செவ்வாய், 31 மே, 2011

கே யைத் தேடி 04


அத்தியாயம் 4: "அகப்பட்டதை சுருட்டுடா ...!"

பொன்னுசாமி தொடர்ந்து சொல்லத் தொடங்கினார்.

"நான் வேலையில் சேர்ந்த புதிதில், மகாபலிபுரம் ஏரியால டூட்டி.
ஒருநாள், இதேமாதிரி ஒரு கார் கேட்பாரில்லாமல் குகைக் கோயில் அருகே நின்றிருந்தது. சாதாரணமாக காலை அல்லது மாலை நேரத்தில் வருகின்ற டூரிஸ்ட் கூட்டம் எல்லாம் அன்று இரவு அல்லது மறுநாள் காலையில் திரும்பிப் போயிடுவாங்க. ஆனால் நான் சொன்ன கார் இரண்டு நாட்களாக அங்கேயே நின்றிருந்தது,
      
அது ஒரு வெளி நாட்டுக் கார். பிரிட்டிஷ் கார் என்று உள்ளூர் போக்குவரத்து  அலுவலகத்தில் பேசிக்கொண்டார்கள்.  காரின்  சொந்தக்காரரைக் கண்டுபிடிக்க அந்தக் காலத்தில் அதிக வசதிகள் கிடையாது. எங்கள் உயர் அதிகாரி ஒருவர் சொன்ன யோசனையின் படி, அது பிரிட்டன் வண்டி என்பதால், சென்னையில் உள்ள வாகனங்கள் தயாரிக்கும் ஒரு தனியார்  கம்பெனியில் அந்தக் காரை கொண்டுபோய் நிறுத்தி விடுவது என்றும், அந்தக் கம்பெனிக்காரர்கள், தங்கள் பிரிட்டிஷ் தலைமை அலுவலகங்கள் வழியாக டெலக்ஸ் அனுப்பி,காரின் சொந்தக்காரரைக் கண்டுபிடித்து, அவர்களிடம் காரை சேர்ப்பித்து விடுவார்கள் என்றும் கூறப்பட்டது. அதன்படி நாங்க அந்தக் காரை, அப்படியே கொண்டுபோய் அந்தக் கம்பெனியில் நிறுத்திவிட்டு வந்துவிட்டோம். அவர்கள் ஒரு மாத காலத்தில், அந்தக் காரின் உரிமையாளரை அல்லது வாரிசுதாரரைக் கண்டு பிடித்து அவர்களிடம் வண்டியை ஒப்படைத்துவிட்டார்கள் என்றும் கேள்விப்பட்டேன். "

"இதுல போலீசுக்குத் தெரியாம மறைப்பதற்கு என்ன இருக்கு பொன்னுசாமி?"

"இதுல இதுவரையிலும் ஒண்ணும் இல்லை அம்மா. ஆனால் அதற்குப் பிறகு நான் கேள்விப்பட்ட விஷயம் ஒன்று இருக்கின்றது."

"அது என்ன? யார் மூலமாகக் கேள்விப்பட்டீங்க?"

"அவர்களின் இங்கிலாந்து கம்பெனியிலிருந்து, அந்தக் காரை அனுப்பச் சொல்லும்பொழுது காரையும் அது சம்பந்தப்பட்ட பொருட்களையும் மட்டும்தான் அனுப்பவேண்டும். மற்ற பொருட்கள் எதையும் சுங்கவரி பிரச்னைகள் வரும் என்பதால், ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டார்களாம். அந்தக் காரினுள் இருந்த சில வெளிநாட்டுப் பொருட்கள் சில அதிகாரிகளின் உபயோகத்திற்காக எடுத்துக் கொள்ளப்பட்டன என்று அங்கு வேலை பார்த்த ஒரு நண்பர் சொன்னதாக எனது உயரதிகாரி சொன்னார். மேலும் அவர் சொல்லும்பொழுது, பொன்னுசாமி, நம்ம ஒரு நல்ல சான்சை விட்டுவிட்டோமே, என்று வருத்தப்பட்டுக் கொண்டார்."

"அதனால - இப்போ அதே மாதிரி கேட்பார் இன்றி நின்று கொண்டிருந்த காரில் ஏதாவது மாட்டினால், அதை எடுத்துக் கொள்ளலாம் என்று உங்களுக்குத் தோன்றியதா?"

"ஆமாம் அம்மா - அதனாலத்தான் புத்தி கேட்டுப் போயி சொல்லாம விட்டுட்டேன். அதனாலத்தான் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை யாரோ ஒருவர் ரிப்பேர் செய்துகொண்டு இருந்ததும், அவரைப் பற்றிய முழு விவரங்களும், அடையாள அட்டை உட்பட எல்லாவற்றையும் பார்த்து, கேட்டுத் தெரிந்துகொண்டேன்."

இதுவரையிலும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த சோணகிரி "அப்போ அந்த ஆளு, இந்த நகரத்தின் எந்த மூலையில் இருந்தாலும், அடையாளம் காட்டுவீர்களா?" என்று கேட்டார்.

சோபனா உடனே. "ஐயோ, அழகு சொட்டுது. அந்த தீனதயாள் இப்போ நரகத்தின் ஏதோ ஒரு மூலையில் அல்லவா இருப்பார்!" என்றார்.

"ஓ ஆமாம் ஆமாம் - நிறைய பாக்கெட் நாவல் படித்துப் படித்து,கொஞ்சம் உணர்ச்சிவசப் பட்டுவிட்டேன்" என்றார் சோணகிரி, அசடு வழிய.

"சரி பொன்னுசாமி - இப்போதைக்கு இறந்துபோன தீனதயாளை நன்கு பார்த்தவர் நீங்க ஒருவர்தான். எப்போ எங்களுக்கு அதிகப்படி விவரங்கள் வேண்டுமோ அப்போது உங்களைத் தொடர்பு கொள்கின்றோம். இப்போ டூட்டிக்குப் போறீங்களா? நாங்களும் அந்தப் பக்கம்தான் போகிறோம். உங்களை உங்க டூட்டி ஸ்பாட்டில் இறக்கி விட்டுவிடுகிறோம். வாங்க" என்று கூறியபடி, வெப் காமில் ஒட்டியிருந்த சூயிங் கம்மை எடுத்து, உருட்டி, குப்பைக் கூடையில் போட்டு, கம்பியூட்டரின் ஆடியோ சிஸ்டத்தை மியூட் நிலையிலிருந்து மீட்டார் சோபனா. மறுமுனையில் ரங்கன் முன்பே தன சிஸ்டத்தை மூடி மங்களம் பாடிவிட்டு சென்றிருந்தது புரிந்தது.

எ சா காரை ஓட்ட, காரில் சென்றுகொண்டு இருந்தனர் மற்ற மூவரும். அப்பொழுது சோபனாவின் அலைபேசியிலிருந்து, 'வெற்றிவேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல்' என்றது ரிங் டோன்.

"குரங்கன் காலிங்" என்று அதன் சின்னத் திரை அறிவித்தது. 

(தொடரும்)  
                                 

திங்கள், 30 மே, 2011

அனுப்பியவர் அப்பாதுரை; எழுதியவர் யார்?


இன்னொரு கனவு

"உக்காருங்க, டாக்டர் வருவார்!"
         
உட்கார்ந்தான். சுவரில் மாட்டியிருந்த சித்திரத்தைப் பார்த்தான். முன்பே பரிச்சயம் ஆனாற்போல் ஒரு நெருக்கம் அந்த ஓவியத்தில் தோன்றியது. இந்தப் பரிச்சயம் தான் மிகவும் ஹிம்சைப்படுத்துகிற சமாசாரம். முன்பே வந்து போன உணர்வு. நடக்கப் போகும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் மனதுக்குள் முதல் நாளே பதிந்து விடும் பரிதாபம். இப்போது கூட டெலிபோன் மணி அடிக்கும், டாக்டர் வருவார்.
   
அடித்தது. டாக்டர் வந்தார். இவனுக்குக் கொஞ்சம் கூட ஆச்சரியம் ஏற்படவில்லை. கடந்த ஒரு மாதமாகவே இப்படித்தான். இப்போது டாக்டர் டெலிபோனை வைத்துவிட்டு இவனைப் பார்த்துச் சிரிப்பார். "எஸ், ப்ளீஸ்?" என்று புருவத்தை உயர்த்தி விசாரிப்பார்...

"எஸ், ப்ளீஸ்?"

"டாக்டர், எனக்குக் கொஞ்ச நாளா ராத்திரியில் வித்தியாசமான கனவுகள் வருது டாக்டர்"

"சொல்லுங்க"

"ராத்திரி என்ன கனவு வருதோ, அது மறுநாள் அப்படியே நடக்குது டாக்டர்!"

"அப்படின்னா?"

"ஒரு நாள் ராத்திரி ப்ளேன்ல போறதா கனவு கண்டேன்; மறுநாள் ஆபீஸ்ல அவசர வேலையா பம்பாய்க்கு பிளேன் டிகெட் கொடுத்து அனுப்பிச்சாங்க. பிளேன்ல  ஏர்ஹோஸ்டஸ், அவ சிரிப்பு, பக்கத்து சீட் பெரியவர், அவர் இருமல்... எல்லாம் என் கனவுல வந்தது டாக்டர்"

"ம்.."

"இன்னொரு நாள் சின்னவயசுல என்னோட படிச்ச ராஜாமணி வீட்டுக்கு வர்ற மாதிரி கனவு கண்டேன். மறுநாள் கதவைத் திறந்து பாத்தா ராஜாமணி நிக்கறான்!"

"ம்.."

"அப்புறம் ஒரு நாள் மேனேஜர் எனக்கு இருநூறு ரூபாய் சம்பள உயர்வு குடுக்கற மாதிரி கனவு; மறுநாள் மேனேஜர் கூப்பிட்டு இங்கிரிமென்ட் குடுக்கறார். இன்னொரு நாள் ஒரு கிரிகெட் மாட்ச் முழுக்கப் பாத்தேன். ஸ்கோர், விகெட், எல்பிடபிள்யூ.. எல்லாம் அப்படியே இருந்தது. பைத்தியம் பிடிச்சுடும் போலிருக்கு டாக்டர்!"

"உங்க கனவுல அமானுஷ்யமா ஏதாவது வருதா? நம்ப முடியாதபடி.. நீங்க பறக்கற மாதிரி.."

"கிடையாது டாக்டர். ஆனா நினைச்சுக்கூட பாக்காதது எல்லாம் வந்திருக்கு"

"எப்படி?"

"எங்க ஆபீஸ்ல விமலான்னு.. நாப்பது வயசு இருக்கும். அவங்க ஒரு நாள் என் கனவில் வந்தாங்க.. இந்த மாதிரி.. வீட்டில யாருமே இல்லை.. அப்படின்னாங்க"

"உங்களை வீட்டுக்குக் கூப்பிட்டாங்களா?"

"இல்லை. அப்ப முழிச்சிக்கிட்டேன். ஒரு டம்ளர் தண்ணியைக் குடிச்சுட்டுப் படுத்தேன். மறுபடி அந்தக் கனவு வரலை!"

"மறுநாள் ஆபீஸ் போனீங்களா?"

"போனேன். விமலா எங்கிட்டே வந்தாங்க. அவங்க வீட்டுல யாரும் இல்லனு சொன்னாங்க. கனவுல வந்த மாதிரியே அந்த இடத்துலயே கட் ஆயிடுச்சு!"

"ஏன்?"

"அந்த சமயத்துல அவங்களுக்கு டெலிபோன் வந்தது. நானும் நழுவிட்டேன்"

"கவலைப்படாதீங்க. இந்த மாதிரி இன்ட்யூஷன்.. மூளை கூர்மையா இருக்கிற சிலபேருக்கு ஏற்படுவதுண்டு. சில பேருக்கு ஊகங்கள் சரியா அமைந்து விடுவதுண்டு. சில மாத்திரைகள் எழுதித் தரேன். நல்லா தூக்கம் வரும். இந்த மாதிரி கனவுகள் வராது!"

"இல்லை டாக்டர். இது வேறே ஏதோ சக்தி.  இப்படியே போனா - எனக்குப் பயமா இருக்கு டாக்டர்!"

"இதுல பயப்பட ஒண்ணுமே இல்லை". டாக்டர் மருந்துச்சீட்டில் எழுத ஆரம்பித்தார்.

"ஈக்விப்ரோம்! அந்த மாத்திரைதானே எழுதுறீங்க? அப்புறம் படுக்கப் போகுமுன் வேலியம்-5. இதை எழுதிக் கொடுத்த பிறகு நான் குடுக்கப் போற ஃபீஸ் ஐம்பது ரூபாய்! கரெக்ட்?"

"..."

"இதைத்தானே இன்ட்யூஷன் அது இதுன்னு சொல்றீங்க? என் கனவுல நேத்து ராத்திரியே வந்தாச்சு!"

"அப்புறம் வேறென்ன கனவில் வந்தது?"

"இன்னிக்குக் காலைல வீட்டைவிட்டுக் கிளம்பும்போது கத்தியை எடுத்துக்கறேன்"

"கத்தி?"

"பாகெட் நைஃப். அப்புறம் ஒரு ஹோட்டல்ல போய் மசால் தோசை, காபி சாப்பிடறேன். வெளிய வந்து ஒரு பாக்குப் பொட்டலத்தைப் பிரிச்சு வாயில போட்டுக்கறேன்.  அப்புறம் ஒரு வில்ஸ் ஃபில்டர். ஒரு ஆட்டோ பிடிச்சு இங்கே வரேன். உங்க கிட்டே என் கனவுகள் பற்றிச் சொல்றேன். நீங்க ப்ரிஸ்க்ரிப்ஷன் தரீங்க. அதுக்கபுறம் கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்கேன். உங்களை ஒரு தம்ளர் ஐஸ் வாட்டர் கேக்கறேன். உங்க அசிஸ்டென்டைக் கூப்பிட்டு ஐஸ் வாட்டர் கொண்டுவரச் சொல்றீங்க. குடிக்கறேன். அவன் போன பிறகு நான் பாக்கெட்டில் இருக்கற கத்தியை எடுத்து உங்க மேலே பாயறேன். மாத்தி மாத்திக் குத்தறேன். கத்தியைத் துடைச்சு பாக்கெட்ல வச்சுக்கிட்டு வெளியில் ஓடறேன்!"
           
"இந்த மாத்திரை ஒரு வாரம் சாப்பிடுங்க. அப்புறம் என்னை வந்து பாருங்க, ஓகே?". டாக்டர் சிரித்துக் கொண்டிருந்தார்.

"டாக்டர், தாகமா இருக்கு, ஒரு தம்ளர் ஐஸ் வாட்டர் கிடைக்குமா?" 

                  ================ X =========================          
       
எங்கள் கமெண்ட்: ரைட்டு நாங்க ஒண்ணும் கேக்கறதா இல்லை. நாங்க கேள்வி கேட்டா அப்பாவி, 'அவ்வ்வ்வவ்வ்வ்வ்' சொல்லுவாங்க; சாய் - ரிப்பீட்டு சொல்லுவாரு. எங்களுக்கு ஏன் வம்பு.  ;-) 
              

வெள்ளி, 27 மே, 2011

கே யைத் தேடி! 03

                          
மாலை நான்கு மணி சுமாருக்கு, போ வ காவலர் பொன்னுசாமி, எ சா - கா சோ அலுவலகத்திற்கு வந்தார். 

முகத்தில் பெரிய மீசை. வெற்றிலைக் காவி பற்கள். மீசையை விடப் பெரியதாக ஒரு அசட்டுச் சிரிப்பு. வாயிலே கொஞ்சம் சாராய நெடி. சரளமாக வாயில் திருநெல்வேலித் தமிழ். இவைகள்தான் பொன்னுசாமி. 

"வாங்க பொன்னு வாங்க!"

"அம்மா வணக்கம். நீங்க போலீசா?"

"இல்லைங்கோ. நாங்க போலீசுக்கு எப்போதுமே எதிரிகள். எப்பவாவது நண்பர்கள்." என்றார் சோபனா வெப் காமைப் பார்த்து சிரித்தபடி. கம்பியூட்டர் மானிட்டரில் ரங்கன் - கொன்றுவிடுவேன் என்று சைகை காட்டினார். பொன்னுசாமி மானிட்டருக்குப் பின்புறம் அமர்ந்திருந்ததால், மானிட்டரில் என்ன தெரிகின்றது என்பதை அவர் அறிய வாய்ப்பு இல்லை. 

போலீசிடம் அவர் ஏற்கெனவே தெரிவித்திருந்த விவரங்களை கிளிப்பிள்ளை மாதிரி திரும்பவும் ஒப்புவித்தார் பொன்னு. 

"பொன்னு - நீங்க தின்னவேலியா?"

"ஆமாம் அம்மா. நீங்க?"

"எங்க பாட்டி தின்னவேலி பக்கத்துல பாளையப் பேட்டை."

"அட! நம்ம ஊரு பொண்ணா நீங்க? அதுதான் இவ்வளவு புத்திசாலியா இருக்கீங்க!"

"பொன்னு உங்க ரிட்டையர்மெண்ட் எப்போ?"

"இன்னும் ஒரு வருஷத்துல தாயீ!"

"ரிட்டையர் ஆகறதுக்குள்ள சி பி ஐ விசாரணை எல்லாம் பார்த்துவிடலாம் என்று நெனச்சுகிட்டு இருக்கீங்களா?"

"ஐயய்யோ என்னம்மா நீங்க - ஏன் அப்பிடி சொல்லுறீங்க?"

"ஆமாம் பொன்னு - நேற்று இரவு நடந்த விபத்து சாதாரணமான விபத்து இல்லை. குண்டு வெடித்திருக்கின்றது. விரைவில் சி பி ஐ லெவல் விசாரணை வரும். அப்போ நீங்க இப்போ சொன்ன டீக்கடை பெஞ்சு கதை எல்லாம் ஒன்றும் எடுபடாது."

நிஜமாகவே பயந்து போய்விட்டார், பொன்னுசாமி. "அம்மா நீங்க கேளுங்க நான் எனக்குத் தெரிந்த எல்லா உண்மையையும் சொல்லிவிடுகிறேன்."

"இறந்தவர் பெயர் என்ன?"

"தீனதயாள்" 

"அவரை இதுக்கு முன்பு உங்களுக்குத் தெரியுமா?" 

"தெரியாதம்மா"

"அவர் பெயர் எப்படி உங்களுக்குத் தெரியும்?"

"அவருடைய ஐ டி கார்டுல இருந்ததுங்கோ."

"அந்தக் கார்  எவ்வளவு நாட்களாக அங்கே நின்றிருந்தது?" 

"புதன் கிழமை மாலைதான் முதலில் பார்த்தேன்."

"கார் என்ன நிறம்? பதிவு எண் என்ன?"

"கார் கருப்பு நிறக் கார். மாருதி எஸ்டீம் வண்டி. பதிவு எண் (தன்னுடைய டயரியைப் பார்த்து) " XX NN X NNNN" 

(கம்பியூட்டர் மானிட்டரில் ரங்கன் உதட்டைப் பிதுக்கி, வலது கை கட்டை விரலை தரைப் பக்கம் காட்டுகிறார். Not traceable.) 

"பொன்னுசாமி - புதன் கிழமையிலிருந்து அந்தக் காரைப் பார்த்திருக்கின்றீர்கள்; நேற்று வெள்ளிக்கிழமை. அதுவரை ஏன் அந்தக் காரைப் பற்றி உங்கள் இலாக்காவில் புகார் எதுவும் கொடுக்கவில்லை? அதனுடைய பதிவு எண்ணை எதற்காக உங்கள் டயரியில் எழுதி வைத்தீர்கள்?"

"அதை நான் சொல்லுகிறேன் அம்மா - ஆனால் அது எனக்கும் இங்கு உள்ளவர்களுக்கும் மட்டும்தான் தெரியவேண்டும். வேறு யாருக்கும் - முக்கியமாக போலீசுக்கு தெரியக் கூடாது!"

"அப்படியா? சரி" என்று கூறியவாறு, வெப் காம் லென்சை தான் மென்று கொண்டிருந்த சூயிங் கம் கொண்டு அடைத்து, தன சிஸ்டத்தை மியூட் செய்தார் சோபனா. 

தன கம்பியூட்டர் மானிட்டரில் பார்த்துக் கொண்டிருந்த ரங்கன், ஆங்கிலத்தில் ஒத்தை வார்த்தை ஒன்றை பல்லிடுக்கு வழியாகக் கூறினார்.  
           
(தொடரும்) 
              

வியாழன், 26 மே, 2011

ஒரு மனோதத்துவ கேள்வி

                             
பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள, 'பேருந்தின் இருக்கை அமைப்பு'  படத்தைப் பாருங்கள். 

கேள்வி ரொம்ப சாதாரணமானது. 

கேள்விக்கு முன்பாக சில குறிப்புகள். 

* இந்தப் பேருந்து பத்து கிலோ மீட்டர் தாண்டி இருக்கின்ற ஓர் ஊருக்கு சென்று வருகின்ற பேருந்து. 

* நீங்கள் இந்தப் பேருந்தில் பயணம் செய்யவேண்டி உள்ளது. 

* நீங்கள் தனி ஆள். கூட நண்பர்கள் மற்றும் உறவினர் யாரும் வரவில்லை. 

* நீங்கள் இந்தப் பேருந்தில் ஏறும்பொழுது, அதில் உள்ள எல்லா இருக்கைகளும் காலியாக உள்ளன. பேருந்து கிளம்பு முன் எல்லா இருக்கைகளுக்கும் ஆட்கள் வந்து விடுவார்கள். இருக்கைகள் நிரம்பிய பிறகு வருபவர்கள் அனைவரும் நின்று கொண்டே பயணம் செய்ய வேண்டும். 


* இந்தப் பேருந்தில், ஆண்கள், பெண்களுக்கு என்று தனி இருக்கைகள் கிடையாது. 

* இந்தப் பேருந்தில், இருக்கை எண்கள் 1, 2, 6,10,14, 18, 26, 30, 34, 38,  மற்றும் 42 ஆகியவை, இடது பக்க ஜன்னலோரத்து இருக்கைகள். 

* இருக்கை எண்கள் 5, 9, 13, 17, 21, 23, 25, 29, 33, 37, 41 மற்றும் 46 ஆகியவை வலது பக்க ஜன்னலோர இருக்கைகள். 


* மற்றவை யாவையும் பயணிகள் பாதையை ஒட்டிய இருக்கைகள். 

கேள்வி: 
   
நீங்க இந்தப் பேருந்தில் பயணம் செய்வதற்காக ஏறினால், நாற்பத்தாறு இருக்கைகளில் எதில் வேண்டுமானாலும் அமர்ந்து பயணம் செய்யலாம் என்றால், நீங்கள் எந்த இருக்கையில் அமர்ந்து பயணம் செய்ய ஆசைப் படுவீர்கள்? 

(ஏன் என்பதையும் விருப்பப் பட்டவர்கள் சேர்த்துக் கூறலாம்!) 

நன்றி! 

பின் குறிப்பு: இந்தக் கேள்வியில் எடக்கு மடக்கு எதுவும் கிடையாது. இதற்கு நீங்கள் அளிக்கின்ற பதிலிலிருந்து முக்கியமான நான்கு விஷயங்கள் தெரிந்து கொள்ள முடியும் என்று எங்கள் (ரொம்ப நாட்களாகக் காணாமல் போயிருந்த) மனோதத்துவ நிபுணர் கூறுகிறார். பார்ப்போம் - பதில் அளிக்கின்ற வாசகர்கள் குறித்து அவர் என்ன சொல்கிறார் என்று! 
                               

புதன், 25 மே, 2011

கே யைத் தேடி! 02

                               
"வாங்க எ சா! மும்பை கிரிக்கட் கிரவுண்டில் ரொம்ப அடிச்சுட்டாங்களாமே? அப்படியா? ஏன் எங்க டிபார்ட்மெண்டில் புகார் கொடுக்கவில்லை? கொடுத்திருந்தா உங்களை அடிச்சவங்களைக் கண்டுபிடித்து, முட்டிக்கு முட்டி தட்டி இருப்போமே!" 

"ரொம்ப சிம்பிள் லாஜிக். நான் 'RAVANADESAM' அணி வெற்றி பெறும் என்று எழுதிக் கொடுத்திருந்தேன். அதை இந்தக் குரங்கு (வேறு யாரு? சோபனாதான்!) எங்கள் ப்ளாக் ல போட்டுடுச்சு. சும்மா விடுவாங்களா - அகில உலக இந்திய கிரிக்கட் அரைகுறை ரசிகர் கூட்டம்? லாடம் கட்டி அடிச்சுட்டாங்க! ஆனால் என்ன? - என்னை அடிச்சவங்க எல்லோரும் இந்திய அணி வெற்றி பெறவேண்டும் என்று வெறி கொண்டவர்கள். நான் கூறி இருந்ததும் இந்திய அணி வெற்றி பெறும் என்பதைத்தான்.

"நாந்தான் இந்திய அணி வெற்றி பெற்ற மறு நிமிடமே, நீங்க சொன்னதன் அர்த்தத்தை எங்கள் ப்ளாக் ல போட்டேனே சாமி!" என்றார் சோபனா! 

 "நான் புகார் கொடுத்தாலும் நீங்க பிடிச்சா முட்டிக்கு முட்டி தட்டு படப் போறது, இந்திய அணி ஆதரவு ரசிகர்கள்தான்! அதனால நான் புகார் கொடுக்கவில்லை. மேலும் அதே ரசிகர்கள்தான் என்னை மறுநாள் ஆஸ்பத்திரியில் சேர்த்தவர்கள்!  

"எந்த ஆஸ்பத்திரியில்? பைத்தியகார ஆஸ்பத்திரியிலா?" என்று கேட்டு சிரித்தார் சோபனா. 

"ஆமாம் இப்போ சிரி! அப்போ முதல் பதிவில் என்னை மாட்டி விட்டவள் நீதானே!"

"சரி சரி - சண்டை முடித்து சமாதானமா போங்க! இந்த வெடி குண்டு கேஸ்ல நீங்க யாரையாவது விசாரணை செய்யவேண்டுமா?" என்று கேட்டார் ரங்கன். 
  
"ரங்கன் சார்! போக்குவரத்துக் காவலர் பொன்னுசாமியை 'டூட்டி' முடிந்ததும் இங்கே வந்து போகச் சொல்லுங்க."
              
"சரிம்மா. ஆனால் அவர் சொன்னது எல்லாவற்றையும் என்னுடைய செல்லில் வீடியோ எடுத்து வைத்திருக்கின்றேன். அதோடு குண்டு வெடிப்பு ஏற்பட்ட இடத்தில் அப்படியே சிதறிய பொருட்களையும், சிதிலமான கார் பாகங்களையும் ஃபோட்டோவும், வீடியோவும் எடுத்து வைத்துள்ளேன். எல்லாவற்றின் காப்பியும் இதோ இந்த பென் டிரைவில் இருக்கு. இதை எல்லாம் பார்த்தால் பிறகு பொன்னுசாமியை பார்க்க வேண்டியதே அவசியம் இருக்காது." 

"சோணகிரி சார் - பென் டிரைவில் இருப்பதை அப்படியே நாம் ஹார்ட் டிரைவுக்குக் காபி செய்துகொண்டுவிட்டு பென் டிரைவை ரங்கன் சார் கிட்ட திருப்பிக் குடுங்க." 

"அப்படி என்றால் பொன்னுசாமியை இங்கே பார்க்கவேண்டும் என்கிற அவசியம் இல்லைதானே சோபனா?"

"சார். நீங்க போலீஸ்காரர். போலீஸ் விசாரணை செய்யும்பொழுது, யாராக இருந்தாலும் ரொம்ப எச்சரிக்கை உணர்வோடு, அளவோடுதான் பதில் சொல்லுவார்கள். எங்கேயாவது கொஞ்சம் அதிகமாக எதையாவது சொன்னால் நீங்க விட்டு விடுவீங்களா? கோர்ட், கேஸ், சாட்சி, குறுக்கு விசாரணை, நெடுக்கு விசாரணை என்று இழுத்து அவரை நொந்து நூடுல்ஸ் ஆக்கி விடுவீர்கள். மேலும் போலீஸ்காரர்கள் பெரும்பாலும் வண்டியில் பூட்டப்பட்ட குதிரை மாதிரி, Blinkers கட்டிக் கொண்டு செயல்படுபவர்கள். யாரேனும் ஒருவரை சந்தேகிக்கின்றீர்கள் என்றால், அந்த திசையிலேயே பெரும்பாலும் விசாரணை வண்டியை ஓட்டுவீர்கள். நடுவிலே அசல் குற்றவாளியே வந்து நின்றுகொண்டு, லிப்ட் கேட்டால் கூட வண்டியை நிறுத்தமாட்டீர்கள். அதனால பொன்னுசாமியை நாங்க பார்த்து, கொஞ்சம் கேள்விகள் மட்டும் கேட்டுவிட்டு, அனுப்பிடறோம். நீங்க வழக்கம் போல உங்க ஆபீசில் இருந்துகொண்டு, இங்கே நடப்பது எல்லாவற்றையும் வெப் காம் மூலமாக உங்கள் கம்பியூட்டரில் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருங்கள். பிறகு நீங்க என்ன சொல்லணுமோ அதை சொல்லுங்க."

"சரிம்மா சோபனா. உங்க யாருக்காவது இன்றைக்கு நான் பெயில் எடுக்க வேண்டிய அவசியம் இருக்குமா?" 

"ஆமாம் ரங்கன் சார். சம்பவம் நடந்தது எத்தனை மணிக்கு?"

"நேற்று இரவு ஏழு மணி சுமாருக்கு. "

"அதே நேரத்தில் இன்று இரவு நாங்கள் அங்கே சென்று பார்ப்போம். எங்களைப் பற்றி உங்க அலுவலகத்தில் யாராவது புகார் பதிவு செய்தால், எங்களுக்கு பெயில் கொடுக்கத் தயாரா இருங்க."

"நாங்க அந்த இடத்தில் இருந்தவைகள் எல்லாவற்றையும் மூட்டை கட்டி ஃபோரன்சிக் லாபுக்கு அனுப்பிவிட்டு அந்த இடத்தில் மேப் வரைந்து வைத்திருக்கின்றோம். அங்கே போயி நீங்க என்ன ஸ்டடி செய்துவிடப் போகின்றீர்கள்?"

"சார் காரினுடைய நம்பர் ப்ளேட், சாசி ரெநிவல் ப்ளேட் - ஏதாவது கிடைத்ததா?"

"நம்பர் ப்ளேட் என்ன - நம்பரே என்ன என்று பொன்னுசாமி சொல்லுவார். ரெநுவல் ப்ளேட் உருகி போய் தாயத்து மாதிரி இருந்தது. சரி இதை எல்லாம் தேடித்தான் அங்கே போகப்போறீங்களா?"

"இல்லை சார். Gemba பற்றிக் கேள்விப் பட்டிருக்கீங்கதானே? அதுதான் இது."

"ஓ? Gemba வா? அது எனக்குத் தெரியும் சாமிக்குத் தெரியுமா என்று கேளு சோபனா!"

"எனக்கு ரம்பாதான் தெரியும். போன மாதம் அப்பாதுரை புண்ணியத்தில் பூனம் பாண்டே பத்தி தெரிந்துகொண்டேன். ஆனா அவரெல்லாம் ரம்பாவுக்குப் பக்கத்தில் கூட வரமுடியாது" என்றார் எ சாமியார்! 

(தொடரும்) 

நீலக் கமெண்ட்: Gemba பற்றி எல்லாம் நாங்க ஒண்ணும் கேள்வி கேட்பதாக இல்லை. அதனால் வாசகர்கள் Gemba பற்றி கூகிளிட்டுப் பார்த்து அதை இங்கே கருத்து உரைக்க வேண்டாம். அப்படிக் கருத்துப் பதிவு பண்ணினாலும் மற்ற வாசகர்கள் அதைப் படிக்கவேண்டாம் என்று வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறோம்! (௦சோடா, சோடா!)
           

செவ்வாய், 24 மே, 2011

கே யைத் தேடி! 01

                            
ஆமாம் - கதை அங்கே முடிவடைந்துவிடவில்லை. நாம் எல்லோரும் தமிழ்ப் பட ரசிகர்கள் ஆயிற்றே! அது எப்படி ஒரு 'தீ' இறப்பதோடு கதையை முடிக்க முடியும்? 
               
'கே' யைக் கண்டுபிடித்து 'கீசு கீசு' என்று கீசிவிடவேன்டாமா? நம்பியார் சாட்டையால் அடித்தால் அதை வாங்கிக் கொண்டு எம் ஜி யார் சும்மா போய்விட முடியுமா! பாட்டுப் பாடாமல் அடித்த நம்பியாரை, பாட்டுப் பாடி, புரட்டி புரட்டி சாட்டையால் அடிக்க வேண்டாமா! வெடி வைத்த கே'யைக் கண்டு பிடித்து பீஸ் பீசாக்கி விட வேண்டாமா! 
                             
இனி கே' யைக் கண்டு பிடிக்க நம்ம லேடி ஜேம்ஸ் பாண்ட் காசு சோபனாவிடம் கேசை ஒப்படைத்துவிடலாம். 

*************************
"டீ குடித்தார் போக்குவரத்துக் காவலர்! 
  தீ குளித்தார் பழுது பார்த்தவர் !!"
   
என்று ஏராளமான ஆச்சரியக் குறிகளுடன் வெளியாகி இருந்தது - அந்தச் செய்தி, பிரபல நாளிதழ் ஒன்றில். சின்னா பின்னமாகிவிட்ட காரின் படங்களும் வெளியாகி இருந்தது. 

'ஊருக்கு வெளியே நெடுஞ்சாலையில் ஒதுக்குப் புறமான இடத்தில் நிறுத்தப்பட்டிருந்தது பழுதடைந்த கார் ஒன்று. காரை பழுது பார்த்துக் கொண்டிருந்த மெக்கானிக்கின் கவனமின்மையால், அருகில் வந்த ஒரு பெட்ரோல் கண்டெய்னர் லாரி காரின் பெட்ரோல் டாங்க் மீது உரசி, கார் தீப்பிடித்து எரிந்தது. மெக்கானிக்கை அவர் விபத்தில் பலியாவதற்கு சற்று முன்பு பார்த்துப் பேசிய போக்குவரத்துக் காவலர் பொன்னுசாமி, சற்று தூரத்தில் இருந்த டீக்கடையில் டீ அருந்திக் கொண்டிருக்கும் பொழுது இந்தப் பரிதாப விபத்து நடந்தது. சம்பவ இடத்திலிருந்து அப்பொழுதுதான் வந்து டீக்கடையில் அமர்ந்த பொன்னுசாமி, விபத்து நடந்த நேரம், பெட்ரோல் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஒன்று அதிவேகமாக நிறுத்தப்பட்டிருந்த கார் இருந்த திசையில் சென்றதையும், அது அந்தக் காரை முந்திச் செல்லும் நேரத்தில், நிறுத்தப்பட்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்ததை, தான் பார்த்ததாகவும், நமது நிருபரிடம் தெரிவித்தார். 
       
அதை உன்னிப்பாகப் படித்த கா சோ - 'ஹும் வழக்கம்போல கேசை முடிக்க ஏதோ ரீல் விட்டு ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள். யார் பேருல கேஸ் புக் பண்ணப் போறாங்களோ?'என்று சொன்னார். 
                   
அவருடைய உதவியாளர் திருவாளர் சோணகிரி (அம்மா அப்பா வெச்ச பெயரே அதுதானா என்றெல்லாம் கேக்கப்படாது! ) கேக்கப்படாது என்றவுடன் ஞாபகம் வருகிறது திருவாளர் சோணகிரிக்கு ஒரு காதுதான் நன்றாகக் கேட்கும். பாஸ் நோட்ஸ் கொடுக்கும் பொழுது, கேட்காத காது அவர் பக்கம் திரும்பி இருந்தால் - சில வார்த்தைகள் அவருக்குக் கேட்காது - அது அவர் அடிக்கின்ற மின் அச்சிலும் வராது. உதாரணத்திற்கு, 'Shilpa shetty denies reports that she is pregnant' என்று நோட்ஸ் கொடுத்தால் அவர் பவ்யமாக அதில் உள்ள denies என்ற வார்த்தையை காதில் வாங்கிக் கொள்ளாமல் மீதியை டைப் செய்து, பிரிண்ட் எடுத்துவிடுவார்! 

 கா சோ கூறியது அவர் காதில் அரைகுறையாக விழுந்ததால் - 'என்ன பாஸ்? வீட்டுல காஸ் தீந்து போச்சா? புக் பண்ணனுமா?' என்று கேட்டார்.

கா சோ இடது உள்ளங்கையில் வலது கை ஆள்காட்டி விரல் + நடு விரல் இரண்டையும் ஒரு தட்டுத் தட்டி, வலது கை கட்டைவிரலையும் ஆள்காட்டி விரலையும் இணைத்துக் காட்டினார். சோணகிரி தெரிந்துகொண்டார் - 'நோ'.

அந்த நேரத்தில், அறை வாயிலில் போலீஸ் பூட்ஸ் சத்தம் கேட்டது. இன்ஸ்பெக்டர் கு. ரங்கன்தான் வந்துகொண்டு இருந்தார். (ஆமாம் - ஆமாம் அப்பா, அம்மா வைத்த பெயர்தான் - அப்பா பெயர் குழந்தை, அவர் பெயர் ரங்கன்!)  

"வாங்க அங்கிள் - சௌக்கியமா? என்னுடைய உதவி எதுவும் தேவையா?"

"நியூஸ் படிச்சியாம்மா? அது பற்றி என்ன நினைக்கிறே?"

"படிச்சேன் அங்கிள். அந்த நியூஸ்ல முக்கால்வாசி புளுகு என்று, சேதமான காரின் படத்தைப் பார்த்தாலே நன்றாகத் தெரியுது. கேசை முடிச்சுட்டீங்களா? இல்லை, இன்னும் ஏதாவது விசாரணைகள் தொடருமா?" 

"கேசை இத்தோடு முடிக்க முடியாதம்மா. உங்க 'எ சா & கா சோ துப்பறியும் நிறுவனம்' இதில் எங்களுக்கு உதவ முடியுமா?" 

"நிச்சயம் உதவ முடியும்" என்று சொன்னவாறு உள்ளே நுழைந்தார் எலெக்ட்ரானிக் சாமியார்! 

(தொடரும்) 
              
நீலக் கமெண்ட்: வாசகர்களை கேள்வி எதுவுமே கேட்கலையா? அவ்வ்வ்வவ்வ்வ்வவ் !

திங்கள், 23 மே, 2011

எப்படியாவது தப்பிக்க வேண்டும் - இறுதிப் பகுதி

                    
'கா' வின் காரை ஓட்டிச் சென்றவர்கள், அவர்களுக்கு இடப்பட்டிருந்த  கட்டளைகளை மின்னல் வேகத்தில், மளமளவென்று முடித்தனர். 
                     
காரினுடைய பதிவு எண் பலகைகள் உடனடியாக மாற்றப்பட்டன. காரின் நிறம் மாற்றப்பட்டது. காரின் பதிவுப் பத்திர நகல்கள் தீக்கிரையாகின. 

கார் ஊருக்கு வெளியே, அதிக ஜன நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியில், சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டது. காரின் கதவுகள் பூட்டப் பட்டன. காரைக் கிளப்புகின்ற சாவி, ஒரு கவரில் போடப் பெற்று அப்படியே, ஒரு குறிப்பிட்ட விலாசத்திற்கு கூரியர் அனுப்பப்பட்டது. (அது 'தீ' யின் விலாசம்.)

இந்த வேலைகளை, 'கே' என்பவர் அனுப்பியிருந்த நிரல் படி செய்து முடித்ததற்கு இருவருக்கும் கூலியாக ஆளுக்கு ஒரு லட்ச ரூபாய்கள் மிஞ்சியது. 
            
இது 'தீ' யினுடைய கதை! 

எனவே, இந்த 'கே' யார், அவர் என்ன ஆனார் என்றெல்லாம் யாரும் கேட்காதீர்கள். 
  
எனிவே 'கே' பற்றிய கதை பிறகு எங்கள் பதிவில் வெளியாகக்கூடும்!  

***** 
'தீ' க்கு, 'கே' யார் என்பதோ, அவர் எங்கே இருக்கிறார் என்பதோ தெரியாது. அவருக்குத் தெரிந்ததெல்லாம் 'கே ஃபார் கேஷ்' என்பது மட்டும்தான். 'கே' இடும் ஆணைகளை அப்படியே செய்து முடித்தால், கை மேல் பலன் கிடைக்கும் என்பது அவருக்குத் தெரியும். சொன்ன காரியத்தை செய்து முடித்துவிட்டு, தன்னுடைய நெட் பாங்கிங் கணக்கில் பார்த்தால், ஓரிரு நாட்களுக்குள், பல கணக்குகளிலிருந்து பணம் பெயர்ந்திருப்பது தெரியும். நதிமூலம், ரிஷிமூலம் போன்று பணமூலமும் ஆராயக் கூடாது என்பது அவர் கொள்கை. 

காலையில், கூரியரில் அவர் பெயருக்கு வந்த கார் சாவியை எடுத்து வைத்துக்கொண்டு, அடுத்து என்ன தகவல், எப்படி வருகின்றது என்று எதிர்பார்த்திருந்தார்.   

தகவல் வந்தது. வாசலில் மாட்டப்பட்டிருந்த கடிதப் பெட்டியில், ஒரு வெள்ளை நிற உறை. அதன் மேல் 'தீ' என்ற ஒரே எழுத்து. வேறு எந்த தகவலும் இல்லை. உள்ளே எழுதியிருந்தது மிகவும் சுருக்கமாக. 

'மெக்கானிக் தீ அவர்களின் பார்வைக்கு. ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் உள்ள காரை ஓட வைக்கவும். அதற்கு முன்பு அதில் 'உலை' வைக்கவும். எந்த நேரத்தில் 'உலை' வேலை செய்யவேண்டும் என்பதை, உங்கள் வீட்டின் அருகாமையில் உள்ள மருந்துக் கடையில் கேட்டுத் தெரிந்துகொள்ளவும். 
                    
மருந்துக் கடையில் கேட்கவேண்டிய கேள்வி: 'கிழவர் மருந்து குடித்தாரா? அடுத்த வேளை மருந்து எத்தனை மணிக்கு?' முதல் கேள்விக்கு வருகின்ற பதில் எதுவாக இருந்தாலும், இரண்டாவது கேள்வியின் பதில் முக்கியம். அதன் படி 'உலை' வேலை செய்ய வேண்டும். 
   
'உலை' வேலை செய்யும் நேரத்திற்கு பத்து நிமிடங்கள் முன்பாக  - வண்டியை சந்தடி மிகுந்த சந்தையில் நிறுத்திவிட்டு, உடனடியாக அவ்விடத்தை விட்டு அகன்றுவிடவும். மற்றவை வழக்கம் போல். 

'தீ' கடிகாரத்தைப் பார்த்தார். மணி மாலை நான்கு. மருந்துக் கடைக்குச் சென்றார். மருந்துக்கடையில் இரண்டு பேர் இருந்தார்கள். வழக்கமான ஒருவர், முற்றிலும் புதியவர் ஒருவர். வழக்கமாக இருப்பவர், 'என்ன வேண்டும்?' என்று கேட்டார். 'தீ' கேட்டார்: "கிழவர் மருந்து குடித்தாரா? அடுத்த வேளை மருந்து எத்தனை மணிக்கு?" 

வழக்கமாகக் காணப்படுபவர், புதியவரைப் பார்த்தார். புதியவர் சொன்னார், 'கிழவர் மருந்து குடித்து வருகிறார். அடுத்த வேளை மருந்து, இன்று இரவு ஏழு மணிக்கு.' 
   
'தீ' வீட்டுக்கு விரைவாக வந்து, தன்னுடைய மெக்கானிக் பெட்டியை எடுத்துக் கொண்டு, அதில் வைக்கப்படவேண்டிய உலையும், மற்றும் கருவிகளும் சரியாக உள்ளதா என்று உறுதிப் படுத்திக் கொண்டு, வெளியே வந்தார்.  அருகில் இருந்த ஆட்டோவைப் பிடித்து முதலில் அந்த சந்தைப் பக்கம் போகச் சொன்னார். நிறைய ஜனங்கள் கூட்டம் கூட்டமாக வாங்குவதிலும் விற்பதிலும் மும்முரமாக இருந்தனர். காரை எங்கே நிறுத்தலாம் என்பதை உத்தேசமாக முடிவு செய்வதற்காக அவர் அங்கே சென்றார். ஆட்டோவிலிருந்து இறங்கி, பணம் கொடுத்து அனுப்பினார். பிறகு, உலைக்கு வேண்டிய சில விஷயங்களை சந்தையில், சில்லறை விலையில் வாங்கிக் கொண்டார். self tapping screws மட்டும் எங்கும் கிடைக்கவில்லை. அவர் வழக்கமாக வாங்குகின்ற கடையில், 2 BA / 4 BA ஸ்க்ரூ வகைகள் இருந்தன. அலைந்து திரிந்து பல கடைகள் ஏறி இறங்கிய பின் ஒரு வழியாக அவர் தேடிய ஸ்க்ரூ கிடைத்தது. இதற்குள் மாலை மணி ஐந்தாகி விட்டது.     
   
காரை எங்கே நிறுத்துவது என்ற இடத்தைத் தேர்ந்தெடுக்க கால் மணி நேரம் ஆகியது. அதன் பிறகு, மற்றொரு ஆட்டோவைப் பிடித்து, சந்தையிலிருந்து, கார் இருந்த ஒதுக்குப் புறமான இடத்தை நோக்கி ஆட்டோ ஓட்டுநரை ஓட்டச் சொன்னார். அதே நேரத்தில், சந்தையிலிருந்து அந்தக் கார் இருக்குமிடத்தை அடைய எவ்வளவு நேரம் ஆகின்றது என்பதையும் 'தீ' கணக்கு செய்து வைத்துக்கொண்டார். சரியாகப் பன்னிரண்டு நிமிடங்கள்! 

மணி மாலை ஐந்தரை. 

காரைக் கண்டு பிடிப்பது மிகவும் சுலபமான வேலையாக இருந்தது. காரைத் திறந்து, அதனுள், தான் கொண்டு வந்திருந்த உலை, உலைப் பெட்டி, போன்றவற்றை வைத்துவிட்டு, தன் சிறிய துளையிடும் கருவியை எடுத்துக் கொண்டு, அதை காரின் ஃபியூஸ் பெட்டியின் உபரி இணைப்புகளில் இணைத்து, காருக்கு அடியில் சென்றார். மொத்தம் எட்டு துளைகள் இட்டார். கார் ஃப்ளோரின் அடிப்பாகத்தில். ஒவ்வொரு துளையும் மார்க் செய்து துளையிட்டு முடிக்க, துளைக்கு நான்கு நிமிடங்களாக, மொத்தம் முப்பத்திரண்டு நிமிடங்கள் ஆயின. 
       
மணி மாலை ஆறு ஐந்து. 
       
காருக்குள் இருந்த 'உலை' மற்றும் உலைப் பெட்டி ஆகியவைகளை 'தீ' எடுத்துக்கொண்டு காரின் அடியில் சென்று அவற்றைப் பொருத்தும் வேலையில் மும்முரமானார். இரண்டையும் காருக்கு அடியில் பொறுத்த இருபது நிமிடங்கள் ஆயின. எட்டு ஸெல்ப் டாப்பிங் ஸ்க்ரூகளும் பொருத்தப் பட்டு, அவைகள் வெளியே வராதபடி அவைகளை சோல்டரிங் செய்து முடித்த பின், இனிமேல் சோல்டரிங் அயர்ன் டிஸ்கனெக்ட் செய்து, ஒயர்களை  உலையின் இன்புட் இணைப்புக்குத் திருப்பிவிட்டு ... நேரம் மாலை ஆறு இருபத்தெட்டு. 

உலையின் டைமர் முப்பது நிமிடங்களில் செயல் படுமாறு அமைத்துவிட்டு, அதை 'ஸ்டார்ட்' பட்டன் அமுக்கிவிட்டு 'இது ஒரு திரும்பப் பெற முடியாத கட்டளை. கவுண்ட் டவுன் ஆரம்பிக்கு முன்பு சரி பார்த்துச் சொல்லவும்' என்ற எச்சரிக்கையைப் புறக்கணித்து .... OK என்று கொடுத்தவுடன், டைமர் ஓடத் துவங்கியது. 

அவசரம் அவசரமாக தன்னுடைய உபகரணங்கள், அடையாளம் காண முடிந்த சில குப்பைகள் எல்லாவற்றையும் தன்னுடைய மெக்கானிக் பையில் காரின் அடியில் படுத்த படியே அள்ளிப் போட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் ....

காருக்கு வெளியே, காருக்குப் பக்கத்தில் வந்து யாரோ காரின் பக்கவாட்டுக் கதவை யாரோ பலமாகத் தட்டினார்கள்.   
                
"ஐயா யாருங்க? காருக்கு அடியில? கார் ஓனரா அல்லது கார் திருடனா?"
    
பூட்ஸ் கால்களைப் பார்த்த உடனேயே தெரிந்து போய்விட்டது, டிராபிக் கான்ஸ்டபுள். உடனே 'தீ' அவசர முடிவு ஒன்றை எடுத்தான். காருக்குக் கீழே படுத்த படியே பேசி (இயன்ற வரையில் தன் முகத்தைக் காட்டாமல்) கான்ஸ்டபிளை அனுப்பி விடுவது. தன் முகத்தைக் காட்டி விட்டால், பிறகு கோர்ட்டில் சாட்சியாக நிற்கும் கான்ஸ்டபிள் - குற்றவாளிக் கூண்டில் நிற்கின்ற தன்னை சுலபமாக அடையாளம் காட்டிவிடுவார் என்ற பயம் 'தீ'க்கு வந்தது. 

"சார்! நான் ஓனருமில்லை, திருடனும் இல்லை. கார் மெக்கானிக்." 

"ஓனர் இல்லை என்பது சரி. ஆனால் ஓனர் இல்லாமல் ஒரு மெக்கானிக் மட்டும் எப்படி வந்தீர்கள்? ஓனர் எங்கே? இந்தக் கார் இங்கே இரண்டு நாட்களாக கேள்வி கேட்பார் இல்லாமல் நின்றுகொண்டு இருக்கின்றது. இப்போ மட்டும் எப்படி இதை எடுக்க வந்தீங்க?" 

"சார்! ஓனர் அவசரமாக வெளியூர் சென்றுள்ளார். அவர் காரை எப்பொழுதும் ரிப்பேர் பார்க்கும் மெக்கானிக் நான்தான்"

"ஓ அப்படியா? அடையாள அட்டை ஏதாவது வைத்திருக்கின்றீர்களா?"

" இருக்கிறது சார்!" என்று சொன்னபடியே, வலது கையால் பாண்ட் பைக்குள் இருந்த தன்னுடைய போலி அடையாள அட்டையை வெளியே எடுத்தார் 'தீ'. 
                             
 'தீ' அடையாள அட்டையை, காருக்கு அடியிலிருந்தவாறு வெளியே நீட்டினார். அதைக் குனிந்து கையில் வாங்கிய போக்குவரத்துக் காவலர், அந்த அடையாள அட்டையின் மீது டார்ச் அடித்துப் பார்த்தார். உடனே 'தீ'க்குள் 'டிங்' என்று ஒரு எச்சரிக்கை மணி அடித்தது. டார்ச் ஒளி அடுத்துத் தன் முகத்தின் மீது விழப் போகின்றது என்பதை நொடியில் புரிந்து கொண்டவராக, அவர் தன் முகத்தை மறுபக்கம் வேகமாகத் திருப்பிக் கொண்டு, காருக்கு அடியில் படிந்திருந்த தூசியை வலது கையால் தேய்த்து எடுத்து முகத்தில் பூசிக் கொண்டார். பிறகு திரும்பி, அவருடைய முகத்தை டார்ச் வெளிச்சத்தில் காட்டினார். முகத்தைப் பார்த்த கான்ஸ்டபிள் ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு, இனிமேல் மெக்கானிக்குகளுக்கு அடையாள அட்டைக்கு ஃபோட்டோ எடுக்கும் பொழுது, முகத்தில் கொஞ்சம் கரியை பூசி படம் எடுக்க வேண்டும்! மெக்கானிக்குகள் பெரும்பாலான நேரங்களில் மூக்கில் கரியுடன்தான் காணப்படுகிறார்கள்.' என்று சொல்லியவண்ணம் அடையாள அட்டையை 'தீ' கையில் திணித்துவிட்டு நடந்தார். 

'தீ' அவசரம் அவசரமாக அடையாள அட்டையை தன இடது கையினால் வாங்கி வலது பக்க பாண்ட் பையில் திணிக்க சற்றுத் திரும்ப வலது காலையும் இடது கையையும் கொஞ்சம் திருப்பும் பொழுது 'மளுக்' கென்று 'தீ'யின் வலதுகால் முட்டி சுளுக்கிக் கொண்டது. 

முதலில் அந்த சுளுக்கின் தீவிரம் 'தீ'க்கு உறைக்கவில்லை. ஆனால் காரின் அடியிலிருந்து வெளியே வருவதற்கு வலது காலை அசைக்காமல் வெளியே வரமுடியவில்லை. வலது காலை சற்று அசைத்தால் கூட வலி - தீவிரமான வலி. வலியில் உயிரே போய்விடும் போன்ற நிலைமை. யாராவது அவரை, கையால் பிடித்து இழுத்தால்தான் வெளியே வரமுடியும் என்கிற நிலை. 

ஆனால், அருகில் யாருமே இல்லை.   
                       
நேரம் மாலை மணி ஆறு ஐம்பத்தெட்டு. 

எப்படியாவது தப்பிக்க வேண்டும்! 

எப்ப்ப்ப் படியாவது தப்பிக்க வேண்டும்! 

தப்பிக்க வேண்டும்! 


ப் 

பி 

க் 

க 

வே

ண் .........

'டும்!' 
       
                

வெள்ளி, 20 மே, 2011

எப்படியாவது தப்பிக்கவேண்டும்!

                                  
அவன் ஒரு தீவிரவாதி. அவனுக்கு வேறு பெயர்கள் உண்டு. ஆனால் அவை முக்கியமில்லை. வேண்டுமானால் அடையாளத்திற்காக அவன் பெயரை, 'தீ' என்று வைத்துக்கொள்வோம்! 

அவன் நாளை செய்யப்போகும் செயலைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னால் - ஐந்து நாட்களுக்கு முன்பு அந்த ஊரில் நடந்த அதிக முக்கியமில்லாத ஒரு நிகழ்வைச் சொல்லிவிடுகிறேன். 

*****


அந்த ஊர் 'ஃப்ரீ ஆட்ஸ்' (free Ads)  (இலவச விளம்பரங்கள்) பேப்பரில் அன்று காலைதான் 'கா' என்பவர் , தன்னுடைய பழைய காரை விற்பதாக விளம்பரம் கொடுத்திருந்தார். அதே தினத்தில் அவரை அலை பேசியிலும் தொலை பேசியிலும் ஆறு பேர் தொடர்பு கொண்டார்கள். இருவர் மட்டும் அன்றே வந்து காரை பார்வை இடுவதாய் சொல்லி, அதே போன்று வந்து காரையும், அதன் படிவங்களையும் பார்வை இட்டனர். 
                
மாலை மூன்று மணிக்கு வந்தவர், அந்தக் காரை தன்னுடைய வயதான தாய் தகப்பனுக்காக வாங்கி, அதனை அவர்கள் உபயோகத்துக்காக அனுப்பி வைக்கப் போகின்றேன் என்று கூறினார். எவ்வளவு ரூபாய்க்கு விற்கத் தயாராக இருக்கின்றீர்கள் என்று கார் சொந்தக்காரர் 'கா' விடம் கேட்டார் வா வ 1. 'கா' சற்று யோசித்து, 'எழுபதாயிரம் ரூபாய் ' என்றார். வா வ 1 ,  'கொஞ்சம் குறைத்துக் கொள்ளல் ஆகாதா?' என்று கேட்டார். அதற்கு 'கா' , 'அடுத்த வாரம் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். அதுவரை இந்தக் கார் விற்பனை ஆகவில்லை என்றால் சொல்கிறேன்' என்றார். பிறகு வாங்க வந்த முதல் நபர், தன் தொடர்பு எண் போன்ற விவரங்களைக் கொடுத்துவிட்டு, தான் ஒரு உன்னத இலட்சியத்திற்காக இந்தக் காரை வாங்குவதால், தனக்கே முன்னுரிமைக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டு அகன்றார். 

இரண்டாவதாக வந்தவர், மிகவும் நல்ல ஆடைகள் எடுப்பாக அணிந்து, ஓர் உதவியாளர் சகிதமாக வந்திருந்தார். அவரும் காரினுடைய உள்ளும் புறமும் மற்ற படிவங்களையும் பார்வை இட்ட பின், 'இந்தக் காரை இதுவரையிலும் எவ்வளவு பேர் வந்து பார்த்தார்கள்?' என்று கேட்டார். 'கா' சொன்னார் - காலையில் விளம்பரம் வந்ததிலிருந்து இதுவரை பதினாறு பேர் அழைத்தனர். வந்து பார்த்தவர்கள் ஆறு பேர்கள். நீங்கள் ஏழாவது ஆள்.'

'சரி இதுவரையிலும் வந்து பார்த்தவர்களில், யார் அதிகம் விலை கூறினார்கள்?'

'இதுவரையில் வந்து பார்த்தவர்களில் அதிக விலை என்பது ... எண்பதாயிரம் ரூபாய் வரை கொடுக்கத் தயார் என்று இருவர் கூறினார்கள்.' 

'சரி, எங்களுக்கு அதிக நேரம் இல்லை. நாங்க இந்தக் காருக்கு எண்பத்தைந்தாயிரம் ரூபாய் கொடுக்கின்றோம். எங்கள் பாஸ், சினிமாக்களுக்கு சண்டைக் காட்சிகளில் அடித்து நொறுக்குவதற்காக கார், பைக், டி வி போன்ற பொருட்களை விற்பவர். அவர் ஊரில் இல்லை. அதிசய மனிதன் படப் பிடிப்பு நடக்கின்ற பக்கத்து மாவட்டம் சென்றிருக்கின்றார். அவரிடம் இந்தக் காரைக் காட்டி, 'வேண்டுமா, வேண்டாமா' என்று கேட்கவேண்டும். இந்தக் காரை அவரிடம் காட்ட எடுத்துச் செல்லலாமா?'

'கா' நிஜமாகவே திகைத்துப் போனார். வாயில் வார்த்தைகளே வரவில்லை. 'அது எப்படி நான் .. நீங்க ... உங்களை முன்னே பின்னே பார்த்தது கூட இல்லை .. இன்னும் ரொம்பப் பேருங்க காரைப் பார்க்க வருகிறோம் என்று சொல்லி இருக்கின்றார்கள். நீங்க எங்கே போறீங்க, எப்ப வருவீங்க என்றும் தெரியாமல் ... காரை உங்கள் முதலாளி வேண்டாம் என்று கூறிவிட்டால் ....' என்று தட்டுத் தடுமாறி பேசினார். 

வாங்குவதற்கு வந்த இருவரும், ' ஓ இதுதானா பிரச்னை. இந்தாங்க. இதுல தொண்ணூறு ஆயிரம்  ரூபாய் இருக்கு. இந்தக் காரை வாங்கிக் கொள்வது  முதலாளிக்கு சம்மதம் என்றால், காரோடு வந்து பேப்பர்களையும், வாங்கிக் கொண்டு, மீதி ஐந்தாயிரம் ரூபாய்ப் பணத்தை வாங்கிக் கொள்கிறோம். முதலாளிக்குப் பிடிக்கவில்லை என்றால், காரைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, இதிலிருந்து எண்பதாயிரம் ரூபாயை மட்டும் வாங்கிச் செல்கிறோம். சரியா?' 

'கா' வுக்கு இது ரொம்ப வேடிக்கையாக இருந்தது. சரி. அவர்கள் காரை வாங்கிக்கொண்டாலும் லாபம், வாங்கிக் கொள்ளாவிட்டாலும் தனக்கு லாபம். எனவே, இந்த போக்குவரத்துக்கு ஒப்புக் கொண்டார்.  

அவர்கள் காரோடு செல்வதற்கு முன்பு அவர்கள் கொடுத்திருக்கும் நோட்டுகள் கள்ள நோட்டுகளா அல்லது நல்ல நோட்டுகளா என்று சோதித்து, அவைகள் நல்ல நோட்டுகள்தான் என்று உறுதிப் படுத்திக் கொண்டார். அவர்களுடைய அலைபேசி எண்ணை வாங்கி, எழுதி வைத்துக் கொண்டார். 

கா அவருடைய காரைப் பார்த்தது அதுவே கடைசி. 

(அடுத்த பதிவில் முடியும்.) 

(அடுத்த பதிவில் கதை எப்படி முடியும் என்று ஊகம் செய்து சுருக்கமாகக் கருத்து கூறும் வாசகர்களுக்கு, 'எ ஷெ ஹோ' பட்டம் வழங்கப் படும்!) 
       

செவ்வாய், 17 மே, 2011

உள் பெட்டியிலிருந்து 2011 05


கவித... கவித...
   
மரத்தில் 
உயர இருக்கும் பூக்களை
பறிக்கும் முயற்சியில்
தவறி தண்ணீரில் விழுந்தவன், 
சுற்றிலும் இருந்த
அல்லி, தாமரை என்று
அழகிய மலர்க் கூட்டத்தைக்
கண்டதும் தெரிந்து கொண்டேன்
பல சமயம்
கடவுள் நம் கனவுகளை விட
அழகிய
பரிசுகளை அளிக்கிறார் என்று.
ஆகாயக் கனவுகளிருந்து
தவறி விழும்
நம்மை
லட்சியக் குன்றுகளில்
நிறுத்துவது இயற்கை
என்னும் விதி.
       
பணத்தை
விரும்பாதே..
அது   
   
படுக்கையை தரும்,         
தூக்கத்தை அல்ல,

புத்தகங்ககளைத்  தரும்,
அறிவை அல்ல. 

வசதிகளைத் தரும்,
சந்தோஷத்தை அல்ல. 

எனவே,
-
-
-
-
-
-
-

பணத்தை
என் கணக்குக்கு
மாற்றி விடு!

கடவுளே....!

கோவில் வாசலில் வாசகம்..
கடவுளை நம்பு...
ஏனென்றால்
எல்லா கேள்விகளுக்கும்
கூகிளில் விடை கிடைப்பதில்லை!

சரியான பதிலப்பு...

கே : கான்க்ரீட் தரையில் ஒரு முட்டையை எப்படி உடையாமல் போடுவது?
ப: கவலை வேண்டாம்..இதற்கெல்லாம் கான்க்ரீட் உடையாது!
====== 

கே : பாதி ஆப்பிள் போல தெரிவது எது?               
பதி : வெட்டப்பட்ட மறு பாதி.       
====== 

கே : காலை உணவில் சாப்பிடவே முடியாதது எது?
பதி : இரவு உணவு!
====== 

வசதி, சவுக்கியம், நிம்மதி
இவை
மேலும் மேலும்
சம்பாதிப்பதிலோ
நிறைய செலவு செய்வதிலோ,
சேர்த்து வைப்பதிலோ
இல்லை.
இருக்கும் வரை
போதும் என்று
நினைக்கும்
மனதில்
இருக்கிறது.

அப்பாவிக் காதல்

ஒளிந்து பிடித்து
விளையாடிக் கொண்டிருந்த
அவன், அவள்...
       
விளையாட்டின் நடுவே
அவள் அனுப்பினாள்
குறுஞ்செய்தி
அவனுக்கு.. 
     
நீ என்னை
கண்டு பிடித்தால்
இறுக்கி அணைத்து
ஒரு உம்மா...
   
கண்டு பிடிக்க
முடியவில்லை
என்றால்
அதுவரை ஒளிந்திருப்பேன்

-
-
-
-
-
-

தோட்டத்தில்.! 
    
நேரம்...

உங்கள் நேரம் சரியாக இருந்தால் உங்கள் தவறுகள் கூட விளையாட்டாகும்.
நேரம் சரியில்லை என்றால் உங்கள் விளையாட்டுகள் கூட தவறாகும்அவர் ரெடி...நீங்க ரெடியா....

கடவுளுக்கு இருக்கிறது நேரம்
உங்களுக்கு
செவி சாய்க்க..

உங்களுக்கு நேரம் இருக்கிறதா
பிரார்த்தனை செய்ய?  

கவலை...

நான் மிகவும் 
விரும்புபவர்களை 
இழந்து விடுவேனோ 
என்று அடிக்கடி
அச்சப் படும் எனக்குள்
இன்னொரு கேள்வி..
என்னையும்
யாராவது இப்படி யோசிப்பார்களோ?