சனி, 1 ஜூன், 2024

குறைந்த விலையில் வீடு, ஐரிஸ் டீச்சர், மற்றும் நான் படிச்ச கதை

 

பொருளாதாரத்தில் அடித்தட்டில் இருப்பவர்கள் கண்ணியமான சூழலில் வாழ வழி செய்யும் வகையில் குறைந்த விலை வீடுகளை கட்டித்தரும் வகையில் 'ஹோம்ஸ்டோரி' ‘HomeStory' திட்டத்தைத் துவக்கினார்.  கடந்த இரண்டு ஆண்டுகளாக, ரூ.5 லட்சம் மதிப்பில் வீடுகளை வழங்கக் கூடிய வகையில், குறைந்த விலை வீடுகளுக்கான வடிவமப்பு மற்றும் செயல்முறை அம்சங்களில் இக்குழு கவனம் செலுத்தி வருகிறது. தொழில்நுட்பம் மூலம் இதை சாத்தியமாக்கி வருகின்றனர். மாநில அரசுகள் மற்றும் தொடர்புடையவர்களுடன் இணைந்து செயல்படுகின்றனர். 

“நகரங்களில் அரசிடம் பயன்படுத்தாத நிலம் நிறைய இருக்கிறது. இந்த பயன்படுத்தா நிலத்தை கொண்டு, கண்டைனர் வீடுகளை கட்டுவது எங்கள் திட்டமாகும். இது புலம் பெயர்ந்தோருக்கான வாடகை வீடுகளாக அமையும்,” என்கிறார் தீபக்.

===================== ==============================

ஐரிஸ் டீச்சருக்கு ஐஸ் வைக்க முடியாது! 

ஐரிஸ் - இவர் ஒரு டீச்சர். 

இந்த டீச்சரை வழியில் எங்கும் பார்த்து, 'வணக்கம் டீச்சர்' என்று சொல்லி ஐஸ் வைக்க முடியாது! 

ஏன்? 

வடகிழக்கு மாநிலத்தின் முதல், 'ஏஐ' எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஆசிரியை, அசாமில் உள்ள தனியார் பள்ளியில் அறிமுகப் படுத்தப்பட்டு உள்ளது(!).

ஏஐ தொழில்நுட்பம் கடந்த சில ஆண்டுகளாக பெரும் வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த தொழில்நுட்பம், நாம் கேட்கும் கேள்விகளுக்கு இணையத்தில் இருந்து திரட்டி வைத்திருக்கும் தகவல்களை அலசி ஆராய்ந்து விரிவான பதில் அளிக்கும்.

அரசு துறைகள் முதல் தனியார் நிறுவனங்கள் வரை இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர்.

பள்ளிகளிலும் ஏஐ தொழில்நுட்பம் கொண்ட ரோபோ ஆசிரியர்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் நிடி ஆயோக்கின் அடல் சிந்தனை ஆய்வகத்துடன் இணைந்து, கல்வி தொழில்நுட்பம் சார்ந்த தனியார் நிறுவனம், 'ஐரிஸ்' என்ற ஏஐ ரோபோவை, அசாமில் உள்ள தனியார் பள்ளியில் அறிமுகப்படுத்தி உள்ளது. குரல் வழியாக கட்டுப்படுத்தும் வகையில் இதை வடிவமைத்துஉள்ளது.

ஐரிஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோவிடம், மாணவர்கள் ஆர்வமுடன் கேள்விகளை கேட்கின்றனர்.

அதை உள்வாங்கி கொண்டு, அது விரிவான பதில்களை தருகிறது. இதனால் மாணவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இது குறித்து, அப்பள்ளியின் ஆசிரியை கூறியதாவது:

ஐரிஸ் ஏஐயிடம் பாடத்திட்டத்திற்கு உள்ளேயும், வெளியேயும் இருந்து மாணவர்கள் கேள்விகளை கேட்டனர். எதை பற்றிய கேள்விக்கும் உடனடியாக, உதாரணங்கள் மற்றும் குறிப்புகளுடன் பதிலளித்தது.

இந்த ரோபோ, குரல் வழியாக பதிலளிப்பது மட்டுமின்றி, மாணவர்களுடன் கைகுலுக்குவது போன்ற செய்கைகளையும் செய்யும் என்பதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது மாணவர்களுக்கு புதிய கற்றல் அனுபவத்தை வழங்குவதில் ஒரு மைல்கல்லாக விளங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்கனவே கேரளாவில் உள்ள ஒரு பள்ளியில் இதுபோன்ற ஏஐ ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

( அட செயற்கை உருவம் கொடுக்கும்போது, 'தமன்னா போல, பாவனா போல, அனுஷ்கா போல எல்லாம் உருவம் வைத்தால் என்ன' என்று எ பி ஆஸ்தான எழுத்தாளர்கள்  சிலர்  ஆதங்கப் படுகிறார்கள்!) 

= = = = = = = =

நான் படிச்ச கதை (JKC)

அப்பாவின் ஆசை!

 கதையாசிரியர்: பாரதிமணியன்

முன்னுரை 

பாரதி மணி வேறு, பாரதிமணியன் வேறு, சுப்ரபாரதிமணியன் வேறு, என்பதை பாரதிமணியன் பற்றிய விவரங்களை இணையத்தில் தேடியபோது கண்டு கொண்டேன். பார்த்திபன் சுப்பிரமணியன் என்பவரின் புனை பெயரே பாரதிமணியன்  என்று ப்ரதிலிபி ஒரு அறிமுகத்தில் கூறுகிறது. 

ஆக ஆசிரியர் பற்றிய விவரங்கள், மற்றும் படம் இல்லாமலேயே இந்தப் பதிவு வருகிறது. வாசகர்களுக்கு பரிச்சயம் உண்டு என்றால் அது பற்றி கூறலாம். இவருடைய கதைகள்  myvikadan, kalkionline, mangaiyarmalar, மின் நூல்களில் பிரசுரம் ஆகியுள்ளன. கதைகள் மட்டுமல்லாமல் கவிதைகளும் எழுதியுள்ளார். இவர் முகநூல் மற்றும் X தளங்களில் உள்ளார்.

 =======இவருடைய முகநூல் பக்கம்=======

பாரதிமணியன் - Lifecharger2020@gmail.com  (பாரதிமணியன் அவர்களின் மின்னஞ்சல் முகவரி)

இன்றைய கதை “அப்பாவின் ஆசை” sirukathaigal.com தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது. ‘அப்பா கதைகள்’ வரிசையில் வந்த ஒன்று.   விகடனில் வெளியானது. 

சிறிய கதை. எல்லோருக்கும் சிறு வயதில் இருக்கும் சில தின்பண்ட ஆசைகள் கடைசி காலம் வரை நீடித்து நிற்கும். அந்த ஆசையில் ஒன்றே இக்கதையின் கரு. ஆனால்  சஸ்பென்ஸ் வேறு ஒன்று. அது கதையின் கடைசி பத்தியில். 

அப்பாவின் ஆசை!

 கதையாசிரியர்: பாரதிமணியன்

மாலை நேரத்தில் வருகின்ற மழை, கூடவே ஒரு குளுமையையும் கொண்டு வந்து விடுகிறது. அந்த மழையில் உருவாகும் இதமான சூழலில் மனசும் வயிறும் சேர்ந்து , நாக்குக்கு ருசியாக சூடாக எதையாவது சாப்பிட விரும்பும். 

அந்த மாதிரி நேரங்களில், மோகனுக்கு அவனுடைய அப்பா கூட இருக்க நேர்ந்தால், அவர் பேசறதை கேட்கும்போது.. அவனுக்கு ஆச்சர்யமாகவும்… சிலநேரம் வேடிக்கையாகவும் இருக்கும்.

“இந்த மழைக்கு இதமா சூடான டீயும், கூட வெங்காய பக்கோடா… இல்லேன்னா மொறு மொறுன்னு மெதுவடை… சாப்பிட்டா நல்லா இருக்கும். அதுவும் தெரு முனையில, காமாட்சி பாட்டி போடற வாழைக்கா பஜ்ஜியையும்.. உருளை கிழங்கு போண்டாவையும் அடிச்சிக்க முடியாது. உங்க அம்மா சுடற பலகாரத்தில கூட , அப்படி ஒரு ருசிய ஒரு நாளும் நான் அனுபவிச்சதே கிடையாது” என்பார்.


அவ்வப்போது அம்மாவையும் வம்புக்கு இழுக்கிற மாதிரி பேசி விட்டு, இவனை பார்த்து கண் சிமிட்டுவார். அம்மாவும் கோபம் வந்த மாதிரி.. “பேசாம நீங்க காமாட்சி பாட்டியவே கூட்டிட்டு வந்து, சமையல் பண்ண வெச்சுக்கங்க” என்பாள்.

“அடி இவளே, ஒரு பேச்சுக்கு சொன்னேன்டி! அந்த பாட்டி தான் இப்ப இல்லையே. அந்த நிலாவுல வடை சுட போய்டாங்களே.. அவங்க பேரன்தான் இப்ப பலகாரம் போடறான். அவன் கை பக்குவமும் பரவாயில்லே. ஆனா என்ன பண்ணறது. எனக்கு முன்ன மாதிரி சட்டுன்னு எழுந்து தெரு முனைக்கு போய் வாங்கி சாப்பிட முடியாதே.. வயசாயிடுச்சு.. நாலு எட்டு நடந்தாலே மூச்சு வாங்குது ” என்பார்.

மோகனுக்கு நினைவு தெரிந்து.. மழைக் காலம் என்றாலே.. அவர் வேலைக்கு போய்ட்டு திரும்ப வரும்போது, தவறாமல் காமாட்சி பாட்டி கடையில் நின்னு பலகாரம் பார்சல் வாங்கிட்டு வருவார். அவர் ரிட்டயர்டு ஆன பிறகும் கூட, அடிக்கடி அந்த கடைக்கு போயி பலகாரம் வாங்கிட்டு வருவார்.

பிறகு சரியாக நடக்க முடியாமல் போனதும், அவன் அம்மா மெல்ல தடுமாறி நடந்து போய், வாங்கிட்டு வந்து கொடுப்பாங்க. ஒரு சில சமயம் அவனிடம் கூட வாங்கிட்டு வர சொல்லி இருக்கார்.

ஆனால் அவனோ,

“சாரிப்பா… கடைக்கு போக நேரம் இல்லப்பா. நானே ஆபீசில வேலை செய்து முடிக்க முடியாம.. வீட்லேயும் செய்யலாமுன்னு பைல், லேப் டாப் எல்லாம் எடுத்திட்டு வந்திருக்கேன். இப்ப தானே அம்மா டீ போட்டு கொடுத்தாங்க. நான் நாளைக்கு வரும் போது வாங்கிட்டு வரேன்” என்று சொல்லி விட்டு வேலையில் மூழ்கி விடுவான்.

மறுநாள் ஆபீஸ் வேலை முடிந்து வரும் போது அந்த விஷயத்தையே மறந்து விடுவான். விடுமுறை நாட்களில் கூட, அவன் மனைவி குழந்தைகளோடு வெளியே போய் வரும் போது அந்த கடைக்கு அருகில் காரை நிறுத்த முடியாமல், கூட்டமாக இருக்கிறது என்பதால் பலகாரம் வாங்க மனம் இருந்தாலும், இன்னொரு முறை வாங்கிக்கலாம் என்று வந்து விடுவான்.

ஏதாவது ஒரு சமயம் அதிசயமாக வாங்கி கொண்டு வந்து கொடுப்பான். கொடுத்து விட்டு அறிவுரை வேறு சொல்லுவான். “என்னப்பா.. அப்படி ஒரு கூட்டம்.! என்ன ஆயில் யூஸ் பண்ணறாங்க.. சுத்தமாக செய்யறாங்களான்னு தெரியல..” என்பான்.

ஆனால் வேறு பெரிய ஸ்வீட் ஸ்டால்களில் இருந்து மிக்ஸர், சிப்ஸ்.. என்றெல்லாம் வாங்கி கொண்டு வந்து கொடுப்பான். அவர் அதை விரும்பி சாப்பிட மாட்டார். கொஞ்சமாக எடுத்துக்கொண்டு போதும் என்று சொல்லி விடுவார்.

ஒருநாள் ஏதோ வேலை விஷயமாக டென்ஷனில் இருக்கும் போது, அம்மா தடுமாறி நடந்து போய்… அந்த கடையில் இருந்து பஜ்ஜி வாங்கி கொண்டு வந்து கொடுப்பதை பார்த்து விட்டு.. சத்தம் போட்டான் “ஏம்மா… அவரு தான், இந்த வயசுலயும் காரசாரமா சாப்பிட ஆசை படறார். நீங்களும் நடக்க முடியாம நடந்து போய் வாங்கி குடுக்கறீங்க”

“நீ ஏம்பா… டென்ஷன் ஆறே! அவரு என்ன தினமுமா கேட்கிறார். ஏதோ மழை நேரத்தில் தான் ஆசைபட்டு கேட்கிறார். இப்படி ஒவ்வொருத்தர் மனசுக்குள்ளயும் ஏதாவது ஒரு ஆசை இருக்கும்பா! உன் அப்பாவுக்கு இப்படி ஒரு ஆசை.”

அவன் சமாதானம் ஆகாமல் , முகத்தை உர்ரென்று வைத்திருப்பதை பார்த்துவிட்டு, “அவருடைய சின்ன வயசில இந்த பலகாரம் வாங்கி சாப்பிட கூட வழியில்லாமல், ரொம்ப ஏழ்மையில இருந்திருக்கார்பா. நீயும் நானும் வயிறார சாப்பிடணுமுன்னு.. பல நாள் சாப்பிடாம, அங்க ஒரு டீ வடை மட்டும் சாப்பிட்டுட்டு, இராத்திரி பகலா வேலை வேலைனு ஓடுவார். ஒவ்வொரு வீட்டிலே, சில ஆம்பளங்க குடிபழக்கத்துக்கு அடிமையாகி குடும்பத்தையும் சேர்த்து கஷ்ட படுத்துறாங்க. இது ஒன்னும்… அது மாதிரி மோசமான ஆசை இல்லையே” என்று அம்மா சொல்லவும்…

“என்னமோ பண்ணுங்க” என்று சத்தமாக பேசி விட்டு, மோகன் பெட்ரூம் போய் கதவை படாரென்று சாத்திக்கொண்டான்.

அதற்கு பிறகு அவனுடைய அப்பா, அந்த பலகாரம் பற்றி வீட்டில் பேசவேயில்லை.

இன்றும் மாலை நேரத்தில், மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது. வழக்கம் போல மோகன், அவன் மனைவி கொடுத்த டீயை ருசித்துக் கொண்டு, ஆபீஸ் வேலையை வீட்டில் செய்து கொண்டு இருந்தான். அப்போது ..அவனுடைய மகன் முகேஷ் தயங்கி தயங்கி அவனிடம் வந்து நின்றான். மோகனும் மெல்ல அவனை நிமிர்ந்து பார்த்தான்.

“அப்பா… எனக்கு தெரு முனை கடையில் இருந்து வாழைக்கா பஜ்ஜி சாப்பிட வாங்கி தரீங்களா ” என்று கேட்டான்.

உடனே மோகன் அதிர்ச்சியாகி ஆச்சர்யமாக மகனை பார்த்தான்.

பின்னர் தலையை திருப்பி அருகிலிருந்த சுவரை பார்த்தான்.

அங்கே மாட்டியிருந்த படத்தில், அமரராகி விட்ட அப்பா… சிரித்தபடி மோகனை பார்த்துக் கொண்டிருந்தார். அவர் வழக்கமாக செய்வது போல… கண்ணடித்து காட்டி சிரித்தது போல் அவனுக்கு தெரிந்தது.

– 07-17-23, My Vikatan

ஊசிக்குறிப்பு

 எனக்கும் மழைக்காலத்தில் பஜ்ஜி சாப்பிட பிடிக்கும். சிறு வயதில் 3ஆம் வகுப்பில் படிக்கும்போது திருச்சியில் குடியிருந்த வீட்டின் அருகில் ஒரு செக்கு இருந்தது.  அந்த செக்கு இருக்கும் காம்பௌண்ட் சுவர் அருகில் ஒரு பாட்டி மாலை வேளைகளில்  வாழைக்காய் பஜ்ஜி சுட்டு விற்பார். காலணா ஒரு பஜ்ஜி (2 பைசா). அதன் மேல் அளவற்ற பிரியம். திருச்சியை விட்டு பிரிந்தபின்  அந்த பாட்டியின் பஜ்ஜி போன்ற ருசியுள்ள பஜ்ஜி வேறு எதுவும் சுவைத்ததில்லை.  இக்கதையைத் தேர்ந்தெடுக்க அதுவும் ஒரு காரணம். ஹி ஹி. 

அதே போன்று என்னுடைய பாஸுக்கு இலந்தைவடை என்றால் மிகவும் பிரியம். பள்ளிக்கூட வாசலில் விற்பதை வாங்கி தின்றது. தற்போது இலந்தை வடை எங்கும் கிடைப்பதில்லை.                                                                                                                                           

பாரதிமணியன்முகநூல் பக்கம்.

பாரதிமணியன்

நட்புக்களே! நான் எழுதிய 'விடுகதை' சிறுகதை. கல்கி ஆன்லைன் இதழில் வெளிவந்துள்ளது. படித்து பார்த்து பகிரவும். நன்றி. கீழே உள்ள இணைப்பை தொட்டு படிக்கலாம். இது முற்றிலும் இலவசம்.

இணைப்பு இங்கே - சிறுகதை - விடுகதை!


-பாரதி மணியன்


ஆபிசிலிருந்து சோர்வாக வீட்டிற்குள் வந்த அப்பா ராகவனை,  வாசல் படியின் உள்ளே நுழைய விடாமல், இரு கை..... (கதையின் தொடக்க வரிகள் இவை. சுட்டி மேலே)


பனங்காய் வண்டி: பாரதிமணியன்

1.     அதிக வட்டி அதிக வட்டி

        முதலீட்டாளர்களுக்கு

         நாமக்கட்டி!

2.     சாதி வாழ்க சாதி வாழ்க

        வாழ வேண்டாமா

        சாதி தலைவர்

3.     மழை நாளில்

        குடையும் தொலையும்

        திருமண வீடு!

4.     வாங்கிய கடனில் விளைந்த நெல்

        கடன்போக மீந்தது

        பெரிய வைக்கோற்போர்!

5.     ஐந்து லிட்டர் கேனில்

        ஏழு லிட்டரும் கொள்ளும்

        ரேசன் கடையில்!

6.     பேருந்தில் பிதுங்கும் கூட்டம்

        நடந்தால் நல்லது

        மாதக்கடைசி!

7.      புது டயர் மாற்ற

         கிடைத்த பழைய டயர்

         பையனுக்குக் கிடைத்த புது வண்டி

8.      எத்தனையோ புத்தகங்கள்

         வாங்க காசில்லை

         சுண்டல் மடித்த காகிதமே சுவை

9.      மின்சாரம் இல்லாத

         புழுக்க ராத்திரி

         படிக்க ஆசை

10.    கிரிவலம்

         உடனடி பலன்

         கால்வலி!

= = = = = = = = =

30 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை. ரோபோ டீச்சர் செய்தி முன்னமே எ. பியில் வந்து படித்திருக்கிறேன். நல்ல டீச்சர். எ. பி ஆஸ்தான எழுத்தாளர்களின் ஆதங்கத்தை இன்றுதான் படிக்கிறேன். :))) பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலாக்கா இன்று தண்ணீர் டியூட்டியோ!!! பெங்களூரில் தண்ணீர் மேலாண்மை ரொம்ப மட்டம். பெங்களூர் என்றில்லை இந்தியா முழுவதுமே.

      கேரளத்தில் பைப்பைத் திறந்தால் அருவி போல கொட்டும்....மக்கள் ரொம்ப தாராளமாகச் செலவு செய்வாங்க அது போல இங்கு பெங்களூரிலும். பொதுவாக எல்லா வீடுகளிலும் தண்ணீரை சல்லிசாகச் செலவு செய்வதைப் பார்க்கிறேன். இத்தனைக்கும் சமீபகாலங்களில் நான் சொல்வது ஒரு 7, 8 வருடம் முன்பே திருவனந்தபுரம் kowdiar சந்திப்பில் ஓரத்தில் பெரிய ஃப்ளாஷ் போர்ட்....தண்ணீரை சிக்கனமாகச் செலவு செய்ங்கன்னு!!

      ஆனா இன்னும் அங்கிருக்கும் என் உறவினர்களுக்கு அந்தப் பழக்கம் வர மாட்டேங்குது! நம் வீட்டுக்குச் சென்னையிலும் சரி இங்கும் சரி வந்தா ....தண்ணிய கொஞ்சமா செலவு பண்ணுண்க கொட்டாதீங்க என்று சத்தம் போடுவேன்! பின்ன ஒரு துளி தண்ணிக்குக் கஷ்டப்பட்ட காலம் உண்டு, வள்ளியூரிலும் சென்னையிலும் இருந்தப்ப.

      கீதா

      நீக்கு
    2. வணக்கம் சகோதரி

      தண்ணீர் டியூட்டி தினமும் தொடர்கிறது. காலை ஆறிலிருந்து எட்டு எட்டரை மணி வரைதான் தண்ணீர் வரும். அதற்குள் தண்ணீரை பிடித்து வைத்துக் கொண்டு வேலைகளை முடிக்க வேண்டும். இத்தனைக்கும் எங்கள் அப்பார்ட்மெண்டில் மாதம் ஒரு வீட்டுக்கு 3000 ரூபாய் தண்ணீருக்காகத் தருகிறோம். இன்னமும் பிரச்சனை தீரவில்லை. எவ்வளவு நாட்கள் இது தொடருமோ !? தெரியவில்லை.

      நானும் இந்த தண்ணீர் சிக்கனத்துடன் திருமணமாகி சென்னை வந்ததிலிருந்து, (மதுரை, இப்போது இங்கு ) வாழ்ந்து வருகிறேன்.

      பொதுவாக தண்ணீரை சிக்கனத்திற்கு எதிர்பதமாக சொல்லுவார்கள். "தண்ணி மாதிரி செலவழிக்காதே" என்று. ஆனால், நான் தண்ணீர் செலவழிப்பதில்தான் சிக்கனத்தை கற்று கொண்டிருக்கிறேன். :))

      உங்களது பல தகவல்களுக்கு மிக்க நன்றி. இப்போது இடையில் காலையில் இந்த நேரம் பதிவுலகிற்கு வந்து விட்டு பிறகு நேரம் கிடைக்கும் போதுதான் வருகிறேன். நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. தண்ணீர் சிக்கனத்திற்கு கீசாக்கா தான் சரியான வழிகாட்டி. ராஜஸ்தானில் இருந்தப்போ என்று தொடங்கினார் என்றால் எப்படி சொட்டு தண்ணீர் வீணாக்காமல் மறு உபயோகம் செயயலாம் என்று விளக்கமாக கூறுவார்.

      நீக்கு
  3. ஐரிஸ் டீச்சர் ரொம்பவே கவர்கிறார்! உருவத்தை வைத்தல்ல நான் சொல்றது...இந்த டெக்னாலஜி!

    // ( அட செயற்கை உருவம் கொடுக்கும்போது, 'தமன்னா போல, பாவனா போல, அனுஷ்கா போல எல்லாம் உருவம் வைத்தால் என்ன' என்று எ பி ஆஸ்தான எழுத்தாளர்கள் சிலர் ஆதங்கப் படுகிறார்கள்!) //

    ஹாஹாஹாஹாஹா...

    இதற்குச் சிலர் எதிராக இருக்கலாம் ஆனால் நான் பார்க்க்ம் கோணம் வேறு....சில இங்கு சொல்லவில்லை....ஏ ஐ பற்றி வீட்டில் நிறைய பேசப்படுவதால்...அதை ஃபிக்ஷனாக (ஆனால் கண்டிப்பாக எதிர்காலத்தில் மெய்ப்படும்) ஹிஹிஹிஹி...இதுக்கு மேல சொல்ல மாட்டேனே!

    கீதா

    பதிலளிநீக்கு
  4. இன்றைய கதை ஆசிரியர் புதியவர்.

    ஒரு யதார்த்த நிகழ்வு கதையின் வடிவத்தில். தாத்தா இருக்கும் போதே அடுத்த தலைமுறை கேட்பதாக வருமோ என்று நினைத்து வாசித்தேன்...

    //பின்னர் தலையை திருப்பி அருகிலிருந்த சுவரை பார்த்தான்.//

    இது எதிர்பாராதது.

    தாத்தா இருக்கும் போதே கேட்டால் மகனுக்கு என்ன பதில் சொல்வான் என்று மனதில் ஓடியது!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. ஆசிரியரின் மற்றொரு கதையும் வாசித்தேன். அதுவும் யதார்த்த கதை. முடிவு அதுவாகத்தான் இருக்கும் என்று உறுதியாகத் தெரிந்தது. ஏனென்றால் இது வழக்கமாக நாம் பெற்றோர் நம் குழந்தைகள் சிறியவர்களாக இருக்கும் போது பலரும் செய்திருப்போம் என்பதால்.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகர் சகோதரரே

    இன்றைய கதைப்பகிர்வும் அருமை. நம் அப்பாக்களின் சின்னஞ்சிறு ஆசையை கதையில் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். இறுதியில் முடிவு வருத்தம். எதிர்பார்த்ததுதான். ஆனால், தொடரும் சந்ததிகளின் ஆசையை நிறைவேற்றிதானே ஆக வேண்டும். தன் மகனுக்காக அந்த கடையில் பஜ்ஜி வாங்கித்தரும் போது அப்பாவின் பஜ்ஜி சாப்பிடும் எண்ணங்களை நிராகரித்தோமே என்ற குற்ற உணர்ச்சி அவ்வப்போது மறக்காது தலை நீட்டிப் பார்க்கும். இதுதான் மனித வாழ்க்கையின் நியதி. ஒவ்வொருவரும் இப்படித்தான் பழையதை மறக்க இயலாமல் தவிக்கிறோம். சிலர் வேண்டுமானால் இதை உதாசீனம் செய்து கடக்கலாம். கதையை அழகாக எழுதியிருக்கிறார் ஆசிரியர்.பாராட்டுக்கள்.

    இவரது கதைகளை படித்த மாதிரி உள்ளது. ஆனால் எதுவென்று இப்போது உடனே சரியாக கூற முடியவில்லை.

    ஆசிரியர் பற்றிய குறிப்பும், உங்களது ஊசிக்குறிப்பும் அருமை. படங்களும் நன்றாக உள்ளது. மழை கால மாலையில், இப்படி காரசாரமாக சாப்பிட வேண்டுமென்று எல்லோருக்கும் தோன்றுவதுதான். அதுவும் அந்த பெய்யும் மழையை ஜன்னல் வழியாக பார்த்தபடி, சாப்பிடும் போது மனதுக்கு சுகமாக இருக்கும்.

    ஆசிரியரின் அனைத்து கவிதைகளும் நன்றாக உள்ளது. 8ம், 10ம், மிக ரசித்தேன். அருமையாக தொகுத்துத் தந்த உங்களது பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரிவான கருத்துரை. நன்றி. இந்த பாடல் தான் நினைவில் வருகிறது.
      ஆசையே அலை போலே
      நாமெல்லாம் அதன் மேலே
      ஓடம் போல ஆடிடுவோமே'
      வாழ்நாளிலே.
      Jayakumar

      நீக்கு
  7. வகுப்பில் ஏஐ ஆசிரியர் என்பதை டைஜஸ்ட் பண்ண இயலவில்லை. ஜிகே போன்ற வகுப்புகளில் இதன் உபயோகம் உண்டு, பொருத்தமானது. ஆனால் பசங்களைக் கட்டி மேய்த்து அறிவைப் புகட்டுவதுதான் ஆசிரியர் வேலை. அதை ஏஐ ஆசிரியர் செய்தால் அந்நியப்பட்டுப் போகும், சைனாவில் ஏஐ மனைவி (பொம்மையை) மனைவிக்குப் பதிலா வாங்கி வைத்துக்கொள்வதுபோல

    பதிலளிநீக்கு
  8. இலந்தை வடையை நான் எங்கும் காண்கிறேன், வெவ்வேறு வடிவத்தில். கூடவே புளியை உபயோகித்துச் செய்யப்படும் மிட்டாயும். எனக்கு இவை பிடிக்காது

    பதிலளிநீக்கு
  9. பஜ்ஜி ஆசையைப் படித்ததும் திருச்சி பதிவர் (பழைய ஹிஹி. அவர் எழுதுவதை நிறுத்தி சில ஆண்டுகள் ஆகிவிட்டன) வை கோபாலகிருஷ்ணன் நினைவுக்கு வருகிறார். அவருக்கும் பஜ்ஜி வகையறா மீது கொள்ளைப் பிரியம். யாரேனும் இப்போ வாங்கித் தருகிறார்களா தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருச்சியும் மதுரையும் தெருமுனை எண்ணெய் பலகார கடைகளுக்கு பிரசித்தம். தற்போதும் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என பஜ்ஜி வடை போண்டா விற்கும் ரோட்டோர கடைகள் உண்டு.

      நீக்கு
    2. //நெல்லைத் தமிழன் ஸ்வாமி, வணக்கம். அம்பீஸ் கடை என ஒன்று புதிதாக எனது வீட்டருகே அருகே ஏற்பட்டுள்ளது. அதன் ஓனர் சங்கரன் எனது இனிய நண்பர். பஜ்ஜி, உ.கி.போண்டா, மசால் வடை ஃபோன் செய்தால் டோர் டெலிவரி ஆகிவிடுகிறது. 👅👅👅👅

      நீக்கு
  10. தமன்னா ஆசிரியையாக இருந்தால் மாணவர்கள் எதிர்காலம் ???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரகாசமாக இருக்கும்! உண்மையான தமன்னா அல்லவே! போலிதானே!

      நீக்கு
  11. கதையப் போன்று இங்கு வீட்டிலும் அப்பாவுக்கு நான் நிறைய கட்டுப்பாடுகள் போட்டு வைத்திருக்கிறேன்! எண்ணைப் பலகாரங்கள். அவருக்கு நல்லதல்ல என்பதால்.

    குட்டிப் பையன் கேட்டப்ப மோகனுக்குக் கண்டிப்பாகத் தன் அப்பாவும் இப்படித்தானே கேட்டார் வாங்கிக் கொடுக்கலை... இப்ப மகன் கேக்கறப்ப ஒரு ஃபீலிங்க் வந்திருக்குமோ.

    இதை யூகத்துக்கு விட்டிருந்தது பிடித்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சின்ன வயசுல அவர் கன்டிஷன் போட்டிருப்பார். இப்போ இவர் பழி வாங்கறாரோ?

      நீக்கு
    2. நெல்லை, சிரித்துவிட்டேன். சின்ன வயசுல அப்பா தலைமையில் எங்க வளர்ந்தேன். full control அம்மாவின் அம்மா, அப்பா உட்பட!!!!!!!

      கீதா

      நீக்கு
  12. ஆசிரியரின் ஹைக்கூக்கள் ரொம்ப நல்லாருக்கு. ரசித்தேன்

    ஜெ கே அண்ணா நானும் கொஞ்சம் தேடிப் பார்த்தேன் ஆசிரியர் பற்றிய தகவல்கள் ஒன்றும் தெரியவில்லை. நீங்க கொடுத்திருக்கும் தகவல்கள் மட்டுமே இணையத்திலும்.

    ஆசிரியரின் வேறு கதைகளும் கல்கி ஆன்லைனில் இருக்கும் போல.

    மழைக்காலத்தில் பஜ்ஜி போண்டா சாப்பிட ரொம்பப் பிடிக்கும் ஆனா அந்தக்காலம் எல்லாம் போய் பல பல வருஷங்கள் ஆச்சு!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது செய்யறது சுலபம்தான். நிறைய யூ டியூபில் இருக்கிறதே கீதா ரங்கன்(க்கா)

      நீக்கு
    2. இதுக்கெல்லாம் யுட்யூப் பார்க்கணுமாக்கும்!!!!!!!!!!!!!!!!!!!! நாங்க அப்படி செய்யற ஆளில்லை!!! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஹாஹாஹா....ஓ நீங்க சொல்றது..யுடூப்ல பார்த்தாலே சாப்பிட்டா மாதிரின்னு!!

      கீதா

      நீக்கு
  13. வீடு கட்டிக் குடுப்பது நல்ல செயல்.

    ஐரிஸ் ரீச்சர் காலத்துக்கு ஏற்ற தேவை.

    கதை நன்றாக இருக்கிறது. இவரின் வேறு கதைகள் படித்திருக்கிறேன்.

    இன்றைய பகிர்வுகள் நன்று.

    பதிலளிநீக்கு
  14. பஜ்ஜினா பஜ்ஜி தான்.

    ஆஹா.

    எப்படி இருக்கீங்க, ஸார்?

    பதிலளிநீக்கு
  15. இணையத்தில் இருந்து ஒதுங்கியிருந்தாலும் எ பி க்கு வைகோ சார் எட்டிப்பார்க்கிறார் என்பதில் மகிழ்ச்சி. அவ்ருடைய சிறுகதைகள் பலவும் sirukathaigal.com தளத்தில் உள்ளன. ஆனாலும் படிக்கவில்லை.
    Jayakumar

    பதிலளிநீக்கு
  16. இணையத்தில் இருந்து ஒதுங்கியிருந்தாலும் எ பி க்கு வைகோ சார் எட்டிப்பார்க்கிறார் என்பதில் மகிழ்ச்சி. அவ்ருடைய சிறுகதைகள் பலவும் sirukathaigal.com தளத்தில் உள்ளன. ஆனாலும் படிக்கவில்லை.
    Jayakumar

    பதிலளிநீக்கு
  17. கதை நன்றாக இருக்கிறது.
    என் கணவரும் மழை காலம் என்றால் பஜ்ஜி செய்ய சொல்வார்கள். சூடாய் பஜ்ஜி பின் காப்பி குடிக்க பிடிக்கும். வெங்காய பக்கோடா, தூள்பஜ்ஜி எல்லாம் செய்வேன்.

    இப்போது உள்ளவர்கள் ரோட்டுகடைகளில் வாங்க கூடாது என்று சொல்பவர்களாக இருக்கிறார்கள். ரோட்டு கடையில் வடை , பஜ்ஜி சுத்தமாக தயார் செய்பவர்களும் உண்டு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!