சுஜாதா...
மந்திரச் சொல்.
அறுபதுகளின் பிற்பகுதியில் தென்றலாய் தொடங்கி போகப் போகப் புயலாய் மாறிய ஒரு எழுத்து ராட்சசர்...
இன்று அவர் மறைந்த நாள்.
புத்தகம் படிக்கும் பழக்கம் என்பது மு.வ கதை ஒன்றை படிப்பதுடன் தொடங்கியது. பின்னர் அம்புலிமாமா, விக்ரமாதித்தன் கதை முதல் கல்கி, அரு.ராமநாதன், மணியன், பி.வி.ஆர், ஜ.ரா.சு., விந்தன், சாண்டில்யன், ஜெகசிற்பியன், ரா.கி.ரங்கராஜன், கதைகள் வரை... எல்லாம் படிக்கத் தொடங்கிய காலத்தில் எங்கேயோ ஒரு சுஜாதா கதை படிக்க நேர்ந்தது. மற்ற எழுத்துகளில் இருந்து அதன் வித்யாசம் உடனே உரைத்து மனதில் இடம் பெற்றது.
மாடிப் படிகளில்
இ
ற
ங்
கி --> நடந்தான் என்று எழுதிய அவர் பாணி புருவம் உயர்த்த வைதத்தது. வேறு என்ன என்ன பத்திரிகைகளில் அவர் எழுதுகிறார் என்று தேட வைத்தது.
சமீப காலங்களில் அல்லது எழுபதுகளுக்குப் பின் எழுதத் தொடங்கிய எழுத்தாளர்களுக்கு சுஜாதா நடை சாயல் இல்லாமல் இருக்காது. நடிப்புலகில் எல்லோரிடமும் ஏதாவது ஒரு இடத்திலாவது சிவாஜியைப் போல முயற்சி பண்ணுவார்கள் என்பது போல சுஜாதா பாணி, அவரது சில வார்த்தைகளை ஸ்வீகாரம் செய்யாத எழுத்தாளர்கள் இருக்க முடியாது. அவர் இந்த அளவு தனது ஆதர்ச எழுத்தாளராய் தி. ஜானகிராமனை சொல்லி உள்ளார்.
அவரது பாலம் கதையைப் படித்து விட்டு, 'எனக்கு உன்னையே கொல்லணும் போல இருக்கு வரவா' என்று யாரோ லெட்டர் எழுதி இருந்தார்களாம்.
சிறுகதை, தொடர்கதை, நாவல், நாடகம், விஞ்ஞானக் கட்டுரைகள், பல்சுவைக் கட்டுரைகள்...சுஜாதா வீட்டு லாண்டரிக் கணக்கை எடுத்துக் கூடப் பிரசுரிக்க பத்திரிகையாளர்கள் தயாராய் இருந்தார்கள் என்று சொல்வதுண்டு..அவர் என்ன எழுதினாலும் பிரபலம் தான்.
சில வித்யாசங்கள், பாதி ராஜ்ஜியம், கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு, அனிதா இளம் மனைவி, காயத்ரி, (இந்தக் கதையின் கருவுக்கு சாவியிடமிருந்தே எதிர்ப்பு வந்ததாம்)..ஜேகே, வானமெனும் வீதியிலே, பதினாலு நாட்கள், எதை விட, எதைச் சொல்ல?
விகடனில் வந்த அவரின் 'கற்றதும், பெற்றதும்...' பெரும் வரவேற்பைப் பெற்ற தொடர். ஜூனியர் விகடனில் வந்த 'ஏன், எதற்கு, எப்படி? ' விஞ்ஞானக் கேள்வி பதில்கள்..
யாருக்கும் தெரியாததை இங்கு சொல்ல வரவில்லை. அவர் நினைவு நாளில் அவரை நினைவு கூரும் முயற்சிதான்.
".......எனவே இந்தக் கதையில் நீதி தேடுபவர்களுக்கு சரியாக மூன்று நிமிடங்கள் தருகிறேன், விலகுவதற்கு...
மூன்று நிமிஷம்.
மற்றவர்கள் மேலே படிக்கலாம்....".........
சுஜாதா பாணி!
சில பிரத்யேக வார்த்தைகள் சுஜாதா ஸ்பெஷல். ஆதார, உத்தேசம், போன்றவை உதாரணங்கள். பசித்த புலி தின்னட்டும் என்பது அவர் எழுதும் இன்னொரு சொற்றொடர். மெக்சிகோ தேசத்து சலவைக்காரி ஜோக்கை சொல்லாமலேயே பிரபலப் படுத்தியவர்.
அறுபத்தைந்து, எழுபது வயதுகளிலும் இளமை மாறாத எழுத்துகளுக்கு சொந்தக் காரர். மற்றவர்களின் எழுத்துகளையும் ரசித்து, படித்து, மனமுவந்து பாராட்டுபவர்.
கதைகளிலும் நாவல்களிலும் ஆரம்பித்தாலும் அவர் எழுதிய கணையாழியின் கடைசிப் பக்கங்கள், கற்றதும், பெற்றதும், சில எண்ணங்கள், விவாதங்கள் விமர்சனங்கள், போன்ற அவர் எழுத்துகளை வாசிப்பது சுகம். ஆரம்ப காலங்களில் பெண்கள் பற்றிய அவர் வர்ணனைகள் படிக்கும்போது சற்றே கூச்சப் படவைக்கும் அளவு இருந்தாலும், ஒரு தரப்பு வாசகனை கட்டி இழுக்க செய்த முயற்சியாகக் கூட அதைச் சொல்லலாம்.
ப்ரியா, காயத்ரி, போன்ற அவரது கதைகள் படமானபோது, அவை படமான விதம் குறித்து தன் கோபத்தை வெளிப்படுத்த மேற்கே ஒரு குற்றம் என்ற கதையை எழுதி 'இதை எப்படிப் படமெடுக்கிறார்கள் பார்க்கிறேன்..' என்று கோபப் பட்டவர், பிறகு அதே சினிமா உலகுக்குள் புகுந்து பல முயற்சிகள் செய்தவர்.
பாலச்சந்தர் அவரை ஒரு கதை எழுதித் தரச் சொல்ல, கடத்தலுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர் எழுதிய மர்மக் கதையை பாலச்சந்தர் மாற்றி அற்புதமான காதல் கதையாக எடுத்ததைப் பற்றி சொல்லி இருந்தார்....(நினைத்தாலே இனிக்கும்)
ஒரே ஒரு படத்தில் 'நடித்துள்ளார்'! தைப் பொங்கல் என்ற படத்தில் ஒரு காட்சியில் தன் மனைவியுடன் அவர் வருவது போன்ற காட்சி இருக்கும்.
எழுத்தில் இவ்வளவு பேர் மனத்தைக் கொள்ளை கொண்டவர், மேடையில் தனக்கு பேச வராது என்பார். தன் மனைவி கூட தான் எழுதுவதை பின்னால் நின்று பார்த்தால் எழுதுவது நின்று போகும் என்று சொல்பவர், மன்னிக்கவும், சொன்னவர்.
கணேஷ் - வசந்த் என்ற சுவாரஸ்யமான பாத்திரங்களைப் படைத்து, ரசிகர்கள் மனதில் இடம் பெறச் செய்தவர். (ஆங்கிலத்தில் பெர்ரி மேசன், ஷெர்லக் ஹோம்ஸ் போன்ற பாத்திரப் படைப்புகளைப் பார்த்த/படித்த பாதிப்பாக இருக்கலாம்)
"ஆசார்யருக்கு வடை வாங்கிக் கொடுத்தால் நம்ம கட்சிக்கு வந்துடுவார்.."
"உங்களை ஒரு பார்ட்டியில பார்த்திருக்கேன்.." போன்ற வசந்தின் கமெண்ட்ஸ் அவர் சொல்லும் ஜோக்குகள், மற்றும் அவரது புத்தி கூர்மை, கணேஷின் ஒரு அறிவு ஜீவித் தனமான அலசி ஆராய்ந்து துப்பறியும் பாத்திரப் படைப்பு...ரசிகர்களால் மிகவும் விரும்பி படிக்கப் பட்ட கதைகள்..கொலையுதிர் காலம், நில்லுங்கள் ராஜாவே, மறுபடியும் கணேஷ், நிர்வாண நகரம், விபரீத கோட்பாடு, மேற்கே ஒரு குற்றம்....பிரியாவில் வசந்த் இல்லாத கணேஷ்..
கணையாழியின் கடைசிபக்கங்கள்...அவரது எண்ணங்களைப் படிப்பதில் தான் எத்தனை சுகம்...
கற்றதும் பெற்றதும் பகுதியில் ஒரு முறை (அவர் முதல் முறை பை-பாஸ் சர்ஜரி செய்து கொண்ட பின் என்று நினைக்கிறேன்) ஆஸ்பத்திரி அனுபவங்களைப் பற்றி எழுதும்போது அறுவை சிகிச்சைக்கு முன் தரப்படும் பச்சை நிற உடையை பற்றி ஒரு விமர்சனம் செய்திருப்பார். மேலும் வாழ்க்கையின் ஆரம்ப காலங்களில் நன்றாகப் படிக்க வேண்டும், எஞ்சினியர் ஆக வேண்டும், பைலட் ஆக வேண்டும் என்ற இலட்சியங்கள் மறைந்து ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின் காலை பாத்ரூம் போய் நிம்மதியாய் சிறுநீர் கழித்து வந்து விட்டாலே போதும் என்ற நிலைக்கு வருவது வாழ்க்கையின் ஒரு Progressive Compromise என்று சொல்லி இருப்பார். வாசகர்களை 'சட்'டென அதிர வைத்த வாரம் அது.
பாசாங்குகளையும் , அலங்கார வார்த்தைகளையும் சட்'டென அகற்றி விட்டு நேர் வார்த்தைகளில் சிக்கனமாக முகத்தில் அறையும் வார்த்தைகள்..
அவரது Electronic Voting Machine இன்று பரவலாக உபயோகப் படுவது நான் சொல்லத் தேவை இல்லை.
சிலிகான் - சில்லுப் புரட்சி, தலைமைச் செயலகம் போன்றவை அவரது இன்ன பிறக் கட்டுரைகள். அம்பலம் டாட் காமில் அவர் எழுதியவை பின்னர் புத்தகமாகவும் வெளி வந்தது. திருக்குறளுக்கு விளக்கம் கூட எழுதி உள்ளார் என்று ஞாபகம். ஆரம்ப காலங்களில் கடவுள் மறுப்பு போலவும், சற்றே நாத்திகமும் பேசி (எழுதி) வந்தவர், பின்னாளில் ஆழ்வார் பாசுரங்கள் ஒரு எளிய அறிமுகம் என்று கல்கியில் எழுதினார். பிரம்ம சூத்திர விளக்கம் போன்றவை அவரது அசாதாரண ஆற்றலுக்கு எடுத்துக் காட்டு. கதைகள் எழுதுவதில் தொடங்கி அவர் தொடாத துறையே இல்லை எனலாம்.
சுருக்கமாக முடிக்க வேண்டும் என்றுதான் தொடங்கினேன்...சற்றே அதிகமாக நீண்டு விட்டாலும், இன்னும் எனக்கு ஒன்றுமே சொல்லாதது போல குறை.
சுஜாதா...
மறக்க முடியாத, மறக்க விரும்பாத எழுத்தாளர்.
(பக்கத்தில் மீசையுடன் உள்ள சுஜாதா படத்தில் மீதியைத் தேடுபவர்கள் அந்தக் கதைப் புத்தகத்தின் பெயரைப் படித்துக்கொள்ளுங்கள். நாம் எல்லோரும் எவ்வளவு தேடினாலும் கிடைத்துவிடுவாரா - இம்மாதிரி எழுத்தாளர் இனிமேல்?)