செவ்வாய், 31 மே, 2016

கேட்டு வாங்கிப் போடும் கதை :: சிவப்பி
     எங்கள் ப்ளாக்கின் 'இந்த வார கேட்டு வாங்கிப் போடும் கதை' பகுதியில் இடம்பெறும் படைப்பு சகோதரி கீதா மதிவாணன் (கீதமஞ்சரி) அவர்களின் சிறுகதை.

     இவரது தளம் கீதமஞ்சரி.

     என்றாவது ஒருநாள் என்கிற தலைப்பில் அருமையான புத்தகம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.  ஆஸ்திரேலிய காடுறை மாந்தர்களின் வாழ்க்கைக் கதைகள்.  ஆஸ்திரேலிய எழுத்தாளர் ஹென்றி லாசன் எழுதிருப்பதன் மொழிபெயர்ப்பு.  அவற்றை அவரது தளத்தில் படித்து ரசித்திருக்கிறேன். 
இவர் ஆஸ்திரேலிய தமிழ் கூட்டுத்தாபனம் இணைய வானொலியில் பங்காற்றுகிறார் என்பது கூடுதல் தகவல்.

     இந்தக் கதை பற்றிய அவரது வரிகளுக்குப் பின்னர் அவர் படைப்பு தொடர்கிறது...


===================================================================


வணக்கம் ஸ்ரீராம்..

     எங்கள் ப்ளாக்கில் வரும் பதிவுகளைத் தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன்.  கேட்டுவாங்கிப் போடும் கதை வரிசையில் என்னுடையதையும் பரிசீலித்திருப்பதற்கு நன்றி. 

     தினமலர் பெண்கள் மலரில் கற்பூரம் என்னும் கதை வெளியானது. அதற்கு முன் யூத்ஃபுல் விகடனில் சிவப்பி என்னும் கதை வெளியானது. சிவப்பி கதை எனக்கு மிகவும் பிடித்த கதை என்பதால் அந்தக் கதையை இத்துடன் அனுப்புகிறேன். என் புகைப்படத்தையும் இணைத்துள்ளேன். 

     இப்படியொரு வாய்ப்பின் வழி எங்கள் ப்ளாக் வாசகர்களுக்கு என் கதை சென்றடைவதில் மிகுந்த மகிழ்ச்சி. தங்களுக்கென் மனமார்ந்த நன்றி.சிவப்பிஉருவானகதை

     எனக்கு அப்போது பத்துப் பன்னிரண்டு வயதிருக்கும். கோடை விடுமுறைக்காக பெரியம்மாவின் கிராமத்துக்குப் போயிருந்தேன். பெரியம்மாவின் வீடு ஒரு குளத்தை ஒட்டியிருந்தது. அந்தக் குளத்தில் நான் பார்க்கும்போதெல்லாம் ஒரு வயதான அம்மா கழுத்து மட்டும் மேலே தெரியும்படி நீரில் ஊறிக்கொண்டே இருப்பார். யாருடனும் எதுவும் பேசமாட்டார். ஆனால் தனக்குத்தானே பேசி சிரித்துக்கொள்வார். 

     சில சமயம் கோபமாய் யாரையோ வைவார்.  பெரிய வீட்டுப் பாட்டியம்மா என்றார்கள். மனநிலை சரியில்லை என்றார்கள். காரணம் யாருக்கும் தெரியவில்லை. இருட்டத் துவங்கும் வேளையில் அந்தம்மா குளத்தை விட்டு வெளியேறி வீட்டுக்கு செல்வார், முழு நிர்வாணமாக.


மற்றொரு நிகழ்வும் பெரியம்மாவின் ஊரில் நடந்ததுதான்.  ஊருக்குள் திரிந்துகொண்டிருந்த மனநிலை தவறிய பெண்ணுக்கு  இரண்டாவது குழந்தை பிறந்திருந்தது. இந்த சம்பவமும் என்னை பாதித்தது. அன்று என்னை பாதித்த இரு சம்பவங்களையும் இணைத்து ஒரு கதையாக்கிவிட்டேன். இதுவே சிவப்பி உருவான கதை.

அன்புடன்
கீதா மதிவாணன்=====================================================================

சிவப்பிகீதமஞ்சரி

குளம் சிவப்பியின் குற்றச்சாட்டுகளுக்குக் காதுகொடுத்தபடி சலனமற்று இருந்தது.சிவப்பி குளத்தை அமைதியாய் இருக்கவிடுவதே இல்லை. நீருக்கு மேலிருந்த தன் கழுத்தை சற்றே உள்ளிழுத்து வாய் கொள்ளா நீரை உறிஞ்சி தலையைத் தூக்கி எட்டிய வரைக்கும் வேகமாய்க் கொப்பளித்துத் துப்பினாள். அவளுள் இருபது வருட கோபமும் இன்னும் அடங்கியபாடில்லை. குளம் வழக்கம்போல் பொறுமையாய் இருந்தது.

முன்னெல்லாம் குளமும் பதில் சொல்லிக்கொண்டிருந்தது. 'என்னை நம்பு, உன்னைபோலவே நானும் ஒரு பெண், நான் அப்படிச் செய்வேனா?' என்றெல்லாம் அவளுக்குப் புரியவைக்க முயன்றது. ஆனால் சிவப்பி அதன் பேச்சுக்கு செவிசாய்க்கவே இல்லை. குளத்து நீரைக் கோழை என்றாள். கொலைகாரி என்று அழுதாள். அவளுக்காகப் பரிதாபப்பட்டு குளமும் அழுதது. அதன் கண்ணீர் வெளித்தெரியாக் காரணத்தால் சிவப்பிக்குக் குளத்தின் துயரம் புரியவில்லை. யாருமற்றப் பொழுதுகளில் குளத்துடன் ஆவேசமாய் சண்டையிடும் அவள்,  குளக்கரையில் எவருடைய நடமாட்டமாவது தென்பட்டால் அமைதியாகிவிடுவாள்.

இன்றும் சிவப்பி, தன் மனக்குமுறலைக் குளத்தில் கொட்டிக்கொண்டிருந்த வேளை, கொலுசுச்சத்தம் கேட்கவும் அமைதியானாள். ஒரு இளம்பெண் அழுக்குத் துணிகள் அடைத்த அலுமினிய அன்னக்கூடையை இடுப்பில் அணைத்துப் பிடித்தபடி படிகளில் இறங்கிக்கொண்டிருந்தாள்.

தண்ணீரில் பூத்துநிற்கும் தாமரை போல் சிவப்பியின் தலை மட்டும் நீருக்கு மேலே தெரிந்தது. வெள்ளத்தனைய மலர்நீட்டம் என்பதுபோல் தண்ணீர் முழந்தாளளவு இருந்தாலும் சரி, ஆளை மூழ்கடிக்கும் அளவு இருந்தாலும் சரி, சிவப்பிக்கு எல்லாமே கழுத்தளவுதான்.

அந்தப்பெண் சிவப்பியைப் பார்த்து சிநேகமாய்ச் சிரித்தாள். அவளுக்கு நினைவு தெரிந்தநாளிலிருந்தே இந்தக் குளமும் சிவப்பியும் பரிச்சயம். பாவாடையை மார்புவரை ஏற்றிக் கட்டிவிட்டு மற்ற உடைகளைக் களைந்து, கொண்டுவந்த துணிகளோடு துவைத்துவிட்டு பின் குளத்துநீரில் மிதந்த சோப்புநுரைகளைக் கைகளால் விலக்கியபடி நீரில் இறங்கினாள்.

அவளுக்கு வயது பதினெட்டு முதல் இருபதுக்குள் இருக்கலாம். சிவப்பி அவளைப் பார்த்தால் சற்று இளகித்தான் போவாள். சிவப்பிக்கு தன் வயது தெரியாது. குளத்துக்கும் அதன் வயது தெரியவில்லை. ஊற்றெடுக்கத் துவங்கிய நாளைப் பற்றிய எந்தக் குறிப்பும் அதன் நினைவேட்டில் இல்லை. சிவப்பி மட்டுமே இருபது வருடங்களாய் அதன் நினைவை, எண்ணத்தை, சிந்தனையை ஆக்கிரமித்திருந்தாள். அவளைக் குளிர்விப்பது மட்டுமே குளத்தின் அன்றாடக் குறிக்கோளாக இருந்தது. செய்யாத தவறுக்காக இப்படித் தன்னைப் பழி வாங்குகிறாளே என்று சிவப்பி மேல் அவ்வப்போது கோபம் வந்தாலும் அவளது அறியாமையை எண்ணி இரங்கவும் செய்தது.

அந்தப் பெண் சிவப்பியிடமிருந்து பாதுகாப்பான தூரத்திலேயே குளித்துக்கொண்டிருந்தாள். சிவப்பி கண்களை எடுக்காமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தாள். சிவப்பி இதுபோல் அமைதியாய் இருக்கும் வேளைகளில்தான் குளம் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள முடிகிறது. எதையும் யோசிக்க முடிகிறது. இப்போதும் குளம் யோசித்தது. சிவப்பியின் மகளும் இன்று உயிரோடு இருந்திருந்தால் இவள் வயதில் தானே இருப்பாள்?  இருபது வருடங்களுக்கு முந்தைய நிகழ்வுகளுக்குள் மூழ்கத்தொடங்கியிருந்தது.

சிவப்பிக்கும் இந்தக் குளத்துக்கும் அப்படி என்ன உறவும் பகையும்? அதற்குமுன் சிவப்பியைப் பற்றிச் சொல்லவேண்டும். நதிமூலம் போல் சிவப்பியின் மூலமும் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. சிவப்பியின் மூலமாகவும் அது தெரியவரவில்லை.

கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன் பருவ எழில்கள் பூத்துக்குலுங்கும் பூஞ்சோலையென ஊருக்குள் தோன்றினாள். தெருக்களில் அரைகுறை ஆடையுடன் திரிந்துகொண்டிருந்த அவளைப்  பார்த்தவுடனேயே பதைபதைத்தனர் பெண்கள். பல்லிளித்தனர் ஆண்கள். காட்டிய பற்களைப் பதம் பார்த்தன அவள் கைக்கற்கள். அசுரத்தனத்தோடு நின்றவளை மிருகத்தனத்தோடு தாக்கினர் மக்கள். மூர்க்கத்துடன் திரிந்தவள், பசிக்கும்போது மட்டும் அமைதியடைந்தாள். இரவுநேரங்களில் குளக்கரைப் படிக்கட்டுகளில் படுத்துக்கொண்டாள்.

அவள் நல்ல நிறமாக இருந்தாள். நடையின் நளினம் மேல்தட்டுப் பெண்களை நினைவூட்டியது. அவள் பெரும்பாலும் கடைவீதியின் முனையில் இருந்த டீக்கடை வாசலிலேயே நின்றுகொண்டிருந்தாள். அவளை வேடிக்கை பார்க்கவென்றே ஒரு கூட்டம் கடைக்கு வரத் தொடங்கியது. டீக்கடைக்காரர் எத்தனை விரட்டியும் இவள் நகரவில்லை. 'ஏ... சிவப்பி...இந்தா'   டீக்கடைக்காரர் கொடுத்த ஒற்றை ரொட்டியோடு இவளுக்கு சிவப்பி என்ற நாமகரணமும் சூட்டப்பட்டது.

பரிதாபப்பட்ட சிலரின் தயவால் சிவப்பி வயிறு வளர்த்தாள். கூடவே ஒரு உயிரும் வளர்த்தாள். கற்பிழந்ததால் சுயம் இழந்தாளா? சுயம் இழந்ததால் கற்பிழந்தாளா? என்று பட்டிமன்றம் வைத்துப் பார்த்தது ஊர்.  அவள் கர்ப்பத்திற்குக் காரணகர்த்தாவைக் கண்டுபிடிக்கும் முயற்சியிலும் இறங்கியது. முடிவில் தன்னைத் தவிர எல்லோருமே அயோக்கியர்கள் என்ற முடிவுக்குதான் ஒவ்வொருவரும்  வரவேண்டியிருந்தது.

வீங்கிய வயிறு வெளித்தெரியும்படி சுற்றிய அவளைப் பார்த்த பார்வைகளில் பரிதாபம், இளக்காரம், அருவருப்பு, சமூகத்தின் மேலான கோபம், வெறுப்பு போன்ற பல உணர்வுகள் தென்பட்டன. ஆனால் அவளுக்கு உதவும் குணம் எவரிடத்தும் தென்படவில்லை.

ஒருநாள் சிவப்பி காணாமற்போனாள். சிலர் கவலைப் பட்டனர், சிலர் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். அவளைப் பற்றிய பேச்சில்லாமல் மறந்திருந்த ஒருநாளில் கைப்பிள்ளையுடன் மீண்டும் ஊருக்குள் பிரவேசமானாள். இம்முறை அவள் ஆங்காரத்தின் உச்சத்தில் இருந்தாள். பசிக்கு வேண்டுவதையும் மிரட்டிக் கேட்டாள். குழந்தைகள் உண்ணுவதை பறித்து உண்டாள். கடைவீதியில் பலர் மத்தியில் திறந்த மார்பில் குழந்தைக்குப் பாலூட்டினாள். அதைப் பார்த்த சில வக்கிரக் கண்கள் தங்கள் பசியாற்றிக்கொண்டன.

குட்டிக்குரங்கு தன் தாயை இறுகப் பற்றியிருப்பதுபோல் குழந்தையை எந்நேரமும் இறுகப்பற்றியிருந்தாள் அவள். கொடிய உலகத்தில் பிறந்திருக்கும் உணர்வற்று குழந்தை அவ்வப்போது சிரித்தது. அழகிய விக்கிரகம் மாதிரி ஒரு பெண்குழந்தையைப்  பைத்தியக்காரி ஒருத்தி  பெற்றிருப்பதைக் கண்டு, மலட்டுப்பட்டம் சுமத்தப்பட்டு தாய்வீடு விரட்டப்பட்ட ஒருத்தி தலையில் அடித்துக்கொண்டு அழுதாள். குழந்தை அவளைப் பார்த்தும் சிரித்தது.

ஒரு விடியற்காலையில் ஊர் சிவப்பியின் அலறலில் கண்விழித்தது. உரத்தக் குரலில் ஓலமிட்டபடி வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு வீதிகளில் வெறிபிடித்ததுபோல் ஓடிக்கொண்டிருந்தாள், சிவப்பி. கையில் குழந்தை இல்லை, உடலில் ஒட்டுத்துணியில்லை. நிர்வாணமாக.... நிராதரவாக.... ஓலமிட்டபடி ஓடியவளை நிர்தாட்சண்யமின்றி கல்லெறிந்து விரட்டிக்கொண்டிருந்தன, சில கல்நெஞ்சங்கள்.

குழந்தை எங்கே? என்னவாயிற்று? ஏன் இந்த அலங்கோலம்? எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு விடைகள் கொடுக்கப்படவில்லை.  விடைகள் தானாகவே கிடைத்தன. குட்டிகளோடு இருக்கும் பெண்மிருகங்களை தம் இச்சைக்கு உட்படுத்த ஆண் மிருகங்கள் முதலில் செய்வது குட்டிகளைக் கொல்வதுதானாமே.... இங்கேயும் ஒரு மிருகமோ... பல ஒன்றிணைந்தோ.... அந்தக் காரியத்தை ஆற்றியிருக்கின்றன என்பது குளத்தில் மிதந்துவந்த குழந்தையின் சடலம் உறுதிப்படுத்தியது.

குழந்தையைக் கொன்றது குளம்தான் என்று உறுதியாக நம்பினாள் சிவப்பி. அந்தக் குளத்து நீரைக் கால்களால் மிதித்தாள், கைகளால் அறைந்தாள். கையில் குவித்து வாய் நிறைய உறிஞ்சி வேகமாய் உமிழ்ந்தாள். குழறிய வார்த்தைகளால் வசவுகளைக் கொட்டினாள். குமுறி அழுதாள். என்ன செய்தும் அவள் உக்கிரம் தணியவில்லை. ஊர் வெறுமனே வேடிக்கைப் பார்த்தது. அவளது விம்மிய மார்பகங்களின் வலியைத் தீர்க்க இயலாத வெறுமையை எண்ணி குளம் கலங்கியது.

சிவப்பி குளத்தினுள் முங்கி முங்கி தன் சிசுவைத் தேடினாள். ஒவ்வொருமுறையும் எதையோ பற்றிபடி மேலே வந்து ஆர்வம் தெறிக்கும் கண்களால் வெறித்தாள். அது பழந்துணியாகவோ.... பாறாங்கல்லாகவோதான் இருந்தது. ஆனாலும் அவள் அசரவில்லை. அன்றிலிருந்து குளமே அவள் குடியிருப்பானது. அவளுக்காக குளம் அழுதது. கொஞ்சநாள் சிவப்பிக்குப் பயந்து குளக்கரைப் பக்கம் புழக்கம் தவிர்த்திருந்த ஊர், பிறகு அவளை அலட்சியப்படுத்தி மீண்டும் புழங்கத்தொடங்கிவிட்டது.

அன்று கோரதாண்டவம் ஆடியபடி குளத்தினுள் குதித்தவள்தான், இன்றுவரை குளத்தைத் தன் குழந்தையைக் கொன்ற கொலைகாரியாகவே பார்த்து கொந்தளித்துக்கொண்டிருக்கிறாள். அவளைக் குளிர்விக்கத்தானோ என்னவோ கோடையிலும் குறைந்த அளவு தண்ணீரையாவது தக்கவைத்துக்கொள்ளத் தொடங்கியது குளம்.

இருபது வருடத்துக்கு மேலாகியும் இன்னும் அவள் சோகத்தைக் கரைக்க முடியவில்லை குளத்து நீரால். சிவப்பி ஓய்ந்துவிட்டாள். முன்பு போல் இப்போது சிவப்பியால் முங்கியெழ முடியவில்லை. என்றாவது தன் குழந்தையைக் கண்டுபிடிதுவிடுவோம் என்ற நம்பிக்கையும் அவளுள் தளரத் தொடங்கியது. வெறுமனே குளத்திடம் சண்டையிட்டபடி தன் குழந்தையைத் திருப்பித் தரும்படி வேண்டிக்கொண்டிருக்கிறாள்.

சலனம் கேட்டு குளம் தன்னினைவுக்கு வந்தது. அந்தப்பெண் குளித்துமுடித்துவிட்டு மேற்படிக்கட்டில் நின்றபடி உடைமாற்றிக்கொண்டிருந்தாள். கொண்டுவந்திருந்த பையிலிருந்து பொட்டலம் ஒன்றை எடுத்து படிக்கட்டில் வைத்துவிட்டு சிவப்பியைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டுப் போனாள்.

சிவப்பி ஆர்வத்துடன் குளத்தினின்று வெளியேறி அதை நோக்கிப் போக... அவள் நிர்வாணத்தை தன் நீர்த்துளிகளால் மறைக்க முயன்று தோற்றது குளம்.

திங்கள், 30 மே, 2016

'திங்க'க்கிழமை 160530 :: ஜவ்வரிசி வடகம்.

     
வெயில் காலத்தை வீணாக்க மனம் வரவில்லை. 

வெள்ளிக்கிழமை  மாலை திடீரென எழுந்தது அந்த (விபரீத) எண்ணம். 

'வாங்குவோம் - பிறகு என்ன செய்யலாம் என்று பார்ப்போம்' என்று தீர்மானித்து வாங்கி வந்திருந்த முத்துப்பல்லழகி ஜவ்வரிசி பாக்கெட்டிலிருந்து என்னைப் பார்த்துச் சிரித்ததால் வந்த எண்ணமாக இருந்திருக்கும். 
    
   

எனக்குத் தோன்றிய வகையில் ஜவ்வரிசி வடாம் தயார் செய்து பார்த்தால் என்ன என்ற எண்ணம்தான் அது. 

முக்கியமாக என் நடவடிக்கைகள் என் மனைவிக்குத் தெரியக்கூடாது. (பாஸ் என்று குறிப்பிடவில்லை என்பதை புத்திசாலி வாசகர்கள் கவனித்து, இந்தப் பதிவை எழுதியவர் யார் என்று தெரிந்துகொண்டுவிடுவார்கள்) மனைவிக்குத் தெரிந்தால், ஒவ்வொரு ஸ்டெப்பிலும் X போட்டு, எனக்கு சைபர் மார்க் போட்டுக்கொண்டே இருப்பார். 

இரண்டு கரண்டி ஜவ்வரிசியை எடுத்து, ஒரு பாத்திரத்தில் இட்டு, ஆறு  கரண்டி தண்ணீரில் அதை  மூழ்கடித்து, பாத்திரத்தை ஓசைப்படாமல் மூடிவைத்துவிட்டு வந்தேன். 

சனிக்கிழமை அதிகாலையில், அந்தப் பாத்திரத்தை அடுப்பிலேற்றி, நூறு டிகிரி சென்டிகிரேடிலேயே வைத்திருந்தேன். (இண்டக்ஷன் ஸ்டவ் வாழ்க) கொஞ்சம் கொஞ்சமாகக் கொதித்து, ஜவ்வரிசிகள் எல்லாமே கிளியர் கண்ணாடி கோலிகளாகக் காணப்படும்பொழுது, அடுப்பணைத்து, பாத்திரத்தை இறக்கிவைத்தேன். 

(மனைவி கண் விழித்துவிட்டார்கள். இன்னும் ஒருமணி நேரத்திற்கு, எல்லா சானலிலும் வருகின்ற தெய்வதரிசனங்கள் அவருக்குப் பொழுதுபோக்கு) 

ஜவ்வரிசிக்கூழ் ஆறிவிட்டது. (அல்லது கைபொறுக்கும் சூடு) 

ஒரே ஒரு பச்சைமிளகாய் எடுத்து, சிறிய துண்டுகளாக நறுக்கி, அதை மிக்சி சிறிய ஜாரில் போட்டு, ஒரு கரண்டி தண்ணீர் விட்டு, அரைத்து, அந்த மிக்சரை, ஒரு டீ வடிகட்டி மூலமாகக் கூழில் ஊற்றினேன். 

கூழை நன்றாகக் கலக்கிவிட்டேன். 

அரை மூடி எலுமிச்சம்பழத்தை டீ வடிகட்டி மூலமாக கூழில் பிழிந்து, மீண்டும் கிளறிவிட்டேன். 

தேவையான அளவு உப்புப் பொடி போட்டு, மீண்டும் கிளறல். 

அப்புறம் என்ன சேர்க்கலாம் என்று சுற்றுமுற்றும் பார்த்தபொழுது கண்ணில் பட்டது எல் ஜி பெருங்காயப்பொடி. போடு அதையும் என்று இரண்டு சிட்டிகை பெருங்காயப் பொடியையும் கூழில் போட்டேன். கலக்கிவிட்டேன். 

வடாம் மாவு தயார். 

நான் ஒரு அரைச் சோம்பேறி. வடாம் இடுவதற்கு துணி எல்லாம் தயார் செய்வது என் இயல்புக்கு ஒவ்வாத விஷயம். ரிலையன்ஸ் ஃபிரெஷ் கடையில் லூசாக (ஹி ஹி நான் ஒரு லூசுப்பய) அரிசி வாங்கிய  பை இருந்தது. அதை எடுத்து, பெரிய பரப்பளவு வரும் வகையில் கட் செய்து, வெய்யிலில் வைத்து, நான்கு பக்கங்களிலும் பேப்பர் பறக்காமல் இருக்க கல் வைத்தேன். 
   

ஜவ்வரிசி வடாம் கூழை, ஒரு சிறிய ஸ்பூனால் எடுத்து, டக் டக் டக் என்று பேப்பரில் இட்டேன். இரண்டு நிமிட நேரத்தில் அறுபது டாட் வடாம் இட்டாச்சு. 

காக்கா வராமல் இருப்பதற்கு, வடாமிட்ட பேப்பரின் மேலே, துணி உலர்த்தும் ஸ்டாண்ட்  வைத்தேன். மாலையில் வெயில் போனதும், பேப்பரோடு எடுத்து உள்ளே வைத்தேன். 
  


ஞாயிற்றுக்கிழமை காலையில், பேப்பரிலிருந்து ஒவ்வொரு வடாமாக எடுத்து, (சுலபமாக எடுக்கமுடிந்தது) ஒரு தட்டில், ஈரம் இருக்கும் பக்கம் மேலே இருக்கும் வகையில் போட்டேன். அறுபது டாட் வடாமுக்கு இரண்டு தட்டுகள் போதும். 
   


(படத்தில் காணப்படுவது, மறுநாள், பேப்பரிலிருந்து எடுக்கப்பட்டு, தட்டில் வைக்கப்பட்ட வடாம்கள், துணி ஸ்டாண்டுக்குக் கீழே)  

ஞாயிறு மாலையே வடாம்கள் தயார். 

இன்று காலை பெரிய சஸ்பென்ஸ் என்று நினைத்து, மனைவியிடம் போய், "கடந்த இரண்டு நாட்களில் நான் என்ன செய்தேன் தெரியுமா?" என்று கேட்டேன். "எல்லாம் தெரியும். ஜவ்வரிசி வடாம் என்று நினைத்துக்கொண்டு ஏதோ செய்திருக்கிறீர்கள். இதையெல்லாம் எண்ணெயில் பொரித்து, நான் எண்ணெயை வேஸ்ட் செய்வதாக இல்லை." 

எண்ணெய் ஜாடியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. 

யாராவது இந்த வடாம்களை பொரித்துக் கொடுக்கிறீர்களா? 

எண்ணெயில்லாமல்  பொரிக்கலாம் என்று பார்த்தால், என்காக்கை அலை சூளை (ஹி ஹி மைக்ரோ வேவ் ஓவன்!) பழுதாகிப் பல நாட்கள் ஆகிவிட்டன.

எப்பொழுதாவது சந்தர்ப்பம் கிடைத்தால், பொரித்து, புசித்துப் பார்த்துச் சொல்கிறேன். 
               

சனி, 28 மே, 2016

என்னதான் வாழ்க்கையோ !

நம் வாழ்வில் மிகவும் இனிய, சோகமான, மிகவும் கோபப்பட வைத்த தருணங்கள் எவை என்று ஒரு பட்டியல் போட முனைந்தபோதுதான் அது எவ்வளவு கடினம் என்று தெரிந்தது.

கல்யாணம், முதல் குழந்தை பிறந்தது போன்ற ருட்டீன் சம்பவங்கள் யோசித்துப் பார்க்கும்போது இதில் என்ன பெரிய சாதனை இருக்கிறது, யாருக்குத்தான் இதெல்லாம் நடக்கவில்லை என்று எண்ணம் ஓடியது.

சோகமும் அவ்வாறே.  காலக்கிரமத்தில் நிகழ்ச்சிகள் தம் தீவிரத்தை இழந்து நீர்ததுக்காணப்படுகின்றன.

கோபத்தைப்பற்றி சொல்லவே வேண்டாம். ஆறுவது சினம் என்று சும்மாவா சொன்னார்கள் ! பத்து நிமிஷம், அதிக பட்சம் ஒரு நாளைக்கு மேல் நீடிக்காத அற்பாயுசு உணர்வு இந்த கோபம்.

பெருமை என்பது மகத்தானதாக இல்லா விட்டாலும் ஒரு பத்து நாளைக்குப் பத்து பேர் குறிப்பிட்டுப் பேசி வியக்கும் விஷயமாக இருக்க வேண்டாமோ ! இந்த அதிர்ஷ்டம் எத்தனை பேருக்கு வாய்க்கும் ? எனக்கு இல்லை.

எல்லாம் யோசிக்கும் வேளையில் "உண்பதும் உறங்குவதுமாகவே முடியும்" என்று சொன்னதின் மகத்துவம் புரிகிறது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்1)  அஜய் குமார்.  கை இல்லை...  நம்பிக்கை இருக்கிறது.  


2)  இலவசக் கல்வி உதவி...  ஹிதாயத் சையத்.


3)  தான் கற்ற கல்வியால் மற்றவர்களுக்குப் பயன் இருக்கவேண்டும் என்று நினைத்த நண்பர்கள் குழு இரண்டு மாதங்களில் இரண்டு கிராமங்களில் வெளிச்சம் ஏற்படுத்தினார்கள்.5)  இதுதாண்டா பள்ளி!வெள்ளி, 27 மே, 2016

வெள்ளிக்கிழமை வீடியோ 160527 :: கர்ணனைக் கொன்றவர் யார்?

             
முன்னாள்  ஆந்திர முதல்வர் சொல்வதைக் கேளுங்கள்!
   

         
பின்குறிப்பு: இது  பாடல்  காட்சி மட்டும் இல்லை. பிறகு வரும் வசனங்கள்தான்  முக்கியமாக  கவனிக்கவேண்டியவை. 
       

வியாழன், 26 மே, 2016

வில்லனுக்கும் உண்டு நல்ல குணங்கள்          கதைகளிலும், சினிமாக்களிலும் வில்லன்களைப் பார்க்கும் நாம், மனதுக்குள் அவர்களை முற்றிலும் தீய ஜென்மங்களாகவே நினைத்துக் கொள்கிறோம்.  படங்களை ஜெயிக்க வைக்க அப்படித்தான் உருவேற்றுகிரார்கள் படத்தை இயக்குபவர்கள்.

          சாதாரண வாழ்வில் இவர்களை விட மோசமானவர்களை நாம் சந்தித்திருப்போம்.  அவர்களெல்லாம் ஓரளவு - வேறு வழி இல்லாமல் - நமக்கு நண்பர்களாகவே கூட இருப்பார்கள் -

          ஒரு குறள் உண்டே..

குணம் நாடி குற்றமும் நாடி அவற்றில் 
மிகை நாடி மிக்கக் கொளல்.          சினிமாக்களில் நாம் பார்க்கும் வில்லன்களை அந்தப் படத்தின் இயக்குநர்கள் முடிந்தவரைக் கொடூரமானவர்களாகவே காட்ட முயல்கிறார்கள்.  இப்போதெல்லாம் அது மிக அதிகமாகவும் ஆகி, திரையிலேயே ரத்தம் தெறிக்கும் அளவுக்கு வில்லன்களை சந்திக்க நேர்கிறது.  சிற்சில படங்களில் நேர்மையாக, அளவான வில்லத் தனத்துடனும் காட்டுகிறார்கள்.
  அதுவும் உண்டு!

           உண்மையில் திரையில் கதாநாயகனாக நடிப்பவர்கள்தான் நிஜ வாழ்வில் மோசமானவர்களாகக் கூட இருப்பார்கள்!!!

          புராண வில்லக் கதாபாத்திரங்களில் இராமாயண இராவணனும், மஹாபாரத துரியோதனனும் நாம் கேள்விப்பட்டதில் சூப்பர் வில்லன்கள்.  இதில் இராவணன் பற்றிக் கேள்விப் படும்போது அவன் சிறந்த சிவபக்தன் என்று அறிகிறோம்.  இசை அறிவு மிக்கவன் என்று அறிகிறோம்.  வீணை வாசிப்பதில் நிகரற்றவன் என்று அறிகிறோம்.  அவன் மனைவி மண்டோதரி கற்புக்கரசிகளில் ஒருத்தியாகக் கூடப் போற்றப் படுபவள்.

          அப்படிப் பட்டவனின் ஒரே பலவீனம் சீதை ஆகிப் போகிறாள்.  அவன் செய்த வேறு தீய செயல்கள் என்ன என்று தெரியவில்லை.  அவன் அடுத்தவன் மனைவியின் மீது மையல் கொள்கிறான். புராணத்தில் அப்படிப்பட்டவர்கள் - இந்திரன் உட்பட - இன்னும் சிலரும் இருந்திருக்கிறார்கள்.  அந்தக் காலத்துக்கு அது ஒத்துக் கொள்ளப்பட்ட நடைமுறையும் கூட.   ஸ்வேதகேது அந்த நடைமுறையை சற்றே மாற்றுவதாகப் படித்தேன்.  அவர் தந்தை உத்தாலகர் என்னும் ரிஷியின் மனைவி பற்றிய கதைகளும் சுவாரஸ்யம்.  ஆனால் ராவணனின் மையலை சீதை அங்கீகரிக்கவில்லையே...  அவள் அந்த நேரத்தில் புதிதாக அமையும் 'ஒரு தார' நாகரீகத்தின் பிரதிநிதி.
எனவே அவன் அது காரணமாகவே அழிக்கப்படுகிறான்.

          மஹாபாரத துரியோதனின் பெருந்தன்மையைக் காட்டும் சில கதைகளில் ஒரு சம்பவம்.

          சுபத்திரையை துரியோதனனுக்குப் பேசி முடிக்கிறார்  அவள் தந்தை பலராமர் - கிருஷ்ணனின் அண்ணன்.  துரியோதனன் அவர் சீடன்.

           சுபத்திரையோ அர்ஜுனனை மனதில் வரித்து, கிருஷ்ணனின் துணையுடன் அவனை ரகசியத் திருமணம் புரிந்து விடுகிறாள்.

          இதைக் கேள்விப்படும் பலராமன் துரியோதனனை நேரில் கண்டு, நிலை கூறி, குறுகி மன்னிப்புக் கேட்கிறான்.

                                                                   
          பீஷ்மர், துரோணர் உள்ளிட்டவர்கள் அவை கூட்டி, அழைத்துவரப்பட்ட துரியோதனனிடம் இது தவறு என்றும், அவன் விரும்பினால் படை திரட்டி அர்ஜுனனை வென்று சுபத்திரையைக் கைகொள்ளலாம் என்றும் சொல்கின்றனர்.  அது க்ஷத்ரிய தர்மம்தான் என்றும் கூறுகிறார்கள்.

          துரியோதனன் மனமுடைந்து போனாலும் ஒரு கேள்வி கேட்கிறான்.  அர்ஜுனன் சுபத்திரையை வலுவில்  கடத்திச் சென்றானா?  எப்படி நிகழ்ந்தது இது?

           பார்த்த சாட்சிகள், சுபத்திரைதான் தேரை ஓட்டிச் சென்றதாகவும், அர்ஜுனன் அதில் அமர்ந்து சென்றதாகவும் சொல்கின்றனர்.

          எனில், போரிடுவதிலோ, வலுவில்  அவளைக் கவர்ந்து வருவதிலோ பயனில்லை என்று கூறுகிறான் துரியோதனன்.  சுபத்திரையின் மனம் வேறு இடத்தில் லயித்திருக்க, அதை வலுவில் தன்பக்கம் திருப்ப முடியாது என்று சொல்லி மற்றவர்களின் கருத்தை மறுக்கிறான் துரியோதனன்.  அந்தச் சம்பவத்தை அத்தோடு மறந்தும் விடுகிறான்.

          அர்ச்சுனன் சுபத்திரையை மணந்ததும், அவள் "துரி" க்காக நிச்சயிக்கப் பட்டதும் தெரியும்.  ஆனால் இப்படிப்பட்ட ஒரு உரையாடல் நடந்ததற்கு எங்காவது ஏற்கெனவே சொல்லப் பட்டிருக்கிறதா?
 
          அதனால் இப்படி ஒரு காட்சி நடந்ததா என்று அறியவும் ஆவல்.  கீதாக்கா சொல்லக் கூடும்!
நன்றி படங்கள் இணையத்திலிருந்து....புதன், 25 மே, 2016

தியேட்டர் நினைவுகள் 1 -          எனது தியேட்டர் நினைவுகள் தஞ்சாவூர் ராஜேந்திரா டூரிங் டாக்கீஸ் நினைவுகளுடன் தொடங்குகிறது!  இது மாதிரித் திரையரங்குகளில் படம் பார்த்தவர்கள் அந்த இனிய நினைவுகளை மறக்க மாட்டார்கள்.  அது ஒரு தனி அனுபவம்தான்.

          இன்றைய சத்யம், தேவி, ஐநாக்ஸ், மாயாஜால் தியேட்டர்கள் தராத ஒரு சந்தோஷம் அங்கு கிடைத்தது என்பது அதை அனுபவித்தவர்களுக்குத் தெரியும்.  காலை, மதிய நேரக் காட்சிகள் பார்க்க முடியாது.  இருட்டியபிறகுதான் படம் போட / பார்க்க முடியும்.  ஒரு கூரைக் கொட்டகை.  பக்கங்கள் தாழ்வாக அமைக்கப் பட்டிருக்கும்.  பெரும்பாலும் தரை டிக்கெட்தான்.  கொஞ்சமாக பெஞ்ச் டிக்கெட், ஒரு வரிசை (மூட்டைப் பூச்சிகளுடன்) நாற்காலி டிக்கெட்!


          எங்கள் அந்தத் தியேட்டரைப் பொருத்தவரை 'முருகா என்றழைக்கவா... முத்துக்குமரா என்றழைக்கவா..' என்ற பாடல் ஒலிபரப்பாகத் தொடங்கி விட்டால் டிக்கெட் தரத் தொடங்கி விட்டார்கள் என்று அர்த்தம்.  அதுவரை வேறு பாடல்கள் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் - ஸ்பீக்கரில் அலறிக் கொண்டிருக்கும்.


          இதைச் சொல்லும்போது சம்பந்தமில்லாமல் இன்னொரு விஷயம் நினைவுக்கு வருகிறது.  மதுரையிலிருந்து சென்னை வரும் மதுரை ராதா, யோகலக்ஷ்மி போன்ற ஆம்னி பஸ்களில் கிளம்பியவுடன் சினிமாப் பாடல்கள் போடத் தொடங்கி, படம் போட்டு முடித்து இருட்டாக்கி தூங்க வைத்த பிறகு, காலை விடிந்ததும் ஊர் நெருங்குகையில் ஸ்பீக்கர்கள் மறுபடி உயிர் பெரும்.  சூலமங்கலம் சகோதரிகள், டி எம் எஸ், சீர்காழி பக்திப் பாடல்கள் ஒலிபரப்பாகத் தொடங்கும்.  இதை ஒரு வழக்கமாக அவர்கள் வைத்துக் கொள்வதை நினைவுக்கு வந்ததால் சொன்னேன்.  அவ்வளவுதான்.  ஆனால் சினிமா பார்த்த இடங்களின் லிஸ்ட்டில்  பஸ்ஸை சேர்க்கக் கூடாது.  கொடுமை அது!


          வீட்டிலிருந்து கிளம்புமுன்னரே இந்தப் பாடல் காதில் ஒலித்து விட்டால் பரபரப்பாகி விடும்.  நாம் போகுமுன் டிக்கெட் காலியாகி விடக் கூடாதே என்று அல்ல...  அப்படி எல்லாம் காலியாகி விடாது!  முன்னாலேயே டிக்கெட் வாங்கி உள்ளே சென்றால்தான் வாகான இடத்தில் இடம் பிடித்து, மணலைக் குமித்து சௌகர்யம் செய்து கொண்டு படம் பார்க்கத் தயாராகலாம்!


          அப்படி அங்கு பார்த்தவை  சபதம், மாட்டுக்கார வேலன், இருதுருவம், ரங்கராட்டினம், முரடன் முத்து, தேவதாஸ், மூன்று தெய்வங்கள் போன்ற படங்கள்.  அதில் மாட்டுக்கார வேலன் படத்துக்கு அப்பாவிடம் காசு வாங்குவதற்குள் தாவு தீர்ந்து விட்டது.  வீட்டுக்கு விருந்தினர்கள் வந்திருக்க, நான் படம் பார்க்கக் காசு கேட்டு அனத்திக் கொண்டிருக்க, நான் 'மாட்டுக்கார வேலன்.... மாட்டுக்கார வேலன்..' என்று அனத்த அனத்த வந்திருந்த உறவினர் ஒருவர் கூடக்கூட 'ஆட்டுக்கார சுப்பன்... ஆட்டுக்கார சுப்பன்..' என்று கிண்டலடித்துக் கொண்டிருந்தார்.  அப்புறம் அவரே...  "அட பாலு..  இவன் நம்மைப் பேசவே விட மாட்டான்.  காசைக் கொடுத்தனுப்பு.. இரு நானே கொடுக்கிறேன்" என்று கூறி காசு எடுத்துத் தந்தார்.  அப்போது, அந்தத் தியேட்டரில் டிக்கெட்  என்ன பத்துப் பைசா இருந்திருக்குமா...  நினைவில்லை!          இரண்டாவது ரிலீஸ், மூன்றாவது ரிலீஸ் படங்கள்தான் இங்கு டூரிங் தியேட்டரில் வெளியாகும்.  மற்றபடி மற்ற படங்கள் நல்ல தியேட்டரில் வெளியாகும்.


         எந்தப் படத்தையும் ரிலீஸாகும் அன்று முதல் நாள் பார்க்கும் ஆசை எல்லாம் இருந்ததில்லை.  படம் நன்றாய் இருந்தால் அப்புறம் ஒருநாள் சென்று பார்ப்போம்.  அவ்வளவுதான்.  அப்படி ரிலீஸான அன்றே பார்த்த ஒரு படமும் இருந்தது.  அது தஞ்சாவூர் அருள் தியேட்டரில் பார்த்த அண்ணன் ஒரு கோவில் திரைப்படம்.  அக்காவும், மாமாவும் கிராமத்திலிருந்து வந்து, எனக்கும் சேர்த்து ரிசர்வ் செய்து 
அழைத்துச் சென்றதால் பார்த்த படம்.

          இப்பொது இந்தப் பழக்கம் இருக்கிறதா, இல்லையா தெரியவில்லை...  படத்தைப் பார்த்து விட்டு வெளியே வந்து பஸ் ஸ்டாண்ட் நோக்கி நடக்கும்போது இருக்கும் கடைகளில் சரியாக நாம் பார்த்தத் திரைப்படத்தின் பாடல்களை ஒலிக்க விடுவார்கள்.  அப்படி நினைவு இருக்கும் படங்கள் வசந்தமாளிகை, மன்னவன் வந்தானடி, போன்றவை.  ஐந்து சிவாஜி படங்கள் பார்த்தால் ஒரு எம் ஜி ஆர் படம் பார்ப்போம்! உடனே சினிமா பார்ப்பதுதான் முழு நேர் வேலை என்று நினைக்க வேண்டாம்.  அப்போது படங்கள் வெளியிடும் நாட்களுக்கிடையே போதிய இடைவெளி இருக்கும்!  


          என் அப்பாவின் அம்மாவுக்கு திரைப்படங்கள் பார்க்கப் பிடிக்கும்.  கிராமத்திலிருந்து வருபவர் சில படங்களை வரிசை வைத்துப்பார்த்து விடுவார்.  அதற்குத் துணையாக என்னை அழைத்துப் போவார்.  அதனால்தான் இப்படிப் படங்கள் பார்க்க முடிந்தது. இந்த வரிசையில் விஷ்ணுவர்த்தன் நடித்த டப்பிங் படம் ஒன்று 'காட்டுக்கு ஒரு தோட்டக்காரன்' என்று பெயர் - அதையும் பார்த்திருக்கிறேன்.  "புலி., சிங்கம், யானையெல்லாம் காட்டறானாண்டா..  நல்லா இருக்கும் வாடா" என்று பாட்டி அன்புடன் அழைத்துச் சென்றாள்.  பாட்டியுடன் போனால் இன்னொரு சௌகர்யம்.  ரிக்ஷாவில் சென்று வரலாம்.  இடைவேளையில் தின்பண்டங்கள் கிடைக்கும்!

         


செவ்வாய், 24 மே, 2016

கேட்டு வாங்கிப் போடும் கதை :: முனைப்பு


     இந்த வார 'கேட்டு வாங்கிப் போடும் கதை' பகுதியில்  பிரபல எழுத்தாளர் உஷாதீபன் அவர்களின் படைப்பு  வெளியாகிறது. மதுரையில் எங்கள் அருகாமைத் தெருக்காரர்.  பாஹேவின் இனிய நண்பர்.   எங்கள் இனிய நண்பர்.  தற்சமயம் சென்னையிலும், டெல்லியிலுமாக மாறி மாறி இருக்கிறார்.
          அவரின் தளம் உஷாதீபன்

     இவரின் 
கதைகள்  பத்திரிகைகளில் தொடர்ந்து  வெளிவந்து கொண்டிருக்கும்.   தினமணிக் கதிரில் இவரது சிறுகதைகள் அதிகமாக வெளியாகும்.   இவரின் சிறுகதைத் தொகுதிகள் நிறைய புத்தகமாக வெளிவந்திருக்கின்றன.  விவரங்களை அவர் தளத்தில் காணலாம்.


     இலக்கியச் சிந்தனை 2015 ம் ஆண்டின் 12 சிறந்த சிறுகதைகளில் தினமணி கதிரில் வெளிவந்த இவருடைய சிறுகதை ”கைமாத்து” தேர்வு செய்யப்பட்டுள்ளது (8.5.2016 தேதியிட்ட “திண்ணை” இணைய இதழைப் பாரத்துத் தெரிந்து கொள்ளலாம்)


     எங்கள் வேண்டுகோளை ஏற்று உங்கள் கதை ஒன்றை அனுப்பித் தந்தமைக்கு நன்றி உஷாதீபன் ஸார்...

 
     கதை பற்றிய அவரது கருத்தைத் தொடர்ந்து அவர் படைப்பு...


===============================================================


     வணக்கம். இந்த முனைப்பு என்ற சிறுகதை தோன்றிய விதமே அலாதி. ஒரு கதை தோன்ற ஏதேனும் ஒரு பொறி  போதும். ஊதிப் பெருக்க வைப்பது கதாசிரியனின் திறமை. அதற்கு சற்றே கற்பனை வளம் வேண்டும் என்பேன் நான். கதை எழுதுபவனுக்கே தனக்கு கற்பனை செய்ய முடியும் என்கிற தன்னம்பிக்கைதான் அவனை உந்துதலாய் எழுத வைக்கிறது என்றும் சொல்லலாம்.

     கற்பனை எப்படி வருகிறது? நிறைய வாசிப்பும், விஷூவல் பார்வையும் அவனிடம் இருப்பதுதான் .ஆழ்ந்த ரசனை இன்னொரு முக்கிய காரணமாகிறது. ரசனை என்பது எல்லோருக்கும் வந்துவிடுவதல்ல. ஆழ்ந்த ரசனைதான் ஒரு படைப்பின் கலை நுட்பத்தை நிர்ணயிக்கிறது. கலை கலைக்காகவே என்று சொல்வதும், கலையும் இலக்கியமும் மக்களுக்காகவே என்று இன்னொரு தரப்பு சொல்வதும் இப்படிப் பிறந்ததுதான்.

     முனைப்பு சிறுகதை ”தாமரை”யில் வந்தது. பலரின் தொலைபேசி அழைப்பைக் கொண்டு வந்த படைப்பு அது. இக்கதையின் முடிவை ஏற்காமல் ஒன்று நிராகரித்தது. ஆனால் இப்படியும் நடக்கும் வாய்ப்பு உண்டு என்கிற யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு வெளியிட்டது தாமரை.

     ஆரம்பத்தில் சொன்னதுபோல் இந்தக் கதை ஒரு பொறியில் பிறந்ததுதான். என் சித்தப்பா பெண் அதாவது என் தங்கையின் கணவர் இப்போது மதுரை டி.வி.எஸ். பள்ளியில் பணிபுரிகிறார். ஆரம்பத்தில் அவர் மதுரை தேவி டாக்கீஸில் டி க்கெட் கொடுக்கும் வேலையில் இருந்தார். பார்த்திபன் உறவுஸ்ஃபுல் படம் எடுத்த தியேட்டர். இப்போது அந்தத் தியேட்டர் இல்லை. அந்தத் தியேட்டர் முதலாளிக்கு அத்தனை நம்பிக்கையானவர் அவர். தன் அனுபவங்களை ஒரு நாள் என்னிடம் சொன்னார். அதிலிருந்து கிளைத்ததுதான் இந்தக் கதை. எங்கெல்லாம் சுற்றி வருகிறது பாருங்கள்....ஸ்வாரஸ்யமான அடர்த்தியான படைப்பு. இதை உங்களின் எங்கள் ப்ளாக்கில் வெளியிடுவதில் எனக்குப் பெருமை. நன்றி.


உஷாதீபன்.========================================================================

 முனைப்பு உஷாதீபன்.

“டேய், இதெல்லாம் ரொம்ப அநியாயம்டா…” – செந்திலைப் பார்த்து ஆவேசமாகக் கத்தியவாறே ஓடி வந்த மாரியப்பன், வந்த வேகத்தில் இவனருகில் இருந்த பசை வாளியைத் தூக்கிக் கொண்டு ஓடினான். துரத்தி வந்தால் உடனடியாகப் பிடிக்க முடியாத தூரத்திற்குச் சென்று விடவேண்டும் என்று முடிவு செய்து கொண்டதுபோல் இருந்தது அவன் ஓடிச்சென்று நின்ற இருட்டான பகுதி. அந்த நடுராத்திரியில் அவன் அங்கே வருவான் என்று கொஞ்சங்கூட எதிர்பார்க்கவில்லை. எவனிடமும் சொல்லாமல்தான் அந்த ஆர்டரைப் பிடித்திருந்தான் அவன். அதை தனக்குள் அப்படித்தான் சொல்லிக் கொள்கிறான். மொத்த நகரத்திற்கும் அவன் ஒருவனே அந்த வேலையை ஏற்றுக் கொண்டிருக்கிறான் என்றால் அப்படித்தானே சொல்ல வேண்டும். எப்படித்தான் அவனுக்குக் கொடுத்தார்களோ! இன்னும் ஆச்சரியம் நீங்கியபாடில்லை. நல்ல எண்ணத்தோடு எல்லாவற்றையும் செய்ய முயன்றால், செய்தால், எல்லாமும் நல்லபடியாய் நடக்குமோ என்னவோ!


அப்படிச் சொல்லிக் கொள்வதில் அவனுக்கே ஒரு பெருமை இருக்கத்தான் செய்தது. யாரிடமும் அவன் அதைச் சொல்லவில்லைதான். சொல்லக் கூடாது என்பதுதானே அவன் எண்ணம். சொன்னால் நிச்சயம் பொறாமை வரும். போட்டி வரும். சண்டை வரும். . ஆனாலும் இந்த மாரிப் பயலுக்கு எப்படித் தெரிந்தது? திருகுதாளம் பிடிச்சவனாச்சே இவன்?
.
வாழ்க்கையில் ரிஸ்க் எடுத்தால்தான் மேலே போக முடியும். நியாயமான ரிஸ்க் எடுப்பதில் என்ன தவறு? மேலே போகிறோமோ இல்லையோ நம்மின் தேவைகளைத் தாராளமாக நிறைவு செய்து கொள்ள அப்பொழுதுதான் முடியும் என்கிற எண்ணம் ஆழமாகப் பதிந்திருந்தது அவனிடம். நம்மின் என்றால் அவன் மட்டுமா? அவனின் அன்புக் குடும்பத்திற்கும் சேர்த்துத்தானே அவன் யோசிக்கிறான். யாரும் அப்படியெல்லாம் ரிஸ்க் எடுக்க மாட்டார்கள். ஆனால் செந்திலால் முடியும். காரணம் அவன் உழைப்பு அப்படி. அவனின் கடுமையான உழைப்பில் அவன் வைத்திருக்கும் நம்பிக்கை அப்படி. ஆரம்பத்தில் சிலருடன் சேர்ந்துதான் அவன் அந்த வேலையைத் துவக்கினான். அவர்களின் பழக்க வழக்கங்கள் பின்னால் இவனுக்கு ஒத்து வரவில்லை. மகாத்மாகாந்திக்குச் சொன்னதுபோல் இவனுக்கு இவன் தாய் சொல்லியிருந்தது மனதிலேயே பதிந்து போயிருந்தது.


”போதப் பழக்கம், பொம்பளப் பழக்கம் ரெண்டும் ஆகாதுய்யா…”

இன்றுவரை அவன் உறுதியாய்க் கடைப்பிடித்து வருபவை அவை. ஆத்தாள் தன் கணவன்பாலான அனுபவத்தில் கண்ட உண்மைகளை அவனுக்குச் சொல்லி வைத்தாள். தன்னை அத்தனை உறுதியாய் வளர்க்கவில்லையென்றால் தான் எங்கே தேறியிருக்கப் போகிறோம்?


நேரத்திற்கு எழுந்திரிக்க, பல் விளக்க, குளிக்க, சாமி கும்பிட என்று ஒவ்வொன்றாய் ஆத்தா தனக்குச் சொல்லி வைத்ததுதானே தன்னை இன்றுவரை காப்பாற்றி வருகிறது. ஆத்தாவோடு சேர்ந்து மார்க்கெட்டிற்குப் போவதும், மொத்தக் கடையில் காய்களை வாங்கிக் கொண்டு வந்து தெருக்களிலும், வீதி ஓரங்களிலும் கால் கடுக்க நடந்தும், அமர்ந்தும் காய்கறிகளை முழுதுமாக விற்றுத் தீர்த்து சாயங்காலம் கமிஷன் காசைக் கண்ணாரக் கண்டபோது ஆத்தாவிற்கு இவனே யோசனை சொன்னானே!


“ஏன் ஆத்தா நம்ம வீட்டுக்குப் பின்னாடிதான் அம்புட்டு எடங்கெடக்குதே…நாம அதுல கீரை போட்டா என்ன?”


”போடா, போக்கத்தவனே…கீரயைப் போட்டு என்னாத்தக் காசு பார்க்கப் போற நீ…முடி முடியாப் போட்டு அஞ்சஞ்சு ரூபாய்க்கு வித்து லாபம் பார்த்து ஆகுமா?”


”என்னாத்தா இப்டிச் சொல்ற நீயே? அப்போ விக்குறவகளெல்லாம் கேனச் சிறுக்கிகளா?”


”அதுக்கில்லடா…எடம் எங்க கெடக்குன்னு கேட்குறேன்…”


”ஆத்தா, மத்தவுக எடத்த நாம ஆக்ரமிக்கவா ப்ளான் பண்றோம்…நல்லா சுத்தப்படுத்தி நல்லதுதான பண்றோம்…மண்ணக் கொத்தி விட்டு, கீரைய வெதப்போம்…வளர வளரப் பிடுங்கிப் பிடுங்கி வித்துக்கிட்டிருப்போம்…உடமப்பட்டவுக வந்து கேட்டாகன்னா எடுத்துக்குங்கய்யான்னு கும்பிட்டுட்டு விலகிக்கிடுவோம்….சும்மானாச்சுக்கும் கருவேல மண்டி, பாம்பு அடையறதுக்கு இது பரவால்லேல்ல…யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டாக….கெட்ட எண்ணமுள்ளவுகளப் பார்த்தாலே தெரிஞ்சிடும் ஆத்தா…நமக்கு அப்படியெல்லாம் எந்த ஆபத்தும் வந்திடாது…”
சொன்னான். காரியத்திலும் இறங்கினான். பாலாக் கீரை, சக்கரவர்த்தினி, பருப்புக் கீரை என்று பலரும் பேர் அறியாத கீரைகளையெல்லாம் விதைத்து, அவை செழிப்பாக வளர்ந்து ஓங்கி நிற்பதைக் கண்டு உள்ளம் பூரித்து, பூமியோடு அவை பொருந்தி நிமிர்ந்து நிற்பதைப் பார்த்து ரசித்து இவைகளையா பிடுங்குவது என்று நினைத்து வருந்துமளவுக்கு மனம் தயங்கி, பிடுங்கப் பிடுங்க வளருவதுதானே என்று ஏதோஒருவகையில் சமாதானம் செய்து கொண்டு, சந்தையின் நுழைவாயிலில் அவன் கடை போட்ட போது பச்சைப் பசேல் என்று குளிரக் குளிர பசும் இளமையாய் அவை சிரித்து நின்றபோது, வியாபாரம் பிச்சுக்கொண்டுதான் போனது.


ஆனால் அவனது துரதிருஷ்டம். அத்தனை சீக்கிரத்திலா எதிர்கொள்ள வேண்டும். ஒரு ஆறு மாதப் பொழுதிலேயே அந்த இடத்தில் வீடு கட்டும் வேலை ஆரம்பமானது. மனிதர் ஒரு வார்த்தை தன்னைத் தப்பாய்ப் பேசவில்லை. அவனையே கட்டும் வீட்டிற்குக் காவலாளியாய் இருக்கக் கேட்டுக் கொண்டார். கொஞ்ச நாள் அந்தக் காசும் வரத்தானே செய்தது. இன்றும் கூட குடி வந்த அந்த வீட்டுக்காரர்களுக்கு இவன்தான் கீரை சப்ளை செய்கிறான். எங்கிருந்து? மொத்த வியாபாரத்திலிருந்து வாங்கி சில்லறை விற்பனையில்.


எந்த வேலையையும் செய்யத் தயங்காத தன்னின் ஈடுபாடுதான் தன்னை இத்தனை நாட்கள் நிலை நிறுத்தியிருக்கின்றன என்று நினைத்துக் கொள்வான். அப்பா தள்ளுவண்டியில் பழம் விற்றிருக்கிறார். ஐஸ் விற்றிருக்கிறார். தெருத் தெருவாகச் சென்று காய்கறி விற்றிருக்கிறார். டிரை சைக்கிளில் சிமின்ட் ஏற்றுவது, கட்டுக் கம்பி ஏற்றுவது, செங்கல், மணல் கொண்டு இறக்குவது, ஜல்லி அடிப்பது, என்று எந்த வேலை செய்யவில்லை அவர். ஒன்றையாவது கேவலமாக நினைத்திருப்பாரா? கௌரவம் பார்த்திருப்பாரா? நமக்கெதுக்குடா அதெல்லாம். உழைக்கணும், சாப்பிடணும் அவ்வளவுதான் என்பார்.


அவர் இருந்திருந்தால் இந்தக் குடும்பம் இன்று இப்படியா இருக்கும்? தங்கச்சிகளை வேலைக்கு அனுப்பியிருப்பாரா? எப்படியாப்பட்ட மனுஷன்? நாமதான் கொடுத்து வைக்கலை. அம்மா சொல்லிச் சொல்லி வருந்தும் அவற்றையே நினைத்துக் கொள்வான் இவன்.


பின் புது வீட்டுக்காரர் சொல்லித்தான் அந்த சினிமாத் தியேட்டர் வேலைக்குப் போனான் செந்தில். வேலையில் சேர்ந்த முதல்நாள்தான் அவரும் ஒரு பங்குதாரர் என்பதே அவனுக்குத் தெரியும்.


ந்தவிதப் பதட்டமும் இல்லாமல் மாரியைக் கூர்மையாகத் திரும்பிப் பார்த்த இவன், “ஒழுங்கா வச்சிரு…“ என்று மட்டும் இங்கிருந்தே கத்திச் சொல்லிவிட்டு கையிலெடுத்திருந்த பசையை சுவற்றில் திருப்பிப் போட்டிருந்த போஸ்டரில் தடவ ஆரம்பித்தான். மேலும் கீழுமாக, வலதும் இடதுமாகக் கையகலத்திற்குச் சமமாகத் தடவியிருக்கிறோமா என்று கொஞ்சம் பார்வையை ஓரப்படுத்திப் பார்த்துக் கொண்டான்.


நான்கு மூலைகளிலுமோ, அல்லது நட்ட நடுவிலோ எங்கும் பசை பரவாமல் துருத்திக் கொண்டு சுவற்றில் பொருந்தாமல் நிற்கக் கூடாது. அம்மாதிரி அரைகுறை வேலை செய்வது அவனுக்கு என்றுமே பிடிக்காது. எங்கேயாவது துருத்திக் கொண்டிருந்தால் மாடுகள் வாயை வைத்து பரக்கென்று ஒரு இழு இழுத்து விடும். பகலில் ”என்னடா போஸ்டர் ஒட்டியிருக்கே நீ?  ஒரு நா கூட நிக்கலே..” என்று சம்பந்தப்பட்டவர் யாரும் அவனைக் கேட்டு விடக் கூடாது.
தொழில் சுத்தம் வேண்டாமா?"


செந்திலைப் போல் இந்த வேலையில் கஷ்டப்படுபவர் யாருமில்லை எனலாம். அதில் அவனுக்கு ஒரு தனிப் பெருமையே உண்டு. பெரும்பாலும் பலரும் சைக்கிளின் இருபுறமும் பசை வாளியும், போஸ்டருமாகத்தான் திரிவார்கள். எட்டும் உயரத்திற்கு ஒட்டி விட்டோ, அல்லது ஏதாவதொன்றைக் கிழித்து விட்டோ ஒட்டிவிட்டுப் போய்க் கொண்டேயிருப்பார்கள்.


ஆனால் செந்தில் அப்படியில்லை. கூடவே ஒரு ஏணியையும் எப்பொழுதும் கொண்டு செல்வான். அது அவன் சொந்த ஏணி. கட்டட வாட்ச்மேனாக இருந்தபோது கடைசியாக அவன் வேண்டிக் கேட்டு வாங்கிக் கொண்ட பொக்கிஷம் அது. சைக்கிளில் அதை இறுக்கமாகக் கட்டி வண்டி மிதிக்கும்போது டபுள் வெயிட்டாகத்தான் இருக்கும். அஞ்சமாட்டான் அந்த பாரத்திற்கு. அவன் சுமக்கும் குடும்ப பாரத்தை விடவா இதெல்லாம் பெரிது? ஏழு படி ஏறும் உயரம் இருக்கும் அது.


எந்த இடமானாலும் சுவற்றில் அதை வாகாகச் சாய்த்துக் கொண்டு உயரத்தில் மற்ற விளம்பரங்களுக்குப் பாதிக்காத வகையில் தான் ஒட்டும் போஸ்டர்கள் பலரின் பார்வைக்கும் படுவதுபோல் பார்வையான ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து கச்சிதமாக ஒட்டிவிட்டு வருவான். இந்த அக்கறையும், கவனமும், மற்றவரிடம் இருக்குமா என்பது சந்தேகமே. பெரும்பாலும் சக்குச் சக்கென்று ஒட்டித் தீர்த்துவிட்டு சடனாய் வேலையை முடிக்கத்தானே பார்க்கிறார்கள். செந்தில் என்றும் அப்படியிருந்ததில்லை. இரவு இரண்டாம் ஆட்டம் சினிமா ஆரம்பித்ததும் கணக்கு வழக்குகள் முடிந்த வேளையில் கொல்லைப்புறம் கக்கூசுக்குப் பக்கத்தில் தீவாளியில் வெது வெதுவெனக் கொட்டி வைத்திருக்கும் பசை வாளியைத் தூக்கிக் கொண்டு போஸ்டர்களை வாங்கத் தயாராக வந்து நிற்பான் இவன்.


”ஊர்க்கணக்கு பூராவும் தீர்த்தாச்சு…இனி இவன் கணக்குத்தான் பாக்கிய்யா…” – என்று சொல்லிக் கொண்டே மானேஜர் அவனுக்கான போஸ்டர்களை எடுத்துக் கொடுக்கப் பணிப்பார். சிறுசு, பெரிசு என்று அங்கேயே பிரித்து வைத்துக் கொண்டுதான் கிளம்புவான். பெரிய போஸ்டர்கள் நாலு பங்காக இருக்கும். அவைகளைக் கவனமாய் ஒட்ட வேண்டும். தூக்கக் கலக்கத்தில் மாற்றி எதுவும் ஒட்டி விடக் கூடாது. எழுத்துக்கள் மறைந்து விடக் கூடாது. உருவம் சுருங்கி, ஒச்சம் போல் ஆகிவிடக் கூடாது. அத்தனை கவனம் உண்டு அவனுக்கு.


“தங்கப்ப - தக்கம்னு ஏதோ ஒரு படத்துல காமெடி வருதுல்ல…அதமாதிரி அர்த்தக் கேடா ஒட்டிப்புடாதறா…வேலயப் பார்த்துச் செய்யி…” எதையாவது சொல்லிக் கொண்டுதான் அனுப்பி விடுவார் மானேஜர். அவர் குணம் அப்படி. ஆள் வித்தியாசமெல்லாம் அவருக்குக் கிடையாது. தன்னைப் பற்றி அறிந்திருந்தும், தன்னிடமும் அவர் அப்படிச் சொல்வது செந்திலுக்குப் பிடிக்காதுதான். ஆனாலும் என்ன செய்வது? பிழைப்பாயிற்றே?


சரிங்கய்யா…என்றுவிட்டுத்தான் கிளம்புவான். ரெண்டு வார்த்தை அதிகம் பேசி கெட்டபெயர் வாங்கிக் கொள்வதற்கு, பணிந்து போய்விடுவது மேலாயிற்றே என்பது அவன் எண்ணமாக இருந்தது. பெரும்பாலும் எல்லோருக்கும் அதுதானே பிடித்தும் இருக்கிறது. சரி, இதனாலென்ன குறைந்தா போய் விடுகிறோம். இதுதான் செந்திலின் முடிவு.


தங்கச்சிகளெல்லாம் வேலைக்குப் போய் முடிந்த அளவுக்குக் கொண்டு வந்து கொடுக்கும் நிலையில் அண்ணனாகிய தான் கொடுப்பது அதிகமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில் அவன் மனது உறுதியாகத்தான் இருந்தது. மனசில் அது வைராக்கியமாகவே படிந்திருந்தது.போஸ்டர்களைப் பெற்றுக் கொண்டு அவன் புறப்படும்பொழுது அப்படியிப்படி மணி பதினொன்றைத் தாண்டி விடும்… தியேட்டருக்கு அருகிலிருந்து வரிசையாக எந்தெந்தத் தெருவுக்குள் நுழைய வேண்டும்…எங்தெந்த சந்துகளைத் தவிர்க்க வேண்டும் அந்நேரத்தில், என்பதையெல்லாம் மனதிலேயே கணக்குப் பண்ணிக் கொண்டு வண்டியை மெதுவாக உருட்டுவான் செந்தில். அந்த ஊரில் எத்தனை முட்டுச் சந்து உள்ளது, முடுக்குச் சந்து எத்தனை, எந்தெந்த இடத்தில் என்னென்ன தப்பெல்லாம் நடக்கிறது, யார் யார் அந்தத் தப்பையெல்லாம் செய்கிறார்கள், எவனெனவன் எதற்காக அலைகிறான்கள் என்பதெல்லாம் அவனுக்கு அத்துபடி.ஆனால் அவற்றைப் பற்றி அவன் எங்கும் யாரிடமும் மூச்சு விட்டதில்லை.
நமக்கெதுக்குங்க…நம்ம பொழைப்பே பசையோட பசையா இருக்குது…இதுல அந்தக் கண்றாவிகளையெல்லாம் வேறே மேலே ஒட்டிக்கிடணுமா என்பான் யாராவது அவன் வாயைக் கிளறப் பார்த்தால்!. வேலை, வேலை, வேலை. அதுதான் அவனின் தாரக மந்திரம். எடுத்துக் கொண்ட வேலையை ஒழுங்காக, ஒழுக்கமாக, திருத்தமாக, சொன்ன நேரத்துக்குக் தாமதமில்லாமல் செய்து முடிக்க வேண்டும். நல்ல பெயர் வாங்க வேண்டும்.இல்லையென்றால் டிக்கெட் கொடுக்கும் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தவன் இந்த வேலையையும் நானே செய்கிறேன் என்று முனைவானா?


”உனக்கெதுக்குடா இதெல்லாம், வீட்டுல போய்த் தேமேன்னு படுக்கமாட்டாம?” என்பார் முதலாளி கூட.


”இல்லீங்க முதலாளி. எனக்கு மூணு தங்கச்சிங்க…அதுகள ஒழுங்காக் கட்டிக் கொடுக்கணும். எங்க அம்மா தனியாக் கெடந்து என்னதான் செய்யும்?”


அவனின் பொறுப்புணர்ச்சியைப் பார்த்து அவரே நெகிழ்ந்துதான் போனார்.


இப்படிப் பையன்களை வேலைக்குப் போட்டால்தான் தன் தியேட்டர் பிழைக்கும் என்று ஒரு எண்ணமிருந்தது அவருக்கு. இன்னும் ஒரு சில வேலையாட்களைக் கூட செந்திலை வைத்துத்தான் தேர்வு செய்தார். பொறுப்பாய் இருப்பவனுக்குத்தான் பொறுப்பானவர்களை அடையாளம் காண முடியும். சொல்லப்போனால் செந்தில்தான் ஆல் இன் ஆல் என்றே சொல்லலாம்.


டிக்கெட் கொடுக்கும் வேலையையே அத்தனை திறம்படப் பார்ப்பவன் செந்தில். அவன் மாடிக்குச் சென்று மணி அடித்தபிறகுதான் டிக்கெட் கவுன்டர்களையே திறப்பார்கள். பிறகுதான் ஆபீஸ் ரூமிலிருந்து அவனே கையில் டிக்கெட் டப்பாவோடு வருவான். அப்படி வரும்போது தியேட்டர் நிர்வாகமே தன்னிடம் இருப்பதுபோல் அவன் மனதுக்குள் ஒரு கம்பீரம் எழும். அஞ்சு நிமிஷம், பத்து நிமிஷம் முன்னப் பின்னப் பார்த்து, இருக்கும் கூட்டத்தை அனுசரித்து பெல் கொடுக்கச் செல்லுவான். அது அவனுக்குக் கொடுக்கப்பட்ட உரிமை. மிடில் கிளாஸ் டிக்கெட்டுகளை எப்போதும் அவன்தான் கொடுப்பான். யாரையும் அதற்கு அவன் விட்டதில்லை. அதற்கு அப்படிப் பெயர் வைத்தது அவன்தான்.


”அந்தக் கூட்டத்த சமாளிக்க அவன்தான்டா லாயக்கு…” என்பார் மானேஜர்.
எவ்வளவு கூட்டம் கட்டி ஏறினாலும், ஒருநாள் கூடக் கணக்குத் தப்பியதில்லை அவனுக்கு.


”காச வாங்கி, எத்தன டிக்கட்டுன்னு கேட்டு, பாக்கிச் சில்லரையக் கொடுத்துப்பிட்டு அப்புறந்தான் டிக்கெட்டையே கிழிக்கணும் மாப்ள….இந்த சிஸ்டத்த நீ மாத்தவே கூடாது. வர்றவங்ஞள்ல பல பிக்காலிப் பயலுவ இருப்பானுக…குறிப்பா ராத்திரி ரெண்டாம் ஆட்டம்…மப்புலதான் நுழைவானுக…உன்ன அப்டி இப்டிக் கொழப்பிடுவானுக…நாமதான் உஷாரா இருக்கணும்…இந்தா பாக்கிக் காசப் பிடி…ரெண்டு டிக்கெட்டா…இந்தா பிடி…ன்னு சக்குச் சக்குன்னு கையில திணிக்கணும்…எடு…எடு..ன்னு நாம போடுற அவசரத்துல கை தானே பின்னால போயிடணும்…அடுத்தாள் புளுக்குன்னு நீட்டுவான்ல…நாமதான் தயாரா இருக்கணும்…”


பல வருஷம் சர்வீஸ் போட்டவர்களுக்கே அவனிடம் சற்று பயம்தான்.
”ஒரு நாள் கூட இந்தப்பய ஒத்தப் பைசா விட்டதில்லடா…நாமதான் கணக்கு ஒப்படைக்கைல இவன்ட்ட நின்னுட்டு முழிக்க வேண்டிர்க்கு…”


எல்லோரிடமும் கணக்கு வாங்குவதும் இவன்தான். மொத்தக் கணக்கையும் ஆபீஸில் ஒப்படைக்க வேண்டியது இவனின் பொறுப்பு.


”நேத்து வேலைக்கு வந்திட்டு நம்மளயே எப்டி வேல வாங்குறாம் பார்த்தியா?” – முணு முணுப்புகள் செந்தில் காதில் விழாமலில்லை. டிக்கெட் கொடுப்பதற்கும், கடைசியாகக் கணக்கு ஒப்படைப்பதற்கும் மட்டும்தான் அவனுக்குச் சம்பளம்.


ஆனால் அவன் அந்த வேலை மட்டும்தானா செய்கிறான். அந்தத் தியேட்டரையே தான்தான் நிர்வகிப்பதைப்போலல்லவா கடமையாற்றுகிறான். கக்கூஸ் பக்கம் சென்று பினாயில் அடிச்சு ஊற்றுவது முதல் கிருமி நாசினிப் பவுடர் தூவுவது வரை செய்கிறானே? யார் செய்வார்கள் இதெல்லாம்? சொல்லாமலே அவனே எடுத்துச் செய்கிறானே? கௌரவம் பார்த்து ஒதுங்குகிறானா என்ன? வேலைகளை வித்தியாசம் பார்க்காமல் எடுத்து எடுத்துச் செய்யும்பொழுது மதிப்பு தானே உயர்ந்து போகிறதுதானே? எங்குமே தன்னலமற்ற உழைப்புக்கு உரிய மரியாதையே தனிதான்.
சொல்லப் போனால் அந்தத் தியேட்டரில் ஓடும் திரைப்படங்களும் கூட அவனுக்கு இதையெல்லாம் கற்றுக் கொடுத்திருக்கின்றன என்றும் சொல்லலாம்.


கடந்த சில வருஷங்களாக அங்கே பழைய படங்கள்தானே ஓடுகின்றன. எம்.ஜி.ஆர். படம்., சிவாஜி படம், ஜெமினி படம், எஸ்.எஸ்.ஆர் படம் என்று வரிசையாக. சொல்லப்போனால் இன்று நகரில் பழைய படம் போடும் தியேட்டர் அது ஒன்றுதான் என்று சொல்லலாம்.


”இதுகளே போதும்ப்பா நமக்கு…அன்னைக்கு எப்டி வசூல் வந்திச்சோ அதுக்கு பாதகமில்லாம இன்னைக்கும் ஒரு வாரத்துக்குக் காசு பார்க்க முடியுது…போதுமே அது! எதுக்குப் புதுப்படத்த செகன்ட் ரௌன்டு, தேர்ட் ரௌன்டுன்னு எடுத்துக்கிட்டு…அதுக்கேத்த மாதிரி டிக்கெட்டும் வைக்க முடியாது…அம்புட்டுக் காசு வாங்கவும் கட்டுபடியாகாது…அம்புட்டுக் காசு கொடுத்து நம்ம தியேட்டருக்கெல்லாம் ஆளுகளும் வரமாட்டாக…இப்டியே ஓடட்டும் பார்க்கலாம்…”


விடாப்பிடியாக இழுத்துக் கொண்டுதான் இருக்கிறார் முதலாளி. வாரத்தின் இரண்டு சந்தை நாட்களிலெல்லாம் கூட்டம்தான். கேட்கவே வேண்டாம். அன்றைக்கெல்லாம் பார்த்தால் புரட்சித்தலைவர் படம்தான். படப்பெட்டியை செந்தில்தான் போய் எடுத்து வருவான்.நேரடியாகப் போய்ப் பேசி இந்தப் படம்தான் வேண்டும் என்று தேர்வு செய்து ஓட்டி அதை வசூல் காண்பிப்பதில் கில்லாடி அவன்.


”எத்தனை தடவை டி.வி.ல போட்டாலும். சனத்துக்கு தியேட்டர்ல வந்து பார்க்குறதுல மோகம் குறையலேயப்பா…” என்று சந்தோஷப்படுவார் முதலாளி.


”அது பழைய படத்தோட மவுசு முதலாளி… நம்ம சனம் மனசுல நல்ல விஷயங்கள் ஆழமா அமுங்கிப் போய்க் கிடக்கு…அத ஒருத்தர் எடுத்துச் சொல்லும்போது, அதுக்காகப் போராடும்போது, மனசு மகிழ்ந்து போறாங்கல்ல…அத அழிய விடாம மனசுலயே வச்சிருக்காகல்ல…அதோட நாம நார்மலாத்தான டிக்கெட்டும் வச்சிருக்கோம்…” என்பான் இவன்.


உள்ளே விசில் பறக்கும் வேகத்தைப் பார்த்து “இறந்து இத்தன வருஷங்களிச்சுமா ஒரு மனுஷம் மேல இம்புட்டுப் பாசம் இருக்கும்..” என்று வியந்து போவார்.


இவனுக்கோ சிவாஜி படம்தான் உயிர். ”அப்பா…ஒரு மனுஷன் வாழ்க்கைல எப்டியெல்லாம் இருக்கணும்னு குடும்பப் பாங்கா ஒரு கதையை எவ்வளவு அழகாச் சித்தரிச்சிருக்காங்க? மனுஷங்க ஒருத்தர மிஞ்சி ஒருத்தர் எவ்வளவு நல்லவங்களா இருக்க முயற்சி செய்யுறாங்க…நம்ம நடிகர் திலகம் படமே படம்ப்பா…என்னா ஒரு அநாயாசமான நடிப்பு?


செந்திலின் ரசனையே தனி. அவன் மனசு சொல்லிச் சொல்லிப் புளகாங்கிதம் கொள்ளும். முதலாளியிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டு வீட்டிலுள்ள நாலு டிக்கெட்டுகளையும் தவறாமல் கொண்டு வந்து காண்பித்து விடுவான். ஒரு முறை கூட அவர் எதுவும் கேட்டதில்லை. போறான்யா நம்ம பய அவன்…. இதுதான் அவர் பதிலாயிருந்தது.


“அண்ணே, அந்தத் தியேட்டர் வேலைய மட்டும் விடவே விடாதேண்ணே…அம்புட்டு நல்லவுக உங்க முதலாளி….”
”எல்லாம் நல்லவுகதான்….விழுந்து விழுந்து உழச்சா யார்தான் பொத்திட்டிருக்க மாட்டாக….” என்பான் இவன் பதிலுக்கு. ஆனாலும் மனதுக்குள் நன்றியுணர்ச்சி பெருகத்தான் செய்யும்.மீதிப் பசையை நடுவிலும் போஸ்டரின் முழுப் பகுதியிலும் தடவ ஆரம்பித்தபோது இன்னொரு கால் கை பசை வேண்டும்போல்தான் இருந்தது. இடது கையால் போஸ்டரைப் பிடித்தவாறே திரும்பிப் பார்த்து, “கொண்டாடா வெண்ணை…”என்று கத்தினான். அவன்தான் உட்கார்ந்திருக்கிறானா என்று சந்தேகம் வந்தது.


இருட்டுக்குள் ஒரு குத்துக்கல்லில் அமர்ந்து ஜாலியாகப் புகை விட்டுக் கொண்டிருந்தான் மாரி. இவன் பக்கம் திரும்பியதாகவே தெரியவில்லை.
என்ன ஒரு தைரியம்? தேவையில்லாம வந்து எதுக்கு இப்டி லொள்ளு பண்றான்?


”டேய் ஒழுங்காச் சொல்றேன்…இப்ப நீ அந்த வாளியை இங்க கொண்டாந்து வைக்கல, பெறவு என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது…பார்த்துக்க…” என்றான்.


அந்த நேரத்தில் அந்த சத்தம் போதும் என்பதுபோல் இருந்தது அவன் பேசியது. எதிர்த்தாற்போல் ஒரு பள்ளிக்கூடம். பிறகு சற்றுத் தள்ளி ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ். அதற்கும் அடுத்தடுத்து இரண்டு மூன்று கடைகள். ஒரு ட்டு வீலர் ஒர்க் ஷாப் ஒரு பெட்டிக் கடை என்று இருந்தன. எல்லாவற்றின் வாசல் திண்டுகளிலும், கிடைத்த இடத்திலும், மறைவிலும், தங்களைத் தாங்களே முடிந்த அளவு மறைத்துக் கொண்டும், ஆட்கள் முடங்கியிருந்தார்கள். நிறையக் குறட்டை ஒலிகள் அந்த அமைதியை மீறி எகிறிக் கொண்டிருந்தன. எந்த இடமும் காலியாக இல்லை. அவர்களையெல்லாம் எழுப்புவதுபோலக் கத்த முடியாது. கத்திப் பேசி ஓரிருவர் எழுந்து கொண்டாலும், கதை கந்தல்தான்.


“இங்க போஸ்டர் ஒட்டக் கூடாதுன்னு எத்தன வாட்டிடா உங்களுக்குச் சொல்றது…மசிருங்களா….கேட்க மாட்டீங்களா…ஸ்கூல் பிள்ளைங்க பார்க்கிற மாதிரியாடா இருக்கு…படிக்க வர்ற பிள்ளைக இதப் பார்த்திட்டு இளிச்சிட்டு நிக்கவா….போடா….இனி இங்க வந்தே காலெ ஒடச்சிப்போடுவேன்….”


எத்தனையோ முறை வாங்கிய திட்டுக்கள்தான். ஆனால் இன்று ஒரு சிறு மாற்றம். அதனால்தான் அவனே இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தான். இப்பொழுது அவன் ஒட்டிக் கொண்டிருப்பது சினிமா போஸ்டர்கள் அல்ல. ஜவுளிக்கடை போஸ்டர்கள். அழகழகாய் தேவதைகளாய் நிற்கும் பெண்கள். புதிய புதிய கண்களைக் கவரும் டிசைன்களில். பளபளக்கும் சேலைகள். சுடிதார்கள். சல்வார்கமீசுகள், ஸ்கர்ட்கள், டவுசர் சட்டைகள், பேன்ட் சர்ட்கள், என்று பலவித வண்ணங்களில். ஒரு முறையேனும் திரும்பிப் பார்க்காமல் போகவே முடியாது நிச்சயம். அதை விளம்பரப்படுத்தும் வேலை இப்போது இவனுக்கு.


ஊருக்குப் புதிதாக ஒரு மிகப் பெரிய ஜவுளிக்கடை வந்திருந்தது. எங்கு பார்த்தாலும் விளம்பரம். ஃப்ளக்ஸ் போர்டுகள். பஸ்-ஸ்டான்டு, சிக்னல்கள், சாலைத் தடுப்புகள், உணவு விடுதிகளின் வாசல்கள், டீக் கடைகள், பெட்டிக் கடைகள் என்று எங்கு பார்த்தாலும் அவர்களின் கடை பெயரோடு…பெட்டி பெட்டியாய்த் தூக்கி நிறுத்தி உள்ளே விளக்குப் போட்டு, கடைக்கும் சேர்த்து வெளிச்சமாக விளம்பரத்தை அள்ளிக் கொட்டியிருந்தார்கள். ஒரு டீக்கடைக்குக் கூட இம்புட்டு மவுசா? அவன வச்சு இவனா இல்ல இவன வச்சு அவனா? ஒண்ணக் கொடுத்து ஒண்ண எப்டி ஈஸியா வாங்கிப்புடறானுங்க…! ரொம்பவே அதிகம்தான் என்றாலும் மற்ற எல்லா ஜவுளி ஸ்தாபனங்களையும் ஒரே அமுக்காய் அமுக்கி விட வேண்டும் என்று சவால் விட்டது போலிருந்தது அவர்களின் இந்தப் போஸ்டர் கலாச்சாரம்.


“என்னதான் விளம்பரம் வச்சாலும் செஞ்சாலும், போஸ்டர் ஒட்டுற மாதிரி ஆகாதுய்யா…அதான் நம்ம மக்கள் நல்லா அறிஞ்சது…அதுதான்யா அவுங்க பார்வைல பட்டுக்கிட்டே இருக்கும்….போற எடமெல்லாம் நம்ம கடை விளம்பரத்தப் பார்த்து அவனவன் அசந்து போய் ஓடியாந்துரணும்…வேறே எங்கயும் போப்பிடாது…ஊர் பூராவும் ஒரு எடம் விடப்படாது…வருஷக்கணக்கா சினிமாப் போஸ்டர் ஒட்டி அனுபவப்பட்டிருக்கிற உள்ளுர்காரன் ஒருத்தனப் புடி…அவன்ட்ட ஒப்படை இந்த வேலய…கச்சிதமா முடிஞ்சி போயிரும்….ரெண்டே நாள் ராத்திரில வேலை முடிஞ்சிரணும்னு கண்டிஷன் போடு….கேட்குற துட்டை விட்டெறி…தொலையட்டும்…வேலை சொன்ன டயத்துக்கு முடிஞ்சிறணும்னு கறாரா சொல்லிப்புடு…”


“”அய்யா நா இருக்கேன்யா…எங்கிட்டக் கொடுங்கய்யா…உங்க விருப்பப்பிரகாரம் நா முடிச்சிர்றேன்யா.”. கையைத் தலைக்கு மேலே தூக்கி பெரும் கும்பிடாகப் போட்டு நெடுஞ்சாண்கிடையாய் தடால் என்று விழுந்தான் செந்தில்.


அந்த நேரத்தில் அந்த இடத்தில் இருந்தது அன்று அவனின் பாக்கியம். என்ன ஆச்சரியம். தியேட்டர் முதலாளி மகனுமல்லவா அங்கே நின்றிருந்தார். அந்தக் கட்டடத்தின் பொறியாளரே அவர்தான் என்று அன்றுதான் அவனுக்கே தெரியும். அவரது சிபாரிசில் மறு பேச்சில்லாமல் அது அவனுக்குப் படிந்து போனது அவன் அதிர்ஷ்டம்தான்.


என்னவோ கடை திறக்கப் போறாகளாமே பார்ப்பம்…என்று அங்கே நுழைந்தவன், தற்செயலாய் அங்கு நிகழ்ந்து கொண்டிருந்த பேச்சைக் கேட்க நேரிட, மண்டியிட்டு தண்டனிட்டு எப்படியோ அந்த ஆர்டரை வாங்கிக் கொண்டு வந்து விட்டான்.


ஒருத்தனிடமும் வாய் திறக்கவில்லை. திறந்தால் ஆளாளுக்குப் பங்குக்கு வந்து விடுவார்கள். பிச்சிப் பிச்சி குரங்கு அப்பத்தைப் பங்கு போட்ட கதையாகிவிடும். யாரையும் அவன் பங்கு சேர்த்துக் கொள்ளவும் முடியாது. சேர்ப்பதென்றால் அதற்கும் போய் பெரிய இடத்தில் பேசியாக வேண்டும். அதெல்லாம் சரிப்படாது. அடிக்கடி அப்படிப் போய் முன்னாடி நிற்க ஏலாது. எதையாவது செய்து காரியத்தைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது. வந்ததை விடக் கூடாது. அத்தோடு பொதுவாக அவர்களின் போக்கும்தான் சரியில்லையே! தானே அதற்காகத்தானே ஒதுங்கியிருக்கிறோம்!
மூன்று தங்கச்சிகளும். படித்துக் கொண்டுதான் இருக்கின்றன. அவைகளை ஒழுங்காய் கொஞ்சமாவது படிக்க வைத்து கல்யாணம் கட்டிக் கொடுக்க வேண்டும். படிக்கும் இந்த வயதிலேயே ஒவ்வொன்றும் ஓரொரு வேலையைச் செய்யத்தான் செய்கின்றன. பெரிய தங்கச்சி மீனு, தையல் வேலைக்குப் போகிறது. அடுத்த தங்கச்சி அன்பு அருகிலுள்ள விருதூரில் தறியடிக்கப் போகிறது. கடைசிச் செல்லம் வள்ளி அன்றாடம் பூக்கட்டும் வேலைக்குச் சென்று ஏதோ அதால் முடிந்ததைக் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது.


சரியாய்ச் சொல்லப் போனால் இந்தத் தியேட்டர் வேலைக்கு முன் அவன் படாத பாடுபட்டிருக்கிறான்.. ஒரு நாள் நெல் மண்டியில், ஒரு நாள் வெங்காய மண்டியில், ஒரு நாள் உறார்ட் வேரில், ஒரு நாள் சிமிண்ட் கடையில், ஒரு நாள் பெயின்ட் கடையில் என்று அல்லாடியிருக்கிறான். நினைப்பதற்கே கூடப் பல சமயங்களில் வெட்கமாகத்தான் இருக்கும் செந்திலுக்கு. தங்கச்சியெல்லாம் கூடப் பின்னால் பூக்கடை, தையல் கடை என்று வைத்து விடலாம் போலிருக்கிறது, தனக்கென்று ஒன்று இது நாள் வரையில் அமையவில்லையே? என்னென்னவோ கையில் கிடைத்ததையெல்லாம்தானே கண்டமேனிக்குச் செய்து ஓட்டிக் கொண்டிருக்கிறோம்?


“அதனாலென்னண்ணே….நாங்களாச்சும் எங்களுக்குப் பாவாடை தாவணின்னு அப்பப்ப எடுத்துக்கிடுறோம்…நீ உனக்குன்னு எதுவுமே செய்துக்கிறதில்லையே…கிடைக்கிற துட்டை அப்புடியேல்ல கொண்டாந்து அம்மாட்டக் கொடுத்திடுற…வருத்தப் பட்டுக்கிடாதண்ணே…எல்லாம் சரியாப்போகும்…“ – மூத்த தங்கச்சி மீனாள்தான் சொல்லிச் சொல்லி இவனைத் தேற்றி வைக்கும். அந்த மட்டுக்கும் இந்த அளவிலாவது மதிப்பு வைத்திருக்கிறார்களே என்று அவர்களுக்காகவே வாழ்ந்து கழிக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வான் செந்தில்.


அப்படியான நேரத்தில்தானே இந்தப் பின் வீட்டுப் புண்ணியவான் வந்து சேர்ந்தார். அவர் சொல்லித்தானே தியேட்டர் வேலைக்குச் சென்றது.
”எதுக்குண்ணே இந்தப் போஸ்டர் ஒட்டுற வேலையெல்லாம்…அசிங்கமா இருக்குது…”


ஒரு நாள் தங்கச்சி அன்பு இப்படி அலுத்துக் கொண்டபோது இவன் சொன்னான்.
”தப்பும்மா…தப்பு…தப்பு…வேலைல எதுவும் கேவலமில்லேம்மா….பிச்சையெடுக்கிறது, திருடுறது…இது ரெண்டுதான் செய்யக் கூடாதும்மா…மத்த எதுவும் தப்பு இல்லே…தெரிஞ்சிக்கோ….”
அண்ணன் மதிப்பாய் இருக்க வேண்டும் என்கிற எண்ணமுள்ள தங்கைகள். சே! நான் ரொம்பக் கொடுத்து வைத்தவன்…என் வாழ்நாளை இதுகளுக்காகவே செருப்பாய்த் தச்சுப் போட்டாலும் தகும். இப்படி எண்ணி எண்ணித்தான் தன் மனதை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறான் அவன்.ருக்கும் பசையையே நன்றாக இழுத்துத் தேய்த்தான் செந்தில். நன்றாகப் பரவியிருக்கிறது என்று மனதுக்கு சமாதானம் ஆனது. அப்படியே சுவற்றில் இழுத்து ஒட்டினான். சுருக்கம் எதுவும் விழாமல், எழுத்துக்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து விடாமல் நிரவலாக முழுப் போஸ்டரையும் இரு கைகளாலும், நன்றாக அழுத்தி ஒட்டிய போது பின்னால் மெல்லிய அரவம் கேட்டது.


இருட்டின் அமைதியைக் குலைக்கும் சிறு சிறு அசைவுகள். அசப்பில் ஏதோ வித்தியாசமாய் உணர கலவரத்துடன் சுவற்றோடு சேர்ந்த ஏணியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு மெல்லத் திரும்பியபோது,
அங்கே தென்பட்ட அந்த நால்வரும் அவனைப் பூனையாய் நெருங்கினார்கள். இருட்டு விலகாத அந்த வேளையில், தெருக்கோடி விளக்கு வெளிச்சமும் சற்றும் பரவியிருக்காத அப் பகுதியில் எந்தச் சத்தமும் இல்லாமல் ஒரு முரட்டுக் கரம் மட்டும் மேல் எழுந்து அவன் வாயைச் சட்டென்று பொத்தி அழுத்தியது.


”ஏண்டா வௌக்கெண்ண, உன்னோட சினிமாக் கொட்டாய் வேலயப் பார்த்தமா செவனேன்னு இருந்தமான்னு நிக்காம, அடுத்தவன் பொழப்பக் கெடுக்கணும்னு எத்தன நாளாடா நினைச்சிட்டிருந்த…?”-மூஞ்சியைக் கடுவன் பூனையாக வைத்துக் கொண்டு கேட்டான் ஒருவன்.


”நாங்க நாலஞ்சு பேர் ஊர் பூராத்துக்கும் எப்பயும் செய்துக்கிட்டிருக்கிறதை நீ வந்து ஒருத்தனாப் புடுங்கிக்கிட்டு, எங்கள வாய்ல நொட்டிட்டுப் போலாம்னு நினைக்கிறியா…?”


கரகரத்த அடித்தொண்டையில் கடூரமாகக் கேட்டவாறே பக்கத்து இருட்டு மூத்திரச் சந்துக்குள் அவனைச் சரசரவென இழுத்துச் சென்ற அவர்களின் கரணை கரணையான முரட்டுக் கைகளும், கால்களும் ஒரு சேரச் சரமாரியாக அவன் மீது பாய்ந்த போது, அந்த திடீர்த் தாக்குதலைச் சமாளிக்கச் சிறிதும் திராணியின்றி, கொஞ்சங் கொஞ்சமாகத் தன் நினைவை இழக்க ஆரம்பித்தான் செந்தில்.


”தாய்ளி, இன்னிக்கு நீ செத்தடீ…வசமா மாட்டுன…”


மங்கி மயங்கிய அந்தக் கண்களின் வழியே அவர்களைப் பார்க்க முயன்ற அவன் சற்றுப் பின்னால் விலகி நிற்கும் அந்தச் சின்ன உருவத்தையும் கலக்கமாகப் பார்த்த அந்தக் கடைசி நிமிஷத்தில், அது மாரியப்பன்தான் என்பதை அவன் மனசு துல்லியமாகக் காட்டிக் கொடுத்தது.


என்னமோ தாங்க முடியாத விபரீதம் நடந்து போய் விடுமோ என்று அவன் மனம் அச்சப்பட்டுத் தடுமாறிய அந்தக் கணத்தில் மனக் கண்ணில் அம்மாவும் மூன்று தங்கச்சிகளும் சட்டென்று தோன்றி அவனை உலுப்ப, எங்கிருந்துதான் அந்தச் மா சக்தி வந்ததோ, அவனுக்கே தெரியாத போக்கின் ஒரே வீச்சில் கையையும் காலையும் உதறிக் கொண்டு துள்ளி எழுந்த செந்தில், ஓங்கி, பலம் கொண்ட மட்டும், அவர்களை மொத்தமாக ஒரு தள்ளுத் தள்ளிவிட்டு அங்கிருந்து விடுபட்டுத் தாறுமாறாக ஓட ஆரம்பித்தான். வேகமெடுக்கும் பாம்பு எப்படி விளு விளுவென்று வளைந்து நெளிந்து அசுரப் பாய்ச்சல் பாய்கிறதோ அதுபோல அடங்காத மின்னல் வேகத்தில் அவன் தன் வீடு வந்து மடாரென்று கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே போய் விழுந்த போது தங்கச்சிகளும், அம்மாவும் பதறியடித்துக் கொண்டு எழ அப்படியே தன்னிலை இழந்து, கண்கள் செருகி மயக்கமானான் அவன்.


==================================================================

எனது நாவல் லட்சியப் பறவைகள் பற்றி ஒரு சிறு தகவல்...

முதியோர் இல்லம் நடத்தும் தேவகி, சிறந்த திரைப்பட இயக்குநராக, தரமான திரைப்படங்களைத் தயாரிப்பவனாக, மேலெழுந்து வர வேண்டும் என்று தன்னைக் கடுமையான முயற்சிக்கு உள்ளாக்கிக் கொள்ளும் பிரபு, ஒழுக்கமும், நேர்மையும், மற்றவருக்காக உண்மையாக உழைப்பதும்தான் தன்னை முன்னிறுத்தும் என்கிற மேன்மையான நடத்தையும், செயல்பாடும் உள்ளவனாக வரும் பாலன், அந்த தேவகிக்கும், இந்த பாலனுக்கும் தந்தையாக அமைந்திருக்கக் கூடியவர்களின் விடாமுயற்சி, கடுமையான உழைப்பில் வந்த தொழில் முன்னேற்றம் என இந்த நாவலின் கதாபாத்திரங்கள் அத்தனைபேருமே வாழ்க்கையை நம்பிக்கைக்குரியதாக நகர்த்திச் செல்வதும், தொடர்ந்து முன்னேறுவதுமான நடவடிக்கைகளை உள்ளடக்கியவர்களாக இருத்தல், படிக்கும் வாசக மனதை உற்சாகத்திலும், ஊக்கத்திலும், கொண்டு செலுத்தும் என்பது நிச்சயம்.

இந்த புத்தகம் தேவைப்படுவோர் அழைக்கவும் 8489401887.
VPP அல்லது India Post மூலம் புத்தகம் உங்கள் இல்லம் தேடி வரும்.....
Now WhatsApp No +91 8489401887..get any Tamil.
லட்சியப் பறவைகள்
உஷாதீபன்
ரூ.150

நண்பர் கதிரேசன் சேகர் மேற்கண்ட நாவலை விற்பனைக்கு வாங்கியுள்ளார். அவர் இம்மாதிரி இலக்கியப் பணி செய்கிறார். எனது முகநூல் பக்கத்தைப் பார்த்தால் தெரியும். வீகேன் புக்ஸ் நிறுவனமும் பெற்றுள்ளது.   கவிதா முகவரி வருமாறு:

கவிதா பப்ளிகேஷன், 
தபால் பெட்டி எண். 6123
   ,
மேற்கண்ட கதிரேசன் சேகர் எனது நாவலை விற்பனைக்குப் பெற்றுள்ளார். அவர் இம்மாதிரி நிறையச் செய்கிறார். முகநூலில் என் பக்கத்தில் பாருங்கள். இந்நாவலை வெளியிட்டுள்ள கவிதா பப்ளிகேஷன் முகவரி  கீழே: 
கவிதா பப்ளிகேஷன், தபால் பெட்டி எண்.6123, 8, மாசிலாமணி தெரு, தி.நகர், சென்னை-600 017. தொ.பேசி. எண். 044 - 2436 4243   ,   2432 217

திங்கள், 23 மே, 2016

'திங்க'க்கிழமை 20160523 :: திடீரடை (சோம்பேறிப் பிழைப்பு!)

                   


    
அரைக்கிலோ (உலர்) மாவு  எழுபது ரூபாய் என்று வாங்கிவந்தேன். 

அவர்கள் (செய்யச்) சொல்லியதை செய்தேன். 

அவை யாவை? 

மாவை கொஞ்சம் கொஞ்சமாக நீரூற்றி, முதலில் பேஸ்ட் பதம். பிறகு இன்னும் கொஞ்சம் நீரூற்றி. கெட்டியான (அடை) மாவு பதம். 

ஒருமணி நேரம் ஊறவைத்தேன். 

சொல்லாததையும்  செய்தேன். 

அவை யாவை ? 

சின்ன வெங்காயத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிச் சேர்த்தேன். 

தேவைக்கேற்ப உப்பு சேர்த்தேன். 

கொஞ்சம் பெருங்காயப்பொடி சேர்த்தேன். 

கறிவேப்பிலை அரை கைப்பிடி அளவுக்கு எடுத்துக் கழுவி, கிள்ளிப்போட்டேன். 

இந்த மாவில் செய்த அடை எனக்குப் பிடித்திருந்தது.

உங்கள் ஊரில் கிடைத்தால் செய்து, சாப்பிட்டுப்  பாருங்கள். 

சனி, 21 மே, 2016

பாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்1)  ராஜனின் சாதனை.  625/625
 
 


2)  போலீஸ் தர்மேந்தரும் ஆட்டோ டிரைவரும்.
 
 


3)  ஊசியைக் கண்டாலே பயந்தவர் இன்று....
 
 


4)  இப்படியும் உதவலாம்...
 
 5)  பொறியாளர்கள் இப்போதெல்லாம் பொதுச் சேவைக்காகத் தங்கள் வேலைகளை உதறத் தயங்குவதில்லை.  சூரியா அன்சாரி.
 
 6)  ரயில்வே ஆபீசர்களின் சமயோசிதம்.
 
 


7)  இப்படியும் ஒரு ஆட்டோ டிரைவர்!
 
 8)  இப்படியும் ஒரு ஆசிரியர்...
 
 


9)  அரசுப் பள்ளி மாணவி சரண்யா.
 
 10)  குழந்தை திருமணங்களை தடுப்பதுடன், 56 குழந்தைகளை படிக்க வைத்து வரும் ராதா.
 
 


11)  அஜீத் சிங்கின் அற்புதச் சேவை.