சனி, 28 பிப்ரவரி, 2015

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்1)  "இங்க படிக்கிற பசங்கள்ல ஹாஸ்டல் சேர முடியாதவங்க நோட்ஸ், ஃபீஸ் கட்ட முடியாதவங்களுக்கு என்னாலானதைச் செய்கிறேன்  வருஷத்துக்கு ரெண்டுபேரைத் தேர்ந்தெடுத்து அவங்க படிக்க முழு செலவையும் ஏத்துகிட்டு படிக்க வைக்கிறேன்" என்று சொல்லும் தெய்வப்பிரகாசன் பிறப்பிலேயே பார்வையில்லாமல் பிறந்து,  அடுத்தவர் உதவியுடன் படித்தவர். (கல்கி)

2) "உடம்பில் தெம்பு இருக்கும் வரை உழைக்கணும். யாரிடமும் கையேந்தி நிற்கக் கூடாது. அது, பெற்ற மகன்களாக இருந்தாலும் சரி.கஷ்டமில்லாத வாழ்க்கையில் கற்றுக் கொள்ள எதுவும் இருக்காது. கஷ்டங்கள் தான், வாழ்க்கை பாடங்களாக இருக்கும்.."  குட்டியம்மாள்.
3) திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆதரவற்ற இல்லங்களை எல்லாம் தத்தெடுத்து ஆதரவு கொடுத்து வருகிறார் வெளிநாடு வாழ் இந்தியரான கல்ராம்.  இவர் யு.எஸ்.ஸில் வேலை கிடைத்து அங்கேயே செட்டில் ஆகிவிட்ட போதிலும் தன்னுடைய வருமானத்தில் ஒரு பங்கை இந்தியர்களுக்குச் செலவிடுவதை தனது கடமையாக நினைக்கிறார். இவரது உதவியால் தற்போது கல்வி அறிவு பெற்றுவரும் குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் இரண்டாயிரத்தைத் தாண்டி உள்ளது.  
4) 20 ரூபாய் மருத்துவம்.  மருத்துவர் பத்மினி.
5)  இப்படியும் மனிதர்கள் தேவைதான்.  முன்னர் தனி ஒரு மனிதனாய் ஒரு காட்டை நிர்மாணித்த மனிதர் பற்றி தனிப் பதிவாகவே பார்த்தோம்.  இப்போது ஒரு தம்பதியர்.  23 வருட உழைப்பில் 55 ஏக்கரை 300 ஏக்கராக மாற்றி, வன விலங்குகளுக்கு ஒரு சொர்க்கத்தை நிர்மாணித்துள்ளனர். இயற்கை வாழ இதெல்லாம் எவ்வளவு அவசியம் என்று சொல்ல வேண்டியதில்லை!   பமீலா தம்பதியர்.

6)  "தனி ஒரு மனிதனுக்கு டாய்லெட் இல்லையெனில், கிராமத்துக்கு 25 டாய்லெட்கள் அமைத்திடுவோம்"  ரீஸா மௌர்யா.

7) பெங்களுருவில் எவ்வளவோ அசம்பாவிதங்கள் கேள்விப் பட்டிருக்கிறோம்.  அங்குதான் இந்த மனிதரும் இருக்கிறார். பாராட்டப்பட வேண்டியவர்.  அவர் படம் கிடைக்கவில்லை. ஆட்டோ டிரைவர் ஆனந்த குமார்
8) அனுப் விஜாபூர்.
9) நம் வீட்டை நாம் சுத்தமாக வைத்துக் கொண்டால் ஊரே சுத்தமாக இருக்கும் என்று சொல்வார்கள். அதுபோல ஒவ்வொரு ஊர்க்காரர்களும் அவரவர் ஊர்களில் இதுபோல சேவை செய்தால் நாடே சுபிட்சமாகும். 

10) வீட்டைச் சீராக்கி, தெருவைச் சீராக்கி, நாட்டைச் சீராக்கும்,  குப்பையைக் கூட வீணாக்காமல் பயனுள்ள முறையில் ஏலவழிக்கக் கற்றுக் கொடுக்கும் மங்களம் பாலசுப்ரமணியன்.  நன்றி வெங்கட்.
11)  "மாற்றுத்திறனாளிகள், அவர்களுடைய பிரச்சினைகளுக்கென்றே சில தொன்டு நிறுவனங்கள் சேவை செய்து வருகின்றன. அவற்றைப்பற்றி நிறைய பேருக்கு வெளியே தெரிவதில்லை. நமக்கோ, நமக்கு நெருங்கியவர்களுக்கோ பிரச்சினைகள் வரும்போது தான் நம்மில் பெரும்பாலானோர் மேல் விபரங்களைத் தேட ஆரம்பிக்கிறோம். சமீபத்தில் ஒரு பெண்கள் இதழில் சில முக்கியமான சேவை அமைப்புகள் பற்றிய தகவல்கள் வெளி வந்தன. அவற்றைப்பற்றி கீழே எழுதியிருக்கிறேன். நிச்சயம் யாருக்கேனும் இவை பயன்படும். முக்கியமாய் பாஸிடிவ் செய்திகள் எழுதி வரும் ஸ்ரீராம் அவர்களுக்கும் இத்தகவல்கள் பயன்படும்!" என்று சொல்லி அந்த உபயோகமான சேவை செய்யும் இடங்கள் பற்றிய விவரங்களைத் தந்திருக்கிறார் திருமதி மனோ சாமிநாதன் மேடம். 
12) இந்த மனம் யாருக்கு வரும்?  30 லட்ச ரூபாயை நன்கொடை அளித்து விட்ட சூப்பர் சிங்கர் ஜெஸ்ஸிகா.

 

வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

வெள்ளிக்கிழமை வீடியோ 150227 :: காதல் போயின் காதல் !


:
"எங்கள்" நண்பர்கள் பட்டியலில் இந்தப் படம் சம்பந்தப்பட்ட பலர் இருக்கின்றார்கள். 
அவர்கள் எல்லோருக்கும் எங்கள் வாழ்த்துக்கள். 

       

புதன், 25 பிப்ரவரி, 2015

தியானம் என்ன எப்படி ?


பிரம்ம முகூர்த்தமாகிய அதிகாலைக்கேற்ற நிலை தியானம் என யாரும் ஒப்புக்கொள்வர்.

"இறைவனிடம் பேசுதல் பிரார்த்தனை, இறைவன் பேச்சைக் கேட்பது தியானம் " என்று ஒரு ஆழ்பதிவு அண்மையில் கண்ணில் பட்டது.

எண்ணங்கள் அலைமோதும் மனதை ஒரு நிலைப் படுத்தி, ஒரு நல்லெண்ணம் அல்லது எண்ண அலைகள் சஞ்சலிக்காத ஆழ் நிலையிலிருப்பது தியானம். இது குரு முகமாக, ஒரு மந்திரச்சொல் அல்லது மூர்த்தத்தின் துணை கொண்டு அடையப் படுவதாய் சொல்லப்படுகிறது. இது முற்றிலும் தனி மனிதனின் சாதனை அல்லது சித்தி. பயிற்சியால் பெறப்படுவது சாதனை, அருளால் வரப்படுவது சித்தி என்கிறார்கள். இது பற்றி சாதனையோ சித்தியோ கைவரப்பெறாத எவரும் எதுவும் சொல்வதற்கில்லை. அவரவர் தம் முயற்சியால்தான் பெற்றாக வேண்டும். அதிர்ஷ்டம் குறித்த விஷயம்.

மற்றபடி, அதிவிடிகாலை நேரம் இசை பாடுவதில் அல்லது கேட்பதில், ஆன்மீகம் படிப்பதில் செலவழியலாம்.

எது எப்படியானாலும், காலையில் கணிசமான பொழுது சஞ்சலமற்ற அமைதியில் தொடங்கப்படுவது உன்னதமானது -- ஐயமில்லை.

செய்தி அறிக்கைகள், "நிஜம்" நிகழ்ச்சிகள், கந்தல் காமெடிகள் குறுக்கிடாத எல்லாக் காலையும் நல்ல தொடக்கமே .

செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

5. ஸ்ரீரங்கப்பயணமும் (குறு) பதிவர் சந்திப்பும் - நிறைவுப்பகுதி


ஆர் ஆர் ஆர் வீட்டுக்குச் சுற்றிய அளவு சுற்றவில்லை.   ஓரளவு சீக்கிரமே வைகோ சார் வீடு இருக்கும் இடத்தை அடைந்து விட்டோம்.  கட்டிடத்தின் கீழே 'எங்களை' இறக்கிவிட்டு விட்டு,  மற்ற உறவினர்கள் வண்டியிலேயே காத்திருக்க, நாங்கள் அபார்ட்மெண்ட் கீழ்த்தளத்தை அடையும்போதே கௌதமன் வைகோ ஸாருக்கு அலைபேசினார்.  வழி சொன்ன வைகோ ஸார், எங்களை எதிர்கொண்டழைத்து வரவேற்க லிஃப்டின் வழியே கீழே வர,  நாங்கள் மாடிப்படி வழியாக மேலேறி விட்டோம்.  இடதா, வலதா என்று யோசித்த வேளையில் கீழே எங்களைக் காணாது மறுபடி மேலேறி வந்துவிட்ட அவரே வந்து எங்களை அழைத்துச் சென்றார்.

பவித்ராலயாவுக்குள் நுழைந்தோம். 

நாங்கள் வெயிலின் வெப்பத்தால் தவிக்காதிருக்கும் பொருட்டு ஏற்கெனவே குளிர்சாதனக் கருவியை 'ஆன்'  செய்து வைத்திருந்தார்.  அந்தக் குளிரிலும், அவர் அன்பின் குளுமையிலும் நனைந்தோம் நாங்கள் என்று சொன்னால் அது மிகை இல்லை.

ஸோன் பப்டி மற்றும் உருளைக் கிழங்கு சிப்ஸ் கொடுத்து உபசரித்தார். வைகோ ஸாரின் பதிவுகளைப் படித்து அவரின் கலை உணர்வையும், கலைத் திறமையையும்,  பல்சுவை ரசனையையும் அறிந்தவன் என்ற முறையில் அவரைப் பற்றி சக 'எங்கள் ஆசிரியர்களு'க்கு எடுத்துரைத்தேன்.  குறிப்பாக வைகோ சாருக்குக் கிடைத்த இந்தப் பேறு பற்றிச் சொன்னேன்.  இந்தக் கலையுணர்வு மாறாமல் கடந்த ஞாயிறு கூட மூத்த பதிவர் திருமதி ருக்மணி சேஷசாயி அவர்களுக்கு இதே போன்றதொரு பரிசை வழங்கி இருக்கிறார் திரு வைகோ.  
 
 
 
வைகோ ஸாரின் சிறுகதைகளை மிகவும் ரசித்திருக்கிறேன்.  என்ன, அப்புறம் நடந்த விமர்சனப் போட்டியில்தான் கலந்து கொள்ளவில்லை.  அவர் அதை நடத்தியவிதம் பிரமிக்க வைத்தது. சமீபத்தில் ஜீவி ஸாரைச் சந்தித்தபோது இந்தப் போட்டியின்போது வைகோ ஸார் காட்டிய ஆர்வத்தைப் பற்றிக் குறிப்பிட்டபோது அந்த மதிப்பு மேலும் உயர்ந்தது.  அவர் முன்னர் மிகவும் ருசித்து எழுதிய, மன்னிக்கவும், ரசித்து எழுதிய சமையல் பதிவு ஒன்றையும்  ரசித்துப்  கருத்திட்டிருந்தேன்.  
 

எங்களுக்கு அவர் எழுதிய "எங்கெங்கும்... எப்போதும்...என்னோடு"  புத்தகத்தைப் பரிசளித்தார்.  அதை அவருக்கே உரிய தனிப்பாணியில் ஒவ்வொருவருடனும் நின்று புகைப்படம் எடுத்து, அவர் பாணியில் 'கட்டிப்பிடி வைத்தியத்துட'ன் வழங்கினார்.  அவரின் அன்பான மருமகள்தான் புகைப்படங்கள் எடுத்துக் கொடுத்தார்.
 

அவர் வீட்டின் ஒவ்வொரு ஜன்னலிலிருந்தும் தெரிந்த பஜ்ஜிக்கடை நாக்கின் சுவை நரம்புகளைத் தூண்டி மிகவும் படுத்தினாலும்,  செய்யவேண்டியிருந்த பயணம் 'அடக்கு அடக்கு' என்று மனதை அடக்கியது!  அவர் வீட்டு ஜன்னலிலிருந்தும், வாசலிலிருந்தும் மலைக்கோட்டைக் கோவில் மிக அழகாகத் தெரிந்தது.  தினசரி கோபுர தரிசனம்!   கோபு ஸாரின் கோபுர தரிசனம் தினசரி கோடி புண்ணியத்தை அவருக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது.

அவர் லாப்டாப்பைக் காட்டி அதில் அவர் எந்தெந்த நேரத்தில், எப்படி பதிவுகள் எழுதுவார் என்பது பற்றிச் சொன்னார்.  ஆஞ்சநேயர் படம் வரைந்த அனுபவம் பற்றிச் சொன்னார்.  
 
 

சென்னையில் ரயிலேற்றிவிட வேண்டிய உறவினரின் விவரம் சொல்லி, உடனே கிளம்ப வேண்டும் என்ற விவரத்தையும் சொல்லி திருமதி வைகோ அவர்கள் தந்த அருமையான காபியைக் குடித்து விட்டுக் கிளம்பினோம்.
திருச்சி எல்லையைக் கூட தாண்டியிருக்க மாட்டோம்.  அவர் எடுத்த புகைப்படங்களை என் மெயிலுக்கு அனுப்பி விட்டார் வைகோ ஸார்.  அதுதான் வைகோ!

திங்கள், 23 பிப்ரவரி, 2015

'திங்க'க்கிழமை : தஞ்சாவூர்க் குடைமிளகாய்
வருடா வருடம் ஜனவரி மாதம் முடியும்போது நினைவுக்கு வருவது இந்த தஞ்சாவூர்க் குடைமிளகாய்!  ஜனவரி முடிவில் தொடங்கி ஃபிப்ரவரி 28 தேதிக்குள் பெரும்பாலும் குடைமிளகாய் சீசன் முடிவுக்கு வந்துவிடும்.  அப்புறம் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்.

தஞ்சையில் இருந்த காலங்களில் வீட்டு வாசலிலேயே அல்லது,  ஈவினிங் பஜார் சென்று வாங்கி விடுவோம்.  அங்கு சல்லிசாகக் கிடைக்கும்.


சென்னையில் மாம்பலத்தில்தான் பெரும்பாலும் வாங்குவது.  நாங்கள் ரெகுலராக வாங்கும் பார்ட்டி என்று அறிந்து(ம்) சில மாம்பல விற்பனையாளர்கள் எங்களிடம் கொள்ளை வியாபாரம் செய்வார்கள்.
இந்த முறை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் சென்றபோது, கோவில் இருக்கும் தெரு வாசலில் ஒரு பெரியவரும், பெரியம்மாவும் இந்தக் குடைமிளகாய் விற்றுக் கொண்டிருக்க, விலை கேட்டபோது மயக்கமே வந்து விட்டது.  படி முப்பது ரூபாய்!   மாம்பலத்தில் படி 100 ரூபாய், 120 ரூபாய் என்று வாங்கி இருக்கிறோம்.  

ஒன்று,  மாம்பலத்தில் கொள்ளை அடித்திருக்க வேண்டும். அல்லது, இந்த முறை விளைச்சல் அதிகமாய் இருந்திருக்க வேண்டும்!  ஏதோ ஒன்று,  எங்கள் காட்டில் மழை!குடைமிளகாய் வாங்கிவந்து பெரும்பாலும் மோர் மிளகாய்தான் போடுவது வழக்கம்.  அப்பாவுக்காக மிகச்ச்சில சமயங்களில் புளி மிளகாய் போடுவது உண்டு என்றாலும்,  மோர்மிளகாய் அளவு அது சுவையாய் இருப்பதில்லை. 


முன்னுரை அதிகமாகி விட்டது!

 
குடை மிளகாய் வாங்கும்போதே அதற்குத் தகுந்தாற்போல் பால் வாங்கிக் காய்ச்சி தயிர் தோய்த்து வைத்துக் கொளல் நலம்.
இனி செய்முறை. 


குடைமிளகாயை முதலில் சுத்தமான நீரில் சுத்தம் செய்து கொள்ளவும்.  பின்னர், குடைமிளகாயின் காம்புகளை முழுவதும் நீக்காமல், கொஞ்சம் பாக்கி வைத்து வெட்டி எடுத்துவிட்டு, மிளகாயை ஒரு பாத்திரத்தில் போடவும்.  பின்னர் ஒவ்வொரு மிளகாயாக எடுத்து ரொம்ப வெட்டி விடாமல், ஒரு சிறு கீறல் போட்டு பாத்திரத்தில் போடவும்.


 

கல்லு உப்பு வாங்கி தேவையான அளவு போடவும்.  சிலர் மிளகாயையும் உப்பையும் கொஞ்சம் கொஞ்சமாக அதாவது ஒரு ஒரு அடுக்காகப் போடுவார்கள்.  நாங்கள் அளவு பார்த்து மொத்தமாக அப்படியே போட்டு குலுக்கி விட்டு விடுவோம்.  இதற்கு மஞ்சள் தூள் போன்ற இன்னபிற சமாச்சாரங்கள் போடுவதில்லை.


உப்புப் போடப்பட்ட மிளகாயை குறைந்தபட்சம் பனிரண்டு மணி நேரம் அப்படியே விட்டு விடவும்.


பிறகு முதலிலேயே தோய்த்து வைத்துள்ள தயிரை பாத்திரத்தில் மிளகாய் மூழ்கும் அளவு அல்லது முக்கால் மிளகாய் மூழ்கும் அளவு ஊற்றவும்.  நன்றாகக் கிளறி விட்டு மூடி வைத்து விடவும்.மறுநாள் முதலே மிளகாய் சாப்பிடத் தொடங்கலாம்.  முதல் இரண்டு நாட்களும் அவ்வப்போது ஊற, ஊற மோர் சாதத்துக்கு தொட்டுக்கொள்ளலாம்.  முரட்டு மிளகாயாய் இல்லாமல் பிஞ்சு மிளகாயாய், ஊறிய மிளகாயாய் எடுத்துத் தொட்டுக்கொள்ள வேண்டும்.  அது தனிச்சுவை.


இரண்டு நாட்களுக்குப் பிறகு மிளகாயை வெயிலில் காய வைக்க ஆரம்பித்து விடலாம்.  ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாய் அது காயக் காய ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவை!


நன்றாகக் காய்ந்து,  நீர்ச்சத்தின்றி மொருமொருவெனக் காய்ந்ததும் எடுத்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொண்டால் வருடம் முழுவதும் மோர்க்கூழ், அரிசி உப்புமா, ரவா உப்புமா என்று செய்யும்போது அதில் இதை வறுத்துச் சேர்க்கலாம்.  சுவைக்குச் சுவை, வாசனைக்கு வாசனை.   வீண் செய்யாமல் கூழ் / உப்புமாவுடன் சேர்த்து சாப்பிடலாம்.


சும்மாவே எண்ணெயில் பொரித்து மோர் சாதத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம்.  கடையில் வாங்கும் மிளகாய் வற்றல்களில் உப்பு அதிகம் இருக்கும்.   மேலும் கடைகளில் நீள மிளகாய்தான் கிடைக்கும்.  இந்தத் தஞ்சாவூர்க் குடைமிளகாயின் சைஸும்,  வாசனையும் தனி!


அதுவும் தயிரில் ஊறவைத்து காயவைத்து எடுத்திருப்பதால் பொரிக்கும் போதெல்லாம் ஒரு நெய் வாசனை அடிக்கும் பாருங்கள்...


தூள் போங்க...


இந்த மாத இறுதி வரை மார்க்கெட்டில் இந்த மிளகாய்க் கிடைக்கும்.  இது முடிந்த உடன் இருக்கவே இருக்கு மாவடு சீசன்!

சனி, 21 பிப்ரவரி, 2015

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.
1) அன்ஷு எடுத்துள்ள முடிவு சரியா என்று காலம் சொல்லட்டும்!
 


2) கூட்டுக் குடும்ப வாழ்வில் நம் குழந்தைகள் பெற்றதை,  இந்த பரபரப்பான 'ஃபாஸ்ட்ஃ புட்'  யுகத்தில் இழந்து கொண்டிருப்பதை,  மீட்டுத் தரும் இந்த நவீன இளைஞர்கள் மிகவும் பாராட்டுக்குரியவர்களே.  மாற்றத்தைக் குழந்தைகளிடமிருந்து தொடங்க வேண்டும் என்பார்கள். இவர்கள் அதைத்தான் செய்கிறார்கள்.
 


3) வெற்றிக்கு வழி... இந்திரலக்ஷ்மி 
 


4) கழிவுகளைக் காசாக்கும் மகளிர்.  காமாட்சி  சொல்வது...
 


5) மூன்று லட்சம் செயற்கைக் கால்களை இதுவரை இலவசமாகவே வழங்கியுள்ள முக்தி அமைப்பு.
 


6)  நேர்மைதான் துணிச்சலைத் தரும்.   நிறைய ஆண்களிடமும் இல்லாத அந்தத் துணிச்சலைப் பெற்றுள்ள பெண் ஆர் டி ஓ  பிரியதர்ஷினி.
 
 

6) ஃ பேஸ்புக்கில் நானெல்லாம் அனுஷ்கா படத்தை ஷேர் செய்துகொண்டு இருக்கும்போது,  உருப்படியாக அதில் வியாபாரம் செய்து முன்னேறும் இளைஞர் (பொறியியல் மாணவர்) சக்தி வேல்.    "சவுக்கு நாற்றுகள் விற்பனை மூலம், மாதம், 50 ஆயிரம் ரூபாய் வருவாய் ஈட்டி வருகிறேன். அது மட்டுமல்லாது, என் கிராமத்தைச் சேர்ந்த, 50 விவசாயப் பணியாளர்களுக்கு, நாற்றுப் பண்ணையில் வேலையும் வழங்கி வருகிறேன்."  என்கிறார் அவர்.

7) அரசு ஆஸ்பத்திரிகளால் கூட புறக்கணிக்கப்பட்ட முதியோர்களை, மனநலம் பாதித்தவர்களை, நோய் முற்றியவர்களை ஒரு தாயுள்ளத்தோடு அணுகி அவர்களுக்கு வேண்டிய முதலுதவிகளை செய்தபின் நிலையான அமைதியை தேடி
த்தரும் வகையில் இந்த விடுதியில் கொண்டுவந்து சேர்த்துவிடுகிறார்.  தனது வாழ்வாதாரத்திற்கான நேரம் போக மீதிநேரம் முழுவதும் இந்த விடுதி வாழ் மக்களே உறவாக கருதி ஈர நெஞ்சத்தோடு இயங்குபவர், இயக்குபவர் மகேந்திரன்.

 

வியாழன், 19 பிப்ரவரி, 2015

குறை கொண்ட என் மனம்


சதா குறைப்பட்டுக்கொண்டு குறை இல்லை என்று பாடினால் எப்படி ? என் மன நுலையை உள்ள படிக்கு கண்ணனிடம் சொல்ல முடிவு செய்தேன்:
(ராஜாஜி & எம்.எஸ் மன்னிக்கட்டும்)  

குறையென்றும் உண்டு மறைமூர்த்தி கண்ணா
குறையென்றும் உண்டு கண்ணா...  

1   

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நிற்பதால் எனக்கு
குறை யென்று உண்டு மறை மூர்த்தி கண்ணா.  

2   

வேண்டியதைத்தந்திட வேங்கடேசன் நீயிருந்தும்
வேண்டுவது மிகவுண்டு ..மறை மூர்த்தி கண்ணா..   


3   

திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா உன்னை 
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
எனவேதான் குறைரொம்ப எனக்குண்டு...

4     

குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா.
குறைபலவுமுண்டு மறை மூர்த்தி கண்ணா   


5   

கலி நாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி 
சிலையாகக் கோவிலில் காணாது நிற்கின்றாய் 
எனவேதான் குறையுண்டு எனக்கு மறை மூர்த்தி கண்ணா    


6   

யாரும் மறுக்காத மலையப்பா 
உன்மார்பில் ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை
எனக்குப் பராமுகமாய் இருப்பதென்றன் குறையே
என்று இது நீங்கும் மறைமூர்த்தி கண்ணா..


     

செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

பிரம்மாக்களுக்கு -2

அதிகாலை என்ன செய்கிறோம், என்ன செய்யலாம் என ஒரு பதிவு பார்த்த நினைவு இருக்கிறதா ?

                                                                Image result for early morning images

நம் ஃபோகஸ் மாணவர் அல்லாத பால பருவம் கடந்தவர்கள் மட்டுமே. மாணவர் என்ன எப்போது எப்படிச் செய்யலாம் என்பதை எளிதாக வரையறுத்துச் சொல்லிவிடலாம்.

                                                                Image result for early morning images

காலை டிஃபன், லஞ்ச் பாக்ஸ், பள்ளி /கல்லூரிக்கு அனுப்ப ஏற்பாடுகள் என்று அன்னையர்க்கு கடமைகள் அழைக்கும் பட்சத்தில் நான்கு மணிக்கு எழுந்தாலுமே கூட கடிகாரத்தோடு போட்டி போட்டுக் கொண்டு ஓட வேண்டியவர்களுக்கும் கூட காலை என்ன செய்யலாம் எனும் பிரச்சினை இல்லை ! 

அதிகாலை கண் விழித்து "என்ன செய்யலாம்" என்பதில் சாய்ஸ் இருக்கும் என் போன்றோர்க்குதான் இது ஒரு சவால் !


தியானம், நற்சிந்தனை நிகழ்ச்சிகள், கிளர்ச்சியூட்டாத இசை, ஆன்மீகப் படிப்பு அல்லது (தொ.கா) பார்த்தல், எளிய உடற் பயிற்சி -- அநேகமாக இவற்றில் ஒன்றோ பலவோ மட்டும்தான் சாத்தியம் என்று சொல்லலாமா ?

பத்து பதினைந்து நிமிடம் "தியானம்" பலமாக சிபாரிசு பலராலும் செய்யப்படுகிறது. தியானம் என்றால் என்ன ? அது எப்படிச் செய்யப்பட வேண்டும் ?

                                                                         Image result for early morning images

இறைவனை மனம் ஒருமுனைப் பட்ட நிலையில் ஆழ்ந்து, தொடர்ந்து சிந்திக்க வேண்டும். அல்லது மனம் எண்ணங்கள் ஏதுமற்ற சம நிலையில் விருப்பு வெறுப்பற்று வேண்டுதல் வேண்டாமை தவிர்த்து இருக்க வேண்டும். 


மனம் சலனமுற்றால் அதை மீண்டும் குறியில் கொண்டு வர ஒரு மூர்த்தமோ, பொருளற்ற ஒரு சொல்லோ (மந்திரமாக) -- மனத்தை அதன் போக்கில் சற்று நேரம் அலைய விட்டுப்பின் மெதுவே அமைதிக்குக் கொண்டு வர ஆலோசனை தருகிறார்கள். என்றாலும் மனத்தை அமைதியாக நடத்திச் செல்வது அவ்வளவு  எளிதோ, சாத்தியமோ இல்லை என்பது என் அனுபவம். உங்களுக்கு வேறாக இருக்கக் கூடும்.  

                                                                            Image result for yoga images


கொஞ்ச நேரம் கண்டபடி அலைந்தபின் 'அட' என்று உறைத்தபின் சற்று ஆயாசத்துடன் மீண்டும் அலைன் ஆவது அடிக்கடி நடப்பது.

தியானம் குறித்து மட்டும் உங்கள் அனுபவம் எப்படி ? நல்ல டெக்னிக் ஏதும் அறிந்தவர் பகிரலாமே ! 

திங்கள், 16 பிப்ரவரி, 2015

'திங்க'க்கிழமை : பிஞ்சு பாகற்காய் சாலட்

கேரட் போட்டோ, வெள்ளரி மற்றும் இன்னபிற காய்கறிகள் போட்டோ சாலட் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். எத்தனை பேர் என்னைப்போல இந்த பிஞ்சு பாகல் சாலட் சாப்பிட்டு ரசித்திருப்பீர்கள் என்று தெரியவில்லை!
சின்ன வயதிலிருந்தே எனக்கு இது சாப்பிடப் பிடிக்கும்.  கிட்டத்தட்ட அப்போது சாப்பிட்டதுதான்.  நீண்ட நாட்களாகி விட்டது.
தோட்டத்தில் உலாத்திக் கொண்டிருந்தபோது பாகற்செடி( கொடி) கண்ணில் பட்டது.  சில பூக்களும் கண்ணில்படவே, மெல்ல கொடியை விலக்கித் தேடியபோது இடுக்கில் ஒளிந்து கொண்டிருந்த இரண்டு மூன்று பாகற்பிஞ்சுகள் கிடைத்தன.


'இருக்கட்டும், பெரிதானால் பறித்து பிட்லை பண்ணலாம்'  என்று என் பாஸ் தடுத்தபோதும் அவசரமாகப் பறித்து விட்டேன்!
கடைகளில் பிஞ்சாக பாகற்காயைப் பார்ப்பதே அரிதாகி விட்ட காலத்தில் கண்முன்னால் நிரூபணமாக, புதிதாக அப்போதுதான் பறிக்கப்படும் காயின் பசுமை மனதை மகிழ்விக்க, 'எலுமிச்சம் பழம் இருக்கா?"  என்று கேட்டேன் எழுந்த திடீர் இச்சையுடன்!"அரை மூடி இருக்கு ஏன்?" என்ற பாஸைப் புறம்தள்ளி உள்ளே வந்தேன்.  அந்தப் பாகற்காயை நீரில் அலசிக் கழுவினேன்.


கத்தியை எடுத்துக் கொண்டு பாகற்பிஞ்சை சிறு சிறு துண்டுகளாய் ஸ்லைஸ் செய்தேன். ஒரு பச்சை மிளகாயையும் அரிந்து போட்டேன்.  இதுவும் எங்கள் தோட்டத்தில் விளைந்த புதிய பிஞ்சு மிளகாயே என்பது சந்தோஷமான கூடுதல் தகவல்!


லேஸாக உப்பு தூவி, கொஞ்சம் பெருங்காயத் தூளையும் தூவி, கறிவேப்பிலைக் கொத்துமல்லியைப் பொடியாக அரிந்து அதில் சேர்த்தேன்.  எலுமிச்சம் பழ மூடியை அதில் தேவையான அளவு மட்டும் பிழிந்தேன்.குலுக்கி விட்டு, கொஞ்சநேரம் ஒரமாக மூடி வைத்து விட்டு ஆசையுடன் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன்!!!


ரொம்ப ஊறும் வரையெல்லாம் பொறுமையின்றி கொஞ்ச நேரத்திலேயே எடுத்து வாயில் போட்டுக் கொண்டேன்.  வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு ஒவ்வொரு துண்டுதான் தந்தேன்.  (அதையே வாங்க மாட்டேன் என்கிறார்கள்... என்ன செய்ய!)
இலேசான கசப்புடன் புளிப்பும், உப்பும், காரமும் கலந்த சாலட்....    ஸ்ஸ்ஸ்......

 
                                                                       

நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் விரும்பிய சாலட் ஒன்றைச் சாப்பிட்ட திருப்தி.  அடேடே. எங்கே ஓடுகிறீர்கள்?  உங்கள் தோட்டத்துக்குத்தானே?

ஆல் தி பெஸ்ட்!