ஞாயிறு, 23 ஜூன், 2024

நான் தரிசனம் செய்த கோயில்கள் – ஐந்து துவாரகைகள் யாத்திரை – பகுதி 25 : நெல்லைத்தமிழன்

 

 

தாஜ் மஹலைவிட்டுச் செல்ல இன்னும் மனம் இல்லை. அங்கு நிறைய படங்கள் எடுத்தேன். நான் தாஜ்மஹலுக்கு மூன்று முறை சென்றிருக்கிறேன். இன்னொரு யாத்திரையின் போது, அன்று வெள்ளி என்பதால் விடுமுறை விட்டிருந்தார்கள். சென்றமுறை ஆக்ரா போயிருந்தபோது தாஜ்மஹல் செல்லவில்லை. அங்கு நான் எடுத்த படங்களின் தொடர்ச்சி இந்த வாரமும் வருகிறது.

பொதுவா நாம் வரலாற்றில் அப்போது நடந்த நிகழ்வுகளைப் படித்து தற்போது கோபம் கொள்கிறோம். அந்தக் கோபம் இருப்பதால் பல வரலாற்றுச் சின்னங்களைப் புறக்கணிக்கவும் செய்கிறோம்.  ஆனால் அப்படிக் கோபம் கொள்ளத் தேவையில்லை என்பது என் எண்ணம். ஒவ்வொரு மதத்திற்கும், அரசுக்கும் ஒவ்வொரு முன்னுரிமை உண்டு.  முஸ்லீம் அரசர்கள் எப்போதுமே அழகிய சமாதிகளை எழுப்புவார்கள். தாங்கள் மறைவதற்கு முன்னமே தனக்கான சமாதிக் கட்டிடங்களை எழுப்பிய அரசர்களும் உண்டு. தன் கணவனுடன் தான் புதைக்கப்படவேண்டும் என்று ஆசைப்பட்ட மனைவியும் உண்டு (ஜஹாங்கீரின் மனைவி நூர்ஜஹான் அப்படி லாகூர் அருகில் எழுப்ப ப்பட்ட ஜஹாங்கீரின் சமாதியிலேயே தானும் புதைக்கப்படவேண்டும் என்று ஷாஜஹானிடம் தன் ஆசையைத் தெரிவித்து அனுமதி பெற்றிருந்தார். ஒவ்வொரு சமாதியும் மிக அழகுறக் கட்டப்பட்டுள்ளது. அதன் கட்டிடக் கலையி நேர்த்தியைத்தான் நாம் பார்க்கவேண்டும்.


தாஜ்மஹலின் பக்கவாட்டுத் தோற்றம்

நானும் அங்க போயிருந்தேன்.

 

தாஜ்மஹலின் வலப்புறம் (நாம் அதனைப் பார்த்து நின்றால்) இருக்கும் சிவப்புக் கல்லினால் கட்டப்பட்ட தாஜ்மஹலைப் போன்ற கட்டிடம். வெள்ளைப் பளிங்கினால்தான் தாஜ்மஹலின் கம்பீரம் என்பது தெரிகிறதா?

 


இந்தப் படத்தைப் பார்க்கும்போது, 10ம் வகுப்பில் பள்ளியில் நடந்த NCC ஓவியப் போட்டியில் தாஜ்மஹல் படத்தை வரைந்து முதல் பரிசு வாங்கியது நினைவுக்கு வந்தது (வாட்டர் கலர் பாக்ஸ் பரிசு). அப்போது ஒரு நாள் தாஜ்மஹலை நான் சென்று பார்ப்பேன் என்று கற்பனைகூடச் செய்திருக்க முடியாது.


தாஜ்மஹலின் வெளிச்சுற்றில் என்னைப் புகைப்படம் எடுத்த ரஷ்யப் பெண்

அங்கு அஸர்பைஜான் மற்றும் ரஷ்யப் பகுதியிலிருந்து வந்த நான்கு பேர்கள் தாஜ்மஹலின் பின் புறம் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். அவர்களோடு பேசினேன். பிறகு குழுவில் இருந்த பெண் என்னை தாஜ்மஹலுடன் புகைப்படம் எடுத்தாள்.

சல்லடைகளாக இருக்கும் கதவும், அழகிய குரான் வரிகளும்


தாஜ்மஹலிலிருந்து வளாகத்தின் தெற்கு நுழைவாயிலைப் பார்த்தால் எவ்வளவு நேர்கோட்டில் சீர்படக் கட்டியிருக்கிறார்கள் என்பது தெரியும்.


கட்டிடத்தின் அழகு அருகில் புலப்படுவதில்லை. தூர நின்று பார்க்கும்போதுதான் மிக அழகாகத் தெரிகிறது.

கிழக்கு வாசல். கிழக்குப் பகுதியிலிருந்து எடுத்த படம். வலது புறத்தில்தான் யமுனை ஆறு பாய்கிறது.














அழகிய தாஜ்மஹலை எவ்வளவு தரம் பார்த்தாலும் மனதைக் கொள்ளை கொள்கிறது.  மனைவியுடன் சென்றிருந்தபோது இருவரும் நிறைய படங்களும் காணொளிகளும் எடுத்தோம்.

இணையத்தில் பார்த்த இந்தப் படம் கண்ணைக் கவர்ந்தது. யமுனை நதி ஓடும் பாதையும், அதையொட்டி அமைந்துள்ள தாஜ்மஹலும்

ஆமாம் இவ்வளவு அழகிய தாஜ்மஹலைக் கட்ட எவ்வளவு செலவழித்திருப்பார் ஷாஜஹான்? அப்போதைய மதிப்பில் (கரெக்டா கணக்கு வழக்கு எழுதியிருக்கிறார்) சுமார் 42 லட்சம் ரூபாய் (இப்போதைய மதிப்பில் 80 பில்லியன் ரூபாய். பொழுது போகாதவர்கள் 80க்கு அப்புறம் சைஃபர் போட்டு மகிழ்ந்துகொள்ளலாம்). சரி இதற்குப் பதிலாக மக்களுக்குப் பயனுள்ளதா ஏதேனும் செய்திருக்கலாமே என்றால்….  இந்துக்களுக்கு கோவில் போல, முஸ்லீம்களுக்கு சமாதி என்று சொல்லிக் கடந்துபோய்விட முடியாது. கொடுங்கோலன் என்று சொல்லப்படும் ஔரங்கசீப், தனக்கு 6க்கு 3 அடி நிலம்தான் ஒதுக்கிக்கொண்டார். அதிலும் எந்தக் கட்டிடமும் கட்டிவிடக் கூடாது என்று கட்டளை இட்டுவிட்டே சென்றார்.

இந்த மாதிரி பேட்டரியில் ஓடும் ஆட்டோக்கள் ஆக்ராவில் நிறைய உண்டு. 20-30 ரூபாய் கொடுத்தால் சென்றுவிடலாம்.

அங்கிருந்து தங்குமிடத்தை ஆட்டோவில் அடைந்தோம்.  வட நாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களில், ஆறுகளில், புகைப்படம் எடுத்துத் தர நிறைய கலைஞர்கள் உண்டு. 30 ரூபாய்க்கு ஒரு போட்டோ தருவார்கள். அதுபோல தாஜ்மஹலிலும் இருந்தனர். நான் ஒரு சில போட்டோக்கள் எடுத்துக்கொண்டு, நேரமாகிவிட்டதால் பிரிண்டை தங்குமிடத்திற்கே கொண்டுவந்து தரச் சொன்னேன். அவர் கரெக்டாக நாங்கள் தங்குமிட த்திலிருந்து கிளம்புவதற்கு முன்பு பிரிண்டுகளோடு வந்துவிட்டார்.

தங்குமிடத்திற்கு வந்து குளித்து உடை மாற்றிக்கொண்டு சரியாக 10 மணிக்கு உணவுக்கு உட்கார்ந்துவிட்டோம். பாயசத்துடன் கூடிய அருமையான சாப்பாடுமதியம் 1 மணிக்கு மேல்தான் கோகுலம் நோக்கிக் கிளம்புவோம், அதுவரை எங்காவது சென்றுவிட்டு வருவதானால் செல்லலாம் என்று குழுத் தலைவர் சொன்னார். கொஞ்சம் வெயில் இருந்தாலும், எதிரே இருக்கும் ஆக்ரா கோட்டையைப் பார்க்க நான் சென்றேன். இந்தக் கோட்டையை மூன்று முறை நான் பார்த்திருக்கிறேன். இருந்தாலும் என்னவோ, அந்தக் கோட்டை என்னை மிகவும் கவர்கிறது. இதைப் பற்றி அடுத்த வாரம் பார்க்கலாமா?

 ((தொடரும்) 


27 கருத்துகள்:

  1. புகழ் பெற்ற தாஜை பலரும் பல கோணங்களிலும் பல நேரங்களிலும் புகைப்படம் எடுத்துள்ளனர். அவர்களில் ஒருவராக நீங்களும் கலந்து விட்டீர்கள். ஒரு நினைவு மண்டபத்தை படம் எடுத்து அமெச்சூரில் இருந்து ப்ரொபசனல் ஆக மாறிவிட்டேர்கள்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயகுமார் சார்.

      நான் சிறிய வயதில் ஓவியங்கள் வரைவேன், ஆனால் பயிற்சி பெற்றதில்லை. ஒருமுறை தூய சவேரியார் மேநிலைப் பள்ளி சார்பாக NCC நடத்திய ஓவியப் போட்டியில் ஏதோ தைரியத்தில் கலந்துகொண்டு, திருநெல்வேலி சென்று (பாளையங்கோட்டையிலிருந்து) தாஜ்மஹலை வரைந்தேன். அதற்கு முதல் பரிசு கிடைத்தது.

      ஓவியம் வரைவதில் நல்ல பயிற்சி பெற்றிருந்திருக்கலாம் என்று தோன்றியது. ஆனால் என் அப்பாவிற்கு, நான் படிப்பதைத் தவிர வேறு எதிலும் ஆர்வம் இருந்ததில்லை.

      நீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
    தளிர் விளைவாகித்
    தமிழ் நிலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. நமது மண்ணில் இருக்கின்றது என்பதைத் தவிர

    இதில் மகிழ்வதற்கு வேறொன்றும் நஹி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேற்கருத்து என்னைப் பொறுத்தவரையில் தான்!...

      விபரீத அர்த்தங்களுக்கு ஏதுமில்லை..

      நீக்கு
    2. வாங்க துரை செல்வராஜு சார்.

      நீங்க அப்படி நினைக்கக்கூடாது என்பது என் எண்ணம். நமக்கு கோவில், பள்ளிப்படை போன்ற பல இடங்களில் நம் கட்டிடக் கலையின் திறமை தெரிவது போல, முஸ்லீம்களுக்கு சமாதி. அதன் நேர்த்தியை ரசிப்போமே

      நீக்கு
  5. ஆனால் அப்படிக் கோபம் கொள்ளத் தேவையில்லை என்பது என் எண்ணம். //

    டிட்டோ, நெல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன் "அக்கா"..... முஸ்லீம்களின் நம்பிக்கை வேறு. பஹ்ரைனில் அவங்க சமாதி 8 அடிக்கு நாலு அல்லது இன்னும் குறைவாகத்தான் இருக்கும். நினைவு நாளிலோ இல்லை தங்களுக்கு முக்கியமான நாளிலோ அங்கு உறவினர்களுடன் சென்று, சமாதியின் பக்கத்திலேயே அமர்ந்து சாப்பிட்டுவிட்டு வருவாங்க. கோகோகோலா அல்லது பிற பானங்களை ஓபன் செய்து அப்படியே சமாதியின் வெளி விளிம்பில் மண்ணில் தலைகீழாக்க் கவிழ்த்து பூமியில் வைத்துவிடுவார்கள். அவர்கள் நம்பிக்கைப்படி இறந்தவர் அங்கேயே, உலகின் தீர்ப்பு நாளுக்காக்க் காத்திருப்பதாக நம்பிக்கை.

      நீக்கு
  6. யாருங்க அது எங்க அண்ணன் நெல்லைக்குப் பக்கத்துல!!!!!!!!!!!! (கீதா, ஹாஹாஹா...பாரு, இவ்வளவு அழகா படங்கள் போட்டு இருக்கறப்ப இதுதான் உன் கண்ணுல பட்டு வம்புநிழுக்க வைக்குது!!!!)

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணனுக்குப் பக்கத்துல தங்கைதானே நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ள இயலும்?

      தமிழகத்தின் தென்பகுதியில் கன்சர்வேடிவ் போன்றே வளர்ந்ததால், சென்னையில் கம்ப்யூட்டர் கல்வி படிக்கும்போது அல்லது வேலைபார்த்தபோது பெண்கள் எதிரே வந்தால் விலகிச் செல்லும் குணமும் அவர்களிடம் வலியப்போய் பேசாத குணமும் கொண்டிருந்த காலத்தை எண்ணிச் சிரித்துக்கொள்கிறேன்.

      நீக்கு
  7. நீங்க எடுத்திருக்கும் படங்கள் எல்லாம் அருமை. பக்கவாட்டு த தோற்றம் ரொம்ப அழகு.

    அந்த இணையப்படம் ட்ரோன் ஷாட் செம் shot! Marvelous.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இணையப்படம் மனதைக் கவர்ந்தது.

      டெக்னாலஜி இல்லாத காலத்தில் எப்படிக் கட்டியிருக்கிறார்கள் பாருங்கள்.

      நீக்கு
  8. படங்கள் எல்லாம் அருமையான கோணத்தில் எடுத்து இருக்கிறீர்கள் தமிழரே....

    ஏழு அதிசயங்களில் நாமும் ஒருவராய் இருக்கிறோம் அதில் பெருமை கொள்வோம்.

    அன்று மன்னர்கள் ஆட்சி நினைத்ததை செய்வார்கள். இதனால்தான் நமக்கு கோவில்கள் கிடைத்தது.

    இன்று மக்களாட்சி மெரினா கடற்கரையை பல கோடிகள் செலவு செய்து சுடுகாடாக மாற்றி வைத்ததை நாம் கேட்க முடிகிறதா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கில்லர்ஜி. நன்றி.

      நானும் நினைத்தேன். ஆட்சியாளர்கள் இப்படி மெரீனா கடற்கரையைப் பாழ்படுத்துவதை யாருமே தட்டிக்கேட்க முடிவதில்லை என.

      நீக்கு
  9. /// முஸ்லீம்களுக்கு சமாதி. ///


    இஸ்லாம் தோன்றிய மண்ணிலேயே இப்படியான கலையும் கட்டிடமும் கிடையாது..

    இவற்றுக்கு அங்கே இடமில்லையே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு மதம் வளரும் இடத்தைப் பொறுத்து அங்கு உள்ள கலைகளையும் தன்னுடன் சேர்த்துக்கொள்ளும். உதாரணமா அரேபியா மிகக் கடும் பாலைவனம் (துபாய், அபுதாபி போன்றவையும்தான்). அங்கு பெரும் கட்டிடங்கள் கிடையாது. ராஜராஜ சோழன் போல, மதத்தைத் தோற்றுவித்தவருக்கு அரண்மனை கிடையாது. ஆனால் பெர்ஷியா (இன்றைய ஈரான்)வில் அந்த மதம் வளரும்போது அதன் கலைகளையும் தன்னுள் கொண்டது. அங்கிருந்து வந்த முஸ்லீம் மன்னர்கள் இந்தியாவில் தங்கள் கிளைகளைப் பரப்பியபோது தங்கள் கலைச்செல்வங்களையும் இங்கு வடித்தார்கள்.

      நீங்களே துபாய் அரசர் வாழ்ந்த இடத்தை துபாய் மியூசியத்தில் பார்த்திருப்பீர்கள். அவர்கள் வாழ்ந்தது கிராமீய வாழ்க்கை (மண் குடிசை)

      நீக்கு
  10. பள்ளிப்படைகள் தியாகத்தின் சின்னங்கள்...

    இது அப்படியல்ல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 13 குழந்தைகளை தொடர்ந்து பெற்றுப்போட்டிருக்காங்க, அது தியாகம் இல்லையா? சும்மா நகைச்சுவைக்குச் சொன்னேன்.

      அதுவும் நினைவுச் சின்னம். இதுவும் நினைவுச் சின்னம். அவ்ளோதான் என்பது என் எண்ணம். இரண்டையும் உருவாக்கியவர்களின் மனத்தின் ஈர்ப்புதான் முக்கியம்.

      இதைப்பற்றி அடுத்த வாரம் பேசுவோம். அவ்வளவு ஆசை வைத்திருந்த ஷாஜஹான், ஏன் நூற்றுக்கணக்கான ஆசை நாயகிகளையும் வைத்திருந்தான், மும்தாஜ் இறந்த பிறகும்?

      நீக்கு
  11. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  12. பல கோணங்களில் எடுத்த தாஜ்மஹால் அழகு.
    அனைத்து படங்களும் அழகு.

    //10ம் வகுப்பில் பள்ளியில் நடந்த NCC ஓவியப் போட்டியில் தாஜ்மஹல் படத்தை வரைந்து முதல் பரிசு வாங்கியது நினைவுக்கு வந்தது (வாட்டர் கலர் பாக்ஸ் பரிசு). அப்போது ஒரு நாள் தாஜ்மஹலை நான் சென்று பார்ப்பேன் என்று கற்பனைகூடச் செய்திருக்க முடியாது.//

    அந்த முதல் பரிசு பெற்ற ஓவியம் இருந்தால் அதையும் பகிர்ந்து இருக்கலாம்.

    அப்போது வரைந்து பரிசு பெற்று விட்டீர்கள். இப்போது அழகாய் போட்டோ எடுத்து அனைவரிடமும் பாராட்டுகள் பெற்று விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த ஓவியம் இல்லை கோமதி அரசு மேடம். நினைவுகள் மாத்திரமே இருக்கின்றன. இந்த ஓவியங்களைப் பற்றிய நினைவுகளை விரைவில் பகிர்ந்துகொள்கிறேன்.

      நீக்கு
  13. ஆக்ரா கோட்டை நன்றாக இருக்கும், அடுத்த பதிவில் ஆக்ரா கோட்டையின் அழகை பார்க்க வருகிறேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள். ஆக்ரா கோட்டையில் அழகைவிட, சமீபத்தைய சரித்திரத்தின் சாட்சி (400-500 வருடங்கள்) என்பதில் அதற்குப் பெருமை அதிகம்

      நீக்கு
  14. தாஜ்மகால் பலவித கோணங்களில் மனதை கவர்கிறது.

    இணையப்படம் யமுனை நதியுடன் தாஜ்மகால் அழகு..

    ஆக்ரா வருகிறோம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!