திங்கள், 31 அக்டோபர், 2011

மூன்றாம் விதி - சவால் சிறுகதை - 2011

இரண்டு மூன்று நாட்களாக இருந்த டென்ஷன் இன்றுதான் குறைவாய் இருந்தது அலமேலுப் பாட்டிக்கு. அவள் பெண் வள்ளியின் கணவன் எங்கேயோ செய்த மொள்ளமாரித்தனத்துக்கு தண்டம் கட்ட ஆறாயிரம் ரூபாய் தேவை, 'உடனே வாங்கி வந்தா வூட்டுக்கு வா, அல்லாகாட்டி வராதே... அப்படியே அங்கேயே இருநதுடு' என்று சொல்லி வள்ளியைத் துரத்தி விட்டிருந்தான்.

கீரை விற்று வயிற்றைக் கழுவுவதில் எங்கே, யாரிடம் ஆறாயிரம் ரூபாய் கேட்க... ஒரு வாரமாகியும் ஒன்றும் பெயராத நிலையில் இரண்டு மூன்று நாட்களாக மருமகனின் தொல்லை தாள முடியாததாக இருந்தது. குடித்து விட்டு வந்து அவன் பேசும் பேச்சு சகிப்பின் எல்லையைத் தாண்டிக் கொண்டிருந்தது.

இந்த நிலையில், இன்று வியாபாரத்துக்குக் கீரை வாங்கப் போன இடத்தில் அலட்சியமாக வைக்கப் பட்டிருந்த பணச் சுருட்டைக் கண்டவள், ஒரே நொடித் தீர்மானத்தில் அதை எடுத்துக் கொண்டு வந்து விட்டாள். எண்ணிப் பார்த்தபோது சுளையாய் பத்தாயிரம் இருந்தது. தன்னுடைய சுருக்குப் பையில் வைத்துக் கொண்டவள், அப்புறம் சில்லறை எடுக்கும்போதெல்லாம் அது வெளியில் தெரிய, எடுத்து வெளியே ஓரமாக வைத்தாள். அப்புறம் தான் எடுத்தது போலவே யாராவது எடுத்து விடுவார்களோ என்று தோன்ற, பணத்தைச் சுற்றி ரப்பர் பாண்டு போட்டு பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றி கூடையின் அடியில் கீரைகளுக்கு அடியில் வைத்தாள்.

கீரை விற்பனை சற்று மந்தமாக இருந்தாலும் நடுவில் ஒருவன் வந்து பதினைந்து கட்டுக் கீரை மொத்தமாக் வாங்கிப் போனதில் முதலில் ஏற்பட்ட சந்தோஷம், அவன் கலைத்து கலைத்து அடியைப் புரட்டிக் கீரை எடுத்தது நினைவுக்கு வர, அவசர அவசரமாக கூடைக்குள் தேடினாள். தேள் கொட்டியது போல இருந்தது. காணோம். மயக்கமானாள்.

----------------------------

பழனிச்சாமி அன்று காலை மார்க்கெட்டுக்குக் கிளம்பும்போது மனைவி அருகில் வந்தாள்.

"வழக்கமா வாங்கி வர்றது மாதிரி வாங்கி வராதீங்க.. இன்று திதி. நுனி வாழை இலை, வாழைப் பழம், எள்ளு வெற்றிலை எல்லாம் மறக்காம வாங்கிட்டு, கீரை நிறைய வாங்குங்க... பக்கத்து வீட்டு அம்மா அவளுக்கும் அவள் பெண் வீட்டுக்கும் கீரை கேட்டாள். நீங்க வாங்கிகிட்டு வருகின்ற கீரை நல்லா இருக்குதுன்னு இந்தப் பக்கத்து வீட்டு பாட்டியும் சொன்னாங்க. உங்களிடம் சொல்லி,நிறைய வாங்கிவரச் சொல்கிறேன் என்று அவர்களிடம் சொல்லியிருந்தேன்"

பழனிச்சாமி, வாங்க வேண்டியவை எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு கடைசியாகக் கீரைப் பக்கம் வந்தார்.

கிழவியிடம் கீரையை கைகளால் புரட்டி எடுத்து வரும்போது பிளாஸ்டிக் பைக்குள் தெரிந்த பணக் கட்டைக் கண்டவர், அதை எடுத்துக் கிழவியிடமே கொடுக்கத்தான் நினைத்தார். . திட்டிக் கொண்டிருந்த கிழவியைக் கண்டதுமோ என்னமோ, அல்லது தன்னிச்சைச் செயலாகவோ கைகள், பணத்தைக் கீரையுடன் உள்ளே போட்டன.

வீடு வந்து எண்ணிப் பார்த்ததில் பத்தாயிரம் இருந்தது. மகிழ்ச்சியுடனும், லேசான குற்ற உணர்வுடனும் உள்ளே வைத்தார்.

செல் இசை பாடியது. எடுத்தார்.

மகன்தான்.

கல்லூரிக்குச் பைக்கில் சென்று கொண்டிருந்த போது ஒரு கிழவியை மோதி விட்டானாம். பைக்குடன் ஸ்டேஷனுக்குக் கொண்டு போய் விட்டார்களாம். கல்லூரி மாணவன் என்று தெரிந்ததும் எஸ் ஐ கேஸ் போடாமல் விட்டு விட சம்மதிக்கிறாராம். ஆனால் இருபதாயிரம் ரூபாய் உடனே வேண்டுமாம்.

கொண்டு வந்த பத்தாயிரத்துடன் இன்னொரு பத்தாயிரம் சேர்த்துக் கொண்டு ஸ்டேஷனுக்குக் கிளம்பினார்.

================

எஸ் ஐ முருகேசன் எதிரிலிருந்த இளைஞனைப் பார்த்தார். பதட்டமாக இருந்தான். நகத்தைக் கடித்துக் கடித்துத் துப்பினான். கைக்கடிகாரத்தைப் பார்த்தான். வாசலைப் பார்த்தான். அவன் பார்வையுடனேயே முருகேசனும் வாசலைப் பார்த்தார். அவர் பார்வை உள்ளே சென்றது.

உள்ளே இன்ஸ்பெக்டரும் எஸ் பி கோகுலும் தென்பட்டனர். இரண்டு நாட்களாகவே ஏதோ துண்டு பேப்பர்களை எடுத்து படிப்பதும், டிஸ்கஸ் செய்வதுமாக இருந்தனர். கோகுல் கோபமாக இருந்தார். வெறுப்பில் இருந்தார். அவரிடம் கொடுக்கப் பட்ட க்ளூ தவறானது என்று சொல்லும் துண்டுக் காகிதம் அவரிடமே கிடைத்து, அவரை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தது. எது உண்மை, எது பொய் என்று அலசிக் கொண்டிருந்தார்கள். அந்தக் கேஸ் அவர்களுக்குத் தண்ணீர் காட்டிக் கொண்டிருந்தது. அவர்கள் கேஸ் அவர்களுக்கு. ஒரு வகையில், தன்னை அந்தக் கேசில் அவர்களுடன் சேர்த்துக் கொள்ளாததும் நல்லதுக்குதான் என்று பட்டது முருகேசனுக்கு.


அவ்வப்போது இவர்களுக்குத் தகவல் சொல்லும் இன்பார்மர் விஷ்ணுவிடமிருந்தும் செல்லில் அழைப்பு வந்து கொண்டேயிருக்க, மண்டை காய்ந்து போயிருக்கும் அவர்கள் பார்க்கும் முன்பு இருபதாயிரம் வாங்கிக்கொண்டு, இவனை அனுப்பி விட வேண்டும் என்று பரபரப்பில் இருந்தார் முருகேசன்.

அதோ... படியேறி வரும் முன் வழுக்கைக்காரர்தான் பையன் சொன்ன பழனிச்சாமியாக இருக்க வேண்டும். எழுந்து அவர்களை ஓரம் கட்டினார். பணம் கை மாறியது.

========================

இரவு வீடு வந்த எஸ் ஐ முருகேசன், மனைவியிடம் பணத்தை எடுத்துக் கொடுத்து உள்ளே வைக்கச் சொன்னார். அவள் வழக்கமான உற்சாகம் இல்லாமல் சுரத்தின்றி காணப் பட்டது போலிருந்தது. என்ன என்று விசாரித்தார்.

"மத்தியானம் மார்க்கெட்டில் பர்சேஸ் செய்யும் போது கையிலிருந்த தங்க பிரேஸ்லெட் எங்கேயோ விழுந்து விட்டது..."

"அடிப்பாவி, ஒரு பவுனாசே... என்ன அலட்சியம் உனக்கு... ஏன் உடனே எனக்கு போன் செய்யவில்லை..?"

"அதைத்தானே சொல்ல வர்றேன்....ஓடி ஆடி தேடி அலைந்து உங்களுக்கு போன் செய்யலாமுன்னு செல்லைத் தேடுகிறேன்...அதையும் காணோம்...சேர்ந்தே போச்சா... அல்லது ப்ரேஸ்லெட்டைத் தேடும் போது போச்சான்னு தெரியலைங்க..."

"அட, உனக்கெல்லாம் போய் 25,000 ரூவா செல் கைல குடுத்து வச்ச என்னைச் சொல்லணும்...போடி"

---------------

ப்ரேஸ்லெட்டையும் செல்லையும் எடுத்த குருமூர்த்தி சந்தோஷமாக அவற்றைத் தன் பையில் வைத்துக் கொண்டு கிளம்பினான்..... (மூன்றாம்) விதி தன்னைப் பார்த்துச் சிரிப்பது தெரியாமல்!

சாயங்காலங்கள்

                       
சுவரில் பல்லிகள் ரெண்டு ஒன்றையொன்று துரத்தி கொண்டிருந்தன. பூச்சிகளைத் துரத்துவதை விட்டு விட்டு ஒன்றையொன்று துரத்துவதை அசுவாரஸ்யமாய்ப் பார்த்துக் கொண்டிருந்த ஜனார்த்தனன் அடி வயிறு சங்கடம் செய்ய, சாய்வு நாற்காலியிலிருந்து கஷ்டப்பட்டு எழுந்தார். நழுவிய வேஷ்டியை இழுத்து இறுக்கிக் கொண்டார்.
   
சற்றே தடுமாறியவர், அலமாரியைப் பிடித்துக் கொண்டார்.
    
எதிரில் அமர்ந்து கணினியில் ஏதோ செய்துக் கொண்டிருந்த பேரன் நிமிர்ந்து கூடப் பார்க்காமல் கணினித் திரையை முறைத்துக் கொண்டிருந்தான்.
     
மெல்ல நடந்து உள்ளே சென்றார். பெரிய மருமகள் தொலைக்காட்சி சீரியலில் ஆழ்ந்திருக்க, சின்ன மருமகள் அலைபேசியில் அரைக் கண் மூடியபடி பேசிக் கொண்டிருந்தாள்.
   
இந்தக் காட்சி அவருக்குப் பழகி விட்டிருந்தது. ஆள் மாறுமே தவிர, காட்சி மாறாது.
       
அபபடி மணிக் கணக்கில் மாறி மாறி அலைபேசியில் என்னதான் பேசுவார்களோ...? எப்படித்தான் முடிகிறதோ...! 
    
இதில் தனக்கென்ன வந்தது என்று நினைத்துக் கொண்டார். தன்னிடம் யாரும் இப்படி பேசுவதில்லை என்பதால்தான் இப்படித் தோன்றுகிறதோ? அப்படிப் பேசினாலும், நாம்தான் இவ்வளவு நேரம் செல்லில் பேசுவோமா என்று நினைத்துக் கொண்டார்.

செல்லில் பேசுவதா... நேரில் பேசினால் போதாதா... சுவரையே வெறித்துக் கொண்டிருக்க வேண்டாமே...

மணியைப் பார்த்தார். பனிரெண்டு முப்பது. ஒரு மணிக்கு ஒரு பேசும் வாய்ப்பு வரும். செய்தி நேரத்தில் சாப்பிட அழைப்பு வரும். அப்போது ஓரிரு வார்த்தைகள் பரிமாறப் படும்.

கழிவறையிலிருந்து வெளி வந்தவர் அலைபேசிப் பேச்சு ஓரிரு வினாடிகள் தடைப் பட்டதை உணர்ந்தார். தாழ்வாரக் கதவைத் திறந்து வெளியில் வந்தவர் காலை வெளியிலிருந்த குழாயில் காட்டி சுத்தம் செய்து கொண்டார். பேச்சு தொடர்ந்தது. தெரியும். சின்ன மருமகள், 'இவர், இதை செய்கிறாரா' என்று கவனிப்பதற்குத்தான் அந்த இடைவெளி.

மீண்டும் வந்து சாய்வு நாற்காலியில் அமர்ந்தார். சுவரை வெறிக்க ஆரம்பித்தார். பல்லிகள் இரண்டும்  இப்போது அப்படியே அசைவற்று சிலை போல இருந்தன. பல்லிகளுக்கு ஞாபக மறதி அதிகம் என்று அவர் எங்கோ படித்திருக்கிறார். ஓடி வந்து அப்படியே நின்று, 'தான் யார்? எங்கிருக்கிறோம்? ஏன் இங்கு வந்தோம்? என்று எல்லாம் யோசனை செய்யுமோ? அல்லது அந்த யோசனை கூட இல்லாமல் பரப்ரம்மமாய் நிற்குமோ?' தன்னாலும் எந்த யோசனையும் இல்லாமல் வெறுமே இருக்க இயலுமா? அப்படி இருக்க முடிந்தால் நன்றாக இருக்குமே! 
   
காலை மாலை வித்தியாசம் ஏதும் கிடையாது. படிக்க புத்தகம் ஏதும் பாக்கி இல்லை. மகன்கள் அலுவலகத்திலிருந்து வந்தாலும் பேச்சு ஒன்றும் இருக்காது. அவர்கள் தத்தம் மனைவியோடு பேசுகிறார்களா என்பது கூட சந்தேகம்தான்.

இவர்கள் வயதில் தான் என்ன செய்தோம் என்று யோசனை ஓடியது. உடனே தன்னைத் தனியே விட்டுச் சென்ற மனைவியின் நினைவும் வந்தது. தன்னைத் தேடி வரும் நண்பர்களுடன் மாலை நேரங்களில் உரையாடியது, மனைவி அவர்களுக்குச் சிற்றுண்டி, காபி தந்து உபசரிப்பதோடு, அவ்வப்போது அவளும் உரையாடலில் கலந்து கொள்வது என்று கிண்டலும் கேலியுமாக ஓடிய நாட்கள் அவை.

தன்னை அறியாமல் ஒரு பெருமூச்சு எழுந்தது.

இரு மகன்களும் போட்டி போட்டுக் கொண்டு இரு பக்கமும் படுத்து, தன் மேல் கால் போட்டுக் கொண்டுதான் தூங்குவார்கள். ஜனார்த்தனனைப் பார்க்க வரும் நண்பர்கள் ஜனார்த்தனன் பற்றி எதாவது விளையாட்டாகச் சொல்லி இவர்களை  வம்பிழுத்தால்,அவர்களிடம் இவரை ஆதரித்து சண்டைக்குப் போவார்கள் மகன்கள்.

இப்போது அவர்களுக்குத் தன் மேல் பிரியமில்லை என்றெல்லாம் இல்லை. பேச என்ன இருக்கிறது என்ற ஒரு வெறுமை. அவர்கள் தளம் வேறு. அவர்கள் சொல்லும் கம்பியூட்டர், ஷேர், ப்ராஜெக்ட் என்ற வார்த்தையெல்லாம் பிடிபடுவதில்லை. ஒரு சாதாரண குமாஸ்தாவாக இருந்து ஓய்வு பெற்றவர் அவர். இலக்கியத்தில் மகன்களுக்கு ஈடுபாடு இல்லை. அரசியலில் இவருக்கு ஈடுபாடு இல்லை. இவரிடம் தினமும் பேச அவர்களுக்கு சப்ஜெக்ட் இல்லை.

தனக்குள்ளேயே மனதுக்குள் இரு பாவனைகளில் பேசிக் கொள்வார். இவரிடம் கேட்டுக் கேட்டுத்தான் எல்லோரும் எல்லாம் செய்வது போல பாவனையில் அவர்களின் தினசரி வேலைகளில் இவர் யோசனைகளைச் சொல்வார்.... தனக்குள்ளேயேதான்!

'உன்னைத்தான் யாரோ கேட்டாங்க.. நீ சொல்றதை யார் கேட்கறாங்க... சத்தமா சொல்லிப் பார்த்தால் என்ன நடக்கும்...? என்ன நடக்கும், யாரும் காதிலேயே வாங்கிக் கொள்ள மாட்டாங்க...' .

"என்ன நீயே சிரிச்சுக்கறே தாத்தா"

சுருங்கிய நெற்றியில் இரு கைக் கட்டை விரல்களையும் வைத்துக் கண் மூடி யோசனையில் இருந்தவர் தன்னை மீறி வெளியிலே சிரித்து விட்டதை உணர்ந்து கண் திறந்தார்.

"ஒரு யோசனைடா பையா..."

"என்ன..?"

"நான் எனக்குள்ளேயே..." என்று தொடங்கியவர் 'என்ன' என்று கேள்வி கேட்டவன் பதிலை எதிர்பாராமல் வெளியில் சென்று கொண்டிருப்பதைப் பார்த்து, நிறுத்திக் கொண்டார். மறுபடிக் கண்களை மூடிக் கொண்டார்.

"மாமா...சாப்பிடலாமா..?"

அப்படியே தூங்கிப் போனவரை மருமகளின் குரல் எழுப்பியது. கால்கள் தானாக இயங்க, கைகள் தன்போக்கில் தட்டை எடுத்து வைத்து, சிறிது தண்ணீர் ஊற்றிக் கழுவி, உணவுக்குத் தயாரானார்.

முன்பெல்லாம் என்ன சமையல் என்பதில் ஆர்வம் இருக்கும். இப்போது அது ஒரு கடமையாகவே ஆகி விட்டது. சாப்பிடும்போதும் பேச்சு எதுவும் இருக்காது. 'அப்பா... இன்னும் கொஞ்சம்...", 'போதுமா?' என்று சம்பிரதாயப் பரிவர்த்தனைகள்...

சாப்பிட்டு வந்து மறுபடியும் சாய்வு நாற்காலியில் சாய்ந்தவர் கண்களை மூடினார்.

இந்த டிவிச் சத்தம் காதில் விழாமல் இருந்தால் தேவலாம்!. ஹூம்! கொஞ்சம் தூங்கினால் மாலை வந்து விடும். மாலை வேளைகளில் கொஞ்சம் நடந்து கொண்டிருந்தார். இப்போதெல்லாம் நடந்தால் மூச்சிரைக்கிறது. நின்று நின்று நடந்து வீடு திரும்புவதற்குள் தளர்ந்து போய் விடுகிறது. அப்புறம் இவரை ரொம்ப நேரம் காணோம் என்றால் கவலைப் பட்ட மருமகள்கள் 'நடைப் பயிற்சி வேண்டாம்' என்று சொல்லி விட்டார்கள். மங்கும் மாலை நேரங்களைப் பார்க்கும் போது தன் வயதும் இருப்பும், இருக்கப் போகும் நாட்களும் நினைவை ஆட்டும். நடைப் பயிற்சியை நிறுத்தியது, அந்த நினைவையும் நிறுத்தியது என்பது ஒரு வகையில் ஆறுதல்தான்.

எப்போதாவது இவருக்குப் பிடிக்கும் என்று தோன்றும் நிகழ்சிகளைக் கூட வேறு யாரும் வீட்டில் விரும்புவதில்லை. வைக்க மாட்டார்கள். இவரும் வற்புறுத்துவதில்லை. அபபடி வற்புறுத்திப் பார்க்கும் அளவு இவருக்கும் அதில் ஆர்வமில்லை. வற்புறுத்தினால்தான் வைத்து விடப் போகிறார்களா என்ன...

பிடிக்காத டிவியைக் கொஞ்சம் பார்த்து, நேரம் கடத்தினால் இரவு.... அப்படியே உணவு நேரம் வந்து விடும். அப்புறம் தூக்கம்.... படுத்த உடனே தூங்கி விட முடிகிறதா என்ன?

காலை எழுந்தால் பேப்பர், எதாவது புத்தகம் வந்தால் அது என்று பதினோரு மணி வரை ஓட்டி விடலாம். அப்புறம்?

புதுமைப் பித்தனின் 'ஒரு நாள் கழிந்தது' தலைப்பு நினைவுக்கு வரும். எத்தனை ஒரு நாட்களை இன்னும் கழிக்க வேண்டுமோ? முன்பெல்லாம் மரணம் என்பது பயமாக இருந்தது. இப்போது பயம் குறைந்து விட்டது என்றாலும் ஒரு தயக்கம் இருந்தது. அந்த நேரம் எப்படி இருக்கும்? முற்றாகத் தன் நினைவுகள், ஆசைகள் எல்லாம் முடிவுக்கு வரும் போது எப்படி இருக்கும்? ஆசைகளா? என்ன ஆசைகள்? எண்ணங்கள்...! 

வீட்டில் தன்னையும் சேர்த்து எத்தனை பேர்கள் என்று எண்ணிப் பார்த்தார். இரு மகன்கள், இரு மருமகள்கள், மூன்று பேரன்கள்... இவ்வளவு பேர் இருந்தும் சேர்ந்து இருக்கிறோம் என்ற எண்ணமே இல்லாத நிலையை எண்ணி மறுபடி ஒரு பெருமூச்சு வந்தது. மரியாதைக்கு ஒன்றும் குறைவில்லைதான். பாசம், ப்ரியம் என்பதன் அர்த்தங்கள் எல்லாம் கழன்று, அந்த வார்த்தைகளை வெறும் வார்த்தைகளாக மட்டுமே பார்க்கும் மன நிலையை அடைந்திருந்தார்.

மறுபடியும் ஐம்பது வருடங்கள் முன்பு மனைவி இரு மகன்களுடன் தான் ஒரு ஆளுமை மிக்கவனாய் இருந்த நாட்கள் நினைவுக்கு வந்து அடுத்த பெருமூச்சையும் வெளியேற்றியது. 
                 
அவர் கணக்கில் இன்னும் எவ்வளவு பெருமூச்சுகள் பாக்கி இருக்கின்றனவோ? 
            

ஞாயிறு, 30 அக்டோபர், 2011

கரும்புக் காட்டு நாகம்


                         
வேலாயிக்கு தூக்கமே வரவில்லை. இது என்ன பிழைப்பு? நாளும் செத்து செத்துப் பிழைக்கவேண்டி இருக்கு? எல்லோரும் வேலைக்குப் போறாங்க, சம்பாதிக்கிறாங்க. ஆம்பிளைங்க செய்யுற அதே வேலையை ஒரு பொம்பிளை செய்தாலும் கூலி என்னவோ அவங்களுக்குக் கொடுப்பதைவிட கம்மியாதான் கொடுக்கிறாங்க. தன் புருஷன் செய்து கொண்டிருந்த அதே கரும்புக் காட்டு (கரும்பு வெட்டும்) வேலையை, தான் செய்வோம் என்று போய் நின்ற போது, புருஷன் இறந்து சில மாதங்கள்தான் ஆகியிருந்தது. புருஷன் வேலை செய்து சம்பாதித்து வந்ததை எல்லாவற்றையும் அவனே குடித்துத் தீர்த்துவிடுவான். எப்பொழுதாவது (அதிசயமாக) குடிக்காமல் வந்தான் என்றால், வேலாயி சொல்வது எல்லாவற்றுக்கும் 'பூம் பூம் மாடு ' போல தலையை ஆட்டி ஆட்டிக் கேட்டுக் கொள்வான். கையில் / பையில் இருக்கின்ற பணத்தை, தாராளமாக வேலாயியிடம் எடுத்துக் கொடுத்து விடுவான். 

   

அந்த ஊரில் வேலை கொடுக்கும் ஏஜெண்ட் கமிஷன் கந்தசாமி. யாருக்கு என்ன வேலை தெரியும், எதை எதை யார் எப்படிச் செய்வார்கள் என்பதெல்லாம் கந்தசாமிக்கு அத்துப்படி. அதைவிட யாருக்கு, என்ன வேலை செய்ய ஏற்பாடு செய்தாலும், அவர்களிடம் ஒரு கணிசமான தொகையை கமிஷனாக பெற்றுவிடுவார்.  
            
சென்ற ஆண்டு அந்த ஊருக்கு வந்த இன்சூரன்ஸ் ஏஜெண்ட் ஒருவருக்கு கந்தசாமி நிறைய ஆள் பிடித்துக் கொடுத்தார். வேலாயியின் புருஷன் சீனிக்கும் ஒரு பாலிசி - ஒரு லட்ச ரூபாய்க்கு எடுத்துக் கொடுத்தார், கந்தசாமி. அதற்கான கமிஷனை, அந்த இன்சூரன்ஸ் ஏஜெண்டிடமே கறந்துவிட்டார். சீனிக்கு அன்று ஒரே மகிழ்ச்சி. வேலாயியிடம் பெருமையாக சொல்லிக் கொண்டான். "தே - இங்க பாரு கரும்புக் காட்டுக்கு வேலைக்குப் போகாதே, பூச்சி பொட்டு (பாம்பு என்ற சொல்லையே வாயால் சொல்லமாட்டாள் வேலாயி) எதுனாச்சும் போட்டு வெச்சதுன்னா உசுருக்கு உத்தரவாதம் இல்லே. அப்பிடீன்னெல்லாம் சொல்லுவியே, இப்ப ஒண்ணும் கவலை இல்லே; நான் போயிட்டாலும் உனக்கு ஒரு லட்ச ரூபாய் கிடைக்கும்" என்றான் பெருமையாக. 
              
"மச்சான் - எனக்கு அந்த ஒரு லட்ச ரூபா எல்லாம் வேணாம். என் கூட நீ இருந்தா போதும். பொறக்கப் போற நம்ம குழந்தை, நீ, நான் எல்லோரும் ஒண்ணா சந்தோஷமா வாழ்ந்தா - அது போதும் எனக்கு" என்றாள் வேலாயி. 
                   
நான்கு மாதங்கள்தான் பாலிசி பிரிமியம் கட்டினான் சீனி. அதையும் ஒவ்வொரு மாதமும் வசூல் செய்து டவுனில் இருந்த ஏஜெண்டுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார் கந்தசாமி. நான்காவது தவணை கந்தசாமியிடம் கொடுத்துவிட்டு வேலைக்குப் போனவன், உயிரோடு திரும்பவில்லை. சீனியின் போஸ்ட் மார்ட்டம் தகவல்படி - அவன் இறந்தது குடியாலா அல்லது பாம்பு தீண்டியதாலா அல்லது அவன் உடல் கண்டு எடுக்கப்பட்ட ரயில்வே டிராக் அருகில் - ஏதாவது ரயில் மோதியதாலா அல்லது இவை அனைத்தும் காரணமா என்று பட்டி மண்டபமே நடத்தியிருந்தார் டாக்டர். ஊரிலே சில பேர் கமிஷன் கந்தசாமிதான் சீனியின் மரணத்துக்குக் காரணம்; பட்டணத்து ஏஜெண்டோடு சேர்ந்து ஒரு லட்ச ரூபாய் அடித்துவிட்டார் என்று பேசிக் கொண்டார்கள். சீனியின் இன்சூரன்ஸ் பாலிசி, 'கமிஷன் கந்தசாமி'யிடம்தான் இருந்தது. ('இதெல்லாம் ரொம்ப பத்திரமா வெச்சிக்கணும் சீனி. இது என்கிட்டயே இருக்கட்டும்; நீ மாசா மாசம் பிரிமியம் பணம் மட்டும் கொண்டு வந்து கொடுத்து விடு. நான் அதை ஏஜெண்டுக்கு அனுப்பிடறேன்.') 
                   
இன்சூரன்ஸ் ஆபீசில் ஒரு நுட்பமான பாயிண்டில் பாலிசி தொகை கிடையாது என்று சொல்லிவிட்டார்கள். சீனி இறந்த தேதிக்குப் பிறகு, இரண்டு நாட்கள் கழித்து, அவன் பெயரில், பிரிமியம் கட்டப் பட்டிருந்தது. (ஏஜெண்டுக்கு சீனி இறந்த தகவல், ஒரு வாரம் கழித்துத்தான் தெரியும். எனவே அவர் பிரிமியம் கைக்கு வந்தவுடனேயே சீனி பெயரில் அதைக் கட்டிவிட்டார்.) செத்துப் போனவர் எப்படி இரண்டு நாட்கள் கழித்து பிரிமியம் கட்டினார்? என்று ஒரு (புத்திசாலி) விசாரணை அலுவலர் கேள்வி கேட்க - இன்சூரன்ஸ் அலுவலகம் அதை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு விட்டது. வேலாயி சார்பாக வாதிடுவோர் யாரும் இல்லை. 
            
'யாரைச் சொல்லி என்ன பயன்? வேலாயிக்கும் அவளுடைய குழந்தை மலருக்கும் வயிறு என்ற ஒன்று இருக்கின்றதே? வயிறு மட்டும் இல்லை என்றால் இந்த உலகில் ஏழ்மையே இல்லாமல் இருக்குமே! 
               
வேலாயிக்கு, கரும்பு வெட்டுகின்ற வேலையில் இருக்கின்ற கஷ்டங்கள் தெரியாமல் இல்லை. கரும்புக் காட்டின் சொந்தக்காரி ஒரு பெண் என்பதால், சீனி சாவுக்கு தேடி வந்து ஆறுதல் சொன்னார், அந்தப் பெண்மணி. தயங்கித் தயங்கிதான் வேலாயி அந்தப் பெண்மணியிடம், தன் புருஷன் செய்த வேலையைத் தனக்குக் கொடுக்கமுடியுமா என்று கேட்டாள். 
              
'வேலாயி இது சுலபமான வேலை இல்லை. ரொம்ப ரிஸ்க் இருக்கற வேலை. கரும்புக் காட்டில் கருநாகம், விஷப் பூச்சிகள் எல்லாம் இருக்கும். கரும்போடு கரும்பாக அது இருப்பதை கண்களாலும் காதுகளாலும் உணர முடியும். ஒரு கணம் கவனமில்லாமல் இருந்தால் கூட, உயிருக்கே ஆபத்தாக ஆகிவிடும்.' என்றார். 
                          
'அம்மா இந்த வேலையின் நெளிவு சுளிவு எல்லாம் ஓரளவுக்கு இவரிடமிருந்து தெரிந்துகொண்டேன். என்னால் இந்த வேலையைச் செய்ய முடியும் என்று நம்பிக்கை இருக்கின்றது. நான் செய்கிறேன்' என்றாள் வேலாயி. 
                
'சரி' என்று ஒப்புக் கொண்டார், அந்தக் கரும்புக் காட்டு எஜமானி. 
                   
ஒரு மாதம், வேலை சரியாகத்தான் நடந்தது. முதலில் ஆண் தொழிலாளர்கள் பெருத்த சத்தம் எழுப்பியபடி, கம்புகளால் கரும்புகளைத் தட்டியபடி, கால்களை ஒவ்வொரு அடியும் ஓசை எழும்படி வைத்து, காட்டினுள் செல்வார்கள். பாம்புகள் இருந்தால், அவை இவர்களுக்கு அஞ்சி, காட்டுக்குள் வெகு தூரம் சென்றுவிடும்.  அதன் பிறகு, பெண் தொழிலாளர்கள் ஆண் தொழிலாளர்கள் சென்ற வழியில் இருக்கின்ற கரும்புகளை வெட்டத் துவங்குவார்கள். 'பாம்பு போக்குவது' என்று இதை அந்த ஊர் மக்கள் சொல்வார்கள். நாள் தோறும் கரும்பு வெட்டி, அன்றைய கூலியை, அன்றே வாங்கி, கஞ்சி வைத்து மகளுக்கும் கொடுத்து, தானும் சாப்பிட்டு, சந்தோஷமாக இருந்து வந்தாள் வேலாயி. 
        
கொட்டும் மழையில் ஒரு நாள் கரும்பு வெட்ட சென்று, வானம் கறுத்து இருந்ததாலும், நிலத்தில் நீர் தேங்கி இருந்ததாலும், கையில் பிடித்திருந்த அரிவாளுடன் வழுக்கி விழுந்தாள் வேலாயி. கையில் பிடித்திருந்த அரிவாள், பிடியிலிருந்து நழுவி மண்ணில் விழ, அங்கே பயந்து போன நாகம் ஒன்று பாய்ந்து காட்டுக்குள் சென்றது. அருகே கரும்பு வெட்டிக் கொண்டிருந்த அவளுடைய தோழி காத்தாயி, வேலாயியை கைகளால் தூக்கி, கரும்புக் காட்டுக்கு வெளியே கைத்தாங்கலாக அழைத்து வந்து, அருகில் இருந்த டீக்கடை ஒன்றிலிருந்து டீ வாங்கிக் கொடுத்து ஆசுவாசப் படுத்தினாள். காத்தாயி சொன்னாள்: "வேலாயி - நான் ஒன்டியாளு, இருந்தாலும் செத்தாலும் யாருக்கும் ஒண்ணும் கவலை இல்லே. ஆனா உன்னை நம்பி ஒரு ஜீவன் இருக்குது. அதுவும் பொட்டப் புள்ள. உனக்கு ஏதாவது ஒண்ணு ஆயிடுச்சுன்னா அதனோட கதி என்ன ஆகும்னு யோசிச்சுப் பாரு. நீ பேசாம அந்த கமிஷன் ஏஜென்ட் கந்தசாமியைப் போய்ப் பார்த்து, வேற எதுனாச்சும் பாதுகாப்பான வேலையாப் பாத்துக்கோ. இந்த வேலை உனக்கு வேண்டாம் தாயி". வேலாயிக்கும் அது சரி என்றே பட்டது. 
                      
மறுநாள் காலை கமிஷன் கந்தசாமி வீட்டுக்கு சென்றாள், வேலாயி. கந்தசாமி ஆரம்பத்தில் சீனி பற்றி மிகவும் வருத்தப் பட்டு, இரக்கப் பட்டுப் பேசினார். அதன் பிறகு, வேலாயி வேலை கேட்டு வந்த விவரம் தெரிந்தவுடன், "வேலாயி, உனக்கு இல்லாத வேலையா? இன்னும் பார்க்கப் போனால், உன் புருஷனுக்கு சேர வேண்டிய இன்சூரன்ஸ் தொகை கூட, இன்சூரன்ஸ் கம்பெனி மேல கேஸ் போட்டு, உனக்கு ஒரு மாசத்துல வாங்கிக் கொடுத்துவிடுவேன். கரும்புக் காட்டுல வேலை இல்லாத நேரங்களில் உன் புருஷன் கட்டிடம் கட்டுகின்ற இடங்களில் வேலை செய்தான். நீ சித்தாளு வேலை எல்லாம் செய்வியா? வேற என்ன வேலை எல்லாம் தெரியும்? நான் சொன்னாக்க உனக்கு மறுநாளே வேலை போட்டுக் கொடுக்க ஆட்கள் இருக்காங்க. உன்னாலே நான் கேட்கிற கமிஷனைக் கொடுக்க முடியுமா?" 
                
"கமிஷன் எல்லாம் கொடுக்கிற நிலைமையிலா நான் இருக்கிறேன் சாமி? வாங்குகிற கூலி, எனக்கும் என் குழந்தைக்கும் வாய்க்கும் வயித்துக்கும்தான் சரியா இருக்கு." என்றாள் வேலாயி. 
               
"அது எனக்குத் தெரியும் வேலாயி. இன்னிக்குப் பொழுது சாஞ்சதும் - அதோ அங்கே இருக்கற தோட்டக்காரன் குடிசைக்கு வந்துடு. என்னுடைய கமிஷன் என்னன்னு சொல்லுறேன். தோட்டக்காரனுக்கு இன்னிக்கு சாயந்திரம் லீவு கொடுத்துடறேன் " என்றார் கந்தசாமி,  ஒரு மாதிரியாகச் சிரித்தபடி.
               
வேலாயி ஒரு கணம் திகைத்து நின்றாள். பிறகு, பதில் எதுவும் பேசாமல், நேரே வீட்டை நோக்கிச் சென்றாள். வழியில் கரும்புக் காட்டைக் கடக்கும்பொழுது அவளுக்கு மிகவும் துக்கமாக இருந்தது. கண்ணீர் விட்ட படி, தன் விதியையும், வாழ்வில் தனக்கு ஏற்பட்ட இன்னல்களையும் மனதுக்குள் எண்ணிக் குமைந்தவாறு சென்றாள், வேலாயி.  
                  
வீட்டுக்கு வந்ததும், வேலாயியின் வருத்தம் கோபமாக மாறியது. 'சீனி, கந்தசாமி சம்பந்தமாக, ஊரார் சொல்லுகின்ற இன்சூரன்ஸ் கம்பெனி கதைகள் உண்மையாக இருக்குமோ' என்று கூட அவளுக்குத் தோன்றியது. பொழுது சாய்ந்ததும், ஒரு முடிவோடு, கரும்பு வெட்டுகின்ற அரிவாளை எடுத்துக் கொண்டு கமிஷன் கந்தசாமியின் தோட்டக் குடிசையை நோக்கிச் சென்றாள், வேலாயி.  
                  
மீண்டும் கரும்பு காட்டைக் கடக்கையில், தனக்கு முன்பு, நெளிந்து நெளிந்து சென்று கொண்டு இருக்கின்ற கருநாகத்தின் மீது அவள் பார்வை விழுந்தது. நேற்று காலை அவள் அரிவாள் விழுந்தபோது தப்பிச் சென்ற அதே நாகம். அதே நீளம், அதே கனம். ஆமாம்; அதே நாகம்தான்! வேலாயிக்கு அந்த நாகத்தின் மீதும் ஒரே ஆத்திரமாக வந்தது. இது தன் கண்ணில் பட்டதால்தானே, அவள் வேறு வேலை தேட முடிவு செய்தாள்! அதனால்தானே கந்தசாமி போன்ற 'நிழல் நாகங்கள்' தன்னைக் காணிக்கையாகக் கேட்கின்றன? முதலில் இதை வெட்டிச் சாய்த்துவிட்டு பிறகு, கந்தசாமியை கடவுளுக்குக் காணிக்கை ஆக்குவோம்' என்று நினைத்தவாறு வேகமாக அதனைப் பின் தொடர்ந்தாள் வேலாயி. 
                   
வேலாயி தொடர்ந்து வருகிறாளா என்று பார்ப்பது போல, திரும்பித் திரும்பிப் பார்த்தபடி சென்ற நாகம், கந்தசாமியின் தோட்டக் குடிசை வாயில் கதவுப் பக்கம் போய், எங்கே செல்வது என்று சற்றுத் தடுமாறியது. வேலாயியை (மட்டும்) குடிசை ஜன்னல் வழியாகப் பார்த்த கந்தசாமி, உள்ளிருந்து வந்து குடிசைக் கதவைத் திறந்தார். முதல் விருந்தாளியாக, நாகம் உள்ளே நுழைந்தது. வேலாயி, சட்டென்று கதவை வெளியிலிருந்து இழுத்துத் தாளிட்டாள். தன வீட்டை நோக்கி ஓட்டமும் நடையுமாக செல்லத் துவங்கிய அவளின் காதுகளில், கந்தசாமியின் அலறல் லேசாக விழுந்தது.     
**** ***** 
மீண்டும் கரும்புக் காட்டுக்கு வேலைக்கு வந்த வேலாயியை, அதிசயமாகப் பார்த்தாள் காத்தாயி. வேலாயி சொன்னாள்: "என் புருஷன் இங்கேதான் மறு பிறவி எடுத்து வாழ்ந்து கொண்டு இருக்காரு. அவரு எனக்கு எந்த கஷ்டமும் வராமப் பாத்துக்குவாரு . இந்தக் கரும்புக் காட்டுல இருக்கறது எல்லாம் நாகப் பாம்புகள் இல்லை; நல்ல பாம்புகள்" என்றாள். 
     

ஞாயிறு -121A


ஞாயிறு - 121

வெள்ளி, 28 அக்டோபர், 2011

தலைப்'பூ'(க்)கள்

                        
சமீபத்தில் எங்கேயோ ஜெயகாந்தனின் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' தலைப்பு எவ்வளவு அழகு என்று சிலாகிக்கப் பட்டதைப் படித்தது ஞாபகம் வர, நான் படித்த, கேள்விப்பட்ட புத்தகங்களின் தலைப்பு எவை எவை மனதில் நிற்கின்றன என்று யோசித்துப் பார்த்தேன்.
கொஞ்சம் இலக்கிய டச் இருக்க வேண்டும். வித்தியாச வார்த்தைக் கோர்ப்பாக, ஏதோ ஒரு காரணத்தால் மனதில் பதியும் வண்ணம், புதிய சிந்தனைகளை, நம் அனுபவங்களைத் தூண்டும் வண்ணம் இருக்கும், தலைப்புகளை எண்ணிப் பார்க்கிறேன்!

மணியனின் 'சொல்லத்தான் நினைக்கிறேன்', 'மோகம் முப்பது வருஷம்'.
ஜெயகாந்தனின் 'அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்'. ஆனால் இந்தத் தலைப்பின் அருமை கதையைப் படித்தால்தான் தெரியும். 'கருணையினால் அல்ல', 'யாருக்காக அழுதான்', 'யுக சந்தி', 'சுய தரிசனம்' தலைப்புகள் நம் மனதில் வேறு சிந்தனைகளைத் தோற்றுவிக்கும், அல்லது ஓர் எதிர்பார்ப்பை உருவாக்கும்!

ஒரு தலைப்பு இப்படி நம் மனதில் தோற்றுவிக்கும் சிந்தனைக்கும் அல்லது எதிர்பார்ப்பிற்கும் மாறாக அந்தப் படைப்பு இருந்தால் என்ன செய்வோம்? சில சமயம் பிடிக்காமலும், சில சமயம் அதனாலேயே பிடித்தும் போகலாம்!
    
சுஜாதாவின் 'வானமெனும் வீதியிலே', 'பிரிவோம் சந்திப்போம்', 'கனவுத் தொழிற்சாலை', 'கரையெல்லாம் செண்பகப்பூ'....
      
யோசித்துப் பார்க்கும்போது தலைப்பு வைப்பதில் சுஜாதா ஜித்தர் என்று தெரிகிறது. இன்னும் நிறைய நிறைய தலைப்புகள் இவரிடமிருந்து எடுக்கலாம்.
     
பாலகுமாரனின் 'இரும்புக் குதிரைகள்', 'மெர்க்குரிப் பூக்கள்'. பாலகுமாரன் அப்புறம் நிறைய புகழ் பெற்ற பாடல்களின் முதல் வரிகளைத் தலைப்பாக்கினார். ஒரே புத்தகத்தில் பாலகுமாரன் ஒரு புறம் 'ஏதோ ஒரு நதியில்' என்ற தலைப்பிலும், மறுபக்கம் சுப்ரமணிய ராஜு 'எங்கோ ஒரு இரவில்' என்ற தலைப்பிலும் எழுதினார்கள்.
      
தலைப்பு முதலில் மனதில் தோன்றி அதற்கு எழுதுவது என்பதை விட, மனதில் தோன்றிய கருவை எழுத்து வடிவமாக்கி அப்புறம் தலைப்பிடுவது பொருத்தமாய் இருக்கலாம் என்பது என் எண்ணம். இந்தத் தலைப்பில் எழுதியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் ஏதாவது ஒரு தலைப்பில் எழுதுவது பெரும்பாலும் சரி வராது என்று நினைக்கிறேன்.

நீல பத்மநாபனின் 'பள்ளிகொண்டபுரம்' தலைப்பு ஒரு அழகான உருவகம். நிறைய தலைப்புகள், படித்து முடித்த பின்தான் அர்த்தம் புரியும். அந்த வகையில் இந்தக் கதையை சேர்க்கலாம்.
  
லா.ச.ராவின் 'சிந்தா நதி' ஒரு அழகான தலைப்பு. படித்தாலும் பாதி (ஒரு கௌரவத்துக்கு பாதி என்று சொல்லிக் கொள்கிறேன்) புரியாத (எனக்கு...எனக்கு...) எழுத்துகளுக்குச் சொந்தக்காரர்.

கல்கியின் 'பொங்குமாங்கடல்'.என்ன ஒரு வார்த்தைக்கோர்ப்பு.. என்ன தோன்றுகிறது?... பொங்கு மாக்கடல் குற்றாலத்தில் பேரருவி விழுந்து சிதறும் இடம். பொங்குமாங்கடல்.... சுனாமி? 'பொய்மான் கரடு' என்ற தலைப்பும் ஓர்  இடத்தைக் குறிப்பதுதான். தஞ்சையில் இருந்த போது சென்ற சிவகங்கைப் பூங்காவின் விளையாட்டு ரயில் நிற்கும் ஒரு 'ஸ்டேஷனின்' பெயர் கூட 'பொய் மான் கரடுதான் ! மற்றும் கல்கியின் 'கள்வனின் காதலி'
   
நாபாவின் 'சாயங்கால மேகங்கள்', 'ஆன்மாவின் ராகங்கள்', 'பொன் விலங்கு', 'நிசப்த சங்கீதம்', 'சமுதாய வீதி' (இது தலைப்பினாலா, படித்த கதையினாலா என்று தெரியாது.. முத்துக்குமாரனை மறக்க முடியாது, மாதவியையும்!).
  
ராஜம் கிருஷ்ணனின் 'முள்ளும் மலரும்'. குழந்தைகள் இல்லாத ராஜம் கிருஷ்ணன் கணவரின் மறைவுக்குப் பின் தற்சமயம் சென்னை விஸ்ராந்தி ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் இருப்பதாக தகவல்.
  
இந்திரா பார்த்தசாரதியின் 'குருதிப்புனல்',
  
தி ஜானகிராமனின் 'மோகமுள்', 'பிடிகருணை'.
  
லக்ஷ்மியின் கதவு திறந்தால்', (ஒரு எதிர்பார்ப்பு, என்ன என்ற கேள்வி) 'மீண்டும் வசந்தம்'. (கதையினால் தலைப்பு கவர்ந்திருக்கலாம்... ஒரு நம்பிக்கை..)
  
அப்துல் ரகுமானின் 'இல்லையிலும் இருக்கிறான்', ('அட!')
  
மு. மேத்தாவின் 'கண்ணீர்ப்பூக்கள்' (படிக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். இதில் வரும் ஒரு புதுக் கவிதையை மறந்தவர்களும் இருக்க மாட்டார்கள்!), 'வெளிச்சம் வெளியே இல்லை'. (நிம்மதியை வெளியே தேடாதே என்பார்கள்... உள்ளேயே இருக்கிறது என்பார்களே அதை மாற்றி...)
   
புஷ்பா தங்கதுரையின் 'நீ நான் நிலா" (பு. த அந்த கால கட்டத்தில் எழுதிக் கொண்டிருந்த பாணியிலிருந்து மாறி எழுதிய ஒரு காதல் கதை)

சி ஏ பாலன் (என்று நினைவு) எழுதிய 'தூக்குமர நிழலில்' பயமுறுத்தும் தலைப்பு.

========================================
யோசனை ஓட்டத்தில் என் எண்ணத்தை எனக்குத் தெரிந்த அளவில் இங்கு பகிர்ந்துள்ளேன். பரந்த வாசகானுபவம் உடைய வாசகர்கள் தங்கள் எண்ணத்தையும் மன ஓட்டத்தையும் சொல்லலாமே...  
                       

வியாழன், 27 அக்டோபர், 2011

உள் பெட்டியிலிருந்து 10 11

                   
அதெல்லாம் மறந்துடுங்க....!

பிரிந்து போன நினைவுகள்
ஒவ்வொரு நாளும்
கண்களுக்குள்
வந்து கொண்டுதான்
இருக்கின்றன
கனவுகளாக அல்ல,
கண்ணீராக...   
-------------------------------------------- 
இயல்பியல் சுவை
 மேலுலகத்தில் ஐன்ஸ்டீனும் நியூட்டனும் ஒளிந்துப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். நியூட்டன் ஒளிந்து கொள்ள வேண்டும். ஐன்ஸ்டீன் பிடிக்க வேண்டும். நியூட்டன் எங்கும் சென்று ஒளியாமல் ஐன்ஸ்டீனுக்கு சற்று தூரத்தில் நின்று கொண்டார்.

ஐன்ஸ்டீன்: "நியூட்டன்... உங்களைக் கண்டு பிடித்து விட்டேன்..."

நியூட்டன்: " நான் நியூட்டன் இல்லை. உங்களிடமிருந்து ஒரு மீட்டர் ஸ்கொயரில் நான் நிற்பதால் நான் நியூட்டன்/மீட்டர் ஸ்கொயர். எனவே நான் பாஸ்கல்"

ஐன்ஸ்டீன்: "செத்தும் சாவடிக்கிறீங்களே பாஸ்..."
------------------------------------  
சமூக சேவை

டிரைவிங் லைசன்ஸ், பேங்க் பாஸ்புக், ரேஷன் கார்ட், பாஸ்போர்ட்ஸ்.சர்டிபிகேட்டுகள் என்று எதை கண்டெடுத்தாலும் அருகில் உள்ள தபால் பெட்டியில் போட்டு விட்டால் போதுமாம். அது சம்பந்தப் பட்டவரிடம்  சென்று சேர்ந்து விடுமாம்.  
*** *** ***
ஆதார் (12 இலக்க) எண் குறித்து பழைய பதிவு ஒன்றில் எழுதி இருந்தோம். ஆதார் படிவத்தை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக்கவம்: ஆதார்    

கார்டு பெற தேவையான டாகுமென்ட்ஸ் இங்கு கிளிக்கிப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். -
---------------------------------------
கதாநாயகராஜகம்
சீன நண்பனைப் பார்க்கச் சென்றான் அவன். சீனன் அவனைப் பார்த்து தீனமாக 'ஹூங் சூங் கியாங்' என்று ஏதோ சொல்லிட்டு செத்து விட, அதற்கு அர்த்தம் கண்டு பிடித்து அவன் கடைசி ஆசையை நிறைவேற்றி விடத் தீர்மானிக்கும் அவன் அலைந்து திரிந்து அர்த்தம் தேடி கடைசியில் சீனாவுக்கே சென்று அர்த்தம் தெரிந்து கொண்டான். என்ன தெரியுமா....?
    
"ஆக்சிஜன் டியூப் மேலேருந்து காலை எடுடா *#@&*@$*&@௩-௯+%@#..."
-----------------------------------------   
டெக்னாலஜியின் உச்சம்
   
மகனுக்கு அப்பாவின் ஈ மெயில்.
  
"அன்பு மகனே...! நலமா...? நானும் உன் அம்மாவும் நலம்... நாங்கள் உன்னை ரொம்பவே மிஸ் செய்கிறோம்... தயவு செய்து கம்பியூட்டரை அணைத்துவிட்டு, கீழே இறங்கி வந்தால் நாம் நம் இரவு உணவை சாப்பிடலாம். நானும் உன் அம்மாவும் சாப்பிடாமல் காத்திருக்கிறோம்..."
-------------------------------------------------    
சிக்கலான கேள்விகளுக்கு புத்திசாலி பதில்கள்...  
    
திப்பு சுல்தான் எந்தப் போரில் இறந்தார்?
அவரின் கடைசிப் போரில்.

சுதந்திரப் பிரகடனம் எங்கு கையெழுத்திடப் பட்டது?
அந்தப் பக்கத்தின் அடியில்.

விவாகரத்தின் முக்கியக் காரணம் என்ன?
திருமணம்!  
-------------------------------------------    
இலவசமாய்க் கிடைப்பது...
விமான நிலையத்தில் தொடர்ந்து புகைத்துக் கொண்டிருந்தவனிடம் நெருங்கிய ஒருவன், "ஒரு நாளைக்கு எவ்வளவு புகைப்பீர்கள்?"

"ஏன்?"

"இப்படித் தொடர்ந்து புகை பிடிக்கிறீர்களே... இதை நிறுத்தினால், யார் கண்டார்கள், இதோ எதிரில் நிற்கிறதே இந்த விமானம் ஒரு நாள் உங்களுக்குச் சொந்தமாகலாம்"

"விமானம் உங்களுடையதா?

"இல்லை..."

"உங்கள் அறிவுரைக்கு நன்றி... ஆனால் அந்த விமானம் என்னுடையதுதான்.."

(இ க நீ ) தேவை இல்லாத அறிவுரை உடல்நலத்திற்கு தீங்கானது!
-----------------------------------------------  
        

செவ்வாய், 25 அக்டோபர், 2011

தீபாவளி பழசும், புதுசும் !

                          
புதுத் துணி எடுத்துத் தைக்கக் கொடுத்து, தையற்காரர் தைத்து விட்டாரா இல்லையா எனும் கவுன்ட் டவுனில் தீபாவளி பரபரப்புத் தொடங்க, எத்தனை ரூபாய்க்கு பட்டாசு வகைகள் வாங்க அனுமதி கிடைக்கும் என்று கணக்குப் போடும் மனம். 
         
முதல் நாள் இரவு முதல் அம்மா & பாட்டி செய்யும் பட்சணங்களை திருட்டுத் தனமாய் எடுத்து ஓடும் சுவாரஸ்யமும் தன பங்கு வெடி மத்தாப்பூக்களை பத்திரப் படுத்தி ஒளித்து வைத்து இரவு சீக்கிரம் படுத்து எப்போது விடியும் என்று ... 
    
மூன்று மணிக்கு எழுந்து (குளிக்காமல்) முதல் சர வெடி விடும் வழக்கமும், கடைக்குட்டியிலிருந்து தொடங்கி ஒவ்வொருவராக மனைப் பலகையில் அமர்ந்து பாட்டி கையால் தலையில் "கொஞ்சமா பாட்டி... கொஞ்சமா... நிறைய வைக்காதீங்க" என்று கெஞ்சலுடன் எண்ணெய் தேய்த்துக் கொண்டு... 
   
விறகு அடுப்பில் தவலையில் கொதித்துக் கொண்டிருக்கும் வெந்நீரில் ஒரு வாளி எடுத்து குளிக்கப் போய், நாலடி பாத்ரூமில் கங்கா ஸ்நானம் செய்து கண்ணில் சீயக்காய்ச் சிவப்புடன் வெளி வந்து, தீபாவளி மருந்து வாங்கி, பாட்டி கையால் புதுத் துணி கையில் வாங்கி காலில் விழுந்து ஆசி வாங்கி உள்ளே ஓடி ... 

புத்தாடையுடன் வெளி வந்து, சாமிக்கு, பெரியவங்களுக்கு நமஸ்காரம்  செய்து,  சாஸ்திரத்துக்கு வெடி வெடிக்கத் தொடங்கி நண்பர்களைப் பார்க்கக் கிளம்பி, அவர்கள் புத்தாடையைச் சிலாகித்து, நம் உடையைக் காட்டி,

   
தெருத் தெருவாக அலைந்து வெடித்து, பேசி, சிரித்து, முறைத்து, சண்டையிட்டு, கூடி மகிழ்ந்து இட்லி, பஜ்ஜி சாம்பார் என்று சாப்பிட்டு மிஞ்சிய வெடிகளை பத்திரப் படுத்தி, வெடிக்காத வெடிகளை மருந்தை வெளியில் எடுத்து பேப்பரில் கொட்டி கொளுத்தி, கைக்காயம் கால்காயம் பட்டு, பெற்றவர்களை டென்ஷன் ஏற்றி ... 
   
கனமான தீபாவளி மலர் புத்தகத்தை இரு கைகளால் தூக்கி, குமுதம் தீபாவளி மலராக இருந்தால் குனேகா மணத்தை கண்களை மூடி அனுபவித்து, கல்கி / ஆனந்தவிகடன் மலர்களில் இருக்கும் தெய்வப் படங்களை பரவசத்துடன் பார்த்து, தீபாவளி மலரின் ஒவ்வொரு பக்கத்திலும் (விளம்பரங்கள் உள்பட) இருந்த தீபாவளியை அனுபவித்து ....

முடிந்தால் அன்று வெளியாகி இருக்கும் புதுப் படத்துக்குப் போய் அல்லது இரண்டொரு நாள் கழித்து, பள்ளி செல்லும்போது புத்தாடை அணிந்து, பார்த்த அல்லது பார்க்கப் பட்ட புதுப் படங்களை அலசி..

ம் ... ஹூம்...

இப்போதெல்லாம் தீபாவளிச் சத்தம் ஆறு மணிக்கு மேல்தான் கேட்கத் தொடங்குகிறது. யாரும் அதிகாலையில் எழுவதில்லை. பட்சணங்கள் வீட்டில் செய்வதை விட கடையில் வாங்குவது எளிதாக இருக்கிறது. சுவாரஸ்யம்தான் மிஸ்ஸிங். 
              
ஆண்களுக்கு எப்போதும் உடை வகைகளிலும், நிற வாய்ப்புகளிலும் சாய்ஸ் கம்மி... ரொம்பக் கம்மி. பெண் குழந்தைகளுக்கு விதம் விதமாக வண்ண வண்ண உடைகள் எப்போதும் கிடைக்கும்.  ஆனால் இன்று தீபாவளிக்கு எந்த 'வயசுப் பெண்'ணாவது எடுக்கும் இரண்டு மூன்று உடைகளில் ஒரு உடையாகவாவது பாவாடைத் தாவணி எடுக்கிறார்களோ... நகரில் இந்த உடை அணிந்த பெண்களைப் பார்ப்பதே அரிய காட்சியாகி விட்டது.   
                   
வெடி வெடிப்பதை ஒத்திப் போட்டு பட்டி மன்றங்களும் இந்திய / உலகத் தொலைக் காட்சிகளில் முதல் முறையாகத் திரைப் படங்களையும் பார்த்து,    
    
வெடிப்பதற்கு இடமின்றி, பக்கத்து வீடுகளின் முறைப்புக்கிடையில் சிக்கனமாகச் சத்தப் படுத்தி, நண்பர்களின்றி, கணினியும் தொலைக் காட்சியுமாக முடங்கி ... 
             
பழைய தீபாவளி மலரின் கனத்தையும், பழைய எழுத்தாளர்களின் படைப்புகளையும், படித்திருந்த நாட்களையும் நினைத்து, அன்று உயிரோடு இருந்தவர்களோடு கொண்டாடிய தீபாவளிகளை வலியோடு நினைத்துப் பார்த்து .... 
                     
அவரவர்களுக்குப் பிடித்ததைச் செய்வதுதான் சந்தோஷம் என்றால் இப்போதும் சந்தோஷமாகத்தான் இருக்கிறார்கள் மக்கள்! நாம் விரும்பியதையே இப்போதும் செய்ய வேண்டும் நாம் ரசித்ததையே இப்போதும் ரசிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியுமா என்ன...
                      
இந்த வருடமும் தீபாவளி வந்து விட்டது. இதுவும் கடந்து போகும்!