வியாழன், 31 ஜனவரி, 2013

"ஏய்....பாடல் வேறு... ராகம் ஒன்று..."


1) ராமன் கதை கேளுங்கள்...




2) தலையைக் குனியும் தாமரையே




3) சின்னக் கண்ணன் அழைக்கிறான்




4) அழகான ராட்சசியே



5) சுடும் நிலவு சுடாத சூரியன்




6) ஸ்ரீ நீலோத்பல நாயகி...


                    

புதன், 30 ஜனவரி, 2013

வாசகர்களுக்கு மூன்று கேள்விகள் 1 2013


பத்திரிகைகளுக்கு நாம் கேள்விகள் அனுப்பினால், அது பிரசுரமானால், அந்தக் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்வார்கள். 
   
இங்கு ஒரு மாறுதல்.
   

எங்கள் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லுங்களேன்...  


==================================================================== 
    


1) குற்றங்கள் அதிகம் செய்வது படித்த மக்களா, படிக்காத மக்களா?
 
2) இலக்கியங்கள் எனப்படுவது சமூகத்தையோ, கலாச்சாரத்தையோ மாற்றும் என்று நம்புகிறீர்களா?



           
3) உங்கள் வாழ்வில் உங்களை மிக அதிகம் பாதித்த மரணம் எது? 



      


            


                       

திங்கள், 28 ஜனவரி, 2013

உள் பெட்டியிலிருந்து 012013

                   
** ஒரு பொய் சொல்லி ஒரு நட்பை இழப்பது எளிது. அந்த நட்பை மீண்டும் பெற 1000 உண்மைகள் கூட உதவுவதில்லை.    
===========================================

                                                

** "நானழகா நிலவழகா" காதலி கேட்டாள்.
           
"தெரியாது... ஆனால் உனைப் பார்க்கும்போது நிலவின் நினைவு வருவதில்லை. நிலவைப் பார்க்கும்போது உன் நினைவு வருகிறது"    

============================================
 
** கண்களால் காணும்போதும் புரியவில்லை!
கைகளால் எடுத்தும் தெரியவில்லை!!
யோசித்தாலும் விளங்கவில்லை!!!
இது என்ன என்ன? அன்பா, நட்பா காதலா?
அடப் போங்கப்பா... பரீட்சை வினாத்தாள்!
                                                    
============================================
 
** மனித மனங்கள் வினோதம்தான். அவர்கள் அறிவைப் பற்றி கர்வம் இருக்கும் அளவு அவர்களின் கர்வம் பற்றிய அறிவு இல்லை!   
=============================================

வெற்றியை நோக்கி..

                                                    

                                                    முடிவே தெரியாத
                                                    பாதையில்
                                                    பயணிக்கிறேன்...
                                                    முடிவில் நீ இருப்பாய்
                                                    என்று நம்பி!

                                                        
==============================================

உங்களுடன் இருப்பதில் எல்லோரும் மகிழ்கிறார்கள் என்றால் சமாதானமாகச் சென்று விட்டுக் கொடுப்பதில் நீங்கள் மன்னன் என்று பொருள்!     
===============================================

உங்களை எல்லோரும் நேசிப்பதன் காரணம் புரிந்து கொள்ள முடியாதவர்களால் மட்டுமே உங்களை வெறுக்க முடியும்!    
================================================
 
"சோக்காக்கும்....."                                  
1) மனைவி : "எங்க.. கிச்சன்ல சத்தம் கேக்குது... திருடன் வந்து நான் செஞ்ச பிரியாணியைச் சாப்பிடறான் போல இருக்குங்க..."

கணவன் : "இப்ப நான் யாரக் கூப்பிடணும்? ஆம்புலன்ஸா, போலீசா?"
     
==========================================

                                                                   

2) "மின்வாரியத்துக்குத் தொலைபேசி 'கரண்ட் எப்ப வரும் நைனா' ன்னு கேட்டா 'உன் செல்லுல இன்னுமா சார்ஜ் இருக்கு'ன்னு கேக்கறாம்பா...."    
=======================================

                                                                        

3) ஒரு பெண் தொலைபேசியில் : "சார்... என் குழந்தைகளில் ஒருவனுக்கு நீங்கள் தந்தை என்பதால் நான் உங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்..."

இவன் : "ஓ மை காட்! ராணியா?"  


அவள் : "இல்லை"


இவன் : "சோனியா?"


அவள் : "இல்லை"


இவன் : "நித்யா?"


அவள் (குழம்பிப் போய்): "இல்லை... சார்.. நான் உங்கள் பையனின் வகுப்பு ஆசிரியை"
     
================================================

ஹிஹி...
                                                        
                                                                  
தாயுடன் நிற்கும் எட்டு வயதுக் குழந்தையிடம் வலிக்குமளவு மட்டையில் அடிவாங்கிக் கண்கள் கலங்கினாலும், வேறு ஒன்றும் செய்ய முடியாமல் அந்தக் குழந்தையின் கன்னத்தைத் தட்டி, "சுட்டிக் குழந்தை" என்று சொன்ன கோப கனத்தை அனுபவித்திருக்கிறீர்களா?     
================================================

தத்துப்பித்துவம்

கடந்தகாலத் தவறைச் சரிசெய்ய முயல்வதை விட அந்த அனுபவத்தில் எதிர்காலத்தைக் கணிக்க முயல்வது மேல்.   
=================================================

டெண்டுல்கர் சொன்னா சரியாத்தான் இருக்கும்...

                                                          

"நல்ல முடிவுகள் அனுபவங்களிலிருந்துதான் வருகின்றன... ஆனால் அனுபவங்கள் என்னவோ தவறான முடிவுகளிலிருந்துதான் வருகின்றன"     
================================================

உண்மைதான் இல்ல...?


நாம் எப்போது தேவைப்படுகிறோமோ அப்போதுதான் நினைவுகூரப் படுகிறோம்...
    
==================================================

"உட்கார்றா முண்டம்..."


                                                             
                                                       

வாத்தியார் : "பசங்களா... நீங்க நல்லாப் படிச்சு நம்ம நாட்டுக்கு நல்ல பேரு வாங்கித் தரணும்.."

மாணவன் : "ஏன் சார்... இந்தியாங்கற பேரே நல்லாத்தான இருக்கு...?"
    
==================================================

"ஆர்வம் தாங்கலீங்க..."


ஆற்றின் நடுவே ஒரு அறிவிப்புப் பலகை இருப்பதைக் கண்ட அவன், இங்கிருந்தே அதைப் படிக்க முடியாததால், ஆற்றில் குதித்து நீந்தி அதன் அருகே சென்று படித்தான்..


"தயவு செய்து உள்ளே குதிக்காதீர்கள். முதலைகள் ஜாக்கிரதை"
    
==================================================

நல்ல மருத்துவர்


"மனிதனுக்கு நல்ல மருந்து அன்பும் அரவணைப்பும்தான்..."


"அதில் சரியாகவில்லையென்றால்...?"


மருத்துவர் புன்னகைக்கிறார். "அளவை அதிகப் படுத்துங்கள்"
    
==================================================

இனிய காலை வணக்கம்
 

                                                                
இயற்கை எவ்வளவு இனிமையாக இன்னொரு நாளை உங்களுக்குக் கொடுத்திருக்கிறது... உங்களுக்குத் தேவை என்பதால் மட்டுமல்ல, உங்கள் தேவையை நாடும் ஒருவருக்காகக் கூட இருக்கலாம்...   

                            

சனி, 26 ஜனவரி, 2013

செய்திகள் ஒரு பார்வை. குடியரசு தின வாழ்த்துகள்.

              
இந்த வார பாசிட்டிவ் நியூஸ் இல்லை! இல்லை என்றில்லை, எல்லோருக்கும் தெரிந்த பிரேமா C A முதல் வகுப்புத் தேர்ச்சியும், பாண்டிசேரியையைச் சேர்ந்த ஹமீத் மரைக்காயர் தண்ணீரை எரிபொருளாக உபயோகித்து, சமையல் உபயோகத்துக்கும் வண்டியோட்டவும் உபயோகப் படுத்த முயற்சித்திருக்கிறார் என்றும் இரண்டே நியூஸ். நிறைய இல்லையா, எங்கள் கண்ணில்தான் படவில்லையா தெரியவில்லை.      

                                    

திருக்கடையூர் யானை அபிராமி நேற்று அதிகாலை உடல்நலக் குறைவால் இறந்த செய்தி மனதுக்கு வருத்தத்தைத் தந்துள்ளது. 26 வயதாம். யானைகள் புத்துணர்வு முகாமுக்குச் சென்று வந்த அலைச்சல் ஒத்துக் கொள்ளவில்லை என்று தெரிகிறது. புத்துணர்வு முகாம் சென்ற இன்னும் இரண்டு யானைகள் கூட இறந்து போனதாகப் படித்த ஞாபகம். இன்னொரு யானைக்குத் திடீரென கண் தெரியாமல் போனது இன்னொரு வருத்தம். புத்துணர்வு முகாமில் ஏதாவது தவறா, புத்துணர்வு முகாமே தவறா என்று பார்க்க வேண்டிய நேரம். சமீபத்தில் அபிராமியை அருகிலேயே அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது.

மும்பையில் சி ஏ வென்ற பிரேமாவுக்கு ஒரு கட்சி 1 லட்சமும், போட்டியோ இல்லை தானாகவோ அரசு 10 லட்சமும் கொடுத்துள்ளது பாராட்டத் தக்கது.

குடியரசு தின உரையில் குடியரசுத் தலைவர் பாகிஸ்தானிடம் இனியும் பொறுமை காட்ட முடியாது  என்ற ரீதியில் - "நட்பைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்"  - சொல்லியிருக்கிறார். நல்லவேளை, பாகிஸ்தானின் அத்துமீறல் ஜனவரி 26 க்கு அப்புறம் நடந்திருந்தால், இந்த எச்சரிக்கை விட ஆகஸ்ட் 15 வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.

         
ஸ்ரீதேவிக்கும், பாடகி எஸ். ஜானகிக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப் பட்டிருந்தாலும் ஜானகியம்மா விருதைப் புறக்கணிப்பதாக தற்போது வந்த செய்திகள் சொல்கின்றன.

வர்மா கமிஷன் பரிந்துரைகளை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாது என்று அரசாங்கமும், அப்படியே ஏற்க வேண்டும் தமிழகத் தலைவர் ஒருவரும் சொல்லியிருப்பது செய்திகளில்..


டீசல் விலையைக் கூட எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் வழக்குத் தொடுக்கப் போவதாகச் சொல்லியிருக்கிறது தமிழக அரசு.


மக்களாட்சி தினம் இன்று...


* காதலிக்க மறுக்கும் பெண் மீது அமிலம் வீசாதிருப்போம்.

 
* டாஸ்மாக் 3 நாள் லீவு என்றால் வீட்டில் வாங்கிப் பதுக்காமலிருப்போம்.
 
* குழந்தைப் பருவத்திலிருந்தே பெண்களை மதிக்கவும் நல்ல பழக்கங்களையும், ஊழலற்ற சமுதாயம் அமைக்கவும் சொல்லிக் கொடுப்போம்.
 
* லஞ்சம் வாங்காதிருப்போம் / கொடுக்காதிருப்போம்.
 
* தினம் ஒரு நல்ல காரியமாவது செய்வோம் என்று உறுதி எடுத்துக் கொள்வோம்.........
   
குடியரசு தின வாழ்த்துகள்.  
                       

வியாழன், 24 ஜனவரி, 2013

அலேக் அனுபவங்கள்16:: ஆண்டொன்று போனால் .... !

             
அசோக் லேலண்டில் நவம்பர் மாதம் வந்ததுமே தொழிலகத்தில் குறிப்பாக எங்கள் இன்ஜினியரிங் பகுதியில் ஓர் எதிர்பார்ப்பு கலந்த, ஆர்வத்துடன் கூடிய, சிறிய பரபரப்பு பற்றிக் கொள்ளும். 
                     
நிர்வாகத்தினர், அடுத்த ஆண்டுக்கான பன்னிரண்டு நாட்கள் பண்டிகை விடுமுறை நாட்கள் என்னென்ன என்று ஒரு வரைவு சுற்றறிக்கை அனுப்புவார்கள். எல்லா பகுதி அறிவிப்புப் பலகையிலும் அந்த அறிவிப்புத் தாள் ஒட்டப்படும். 
              
தொண்ணூற்றொன்பது சதவிகிதம் அதுவே இறுதி அறிவிப்பாகவும் உறுதி செய்யப்படும். எனக்குத் தெரிந்து, ஒரே ஒரு வருடம் மட்டும் அந்த விடுமுறை நாள் பட்டியலில்  இறுதி வடிவம் வரும் பொழுது, ஒரு சிறிய மாற்றம் செய்யப்பட்டது. ஆந்திர மாநில எல்லைக்கருகே அமைந்திருக்கும் தொழிலகம் என்பதால், எண்ணூரில் (என்னைப் போன்ற) மனவாடுகள் அதிகம். அந்த குறிப்பிட்ட வருடத்தில் தமிழ் வருடப் பிறப்பு தினம் ஒரு திங்கட்கிழமையில் (எண்ணூர் அசோக் லேலண்டுக்கு வாராந்திர விடுமுறை தினம்) வந்ததால், பன்னிரண்டு விடுமுறை நாட்களில் அதை ஒன்றாக சேர்க்காமல், தெலுங்கு வருடப் பிறப்பு தினத்தை அந்த ஆண்டில் விடுமுறை நாளாக அறிவிக்கும்படி ம வா எல்லோரும் சேர்ந்து கேட்டு, வெற்றியும் பெற்றார்கள்.
                
இதில் வேறொரு சூட்சுமமும் இருக்கின்றது. விடுமுறை நாட்களை யூனியன் தோழர்கள் தேர்ந்தெடுக்கும் பொழுது, இயன்றவரையிலும் சனி அல்லது செவ்வாய்க்கிழமை வருமாறு பார்த்துக் கொள்வார்கள். அந்தக் காலத்தில் ஞாயிறு வேலை நாளுக்கு விடுமுறை விண்ணப்பிக்க வேண்டியது இல்லை. ஞாயிறு வேலைக்கு வரவில்லை என்றால், சம்பளத்தில் உபரியாக வருகின்ற ஞாயிற்றுக் கிழமை சம்பளம் (sixth day salary) வெட்டப்படும். மாதத்தில் நான்கு அல்லது ஐந்து ஞாயிறு வந்தால், அதற்குரிய உபரி சம்பளம் கிடைக்கும். 
            
சனி அல்லது செவ்வாய்க்கிழமை பண்டிகை விடுமுறையாக அமைந்தால், விடுமுறைக்கு சொந்த ஊர் சென்று திரும்பும் தொழிலாளர்களுக்கு மிகவும் சந்தோஷமாகிவிடும். மூன்று நாட்கள் தொடர்ந்து விடுமுறை கிடைக்கின்றதே! 
                
விடுமுறை அறிவிப்பு வந்தவுடனேயே எங்கள் பகுதியில் வேலை பார்க்கும் இரண்டு டிரேசர்கள் மும்முரமாக, ஒரு A4 டிரேசிங் பேப்பரில் அடுத்த ஆண்டுக்கான காலண்டர் தயாரிப்பார்கள். (நோ நோ இந்தக் காலண்டரில் கவர்ச்சிப் படங்கள் எதுவும் கிடையாது). சற்றேறக் குறைய, அந்தக் காலண்டரின் அமைப்பு, இந்தப் படத்தில் காணப்படுவது போல இருக்கும். 

டிரேசிங் பேப்பரில் வரையப்பட்ட காலண்டர் என்பதால், இதை வைத்து நிறைய அம்மோனியா பிரிண்ட் எடுக்கலாம். எடுப்போம். எங்கள் நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள் என்று ஆளுக்கொன்று தருவதற்காக, ஆயிரக் கணக்கில் பிரிண்டுகள் தயாரான வருடங்களும் உண்டு. 
              
என்னுடைய அசோக் லேலண்ட் சர்வீஸ் நாட்கள், வாரங்கள், மாதங்கள், வருடங்கள் எல்லாமே ஒரு கோப்பாக வைத்திருந்தேன். 1974 தொடங்கி, 2006  வரை ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு தாள். என்னுடைய காலண்டர் தாளில், ஒவ்வொரு நாளும் அலுவலகத்திற்கு நான் எத்தனை மணிக்கு வந்து, எத்தனை மணி வரை இருந்தேன், லீவு என்றால் என்ன லீவு, ஏன் லீவு, வாங்கிய சம்பளம் என்ன, இன்செண்டிவ் என்ன, போனஸ் என்ன போன்ற எல்லா விவரங்களும் எழுதி வைத்திருந்தேன். 
                
ஏ எம் ஐ ஈ பரிட்சை எழுதிய வருடங்களில், (1977 ~ 1983) summer / winter exams வருகின்ற நாட்களில், பரிட்சைக்குப் படிக்கவும், எழுதவும் ஒவ்வொரு சீசனிலும் இரண்டிரண்டு வாரங்கள் லீவு போட்டுப் படித்து பரிட்சை எழுதுவேன். 
               
நான்கு பரிட்சை எழுதி இரண்டு அல்லது மூன்று சப்ஜெக்டுகளில் பாஸ் செய்வேன். சில சமயங்களில் வாஷ் அவுட்டும் ஆனது உண்டு. அது தனிக் கதை! காலண்டரை வைத்துக் கொண்டு திட்டம் போட்டு லீவு விண்ணப்பம் அளித்து, படித்து, எழுதுவேன். 
                  
ஏ எம் ஐ ஈ பாஸ் செய்த பிறகு, ஒவ்வொரு வருடமும் கடைசி மாதத்தின் கடைசி இரண்டு வாரங்களோ அல்லது கடைசி பத்து நாட்களோ லீவு போட்டு விட்டு, எல்லா நாட்களையும், மியுசிக் அகடெமி, மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ், பாரதீய வித்யா பவன், தமிழ் இசை சங்கம், இன்னும் மயிலாப்பூர், மாம்பலம் பகுதிகளில் கச்சேரி நடக்கும் இடங்களாக  சுற்றுவேன். வாழ்க்கையின் மகிழ்ச்சியான மார்கழி மாதங்கள்! 
                     

புதன், 23 ஜனவரி, 2013

புத்தகச் சந்தை 2



இந்தமுறை காம்பவுண்டு உள்ளே நுழைந்து ஸ்டால்களைப் பார்க்க நடக்க வேண்டிய தூரம் பெரிய மைனஸ்.
                               
புத்தகச் சந்தையில் இந்த முறை உள்ளே நுழையும்போதே விகடன்காரர்கள் எந்த பதிப்பகம், எத்தனாம் நம்பர் ஸ்டால் என்று புக்லெட் போட்டிருந்ததைக் கையில் கொடுத்தார்கள். வசதிதான்.... ஆனாலும் அதைப் புரட்டிப் பார்க்கவில்லை. வரிசையாக பார்த்துக் கொண்டே முதலிரண்டு ரவுண்டு!

முத்து காமிக்ஸ் அரங்கில் நான் தேடிய தலைப்புக்கள் கிடைக்கவில்லை. கிடைத்ததை வாங்கிச் சிறுவனானேன். 35 காசுக்கும் 50 பைசாவுக்கும் வாங்கிய புத்தகங்கள் 100 ரூபாய்.  நான்கைந்து புத்தகங்களை ஒரு கவரில் போட்டு 210 ரூபாய், 400 ரூபாய் என்று போட்டிருந்தார்கள். அதில் நான் கேட்கும் புத்தகங்கள் இருக்குமா என்று கேட்டபோது 'அதிருஷ்டம் இருந்தால் கிடைக்கும்' என்றார் அரங்க உரிமையாளர். தனியாகத் தர மாட்டாராம். தனியாக இருந்த புத்தகம் ஒன்றைத்தான் வாங்க முடிந்தது. அதுவும் லயன் காமிக்ஸ்!



                                                      

 

அவர்கள் விற்க விரும்பும் புத்தகங்கள் உங்கள் கண்ணில்படும் வகையில் முன்னால் வைத்திருந்தார்கள். நீங்கள் தேடும் புத்தகம் பின்னா....ல் எங்கோ, அல்லது அடி வரிசையில் இருக்கும். தே....ட வேண்டும்! அரங்க உரிமையாளரிடம் கேட்டால் சில சமயம் கிடைக்கலாம் - பதில்.

ராஜ் டிவிக்காரர்கள் ஸ்டால் இருந்தது. இந்த வருடம்தான் முதல் முறையா என்று கேட்டதற்கு ராஜ் சகோதரர்களில் ஒருவர் 'இரண்டாம் முறை, சென்ற வருடமே போட்டிருந்தோம்' என்றார்.  நான் தேடிய, கேட்ட சிடிக்கள் இல்லையென்றார்.
    
பதினோரு ரூபாய்க்கும், பத்தொன்பது ரூபாய்க்கும் புத்தகங்கள் வாங்க முடிந்த இடம் மதுரை மீனாக்ஷி புத்தக நிலையம். குறிப்பாக சுஜாதா புத்தகங்கள். என்ன, அடுத்த புத்தகச் சந்தைக்குள் அதிலிருக்கும் எழுத்துகள் மறைந்து விடுமோ என்று கொஞ்சம் சந்தேகம் வரும்!


அருகில் புத்தகம் புரட்டியவர்கள் எல்லோரும் முதலில் பார்ப்பது விலையைத்தான். அவர்கள் வாங்க என்று திட்டமிட்டு வரும் புத்தகங்கள் தவிர மற்றவற்றை இப்படித்தான் பார்க்கிறார்கள்.


கேப்டன் டிவியில் ஒரு பெண் புத்தகக் கண்காட்சி பற்றிப் பேசினார். "புத்தகங்கல் வாங்கிக் கொல்ல எல்லோருக்கும் ஆர்வம்தான் ஆன்கல் பென்கல் எல்லோருமே நிறையப் பேர் வந்தார்கல். வனிக எழுத்தாளர் சுஜாதா புத்தகங்கலும் நிறைய விற்றன.....கன்னதாசனின் வனவாசம் நிறைய போகிறது.."  


கடவுலே! இவர்கலைக் மண்ணித்துக் காப்பார்று! 

அவர் இப்போதே கணக்குச் சொல்லி விட்டார். பொன்னியின் செல்வன்தான் அதிக விற்பனை. அப்புறம் காந்தியின் சுயசரிதை. தற்கால இலக்கிய ஜாம்பவான்கள் ஜெயமோகனும், எஸ்ராவும்....

மூன்றாம் சுழி அப்பாதுரையை புத்தகக் கண்காட்சியில் பார்க்க முடிந்தது. அவர் என்னென்ன புத்தகங்கள் தெரிவு செய்துள்ளார் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் வந்தது. கேட்டுத் தெரிந்து கொண்டேன்.

               
ரிசர்வ் பேங்க் வைத்திருந்த கவுண்டரில் அவ்வப்போது பதிப்பாளர்கள் வரிசையில் நின்று சில்லறை மாற்றிக் கொண்டார்கள். சத்யம் டிவி, புதிய தலைமுறை டிவிக்கள் ஸ்டால் அமைத்திருந்தார்கள். அகில இந்திய வானொலிக் காரர்கள் வழக்கம் போல பழைய கர்னாடக சங்கீதப் பாடல்களை 4 பாடல்கள், 5 பாடல்கள் முன்னூறு, முநூற்றைம்பது என்று விற்றுக் கொண்டிருந்தார்கள்.
           
"ஏதாவது முன்னால தமிழ் 'ஆத்தர்'ஸ் படிச்ச ஞாபகம் இருக்கா... பெயர் தெரிஞ்சாக் கூட விசாரிச்சு நாமளும் கொஞ்சம் பர்சேஸ் பண்ணலாம்.." ஒரு இளம் கணவர் மனைவியிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
இனிமேல் பெயர் ஞாபகம் வந்து....
             
"கம்பராமாயணம் விளக்க உரை வாங்கணும்... எளிமையாப் புரிகிற மாதிரி, அதே சமயம் விலை குறைச்சலா வாங்கணும்னா எது வாங்கலாம்..." ஒருவர் என்னிடம் வந்து கேட்டார்.
           
" இதை நான் எப்படிச் சொல்ல முடியும்?  எனக்கு நன்றாக இருப்பது உங்களுக்கு பிடிக்காததாக இருக்கலாம். எடுத்துப் புரட்டிப் படித்து முடிவு செய்யுங்கள்" என்றேன்.


                                          

மூன்று பாகம் நான்கு பாகம் என்று இருக்கும் புத்தகங்களை சென்ற வருடம் வரை ஒவ்வொரு பாகமாக வாங்க முடிந்தது. ஏற்கெனவே இரண்டு பாகம் வாங்கி விட்ட ஒரு புத்தகத்தை மூன்றாம் பாகம் மட்டும் கொடுங்கள் என்று கேட்டபோது 'செட்'டாகத்தான் தருவோம்' என்று மறுத்து விட்டார். 'சரி, போ' என்று விட்டு விட்டோம்.

 நிறைய ஸ்டால்களை மக்கள் பக்கவாட்டில் முறைத்தபடியே தாண்டிச் சென்றார்கள். கிழக்குப் பதிப்பகம், அல்லையன்ஸ், விகடன், டிஸ்கவரி, என்று இதைப் படிக்கும் நீங்களும் எதிர்பார்க்கும் பெயருள்ள ஸ்டால்களில்தான் கூட்டம். திருக்குடந்தைப் பதிப்பகம் (முக்தா ஸ்ரீனிவாசன்) போன்ற இன்னும் சில ஸ்டால்களில் மிகக் குறைந்த புத்தகங்களுடன் இருந்ததை என்ன பார்ப்பது என்று மக்கள் தாண்டிச் சென்றதையும் பார்க்க முடிந்தது.

                                                

 

குறைந்த புத்தகங்கள் என்றில்லை, நிறையப் புத்தகங்கள் இருந்த பல ஸ்டால்களின் கதையும் அதே, அதே!

உள்ளே நுழையும்போது எதிரில் வந்து கொண்டிருந்த சிலரின் கையில் ஒரே ஒரு புத்தகம் மட்டும் பார்த்த போது 'எப்படி இவர்களால் கைகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடிந்தது?' என்று பொறாமையாக இருந்தது.

தினமணியில் ஒரே பெயரில் ஒரு புத்தகத்தை வெவ்வேறு பதிப்பகங்களில் போட்டு விற்பனை செய்வது சரியா என்று கேட்டிருந்தார் எடிட்டர்.
  புத்தகங்களின் விலை....  விடுங்கள். வாங்கிவிட்டு அப்புறம் குறை சொல்லக் கூடாது.  :)))

                                            
 
வாசலில் பழைய புத்தகங்கள் விற்கும் கடைகளைப் பார்க்க முடியாமல் போனது வருத்தம். அவர்கள் மூன்றாவது நாள் முதல்தான் கண்களில் பட்டார்கள். அவர்களுக்கு ஒதுக்கப் பட்டிருந்த இடம் சரியில்லை, இந்த வருடம் நஷ்டம்தான் என்று சொன்னதாகக் கல்கியில் போட்டிருந்தார்கள்.

இந்தியாவில், ஏன் அயல்நாடுகளிலிருந்தும் எந்தப் புத்தகத்தை வேண்டுமானாலும் தொலைபேசியிலேயே ஆர்டர் கொடுத்து வீட்டு வாசலில் பெற்றுக் கொள்ள ஒரு நம்பர் கொடுத்திருக்கிறார்கள். டயல் ஃபார் புக்ஸ் : 9445901234, 94459 79797 என்ற எண்களில் நம் முகவரி, நமக்குத் தேவையான புத்தகங்களை  நம் குரலிலேயே பதிவு செய்து விடலாம் என்ற வசதி வந்துள்ளது. பெயர் மட்டும் தெரிந்தால் கூட விசாரித்துத் தெரிந்து கொள்ளலாமாம்.

புத்தகம் வாங்க வந்தவர்களை விட அரட்டை அடிக்க வந்தவர்கள் அதிகம் என்று ஏதோ ஒரு தொலைக் காட்சியில் சொன்னார்கள்.


                                                

 

ஆக, நிறைவுற்றது இந்த வருடப் புத்தகத் திருவிழா!

செவ்வாய், 22 ஜனவரி, 2013

சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா.. இன்னும் இருக்கா?"

             
சங்கீதக் கச்சேரிகளில் இந்தமுறை நிறையப் பாடப்பட்ட ராகம் ஹம்சானந்தியாக இருக்கும் என்று தோன்றியது. அடுத்தது பெஹாக். அப்புறம் கேதாரகௌளை.
                                                

கச்சேரிக்குச் சென்று எப்படி / ஏன் பாட்டுக் கேட்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். பாட்டை ரசிக்கும் ஒரு குழுவினருடன் இணைந்து ரசிக்க முடிகிறது. வேறு தொல்லை இல்லை, பேச்சுகள் இல்லை, குறுக்கீடுகள் இல்லை, (அலைபேசியைக் கூட அனைத்து வைத்து விடுகிறோம்). அப்புறம் அந்த ஹாலின் கேட்க்கும் சூழல்.ஆனால் வீட்டில் கேட்கும்போது ஏகப் பட்ட குறுக்கீடுகள். வேறு சத்தங்கள். அத்தனை மனதுக்குப் பிடித்த பிரபலங்கள் பாடுவதை இலவசமாகவும், காசு கொடுத்தும் கேட்கலாம். போதுமா காரணங்கள்?! 
                                        

இரண்டரை மணிநேரக் கச்சேரியாக இருந்தால் ஏதாவதொரு ராக வர்ணத்துடன் தொடங்கப் படும் கச்சேரியில் ஆலாபனைக்கு ஒரு பாடல், ராகம் தானம் பல்லவி, விஸ்தாரமாக ஆலாபனை தனி ஆவர்த்தனம் என்று பாடுவதால் கன ராகம் ஒன்று, அப்புறம் சில துக்கடாக்கள்,  விருத்தம் என்று 7 முதல் 9 பாடல்கள் வரை பாடுவார்கள். மதியங்களில் சுருக்க நேரமாகத் தரப்படும் கச்சேரிகளில் இதே கிரமம் நான்கைந்து பாடல்களுடன் அமையும்.
                                         

பாடப்படும் எல்லாப் பாடல்களும் நன்றாக அமைந்து விட்டால் ராசிதான். நன்றாக அமைவது என்பது ரசிகர்களின் விருப்பத்தையும் ரசனையையும் பொறுத்ததுவும் கூட என்றாலும் சில ராகங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். ரஞ்சனி காயத்ரி (என்று நினைவு), பாடிய ஷண்முகப்ரியா (தந்தை தாய்) கண்ணில் நீரை வரவழைத்தது. ஒவ்வொரு கச்சேரியிலும் கச்சேரியில் நிச்சயம் ஒரு பாடல் மிகச் சிறந்ததாக அமைந்து கச்சேரி முடிந்த பிறகும் கூட மனதில் நிற்கும்.
           
                                 
 

பார்த்த, மன்னிக்கவும் கேட்ட கச்சேரிகளில் இந்த முறை (நாங்கள் கேட்டவரை) முதலிடம் பாம்பே ஜெயஸ்ரீ. அடுத்து சஞ்சய் சுப்பிரமணியம் அல்லது அபிஷேக் ரகுராம். (இரு மாறுபட்ட கருத்துகள்) மூன்றாமிடம் ரஞ்சனி காயத்ரி. பாம்பே ஜெயஸ்ரீ குரல் மனதுக்குள் ஊடுருவி என்னவோ செய்கிறது.

                                                           

ரித்விக் ராஜா, இன்னொருவர் பெயர் நினைவில்லை, அப்புறம் நிஷா ராஜகோபால் ஆகியோர் எதிர்பாராத இனிய ஆச்சர்யம். பொதுவாக ஒருநாள் கிரிக்கெட் மேட்ச் அன்றைய ஆட்டத்தைப் பொறுத்து அமைவது போல, கச்சேரிகள் பாடுவோர் தெரிவு செய்யும் ராகங்களிலும், அவர்களின் கல்பனாஸ்வரம் பாடும் திறமைகளிலும் இருக்கிறது என்று சொல்லாம்(மா?)

தெரிந்த, அல்லது பிரபல ராகங்களில் தெரிந்த பாடல்கள் காதில் விழுந்தால் என் போன்ற பாமரர்களுக்கு ஒரு சந்தோஷம். ஆனால் அது குறைவாகத்தான் கிடைத்தது. பெரிய பாடகர்கள் என்று அறியப் படுபவர்கள் புது ராகத்தில், அல்லது தெரிந்த ராகத்தில் புதிய கீர்த்தனைகளைப் பாடுவதுதான் பாண்டித்தியம் என்று நினைக்கிறார்கள். தமிழில் பாடல்கள் ரொம்பக் கேட்க முடியவில்லை.

              
சஞ்சய் சுப்பிரமணியம் இப்போது இருக்கும் பாடகர்களில் நிச்சயம் பெரிய உயரங்களைத் தொடும் திறமைசாலி. அபிஷேக் ரகுராம், சிக்கில் குருசரண், பரத் சுந்தர், பிரசன்னா வெங்கட்ராமன், சாகேதராமன், ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன், அப்புறம் அடுத்த தலைமுறைப் பாடகர்களில் நிஷா ராஜகோபால், ரித்விக் ராஜா, ஆகியோர்  நம்பிக்கை நட்சத்திரங்கள்.


                                                


சாகேதராமன் இந்த சீசனில் கேட்க விட்டுப் போனது. காயத்ரி வெங்கட்ராகவனும். இதுவரைக் கேட்காத, கேட்கவேண்டும் என்று நினைத்து விட்டுப் போனது திருச்சூர் சகோதரர்கள்.

சங்கீத வேட்டைகளுக்குப் பிறகு நேரத்தைப் பொறுத்து, நாடகத்தைப் பொறுத்து
தேர்ந்தெடுத்து 3 நாடகங்கள் பார்த்தோம். எஸ் வி சேகர், வொய் ஜி மகேந்திரா, கிரேசி மோகன் நாடகங்கள். 

          


எஸ் வி சேகர் நாடகம் (காதுல பூ) துணுக்குத் தோரணம். படிக்க, சிடியில் போட்டு ரசிக்க ஓகே. அங்கு உட்கார்ந்து ரசிக்க முடியவில்லை. ரிஹர்சலோ என்று சந்தேகப்படும் வண்ணம் பேசினார்.

"நீ பாட்டுக்கப் பேசிகிட்டு இருக்கே.. உன் மைக் வேலை செய்யலை... அவர் கிட்ட சொல்லு..." சவுண்ட் எஞ்சினியரைக் காட்டுகிறார்.

"ரிஹர்சல்லதான் குழப்புவே... இங்கயுமா"


"பல்செட்டை சரி செஞ்சுகிட்டு பேசுங்க... அப்பவே சொன்னேன் இல்ல... நீங்க பேசறது அவங்களுக்கு ஒண்ணுமே புரியலையாம்" ஆடியன்ஸைக் கை காட்டுகிறார்.

நாற்காலியில் அவர் அமர்ந்திருக்க யமதூதர்கள் வந்து பேச, யார் எப்போது பேசுவது என்ற வரிசைக் கிரமம் மறந்த மாதிரி மாற்றி மாற்றிப் பேசத் தொடங்கி, நிறுத்திக் குழப்பினார்கள்.

கிரேசி நாடகத்தில் (மாது +1) வழக்கமாக வரும் 'சீனு'வைக் காணோம். ஆரம்பித்தது லேட். மாது, மோகன் தவிர வேறு யாரையும் தெரியவில்லை. ஒத்துக் கொண்ட நாடகம் போட வேண்டுமே என்று போட்டது போல சட்டென்று முடித்தார்கள்.


வொய் ஜி மகேந்திரா நாடகம் (இது நியாயமா சார்) அரங்க அமைப்பிலும் சரி, கதையிலும் சரி, ஒன்றிப் பார்க்க முடிந்தது.

தவறான தீர்ப்பால் வாழ்க்கையைத் தொலைத்த ஆயுள் தண்டனைக் கைதி தப்பி வந்து ஜட்ஜ் வீட்டில் புகுந்து நியாயம் கேட்கும் கதை. கொஞ்சம் 'நாணல்' பட வாடை, லேசாக 'மேஜர் சந்த்ரகாந்த்' வாசனை கூட. ஆனாலும் வெங்கட் ரசிக்கும்படி கதை எழுதி இருந்தார். வொய் ஜி மகேந்திரா தவிர வேறு யாரையும் தெரியாது என்றாலும் ரசிக்க முடிந்தது. அவர் மகளும் நடித்திருந்தார்.


                                                 


ஆர் எஸ் மனோகர் நாடகங்கள் பார்க்கவில்லையே என்ற ஏக்கம் மனதில் வந்தது.  நீண்ட நாட்களுக்குப் பின் நாடகங்கள் பார்த்தது புதிய அனுபவம்.

சனி, 19 ஜனவரி, 2013

பாசிட்டிவ் செய்திகள் 13/1/2013 முதல் 19/1/2013 வரை.

                 
எங்கள் B+ செய்திகள்.        

- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.

- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்....          
=======================================================================

           
1) மைக்ரோஃசாப்ட் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுநர் தேர்வில் 9 வயதே ஆன தமிழகத்தைச் சேர்ந்த பிரணவ் கல்யாண் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறார்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஏ.எஸ்.பி. டாட். நெட் பிரிவில் (ASP .NET), அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுநருக்கான தேர்வை கடந்த 12-ந் தேதி நடத்தியிருந்தது. கம்ப்யூட்டர் பட்டதாரிகள்தான் பொதுவாக இத் தேர்வை எழுதுவது வழக்கம். ஆனால் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 4 ம் வகுப்புப் படிக்கக் கூடிய 9 வயதே ஆன பிரணவ் கல்யாணும் தேர்வு எழுத அனுமதி கிடைத்தது. இத்தேர்வு எழுதியதுடன் மட்டுமின்றி சிறுவன் பிரணவ் வெற்றியும் பெற்று சாதனை படைத்துள்ளார்.                       
                                    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஏ.எஸ்.பி.டாட் நெட் தேர்வு: 9 வயது தமிழக சிறுவன் சாதனை

மைக்ரோஃசாப்ட் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுநர் தேர்வில் 9 வயதே ஆன தமிழகத்தைச் சேர்ந்த பிரணவ் கல்யாண் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறார். 

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஏ.எஸ்.பி. டாட். நெட் பிரிவில் (ASP .NET), அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுநருக்கான தேர்வை கடந்த 12-ந் தேதி நடத்தியிருந்தது. கம்ப்யூட்டர் பட்டதாரிகள்தான் பொதுவாக இத் தேர்வை எழுதுவது வழக்கம். ஆனால் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 4 ம் வகுப்புப் படிக்கக் கூடிய 9 வயதே ஆன பிரணவ் கல்யாணும் தேர்வு எழுத அனுமதி கிடைத்தது. இத்தேர்வு எழுதியதுடன் மட்டுமின்றி சிறுவன் பிரணவ் வெற்றியும் பெற்று சாதனை படைத்துள்ளார். 

சாதனை நாயகனான பிரணவ்-ன் தந்தை கல்யாண், தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுக்குப் புகழ்பெற்ற பாலமேட்டைச் சேர்ந்தவர். கலிபோர்னியாவில் அமெரிக்க வங்கியில் பணியாற்றி வருகிறார். பிரணவ்வின் தாயார் விசாலாட்சியும் அமெரிக்க வங்கியில் நிதி ஆய்வாளராக பணியாற்றுகிறார். 

பிரணவ்வின் இந்த சாதனைக்கு அவரது குடும்ப நண்பர்களான மணிவண்ணன், நதியா, சதீஷ் உள்ளிட்டோர்தான் உந்துசக்தியாக இருந்துள்ளனர் என்று பெருமைப்படுகின்றனர் அவரது பெற்றோர்.
சாதனை நாயகனான பிரணவ்-ன் தந்தை கல்யாண், தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுக்குப் புகழ்பெற்ற பாலமேட்டைச் சேர்ந்தவர். கலிபோர்னியாவில் அமெரிக்க வங்கியில் பணியாற்றி வருகிறார். பிரணவ்வின் தாயார் விசாலாட்சியும் அமெரிக்க வங்கியில் நிதி ஆய்வாளராக பணியாற்றுகிறார். 

பிரணவ்வின் இந்த சாதனைக்கு அவரது குடும்ப நண்பர்களான மணிவண்ணன், நதியா, சதீஷ் உள்ளிட்டோர்தான் உந்துசக்தியாக இருந்துள்ளனர் என்று பெருமைப்படுகின்றனர் அவரது பெற்றோர்.   (முகநூலிலிருந்து)    
2) தமிழக அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்த தயங்கும் நிலையில், மதுவை முற்றிலும் ஒதுக்கி முன் மாதிரியாக திகழ்கின்றனர் மதுரை சரந்தாங்கி கிராம மக்கள்.

இக்கிராமத்தில் 1,400 பேர் வசிக்கின்றனர். இம்மக்கள் ஒழுக்கம், கட்டுப்பாடு, நேர்மை தவறாமைக்கு எடுத்துக் காட்டாக விளங்குகின்றனர். ஆண்கள் மது அருந்துவது கிடையாது. இங்கு "டாஸ்மாக்' கடையை திறக்க சிலர் முயன்றனர். கிராம மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பால் முடியவில்லை.                                     
                               "குடி'க்கு சாவு மணி அடித்த "மது விலக்கு கிராமம்': மதுரையில் நடக்குது அதிசயம்

தமிழக அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்த தயங்கும் நிலையில், மதுவை முற்றிலும் ஒதுக்கி முன் மாதிரியாக திகழ்கின்றனர் மதுரை சரந்தாங்கி கிராம மக்கள்.

இக்கிராமத்தில் 1,400 பேர் வசிக்கின்றனர். இம்மக்கள் ஒழுக்கம், கட்டுப்பாடு, நேர்மை தவறாமைக்கு எடுத்துக் காட்டாக விளங்குகின்றனர். ஆண்கள் மது அருந்துவது கிடையாது. இங்கு "டாஸ்மாக்' கடையை திறக்க சிலர் முயன்றனர். கிராம மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பால் முடியவில்லை.

சரந்தாங்கி கிராம தலைவர் ஜெயக்கொடி: 

ஊர்கட்டுப்பாட்டை நாங்கள் மீறியது கிடையாது. கட்சி பாகுபாடின்றி ஒற்றுமையுடன் ஊர்க்காரியங்களை செய்கிறோம். கிராமத்தில் யாராவது இறந்தால், கிராம நிதியில் இருந்து 500 ரூபாய் வழங்கப்படுகிறது. ஏழை, பணக்காரர் என வித்தியாசம் இங்கில்லை. பூரண மதுவிலக்கு இங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டை மீறி மது அருந்தி ஊருக்குள் வரக்கூடாது. இங்குள்ள தோட்டங்களுக்கு வேலி கிடையாது. திருடாமை, பொய்கூறாமை எங்களது கொள்கை.

மூக்கம்மாள், சரந்தாங்கி: 

மது விலக்கு கொள்கை அமலில் இருப்பதால், என் கணவருக்கு குடி பழக்கம் இல்லை. இக்கொள்கை இங்கு பின்பற்றப்படாமல் இருந்திருந்தால் பலர் குடி பழக்கத்திற்கு ஆளாகி குடும்பம் நடுத்தெருவுக்கு வந்திருக்கும். எங்கள் ஊரில் யாருக்கும் இப்பழக்கம் இல்லாதது நாங்கள் செய்த புண்ணியம். சரந்தாங்கி கிராமத்தை முன்மாதிரியாக கொண்டு, குடியை கெடுக்கும் மது எனும் கொடூரனுக்கு சாவு மணி அடிக்க பிற கிராமங்களும் முன்வர வேண்டும்.
 சரந்தாங்கி கிராம தலைவர் ஜெயக்கொடி: 
               
ஊர்கட்டுப்பாட்டை நாங்கள் மீறியது கிடையாது. கட்சி பாகுபாடின்றி ஒற்றுமையுடன் ஊர்க்காரியங்களை செய்கிறோம். கிராமத்தில் யாராவது இறந்தால், கிராம நிதியில் இருந்து 500 ரூபாய் வழங்கப்படுகிறது. ஏழை, பணக்காரர் என வித்தியாசம் இங்கில்லை. பூரண மதுவிலக்கு இங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டை மீறி மது அருந்தி ஊருக்குள் வரக்கூடாது. இங்குள்ள தோட்டங்களுக்கு வேலி கிடையாது. திருடாமை, பொய்கூறாமை எங்களது கொள்கை.
               
மூக்கம்மாள், சரந்தாங்கி: 
     
மது விலக்கு கொள்கை அமலில் இருப்பதால், என் கணவருக்கு குடி பழக்கம் இல்லை. இக்கொள்கை இங்கு பின்பற்றப்படாமல் இருந்திருந்தால் பலர் குடி பழக்கத்திற்கு ஆளாகி குடும்பம் நடுத்தெருவுக்கு வந்திருக்கும். எங்கள் ஊரில் யாருக்கும் இப்பழக்கம் இல்லாதது நாங்கள் செய்த புண்ணியம். சரந்தாங்கி கிராமத்தை முன்மாதிரியாக கொண்டு, குடியை கெடுக்கும் மது எனும் கொடூரனுக்கு சாவு மணி அடிக்க பிற கிராமங்களும் முன்வர வேண்டும்.  (முகநூலிலிருந்து).     
                                 

வியாழன், 17 ஜனவரி, 2013

நிதானமாய் நின்று பார்த்தால்...

                 
அப்பாடா ஒரு மாதிரியாக டில்லி "கேஸ்" சந்தடி அடங்கி இருக்கிறது.  இப்போது கொஞ்சம் நிதானமாக யோசிக்க முடியும்.
                 
"இம்மாதிரி குற்றங்களுக்கு மரண தண்டனை கொடுத்தால்தான் சரி. இல்லா விட்டால் இது நடந்து கொண்டு தான் இருக்கும்"  என்று பலமாக குரல் எழுப்பிய ஆயிரக்கணக்கானோர் மறு ஆலோசனை செய்கிற மாதிரி, இடைப்பட்ட நாட்களில் மேலும் இரண்டொரு குற்றங்கள் நடந்திருக்கின்றன. 'இவ்வளவு களேபரம் நடக்கும்போது, மீண்டும் இதைச் செய்தால் மரண தண்டனை நிச்சயம்' என்ற பயம் இல்லாமல் போனது ஏன் என்று யோசிப்பதில் பயனில்லை.  கடும் தண்டனை காரணமாக குற்றம் குறையாது என்ற ஞானோதயம் வரவேண்டும். 
     
சமுகம் என்பது பலதரப்பட்டோர் அடங்கியது.  அதில் எல்லா விதமான நல்லவரும் பொல்லாதவரும்  இருப்பர். குற்றங்களும் நடந்து கொண்டுதான் இருக்கும். அடிப்படை மனமாற்றம் என்பது கோடிக் கணக்கான பேருக்கு ஏககாலத்தில் வந்து விடாது.  ஓரிருவருக்குக் கூட வருவது அபூர்வம் என்பதே உண்மை.
     
"இப்படி அநியாயம் நடக்கிறதா?  அதோ அதை சரி செய், இதோ இதை சரி செய்" என்று புறத்தே கையைக் காட்டிக்கொண்டிராமல் அகத்தே சற்று ஆராய்ந்து பார்த்து மனம் திருந்த வேண்டும், ஆர்வம் காட்டுவோர்.  கொடும் குற்றம் தான் நடந்தது. சற்றும் மறுப்பதற்கில்லை.  ஆனால் கொடும் குற்றம் என்றால் இது மட்டும் தானா? அடுத்த வேளை  சோற்றுக்கு அல்லாடிக் கொண்டிருக்கும் ஏழை எளியவரிடம் ஏமாற்றி காசு பிடுங்குவது அதைப் போன்ற கொடுமை அல்லவா?  கொடு அதற்கும் மரண தண்டனை என்று ஆரம்பித்தால் சரி ஆகுமா?
      
அநியாயம் நடந்தால் ஆயிரம் பேர் கூடி நீதி வேண்டி போராடுவார்கள் என்பது நல்ல விஷயம் தான்.  ஆனால், அண்ணா ஹசாரே, கேஜ்ரிவால், பரபரப்பு செய்தி என்று மட்டும் கொண்டாடிக் கொண்டிராமல் தட்டிக் கேட்பது மக்கள் உரிமை என்று இருக்க வேண்டும். அதுவே நல்லது.  "சிறுமை கண்டு பொங்குவாய்"  என்றார் கவி.
                
சிறுமை கண்டு பொங்கியாயிற்று , நம் மக்கள். மீண்டும் பொங்க ஒரு சந்தர்ப்பம் ஏற்படாமல், சிறு மதியாளர்கள் மனம் திருந்தச் செய்யவேண்டும். சிறுமை, கயமை செய்கைகள் அடியோடு வேரறுக்கப் படவேண்டும். இதற்கு என்ன வழி என்று அரசாங்கங்களும், சட்டமியற்றுவோரும், பொது மக்களும் சேர்ந்து வழி காணவேண்டும். 
                      

புதன், 16 ஜனவரி, 2013

பெயரில் என்ன இருக்கிறது?


இதோ கடந்து விட்டது இன்னுமொரு திருநாள். பொங்கலானால் என்ன, தீபாவளியானால் என்ன? பெயரில் என்ன இருக்கிறது? 

                
தீபாவளி நினைவுகளில் பழைய நினைவுகளின் சுகம் இப்போது இல்லை. அதைச் சொன்னால் இப்போது இருப்பவர்களுக்குப் புரியவும் இல்லை. முன் காலத்தில் கூடி விளையாடவும், வெடிக்கவும் இடம் இருந்தது. அதைவிட  வேறு கவனக் கலைப்புகள் இன்றி பண்டிகைகளை உணர்ந்து கொண்டாட  நேரம் இருந்தது! இந்தக் காலப் பிள்ளைகளுக்கு தீபாவளி என்பது நரகாசுரனோ, கௌரி நோன்போ, நண்பர்களுடன் விளையாட்டோ, வெடி வெடிப்போ இல்லை. ஒன்று, 25 ரூபாய் டிக்கெட்டை 150 ரூபாய்க்கு வாங்கி முதல் நாள், முதல் ஷோ படங்கள். அல்லது இந்தியத் தொலைகாட்சி வரலாற்றில் முதல்முறைப் படங்கள். இல்லாவிட்டால் விவேககஞ்சாசந்தானவடிவேலுக் காமெடிகள்... புத்தாடை அணியும் மகிழ்ச்சியோ, தீபாவளிப் பலகாரங்கள் மகிழ்ச்சியோ கூடக் கொண்டாடப் படுவதில்லை. விளையாட்டு மைதானங்களை விழுங்கிய கான்க்ரீட் கட்டடங்கள் மனங்களையும் இறுக்கி விட்டன.

ஆனால், இந்நாள் குழந்தைகள் பின்னாட்களில் பெரியவர்களானதும் அவர்கள் குழந்தைப் பருவம் மாதிரி இல்லை என்று அப்போது நிலை குறித்து வருத்தப் படுவார்களோ என்னமோ...!

பொங்கலுக்கும் இதே தொலைக்காட்சி, சினிமா தொந்தரவுகள் உண்டு. முகநூலில் இப்போது கொஞ்சம் பேர் பழைய பொங்கல் வாழ்த்துகள் போல படங்களை எடுத்துப் பகிர்கிறார்கள். பார்க்கும்போது பழைய நினைவு வருகிறது. 15 பைசா கார்டிலிருந்து, 1.50 பைசா, 2.50 பைசா என்று பைசாக் கணக்கில் ஏறிக் கொண்டே போகும் காஸ்ட்லி பொங்கல் வாழ்த்துகள். 

                
யாருக்கு வாழ்த்துகள் நிறைய வந்திருக்கிறது என்று நண்பர்களுக்குள் போட்டி இருக்கும். யார் யார் அனுப்பி இருக்கிறார்கள், என்ன படம் என்று அறிவதில் ஆர்வம் இருக்கும். பண்டிகைக் குறித்த படங்கள் சாதாரணம். வெட்டி ஒட்டியது போலச் சிறப்புத் தோற்றத்திலும், கலரில், கார்டில், கவரில் ஜிகினா ஒட்டி, முன்பக்கம் ஒன்று பின்பக்கம் ஒன்று என விதவிதமாய் வாழ்த்துகள் வரும்....  

          
அப்புறம் நடிக, நடிகையர் படங்கள் விசேஷம். பொங்கல் வாழ்த்துகளில் அச்சிட்டிருக்கும் வாழ்த்துகளைக் காபி செய்து 10 பைசா, அப்புறம் 15 பைசா கார்டில் ழுதி அனுப்பும் 'ஏழை'ப் பொங்கல் வாழ்த்துகளும் உண்டு.  நான் தபால் கார்டில், என் கையால் படங்கள் வரைந்து, டிசைன் போட்டு அனுப்பியிருக்கிறேன்!! பொங்கலன்று தபால் நிலையம் விடுமுறை என்பதால் அதற்கு முந்தய வேலை நாட்களில் கிடைக்குமாறு  அனுப்புவது வழக்கம்.

          
தபால் அலுவலகம் அந்த ஒரு வாரம் அல்லகல்லோலப் படும். பாவம் தபால்காரர்கள். கட்டுக் கட்டாக வாழ்த்துக் கவர்கள், அட்டைகளைத் தூக்கிக் கொண்டு வீடு வீடாக அலைவார்கள். பொங்கல் காசும் அவர்களுக்குக் கிடைக்கும். இப்போது வெறிச்சிட்டு நிற்கின்றன தபால் நிலையங்கள்.

                             

காவிரியில் தண்ணீர் இல்லை. தண்ணீர் விட சக இந்தியர்களுக்கே மனதில் ஈரம் இல்லை. பொய்த்துக் கொண்டே வரும் பருவ மழைகள். காய்ந்து கிடக்கும் விளை நிலங்கள்.  தவித்து நிற்கும் விவசாயிகள். விளைச்சல் சரியில்லாத கரும்புகளுக்கு கொள்முதல் விலை சரியில்லாத சோகத்தில் கரும்பு சாகுபடிக்காரர்கள். 

                                                     
விலையில்லா அரிசியில் யாரும் பொங்கல் செய்தார்களா, தெரியாது. ஆனால் அரசாங்கம் தந்த இலவச வேட்டி சேலையை, 100 ரூபாயை யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லை. இலவசம் கொடுக்கும் / வாங்கும் வழக்கம் என்று நிற்குமோ!

         
தீபாவளி, பொங்கலானால் என்ன, குடியரசு தினம், சுதந்திர தினமானால் என்ன, அந்தந்த தின தொலைகாட்சி சிறப்பு நிகழ்ச்சிகளுக்குக் குறைவில்லை.

பெயரில் என்ன இருக்கிறது? எல்லாப் பண்டிகை தினங்களும் ஒரே விதமாய்த்தான் இருக்கின்றன.