செவ்வாய், 30 நவம்பர், 2010

பதில் சொல் நண்பனே...


திகில் கதை!
எஸ் எம் எஸ்ஸில் என் நண்பன் கேட்ட கேள்வி என்னை உலுக்கி விட்டது! அவனை யார் கேட்டார்களோ? பாவம்.
சரி உங்களையும் அந்தக் கேள்வியைக் கேட்டு வைக்கலாமே என்று கொஞ்சம் நீட்டி முழக்குகிறேனே..

இரவு மணி பன்னிரெண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் சமயம்.
மழை சுழன்று சுழன்று அடிக்க, காற்று 'உயங்' என்று பிய்த்து வாங்கிக் கொண்டிருந்தது.

கையில் பட்ட அடியை விட காலில் பெரிய அடி. நடப்பதே சிரமமாக இருந்தது. தெரிந்த ஏரியாதான். இன்னும் சற்று நடந்தால் என் நண்பன் வீடு வந்து விடும்.

அவன் வீட்டில் யாரும் இல்லை. எல்லோரும் ஊர் சென்றிருக்கிறார்கள். வீட்டில்தான் இருக்கிறானா என்று பார்க்க வேண்டும். முகத்தில் மழையோடு சேர்ந்து ரத்தத்தின் பிசு பிசுப்பும் தெரிந்தது.
வீடு உள் பக்கம்தான் தாழிடப் பட்டிருந்தது. பெருமூச்சு விட்டபடி காலிங் பெல் அழுத்தினேன்.

கதவைத் திறந்த நண்பன் என் கோலம் கண்டு பதறிப் போனான். "என்னடா ஆச்சு?"
சொன்னேன்.

மாடிக்கு சென்றோம். 'சட்'டென மின்சாரம் தடைப் பட்டது.

ஒரே இருள்.

நண்பன் டார்ச் லைட்டை எடுத்து இயக்கினான். எரிந்த உடனேயே உயிரை விட்டது அது.

பல்ப் அவுட்.

"இரு...கீழே போய் எமெர்ஜென்சி லேம்ப் எடுத்துகிட்டு, உனக்கு பேண்டேஜ், மருந்தும் எடுத்து வருகிறேன்" என்றபடி தடவிக் கொண்டே கீழே போனான்.

கொஞ்ச நேரம் ஆயிற்று. கரண்ட் வந்த பாடில்லை. கீழே ஏதோ உருளும் சத்தம் கேட்டது. கூடவே லேண்ட் லைன் தொலைபேசியும் அடிக்கத் தொடங்கியது.
ஃபோனை எடுத்தான் நண்பன். எதிர்முனையில் என் வீட்டிலிருந்து பேசுகிறார்கள் என்று தெரிந்தது. ஒரு சாலை விபத்தில் நான் இறந்து விட்டேன் என்று அவர்கள் அவனிடம் சொன்னார்கள்.

ஃபோனைக் கீழே வைத்தான் நண்பன்.

நண்பா,
நீ
இப்போது
என்னைப் பார்க்க
மேலே வருவாயா,
மாட்டாயா....?

சனி, 27 நவம்பர், 2010

சொல்ல முடியுதா பாருங்க...


பிரபல எழுத்தாளர்கள் எழுதிய எத்தனையோ கதைகளைப் படித்திருப்போம். கதைகள், எழுத்தாளர்களை மறக்க முடியாதது போலவே கதா பாத்திரங்களையும் மறக்க முடியாது. பெர்ரி மேசன், சி ஐ டி சந்துரு துப்பறியும் சாம்பு, சங்கர்லால், இன்ஸ்பெக்டர் வகாப், கணேஷ் - வசந்த், போன்ற கேரக்டர்களை மறக்க முடியாது. படைத்த எழுத்தாளர்களையும் சொல்லி விடுவீர்கள். கீழே உள்ளவற்றைப் படித்து, யார் எழுதியது, எந்தக் கதை என்று நினைவு படுத்த முடிகிறதா என்று பாருங்களேன்....   
!) அரை ப்ளேடு அருணாசலம், பீமா ராவ், ரசகுண்டு.... இந்த துணைக் கேரக்டர்களும் மிக பிரபலமானவர்களே...உங்களுக்குத் தெரியாததா...!யார் எழுத்தாளர்?

2) "அச்சமே கீழ்களது ஆசாரம்" என்று அடிக்கடி சொல்லும், அதுவும் மாதவியிடம் சொல்லும் கோபக்கார நாடகாசிரியர் - கதா நாயகன் - முத்துக் குமரன்...அவனது பினாங்கு நண்பன் மற்றும் ஸ்பான்சர் கோபால்..எந்தக் கதையில்? யார் எழுதியது?

3)  சுஜாதா கதைகளிலிருந்து ஒன்றிரண்டு கேள்விகள்..

(அ).ஒரு குறிப்பிட்ட வார்த்தையைச் சொல்லும் போது குண்டு வெடித்து குற்றம் நிகழ்வது போல இரண்டு கதைகள் (எனக்குத் தெரிந்து!)... என்னென்ன? 

(ஆ) சென்னையையே கலக்கிய அந்த மாபெரும் குற்றவாளியை, கொலைகாரனை கணேஷ் வசந்த் பிடித்தும் கூட 'நீ ஒன்றுமே செய்யவில்லை' என்று சொல்லி விட்டு விடுகிறார்கள். வசந்த்தே கூட எதிர் பாராத திருப்பம் அது... எந்தக் கதையில்? 

(இ) சுஜாதா சினிமாவுக்காகவே எழுதிய முதல் கதை எது? அவரது எந்தக் கதை படமாக்கப் பட்ட விதத்தின் அதிருப்தியில் 'இவைகளை திரைப் படமாக எடுக்க யாரும் கேட்க முடியாது' என்று என்னென்ன கதைகள் எழுதினர்?!! அதில் ஒரு கதையில் வரும் வசனம் "ஆச்சாரியாருக்கு வடை வாங்கிக் கொடுத்தால் நம்ம கட்சிக்கு வந்துடுவார்"

4) இப்போது பாலகுமாரன் பற்றி சில புதிர்கள்...! தெரு விளக்கு என்று எழுதாமல் மிக அழகான கவித்துவமான தலைப்பு. என்னது?  

(ஆ) தரிசனம் திரைப் படத்தில் டி எம் எஸ் - ஈஸ்வரி பாடிய பாடலின் ஆரம்ப வரிகளில் ஒன்று, என்ன தவம் செய்தேன் படத்தில் எஸ் பி பி சுசீலா பாடிய அழகா...ன பாடலின் ஆரம்ப வரிகளில் ஒன்று என தலைப்பு.  

(இ) தொடர்கதைகளில் எழுத்தாளர்கள் உபயோகப் படுத்தும் வரியில் ஒரு கதைத் தலைப்பு ..!
  
5) மணியனின் கதை. மறக்க முடியாத தலைப்பு. . மாயாவின் அழகிய ஓவியங்களுடன் விகடனில் வந்தது.. உமா, ஆனந்தன் கதா நாயகி, நாயகன். சந்தர்ப்பத்தால் பிரிந்த காதலர்கள், குழந்தை பெற்ற பிறகு இணையும் கதை.  

6) பெயர் இல்லாமல் அல்லது சொல்லாமல் இடையில் புள்ளி வைத்த (!) இரண்டு மூன்று எழுத்துக்கள் மட்டுமே கொண்ட எழுத்தாளர்கள்.  
            
7) பிரபல எழுத்தாளர் ராஜேந்திரகுமார் இந்தக் கதையில் தான் முதன் முதலில் அவரது அடையாள வார்த்தையான "ஙே" உபயோகப் படுத்தினார்.
              
8) ராஜாஜி, மகரிஷி, புஷ்பா தங்கதுரை எழுதிய எந்த நாவல்கள் படமாகி உள்ளன?
            
9) இதயச்சந்திரன், ஹிப்பலாஸ், டைபீரியஸ், பூவழகி, ப்ரம்மானந்தர்...எந்தக் கதை மாந்தர்கள்?
               
10) பல வருடங்களாக தமக்குச் சமையல்காரனாக இருந்தவரையே கைது செய்யச் சொல்லும் சங்கர்லால், வீட்டில் உள்ள கிழவியின் முகத்திரையை அகற்ற.... உள்ளே அழகிய இந்திராவின் முகம்..... எந்தக் கதையில்...யார் எழுதியது?
                         
இந்தக் கால எழுத்தாளர்கள் என்று யாரையும் சேர்க்கவில்லை. இப்போது கேட்டிருப்பதும் எப்போதோ படித்ததை நினைவில் வைத்துதான்.. பொழுது போக வேண்டுமில்ல! 
        

வெள்ளி, 26 நவம்பர், 2010

மரகத அணை

                        
நாற்பத்து ஏழு வருடங்களுக்கு முன்  பதிவைப் படித்த நண்பர்களுக்கு, ஒரு விளக்கப் படமும், விவரங்களும் கொடுத்தால் புரிந்து கொள்வது எளிதாக இருக்கும் என்று தோன்றியதால், இந்தப் பதிவு. மரகத அணை, உதகமண்டலத்திற்கு தென் மேற்கே அமைந்துள்ள ஓர் இடம்.


படத்தின் மேலே, 'A' குறியிட்டிருப்பது எமரால்ட் டாம்.

சிவப்பு அம்புக் குறி காட்டியிருப்பது, பதிவாசிரியர் இருந்த வீடு.

வெள்ளை அம்புக் குறி காட்டுவது, வெங்கடாசலம் வீடு.

நீல அம்புக் குறி காட்டுவது, பதிவாசிரியர், ரங்கனை சந்தித்த இடம்.
    

வியாழன், 25 நவம்பர், 2010

மூன்று நிமிட படம்


இதைப் பாருங்கள். 

பிறகு இந்த காணொளி காட்சியை வைத்துக்கொண்டு, என்னவெல்லாம் கண்டுபிடிக்க முடியும் / கணக்கிட முடியும் என்று எழுதுங்கள்.  

குறைந்த பட்சம், இதற்கு ஒரு சின்னஞ்சிறு கதை, கவிதை, வசனம், பாடல் ஏதாவது நினைவு கூர்ந்து எழுதுங்கள், பின்னூட்டமாக!   

செவ்வாய், 23 நவம்பர், 2010

நாற்பத்து ஏழு வருடங்களுக்கு முன் ...


அது ஆண்டு ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்து மூன்று.
    
அப்போ ரேடியோவில் நான் விரும்பிக் கேட்டவை, சிலோன் தமிழ் (சினிமாப் பாடல்கள்) ஒலிபரப்புகள். 
    
காலை ஏழே கால் மணிக்கு, இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனம் வர்த்தக சேவை ஒன்று - இசையமுதம்(?) நிகழ்ச்சியை ஒலிபரப்பும். அந்த நிகழ்ச்சியில், மதுரை சோமு அல்லது மதுரை மணி அய்யரின் பாடல் ஏதேனும் ஒன்று பெரும்பாலும் இடம் பெறும். அவர்கள் பாடிய பாடல்கள் என்ன இராகம் என்ற விவரங்களுடன் ஒலிபரப்புவார்கள். சிலோன் வானொலி நிலையம் ஒலிபரப்பும். அந்தப் பாடல்களைக் கேட்டுத்தான் நான் பாடல்களின் இராகங்களைத் தெரிந்து, சொல்லப் பழகிக் கொண்டேன். அவ்வப்போது அண்ணனும், பாடல்களின் இராகங்களைக் கண்டு பிடிக்க இராகத்தின் பெயரை சொல்லி, அதே இராகத்தில் அமைந்த மற்ற பாடல்கள், சினிமாப் பாடல்கள் எல்லாவற்றையும் பாடிக் காட்டி, (இன்றைய) சாருலதா மணி அவர்களைப் போன்று, என் இசைப் பயணத்தை கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
            
அது ஆண்டு அறுபத்து மூன்று.
மாதம் பதினொன்று.
தேதி இருபத்து மூன்று. 
சனிக்கிழமை. 
காலை மணி ஏழு பதின்மூன்று. 

ரேடியோவில் நீடித்த மௌனம். அந்த மாதிரி நீடித்த மௌனம் வந்தால், உள்ளூர் நிலையத்தார், டில்லி அஞ்சலுக்கு ஏற்பாடு செய்துகொண்டு இருக்கின்றார்கள், சற்று நேரத்தில் செய்தி தொடரப்போகின்றது என்று அர்த்தம். 

அந்த வயதில் எனக்குப் பிடிக்காதது, வானொலி செய்திகள். ஆனாலும், வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும், 'செய்தி வாசிக்கப் போவது யாரு?' என்று பந்தயம் கட்டுவோம். யார் சொன்னது சரியாக இருக்கின்றதோ அவர்களுக்கு, அக்கா செய்த மைசூர் பாகுக் கட்டி ஒன்று எக்ஸ்டிராவாகக் கிடைக்கும்! அன்று வீட்டில் இருந்தவர்கள், நான், என் அக்கா, என் தங்கை ஆகியோர் மட்டும்தான். (அண்ணன் நவம்பர் பதினைந்து தீபாவளிக்காக, எங்கள் அம்மா, அப்பாவைப் பார்க்க நாகை சென்றிருந்தார். இன்னும் இரண்டு நாட்கள் கழித்துதான், அவர் வேலை பார்த்துக் கொண்டிருந்த இந்த ஊருக்குத் திரும்புவார். நாங்கள் கேட்டுக் கொண்டிருந்த ரேடியோ, அண்ணன் செய்த வால்வு ரேடியோ) அரவங்காட்டிலிருந்து, இன்னொரு அண்ணன் வாங்கி வந்திருந்த (மூட்டைப் பூச்சி வாசனை வந்து கொண்டிருந்த) பாதாம் அல்வாவை, சட்டைப் பையிலிருந்து (!) கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சுவைத்துக் கொண்டு, நானும், அக்காவும், தங்கையும் அன்றும் பந்தயம் கட்டினோம். 

யார் என்ன பெயர் சொல்லி பந்தயம் கட்டினோம் என்பதும், அன்று யார் செய்தி வாசித்தார்கள் என்பதும், இப்பொழுது மறந்து போய்விட்டது. 

" ஆகாசவாணி, டெல்லியிலிருந்து ஒலிபரப்பாகி, சென்னை திருச்சி நிலையங்கள் அஞ்சல் செய்யும், அகில பாரத செய்தியறிக்கை. வாசிப்பவர்...--
தலைப்பு செய்திகள்.
அமெரிக்க அதிபர் கென்னடி, சற்று நேரத்திற்கு முன் சுட்டுக் கொல்லப்பட்டார்..."

"அடப் பாவமே!..." என்றார் அக்கா. 

"கென்னடி யாரு? நம்ம வீட்டுக்கு இதுக்கு முன்னாடி வந்திருக்கிறாரா?" என்று கேட்டாள் தங்கை. 

தெரிந்து கொண்ட செய்தியை, உடனே மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற பள்ளிப் பையன் ஆர்வம் உந்த, வீட்டை விட்டு, வெளியில் வந்தேன். 

முதல் விஜயம், பக்கத்து வீட்டிற்கு. பக்கத்து வீட்டு நாகராஜன், ரேடியோவில் வெங்கடேச சுப்ரபாதம் கேட்டுக் கொண்டு, கையில் ஒரு சிறு புத்தகத்தைப் பார்த்து, ரேடியோவுடன், தானும் சுப்ரபாதம் சொல்லிக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும், 'என்ன ?' என்கிற பாவனையில், பார்த்துக் கொண்டே, என் கையில் கரண்டி ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தார். நான் அவர்கள் வீட்டுக்குப் போனால், ஒன்று ஏதாவது இரவல் கேட்கவோ அல்லது முன்பு வாங்கிய காபிப் பொடியை திரும்ப கொடுக்கவோதான் வந்திருப்பேன் என்று நினைப்பவர் அவர். 
    
நான் பெரிய மனுஷ தோரணையில், " கென்னடி செத்துப் போயிட்டார். தெரியுமா?" என்றேன். அவர், கேட்டுக் கொண்டிருந்த ரேடியோவை வால்யூம் குறைத்து விட்டு, "இதெல்லாம் என்ன விளையாட்டு? வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லாதே! உள்ளே லல்லி, குட்டி எல்லோரும் இருக்காங்க - போய் அவங்களோட விளையாடு." என்றார். 

'சரி, நான் சொல்வதை இவர் நம்பவில்லை, இன்னும் கொஞ்ச நேரத்தில், 'தஸ் புஸ்' - இங்கிலீஷ் செய்தி வரும்பொழுது அவரே கேட்டு தெரிஞ்சுக்கட்டும் என்று நினைத்து, நண்பன் வெங்கடாசலத்தைப் பார்க்க, மேலே (அந்த ஊரில் தெருக்கள் கிடையாது. பக்கத்து வீடுகளை விட்டால், ஒன்று 'மேலே' மலை ஏறிப் போகவேண்டும்; இல்லையேல் 'கீழே' மலை இறங்கி செல்லவேண்டும்.) சென்றேன். 

வழக்கம் போல, வெங்கடாசலம் தன்னுடைய தம்பி (ஆமாம் தம்பிதான்!) மணிக்கு பயந்து, அவனுடைய பக்கத்து வீட்டில் ஒளிந்துகொண்டு இருந்தான். அவனிடம் கென்னடி இறந்த முக்கிய செய்தியை சொன்னேன். அவன் உடனே, "அப்பிடீன்னா திங்கக் கிழமை நம்ம ஸ்கூலுக்கு லீவு விடுவாங்களா?" என்று ஆர்வமாகக் கேட்டான். எனக்கு கூட ஸ்கூல் லீவு என்று யாராவது சொல்லி, கேட்க ஆசைதான். இந்த செய்திக்கு இப்படி ஒரு கோணமும் இருக்கிறதா என்று கொஞ்சம் துள்ளலும் மனதில் எட்டிப் பார்த்தது. "ரேடியோவில் அது பற்றி சொல்கிறார்களா என்று கேட்கவேண்டும்" என்று அமர்த்தலாகக் கூறினேன். அதன் பிறகு வெங்கடாசலம், அவனுக்குப் பிடித்த 'சின்ன ஜூலி, பெரிய ஜூலி' கிசு கிசுக்களை சொல்ல ஆரம்பித்தான். அதை வளர விட வேண்டாம் என்று நினைத்து, "ரங்கன் எங்கேடா?" என்று கேட்டேன். வெங்கடாசலம் உடனே, "அவன் எமரால்ட் டாம் வரை வாக்கிங் போயிருக்கான்" என்றான். 

'எமரால்ட் டாம் வரை நானும் வாக்கிங் போகிறேன்' என்று சொல்லி இம்சை அரசன் வெங்கடாசலத்திடம் இருந்து தப்பி, நடந்தேன். தேயிலை செடிகளின் வாசத்தை சுவாசித்துக் கொண்டே நடப்பது நல்ல அனுபவமாக இருந்தது. ஐந்து நிமிடம் நடப்பதற்குள், ரங்கன் எனக்கு எதிரில் வந்துகொண்டு இருந்தான். "டேய் ரங்கா - கென்னடி செத்துப் போயிட்டாராம்டா" என்றேன். 

அவன், " ஆமாம்டா - தெரியும். ரொம்ப வருத்தமா இருக்கு. அதனாலதான் டாம் வரைக்கும் நடந்து போயிட்டு வரேன்" என்றான். 
                    

சனி, 20 நவம்பர், 2010

வாழ்க்கை
   கவிதை 

* வெய்யில் 'அடிக்குது',

மழையும் பெய்யுது
-- அப்பா பாடுவது !
அடுத்த வரி ...
'பிரசுரத்துக்கு ஏற்றதல்ல'..!
    
* பால்கனியில் நின்று பார்க்கிறேன் !
வெய்யிலை உரசி வெள்ளிச் சரங்கள்
வாழ்க்கைக் கற்றுத் தரும் பாடம்
இயற்கையைத் துணைக்கழைத்து -* "இன்பமும் துன்பமும்
இயற்கையின் நியதி'
T M S குரல் கேட்கிறது.
இது வந்தால்
அதுவும் வரும்.
புரிந்ததுதானே...
* பால்கனியில் நின்று பார்க்கிறேன்.
வெயிலோடு மழையும்...
தொடுவானத்தில்
வண்ண வளைவு...* இயற்கையை ரசிக்கும் மனம்
வாழ்க்கையை?
அசலை?
பெருமூச்சு
ரொம்பச் சுலபம்.

  ... பா ஹே.
          

யாரோ? அவர் யாரோ?

1) தன்னுடைய துறையில், தெற்கே நடந்த ஒரு விபத்திற்குப் பொறுப்பேற்று ராஜினாமா செய்துவிட்டு, வீட்டுக்கு நடந்தே வந்தவர். 

2) கட்சிப் பணி ஆற்றுவதற்காக சிலர் பதவி விலகவேண்டும் என்று கூறி, முன் உதாரணமாக, தான் வகித்து வந்த பதவியைத் துறந்தவர். 

3) பதவியில் இருந்த நாட்களில், தன் வீட்டிற்கு அளிக்கப் பட்ட மேசை நாற்காலி இன்னபிற பொருட்கள் தேவையில்லை என்று நிராகரித்தவர். 

4) ஏழை மாணவர்கள் படிப்பிற்காக, தன் சொத்து முழுவதையும் எழுதி வைத்தவர். 

5) தன் பெயரிலோ, உற்றார், உறவினர், சந்ததியினர் பெயரிலோ, எந்த சொத்தும் இல்லாதவராக இருந்து, மறைந்தவர். 
              

புதன், 17 நவம்பர், 2010

மேன், எத்தனை மேன்களடி!


இன்று காலை, வீட்டுப் பொடிசின் தொல்லை தாங்காமல், தொலைக்காட்சிப் பெட்டியில், கேலிச்சித்திரத் தடங்களை ஒவ்வொன்றாக தடவிப் பார்த்து வருகையில், டிஸ்னி தடத்தில், எலி மனிதன் (Ratman) என்ற ஒரு தொடர் இருப்பது தெரிந்தது. சரி - அடுத்த சந்தர்ப்பத்தில் பொடிசு ஏதாவது கதை கேட்டால், இதில் பார்ப்பது எதையாவது அடிப்படையாக வைத்து, சொந்த சரக்கு சேர்த்து, ஏதாவது அவனுக்கு கதை விடலாமே என்று நினைத்து, அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அப்போது இதுவரை எவ்வளவு மனிதர்கள் வெளியாகி பிரபலமாகியுள்ளார்கள் என்று சிந்தித்துப் பார்த்தேன். 

1) Super man
2) Spider man
3) Bat man
4) Rat man
------- 


கீழ்க்கண்டவைகள் வந்து விட்டனவா இல்லையா?

1) Cat man.
2) Eat man
3) Fat man
4) Hat man
5) Mat man
6) Oat man
7) Pat man
8) Sat man
9) Tat man
10) Vat man
11) Goutha man
12) Yagnara man

இதுவரையில் இந்தப் பன்னிரண்டு தலைப்புகளுக்கும் பேட்டண்ட் வாங்கப்படவில்லை என்றால், 'எங்கள்' சார்பில் இதற்குப் பேட்டண்ட் விண்ணப்பம் கொடுக்கப் போகிறோம். ;))

யாருக்காவது ஆட்சேபணை இருந்தால், உடனடியாக பின்னூட்டத்தில் தெரிவிக்கவும் !
            

சனி, 13 நவம்பர், 2010

படமும், விளக்கமும்!


ஞாயிறு எழுபது பதிவில் வெளியிடப்பட்ட படம் குருவிக் குஞ்சுகள் என்று பலர் சரியாகக் கண்டுபிடித்துவிட்டனர்.வலையாபதி அனுப்பியிருந்த விளக்கங்கள் இங்கே கொடுத்திருக்கின்றோம்: 

* முட்டையுடைத்து வெளி வந்து, குட்டை நடை பயிலும் நான்கு குருவிக் குஞ்சுகளைப் படத்தில் பார்க்கின்றீர்கள்.

* ஆச்சரியகரமான விஷயம் என்ன என்றால், இந்த குருவிக் குஞ்சுகளின் கூடு இருந்த இடத்தை சுற்றிலும் (அரைக் கிலோ மீட்டர் ஆரக்கால் கொண்ட வட்டம் வரைந்தால்) அந்த வட்டத்திற்குள் எட்டு அலை பேசி கோபுரங்களாவது இருக்கின்றன. செல் ஃபோன் டவர்களால், ஸ்பாரோக்களின் ப்ரைவசி போய்விட்டது என்று நீங்களும் சாய்ராமும் கொஞ்ச நாள் முன்னாடி கும்மி அடித்தீர்களே, அதனால்தான் இந்த தகவல்! 

* ஆனால், குருவிகள் கூடு கட்ட, குடும்பம் நடத்த நாம் இன்னும் அதிக இடம் கொடுத்தல், வசதி செய்து கொடுத்தல், முக்கியம்தான். 

* எங்கள் வீட்டிற்கு தினமும் வந்து அதன் மொழியில் பல செய்திகளை சொல்லுகின்ற குருவிகளுக்கு, 'காக்கை குருவி எங்கள் ஜாதி' என்று பாடிய 'சுப்பிரமணிய பாரதி' போன்று, தானியமும், தண்ணீரும் அளித்து வருகின்றோம்! 

 (படத்தில் உள்ள குருவிக் குஞ்சுகள், நடை பயிலுவது, எந்த இலையில் என்று யாராவது கண்டு பிடித்து சொல்வீர்களா?)  
            

வியாழன், 11 நவம்பர், 2010

ஜல் உபயத்தில் ஒரு ஜில் சுற்று.தீபாவளிக்கு மறுநாள். ஜல் பரபரப்பு தொடங்கிய நேரம். வெயில் வராது என்று நிச்சயமாகத் தெரிந்தது. (புயல் என்ன, மழை கூட பெரிதாக வரவில்லை என்று அப்புறமல்லவா தெரிந்தது...) நீண்ட நாட்களாகக் கிடப்பில் போட்டிருந்த ஒரு கோரிக்கையை நிறைவேற்றி விடுவது என்று தீர்மானித்து, மனைவியிடம் சொல்லி நீண்ட நாள் ட்யூவான வேண்டுதலை நிறைவேற்ற திருவேற்காடு நோக்கி புறப்பட்டோம்.

  
ஏழு மணிக்கெல்லாம் சென்று விட்டதாலும் சனிக் கிழமை என்பதாலும் அவ்வளவு கூட்டமில்லை. அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசித்தோம். அலங்காரத்துக்கு நேரமாகும் என்றதும் கிளம்பி விட்டோம். வெளியில் ஒரு உண்டியலில் மட்டும் ஏகப் பட்ட பூட்டுக்கள் தொங்கின. அதில்தான் மிகுந்த விலை உயர்ந்த காணிக்கைகள் இருக்குமோ என்று நினைத்தால், இல்லையாம். அது ஒரு வேண்டுதலாம். பூட்டை அதில் பூட்டி சாவியை அங்கிருந்த அம்மன் விக்ரகம் காலடியில் போடச் சொன்னது அறிவிப்புப் பலகை. அம்மன் பண மாலை போட்டுக் கொண்டு ஜொலிக்க, கீழே காசுகளும் பணங்களும் போடப் பட்டிருந்தன. உள்ளேயே பெருமாள் சன்னதி, நவக்ரக சன்னதி எல்லாம் இருந்தன.
   
வெளியில் வந்ததும் கண்ணில் பட்டது புற்றுக் கோவில். ஓங்கி வளர்ந்திருந்த (அரச?) மரம் ஒன்றின் பரந்த வேரில் பெரிய அளவில் மண் கொட்டினது போல புற்று. அங்கு கூரை வேய்ந்து விட்டார்கள். முன்புறம் பிள்ளையார் மூர்த்தம் ஒன்று. அங்கு புற்றுக்கு பால் ஊற்ற வேண்டுமாம். ஒரு அண்டாவின் அருகில் சிறிய பல தம்ளர்கள் அடுக்கியிருக்க ஒரு சிறுமி புத்தகத்தில் ஆழ்ந்திருந்தாள். அவள் அருகில் சென்றதும் நிமிர்ந்து "ஐந்து ரூபாய்" என்றாள். கொடுத்தால் 75 ml பெறக் கூடிய தம்ளரில் வெள்ளை நிற திரவம் ஒன்றைத் தந்தாள். பாலாம். அதை அங்கு பிரதட்சணமாய் வலம் வந்து ஊற்ற வேண்டுமாம். பாதி பிரதட்சணம் கூட செய்ய முடியவில்லை. கோடி ஈக்கள் மொய்க்க உள்ளே முட்டைகள் உடைக்கப் பட்டு சுத்தம் செய்யப் படாமல், சுற்றிக் கூட வர முடியாமல் முடை நாற்றம். 'தெய்வ குற்றம்' ஆகாமல் இருக்க ஒன்றும் சொல்லாமல் வெளியில் வந்தோம். மரத்தடி விநாயகருக்குக் கூரை வேய்ந்து எப்படியோ காசு பார்த்து விடுகிறார்கள்.
    
அடுத்து மாங்காடு. 
   
அறிவிப்புப் பலகையைத் தாண்டி நடந்தாலே கோவில். நீண்ட அகலமான பிரகாரங்கள். 
   
திருவேற்காட்டிலும் சரி, இங்கும் சரி இன்னொரு வியாபாரம். அகல் விளக்கேற்றுவது. இரண்டு விளக்கு ஏற்றினால் இன்ன பலன், நான்கு ஏற்றினால் இன்ன பலன் என்று கோடி விளக்கு வரை ஏற்றினால் கிடைக்கும் புண்ணியங்களின் லிஸ்ட் தந்துள்ளார்கள். மிகச் சிறிய அந்த அகல் விளக்கு திருவேற்காட்டில் ஜோடி ஆறு ரூபாய், இங்கு நான்கு ரூபாய். அதை விற்கும் பெண்களின் உழைப்பைச் சொல்ல வேண்டும். மங்களகரமாய் குளித்து, ஒரு கையால் பூத் தொடுத்துக் கொண்டே வியாபாரம் கவனிக்கிறார்கள். அம்மனை தரிசிக்க உள்ளே சென்றதும் எங்களைப் பார்த்த உடனேயே இங்கும் திரை போட்டு விட்டார்கள். ராசி! நல்ல வேளை சீக்கிரம் திறந்து விட்டார்கள். தட்டில் பத்து ரூபாய் போட்டால் நிறைய குங்குமமும் ஒரு பூத் துண்டும் கிடைக்கும். உள்ளே அர்ச்சனை செய்ய வாங்கும் அர்ச்சனைத் தட்டுகளை அம்மன் சன்னதிக்குள் நுழையும் முன்னரே ஓர் ஐயர் வாங்கி, தேங்காயை உடைத்து, பூ வைத்து தருகிறார். எலுமிச்சம்பழம் அங்கேயே வாங்கப் பட்டு விடுகிறது. கூடவே பத்து ரூபாய் இருபது ரூபாய் என்று வாங்கி அடுக்கி வைத்துள்ளார். கட்டணமா, அன்பளிப்பா தெரியவில்லை.

பிரகாரம் சுற்றி வரும்போது கோவில் சுவற்றில் கிறுக்குவோருக்காக ஒரு சுவாரஸ்ய அறிவிப்பு கண்ணில் பட்டது.
   
இரண்டு கோவில்களிலும் எப்படி எப்படியோ காசு வாங்குகிறார்கள். ஏன் சுற்றுப் புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ள மாட்டேன் என்கிறார்களோ?

அடுத்து ஸ்ரீபெரும்புதூர்.
  
ஊருக்குள் அங்கங்கே கடைகள் பார்ப்பது போல ஊருக்கு வெளியே அங்கங்கே பொறியியற் கல்லூரிகள். தூ...ரத்தில் தெரிபவை ஹாலிடே ரிசார்ட்ஸ் அல்ல...பொறியியற் கல்லூரிகள். பல்வேறு பெயர்கள். ஒரே பெயரில் இரண்டு மூன்று...காலேஜ் ஆஃப் என்ஜினீரிங் என்று, இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி என்று...!

   
அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யக்காரஸ்வாமி திருக்கோயில். சிவபெருமான் நடனம் ஆடும்போது அவிழ்ந்து விழுந்த ஆடைகளைக் கண்டு நகைத்த பூதங்களுக்கு சாபம் கொடுத்து, அவை பிரம்மனை வேண்டி ஆதி கேசவப் பெருமாளிடம் சாப விமோசனம் பெற்ற இடம்.
     
உள்ளே நின்ற யானைக் குட்டியை அப்புறம் படமெடுக்கலாம் என்று எண்ணி சுற்றி வருவதற்குள் காணமல் போனது.

இப்போது எல்லாக் கோவில்களிலும் கம்பி கட்டி வழி ஏற்படுத்தி சுற்றி சுற்றி அதில் நுழைந்து செல்லுமாறு வைத்திருக்கிறார்கள். அதற்குச் செல்லும் வழியிலேயே இடது பக்கம் இருந்த சன்னதியில் நுழைந்து ஆதி கேசவப் பெருமாளைத் தரிசித்து, வெளியில் வந்து 'கீப் லெஃப்ட்'டி... ராமானுஜர் சன்னதி வந்தால் சடாரி வைத்த குண்டு பட்டர் "ம்...இப்போ போய் பெருமாளை சேவியுங்கோ.." என்றார். வெளியில் இருந்தே பெருமாளை மறுபடியும் "ஹாய்" என்று சேவித்து விட்டு எதிராஜ நாதவல்லித் தாயாரை சந்திக்க - தரிசிக்க - விரைந்தோம். தாயாரைச் சுற்ற முற்படுகையில் ஒரு தூணில் சீட்டுகளாலான மாலை. இருளில் உற்று நோக்கினால் அந்தத் தூணில் ஆஞ்சநேயர்.

தட்டில் காசு போடும்போது மனைவியிடம் சொன்னேன், "கோவில் உண்டியலிலாவது போடலாம்" மனைவி, "பெரிய ஆளுங்க எவ்வளவு எடுப்பாங்க,  கோவிலுக்கு எவ்வளவு சேர்ப்பாங்கன்னு தெரியாது, இவர்களைப் பார்த்தால் பாவமாய் இருக்கு..இவர்களுக்காவது போகட்டுமே...கண்ணெதிரே நம் காசு யாருக்குப் போகிறது என்று தெரியுமே..." என்றதும், 'அதுவும் சரிதான்' என்று விட்டு விட்டேன். ஒல்லியான உடம்புடன், கழுத்தில் செயின் இல்லாமல் இருந்தால் தட்டில் பத்து ரூபாய், குண்டாக, கழுத்தில் செயினுடன் இருந்தால், தட்டில் ஐந்து ரூபாய் என்பது மனைவியின் கணக்கு! "அந்த ஒல்லி பட்டர் ட்யூட்டி முடிந்து போகும்போது அவிழ்த்து வைத்திருந்த செயினை எடுத்து மாட்டிகிட்டு போவார் தெரியுமா" என்ற என்னை, என மனைவி லட்சியம் செய்யவில்லை.

வெளியில் வந்தோம். அருகில் ஒரு பழைய கோவில் போன்ற ஒன்று பூட்டிக் கிடந்தது. பின்னர் விசாரித்ததில் அது மணவாள மாமுனிகள் கோவிலாம். பத்தரைக்குப் பூட்டி விடுவார்களாம்.
     
வந்தது வந்தோம், பஸ்ஸில் தாண்டிச் செல்லும்போது மட்டுமே பார்த்திருந்த, ராஜீவ் காந்தி நினைவிடத்தைப் பார்த்து விடுவோமே என்று போனால், மனைவி உள்ளே வர மறுத்து விட நான் மட்டும் உள்ளே சென்று பார்த்தேன். கோவில்கள் சுற்றி விட்டு சமாதி பார்க்கக் கூடாதாம். இது சமாதி இல்லை, நினைவிடம் என்று சொல்லிப் பார்த்தும் மனைவி உள்ளே வரவில்லை!
   
உள்ளே சவ்கிதார்கள் ஹிந்தியில் டைரக்ட் செய்தார்கள். சுத்தமாகப் பராமரிக்கிறார்கள். அழகிய புல்வெளிகள், 
  


   
மரங்கள், 
  
தூண்கள். 
   
 நீண்ட சிமென்ட் நடை பாதைகள்.
     
வீடு திரும்ப ஒரு மணிக்கு மேல் ஆன போதும் வெயில் இல்லாமல் அழகிய கரு வானத்துடன் சூழ்நிலை ஜிலு ஜிலு என்றிருந்தது. நன்றி ஜல்.