புதன், 8 மே, 2024

வெள்ளையன் என்று ஒரு நரி!

 

நெல்லைத்தமிழன்:

பாடலை ரசிக்க இசை முக்கியமா, பாடல் வரிகள் முக்கியமா இல்லை பாடுபவர் முக்கியமா?  

# பாடல் என்று வந்தால், எல்லாமே முக்கியம்தான்.  என்றாலும் கூட, வாத்திய இசையையும் ரசிக்கிறோம் என்பதால், சொல் பொருள் இவற்றுக்கு இரண்டாம் இடம் என்று சொல்லலாம்.  அப்போது கூட, " அந்த சொல் பொருள் இரண்டும் நினைவுக்கு வருவதால்தான் முழு ரசனை " என்றும் சொல்லலாம் இல்லையா ? இசை, வரிகள், பொருள் இவற்றின் கலவை மட்டும் இல்லாமல் பாடுபவர் உணர்வும் , கேட்பவர் மன நிலையும் சரியான விகிதத்தில் அமைந்தால் தான் பூரண ரசனை.

& இசை அமைத்தவர்,  வரிகள்எழுதியவர், பாடுபவர் எல்லோரையும் விட கேட்பவர்தான் முக்கியம். கேட்பவர் ஔரங்க சீப் என்றால் இசை, பாடல், பாடுபவர் எல்லோருக்கும் கசையடிதான்! 

இந்தவருடம் மாம்பழ விளைச்சல் குறைவாமே! ஏற்கனவே பலாப்பழம் விலை ஏறி வரத்து குறைந்துள்ளதே கவலையாயிருக்கு.

# விளைச்சல் குறைந்தால் என்ன , விலை ஏறினால் என்ன, அந்தந்த சீசனுக்கு மா, பலா என்று ரசிக்கத்தான் செய்கிறோம்.

& மாம்பழம், பலாப்பழம் பற்றி எல்லாம் சரியான நிலை ஜூன் 4 க்குப் பிறகுதான் தெரியும்! (அன்புமணி & ஓ பி எஸ் !) 

பங்கனப்பள்ளி மாங்காய் மாம்பழத்தைவிட எனக்குப் பிடிக்கும். பங்கனப்பள்ளி மாங்காய்கள் விற்பதைப் பார்த்திருக்கிறீர்களா?  மாம்பழமே டிமான்டில் இருக்கும்போது ஏன் கல் வைத்துப் பழுக்க வைத்து ரிஸ்க் எடுக்கிறார்கள்?

# எனக்கு பங்கனபள்ளி காய் பற்றித் தெரியாது. கல் வைத்துப் பழுக்க வைப்பது பற்றி முன்பே பேசி இருக்கிறோம்.  வேகமாக சந்தைக்கு அனுப்ப வேண்டும், கொஞ்சம் முதிராத காயாக இருந்தாலும் பழம் போல ஆக்கி விற்கலாம் என்பதே தூண்டுதல் . சீசனில் முன் வரிசையில் இடம் பிடிக்கும் வேகம். 

& மாம்பழங்களில் மட்டுமே என்ன வெரைட்டி என்று பார்ப்பேன். மாங்காய் என்றால் பார்ப்பது இல்லை. 

நீங்கள் தியேட்டருக்குச் சென்று கடைசியாகப் பார்த்த திரைப்படம் எது?

# பொன்னியின் செல்வன் பாகம் 1.

& எவ்வளவோ வருடங்கள் ஆகிவிட்டன! பத்து வருடங்களுக்கு முன்பு பையன் & பேரனுடன் பெங்களூர் மல்டிப்ளெக்ஸ் தியேட்டர் ஒன்றில் ஏதோ ஒரு 3 D குழந்தைகள் படம் பார்த்தேன் என்று நினைக்கிறேன். படம் பெயர் மறந்துபோய்விட்டது. 

யூடியூப் பார்த்து சமையல் கத்துக்கொள்ளலாம் என்று இளம் தலைமுறை நினைத்தால், பாரம்பர்ய வீட்டுச் சமையல் முறை அடுத்த தலைமுறைகளுக்குத் தொடராமல் போய்விடும் அபாயம் இருக்கிறதே. இந்த யூடியுப் சமையல் முறைகளால் நன்மையா தீமையா?

# யூடியூபிலும் அம்மா பாட்டி சொல்லிக் கொடுத்த பாரம்பரிய சமையலைத்தானே சொல்லுகிறார்கள் ? ஆங்காங்கு சில புதுமைகள் செய்யலாம் என்பதைத் தவிர அடிப்படையில் நமது பாரம்பரிய  சாம்பார், வற்றல் குழம்பு , பிரியாணி, தோசை, ஊத்தப்பம் இது எதுவும் மாறப் போவதில்லை அல்லவா ?

= = = = = = = = =

KGG பக்கம் :

கிராமத்து அனுபவங்கள்: 

மாலை நேரம் முழுவதும் எங்கள் கிராமத்தின் ஆறு - 'பாண்டவ ஆறு' என்று பெயர் - கோடை காலத்தில் வற்றிப் போய் ஆங்காங்கே ஊற்றுகளோடு இருக்கும் அந்த ஆற்று மணல் பகுதியில் கிராமத்துப் பையன்கள் + எங்களைப் போன்று விடுமுறை காலத்தைக் கழிக்க வரும் பையன்கள் எல்லோரும்  விளையாடுவார்கள். 

ஆற்றுக்குப் பெயர் பாண்டவ ஆறு என்று சொன்னேன். அந்த ஊரின் பண்ணையார் - என்னுடைய தாத்தா சுப்ரமணிய அய்யருக்கு, பாண்டவர்களைப்போல ஐந்து பையன்கள் + இரண்டு பெண்கள். ஐந்து பையன்களில் இரண்டாவதாகப் பிறந்தவர் என் அப்பா (பெண்கள் - அதாவது என்னுடைய அத்தைகள் இருவருமே பையன்கள் எல்லோருக்கும் மூத்தவர்கள்) தாத்தாவின் மூத்த முதல் பெண்ணின் இரண்டாவது பையனின் மூன்றாவது குழந்தை யார் என்றால் என்னுடைய மனைவி ( தலையை சுற்றுகிறது அல்லவா! ) ஆனால் என்னுடைய மனைவியாகப் போகின்ற அந்தப் பெண்ணை நான் எங்கள் கிராமத்தில் பார்த்ததே இல்லை. ஏன் என்றால் - நான் லீவுக்கு நாகையிலிருந்து கிராமத்திற்குச் செல்லும்போதெல்லாம் அவள் அந்த கிராமத்திலிருந்து  லீவுக்கு மதுரை சென்றுவிடுவாள். இன்னும் பார்க்கப் போனால் - அவர்கள் வீட்டில் ஒரே ஒரு பையனை மட்டுமே (மனைவியின் இரண்டாவது அண்ணன்) அந்த நாட்களில் எனக்குத் தெரியும். 

ஆற்று மணலில் விளையாடி முடித்தபின் எல்லோரும் வட்ட வடிவமாக உட்கார்ந்து அந்திப் பொழுது வரை அரட்டைக் கச்சேரி செய்வோம். இருட்டத் தொடங்கியவுடன் எனக்கு பயம் வந்துவிடும். ஆற்றுக்குப் பக்கத்தில் உள்ள அடர்ந்த மரங்களுக்கு அப்பாலிருந்து சில சமயங்கள் நரிகள் ஊளையிடும் சத்தம் கேட்கும். 

ஒரு பையன் சொன்னான் - நரி நமக்கு எதிரே வந்தால் என்ன செய்யும் என்றால் - மணலில் சிறுநீர் கழித்து, அந்த ஈர மணலை தன் முன்னங்கால் கொண்டு எடுத்து, நம்முடைய கண்களைப் பார்த்து வீசுமாம். நம்முடைய கண்ணில் அந்த மணல் பட்டு நம் கண்களை மூடினால் - நரி வந்து நம்மைக் கடித்துவிட்டு ஓடிவிடுமாம். 

இந்தக் கதையைக் கேட்டதும் நான் பயந்துகொண்டே ஓரக் கண்களால் சுற்றுமுற்றும் பார்த்தவண்ணம் இருப்பேன். நரி வருவதைப் பார்த்தால் கண் மண் தெரியாமல்(!) - எழுந்து ஓடத்  தயாராக இருப்பேன். 

என்னுடைய உறவுப் பையன் ஒருவன் ( ஹி ஹி பின் நாட்களில் தெரிந்தது - அவன் என்னுடைய மனைவியின் இரண்டாவது அண்ணன்!) என்னை பயமுறுத்த  இன்னும் ஒரு கதை விடுவான் - அவனுக்கு நரி ஒன்றை நன்றாகத் தெரியுமாம் - அதன் பெயர் வெள்ளையன் என்றும், தான் அழைத்தால் அது எங்கே இருந்தாலும் ஓடி வந்துவிடும் என்றும் சொன்னான். சொன்னவன் சும்மா இல்லாமல் " வெள்ளையா - வெள்ளையா - வெள்ளையா .. " என்று உரத்த குரலில் கத்தினான்! 

எனக்கு பயங்கர(!) பயம்  வந்து அண்ணனை இறுகப் பற்றிக்கொண்டு கண்களை இறுக மூடிக்கொண்டேன்! நல்லவேளை - அந்த நரி வெள்ளையன் காதில் அதன் நண்பன் நாகசுந்தரம் அழைத்தது விழவில்லை என்று நினைக்கிறேன்! 

கல்யாணத்துக்கு அப்புறம் ஒருநாள் நாகசுந்தரத்திடம் 'வெள்ளையன் நரி' பற்றிக் கேட்டதற்கு, சிரித்துக்கொண்டே - தனக்கு அதுபற்றி ஒன்றும் ஞாபகம் இல்லை - என்று சொல்லிவிட்டார்!  

= = = = = = = =

78 கருத்துகள்:

  1. செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை

    குறள் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
    தளிர் விளைவாகித்
    தமிழும் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  5. கேள்விகளும், பதில்களும் அருமை.
    சாரின் இளமைகால நினைவுகள் அருமை.

    //கல்யாணத்துக்கு அப்புறம் ஒருநாள் நாகசுந்தரத்திடம் 'வெள்ளையன் நரி' பற்றிக் கேட்டதற்கு, சிரித்துக்கொண்டே - தனக்கு அதுபற்றி ஒன்றும் ஞாபகம் இல்லை - என்று சொல்லிவிட்டார்! //

    நினைவாற்றல் உள்ள தங்கையின் கணவரிடம் எதையாவது சொல்லி மாட்டி கொள்ள விருப்பம் இல்லை போலும் . ஞாபகம் இல்லை என்று சொல்வதே நல்லது என்று முடிவு செய்து இருப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா... இருக்கலாம்!

      நீக்கு
    2. அவர் விளையாட்டாக நிறைய டூப் அடிப்பவர். அதனால் ஞாபகம் இருந்திருக்காது!

      நீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. /// யூடியூபிலும் அம்மா பாட்டி சொல்லிக் கொடுத்த பாரம்பரிய சமையலைத் தானே சொல்லுகிறார்கள் ?.. ///


    வீட்டுக்கு வீடு வாசப்படி...

    அம்மா சொல்லிக் கொடுத்த மாதிரி அக்காவோட கைப்பக்குவம் இருக்காது..

    தங்கச்சியோட கைராசி தனி...

    இப்போ அக்கா தங்கச்சி இல்லாத சூழ்நிலை...

    யூட்டீப் காரங்க காட்ல மழ!...

    பதார்த்த குண சிந்தாமணி என்ற பழைய நூல் படிச்சிருக்கீங்களா???..

    பதிலளிநீக்கு
  8. எல்லாவற்றையும் விட மனைவி சொல்லே மந்திரம்...

    அவங்க கைப்பக்குவமே தனி..

    !?..

    பதிலளிநீக்கு
  9. உங்க வீட்ல ஒன்னுமே இல்லயா!..

    இத வச்சு இட்லி சுட்டு அசத்துங்க!!...

    அடேங்கப்பா
    யூட்டீப்பு!...

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை.

    இசை, பாடல் எழுதியவர், பாடுபவர் அனைவருக்கும் கசையடி கொடுக்கும் ஔரங்க சீப் என்னும் பதிலை கண்டவுடன் சிரிப்பு வந்தது. ஆமாம்.. உண்மை. கேட்பவருக்கு இசை சம்பந்தபட்ட ஞானம் என்ற ஒன்று அவசியமல்லவா? நல்ல பதில்.

    தங்கள் இளமைக்கால அனுபவங்கள் அருமை. அந்தக்காலத்தில் கூட்டு குடும்பங்கள் இப்படித்தான் தலைசுற்றும்படிக்கு உறவுகள். இப்போது நாமிருவர் நமக்கு ஒருவர் என ஆகி விட்டது.

    தங்கள் மனைவியின் அண்ணா இப்படி பயமுறுத்தியிருக்க வேண்டாம். "வெள்ளையனே வெளியேறு" என்று போராடி வெற்றி பெற்ற பின் வெள்ளையனை அழைத்தால் எப்படி வருவான். என நீங்கள் பின்னர் கேட்டிருக்கலாம். ஆனால், அவர்தான் தனக்கு ஒன்றும் நினைவில்லை எனச் சொல்லி விட்டாரே..!

    அந்த நரியின் படம் அழகு. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. ஓ..

    அந்த நரிக்கதை உங்களுக்கும் தெரியுமா!?...

    பதிலளிநீக்கு
  12. துணையை இழந்து விட்டால் வேறொன்றை நாடாதது நரி...

    இணைவி கலாச்சாரம் எல்லாம் அவ்விடத்தில் நஹி..

    இதே போல பறவைகளில் புறா!..

    பதிலளிநீக்கு
  13. மாங்காய்களில் பல வெரைட்டி உண்டு. ஒன்று போல மற்றது இருக்காது. ஊருக்கெல்லாம் இளைத்த மாங்காய் வெரைட்டி தோத்தாப்புரி என அழைக்கப்படும் கிளி மூக்கு மாங்காய். இது பழமானால் நல்லாருக்காது. இதிலும் காயில் ஒரு வெரைட்டி பெங்களூரில் வரும். அது மஞ்சள், பச்சை, லைட் ஆரஞ்ச் நிறத்தில் இருக்கும். கிலோ 80ரூ. இதை அப்படியே சாப்பிட்டால் மாங்காயின் புளிப்புத்தன்மை மிக மிக்க் குறைவா இருக்கும். இதுவுமே பழுத்தால் நல்லா இருக்காது.

    மஞ்சநாத்தி வெரைட்டி மாங்காய் ஊறுகாய்க்கெல்லாம் சரிப்படாது. பஹ்ரைனில் அனேகமா வருடம் முழுவதும் கேரளாவிலிருந்து வரும் மாங்காய் ஊறுகாய்க்கு நல்லா இருக்காது, ஆனால் அதை மீன் குழம்புக்கு உபயோகிக்கிறவர்கள் அனேகம் என்பதால் வருடம் முழுதும் இதனை வரவழைக்குறோம் என்பார்கள்.

    ஆவக்காய்க்கு ஆந்திராவிலிருந்து வரும் ஒரு வெரைட்டிதான் சரிப்படும்.

    பங்கனப்பள்ளி மாங்காய் பச்சரிசி மாங்காய் போன்று சாப்பிட மிகவும் சுவை. அதில் ஊறுகாய் போட்டு உடனே சாப்பிட எனக்கு மிகவும் பிடிக்கும். பங்கனப்பள்ளி மாம்பழம் சீசனில் நிறைய வரும். இனிப்புப் பிரியர்களுக்கு இது அவ்வளவு ருசிக்காது.

    மாங்காய் மாம்பழம் பற்றி நிறைய எழுதலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் பட்டம் பெறும் அளவுக்கு நிறைய தெரிந்து வைத்திருக்கிறீர்கள்!

      நீக்கு
  14. பெங்களூர்ல பங்கனப்பள்ளி மாம்பழம், பிறகு ரொம்ப வானையா இருக்கும் மாம்பழம், பிறகு பாதாமி எனப்படும் கர்நாடக அல்கோன்சா, பிறகு மல்லிகா, இடையில் மிகப் பெரிய மாங்காய் பழுத்தது (காய் ரொம்பப் புளிப்பு, பழுத்தால் பரவாயில்லை), மிகச் சிறிதளவே மல்கோவா.... அதன் பிறகு நீலன் வந்துவிட்டால் சீசன் முடிவடையப் போகிறது என்று அர்த்தம். சென்னையில் ருமானி மாம்பழத்துடன் சீசன் முடியும்.

    இந்தத் தடவை விளைச்சல் மோசமாம், ஐந்தில் ஒரு பகுதி விளைச்சலும் இல்லையாம். ஏற்கனவே பலாப்பழம் சீசன் களைகட்டவில்லை.

    பதிலளிநீக்கு
  15. இசையைக் கேட்பவர் முக்கியம் என்பது உண்மைதான். சாம்பார் மாதிரி மிக முக்கியமான இன்கிரிடியன்ட்ஸ் மூன்று நான்கு இருந்தாலும், இசையமைப்பாளருக்கு ஒரு கோடி, பாடல் எழுதுபவருக்கு லட்சம், பாடுபவருக்கு ஐம்பதாயிரம் என்ற நிலை இருப்பதால், இசையே மிக முக்கியமானது என எடுத்துக்கொள்ளலாமா?

    பதிலளிநீக்கு
  16. சிறிய வேறுபாடுகள்தாம் என்றாலும், பாரம்பர்யச் சமையல் என்பது அவரவர் குடும்பத்தில்தான் கற்றுக்கொள்ள முடியும்.

    பதிலளிநீக்கு
  17. இன்றைய மாம்பழங்கள் எல்லாம் கார்பைடுகளின் உபயம்....

    நயவஞ்சகமே இன்றைய
    வியாபாரம்...

    கவனம்...

    பதிலளிநீக்கு
  18. குடும்பம் தெரிந்திருந்தும் கல்யாணம் பண்ணிக்கொள்ளப் கொகும் பெண்ணைப் பார்த்திராத்து நான் மட்டும்தான் என நினைத்தேன். அப்போ நம் மனதில் கல்மிஷங்கள் இல்லாத்தால் அவர்களைப் பார்த்திருக்கவோ இல்லை கவனித்திருக்கவோ மாட்னோம்.

    பதிலளிநீக்கு
  19. உங்களுக்கு (கேஜிஜிக்கு) நினைவாற்றல் அதிகம். கொஞ்சம் விட்டால், சென்ற பிறவியில் நடந்தது என்று பெரிய தொடரே எழுதிவிடுவீர்கள் கோலிருக்கிறதே

    பதிலளிநீக்கு
  20. கல் வைக்கப்பட்ட பழங்கள் குப்பைக்குப் போக வேண்டியவை..

    யாரையும் நம்புவதற்கு இல்லை..

    பதிலளிநீக்கு
  21. /// கொஞ்சம் விட்டால், சென்ற பிறவியில் நடந்தது என்று பெரிய தொடரே எழுதிவிடுவீர்கள் போலிருக்கிறதே.. ///

    என்னப் பத்தி ஏதும் சொல்லீடாதீங்கோ சுவாமீ!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா - இப்படி தடை போட்டால் நான் என்னதான் எழுதுவது!

      நீக்கு
  22. தேறிய ஒட்டு மாங்காய்களை அரிசிக்குள் அழுத்தி வைத்தால்
    இரண்டு நாளில் பழுத்து விடும்..

    அற்புதம்..
    ஆரோக்கியம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் அம்மா அப்படி பழுக்க வைப்பார்கள்.

      நீக்கு
  23. வாசகர்களுக்கான கேள்வி இந்தவாரம் இல்லையா?
    அடுத்த புதன் கேள்வி?
    ஒரு லோக்சபா தேர்தலையே ஒரே நாளில் நடத்தி முடிக்காமல் ஒன்றரை மாசம் நீட்டுகிறார்களே, ஒரே நாடு, ஒரே தேர்தல், என்பதை எப்படி ஒரே நாளில் நடத்துவார்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்பு கிராமங்களில் இருந்த வழக்கத்தைப் போல, நாட்டாமைகள் ஓரிரு நாட்களில் தீர்ப்பு வாசித்து வழக்கை பைசல் செய்வது போல, எந்த வழக்கையும் பைசல் செய்யமுடியாத நீதிமன்றங்களால் நாட்டுக்கு என்ன பயன் என்று அடுத்த கேள்வியாகக் கேட்பாரோ? நீதிமன்றங்கள் ஒவ்வொரு வழக்கிற்கும் 20-30 வருடங்களாவது எடுக்கின்றனவே அதனால் தோன்றிய எண்ணம் இது.

      நீக்கு
    2. நல்ல கேள்வி. இதையும் புதன் கேள்வியாக எடுத்துக் கொள்வார்களா அல்லது பதில் நீதிமன்ற அவமதிப்பதாகும் என்று விட்டுவிடுவார்களா?
      Jayakumar

      நீக்கு
  24. நெல்லையின் முதல் கேள்விக்கு - எந்தப் பாடல் கேட்டாலும் எனக்கு முதலில் மனதில் ஒட்டுவது இசை/ராகம். வரிகள் எல்லாம் அதன் பின் தான். எனவே இசை ஈர்க்கவில்லை என்றால் பாடலைக் கேட்பதில்லை அப்புறம் தானே வரிகள்! சில பாடல்களில் ராக ஆராய்ச்சி செய்தே வரிகளை விட்டுவிடுவேன். ஆனால் அப்பாடலைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் வரிகள்! அப்படிக் கற்க நினைக்கறப்ப வரிகள் பிடிக்கலைனா பாட்டைக் கற்றுக் கொள்ள நினைக்க மாட்டேன். ஆனால் இது அபூர்வம் ஏனென்றால் நான் கற்க நினைக்கும் பாடல்கள் தமிழ் கீர்த்தனைகள் என்பதால்.

    கீதா

    பதிலளிநீக்கு
  25. நெல்லை, மாம்பழம் லேட் சீசன் இந்த முறை. இப்பதான் ஆவக்காய்க்குக் காய்கள் நிறைய கிடைக்கிறது. போன முறை கிலோ 130 இந்த முறை 100.

    மாம்பழங்களில் நிறைய வகைகள் உண்டு. இமாம்பசந்த் செமையா இருக்கும். மல்கோவாவும். நீலனும். நீலன் வருவது சீசன் முடியும் நேரத்தில். இந்த ஊர் பெங்களூரா கிளிமூக்கு காய் நல்லாருக்கும் கீத்துமாங்கா ஊறுகா நல்லாருக்கும் ஆனால் பழம் ம்ஹூம்.

    சென்னையில் மாமியார் வீட்டில் மாம்பழம் அது போன்று நான் எங்கும் சுவைத்தது இல்லை. அத்தனை இனிப்பும் சுவையும். ஆனால் என்ன வகை என்றெல்லாம் சொலல்த் தெரியலை மாமியாருக்கு. ஒட்டு மாங்காதான் என்பார். ஆனால் சுவை அபாரம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்னையில் என் வீட்டிலும் ஒட்டு மாமரம் உள்ளது. பழம் சுவையாக இருக்கும்.

      நீக்கு
  26. இசை - பாடல் பற்றிய விளக்கம் சிறப்பு ஜி.

    தயாரிப்பாளர் என்ற பிரம்மன் (முதலாளி) இல்லை என்றால் திரையுலகில் எவருக்குமே வாழ்வு கிடையாது.

    இது கசா'நாயகன் முதல் லைட்பாய் வரையில்....

    இந்த உரிமை என்பது தயாரிப்பாளர்களையே சார்ந்தது துரதிஷ்டவசமாக மாறி விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜி...உங்க கருத்து சரி என்றால், அம்பானி போன்ற தொழிலதிபர்கள் இல்லை என்றால், செல்போன் தயாரிப்பு/விற்பனை முதலாளிகள் இல்லையென்றால், நம் வாழ்வே சூனியம் என்பதும் உண்மைதானே. (அதுபோல விமானக் கம்பெனி நடத்தும் தொழிலதிபர்கள், பேருந்து முதலாளிகள்....)

      தயாரிப்பாளர் என்பவர் கலையைப் பேணுபவர்/வளர்க்க நினைப்பவர் அல்லர். அவர் வியாபாரி. எது வியாபாரம் ஆகும் என்று நினைக்கிறாரோ அவர்களைப் பிடித்து ஒரு படத்தைத் தயாரிக்கிறார். சமூகத்திற்கு நல்லது செய்யவேண்டும் என்று நினைத்தால், திருவள்ளுவர், திருஞானசம்பந்தர், அப்பர் போன்றவர்களின் வாழ்க்கை வரலாறு, சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்கள் போன்றவற்றைத்தானே படமாக எடுக்கவேண்டும்?

      பிரம்மன் என்று சொல்ல நினைத்தால், அது இசையை உருவாக்கும் இசையமைப்பாளர்தாம்.

      உங்களுடைய அடுத்த பாயிண்ட் சரிதான். அதாவது இசையமைப்புக்கு பணம் கொடுத்தாகிவிட்டது. அதனால் இசை தயாரிப்பாளருக்குத்தான் சொந்தம்.

      நீக்கு
    2. நல்ல கருத்துகள். நன்றி.

      நீக்கு
  27. ஆவாக்காய் போடுவதற்கான குண்டு மாங்காய் அதன் வடிவமே காட்டிடும். அது ஆவாக்காய் போட மட்டும் நல்லாருக்கும் பழம் ஸோ ஸோ தான்.

    ஆவாக்காய் ஊறுகாய்க்கு என்று 4 வகைகள் இருக்கு. அவைதா மிகச் சிறந்தவை. நான் சென்னையில் இருந்த வரை ஆவக்காய்க்கு என்று விற்கப்பட்ட மாங்காயும் இங்கு பெங்களூரில் விற்கப்படுவதும் வேறு வேறு வகை. சென்னையில் ருமானி காயைத்தான் வெட்டித் தருவதைப் பார்த்திருக்கிறேன். இப்போது வகை வகையாய் கிடைக்குமா இருக்கலாம்.

    இங்கு உறவினர் வீட்டில் காய்த்த மாங்காய்கள் என்று சிறிய தாக குண்டு மாங்காய்கள் ருமானி வடிவத்தில் ஆனால் ருமானி அல்ல என்ன வகை என்றும் அவங்களுக்குச் சொல்லத் தெரியலை. கொடுத்தாங்க அதை ஆவாக்காய் போட்டுக் கொடுத்தேன் நல்லா வந்திருந்தது.

    ஆனால் 4 வகைகள் தான் ஆவாக்காய்க்கு நல்லாருக்கும்னு சொல்லப்படுவதுண்டு. இங்கு பெங்களூரில் பெரிசு பெரிசா ஆவாக்காய்க்குன்னு விற்கிறார்கள் வெட்டியும் கொடுப்பாங்க ஜெயநகரில் காயைப் பார்த்தாலே தெரியும் ஆவாக்காய்க்கு என்று.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் முனைவர் பட்டம் கொடுக்கலாம்.

      நீக்கு
  28. பங்கனப்பள்ளி மாம்பழம் என்னை ஈர்ப்பதில்லை.

    பலா இப்போது நிறைய இங்கு பார்க்க முடிகிறாது உரித்து விற்கிறார்கள். கால்கிலோ 50 ரூ. நுங்கும் வந்திருக்கு. மூன்று சுளை இருப்பது 30 ரூ

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவங்களே விலையை ஏத்திவிட்டுடுவாங்க போலிருக்கு. பொதுவா சுளை 1 கிலோ 120 ரூ. தற்போது 150 ரூ. சென்னையில் அடிப்பது கொள்ளை (கால்கிலோ 50 ரூ). நுங்கு தற்போது ஒரு காய் 50 ரூ. நான் பேரம் பேசி 3 காய் 100 ரூபாய்னு 300 ரூபாய்க்கு மூன்று நாட்கள் முன்பாக வாங்கினேன். நுங்கு பாயசம் மனைவி செய்தார். ரொம்ப நல்லா இருந்தது. செய்முறை திபதிவுக்கு எழுதணும்.

      நீக்கு
    2. இவங்களே விலையை ஏத்திவிட்டுடுவாங்க போலிருக்கு. பொதுவா சுளை 1 கிலோ 120 ரூ.சென்னையில் அடிப்பது கொள்ளை (கால்கிலோ 50 ரூ). //

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....உங்க ஏரியா விலைய சொல்லக் கூடாது. எங்க ஏரியா விலையைத்தான் சொன்னேன். எங்க ஏரியாவும் தமிழ்நாடை ஒட்டி இருக்கறதுனால இந்த விலை...ம்ஹூக்கும்!!!!

      கீதா

      நீக்கு
  29. யுட்யூப் சமையல் முறைகளால் ஒன்றும் தீமை இல்லை. நல்ல சானல்களைப் பார்த்து இளையதலைமுறை கற்றுக் கொள்வதில் என்ன தப்பு? அவர்களுக்குப் பிடித்ததை சமைத்துச் சாப்பிடட்டுமே!

    வேணும்னா பார்த்துக்கலாம் இல்லைனா கடந்து போய்விடலாம். காய்கறிக்ள் பழங்கள் வாங்கறப்ப எல்லாம் கலந்துதானே இருக்கும் அதில் நல்லதை மட்டும்தானே எடுத்துக்கறோம் அப்படி இதிலும் செய்யலாமே.

    choices decide our life!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க பாயிண்டை சரியா புரிஞ்சுக்கலை. நம் வீட்டு முறை, அம்மா செய்துதந்த முறை (அதாவது நம் குடும்பச் செய்முறை), யூடியூப் பார்த்தால் மறைந்துவிடும்.

      மற்றபடி புதிய புதிய ஐட்டங்கள் யூடியூபைப் பார்த்துக் கற்றுக்கொண்டு செய்வதில் தவறில்லை. நான் ஒரு ஃபேமஸ் யூடியூபர் முறையில் வெங்காய சாம்பார் செய்தேன். என் பெண், அம்மா செய்வது போல இல்லை, I dont like it என்று சொல்லிட்டா.

      நீக்கு
    2. நெல்லை, எதுக்கு யுட்யூப் பார்க்கணுமோ அதுக்கு மட்டும் தான் பார்க்கணும்!!!!!!!!!!ஹிஹிஹிஹி....சும்மா வெங்காய சாம்பாருக்கு எல்லாம் பார்க்கக் கூடாது. வெங்காய சாம்பார் ஒவ்வொரு சமூகமும் ஒவ்வொரு முறையில் செய்வாங்க. இதையும் நாம மனசுல வைச்சுக்கணுமாக்கும்!!! எல்லாம் என் பாண்டிச்சேரி அனுபவங்கள்!

      கீதா

      நீக்கு
  30. குடும்பத்துக்குள்ளயே வருங்கால மனைவி! இது அப்போதைய காலகட்டங்களில் பல குடும்பங்களிலும் நிகழ்ந்திருக்கும் என்றே தோன்றுகிறது.

    சரி அப்படியே கே பாலச்சந்தர் படம் போல ஒரு கேள்வியும் நீங்க வைச்சிருக்கலாமே! கௌ அண்ணா...

    //தாத்தாவின் மூத்த முதல் பெண்ணின் இரண்டாவது பையனின் மூன்றாவது குழந்தை யார் என்றால் என்னுடைய பேரக்ககுழந்தைகளின் பாட்டி!!!! அப்படினா அவர் எனக்கு என்ன உறவு? என்று கேள்வி கேட்டிருந்தீங்கன்னு வைங்க!!!

    நாங்க தலைய பிச்சுக்கிட்டுமயங்கியிருப்போம்!!!

    என் பெரிய அத்தையின் இரண்டாவது மகனின் (அதாவது என் கஸின்) மூன்றாவது பெண் தான் என் மனைவி!!! இப்படி ஈசியா சொல்றத விட்டுப் போட்டு....ஹிஹிஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்க மனைவிக்கு நீங்க மாமாதாத்தா மகன்!!!!!!

      கீதா

      நீக்கு
    2. ஆ! அவ்வ்வ்.. .. நான் எனக்கே மாமாவா என்று இப்போ சந்தேகம் வந்திடுச்சு!

      நீக்கு
  31. கௌ அண்ணா உங்க தாத்தா குடும்பம் போலவே என் குடும்பத்திலும் அதே configuration - 5 + 2 அதிலும் 2 பெண்ககள் எல்லாருக்கும் மூத்தவங்க...

    அனுபவங்கள் சுவாரசியம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  32. கேள்வி பதில்கள் நன்று.

    கிராமத்து நினைவுகள் வெள்ளைநரி ஹா...ஹா...
    சிறுவயதில் உங்கள் மனைவியை காணாத ஆதங்கம் இப்பொழுதும் உங்கள் மனதில் இருப்பது புரிகிறது :)

    பதிலளிநீக்கு
  33. //தாத்தாவின் மூத்த முதல் பெண்..// மூத்த பெண் என்றாலும், முதல் பெண் என்றாலும் ஒன்றுதானே? உங்களுடைய அத்தை பேத்தியை மணந்து கொண்டிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது ஒருவகையில் சரியே. ஆனால் மூத்த முதல் பெண் என்றால் அது நட்ட நடு செண்டர் போல துல்லியமாக விளங்குகிறது அல்லவா!

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!