சனி, 31 மார்ச், 2012

நடக்கும் நினைவுகள்..... (5) பொம்மையைக் கண்டுக் கண்டு பயம் எதற்கு....?

               
முன்பு குமுதத்தில் மனிதன் என்ற பெயரில் ஒரு தொடர் பகுதி வந்து கொண்டிருந்தது. வித்தியாசமான முயற்சிகளை பொது மக்கள் மத்தியில் நடத்தி கிடைக்கும் ரீ ஆக்ஷன் பற்றிய தொடர் அது! வாரா வாரம் படிக்க சுவாரஸ்யமாக இருக்கும்.
                    
தற்சமயம் டிவிக்களில் கேண்டிட் கேமிரா என்ற பெயரில் சில அநியாய அகட விகடங்கள் நடக்கும். சமயங்களில் பார்க்கும் நமக்கு கோபம் கூட வரும். சில சுவாரஸ்யமாக இருக்கும்.
             
இப்போது நான் சொல்லப் போகும் சம்பவம் கண்ணெதிரே யதேச்சையாக ஆனால் நிஜமாக நடந்தது. மாலை வாக்கிங் வந்து கொண்டிருந்த போது கவனித்தது. ஓரமாக நின்று ஃபோன் பேசிக் கொண்டிருந்தபோது நடக்க ஆரம்பித்த சம்பவம் பார்த்து,  அதனால் கவரப்பட்டு, பேசி முடித்து விட்ட ஃபோனை,  பேசுவது போலவே கையில் வைத்தபடி, அதிலேயே படம் எடுத்தபடி கவனிக்கத் தொடங்கினேன்! 
               
பிரதான சாலை அல்ல அது, என்றாலும் பஸ் தவிர மற்ற வாகனங்கள் செல்லும் சாலை அது.  சில சிறுவர்கள் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். சாலையோரத்தில் ஒரு பொம்மை கிடந்தது. ஏன் தூக்கிப் போட்டார்கள் என்று நினைக்குமளவு சேதமில்லாத,  ஓரளவு நல்ல பொம்மை. அதை எடுத்து ஆராய்ந்து கொண்டிருந்த சிறுவர்களில் ஒருவனுக்கு சடாரென ஒரு ஐடியா தோன்றியது. 
             
அந்த பொம்மையை எடுத்துக் கொண்டு போய் சாலையின் நடுவே நிற்க வைத்தான். நின்றது,  என்றாலும் அவ்வப்போது காற்றில் விழுந்தது. உடனே பொம்மையுடன் ஓரமாக வந்து சில குச்சிகளைச் சேகரித்துக் கொண்டு மறுபடி சாலை நடுவே சென்று பொம்மையை நிறுத்தி விட்டு மூன்று பக்கமும் குச்சிகளைத் தாங்கு கோலாகக் கொடுத்து நிறுத்தி விட்டு ஓரமாக வந்து கொஞ்ச நேரம் நின்று ஆராய்ந்து விட்டு....  சென்று விட்டார்கள்!   
அப்புறம் நடந்ததுதான் நல்ல வேடிக்கை. சாலையில் வாகனமோட்டி வந்தவர்களுக்கு சாலையின் நடுவே ரத்தச் சிவப்பில் உடையணிந்து நின்று முறைத்துப் பார்க்கும் பொம்மையைக் கண்டு என்ன தோன்றியதோ... நட்ட நடுவே நிற்கும் அந்த பொம்மையின் மேல் படாமல், மோதாமல் ஓரமாக ஓட்டிச் சென்றார்கள்.     

வேகமாக வந்த கார் ப்ரேக் பிடித்தவாறே ஓரம் வந்து பொம்மையைத் தவிர்த்துப் பறந்தது. இரு சக்கர வாகனங்கள் கவனமாக பொம்மையைத் தவிர்த்துப் பறக்க, அதன் ஓட்டுனர்களும் பில்லியன் ரைடர்களும் ஆர்வமாக பொம்மையைத் திரும்பி ஒரு லுக் விட்டு விட்டு,  பார்த்தாலே மந்திரம், தந்திரம் ஏதாவதில் மாட்டி விடுவோம் என்பது போல தலையைத் திருப்பிக் கொண்டு சென்றார்கள்.

இன்னும் பலர் அதைத் திரும்பிப் பார்ப்பதைக் கூடத் தவிர்த்தார்கள். இரு சக்கர வாகனத்தில் டபுள்ஸ் வந்த லேடி போலீஸ் ஜோடி ஒன்றும் ஓரம் கட்டிப் பறந்தாலும் ஓட்டுனப் பெண் போலீஸ் கையை நீட்டிக் காட்டி கோபத்துடன் சைகை காட்டிச் சென்றாரே தவிர அவரும் அதை எடுக்கவோ ஓரம் போடவோ முனையவில்லை. 
              
ஆட்டோக்களும் அதே வண்ணம் பறந்தன. நடந்து சென்ற சிலர் சுற்றுமுற்றும் பார்த்து யார் இப்படிச் செய்திருப்பார்கள் என்று ஆராய்ந்து விட்டு புன்னகையுடன், ஆனால் கவனமாக 'அதை'ப் பார்க்காமல் கடந்தனர். 
             
இதே போல நாம் செல்லும் போது பாதையில் இப்படி ஒன்று எதிர்ப் பட்டால் நாம் என்ன செய்வோம் என்று உள்ளே நினைப்பும் ஓடியது. ஆனாலும் மக்களை நினைத்து நிஜமாகவே ஆச்சர்யப் பட்டுக்கொண்டிருக்கும்போதே செல்ஃபோன் பேசியபடி வந்த ஒரு ஓட்டுனரின் டி வி எஸ் 50 பொம்மையை கவனிக்காமல் மோதி தட்டி விட்டுப் பறந்தது.
             
(புகைப் படம் எடுத்தால் பொம்மையை வைத்தது நாம்தான் என்ற எண்ணம் வந்து விடுமோ என்ற எண்ணம் வந்ததால் ஜாக்கிரதையாகப் படம் எடுக்க வேண்டியிருந்தது!! அப்புறம் நடையை விட்டு விட்டு ஓட்டம் எடுக்க வேண்டியதுதான்!!)
         
அப்புறமும் நடு ரோடில் பரிதாபமாகக் கிடந்த அந்த பொம்மையை வண்டிகள் கவனமாகத் தவிர்த்தே பறந்தது கண் கொள்ளாக் காட்சி. கட்டக் கடைசியாக ஒரு ஸ்கூட்டி தாண்டும்போது பொம்மையின் ஓரத்தில் தட்டப் பட்டு நெம்புகோல் தத்துவத்தில் பொம்மை எம்பி அந்த ஸ்கூட்டியின் முன்புறமே விழ, வண்டி கண்களிலிருந்து மறைய, காட்சி முடிவுக்கு வந்தது! 
           

வெள்ளி, 30 மார்ச், 2012

மலரே, மலரே தெரியாதோ!

    
சாலையில் நடந்து செல்லும்போது இந்த மலர் கண்களைக் கவர்ந்தது. இரண்டு மூன்று நாள் பார்த்து விட்டு ஒரு நாள் கேமிராவுடன் சென்று படம் பிடித்தேன். விஷ மலர் என்று சந்தேகம்! ஏன் என்றால், இதை எடுத்த பிறகு கேமிரா வேலை செய்யவில்லை! என்ன கோளாறு என்று பார்க்க வேண்டும்!  


மலர்கள் பெரிய கனம் இல்லை. ஆனால் செடியில் மலர்ந்திருக்கும்போது நாணம் கொண்ட நங்கை போல தலை குனிந்தே இருக்கின்றன மலர்கள்! 


செடியில் மலர்களைப் படம் பிடிக்கும்போது கூட இருந்த குப்பைகளை ஒதுக்கிப் படம் பிடித்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது! 


இதுதான் அந்தச் செடி. 


தெரிந்தவர்களிடம் இது என்ன செடி, என்ன பூ என்றெல்லாம் கேட்டபோது ஒருவருக்கும் சொல்லத் தெரியவில்லை. காய்களைப் பாருங்கள், நட்சத்திரம் போல், பட்டை பட்டையாக சிறிய சைஸில்


ஒருவர் மட்டும் முதலில் பூவை மட்டும் பார்த்து விட்டு "மூக்குத்திப் பூ மாதிரி இருக்கிறது...காய்களைச் சமைப்போம்" என்றார்! அப்புறம் செடியைப் பார்த்து விட்டு தான் சொன்ன பதிலில் இருந்து பின் வாங்கி விட்டார்! 


தலை குனிந்திருக்கும் மலர்களின் அழகு சரியாகத் தெரியாதலால், மலர்களை கையிலும் மஞ்சத்திலும் கிடத்தி அதன் அழகைக் காட்ட முயன்றிருக்கிறேன்!  பாமரேனியன் நாய்க்குட்டி முகம் மாதிரி இல்லை? மஞ்சள் மலரின் நடுவே இருக்கும் அந்த மெரூன் கலர் மகரந்தங்கள்தான் கண்களைக் கவரும் அழகு! என் கேமிராவில் அது துல்லியமாகப் பதிவாகவில்லை என்று தோன்றுகிறது. நேரில் இன்னும் அழகு. ஆமாம்...இது என்ன செடி, என்ன பூ? "நேரில் பார்த்த உங்களுக்கே தெரியவில்லை, படம் காட்டி கேட்டால் யாரால் சொல்ல முடியும்" என்றாள் மனைவி. 


"உனக்குத் தெரியாதும்மா....சொல்லிடுவாங்க பாரு" என்று சொல்லியிருக்கிறேன்! 

வியாழன், 29 மார்ச், 2012

பணக்காரக் குடும்பமும் அசெம்ப்ளி ஹாலும்... வெட்டி அரட்டை.

                    
நங்கநல்லூரிலிருந்து விசு அலைபேசியபோது மிக முக்கியமான வேலையில் இருந்தேன். (ஹி....ஹி.. தூக்கம்தான்!) 

"என்னடா... வேலையா இருக்கியா..."

"நானா... எனக்கு என்ன வேலை...? சொல்லுங்க... "
கே டிவி பாருடா... பணக்காரக் குடும்பம்... எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டு ஸீன்..."

"கண் போன போக்கிலே வா?"

"அடச்சீ... அது வேற படம்... இது எம் ஜி ஆர் சரோஜா தேவி நடிச்ச படம்... 'இதுவரை நீங்கள் பார்த்த பார்வை..' பாட்டு"

"ம்.... பார்க்கறேன்" சொல்லி விட்டு முக்கிய வேலையைத் தொடர்ந்தேன்.

ஐந்து நிமிடத்தில் மறுபடி அலைபேசி "இது குழந்தை பாடும் தாலாட்டு.." என்று பாடியது! என்ன முரண் என்று யோசித்தபடி மறுபடி முக்கிய வேலையிலிருந்து கலைந்து கையிலெடுத்தேன்.

"என்ன பார்த்தியா..."

"ஓ... ஊம்...  பார்த்தேன்.. சூப்பர்!"

"என்ன ஒரு பாட்டு இல்லே... இது ஹிந்தியில என்ன பாட்டு சொல்லு..."

"என்கிட்டயேவா.... இதோ யோசிச்சுச் சொல்றேன்..."

"ஹம்ஜோலிடா... இதுலே இன்னொரு பாட்டு வரும்... 'பறக்கும் பந்து பறக்கும்..." பாடிக் காட்டுகிறார்.
   
"ஆமாம்... ஆமாம்...  தெரியும்... அது கூட ஹம்ஜோலியில் இருக்கு" என்றேன்.

"என்ன பாட்டுடா இதெல்லாம்... இல்லை? அந்தக் காலத்துல..." என்று இடைவெளி விட்டார்.

"டென்னிஸ் ஆடியபடியே இன்னொரு பாட்டு இருக்கு... என்ன பாட்டு சொல்லுங்க பார்ப்போம்..." என்றேன். (நாமும் ஒரு கேள்வி கேட்டு, அவர் யோசனை செய்யும் நேரத்தில், நமது முக்கியமான வேலையைத் தொடரலாமே என்கிற நப்பாசையோடு!) 
          
"அடச்சீ.... ஹம்ஜோலி பாட்டு சொல்றே... அதான் சொல்லியாச்சே.."
                
"ச்சே.... இல்லை! தமிழ்லயே..."
                 
"நீயே சொல்லு" 
(ஆஹா தோசையைத் திருப்பிப் போட்டுவிட்டாரே!) 
     
"இதயமலர் படத்துல ஜேசுதாஸ் பாடற பாட்டு 'செண்டுமல்லி பூப்போல் அழகிய' என்று வரும் ஜெமினி சுஜாதா நடிச்சது "

"இருந்துட்டுப் போகட்டும் போ.. கல்யாணமாலை பார்ப்பியோ...?"

"ஊஹூம்"

"நேத்து ஒரு ஆள் வந்தார். மோகன், 'என்ன படிக்கிறான் பையன்' என்று கேட்கிறார்.... அதற்கு அவர் 'ஐ ஏ எஸ் படிச்சிட்டு இருக்கான்' என்றார்" இன்னொரு ஆள் 'பையன் சொந்த பிசினெஸ் பண்றான்' என்று சொல்லிவிட்டு 'அடக்கவொடுக்கமா, பாந்தமா, அழகா குடும்பத்துக்கு ஏற்ற பொண்ணா வேண்டும்' என்றார். வருமானம்? என்றார் மோகன். 'அது போதிய அளவு வருது' என்ற அவர், 'பொண்ணு பத்தாவது படிச்சிருக்கணும்' என்றார். என்னடா மணல் கயிறு மாதிரி கண்டிஷனா இருக்கே என்று கவனிச்சேன். பையன் என்ன படிச்சிருக்கான் என்று மோகன் கேட்டார்... அவருக்கும் ஒரு கியூரியாசிட்டி வந்திருக்கணும்... பையனோட அப்பா சொன்னார்.. 'எட்டாவது படிச்சிருக்கான்'... 


காதலிக்க நேரமில்லை பாலையா சொல்லும் 'ஓஹோ...பையனுக்கு படிப்பு வேற இல்லையோ... அப்போ ஒண்ணு செய்யுமே...' வசனம் ஞாபகத்துக்கு வந்து சிரிப்பு வந்திட்டுது"
  
இதுதான் விசு. நாமும் ஒருவேளை நிகழ்ச்சி பார்த்திருந்தாலும், இது மாதிரி யோசித்திருப்போமா தெரியாது. இவர் பார்வையே தனி. அதை விட அவர் அதை விவரித்துச் சொல்லும்போது கொஞ்சம் சொந்தச் சரக்கும் சேர்த்துக் கொள்வார். 
     
"இந்தப் படத்துல நாகேஷ் ஜோக் நல்லா இருக்கும்... ஸ்கூட்டரை உதைத்து ஸ்டார்ட் பண்ணித் தருவார் ..." என்று ஆரம்பித்தார்.
             
எங்கள் ரெண்டு பேருக்குமே நாகேஷ் ரொம்பப் பிடிக்கும்.
     
"ஓ... அந்த ஞாபகமறதிக்காரராய் வருவாரே... அதுவா... மனோரமா, இவர் ஞாபகமறதி சரியாக டாக்டர்கிட்ட கூட்டிக்கிட்டுப் போனா... இவர், மனோரமா கர்ப்பமா இருக்கறதா கூத்தடிப்பாரே..."
                   
"சீ..  அது தெய்வத்தாய்... இது வேற..."

பேச்சு அங்கே இங்கே என்று அல்லாடி, ஊட்டி அசெம்ப்ளி ஹால் தியேட்டரைப் பற்றி வந்தது. 
   
"என்ன தியேட்டர்டா அது? குவாலிட்டி படங்கள்தான் போடுவான்... படம் ஆரம்பிக்கறதுக்கு முன்னால செய்திச் சுருள் போடுவாங்களே, அது மாதிரி இந்தத் தியேட்டர்ல சின்னச் சின்னக் குறும்படம் போடுவான் பாரு... ஒரு படத்துல..."

"தியேட்டர் பத்தித் தெரியுமே... நான் கூட அங்குதான் ஷாலிமார் பார்த்தேன்"

"அது கிடக்கட்டும்...இது ஒரு இங்க்லீஷ் படம். ஒரு வெள்ளைக்காரன் தண்ணியடிச்சிட்டு முதலாளி மேல வெறுப்புல ரோட்ல நடந்து வந்துகிட்டு இருக்கறப்ப அங்க இருக்கற, அவங்க தேசியக் கொடியை பிச்சு எரிஞ்சு துவம்சம் பண்ணுகிரான். அதை, அந்த வழியா வர்ற அவர் முதலாளி பார்த்துடறார்... இவன் பயந்த மாதிரியே 'நாளை ஆபீசில் என்னை வந்து பார்' என்று சொல்லி விட்டுப் போய் விடுகிறார். மறுநாள் ட்ரிம்மாக ஷேவ் செய்துகொண்டு, நீட்டாக டிரஸ் செய்துகொண்டு, ஆபீஸ் சென்று முதாலாளிக்குக் காத்திருக்கிறான். வந்தவர் அவனைப் பார்க்காதது போலச் சென்று விடுகிறார். ரொம்ப நேரம் காத்திருந்தவன் சீட்டு கொடுத்தனுப்புகிறான். காத்திருக்கச் சொல்கிறார். உணவு இடைவெளியும் வர, இன்னும் காத்திருக்கிறான்..."

"நான் பார்த்ததில்லை... ஆனால் முடிவு தெரிந்து விட்டது. இது மாதிரி வேற கேள்விப் பட்டிருக்கேன்"

"முழுக்கக் கேளு... மத்தியானம் வந்தும் கூப்பிடலை என்றதும் மறுபடி சீட்டு கொடுத்தனுப்புகிறான். காத்திருக்கச் சொல்லி தகவல் வருகிறது. என்ன ஆகுமோ என்ன சொல்வாரோ என்ற பதைபதைப்புத் தொடர்கிறது. கிளம்பும் நேரமும் வந்து விட, இன்னும் அழைக்கப்படாததால் கோபம் கொள்ளும் அவன், முதலாளி அறைக் கதவை உதைத்துத் திறந்து உள்ளே நுழைந்து, 'என்ன செய்வே..வேலையை விட்டு எடுப்பியா..எதுத்துக்கோ...என்னன்னு நினைச்சுக்கிட்டுருக்கே..' என்ற ரீதியில் ஐந்து நிமிடம் படபடவெனப் பொரிய, அமைதியாகக் கேட்டுக் கொண்டிருக்கும் முதலாளி, 'உன் தண்டனை முடிந்து விட்டது.. வீட்டுக்குப் போய்விட்டு, நாளை ஆபீஸ் வந்து சேர்' என்பார். நான் ரசித்த படம் அது"

"சரி உன் வேலையைக் கவனி... அப்புறம் இன்னொரு கதை சொல்றேன்... ஒரு வெள்ளைக்காரப் பெண் நீக்ரோவைக் காதலித்த கதை..."

"இப்பவே சொல்லுங்களேன்...."

"போடா... தூங்கப் போறேன்... இப்பவே பேச ஆரம்பிச்சு 1111  செகண்ட்ஸ் ஆகி விட்டதாக என் செல் சொல்கிறது... இன்றைய லிமிட் அவ்வளவுதான்.. பை.."
                
வைத்து விட்டார்.           
             

புதன், 28 மார்ச், 2012

நாக்கு நாலு முழம்... த கு மி வ

                          
பத்ரகாளி பாட்டு நினைவில் இருக்கிறதா..."தஞ்சாவூர்க் கதம்பத்தை முழம் போட்டு வாங்கி.... தலை மேல வச்சுண்டு நின்னேனே ஏங்கி..." 
                   
அது மாதிரி,
                     
"தஞ்சாவூர்க் குடைமிளகாயைப் படி போட்டு வாங்கி...." என்று பாடாத குறையாய் தஞ்சாவூர்க் குடைமிளகாய், ஒரு கடையில் கிலோ எழுபது ரூபாய் என்றும் இன்னொரு கடையில் படி இருபத்தைந்து ரூபாய் என்றும் மாம்பலத்திலிருந்து வாங்கி வந்து, 
              
நன்றாக தண்ணீர் விட்டு அலசி, காம்பை அளவாக வெட்டி, ஒரு சின்னக் கீறல் போட்டு,     
               
                   
கல்லுப்பு வாங்கி அளவு பார்த்து, மிளகாய் / உப்பு என்று மாறி மாறி ஒரு பாத்திரத்தில் போட்டு, மூடி வைத்து,
                         
மிளகாய் முழுகும் அளவு தயிர் வேண்டுமென்பதால் பால் வாங்கி தண்ணீர் ஊற்றாமல் காய்ச்சி, உறைகுத்தி வைத்து,
               
                   
பனிரெண்டு மணி நேரம் தாண்டிய பின் அல்லது அடுத்த நாள் அவ்வப்போது குலுக்கிக் குலுக்கி மூடிவைத்த மிளகாயை எடுத்து (தேவைப் பட்டால்) புளி மிளகாய்ப் போட கொஞ்சம் தனியே எடுத்து வைத்து,
                 


ஒரு பாகத்தில் உறைந்த தயிரை முக்காலோ அல்லது முழுதுமோ முழுகுமளவு ஊற்றி வைத்து விட்டு,
              
அப்புறம் இன்னொரு பாத்திரத்தில் புளி மிளகாய்ப் போட எடுத்து வைத்திருக்கும் மிளகாயில் மஞ்சள் பொடி, வெந்தயப் பொடி சற்று தூவி, அப்புறம் மிளக்காயக்குப் போட தேவைக்குத் தக்கபடி புளி எடுத்து கெட்டியாகக் கரைத்து (தோசை மாவு பதத்தில் கரைப்பது முக்கியம்!) அதை மிளகாயில் ஊற்றி மூடி வைத்து விட்டு,அவ்வப்போது குலுக்கி விட்டுக் கொண்டு, அன்று இரவே சாப்பிடும்போது மிளகாய்ப் பாத்திரத்தைத் திறந்து,  வரும் வாசனையை வைத்து மோர் சாதம் ரெண்டு வாய் அதிகமாக உள்ளே தளளி...அடுத்த நாள் முதல் மோர் சாதத்துக்கு,  ஊறிக் கொண்டு வரும் மிளகாய்த் தொட்டுக் கொண்டு சாப்பிடும் சுவை இருக்கிறதே... அதை எழுத்திலும், படத்திலும் கொண்டு வர முடியாது!


அடுத்தடுத்த நாள் முதல், மிளகாயை தாம்பாளத்தில் வைத்து வெய்யிலில் வைக்க ஆரம்பித்து விட வேண்டும். இல்லா விட்டால் புழு வர ஆரம்பித்து விடும். காயும் ஒவ்வொரு பதத்திலும் ஒவ்வொரு ருசி.... ஸ்.... ஸ்.... ஆ....நன்றாகக் காய்ந்து மொட மொட என்று ஆனபின் எடுத்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்து விட்டால் தேவைப் படும்போதெல்லாம் எண்ணெயில் வறுத்து மோர் சாதத்துக்கோ, உப்புமாவுக்கோ, மோர்க்கூழுக்கோ தாளிதம் செய்யும்போது அதில் இந்த மிளகாயைப் போட்டு வறுத்துக் கொண்டு அவற்றைச் செய்து  சாப்பிடலாம். அரிசி மாவு மோர் உப்புமா, புளி உப்புமா, மோர்க்கூழ் போன்றவற்றில் இவற்றைப் போட செம டேஸ்ட்தான் போங்க...ஜனவரி இறுதி முதல் மார்ச் வரைதான் இதற்கு சீசன்.... கிட்டத் தட்ட இதே நேரம் மாவடு சீசனும் தொடங்கி விடுகிறது....
       
என்ன... நீங்களும் மிளகாய் வாங்கக் கிளம்பிட்டீங்களா...!  

                         

செவ்வாய், 27 மார்ச், 2012

மன்னிக்கவும் நான் ஒரு நாய்.......

                      
நீண்ட நாட்களாக நாய் இல்லாமலிருந்தது எங்கள் தெரு. திடீரென ஒரு நாள் இது தலை காட்டியது.        
எல்லோரிடமும் என்னமோ ஏற்கெனவே இரண்டு வருடமாக இங்கேயே பழகியது மாதிரி ஒரே நட்புணர்வு பாராட்டியது. எங்கள் வீட்டின் கதவின் மீது சற்றே ஏறி நின்று அது எங்களை அழைக்கும் அழகு இருக்கிறதே.... அருகிலிருந்தவர்கள் 'சரியான ஆளைத்தான் சப்போர்ட்டுக்குப் பிடிக்குது' என்று கிண்டல் செய்தார்கள். நானும் அது அனுப்பிய ரிக்வெஸ்ட்டை உடனே கன்ஃபர்ம் செய்தேன்! 

அபபடி ஒரு அப்ரூவல் கிடைத்ததும் அது உடனே செயலில் இறங்கியது. முழுத் தெருவிலும் வளைய வந்து கொண்டிருந்த ஜிம்மி (உடனே பேர் வச்சுடுவோம்ல...) எங்கள் வீட்டுக்கெதிரே ஒரு குறுப்பிட்ட ஏரியாவை மானசீகமாகத் தேர்வு செய்து கொண்டது.  ஆனால் உங்களுக்கும் அதன் ஏரியா எல்லைகள் தெரியும் -- இங்கு வந்து பார்த்தால்!


முதல் இரண்டு மூன்று நாள் கணக்கெடுப்பு.... யார் யார் அடிக்கடி வருபவர்கள், யார் யார் அவ்வப்போது வருபவர்கள்... யார் புதிதாக வருபவர்கள்.... இப்படிப் பார்த்து வைத்துக் கொள்கிறது என்று தெரிந்தது. இது வந்த நேரம் பனிக்காலமாய் இருந்ததால் வீட்டு வாசலில் ஒரு அட்டை போட்டு அதன் மேல் பழைய துணி விரித்து வைத்ததும் அதை உடனடியாக முகர்ந்து பார்த்து, அந்தச் சிறிய எல்லைக்குள் நடந்து உடம்பை வளைத்துப் படுத்துப் பார்த்து செக் செய்து கொண்டபின் 'ஓகே டேக்கன்' என்பது போல அப்புறம் அங்கேயே படுத்துக் கொள்ளத் தொடங்கியது! 

      
பேப்பர் போடுபவரைக் கொஞ்ச நாள் பக்கத்திலேயே அண்ட விடவில்லை. . இது எங்களுக்குப் பல சிரமங்களைக் கொடுக்க, நாங்கள் தலையிட்டு பிரச்னையைத் தீர்த்தபோது அவர் சொன்னதாவது : "போன வாரம் எங்க வீடு இருக்கற தெருவில்தான் இருந்தது. நாங்களும் பிஸ்கட் போடுவோம்... சோறு சாப்பிடாது சனியன்... இப்போ இங்கே வந்து இடம் பிடிச்சிட்டு என்னையே பார்த்துக் குலைக்குது"

"ஏற்கெனவே அங்கே வேற நாய் இருந்ததா..." என்றேன்.

"ஆமாம்... ரெண்டு வருஷமா வேற ரெண்டு நாய் ஏற்கெனவே அங்கே உண்டு" என்றார் செந்தில்.

"அப்புறம் எப்படி இது அங்க இருக்கும்... இங்கே பாருங்க... இதுதான் தனிக்காட்டு ராஜா.." என்றேன். என்னை விநோதமாகப் பார்த்து விட்டுச் சென்றார் செந்தில். 
                       
அது சாதம் வைத்தால் சாப்பிடுவதில்லைதான்..  ஒன்லி ரஸ்க், பிஸ்கட், பன்...!
                    
அவ்வப்போது வந்து சென்ற நாய்கள் சில உண்டு. அவை இந்த ஏரியாவைக் கிராஸ் செய்ய வரும்போது இதன் எல்லைக்குள் நுழைந்ததும், அது எவ்வளவு பெரிய சைஸாக இருந்தாலும் கவலைப் படாமல், இது எழுந்து நின்று, தலையைச் சாய்த்து மேல் பற்கள் மட்டும் வெளியே தெரியும்படி வாயை வைத்து அடிக்குரலில் உறுமி எச்சரிக்கை செய்யும். சில அவைகளுக்குள் உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தப்படி விலகிப் போய் விடும். சில எதிர்த்து நிற்கும். கொஞ்ச நேர கலாட்டாவுக்குப் பின் இது, 'தன் ஏரியா இது' என்பதை ஸ்தாபிதம் செய்யும் - சத்தம் பொறுக்க முடியாமல் வெளியே வந்து, புதிய நாயைத் துரத்த முயற்சிக்கும் எங்கள் துணையோடு! மற்ற நாய்களுக்கு இது என் இடம், இது என் எல்லை என்று அது உணர்த்துவதை மனைவி, மகன்களுக்கு விளக்கினேன். "ரொம்பப் பெருமைதான் போங்க" என்று இடித்தாள் மனைவி.

ஜிம்மி மிகச் சோம்பலாகப் படுத்திருக்கும். அதன் ஏரியாவுக்குள் அடங்கும் எங்கள் ரெண்டு மூன்று வீட்டு மெம்பர்கள் யாராவது வேலையாக வெளியில் கிளம்பினால் துள்ளி எழுந்து அவர்களுக்கும் முன்னால் ஓடி அவரவர்கள் செல்ல வேண்டிய திசையில் ஓடும். அதெப்படி அவரவர்கள் செல்ல வேண்டிய திசைகளை அது சரியாக நினைவில் வைத்துக் கொண்டு முன்னே ஓடுகிறது என்பதும் ஆச்சர்யமாக இருக்கும்!  முதலில் பிரதானச் சாலைக்கு வந்து போக்குவரத்தையே ஸ்தம்பிக்க வைத்துக் கொண்டிருந்தது. 'கிரீச்'சிட்டு ப்ரேக் அடிக்கும் வாகன ஓட்டிகள் கூட இதைப் பார்த்ததும் கோபிக்க மனமில்லாமல் புன்னகையுடன் தாண்டிச் செல்வார்கள்! அதைப் பார்க்கும் யாருக்கும் அதன் மேல் கோபம் வருவதில்லை! ஆனால் அப்புறம் அப்புறம் தேவலாம்... தெரு முனையோடு திரும்பி விடும்!

கதவு திறந்திருந்தால் மேலே ஏறி மொட்டை மாடிக்குச் சென்று அந்த பாரபெட் சுவர் மீது பயமின்றி அது ஓடும்போது எனக்கு மயிர்க் கூச்செறியும்!
        
எல்லாம் நல்ல படிச் சென்று கொண்டிருந்தது.....  இது வரும் வரை!

திடீரென ஒருநாள் இது இந்தத் தெருவில் புதிய அறிமுகம் ஆனது. அது கூட, "அவர் பார்வைல மாட்டறதுக்கு முன்னால துரத்தி விடு" என்ற வசனத்தைக் கேட்டு வெளியே வந்து பார்த்த போது இது கண்ணில் சிக்கியது. முன்னங்கால்களை முன்னால் மடக்கி பாதி நமஸ்காரம் செய்து பணிவைக் காட்டியது. ஒன்றரை வருடத்துக்கு முன் எங்களை விட்டுச் சென்ற பிரவுனியை அப்படியே நினைவுக்குக் கொண்டு வந்த இதைப் பார்த்ததும் எனக்கு இதன் மீதும் பாசம் வந்து விட்டது. "அட, அதுக்குதான் சொன்னேன்" என்று அலுத்துக் கொண்டார்கள் மற்றவர்கள். 

ஏதோ அதன் வாரிசுதான் இது என்பது போல என்னை அடையாளம் கண்டு கொண்டது போல இதுவும் என்னை வைத்த ஐஸில் இதற்கும் பிரெண்ட்ஷிப் கன்ஃபர்ம் செய்தேன். என்னுடனே வீடு நோக்கி அதுவும் கூட ஓடி வந்தது. 

அங்கு படுத்துக் கொண்டிருந்த ஜிம்மி புதிய வரவைக் கண்டு உஷாராக் எழுந்து நின்று எதிர்ப்பு காட்ட ரெடியாக, இது என் மேல் ஒருமுறை ஜம்ப் செய்து உறவை உறுதி செய்தது! ஆனாலும் உறுமலோடு பக்கம் வந்த ஜிம்மியை அடக்கி நான், "ஏய்... ஜிம்மி... கடிக்கக் கூடாது.." என்றேன். 

அங்கு நின்றிருந்த என் பையன் "அமாம்... அதுக்கு ரொம்பப் புரியும் பாரு.." என்றான். 

ஜிம்மி கொஞ்சம் தயங்கியது. என்னைப் பார்த்தது. ஒரு விடுபட்ட ஏக்கம் அதன் கண்களில் தெரிந்ததாக எனக்குப் பிரமை. சற்றே விலகி நின்றது. அப்புறம் வேறு திசை நோக்கி ஓடத் தொடங்கியது.
                
"ஏய்... ஜிம்மி... இங்கே வா... நீயும் இங்கதான் இருப்பே..." என்று நான் கூப்பிடக் கூப்பிட லட்சியம் செய்யாமல் ஓடி விட்டது. 
                                   
என் பையன்கள் நம்ப முடியாமல் ஜிம்மியின் 'பொறாமையா, ஏமாறறமா' எது என்று புரியாத அந்த உணர்வை ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள்.

'இனிமே அது வராது பாரு' என்ற என் பையன்களின் வார்த்தைகளைப் பொய்யாக்கி, அது அப்புறமும் வந்தது. ஆனால் என் குரலுக்கு அது இதுகாறும் காட்டிவந்த அபார விஸ்வாசத்தில் ஓரிரு மாற்று குறைந்ததை நாங்கள் எல்லோரும் உணர்ந்தோம்!

புதிதாக வந்த பிரவுனிக்கும் (உடனே பேர் வச்சிடுவோம்ல...!) இந்த இடம் பிடித்து விட்டது போலும். இந்த இடத்தை விட மனமில்லாத அது, ஜிம்மியின் எதிர்ப்பை அன்பால் முறியடிக்கும் முயற்சியில் இறங்கியது. 

வாலை விடாமல் ஆட்டியபடியே அது ஜிம்மியின் பக்கத்தில் நட்பு ரிக்வெஸ்ட் அனுப்ப, அது உறும, இது துள்ளிக் குதித்து அருகில் போவது போல் பாவ்லா காட்டி பயந்து விலகி ஓடுவது போலவும் பாவ்லா காட்டி அங்குமிங்கும் ஓடி 'விளையாட்டுக்கு வர்றியா... நானும் உன் ஃபிரெண்ட்தான்..' என்ற சமிக்ஞை காட்டும்! 'என்னால் உனக்கு ஆபத்தில்லை' என்ற செய்தி மட்டுமல்ல, இனி நானும் இங்குதான், என்னை ஏற்றுக் கொள்' பாவமும் அதில் இருக்கும்.    
   
இதை 'பிரவுனி செமத்தியாகக் கடி வாங்கி ஓடப் போகிறது' என்று பேசிக் கொண்டிருந்த மனைவி மற்றும் பையன்களிடமும் சொன்னேன். என்னை கேலியாகப் பார்த்தார்கள்! இன்னும் சொன்னேன்..."பார்... கொஞ்சம் கொஞ்சமாக எதிர்ப்பு குறையும்... கொஞ்ச நாளில் ஜோடியாகி நெருங்கி விடும் (இரண்டுமே பெண் நாய்தான்!) " என்று நான் சொன்னதையும் அவர்கள் நம்பவில்லை.
                    
திடீரென ஒரு நாள் பின் வீட்டிலிருந்து ஒரு பயங்கர அலறல் சத்தம். புதிய வரவை ஏற்றுக் கொள்ளாத ஒரு குடும்பத் தலைவர் அதை பெரிய கல்லால் தாக்கி விட, புதுவரவு வலி தாங்காமல் ரொம்ப நேரம் அலறிக் கொண்டிருக்க, என்னால் பொறுக்க முடியாமல் வெளியே சென்று அதன் காயத்தைப் பரிசோதிக்க, அடித்தவர் மகா பெருமையுடன், "கடிக்க வந்தது... ஒரே அடி..." என்றார். அது கடிக்க எல்லாம் போயிருக்காது என்று தெரியும். பொதுவாகவே நாயைக் கண்டால் கல் எடுப்பவர்களைக் கண்டால் எனக்குக் கோபம் வரும்! எனக்கு ஆத்திரத்தில் பேச்சே வரவில்லை. "இவ்வளவு நேரம் வலி தாங்க முடியாமல் அழுகிறதே... இதே அளவு உங்கள் காலில் பட்டிருந்தால் வலி எப்படி இருக்கும் என்று உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா?" என்றேன். ஏதோ சமாதானம் சொல்லி விட்டுப் போய் விட்டார் என்றாலும் இந்த சம்பவத்தினால் ப்ரவுனிக்கு வேறொரு நன்மை விளைந்தது. 
                  
அடிபட்டு அழுது கொண்டிருந்த பிரவுனியை ஜிம்மி நெருங்கி சுற்றி வந்து சோதித்தது. பெரிய ஆறுதல் இல்லையென்றாலும் எதிர்ப்பு குறைந்திருந்தது .

அப்புறம் கொஞ்ச நாள் ஒரே ஏரியா என்றாலும் இரண்டும் எதிர்ப்பு இல்லாமல் அது அது அதனதன் இடத்தின் வழியில் பிழைத்துக் கொண்டிருந்தன. இன்னும் கொஞ்ச நாள் போக,  எப்போது ஏற்பட்டது என்று தெரியாமல் இப்போதெல்லாம் இரண்டும் நட்பாகி விட்டன. மகன்கள், மனைவிக்கு வியப்பு. 'எப்படி கரெக்டா சொன்னீங்க' என்றனர்.
நான் சொல்லாமல் பின்னே யார் சொல்வது..!
                            
இதை எல்லாம் எழுதி எங்களை போரடிக்க வேண்டுமா என்று கேட்பவர்களுக்கு....
                      
மன்னிக்கவும்....  நான் ஒரு நாய் நேசன்...!
      

திங்கள், 26 மார்ச், 2012

கொள்ளி வாய்ப் பிசாசுடன் ஒரு மினி பேட்டி.- பாஹே

          
பள்ளி மாணவப் பருவம். கிராமத்து வீட்டிலிருந்து கிளம்பி ஐந்து மைல் நடந்தால்தான் உயர்நிலைப் பள்ளி. இப்போது போல பேட்டைக்குப் பேட்டை அப்போதெல்லாம் பள்ளிக் கூடங்கள் இல்லை.
                    
நாங்கள் ஐந்தாறு பேர் ஒரு ஜமா. வெள்ளி மாலையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்போம்.  பள்ளி விட்டதும் ஊரின் ஒரே 'டெண்ட்' கொட்டகையில் படம் பார்த்தாக வேண்டும். அதுவும் முதல் காட்சியோடு இரண்டாம் காட்சியும். 
                 
அப்போதையப் படங்களில் நீளக் கட்டுப்பாடு இருக்காது. வசனங்களுக்குப் பதில் பாட்டாகவே இருக்கும். அது பழகிப் போயிற்று. மாறுவதற்கு ஐம்பதுகள் துவக்கம் வரை காத்திருக்க வேண்டியதாயிருந்தது. 
                      
M K T பாகவதரின் 'சிவகவி' அன்று இரண்டு ஷோக்களும் பார்த்து விட்டு வீட்டுக்குப் புறப்பட்டோம். பாதி வழியில் நண்பர்கள் அவரவர் வீடுகளுக்குப் பிரிந்துவிட, நான் மட்டும் தனியாக ஒரு இரண்டு மைல் தொலைவு வந்தாக வேண்டும்.
                       
சாலையின் இரண்டு பக்கமும் உசரம் உசரமாக அடர்ந்த மரங்கள் கிளைபரப்பிப் பம்மிக் கொண்டிருக்கும்.  தெரு விளக்கு என்பதெல்லாமும் இல்லை. சாலையில் வீடுகளும் வெகு தொலைவுக்கு இருக்காது. ஒரே இருட்டு. பயத்தைப் போக்க, உரத்த குரலில் பாடிக் கொண்டு வருவது வழக்கம். பின்னால் யாரோ வந்து கொண்டிருப்பது போல அடிக்கடித் தோன்றும். ஒரு மனப்பிராந்தி.
                          
இந்தப் பழக்கம் நாளாவட்டத்தில் இருட்டு பயமும் இல்லாமல் செய்தது. விளைவாக பேய் பிசாசு பயங்களும் இல்லை.    
=============================================

நாளச்சேரி பாட்டி அடிக்கடி வந்து அம்மாவிடம் பேசிக் கொண்டிருப்பார். பருத்த உடம்பு. ரவிக்கை அணியாமல் மேல்பக்கம் காற்றாடிக் கொண்டிருக்கும். கால்களை நீட்டியபடி முன்தொடை வரை புடைவையை வழித்து விட்டுக் கொண்டு உட்காருவது அவருக்குச் சௌகர்யம்.

பாட்டி பேய்க்கதைகள் நிறையச் சொல்வார். அம்மாவும் பதிலுக்கு படம் காட்டுவார்.
   
"ஒரு நாள் வெளக்கு வச்சப்புறம் கொல்லைக்கதவைத் தற்செயலாத் திறந்தேனா.... சரசரன்னு புடைவைச் சத்தம்.... கோடி வீட்டு மங்களம்.... குளத்துல விழுந்து செத்தாளே, அவள் சரேல்னு முள்வேலிக்கு நடுவே பாய்ஞ்சா பாரு... வேலி படபடன்னு முறியற சத்தம்.... ஒரு பலத்த சிரிப்பு.... போயிட்டா...."   
  
அதிலிருந்து எனக்கு கொல்லைக் கதவைத் திறக்கவே பயம்.  திறந்ததும் யாரோ மூட முடியாதபடி கதவை உட்பக்கம் தள்ளுவது போலத் தோன்றும். பகலில் கூட அக்கதவுப் பக்கம் தனியாகப் போனதில்லை.

பாட்டி சர்வசாதாரணமாகக் கேட்டாள். "கொள்ளிவாய்ப் பிசாசு பார்த்திருக்கிறாயா நீ?"
  
"ரொம்பக் கேள்விப் பட்டிருக்கேன்"

"நேத்து கூட நான் பார்த்தேன். கொத்தூர் சாலை வரப்புல நின்னு நின்னு நகருது.... வாயை அடிக்கடி தொறந்து தொறந்து 'பக்பக்'குனு நெருப்பா கக்கும்.யாரும் எதிர்ப்பட்டா பளார்னு ஒரே அறையில் தீத்துப்புடும்"
   
பாட்டியிடம் இன்னும் கதை பாக்கி இருந்தது. 
      
"நேத்து ராத்திரி வயிறு உப்புசமா இருந்துதா... ஒரு சுருட்டு பத்த வச்சிக்கிட்டு வயப்பக்கம் வந்தேன். பார்த்தா அந்த வரப்பு மேல அது மெதுவா வந்துகிட்டிருக்கு... நெருப்பா கொட்டுது, அணையுது, கொட்டுது, அணையுது.... குளத்தாண்டை திரும்பி வேகமா இந்தப் பக்கம் நகர்ந்தது பார்.... ஓட்டமா வீட்டுக்குள்ற ஓடி வந்துட்டேன்..."
   
நான் இன்னும் நெருங்கி அம்மாவுடன் ஒட்டிக் கொண்டேன்.

"பாட்டி, நீ நிஜமா அதைப் பார்த்தியா..."

"பின்னே,,, ஒனக்கும் பாக்கணுமா....!" 
                   
அம்மா பேச்சை மாற்றினால். பாட்டிக்கு அடுத்த சப்ஜெக்ட், எதிர் வீட்டுப் பெண் வாசலில் வந்து நின்று பசங்களைப் பார்க்கிறாளாம்.... "முழியை நோண்டணும்...அந்தக் காலத்துல நாங்க வீட்டை விட்டு வெளியே வந்திருக்கோமா... இப்படியும் இருக்கிறாளுங்களே...."
                     
பாரதி நினைவுக்கு வந்தார்.   
==============================            

மருதமுத்து மாரியம்மன் கோவில் பூசாரி. பார்ட் டைம் ஜாப். மிச்ச நேரம் குறி சொல்லுதல், நாடகங்களில் நடித்தல், கிடா மீசையை அவ்வப்போது ஒழுங்குபடுத்துதல்....   
  
கோவிலில் தீமிதி உற்சவம் அமர்க்களப்படும்.மெயின் பார்ட் மருதமுத்துவுக்குதான். மஞ்சள் வேட்டி கட்டி, சாமி வந்து அவர் குதிப்பது பார்த்து ரசிக்க வேண்டிய காட்சி.
             
ஆட்டுக் கிடா, சேவல் துடிக்கத் துடிக்க வீச்சரிவாளால் பலியிடுவது அவருக்கு நல்ல அனுபவமுள்ள வேலை.
                           
சாமி வந்து ஆடும்போது, சுற்றி நிற்கும் பக்த கோடிகள் கை கட்டி, வாய் புதைத்து நிற்பர். ஊரில் பெரிய பணக்காரராகப் பார்த்து அவரை முதலில் அழைத்து சாமி 'துண்ணூறு' கொடுக்கும். எக் கோவிலிலும் இந்தப் பணக்கார செலெக்ஷன் நிச்சயம் உண்டு.   
=============================================             
      
நண்பன் வேதகிரி அம்மா திருணம்மா மீது அடிக்கடி சாமி வந்து விடும். வெள்ளிக் கிழமைகளில் அம்மன், சனிக்கிழமைகளில் வெங்கடாசலபதி.
               
"சாமியாடி' என்று ஊரில் அவருக்குப் பெயர். வரம் கேட்க கூட்டம் நிறைய வரும். காணிக்கைகளுடன்.
                     
உட்கார்ந்தவாக்கில், கண்களை மூடிக் கொண்டு உடலை முன்னும் பின்னும் அசைத்து ஆட்டம் காட்டுவார். சமயங்களில் பக்க வாட்டில் சரிந்து எழுவதும் உண்டு.  ஒவ்வொரு தரமும் கற்பூர வில்லைகளைக் கொளுத்தி வாயில் போட்டுக் கொள்ளுவார். வந்திருக்கிற அத்தனை பேருக்கும் 'அருள்வாக்கு' வழங்குவது 'கிளைமேக்ஸ்'.
       
ஒருதடவை நான், பஞ்சாமி, சூசை, ஹனிஃபா, தங்கவேலு போயிருந்தோம்.
                    
"ஐயரு வீட்டுத் தம்பி பாஸ் பண்ணிப்பிடும்... அதான கேக்க நினச்சே...?"
                 
நான் அதை எங்கே கேட்க நினைத்தேன்...நான் கேட்டது..."நேதாஜி உயிரோடு இருக்காரா.... எங்கே இருக்கிறார்?"
  
சாமி கண்களைத் திறக்கவே இல்லை. உரக்க ராகமிட்டு "வெங்கடாஜலபதி....திருப்பதி பெருமாளே....இந்தப் புள்ளக்கி நல்ல புத்தி கொடுங்க... ஐயரு வூட்டம்மா கவலைப் படுறா....  இவன் நல்லாப் படிக்க வரம் கொடுங்க..."

இரண்டு நாட்களுக்குப் பின் குளக்கரை மதகு. வேதகிரியிடம் "நான் கேட்டதுக்கு ஒங்கம்மா பதில் சொல்லலியே..." என்றேன்.

அவன் சொன்ன பதில் முக்கியமானது. 

"நேதாஜி பத்தியெல்லாம் அம்மாவுக்கு எப்படிரா தெரியும்?"

இதுதானே சரியான பதில்!    
=================================               
                     
இருட்டு. கொத்தூர்ச் சாலை வரப்பில் பிரிந்து உயர்ந்த வரப்பில் ஏறி, தாழ்ந்து, மறுபடி உயர்ந்து கொள்ளி வாய்ப் பிசாசு வந்து கொண்டிருந்தது. ஃபிரான்சிஸ் ஏன் இடுப்பில் இடித்தான். "அது வருதுடா..."
                     
வந்தது எங்களை நோக்கித்தான். தலையாரி கையிலிருந்த அரிக்கேன் லைட்டைக் கீழே வைத்து விட்டு, "தம்பிங்களா...இருட்டுல இங்கெல்லாம் இருக்காதீங்க... காத்து கருப்பு நடமாடற நேரம்.... வயசுப் பிள்ளைங்களாச்சே  .... "
              
இருட்டில் மறைந்து அவர் 'ஒதுங்க'ப் போனார்.
    
இன்றும் கூட இப்படி இருட்டில் ஒதுங்குபவர்கள் இந்நாட்டில் ஒருவரா, இருவரா?