சனி, 30 ஆகஸ்ட், 2014

பாஸிட்டிவ் செய்திகள் கடந்தவாரம்.


1) செல்போனில் ஃபோட்டோ எடுக்காமல், தீயணைப்புத் துறை வரவேண்டும் என்று காத்திராமல்.... 
 
எழும்பூரில் மாநகரப் பேருந்து டயரில் திடீரென தீப்பிடித்தது. பள்ளி மாணவிகளின் பெற்றோரும் பொதுமக்களும் சாதுர்யமாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.
 


 
2) இரண்டு ரூபாய் சிகிச்சை.
 


 
3) 'அன்பாலயம்' செந்தில் குமார்.
 

 
4) 'யான் பெற்ற உடல்நலம் பெறுக இவ்வையகம்!'  செங்கல்பட்டு ஹேமமாலினி.
 

 
 
5) பழவேற்காடு, ஜமீலாபாத் மீனவப் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை சேர்ந்த, 7ம் வகுப்பு மாணவி, ஐனூன் ஜாரியா
 

 
6) கோவை விவசாயி பிரபு சங்கரின் சாதனை.
 


 
7) நலம் அமைப்பு.
 


 
8) இப்படிச் சொல்லவும் ஒரு 'இது' வேண்டுமே.....! பரகூர் ராமசந்திரப்பா
 
 

9) ஆபத்து வேளைகளில் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதில் இருக்கு விஷயம். வயதும் ஒரு பிரச்னையல்ல! 56 வயது கமலாதேவி


புதன், 27 ஆகஸ்ட், 2014

மீனாக்ஷி அம்மன் கோவில், அழகர் கோவில், பழமுதிர் சோலை, திருப்பரங்குன்றம்


சமீபத்தில் மதுரை சென்று வந்தபோது ஏற்பட்ட கோவில் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். 


 இந்த பால தண்டாயுதபாணி கோவிலை இத்தனை வருடங்களில் இப்போதுதான் பார்த்தேன்.



சமணர் குகை. உள்ளே இயற்கையான குகைக்குக் கீழேயே கோவில் அமைந்திருப்பது சிறப்பு. மிகச் சிறிய கோவில்.





 
சிறு கோவில்கள், மற்றும் பெரிய கோவில்கள் என்று சென்று வந்ததில் ஒரு விஷயம் கண்ணில் பட்டது.
மூங்கில் கட்டி வளைந்து வளைந்து செல்லும் வழிகளை ஏற்படுத்தி பக்தர்களைத் தொல்லைக்குள்ளாக்கும் முயற்சியில் மீனாக்ஷி அம்மன் கோவிலும்!

முதலில் மீனாக்ஷி அம்மன் கோவில். கோவிலுக்குள் நுழையுமுன்பே வெடிகுண்டு,  ஆயுதச் சோதனைகள் காரணமாக தனி வழி ஏற்படுத்தி அதன் வழியாக உள்ளே செல்ல வழி செய்திருக்கிறார்கள். அதன் வழியே உள்ளே சென்றோம்.

பொற்றாமரைக் குளத்துக்கு அருகே உள்ள மண்டபத்தைப் பிரித்து வைத்திருந்தார்கள். (நான் சென்றது ஜூன் மாதத்தில்) அதைப் பார்க்கவே விநோதமாக இருந்தது. அம்மன் சன்னதி ஆகட்டும், சொக்கநாதர் சன்னதி ஆகட்டும் கம்புத் தடுப்புகள் போடப்பட்டு சுற்றிச் சுற்றிச் செல்லும் நிலையைப் பார்க்கும்போதே கஷ்டமாக இருந்தது. 


அது மட்டுமில்லாமல், ஸ்வாமியைக் கண்ணாரக் கண்டோம் என்ற திருப்தியே பக்தர்களுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பது போல, நல்ல தூரத்திலேயே நிறுத்தி குங்குமம் கொடுத்து அனுப்பி விடுகிறார்கள். 

இதில் ஒரு தமாஷ் வேற... கூட்டத்தில் எங்களை மீறி முன்னேறிச் சென்றனர் இரு பெண்கள். பின்னாலிலிருந்து ஒரு ஆண்குரல் 'லைன்ல வாங்க.... லைன்லேயே போங்க...குறுக்கப் போகாதீங்க...என்ன அவசரம்?" என்றது அந்தக் குரல். குரலுக்குரியவர் எங்களைத் தாண்டிக்கொண்டு முன்னேற, நாங்களும் ஏதோ கோவிலைச் சேர்ந்தவர் போல என்று பார்த்தால், முன்னே சென்று வசதியாக சுவாமி பார்த்து விட்டு, குங்குமம் பொட்டலத்தில் பெற்றுக் கொண்டு இறங்கி நடந்தார். என்ன சொல்ல! நாங்களும் இறங்கித் தாண்டிச் செல்லும்போது அவரை முறைக்கத்தான் முடிந்தது!


சும்மா வரிசையில் சென்றால் கையில் குங்குமம். ஐந்து, பத்து தட்டில் போட்டால் பாக்கெட்டில் குங்குமம். ம்ம்ம்...


அடுத்த விஷயம், எந்த முக்கியச் சன்னதியையும் பிரதட்சணமாகச் சுற்ற முடியவில்லை. ஜெனெரெட்டர் வேலை, அல்லது பாதுகாப்பு வேலை, பராமரிப்புப் பணி என்று சொல்லி அப்ரதட்சணமாகச் சுற்றச் சொல்லி, உள்ளே சென்றதும் ஒரு உள்வட்டப் பாதையில் பிரதட்சண வலம் வர ஏற்பாடு....






அழகர்கோவில் மேலே உள்ள நூபுர கங்கை சென்றோம். குளிக்க 15 ரூபாயாம். சும்மா உள்ளே போகணும் என்றால் ஒரு ரூபாயாம்.

பழமுதிர்சோலையில் முருகனைப் பார்க்க வேண்டுமென்றால் 5 ரூபாய் மினிமம் கட்டணம்! ஆனால் அழகர் கோவில் கீழே பெருமாளை
சௌகரியமாகப் பார்க்க முடிந்தது. 






அதே சமயம் திருவாதவூர், திருமோகூர்  போன்ற புகழ் பெற்ற ஸ்தலங்கள் எல்லாம் ஜனக் கூட்டம் இல்லாமல் இருந்ததும், அங்கு ஸ்வாமியை நெருக்கமாகப் பார்க்க முடிந்தது என்பதும் ஒரு ஆறுதல், சந்தோஷம். ஊருக்கு வெளியே இருப்பதாலா, என்ன காரணத்தினால் இந்தக் கோவில்களுக்கு கம்பித் தடுப்பு பந்தாக்கள், ஆயுதச் சோதனை இல்லை என்பது புதிர். 



புகைப்படங்களைப் பெரிதாகப் பார்க்க, படங்களின் மேல் கிளிக் செய்யவும்!

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

'திங்க'க்கிழமை : சரவணபவன் சாம்பார்.



                                                             

சென்ற வாரங்களில் தோசைப் பதிவுக்கு ஆதரவளித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள். 

இந்தப் பதிவில் 'சரவணபவன் சாம்பார்' என்று நான் எங்கிருந்தோ எடுத்து வைத்திருக்கும் குறிப்பைத் தருகிறேன். கட்டாயம் இணையத்திலிருந்துதான் எடுத்திருக்கிறேன்.  எங்கிருந்து எடுத்தேன் என்றும் குறித்து வைத்திருந்திருக்கலாம். அவர்களுக்கு ஒரு நன்றி சொல்லியிருக்கலாம். யாரென்று தெரியாததால், கொஞ்சம் குற்ற உணர்வுடனேயே பதிவிடுகிறேன். 

                                                                         

                                                                           
சரவணபவன் சாம்பாரை ரசிப்பவர்களும் இருக்கிறார்கள். பத்தோடு பதினொன்றுதான் அது என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். ரசிப்பவர்கள் முயற்சித்துப் பார்க்கலாம். ரசிக்காதவர்களும் முயற்சித்துப் பார்த்து உங்கள் சுவைக்கேற்ப மாற்றங்கள் செய்து கொள்ளலாம். 
இனி செய்முறை :

தேவையான பொருட்கள் :

துவரம் பருப்பு – 1 கப்

வெங்காயம் – 1
தக்காளி – 1
உப்பு – தேவையான அளவு

அரைக்க வேண்டியவை :

தக்காளி – 1
பொட்டுகடலை – 1 மேஜை கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
தனியா தூள் – 1 தே.கரண்டி
தேங்காய்த் துருவல் – 2 தே.கரண்டி

கடைசியில் தாளித்துச் சேர்க்க : 

எண்ணெய் – 2 தே.கரண்டி
கடுகு – 1/4 தே.கரண்டி
வெந்தயம் – 1/4 தே.கரண்டி
சீரகம் – 1/2 தே.கரண்டி *
உளுத்தம் பருப்பு – 1 தே.கரண்டி
வெங்காயம் – 1
கருவேப்பில்லை – 4 இலை
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2

கடைசியில் தூவ :  பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – 1/4 கப்

செய்முறை :

                                                      

வெங்காயம், தக்காளியைப் பொடியாக வெட்டி கொள்ளவும். முதலில் கொடுத்துள்ள துவரம் பருப்பு + 3 கப் தண்ணீர் + வெங்காயம் + தக்காளியை பிரஷர் குக்கரில் போட்டு 3 – 4 விசில் விட்டு வேகவைத்து கொள்ளவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

                                                           

விசில் அடங்கியதும் பிரஷர் குக்கரைத் திறந்து வெந்த பருப்பு +வெங்காயம், தக்காளியை நன்றாக மசித்து கொள்ளவும். அத்துடன் அரைத்த கலவை + உப்பு + தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிடவும்.

                                                             

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + வெந்தயம் + சீரகம் +உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து பின் அதில் வெங்காயம் + கருவேப்பிலை + பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.

இப்பொழுது வதக்கிய பொருட்களை, கொதிக்கின்ற சாம்பாரில் சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்கவிடவும். கடைசியில் கொத்தமல்லி தூவி கிளறிவிடவும். இந்த சாம்பாரை இட்லி, தோசை, பொங்கல் போன்ற டிஃபன் ஐட்டம்ஸுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.


                                                                   




டிஸ்கி : சாம்பார் ரெஸிப்பி ஒரிஜினலாய்ப் போட்டவர் யாராயிருந்தாலும் அவருக்கு எங்கள் நன்றிகள். 


நன்றி அப்பாதுரைஜி..


படங்கள் : நன்றி இணையம்.

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

ஞாயிறு 268 :: நீலவானம்!

     
       
இருள் கவியத் துவங்கும் நேரத்தில் ஓர் இரயில் நிலையம்! 
       
கவிதை எதுவும் தோன்றினால், இங்கே கருத்துரையாகக் கொட்டுங்க! 
   
(ஆமாம், சுப்புத் தாத்தாவை எங்கே ரொம்ப நாளாக் காணோம் - எங்கள் வலைப் பக்கம்?) 
               

சனி, 23 ஆகஸ்ட், 2014

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்





1) நடிகர்களுக்கு கட் அவுட் வைப்பது, புதுப்படம் ரிலீஸானால் பாலாபிஷேகம் செய்வது... இப்படியான சினிமா ரசிகர்களுக்கு மத்தியில் அற்புத மான சேவையை செய்துகொண்டிருக்கிறார்கள் மக்கள் நற்பணி கல்வி அறக்கட்டளை நண்பர்கள்.
 
 
2) அமைப்போ அறக்கட்டளையோ எதுவும் இல்லை. உதவிக்கு ஆட்களும் இல்லை. வருமானமும் இல்லை. ஆனாலும் ராசேந்திரன், தனி நபராக இருந்து, 8, 10, 12-ம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெற வைத்த கைதிகளின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டுகிறது.
 
 
 
4) மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த பிரதிஸ்தா பெஹரே
 
 
5) ஆண் சிங்கங்கள் உதவிக்கு வராமல் வேடிக்கை பார்க்க, தந்தையுடன் சேர்ந்து போராடிய 13 வயதுப் பெண் மீரட்டில்.
 



6) நமக்கெதற்கு வம்பு என்று சும்மா இராமல் செயலில் இறங்கிய ஆரணி மக்கள்.



7) விசாலினியின் சாதனைகள்.





8) டிகிரி படித்த இளைஞர்கள் பெற்ற வெற்றி.






வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

வெள்ளிக்கிழமை வீடியோ 140822:: தோசை சுடுவோம்!



கொஞ்சம் சிரியுங்க பாஸ்!  

எங்கள் ப்ளாக் வெள்ளிக்கிழமை வீடியோ பகுதிக்கு ஒரு நிமிட வீடியோ / ஆடியோ வரவேற்கப்படுகின்றன. 

உங்கள் மொபைலில் பிடிக்கப்பட்ட வீடியோ அல்லது ஆடியோ - எந்த பார்மட்டில் இருந்தாலும் அதை engalblog@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 

அது பாட்டு, ஜோக், பன்ச் டயலாக், அல்லது வீட்டு விலங்குகளின் வினோத செயல் என்று எதுவாக இருந்தாலும் ஓ கே. 

அனுப்புபவர்கள், முகநூலில் விவரம் பதிந்து, என்னை tag செய்துவிடுங்கள்.
உதாரணத்திற்கு, இதோ ஒரு டயலாக். இதை உணர்ச்சிபூர்வமாக படித்து / நடித்து / பதிவு செய்து கூட அனுப்பலாம். சொந்த டயலாக் ஆக இருந்தாலும் ஓ கே. 

" ஏய் ஏய் ஏய் - இங்கே பாரு - நான் ஒன்னு சொல்றேன்!
கட் செய்தால்தான் பேஸ்ட் செய்ய முடியும்னு நெனக்காதே - காபி செய்தாலும் பேஸ்ட் செய்யலாம்; ஆனா பேஸ்ட் கொண்டு பிரஷ் செய்யாம காபி குடிக்கறவன் நான் இல்லே!" 

(அழாதீங்க - இது ஒரு சாம்பிள்தான்!)
நடிக்க / படிக்க / (படம்) பிடிக்க தயக்கமாக உள்ளவர்கள், மற்றவர்கள் படிக்க / நடிக்க பன்ச் டயலாக் இங்கே பதியுங்கள்! 

நன்றி.

திங்கள், 18 ஆகஸ்ட், 2014

நாக்கு நாலு முழம் தோசை புராணம் 3



[தோசை பதிவே நீள்வதால் சரவணபவன் சாம்பார் ரெஸிப்பி அடுத்த வாரம் வெளிவரும்!]

அடையையும் தோசைக் குடும்பத்தில் சேர்க்க வேண்டும். ஆனால் தோசை அளவு சாதுவான உணவல்ல அது. சேர்க்கப்படும் பருப்பு வகைகளால் வயிற்றைச் சங்கடம் செய்யும் திறன் இதற்கு உண்டு.  அடையைக் கூட கடனே என்று வார்க்காமல் (வார்க்காமல் என்று கூட சொல்லக் கூடாது. அடையைத் தட்ட வேண்டும்!) அரையாய், கால் பாகமாய் உடைந்த பருப்புகள் மேலே தெரிய, பச்சை மாவு போன்ற தோற்றத்திலேயே இல்லாமல், நடுவில் கருப்பாக கருக்கியும் விடாமல் பொன் நிறமாக டை தட்டுவதும் ஒரு கலை. எடுத்துத் ட்டில் போட்ட பின்னும் தங்க நிற அடையின் நடுப்பகுதிகள் சீரியல் லைட் மினுக்குவது போல எண்ணெய் மினுக்கும். மினுக்க வேண்டும்! 

அடைக்கு அவியல் காம்பினேஷன் என்று சொல்வார்கள். எனக்கு அது 'ஊ...ஹூம்'தான்! அடையை ஒன்றும் தொட்டுக் கொள்ளாமல் வெறுமனே அப்படியே சாப்பிடலாம்.  வேண்டுமானால் கொஞ்சம் வெல்லம் தொட்டுக் கொள்ளலாம். (முக நூலில் ஸ்ரீ கருடாழ்வார் சாம்பார் தொட்டுக் கொள்வது இதற்குப் பொருத்தம் என்று சொல்லியிருக்கிறார்.
நல்ல சாம்பார் அமைந்தால் அதுவும் திவ்யம்தான்!) வெங்காயம் போட்டு தட்டுவது தனிச்சுவை. தேங்காய் நிறைய போட்டு விட்டால் காரம் தெரியாமல் போகும். காரம் தெரிந்தாலோ மறுநாள் வயிறு நிறைய பேர்களைப் படுத்தி விடும். ஆனாலும் அடைக்கு தனி ரசிகர்கள் குழாமே உண்டு - என்னையும் சேர்த்து! நான் காரக் கட்சி!  

                                                                   

மூன்று அல்லது நான்கு அடைகள் சாப்பிடுவேன்.

கடைகளில் அடை சாப்பிடுவது எனக்கு சம்மதமில்லை. வீட்டில் செய்து சாப்பிடுவதே சிலாக்கியம்! அவர்களுக்கு இவ்வளவு நகாசு வேலைகள் செய்ய நேரமில்லை. வியாபாரம்! சாப்பிட்டால் சாப்பிடு, இல்லை வேறு ஏதாவது ஆர்டர் பண்ணு'


                                                                                                               


சென்ற பதிவின் முந்தைய பதிவில் வெண்ணெய் தோசை என்று ஜி எம் பி ஸார் எழுதி இருந்தார். சீனு, 'முருகன் இட்லி கடை'யை ஞாபகப் படுத்தி இருந்தார். 

                                                                     
இரண்டையும் இணைத்து ஒரு விஷயம்.  சமீபத்தில் முருகன் இட்லி கடை சென்றபோது வெண்ணெய் ஊத்தப்பம் என்று ஒன்று அவர்கள் மெனுவில் சொல்ல, ஆர்டர் செய்தேன். 5 ரூபாய் வித்தியாசம் ஆனியன் ஊத்தப்பத்துக்கும்,  வெண்ணெய் ஊத்தப்பத்துக்கும்.

ஆனியன் ஊத்தப்பத்துக்கு மேலே ஒரு சிறு உருண்டை வெண்ணெய்!

                                                                
    
அப்புறம் பாசிப் பருப்பை மட்டும் அரைத்துச் செய்யப்படும் பெசெரெட்டு. வீட்டில் சமயங்களில் அடை வார்க்கும்போது சரியாக வரவில்லை என்றால் 'இன்னொரு பெசெரெட் தோசை போடு' என்று கிண்டல் செய்து வாங்கிக் கட்டக் கொண்டதுண்டு!

                                                                 
   
மதுரை கோரிப்பாளையத்தில் ஒரு பாட்டி கல்தோசை வார்த்துத் தருவார். பல வருடங்களுக்கு முன்பான கதை இது! ரோடோரமாக தரைக்கடை.  பக்கத்தில் ஒரு ஸ்டூலில் அமர்ந்து,  கையில் தட்டைப் பிடித்தபடி சாப்பிடலாம். இட்லி சுடச்சுட இட்லிப் பானையிலிருந்து  எடுத்து தட்டில் கொட்டும் வேகத்திலேயே மக்கள் தட்டுகளோடு அலை மோதுவார்கள். உடனுக்குடன் காலியாகி விடும்.

  

கல் தோசை என்று தோசைக்கல்லில் சற்றே குண்டாக, ஆனால் ஊத்தப்பம் போல இல்லாமல் சிறிய வட்டங்களாக தோசை வார்த்துப் போடுவார். தொட்டுக்கொள்ள மிளகாய்ப்பொடி, தக்காளிச் சட்னி, வெங்காயச் சட்னி, தேங்காய்ச் சட்னி, சாம்பார், புதினா அல்லது கொத்துமல்லிச் சட்னி.. மெயின் டிஷை விட சைட் டிஷ் அதிகம் இருக்கும்! அது ஒரு (பொற்)காலம்!

தோசைக்கு மிளகாய்ப் பொடி சிலாக்கியம் என்பதை விட சௌகர்யம்! எதுவும் கைக்குக் கிடைக்காதபோது உடனே கிடைக்கும் ரெடிமேட் சைட் டிஷ்! ஆனால் இதற்கு நல்லெண்ணெய் அமைய வேண்டும். முன்னால் எல்லாம் செக்கு எண்ணெய் என்று வாங்கிக் கொண்டிருந்தோம். தனிச்சுவை, வாசனை உடையது. (செக்கு எண்ணெய் தயாரிப்பு பற்றி நிறைய துணைக்கதைகள் உண்டு. அதைக் கேட்டால் இதைச் சாப்பிடத் தோன்றாது!)

இதயம், இமயம், இந்திரா என்றெல்லாம் நிறைய நல்லெண்ணெய் வகைகள் கிடைக்கின்றன. ஆனாலும் வாசனையாக எண்ணெய் அமைந்தால்தான் மி.பொ. சுவைக்கும்.



                     
கீழே படத்தில் இருப்பது நாரத கான சபா காண்டீன் தோசை! கச்சேரி கேட்பதோடு, கலை நயமிக்க இந்த தோசையையும் டிசம்பர் சீசனில் கண்டு, (கச்சேரி)கேட்டு, உண்டு மகிழலாம்!  இப்போது நிறைய ஹோட்டல்களில் இந்த வடிவத்தில் தோசை 'செர்வ்' செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.



தோசை வார்க்கும்போது மாவை கல்லில் ஊற்றி நிரவும்போது எங்கும் மாவு மொத்தையாக இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக நடுவில்!  சில சமயம் மாவை நடுவில் ஊற்றி நிரவாமல், ரவா தோசைக்கு ஊற்றுவதுபோல வெளி வட்டத்திலிருந்து ஊற்றி நிரவுவதும் உண்டு! மாவு ஓரிடத்தில் சேர்ந்து மொத்தையாகக் கூடாது... அஷ்டே!   

இதை எழுதும்போதே அடுத்த தோசைக் குடும்பத்து உறுப்பினர் நினைவுக்கு வந்து விட்டார்!   

ஆப்பம்!


ஆப்பத்துக்கு என்று தனியாக கடையே வந்து விட்டது!  நளாஸ்! இன்னும் போய்ப் பார்க்கவில்லை. ஆப்பத்துக்கு தேங்காய்ப்பால், குருமா இரண்டும் தந்தாலும் என் சாய்ஸ் தேங்காய்ப்பால்தான்.  இதற்கான குருமா காரப்பொடி போடாமல் பச்சை மிளகாய்க் காரத்தை வைத்துச் செய்திருப்பார்கள்.  அவியலில் மசாலா போட்டது போல இருப்பதால் எனக்கு அது இரண்டாம் பட்சம்! 

    
   
இப்போது ஆப்பத்திலும் பொடி தூவித் தருகிறார்களாம்! அக்காவின் மாப்பிளை சொன்னார்.  அவருக்கு ஆப்பம் - குருமா காம்பினேஷன்தான் பிடிக்குமாம். ஹோட்டல் வர்ஷாவில் இந்தக் குருமா நன்றாயிருக்கும் என்றார்.

              

ஆப்பத்துக்கு என்றே இருக்கும் தனிக் கடாயில் ஒரு கரண்டி மாவை இட்டு கடாயை கையில் எடுத்து ஒரு சுற்று சுற்ற வேண்டும்!  நடுவில் தீம் என்றும் ஓரம் எல்லாம் மெலிதாகவும் ஆப்பம் ரெடி! ஆனால் எனக்கென்னவோ ஆப்பத்தில் பெரிதாக சிலாகிக்க ஒன்றுமில்லை.

ஒருவழியாய் தோசைப் பதிவை மனசேயில்லாமல் இங்கு,  இந்த அளவில் பூர்த்தி செய்கிறேன்.

தோசைக் குடும்பத்தில் எல்லோரையும் இழுத்திருந்தாலும் தோசைதான் கதாநாயகன்.  தோசையிலும் என் முதல் சாய்ஸ் ரவா தோசை, அதிலும் குறிப்பாக ஆனியன் ரவாதான்!  

பதிவு நன்றாகவே நீண்டு விட்டது. அதனாலேயே பெசெரெட் உள்ளிட்ட சில இடங்களில் சுருக்கமாகவே எழுதி இருக்கிறேன்!

இந்தப் பதிவுக்கு அமோக ஆதரவு அளித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி, பொறுமையாய்க் கூட வந்ததற்கும்...