வெள்ளி, 29 அக்டோபர், 2010

விளம்பரம் செய்யத் தெரியுமா?


படைப்பாற்றல் நிரம்ப உபயோகமாவது, விளம்பர உலகத்தில்தான். எங்கள் வாசகர்கள் நிறைய பேர் படைப்பாற்றல் மிக்கவர்கள் என்பது, பதிவுலகம் அறிந்த விஷயம். 

இதோ ஒரு பொருள். 

இதை உற்பத்தி செய்பவர் ஒருவர், உங்களை அணுகி, எல்லோரும் இந்த பிராண்டு குன்டூசிகளையே வாங்கும்படி செய்யவேண்டும், அந்த வகையில் உங்களை விளம்பரம் ஒன்றை வடிவமைக்கச் சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். 

பிராண்டு பெயர் தொடங்கி, விளம்பர வாசகங்கள், விளம்பரப் படம் (யார் நடித்தது, என்ன தீம -- etc etc ... ) எல்லாவற்றிற்கும் உங்களுக்கு முழு சுதந்திரம்.  

இந்த விளம்பரத் திடலில் இறங்கி, பாட் செய்ய, பந்து போட, ஃபீல்ட் செய்ய உங்கள் எல்லோருக்கும் ஒரு வாய்ப்பு. Free wheeling இருக்கவேண்டும் என்பதற்காக, நாங்கள் அதிகம் நிபந்தனைகள் விதிக்கவில்லை. 
  
அப்படி ஏதாவது அவசியம் ஏற்பட்டால், பின்னூட்டத்தில் அவ்வப்போது சொல்கிறோம். 

வழக்கம் போல, ரொம்பப் பெரிய, நூறு வார்த்தைகளுக்கு மேற்பட்ட கருத்தாக இருந்தால், engalblog@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தனிப்பதிவாகப் போட்டுவிடலாம். 

சும்மா போட்டி மட்டும் வைக்காமல், ஒரு சுவையான கதையும்:  

ஓர் ஊரில் ஒரு புதை பொருள் ஆராய்ச்சியாளர். அவர் ஒரு இரும்பு நகரத்தில் ஒரு புதையல் கண்டு பிடித்தார். சுமார் ஒவ்வொரு கிலோ எடை உள்ள இரும்புக் கட்டிகள், பத்துப் பதினைந்து ஓரிடத்தில் அவருக்குக் கிடைத்தது. அவைகளை அவர், அந்த ஊரில் இரும்பு வேலை செய்யும் உழைப்பாளிகளிடம், ஆளுக்கு ஒரு கட்டி கொடுத்தார்.

கட்டிகளைப் பெற்றுக் கொண்ட உழைப்பாளிகள், ஒவ்வொருவரும் அதை வெவ்வேறு உருமாற்றங்கள் செய்தனர். 

முதலாமவர், ஒரு கிலோ இரும்பில் ஓர் இரும்புலக்கை செய்து, அதை இருபது ரூபாய்க்கு விற்றார்.

இரண்டாமவர், அந்த இரும்பில் ஒரு கிலோ எடைக்கல் ஒன்று செய்து, அதை முப்பது ரூபாய்க்கு விற்றார். 

மூன்றாமவர், அந்த இரும்பில் நான்கு சுத்தியல் செய்து, ஒவ்வொன்றும் முப்பது ரூபாய் என்று விற்றார்.

இன்னொருவர் அந்த இரும்பில் ஆணிகள் செய்து, அவற்றை இருநூறு ரூபாய்க்கு விற்றார். 

ஒருவர் மட்டும், அந்த ஒரு கிலோ இரும்பில் குண்டூசிகள் செய்து அவற்றை ஆயிரம் ரூபாய்க்கு விற்றார். 

(இந்தக் கதையின் நீதி என்ன?) 


வியாழன், 28 அக்டோபர், 2010

விரல் (பே)ரிங்

நாகையில் அறுபதுகளில் நீங்கள் இருந்திருந்தால், உங்களுக்கு சட்டையப்பர் கோவில் மேல வீதியில் பட்டறை வைத்திருந்த மெக்கானிக், (ஆல் இன் ஆல் அழகு ராஜா ரேஞ்சு)  மணியைக் கட்டாயம் தெரிந்திருக்கும். அவர் வாயாலேயே சொல்லக் கேட்டவற்றில் அவர் எலிசபத் ராணியின் இந்திய விஜயத்தின் போது ஓட்டுனராக இருந்தது மிகப் பிரசித்தம். கல்யாண ஜானவாசம் நிகழ்ச்சிகளுக்கு கார் ஓட்டும் (ஓட்டைக் கார்) ரங்கநாதன் கூட மணி வொர்க் ஷாப்பில் தான் வழக்கமாக தன் காரை ரிப்பேர் செய்துகொள்வார்!  
   
உங்களுக்குப் பொழுது போக வில்லை என்றால் நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் மணியின் பட்டறைக்குப் போகலாம். அங்கிருக்கும் பொருள்களைக் கையில் எடுத்துப் பார்த்தால் அதே இடத்தில், கூடுமான வரை தலை, வால் எல்லாம் எடுத்த போது இருந்த மாதிரி வைத்து விட்டால் அவர் கோபிக்கவே மாட்டார்.  அவர் வேலை செய்யும் பொழுது ஏதேனும் பேசிக்கொண்டேதான் வேலை செய்வார். எவ்வளவு சதவிகிதம் ரியல், எவ்வளவு சதவிகிதம் ரீல் என்பதைத் தெரிந்துகொள்வது கேட்பவரின் ஐ கியூவைப் பொறுத்த விஷயம்.
   
ஒரு நாள், நான், தண்டு, ஜெயராமன் எல்லோரும அங்கே போய் வழக்கம் போல் கொட்டமடித்துக் கொண்டிருந்தோம். ரோலிங் மில் மணி அய்யரின் கார் - எப்பொழுதும் டிக்கியில் புல் கட்டுடன் சுற்றி வருமே அதில் பாட்டரி சரியாக சார்ஜ் ஆகவில்லை என்று டைனமோவைக் கழட்டி சுத்தம் செய்து கொண்டிருந்தவர், மீண்டும் ஒரு முறை தன சுயசரிதையின் இங்கிலாந்து ராணிக்குக் கார் ஒட்டிய பகுதியை விவரிக்க ஆரம்பித்தார்.  திடீரென பேசுவதை நிறுத்தி விட்டுக் குனிந்து, பின் மேஜை மேலிருந்த பொருள்களை எல்லாம் நகர்த்தி வைத்து எதையோ தேடியவர், நம் பக்கம் திரும்பி, "இங்கே ஒரு மாக்னேடோ பேரிங் வைத்திருந்தேனே, யாரும் பார்த்தீர்களா?" என்று கேட்டார். நாங்கள் எல்லோரும் தலையை இடமும் வலமும் அசைத்தோம். 
   
தண்டு கண்ணில் தளும்பிய கண்ணீரைக் கண்ட மணி, "என்ன கையில் ஏதாவது காயம் பட்டிடுச்சா?" என்று அக்கறையுடன் விசாரிக்க, மெதுவாக அவன் இடது கையை தோல் பட்டை உயரத்துக்குத் தூக்கிக் காட்டினான். மணி தேடிக் கொண்டிருந்த மாக்னெட்டோ பேரிங் தண்டு கை விரலில் மோதிரமாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது.. ஜெயராமன் "தண்டு அப்படியே கிருஷ்ண பரமாத்மா மாதிரியே இருக்குடா" என்றான். மணி, "அட நான் இதைத்தானே அப்போலேந்து தேடிக்கொண்டிருக்கேன்." என்று கையை நீட்ட, தண்டு அழ ஆரம்பித்தான்.  பிறகு மணி, தண்டுவின் விரலில் கொஞ்சம் எண்ணை விட்டுப் பின் இழுத்துப் பார்த்தார். ஊம் ஹும் பேரிங் அசைவதாக இல்லை.  
               
அதற்குள் பூப்போட்ட சட்டை போட்ட பையன் ஒருவன் வந்து " கார் எப்போ ரெடியாகும்? சாயங்காலம் சிக்கல் போகணும்." என்று பரபரத்தான். மணி, "ஒரு அரை மணியில் ரெடியாயாயிடும்னு அப்பா கிட்டே சொல்லு" என்றார்.  ஜெயராமன் "தண்டு, நீ ஒன் மோதிரத்தைக் கழட்டிக் கொடுத்தால் தான் கார் நகரும் " என்றான். தண்டு பலமாக அழ ஆரம்பிக்கவும், மணி அவனைத் தட்டிக் கொடுத்து, "எல்லாம் கழட்டி விடலாம். பயப்படாதே" என்றார். 

எங்களுக்கு சற்றுப் பயம் - மணி ஹாக்சா வைத்து அறுக்கப் போவது பேரிங்கை என்றால், அரை மணியில் கார் எப்படி ரெடியாகும்? விரலை வெட்டி பேரிங்கை எடுத்துக் கொள்வாரோ என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தோம். மணி, ஒரு ஒயர் எடுத்துக் கொண்டு தண்டுவிடம் வந்து கையைக் காட்டச் சொன்னவுடன் "ஒ, இப்போ மணி பேரிங்கைப் பிடித்துக் கொண்டு, ஒயரை மின்சார சப்ளையில் இணைத்த உடன் தண்டு தன கையை அதிர்ச்சியில் உதறி பேரிங்கிலிருந்து விடுபடப் போகிறான்" என்றெண்ணி சற்றுத் தள்ளி நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தோம்.  ஒயரின் ஒரு முனையை பேரிங் மீது வைத்து விரல் நுனி நோக்கி அடுக்கி சுற்றினார்.  
            
பின், பேரிங் முனையிலிருந்து ஒவ்வொரு சுற்றாக எடுத்தவுடன் பேரிங்கை முன்புறம் நகர்த்த, அதுவும் நகர்ந்தது!   இப்படி ஆறு [மறந்து விடாதீர் - ஆறு] சுற்று எடுப்பதற்குள் விரலின் எலும்பு இணைப்பு தாண்டி விட்டதால், பேரிங் சுலபமாக வெளியே வந்து விட்டது.
                           
'நானும் அந்த நாள் முதல் இந்த நாள் வரை காத்திருக்கிறேன். யாராவது பேரிங் கழட்ட முடியவில்லை என்று வந்தால் என் திறைமையைக் காட்ட' என்று சொன்னது தான் தாமதம், எதிர்த்த வீட்டு மாமா அவரது மின்விசிறியை எடுத்துக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார் - நல்ல வேளை ! ஒரு எஸ்கேப் ரூட் இருக்கு!
           

புதன், 27 அக்டோபர், 2010

சிறிசும் பெருசுமாய் ..!

என் மனைவி, ஏதேனும் கற்றுக் கொள்ளும் முயற்சிகளில் இறங்கும்பொழுது, நான் குறுக்கே நிற்பதில்லை. கார் ஓட்டக் கற்றுக் கொள்கிறேன் என்று மனைவி கூறியவுடன், நான் எடுத்த இந்த சாமர்த்தியமான முடிவு என்னுடைய உயிரையே பாதுகாத்துக் கொள்ள உதவியது பாருங்கள்!
             
அதே போலத்தான், என் மனைவி எனக்கு ஏதாவது கற்றுக் கொடுக்கும் முயற்சிகளில் இறங்கும் பொழுது, நான் தலையை 'பூம் பூம் மாடு' போல பலமாக ஆட்டிவிடுவேன். இது பல விதங்களில் பிற்காலங்களில் உதவும். ரொம்ப முக்கியமான பாடமாக இருந்தால், ரிவிசன் வரும்பொழுது, கொஞ்சம் மனதில் பதியும். ஒரு மாதத்திற்குள் ரிவிசன் வரவில்லை அல்லது ரிப்பீட் ஆகவில்லை என்றால், கவலையே இல்லை. திரும்ப அதே பாடம் வந்தால், 'பூம் பூம் மாடு' வழிமுறை (முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டு) பின்பற்றினால், மனைவிக்கு,  இதை முதலில் சொன்னோமா இல்லையா என்று சந்தேகம் வந்துவிடும். அப்பாவி ரங்கமணிகளே - இதை நன்கு மனதில் வாங்கிக் கொள்ளுங்கள்.
                 
என் மனைவி அடிக்கடி பாடம் நடத்துவது காய்கறி வாங்கும் பொழுது, அல்லது நான் வாங்கப் போகும் பொழுது. நிறைய கட்டை விரல் விதிகள். (Thumb rules) சொல்லுவார். எல்லாவற்றையும், எல்லா நேரத்திலும் ஞாபகம் வைத்துக் கொண்டு, உருப்படியாக பின்பற்றுவது மிகவும் கடினம். கிள்ளிப் பார்த்து வாங்குவது, முறுக்கிப் பார்த்து வாங்குவது, தட்டிப் பார்த்து வாங்குவது, முகந்து பார்த்து வாங்குவது, ஒடித்துப் பார்த்து வாங்குவது, கண்களால் அளந்து வாங்குவது என்று ஐம்புலன்களுக்கும் வேலை உண்டு.
                      
நேற்று காலை பங்கு வர்த்தகம் ஆரம்பிக்கும் நேரம், விரல் நகத்தைக் கடித்த வண்ணம் கணினி திரையையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஏறுமுகமா, இறங்கு முகமா? எந்த முகம் வரும்? என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் வேளையிலே, என் கையில் ஒரு மஞ்சள் பை திணிக்கப் பட்டது. பெருங்காயமோ, வெங்காயமோ ஏதோ சொன்னது காதில் விழுந்தது. ".... ரெண்டும் வேணும்... உடனே வாங்கிகிட்டு வந்துடுங்க. யாருதான் கண்டு பிடிச்சாங்களோ இந்த கம்பியூட்டரை.... அதையே எப்பவும் பாத்துகிட்டு, .. வாங்கறேன், விற்கிறேன்  ... என்று பைத்தியம் பிடித்து அலையுறீங்க ... நான் சொன்னது எல்லாம் காதில் விழுந்ததா, இல்லையா?" கடைசி ஆறு வார்த்தைகள் மட்டும்தான் கேட்டது. ஆனாலும் கௌரவப் பிரச்னையால், 'பூம் பூம்' தலையாட்டலுடன் பையை கையில் எடுத்துக் கொண்டு வேகமாக தெருவில் நடந்து போகும் பொழுதுதான், நான் யார், எங்கே இருக்கின்றேன், எங்கே சென்று கொண்டிருக்கின்றேன் என்ற கேள்விகள் எழும்பி, பதில்கள் தேட முயன்றேன்.
                
காதிலே கேட்டவைகளை மறுமுறை நினைவில் நிறுத்திப் பார்த்தேன். பெருங்காயம்? ரெண்டும் வேணும்? பெருங்காயத்துல ஏது ரெண்டு? - ஓஹோ - பவுடர், கட்டி இரண்டுமோ? -- ச்சீச்சீ - அதுக்கு எதுக்குப் பை? -- வேறு என்ன காயம்? வெங்காயம்? ஆஹா அதுதான் ... வெங்காயம்தான். பெரிய வெங்காயம் மற்றும் சிறிய வெங்காயம்! 
     
அருகில் உள்ள குடிசைக் கடைக்குச் சென்று, இரண்டிலும் ஒவ்வொரு கிலோ வாங்கினேன். திரும்ப வரும் பொழுது, வெங்காயம் வாங்குவதற்கான தம்ப் ரூல் என்ன என்று ஞாபகம் வந்து தொலைத்தது. 'பெரிய வெங்காயம் எல்லாம் சின்ன சின்னதா இருக்கணும், சின்ன வெங்காயம் எல்லாம் பெருசு பெருசா இருக்கணும்' அடேடே - அவசரத்தில் மனைவியின் வெங்காய விதிகளை மீறி அப்படியே அள்ளிப்போட்டு வாங்கி வந்து விட்டோமே என்று நினைத்தவாறு வந்தேன்.
                      
பையை மனைவி கையில் கொடுத்துவிட்டு, ஓடிப் போய் கணினி திரையைப் பார்த்தால், எல்லாம் பச்சை வண்ணத்தில் மிளிர்ந்துகொண்டு இருந்தன. அவசரம் அவசரமாக விற்க வேண்டியவைகளுக்கு ஆன் லைன் ஆர்டர்கள் கொடுக்க ஆரம்பித்தேன்.  
   
((இப்பொழுதைய விலை - வாங்கிய விலை) X பங்கு எண்ணிக்கை) - தரகு) / (இன்றைய தேதி - வாங்கிய தேதி: நாள் கணக்கில் ) + K  (((((ஃபார்முலாவில் எங்கேயாவது அடைப்புக் குறிகள் குறைந்திருந்தால் இங்கேயிருந்து எடுத்துப் போட்டுக்குங்க )))))  என்று மனக் கணக்கு - மைக்ரோசாஃட் கால்குலேட்டர் பிளஸ் இல்லாமலேயே போட்டுக் கொண்டிருந்த நேரத்தில், பக்கம் வந்து நின்றார் பத்தினி. "நல்லா இருக்கு. நீங்க பண்றது." (அப்பாவி ரங்கமணிகளே - உஷார் - இந்த வார்த்தைகளை தங்கமணிகள் உதிர்த்தால் அகமகிழ்ந்து போய்விடாதீர்கள். அடுத்து வருவது அணுகுண்டாக இருக்கும்.) 
    
"இதற்காகத்தான், காய்கறிக்கடையில் பொறுக்கி எடுக்காமல் இப்படி அள்ளிப் போட்டுக் கொண்டு ஓடி வந்தீர்களா?"
         
"உன் புருஷன் பொறுக்கியாக இல்லையே என்று சந்தோஷப் படுவதை விட்டு, இப்படி கோபப் படுகிறாயே!"
             
"இந்த சிலேடைப் பேச்சுகளில் எல்லாம் ஒன்றும் குறைச்சல் இல்லை."
                     
"இதோ பாரு, புருஷன், நாம சொன்னவுடன் கேட்டு ஆசையாய்(!) வாங்கி வந்தாரே, அந்த வெங்காயங்களை உரித்தோமா, நறுக்கி, நம்முடைய இன்றைய கோட்டா கண்ணீரை விட்டோமா என்று இல்லாமல், ஏன் இப்படி வம்பு பண்ணுகிறாய்?"
            
"நான் ஒன்றும் வம்பு பண்ணவில்லை. இதோ இங்கே வந்து டைனிங் டேபிள் மீது பாருங்கள்"


   
"ஊம் ... பார்த்துவிட்டேன். இப்போ நான் பச்சைப் பங்குகள் விற்கப் போகலாமா?"  
     
"நீங்க பண்ணுகிற பங்கு வர்த்தக லட்சணம் எனக்குத் தெரியாதாக்கும்? சரி, வெங்காயம் எப்படி வாங்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறேனா இல்லையா?"
                       
"சொல்லியிருக்கே. (இந்தக் கட்டத்தில் பொய்யே கூடாது. பொய் சொன்னால், அதற்கும் சேர்த்து அர்ச்சனை தொடங்கிவிடும்) பெரிய வெங்காயம் எல்லாம் சின்ன சின்னதா இருக்கணும், சின்ன வெங்காயம் எல்லாம் பெருசு பெருசா இருக்கணும்."
       
"நீங்க வாங்கிகிட்டு வந்திருப்பவை எல்லாம் அப்படி இருக்கா? அதை மட்டும் பார்த்துச் சொல்லுங்க?"
   
இவ்வளவு நேரமும் 'எப்படிடா இந்த விதி மீறலை சமாளிக்கப் போகிறோம்' என்று யோசித்த வண்ணம் இருந்த எனக்கு 'செந்தில்' ஆண்டவர் கை கொடுத்தார். 'சுட்ட பழம் வேண்டுமா அல்லது சுடாத பழம் வேண்டுமா?' என்று கேட்டவர் இல்லை; 'அண்ணே, இதுதாங்க அந்த இன்னொரு பழம்' என்று சொன்னவர். 
       
உடனே சொன்னேன். "தங்கமணி, நீ சொல்வதை நான் என்றாகிலும் (உனக்குத் தெரிந்து) செய்யாமல் இருப்பேனா? எனக்கு மனைவி சொல்லே மந்திரம் என்று தெரியாதா? நீ சொன்ன மாதிரிதான் வாங்கி வந்திருக்கின்றேன்! நன்றாகப் பார்! முதலில் இருப்பது சின்ன வெங்காயம் - பாரு ஒவ்வொன்னும் எவ்ளோவ் பெருசா இருக்கு!. இரண்டாவது இருப்பது பெரிய வெங்காயம். பாரு ஒவ்வொன்னும் எவ்ளோவ் சின்னதா இருக்கு !!"
                
ஒரு வினாடி திகைத்து, யோசித்துப் பார்த்த தங்கமணி பக பகவென சிரிக்க, நான் அந்த கேப்பைப் பயன் படுத்திக் கொண்டு கணினியைப் பார்த்துப் பாய்ந்தேன்!
                 

ஞாயிறு, 24 அக்டோபர், 2010

ஞாயிறு - 68


                                                               
First Barrel Jump Over Niagara Falls
Annie Edson Taylor was the first to survive a trip over Niagara Falls in a barrel. She used a custom-made barrel with padding and leather straps. She climbed inside the airtight barrel, the air pressure was compressed with a bicycle pump and on her 63rd birthday, October 24, 1901, she headed down the Niagara River towards Horseshoe Falls. After the plunge, rescuers found her alive with only a small gash on her head. She was hoping for fame and fortune with her stunt, but she died in poverty.                    

வெள்ளி, 22 அக்டோபர், 2010

சுகர், பி பி எல்லாம் எப்படி இருக்கு?


திங்கட்கிழமை. காலை ஏழரை தொடங்கி ஒன்பது மணிவரை இராகு காலம். ஆனால், நமது நண்பர் பராங்குசம் அலுவலகத்தில், காலை எட்டு மணி முதல், மாலை மூன்றரை மணி வரை இராகு காலம்தான். 
   
ஒவ்வொரு ஃபோன் அழைப்பு வரும் பொழுதும் அவருக்கு பதற்றம் ஏற்படும். 
சில நாட்களில், 'இது என்னடா பிழைப்பு? விட்டு எங்கேயாவது ஓடிவிடலாமா' என்று கூடத் தோன்றும். டாக்டரைப் போய்ப் பர்ர்க்கவேண்... ' என்று நினைப்பு வந்தவுடனேயே திடீரென்று பராங்குசத்திற்கு, டாக்டர் ரகுராமன் ஞாபகம் வந்தது. 

உதவியாளர் உலகநாதனை அழைத்தார். "லோகு .. டாக்டருக்கு லேட்டஸ்ட் நிலை பற்றி வெள்ளிக்கிழமை விவரம் கூறிவிட்டீர்களா?"

"இல்லை சார். வெள்ளிக்கிழமை மாலை டாக்டர் வீட்டு நம்பருக்கு, ஃபோன் பண்ணினேன். ஆஸ்பத்திரியில் இருப்பதாக சொன்னார்கள். ஆஸ்பத்திரி நம்பருக்கு ஃபோன் பண்ணினால், டாக்டர் ஒரு ஆப்பரேஷன் செய்துகொண்டு இருப்பதால், பிறகு ஃபோன் செய்ய சொன்னார்கள். நான் அப்புறம் மறந்தே போய்விட்டேன்." 

"அதற்கு முந்திய வாரம் வெள்ளிக்கிழமை?"

"அப்போ டாக்டர் கான்ஃபரன்ஸ் போயிருந்தார் சார்." 

"என்ன காரியம் செய்தீர்கள் லோகு. வாரா வாரம் - அவருக்கு ரிபோர்ட் கொடுக்கவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டதின் பேரில் நான் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் அவருக்கு சுருக்கமாக எல்லாம் சொல்லி, அவர் கேட்கின்ற கேள்விகள் எல்லாவற்றுக்கும் பொறுமையாக பதில் சொல்லுவேன். அதற்குப் பிறகு, அவர் என்ன செய்யச் சொல்லுகிறாரோ அதை அப்படியே செய்து வருவேன். இரண்டு வாரங்களாக அவர் அட்வைஸ் இல்லாமலேயே நான் ஏதோ செய்து கொண்டு இருக்கின்றேன். இப்போ என்ன செய்வது?"

காலை மணி பத்து ஆகிவிட்டது. அலுவலகம் ஏக பிசி. ஃபோன் கால்களும், கம்பியூட்டர் தட்டல்களும் ஒரே பரபரப்பு. 

ஒரு அழைப்பை எடுத்த உலகநாதன் சொன்னார். "சார்! டாக்டர் ஆன் லைன். உங்க தொலைபேசியில் எடுத்துக்கொள்ளுங்கள்."
    
பராங்குசம், "அப்பாடி இப்பத்தான் உயிர் வந்தது" என்று சொல்லிக்கொண்டே ஃபோனை எடுத்தார்.

"குட் மார்னிங் டாக்டர்."

"என்ன பராங்குசம்? நான் கொஞ்சம் பிசி என்றவுடன், என் அட்வைசே வேண்டாம் என்று விட்டு விட்டீர்களா?"

"இல்லை டாக்டர். உங்க அட்வைஸ் இல்லாவிட்டால் நான் ஒன்றும் பண்ண முடியாதே!"

"அது தெரிந்தால் சரிதான். சரி சுகர் எப்படி இருக்கு?"

"டாக்டர். சுகர் ஏறிக்கிட்டுத்தான் இருக்கு."
    
"ஆமாம் என்னுடைய கம்பவுண்டர் கூட போன வாரம் சொன்னார். அவருக்கும் சுகர் இருக்கு.சரி, பி பி (B.P) எப்படி?"
     
"டாக்டர் அதுவும் ஏறிக்கிட்டுத்தான் இருக்கு."

"ஐயோ! அப்படியா? பல்ஸ் என்ன நிலைமை?"

"டாக்டர் - அது இப்போ இறங்கிடுச்சு."

"அய்யயோ - என்னங்க இப்பிடிப் போயிடுச்சு?" 

"டாக்டர், இப்போ நான் என்ன பண்ணலாம்? அதை சொல்லுங்க." 

"என்ன பராங்குசம் உங்களுக்குத் தெரியாதா? வழக்கமான இன்ஸ்டிரக்ஷன்ஸ்தான் ... சுகரும் பி பி யும் இன்னும் எவ்வளவு உயருதுன்னு பாருங்க. இவ்வளவுதான் லிமிட், இதுக்கு மேலே போகாது என்று தெரியும்போது .......  " 

"தெரியும்போது?"  
  
"விற்றுவிடுங்கள். எனக்கு கமொடிடி டிரேடிங் இன்னும் பிடிபடவில்லை. அதனால பல்சஸ் நீங்களே பார்த்து, லாபம் வரும் சமயத்தில் விற்றுவிடுங்கள்."  
     
"சரி டாக்டர்."  

(ஹி ஹி - பராங்குசம் பங்கு வர்த்தகர். டாக்டர் ரகுராமன் உள்பட பலர் அவருடைய கிளையண்ட்ஸ். சுகர் என்றால் சுகர் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள். பி பி என்றால், பாரத் பெட்ரோலியம் (கார்ப்பரேஷன்). பல்ஸ் என்றால் பருப்பு மார்க்கெட்.)
                     

வியாழன், 21 அக்டோபர், 2010

நானே நானோ?



இது இன்றைய ஆங்கில தினசரியில் வந்த விளம்பரத்தின் ஒரு பகுதி: 


எல்லாம் நன்றாக உள்ளன. 
ஆனால், ஒரே ஒரு வார்த்தையில், இரண்டு எழுத்துகள் இடம் மாறியுள்ளன. 


அதனால், ஊன்றிப் பார்த்து, படிப்பவர்கள், 'ஐயோ வேண்டாம் இந்த வண்டி' என்று நினைக்கின்ற அளவுக்குப் போய்விட வாய்ப்பு உள்ளது. 


உங்களால் அது என்ன வார்த்தை, என்ன தவறு, சரியான வார்த்தை எது என்று கண்டுபிடிக்க முடிகிறதா? பின்னூட்டத்தில் பதியுங்கள். 


(இன்னொரு வார்த்தையிலும் தவறு உள்ளது. ஆனால் ஆபத்தான தவறு இல்லை. ஓர் ஈ பறந்துபோய்விட்டது. முடிந்தால் இதையும் கண்டுபிடியுங்கள்!)  
             

செவ்வாய், 19 அக்டோபர், 2010

கேள்வி பிறந்தது இன்று !



சில திட்டங்கள், எண்ணக்கரு (concept) நிலையிலிருந்து, உயிர்த்தோற்ற (reality) நிலையை அடைய எடுத்துக் கொள்ளும் காலம் ஆச்சரியமாக இருக்கும். 

உதாரணத்திற்கு பதிவு எழுத ஒரு யோசனை இரவு எட்டு மணிக்கு தோன்றுகிறது என்று வைத்துக் கொள்வோம். எட்டு மணி துவங்கி, அதை உருவமைத்து,  கணினி விசைப் பலகையில் தட்டி, படங்கள் சேர்த்து, சேமித்து வைத்து, வெளியிடு என்று விசை தட்டும் நேரம் வரை ஆகின்ற நேரம்தான் இந்த கர்ப்ப காலம். இந்தப் பதிவு 19/10/2010 இந்திய நேரம், இரவு எட்டு மணிக்கு தோன்றிய சிந்தனை, பதிவிடப்பட்ட நேரம் என்ன என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள். 

எங்கள் ப்ளாகில் சென்ற மாதம் இடப்பட்ட 'என்ன தோன்றுகிறது?' பதிவு பத்தே நிமிடங்களில் எண்ணக்கரு நிலையிலிருந்து, 'குவா குவா' நிலைக்கு வந்தது. 

சில பதிவுகள் இன்னும் கர்ப்ப நிலைமையிலேயே இருந்துவருகின்றன. 

தமிழ் நாட்டில், நாற்பத்தைந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு இரயில் பாதை அமைப்பதற்கு போடப் பட்ட திட்டம் ஒன்று எண்ணக்கரு நிலையிலிருந்து, 'ஊ ... ஜிக் ..... ஜிக் ...' நிலை வருவதற்கு, அறுபத்து மூன்று வருடங்கள் ஆயிற்று! 

எந்த ஊர்? எந்த வழி? எந்த வருடம் தொடங்கி, எந்த வருடம் வரை? உங்களுக்குத் தெரியுமா?      

                  

வெள்ளி, 15 அக்டோபர், 2010

காமினி கொஞ்சம் சிரியேன்! (சவால் சிறுகதை)

பியூட்டி பார்லரில் இருக்கையில் அமர்ந்திருந்த காமினி, தூரத்தில் வருகின்ற டாக்டர் சிவாவைப் பார்த்ததும், அவசரம் அவசரமாக தன முகத்திற்கு ஒரு ஃபேசியல் மாஸ்க் போடச் சொன்னாள். கையில் தான் செய்து கொண்டிருந்த ஒயர் கூடை வேலையைக் கூட அப்படியே நிறுத்தினாள். சிவா, பியூட்டி பார்லர் உள்ளே நுழைந்து ஒரு நோட்டம் விட்டுவிட்டு, 'ஹூம் இன்னும் அவள் இங்கே வரவில்லையா' என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டு, பியூட்டி பார்லரின் வாசலில், வீதியைப் பார்த்து நின்றுகொண்டான். 

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.  

"அப்பாடா - ஒரு பேரறுவையிடமிருந்து தப்பித்து விட்டேன், கடவுளுக்கு நன்றி" என்று கூறியவாறு மயிலாப்பூர் கடற்கரை நோக்கி வேகமாக நடந்தாள்.

தொலைவிலிருந்து அவள் வேகமாக நடப்பதைப் பார்த்து, உடனே அடையாளம் தெரிந்து, ஓடி வந்தான், டாக்டர் சிவா. "காமினி, உன்னைத்தான் தேடிக் கொண்டிருக்கின்றேன். நேற்று என்னுடைய நர்சிங் ஹோமில் நடந்த ஜோக் ஒன்று சொல்கிறேன், கேளேன்." 

"ஐயோ வேண்டாமே!" 

"இல்லை காமினி - இது நிஜமாவே குட் ஜோக்.. கொஞ்சம் கேளேன்..."   


"ஊம ஹூம் - இப்போ டயம் இல்லை சிவா. அப்புறம் பார்க்கலாம்."   
               
"ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை" என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.
     
"சரி. சொல்லித் தொலை."
     
நேற்று என்னுடைய பேஷண்ட் ஒருவர் என்னிடம், சார் எனக்கு வந்திருப்பது நிமோனியா தானா? நிச்சயம் தெரியுமா?' என்று கேட்டார். 

'நிச்சயம் நிமோனியாதான். ஏன் இவ்வளவு சந்தேகம்?' என்று நான் கேட்டேன். 

அதற்கு அவர், 'இல்லை இதற்கு முன்னால், நீங்க நிமோனியாவுக்கு ட்ரீட் செய்த நான்கு பேருங்க மஞ்சள் காமாலையில் செத்துப் போயிட்டாங்க என்று கேள்விப்பட்டேன்' என்றார். 

நான் உடனே 'வாட் நான்சென்ஸ்! நான் யாருக்காவது நிமோனியாவுக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்தால் அவர் நிச்சயம் நிமோனியாவால்தான் செத்துப் போவார்' என்றேன். 
   
காமினி சிரிப்பை அடக்க முடியாமல் பக பக வென சிரித்தாள். சிவா திருப்தியாக அப்பால் சென்றான். காமினி, தலையில் அடித்துக்கொண்டு கடலை நோக்கி நடந்தாள். 

கடல் மணலில் கால் புதிய, அலைகளை நோக்கி நடந்துகொண்டு இருக்கும்பொழுது அவள் கையில் இருந்த அலைபேசி அழைத்தது. 

அதில் பேசிய பரந்தாமனின் பதற்றக் குரலைக் கேட்டதும், அவள் பின்னால் திரும்பிப் பார்த்தவாறே, கடல் அலைகளைப் பார்த்து ஓடினாள்.

அவள் ஓடிய ஓட்டத்தில் கடல் மணல், அவள் கால்களின் அடியிலிருந்து வீசப்பட்டு, அங்கு அமர்ந்து காற்று வாங்கிக் கொண்டிருந்த எல்லோருடைய கண்ணிலும் பட்டது. 'டைமண்ட்...டைமண்ட்...' என்று கத்திக்கொண்டு,  திடீரென்று ஓடத்துவங்கிய காமினியை, என்னவோ ஏதோ என்று பதறியபடி அனிச்சைச் செயலாக பின் தொடர்ந்து ஓடிய கடற்கரைக் காவல் போலீஸ்காரரின் கண்ணில் கூட மண்ணைத் தூவுகின்ற வகையில் ஓடினாள், காமினி. 

ஓடிப்போய், அலையில் அடித்து இழுத்துச் செல்லப்படவிருந்த ஒரு நாய்க்குட்டியை, கைகளில் தூக்கிக் கொண்டு வந்து, தனக்கு அலைபேசியில் தகவல் அளித்த, தொடர்ந்து வந்த எதிர் வீட்டு முதியவர் பரந்தாமனிடம் கொடுத்தாள், காமினி. 

"காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே" என்று பாராட்டினார் பரந்தாமன்."
                     
"அடச்சே! இந்த நாயின் பெயர்தான் டைமண்டா?" என்று சொல்லியவாறு, மண் விழுந்த கண்களைக் கசக்கியபடி நடந்தார் போலீஸ்காரர். 
                   


தங்கையே தனக்குதவி (சவால் சிறுகதை)

2010 October 10. 

இரவு மணி ஒன்பது. 

காமினி கம்பியூட்டரில் கேம் ஆடிக்கொண்டிருந்தாள். மெளனமாக ஒரு பாப் அப் ... நியூ மெயில் ஃப்ரம் மாலினி இன் யுவர் இன் பாக்ஸ்! 
(இணைபிறப்பு) சகோதரியிடமிருந்து  தனக்கு வந்த ஈ மெயிலைப் படித்து திகைத்துப் போனாள். 
    
"காமினி, மிக அவசரம். போலீஸ் என்னைப் பின் தொடர்கிறது. உடனே புறப்பட்டு வா. என்னை இக்கட்டிலிருந்து விடுவிக்க, உன்னால் மட்டுமே முடியும். நீ செய்யவேண்டியது ரொம்ப சுலபமான விஷயம். நான் இன்னும் சற்று நேரத்தில் பாலாஜி ஹாஸ்பிடலில் (ஃபோன் எண் : 044 - 22.........) எமெர்ஜென்சி வார்டில் மிகவும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப் படுவேன். நீ என்னுடைய கைப்பையில் இருக்கின்ற சூயிங் கம் பாக்கெட்டை எடுத்துகொண்டு போய் பரந்தாமனிடம் கொடுத்துவிடு. பரந்தாமனைப் பற்றி நான் உனக்கு ஏற்கெனவே எல்லா விவரங்களையும் சொல்லிருக்கின்றேன். ஞாபகம் வைத்துக்கொள். பரந்தாமனுக்கும் உன்னிடமிருந்து பாக்கெட்டை வாங்கிக்கொள்ளச் சொல்லி,  மெயில் அனுப்பிவிட்டேன்."  

காமினி, தன் அலைபேசியில் ஹாஸ்பிடல் எண்ணை சேகரித்து வைத்துக்கொண்டாள். 

இரட்டைப் பிறவியான தன அக்கா மாலினியைக் காப்பாற்ற அவ்வப்போது என்னவெல்லாம் செய்யவேண்டி இருக்கிறது! பணத்துக்காக பல நிழலான வேலைகளைச் செய்து அயோக்கியர்களுக்கு சதியுதவி செய்யும் அக்கா மாலினியை, இரட்டைப் பிறவி என்று சொல்வதைவிட, ஈனப் பிறவி என்று சொல்லிவிடலாம் என்று தோன்றிற்று காமினிக்கு. அந்தப் பாவி பரந்தாமனும் படு அயோக்கியன். ஒரு மாநில அமைச்சரின் அந்தரங்க செயலாளர் இந்த அளவுக்கு கிரிமினல் புத்தியோடு இருப்பாரா! இதுதான் கடைசி உதவி. இனிமேல் அக்கா என்ன சொல்லி, எப்படி அழைத்தாலும் அவளுக்கு உதவுவதில்லை என்று உறுதி பூண்டாள் காமினி. 

இரவு மணி ஒன்பது பத்து.   
முதல்வர் மறுநாள் தன்னுடைய மெஜாரிட்டியை சட்டசபையில் நிரூபித்தாகவேண்டும். அமைச்சரவை சகாக்களில் தனக்கு யார் மீது எல்லாம் சந்தேகம் உள்ளதோ அவர்களை எல்லாம் தன்னை வீட்டிற்கு வந்து சந்திக்க சொல்லியிருந்தார் அவர். அமைச்சர்கள் அண்ணாமலை, அழகேசன், வெள்ளியங்கிரி, மற்றும் போலீஸ் உயர் அதிகாரி எல்லோரும் மீட்டிங் வந்து முதல்வருக்காக காத்திருந்தனர். அமைச்சர் அண்ணாமலைக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. படபடவென்று வந்தது. அரசாங்கத்தையே ஆட்டம் காண வைக்கும் தன்னுடைய சதித் திட்டம் வெளியாகி, தன்னால் மீண்டும் தலை எடுக்கமுடியாமல் போய்விடுமோ 
 
என்று பயந்தார். அவசர அவசரமாக தன் திட்டத்தில் மேற்கொண்டு என்னென்ன மாற்றங்களை செய்வது என்று யோசனை செய்ய ஆரம்பித்தார். முதலில், 'கைமாற இருந்த அந்த வைரத்தை, அந்த மடச்சி மாலினி கைப்பற்றி வந்து பரந்தாமனிடம் கொடுத்துவிட்டாளா இல்லையா' என்று தெரிந்துகொள்ள வேண்டும். பி ஏ பரந்தாமனை ஃபோனில் கூப்பிட்டு, தகவல் தாமதத்திற்கு கன்னா பின்னாவென்று திட்டிவிடவேண்டும் என்று முடிவுடன் அலைபேசியைக் கையில் எடுத்தார். வரவேற்பறையின் கோடியில் இருந்த பாத் ரூமிற்கு சென்றார். 

இரவு மணி ஒன்பது பதினைந்து.    
கம்பியூட்டரை இயங்க வைத்த பரந்தாமன் மாலினியிடமிருந்து வந்திருந்த மெயிலைப் படித்தார். 
"சார், மேட்டர் கைக்கு வந்துவிட்டது. போலீஸ் மோப்பம் பிடித்து பின் தொடர்கிறார்கள். பிடிபட்டால் விஷயம் ரொம்ப விபரீதமாகிவிடும். மேட்டர் உங்க கைக்கு, இன்னும் ஒருமணி நேரத்திற்குள் வந்து சேரும். என் ட்வின் சிஸ்டர் காமினி கொண்டு வந்து தருவாள். (பிளாக் பெர்ரி மூலமாக) மாலினி." 

பரந்தாமனின் அறைக்கதவு தட்டப்பட்டது. கம்பியூட்டரை அவசரமாக ஆஃப் செய்துவிட்டு, பரந்தாமன் கதவைத் திறந்தார். அங்கே சிவா நின்றுகொண்டு இருந்தான். 'இவன் எங்கே பூஜை வேளையில் கரடி மாதிரி?' என்று மனது நினைத்தாலும், "வாப்பா சிவராமா வா, எங்கே இந்தப் பக்கம், இந்த நேரத்தில்?" என்று வாய் வரவேற்றது.  

"எங்கே சார் என்னோட ஆளு? ரெண்டு வாரமாகக் காணோம்?" என்று கேட்டான் சிவா. 

"உன்னோட ஆளா? ஓஹோ மாலினியைச் சொல்றியா? போன மாதம்தான் நீ அவளை மீட் செய்தாய். அதற்குள் உன்னோட ஆளு ஆயிட்டாளா! அவளை நான் பார்த்தும் ரெண்டு வாரம் ஆயிடுச்சே" என்று புளுகினார் பரந்தாமன். 

பிறகு சொன்னார் "சிவா - பாஸ் எந்த நேரமும் கூப்பிடுவேன் என்று சொல்லி முதலமைச்சரைப் பார்க்க சென்றிருக்கிறார். நான் பாத்ரூம் கூடப் போகாமல் அவர் காலுக்காக வெயிட்டிங். ஒரு நிமிடம் இங்கேயே இரு. 
 
பாஸ் கிட்டயிருந்து என்ன கால் வந்தாலும், ஒரு நொடி கூடத் தாமதிக்காமல் எடு; ஆனால் நீ எதுவும் பேசாதே. உடனே என்னைக் கூப்பிடு' என்று சிவாவிடம் சொல்லிவிட்டு பாத் ரூம் பக்கம் சென்றார் பரந்தாமன். 
"சார் நான் அமைச்சர் அழகேசனின் பி ஏ! உங்க பி ஏ இல்லை!" என்றான் சிவா. 
"அதனால் என்ன? நீ என் நண்பேண்டா ..." என்று சொல்லி சிரித்தவாறு பாத்ரூம் உள்ளே சென்றார்  பரந்தாமன்.  

இரண்டே நிமிடங்களில், சொல்லி வைத்தாற்போல் 
 பரந்தாமனின் அலைபேசியிலிருந்து வித்தியாசமான அழைப்பொலி இசைத்தது. 

சிவா சற்றும் தாமதிக்காமல் அலைபேசியை எடுத்து பச்சைப் பொத்தானை அழுத்தியவுடன், அதிலிருந்து, "பரந்தாமன், மாலினி எங்கே? வைரங்களைக் கொண்டுவந்துவிட்டாளா? ஏன் உன்னிடமிருந்து தகவலே இல்லை? ......" சிவா மேற்கொண்டு கேட்குமுன், 
 பாத்ரூமிலிருந்து வேகமாக வெளியே வந்த பரந்தாமன், அலைபேசியை வேகமாக வாங்கி தன் காதில் பொருத்திக்கொண்டார். சிவாவை சைகையாலேயே வாயைப் பொத்திக்காட்டி, வெளியே செல்லும்படியும் சைகை காட்டினார். 

"....என்ன நான் கேட்டுக்கொண்டே இருக்கேன், நீ பதிலே சொல்லமாட்டேன் என்கிறாய்? மாலினி எங்கே? 
வைரங்களைக் கொண்டுவந்துவிட்டாளா?.." 

தணிந்த குரலில் விவரங்களை, தெளிவாகக் கூற ஆரம்பித்தார் பரந்தாமன். 

அறைக்கு வெளியே வந்த சிவா, செல் ஃபோனில் தான் கேட்ட சில வார்த்தைகளை, திரும்பத் திரும்ப சொல்லிப் பார்த்துக் கொண்டான். 

இரவு மணி ஒன்பது முப்பது.
மீண்டும் மீண்டும் செல் ஃபோன் வார்த்தைகள் நினைவுக்கு வந்தவுடன் சிவாவுக்கு ஏதோ பொறி தட்டியது.  
ஒரு மாநில அமைச்சரவையையே கவிழ்க்கின்ற சக்தி வாய்ந்த சில வைரங்கள் ஒரு பிரபல ஹோட்டலில் இருக்கிறது என்பதும், அது கை மாறினால், மெஜாரிட்டி தன் பக்கம் இல்லாமல் முதல்வர் ராஜினாமா செய்யவேண்டிய நிலை ஏற்படும் என்பதும் சிவாவிற்கு வேறு ஒரு ரூட்டில் கொஞ்சம் கொஞ்சம் தெரியும். ஆனால் தெரிந்ததை எல்லாம் யாரிடமும் சொல்ல மாட்டான் அவன். எந்தப் புற்றில் எந்தப் பாம்போ? 

'இந்த அயோக்கியர்கள் பிடியிலிருந்து மாலினியைக் காப்பாற்ற வேண்டும்'  என்று எண்ணமிட்டவாறு, மாலினி தங்கி இருக்கும் வொர்கிங் வுமன் ஹாஸ்டல் பக்கம் தன் டூ வீலரில், கைத்துப்பாக்கியோடு விரைந்தான். 

இரவு மணி ஒன்பது நாற்பது.     
அக்கா எழுதியிருந்த பாலாஜி ஹாஸ்பிடலைத் தேடிக் கண்டு பிடிப்பது 
 
காமினிக்கு
 
 சுலபமாகத்தான் இருந்தது, இரவு நேரம் என்பதால் விசிட்டர் பாஸ் போன்ற கெடுபிடிகள் ஏதும் இல்லை. எமெர்ஜென்சி வார்டில் விசாரித்து, ஐ சி யூ பக்கம் சென்றாள். ஐ சி யூ நுழைவு வாசலில் ஒரு போலீஸ்காரர் தூங்கி விழுந்துகொண்டு இருந்தார். மயக்கமாக உள்ள மாலினி நிச்சயம் எழுந்து ஓடிவிடமாட்டாள் என்கிற தைரியம் போலும்! 

சுலபமாக ஐ சி யூ வில் நுழைந்துவிட்டாள் காமினி. உள்ளே மாலினி, முகத்தின் மீது ஆக்சிஜன் மாஸ்க், வயர் கனெக்க்ஷன்களுடன் படுத்திருந்த நிலையைப் பார்த்ததும் காமினிக்கு வயிற்றில் ஏதோ சுருண்ட உணர்வு.  'அக்கா, நீ ஏன்தான் இந்தமாதிரி ஆபத்துகளில் எல்லாம் தலையைக் கொடுத்து மாட்டிக் கொள்கிறாயோ' என்று நினைத்தாள். அக்காவின் கைப்பையிலிருந்து சூயிங் கம் பாக்கெட்டை எடுத்து தன் கைப்பையில் வைத்துக்கொண்டாள். பிறகு அந்தப் பையை ஜாக்கெட்டினுள் செருகிக் கொண்டாள். 
   
அப்போ ஒரு நர்ஸ் ஓடிவந்தாள். வரும்பொழுதே "நைட் டூட்டி டாக்டர் ரவுண்ட்ஸ் வருகிறார். பேஷண்ட் தவிர வேறு யாரும் இருக்காதீங்க. அஞ்சு நிமிஷத்துல இடத்தை காலி பண்ணுங்க" என்று சத்தமாக சொல்லிக்கொண்டே போனாள். ஆஹா, இந்த நேரத்தில் வெளியே சென்றால், டூட்டி டாக்டர் அமளியில் அந்த அரைத் தூக்க போலீஸ்காரர் நிச்சயம் விழித்துக் கொண்டிருப்பாரே! என்ன செய்யலாம்? காமினிக்கு அவசரத்தில் ஒரு யுக்தி தோன்றியது. உடனே அவசரமாக, காலியாக இருந்த பக்கத்து படுக்கையில் படுத்து, கைக்குக் கிடைத்த வயர்கள் டியூப்கள் போன்றவைகளை தன் கைகளில் இழுத்து சுருட்டிக் கொண்டு, மாஸ்கை எடுத்து முகத்தின் மீது வைத்துக்கொண்டு நீல நிறப் போர்வைக்குள் தன் கைகளை மறைத்துக் கொண்டு, மயக்கத்தில் இருப்பவளைப் போல நிச்சலனமாகக் கிடந்தாள். 

காமினி பக்கம் கொஞ்சம் அதிருஷ்டம் இருந்தது என்றே சொல்ல வேண்டும். ஐ சி யூ விற்குள் ஒவ்வொரு பேஷண்டையும் பார்த்து, டிரிப் சீட் பார்த்து, நர்ஸ் சொல்வதைக் கேட்டுக்கொண்டு, வந்துகொண்டிருந்த டாக்டரின் அலைபேசி அவர் மூன்றாவது பேஷண்டை விட்டு விலகியதும், ஒலிக்கத் தொடங்கியது. அதை எடுத்து அவர், "எஸ் ஸ்பீக்கிங்,,,, ஓஹோ ஈஸ் இட்? ஓ காட்! உடனே சர்ஜரி ஏற்பாடுகள் செய்யுங்கள் - ஐ வில் கம் தேர் இன் அ மினிட். .." என்று சொல்லியவாறு, வேகமாக நடக்கத் தொடங்கினார். ஆனாலும் நர்சிடம், " நர்ஸ், எது போலீஸ் கேஸ் அட்மிஷன்?" என்று கேட்டார். நர்ஸ் மாலினி படுக்கையைக் காட்டியவுடன், அவளை ஒரு பார்வையும், அவளுடைய கேஸ் ஷீட்டை ஒரு பார்வையும் பார்த்துவிட்டு, "மீதி எல்லாம் எமெர்ஜென்சி ஆப்பரேஷன் முடித்துவிட்டு வந்து பார்க்கிறேன்" என்று சொல்லி அவசரமாக ஐ சி யூ விலிருந்து அகன்றார். 

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.    

இரவு மணி ஒன்பது ஐம்பது. 

வொர்க்கிங் வுமன் ஹாஸ்டல் சென்ற சிவாவுக்கு ஹாஸ்டல் வார்டன் சொன்ன செய்தி அதிர்ச்சியளித்தது. என்ன? மாலினி உயிருக்குப் போராடும் நிலைமையில், பாலாஜி ஹாஸ்பிடலில் சேர்க்கப் பட்டிருக்கின்றாளா! இவளுக்கு எதற்கு இந்த வைர விளையாட்டெல்லாம்? 

பாலாஜி ஹாஸ்பிடலை நோக்கி வந்துகொண்டிருந்த சிவாவின் கவனத்தை ஈர்த்தது சுற்று முற்றிலும் பார்த்துக் கொண்டே வந்த உருவம். அட மாலினி! 

டூ வீலரை ஓரமாக நிறுத்திவிட்டு, அவள் எதிரே போய் நின்று, "மாலினி, நில்" என்றான். 

காமினி நிற்கவில்லை. இன்னும் வேகமாக நடக்க முயன்றாள். அவன் தொடர்ந்து பின்னாலேயே வந்து, "மாலினி, உன் நன்மைக்குத்தான் சொல்கிறேன்.  இந்த வைர சமாச்சாரங்களில் எல்லாம் நீ தலையிடாதே. உன்னிடம் இருக்கின்ற அந்த சனியனை தூர எறிந்துவிட்டு நீ எங்கேனும் கண் காணாத இடத்துக்கு சென்றுவிடு." 

காமினிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. 

சிவா மேலும் சொன்னான். "பரந்தாமன், பரம அயோக்கியன். அண்ணாமலைக்காக   என்ன வேண்டுமானாலும் செய்வான். யாரையாவது பலி கொடுத்து, அமைச்சர் தலையைத் தப்ப வைக்கவேண்டும் என்றால் கூட உன்னை பலி கொடுத்து அமைச்சரிடம் அவனுக்கு இருக்கும் விசுவாசத்தைக் காட்டுவான். நான் சொல்வதைக் கேள் மாலினி." 

அப்பொழுதும் தொடர்ந்து காமினி தன் வழியில் நடக்கத் தொடங்கினாள். 

"ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை" என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா. 
   
"மாலினி, இப்பொழுதாவது நான் சொல்வதைக் கேட்டு நட. அந்த சனியனை தூக்கி எறி. உன் நன்மைக்குத்தான் சொல்கிறேன்."  

காமினிக்கு மூச்சே நின்றுவிடும் போல இருந்தது.   பிறகு ஒருவாறு சமாளித்து, "சார். உங்க பேரு என்ன என்று கூட எனக்குத் தெரியாது. ஆனா, நான் மாலினி இல்லை. அவள் பாலாஜி ஹாஸ்பிடல் ஐ சி யு வில் சுய நினைவு இன்றி படுத்திருக்கின்றாள். அவளைப் போய்க் காப்பாற்றுங்கள். நீங்க சொல்லுகின்ற வைரம் இப்போ அவள் கிட்ட இல்லை. அதனால கவலை இல்லாமல் போங்க." என்றாள். 

அவள் குரலைக் கேட்டதும் குழப்பமடைந்த சிவா, " நீ .... நீங்க ... மாலினி இல்லையா? .. அ யாம் சாரி" என்று சொன்னவாறு தன் டூ வீலரில் ஏறி பாலாஜி ஹாஸ்பிடலுக்கு விரைந்தான். 

காமினிக்கு சந்தோஷமாக இருந்தது. இனிமேல் அக்காவைப் பார்த்துக்கொள்ள ஒரு நம்பகமான ஆள் கிடைத்துவிட்டார்! பக்கத்தில் காலியாக வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி, அதில் ஏறிக்கொண்டு, செல்லவேண்டிய இடத்தைச் சொன்னாள். 

இரவு மணி பத்து பத்து.

"காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே" என்று பாராட்டினார் பரந்தாமன். 

முகத்தில் புன்னகையுடன், மனதுக்குள் 'சரிதான் போய்யா யாருக்கு வேண்டும் உன் பாராட்டு எல்லாம்? என் அக்காவைக் காப்பாற்றிவிட்டேன், அது போதும்' என்று நினைத்தவாறு வெளியே வந்தாள் காமினி. 
        

புதன், 13 அக்டோபர், 2010

காமினி சி(வா)த்த மாத்தி யோசி! (சவால் சிறுகதை)

எல்லாம் நினைத்தபடி, திட்ட மிட்டபடி நடந்தது.  டாக்டரின் ஒத்துழைப்புக்கு நன்றி சொன்னாள் காமினி.  நர்ஸ் ஜூனியர் டாக்டர் எல்லாரும் சாட்சிக்கு இருக்கிறார்கள். " பேஷண்ட் ஆபரேஷனுக்கு முன்பாக பயத்தில் தப்பி ஓடி விட்டார்"  என்று வலுவான சாட்சிகளை தயார் செய்தாகிவிட்டது அவர்களுக்குத் தெரியாமலே.  இனி டாக்டர் வெளியேறி அறை காலியானதும் தான் வெளியேறி காரியத்தை கவனிக்க வேண்டியதுதான்.  காமினிக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.  

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.      

       

சிவாவுக்கு செல் போனில் ஓர் அழைப்பு.  "மறக்காமல் ரெண்டு துப்பாக்கி எடுத்துக் கொண்டு வந்து விடு" என்று நினைவூட்டினாள்.  சொன்னபடி கேட்கும் பெருமாள் என்றால் சிவாதான்.  சொன்ன வண்ணம் செய்த பெருமாளுக்குப் போட்டி.  காமினிக்கு சந்தோஷத்தில் முகம் மலர்ந்தது.

பிறகு எல்லாம் பிளான்படி வேகமாக நடந்தது.  


பரந்தாமன் நல்ல ஆள்தான்.  என்னதான் நல்லவர் என்றாலும் வருமான வரி ஏய்க்காதார் யார்?  அவரும் அந்தத் திருக் கூட்டத்தில் ஒரு தொண்டர்.  தானம் தர்மம் எல்லாம் செய்வதற்கு மனம் தயங்கவில்லை என்றாலும் இந்த வரி கட்டுவதில் ஏமாற்றாமல் இருக்க மனம் வருவதில்லை.  அங்கும் இங்கும் லஞ்சம் கொடுக்க கள்ளப்  பணம்  இல்லாமல்  சரிப்படவில்லை.  பெரிய தலைகள் எல்லாம் வீட்டுக்கு அஸ்திவாரமாக ரகசிய அறைகள் கட்டி வைத்து ஆயிரம் ரூபாய் நோட்டுக்களாக அடுக்கி வைக்கிறார்களாம்.  பரந்தாமன் இன்னும் அந்த லெவலுக்கு உயரவில்லை.  அதனால்தான் பணத்தை வைரமாக மாற்றி ஒளித்து வைக்க முடிவு செய்து மும்பையிலிருந்து   இரண்டு கோடிக்கு ஆறே ஆறு வைரம் வாங்கி வந்தார்.

அந்த ஐந்து நட்சத்திர ஓட்டலில் முன்பே பதிவு செய்து, பின் காலி செய்து காலியாகவே வைத்திருக்கப பட்ட அறையில் பூசாடியில் தண்ணீருக்கு நடுவே பாலிதீன் பையில் அண்டர் வாட்டர் ஸ்விம் செய்துகொண்டிருந்தது அந்தப் பொதிவு. திட்டமிட்டபடி அதை எடுத்து வருவதற்காக  சிவாவை சரியான வேஷத்தில் வெளியில் பாதுகாப்பாக நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்தாள் காமினி.  கையில் துடைப்பமும் பணியாளியின் உடையும் அவளுக்கு கொஞ்சம் கூடப் பொருத்தமாக இல்லைதான். என்ன செய்வது! சிவாவுக்கு ஓட்டல் செக்யுரிட்டி  யூனிபாரம் நன்றாகப் பொருந்தியிருந்தது!!   

    

காமினி பொட்டலத்துடன் வெளியே வரும்போது அடுத்த அறையிலிருந்து  இரண்டு நல்லுடையணிந்த முரடர்கள் வெளிப்பட்டார்கள்.  அவர்கள் காமினியை நெருங்கி என்ன ஏது என்று கேட்பதற்கு முன்னால் கைத்துப்பாக்கியுடன் பாய்ந்து வந்தான் சிவா.   

     

"ஏய், யார் நீ? இங்கே என்ன செய்யறே?  இந்த அறையைத்தான் காலையிலேயே கிளீன் செய்தாகிவிட்டதே?  இங்கே உனக்கு என்ன வேலை?  எங்கே உன் அடையாள கார்டு?"  பட பட வென்று பொரிந்த படி வந்த சிவா " கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ.  இந்தப் பசங்க யாருன்னே தெரியலை. " என்று கிசு கிசுத்துவிட்டு " சார் நீங்க கொஞ்சம் உள்ளே போங்க.. ஓட்டல்லே டெரரிஸ்ட் அட்டாக் இருக்குன்னு தகவல் வந்திருக்கு " என்றதும் இரண்டு தடியன்களும் மும்பை தாக்குதல் நினைவுக்கு வர தப தபவென்று உள்ளே ஓடினார்கள்.    

   

"ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை" என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.


செல்வாக்குள்ள அரசியல்வாதியின் கையாட்கள் கண்டபடி வேட்டையாடுவதாக பலத்த வதந்திகளுக்கு நடுவே வைரம் வந்தடைய வேண்டும்.  அதற்குதான் இந்த நாடகம் எல்லாம்.

ரூமுக்குள் பாய்ந்து கதவை தாளிட்டுக் கொண்ட குண்டர் இருவரும் பாத்ரூமுக்குள் பதுங்கிக் கொண்டிருக்க வேண்டும்.  சந்தடியே இல்லை.  போலீஸ் படை வீரர்களாக இருந்தாலும் செல்வாக்குள்ள அரசியல் புள்ளிக்கு அடியாளாக பணி புரிய வேண்டிய நிர்ப்பந்தம்.  உடுப்பு போடாத சமயத்தில் துணிச்சல் சற்றுக் குறைவாகத் தான் இருக்கும் இல்லையா!  

 சிவாவும் காமினியும் பரந்தாமனை சந்தித்து பாக்கெட்டைக் கொடுத்து கமிஷனைப் பெற்றுக் கொண்டனர்.  


"காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே" என்று பாராட்டினார் பரந்தாமன். 


"சார் போலீஸ் வேறு, இந்த மாதிரி கைக்கூலிகள் வேறு.  இதுங்களுக்கு வேறே பேர் வச்சுக் கூப்பிடறதுதான் சரி." என்றாள் காமினி.    


 அதன் பிறகு எல்லாரும் பார்க்கும்படியாக அதே ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனாள் காமினி.  


துப்புத் துலக்கிக் கொண்டு வந்த இரண்டு அதிகாரிகள், ஆசுபத்திரியில் வந்து விசாரிக்கும் போது அவர்களுக்கு பதில் தயாராக இருந்தது. 


" சார் அந்தப் பெண் வயித்துவலி என்று பொய் சொல்லி அட்மிட் ஆனாள்.  பிறகு சோதனை செய்து முடிவெடுக்கப் போகும் தருணத்தில் தப்பி ஓடி விட்டாள் " என்று சொல்லி டாக்டர் ஒத்துழைத்தார்.  

             

நீங்களே சொல்லுங்கள் டாக்டர் நல்லவரா?  பரந்தாமன் கெட்டவரா? காமினி யோக்கியமான பெண்ணா இல்லையா?