரம். ஶ்ரீகிருஷ்ணர் நடுஇரவில் அவதாரம்.
3.ஶ்ரீராமர் நவமி திதி. ஶ்ரீகிருஷ்ணர் அஷ்டமி திதி.
4.ஶ்ரீராமர் சுக்ல பக்ஷம். ஶ்ரீகிருஷ்ணர் கிருஷ்ண பக்ஷம்.
5.ஶ்ரீராமர் உத்தராயணம். ஶ்ரீகிருஷ்ணர் தக்ஷிணாயணம்.
6.ஶ்ரீராமர் குணாவதாரம். அதாவது, குணங்கள் முக்கியம். ஶ்ரீகிருஷ்ணர் லீலாவதாரம்.
7.ஶ்ரீராமாவதாரத்தில் ஆரம்பத்தில் ஸ்த்ரீ வதம்---தாடகா. ஶ்ரீகிருஷ்ணாவதாரத்தில் ஆரம்பத்தில் ஸ்த்ரீ வதம்---பூதனா.
8.ஶ்ரீராமாவதாரத்தில் ஆயுதம் எடுத்து ராவணன் வதம். ஶ்ரீகிருஷ்ணாவதாரத்தில் ஆயுதம் எடுக்காமல் கௌரவர்கள் வதம்.
9.ஶ்ரீராமர் ஆரம்பத்தில் 24 வயது வரை ஆனந்தம் ;
பிறகு துக்கம். ஶ்ரீகிருஷ்ணர், ஆரம்பத்தில் கஷ்டம் ;
பிறகு ஆனந்தம்.
10.ஶ்ரீராமருக்கு ஒரே மனைவி சீதா. ஶ்ரீகிருஷ்ணருக்கு 16,108 மனைவிகள். (இதை நாம் தற்போதைய அர்த்தத்துடன் பார்க்கக்கூடாது)
11.ஶ்ரீராமாவதாரம் அனுஷ்டானம். (அதாவது வாழ்ந்து காட்டுவது)
ஶ்ரீகிருஷ்ணாவதாரம் உபதேசம். (எப்படி வாழணும் என்று பிறருக்குச் சொல்வது. அதை உபதேசம் சொல்பவர் கடைபிடிக்கணும் என்று அவசியம் இல்லை. ஏனென்றால் அவர அதனைக் கடந்தவர்)
12.ஶ்ரீராமாவதாரம் சோகரஸம்/துக்கம். ஶ்ரீகிருஷ்ணாவதாரம் ஆனந்தம்.
13.ஶ்ரீராமர், 11,000 வருஷங்கள் வாழ்ந்தார். ஶ்ரீகிருஷ்ணர் 125 வருஷங்கள் வாழ்ந்தார். இரண்டு யுகத்திலும் ஆயுள் வித்தியாசம் உள்ளது.
14.ஶ்ரீராமர், தர்மத்திற்கு கட்டுப்பட்டு செய்தார். ஶ்ரீகிருஷ்ணர், தான் செய்வதே தர்மம் என்றார்.
15.ஶ்ரீராமர் All transparent. எதையும் வெளிப்படையாகச் செய்தார். ஶ்ரீகிருஷ்ணர் All ரகசியம். அவர் செய்தது மற்றவர்களுக்குப் புரியாது, தெரியாது (விஸ்வரூபம், தானம் போன்றவை)
16.ஶ்ரீராமர் "மரியாதா புருஷோத்தமன்". அதாவது மானிடராகவே வாழ்ந்தார். ஶ்ரீகிருஷ்ணர் "பூரண புருஷோத்தமன்". அதாவது, பூரணமாக பகவான் சக்தி.
17.ஶ்ரீராமருடன் சம்பந்தப்பட்ட மோக்ஷபுரி--- அயோத்யா. ஶ்ரீகிருஷ்ணருடன் சம்பந்தப்பட்ட மோக்ஷபுரி--- மதுரா,
துவாரகா, உஜ்ஜெயின்.
விரிவான தகவல்கள். படங்கள் நன்று. பதிவில் வந்த இடங்களுக்கு நானும் சென்று வந்திருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி.
பதிலளிநீக்கு