புதன், 26 ஜூன், 2024

வயதாகும் பொழுது இரவில் தூக்கம் வராமல் போவது ஏன்?

 

நெல்லைத் தமிழன்: 

சரி சரி தமன்னாவின் படங்களைப் போட்டு அடுத்த புதன் கேள்விகள் மனசுல எழுகிறது

இவங்களுக்குக் கிடைக்கும் மரியாதையும் கவனிப்பும், ரசிகர்களும் எந்தக் காரணத்திற்காக என்பது அவர்களுக்குப் புரிந்திருக்குமா?

அந்த அது-இளமை தொலைந்த பிறகு யாராலும் கவனிக்கப்படாமல் போகும்போது அவங்க மனநிலை எப்படி இருக்கும்?

இந்தக் கேள்விகளுக்கு பதிலை யோசிக்குமுன் தகுந்த தமன்னா அனுஷ்கா படங்களை கேஜிஜி தேடுவாரா இல்லை பதிலை யோசிப்பாரா?

$ செடியில் பூத்த ரோஜாப்பூ வாடிவிடுமே என்று கவலை கொண்டு இன்றே வாடத் தொடங்குபவரை என்ன என்ன என்று சொல்ல!

# நடிகைகள் தங்கள் புகழுக்கும் பொருளுக்கும் காரணம் என்ன என்பதை நன்றாகவே தெரிந்து வைத்திருப்பார்கள்.  தற்கால நடிகைகள் எதுவும் நிரந்தரம் இல்லை என்பதையும் அறிந்திருப்பார்கள். எல்லா நடிகைகளும் மூப்பு வந்தவுடன் சோர்ந்து விடுவதில்லை.  காஞ்சனா ஒரு நிதர்சன உதாரணம்.  வயதாகி வனப்பு மங்கியதும் வருத்தப்படுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.  உலக நியதி.

& யோசிக்கும் போஸ் கொடுக்கும் தகுந்த படங்களைத் தேடித் தேடி இளைத்துவிட்டேன் ! 

வாசகர்கள் இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் படங்களில் யோசிக்கும் நடிப்பு எது நன்றாக உள்ளது என்று கருத்து கூறுங்கள்! 





நம்ம படத்தைப் போட என்னென்ன வழி யோசிக்கறாங்கப்பா..

கள்ளச்சாராய மரணத்துக்கு ஏன் இவ்வளவு ஓலம்?  தெரிஞ்சுதானே அரசை ஏமாற்றக் குடிக்கிறார்கள். அவர்களுக்கு எதற்கு மக்களின் வரிப்பணத்திலிருந்து பத்து லட்சம்?  

& ஆளும் தரப்பினர் பேர் கெட்டுப் போகாமல் இருக்க - அவர்கள் செலுத்தும் அபராதத் தொகை இது. அதை வரிப் பணத்திலிருந்து வாரிக் கொடுத்துவிட்டால் - ஒரே கல்லில் இரண்டு மாங்காய்! விளம்பரம் + பெயரைக் காப்பாற்றிக்கொள்வது. அப்படித் தரப்படுகின்ற தொகையிலும் கட்சி ஆட்கள் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப மாமூல் வசூலித்துவிடுவார்கள் என்று கேள்விப்பட்டது உண்டு. (மூன்றாவது மாங்காய்!) 

சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலை வெடித்து மரணித்தால் 3 லட்சம், கள்ளச்சாராயத்தில் செத்தால் 10 லட்சம் என்பது நியாயமாகப்படுகிறதா?

& இந்தத் தொகை எல்லாம் - நேரம் , காலம் , இடம், பாதிக்கப்பட்ட மக்கள், பாதிப்பை செய்த நபர் எல்லாவற்றையும் பொருத்தது. வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை. 

அரசு டாஸ்மாக் கடைகளைத் திறந்திருக்கிறது அதனால் குடிக்கிறோம் என்பவர்கள் ஏன், அரளிச் செடிகள் வீட்டைச் சுற்றி மலர்ந்திருக்கின்றன அதனால் அரளிக்கொட்டைகளை அரைத்து உண்கிறோம் என்று சொல்வதில்லை?

& எதிர்காலத்தில் அப்படியும் நடக்கலாம் - அரளி அரைத்து உண்பவர் குடும்பங்களுக்கு ஐந்து லட்சம் இழப்பீடு என்று அறிவித்தால்! 

தங்கள் டீம் ஜெயித்துவிட்டால் இறைவனுக்கு நன்றி என்று சொல்லும் டீம் கேப்டன், தோற்றுவிட்டால் இறைவனால் தோற்றுவிட்டோம் என்று சொல்வதில்லையே. ஏன்?

# இறைவன் உதவி செய்வதுண்டு உபத்திரவம் தருவதில்லை என்பதால் இருக்கும் .  அது சரி, வென்றவர்கள் இறைவனுக்கு நன்றி என்று எப்போதும் சொல்வதில்லையே.

என்னோட சொத்தையும், அதானி சொத்தையும் சேர்த்து, நான் அம்பானியைவிடப் பணக்காரன்னு சொல்வது,  கூட்டணியில் இல்லாத மம்தா, கம்யூனிஸ்ட் மற்றும் பல கட்சி எம்பிக்களையும் தங்களோட இண்டி கூட்டணி எம்பிக்கள் என்று ராகுல் சொல்வது - இது இரண்டில் எது அபத்தம்?

# தேர்தல் முடிவுகள் தெரிந்ததும் வழக்கமாக தோற்ற‌ அணியினர்தான்‌ உளறுவது வழக்கம். இந்த முறை வென்ற‌ அணியினரும் புலம்புவதைப் பார்க்கிறோம்.

பானுமதி வெங்கடேஸ்வரன் :

நம் வாழ்க்கைத் துணை, நம் குழந்தைகள், நம் கீழ் வேலை பார்ப்பவர்கள் இவர்களில் நமக்கு அதிகம் பொறுமை கற்றுக்கொடுப்பது யார்?

& ரொம்ப காலம் நம்முடன் வாழும் வாழ்க்கைத் துணைக்குதான் நமக்குப்  பொறுமை கற்றுக்கொடுப்பதில் முதலிடம். வேலை பார்க்கும் இடத்தில் - கீழே வேலை பார்ப்பவர்களைவிட, மேலதிகாரிகள்தான் நாம் அதிகம் பொறுமை கற்றுக்கொள்ள சந்தர்ப்பம் அளிப்பவர்கள். 


( ஸ்ரீராம், வாழ்க்கைத் துணையை ' Boss " என்று குறிப்பிடுவது இதனால்தானோ 😃😀 நாராயண, நாராயண!) 

நம் குழந்தைகள் நமக்கு பொறுமை கற்றுக்கொடுப்பதில்லை. அவர்களோடு பழகும்போது நாமே பொறுமை காக்க ஆரம்பித்துவிடுகிறோம்!  

* காலை பாத்ரூம் Free ஆக இல்லாததிலிருந்து பஸ் கிடைக்காதது. லீவு  கிடைக்காதது, இரவு டிபன் ரவா உப்புமா வரை ஒவ்வொன்றும் பொறுமையை போதிக்கின்றன!!!  ஹிஹிஹி...

வயதாகும் பொழுது இரவில்  தூக்கம் வராமல் போவது ஏன்?

& தூக்கம் குறைவதற்கு வயது ஆவது ஒரு காரணமா என்று தெரியவில்லை.

என்னுடைய அனுபவத்தில், காபி குடிக்கும் பழக்கத்தால் தூக்கம் கெடும். அதிலும் குறிப்பாக மாலை நேரத்தில் அருந்தும் காபி. 

எதைப் பற்றியாவது கவலைகள்  இருந்தால், தூக்கம் வராது. 

விதுர நீதியில், திருதராஷ்டிரருக்கு  விதுரர், தூக்கம் வராததற்கு உண்டான காரணங்களை விரிவாக கூறுகிறார். 

திருதிராஷ்டிரர் விதுரரிடம் கேட்கிறார் :

கவலை மிகுதியால் எனக்கு உறக்கம் வரவில்லை. உன்னைப் போன்று தர்மம், அதர்மம் பற்றி அறிந்தவர் யாருமில்லை. என்னுடைய நன்மைக்குரிய அறிவுரைகள் சொல்!

விதுரர்: சாதாரண மனிதர்களுக்கு உறக்கம் வராததற்கு பலவிதமான காரணங்கள் உள்ளன.

பலமுள்ள ஒருவனின் ஆதிக்கத்திற்க்கு ஒருவர் ஆளாகும் போது, ஒருவருக்குச் சொந்தமான சொத்தெல்லாம் கவரப்படும் போதும் உறக்கம் வராது,

மேலும், காமமுள்ளவனுக்கும், திருடனுக்கும் உறக்கம் வராது.

மாற்றானின் செல்வத்தைக் கவர்ந்து கொள்ள விரும்புகிறவனுக்கும் உறக்கம் வராது, இவ்விதமான எந்தக் குற்றமும் உங்களிடத்தில் இல்லாமல் இருந்தால் உங்களால் நன்றாக உறங்க முடியும் இவ்வாறு விதுரர் பதிலளித்தார்.

= = = = = = = = =

KGG பக்கம் : 

பாகம் இரண்டு. 

சென்னை வாழ்க்கை. 

1971, ஆகஸ்ட் (எட்டாம்) மாதம், எட்டாம் தேதி, காலை எட்டு மணிக்கு சென்னை - புரசவாக்கம், அண்ணன் வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். எல்லா எட்டுகளும் சனி பகவானின் ஆசீர்வாதம்! 

வந்தது - ஆகஸ்ட் 16 அன்று - (புரசவாக்கம் வீட்டிலிருந்து நடந்து சென்று அடையக்கூடிய இடமாகிய) CNT பாலிடெக்னிக் ஜூப்ளி ஹாலில் அசோக் லேலண்ட் நடத்தும் அப்ரென்டிஸ் தேர்வு - எழுத்துத் தேர்வு எழுத. 

அண்ணன் வேலை பார்த்த கீழ்ப்பாக்கம் மெடிக்கல் காலேஜ் & ஆஸ்பத்திரியில் (அட்மினிஸ்ட்ரேஷன் பகுதி) அவர்தான் ஆபீஸ் நண்பர்களின் பத்திரிக்கை குழுவின் தலைவர். 

வருகின்ற புத்தகங்கள் எல்லாமே முதலில் இவருக்கு வந்து, பிறகு இவர் யார் யார் அதைப் படிக்கவேண்டும் என்று ஒரு பட்டியல் - அந்தப் புத்தகத்தின் முதல் பக்கத்தில் வரிசைக் கிரமமாக எழுதுவார். 

"எழுத்துத் தேர்வுக்கு எல்லாம் தயார் செய்துகொண்டுவிட்டாயா" என்று அண்ணன் கேட்டார். 

" இல்லை. க்விஸ் டைப் கேள்விகள் என்றால் என்ன என்று தெரியாது " என்று சொன்னேன். 

என் அப்பா நிறைய க்விஸ் கேள்விகள் கேட்பார் என்றாலும் - அது எல்லாம் வேறு வகை. ( ஒரு குளத்தில் சில தாமரைப் பூக்கள் மலர்ந்திருந்தன - சில குருவிகள் பறந்து வந்து அந்தப் பூக்களில் உட்கார்ந்தன. ஒரு பூவுக்கு ஒரு குருவி என்று உட்கார்ந்தால் - ஒரு குருவிக்கு உட்கார பூ கிடக்கவில்லை; ஒவ்வொரு பூவுக்கும் இரண்டிரண்டு குருவிகளாக உட்கார்ந்தால் - ஒரு பூவுக்கு உட்கார குருவி இல்லை - என்றால் எவ்வளவு தாமரை, எவ்வளவு குருவி - போன்ற கேள்விகள்) 

அசோக் லேலண்ட் கம்பெனியில் - இந்த மாதிரி எல்லாம் கேள்விகள் கேட்பார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை! 

அண்ணன் உடனே, 'க்விஸ் டைப் கேள்விகள்தானே - கவலைப்படாதே - ஐ ஏ எஸ் படிப்பில் சேர தகுதித் தேர்வு எழுதுபவர்களைத் தயார் செய்ய காம்படிஷன் சக்ஸஸ் ரிவ்யு என்று ஒரு புத்தகம் எங்கள் பத்திரிக்கைக் குழுவில் உள்ளது. இந்த ஆண்டு வெளிவந்த எல்லா புத்தகங்களையும் கொண்டுவந்து உனக்குக் கொடுக்கிறேன். ஒரு வாரத்திற்குள் எல்லாவற்றையும் படித்து, எழுத்துத் தேர்வுக்கு தயார் செய்துகொள்' என்றார். 

                                (இது அந்தப் புத்தகத்தின் லேடஸ்ட் பதிப்பு!)

அன்று மாலையே CSR புத்தகங்கள் பதினைந்து கொண்டு வந்து கொடுத்துவிட்டார். 

அந்தப் புத்தகங்களின் மத்தியப் பகுதியில், க்விஸ் டைப் கேள்விகள், அவற்றுக்கான பதில்கள் எல்லாம் ஐம்பது கேள்வி பதில்கள் போல இருக்கும். 

மேத்ஸ், சயின்ஸ், ஜெனரல் நாலெட்ஜ் - என்று பல பிரிவுகளிலும் கேள்விகள் இருக்கும். 

அவற்றிற்கான பதில்களும், விளக்கங்களும் இருக்கும். 

ஆஹா - வைரச் சுரங்கம் கிடைத்த மகிழ்ச்சி எனக்கு! 

அன்றிலிருந்து தொடங்கி ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை அந்தப் புத்தகங்கள் முழுவதையும் அட்டைக்கு அட்டை படித்து பல விஷயங்கள் தெரிந்துகொண்டேன். 

எல்லா க்விஸ் டைப் கேள்விகளுக்கும் பதில்கள் தனியாக ஒரு தடித்த நோட்டுப் புத்தகத்தில் எழுதி, எனக்கு நானே மதிப்பெண்கள் போட்டு எவ்வளவு மதிப்பெண்கள் என்று கணக்கிட்டேன். 

அந்தக் கேள்விகளுக்கு - குறிப்பிட்ட நேரத்திற்குள் விடையளிக்கவேண்டும் என்பதும் ஒரு நிபந்தனை. 

அன்றைய நிலையில் ஐ ஏ எஸ் நுழைவுத் தேர்வு எழுதியிருந்தால் கூட நான் தேர்வு பெற்றிருப்பேன். அந்த அளவுக்கு தயார் செய்திருந்தேன். 

(தொடரும்) 

= = = = = = = = = = 

60 கருத்துகள்:

  1. CSR படித்துத் தேர்வுக்குத் தயார் செய்த உங்கள் முயற்சி வியக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. Part 2 துவக்கம் சுவாரசியமாக உள்ளது.
    பொறுமை பற்றிய கேள்வியும், தூக்கம் வாராமை பற்றிய கேள்வியும் சிறிது சிந்திக்க வைக்கின்றன.
    ஆனாலும் கீசாக்கா, அதிரா போன்ற சில கேள்வி விற்பன்னர்கள் இன்னும் கேள்வி கேட்க வராதது துர்பாக்கியம்.
    Jayakumar​

    பதிலளிநீக்கு
  3. ஹப்பா எபிக்கு வயசு 16!!! எண்ணிரண்டு பதினாறு வயது!

    கீதா

    பதிலளிநீக்கு
  4. அந்த அது-இளமை தொலைந்த பிறகு யாராலும் கவனிக்கப்படாமல் போகும்போது அவங்க மனநிலை எப்படி இருக்கும்?//

    இளமை கடந்து வயதாகும் போதும் நம்மை கவனிக்க வைக்கும் அளவு நம் பெர்சனாலிட்டி வெளித்தோற்றத்தைச் சொல்லலை நம் மீதான மரியாதை வரும் அளவிற்கு நம் செயல்பாடுகள் இருந்தால் நல்லது

    கீதா

    பதிலளிநீக்கு
  5. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  6. முதல் படம் - கவலையான வருத்தத்துடனான சிந்தனை

    2- ஓஹோ ஐ டோன்ட் கேர்

    3- எதிராளி மனதில் என்ன ஓடுதுன்னு கணிக்கற சிந்தனை

    4- அதிர்ச்சியில் ஓடும் சிந்தனை

    5 - துக்கம்

    (கௌ அண்ணா ஏதோ தெரியாம கேட்டுட்டுட்டார்னா கீதா உனக்கும் வேலையத்த ஆராய்ச்சி பாரு!!!!)

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு என்னவோ - #2 அனு போஸ்தான் சூப்பர் என்று தோன்றியது.

      நீக்கு
    2. கௌ அண்ணா மீக்கும் அதே தான் 2 வதுதான். மத்ததெல்லாம் டல்!!! காலைல இத சொல்லி நம்ம நெல்லைய ஹிஹிஹிஹி வேண்டாம்னு!

      கீதா

      நீக்கு
  7. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
    தளிர் விளைவாகித்
    தமிழ் நிலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  8. எபிக்கு வயசு பதினாறா!...

    வாழ்க.. வாழ்க...

    பதிலளிநீக்கு
  9. தெரிஞ்சுதானே அரசை ஏமாற்றக் குடிக்கிறார்கள். //

    என்னது? அரசை ஏமாத்தவா? நெல்லை இது புரியலை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசு எம்பிக்கள் ஆலையில் தயாராகும் அரசு சாராயம் குடிக்காமல் கள்ளச் சாராயமா? இனி ரேஷன்ல தரணும்

      நீக்கு
    2. இப்படி ஒன்றா!? சாக்கடைல எந்தச் சாக்கடை ?!! விளங்கிடும்.

      கீதா

      நீக்கு
  10. எதை யோசிப்பது..
    எதற்கு யோசிப்பது!..

    காலம் போகின்ற வழியில் காட்சியும் போகின்றது!...

    பதிலளிநீக்கு
  11. கௌதம் ஜி அவர்களது சென்னை வாழ்க்கை புதிய அத்தியாயம்...

    பதிலளிநீக்கு
  12. திரிஷா வாழ்க..
    தமன்னா வாழ்க..
    அனுஷ்கா வாழ்க...


    கெழவனுக்குக் கொண்டாட்டத்தப் பாரேன்!..

    பதிலளிநீக்கு
  13. தேடித்தேடி எடுத்த படம் - ஹாஹா...

    கேள்வி பதில்கள் நன்று.

    கேஜிஜி பக்கம் - இரண்டாம் பாகம் நல்லதொரு தொடக்கம்.

    பதிலளிநீக்கு
  14. கௌ அண்ணா உங்கள் சென்னை அத்தியாயம் சூப்பரான தொடக்கம். முன்ன எல்லாம் சினிமால ஹீரோ பிள்ளையாரை வணங்கி வேலைக்கான தேர்வு அல்லது நேர்முகக் காணல், காலேஜ் பரீட்சைக்கு தோப்புக்கரணம் போட்டு அவரை வாழ்த்தி அனுப்புவது போல சீன் தான் முதல்ல வைப்பாங்க சென்டிமென்ட் அது போல நீங்களும் தொடங்கியிருக்கீங்க!!

    கீதா

    பதிலளிநீக்கு
  15. எங்க வீட்டுலயும் இந்த தாமரை, குருவி கேள்விகள் கணக்கு எல்லாம் ஓடியதுண்டு.

    எங்க மாமாதான் நாங்க எல்லாரும் வேலைக்கான தேர்வு எழுத புத்தகங்கள் இந்த CSR உட்பட யாரிடமேனும் கேட்டு வாங்கி அல்லது நூலகத்திலிருந்து எடுத்துவந்து தருவார். வேறு எந்த இதழ்களும் வீட்டில் கூடாது. வேலைக்கான தேர்வுகளுக்கான இப்படியான புத்தகங்கள் மட்டும்தான். பொழுதுபோக்கு என்பதே வீட்டில் கிடையாது.

    உங்கள் பகுதியை வாசித்ததும் நிறைய பழைய நினைவுகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கல்லூரி நூலகம் சென்று இந்த CSR ல் நிறைய செய்து பார்த்து விடைகளும் விளக்கங்களும் படித்ததுண்டு.

      கீதா

      நீக்கு
    2. உங்க மாமா உங்கள் கடந்த முப்பது வருட வாழ்க்கையைப் பார்த்து CSRக்குப் பதில் வேற உருப்படியான டிரெயினிங் கொடுத்திருக்கலாம்னு நினைப்பாரோ

      நீக்கு
    3. ஹாஹாஹா நெல்லை CSR மோசமில்லையே. நல்ல விஷயம் அது. எனக்கு மத்திய அரசு வேலையும் கிடைத்ததே! இதுக்கான பதில் இங்கு வேண்டாம்னு.

      கீதா

      நீக்கு
  16. //சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலை வெடித்து மரணித்தால் 3 லட்சம், கள்ளச்சாராயத்தில் செத்தால் 10 லட்சம் என்பது நியாயமாகப்படுகிறதா?//

    அதாவது பரவாயில்லை இராணுவவீரர்கள் இறந்தால் 3 லட்சம் இது துரோகம் இல்லையா ?

    பதிலளிநீக்கு
  17. எனக்கு தற்போது இரவு இரண்டு மணியிலிருந்து விடியும்வரை உறக்கம் வருவதில்லை.

    மிகவும் கஷ்டமான நிலைப்பாடு ஆனால் காலை வழக்கம் போல எழுந்து சாதாரணமாக ஆஃபீஸ் செல்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆபீஸிலாவது நிம்மதியாக தூங்கமுடியுமா! ( ஆ கில்லர்ஜி - அடிக்க வருவதற்குள் மீ எஸ்கேப் !)

      நீக்கு
    2. கௌ அண்ணா சிரித்துவிட்டேன்!! ஆனா கில்லர்ஜிக்கு பொருத்தமில்லை!!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
  18. வருடம் பதினாறு வாழ்த்துகள்.

    யோசனை .....ஹா...ஹா....

    தேர்வுக்கு தயார்படுத்திய விதம் சூப்பர்.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.

    இன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் சிறப்பாக உள்ளது. பொறுமை பற்றிய கேள்வியும், அதற்குரிய பதிலும் மிக அருமை. "பொறுத்தாள்வார் பூமியாள்வார்" என்பது பூமாதேவிக்கு நிகரான பதவியை தருவது. "பொறுமை கடலினும் பெரிது" எனச் சொல்லித்தான் எல்லோரும் வளர்க்கப்படுகிறோம்./வளர்க்கிறோம். ஆனால், ஒவ்வொரு வீட்டினுள்ளும், சேர்ந்து வாழும் ஒரு பிரிவினராவது இந்தப் பொறுமையை கடைப்பிடித்தால்தான் இல்லறம் நன்றாகப் போகிறது. இல்லையெனில், இருவருக்குள் எழும் கருத்து வேறுபாடுகள் வாழ்வை விரிசலாக்கி பார்த்து மகிழ்கிறது. ஆனால், இப்போதைய காலகட்டத்தில் ஆண்களுக்கு நிறையவே பொறுமை உள்ளது.

    சகோதரர் ஸ்ரீராம் (அந்த பதிலை கூறியிருப்பது ஸ்ரீராம் அவர்கள்தான் என நினைக்கிறேன்.) அவர்களின் பதில் சிரிப்பை வரவழைத்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலாக்கா இந்தப் பொறுத்தார் பூமியாள்வார் என்பதெல்லாம் யதார்த்தத்தில் இல்லை.

      இது பற்றி நிறைய சொல்லலாம்.

      //ஒவ்வொரு வீட்டினுள்ளும், சேர்ந்து வாழும் ஒரு பிரிவினராவது இந்தப் பொறுமையை கடைப்பிடித்தால்தான் இல்லறம் நன்றாகப் போகிறது.//

      இதில் நன்றாக என்பதன் அர்த்தம் என்னன்னு நம் மனதிற்குள் உள் மனதிற்குள் கேட்டுப் பார்த்தா கண்டிப்பாக உள் மனதின் பதில் வேறாக இருக்கும்.

      இது பத்தி உளவியல்/தத்துவ ரீதியாக நிறைய சொல்லலாம்

      கீதா

      நீக்கு
    2. இதையெல்லாம் ரொம்ப விவரிக்கப் புகுந்தால் அதுவரை கடைப்பிடித்த பொறுமைக்கு பயனின்றி போய்விடும்!!!

      நீக்கு
    3. யெஸ்ஸு ஸ்ரீராம்...ஃப்ளோல போக வேண்டியதுதான்...

      பைத பை இப்பதான் உங்க பதில் அங்க வாசித்தேன் பதிவில். சிரித்துவிட்டேன்!!

      கீதா

      நீக்கு
  20. வணக்கம் சகோதரரே

    இரவில் உறக்கம் வராதிருப்பதற்கான காரணங்களை விதுர நீதி மூலம் விளக்கியிருப்பது அருமையாக உள்ளது. பொதுவாக இரவு படுத்தவுடன் உடல் களைப்பு காரணமாக கண்கள் நன்றாக தளர்வடைந்து உறக்கம் வரவில்லையென்றால், மனது பலவற்றை சிந்தித்து வந்த/ வரும் உறக்கத்தை விரட்டி விடுமென்பது உண்மைதான். அது போல தூங்கும் நேரம் தள்ளிப்போனாலும், தூக்கம் விலகி விடும். என்றாவது பகலில் படுத்து உறங்கி விட்டாலும், இரவு தூக்கம் சரியாக வராது. என் அனுபவத்தில் இது இன்றும் நடக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  21. வலைத்தளம் ஆரம்பித்து 16 வருடங்கள் வாழ்த்துகள்.
    நானும் 2009 ல் ஜூன் 1 ம்தேதி ஆரம்பித்தேன்.
    நான் வலைத்தளம் ஆரம்பித்து ஆண்டுகள் 16 ஆகி விட்டது.
    இப்போதுதான் நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
  22. கேள்விகளும் , பதில்களும் அருமை.
    தேர்ந்து எடுத்து பகிர்ந்த தமன்னா படங்களும் அருமை.

    சென்னை வாழ்க்கை பகிர்வு நன்றாக இருக்கிறது.
    தேர்வுக்கு தயார் ஆன அனுபவங்கள் அருமை.

    //அன்றைய நிலையில் ஐ ஏ எஸ் நுழைவுத் தேர்வு எழுதியிருந்தால் கூட நான் தேர்வு பெற்றிருப்பேன். அந்த அளவுக்கு தயார் செய்திருந்தேன். //

    திறமையான ஐ ஏ எஸ் அதிகாரியாக திகழ்ந்து இருப்பீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் அப்போ நான் வெறும் டிப்ளமோ ஹோல்டர்! அதனால் ஐ ஏ எஸ் நுழைவுத்தேர்வு எழுதியிருக்க முடியாது. கிராஜுவேட் இல்லை என்பதால்!

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!