திங்கள், 31 அக்டோபர், 2016

"திங்க"க்கிழமை 161031 :: புடலை மிளகூட்டு - நெல்லைத்தமிழன் ரெஸிப்பிபுடலை மிளகூட்டு

மிளகூட்டு என்பது எங்கள் வீட்டில் இரண்டு வாரத்துக்கு ஒரு தடவையாவது பண்ணுவது உண்டு. இதில் மிளகு சேர்த்திருப்பதால் உடம்புக்கு மிகவும் நல்லது என்பது ஒரு காரணம் (பகைவன் வீட்டுக்கு பத்து மிளகோடு செல் – பழமொழி. அனேகமான அர்த்தம். ஒருவேளை உணவில் விஷம் கலந்திருந்தால் மிளகு சாப்பிட்டால் விஷத்தை முறிக்கும் தன்மை உண்டு என்பதால். உடனே சந்தேகம்லாம் கேட்கக்கூடாது. பழமொழியை ரொம்பவும் ஆராயக்கூடாது). இன்னொரு காரணம், கோஸையும் புடலையையும் கறியமுதாகச் சாப்பிடுவதில் எனக்கு அவ்வளவு விருப்பம் இருப்பதில்லை. மிளகூட்டு என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். இங்கெல்லாம், கடைகளில் புடலங்காய் உபயோகப்படுத்துவது குறைவு. (விலை அதிகம். வேறென்ன காரணம் இருக்க முடியும்). பொதுவாகவே எல்லா உணவகங்களிலும், கோஸ் அல்லது கோஸ் + கேரட் சேர்ந்த பொரியல் நிச்சயமாக மதியத்துக்கு இருக்கும். ஒண்ணு விலை குறைவு. இன்னொண்ணு, ஆள் வரத்துக்கேற்ப, இரண்டாவது தடவை விரைவாகப் பண்ணிக்கொள்ளலாம். இப்போது செய்முறை. (எப்படிச் செய்யணும் மாமூ.. ‘நினைவுக்கு வருகிறதா?)
1 ½ அடி புடலைக்கு ¼ டம்ளர் பாசிப்பருப்பு என்பது கணக்கு. புடலையின் அளவைப் பொறுத்து, பாசிப்பருப்பின் அளவு மாறுபடும். பாசிப்பருப்பு அளவு அதிகமானா நல்லதுதான். பாசிப்பருப்பை, சாதம் வைக்கும்போது மேல் தட்டில் வைத்து தளிகைப்பண்ணிக்கொள்ளவும். 
புடலையைக் கழுவிக்கொண்டு, அரை வட்டமாகத் திருத்திக்கொள்ளவும். சின்ன வயசுல புடலையின் உள்ளே விதைகளை எடுக்காமல் கூட்டு சாப்பிட்டதால், எனக்கு உள்பகுதியை சுத்தம் செய்யாவிட்டால் பிடிக்காது. இள புடலங்காய்க்கு, சுத்தம் செய்யவேண்டியதில்லை என்று சொல்வார்கள். கூட்டும் கொஞ்சம் அடர்த்தியாக இருக்கும். இருந்தாலும், விதை கூட்டில் அகப்பட்டால் நன்றாக இருக்காது. 
4 மிளகாய்ப் பழம், 2 மேசைக்கரண்டி உளுத்தம்பருப்பு, துளி பெருங்காயம், 15 மிளகு இவற்றைச் சிறிது எண்ணெயிட்டு வாணலியில் சிவப்பாக வறுத்து (மிளகை எப்படி சிவப்பாக வறுப்பது என்று கேட்கக்கூடாது. சிவப்பு, உளுத்தம்பருப்புக்குச் சொன்னது. கறுத்துவிட்டால், கூட்டின் ‘நிறம், சுவை குறையும்) ஒரு தட்டில் இட்டு ஆறவைக்கவும். காரம் பிடிப்பவர்கள் (என்னைப் போன்றவர்கள்), 6 மிளகாய்ப் பழம், 20 மிளகு எடுத்துக்கொள்ளலாம்.  2 அல்லது 3 ஸ்பூன் தேங்காய்த் துருவலை எடுத்துக்கொள்ளவும்.
சூடு ஆறினபின்பு, வறுத்த மிளகாய்ப்பழம் போன்றவற்றையும், தேங்காய்த்துருவலையும் மிக்ஸில அரைக்கவும்.  இதற்கு முன்பே, திருத்திய புடலையை, கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். புடலை ஓரளவு வெந்தால் போதும். அத்துடன், அரைத்த மிக்ஸ், வெந்த பாசிப்பருப்பு, தேவையான உப்பு சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விடவும். பாசிப்பருப்பு சேர்த்திருப்பதால், கூட்டை அவ்வப்போது கிளறிவிடவேண்டும். இல்லாட்டா அடி பிடித்துவிடும்.


அப்புறம், கடுகு, உளுத்தம்பருப்பு, ஒரு ஆர்க்கு கருவேப்பிலை திருவமாறி கூட்டில் சேர்த்துவிடவேண்டியதுதான். நெய்யில் திருவமாறினால், வாசனையாக இருக்கும்.

இது பருப்புக் குழம்பு, சாத்துமது சாதம் இவற்றுடன் நன்றாக இருக்கும். நான் பெரும்பாலும், மிளகூட்டும், சாதமும் மட்டும் சாப்பிடுவேன். தொட்டுக்கொள்ள உருளைக் கறி அல்லது சேப்பங்கிழங்கு ரோஸ்ட் நன்றாக இருக்கும். அன்றைக்கு நான் பண்ணின உருளை கட் கறியமுது சுருக்கமாக.

உருளையை சிறிய சதுரமாக கட் செய்துகொண்டு, உப்பு போட்ட தண்ணீரில் நன்கு கொதிக்கவிடவும். அது வெந்ததும், தண்ணீரை இரத்து (இது புதிய வார்த்தை.. நாங்கள் உபயோகப்படுத்துவது), காயில், பெருங்காயப்பொடி, சிவப்பு மிளகாய்ப்பொடி போன்றவற்றைத் தேவையான அளவு போட்டு பிசிறிக்கொள்ளவும். வாணலியில், எண்ணெய் சிறிதுவிட்டு, கடுகு, உ.பருப்பு திருவமாறி, அதில் உருளைக்கிழங்கைப்போட்டு நன்கு பிரட்டி எடுக்கவேண்டியதுதான்.  முதலிலேயே தளிகைப்பண்ணிவிடுவதாலும், காரம், பெருங்காயம் போன்றவற்றைப் பிசிறிவிடுவதாலும், நான் குறைவாகத்தான் எண்ணெய் சேர்ப்பேன். நிறைய எண்ணெய் சேர்த்தால் கறியமுது நன்றாகத்தான் இருக்கும். ஆனால் அவ்வளவு நல்லதல்ல.


ஞாயிறு, 30 அக்டோபர், 2016

ஞாயிறு 161030 :: டெப்த்.


நீ எடுக்குற  படத்துல  எல்லாம்  டெப்த்  இருப்பது  இல்லை  என்று  என்னைக்  குறை  கூறுவோர்  அதிகம். 

அதனால, நிறைய  டெப்த்  இருக்கறாப்புல  படம்  எடுத்து, இங்கே  போட்டிருக்கேன். 

(புகைப்பட  விற்பன்னர்கள், என்னை  மன்னிக்கவும்!)  


                       

சனி, 29 அக்டோபர், 2016

கேரளக் கல்லூரி மாணவிகளின் இந்தச் செயல்...1) தனது  80%  சொத்துகளை நலிவடைந்த பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எழுதி வைத்த பர்வீன் பாபி. அறக்கட்டளை ஒழுங்காய்ச் செயல்படவேண்டும்!

 
 
2)  "பாஸிட்டிவ் செய்திகள் படிப்பதனால் ஆன பயன் என் சொல்!"  இப்படி ரீமா சாத்தேயைக் கேட்க முடியாது.  அவர் செய்தே காட்டி விட்டார். 
 
 
 

 
 
3)  நல்ல காரியம் செய்வதற்கு வயது ஒரு தடையல்ல.  க்ஷீரஜா ராஜே ஒரு உதாரணம்.  வயது 13.
 
 

 
 
4)  பெரிய அளவில் செய்தால்தான் உதவியா?  தன் கடையை நாடி வரும் முடியாதவர்களுக்கு கடந்த நான்கு வருடங்களாக உதவி வரும் இந்த வடநாட்டு சிறுகடைக் காரர் ஒரு உதாரணம்.  அதற்குக் காரணம் அவர் மகன் கேட்ட ஒரு கேள்வி. ஜோகேஷ் யாதவ்.
 
 

 
 
5)   "....நீ ஒரு கிளார்க். உன்னால எல்லாம் ஆய்வு செய்ய முடியாது", என்று கூறிய ஆசிரிய நண்பர் சில நாள்களுக்கு முன்பு என்னை நேரில் பார்த்து தான் அப்போது சொன்னதை மனதில் வைத்துக்கொள்ளவேண்டாம் என்று இருக்கையில் வந்து பாராட்டிவிட்டுச் சென்றார். "உங்களைப் போன்றோரின் கருத்துகளே என்னை ஓர் ஆய்வாளனாக ஆக்கிவிட்டன" என்று கூறி அவருக்கு நன்றி தெரிவித்தேன்....."
 
 நம்மிடையே ஒரு பாஸிட்டிவ் மனிதர்.  அடையாளம் காட்டிய தேனம்மைக்கு நன்றி.  முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.


 
 
6)  "...இந்த மரத்தை இருந்த இடத்திலேயே வெட்டி விற்று இருந்தால் இரண்டாயிரம் ரூபாயோ மூன்றாம் ரூபாயோ கிடைத்திருக்கும் ஆனால் இப்படி மாற்று இடத்தில் நடுவதற்கு எடுத்துக்கொண்ட முயற்சிக்கு முப்பதாயிரம் ரூபாயாகும், 'அவ்வளவு ரூபாய்க்கு மரம் மதிப்பு இல்லையேம்மா'? என்ற போது முப்பதாயிரம் அல்ல அறுபது ஆயிரம் ரூபாய் ஆனாலும் அதை காப்பாற்றியே தீருவேன் என்று சொல்லி பணத்தையும் நேரத்தையும் மட்டுமின்றி யாரும் கொடுக்கமுடியாத மதிப்பையும் மரத்திற்கு கொடுத்த நிர்மலாதான் முதல் சொம்பு தண்ணீரை விட்டார்...." 
 
7)  பாஸிட்டிவ் பெண்மணி நடிகை லலிதா.
 
 

 
8)  சிங்கதுரை என்னும் சிங்கம்,.  "...சுமார் 10 லட்சம் ரூபாய் செலவானது. அதுல பாதியை சிங்கதுரை அய்யா தனிப்பட்ட முறையில ஏத்துக்கிட்டார்..."  மது குடிப்பதை நிறுத்தினால் ரூ. 5,000 டெபாசிட்.  குளத்தைச் சீரமைத்து அழகு படுத்தியிருக்கிறார்.

9)  ஏதாவது போராட்டம் என்றாலே பொதுச் சொத்துக்களை நாசமாக்கும் நபர்களை கேரளக் கல்லூரி மாணவிகளின் இந்தச் செயல் ஒரு கணமாவது சிந்திக்க வைக்காதா?


 

"

வியாழன், 27 அக்டோபர், 2016

சிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்


 

 
 
          தேனம்மை பரபரப்பான எழுத்தாளராகி விட்டார்.  நிறைய புத்தகங்கள் வரிசையாக வெளியிடுகிறார்.
     அதில் லேட்டஸ்ட் (சரிதானே தேனம்மை?  ஒருவேளை அடுத்த புத்தகம் வெளிவந்து விட்டதா?) இந்த "சிவப்பு பட்டுக் கயிறு.
 
 
 
 


     இந்தத் தொகுப்பில் 15 சிறுகதைகள் உள்ளன.  தினமணி கதிர், திண்ணை, தினமலர் பெண்கள் மலர், மேரிலேன்ட் எக்கோஸ், தினமலர் வாரமலர், பெண்கள் ராஜ்ஜியம், புதிய தரிசனம்,தென்றல் (அமெரிக்க தமிழ் மாத இதழ்) ஆகிய பத்திரிகைகளில் வெளியானவை.

     இதில் புத்தகத் தலைப்பாகியுள்ள சிவப்பு பட்டுக் கயிறு கதை மனதை அசைத்து விட்டது.  ஏதோ தத்து கொடுப்பார்கள் எங்கள் இல்லங்களிலும்.  ஆனால் இந்த மாதிரி ஒரு உறவறுத்து இன்னொரு உறவுடன் சேரும் வேதனை படிக்கும்போது மனதில் பதிந்தது.  
 

     "பின்னால் இங்கு வரப்போக முடியும் என்றாலும் அன்றைய கணக்குப்படி அந்த வீட்டோடான வாழ்வு முடிந்து விட்டது.  இனி அது வேறு வீட்டுப்பிள்ளை."

     மணமான புதிதில் பெண்கள் புகுந்த வீட்டில் சுவாசிப்பது பற்றி தேனம்மை எழுதி இருப்பதை ரசிக்க முடிந்தது.
 

     "தாய் வீடு சொந்த சுவாசம் போலவும், மாமியார் வீடு கொஞ்ச காலத்துக்கு ஆக்சிஜன் சிலிண்டரில் சுவாசிப்பது போலவும் இருக்கிறது.  வீட்டின் கதவுகள், ரூம்கள், அலமாரிகள், பொருட்களுடனான பரிச்சயம் அதிகமானபின் அதுவும் இன்னொரு சுவாசமாய் ஓடிக்கொண்டு இருக்கிறது"
 

     சூலம் கதை ஆரம்பக் காட்சிகளை ஒரு திரைப்படக் காட்சி போல வர்ணிக்கிறார்.   ஒரு டெலூசன் போல கதை முடிவு.  தற்கொலையா, தண்டனையா?  நாயகிக்கு விடுதலை!  அதையும் மனத்தளவில்தான் வைத்துக் கொள்ளவேண்டும்!
 

     கருணைக்கொலை என்பது ஆக்சிமோரானோ!  அதனால்தான் கருணையாய் ஒரு வாழ்வு என்று தலைப்பாக்கி ஒரு உண்மை சம்பவத்தில், இருநிலை விவாதமாய், கற்பனை உரையாடலைப் புகுத்தியிருக்கிறார்.
 
 
 
 
 

     கத்திக் கப்பல் ஒரு உணர்வுபூர்வமான கதை.  கணவன் தவறுசெய்து விடுவானோ என்று தோழியால் ஏற்படுத்தப்பட்ட பயம் -  அதனாலேயே அவனுக்கு ஆபத்து வந்து விட்டதோ என்று பதறி, அது இல்லை என்றானதும் அதனால் ஏற்படும் நிம்மதியும், பின்னர் மற்ற பாதிப்பாளர்கள் மேல் ஏற்படும் கரிசனமும்..

     பட்டாம் பூச்சிகளும் பூக்களும் கதையில் வர்ணனையில் விளையாடுகிறார்.  அதிலும் அந்த நடிகையின் மரணம் பற்றிய குறிப்புகளில் "மரண வர்ணனை!"    ஓய்வில்லாத உழைப்பில் ஒருநாள் ஓய்வு இப்படியா கிடைக்கவேண்டும்?  ஏதோ ஆறுதல்கள்..
 

     செம்மாதுளைச்சாறு ஏதாவது ஃபாண்டஸி வகைக் கதையா?  தில் சேர்த்தி என்றே தெரியவில்லை.  எதன் குறியீடு அது?
 

     ஒரு கருவின் கதறலாய் 'நான் மிஸ்டர் Y'.   ஒரு பிரச்சாரம் போல நிறைய விவரங்கள் தருகிறார் ஆசிரியர்.  பொதுவாக கதைகளில் சொல்லப்படும் விஷயங்களுக்காக நிறைய தேடி,  விஷங்கள் எடுத்துச் சேகரித்து வைத்துக் கொள்வார் போல...
 

     ஒருநாள் வாழ்ந்தாலும் சந்தோஷமாக வாழ்ந்த ஒரு குட்டிப்பெண்ணின் உணர்வுகள் 'சொர்க்கத்தின் எல்லை நரகம்' சிறுகதையில்.  நிதர்சனங்கள்.
 

     'அப்பத்தா'.   மரணம் அறியாத சிறுபெண்ணின் பார்வையில் கதை விரிகிறது.  அப்படியே அறியாமல் இருந்து விட்டால்?  ம்ஹூம்...!
 

     எல்லோரும் நல்லவராக இருந்தால் எப்படி இருக்கும்?  விக்கிரமன் படம் போல இருக்கும்!  ரக்ஷா பந்தன் சிறுகதை போலவும் இருக்கும்!

     பிள்ளைக்கறி.  ஆண் மிருகங்கள் பற்றிய கதை.  சில பெண்கள் தங்கள் சிறுவயதில் இப்படிப்பட்ட ஆண் மிருகங்களைச் சந்தித்திருக்கலாம்.  வயதானதையே பாதுகாப்பாய் வைத்துக் கொண்டு 'கைபோடும்' ஆண்கள்.  அதை அந்தப் பாட்டிக்கு மிக லேட்டாகவே புரிய வைக்கிறாள் அந்தப் பேத்தி.  அவர்களாலேயே உதவிகள் தேவைப்படும் சமயங்கள் எனபதால் அவற்றைக் கண்டும் காணாமல் கடக்கவேண்டிய நிர்ப்பந்தங்கள்...
 

     எரு முட்டை .   'அடப்பாவமே' என்று மனம் சொன்னாலும், ஏற்க முடியவில்லை.  'அவன்' இவ்வளவு நல்லவனாகவும் இருக்கக் கூடாது!
 
 
 
 

     'நந்தினி' கூட ஒருவகைப் பிரச்சாரக் கதைதான்.  கொஞ்சம் நம்பிக்கை, கொஞ்சம் அறிவுரை, கொஞ்சம் பிரச்சாரம்!  ஆனாலும் அதிலும் சுவாரஸ்யம் கலந்து தந்திருக்கிறார்.  மீண்டும் நிறைய விவரங்கள் - இந்த முறை எய்ட்ஸ் பற்றி.

     கல்யாண முருங்கை.  எதிர்பார்த்த திருப்பங்கள் வந்தாலும் காலம் கடந்த ஞானோதயம்? 

     "குடும்ப வன்கொடுமைச் சட்டம் எல்லாம் பெண்ணுக்குச் சாதகமாகவே இருக்கிறது.  கணவனின் பக்கத்தை அது அதிகம் அலசி ஆராய்வதில்லை.  "ஆண் மட்டும்தான் வன்கொடுமை செய்வான்"  எனச் சட்டமும் முடிவெடுக்கிறது"  என்கிறார் பெண் எழுத்தாளரான தேனம்மை.

     "புன்னகையை இழக்கும் மனிதர்கள் பாதி மரித்து விடுகிறார்கள்." - உண்மை.

     'ஸ்ட்ரோக்' -  மறுபடியும் ஒரு காலம் கடந்த ஞானோதயம்!  எதிர்பாலின அன்பை புரிந்து கொள்ளும் வயது!  அது புரிந்து கொள்ப்படும்போதோ..  அந்தோ..  கதாசிரியை பாலச்சந்தர் ஆகி விடுகிறார்!!!
 
 
 
 

சிவப்புப் பட்டுக் கயிறு 

103 பக்கங்கள் டிஸ்கவரி புக் பேலஸ்,

80 ரூபாய்.

புதன், 26 அக்டோபர், 2016

புதிர் 161026


'நெல்லைத் தமிழன் said...

கேள்வி - ஒரு நாடகத்தைப் படமாக எடுத்தபோது நாடகத்தில் ஆண் நடித்த பாத்திரத்தில், பெண் நடித்தார். ஒரே கதையை இரண்டாம் முறை படமாக எடுத்தபோது, முதல் படத்தில் ஆண் நடித்த பாத்திரத்தில் பெண் நடித்தார். யார் யார், என்ன படங்கள்?


எங்கள் பதில் : 
1)  நந்தனார். (என்று நினைக்கிறோம்) 

2)  சாந்த சக்குபாய்.  


சரியா?  

இந்த வாரக்கேள்வி: 
================== 

A என்ற நாடு.  B என்னும் விசித்திரமான மன்னன் ஆண்டுவந்தான்.  C என்ற ஆளு ஒரு  கிரிமினல் குற்றம் செய்துவிட்டான். D என்னும் விசித்திர தண்டனையை  அவனுக்கு அளித்தான் மன்னன். 


அது இதுதான்:  

சி யை, ஒரு   பெரிய  சிறையில் விட்டு,  கதவைப்  பூட்டி விடுவார்கள்.    

அந்த  அறையிலிருந்து  வெளியே  வர இரண்டு வழிகள். (E1 , E 2)  ஒவ்வொரு  வழியையும்  ஒரு  காவலாளி காத்து நிற்பார்கள். 
     Image result for ancient prison
K1 , K2  என்று  காவலாளிகளை  வைத்துக்கொள்ளலாம் .  

அதில்  ஒருவர் எந்தக்  கேள்வி  கேட்டாலும்  பொய்  சொல்லுவார். மற்றவர் எந்தக் கேள்வி கேட்டாலும், உண்மை சொல்லுவார். 

இரண்டு வழிகளில், ஒன்றின் வழியாகப்  போனால், பழமரங்கள் உள்ள சோலை  வழியாக சென்று, பசியாறி, தப்பித்துக்கொள்ளலாம்.   

                       Image result for fruit garden
  
மற்றொரு வழியாகச் செல்பவர்களை, கொடிய மிருகங்கள் சாப்பிட்டு, ஏப்பம்  விட்டுவிடும்.   

                               Image result for ancient prisoner
   
சி என்னும் கிரிமினல், ஏதேனும் ஒரு காவலாளியிடம், ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டு, அந்தக்  கேள்விக்கு, அந்தக் காவலாளி அளிக்கும்  பதிலை  வைத்து, சமயோசிதமாகத்   தப்பிக்கவேண்டும்.  

சி என்ன கேள்வி கேட்டு, எப்படித் தப்பிப்பார்? 

குறிப்பு: 

# இரண்டு காவலாளிகளுக்கும், தப்பிக்கும்  வழி  எது என்று தெரியும். 

# யார் உண்மை சொல்பவர், யார் பொய் சொல்பவர் என்ற விவரம் சி க்கு தெரியாது. ஆனால்  ஒருவர்  உண்மை  சொல்பவர், மற்றவர்  பொய்  சொல்பவர்  என்பது மட்டும், தண்டனை  அளிக்கப்படும்    பொழுதே மன்னன்  கூறிவிட்டான்.  

மேற்கொண்டு  விளக்கங்கள் ஏதேனும் தேவைப்பட்டால், அவ்வப்பொழுது  அளிக்கிறேன். 

================================  

 

செவ்வாய், 25 அக்டோபர், 2016

கேட்டு வாங்கிப்போடும் கதை :: விருட்ச விதைகள்இந்த வார "கேட்டு வாங்கிப் போடும் கதை" பகுதியில் இடம்பெறும் கதை திருமதி மாலா மாதவன் அவர்களுடைய படைப்பு.

அவருடைய தளம் எழுதுவோம் ஒரு பா.

ஃபேஸ்புக் நண்பர்.  திடீரென்று ஒருநாள் அவர் ஸ்டேட்டஸ் ஒன்றில் "என்னுடைய கதை இந்த வார தினமலரில்" என்று படித்ததும் அவரிடம் கேட்டு, கதையை வாங்கிப் போடுகிறேன்!

அவருடைய முன்னுரையைத் தொடர்ந்து வழக்கம்ப்ல அவர் படைப்பு.


========================================================================பத்து வயதில் திருமணம் ஆகி புக்ககம் வந்து தன் ஆத்துக்காரரோடு  கிட்டத்தட்ட எழுபது வருடங்கள் நடத்திய புரிதல் தந்த அன்னியோன்யம், அவர் போன பின்பும் அவரது விழுதுகளில் அவர் விதைத்த சாயலை தேடி ஆசுவாசம் கொள்கிறது.

======================================================================
விருட்ச விதைகள்

மாலா மாதவன்
முதுமை என்பது வரம் வாழத் தெரிந்தவர்களுக்கு. இளமையில் விதை

 என்பார்களே. அது முதுமைக்கான விதை தான்.

 அத்தகைய வரம் வாங்கி கொண்டு வந்தவர்கள் தான் காமுவும் வேம்புவும்.

கண்ணுக்கு கண்ணாக இரண்டு குழந்தைகள். பொண் ஒண்ணு பிள்ளை ஒண்ணு.

இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆகி பேரக் குழந்தைகளும் பார்த்தாச்சு.

விஸ்தாரமா வீடு. ஆள் படைக்கு குறைவில்லை. ராணி மாதிரி காமுவை வாழ

வைச்சார் வேம்பு. என்ன இன்னிக்கு பார்த்தா அவருக்கு வயசு எண்பதுன்னு

சொல்ல முடியுமா என்ன. அப்படி ஒரு மெலிதான தேகம். தேஜஸ்ல அவரது

அம்மாவை கொண்டு இருந்தார்.

காமு மட்டும் என்ன குறைந்தவளா என்ன? ஆயிரம் பேருக்கு அன்னபூரணியாய்

சமைத்த கை. அந்த காலத்தில் காஸ் அடுப்பா , மின் அடுப்பா .. ஒன்றும் இல்லை.

 விறகடுப்பின் புகையை ஊதி ஊதி இவள் கண் இரண்டும் மங்க தொடங்கி இப்போ

சுத்தமா பார்வையே இல்லை.

ஆனாலும் லஷ்மீகரம் முகத்தில் தாண்டவமாடும். ஒன்பது கஜம்

சின்னாளம்பட்டும் தேவேந்திராவும் மாற்றி மாற்றி அமர்க்களப்படும். பெரிய

மூக்குத்தியும், டாலடிக்கும் வைரத் தோடும், கைக்கு இரண்டாக நெளி

வளையல்களும், சற்று பெரிதான வாடாமல்லி கலரில் குங்குமமும் காமுவை

மிக அழகியாக காட்டும்.

அந்த அறையே சாம்பிராணி புகையின் நறுமணத்தால் சூழப் பட்டு இருந்தது. ஒரு

பக்கம் கட்டில் போடப் பட்டு கட்டிலோடு கட்டிலாய் படுத்து இருந்தார் வேம்பு.

 சுற்றிலும் எத்தனை பேர் இருந்தாலும் பார்வை என்னவோ காமு மேல் தான்

இருந்தது. என் மனைவி எவ்வளவு லஷ்மீகரமா இருக்கான்னு நினைத்தார்

வேம்பு.

ஆச்சு இன்னியோட  ஆறு மாசமாச்சு. ஒரு பக்கம் கையும் காலும் விழுந்து.

வாயும் கோணிண்டு பேச்சும் குழறலா தான் இருக்கு. இவர் என்னவோ பேசறார்

தான். மத்தவாளால தான் புரிஞ்சுக்க முடியலை.

“காமு, இன்னிக்கு அமாவாசைடி. கனத்த நாள் . பத்திரமா பார்த்துக்கோடி உன்

ஆம்படையானை!”

வந்திருந்த அத்தை அவளிடம் சொன்னாள். அத்தை படு கிழம்.

அத்தனை உறவுகளை பார்த்தவள்.

காமுவின் நடுங்கும் கைகளை அந்த முதிய கரம் பற்றிக் கொண்டது.

'ம்' என்றாள் காமு. எல்லா வைத்தியமும் பார்த்தாச்சு. ஆத்துக்கு கூட்டிண்டு

போங்கோன்னுட்டாரே அத்தை. இனி தெய்வம் தான் என்றபடி வேம்புவை

நோக்கிச் சென்றாள்.

பொண்ணும் பிள்ளையும் கலங்கி நின்றார்கள். பேரன் பேத்திகளும் அப்படியே.

வேம்பு அத்தனை பேருக்கும் உசிராச்சே. காமு எதற்கும் கலங்க வில்லை.

பிள்ளையின் கை பிடித்து கட்டில் அருகே அமர்ந்து கொண்டாள்.வேம்புவின் கை

அவள் கைக்குள் இருந்தது. புறங்களை தள்ளி விட்டு அகமோடு பேசினர் மனதால்.

"பதினாறாம் வாய்ப்பாடு சொல்லுடா வேம்பு.!"

ஆசிரியர் குச்சியை எடுத்துக் கொண்டு மிரட்டினார். அன்றைய பாடத்தை

படிக்காத வேம்பு தலையை குனிந்து நிற்க ..

"இந்தாடி காமு, நீ அவனது அத்தை பெண் தானே. உன் கையால் அவனை ரெண்டு

கொட்டு கொட்டு. அதான் தண்டனை "

என்று சொல்ல அவளும் கொட்டவும் வகுப்பே கொல்லெனச் சிரித்தது.

"நீ வாடி ஆத்துக்கு. ஆத்திரம் தீர கொட்டுவேன் "

என சூளுரைத்த அவன் இன்று வரை கோபமாக கூட பேசியதில்லை.

இரவும் வந்தது. அனைவரும் வேம்புவை சுற்றியே படுத்து கொண்டிருந்தனர்.

அமாவாசை வேறா எங்கும் இருட்டு. ஒரு வெளிச்சம் இருட்டில் அஸ்தமிக்கப்

போகும் நேரத்தை நினைத்து மனம் நொந்தனர்.

வேம்பும் சாதாரண பட்டவரில்லை. கை தேர்ந்த ஜோஸ்யர். கணக்கிலேயே தன்

காலத்தை கணித்து நாள், நேரம் , நிமிடம் முதற்கொண்டு எழுதி வைத்து

இருந்தார். அதை தெரிந்து கொண்ட காமுவுக்கு மனம் பட்ட பாடு கொஞ்ச

நஞ்சமில்லை.

பார்வை அப்படியே அந்த வெள்ளி கூஜா பக்கம் சென்றது. ஒருமுறை சிவகங்கை

அரண்மணை சென்ற போது அந்த வேலைப்பாடுள்ள பன்னீர் சொம்பு மாடலில்

அமைந்த கூஜாவை பார்த்து பெண் ஆசைப்பட்டாள் என்பதற்காக வெள்ளிக்கடை

வாலா செட்டியை ஆத்திற்கே கூப்பிட்டு அதே மாடலில் பண்ணச் சொன்னார்.

அது இன்னும் அவளின் பெண் வரை வேம்பின் பேர் சொல்லி நிற்கிறது. அதில்

பால் நிரப்பி தலைமாட்டில் வைத்திருந்தார்கள்.

 சொந்தங்களும் பந்தங்களும் சிறிது பாலை வேம்புக்கு கொடுத்த வண்ணம்

இருந்தார்கள்.

போகும் தசையில் ராம நாமம் சொல்வது பயணிக்கும் ஜீவனுக்கு நல்லதென

காமுவின் சின்னம்மா சொல்ல பேரனும் பேத்திகளும் ராமா ராமா என்று சொல்லி

கொண்டே இருந்தனர்.

சட்டென முழித்த வேம்பு “ நாமா வேணாம் முகா சொலு” என்றார்.

ராமன் வேண்டாமாம் . முருகா என் சொல்லணுமாம். அந்தளவு முருகன் மேல்

ஈடுபாடு. வைணவர் தான் ஆனாலும் முருகனுக்கென கோவில் கட்டி அதனை

பரம்பரையாக பராமரித்து வரும் குடும்பம் அவர் குடும்பம்.

  ரேழியில் ஆளரவம் கேட்டது. இரவு மணி பதினொன்று. எப்பவுமே அந்த வீட்டில்

கதவடைப்பதே இல்லை. வெறுமே சாத்தியிருப்பார்கள். யார் என பார்க்க பிள்ளை

எழுந்து போனான். காமுவும் சிந்தை கலைந்து என்னவென்று விசாரித்தாள்.

"அம்மா! பெரியம்மா!  பெரிய சாமி எப்படிம்மா இருக்காரு? "

என்றபடி வந்த ஆண்கள் அனைவரும் மாலை போட்டிருந்தனர். அவர்கள்

ஊரிலிருந்து திருச்செந்தூருக்கு ஒவ்வொரு ஷஷ்டிக்கும் பாத யாத்திரையாக

செல்பவர்கள்.  அன்று அமாவாசை கிளம்பினால் ஷஷ்டி  அன்று முருக தரிசனம்.

முருகனுக்குகந்த நாள்.

"நம்ம சாமி கிட்ட துண்ணூறு வாங்காம நாங்க பயணிக்க மாட்டோமே

பெரியம்மா. அதான் வந்தோம் " என்றனர்.

காமுவும் வந்த அழுகையை அழுந்த துடைத்துக் கொண்டு பிள்ளையிடம் கை

காண்பித்தாள். அவன் உடனே எழுந்து வந்து தகப்பனாரிடம் காதில் சொல்ல

வேம்பு முகத்தில் கோடி சூர்ய ப்ரகாசம். என் அப்பன் என் முருகன் எனை கூப்பிட

ஓடோடி வந்து விட்டான் என்று மனதோடு ஆர்ப்பரித்தாரோ. அவ்வளவு தேஜஸ்

முகத்திலே. பார்த்த அனைவருமே காமுவிடம் சொன்னனர் அவர் விடை பெறும்

நேரம் வந்து விட்டதென.

எழும்பாத வலது கையை தூக்கி பிள்ளையே அனைவர் நெற்றியிலும் திரு நீறை

இட்டு விட்டான். அனைவரும் வேம்பின் கால் தொட்டு வணங்கி சென்றனர்.

சூழ்ந்த மௌனத்தை உள்ளே வந்து கொண்டிருந்த அடுத்த ஆத்து அம்பி

கலைத்தான்.

"யாத்திரை கோஷ்டிக் காரா  இவ்வளவு நேரம் பயணத்தை ஆரம்பிச்சிருப்பாளே.

இன்னும் அரை மணி நேரத்தில் ஊர் எல்லையை தாண்டிடுவா. பத்திரமா

எல்லோரும் போய்ட்டு வந்துடணும் முருகா " என்றபடி வந்து கொண்டிருந்தான்.

"ஆமாமா அம்பி . பயணம் ஆரம்பிச்சுடுத்து."

 வேம்புவை தொட்டு தடவிக் கொண்டிருந்த காமு சொன்னாள்.

"எல்லோரும் வாங்கோ குழந்தைகளா ! உங்க தாத்தா பயணப் படறார். கை

கூப்புங்கோ.! "

 பிள்ளையை கூப்பிட்டு வேம்புவை அவன் மடி மேல் வைச்சிக்கச் சொன்னாள்.

பெண்ணை வேம்புக்கு வாயில் பால் வார்க்கச் சொன்னாள். தான் மட்டும் அவர்

பார்வையில் இருந்து நகரவே இல்லை. வேம்புவும் அவளையே அவளை

மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார். கை அவளது கைக்குள் இருந்தது.

குழந்தைகள்  "முருகா ! முருகா !"என சொல்ல காமுவின் கை ஒவ்வொரு

பகுதியாய் தடவியது. வயிறு சூடு இல்லடா . குளிர்ந்து போச்சு. இன்னும் மேலேறி

விலா பக்கமும் அடங்கி போச்சு.

"ஏண்ணா! என்னை விட்டு போறேளா? "

காமுவின் மனம் அரற்றியது.

 "கொடுத்து வைத்தவர்னா நீங்கள். இத்தனை பேரும் அருகிலிருந்து உங்களை

வழியனுப்பறா. "

விடாமல் கண்ணீர் பெருக்கெடுத்தது அவளுக்கு.

வேம்பின் பார்வை அவளை விட்டு அகல வில்லை. அகக் கண்ணால் அவரும்

மனக் கண்ணால் அவளும் வாழ்க்கையை பரிமாறிக் கொண்டிருந்தார்கள்.

ஆச்சுடா உடல் சூடு போய்டுத்து. கண் வழியா தான் உயிர் போக போறது.

தலையில் கை வைத்து தடவிய படியே காமு குழந்தைகளை நமஸ்காரம்

பண்ணச் சொல்லி உத்தரவிட்டாள்.

வேம்பின் கை அவள் வளையலை பிடித்தபடி இருக்க கண் அவளை பார்த்த படி

இருக்க உயிர் பயணம் ஆரம்பித்தது. திருசெந்தூருக்கென பயணப் பட்டவர்கள்

ஊர் எல்லை தாண்டும்  வரை பொறுத்து இருந்து அவரின் பயணம் ஆரம்பித்தது.

காமுவுக்கு கண் இல்லாத குறையை போக்கி கண்ணாய் இருந்தவர் காலன்

எடுத்துக் கொண்ட பத்தாம் நாள்.

அடுத்தாத்து செல்லம்மா மாதிரி என்னையும் முக்காடு போட்டு  உட்கார

வைச்சுடுவாளோ என கலங்கிய காமுவின் கை பிடித்த பேத்தி அனைவரிடமும்

உரக்கச் சொன்னாள்.

"எங்க பாட்டி எப்பவும் இப்படியே தான் இருப்பா. எங்க தாத்தாவோட மகாலஷ்மி

அவோ. அவர் இப்படி நகைகளோடு பார்க்கத் தான் ஆசைப்படுவார்."

புரிந்து கொண்டாயே என்னை என கலங்கிய காமுவின் கை பேத்தியை தழுவிக்

கொண்ட படி வேம்புவை நமஸ்கரித்தது.

வெகு நேரம் காலை நீட்டிக் கொண்டு பழைய நினைவுகளில் ஆழ்ந்திருந்ததால்

மரத்துப் போன காலை நீவி விட்ட படி எழுந்த காமுவின் காதில் கொள்ளுப்

பேரனின் வீறீட்ட அழுகை புன்னகையை பூசியது. ஆசை தீர அவனை எடுத்து

அணைத்துக் கொண்டு சொன்னாள்..

"எங்க போறாராம் அவர் என்னை விட்டுட்டு? இதோ வந்துட்டாரே எங்காத்து

வேம்பண்ணா. " 

பேத்தி வயத்துக் கொள்ளுப் பேரன் வேம்பு பிறந்த அதே அமாவாசை சுவாதியுடன்

கூடிய தீபாவளி  பிறந்திருந்தான் . ஆம்.  இருட்டில் கிடந்த வெளிச்சம்

பிரகாசித்தது.

                  ..       முற்றும்.

திங்கள், 24 அக்டோபர், 2016

"திங்க"க்கிழமை 161024 :: அவியல் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி.அவியல் என்று ஒன்று வந்ததே, மிஞ்சின குறைந்த அளவு உள்ள காய்கறிகளை வைத்து என்ன செய்வது என்று யோசித்ததால்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். கல்யாணம் முடிந்து மறுநாள் கட்டுச்சாதம் அன்னைக்கு மிஞ்சின காய்கறிகளை வைத்து அவியலும், பலவித கலந்த சாதங்களும் எங்கள் பக்கத்தில் செய்வார்கள். பொதுவாக வீட்டில், அவியலுக்கு என்று காய் வாங்குவது அபூர்வம். (யார் தேவையான காய் எல்லாவற்றிலும் 100 கிராம்னு வாங்கறது?). அவியல் என்பது திருநெல்வேலிப் பகுதியில் பிரபலமானது. கேரளாவில் இது முக்கியமான பண்டிகை நாட்களில் செய்யப்படுவது. பெரும்பாலும் உணவுவிடுதிகளில் முருங்கைக்காய் சேர்ப்பார்கள். எனக்கு இது ரொம்பவும் எரிச்சலாக இருக்கும். நிம்மதியா அவியலைச் சாப்பிடமுடியாது. எங்கள் வழக்கத்தில் (முந்தைய தலைமுறை) நாட்டுக் காய்கள் மட்டும்தான் சேர்ப்பார்கள். அதாவது, ஆங்கிலக் கறிகாய்களுக்குத் (பீன்ஸ், கேரட், உருளை போன்றவை) தடா. அதேபோன்று, அவியலுக்கு உணவு விடுதிகளில் செய்வதுபோல், நீள் சதுரவாக்கில் அழகழகாகவெல்லாம் திருத்தமாட்டார்கள். கொஞ்சம் பெரிய அளவில்தான் திருத்துவார்கள். அவியல்ல புளியும் சேர்ப்பார்கள். பெரும்பாலும் மாங்காய் சேர்த்துப் பார்த்ததில்லை. இதற்கு, மாங்காய் குறிப்பிட்ட பருவகாலத்தில்தான் கிடைக்கும் என்பது காரணமாயிருக்கலாம். மாங்காய் சேர்த்தால், புளி சேர்ப்பது தேவையில்லை.

நான், அவியல் பண்ணுவதற்காகவே, எல்லாக் காய்களையும் கொஞ்சம் வாங்கினேன். அவியலுக்கு அவசியம் தேவையான காய்கள்,  கத்தரி, அவரை, வாழை, பூசணி ஆகியவை. சேப்பங்கிழங்கு, வெண்டை, உருளை, பீன்ஸ், சேனை சேர்த்தால் நல்லா இருக்கும்.  கேரட் அவியலைக் கொஞ்சம் வண்ணமயமாக்கும். காய்களை ஓரளவு அளவில் திருத்திக்கொள்ளவும். கத்தரி, பூசணி, உருளை ஆகியவற்றைக் கொஞ்சம் பெரியதாகவும், மற்றவற்றை நீள் சதுரவாக்கிலும் திருத்திக்கொள்ளணும். சேப்பங்கிழங்கு, உருளை இவற்றை நான் முதலில் கொஞ்சம் வேகவைத்துக்கொண்டேன்.  மற்றவற்றை, குக்கரில், கொஞ்சம் புளிஜலம் சேர்த்து வேகவைத்துக்கொண்டேன். ரொம்ப வேகவேண்டாம்.

அரைக்கிலோ காய்கறிக்கு, அரை மூடித் தேங்காய் தேவை.  தேங்காயும், 4 பச்சை மிளகாயும் சேர்த்து (கொஞ்சம் தண்ணீர் விட்டுக்கொண்டு) வழுமூன மிக்சியில் அரைக்கவும். நான் இதிலேயே கொஞ்சம் உப்பையும் சேர்த்துக்கொள்வேன்.

 


இப்போ, குக்கரில் ஓரளவு வெந்திருக்கும் காய்கறிகளை எடுத்துக்கொள்ளவும். நீரை வடிகட்டிவிடலாம்.   கடாயில, தேங்காய் எண்ணையில் கடுகு பொரித்து, அதில் இந்த வெந்த காய்கறிகளைப் போடவும். அதனுடன் தேங்காய் பேஸ்டையும் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து, மிதமான தீயில் கொஞ்சம் சுட வைக்கவும். தேங்காய் கொஞ்சம் ஆகவேண்டும். புளி போதவில்லை என்று தோன்றினால், குக்கரிலிருந்து எடுத்தபோது, நீரை வடிகட்டினோமே அதைத் தேவையான அளவு சேர்த்துக்கொள்ளலாம்.அடுப்பை அணைத்துவிட்டு, 2-3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெயும், 2 ஆர்க் காம்புடன் கூடிய கருவேப்பிலையையும் சேர்த்துக் கலக்கவும். அப்புறம் நல்ல புளிக்காத தயிரை 1 ½ கப் அளவில் சேர்த்துக் கலக்கவேண்டியதுதான். (பின்குறிப்பைப் பார்க்க)

அவியல் பண்ணுவது ரொம்ப சுலபம். கொடுத்துள்ள இத்தனை காய்கறிகளும் வேண்டுமா என்று மலைக்கவேண்டாம். கொஞ்சம் குறைவாக இருந்தால் அவியலின் கம்பீரம் குறையாது. என்ன, வாழைக்காய், அவரை (அல்லது பீன்ஸ்), சேப்பங்கிழங்கு, கத்தரி, பூசணி இவைகள் இருந்தால் போதும். எங்க அம்மா, பச்சைத் தக்காளிக் காய் மட்டும்போட்டு அவியல் செய்வார்..அது இன்னும் என் மனதிலேயே இருக்கு.  சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்கு என்று சொல்வதுபோல், எங்க அம்மா பண்ணித்தருவதுபோல் நீயும் பண்ணு என்று மனைவியிடம் சொல்லாத கணவன் வெகு அபூர்வமல்லவா?
தொட்டுக்க வேண்டாம்.. அப்பிடியே ச்சாப்பிடுவேன்.. என்பதுபோல, எனக்கு அவியலுக்கு, வெறும் சாதம், வாசனைக்குக் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் (எங்கள் வீடுகளில் நெய்தான் சாதத்துக்கு) போதும். என்னைப் பொறுத்தவரையில் அவியல், கொஞ்சம் காரமான கலந்த சாதங்களுடன் (புளியோதரை, எள்ளுச்சாதம்-கார வகை) நன்றாக இருக்கும். அடைக்கு அவியலைத் தொட்டுக்கொள்ளலாம் என்று கண்டுபிடித்த மஹராசனே.. நீயே அனுபவி அந்தக் காம்பினேஷனை.. எனக்கு வேண்டாம்.  (அடைக்கு மரியாதை… நெய்யுடன் சேர்ந்த வெல்லப் பொடி. இல்லாட்டா இட்லி மிளகாய்ப்பொடி. மற்ற காம்பினேஷன்லாம், சும்மா எண்ணிக்கைக்குத்தான்.. சரவணபவன், சிவப்பு, பச்சை, மஞ்சள், வெள்ளை என்று வண்ண வண்ணமாக சட்னி தருவதுபோல)

பின்குறிப்பு:
1.   பொதுவாக, அவியலில் (அதாவது அடுப்பை அணைத்தபின்), உடனேயே தயிர் சேர்க்கவேண்டாம். பரிமாறுவதற்கு முன் தயிர் சேர்க்கலாம் என்று சொல்வார்கள். அப்போதுதான், சாயும்காலத்தில் அவியல் மிஞ்சியிருக்கும்போது, திருப்பி தயிர் சேர்த்துச் சாப்பிடலாம். இல்லைனா, அவியல் புளிக்கும். ஆனால் எங்கள் வழக்கத்தில் கடவுளுக்குப் படைத்தபின் அதில் எதையும் சேர்க்கும் வழக்கம் இல்லை. அதனால் அவியல் பண்ணும்போதே தயிரையும் சேர்த்துவிடுவார்கள்.

2.   தயிர் புளிப்பாக இருக்கும் என்று தோன்றினால் (காலையில்), காய்கறிகளைக் குக்கரில் வைத்துவேகவைக்கும்போது, புளிஜலம் சேர்க்கவேண்டாம். மாங்காயையும் திருத்தி அவியலில் சேர்ப்பதானால், புளிஜலம் தேவையில்லை.

3.   காய்கறிகள் ஒவ்வொன்றுக்கும் வேக, ஒவ்வொரு உஷ்ணநிலை வேண்டும். எல்லாத்தையும் ஒரேமாதிரி குக்கரில் வைத்தால் ஒன்றும் தவறில்லை. வாழை, கத்தரிக்கு வேக நேரமாகாது.  எல்லாக் காயும் முக்கால் வெந்திருந்தால் போதும். கடைசியில் கடாயில் தேங்காய் பேஸ்டுடன் கொதிக்க வைக்கும்போது மீதி வெந்துவிடும்.

4.   அவியல் கொஞ்சம் நீர்க்க இருந்தால்மட்டும் (அடுப்பில் இருக்கும்போது), 1 தேக்கரண்டி அரிசிமாவு கரைத்துச் சேர்க்கலாம்.


நான் வெள்ளிக்கிழமை அவியல் செய்தபோது, வடகங்களும் அப்பளாமும் பொரித்தேன். சாதம், அவியல், வடகம். இந்தக் காம்பினேஷன் எனக்குப் பிடித்தது.


அன்புடன்,

நெல்லைத்தமிழன்.

ஞாயிறு, 23 அக்டோபர், 2016

ஞாயிறு 161023 :: மர்ம உருவம்!


படத்தை  க்ளிக் செய்யும்பொழுது சந்திரன் மட்டுமே இருந்தார். ஆனால் வேறு  ஓர் உருவம் எப்படி வந்தது என்று தெரியவில்லை. 

பேய்?  


சனி, 22 அக்டோபர், 2016

ஒரு பெண்ணை நடு இரவில் காப்பாற்றியவர்..
1)  "...... அப்போ தான், உங்களைத் தான் அவன் தேடறான்னு புரிஞ்சுது'னு சொன்னாங்க. அந்த நிமிஷத்தில் எனக்குள் ஏற்பட்ட உணர்ச்சிகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஆட்டிசத்துக்கும், இசைக்கும் நிச்சயமாக ஏதோ தொடர்பு இருக்குன்னு புரிந்தது. 
 
 
 

 
இனி அவர்களுக்காக மட்டுமே என் பாட்டுன்னு முடிவெடுத்தேன். அப்போது ஆரம்பித்தது இந்தப் பயணம்.
 
 
ஆட்டிச நிலையாளர்களுக்கு, ௯௯.௯ சதவீதம் இசையில் ஆர்வம் உண்டு...."
சென்னை, அண்ணாமலைபுரத்தில், 'ஆட்டிசம்' என்ற மனவளர்ச்சி குறைப்பாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசை வகுப்புகளை நடத்தி வரும், கர்நாடக இசைக் கலைஞர் லட்சுமி மோகன்.


 
 
 
 
 3)  சமயோசிதமாய் செயல்பட்டு ஒரு பெண்ணை நடு இரவில் காப்பாற்றியவர்.  மனிதம் இன்னும் மறித்து விடவில்லை என்று நினைக்க வைத்திருப்பவர்.  
 
 
 
 


வியாழன், 20 அக்டோபர், 2016

முன்னுரை : பிரதாப முதலியார் சரித்திரம்     புத்தகங்களுக்கு எப்போது முன்னுரை எழுதும் வழக்கம் ஏற்பட்டது?  
     முதலிலிருந்தே.....!


     முதல் முன்னுரை!
 
    
     தமிழ் நவீனத்தின் முதல் முன்னுரை!


 
     தேடினால், தமிழின் முதல் நவீனமாம் "பிரதாப முதலியார் சரித்திரம்" புத்தகத்துக்கே முன்னுரை இருக்கிறது.  இல்லாமல் இருக்குமா என்கிறீர்களா?  அதுசரி!  முன்னுரையில் அப்போதைய பாணி எப்படி இருந்தது என்று தெரிய வேண்டாமா?

     தமிழின் முதல் நாவல் வகை நூல்.  1857 இல் எழுதப்பட்டு, 1879 இல் வெளியானதாம். ஏன் அவ்வளவு இடைவெளியோ!  அதுவரை செய்யுள் நடையில் எழுதப்பட்டுக் கொண்டிருந்த புனைவிலக்கியத்துக்கு முதல் முறையாக வசன நடையில் ஒரு படைப்பு.     அதன் ஆசிரியர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய அந்த முன்னுரையை இந்த வாரம் பார்ப்போம்.


     கதை இருக்கும் நடையில் முன்னுரை இல்லை!  இந்தக் காலத் தமிழை ஒட்டியே இருக்கிறது.  தமிழ் வாசகர்களின் ரசனை, சுவை மேல் ஆசிரியருக்கு இருக்கும் நம்பிக்கையை, நாடி பிடித்துப் பார்த்திருப்பதை தனது வரிகளில் வெளிப்படுத்துகிறார்.  அல்லது அதைப் படித்த வாசகர்கள் (அப்போதுதான் தொடங்கும் வழக்கங்கள் என்பதால்) உண்மை, உண்மை என்று படித்திருக்கக் கூடும்.
 

     "இந்திய வாசகர்களுக்கு ராஜா ராணிகள் பற்றிப் படிப்பதில் மிகுந்த ஆசையுண்டு.  கண்ணைக்கட்டி காட்டில் விட்டால் அலைந்து திரிவதில் மிகுந்த உற்சாகம் உண்டு. பொன்னால் ஆக்கப்பட்ட அரச மாளிகையைப் பார்த்துக் கொண்டே இருப்பதிலும், பூங்கா வனத்தருகில் உள்ள நீர் வீழ்ச்சியைப் பார்த்துக் கொண்டு படுத்திருப்பதிலும் அவர்களுக்கு மிகுந்த பிரியம் உண்டு."
     "பல்வேறு காட்சிகளில் பல உப பாத்திரங்கள் பல்வேறு வகைகளில் தங்கள் பாகங்களில் சிறப்புற நடித்திருக்கின்றனர். " என்று அவர் சொல்வது புதுமையாக இருக்கிறது, நாடகம் போடுவது போல ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது.  


     கதையை ஒரு போதனை முறையில் எழுதியிருப்பதைச் சொல்கிறார்.  சமயம் சார்ந்து எழுதியிருப்பதையும் சொல்லும் அதே நேரம் பிற சமயத்தினர் மனதை புண்படுத்தும் வகையில் எழுதவில்லை என்றும் சொல்கிறார்.  தனது படைப்பில் என்னென்ன இருக்கிறது என்று ஒரு சிறு முன்னோட்டம் மாதிரித் தருகிறார். 

     கதையைப் பொறுத்தவரை சமூக நாவலாகத் தொடங்கும் கதை, பின்னர் ராஜா ராணி கதைக்குள்ளும் சென்று வருகிறது.

     46 அத்தியாயங்கள் கொண்ட இந்தக் கதையை இங்கு படிக்கலாம்.

     இன்னொரு விஷயம்.  பிரதாப முதலியார் சரித்திரம் தமிழின் முதல் நாவல் இல்லை என்று சிட்டி சிவபாதசுந்தரம் சொல்கிறாராம்.  


     வித்துவான் சேஷையங்கார் என்பவர் எழுதிய "ஆதியூர் அவதானி சரிதம்" என்கிற நூல்தான் முதல் நாவலாம்.  அதை பற்றி இங்கு படிக்கலாம்!  இந்தப் புத்தகம் 1875 இல் இந்தக் கதை வெளியானதால்.  


      ஆனாலும் நம்முடைய ( !!! ) பிரதாப முதலியார் சரித்திரம் 1857 முதலே எழுதப் பட்டு வந்தது அன்றோ?  அப்போது [நம்மைப் பொறுத்தவரை] அதுதான் முதல்!!


     இனி முன்னுரை :  (முழுதாகப் படிப்பீர்கள் அல்லவா!)==============================
================================
பிரதாப முதலியார் சரித்திரம் -  மாயூரம் ச. வேதநாயகம் பிள்ளை 


ஆசிரியர் முன்னுரை :  


தமிழில் உரைநடை நூல்கள் இல்லையென்பது ஒப்புக்கொள்ளப் படுகிறது.   இந்தக் குறைபாட்டைப் பற்றி எல்லோரும் வருந்துகின்றனர்.  இக்குறையை நீக்கும் நோக்கத்துடன் தான் இந்தக் கற்பனை நூலை எழுத முன்வந்தேன்.  மேலும் நீதி நூல், பெண்மதி மாலை, சமரசக் கீர்த்தனம் முதலிய ஏற்கெனவே வெளிவந்துள்ளன. எனது நூல்களில் குறிப்பிடப் பட்டிருக்கும் அறநெறிக கொள்கைகளுக்கு உதாரணங்களைக் காட்டவும் இந்த நவீனத்தை எழுதினேன்.


இந்தக் கதைக்கு நிலைக்களம் தென் இந்தியா.  கதா நாயகன் இப் பக்கத்தகவர்; நன்கு கல்வி பயின்றவர்;  மகா புத்திசாலி; நகைச்சுவையுடனும் அருகி சுடர் வீசும் வகையிலும் பேச வல்லவர்.  அவர் தனது பிறப்பு, வளர்ப்பு, பெற்றோர், கல்வி பயின்றது, திருமணம் செய்து கொண்டது போன்ற தனது வாழ்க்கையில் முக்கியமான சம்பவங்களை விவரிக்கிறார்.  கதையில் இடையிடையே ஹாஸ்ய சம்பவங்களும் தமாஷான பேச்சுக்களும் பின்னப்பட்டிருக்கின்றன.  அறத்துறை சம்பந்த கருத்துக்களும் இடம் பெற்றிருக்கின்றன.


இந்த நவீனத்தில் முக்கியமான பங்கு கொள்பவர்கள் கதா நாயகனின் அன்னை 'சுந்தர அண்ணி'யும் அவருடைய மனைவி 'ஞானாம்பாளும்' .  இவ்விருவரும் உயர்குடியில் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர்கள்.  எல்லாவிதமான நற்பண்புகளும் உடையவர்கள்;  பெண் குலத்திற்கு அணிகலனான எல்லா லட்சணங்களும் பொருந்தியவர்கள்.  


வாழ்க்கையில் பல நெருக்கடியான சந்தர்ப்பங்களில் அவர்களுடைய உயர் குணங்கள் பிரகாசிக்கின்றன.  தங்களுக்கு நேரக்கூடிய கஷ்டங்களையும் பொருட்படுத்தாமல்,  அவர்கள் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நீதியையும், மனித தர்மத்தையும் காக்க முன்வருகின்றனர்.  தன்னால் கட்டுப்படுத்த முடியாத பல சந்தர்ப்பங்களில், எதிர்பாராத சேர்க்கையினால் 'ஞானாம்பாள்' ஆண்வேடம் பூண்டு மகோன்னத சக்தி பெற்று, புத்தி சாதுர்யத்துடனும் திறமையுடனும் ஆட்சி புரிகிறாள்.  இந்திய வாசகர்களுக்கு ராஜா ராணிகள் பற்றிப் படிப்பதில் மிகுந்த ஆசையுண்டு.    கண்ணைக்கட்டி காட்டில் விட்டால் அலைந்து திரிவதில் மிகுந்த உற்சாகம் உண்டு. பொன்னால் ஆக்கப்பட்ட அரச மாளிகையைப் பார்த்துக் கொண்டே இருப்பதிலும், பூங்கா வனத்தருகில் உள்ள நீர் வீழ்ச்சியைப் பார்த்துக் கொண்டு படுத்திருப்பதிலும் அவர்களுக்கு மிகுந்த பிரியம் உண்டு.  இம்மாதிரி மனப்பாங்குள்ள வாசகர்களின் சுவையைத் திருப்தி செய்வதற்காக ஞானாம்பாளை மனிதர் அடையக் கூடிய மகோன்னத பதவிக்கு உயர்த்தி யிருக்கிறேன்.  


கதாநாயகனின் தந்தையும், மாமனாரும் உயர் குடும்பத்தில் பிறந்தவர்கள்;  ஆனால் கல்விப் பேறு பெறாத நாட்டு மக்கள்;  வக்கிர போக்குடையவர்கள்;  விசித்திர குணம் படைத்தவர்கள்.  ஆனாலும் சுந்தர அண்ணியும், ஞானாம்பாளும் கையாளும் பண்பு மிக்க தந்திரங்களால் அவர்களிடம் மயங்கி கிடந்த நற்பண்புகள் பிரகாசித்து, அவர்களும் புகழத்தக்க செயல் புரிகின்றனர்.  பல்வேறு காட்சிகளில் பல உப பாத்திரங்கள் பல்வேறு வகைகளில் தங்கள் பாகங்களில் சிறப்புற நடித்திருக்கின்றனர்.  அவர்களுடைய செயல்களில் பெற்றோரிடம் பாசம், சகோதர வாஞ்சை, கணவன் மனைவி அன்பு, கற்பு, எல்லோருக்கும் நலம் புரிதல், நாணயம், நன்றி முதலிய நற்பண்புகளை உதாரணங்களைக் காண்கிறோம்.  சமயம் போதிப்பதும், அனுபவம் உணர்த்துவதுமான நற்குணமின்றி இந்த வாழ்க்கையில் கூட இன்ப வாழ்வு வாழ முடியாது என்னும் மூதுரைக்கும் கதையில் உதாரணங்கள் காணப்படுகின்றன. 


தேசியப் பண்பு, இல்வாழ்க்கை, தென்னிந்திய மக்களின் பழக்க வழக்கங்கள் சித்தரிக்கப் பட்டிருக்கின்றன.  இடையிடையே நகைச்சுவை மிக்க சம்பவங்களும், சுவை மிக்க அஃதைகளும் இடம் பெற்றிருக்கின்றன.  உலகத்தோரிடம் பொதுவாகக் காணப்படும் பலஹீனங்களும், குறைபாடுகளும் ஆங்காங்கே கேலி செய்யப்பட்டிருக்கின்றன,. நான் கடவுள் பக்தி புகட்டியிருக்கிறேன்.  குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் யாவரும் செய்ய வேண்டிய கடமைகளையும் வற்புறுத்தியிருக்கிறேன்.  நல்வழியின் இயல்பான சிறப்பையும், தீய வழியில் உள்ள கொடூரங்களையும் நான் விவரிக்க முயற்சித்திருக்கும் முறையில் வாசகர்கள் நல்லதை விரும்பித் தீயதை வெறுக்க முன்வருவார்கள்.  பல்வேறு பாத்திரங்களையும், சம்பவங்களையும் விவரிப்பதில் நான் இயற்கையை ஒட்டியே எழுதியிருக்கிறேன்.  அற்புதங்களையோ உணர்ச்சி வசப்பட்டோ எழுத்துவதைத் தவிர்த்திருக்கிறேன்.  எந்த மதத்தினர் சமய பற்றையும் புண்படுத்தாமல் ஜாக்கிரதையாகவே எழுதியிருக்கிறேன்.


சில நாவலாசிரியர்கள் மனித இயல்பை உள்ளது உள்ளபடியே வருணித்திருக்கிறார்கள்.  இவர்கள் மனிதர்களில் கடையவர்களை வருணிப்பதால் அனுபவமற்ற இளைஞர்கள் இந்த உதாரணங்களைப் பின்பற்றுகின்றனர்.  இந்தக் கதை எழுதுவதில் இந்த முறையை நான் பின்பற்றவில்லை.  முக்கியமான பாத்திரங்களை நான் பூரண சற்குணம் படைத்தவர்களாகவே சித்தரித்திருக்கிறேன்.  பிரபல அற நோக்குள்ள ஆங்கில ஆசிரியர் டாக்டர் ஜான்சனையே இவ்விஷயத்தில் நான் பின்பற்றியுள்ளேன்.  அவர் 'ராம்ப்ளர்' என்னும் நூலின் நான்காவது பகுதியில் கூறுகிறார்.


"வரலாற்று அடிப்படைக்கு கதைகள் தவிரப் பிறவற்றில் நற்குணத்துக்குச் சிறப்பான உதாரணமாக விளங்கும் பகுதிரங்களை ஏன் சிருஷ்டிக்கலாகாது என்பது எனக்கு விளங்கவில்லை.  நற்குணமட்டுமென்றால் தெய்வீகத் தன்மை வாய்ந்ததென்றோ, நடக்கக் கூடாத சம்பவமென்றோ அர்த்தமில்லை.  ஏனெனில் நாம் உணரமுடியாததைப் பின்பற்ற மாட்டோம்.  ஆனால் மனிதர்கள் முயற்சித்து அடையக்கூடிய உயர்தர - தூய்மை மிக்க - நற்பண்பு புரட்சிகரமான சந்தர்ப்பங்களில் சில விபத்துகளைச் சமாளிப்பதிலோ அல்லது அனுபவிப்பதிலோ நாம் காட்டக் கூடிய சிறப்புகளை நாம் அடையலாம்.  அல்லது நாமே செய்து காட்டலாம் என்பதை நமக்கு உணர்த்துகிறது.  தீமையையும் காட்ட வேண்டியதுதான்;  ஆனால் காட்டப்படும் தீமை அருவருக்கத் தக்கதாக இருக்க வேண்டும்.  தீமை தோன்றும் இடங்களிலெல்லாம் அதைக் கையாளும் முறையிலிருந்து அதனிடம் வெறுப்புக் கொள்ள வேண்டும்.  அதன் அற்புதத்தனமான தந்திரங்கள் மூலம் அதனிடம் நமக்கு நிந்தையான எண்ணம் உதயமாக வேண்டும்.  ஏனெனில் தீமையை ஆதரிப்பது போல் காட்டினால் அதை யாரும் கண்டு அஞ்ச மாட்டார்கள்."


தமிழில் இம்மாதிரி உரைநடை நவீனம் பொதுமக்களுக்கு இதுவரை அளிக்கப் படவில்லை.  ஆகையால் இந்த நூல் வாசகர்களுக்கு ரசமாகவும், போதனை நிறைந்ததாகவும் இருக்கலாம் எனப் பெருமை கொள்கிறேன்.  இம்மாதிரிப் புதிய முயற்சிகளில் ஏதாவது குற்றங்குறைகள் இருப்பின் பொறுத்தருளுமாறு பொது மக்களை வேண்டிக் கொள்கிறேன்.ச. வேதநாயகம் பிள்ளை.


==============================
===================================