திங்கள், 30 நவம்பர், 2009

வரும்,... ஆனா .... வர்ராது!

நாம  அடிச்சா,  அது  மொட்டை, 
அதுவா  விழுந்தா? அது  சொட்டை!

'Dye'  னா  மண்டையில  போடுறது,
'Die' னா மண்டைய  போடுறது!
 
யானை  மேல  நம்ம  உக்காந்தா நமக்கு சவாரி!
யானை நம்ம  மேல உக்காந்தா நமக்கு ஒப்பாரி!

தண்ணி யில  கப்பல்  போனா நமக்கு ஜாலி;
கப்பல் உள்ள  தண்ணி  போனா நாம காலி!

ஒடம்புல  எத்தனை  செல்  இருந்தாலும்  அதுல  'simcard' போட  முடியாது .

காலண்டர்ல நாம  என்ன  தேதி  கிழிச்சோம்கறது  முக்கியம்  இல்ல, கிழிச்ச 
தேதியில  நாம  என்னத்த  கிழிச்சோம்கறது தான்  முக்கியம்.

காக்கா,  கா  ..கா  ன்னு  கத்தறதால  அதை காகா -ன்னு  கூப்பிடறோம் .. ஆனா  
மாடு,  மா  .. மா ன்னு  கத்தறதால  அதை  மாமா -ன்னு  கூப்பிடமுடியுமா?

ஓட்டப் பந்தயத்துல  காலு  எவ்வளவு  வேகமா  ஓடினாலும்
பரிசு  கைக்குத்தான்  கிடைக்கும்!!

பல்லு  வலின்னா பல்ல  புடுங்கலாம்  ஆனா 
கண்ணு  வலின்னா கண்ணைப் புடுங்கமுடியுமா?. :)

உலகம்  தெரியாம  வளர்றவர்  வெகுளி 
கிரிக்கெட்  தெரியாம  விளையாடறவர் ..... (எடிடெட்)

சோடவ கூலர்ல வச்சா  கூலிங்  சோடா  ஆகும், அதுக்காக,
சோடாவ வாஷிங் மெஷின்ல வெச்சா வாஷிங்  சோடா  ஆகுமா?

கோவில்  மணிய  நம்ம  அடிச்சா  சத்தம்  வரும் ... ஆனா 
கோவில்  மணி  நம்மள  அடிச்சா  ரத்தம் வரும்!

சௌத் இந்தியா-ல  நார்த்தங்காய்  கிடைக்கும்; ஆனா 
நார்த் இந்தியா -ல  சௌத்தங்காய்  கிடைக்குமா?

பாண்ட  போட்டு  முட்டிப்போட  முடியும், ஆனா 
முட்டிபோட்டு  பாண்ட் போட  முடியுமா ?

தண்ணீரை  தண்ணின்னு  சொல்லலாம், ஆனா 
பன்னீரை பன்னின்னு  சொல்ல  முடியுமா?

ரசிகர் சொல்வது:
AI + AIO = ?
இது  எப்புடி  இருக்கு? 
Why blood? Same blood!!!

இப்படித் தானே இருக்கும்  எனக்கும், இத  நான்  படிக்கும்போது !!!

VENKAT SUBRAMANIAM :: SAPREV:: UK

வெள்ளி, 27 நவம்பர், 2009

கேள்வி பிறந்தது இன்று...

மனையாளும் மக்களும் வாழ்வும்
தனமும் தன் வாயின் மட்டே
இனமான சுற்றம் மயான மட்டே
வழிக்கேது துணை?
தினையா மகவெள் ளளவாகினுமுன்பு
செய்த தவந்
தனியாள் வென்றும் பரலோகஞ்
சித்திக்குஞ் சத்தியமே


அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே
விழியம்பொழுக
மெத்திய மாதரும் வீதி மட்டே
விம்மி விம்மியிரு
கைத்தல மேல்வைத் தழுமைந்
தருஞ்சுடுகாடு காடுமட்டே
பற்றித் தொடருமிருவினைப்
பண்ணிய பாவமுமே ...


விட்டுவிடப் போகுதுயிர்
சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார்...


மேலே உள்ள பட்டினத்தார் பாடலைப் படிக்கும் போது உங்களுக்கு கண்ணதாசனின் ஒரு பாடல் நினைவு வரும்.


பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும்
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்


பட்டினத்தாரின் இந்த வரிகளைப் படிக்கையில் MS குரலில் வரிகள் மனதில் ஓடும்.


பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலத்தை வாழ்க்கை எனப் பெயரிட்டு, 'வாழ்கிறோம்' என்ற பெயரில் 'எதிர்காலத்துக்கு' என்று என்னென்னவோ சேர்க்கிறோம்.


கடவுளிடம் இது வேண்டும் அது வேண்டும் என்று வரங்களின் லிஸ்ட் போடும் மனிதன், நாம் கேட்காமலேயே அவன் நம் பெயரில் எழுதி வைத்துள்ள இந்தப் பரிசை மறுக்க என்ன வழி என்று ஆராய்ச்சி செய்து வருகிறான்...


நாளை இல்லை, அடுத்த நொடி நம்முடையதா என்று தெரியாமல், யாருக்கு என்று புரியாமல், 'சேர்த்து' வைக்கிறோம்.


குழந்தை முதல் முதுமை வரை அடுத்து என்ன என்று அறிந்த மனிதன் மரணத்துக்குப் பின் என்ன என்ற கேள்வியை இன்னும் பதிலளிக்க முடியாமல் திணறுகிறான். தெரிந்ததாக நினைப்பது எல்லாம் ஆவி உலகம், சொர்க்கம், நரகம் கதைகள்தான். நாம் வாங்கிய A/C என்ன, ஒரு விசிறியைக் கூட நரகத்துக்குக் கொண்டு போக முடியாது. பின் எதற்கு சேர்க்கிறோம்? நம் வாரிசுகளுக்கா?


பாவ புண்ணியம் சேர்த்துக் கொண்டு அதற்கேற்ப சொர்க்கம், நரகம் என்று எண்ணிக் கொண்டு செயல்படும் நமக்கு அடுத்த பிறவிகள், முந்தைய பிறவிகளில் நம்பிக்கை.


போன பிறவியில் எதிரி, இந்தப் பிறவியில் உங்கள் மகன் என்று எந்த பட்சியாவது, மகானாவது சொன்னால் நம்புகிறோம். அது போல நம் முந்தைய பிறவியின் தம்பி இந்தப் பிறவியில் நம் மனைவியாக, நம் நாய் அடுத்த பிறவியில் நம் உறவினராக...இப்படி மாறி வரும் உறவு உயிர்கள்......




  • வாரிசு என்பவர்கள் நம் வாரிசுகள்தானா?
  • இதில் யாருக்கு என்று சேர்த்து வைக்கிறோம்?
  • பல விஞ்ஞான முன்னேற்றங்கள் அடுத்தடுத்து நிகழும்போது இந்தக் கேள்வி மட்டும் விடை அறியாமல் ஆண்டாண்டு காலமாய் நிற்பது ஏன்?
  • மரணத்துக்குப் பிறகு என்ன என்று தெரிந்து விட்டால் மனிதன் என்ன செய்வான்?
  • மரணத்தை வென்றுவிட மனிதன் கற்றுக் கொண்டு விட்டால் பூமி என்ன ஆகும்?

வியாழன், 26 நவம்பர், 2009

படைப்பாற்றல் bits


நடைமுறை வாழ்க்கையில், சிலரது படைப்பாற்றல் அப்ரோச் - மிகவும் எளிமையாக ஆனால் எபெக்டிவ் ஆக இருக்கும்.



அந்தக் காலத்தில், எங்கள் கம்பெனியில், மூன்று வகை அப்ரண்டிஸ்கள் உண்டு. முறையே, ஐ டி ஐ முடித்தவர்கள், டிப்ளமா முடித்தவர்கள், டிகிரி முடித்தவர்கள். - டெக்னிகல் அப்ரண்டிஸ், எஞ்சினீரிங் அப்ரண்டிஸ் , கிராஜுவேட் அப்ரண்டிஸ் என்று பெயர். 


நான் அப்ரண்டிஸ் ஆக சேர்ந்த காலத்தில் - பக்தா என்ற பெயரில் ஒரு டெரரிஸ்ட்தான் பயிற்சி நிலைய அதிகாரி. அவர் டெக்னிகல் அப்ரண்டிச்களை அதிகம் கண்டிக்கமாட்டார். அதற்கு எத்தனையோ காரணங்களை ஆங்காங்கே பல டிபார்ட்மென்ட் பரந்தாமர்கள் கூறியிருந்தார்கள். டிகிரி படித்த அப்ரண்டிஸ்களையும் - அதிகம் சீண்ட மாட்டார். ஆனால் டிப்ளமா படித்துவிட்டு வந்து சேர்ந்த எங்களை மட்டும் சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் போட்டுத் தள்ளிவிடுவார்.


கம்பெனி டைம் காலை ஏழரை முதல் மாலை நான்கு மணி வரை. 
காலையில் யார் எப்படி வருகிறார்களோ - ஆனால் மாலையில் - நான்கு மணிக்கு, (சரியாகச் சொன்னால் மூன்று ஐம்பத்தைந்துக்கு) பயிற்சி நிலையத்தின் குத்து கடிகாரத்திற்கு (ஹி ஹி - பஞ்ச களாக்குங்க)  முன் அரை வட்ட வடிவில் அத்தனை டெக்னிகல் அப்ரண்டிஸ் தோழர்களும்   கூட்டம் கூடி கும்மியடிக்கத் தயாராக நின்றுகொண்டிருப்பார்கள். மணி மூன்று ஐம்பத்தைந்து தொடங்கி மூன்று ஐம்பத்தாறுக்குள் அவர்கள் எல்லோரும் படபடவென்று, பஞ்ச கிளாக்கில் அவரவர்களுடைய அட்டையை சொருகி, படார் படார் என நேரத்தைப் பஞ்ச செய்து - அவைகளை அவசரம் அவசரமாக ராக்கில் செருகிவிட்டு - நாற்பது தோழர்களும், நாலுகால் பாய்ச்சலில், மெய்ன் கேட்டை அடைந்துவிடுவார்கள். நாலு மணி சங்கு காதில் கேட்டதும் - வேகமாக ஓடி, எண்ணூர் ஸ்டேஷனில் காத்திருக்கும் லோக்கல் டிரைன் ஏறி - இடம் பிடித்து, சென்ட்ரல் இறங்கி - அங்கேயும் ஓடி -- அப்பப்பா அப்ரண்டிஸ் வாழ்க்கையில் - என்றும் எங்கேயும் ஓட்டம்தான்! 


மூன்று ஐம்பத்தாறு தொடங்கி, நான்கு மணிக்குள், யாராவது பயிற்சி நிலைய பஞ்ச கிளாக்குக்கும் மெய்ன் கேட்டுக்கும் இடையே மாட்டினார்கள் என்றால் - டெக்னிகல் அப்ரண்டிஸ் தோழர்கள் அவர்களை இடித்து, கீழே தள்ளி, அவர்கள் மேல் தீமிதி உற்சவம்போல ஓடிவிடுவார்கள். இந்த பஞ்ச கிளாக் கூட்ட விவகாரம் - எல்லா வருடங்களிலும் தொடர்ந்தது - தோழர்கள்தான் ஒவ்வொரு வருடமும் புதியவர்கள் - ஆனால் நடைமுறை எப்பொழுதும் ஒரே மாதிரிதான்!



எதற்கு இதை எல்லாம் விலாவாரியாகச் சொல்கிறேன் என்றால் - கண்டிப்பான டிரைனிங் ஆபீசரால் தடுக்க இயலாத ஒரு பஞ்ச கிளாக் கூட்டத்தை - பிறகு வந்த ஒரு டிரைனிங் மேனேஜர் சுலபமாக செய்தார். எப்படி?


நான் சேர்ந்த பத்து வருடங்களுக்குப் பின் எல் எஸ் என் குப்தா என்றொரு மேலாளர், கம்பெனி  பயிற்சி நிலையத்திற்கு தலைவராக ஹெச் எம் டி யிலிருந்து வந்து சேர்ந்தார். நல்ல நகைச்சுவையுடன், அழகான ஆந்திர ஆங்கிலம் பேசுவார். எனக்கு பிறந்த வீட்டு பாசம் அதிகம் - அதாவது, அடிக்கடி டிரைனிங் சென்டர் சென்று - வகுப்புகள் நடத்தி எல்லோருக்கும் இலவச ஞானம் விநியோகம் செய்வதுண்டு. ஒரு நாள் நான்கு மணியிலிருந்து, ஐந்து மணி வரையிலும் - வகுப்பு நடத்த சென்றேன் - என்ன ஆச்சரியம்! மூன்று ஐம்பத்தைந்துக்கு பஞ்ச கிளாக் அருகே எந்த கூட்டமும் இல்லை. நான்கு மணிக்கு அமைதியான முறையில் அப்போதைய அப்ரண்டிஸ் தோழர்கள் - பஞ்ச அடித்து, நடந்து சென்றார்கள். என்னுடைய வகுப்பை நடத்தி முடித்துவிட்டு, நான் திரு குப்தா அவர்களிடம், இது எப்படி சாத்தியமாயிற்று? என்று கேட்டேன்.


அவர் சொன்னார். நான் இங்கே வந்து சேர்ந்த நாளிலிருந்து இதை ஸ்டடி செய்தேன். பஞ்ச கிளாக் கூட்டத்தை கரைக்க, ஒரு சிம்பிள் வழி கடைபிடித்தேன்.


சரியாக - மூன்று ஐம்பத்து நான்கு மணிக்கு என் அறையை விட்டு வெளியே வருவேன். பஞ்ச கிளாக் அருகே நிற்கின்ற முதல் தோழரை பவ்யமாகக் கூப்பிட்டு, அறைக்குள் சென்று, அவரை உட்கார வைத்து - அவர் யார், என்ன, குடும்பத்தில் எத்தனை பேரு என்றெல்லாம் நட்பாகக் கேட்பேன். இந்த மாதிரி ஒரு பத்து நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்துவிட்டு, மணி நான்கு ஐந்துக்கு, ' சரி நீ போகலாம் ' என்று கூறி அனுப்பிவிடுவேன். இதைத் தொடர்ந்து ஒரு வாரம் செய்தேன் - கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொருவர் வந்து மாட்டுவார். அப்புறம் ஒரு வாரம் - மூன்று ஐம்பத்து நான்கு மணிக்கு - என் அறைக் கதவை - என் உதவியாளர் - லேசாகத் திறப்பார். அவ்வளவுதான் - கிளாக் கூட்டம் கலைந்தோடும். தொடர்ந்து நானும், பயிற்சி நிலைய உதவி மேலாளர்களும் இதை செய்துவந்தோம். நாளடைவில் பஞ்ச கிளாக் கூட்டம் - பழைய கதையாகிவிட்டது என்றார் அவர், புன்னகையுடன். 


உங்க வாழ்க்கையில் நீங்க கடைபிடித்த அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்கள் கடைபிடித்த எளிய படைப்பாற்றல் அப்ரோச்களை எங்களுடனும், மற்ற வாசகர்களுடனும் பின்னூட்டம் மூலமாக பகிர்ந்துகொள்ளலாமே!

புதன், 25 நவம்பர், 2009

அதாகப் பட்டது ... அனானியான நான்




பேசும் ஸ்டைல் நபருக்கு நபர் மாறுபடும். எனவே ஒவ்வொருவரும் ஒரு தனிப்பிறவி என்று துணிந்து சொல்லலாம்.  எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் இந்த விஷயத்தில் சற்று விசித்திரமானவர்.  ஒரு விஷயத்தில் ஆரம்பித்து கிளை பிரிந்து எங்கேயோ போய் விடுவார். அவர் சொல்ல வந்தது என்ன என்பதை நாம் இடை மறித்துக் கேட்டுக் கொண்டால்தான் ஆயிற்று. இல்லையேல் அரோகரா.



"சார் நேத்து ஒரு பயங்கரமான அனுபவம். என்ன புதுசா இருக்கப் போவுது நம்ம பொழைப்பே பயங்கரமாத்தான் மாறிப் போச்சு என்கிறீங்களா?  அப்படியெல்லாம் பயந்தா ஒன்னும் வேலைக்கு ஆகாது சார்,  அவனவன் என்னென்னவோ செஞ்சூட்டு ஜாலியா இருக்கானுவ.  இந்த ....... (ஒரு தலைவர் அல்லது நடிகனின் பெயரை சொல்லி) இருக்கானே அந்தப் பயபுள்ள ஏன்னா தில்லா சுருட்டுறான் பாத்தீயளா?   ஒரு ரெண்டு மாசம் முன்னாடி இவன் கிட்ட ஒரு சோலியா போ வேண்டி வந்துது. .... "   இப்படி வண்டி நிற்காமல் போய்க் கொண்டே இருக்கும்.
ஜோக் சொல்பவர்கள் வேறு விதம். அவர்கள் ஜோக் ஆரம்பித்து சொல்ல முடியாமல் சிரித்து, சிரித்து கண்ணில் நீர் வந்து .. கடைசியில் அந்த ஜோக் தண்ணியில் விழுந்த பொரிச்ச அப்பளம் மாதிரி இருக்கும்.  இதுக்குப் போய் இவ்வளவு அமர்க்களமா என்று அவருக்கே தோன்றும். " நேற்று பிரண்டு சொல்லும் போது படா தமாசா இருந்துச்சு சார் எனக்கு சொல்லத் தெரியல " என்று சொதப்புவார்.



என் நெருங்கிய உறவினர் எல்லாம் சரியாகச் சொல்லுவார். எழுவாயை மட்டும் சொல்ல மாட்டார்.  " காலைலே கிளம்பி போனானா திடீர்னு தந்தி வந்துடுச்சாம். அவசரம் அவசரமா ரயிலுக்கு ஓடினா டிக்கட் கிடைக்கலியாம். கடைசீலே ...  என்ன யார்னா கேக்கறீங்க?  அதான் நம்ம இவன் இருக்கானே அவன்தான் சார், நம்ம கூட பஸ்லே வருவானே வழுக்கைத் தலையா... " இப்படி போய்க் கொண்டு இருப்பார்.






பயங்கரமான விலாவரியாக சினிமா சீரியல் கதைகளை விவரிப்பவர் ஒரு ரகம்.



சும்மா எதிர் மறையா மட்டும் சொன்னா எப்படி?  சிலர் இருக்கிறார்கள் இன்னும் கொஞ்ச நேரம் இருந்து பேசி விட்டுப் போக மாட்டார்களா என்று தோன்றும். அவ்வளவு சுவாரசியமாக பேசுவார்கள்.  சொன்ன ஜோக்கையே திருப்பிச் சொன்னால் கூட ரசித்துக் கேட்கலாம்.  அதாவது என்மாதிரியான மேதாவிகள்.



கை தட்டாதீங்க எனக்கு அப்லாஸ் பிடிக்காது!!!



அனானி

பேசத் தெரிய வேண்டும்!

பேச்சு என்பது, முக்கியமாக உரையாடல் என்பது ஒரு கலை. அதில் பல பரிமாணங்கள் பலரிடம் நாம் அன்றாடம் உணரலாம். உதாரணத்திற்கு, நாம் ஒரு கருத்தைச் சொல்கிறோம். கேட்பவர், ஒன்று ஆமாம் என்று தொடங்கி பேசுவார். அல்லது அபபடி இல்லைங்க இது அந்த மாதிரி என்று மாற்றுக் கருத்து சொல்வார்கள்...பெரும்பாலும் இருவரும் ஒருவர் கருத்தை மற்றவர் மறுத்தோ ஆமோதித்தோ பேசுவது இயல்பு. பேசும் விஷயத்தையும் பேசுபவர்களையும் பொறுத்தது அது.






என் அலுவலகத்தில் ஒருவர் இருந்தார். அவரிடம் பேசுவது பெரும்பாலும் வெட்டுக் குத்து போல முடிகின்ற சாத்தியக் கூறே அதிகம்.யார் என்ன பேசினாலும் அதற்கு எதிர்மறை போல பேசுவதே அவர் ஸ்டைல். ஆனால் முழுதும் எதிர்க் கருத்தாகவும் இருக்காது. உதாரணமாக அவர் பெயர் கண்ணன் என்று வைத்துக் கொள்வோம். "உங்க பேர் கண்ணன்தானே..?" என்று கேட்பதாக வைத்துக் கொள்வோம். அவர் உடனே கொடுக்கும் பதில் இப்படி இருக்கும்..." இல்லை சார், என் பேர் என்னனு கேட்கறீங்களே.. வேற யாரையாவது இப்படிக் கேட்டீங்களா? கேட்க முடியாது...எப்படி நீங்க அதுதான் என் பேர்னு சொல்லலாம்? உலகத்துல ஒருத்தனுக்கு நூறு பேர் இருக்கும் சார்.. ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தி ரெண்டுல ஒரு ஆஃபீசர் இப்படிதான் என்னைப் பார்த்துக் கேட்டார்...அப்போ..." இப்படி தொடரும் உரையாடலில் இடைமறித்து "அது சரி உங்க பேர் கண்ணனா இல்லையா?" என்று கேட்டால் குறுக்கக் குறுக்க பேசி குழப்புறீங்களே...நீங்கள்ளாம் எப்பவுமே அடுத்த ஆளை பேசவே விடறதில்லை... நானும் பலதடவை பார்த்துருக்கேன்...என் பேர் கண்ணன் சார்..." "அதானேங்க நானும் சொன்னேன்" என்றால் "இல்லை சார் நீங்க சொன்னதுக்கும் நான் சொன்னதுக்கும் வித்தியாசம் இருக்கு"ம்பார். என்னங்க அர்த்தம் இல்லாமப் பேசறீங்கன்னு கேட்க முடியாது....அப்புறம் அந்தப் பேச்சும் தொடர்கதை ஆகிவிடும்! ஒரு முறை என் கையில் வைத்திருந்த நாளிதழைப் பார்த்து விட்டு, "அதான் சார் இப்படிப் பேசறீங்க...........இதெல்லாம் படிக்கறதை விட (ஒரு கட்சிப் பத்திரிக்கையின் பெயர் சொல்லி) படிங்க சார்..பொது அறிவு வளரும்.." என்றார்.


நாம் பேசுவதைதான் பேசுவார். ஆனால் முதலில் அதை மறுத்து விடுவார். ஏதேதோ பேசி விட்டு கடைசியில் நாம் சொன்னதையே சொல்வார். எப்போதாவது பொழுது போகாத நேரங்களில் அவர் வாயைக் கிண்டி பேச விட்டு கேட்டுக் கொண்டிருப்போம். பல சமயங்களில் பேச்சை தொடர விடாமல் அவர் என்ன சொன்னாலும் பதில் பேச மாட்டோம் அல்லது எதற்கு வம்பு என்று ஆமோதித்து விடுவோம்!


நம்மைப் பார்க்க யாராவது வந்திருப்பார்கள். நம்முடன் பேசிக் கொண்டிருப்பார்கள். கையை கட்டிக் கொண்டு பணிவான புன்னகையுடன் இவரும் அங்கிருப்பார். சில விஷயங்களை புன்னகையுடன் தலையாட்டி பேச முற்படுவார். ஒருவகை எச்சரிக்கை உணர்வுடன் அவரையே பார்த்துக் கொண்டிருக்கும் நான் அவர் பேசத் தொடங்குமுன் பேச்சை மாற்றியோ அல்லது நான் ஏதாவது பேசவோ தொடங்கி விடுவேன். வந்தவரிடம் சொல்லவும் முடியாதே! அப்படியும் சிலர் "அவர் ஏதோ சொல்ல வர்றார், சொல்லட்டும்.." என்று ஆரம்பம் கொடுத்து விடுவார்கள். அப்புறம் பார்க்கணுமே அந்த அனுதாபிகளின் கதியை! பிறகு பேச்சு வளர வளர டென்ஷன் ஆகாமல் இவர் அவரை வெறுப்பேற்றுவார். நண்பர் விடவும் முடியாமல் பேசவும் முடியாமல் டென்ஷன் ஆவது சிலசமயம் வேடிக்கையாக இருக்கும்.


ஒருமுறை ஒரு அலுவலக நண்பர், ஒரு விசேஷத்துக்கு என்னை வற்புறுத்தி தன் டூ வீலரில் அழைத்துச் சென்றார். பாதி தூரம் போனதும் இன்னுமொரு நண்பரையும் அதில் ஏற்றிக் கொண்டார். நான் இறங்கிக் கொள்கிறேன் என்று சொன்னதையும் கேட்கவில்லை. ட்ராஃபிக் போலீஸ் கையில் மாட்டமலிருக்க என்று சொல்லி நடு வீதியிலேயே வண்டி ஓட்டி வந்தவர் ஒரு தவிர்க்க முடியாத நேரத்தில் வள்ளுவர் கோட்டம் அருகில் நடு சாலையில் இருவரையும் இறக்கி விட்டு "அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க" என்று விட்டுப் போய்விட, அப்போதைய பல்லவன் பஸ்கள், லாரிகள், ஆட்டோக்களைத் தாண்டி ஓரம் சேர்வது பெரும் பாடாயிற்று.


என்னைப் பற்றி அவரிடம் கேட்டால் என்ன சொல்வாரோ?


வாசகர்கள் பேச்சு அனுபவங்களும் வரவேற்கப்படுகின்றன. பேச்சு பேச்சாத்தான் இருக்கணும் - கோடு தாண்டி யாரும் போயிடக் கூடாது. பாத்துக்குங்க!

செவ்வாய், 24 நவம்பர், 2009

இது என்ன?


படத்தில் நீங்க பார்ப்பது என்ன?
சரியான பதிலுக்கு - ஆயிரம் பாயிண்டுகள்.
சுவையான கற்பனைகளுக்கு, ஆயிரம் + அதிக பாயிண்டுகள்.
கற்பனைக் குதிரையை - கடிவாளம் இல்லாமல் ஒட்டுங்கள்.
உங்களால் முடியும்.
இது எங்கள் படைப்பாற்றல் கேள்வி எண் நான்கு.

உள் பெட்டியிலிருந்து...

உலகம் உங்களுக்கு உதவ மறுத்தால் உடைந்து போகாதீர்கள். உங்கள் வேலையை நீங்களே செய்து தெரிந்து கொள்ள வாய்ப்பளித்ததற்கு நன்றி கூறுங்கள்.

அனுபவிக்க நினைப்பவர்கள் இன்று வாழ்வின் முதல் நாள் என்று எண்ணிக் கொள்ளுங்கள். சாதிக்க நினைப்பவர்கள் இன்று வாழ்வின் கடைசி நாள் என்று எண்ணிக் கொள்ளுங்கள்.

பறவைகளுடன் பறக்க நினைப்பவர்கள் வாத்துக்களுடன் நீந்தி நேரத்தை வீணாக்காதீர்கள்.(ஒபாமா)

வாழ்க்கை உங்களை பின்னால் இழுக்கும்போது விசனப் படாதீர்கள். அம்பைப் பின்னால் இழுத்து விட்டு விடும்போதுதான் அதற்கு வேகம் கிடைக்கிறது.
காதலித்த ஜோடி விவாகரத்தானபோது அவரிடம் கேட்கப் பட்ட கேள்வி : "அவள் உன்னைக் கை விட்டாளா. அல்லது நீ அவளை கை விட்டாயா?" அவர் புன்னகையுடன் சொன்ன பதில் : "காதல்தான் எங்களைக் கை விட்டது"

தோல்வி என்பது நீங்கள் கீழே விழுவதில் இல்லை, நீங்கள் எழ மறுப்பதுதான்.

பேசும் முன் அடுத்தவரைப் பேச விடுங்கள்...எழுதும் முன் யோசியுங்கள் செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்.
கடைசி மரம் வெட்டப் பட்ட பின்னரும், கடைசி நீர் ஆதாரம் விஷமாக்கப்பட்ட பிறகுதான் மனிதன் தன்னிடமுள்ள பணத்தை தன்னால் உண்ண முடியாதென்று உணர்வான்.

அந்தக் காலத்தில் யாரிடமும் கடிகாரம் இல்லை, ஆனால் எல்லோரிடமும் நேரம் இருந்தது. இப்போது எல்லோரிடமும் கடிகாரம் இருக்கிறது. ஆனால் யாரிடமும் நேரம் இல்லை!

இதுவா, அதுவா என்று முடிவெடுக்கக் காசை சுண்டி விடுங்கள்... அதனால் முடிவு கிடைக்கும் என்பதால் அல்ல...எது கிடைக்க வேண்டும் என்று நம் மனம் எதிர்பார்க்கிறது என்பதை அறிய...!

சனி, 21 நவம்பர், 2009

பார்த்ததில் கேட்டதில் ரசித்தது, நினைத்தது...

சினிமாக்களில் பல அபத்தங்கள் உண்டு. பாடல்களே முதல் அபத்தம். ஆனால் இனிமையான அபத்தம்!
சண்டைக்காட்சிகள் மனதின் வக்கிரங்கள் என்று தோன்றும். நம்மால் செய்ய முடியாத ஒன்றை செய்வதால் வரும் கவர்ச்சி சண்டைகள், பாடல்கள். கதாநாயகனோ கதாநாயகியோ மலை உச்சியில் பாடும் பாட்டைக் கேட்டு அடுத்தவர் போய் அவரைக் காப்பாற்றி விடுவார்கள்! ஜப்பான் எக்ஸ்போ கண்காட்சியில் எங்கோ ஒரு மூலையில் தம்பி MGR பாடும் "உலகம் உலகம்" பாடல் கேட்டு அண்ணன் MGR "ஆ....என் தம்பி குரல் கேக்குது.." என்று தேடத் தொடங்கி, ஒன்று சேர்வார்கள். ஹிந்தி ஆராதனா படத்தில் ராஜேஷ் கன்னா ஜீப்பில் பாடிக் கொண்டே வருவதை ஷர்மிளா தாகூர் ரயிலில் வந்த படியே கேட்பார்...


ஆராதனா பற்றி இன்றும் நாளையும் CNN IBN சேனலில் அந்தப் படம் எப்படி சூப்பர் ஹிட் ஆனது என்று ஒருமணி நேர படம் காட்டினார்கள். நம் வலைப் பக்கப் பதிவுகளுக்கு Subject தேடுவது போல அவர்களும் எதையாவது காட்டி ரசிக்க வைக்கிறார்கள்...அதில் சொல்லப் பட்ட சில விஷயங்கள்...












1) அந்த 'மேரே சப்னோங்கி' பாடல் காட்சி எடுக்கப்பட்ட போது தனித் தனியாகத்தான் எடுத்தார்களாம். ஷர்மிளா சத்யஜித் ரே படத்துக்கே டேட்ஸ் தந்து விட்டதால் பிரச்னையாம்.


2) ராஜேஷ் கன்னா அப்போது புது முகமாக இருந்தாலும் அந்தப் படத்தின் மூலம் சூப்பர் ஸ்டார் ஆனாராம். அந்த ஜோடி ரசிகர்களைக் கவர்ந்ததால் அதன் பின்னரும் அமர்ப்ரேம், டாக் போன்ற படங்களில் ஜோடி தொடர்ந்ததாம். ஷர்மிளா இந்த திடீர் ஹிட்டினால் தன் கர்ப்பமாகும் திட்டத்தையே தளளி வைத்தாராம்!


3) S. D. பர்மன் தன் அபிமானப் பாடகர் முஹம்மத் ரபியை தெரிவு செய்து வைத்திருக்க, அந்தப் படத்தை முடித்து வைத்த அவர் மகன் R. D. பர்மன் தன் அபிமானப் பாடகர் கிஷோரை வைத்து மிச்சப் பாடல்களை முடித்தாராம். கிஷோர் காட்டில் அதற்கப்புறம் தான் நல்ல மழையாம்.


4) கிஷோர் தன் முதல் பில்ம்பேர் அவார்டும், ஷர்மிளாவும் பில்ம்பேர் அவார்ட் அந்தப் படத்துக்கு வாங்கினார்களாம்.


CNN IBN சேனலில் இன்றோ நாளையோ இரவு பத்து மணிக்கு போடுவார்கள். நேரம் இருந்தால் பாருங்கள். அந்தப் படத்தில் வரும் ராஜேஷ் கன்னாவை இப்போது பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கும்! அந்தப் படம் வந்த பிறகு அவர் கார்க் கண்ணாடியில் பெண் ரசிகர்கள் லிப்ஸ்டிக் கரையாக இருக்குமாம்....அந்த அளவு பெண் ரசிகைகள் அவர்மீது பைத்தியமானார்களாம் ...


கார் என்றதும் ஞாபகம் வருகிறது... இந்த ஸ்விஃப்ட் கார் விளம்பரம் கொஞ்சம் ஓவர் இல்லை...பைனாகுலர் வைத்துப் பார்த்து பார்த்து ரோடு கிராஸ் செய்கிறாராம்...அப்படியும் மோதறா மாதிரி ஒரு ஸ்விஃப்ட் கார் தாண்டுதாம்...அட...


போன சீசனை விட இந்த சீசன் அதிக மழை என்கிறது செய்தி... அதிகபட்சம் ஏழு நாள் பெய்திருக்குமா மழை? அதற்குள் இது அதிகம் என்றால்..."இந்த முறை வெயில் ரொம்ப அதிகம்ங்க" என்று வருடா வருடம் அலுத்துக் கொள்ளும் பொது ஜனம்... அது போல இருக்க முடியாது...ஏனென்றால் வானிலை மையம் சொல்லும் தகவல் இது...என்ன பெய்து என்ன..நிக்கிறதுதான் நிக்கும். மிச்சம்லாம் வழக்கம்போல கடலுக்குதான்...!


மழையோ வெயிலோ குளிரோ அதனால் சீசனுக்கு சீசன் பத்து பேராவது இறந்துவிடுவதாக நியூஸ் வந்து விடுகிறது...மரணத்துக்கு காரணம்தான் வேண்டும்...நேரம் வந்து விட்டால்...!

தங்கம் - விலை!


நகரம் 






1கி்
10 கி்
சென்னை
1614
17360
மும்பை
1482
17341
டெல்லி
1488
17398
கோல்கட்டா
1493
17455 


இன்றைய எங்கள் கேள்வி - இதோ:
ஒரு கிராம் தங்கம் - மற்ற நகரங்களைவிட - சென்னையில் நூற்று இருபது ரூபாய்கள் விலை அதிகம் -- ஏன்?

வியாழன், 19 நவம்பர், 2009

நம்பி யார்?


நாரணன் நம்பி - என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அது ஆண்டாள் பிரயோகம்.
நாராயணன் நம்பி - என்றால் யார் என்று நீங்க கேட்கக் கூடும். மஞ்சேரி நாராயணன் நம்பியார் - என்றால் கூட புருவத்தை நெரிப்பீர்கள்.
எம் என் நம்பியார் - என்றால் அட - அவரா! என்று வியப்பீர்கள்.
எம் ஜி யார் என்றால் யார் என்று தெரிந்தவர்களுக்கு,
நம்பியார் என்றால் யார் என்று தெரியாமல் போகாது.
நான் யார், நான் யார், நான் யார்? என்ற எம் ஜி யார் (குடியிருந்த கோவில்) படப்பாடலைக் கேட்டு இரசித்திருப்பீர்கள்.
அதில் அடுத்து வருகின்ற வரி,
நாலும் மிகுந்தவர் நம்பியார் - என்று பாடியிருந்தால் சரியாக இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
எந்த நாலு?
நடிப்பு
நல்லொழுக்கம்
நம்பிக்கை (தன்னிடத்திலும், மற்றவரிடத்திலும், தெய்வத்திடத்திலும்)
நகைச்சுவை.
நம்பியார் பிறந்தது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து பத்தொன்பதாம் வருடம், மே மாதம், இருபத்தொன்றாம் தேதி. மறைந்தது, சென்ற வருடம், இதே மாதம், இதே தேதி, இதே நேரம் (மதியம்) - இந்த இடுகை இடப்படுகின்ற இந்திய நேரம்.
மேலே சொல்லப்பட்டுள்ள நாலில் மூன்று ஏற்கெனவே உங்கள் எல்லோருக்கும் தெரிந்தவைகள்தாம்.
நான்காவதான, நகைச்சுவைக்கு நல்ல உதாரணம் வேண்டும் என்றால், படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் எல்லோரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் இடைவேளையில், எம்ஜியார் அவர்கள் சப்தம் போட்டு, வாய் விட்டுச் சிரிக்கிறார் என்றால் - அது நம்பியார் அவர்களின் நகைச்சுவை கலந்த உரையாடலால் மட்டுமே இருக்க முடியும் என்பது படக்குழு சேர்ந்த பலருக்கும் தெரிந்திருக்கும்.
நம்பியாரின் தந்தை பெயர் கேளு நம்பியார் என்பதும், மனைவி பெயர் ருக்மணி என்பதும், இந்தப் பதிவைப் படிப்பவர்கள் பெரும்பாலோருக்கும் தெரிந்திருக்கும்.
இப்ப கொஞ்சம் - படைப்பாற்றல் சமாச்சாரங்கள் பார்ப்போம். நம்பியார் அவர்களுக்கும், படைப்பாற்றலுக்கும் பல சம்பந்தங்கள் உள்ளன. ஆச்சரியமாக இருக்கிறதா? - அவைகளில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.
* நம்பியாரைப் போல நடித்தவர்கள் - அவருக்கு முன் யாரும் கிடையாது. அவர் பாணி தனி. அந்த சிறப்பு அவருக்கு, படைப்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுக்கொடுத்துவிட்டது.
* சினிமா உலகில், நம்பியாரைப் போல நன்னடத்தைக் கொண்டவர்கள் என்று எடுத்துக் கொண்டால், விரல் விட்டு எண்ணிவிடலாம். சினிமா உலகில் பணம் எவ்வளவோ சம்பாதிக்கலாம்; ஆனால் - ஒரு வில்லன் நடிகர் - இந்த அளவுக்கு நற்பெயரைச் சம்பாதித்திருப்பது, அவரின் படைப்பாற்றலுக்கு மேலும் ஒரு சான்று.
* இப்பல்லாம் எவ்வளவோ தமிழ்ச் சானல்களில், 'கலக்கப்போவது யாரு?', அசத்தப்போவது யாரு?, சிரிக்க வைப்பது யாரு, சொரியப்போவது யாரு? என்றெல்லாம் நிகழ்ச்சிகள் வருகின்றன. இவைகள் எல்லாவற்றிற்கும் - முக்கியமான தீம் - "படைப்பாற்றல் கொண்டவர் யாரு?" - இந்த எல்லா நிகழ்ச்சிகளிலும் - நம்பியார் போல நாலு வரியாவது பேசிக் காட்டாமல் - எந்த ஒரு பங்கேற்பாளரும் பரிசு பெற்றிருக்கமுடியாது.
* இப்போ - இந்தப் பதிவாசிரியரின் சில கண்டுபிடிப்புகள். 
# நம்பியார் அவர்கள் பிறந்தது, 19 19 ஆண்டு.
# இறந்தது நவம்பர் 19.
# எம்ஜியார் வாழ்ந்தது 70 வருடங்கள். நம்பியார் வாழ்ந்தது 89 வருடங்கள். 89 - 70 = 19.
# பத்தொன்பது - ஒரு prime number (உத்தம எண்?) 
# நம்பியார் அவர்கள் திகம்பர சாமியார் படத்தில் 11 வேடங்களில் நடித்துள்ளார். 11 is a prime number.
# நம்பியார் அவர்கள் நாடகத்தில் நடித்த நாட்களில், அவருக்குக் கிடைத்த முதல் மாத சம்பளம் மூன்று ரூபாய்கள். அதில் ஒரு ரூபாயைத் தான் வைத்துக் கொண்டு இரண்டு ரூபாய்களை அம்மாவிடம் கொடுத்துவிட்டாராம்! 3 is a prime number.
இப்போ வாசகர்களுக்கு  கேள்வி - 
1) நம்பியார் அவர்களையும், ப்ரைம் நம்பர்களையும் இணைத்து, ஏதேனும் ஒரு பின்னூட்டம் நீங்க இங்கே போடணும். வழக்கம்போல் - ஒவ்வொரு படைப்பாற்றல் மிக்க பின்னூட்டத்திற்கும், பாயிண்டுகள் உண்டு. சும்மா - புகுந்து விளையாடுங்க!
2) நம்பியார் அவர்களின் தாயார் பெயர் என்ன?
இரண்டு கேள்விகளுக்கும் பதில் அளிக்க, 
உங்களால் முடியும்.

புதன், 18 நவம்பர், 2009

செய்திகளும் - திசெயகளும்!

* சென்னையில் அடைமழை!
# அவியல் மழை எங்கே பெய்கிறது? அதைச் சொல்லுங்க மொதல்ல!

* பெரியாறு அணையில் வெள்ள எச்சரிக்கை.
# முல்லை பக்கம் மேலும் ஒரு தொல்லை!


* சபரிமலை சீசன் துவங்கியது.
# கலர்க் குடைகளும், கலர் வேட்டிகளும் இனி அமோகமா  விற்பனையாகும்!

* இந்தியாவில் 1050 சிறிய கட்சிகள்! 
# நல்லா எண்ணிப் பாத்தீங்களா? - அவ்வளவுதானா? மொத்த ஜனத்தொகை நூற்றுப் பத்து கோடிக்கு மேல ஆச்சே!

* பதவி விலகத்தயார் : ராஜ்நாத் சிங்.
# பதவி ஏற்கத் தயார் : பா ஜ க வில் பலர்.

 * மதுரையில் 150 கோடியில் மருத்துவமனை.
# மதுரையில அவ்வளவு தெருக்கோடிகள் உள்ளனவா!

 * பொள்ளாச்சியில் ஒரே வேரில் ஏழு மரங்கள்.
# அடுத்த தேர்தலில் போட்டியிட ஒரு அருமையான கூட்டணி தயார்!

 * மும்பை தாக்குதலில் ஹெட்லிக்கு தொடர்பு?
# சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ வாய்ப்பு!

* சாகச பயணம் : பள்ளி மீது நடவடிக்கை; கார் ஓட்டிய 8 வயது சிறுவனுக்கு - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.
# ஒரு வேளை - எட்டு போட்டுக் காட்டு என்றதை - எட்டு ஓட்டிக் காட்டுன்னு நெனச்சிட்டாங்களோ?

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு...






இங்கே, இடது பக்கக் கீ----ழே, (ஆசிரியர்கள் பெயர்ப் பட்டியலுக்குக் கீழே பாருங்க)
<-----
 Internet TV என்று ஒரு லிங்க் கொடுத்துள்ளோம்.
முதலில் ஒரு நாடு செலக்ட் பண்ணுங்க - அந்த நாட்டு பெயர் மேலே சொடுக்குங்க. 
உடனே, ஒரு சானல் பட்டியல் தெரியும். அந்த சானல் பட்டியல்ல உங்களுக்கு வேண்டிய சானல் மீது கிளிக் பண்ணுங்க.
இதன்மூலம், நீங்க சில தமிழ் சானல் கூடப் பார்க்கலாம். உதாரணமாக, 
இந்தியா தேர்ந்தெடுத்து - ஸ்டார் விஜய், தென்றல் - ஏதாவது முயற்சி செய்து பாருங்கள்.
எப்படி வருகின்றது என்று, எங்களுக்குத் தெரிவியுங்கள்.
அன்புடன்,
எங்கள் Blog.

செவ்வாய், 17 நவம்பர், 2009

விரல்வழிப் பிரசவங்கள்!









அவைகள் கண் வழியாக உள்ளே வந்தவையா?
அல்லது காது வழியாக - உள்ளே வந்தவையா?
எப்போது வந்தவை? எனக்குத்  தெரியவில்லை!
ஆனால் உறங்குகின்ற நேரத்தில் - கண்ணசைவுகளாக
இமைகளுக்குப் பின்னே களிநடம் புரியும்.
அடிக்கடி மூளைக்கும் இதயத்திற்கும்
இடையே தத்தித்  தத்தி தளிர் நடையிடும்!
இன்று என்னைப் பிரச்வித்துவிடேன்
என்று கெஞ்சலாய் ஒரு கோரிக்கை வைக்கும்.
அந்தப் பிரசவ வலி சுவையானது!
அது வந்தவுடன், மூளையும் இதயமும்
அதை வலையிட போட்டி போடும்!
அதை விரல்களுக்கு அனுப்பிவைத்து விட்டால்?
அவைகள் அடுத்த பிரசவம் பார்க்கப் போய்விடும்,
கண்களையும் காதுகளையும் திறந்துகொண்டு!
எப்பொழுது சூல்கொண்டதோ - ஆனால்
இப்போது இதோ இங்கே பிரசவம்,
விரல் நுனிகளால், விசைப் பலகையில்!

சனி, 14 நவம்பர், 2009

கத்தரிக்காய் பஜ்ஜி

 மழை நாட்களில் - சாப்பிட சரியான சமாச்சாரம் - என்னைக் கேட்டால் - பஜ்ஜிதான்.
அதுவும் சூடான பஜ்ஜி. - எவ்வளவு சூடு?
அந்த பஜ்ஜியை, வலது கை கட்டை விரலுக்கும், ஆட்காட்டி விரலுக்கும் நடுவே வைத்து, ஒரு சிறிய அளவு, அதாவது இருபத்தைந்து கிராம் - அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அப்போ - நடுவே உள்ள காய் தகடு விட்டு, பொன்னிற உறைகள் - பிரியும். அந்த நேரத்தில் ஒரு பொன்னிற உறையை நாவால் அகற்றி, பல்லால் கடித்தபடி - காய் தகட்டின் மேல் பகுதியை உற்று நோக்குங்கள் -- ஆவி தயங்கித் தயங்கி - மேலே செல்கிறதா?
இதுதான் சரியான உஷ்ண நிலை - பஜ்ஜியை கபளீகரம் செய்ய.
அந்தக் காலத்தில் எங்க அம்மா பஜ்ஜி செய்யும்போது - நாங்க எல்லோருமே - ஆளுக்கொரு தட்டு வெச்சிகிட்டு - ஆவலாக வெய்ட் செய்வோம்.
நாந்தான் - ஹோட்டல் பிருந்தாவன் என்பார் பெரிய அண்ணன்.
நாந்தான் - ஹோட்டல் தினகர விலாஸ் என்பார் சிறிய அண்ணன்.
நாந்தான் - சங்கர ஐயர் ஹோட்டல் என்பேன் நான் (அப்போ எனக்குத் தெரிஞ்ச ஒரே ஹோட்டல் அதுதான்)
நாந்தான் - நாந்தான் -- என்று யோசனை செய்துகொண்டே இருப்பாள் என் தங்கை.
நாந்தான் கடத்தெருவுல  இருக்கற கலியபெருமாள் கடை என்பான் தம்பி.
எங்க எல்லோருக்கும் அம்மா சரக்கு மாஸ்டர்; அக்கா சப்ளையர்.
ஒவ்வொரு ஈடு பஜ்ஜி தயாரிக்கும்போதும் அம்மா - எவ்வளவு தலைகள் இருக்கின்றனவோ அவை  இண்டு டூ + a constant என்கிற பார்முலா பயன்படுத்தி உற்பத்தி செய்வார்.
அது என்ன கான்ஸ்டன்ட்? - என்ன  வகை பஜ்ஜியோ - அது எங்களில் யார் யாருக்கு அதிகம் பிடிக்குமோ - அவர்களுக்காக - இரண்டிரண்டு  எக்ஸ்ட்ரா!
நாங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு தினுசா பஜ்ஜி சாப்பிடுவோம். - மத்தவங்க சாப்பிட்ட வகை ஞாபகம் இல்லை - நான் பஜ்ஜிகளை - கை பொறுக்கும் சூட்டில் கையில் எடுத்து, அவைகளை மேல் தட்டு - உள் தகடு, கீழ்த் தட்டு என்று மூன்று பகுதிகளாக்கி தட்டின் ஓரத்தில் ஆறப் போட்டுடுவேன். அப்புறம் உள்தகடுகளைத் தனியாகவும், பொன்னிற ஓடுகளைத் தனியாகவும் - மென்று, சுவைத்து சாப்பிடுவேன். 
பிடித்த பஜ்ஜி வகைகள் - வெங்காயம் - கத்தரிக்காய் - உருளைக்கிழங்கு. பிடிக்காத வாழைக்காய் பஜ்ஜிகளை, பெரிய அண்ணனுடன் பண்டமாற்று செய்துகொண்டதும் உண்டு. பின் நாட்களில் - அப்பள பஜ்ஜி புதுமையாக இருந்ததால் சாப்பிட்டது உண்டு. 
நெல்லூரில் ஒரு முறை உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த நேரத்தில் அறுபது ரூபாய்க்கு மிளகாய் பஜ்ஜி வாங்கி சாப்பிட்டோம். பஜ்ஜி பற்றி சுவையான தகவல்கள் தெரிந்தோர் சுடச் சுட இங்கே பின்னூட்டம் இடுங்க - எல்லோரும் ரசிச்சுச் சாப்பிடலாம்.
(எனக்கு வெங்காய பஜ்ஜி கொரியர் பண்ணுகிறேன் என்று 'நீரு', என்னுடைய facebook ல எழுதி உற்சாகப் படுத்தியதால், கொரியர் வந்து சேருவதற்குள் - இந்த சுவையான கட்டுரையை எழுதி முடித்துவிட்டேன்!)

வெள்ளி, 13 நவம்பர், 2009

படைப்பாற்றல் - மிகவும் எளிது

இந்தப் பதிவை ஊன்றிப் படியுங்கள். கீ ... ழே இரண்டு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
முதல் கேள்விக்கு சரியான பதில் ஒன்றுதான் இருக்க முடியும். 
அந்த பதில் சரியாகவும் இருக்கலாம்; தவறாகவும் இருக்கலாம்.
சரியான பதிலைக் கூற - உங்களுக்குக் கொஞ்சம் படைப்பாற்றல் இருந்தால் போதும் (கவனமாக இருப்பதும் படைப்பாற்றல்தான் - ஆனால் அது மட்டுமே அல்ல)
தவறான பதிலைக் கூறிவிட்டு, அதை சரி என்று நிரூபிக்க உங்களால் முடியும் என்றால் - முதல் பதில் கூறியவரைவிட உங்கள் படைப்பாற்றல் இரண்டு மடங்கு அதிகம்.
இரண்டாவது கேள்விக்கு பதில் - நூற்றுக் கணக்கில் இருக்கிறது. எல்லாமே சரியான பதில்தான். உங்களுக்கு அதில் எவ்வளவு தெரிகிறது என்று பார்க்கலாம்; ஒவ்வொரு பதிலுக்கும் பத்து மதிப்பெண்கள். உங்க மொத்த மதிப்பெண் என்ன என்று உடனுக்குடன் பதிவோம்.
இதில் எதற்குமே பதில் தெரியவில்லை என்றால், என்னைப் போலவே - தமிழிஷ் சென்று அதில் ஒரு வோட்டு தட்டிவிட்டு - யார் சரியான பின்னூட்டம் இடுகிறார்கள் என்று - என்னோடு சேர்ந்து பார்த்துக் கொண்டிருங்கள்!
இதோ இரண்டு கேள்விகள் :
1) இதற்கு முந்தைய 'எங்கள்' கபில் தேவ் பதிவில் - கபில் தவிர, எவ்வளவு கிரிக்கட் வீரர்கள் பெயர்கள்  உள்ளன?
2) நீங்க கேட்கின்ற  கேள்வி(களு)க்கு - எங்கள் சரியான பதில் 'ஐந்து' என்றால், உங்க கேள்வி(கள்) என்ன/எவை ?

மறுபடியும் சொல்கிறோம் -
உங்களால் முடியும்.
(சூப்பர் படைப்பாற்றல் உள்ளவர்களுக்கு, ஒரு கேள்வி - படைப்பாற்றல் பற்றிய எங்கள் அடுத்த பதிவில் - யாருடைய படம் இடம்பெறும், ஏன்?)
** சூப்பர் படைப்பாற்றல் சரியான பதிலுக்கு ஆயிரம் மதிப்பெண்கள் உண்டு.

வியாழன், 12 நவம்பர், 2009

உள்ளம்கவர் ஆட்டக் காரர்கள் 3

கபில்தேவ்

கபில் தேவ் நிகான்ச். ஐம்பத்தி ஒன்பதாம் ஆண்டு பிறந்த ஹரியானாப் புயல். இந்திய கிரிக்கெட் சரித்திரத்தில் வேகப் பந்து வீச்சாளர்கள் என்றுமே எடுபட்டதில்லை என்றிருந்த காலகட்டத்தில் புயலாக உள்ளே நுழைந்தவர். அந்த நேரத்தில் உலகில் நாலு ஆல் ரௌண்டர்கள். இங்கிலாந்தின் இயான் போத்தம், நியூ ஜிலாந்தின் ரிச்சர்ட் ஹாட்லீ, பாகிஸ்தானின் இம்ரான்கான், நம்ம கபில்.

இதுவரை இந்தியா பெற்றுள்ள ஒரே உலகக் கோப்பையை பெற்றுத் தந்தவர். அந்த மேட்ச்சில் குறைந்த ரன்களைப் பெற்ற போதும் விளையாடிப் பார்க்கலாம் என்று சொல்லி விளையாடி வெற்றி பெற வைத்தவர். மேற்கிந்திய சிங்கம் விவியன் ரிச்சர்ட்ஸ் இருபத்தெட்டு ரன்களில் இருந்த போது பந்து செல்லும் திசையிலேயே ஓடி ஒரு அற்புதமான ரன்னிங் கேட்ச் மூலம் அவரை அவுட் ஆக்கியவர். (இப்போ எல்லாம் எவ்வளவு கேட்ச் நாங்க பார்த்துட்டோம் என்று படிக்கும் உங்கள் மனதில் தோன்றலாம்....குறைந்த இலக்கு நிர்ணயிக்கப் பட்ட ஒரு உலகக் கோப்பை இறுதிப் பந்தயத்தின் முக்கிய நேர நிகழ்வு அது...)

ஒருமுறை தென் ஆப்பிரிக்காவின் பீட்டர் கிறிஸ்டன் இவர் பந்து வீச வரும்போது முன்னாலேயே ஓடத் தொடங்கி ஸ்டார்ட் கொடுத்துக் கொண்டிருக்க, கபில் அவரை ஓரிரு முறை எச்சரித்துப் பார்த்தார். அவர் கேட்கவில்லை. அடுத்த முறை பந்து வீச ஓடி வந்த கபில் ஓடத் தொடங்கிய பீட்டர் க்றிஸ்டனை ரன் அவுட் செய்து விட்டார். (இந்த இடத்தில் வாசகர்களுக்கு Gentleman Walsh ஞாபகம் வரணுமே...)

ஒருமுறை நியூசிலாந்தும், இன்னொரு முறை, ஷார்ஜாவில் என்று நினைக்கிறேன், பாகிஸ்தானுடனும் விளையாடும்போது இந்தியா 120 ரன்களுக்கு ஆட்டமிழந்துவிட, நிச்சயம் தோல்விதான் என்று நினைத்தோம். இதில் ஷார்ஜாவில் ஆட்ட நேர இடைவெளியில் இம்ரானிடம் வர்ணனையாளர் பேட்டி வேறு! பந்தை எப்படி விரல்களுக்கிடையில் பிடித்து ஸ்விங் செய்து விக்கெட் எடுத்தார் என்று விளக்கிக் கொண்டிருந்தார். அவர்கள் பேட் செய்யும்போது ஸ்லிப்பில் வரிசையாக ஆட்களை நிறுத்தி அவுட் ஸ்விங் போட்டு அவர்களை 120 க்கு முன்பே ஆட்டமிழக்கச் செய்தார். பாகிஸ்தானை எண்பது ரன்களில் சுருட்டினார். அவுட் ஸ்விங் மன்னன் கபில்.

கவாஸ்கர் போன்ற சீனியர் வீரர்கள் இவரைக் குழந்தை போல மதிப்பார்களாம். அவருடன் டிஸ்கஸ் செய்ய வேண்டி அவருடன் ஸ்லிப்பில் பீல்டிங் நிற்பாராம் கபில்.

உலகக் கோப்பை போட்டியில் ஜிம்பாப்வேயுடன் விளையாடும்போது பதினேழு ரன்களுக்கு ஐந்து விக்கெட். அவ்வளவுதான் காலி என்று நினைத்தபோது கபில் வந்தார். ரன்மழைதான் அப்புறம்.கிர்மானியுடன் சேர்ந்து அவர் எடுத்த 175 Not Out ஒரு சாதனை.அந்த விளையாட்டைப் பார்க்க முடியாமல் செய்தது இங்கிலாந்து கேமிரா மேன்களின் வேலை நிறுத்தம். ஏழு விக்கெட் விழுந்தபின் உள்ளே வந்த கிர்மானி இருபத்துநாலு ரன்கள் எடுத்தார்.

மனதில்பட்டதை பேசத் தயங்காதவர் கபில். என்ன நினைத்தாலும் சரி என்று சொல்லி விடுவாராம். அவர் ஒரு பேட்டியில் சொல்லி உள்ள ஒரு சுவாரஸ்யத் தகவல்.... கவாஸ்கர் விளையாட இருக்கும்போது பேசவே மாட்டாராம். இறுக்கமாக அமர்ந்திருப்பாராம். ஸ்ரீக்காந்த் நேர் எதிர். பேசிக் கொண்டே இருப்பாராம். சீனியர் ஆட்டக்காரர்களைப் போல் மிமிக்ரி செய்வாராம்.ஆனால் வினோதம் என்னவென்றால் பேசவே பேசாத கவாஸ்கரும், பேசிக் கொண்டே இருக்கும் ஸ்ரீகாந்த் தும்தான் துவக்க ஆட்டக் காரர்கள். அதுதான் ஸ்ரீக்காந்த் விக்கெட்டுகளுக்கு நடுவே பேசிக் கொண்டே இருப்பார் போலும்.எல்லா டீமிலும் ஸ்ரீக்காந்த் போல ஒரு கலகலப்பான ஆள் வேண்டும் என்பது கபில் கருத்து.

89 என்று ஞாபகம். இங்கிலாந்துடன் டெஸ்ட் மேட்ச். Follow on தவிர்க்க 24 ரன்கள் தேவை. கபில் பிரவேசம். உடன் இருப்பவர் ஹிர்வானி.கடைசி விக்கெட். அந்த ஓவரின் கடைசி இரண்டு பந்துகளை எப்படியோ சமாளித்து விட்டார் ஹிர்வானி. . அடுத்த ஓவரை வீச வந்தார் ஜான் எம்புரே. முதல் இரண்டு பந்துகளை தடுத்து ஆடிக் கொண்டார் கபில். அடுத்த நான்கு பந்துகள்..... அடுத்தடுத்து நான்கு சிக்ஸர்கள்.. 24 ரன் வந்து விட்டது. Follow on Avoided.அடுத்த ஓவரின் முதல் பந்தில் ஹிர்வானி அவுட்!! அடுத்த நாள் Hindu வில் மோகன் எழுதியது,, "How to avoid Follow On? 4 X 6 = 24..

Tied Chennai Test... மறக்க முடியுமா? ஆஸ்திரேலியாவின் ஜோன்ஸ் Dehydration இல் அவதிப்பட்டு செஞ்சுரி அடிக்க அந்த மேட்சிலும் Follow On தடுத்தது கபில்தான். அந்த மேட்ச்சில் கபில் ஒரு செஞ்சுரி அடித்ததாக நினைவு.

out swinger Specialist. சில சமயம் அழகான யார்க்கரில் இன் ஸ்விங்கரும் கூட. விக்கெட் எடுத்தும் கத்தி ஆர்ப்பாட்டம் செய்வதோ, மண்ணை முத்தமிடுவதோ, ஓடி ஓடி உணர்ச்சி வசப்படும் வழக்கமோ கிடையாது. டெஸ்ட் மேட்ச்சில் 400 விக்கெட்கள் எடுத்தும் அதே அமைதி...

வெங்கட்ராகவன் நெஸ்கபே விளம்பரத்தில் நடித்த பிறகு இவர்தான் இன்னொரு பானத்திற்கு விளம்பரத்தில் நடித்தார் என்று ஞாபகம். Boost is the Secret of my energy முதலில் சொன்னவர்!

இது பழமொழியா - பட்ட மொழியா?

கேள்வி : இப்போதெல்லாம், ஆங்காங்கே - சில நூறுகள் லஞ்சம் வாங்கியதால் சிலர் கைது என்று செய்திகள்  வருகிறதே?
எங்கள் பதில் : சின்ன மீனைப் 'போட்டால்'தான் பெரிய மீனைப் பிடிக்கலாம்!

புதன், 11 நவம்பர், 2009

சும்மா கேட்டு வைப்போமே!

சிலவற்றை, பழமொழிகள் என்கிறோம்.
சிலவற்றை, பொன்மொழிகள் என்கிறோம்.
இரண்டுக்கும், என்ன வித்தியாசம்?
பதியுங்கள் இங்கே, உங்க கருத்துக்களை!
பார்க்கலாம் உங்க திறமையை!

மிசலனி

கதை விடுகள் அல்லது விட்டுக் கதைகள் அல்லது கட்டுக் கதைகள்.
மிசலனி என்று ஒரு பகுதி அந்தக் கால டைம் பத்திரிகையில் வரும்.  அதில் என்ன வேண்டுமானாலும் இருக்கும்.  ஆனால் ரசிக்கத் தக்கதாக இருக்கும்.  அந்த மாதிரி நாமும் ஏன் முயற்சிக்கக் கூடாது என்ற நல்ல (?) எண்ணத்தில் இதோ சில உதிரிகள்.

* ஐஸ்வர்யா ராய் பச்சன் பெயரை எப்படி எழுத வேண்டும், ஏன்?
ஐஸ், வர்யா,  ராய்                   பச்சன்   
ஐஸ் வரியா வா, வா, ராய் பச்சன் தூரப்ப் போ லே என்று பொருள்.

* சூர்யா, நீ ஜெயிப்பது ஷ்யூர்யா.

* பிரியங்கா (ரொம்ப) சேப்ரா

* பென்ஸ் வண்டியா, லதா மங்கேஷ் கார்.

* அம்பா, நீ வரம் தா, என செல்வம்  அம்பானியைப் போல் ஆக.

* கேசில் தோற்றால் அண்ணன் அம்பானி மூகேஷ் அம்பானி தான். 
கேசில் தோற்றால் தம்பி அம்பானி அனில் அம்பானி இல்லை நில் அம்பானி.

* பத்து நாள் உபவாசத்துக்குப்பின் காந்தி படத்தைப் பார்த்தால்? 
சோனியா காந்தியைப் பார்க்கலாம்.

* ராகுலுக்கு பிரியங்கா இல்லை பிரியக்கா.

* அமைச்சர் முதல்வரிடம் அன்றைய வசூல் கணக்கை ஏன் முன் கூட்டியே சொல்ல வேண்டும்?  மந்திரிக்கழகு வரும் பொருளுரைத்தல்.

* வில்லனுக்கு முக்கியமான வேலை?  அடியார்க்கு அமுதூட்டல்.  

K.G.Y.Raman

செவ்வாய், 10 நவம்பர், 2009

அதான் அடி வாங்கலை இல்லே...விடுங்க..

ஏமாந்த அனுபவங்களில் இன்னும் ஒன்று! எண்பதுகளின் பிற்பகுதி. அப்போது நான் வத்திராயிருப்பு என்ற ஊரில் பணி புரிந்து கொண்டிருந்தேன் . தினமும் மதுரையிலிருந்து காலை பஸ்ஸில் சென்று வருவது வழக்கம். ஒன்றரை மணி நேரப் பயணம் அது. காலை ஏழு மணிக்கு பணியில் இருக்க வேண்டும் என்பதால் காலை ஐந்து முதல் ஐந்தரைக்குள் நான் பஸ் ஏறி விடுவது வழக்கம். ஜெயவிலாஸ் பஸ் 'கூமாப்பட்டி' என்று போட்டுக் கொண்டு நிற்கும். அதில் போனால் தாமதவருகைதான். அதற்குமுன் கிளம்பும் பாண்டியன் பஸ் ஒன்றில் பெரும்பாலும் செல்வேன். வார ஓய்வு தவிர எல்லா நாளும் செல்வதால் அந்த நேர ஓட்டுனர், நடத்துனர்களுக்கு நான் ரொம்பப் பரிச்சயம். என்ன பயன்?

அந்த நேரங்களில் மெதுவாகத்தான் கூட்டம் நிரம்பும். எப்படி இருந்தாலும் முழு பஸ் நிரம்பாது. பாண்டியன் அரசுப் போக்குவரத்துக் கழகம் என்பதால் நேரத்துக்கு எப்படியும் எடுத்து விடுவார்கள். சில சமயம் அந்த ஒன்றரை மணி நேரம் புத்தகம் படித்துக் கொண்டே போவேன். சில சமயம் லேசான தூக்கம். பெரும்பாலும் 'சில்'லென்ற காலைக் காற்று முகத்தில் வீச பேருந்தில் பயணம் செய்யும்போது அதற்கிணையாக ஏதாவது எண்ணங்களோ அல்லது பஸ்ஸில் போடும் பாடல்களோ மனதை ஆக்ரமித்துக் கொள்ளும். கட்டபொம்மன் சிலை அருகே இருந்த பஸ் நிலையம் பெரியார் நிலையம் என்று அழைக்கப் பட்டது. இப்போது மாட்டுத் தாவணி என்ற விநோதப் பெயருடைய ஊருக்கு வெளியே உள்ள இடத்திலிருந்து பஸ்கள் கிளம்புகின்றன. நான் செல்லும் வெளியூர்ப் பேருந்துகள் அந்த பெரியார் பேருந்து நிலையம் எதிரே இருந்தது. இப்போதும் அங்கு பஸ் நிலையம் உள்ளது. ஆனால் வெளியூர் அல்ல என்று நினைக்கிறேன். அந்த நேரத்தில் பஸ் நிலையத்தில் டீக் கடை வியாபாரம்தான் பெரிதாக இருக்கும்.

ஒருநாள் பஸ் கிளம்பக் காத்துக் கொண்டிருந்தேன். ஓட்டுனரும் நடத்துனரும் பேசிக் கொண்டிருந்தனர். ஒரு நபர் என் அருகில் உள்ள நபரிடம் வந்தார். "சார்! நான் வெளியூரு...நேத்து நைட் மதுரை வந்தேன். ஒரு விசேஷத்துக்கு துணிமணி, சாமான்செட்டு எடுக்க வந்தோம். காசு அதுலேயே செலவு ஆய்டிச்சி...ஊர் திரும்ப காசு வேணும். அதனாலதான் இதை விற்கிறேன்..." என்று ஒரு துணி Bit டை நீட்டினார். இதில் ஏதோ ஏமாற்று இருக்கும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். எனவே நான் சற்று தள்ளி நின்று கொண்டேன். "நல்ல பிட் சார், வாங்கிக்குங்க...வேற யார்ட்டயாவது காட்டினால் அள்ளிக்குவாங்க...என் தேவைக்குதான்..." என்று அவர் என் பக்கத்து நபரை நொழப்பிக் கொண்டிருந்தார். அவர் முதலில் மறுத்தார். சரி, விவரமான ஆள்தான் என்று நினைத்துக் கொண்டேன். அப்புறம் இவர் வற்புறுத்தல் அதிகமானது. அவர் மெல்ல தன் கையில் திணிக்கப் பட்ட அந்த பார்சலை கையில் பிடித்தார். 'ஆஹா...' என்று எண்ணிக் கொண்டேன். அவர் என் முகத்தைப் பார்த்தால், 'வேண்டாம்' என்பது போல் தலை அசைத்துக் காப்பாற்றலாம் என்பது என் எண்ணம். அவர் என்னை, என் முகத்தை கவனிப்பதாயில்லை.

சற்று நேரம் பொறுத்து 'விற்பனையாளர்' விலகிச் செல்ல, இவர் என் அருகே வந்து நின்றார். அவரைப் பார்த்து 'தப்பித்தாய்' என்பது போல ஒரு ஸ்மைல் அடித்தேன். விதியும் சிரித்தது. "வாங்கி இருக்கலாம்... விட்டு விட்டேன்..ச்சே.."என்றார். "இல்லைங்க... வாங்காம இருந்ததுதான் நல்லது" என்றேன். "ஏன்" - அவர். "இதில் எல்லாம் ஏமாற்று வேலை இருக்கு... துணி மட்டமாய் இருக்கும் அல்லது அளவு குறைச்சலாய் இருக்கும்.." என்றேன்... "இல்லை, துணி நல்ல துணிதான்...பார்த்தேனே..." என்றார். நடத்துனரும் ஓட்டுனரும் என்னை/எங்களைப் பார்த்துக் கொண்டே பஸ் முன்னால் சென்று டிக்கெட் போட ஆரம்பித்தார். "விட்டு விட்டேனே " என்று மீண்டும் புலம்பியவர் அவரைத் தேட ஆரம்பித்தார். அடுத்த பஸ் அருகில் வேறொரு ஆளை மடக்கிக் கொண்டிருந்த மேற்படி விற்பனையாளர் இவர் முகக் குறிப்பை பார்த்து மீண்டும் இவர் அருகில் வந்தார். "கடைசியா என்ன விலை சொல்றேப்பா?" என்றார் என் அருகு. "கடைசி விலை நூற்றைம்பது ரூபாய்"என்றார் வெளியூர். நிகழ்ச்சியில் எதிர்பாராத் திருப்பம்!

'சக பயணி' என்னிடம், "சார்! நூற்றைம்பது ரூபாய்தான்... வாங்கிக்குங்க...நல்ல Stuff.. " என்றார்! நான் அதிர்ந்து, "வேண்டாம்...நான் கேட்கவே இல்லையே.." என்றேன். "இல்லை சார், நல்ல துணிதான், எப்படி சொல்கிறேன் என்றால் நானே டெய்லர்தான்..தைரியமா (!) வாங்கிக்குங்க" என்று சொல்ல, நான், "அட, நான் உங்களையே வாங்க வேண்டாம்னு சொல்றேன்.. என்னைப் போய்...எனக்கு வேணாங்க..." என்றேன். இந்த எதிர்பாராத் திருப்பத்தை யூகிக்க முடியாததால் அதிர்ச்சியில் என்னிடம் பேச்சில் தயக்கம் தலை காட்டி இருக்க வேண்டும். இது வரை மௌனமாய் இருந்த 'விற்பனையாளர்' இப்போது வாய் திறந்தார்.."சரி விடு குரு...வேற ஆள் பார்க்கலாம்..." என்றவர் என்னைப் பார்த்து, "சார், வயசுப் பிள்ளையா இருக்கீங்க...உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? நீங்க வாங்கலைன்னா வுடுங்க...அடுத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ணி எங்க பொழைப்பை ஏன் கெடுக்கறீங்க..." என்று 'அன்புடன்' தோளில் அணைத்து "வாங்க டீ சாப்பிடலாம்" என்று எதிர்க் கடையை காட்டினார். நான் "வேண்டாம்" என்றேன். "பயப்படாதீங்க...வேற ஒண்ணும் பண்ண மாட்டோம்..சின்ன வயசு உங்களுக்குப் புரியலை...நாம எல்லாம் தோஸ்துதான்...கண்டக்டர், டிரைவர் லாம் இருக்காங்க..பயப்படாம வாங்க..தினமும் உங்களைப் பார்க்கறோமே...ஒண்ணும் பண்ண மாட்டோம்..ஆனா ஒண்ணு, இனிமே இப்படிப் பண்ணாதீங்க..."என்றார். அவர்களுடன் ஐந்தடி தூரத்தில் இருந்த டீக் கடைக்கு சென்று அவர்களுடன் டீ அருந்தினோம். நான் காசு எடுத்தும் என்னைக் கொடுக்க விடவில்லை அவர்கள்!

வாடிக்கை நடத்துனரிடம் வந்து "உங்களுக்குத் தெரியுமில்லே...சொல்லி இருக்கலாம் இல்லே..." என்றேன் ஆதங்கத்துடன். அவர், "அதான் ஒண்ணும் பண்ணலையே.. விடுங்க...நீங்க இப்போ போய்டுவீங்க... நாங்க தினமும் ஏழெட்டு ட்ரிப் அடிக்கணும் இல்லே...தவிர, விபரீதம் ஆனா வந்திருப்போம்..இதெல்லாம் சாதாரணம் சார்..." என்றார். எங்க மதுரைக்காரய்ங்க எப்பவுமே நியாயமானவயிங்கதேன் இல்லே...

நீங்களும் படைப்பாற்றல் மிக்கவர்தான்!

Creativity - என்பதை, படைப்பாற்றல் - னு சொல்லலாம் என்று நினைக்கிறேன். 
அது என்ன படைப்பாற்றல்? 
படைப்பாற்றல் என்பது, நீங்க முன்னர் சிந்தித்து, தேர்ந்தெடுத்த இலக்கை அடைய, நீங்க பயன்படுத்துகின்ற யுக்திகள். Creativity is generation of ideas, to achieve a pre-determined goal.
எல்லா உயிரினங்களும், படைப்பாற்றல் பெற்றவைதான், மனித இனம், இதில் அதிக படைப்பாற்றல் உடையது. சில பயிற்சிகளால், இந்த படைப்பாற்றலை மென்மேலும் விருத்தி செய்துகொள்ளலாம். பயிற்சிகள் நிறைய வரும், காத்திருங்கள்.


நீங்க படைப்பாற்றல் மிக்கவர் என்று எப்படி சொல்கிறேன் தெரியுமா?
உங்க சிறு வயதில், நீங்க பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த நாட்களில், ஏதோ ஒரு காரணத்திற்காக, ஒருநாள் உங்களுக்கு - பள்ளிக்குச் செல்ல விருப்பம் இல்லை. அப்போ, மறுநாள் பள்ளிக்கு லீவு போடணும் - என்பது உங்க இலக்கு. அதை அடைய - நீங்க பின்பற்றிய யுக்திகள் எவ்வளவு உண்டோ, அவை அனைத்துமே, உங்க படைப்பாற்றலுக்கு உதாரணங்கள்.


அந்த திரிஷா விளம்பரம் பார்த்திருப்பீர்கள் --
"அழகு உங்க கைகளில்,
உலகம் உங்க காலடியில்"


இதை நான் கொஞ்சம் மாற்றியமைத்து,
"அழுக்கு உங்க காலடியில்"
இது இரண்டாவது வரி,  என்றால் - முதல் வரி என்ன என்று கேட்டேன். 
அதற்கு என் மனைவி கூறிய முதல் வரியைக் கேட்டு - நிஜமாகவே திகைத்துப் போனேன். நீங்க முதல் வரிக்கு முயற்சி செய்து, இங்கே இடுங்கள்.
உங்களால் முடியும்.

திங்கள், 9 நவம்பர், 2009

சொல்லாதீங்க நோ

இப்பத்தான் இருக்கே - எவ்வளவோ!
அலுவலக மேலாளர் - ஒருநாள் எங்கள் எல்லோரிடமும் கூறினார். "நீங்க எல்லோரும் - சில விஷயங்களை உன்னிப்பாகக் கேட்டுக் கொள்கிறீர்கள்; சில விஷயங்களைக் கேட்கும்பொழுது உங்க ஆண்டென்னாவை மடக்கி வைத்துவிடுகிறீர்கள்."  மேலும் தொடர்ந்து அவர், வண்டியின் chassis engineering பகுதியின் வடிவமைப்புகளின் ஒரு பகுதியைப் பார்த்துக் கொள்ளும் என்னைப் பார்த்துக் கேட்டார், " நான் இந்த மீட்டிங்கில், எஞ்சின் பற்றிய சில - வாடிக்கையாளர் அதிருப்தி விஷயங்கள் சொன்னேனே - அது என்ன என்று உன்னால் சொல்லமுடியுமா?"
நான் என் தோல்வியை ஒப்புக்கொண்டேன்.
அன்று, அந்தக் கணம் முதல், நான் எதற்குமே என்னுடைய கேட்கும் / பார்க்கும் திறனை ஆப் செய்யாமல் இருக்க ஆரம்பித்தேன். எவ்வளவோ விஷயங்கள் அதற்கப்புறம் தெரிந்துகொண்டேன்.
இன்று கேள்விப் பட்ட ஒரு தகவல், ஆங்கிலத்தில் ஆறு லட்சத்து, முப்பத்தேழாயிரம் வார்த்தைகளுக்கு மேல் உள்ளன. ஆனாலும், அதில் ஆயிரத்து ஐநூறு தெரிந்தாலே போதும், நம் அன்றாட வாழ்க்கை உரையாடல்களுக்கு; அந்த ஆயிரத்து ஐநூறில் நமக்கு ஏற்கெனவே தெரிந்தது, கிட்டத்தட்ட ஆயிரம்!

ஞாயிறு, 8 நவம்பர், 2009

.சின்னப் புள்ளத் தனமா இருக்கு...

கீழே உள்ள வரிசையில் அடுத்தது என்னவாக இருக்கும்?
அரசபி, ஜிஜிரர, த்னித்கா, குகாகுஷ், மாந்மாரா, - - - -

அள்ள அள்ள அதிகமாகும், எடுக்க எடுக்கப் பெரிதாகும்......எது?

குழப்ப மேனேஜர் இந்த மாதம் பதினைந்தாம் தேதி காரியதரிசிக் குமுதாவை நினைவூட்டச் சொன்ன நாள்..." நாளை மறுநாளுக்கு அடுத்த மாதம் நான்கு நாள் முன்பு முந்தின வாரம் நினைவூட்டவும்" என்ன தேதி?

கீழே உள்ள வெற்றிடங்களை வரிசையில் உள்ள எண்களை ஒருமுறை மட்டும் உபயோகித்து விடை கொண்டு வரவும்... 3,7,8,9,12
( _ + _ - _ ) X _ Divided by _ = 1

எனக்கு நாலெழுத்து.
இலையில் முதலாக இருக்கும் நான் இல்லையிலும் இருக்கிறேன்.
சொந்தத்தில் இரண்டாவதாக இருந்தாலும் பந்தத்தில் இருக்கிறேன் பாசத்தில் இல்லை.
திருடனில் முதல்வன் மூன்றாவதானாலும் பொருளில் ஒன்றுமில்லை.
யார் என்று தெரிந்ததா முதல் நான்காவதாக, நியாயமாக இரண்டாவதாக!

'அபூர்வ'ப் புதிர் : "என்னுடைய மனைவி யாருக்கு மகளோ, அவருடைய மருமகனின் அப்பா இவருக்குத் தாத்தா. எனக்கும் அவருக்கும் என்ன உறவு?

விடைகள் பின்னூட்டமாக...

TOP 10

1. 2,158



2. 601



3. 242



4. 218



5. 144



6. 107



7. 68



8. 58



9. 55

10. 53
ஹேமா - இப்போ உள்ளே  வந்துட்டீங்களா?