புதன், 26 மார்ச், 2014

அலேக் அனுபவங்கள் - விஸ்வநாதம் (தொடர்ச்சி)

  
இதன் முந்தைய பகுதி சுட்டி இது!

விஸ்வநாதம் என்னிடம் ஒரு நாள் கேட்டார்: 

தமிழில் 'நல்லார்க்கு' என்றால் என்ன அர்த்தம்? 

ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து சொன்னேன். 

'என்னுடைய அறை நண்பன் ஒரு பைத்தியக்காரன்' என்றார்.

ஏன்?

விஸ்வநாதம் கூறியது: 

நேற்று ரங்கநாதன் தெரு ஜவுளிக்கடை ஒன்றில், ஒரு போர்வை வாங்கினேன்.  
     
இரவு போர்த்திக் கொள்ள அதை பையிலிருந்து எடுத்தேன். அதைக் கண்ட நண்பன். "நல்லார்க்கு" என்றான். 'அப்படி என்றால் என்ன?' என்று கேட்டேன். அவனும் நீ சொன்ன அர்த்தம்தான் சொன்னான். ஆனால் மேற்கொண்டு, நாம் வாங்கிய பொருளை யாராவது பார்த்து, நல்லா இருக்கு என்று சொன்னால், அதை அவரிடம் கொடுத்து விட வேண்டும்' என்றான். 

'காசுக்கா?' என்று கேட்டேன். 'இல்லை - பைசா எல்லாம் கேட்கக்கூடாது; ஓசிக்குதான் கொடுக்கவேண்டும்' என்றான். 

எனக்கு இந்த லாஜிக் புரியவில்லை. டெஸ்ட் செய்து பார்ப்போம் என்று நினைத்து அவனிடம், 'உன்னுடைய பைலட் பேனா நன்றாக இருக்கிறது' என்று சொன்னேன். அவன் உடனே ' ஆமாம் சூப்பர் பேனா. என்னுடைய அலுவலக நண்பன் வாங்கினான். நான் ஆசைப் பட்டேன் என்று தெரிந்ததும் எனக்கு கிப்ட் பண்ணிவிட்டான்' என்றான். 

'நீ இந்த மாதம் ஏதாவது புதிதாக வாங்கினாயா?' என்று கேட்டேன். 

'ஒன்றும் வாங்கவில்லை' என்றான். 

மீண்டும் போர்வை பற்றி பேச்சு வந்தது. நான் அவனிடம், இந்தக் கலர், இந்த மெடீரியல் நன்றாக இருக்கிறது, எனக்குப் பிடித்திருக்கிறது என்றுதான் நான் வாங்கினேன். எந்தக் கடையில் வாங்கியது என்றும் சொல்கின்றேன், இதே போல அங்கே நிறையப் போர்வைகள் உள்ளன. நீ அங்கே போய் வாங்கிக் கொள்ளலாமே' என்றேன். 

அவன் கோபமாக, 'அது எனக்குத் தெரியாதா? இதை நீ எனக்குக் கொடுத்துவிட்டு, நாளைக்குப் போய் வேறு வாங்கிக் கொள்' என்றான். 

எனக்கு அதில் உடன்பாடு இல்லை. 'சரி, நான் பைசா தருகின்றேன், நீ போய் வாங்கிக்கொள்' என்றேன். உடனே அந்த நண்பன் ருத்ரதாண்டவம் ஆடிவிட்டான். நீ எல்லாம் ஆந்தராவிலிருந்து வந்தவன். எங்கள் தமிழ்நாட்டுப் பழக்க வழக்கங்கள் உனக்குத் தெரியவில்லை. நீ ஒரு சரியான கஞ்சூஸ், கருமி' என்று திட்டிவிட்டு (நைட் ஷிப்ட்) வேலைக்குக் கிளம்பி சென்று விட்டான். 
   **** **** **** 
   
எனக்கும் சென்னை வந்த புதிதில் இந்த மாதிரி அனுபவங்கள் ஒன்றிரண்டு நடந்தன. எப்பொழுதும் யாராவது புதியதாக எதையாவது வாங்கி என்னிடம் காட்டினால், 'நல்லாயிருக்கு' என்று கூறுவேன். அப்படி எதேச்சையாகக் கூறிய ஓரிரண்டு சந்தர்ப்பங்களில், அதை அவர் எனக்குக் கொடுத்துவிட அதை வாங்கிக்கொள்ள மறுப்பது பெரும்பாடாக ஆன சந்தர்ப்பங்கள் உண்டு. பிறகு கொஞ்சம் மாற்றி, 'ஆஹா இது உங்களுக்கு மிகவும் சரியான உடை, நல்ல செலெக்ஷன் என்றெல்லாம் கூறி, 'நல்லா இருக்கு' என்று கூறுவதைத் தவிர்க்க ஆரம்பித்தேன். நான் வாங்கிய பொருட்களை யார் 'நல்லா இருக்கு' என்று கூறினாலும், பதிலுக்கு 'நன்றி' மட்டுமே கூறுவேன்! 
      
அன்று மாலை நண்பன் வந்த பிறகு என்ன நடந்தது என்று விஸ்வநாதமிடம் பிறகு விசாரிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன், மறந்துபோய் விட்டது! 

===========================

அப்ரண்டிஸ் ஆக இருந்தபொழுது, இதே விஸ்வநாதம், அவருடைய பள்ளிக்கூட நாட்களைப் பற்றி சுவையாக பல தகவல்கள் தெரிவித்தது உண்டு. அவருடைய சிறிய தங்கைகள் எப்படி மணலில் வீடு கட்டி விளையாடுவார்கள், பார்த்துக் கொண்டே இருந்த இவர் எப்படி ஓடிப் போய் அவர்கள் கட்டி விளையாடும் கோபுர வீடுகளைக் காலால் உதைத்து சிதைத்து, அவர்கள் கையில் சிக்காமல் ஓடிவிடுவார் என்பதை எல்லாம் ஒருநாள் சொல்லிக் கொண்டிருந்தார். அப்பொழுது, அவருடைய சிறிய தங்கைகளின் பெயர் என்ன என்று சும்மா கேட்டு வைத்திருந்தேன். 

பிறகு பல வருடங்கள் எங்களுக்குள் அதிகத் தொடர்பு இல்லாமல் இருந்தது. 

நாங்கள் இருவரும் கிட்டத் தட்ட பத்து வருடங்கள் கம்பெனியில் குப்பை கொட்டிய பிறகு, ஒருநாள் மின்சார ரயிலில் கடற்கரை நிலையத்திலிருந்து அவர் கோடம்பாக்கம் ஸ்டேஷனுக்கும் நான் குரோம்பேட்டை ஸ்டேஷனுக்கும் பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது, அவர் அடுத்த வாரம் லீவில் செல்லப் போவதாகத் தெரிவித்தார். 

'எதற்கு?' என்று கேட்டேன். 

'தங்கைக்குக் கல்யாணம்' என்றார். 

'நான் உடனே அவருடைய இரண்டு தங்கைகளின் பெயரையும் கூறி, இதில் யாருக்குக் கல்யாணம்?' என்று கேட்டேன். (இப்போவும் பெயர்கள் ஞாபகம் உள்ளன. இங்கே குறிப்பிடவில்லை) அவர் அப்படியே ஷாக் ஆகிவிட்டார். 

'ஹவ் டூ யு நோ தி நேம்ஸ் ஆஃப் மை சிஸ்டர்ஸ்?' என்று கேட்டார் ஆச்சரியமடைந்து! 

' யு ஒன்லி டோல்ட் மி தெயர் நேம்ஸ் - டென் இயர்ஸ் பேக்' என்றேன். 
                         
அவரால் நம்பவே முடியவில்லை. கோடம்பாக்கம் ஸ்டேஷனில் இறங்க வேண்டியவர், ஸ்டேஷன் வந்த போது, அதை கவனியாமல், ஸ்டேஷனைத் தவற விட்டுவிட்டு, மாம்பலம் ஸ்டேஷனில் இறங்கிச் சென்றார்.    
                    

10 கருத்துகள்:

  1. அவருடைய லாஜிக்காக சொல்லும் சொற்களையே - நல்லா இருக்கு சே... நன்றி... ஹிஹி...

    உங்களின் ஞாபக சக்தி, ஸ்டேஷனைத் தவற விடும் அளவிற்கு அவருக்கு என்ன அதிர்ச்சியோ...?

    பதிலளிநீக்கு
  2. கல்யாணப் பத்திரிக்கை உங்களுக்கு வைத்தாரா ,இல்லையா ?நீங்க
    போனீங்களா,வரவேற்பு எப்படி நல்லா இருந்ததா ?

    பதிலளிநீக்கு
  3. உங்கள் கேள்வியால் அவர் அடுத்த ஸ்டேஷனில் இறங்கினார்... :))))

    வித்தியாசமான மனிதர்.....

    பதிலளிநீக்கு
  4. நிச்சயம் வித்தியாசமான விஸ்வனாதம்தான்
    சுவாரஸ்யமான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. //'நல்லாயிருக்கு' என்று கூறுவேன். அப்படி எதேச்சையாகக் கூறிய ஓரிரண்டு சந்தர்ப்பங்களில், அதை அவர் எனக்குக் கொடுத்துவிட அதை வாங்கிக்கொள்ள மறுப்பது பெரும்பாடாக ஆன சந்தர்ப்பங்கள் உண்டு. //

    இப்படி ஒரு பழக்கம் சென்னையில் இருந்தது; இருக்கிறது என்பதே இப்போத் தான் தெரியும்.

    பதிவு நல்லா இருக்கு! ஹிஹிஹி, இதை எப்படியும் கொடுக்க முடியாதுல்ல! பிழைச்சேன்!

    பதிலளிநீக்கு
  6. இந்த ஞாபக சக்தியாலே நானும் எதிராளியைத் திணற அடிச்சது உண்டு. நீங்க சொல்லித் தான் தெரியும்னு சொன்னா உடனே அவங்க நான் இதை எல்லாம் சொல்ல மாட்டேனேனு சொல்லிடுவாங்க! :))))) ஏதோ வேலை மெனக்கெட்டு நாம போய் விசாரித்துத் தெரிஞ்சுண்டாப்போல் நம்மை மோசமாக நடத்துவாங்க. அதுக்கப்புறமாத் தெரிஞ்சாக் கூட, அவங்க சொன்னாக் கூட தெரியாத மாதிரி இருந்துடுவேன். அதுக்காகப் பொய்யும் சொல்ல முடியாது. எதுவுமே சொல்லாமல் வாயைத் திறக்காமல் சமாளிப்ஸ்ஸ் தான்! :)))))

    பதிலளிநீக்கு
  7. அடடே இது இவ்வளவு நாள் தெரியாம போயிடுச்சே..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!