சனி, 8 ஜூன், 2024

சாலையை சீரமைத்த ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் நான் படிச்ச கதை

 

மூன்றடி உயரமும், 18 கிலோ எடையும் கொண்ட, உலகிலேயே உயரம் குறைந்த டாக்டராக வலம் வருகிறார், கணேஷ் பரையா, 23; உயரம் குறைந்தவர்களின் எழுச்சி நாயகன்.கணேஷ் பரையா, 23; உயரம் குறைந்தவர்களின் எழுச்சி நாயகன்.

குஜராத் மாநிலம், பாவ்நகர் கோர்க்கி கிராம விவசாய குடும்பத்தில் பிறந்த, கணேஷுக்கு ஆறு சகோதரிகளும், ஒரு சகோதரனும் உள்ளனர். சகோதர, சகோதரிகள் அனைவரும் இயல்பான வளர்ச்சி பெற, ஒரு கட்டத்தில், இவர் மட்டும் உயரமும், எடையும் குறைந்தவராக அறியப்பட்டார்.  இவரது உயரம், கேலி போன்ற பாதகங்களை கொண்டு வந்தாலும், ஆசிரியர், நண்பர்கள், பெற்றோர் ஆகியோரின் அபரிமிதமான அன்பு என்ற சாதகங்களையும் உண்டு பண்ணியது.  பிளஸ் 2 தேர்விலும், 'நீட்' தேர்விலும் நல்ல மதிப்பெண் பெற்றதன் அடிப்படையில், கணேஷ் பரையா, மருத்துவம் படிக்க அனுமதி கிடைத்தது.  ஆனால், 'இவரால் அவசர கேஸ்களை கவனிக்க முடியாது. ஆகவே, இவருக்கு டாக்டராகும் தகுதி கிடையாது...' என, குஜராத் மாநில அரசு, இவரை, மருத்துவம் படிக்க அனுமதி மறுத்தது.  எந்த தடை வந்தாலும், அதை உடைத்தே பழகிய கணேஷ், 'நான், அவசர கேஸ்களை கவனிக்க முடியாது என, எப்படி மருத்துவ கவுன்சில் முடிவு செய்யலாம்...' என்று, உயர் நீதிமன்றத்தை அணுகினார். அங்கும், இவருக்கு சாதகமான தீர்ப்பு வரவில்லை.  சோர்ந்து போகாத கணேஷ், உச்ச நீதிமன்றத்திற்கு சென்றார். இவரது வாதத்தில் உள்ள நேர்மையை உணர்ந்து, மருத்துவம் படிக்க அனுமதிக்க உத்தரவிட்டது, உச்ச நீதிமன்றம்.  இதன் அடிப்படையில் ஐந்தாண்டு படிப்பை முடித்து, தற்போது, பாவ்நகர் அரசு மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக பணியாற்றுகிறார். தன் மன வலிமை மற்றும் விடா முயற்சியின் காரணமாக, தரமான மருத்துவராக, நோயாளிகளின் மதிப்பை பெற்றவராக, உயிரைக் காக்க, உயரம் ஒரு பொருட்டல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் வலம் வருகிறார், கணேஷ்.  'நோயாளிகள், என்னைப் பார்த்ததும், முதலில் ஆச்சரியப்படுவர். நோய் பற்றிய பயம் போய் தன்னை அறியாமலேயே என்னைப் பார்த்து சிரிப்பர். அந்த சிரிப்பு ஒன்று போதும். நானும், நோயாளியும் சகஜமாகி, சட்டென நெருங்கி விடுவோம். இது, அவர்களது நோய் தீர்க்க மந்திரம் போல வேலை செய்கிறது.  'பல்வேறு நாட்டு தலைவர்கள் முதல் பிரபலங்கள் வரை, என்னை தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். இருந்தாலும், என்னால் சிகிச்சை பெற்ற நோயாளி குணமடையும் போது, சந்தோஷமாய் சிந்தும் புன்னகையைத் தான் சிறந்த பாராட்டாக கருதுகிறேன்...' எனும், டாக்டர் கணேஷ் பரையாவிற்கு, நம் வாழ்த்துக்களை மனதார தெரிவிப்போம்.

எல். முருகராஜ்

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\


===============================================================================================================


==================================================================================================================

 ======================================================================================================================================================================================

நான் படிச்ச கதை (JKC)


பல்லக்கு

கதையாசிரியர்: ரா.கி.ரங்கராஜன்


முன்னுரை 

ஆசிரியரைப் பற்றி குறிப்பு எதுவும் தரவில்லை. கதையை  விமரிசிக்கவுமில்லை. ஆசிரியர் விமரிசனங்களுக்கு அப்பாற்பட்டவர்.

குமுதத்தில் “இப்படியும் நடந்தது” என்று ஒரு பகுதி இருந்தது. அசாதாரணமான நிகழ்வுகள் பற்றி விவரங்கள் அப்பகுதியில் இடம் பெறும். அது போன்ற ஒரு நிகழ்வு தான் இக்கதையில். ரா கி ர ஒரு தீர்க்கதரிசி என்றே கூறலாம்.

அவர் திருப்பாணாழ்வாரை சாரங்கமுனி தோளில் சுமந்து சென்று ஸ்ரீ ரங்கனைத் தரிசிக்க வைத்த சம்பவத்தின் அடிப்படையில் இக்கதையை எழுதியிருக்கிறார் என்று தோன்றுகிறது. திருவொற்றியூர் கல்யாண வரதராஜ பெருமாள் உற்சவர் பல்லக்கில் இருந்து விழுந்த செய்தியையும் ஒன்றோடொன்றாக பொருந்த வைக்கிறது.

கதையை சுருக்கவில்லை. ஒரிஜினல் படங்களுடன் அப்படியே தந்திருக்கிறேன். கதை sirukathaigal.com தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. கதையின் சுட்டி கடைசியில். 

 நோக்கும் திசையெல்லாம் கூப்பிய கரங்கள், கசகசவென வியர்வை வடித்தது ஜனக்கூட்டம். “அப்பனே! என்னை ஆண்டவனே!” என்ற பிரார்த்தனைகள். “என் கஷ்டத்தை நீக்கு! காணிக்கைச் செலுத்துகிறேன்” என்ற இறைஞ்சல்கள்.

“ஆகட்டும். ஆகட்டும்!” என்று துரிதப்படுத்தினார் தர்மகர்த்தா தேவரங்கம்.

நூறு நூறு கிண் கிணி மணிகள் ஆர்த்தன,  சிறுநகை போல, கண்ணாடிப் பட்டைகளும், ஜிகினாப் பூக்களும் இனவெயிலின் ஒளிபட்டு, கண் கூச மின்னின. கம்பீரமாய் எழுந்தது. சௌரி ராஜப் பெருமாளின் ஸப்தஸ்தானப் பல்லக்கு.

பெருமாளின் ஏழுர் விஐயம் முடிந்து விட்டது. சௌரிராஜன் கோயில் கொண்டிருக்கும் பதி பெருமாள் மலை. ஏழாவது ஊராகிய இந்த மல்லித் துறையிலிருந்து பதினேழாவது மைலில் இருக்கிறது. பொழுது சாயும் முன் அங்கே போயவிட வேண்டும். அர்ச்சகர் அழகிய நம்பி கை சளைக்காது. திருத்துழாயும் குங்குமமும் வினியோகித்துக் கொண்டிருந்தார். நெற்றித் திருச்சூர்ணம் வெயிலில் உருகி ஓடிக் கொண்டிருந்தது; ரத்தக்கோடு போல. அவிழ்ந்திருந்த சிகையை எடுத்து முடியக்கூட அவகாசமின்றி பக்தர் குழாத்தைப் பிரீதி செய்து கொண்டிருந்தார். அவருக்கு வயது அறுபது இருக்கும். நியமம் தவறாத பண்பு: அனுஷ்டானத்தால் வளர்ந்த உடலுரம். ஆகமங்களில் பெற்றிருந்த அறிவு. எல்லாமாக கண்ணிலே ஒளியும், குரலிலே திடமூம் கொடுத்தன.

“தட்டை வாங்கிக் கொள்ளாதீர்கள். இனி நேரமில்லை” என்று தர்மகர்த்தா கூச்சலிட்டு முடிக்கு முன் ஒரு கிழவி அருகே வந்து விட்டாள்.

“காத்திருக்க நேரமில்லை. புறப்படுங்கள்!” என்றார் தேவரங்கம்.

“பாதகமில்லை. அன்பர்களுக்காக ஆயிரம் ஆண்டு காலம் காத்திருக்கக் கூடியவனாயிற்றே என் இறைவன்! இந்த நிமிட நேரத் தாமதமா காக்க மாட்டான்?” என்று சாந்தமாகச் சொன்னபடி பழம், தேங்காய் கொண்ட தட்டைக் கிழவியிடமிருந்து பெற்றுக் கொண்டார் அழகிய நம்பி.

தேவரங்கம் பல்லைக் கடித்துக்கொண்டார் அவர் செய்யக் கூடியது அதைத் தவிர வேறில்லையே!

அர்ச்சனை முடிந்ததும், “இனிப் புறப்படலாம்,” என்றார் அழகிய நம்பி.

“நான் முன்னே காரில் போகிறேன்” என்று கூறி விடை பெற்றுக் கொண்ட தர்மகர்த்தா, “மூக்கா!” என்று குரல் கொடுத்தார்.

பல்லக்குத் தூக்கிகளின் முன் வரிசையில் இருந்த மூக்கன் தலையை நீட்டி “எஜமான்!” என்றான் பணிவோடு.

“பகலுக்கு ராயன் சத்திரத்தில் சாப்பாடு தயார் பண்ணியிருக்கிறது. கால் மணிக்கு மேலே அங்கே தாமதிக்க வேண்டாம். என்ன”

“ஆகட்டுங்க” என்று பதில் வந்தது.

‘ரங்க, ரங்கா!’ என்று கோடியிலிருந்த ஆள் ஒருவன் கூவினான். பவனிவரும் பட்டத்து யானையைப் போல, ராஜ கம்பீரமான ஒரு குலுக்குடன் பல்லக்கு புறப்பட்டது. சில வினாடி நேரங்களுக்கு ஜனத்திரளின் நெரிசல் பலத்தது. “ரங்க ரங்கா! ரங்க ரங்கா!” என்ற பல்லக்குத் தூக்கிகளின் கோஷம் நாலு திசைகளிலும் எதிரொலித்தது. சௌரிராஜப் பெருமானின் பட்டாடைகளும் பொன்னாபரணங்களும் ஒன்றேடொன்று உரசிச் சலசலத்தன. தெய்வத்தின் திருமுகத்தில் தேஜஸ் ஜொலித்தவாறிருந்தது.

அர்ச்சகர் அழகிய நம்பி பல்லக்கின் பக்கத்தோடு நடந்தார். வீதியின் இருபுறமும் நின்றிருந்த மாந்தர்களின் எண்ணிக்கை சிறுகச் சிறுகத் தேய்ந்தது.

இப்போது பல்லக்கு மல்லித் துறையின் எல்லையைத் தாண்டி விட்டது. இனி ஒரே பொட்டல் காடு. செம்மண் பாதை சூடேறிக் கொதித்தது. இங்கொன்றும் அங்கொன்றுமாக இருந்த பனைமரங்களின் நிழல் பூமியிலே விழாமல் அவற்றின் மேலேயே விழுந்தது.

“கொஞ்சம் வாங்கிக்க அண்ணே” என்ற குரல் கேட்ட அழகிய நம்பி, பின் வரிசையில் தோள் கொடுத்துக் கொண்டிருந்த மாரி விலகி வெளியே வந்து தலை முண்டாசை அவிழ்த்து உதறுவதைக் கண்டார்.

“என்னடா மாரி, ஏண்டா?” என்று அவர் வினவியதற்கு அவன் பதில் சொல்லவில்லை. தலையைக் கைகளால் அமுக்கிக் கொண்டு மைல் கல் ஓரமாக உட்கார்ந்து விட்டான்.

பல்லக்கு நின்றது.

‘உடம்பு சௌகரியமில்லையா?’ என்று கவலயுடன் அருகே சென்று வினவினார் அழகிய நம்பி,

“ஒண்ணும் இல்லீங்க, தலையை லேசா வலிக்குது” என்று சொல்லிவிட்டு எழுந்து வந்து வரிசையில் சேர்ந்து கொண்டு சிரித்தான் மாரி.

“சுத்தச்சோம்பேறிப் பயல் சாமி! காலப் பலகாரம் சாப்பிடாமலேயே வந்து விட்டானுங்க, அதான்!” என்று மூக்கன் தகவல் தந்தான்.

“ஏண்டா மாரி அப்படிச் செய்யலாமா? பதினேழு கல் நடக்க வேண்டுமென்று உனக்குத் தெரியாது!” என்று உரிமையுடன் கடிந்து கொண்டார் அழகிய நம்பி.

“பசிக்கலீங்க அப்போ” என்று மறுபடி சிரித்தான் மாரி. அந்தச் சிரிப்பு உதட்டிலே இல்லாமல் அவனை அவர் பார்த்ததே இல்லை.

“நீ வேண்டுமானால் சும்மாவே நடந்து வாயேன். தோள் கொடுக்க வேண்டாம்” என்றார் அர்ச்சகர்.

“அட ஒண்ணும் இல்லீங்க, சரியாப் போச்சுது; இரண்டு கல் தாண்டினால் ராயர் சத்திரத்தில் சாப்பாடு!”

“சோம்பேறிப் பயல், சோம் பேறிப் பயல்,” என்று மூக்கன் அவனைத் திட்டிக் கொண்டு வர, பல்லக்கு இரண்டு மைலக் கடந்து ராயர் சத்திரத்தை அடைந்தது.

பகல் போஜனம் ஆயிற்று.

சுவாமி தரிசனத்திற்காக கூடிய ஏழெட்டு முதியவர்கள் அவ்விடத்திலேயே பிரசாதத்தைப் பெற்றுக் கொண்டு பிரிந்து விட்டார்கள்.

பகல் ஒரு மணி சுமாருக்கு பல்லக்கு மீண்டும் புறப்பட்டது.

கிட்டத்தட்ட ஐந்துமைல் தாண்டியாயிற்று. “ஐயையோ! சாமி, வயித்தை ஒரேயடியாக வலிக்குதே!” திடீரென்று மாரி கூக்குரலிட்டான்.

திடுக்கிட்ட அழகிய நம்பி திரும்பிப்பார்க்கு முன்னே “ஆத்தா!” என்று அலறியபடி சுருண்டு விழுந்தான் அவன்.

“அடடே!” என்று அவனுக்குப் பின்னாலிருந்த மற்றவர்கள் கூச்சலிடும் போதே, முன்னே இருந்தவர்கள். இரண்டு அடி எடுத்து வைத்து விட, ஒருவன் மாரியின் தொடையை மிதித்துத் தானும் அலற. அந்த அமளியின் நடுவே பல்லக்குத் தண்டோடு இணைத்துக் கட்டப்பட்டிருந்த தாங்குக் கட்டை அறுந்து மாரியின் நெற்றியில் விழுந்து விட்டது.

கண்ணிமைக்கும் நேரம் தான்.

தாங்குக்கட்டையின் இரும்புக் கொக்கி செங்குத்தாக விமுந்து நெற்றியில் குத்தியதால், ரத்தம் பெருக்கிட்டு மண்ணோடு கலந்து கட்டி தட்டிற்று.

“மாரி, மாரி” என்று உலுக்கிக் குலுக்கினார் அழகிய நம்பி.

பதிலே இல்லை.

பத்துத் தப்படிக்கு அப்பால் பல்லக்கை நிறுத்தி வைத்த மற்ற ஆட்களும் ஓடிவந்தார்கள். “மடப் பயல்! சத்திரத்திலேயே தங்கிடுடான்னேன்; கேட்டானா?” என்றபடி மூக்கன் மாரியை மடியில் கிடத்திக் கொண்டான்.

சட்டெனத் தம் தோள் மீது கிடந்த உத்தரியத்தை எடுத்து மாரியின் நெற்றியைச் சுற்றிக்கட்டினார் அழகிய நம்பி. ரத்தப் பெருக்குக் குறைவது போல் தோன்றியதே யொழிய, மாரி நினைவை அடையவில்லை.

“சாமீ! என்ன காரியம் பண்ணிணீங்க?”

மண்டியிட்டு அமர்ந்திருந்த அழகிய தம்பி “என்ன விஷயம் மூக்கா?” என்று கேட்டார்.

“இது சாமி – அவன் தலையிலே கட்டியிருக்கீங்களே காயத்துக்கு – இதைப் பார்த்தீங்களா?”

அழகிய நம்பி அப்போது தான் கவனித்தார். கௌரவப்பட்ட பெரிய மனிதர்களுக்குச் சடாரி சாத்தும் போது தலையில் சுற்றும் பட்டுப் பரிவட்டம் மாரியின் தலைக்காயத்துக்குக்  கட்டப்பட்டிருந்தது. “மூக்கா ஆபத்துக்கு பாவமில்ல என்கிறது உனக்குத் தெரியாதா? அடுத்ததாக நடக்க வேண்டியதைக் கவனி!” என்றார்.

“பேச்சு மூச்சில்லாமல் கிடக்கிறானே பாவிப்பய! விட்டிட்டுப் போக முடியாதுங்களே” என்றான் ஒருவன்.

“அது சரிதான் அண்ணே! ஆனால் இன்னும் ஏழுகல் போயாவணுமே? தூக்கிட்டா போவ முடியும்?” என்றான் இன்னொருவன்.

“தூக்கிட்டுப் போவ வேண்டியது தான்” என்றான் முதல்வன் பிடிவாதமாக. “நாம் எல்லோரும் முறை வைச்சு ஆளுக்குக் கொஞ்சம் நேரம்னு தோளிலே தூக்கிட்டுப் போவோம்.”

“நீ சொல்லுவே அண்ணாச்சி! எங்களுக்கல்ல தெரியும் சிரமம்!” என்று ஒரு வாலிபன் இந்த போசனையை ஆட்சேபித்தான். “ஏற்கனவே மாரி இப்படிப் படுத்திட்டதிலே ஒரு ஆளு குறைஞ்சிட்டுது. அவனைத் தூக்கறத்துக்கு இன்னெரு ஆளு போயிட்டா மத்தவங்களாலே சாமி தூக்கிப் பல்லக்கைக் கோவிலுக்குக் கொண்டு போய்ச் சேர்க்க முடியாது. நினைவு வச்சுக்க!”

அழகிய நம்பி இவர்கள் விவாதத்தால் பயன் எதுவும் விளையாதென்பதை உணர்ந்தார். “கொஞ்சம் காத்திருந்து பார்ப்போம். வண்டி, மோட்டார் ஏதாவது வரலாம்,” என்றார்.

சோதனை போல எதுவும் வரவில்லை. அரைமணி நேரம் வீணானதுதான் மிச்சம். மாரியோ இன்னும் நினைவு திரும்பாமலே மூச்சுப் பேச்சின்றிச் சவம்போல் கிடந்தான். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிஷமும் அவன் உயிருக்கு உலை வைக்கிறது என்பதை அனைவரும் உணர்ந்துதான் இருந்தார்கள்.

“சாமி, நான் சொல்றேன் கேளுங்க” என்று உறுதியாகப் பேசினான் மூக்கன். “இவனை இங்கேயே விட்டிட்டுப் போக வேண்டியதுதான். வேணா நடையைக் கொஞ்சம் எட்டிப் போடலாம். ஊர் எல்லையை மிதிச்சதும் எவனண்டையாவது சேதி சொல்லி இங்கே ஆள் அனுப்புவோம்!”

“அதான் சாமி சரி. கோவிலுக்குள்ளாற பல்லக்கு துழையறத்துக்கு வேளை பார்த்திருக்காங்க. தெரியுமில்ல! வேளை தவறிடுச்சின்னா எல்லாருக்கும் பொல்லாப்பு!” என்று மற்றவர்களும் ஆமோதித்தார்கள்.

அழகிய நம்பிக்கு மனமே இல்ல. ஆயினும் வேறு வழியில்லை போல் தோன்றியது. மௌனமாகத் தலையை அசைத்தார்.

“ரங்க. ரங்கா” என்ற கோஷத்துடன் பல்லக்கு பூமியினின்றும் எழும்பியது.

“நிறுத்துங்கள்” என்று திடிரென்று சொன்னார் அழகிய நம்பி. அகத்தின் உறுதி அவர் கண்ணிலும், காலிலும் பிரதிபலித்தது.

பல்லக்கு பூமியை மீண்டும் தொட்டது. அழகிய நம்பி உறுதியுடன் பேசினார். நாம் செய்வது மகத்தான பாவம். ஆண்டவனுக்கே அடாத செயல், இப்படி ஒரு மனிதனை அனாதையா வனாந்தரத்திலா விட்டுச் செல்வது”

“வேறு வழி?” எவனோ கேட்டான்.

“இருக்கிறது!” என்றார் அழகிய நம்பி. “மாரியைப் பல்லக்கில் கிடத்திக் கொண்டே ஊருக்கு எடுத்துச் சென்று விடலாம்!”

“சாமி” என்று பத்துப் பன்னிரண்டு குரல்கள் பீதியுடன் கூவின.

“பதட்டப்படாதீர்கள். அன்பே உருவான தெய்வம், ஆபத்தில் சிக்கியவனைக் கைவிடும்படியாகவா சொல்லுகிறது? அடுத்தவனை ஆதரிப்பவனுக்கு உய்வுண்டு என்று நமது தர்மசாஸ்திரங்கள் போதிக்கின்றன. ஆகவே, இது பாவமாகாது”.

அழகிய நம்பி எவர் பதிலுக்கும் காத்திருக்கவில்லை. யாருடைய ஆட்சேபத்துக்கும் தயங்கவில்லை. பாதையோரமாகக் கிடந்த மாரியைத் தானே மார்போடணைத்து எடுத்துப் பல்லக்கில் பெருமாளுக்குப் பக்கத்தில் கிடத்தினார்.

“தெய்வமே, இது அபசாரமானால் என்னை மன்னி” என்று இறைஞ்சி விட்டு நோக்கிய போது. பெருமானின் திவ்வியத் திருமுகத்தில் புன்னகை சுடர் தெறிப்பது போல் தோன்றியது அவருக்கு.

“சாமி! இறக்கிடுங்க மாரியை! ஒரு கார் வருது!” என்று மூக்கன் கத்தினான்.

அழகிய நம்பி நிமிர்ந்து நோக்கினார். தூரத்தில் புழுதியைக் கிளப்பிக் கொண்டு ஒரு சிறு கார் வருவது தெரிந்தது.

“ஆ! தர்மகர்த்தாவின் காரல்லவா அது?”

கன வேகமாக வந்த கார் சடக் கென்று நின்றது, பல்லக்கின் அருகே. வெகு அவசரமாகக் கதவைத் திறந்து கொண்டு தர்மகர்த்தா தேவரங்கம் வெளியே குதித்தவர், “பல்லக்கு ஏன் இங்கே நிற்கிறது. இன்னும் ஊருக்கு வந்து சேரவில்லையே என்ற கவலையில்தான் நான் திரும்பிப் புறப்பட்டேன்….ஆ! என்ன அது….” என்று நிறுத்தினார்.

பல்லக்குக்கு வெளியே விறைத்து நீட்டிக் கொண்டிருந்த மாரியின் கால் அவர் கண்ணில் தென்பட்டு விட்டது.

ஒரே பாய்ச்சலில் அருகே சென்று பார்த்தவர், புலனடைத்துப் போனவராய்த் திக்பிரமித்து நின்று விட்டார். ரத்தம் ஜிவு ஜிவு வென்று நெற்றி காம்புகளில் புடைத்தேறி நின்றது. கண்கள் கனல் கக்கின.

“ஐயோ! ஐயோ! என்ன அக்கிரமம் ஐயா. இது” என்று வெடித்துக் கொண்டு வந்தன வார்த்தைகள்.

அழகிய நம்பி சாந்தமாக “ஒரு அக்கிரமமுமில்லை. திடுமென்று அவனுக்கு இந்த மாதிரி ஏற்பட்டு விட்டது. வேறு வழியில்லை” என்றார்.

“வேறு வழியில்லையா?” என்று ஏறும்போதே, தேவரங்கம் மாரியின் தலையில் சுற்றியிருந்த பரிவட்ட வஸ்திரத்தையும் பார்த்து விட்டார்.
“அபசாரம்! அபசாரம்! எப்படித்தான் உமக்குக் கண் அவியாமல் இருக்கிறதோ இன்னும் ஏண்டா கடாமாடுகளா, நீங்களும் பார்த்துக் கொண்டா இருந்தீர்கள் கீழே பிடித்துத் தள்ளடா அவனை! ஐயோ கடவுளே” என்று கூச்சலிட்டார்.

முன்னே வந்து மறித்துக் கொண்டார் அழகிய நம்பி. “அவனுக்கு வேறு வழி எதுவும் பண்ணாமல் இறக்குவது சரியல்ல” என்றார்.

அவரது அமைதியான கோரிக்கை அந்தச் சமயத்தில் கிண்டலாகப் பட்டது தர்மகர்த்தாவுக்கு. “நிறுத்தும் ஐயா உங்கள் உபதேசத்தை!” என்று நெருப்பைக் கக்கினார்.

“கோபப்படக்கூடிய சமயமா இது உங்கள் கார் இருக்கிறது. அதில் ஏற்றிச் சென்று விடுங்களேன்!” என்றார் அழகிய நம்பி.

தேவரங்கத்தின் கோபம் மேலும் அதிகரித்தது. தம்மை விட அதிக மனிதப் பண்பும், அதிக இரக்க உணர்ச்சியும் இருப்பது போல அர்ச்சகர் பேசுவது அவரது ஆத்திரத்தைக் கிண்டி விட்டது. சாதாரண நிலையில் தாராளமாக ஒப்புக்கொண்டிருக்கக் கூடிய ஒரு செயலைச் செய்ய அவர் இந்தச் சந்தர்ப்பத்தில் மறுத்தார். “முடியாது! அவன் எக்கேடு வேண்டுமானாலும் கெடட்டும்! எனக்கு அக்கறையில்லை; இறக்குங்களடா அவனை” என்று ஆணையிட்டார்.

“மன்னிக்க வேண்டும்” என்றார் அழகிய நம்பி.

“இந்தப் பெருமாளின் அர்ச்சகர் நான். பல்லக்கு என் ஆதீனத்தில் இருக்கிறது.”

“ஓகோ! நீர் என் ஆதீனத்தில் இருக்கிறீர் என்பதை மறக்க வேண்டாம்! புரிகிறதா இந்த நிமிஷமே நீர் போகலாம், உமது பாவ மூட்டையுடன்!”

அழகிய நம்பி மறு பேச்சுப் பேசவில்ல. மாரியை ஜாக்கிரதையாகத் தாமே இறக்கித் தோள் மீது சாத்திக் கொண்டார். தள்ளாத வயது, உடல் நடுங்கிற்று: மனம் நடுங்கவில்லை. கால்கள் தள்ளாடின; உறுதி தள்ளாடவில்லை.

ஸப்தஸ்தானப் பல்லக்கைத் திருப்பியும் பாராமல் நேரே முன்னே நடந்தார், சுமையுற்ற தேகத்துடனும் – சுமையற்ற நெஞ்சுடனும்.

“ஊம்! புறப்படுங்கள்!” என்று உறுமினார் தர்மகர்த்தா.

“ரங்க, ரங்கா!”

பிரம்மாண்டமானதொரு குலுக்கல். பல்லக்கு மீண்டும் எழுந்தது.

“ஐயையோ!” என்று ஓர் ஆள் கூவினான்.

தட தடவென்று ஒரு பெருஞ் சப்தம்.

சௌரிராஜப் பெருமாளின் விக்கிரகம் இடம் பெயர்ந்து சாய்ந்து: பல்லக்கிலிருந்து கீழே விழுந்தது. கயிற்றுக் கட்டு மட்டுமல்ல, தர்மத்தின் கட்டும் அற்றுவிட்டதல்லவா அங்கே…?

– குமுதம் 20-6-55ம் தேதியிட்ட இதழில் ‘சூர்யா’ என்ற மாற்றுப் பெயரில் எழுதப்பட்ட இக்கதை, 1955ல் வெளியான சிறுகதைகளுள் சிறந்ததெனத் தேர்வு பெற்று தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தங்கப் பதக்கம் பெற்றது. 

*************கதையின் சுட்டி************

20 கருத்துகள்:

  1. இன்றைய கதை என்னை மிகவும் கவர்ந்தது. மனிதப் பண்பே, பிறரிடம் செலுத்தும் அன்பே, இறைவனை அணுக முதல் உபாயம்.

    பதிலளிநீக்கு
  2. மருத்துவர் கணேஷ் எழுச்சி நாயகன்! மனதை நெகிழ வைத்துவிட்டது அவர் அனுபவங்கள். பலருக்கும் உதாரணம். அவர் சிறந்த மருத்துவராக சேவைகள் செய்திட வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. ஆட்டோ ஓட்டுநர்களை வாழ்த்துவோம் சாலை சீரமைப்பு பணிகளுக்கு சூப்பர்!!!!

    மற்ற செய்திகளும் நல்ல செய்திகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. ராகி ர பற்றி சொல்லணுமா! சிறந்த எழுத்தாளர்.

    இந்தக் கதை மிகவும் பிடித்தது. ரசித்து வாசித்தேன்.

    அர்ச்சகர் அழகிய நம்பி (ஆ எங்க திருக்குறுங்குடி ஊர் இறைவன் பெயர்! மக்களில் பலருக்கும் இப்பெயர் இருக்கும் அப்போ) பற்றி அவர் - Characterization - சொல்லி வரும் போதே தெரிந்துவிட்டது, முடிவு. அவர் மாரிக்கு உதவுவார் எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் என்று. அவர் மன உறுதி எல்லாமே.

    எந்த சாஸ்திரமும் சொல்வது இந்த தர்மத்தைத்தான்! இறைவன் விரும்புவதும் அதைத்தான்.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. ஸப்தஸ்தானப் பல்லக்கைத் திருப்பியும் பாராமல் நேரே முன்னே நடந்தார், சுமையுற்ற தேகத்துடனும் – சுமையற்ற நெஞ்சுடனும்.//

    என்ன அருமையான வரி!

    கீதா

    பதிலளிநீக்கு
  6. மருத்துவர் திரு. கணேஷ் பரையா அவர்களை பாராட்டுவோம்.

    பதிலளிநீக்கு
  7. டாக்டர் கணேஸ் அயராத முயற்சியின் வெற்றி . சேவைக்கும் பாராட்டுகள். தொடரட்டும் அவரின் நற்பணி.

    உதவிக்கரம் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    கதை நன்றாக உள்ளது இரங்கும் உள்ளங்களில்தான் இறைவன் வாழ்கிறான் என்பதை கதையாசிரியர் நன்கு எடுத்துக் காட்டியுள்ளார். தோளில் சுமந்து செல்வது மனதை தொட்டது.

    பதிலளிநீக்கு
  8. சிறிய கணேஷ் பரையா அவர்கள் சிறந்த மருத்துவராக வருவார் என்பதில் எந்த ஐயமும் இல்லை,

    //'நோயாளிகள், என்னைப் பார்த்ததும், முதலில் ஆச்சரியப்படுவர். நோய் பற்றிய பயம் போய் தன்னை அறியாமலேயே என்னைப் பார்த்து சிரிப்பர். அந்த சிரிப்பு ஒன்று போதும். நானும், நோயாளியும் சகஜமாகி, சட்டென நெருங்கி விடுவோம். இது, அவர்களது நோய் தீர்க்க மந்திரம் போல வேலை செய்கிறது. //

    இதை வாசித்த போது, அவர் தன்னையும் தன் நோயாளிகளின் மன நிலையையும் எந்த அளவிற்குப் புரிந்துகொண்டு இருக்கிறார் என்பதும் அவரது தன்னம்பிக்கையும் மிகச் சிறந்த உதாரணம்.

    தனக்கு மருத்துவ சீட் கிடைக்கவில்லை என்றதும் நீதிமன்றத்தில் அயராது வழக்காடி மருத்துவராகி இருப்பதும் அவரது டெடிக்கேஷனைச் சொல்கிறது. சிறந்த மருத்துவராக வளர்ந்திட எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு துணை இருக்க பிரார்த்திப்போம்.

    சோலார் சார்ஜர் நல்ல கண்டுபிடிப்பு.

    அதிகாரிகளை எதிர்பார்த்திருந்தால் வேலை நடக்காது என்று ஆட்டோக்காரர்கள் முன்வந்து சாலையைச் சீரமைத்தது தன் கையே தனக்குதவிக்கு உதாரணம்.

    கடைசி செய்தியும் நெகிழ்ச்சி.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  9. ரா கி ரங்கராஜன் அவர்களின் கதை மனதைத் தொட்டது. அருமையான கதை. இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பதும் சகமனித நேயம் இதுதான்.

    அருமையான கதைப் பகிர்விற்கு மிக்க நன்றி ஜெயகுமார் சந்திரசேகரன் சார்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  10. ஆசான் ரா.கி.ரங்கராஜனிடமிருந்து எழுதக் கற்றுக்கொள்ள வேண்டுமென்பதை மீண்டும் மீண்டும் சொல்லத் தோன்றுகிறது.

    ஆழ்ந்த பொருள் பொதிந்த கதை ஒவ்வொரு ஸ்டேஜாக (நிலை) நகர்ந்து இறுதி வடிவத்தை அடையும் பொழுது உயர்ந்த தத்துவ உபதேசமாய் மலர்ந்து மனதை ஆட்கொள்கிறது.

    பகிர்ந்து கொண்டு எபி வாசகர்களுக்கும் படிக்கக் கொடுத்தமைக்கு நன்றி ஜெஸி ஸார்.

    கதையை வாசித்து முடித்ததும் ஒரு திடீர் கேள்வி மனதில் பளீரிட்டதையும் சொல்லி விடுகிறேன்.

    இதே பொருளில் இதே சிந்தனை வெளிப்பாடாய்
    சி.என். அண்ணாதுரை
    அவர்கள் ஒரு கதையைப் படைத்திருந்தால் நம்ம நெல்லை போன்றவர்கள்
    என்ன கருத்து சொல்வார்கள் என்றும் நினைப்பு ஓடியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​ஒரு ஒற்றுமை கண்டீர்களா ஜீவி சார். அழகிய நம்பியின் வரைபடம் கிட்டத்தட்ட நம் நெல்லை சாரின் முகம் போலவே உள்ளது.


      நீக்கு
    2. @ஜீவி சார்
      அறிஞர் அண்ணா ஆரியமாயையால் வந்த 700 ரூபாய் அபராதமும், 6 மாத சிறை தண்டனையும், நூலின் தடை உத்தரவையும் மறந்திருக்கமாட்டார். கட்டாயம் இக்கதையை எழுதியிருக்க மாட்டார்.

      நீக்கு
    3. அந்நாட்களில் சிறை ஏகுவது விழுப்புண் என்பதைத் தாண்டி எழுத்துக்குத் தடை என்பது அறிவாளிகள் மத்தியில் உயர்ந்த அந்தஸ்த்தைக் கொடுப்பதாக இருந்தது. பிற்காலத்தில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி முதலமைச்சர் ஆகவும்
      இம்மாதிரியான அடக்குமுறைகள் ஏணிப் படிக்கட்டுகளாய் இருந்தது.

      நீக்கு
  11. கதை பிரசுரமான வருடம் 1955. அக்கால கட்டத்தில் தான் திராவிட இயக்கம் தீவிரமானது. குடுமி அறுப்பு, பிள்ளையார் சிலை உடைத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்த காலம். அது போன்ற ஒரு சூழ்நிலையில் ஒரு தீவிர வைணவர் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பு மனிதனை தோளில் சுமப்பது என்பது ஒரு புரட்சியே.

    சென்ற மாதம் சென்னை திருவொற்றியூர் கல்யாண வரதராஜ பெருமாள் கருட சேவையின் பல்லக்கு தாங்கு தண்டு முறிந்து விக்ரஹம் விழுந்தது.
    அப்படி நடக்கலாம் என்பதையும் இக்கதை அன்றே எடுத்துக் காட்டுகிறது.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜே கே அண்ணா நான் இந்தக் கருத்தை சொல்ல நினைத்து, தவிர்த்தேன்.

      எங்கள் ஊரிலும் பல்லக்கு சரிந்தது நடந்ததுண்டு ஆனால் விக்ரகம் விழவில்லை.. நான் மிகவும் சின்னவள அப்ப.

      கீதா

      நீக்கு
  12. மகான் இராமனுஜர் வழி சிந்தனையாகவும் கதைக் கருவைக் கொள்ளலாமில்லையா?

    திருவொற்றியூர் செய்தியையும் YTube--ல்
    பார்த்தேன், ஸார்.

    பதிலளிநீக்கு
  13. மகான் இராமனுஜர் வழி சிந்தனையாகவும் கதைக் கருவைக் கொள்ளலாமில்லையா?

    திருவொற்றியூர் செய்தியையும் YTube--ல்
    பார்த்தேன், ஸார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
  14. //என்னால் சிகிச்சை பெற்ற நோயாளி குணமடையும் போது, சந்தோஷமாய் சிந்தும் புன்னகையைத் தான் சிறந்த பாராட்டாக கருதுகிறேன்...' எனும், டாக்டர் கணேஷ் பரையாவிற்கு, நம் வாழ்த்துக்களை மனதார தெரிவிப்போம்.//

    பாராட்டி, வாழ்த்த வேண்டும் டாக்டர் கணேஷ் பரையாவை.
    பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  15. அருமையான மனிதநேய கதை பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!