சனி, 30 டிசம்பர், 2023

'கால்நடைகளின் காவலன்' மற்றும் 'நான் படிச்ச கதை'




 ================================================================================================

ஒவ்வொரு கோடைக்காலத்திலும் வறட்சியினால் மிக மோசமாக பாதிக்கப்படும் மாநிலங்களில் ஒன்று மஹாராஷ்டிரா. வறட்சியினால் பாதிக்கப்படுவது மனிதர்கள் மட்டுமல்ல கால்நடைகளும்தான். வறட்சி காரணமாக பலர் தங்களது கால்நடைகளை விற்றுவிட்ட நிலையில் அதிகம் பாதிக்கப்பட்ட மரத்வாடா பகுதியின் பீட் மாவட்டத்தின் கிராமத்தைச் சேர்ந்த 58 வயது ஷபீர் சையத் கடந்த முப்பதாண்டுகளாக நூற்றுக்கணக்கான மாடுகளைப் பாதுகாத்து வருகிறார். இவர் உதவ முன்வராமல் போயிருந்தால் இந்த மாடுகள் உணவும் நீரும் இன்றி இறந்துபோயிருக்கக்கூடும். [Courtacy :  JKC]


============================================================================================


======================================================================================================



ஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம் எங்குள்ளது?

சென்னையிலோ, டில்லியிலோ, கொல்கத்தாவிலோ, டோக்யோவிலோ, சிங்கப்பூரிலோ இல்லை.
கிடைத்தற்கரிய பழைய நூல்களைத் தேடி அலையும் தமிழ் ஆய்வாளர்களுக்கு சரணாலையமாக விருத்தாசலத்தில் அமைந்திருக்கும் இந்த தமிழ் நூல் காப்பகமே.. ஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம் இது.
தம் வாழ்நாள் பணியாக இந்த நூலகத்தை நிறுவியுள்ளார்
புலவர் பல்லடம் #மாணிக்கம்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற காலத்திலிருந்தே நூல்களைச் சேமித்து வைத்து இன்று ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளார்.
இந்த நூலகத்தில் மிகப்பழமையான பல நூல்கள் உள்ளன.
இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அச்சிடப்பெற்ற பெப்ரீஷியஸ் அகராதி, சங்க இலக்கியம் தொடங்கி சிற்றிலக்கியங்கள் வரைப் பல் தொகை நூல்களின் முதல் பதிப்புகள், தொல்காப்பியம் முதல் பதிப்பு, கம்பராமாயணத்தின் பத்துக்கு மேற்பட்ட பதிப்புகள் எனப் பல முதல் பதிப்பு நூல்கள் அமைந்திருப்பது தமிழ் நூல் காப்பகத்தின் தனிச்சிறப்பு.
திருக்குறளின் அத்தனைப் பதிப்புகளோடு திருக்குறள் தொடர்பான 1500 க்கும் மேற்பட்ட நூல்களும் இங்கு உள்ளன.
கம்பன், இளங்கோ, பாரதி, பாரதிதாசன் ஆகியோரின் படைப்புகளின் பல்வேறு பதிப்புகளும் அவை பற்றிய அனைத்து ஆய்வு நூல்களின் தொகுப்பும் உள்ளன.
நான்கு வேதங்கள், உபநிடதங்கள், ஆங்கில, தமிழ்க் கலைக்களஞ்சியங்கள், பல்கலைக் கழகங்களின் வெளியீடுகள், சமைய நூல்கள், சித்தாந்த சாத்திரம், பன்னிரு திருமுறை, நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் எனப் பல பரிமாணங்களில் நூல்கள் வகைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மறைமலை அடிகள், தெ.பொ.மீ., வையாபுரி, மு.வ.,பாவாணர், ந.சி.கந்தையா, முதலிய ஆய்வு முதல்வர்களின் நுட்பமான ஆய்வு நூல்கள், காந்தியடிகள், காரல்மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார், அண்ணா முதலிய சமுதாய சிந்தனையாளர்களின் அரிய நூல்தொகுதிகளும் இடம்பெற்றுள்ளன.
ஐநூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வேடுகள் உலகின் தலை சிற்ந்த திரைப்படங்களின் குறுந்தகடுகள் இசைக் குறுந்தகடுகள் எனப் பல அரிய குறுந்தகடுகளும் அமைந்திருப்பது நூலகத்தின் கூடுதல் சிறப்பு.
தரைத் தளத்தில் நூலகமும் மேல் தளத்தில் கூட்டம் நடத்துவதற்கான அரங்கும் ஆய்வாளர்கள் தங்கி ஆய்வு செய்வதற்கான அறைகளும் அமைந்த கலை நயம் மிக்க கட்டடமாகத் திகழ்கிறது இது...
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் முதன்மைக் கட்டடத்தின் பெரிய தூண்களும், நேப்பாள மன்னர் அரண்மனையை நினைவூட்டும் மேல் முகப்பும் என, தன்னைக் கவர்ந்த வடிவமைப்புகளை பழனிவேல் என்ற பொறியாளரின் உதவியோடு வடிவமைத்துள்ளார் புலவர் பல்லடம் மாணிக்கம் அவர்கள்......
நூலகத்திற்கான தனி கட்டிடத்தை 50 இலட்ச ரூபாய் செலவில் 2000ஆம் ஆண்டில் கட்டி முடித்ததோடு நூலகத்தின் முன்புறம் கண்ணைக் கவரும் அழகிய பூங்காவையும் கலை நுணுக்கத்தோடு உருவாகி வைத்துள்ளார்.
இவரது முயற்சியைப் பாராட்டி பொள்ளாச்சி மகாலிங்கம், பதிப்புச்செம்மல் மெய்யப்பன், பொற்கோ, முனைவர் சுந்தரமூர்த்தி, க.ப.அறவாணன், கவிஞர் புரட்சிதாசன், த.பழமலை, க்ரியா ராமகிருஷ்ணன், விடியல் சிவா, ஆகியோர் தங்கள் சேகரிப்பிலிருந்து பல நூல்களை கொடையளித்துள்ளனர்.
பல்லடம் மாணிக்கம் அவர்கள், நிறங்கள் என்ற கலை இலக்கிய அமைப்பை ஏற்படுத்தி பல நூல்களை வெளியிட்டுள்ளார்.
வள்ளுவம் என்ற இதழை நடத்தியுள்ளார். 24 இதழ்களோடு அது நின்று போனாலும் இலக்கிய இதழ்களில் குறிப்பிடத்தகுந்ததாகும்.
தமிழுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள பல்லடம் மாணிக்கம் தமிழைக் காக்க வேண்டுமென்றால் தமிழ் நூல்களைக் காக்க வேண்டும், அவை தமிழறிஞர்களுக்குப் பயன்பட வேண்டும், அதன் மூலம் தமிழ் வளர்க்கவேண்டும் என்கிறார்.
பிரபஞ்சன், சிவகாமி, திலகவதி ஆகிய எழுத்தாளர்களுடனான இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சிகளும், பெண்கள் இலக்கியச் சந்திப்பு-2007 ஆகிய இலக்கிய நிகழ்வுகளும் தமிழ்நூல் காப்பகத்தில் தான் நடைபெற்றன....
எல்லாவற்றுக்கும் மேலாக ஆசியாவிலேயே பெரிய தனிநபர் நூலகமும் இந்தத் தமிழ்நூல் காப்பகம் தான்.
பகிர்வு.... நன்றி JKC ஸார்...
===============================================================================

==============================================================================

=================================================================================



================================================================================

==============================================================================


=====================================================================================

 

நான் படிச்ச கதை

 வீடும் கதவும்

கதையாசிரியர்: இமையம்

பகுதி ஒன்று

முன்னுரை

பாலச்சந்தர் இயக்கத்தில் ‘ஒரு வீடு இரு வாசல்’ என்ற விருதுகள் பெற்ற ஒரு திரைப்படம் 1990இல் வெளி வந்தது. அப்படத்தில் இரண்டு கதைகள். இரன்டுமே ஆணாதிக்கத்தைப் பற்றியது. இடைவேளைக்கு முன் ஒன்று, இடைவேளைக்கு பின் இரண்டாமது. கடைசியில் இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பு விளக்கப்படும். 

 ‘நான் படிச்ச கதை’யில் இன்று இடம் பெறும் இந்த ‘வீடும் கதவும்’ என்ற சிறுகதையும் அப்படிப்பட்டதே. இரண்டு கதைகள். இரண்டையும் இணைக்கும் மூன்றாவது கதையாக மூன்றாவது மனிதர் சொல்வது போல் இந்த கதை அமைந்திருக்கிறது. 

சகுந்தலா, ரேவதி இருவரும் பள்ளி, கல்லூரி தோழிகள்.  படிப்பு முடிந்து வெவ்வேறு திசையில் பறந்து சென்றவர் பல ஆண்டுகளுக்குப் பின் சந்திக்கின்றனர். 

சகுந்தலா தன்னுடைய மகளின் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க ரேவதி வீட்டிற்கு வருகிறார். கணவர், பிள்ளைகள் என்று யாரும் வீட்டில் இல்லாத சூழ்நிலையில் அவர்கள் மீண்டும் இளமைப் பருவத்திற்கு திரும்புகின்றனர். சுதந்திரமாக உரையாடும் போது அவர் அவர்களுடைய கணவர்களின் ஆதிக்கத்தைப் பற்றியும் உரையாடல் திரும்புகிறது. 

சகுந்தலா, அவருடைய கணவர், சகுந்தலாவை ஒரு பெயர் பலகையாக மட்டுமே  வைத்திருக்கிறார் என்ற உண்மையை வாய் தவறி  கூறிவிடுகிறார். அவரது கணவருடைய ஆதிக்கத்தின்  பாதிப்பு உணர்ச்சிகளின் வடிகாலாக வெளி வருகிறது.  

சகுந்தலாவின் கதை முதல் பகுதியாக இன்றைய பதிவில் இடம் பெறுகிறது. ரேவதியின் கதை இரண்டாம் பகுதியாக அடுத்த வாரம் இடம் பெறும். 

கதையின் முக்கியத்துவமே உரையாடல் என்பதால் சுருக்க முடியவில்லை. ஆனாலும் சில விவரங்களை வெட்டியிருக்கிறேன். கதை sirukathaigal.com தளத்திலிருந்து எடுக்கப்பட்டது.


வீடும் கதவும்

பகுதி ஒன்று


பெரியார் நகரில் பாவேந்தர் தெரு முனைக்கு வந்ததும், `அஞ்சாவது வீடுதான். வடக்குப் பார்த்த வீடு’ என நினைவுக்கு வந்த மாதிரி சொன்னாள். ஐந்தாவது வீட்டின் முன்பாக நின்றாள். வீட்டின் தோற்றம், அவள் முன்னர் பார்த்ததற்கும் இப்போதைக்கும் பெரிய மாற்றத்துடன் இருந்தது; குழப்பத்தை உண்டாக்கிற்று. பெயர்ப்பலகை `சபாநடேசன் எம்.ஏ., எம்.எட்., ஆசிரியர்’ என எழுதித் தொங்கவிடப் பட்டிருந்ததைப் பார்த்ததும் `அழைப்பு மணி எங்கே இருக்கிறது எனத் தேடி அழுத்தினாள். அப்போது வெளிநாட்டு நாய் ஒன்று அவளைப் பார்த்து முறைத்தது. நாயைப் பார்த்துப் பயந்தாள். இரண்டாவது முறை மணியை அழுத்தி, சிறிது நேரம் கழிந்த பிறகுதான் கதவைத் திறந்தாள் ரேவதி. சகுந்தலாவைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு “பிரசிடென்ட் மேடம், என்ன திடீர்னு வந்து நிக்கிறாங்க?’’ எனக் கேட்டுச் சிரித்தாள்.

“நாய் எல்லாம் புதுசா இருக்கு?’’

“நாலு அஞ்சு வருஷம் கழிச்சு வந்தா அப்படித்தான். உள்ளாற வா’’ எனச் சொல்லி, சகுந்தலாவின் கையைப் பிடித்து வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள் ரேவதி. சோபாவில் அருகருகே உட்கார்ந்துகொண்டனர்.

“என்ன திடீர்னு வந்து வாசல்ல நிக்கிற… ஒரு போன் பண்ணிட்டு வந்திருக்கக் கூடாது?’’

“நான் உனக்கு போன் பண்ணிட்டுத்தான் வரணுமா?’’ – கோபம் வந்த மாதிரி சகுந்தலா கேட்டாள்.

“ச்சீ கழுதை… நீ எப்ப வேணும்னாலும் வா… போ. திடீர்னு பார்த்ததும் ஆச்சர்யமாப்போச்சு. அதனாலதான் கேட்டேன். என்ன சாப்பிடுற?’’

“ஒண்ணும் வேணாம். உன்கூட உட்கார்ந்து பத்து நிமிஷம் தனியா பேசினா போதும், மனசு நிறைஞ்சிரும்.’’

“காலேஜ்ல படிக்கும்போது விடிய விடியப் பேசினது எல்லாம் மறந்துட்டியாடி கழுதை’’ – ரேவதி உற்சாகமாகச் சிரித்தாள்.

“நீதான் எல்லாத்தையும் மறந்துட்டே. போன் போடுறது இல்லை; நான் போட்டாலும் பேசுறது இல்லை.’’

“நானும் அவரும்தான் வர்றதா இருந்தோம். கிளம்பும்போது திடீர்னு பீ.டி.ஓ ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அதனால ‘நீ போயிட்டு வந்துடு’னு சொல்லிட்டார். அவரோட வந்தா, `கிளம்பு… கிளம்பு’னு நச்சரிப்பார். உன்கிட்ட அஞ்சு நிமிஷம்கூடப் பேச முடியாது. `நீ போயிட்டு வந்துடு’னு சொன்னதுமே `சரி’னு கிளம்பி வந்துட்டேன்’’ – உற்சாகமாகச் சொன்னாள் சகுந்தலா. திடீரென நினைவுக்கு வந்த மாதிரி, “எங்கே… உங்க சாரைக் காணோம்?’’ எனக் கேட்டாள்.சிரித்த ரேவதி, “ `பொண்ணைப் பார்த்துட்டு வர்றேன்’னு மெட்ராஸுக்குப் போயிருக்கார்’’ என்றாள்.

“நீயாவது வீட்டுல இருந்தியே… அதுவே போதும்’’ எனச் சொன்ன சகுந்தலா, ஜவுளிக்கடை பையில் வைத்திருந்த சில்வர் தட்டை எடுத்து அதில் வாழைப்பழம், ஆப்பிள், வெற்றிலை, பாக்கு, பூ, கல்யாணப் பத்திரிகை என ஒவ்வொன்றாக வைத்துக்கொடுத்தாள்.

தட்டை வாங்கிக்கொண்டே ரேவதி, “யாருக்குடி கல்யாணம்? எனக்கு எதுக்கு வெளி ஆள் மாதிரி ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் செய்யுற?’’ எனக் கேட்டாள்.

தட்டை வாங்கி ஓரமாக வைத்துவிட்டு, கல்யாணப் பத்திரிகையை எடுத்துப் பார்த்தாள். ஆச்சர்யப்பட்ட மாதிரி, “நம்ப ரம்யாவுக்கா கல்யாணம்?! போன வருஷம்தான் பி.எட் முடிச்சா. அதுக்குள்ளாற எதுக்குக் கல்யாணம்… சின்னப் புள்ளைதானே? வேலை கிடைச்ச பிறகு செய்ய வேண்டியதுதானே?’’ – அக்கறையுடன் கேட்டாள்.

“சொன்னேன்… கேக்கலை. `வேலை வர்றப்ப வரட்டும். வர்ற எலெக்‌ஷன்ல ஜெயிக்க முடியுமோ… முடியாதோ. பவர்ல இருக்கும்போதே கல்யாணத்தை முடிச்சிடணும். அப்பதான் நல்ல கூட்டம் வரும்; மரியாதையாவும் இருக்கும்’னு சொல்லிட்டார். நானும் `வேலை முடிஞ்சா சரி’னு சொல்லிட்டேன்.’’

“பையன் என்ன பண்றான்?’’ என்று கேட்ட ரேவதி, கல்யாணப் பத்திரிகையைப் பிரித்து மாப்பிள்ளை பெயர் போட்டிருந்த இடத்தைப் பார்த்தாள்.

“இன்ஜினீயரா… நல்ல கம்பெனியிலதான் வேலைபார்க்கிறான். இன்ஜினீயருக்கு இன்ஜினீயர் பொண்ணுதானே பார்ப்பாங்க?’’ எனக் கேட்டாள்.

“முன்னதான் அப்படி. இப்ப இன்ஜினீயர், டாக்டருக்குப் படிச்சவன் எல்லாம் டீச்சருக்குப் படிச்ச பொண்ணா இருந்தா பரவாயில்லைனு சொல்லி அலையுறானுவ’’ – சகுந்தலா சிரித்தாள்.

“சொந்தமா?’’

“பிறத்திதான். பீ.டி.ஓ ஆபீஸ்ல வேலை பார்க்கிறவரோட சொந்தக்காரப் பையன். அவருக்குப் பிடிச்சிருச்சு… முடிச்சிட்டார்.’’

“உனக்குப் பிடிக்கலையா?’’

ரேவதி கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல், “நான் முன்னாடி வந்தப்ப இருந்ததைவிட வீடு ரொம்ப மாறியிருக்கு’’ – வீட்டை ஒரு பார்வை பார்த்தாள்.

“ரெண்டு வருஷத்துக்கு முன்னாடிதான் மேல்மாடி கட்டினேன். தரையையும் மாத்திட்டேன். வீட்டை கொஞ்சம் ஆல்ட்டர் செஞ்சேன். நீ அடிக்கடி வந்தாத்தானே தெரியும்!’’ – கோபித்துக்கொண்டாள் ரேவதி.

“நான் உன்னைப் பார்க்க வந்து மூணு நாலு வருஷம் இருக்குமா?’’

“இருக்கும். மேடம் ரொம்ப பிஸிதான். பிரசிடென்ட் ஆகிட்டில்ல. அப்படித்தான் இருப்ப. அதிகாரத் திமிருடி உனக்கு’’ – சகுந்தலாவின் தொடையில் லேசாக அடித்தாள்.

“பசங்க எப்படி இருக்காங்க?’’

“பையன் முன்னாடியே வேலைக்குப் போயிட்டான். உனக்குத் தெரியும். பொண்ணு இப்பதான் வேலைக்குப் போனா. ஆறு மாசம் இருக்கும். பழைய காலம் மாதிரி இல்லை. இன்ஜினீயரிங் படிச்சவங்களுக்கு இப்ப வேலை கிடைக்கிறது ரொம்பக் கஷ்டமா இருக்கு. `இன்ஜினீயரிங் ஏன் படிக்கவெச்சோம்?’னு இருக்கு. டீச்சருக்குப் படிக்கவெச்சிருக்கலாம். சம்பளமும் அதிகம்; வேலையும் கம்மி’’ என ஆரம்பித்த ரேவதி, தன் மகன் எப்படிப் படித்தான், எப்படி வேலைக்குப் போனான், எவ்வளவு கஷ்டப்படுகிறான் எனச் சொல்ல ஆரம்பித்தாள்.

 பிறகு, கல்லூரியில் படித்ததைப் பற்றி சொல்ல ஆரம்பித்ததும், சகுந்தலாவும் சேர்ந்துகொண்டு கல்லூரி நண்பர்கள், பேராசிரியர்கள் பற்றி பேச ஆரம்பித்தாள். இருவரும் மாறிமாறி தங்களுடைய கல்லூரிக் காலத்தைப் பற்றி பேசினார்கள். நேரம் பற்றிய கவனம் இருவரிடமும் இல்லை. ஏதோ நினைவுக்கு வந்தமாதிரி “நான் கிளம்பட்டுமா?’’ சகுந்தலா கேட்டாள்.

“அதுக்குள்ளாற என்ன அவசரம்?’’

“நேரமாகிருச்சு.’’

“ஒரு நேரமும் ஆகலை. புருஷன் – பிள்ளைனு இல்லாம இன்னிக்கித்தான் அதிசயமா ரெண்டு பேரும் ஒண்ணா உட்கார்ந்து பேசிக்கிட்டிருக்கோம். அதுக்குள்ளாற போறாளாம்’’ – சகுந்தலாவின் தலையில் கொட்டிய ரேவதி, “என்னடி… தலையில பாதி முடியைக் காணோம்?’’ எனக் கேட்டாள்.

“வயசாகுதுல்ல. சரி… நான் கிளம்புறேன்.’’

“பிரசிடென்ட்டுங்கிற திமிர்ல பேசுறியாடி நாயே..?’’

“பிரசிடென்ட்டுதான். ஆனா, எப்பவும்போல சோறுதான் ஆக்குறேன்; துணிதான் துவைக்கிறேன்; வீட்டு வேலைதான் செய்றேன்’’ – சகுந்தலா சிரிக்க முயன்றாள். ஆனால், சிரிப்பு வரவில்லை.

“ரெண்டு பீரியடுதானே ஜெயிச்ச?’’ சந்தேகப்பட்டது மாதிரி ரேவதி கேட்டாள்.

“ம்’’ என சகுந்தலா தலையை மட்டும் ஆட்டினாள். சகுந்தலாவின் முகம் வாடிப்போனதைப் பார்த்த ரேவதி கேட்டாள்…

“என்னாச்சு… எதுக்கு அவ்வளவு சலிப்பா சொல்றே?’’

“பிரசிடென்ட்டுதான். ஒன்பது வருஷம் முடிஞ்சுபோச்சு. பீ.டி.ஓ ஆபீஸ், கலெக்டர் ஆபீஸ்னு இதுவரை நான் எங்கேயும் அதிகம் போனது இல்லை. அவர்தான் போவார்… வருவார்’’ – சொல்லிவிட்டு அடுத்த சோபாவில் கிடந்த நாய் பொம்மையைப் பார்த்தாள். அது தன்னையே பார்ப்பது மாதிரி அவளுக்குத் தோன்றியது.

“என்னடி சொல்ற சகுந்தலா?!’’ – ஆச்சர்யமாகக் கேட்டாள் ரேவதி.

“நிசம்தான்.’’

“ஊராட்சி மன்ற அலுவலகம்னு இருக்குமே… அங்கேயாச்சும் நீ போயிருக்கியா?’’

“இல்லை.’’

“ஒரு நாள்கூடப் போனது இல்லையா?’’ – சகுந்தலா சொன்னதை நம்பாத மாதிரி கேட்டாள் ரேவதி.

“பொய்யா சொல்றேன்… போனது இல்லை. இந்த ஒன்பது வருஷத்துல, பிரசிடென்ட் நாற்காலியில நான் உட்கார்ந்ததுகூட இல்லை’’ – சிரித்தாள் சகுந்தலா. அதில் அவளுக்கு மகிழ்ச்சியும் இல்லை… வருத்தமும் இல்லை.

“ஆச்சர்யமா இருக்கு’’ – ரேவதிக்கு, குரல் மாறிவிட்டது. சகுந்தலா சொல்வதை அவளால் நம்ப முடியவில்லை. கிண்டலாகக் கேட்டாள்…

“கையெழுத்தாவது நீ போடுவியா?’’

“இல்லை.’’

“பொய் சொல்லாதேடி.’’

“அவர்தான் போடுவார்.’’

“உன் கையெழுத்தையா?’’ – நம்ப முடியாத விஷயத்தைக் கேட்ட மாதிரி வாய் அடைத்துப்போனாள் ரேவதி. “அதிசயம்தான்!’’ எனச் சொல்லிவிட்டு சகுந்தலாவின் முகத்தைப் பார்த்துக் கேட்டாள், “நூறு நாள் வேலைத் திட்டம், கட்டடம் கட்டுறது, ரோடு போடுறது, தெருவிளக்குப் போடுறதுனு பணம் வருமே… அதை எல்லாம் யார் எடுப்பா?’’

“அவர்தான்.’’

“கவர்மென்ட் பணம், செக்காத்தானே வரும்?’’

“செக்கை அவரே மாத்திடுவார்.’’

“சத்தியமா?’’

“ஆமான்டி. இதுல புதுசா என்ன இருக்கு… நூத்தியெட்டு கேள்வி கேக்குறே?’’

“யாரும் கேக்க மாட்டாங்களா?’’

“எதுக்கு?’’

“கையெழுத்துப் போடுறதுக்கு, தலைவர் ஸீட்டுல உட்கார்றதுக்கு.’’

“பீ.டி.ஓ ஆபீஸ்லையும் சரி, பள்ளிக்கூடம், பேங்க்னு எங்க போனாலும் அவரைத்தான் `தலைவர்’னு சொல்வாங்க தெரியுமா?’’ – வாய்விட்டுச் சிரித்தாள் சகுந்தலா.

“சத்தியமா?’’ – சகுந்தலா சொல்கிற விஷயங்களில் ஒன்றைக்கூட ரேவதியால் நம்பமுடியவில்லை.

“பொம்பளை பிரசிடென்ட், கவுன்சிலர், சேர்மனா இருக்கிற இடங்கள்ல எல்லாம் இப்படித்தான் நடக்கும். இது ஊரு உலகத்துக்கே தெரியும். ரகசியம் ஒண்ணும் இல்லை. பள்ளிக்கூடத்துல கொடி ஏத்தக்கூட அவர்தான் போவார் தெரியுமா? யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க.’’

“நீ என்னதான் செய்வ?’’ – கிண்டலாகக் கேட்டாள்.

“நாமினேஷன் கொடுக்கும்போது கூடப் போவேன். அப்புறம் கவுன்ட்டிங்குக்குப் போவேன்’’ – சகுந்தலா வாய்விட்டுச் சிரித்தாள்.

“நீ ஒண்ணும் கேக்க மாட்டியா?’’

“என்ன கேக்குறது? அவர்தான் 24 மணி நேரமும் அலயுறார்; பணம் புரட்டுறார்; ஊரு ஆளுங்களை எல்லாம் சரிகட்டுறார்; பிராந்தி வாங்கித் தரார். என்னால இதெல்லாம் செய்ய முடியுமா?’’ – லேசாகச் சிரித்த சகுந்தலா சட்டென உற்சாகமாகி, “ஊரு சனங்க திட்டுறதையும் வாங்கிக்குவார். சங்கடப்பட மாட்டார்’’ என்று சொன்னாள்; சிரித்தாள்.

“கஷ்டம்தான்’’ எனச் சொன்ன ரேவதி, “கூல்டிரிங்க் குடிக்கிறியா?’’ – சகுந்தலா என்ன பதில் சொல்கிறாள் எனக் கேட்காமல் எழுந்து போய் ஃப்ரிட்ஜைத் திறந்து சாக்லேட் டப்பாவை எடுத்து வந்து கொடுத்தாள். ஒரு சாக்லேட்டை எடுத்து வாயில் போட்டு மென்று தின்ற சகுந்தலா, “நான் கிளம்பட்டுமா?’’ எனக் கேட்டாள்.

“அதெல்லாம் முடியாது. இன்னொரு சாக்லேட் எடுத்துக்க. நீ சொல்ற எதையும் என்னால நம்பவும் முடியல… நம்பாம இருக்கவும் முடியல’’ எனச் சொன்னாள்.

“இதெல்லாம் ரொம்ப சாதாரணம்.”

எப்பவும்போல என் வேலை என்னவோ அதைச் செஞ்சுக்கிட்டு இருக்கேன்.’’

“சரி… ஓட்டுக் கேட்கவாவது நீ போனியா… இல்லியா?’’

மொட்டையாகச் சொன்னாள், “இல்லை.’’

“அப்படியா… நிசமாவா?’’ – கேட்டதையே திரும்பத் திரும்பக் கேட்டாள். சகுந்தலா எவ்வளவு சொல்லியும் ரேவதி நம்பவில்லை.

“அப்புறம் எப்படி ரெண்டு முறை ஜெயிச்சே?’’

“உள்ளூர்தானே… அவர் பார்த்துக்குவார்.’’

சகுந்தலாவின் முகம், கை கால்கள், கட்டியிருந்த புடவை என ஒவ்வொன்றாகப் பார்த்த ரேவதி, “என்னடி… இவ்வளவு நரைச்சிப்போச்சு? சாட்டைசாட்டையா நீட்டுநீட்டா முடி இருக்கும். எல்லாம் கொட்டிப்போயி எலி வாலாட்டம் இருக்கு. தலைமுடியை வெச்சுக்கிட்டுத்தானே காலேஜ்ல பெரிய ராணி மாதிரி சுத்தின? எல்லாப் பயலையும் உன் பின்னாடி சுத்தவுட்ட?’’ எனச் சொல்லிவிட்டு, சகுந்தலாவின் சடையை எடுத்துப் பார்த்தாள்.

லேசாகச் சிரித்த சகுந்தலா சொன்னாள்… “வயசாவுதுல்ல… நீயும் நானும் காலேஜ்ல படிச்சு 25 வருஷமாகிருச்சு தெரியுமா? நீ டீச்சர்… டை அடிப்ப.’’

தலைக்கு டை அடிக்கிற விஷயத்தை சகுந்தலா சொன்னதும் பேச்சை மாற்றினாள் ரேவதி.

“உங்க வீட்டுக்காரர் நல்ல ஆளுதானே?’’

“எத்தனை வருஷம் கழிச்சுக் கேக்குற? எலெக்‌ஷன்ல நின்னதில் இருந்துதான் குணம் கெட்டுப்போயி நிக்கிறார். ஊரு ஆளுங்களுக்கு பிராந்தி வாங்கிக்கொடுக்கிறேன்னு ஆரம்பிச்சு, இப்ப அவரும் தினம் குடிக்கிறார். வர்ற எலெக்‌ஷன்ல எங்க யூனியன், பொம்பளைக்குனு மாறப்போவுதாம். அதனால அடுத்த முறை சேர்மனுக்கு நிக்கணும். அதுக்கு கவுன்சிலர் ஆவணும்னு இப்பவே மூணு ஊர்ல ‘கட்சிப் பக்கமே ஓட்டு போடுங்க. ஊருக்கு இவ்வளவுனு மொத்தமா பணம் தர்றேன். காலனிக்கும் ஊருக்கும் தனித்தனியா கோயில் கட்டித் தர்றேன்’னு பேசிக்கிட்டிருக்கார்; பிராந்தி வாங்கித்ந்துக்கிட்டிருக்கார்.’’

“இந்த மாதிரி வர்ற பணத்துல கோயில் கட்டலாமா?”

“ஊரு உலகத்துல எல்லாம் அப்படித்தானே நடக்குது?”

“ `நான் நிக்க மாட்டேன்’னு சொல்ல வேண்டியதுதானே?’’ – அக்கறையுடன் சொன்னாள் ரேவதி.

“சொன்னா கேட்டாதானே? பிரசிடென்டுக்கு நின்னாலும், கவுன்சிலருக்கு நின்னாலும் நான் சும்மாதானே? பேருக்குத்தான் என் பேரு. `பிரசிடென்ட்’னும் `கவுன்சிலர்’னும் அவரைத்தானே கூப்பிடுறாங்க. சாராய போதையைவிட அதிகாரப் போதை பெருசு தெரியுமா?’’

“ஆச்சர்யமா இருக்கு. மத்த பொம்பளை பிரசிடென்ட் எல்லாம் எப்படி?’’

“பி.எஸ்ஸி படிச்ச எனக்கே இந்த நிலைமைன்னா, படிக்காத, பத்தாவது, பன்னிரண்டாவது படிச்ச பொம்பளைங்க எப்படி இருப்பாங்க… வெறும் பேருதான்” – சகுந்தலா சத்தம்போட்டுச் சிரித்தாள்.

“நீ சொல்ற எதுவும் எனக்குப் புரியல. இரு வர்றேன்’’ எனச் சொல்லிவிட்டு எழுந்து சமையலறைக்குச் சென்றாள். அடுப்பைப் பற்றவைத்தாள். பால் குண்டானை எடுத்து அடுப்பில் வைத்தாள். ஃப்ரிட்ஜில் இருந்த பாலை எடுத்து ஊற்றிக் கொதிக்கவைத்தாள்.

சகுந்தலா ரேவதிக்குப் பக்கத்தில் வந்து நின்றுகொண்டு, “உங்க சார் எப்படி இருக்கார்… எப்ப வருவார்?’’ எனக் கேட்டாள்.

“நல்லா இருக்கார்’’ என அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள்.

“எதுக்கு இழுத்தாப்ல சொல்றே?’’

“ஒண்ணும் இல்லை’’ ரேவதியின் முகம் கோணிற்று. அதைப் பார்த்த சகுந்தலா, “எனக்குத் தெரிஞ்சு உங்க சார் நல்லவர்தான்டி’’ எனச் சொன்னாள்.

“ஆமா… ஆமா…’’ – அழுத்தமாகச் சொன்னாள். பிறகு சிரித்தாள். அவளுடைய சிரிப்பில் உயிர் இல்லை. கொதித்துக்கொண்டிருந்த பாலின் மீது டீத்தூளைக் கொஞ்சம் போட்டாள். பொங்கிவிடாமல் இருக்க அடுப்பைக் குறைத்துவைத்தாள்.

எதுவும் பேசாமல் அமைதியாக இருந்த ரேவதியைப் பார்த்த சகுந்தலா, கேலியாகச் சொன்னாள், “நம்ம ரூம்மேட்லயே நீதான் அழுத்தம் பிடிச்சவ. எதையும் வெளியே சொல்ல மாட்டே. என்னை மாதிரி ஓட்டைவாயும் இல்லை. `நீ பெரிய திருடி’னு நம்பகூடப் படிச்ச எல்லாருக்குமே தெரியும்’’ – கலகலவெனச் சிரித்தாள். ரேவதியும் சிரித்தாள். ஆனால், சத்தம் வெளியே வரவில்லை.
டீ நன்றாகக் கொதித்துவிட்டது தெரிந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, டீயை வடிக்கட்டினாள் ரேவதி. சர்க்கரை போட்டாள். இரண்டு மூன்று முறை நன்றாக ஆற்றி, இரண்டு டம்ளர்களில் ஊற்றினாள். ஒரு டம்ளரை எடுத்து சகுந்தலாவிடம் கொடுத்தாள்.

“மத்தவங்க டீ போட்டு தந்து, அதை வாங்கிக் குடிக்கிறப்ப இருக்கிற சுகமே தனிதான்’’ எனச் சொல்லிவிட்டு டீயை ஒரு வாய் குடித்தாள். பிறகு சிரித்துக்கொண்டே, “உனக்கு ஒண்ணும் சர்க்கரை வியாதி இல்லையே?’’ எனக் கேட்டாள்.

“இருக்கு… நீ வந்ததால சர்க்கரையைக் குறைச்சிப்போட மறந்துட்டேன்.’’

“அதானே பார்த்தேன். வாத்தியார், பேராசிரியர்களுக்கு எல்லாம் சர்க்கரை வியாதி இல்லாம இருக்காதே” – சகுந்தலா சிரித்தாள்.

“மகளுக்குக் கல்யாணம் கட்டப்போற. ஆனா, உனக்கு அந்தக் காலத்துல இருந்த குசும்புப் பேச்சு மட்டும் இன்னும் போகலை. கழுதை’’ – ரேவதி சிரித்தாள்.

தொடரும்….

 

15 கருத்துகள்:

  1. இமையம் (அண்ணாலை) அவர்களின் கோவேறு கழுதைகள் நாவலை வாசித்திருக்கிறேன். அவர் சாகித்ய அகாதமி விருது பெற்ற காலத்தில் அந் நாளைய அவர் எழுத்து நடையில் வேறு சில சிறுகதைகளையும் வாசித்திருக்கிறேன்.
    ஜெஸி ஸாரின் கதை சுருக்க ஆரம்பமே பெரியார் நகர், பாவேந்தர் தெரு முனை என்று ஆரம்பித்ததைப் பார்த்து பயந்து தான் வாசிக்க ஆரம்பித்தேன். நல்ல வேளை நான் நினைத்தது மாதிரி இல்லை.

    பதிலளிநீக்கு
  2. சில செய்திகள் இருமுறை இடம் பெற்றிருக்கின்றன. நூலகம் செய்தியில் பாதியும், ஆட்டோவில் தவறவிட்ட பணம் செய்தியும்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
  3. ஆரம்பப் பகுதி அசாத்திய இழுவையாக இருந்தாலும் பொம்மைப் பெண்டாட்டியாய் இருப்பதில் ஒருவிதப் பெருமை கொண்டிருப்பது போலவே சகுந்தலாவின் உரையாடல் அமைந்திருந்தது. பொதுவாக
    இந்த மாதிரி பொம்மை மனைவிகள் பற்றி பெண்கள் மத்தியில் என்ன கருத்து கொண்டிருப்பார்கள் என்று தெரியவில்லை.
    'நான் எதுக்கும் அல்லாடத் தேவையில்லை. ரொம்ப நிம்மதி. எல்லாம் அவர் பார்த்துப்பார்' என்று
    எனக்குத் தெரிந்த பல
    பெண்கள் சொல்லிக் கேட்டிருப்பதால் இந்த
    கேள்வி மனத்தில் உதித்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //'நான் எதுக்கும் அல்லாடத் தேவையில்லை. ரொம்ப நிம்மதி. எல்லாம் அவர் பார்த்துப்பார்' என்று எனக்குத் தெரிந்த பல பெண்கள் சொல்லிக் கேட்டிருப்பதால்//
      நிஜ சுஜாதா கணவர் சுஜாதாவைப் பற்றி ஒரு பேட்டியில் இதே போன்று கூறியுள்ளார். வெளி பொறுப்புகள் முழுவதும் சுஜாதா என்ற ரங்க ராஜன் பார்த்துக்கொள்ள, வீட்டுப் பொறுப்பு மட்டும் சுஜாதா பார்த்துக் கொள்வார். ஆனால் தற்போது நிலைமை தலைகீழ்.
      என்னுடைய வீட்டில் வெளிவேலைகளையும் அதிகம் படிக்காத என்னுடைய மனைவி தான் செய்தார். பிள்ளைகளை பள்ளியில் சேர்த்து, வீடு கட்ட தேவையான அனுமதி பெற அலுவலகங்களுக்கு சென்றது, வீடு கட்டும்போது மேற்பார்வை, மற்றும் உடனடி தேவைகளாக சில பொருட்கள் வாங்கி தந்தது, தினமும் கான்கிரீட்டிற்கு தண்ணீர் ஊற்றுவது போன்ற அவருடைய உழைப்பும் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது.
      Jayakumar​

      நீக்கு
  4. 30 வருடங்களாக, நூற்றுக்கணக்கான வறட்சியில் கைவிடப்பட்ட கால்நடைகளைப் பாதுகாத்து வரும் ஷபீர் சையத் - உயர்ந்து நிற்கிறார். அவருக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள். கால்நடைகளைப் பாதுகாத்து வருவது என்பது எளிதான காரியமல்ல.

    கதிரியக்கப் பாதுகாப்பு கவச உடை, மற்றும் நிக்கோட்டினால் ஏற்படும் பாதிப்புக்குத் தீர்வு இவற்றிற்குக் காப்புரிமை - மதுரை மருத்துவருக்கும், ராமச்சந்திரா மருத்துவமனை ஆய்வாளர்களுக்கும் வாழ்த்துகள்.

    வெள்ள சமயத்தில் பெரும்சேவை செய்த ஸ்ரீவைகுண்டம் மருத்துவர் நித்யாவிற்கு நம் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    கேரள போலீஸீன் மனிதாபிமான செயல் பாராட்டிற்குரியது. மிகவும் பொறுப்புடன் செயல்பட்டிருக்கிறார்கள்!

    விருத்தாச்சலம் தனியார் நூலகம் - இப்போதுதான் தெரியவருகிறது பிரமிப்பு இத்தனை பெரிய நூலகம் என்பது. புலவர் பல்லடம் மாணிக்கம் அவர்களுக்குப் பாராட்டுகள் வாழ்த்துகள்! மிகவும் பிரமிப்பாக இருக்கிறது.

    ஆட்டோவில் தவறவிட்ட பணம் மீட்பு - இரு முறை வந்திருக்கிறது என்றாலும் அதுவும் நல்லதே பாருங்க இரண்டிலும் ஒரே செய்தியில் சொன்ன விதத்தில் எவ்வளவு வித்தியாசம் பாருங்க அதுவும் அமௌன்ட் வெவ்வெறு!!!!

    இப்படி passing on secret விளையட்டைப் போல செய்திகள் அதுவும் முக்கியமான செய்திகள் வரும் போது மீடியாவைக் குறித்த நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிறது.

    முத்துக்காளைக்கு வாழ்த்துகள்! இவரைப் போலவே நகைச்சுவை மற்றும் கேரக்ட்டர் ரோல் செய்த நடிகர் சார்லியும் கூட முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. இமையம் அவர்களின் கதைகள் இதுவரை வாசித்ததில்லை, ஜெ கே அண்ணா.

    சகுந்தலா டம்மி என்பது உரையாடல்களில் தெரிகிறது. இது கொஞ்சம் முந்தைய காலமோ? அவருடைய ஆதங்கம் தெரிகிறது. ஆனால் அது நேரடியாகத் தெரியவில்லை. பேச்சோடு பேசாகச் சொல்கிறாள். சில பெண்கள் கணவர் பொறுப்புகளைப் பார்த்துக் கொண்டுவிட்டால் சந்தோஷப்படுவார்கள். பெருமையாகச் சொல்லிக் கொள்வதும் உண்டுதான்.

    ஆனால் நான் அறிந்த வரையில் அதாவது என் தலைமுறையில், பெண்கள் வீட்டு நிர்வாகத்தைக் கவனித்துக் கொண்டு, பட்ஜெட் போட்டு, சீட்டுகட்டி சேமித்து கணவன் சம்பாதிக்கும் சம்பளத்தில் சிக்கனமாகச் செல்வழித்து, நாட்டின் பொருளாதார அமைச்சர்களை விட மிகத் திறமையாக;ச் செய்வதை பார்த்து வருகிறேன். கணவருக்கு எந்தவித சங்கடமும் இருக்காது. வேலைக்குச் செல்லும் பெண்கள் உட்பட.

    கதையை வாசித்து வந்தப்ப சகுந்தலாவின் கணவர்தான் பதவியில் இருக்கிறார் என்று நினைத்தேன் ஆனால் பின்னர் தெரிகிறது சகுந்தலாதான் பதவியில் இருப்பதும் ஆனால் டம்மியாக இருப்பதும்.

    //அவருக்குப் பிடிச்சிருச்சு… முடிச்சிட்டார்.’’

    “உனக்குப் பிடிக்கலையா?’’

    ரேவதி கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல், “நான் முன்னாடி வந்தப்ப இருந்ததைவிட வீடு ரொம்ப மாறியிருக்கு’’ – வீட்டை ஒரு பார்வை பார்த்தாள்.//

    இதில் கூட அவளுக்கு உரிமையோ அவளத்து கருத்தோ இல்லை என்பது தெரிந்துவிடுகிறது. டம்மி பீஸ் என்பதை விட மனைவி பெண் என்பவளுக்குக் கொடுக்க வேண்டிய அடிப்படை மரியாதை கூடக் கொடுக்காத கணவன் என்பது தெரிகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதில் கூட சகுந்தலா நேரடியாகப் பதில் சொல்ல வில்லை பேச்சை மாற்றுகிறாள். அடுத்த பகுதி வரும் போதுதான் இன்னும் கதையைப் பற்றித் தெரியவரும் என்று நினைக்கிறேன்.

      கீதா

      நீக்கு
  6. கதிரியக்கப் பாதுகாப்பு கவச உடை மிகவும் அவசியம் மருத்துவர்களுக்கு அதை தயார் செய்த பேராசிரியர் திரு செந்தில் குமார் அவர்களுக்கு நன்றி பாராட்டுக்கள்.

    கால்நடை பராமரிப்பில் உதவும் ஷபீர் சையத் அவர்களுக்கு வாழ்த்துகள், பாராட்டுக்கள்.
    பெரிய தனியார் நூலகம் எல்லோருக்கும் பயன் அளிக்கும்.


    பதிலளிநீக்கு
  7. “பிரசிடென்ட்டுதான். ஆனா, எப்பவும்போல சோறுதான் ஆக்குறேன்; துணிதான் துவைக்கிறேன்; வீட்டு வேலைதான் செய்றேன்’’ – சகுந்தலா சிரிக்க முயன்றாள். ஆனால், சிரிப்பு வரவில்லை.//

    சகுந்தலாவின் நிலை!

    யதார்த்த கதை. இருவரும் நெருங்கிய தோழிகள் என்று சொல்லப்படும் கதையில் இருவருக்கும் அப்படியான நெருக்கம் உரையாடல்களில் இல்லையே என்று தோன்றுகிறது.

    சிறுகதைகள்.காம் சென்று முழுக் கதையையும் வாசிக்க வேண்டும்...ஒரு வேளை அடுத்த பகுதியில் வருமோ..பார்க்க வேண்டும்

    எழுத்தாளரைப் பற்றி ஜீவி அண்ணா சொல்லியிருப்பதைப் பார்த்து இணையத்திலும் அவரைப் பற்றிப் பார்த்தேன். சாகித்ய அகாடமி விருது பெற்ற அப்படியான எழுத்தாளரின் எழுத்தா, அவர் எழுதிய கதையா என்று வியக்க வைக்கிறது. யோசிக்கவும் வைக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. கதை இரு பெண்களின் மனநிலையை பகிர்ந்து கொண்டது.

    //பி.எஸ்ஸி படிச்ச எனக்கே இந்த நிலைமைன்னா, படிக்காத, பத்தாவது, பன்னிரண்டாவது படிச்ச பொம்பளைங்க எப்படி இருப்பாங்க… வெறும் பேருதான்” – சகுந்தலா சத்தம்போட்டுச் சிரித்தாள்.//

    இப்போது உள்ள பெண் கவுன்சிலர்கள் நிலை பதவியில் பேருக்கு அவர்கள் இருப்பார்கள் அவர்கள் கணவர் தான் எல்லாம் பார்த்து கொள்கிறார்கள். என்று பரவலாக பேச படுகிறது. விதிவிலக்குகள் இருக்கலாம்.

    //சொன்னா கேட்டாதானே? பிரசிடென்டுக்கு நின்னாலும், கவுன்சிலருக்கு நின்னாலும் நான் சும்மாதானே? பேருக்குத்தான் என் பேரு. `பிரசிடென்ட்’னும் `கவுன்சிலர்’னும் அவரைத்தானே கூப்பிடுறாங்க. சாராய போதையைவிட அதிகாரப் போதை பெருசு தெரியுமா?’//

    உணமை தான்.

    சகுத்தலாவை அவர் கணவர் செயல்பட விடாமல் தானே எல்லாம் செய்வது அதிகாரம் தன் கையில் இருக்க வேண்டும் என்ற ஆசையினால் தான் என்று புரிகிறது. அந்த தொகுதியில் பெண்களுக்கு என்று இடம் ஒதுக்கபட்டு இருக்கும் போது இப்படித்தான். நடந்து கொள்வார் அவர்.

    //ஒண்ணும் இல்லை’’ ரேவதியின் முகம் கோணிற்று. அதைப் பார்த்த சகுந்தலா, “எனக்குத் தெரிஞ்சு உங்க சார் நல்லவர்தான்டி’’ எனச் சொன்னாள்.

    “ஆமா… ஆமா…’’ – அழுத்தமாகச் சொன்னாள். பிறகு சிரித்தாள். அவளுடைய சிரிப்பில் உயிர் இல்லை. //

    ரேவதிக்கும் தன் தோழியிடம் கணவரைபற்றி புலம்ப விஷயம் இருக்கிறது என்று தெரிகிறது. அடுத்தவாரம் தெரியும்.

    பதிலளிநீக்கு
  9. கதையை படித்தவர்களுக்கும், படித்து கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி. இரண்டாம் பகுதி வாசித்தபின் தான் முழுமையான விமரிசனம் செய்ய முடியும். பொறுப்பதற்கு நன்றி.
    Jayakumar

    பதிலளிநீக்கு
  10. எபியைப் பொறுத்த மட்டில் எந்தப் பதிவிற்கும் அதிகபட்சமாக ஆரம்பித்து வைக்கும் பின்னூட்டத்தை ஒட்டியே தொடர்கிறவர்களின் பின்னூட்டங்களும் அமைந்து விடுகின்றன. இந்தப் போக்கு மாறி ஒவ்வொருவரும் ஒன்றை வாசித்ததின் அடிப்படையில் தனக்கு என்ன தோன்றுகிறதோ அதைப் பதிந்தால் சிறப்பாகவும் புதுப்புதுப் பார்வைகளைக் கிளர்த்துவதாகவும் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  11. ரேவதி தன் சொந்தப் புராணத்தை ஆரம்பிக்கட்டும். இந்தக் கதை களைகட்டும் தான்.
    இருந்தாலும் சகுந்தலாவின் பார்வையில் அவர் கணவர் என்றால் அதற்கு மாற்றாக ரேவதியின் கணவர் பார்வையில் ரேவதி என்றிருந்தால் இன்னும் கலகலப்பாக நன்றாக இருக்கும்.
    பதிவுகளில் கூட கணவர் பார்வையில் அவர் மனைவியின் குணாம்சங்கள் என்பது பெரும்பாலும் காணக் கிடைப்பதில்லை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!