சனி, 28 ஏப்ரல், 2012

வாசிப்பது நீங்கள்; யோசிப்பது எங்கள்!


மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் 
மாணவர்கள் உள்ளே இருந்து படித்தால்தான் ஆச்சரியம்! 

இன்றும் உண்ணாவிரதம் 
அதோடு சேர்த்து மௌனவிரதமும் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். 

சார்க் நாடுகள் தேர்தல் கமிஷனர்கள் கூட்டம 
கமிஷன் எவ்வளவு? 

ஒலிம்பிக் தகுதி பெற்றார் காஷ்யப் 
வாழ்த்துகள். அடுத்தது தங்கப் பதக்கத்தைத் தட்டி வரவேண்டும். 

கேரள தம்பதியிடம் ரூ. 3 லட்சம் நகை திருட்டு 
ஹூம் 'ஆங்காங்கே' கோடிக் கணக்கில் திருடுகிறார்கள் - இங்கே வெறும் மூன்று லட்சம்தானா? 

இந்தியா - அமெரிக்கா ஆயுத ஒப்பந்தம் 
அவல் எது? உமி எது? 

இடைத்தேர்தலில் தனித்து போட்டி: ஐ.ஜே.கே., 
ஐ ஜே கே = எல் எம் என்? ஓ பி க்யூ ?? 

சர்வதேசகோர்ட் நீதிபதியாக இந்தியர் தேர்வு 
வழக்கு என்ன? போஃபர்ஸ்? 

அமெரிக்கா வளர்ச்சி எதிர்பார்த்தபடி இல்லை 
யார் எதிர்பார்த்தபடி? 

சாமிக்கு மீண்டும் ஜாமின் மறுப்பு 
பூசாரிக்கு? 

யார் வந்தாலும் ஏற்க தயார்:வீரபாண்டி 
நாங்க வரலைப்பா இந்த விளையாட்டுக்கு!
                       

புதன், 25 ஏப்ரல், 2012

எட்டெட்டு பகுதி 15:: போலீஸ் ஸ்டேஷனில் கே வி!கே வி: சார், சார்? பால்காரர் .... மிஸ்டர் ராமாமிர்தம்....... ?

ரா மி: வாருங்கள். நீங்கள் யார்? 

கே வி : என் பெயர் கே வி. என்னை மாயா மேடம் அனுப்பினார்கள். நான் மிஸ்டர் அகர்வால் ஆபீசுக்கு ஆடிட் வேலையாக வந்திருக்கின்றேன். 

ரா மி: அட! அப்படியா! அவங்க நேத்து காலையிலே சொல்லும் பொழுது, ஏதோ கிண்டலுக்கு சொல்லுகிறார்கள் என்று நினைத்தேன்! நிஜமாவே ஆடிட்டரை அனுப்பி இருக்கின்றாரே! 

ராமாமிர்தமிடம் தொடர்ந்து பேசியதில், அவர் தெலுங்கு பேசுபவர், தமிழும் புரியும், இந்தியில் சரளமாகப் பேசத் தெரியும் என்பதைத் தெரிந்துகொண்டார், கே வி. 
    
கே வி: உங்களுக்கு, மாயா அகர்வால் தவிர வேறு எந்த மாயாவையாவது தெரியுமா? 

ரா மி: எனக்கு இருக்கின்ற கஸ்டமர்களில், நாலைந்து பேர்களாவது மாயா என்ற பெயர் கொண்டவர்கள் அல்லது சம்பந்தப்பட்டவர்கள் இருக்கலாம். ஏன் கேட்கின்றீர்கள்? 

கே வி: சும்மா தெரிந்து கொள்வதற்குத்தான். சரி, இந்த மாயா அகர்வால் கணக்கில் என்ன பிரச்னை? 

ரா மி: சார் ஜூலை மாதம் பால் வாங்கிய கணக்கில் என்னுடைய டயரியில் நான் எழுதி வைத்திருக்கும் கணக்கிற்கும், அவர்கள் எழுதி வைத்திருக்கும் கணக்கிற்கும், கொஞ்சம் வித்தியாசம் இருக்கின்றது. இதோ அவர்கள் எழுதிக் கொடுத்திருக்கும் பேப்பர். இதோ என்னுடைய டயரி. 

கே வி: (இரண்டையும் ஏதோ யோசனையில் வாங்கிக் கொண்டவராக) உங்கள் கணக்குப்படி உங்களுக்கு எவ்வளவு ரூபாய் மாயா அகர்வாலிடமிருந்து வரவேண்டியுள்ளது? 

ரா மி: அதிகம் எதுவும் இல்லை சார். நாற்பத்து நான்கு ரூபாய் அவர்கள் கொடுக்கவேண்டியுள்ளது. அவ்வளவுதான். 
    
கே வி : அவ்வளவுதானே. (மாயா அகர்வால் பால் கணக்கு எழுதிக் கொடுத்திருந்த பேப்பரை நன்றாகப் பார்த்து - ஒரு முறை பின்னக் கூட்டல் கணக்குப் போட்டபடி, அந்தப் பேப்பரை திருப்பிப் பார்த்து ..... திடுக்கிட்டவராக) ஓ மை காட்! 
   
ரா மி: என்ன சார்? என்ன ஆச்சு? 

கே வி: (சமாளித்தபடி) ஒன்றும் இல்லை. அவர்கள் கணக்கில்தான் தவறு இருக்கின்றது. இந்தாருங்கள் நூறு ரூபாய். மீதி சில்லறை இல்லை என்றாலும் பரவாயில்லை. நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். எனக்கு மாயா அகர்வாலின் வீட்டுக்கு செல்லும் வழியை கூறுங்கள். 
  
ரா மி: அவர்கள் வீடு, பக்கத்துத் தெருவில்தான் இருக்கின்றது. (வழி சொல்கிறார்.) 
***********

கே வி: மேடம், நான் அகர்வால் சார் ஆபீசுக்கு வந்திருக்கும் ஆடிட்டர். உங்கள் பால் கணக்கு சரி பார்த்து, பால்காரருக்கு கொடுக்கவேண்டிய பணத்தைக் கொடுத்து விட்டேன். இல்லை இல்லை - எனக்கு பணம் எதுவும் நீங்கள் கொடுக்க வேண்டியது இல்லை. ஒரே ஒரு உதவி போதும். இதோ இந்தப் பால் கணக்கு எழுதிய பேப்பரை எந்த பாடிலிருந்து கிழித்தீர்களோ அந்த பாட் எனக்கு வேண்டும். நான் மிஸ்டர் அகர்வாலிடம் ஃபோனில் சொல்லி விடுகின்றேன். 

மாயா : (தான் பணம் எதுவும் கொடுக்கவேண்டாம் என்னும் நிம்மதியில், சந்தோஷமடைந்தவராக) இந்தாருங்கள், அந்த ஸ்க்ரிப்ப்ளிங் பாட். 

************

கே வி : (ஆபீசில், அகர்வாலிடம் ) சார். உங்கள் பால் கணக்கு செட்டில் செய்துவிட்டேன். எனக்கு உங்கள் உதவி தேவை. 

அகர்: அப்படியா நன்றி. என்ன உதவி தேவை? 

கே வி: நீங்கள் இந்த ஸ்க்ரிப்ளிங் பாட் சமீபத்தில், நம் அலுவலக கம்பியூட்டர் பிரிண்ட் பேப்பரில் நீங்களாகவே தயாரித்திருக்கின்றீர்கள் என்று நினைக்கின்றேன். சரியா? 

அகர்:  ஆமாம் சார். அது குப்பைக்குப் போகின்ற பேப்பர்தானே - உபயோகித்துக் கொள்ளலாம் என்றுதான்.... அது தவறா? அலுவலக பேப்பரை அந்த வகையில் உபயோகித்துக் கொள்ளக்கூடாதா? 

கே வி: தவறே இல்லை. இன்னும் பார்க்கப் போனால் இதனால் மாபெரும் உதவி நம் அலுவலகத்திற்குக் கிடைத்திருக்கின்றது. நீங்கள் இந்தப் பேப்பர்களை எங்கே எடுத்தீர்கள்? 

அகர்: (சற்று யோசித்து) சார், இந்தப் பேப்பர்களை சென்ற வாரம், அலுவலக சீஃப் மிஸ்டர் தாஸினுடைய பி ஏ இருக்கின்றாரே மிஸ்டர் பாட்யா அவருடைய அறையிலிருந்து, அவர் இல்லாத நேரத்தில் எடுத்தேன். 

கே வி: பாட்யா இன்று வந்திருக்கின்றாரா? அவருடைய ரூம் எது? இன்று காலை நம்முடைய மீட்டிங் அறைக்கு வந்திருந்தாரா? 

அகர்: சார் தாஸினுடைய அறைக்குப் பக்கத்து அறைதான், பாட்யாவின் அறை. அவர் காலையில், நம்முடைய மீட்டிங்குக்கு வரவில்லை. காலையில் தாமதமாக வந்தார். இப்பொழுது, டிபன் சாப்பிட, பக்கத்து ஹோட்டலுக்குச் சென்றுள்ளார். 

கே வி: நான் தாஸைப் பார்த்துக் கொஞ்சம் பேச வேண்டியுள்ளது. நீங்கள், பாட்யா வந்தவுடன், அவரை, ஆடிட் அறைக்கு வந்து என்னைப் பார்க்கச் சொல்லுங்கள். 

அகர்: சரி சார். இன்னும் கால் மணி நேரத்தில் அவர் வருவார். வந்தவுடன் உங்கள் ஆடிட் அறைக்கு அவரை அனுப்பி வைக்கின்றேன். 

கே வி: அகர்வால் சார். அவரை ஆடிட் ரூமுக்கு அனுப்பிய பிறகு, நீங்க இந்த அலுவலகத்தின் ரிக்கார்ட் ரூமுக்குச் சென்று ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். பாட்யா வந்து உங்களை, நான் அழைப்பதாகக் கூறி அழைத்தால், பதினைந்து நிமிட நேரம் அவருடன் பேசி, தாமதப் படுத்தி, பிறகு அவருடன் சேர்ந்து ஆடிட் அறைக்கு வாருங்கள். 

அகர்: சரி சார். 

************** 

தாஸுடன் கே வி நடத்திய பத்து நிமிட உரையாடலில், பாட்யாவின் தில்லு முல்லுகளுக்கும், தாஸுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்பதைத் தெரிந்துகொண்டார். பாட்யா கைது செய்யப் படலாம் என்னும் எச்சரிக்கையையும், தாஸிடம் ஜாடையாகத் தெரிவித்துவிட்டு, ஆடிட் ரூமுக்குத் திரும்பினார், கே வி.   
**************

பாட்யா ஆடிட் ரூமுக்கு வந்த பொழுது, அவரிடம் கே வி, ஹெட் ஆபீசுக்கு ஒரு கடிதம் டிக்டேட் செய்து, அதை டைப் செய்து, தனக்கு பிரிண்ட் எடுத்துத் தரும்படி வேண்டினார். பாட்யா கொண்டு வந்த பிரிண்டைப் பார்த்து, உதட்டைப் பிதுக்கியபடி, 'இன்னும் கொஞ்சம் மாற்றங்கள் செய்யவேண்டி உள்ளது. வாருங்கள் உங்கள் ரூமுக்குச் செல்வோம். உங்கள் கம்பியூட்டரிலேயே கடித மாற்றங்கள் செய்து, அங்கிருந்து ஹெட் ஆஃபீசுக்கு மெயில் செய்துவிடுகின்றேன்.' என்றார். 

பாட்யாவின் அறைக்கு வந்தவுடன், அந்தக் கடிதத்தில் செய்யவேண்டிய மாற்றங்களை செய்து, பிரிண்ட் எடுத்தார் கே வி. 

கே வி: பாட்யா சார் - ஒரு உதவி செய்ய முடியுமா? அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்ட் அகர்வால் சீட்டில் இல்லை போலிருக்கிறது. அவர் எங்கே இருந்தாலும், தேடிக் கண்டுபிடித்து, அவரை கடந்த ஆறு மாதங்களுக்குண்டான கணக்குப் புத்தகங்களை எடுத்துக் கொண்டு என்னுடைய ஆடிட் அறைக்கு வரச் சொல்லுங்கள். அதற்குப் பிறகு, அவர் எங்கே எல்லாம் செல்கிறார், என்ன செய்கிறார் என்பதைப் பார்த்து, அவருடன் நீங்களும் வந்து, அவரின் நடவடிக்கைகள் பற்றி தகவல் கொடுங்கள். 

பாட்யா: (சந்தோஷமாக) சரி சார். எனக்கும் கூட அவர் கணக்கு வழக்குகளில் ஏதோ தில்லு முல்லு செய்கிறார் என்ற சந்தேகம் உண்டு. 

பாட்யா அகர்வாலைத் தேடிச் சென்றவுடன், கே வி தன்னுடைய சட்டைப் பையில் வைத்திருந்த பென் டிரைவ் ஒன்றை எடுத்து, பாட்யாவின் கம்பியூட்டரில் இருந்த சில கோப்புகளை காப்பி செய்துகொண்டார். பாட்யாவின் கம்பியூட்டரில் ஒரு பகுதியில் இருந்த எல்லா கோப்புகளையும் காப்பி செய்து கொண்டு, பிறகு ஆடிட் அறைக்குத் திரும்பி வந்தார். 

சற்று நேரம் கழித்து, ஆடிட் அறைக்கு வந்த பாட்யா, அகர்வால் இருவரையும் வரவேற்று, அகர்வாலிடம் கணக்குப் புத்தகங்களைப் பெற்றுக் கொண்டு, அவரை அனுப்பிவிட்டு, பிறகு அகர்வால் எப்படி எல்லாம் நேரம் கடத்தினார் என்று பாட்யா கூறியவற்றைக் கேட்டுக் கொண்டு, பாட்யாவிடம் நன்றி கூறி, அவருடைய இருப்பிடம், செல் நம்பர் எல்லாம் பெற்றுக் கொண்டு அனுப்பி வைத்தார். 

********* 
பாட்யாவின் கம்பியூட்டரிடமிருந்து பெற்றத் தகவல்கள், அவர் எப்படி போட்டிக் கம்பெனியிடமிருந்து பணம் வாங்கி இருக்கின்றார், இந்தக் கம்பெனி தயாரிப்பு பேரிங்குகளை வாரண்டி (ஃப்ரீ) ரிப்ளேஸ்மெண்ட் என்ற பெயரில் கொடுத்து, அதில் லாபம் பார்த்திருக்கின்றார். சில பேரிங்குகள் ஸ்க்ராப் என டிக்ளேர் செய்து - அதை அடிமாட்டு விலைக்கு விற்று, அவரே வேறு ஸ்க்ராப் வாங்கும் கம்பெனிப் பெயரில் அதை வாங்கி, வெளி மார்க்கெட்டில் விற்று, சம்பாதித்திருக்கின்றார் என்ற விவரமும், மேலும் பேரிங்குகளின் அட்டைப் பெட்டிகள் மழையால் பாழடைந்ததாகக் கணக்குக் காட்டி, புதிய அட்டைப் பெட்டிகளை நூற்றுக் கணக்கில் வாங்கி, அதைப் போட்டிக் கம்பெனிக்கு எக்கச் சக்க விலைக்கு விற்று இந்த வகையில் ஏராளமாக ஊழல் செய்துள்ளார் என்ற விவரங்கள் தெரியவந்தன. ஹெட் ஆபீசுக்கு ஒரு ஃபோன் செய்து விவரங்களை சுருக்கமாகக் கூறினார், கே வி. 

ஹெட் ஆபீசிலிருந்து, அவர்கள் கே வி யிடம் கூறிய தகவல்: "உடனே லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று, அங்கு ஒரு எஃப் ஐ ஆர் - பதிவு செய்து, பாட்யாவைக் கைது செய்யச் சொல்லுங்கள். பணம் கையாடல் செய்து விட்டார், நம் பேரிங் கம்பெனிக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் ஆகிய குற்றங்களை அவர் மீது சுமத்தப் போகின்றோம். நம் பேரிங் கம்பெனி ஆடிட்டர் என்ற வகையில், நீங்கள் கை எழுத்திட்டு, அவர்களிடம் புகார் கொடுங்கள்." 

கே வி போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்ற பொழுது, அங்கே அந்த ஹோட்டல் பெரியவர் (முதல் நாள், கே வி க்கு தங்குவதற்கு, தன அறையைக் கொடுத்த பெரியவர்) இருந்தார். 

பெரியவர் கே வி யைக் கண்டதும், மிகவும் மகிழ்ச்சியுடன், "வாங்க வரதராஜன். தெய்வம்தான் உங்களை இங்கே அனுப்பி இருக்கின்றது. என்னைக் காப்பாற்ற உங்கள் உதவி தேவை" என்றார். 
      
(தொடரும்) 
    

செவ்வாய், 24 ஏப்ரல், 2012

கர்ணனும் பட்டாக்கத்தி பைரவனும் - ரத்தக் காட்டேரி, நம்பிக்கைகள்.... வெட்டி அரட்டை.

                          
புதுக்கோட்டை இடைத் தேர்தல் ஆளும் கட்சி சுறுசுறுப்பாகக் களத்தில் இறங்கி விட்டது என்றும் கம்யூனிஸ்ட் பார்ட்டி திகைத்து முதல்வரிடம் பேசுவோம் என்றும் சொல்வதாகச் செய்தி! எங்களுக்குத் தோன்றுவது...
                 
ஆளும் கட்சி: விட்டுக் கொடுக்க வேண்டும்
                            
ஏற்கெனவே போட்டியிட்டு வென்றிருந்த கட்சி : ஆளும் கட்சியைக் கூட்டணிக்குக் கெஞ்சாமல் மறைந்த தன் கட்சி வேட்பாளரின் எளிமையை நம்பி தைரியமாக தனியே நிற்க வேண்டும். 
                            
முக்கிய எதிர்க் கட்சி : இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் ஆகாமலிருக்க எதிர்த்து வலுவான ஆளை நிறுத்த வேண்டும். ...
                             
தேர்தல் ஆணையம் : ஆளும் கட்சி உட்பட எந்தக் கட்சி விதிமுறைகளை மீறினாலும் பணம் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.    


(இந்தப் பதிவு வலையேற்றிய பின் ஆளும் கட்சி வேட்பாளரையே அறிவித்து விட்ட செய்தி வந்துள்ளது!)
--------------------------------------------------------------------------------------

வெட்டி அரட்டையில் கர்ணன் செய்தி வராவிட்டால் எப்படி?

கர்ணன் திரைப்படம் தமிழகமெங்கும் அரங்குநிறைக் காட்சிகளாக ஓடுவது ஆங்காங்கு படிக்கும் செய்திகளில் தெரிகிறது.  
  
கர்ணன் திரைப் படத்தின் நவீனக் கதையாக 79 களில் வந்த படம் சிவாஜி நடித்த 'பட்டாக் கத்தி பைரவன்'  
  
மறுபடியும் அதே கதையை மணிரத்னம் எடுத்தார் 'தளபதி'யாக. இந்த இரண்டு நவீன கர்ணனுக்கும் இசை இளையராஜா... பட்டாக் கத்தி பைரவன் பாடல்கள் இனிமையானவை. (எங்கெங்கோ செல்லும், யாரோ நீயும் நானும் யாரோ, தேவதை ஒரு தேவதை) பொதுவாகச் சொல்லப் போனால் மூன்று படங்களிலுமே பாடல்கள் பெரிய ஹிட்.     
========================================================

ரத்தக்காட்டேரி விஜயம்...
  
செய்தித்தாள் செய்தி.... அப்பாதுரை கவனிக்கவும்.  வேலூர், ஆம்பூர் என்று முன்னேறிக் கொண்டிருந்த ரத்தக் காட்டேரி காஞ்சிபுரம் வந்து விட்டது. . சென்னைக்குள் புக சில நாட்களே உள்ளன போலும்.... கதவில் எழுத வேண்டும்...

அதைத் தடுக்க நடந்த பூஜையில் நாற்பது பவுன் நகையுடன் பெண் கடத்தல் என்றும் செய்தி மேலும் கூறுகிறது!               
====================================================

நம்பிக்கைகள்...
 
   
நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். பேசிக் கொண்டிருந்தோம். திடீரென அவர் அலைபேசி உள்ளே எங்கேயோ அடிக்கும் சத்தம் கேட்டது. விரைந்து எழுந்து சென்றவர் வழியில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த  அவர் மகனைத் தாண்டிக் குதித்துச் சென்று அலைபேசியை எடுத்துப் பேசினார். 

அவர் தாண்டிச் செல்லும்போதே "அப்பா" என்று குரல் கொடுத்த மகன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். 

பேச்சு நீண்டு கொண்டே போனது. அப்போது மகனின் நண்பன் வந்து இவனை அழைக்க, அவன் சற்றுத் தயங்கி தன் அப்பாவைப் பார்த்துக் கொஞ்சம் காத்திருந்தவன் அப்புறம் அவனிடம் பேசப் போனான். 

நண்பர் பேசி முடித்து விட்டு என்னிடம் வந்து விட, தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். நண்பனிடம் பேசி விட்டுப் பழைய இடத்துக்குத் திரும்பிய அவர் மகன் அங்கிருந்தே தன் அப்பாவுக்குக் குரல் கொடுத்தான். 

இவர் கவனிக்காது பேச்சில் ஈடுபட்டிருந்தார். போதிய இடைவெளிகளில் அவர் மகன் அழைத்துக் கொண்டே இருந்தான். 

"பையன் கூப்பிடறான் போலேருக்கே.." என்றேன்.

"அவன் கிடக்கான்.." என்றவர், அவன் பக்கம் திரும்பி "உதைக்கப் போறேன்" என்று குரல் கொடுத்தார். 

அவன் எழுந்து வந்து விட்டான். 
          
"வாப்பா.... ஒரு தரம் தாண்டிட்டே.... போய் அங்கேயே உட்கார்றேன் மறுபடி அந்தப் பக்கத்துலேருந்து தாண்டிடுப்பா..." என்றான்.
            
விஷயம் இதுதான்...... உட்கார்ந்திருக்கும் நபர்களின் காலைத் தாண்டக் கூடாதாம். தாண்டினால் மறுபடி இந்தப் பக்கம் தாண்டி விட வேண்டுமாம்! 
                   
அவன் மறுபடி பழைய இடத்தில் உட்கார்ந்து,  நண்பர் மறுபடி அந்தப் பக்கத்திலிருந்து தாண்டும் வரை அவன் அவரை விடவில்லை! 
                 
அப்புறம் இதற்கு விளக்கமாக நண்பர் சொன்ன தகவல் இது. சிரிப்பாய் வந்தது.
                         
"எங்கேருந்துதான் கிடைக்குதோ இவனுக்கு இது மாதிரி விஷயங்கள்.... இது பரவாயில்லை.... கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும், 'மிதிச்சிட்டேன், கால் பட்டிடுச்சி'ன்னுட்டு தாண்டிட்டுப் போற எல்லாத்தையும், எல்லாரையும் தொட்டுத் தொட்டுக் கும்பிடுவான்...நிறுத்தவே முடியாது. பேசும்போது எச்சல் தெறிச்சிடுச்சின்னுட்டு அவங்களை ஸாரி கேட்டே கொன்னுடுவான்...   அவங்களைத் தொட்டுத் தொட்டு தன்னோட தாவாங்கட்டையைத் தொட்டுக்குவான்.... அப்புறம் ஏதாவது வேலையைத் தொடங்குமுன் கழுத்தில் இருக்கும் டாலரை ஆயிரம் முறை தொட்டுத் தொட்டுக் கண்ல ஒத்திக்குவான்... ஐயோ திட்டித் திட்டி இப்போ இது மட்டும்தான் மிச்சம்..."  
=========================================
   
கல்விமுறையில் மாற்றம் செய்ய வேண்டுமா, மாணவர்களுக்கு மனவுறுதிப் பாடம் எடுக்க வேண்டுமா தெரியவில்லை... இந்த வாரம் இன்னொரு மாணவி கல்வியின் கனத்தைத் தாங்க முடியாமல் தற்கொலை. செய்த செயலுக்கு பொருத்தமில்லாத பெயர். தைரியலட்சுமி. 
   
இவ்வாறு செய்பவர்கள் மற்ற மாணவ, மாணவியருக்கு மோசமான முன்னுதாரணம் ஆகிறார்களா, தெரியவில்லை. கல்விக் கூடங்களும் பெற்றோர்களும் உடனே கவனிக்க வேண்டிய விஷயம்.
      
நன்னெறி வகுப்புகள் இப்போதெல்லாம் நடக்கின்றனவா தெரியவில்லை. பள்ளிக் காலத்திலிருந்தே மாணவர்களின் மனவுறுதியைக் கூட்ட முயற்சிகள் எடுக்க வேண்டிய நேரம் இது.


இந்தப் பதிவு எழுதி நான்கைந்து நாட்கள் ஆன நிலையில் இன்றைய செய்தித் தாள் செய்தி உட்பட எல்லா நாட்களிலும் பத்தாம் வகுப்பு மாணவர், பொறியியல் கல்லூரி மாணவர் (பைக் வேகமாக ஓட்டக் கூடாது என்று மாமா சொன்னாராம்) ப்ளஸ் டூ மாணவி என்று தினமுமே ஒரு தற்கொலையாவது நடந்து வருகிறது. இதற்கு எப்படி உடனே முற்றுப் புள்ளி வைப்பது?
                   

திங்கள், 23 ஏப்ரல், 2012

??? -- பாஹே

                    
 [புதுமைப் பித்தன் தன் 'காஞ்சனா' கதை பற்றி எழுதியுள்ள வரிகள் : "பேய் பிசாசு கதைகளைச் சொல்லி வாசகர்களைப் பயமுறுத்தணும்னு தோணிச்சு... அதான் இந்தக் கதை!"]
      
வெளி வாயிற்படி கேட்டையொட்டியிருந்த குட்டிச் சுவரின் மீது புறங்கைகளை ஊன்றியபடி வீதியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பாட்டி பரபரப்புடன் கூவினாள். 
  
"என்னங்க... உள்ள என்ன பண்றீங்க? சீக்கிரம் இங்கே வாங்க..."

முன் அறையில் 'ஹிந்து'வின் 'ஓபிச்சுவரி' பகுதியில் பிரசுரமாகியிருந்த பெயர்களை தனியே தன் குறிப்பேட்டில் எடுத்து எழுதிக் கொண்டிருந்த தாத்தா, வேகமாக எழுந்து வெளிப்பக்கம் விரைந்து வந்தார்.

"என்ன, என்ன?" 

"அதோ எதிர்சாரி மூணாம் வீட்டு வாசல்ல பாருங்களேன்"
  
பூட்டப் பட்டிருந்த அந்த வீட்டின் வெளியே நின்றிருந்த ஆட்டோவிலிருந்து ஒவ்வொரு சாமானாக சுமந்து சென்று கதவோரம் வைத்துக் கொண்டிருந்த அந்த இளைஞன், அதே சமயம் தற்செயலாகத் திரும்பி இவர்கள் இருவரையும் பார்த்ததும்...
   
"பாருங்க, பாருங்க... இங்கேதான் வர்றான் அவன்..."
              
நெருங்கி விட்ட இளைஞன் நெற்றி வியர்வையைத் துடைத்த படி "நமஸ்காரம் மாமா... நான் இந்த வீட்டுக்கு ஜாகை வரேன்... ஒரு பூட்டு சாவியும், ஒரு பாத்திரத்துல குடிக்கற ஜலமும் தர முடியுமா... நாளைக்குத் திருப்பித் தந்துடறேன்.."
  
பாட்டி உள்ளே வேகமாகச் சென்று, கொண்டு வந்தாள்.

"ஏம்ப்பா... நல்லா விசாரிச்சுட்டுத்தானே இந்த வீட்டைப் புடிச்சே...?"

"ரொம்ப நாளா பூட்டிக் கெடக்கு, போய்ப் பாருன்னு என் ஆபீஸ்ல சொன்னாங்க... வந்து பார்த்தேன். புடிச்சிருந்தது"
  
தாத்தாவும் பாட்டியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

"ஏம்ப்பா நீ மட்டும்தானா?"

"இல்லே பாட்டி.... கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆச்சு.. மனைவிக்கு தலைப்ப்ரசவம்.நாளைக்கு மகளையும் குழந்தையையும் அழைச்சுகிட்டு மாமா வர்றார்.."

திரும்பியவன் மறுபடி நின்று பெரியவரை உற்றுப் பார்த்தான். "அட, நீங்களா மாமா....மாமி, உங்களுக்கும் என்னைத் தெரியல்லியா?"

பெரியவர் நினைவு வந்தவராகக் கையைச் சொடுக்கினார். "நாங்க அந்தப் புளிய மரத்துக்குப் பக்கத்துல குடி இருந்தப்போ நீ தெருக்கோடி வேப்ப மரத்தை ஒட்டி இருந்தே இல்லே?"

"ஆமாம், ஆமாம், கரெக்டா சொல்றீங்க... அதை விட இந்தப் புதிய வீடு இரண்டும் நமக்கு வசதியானதுதான்... இப்படிப் பெரிய வீடுகளா காலியா இருந்தது நமக்கு அதிருஷ்டம்தான்..."

"நாங்க கூட மொதல்ல உன்னைப் பார்த்தப்போ 'அடப்பாவமே'ன்னுதான் நெனச்சோம். இப்ப உங்கிட்ட பேசினப்புறம்தானே நீயும் நம்ம ஜாதிதான்னு தெரியுது... உன் ஒய்ஃபும் நம்ம மாதிரிதானா?

"ஆமாமாம்... இல்லேன்னா எப்படி?"

"சரி ஒரு சந்தேகம்... நாங்க வயசானவங்க இப்படி இருக்கறது இயற்கைதான்... நீங்க எப்படி இந்த சின்ன வயசுல...?"

"அது வந்து மாமா...நாங்க காலேஜ் படிக்கிறப்போ லவ் பண்ணினோம்...ரெண்டு வீட்டிலும் எதிர்த்தாங்க... ஒரு வருஷம் குடித்தனம் பண்ணியிருப்போம்.. அவுங்க கூட்டமா வந்து வெளியே கதவைப் பூட்டிபிட்டு வீட்டுக்கு தீ வச்சிட்டாங்க... போலீசுக்கு பயந்து விபத்து மாதிரி காட்டிட்டாங்க.... சாதி சனம் நம்பிடிச்சு... இரக்கப் படாம 'நல்லா வேணும்'னு திருப்திப் பட்டுகிட்டாங்க... அப்போ தொட்டு அந்த மரங்கதான்.... நீங்க சமீபத்துலதான் இந்த வீட்டுக்கு வந்தீங்களா?"
  
"இல்லேப்பா...அது ஆச்சு ஐம்பது வருஷம்... நாங்க அந்தக் காலத்துலேயே தூக்குப் போட்டுகிட்டவங்க...!" சிரித்தார்கள்.
   
இளைஞனும் சிரித்தான்."ஜாதியை ஒழிக்கிறதா பேசிக்கிறாங்களே... நம்ம ஜாதியை அவங்களால என்ன பண்ண முடியும்?"
  
பின்னுரை:  
    
1)  அது சரி... புதுமைப் பித்தன் மட்டும்தான் பயமுறுத்துவாரா?
   
2) இந்தக் கதைக்கு பொருத்தமான ஒரு தலைப்பு சொல்லுங்கள்... தேர்வாகும் தலைப்புக்கு புத்தகப் பரிசு உண்டு!  
                      
                       

வெள்ளி, 20 ஏப்ரல், 2012

சினி லாஜிக்ஸ்

                          

ஹிந்தித் திரைப்படத்தில் தென்னிந்தியர்களைக் கிண்டல் செய்ய வேண்டும் என்று அவ்வப்போது சில பாத்திரங்கள் வரும்..'படோசன்' மெஹ்மூத் மாதிரி!   மறக்காமல் விபூதிப் பட்டை, தோளில் துண்டு என்று வரும் அந்த கேரக்டரின் பெயர் பெரும்பாலும் ராமமூர்த்தியாக இருக்கும்! அவர் ஹிந்தியை ஒரு மாதிரித் தொங்கலில் இழுத்து இழுத்துப் பேசுவார்... நடுநடுவே 'ஐயோ, ஆமாம், சரி' போன்ற தமிழ் வார்த்தைகள் முக்கியம். 
                 
அதுவே தமிழில் வடநாட்டுக் கேரக்டரைக் குறிக்க பொதுவாக 'சேட்டு' பாத்திரம்! தலையில் குல்லாய், சட்டையின் மேல் ஒரு அரை ஜிப்பா...'வந்துருக்குது, போயிருக்குது, அரே, அச்சா, நம்பள்கி' போன்ற வசனங்கள் இடையிடையே முக்கியம்!
                    
ஒரு குடும்பம் மிக சந்தோஷமாய் ஆடிப் பாடுகிறது என்றால் பாட்டு முடிவில் சோகம் நிச்சயம்! 
                          
இரண்டு மூன்று அண்ணன் தம்பிகள் என்றால் கட்டாயம் பிரியப் போகிறார்கள்.. திரும்ப ஒன்று சேர ஒரு பாட்டு ரெடி செய்து வைத்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்! ('ஆனந்தம், வானத்தைப் போல போன்ற படங்கள் விதிவிலக்கு!) இதற்கு யாதோன் கி பாராத் சின்ட்ரோம் என்று கூடப் பெயர் சொல்லலாம்!
                            
அப்பாவோ அண்ணனோ கண்டிப்பான போலீஸ் ஆபீசர் என்றால் மகனோ, தம்பியோ திருட்டு வேலை செய்பவனாக இருப்பான் என்று அறிக! அதே போலீஸ் ஊழல் பேர்வழியாக இருந்தால் திருட்டு கேரக்டர் நல்லவனாக இருக்கும்! 
               
கண்டிப்பான போலீஸ் ஆபீசருக்கு இளமையான, அழகான மனைவியைக் காட்டினால் அவள் இடைவேளைக்குள் கற்பழிக்கப்பட்டோ,  கற்பழிக்கப்படாமலோ கொடூரமாகக் கொலை செய்யப் படுவாள் என்றும் தெரிந்து கொள்ளலாம்!
                       
கதாநாயகனின் நண்பர்களில் ஒருவன் அசட்டுத்தனம் அப்பாவித்தனம் கலந்து குணச்சித்திரம் காட்டினால் அவன் கிளைமேக்சுக்கு முன்னால் சாகப் போகிறான் என்று அர்த்தம்.
                             
இரண்டு கதாநாயகிகள் இருந்தால் ஒருத்தி கதாநாயகனைக் காப்பாற்றும் வகையில் உயிர்த் தியாகம் செய்யும் வாய்ப்பு நிறைய. அப்போதுதான் இன்னொரு காதலியுடன் நாயகன் சேர முடியும். 'ஒருவனுக்கு ஒருத்தி' பண்பாடு!
                          
(ஆனால் இதை மீறிய படங்கள் ஒன்றிரண்டு உண்டு.. வீரா போல.. அதே சமயம் இரண்டு பேரை[க் காதலித்து] மணந்த பெண் கேரக்டர்கள் படங்களில் கிடையாது. திரௌபதி புராணப் பாத்திரம் சேர்க்காமல்! )

கதாநாயகன் திருடனாக இருந்தாலும் நல்லவராக இருப்பார். வில்லன் போலீசாக இருந்தாலும் கெட்டவராக இருப்பார்.

திருமணம் நிச்சயமாகி விட்ட நிலையிலும் கதாநாயகியை நாயகன் காதலிக்கிறாரா.... நிச்சயம் செய்யப் பட்டிருக்கும் மாப்பிள்ளை கெட்ட குணங்கள் நிறைந்துதான் காணப் படுவான். உண்மை உணர்ந்து நாயகி கிளைமேக்ஸில்  நாயகனுடன் இணைந்து விடுவாள்.
   
அருவியிலிருந்து விழுந்தாலும், லாரி, ரோட் ரோலர் என்று மேலே ஏறினாலும் படு சீரியசாக ஆகும் ஹீரோ கூட அடுத்த இரண்டு காட்சிகளில் அல்லது கிளைமேக்சில் உயிருடன் வந்து விட வேண்டும். அவருக்கு சாவு கிடையாது! ஆனால் அவர் விடும் இரண்டு குத்தில் ஐநூறு மைல் தூரம் பறந்து விழும் வில்லன் கோஷ்டி ஆட்கள் தலை டக் டக்கென தொங்கி விட வேண்டும்!
             
ஒரு பாடலில் பணக்காரனாகி விட வேண்டும். பியானோ முதல் அனைத்து இசைக்கருவிகளையும் வாசிப்பதிலிருந்து, குதிரையில் பறப்பது வரை அனைத்து கலைகளும் கற்றவராக இருக்க வேண்டியவர் ஹீரோ!   
                    
சில அபத்தங்கள்....
                       
வில்லன் AK 47 வைத்துக் கொண்டு இடைவிடாது சுட்டாலும் ஒரு குண்டு கூட ஹீரோ மேல் படக் கூடாது. . ஆனால் அதே சமயம் ஹீரோ கைத்துப்பாக்கியை வைத்துக் கொண்டு சுட்டே வில்லன் கோஷ்டியை வீழ்த்தி விடுவார்.
                      
பாடல்களே அபத்தம். (நாம் பாடல்களை ரசிக்கிறோம் என்பது வேறு...) எந்தச் சூழலில் பாடல் வைப்பது என்ற விவஸ்தையே இல்லாத ஒரு பாடல் காட்சி பற்றிச் சொல்ல வேண்டும்! படம் எனக்குப் பிடித்த 'புன்னகை'.     திரையுலக மேதை பாலச்சந்தர் படம். கதாநாயகியைக் கற்பழிக்க வில்லன் வருகிறான்... முயற்சி செய்கிறான்... அந்த நிலையில் ஒரு பெண் கெடுக்க வருபவனைத் தாக்கி விட்டு ஓடித் தப்பிக்க முயற்சி செய்வாளா, பாடுவாளா...! அங்கு ஒரு பாடல் வைக்க பாலச்சந்தருக்கு எப்படித் தோன்றியதோ....."ஆணையிட்டேன் நெருங்காதே... அன்னையினம் பொறுக்காது..." என்று!
                        

வியாழன், 19 ஏப்ரல், 2012

உள் பெட்டியிலிருந்து - 04 2012

                 
ஒற்றுமை
  
பெத்த பொண்ணுக்கும்  பரீட்சை பேப்பருக்கும் ஒரு ஒற்றுமை. கட்டிக் கொடுக்கும் வரையில் தலைவலிதான்.   
===============================

புத்திசாலித்தனமான சுய(நல) நம்பிக்கை

அம்மாவும் சிறுவனும் பாலம் கடந்து கொண்டிருக்கின்றனர்.   
அம்மா : "என் கையை கெட்டியா பிடிச்சிக்கோ என்ன?"
சிறுவன் : "இல்லைம்மா... நீ என் கையைப் பிடிச்சிக்கோ..."
அம்மா :  " என்ன வித்த்யாசம் செல்லம்?"
சிறுவன் : "நான் உன் கையைப் பிடிச்சிகிட்டா எதாவது கஷ்டத்துல ஒரு நேரம் கையை விட்டுடுவேன்.  ஆனால் நீ என் கையைப் பிடிச்சிகிட்டா எந்தச் சூழ்நிலையிலும் என் கையை விடமாட்டேன்னு எனக்குத் தெரியும்"  
=======================================

எது தெரியுமா அதிக வலி...
  
நீங்கள் நம்பும் ஒருவர் உங்களைப் புண்படுத்தினால் வலி. அதைவிட அதிக வலி தருவது நீங்கள் புண்படுத்திய ந(ண்)பர் உங்களை இன்னும் நம்புவது!  
==================================

"கவித கவித..."!

வாழ்க்கை 
ஒரு நதியைப் போல
ஓடிக் கொண்டிருக்கிறது..
எதிர்பாராத் திருப்பங்களுடனும்
வளைவுகளுடனும்..
சில நல்லவையாய் இருக்கலாம்   
சில கெடுதலாயும்.
எல்லாத் திருப்பங்களையும்
அனுபவியுங்கள்.
ஏனெனில்,
இந்த வளைவுகள்
நம் வாழ்வில் 
திரும்புவதில்லை!   
--------

மண்ணில் விழும்
மழைத் துளியிடம்
பூமி கேட்டது...
"இன்னும் எத்தனை முறை விழுவாய்?"
மழைத் துளி
சொன்னது..
"தாங்கிக் கொள்ள
நீ
இருக்கும் வரை..."
---------------------------------

தன்னை விரும்பாமல் கறுப்புக் (கொடி) குடை காட்டுவதைத் தாங்காத மழை உன்னைத் தொடும் முயற்சியில் தோற்று மண்ணில் விழுந்து அழுகிறது. 

ஸாரி... பிரிச்சிப் போடணுமோ...

தன்னை விரும்பாமல் 
கறுப்புக் (கொடி) குடை 
காட்டுவதைத் தாங்காத மழை 
உன்னைத் தொடும் முயற்சியில் 
தோற்று 
மண்ணில் விழுந்து   
அழுகிறது

-------------

கண்ணீருக்குக் கூட
எவ்வளவு வெட்கம்...
அது கூட 
அவள்
சென்ற பிறகுதான்
வருகிறது!   
===========================

தத்துபித்துவம்

நீங்கள் அழகாயிருப்பது உங்கள் பெற்றோரின் கொடை. உங்கள் வாழ்வை அழகாக்கி வாழ்ந்து காட்டுவது உங்கள் பெற்றோருக்கு நீங்கள் கொடுக்கும் கொடை!

நீங்கள் கோபப் படும் சோகப் படும் ஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கையின் சந்தோஷமான அறுபது விநாடிகளை இழக்கிறீர்கள்.

நேற்றைய சண்டை இன்றைய பேச்சை நிறுத்தாததே நல்ல நட்பு.

எல்லா நாளும் நல்ல நாளாய் இருப்பதில்லை. எனினும் எல்லா நாளிலும் ஏதோ ஒன்றாவது நல்லதாக இருக்கிறது.

நீங்கள் நேராக நிற்கும்போது நிழல் வளைந்திருந்தால் கவலைப் படாதீர்கள்.  

நம்மைப் பற்றிக் கவலைப் படாதவர்களைப் பற்றிக் கவலைப் படாமல் ஓடிக் கொண்டிருக்கிறோமே, ஏன் ஒரு நிமிடம் நின்று திரும்பி நம் பின்னால் ஓடி வந்து கொண்டிருப்பவர்களைப் பார்க்கக் கூடாது?

நம்மைச் சிரிக்க வைத்தவர்களை மறந்து விடுகிறோமே, அழ வைத்தவர்களை ஏன் மன்னித்து விடக் கூடாது?

எண்ணங்களை நீங்கள் ஆளுங்கள்... உங்களை அது ஆள விடாதீர்கள்!

நீங்கள் ஆளும் மனம் உங்கள் நண்பன். உங்களை ஆளும் மனம் உங்கள் எதிரி!

ஒருவரிடம் உண்மை அன்பு என்பது அவரைப் பற்றிப் பேசும்போது அல்ல, அவரைப் பற்றி நினைக்கும்போதே வர வேண்டும்!

மின் செலவில்லாத புன்னகை அதிக வெளிச்சத்தைத் தருகிறது. எல்லோருக்கும் புரிகின்ற மொழியாகவும் இருக்கிறது.

இன்று பட்டம் பெற்றதாய் நாளை கற்றுக் கொள்வதை நிறுத்துபவன் நாளை மறுநாள் படிக்காதவனாகி விடுகிறான்!

கோபம் நேசிப்பவர்களையும் யோசிக்க வைத்தால், அன்பு வெறுப்பவர்களையும் நெருங்க வைக்கும்!

அடிக்கும்வரை தெரிவதில்லை மணியோசை! பாடும் வரை தெரிவதில்லை பாடலின் ராகம்!! வெளிப்படுத்தும்வரை தெரிவதில்லை அன்பும் காதலும்!!!! (எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பு...)  

 ரிஸ்க் என் வாழ்க்கை.
சாத்தியமானது என் அன்பு

அசாத்தியமானது என் லட்சியம்.    
அபாயமானது என் விளையாட்டு.
என்னுடன் ஆடுங்கள். ஏனென்றால் 
வெற்றி என் பெயர்!

அடுத்தவங்க வாழ்க்கை நம்ம வாழ்க்கையை விட நல்லதா இருக்குன்னு அடிக்கடி நினைக்கிறோமே, நாம கூட சில பேருக்கு அடுத்தவங்கதான் என்பதை மறந்துடறோமே...

தீய கனியை சுவைத்துக் கொண்டிருக்கும் வரையில் தீங்கனியின் சுவையை  அறிய முடிவதில்லை. கஷ்டங்களையும் சந்தோஷங்களையும் உணர்ந்தால்தான் வாழ்வை அனுபவிக்க முடியும்.    
==========================================

இது எனக்குத் தெரியாதா....!   

அடுத்தவர் நம்முடன் இருக்கும்போது விட்டுக் கொடுததும், நாம் அடுத்தவர்களுடன் இருக்கும் போது அனுசரித்தும் போக வேண்டும்.   
===========================

அப்பாடி....இது பெட்டர் / யார் சொல்வதோ யார் சொல்வதோ...
  
வாழ்க்கையில் ஏதும் சாதனை படைத்தேனோ இல்லையோ யாரையும் வேதனைப் படுத்தவில்லை...  
=========================   
                  

செவ்வாய், 17 ஏப்ரல், 2012

நீரிழிவு நோய்

                  
சர்க்கரை நோய் என்பது குறைபாடே தவிர, நோயல்ல. 
    
இது மருத்துவர்கள் நோயாளிகளை உற்சாகப் படுத்தச் சொல்லும் வரிகள். 
       
உண்மையும் கூட! 
             
ஆரம்ப நிலையில் இந்தக் குறையைக் கண்டறிந்து, சரி செய்யாமல் விட்டு விட்டால்தான் அது நோயாகிறது. சரி செய்யாத பட்சத்தில் இரத்த அழுத்தம், கொழுப்பு, இதய நோய்களைத் துணைக்கு சேர்த்துக் கொள்வதோடு, கண்கள் பறி போவது, கிட்னி செயலிழப்பது போன்ற செயல்கள் நிகழ்கின்றன. 
           
கணையத்தில் இன்சுலின் சுரப்பி போதுமான அளவு சுரக்காததே காரணம்.
          
அடிக்கடி சிறுநீர் கழித்துக் கொண்டே இருப்பதால் நீரிழிவு நோய். 
           
இரண்டு வகை டைப் 1, டைப் 2. 
             
டைப் ஒன்று என்பது பெரும்பாலும் பெரியவர்களுக்கே வருகிறது. இன்சுலின் இல்லாமல் இந்த நிலையில் சரி செய்ய முடியாது. 
         
டைப்  இரண்டு என்பது உணவுக் கட்டுப்பாட்டிலும், சிலசமயம் மாத்திரைகள் துணையோடுமே சரி செய்யப்படலாம். விலை குறைந்த பழைய வகை மாத்திரைகளோடு, விலை கூடிய பலவகை மாத்திரைகள் இப்போது கிடைக்கின்றன. 
                    
பிறந்த குழந்தைக்குக் கூட சர்க்கரை நோய் வரலாம். சிறுநீர் கழித்துக் கொண்டே இருப்பதை வைத்தோ வேறு சில அறிகுறிகளை வைத்தோ உடனேயே ரத்தம் சோதிக்கப் படும். சில குழந்தைகளுக்கு ரீடிங் 1000 என்று கூட இருக்குமாம். 
                
உங்களுக்கு இப்போது நோய் இருக்கிறதா என்று பார்க்கலாம் என்றால் நான்கு முக்கிய கேள்விகள்...
                      
1) வயது என்ன... முப்பத்தைந்து வயதுக்கு மேல் வாய்ப்பு அதிகம்.
            
2) அப்பா, அம்மா.....   யாருக்கேனுமோ, இருவருக்குமேயோ சர்க்கரை நோய் உண்டா....  எனில் வாரிசுகளுக்கும் வாய்ப்பு அதிகம்.
                  
3) உடற்பயிற்சி செய்கிறீர்களா.... இல்லை என்றாலே தப்புத்தான். தினசரி நடைப் பயிற்சியாவது அவசியம்.
                  
4) 'மெரிங் டேப்' எடுத்துக் கொண்டு வயிற்றுச் சுற்றளவை அளவெடுங்கள்.  ஆணாயிருந்தால் 90 (cm)க்கு மேலும், பெண்ணாயிருந்தால் 80 (cm)க்கு மேலுமிருந்தால் சர்க்கரை நோய் இருக்கிறதா என்று பரிசோதிக்கக் கிளம்பி விடுங்கள்.
                  
Fasting Test டில் 110 க்குக் கீழ் ரீடிங் இருந்தால் கவலை இல்லை. 
                    
110 முதல் 125 வரை இருந்தால் சர்க்கரை நோய் ஆரம்ப நிலை, பார்டர் லைன், மதில் மேல் பூனை.
                     
125 க்கு மேல் இருந்தால் சர்க்கரை நோய் இருக்கிறது. 
                  
Glucose Tolerence Test டில் ரீடிங் 145 க்குக் கீழ் இருந்தால் சர்க்கரை நோய் இல்லை.
              
150 முதல் 199 வரை ரீடிங் இருந்தால் பார்டர் லைன், அல்லது சர்க்கரை நோய் ஆரம்ப முன் நிலை.
             
200 க்கு மேல் ரீடிங் என்றால் சர்க்கரை நோய் இ...ரு..க்.கி....ற....து!
                
இந்த பார்டர் லைன் என்கிற ஆரம்பகட்ட நோய் நிலை இருக்கிறதே... அது கோல்டன் பீரியட். அந்த நிலையில் கண்டறியப்பட்டிருந்தால், உடல் எடையை நாலைந்து கிலோக்கள் குறைத்தாலே நல்ல பாதுகாப்பு. சிலபல வருடங்களுக்கு சர்க்கரை நோயை மறந்திருக்கலாம். உணவுக் கட்டுப்பாட்டிலும் சிறிய உடற்பயிற்சிகளிலும் நோயைத் தூர ஓட்டிடலாம்.
                     
சர்க்கரை நோயில் வைட்டமின் D யின் பங்கு
             
வைட்டமின் D சர்க்கரை நோய் வருவதைக் குறைத்து இதய நோய் வருவதையும் தவிர்க்கிறது. வைட்டமின் D குறைபாடு இருப்பின் டைப் 2 சர்க்கரை நோய்க்கு அது இட்டுச் செல்கிறது. இது ஆஸ்திரேலிய ஆராய்ச்சியின் விளைவு. (Dr. Claudia Gagnon). இரண்டாம் வகை சர்க்கரை நோய் வருவதைத் தடுக்கவும், சர்க்கரை நோயைத் தொடர்ந்து இதய நோய் வராமல் தடுக்கவும், எலும்புறுதிக்குத் தேவையான அளவை விட வைட்டமின் D அதிகமாக இருத்தல் நலம்.
                  
[மேலே பகிரப் பட்டிருக்கும் தகவல்கள் பொதிகைத் தொலைக் காட்சியில் அழகாக தலை நரைத்த ஒல்லியான சர்க்கரை நோய் மருத்துவர் சொன்ன தகவல்களிலிருந்து.... பெயர் தெரியாது... ஆரம்பித்துக் கொஞ்ச நேரம் கழித்துதான் பார்த்தேன். வழக்கமாக சித்ரஹார் பார்க்கும் நேரம். பாடல் போரடிக்கவே, பொதிகை வைத்த போது, இந்நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருந்தது! நிகழ்ச்சி முடியும்போது ஒருமுறை பெயர் சொல்வார்கள் என்று எதிர்பார்த்து ஏமாந்ததோடு சரி. அடுத்த புதன் கிழமையும் (இந்திய நேரம்) இரவு ஏழரை மணிக்குத் தொடருமாம் இந்நிகழ்ச்சி. 
                
வைட்டமின் D தகவல் எனக்கு வந்த மெயிலிலிருந்து எடுத்தது]
                       
உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கின்றதா அல்லது வருமா என்று தெரிந்துகொள்ள, கீழே காணப்படும் சுட்டியில் சொடுக்கி, அங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளியுங்கள்.