புதன், 30 ஏப்ரல், 2014

சுஜாதா                                                                  


.... எனவே விஞ்ஞானக் கதையில் சாதாரணக் கதைகளின் அம்சங்கள் அனைத்தும் இருக்கலாம். அதில் ஒரு விநோதத்தைத் தொட்டுக் கொள்வதற்குத்தான் விஞ்ஞானத்தைப் பயன்படுத்த வேண்டும். அதன் விஞ்ஞானம் பிசகில்லாமல் இருக்க வேண்டும் என்கிற கட்டாயமில்லை. பெரும்பாலும் விஞ்ஞானக் கதையில் உள்ள விஞ்ஞானங்கள் தற்போதைய விஞ்ஞானத்தால் சாத்தியமில்லாதவையாக இருக்கும்.

(8/9/2002 இல் 'எது விஞ்ஞானக் கதை என்ற தலைப்பில்).

--------------------------------------------------------------
                                                                      
                                                                     
கே : ஒவ்வொரு மனிதனின் மரணமும் மற்றவர்களுக்கு விட்டுச் செல்லும் உண்மை என்ன?
ப : உன்முறை வரப்போகிறது என்கிற எச்சரிக்கைதான். அதை யார் கவனிக்கிறார்கள்?

கே : மரணம் என்ற ஒன்று இல்லாவிட்டால் மதங்கள் தோன்றியிருக்காது அல்லவா?
ப : மரணத்துக்குப் பின் என்ன என்ற கேள்விக்கான விடை தெரியாமல் இருப்பதுதான் மதங்களின் ஆதி காரணம். பொதுவாகவே, சில 'ஏன்'கள் விடை தெரியாமல் இருப்பதால்தான் மதங்கள் தோன்றின என்றும் கொள்ளலாம்.

கே : வயதானால் ஞாபக சக்தி கூடுமா குறையுமா ஸார்?
ப : ஞாபகங்கள் கூடும். ஞாபக சக்தி குறையும்.

கே : தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது எப்படி ஸார்?
ப : இப்படி பிறரைக் கேள்வி கேட்பதை நிறுத்துவது முதல்படி!

---------------------------------------------------------


                                                                       

                                                                
"வஸந்த்... நான் சொன்ன மாதிரி செய். என்ன?"

"வஸந்த்.. நானும் வரேன்.. என்னையும் சேர்த்துக்குங்க...""இது என்ன? அடுத்த தெருவுல போய் பென்சில் மேட்ச் ஆடற மாதிரியா?"
"இல்லை. உங்களுக்கு உதவியாய் இருக்க விரும்பறேன். கணேஷ்.. ப்ளீஸ்.. என்னையும் சேர்த்துக்கச் சொல்லுங்க"

"பாஸ்! எனக்குப் பக்கத்துல பொம்பளைங்களை வைச்சுகிட்டு வேற காரியங்களைக் கவனிக்க முடியாது. ஸோலோவாகத்தான் பழக்கம்."

"மேலும் வஸந்த்கிட்ட வேலை செய்யறதுல இன்னொரு கஷ்டம் இருக்கு. அவன் அடிக்கடி ஜோக் சொல்லிகிட்டே இருப்பான். கொஞ்சம் ஒரு மாதிரியா ஆயிரும்! இப்படித்தான் ஒரு தடவை, அது என்ன ஊர்றா? வைத்தீஸ்வரன் கோவில் பக்கத்திலே? அங்க குதிரை வண்டில போய்கிட்டிருந்தபோது ஒரு ஜோக் சொன்னான். என்னடா ஆச்சு?"

"குதிரை நின்னு பின்னங் காலைத் தூக்கிக் குடை சாச்சுருச்சு!"

"அதுக்கே தாங்கலை!"
 

-----------------------------------

                                            
                                                        
(அணுகுண்டு பரிசோதனை) முதலில் நாம் வெடித்தபோது இந்தியத் துணைக்கண்டமே பெருமிதம் கொண்டு உலகக் கோப்பையில் ஜெயித்தது போல தெருவெல்லாம் பட்டாசு வெடித்தார்கள். உடனே பாகிஸ்தான் வெடித்ததும், ஒருகால் நாம் வெடித்திருக்க வேண்டாமோ என்று சிலருக்குத் தோன்றியது. வெடித்ததால் நாம் என்ன சாதித்தோம்?

அணுகுண்டுத் தயாரிப்பில் ஒரு உண்மையான முரண்பாடு உள்ளது. அதைப் பிரயோகிக்காமல் இருப்பதற்காக அது தயாரிக்கப்படுகிறது. ஏன் முதலில் அதைத் தயாரிக்க வேண்டும் என்பது ஒரு கெடிகார மூளைக்குக் கூட எழும் கேள்வி! 'அவளைத் தொடுவானேன், கவலைப் படுவானேன்' என்று நாட்டுப்புறக் கலைஞன் சொல்வது போல எதற்காக அணு மங்கையிடம் வம்பு பண்ண வேண்டும்?  தயாரிக்காமலேயே இருந்து விடலாமே? ஜெர்மனி வெடிக்கவில்லை.  ஜப்பான் வெடிக்கவில்லை. இஸ்ரேல் கூட வெடிக்கவில்லை. இஸ்ரேலுக்கு இல்லாத நெருக்கடியா? (இஸ்ரேல் தென் ஆப்பிரிக்காவில் ஒன்று பரிசோதித்ததாக 'அனலிஸ்ட்'கள் சொல்கிறார்கள்) இருந்தும் நம் இந்திய தேசத்துக்கு அணுகுண்டு வெடி பரிசோதனை இந்த 'தன் தடவல்' (ego message) தேவைதானா? என்று ஆரம்ப உற்சாகங்கள் அடங்கியதும் பலர் கேட்கத் தொடங்கியுள்ளார்கள்.....

(ஓரிரு எண்ணங்கள்)

------------------------------------------------

                                                   
www. westegg.com என்னும் வலைத் தளத்தில் சுமார் 3500 க்ளீஷேக்கள் உள்ளன. எந்த ஒரு ஆர்த்தியை உள்ளிட்டாலும், அதைப் பயன்படுத்தும் 'க்ளீஷே' க்கள் தேடி வரும். உதாரணமாக dog என்று உள்ளிட்டால் tail wagging the dog, sleeping dog, dog eat dog, dog day என்று பல உதாரணங்கள், க்ளீஷே என்பவை நையடிக்கப்பட்ட, திரும்பத் திரும்ப பயன்படுத்தப்பட்ட சொற்கள், சொல் தொடர்கள்.

உதாரணம் 'கண்கள் குளமாயின' என்று அடுத்தமுறை நீங்கள் எழுதும்போது அது சிந்தனையின் பற்றாக்குறையைத்தான் காண்பிக்கும். சொல்ல வந்த கருத்து சரியாகப் போய்ச்சேராமல் இருந்து விடுமோ என்று பயப்பட்டு இதுவாய் பல நூறு தடவை பல நூறு பேரால் அலுக்கும்வரை பயன்படுத்தப்பட்ட சொல்லை அல்லது வாக்கியத்தைப் பயன்படுத்துவது. இது தன்னம்பிக்கைக் குறைவைத்தான் காட்டும். 

இவ்வகையில் பழ மொழிகள் க்ளீஷேக்கள் ஆகுமா என்று கேட்கலாம். பழமொழிகள் வலுக்கட்டாயமாகப் பயன்படுத்தப்படும்போது அவை நையடிக்கப்படுகின்றன. உதாரணம், 'தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலைன்னு சும்மாவா சொன்னங்க' என்னும்போது அது பிரியங்கா பற்றி என்றால்கூட மன்னிக்கக் கூடாது. காரணம் இந்தப் பழமொழியின் லட்சத்து நாற்பதாயிரத்து மூன்றாவது பயன்பாடு இது.

தமிழில் இதுமாதிரி அலுப்பு வார்த்தைகள் ஏராளம். கண்கள் குளமானதுடன், பதறினான், கதறினான், முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது, நாய் வால், விதி யாரை விட்டது, ஆண்டவன் விட்ட வழி, ஆண்டவன் கண்ணைத் திறக்காமலா போவான், சந்தேகப் பிராணி, மூக்கில் வேர்க்கும், மாற்றான் தோட்டத்து மல்லிகை, எள் போட்டால் எள் விழாது, இப்படி நூற்றுக் கணக்கில் உள்ளன. அவைகளை ஒரு பட்டியலாக உங்கள் உதவியுடன் தயாரிக்க விரும்புகிறேன். இதன் குறிக்கோள் (சே! மற்றொரு க்ளீஷே!) காரணம் புதிதாக நல்ல தமிழில் எளிதாக எழுதுவதே.

(தமிழ் அன்றும் இன்றும்)

செவ்வாய், 29 ஏப்ரல், 2014

கல்யாணமகாதேவிதிருவாரூரிலிருந்து மன்னார்குடி செல்லும் வழியில் காட்டாற்றுப் பாலத்தைத் தாண்டிச் செல்லும்போது இடதுபுறம் ஒரு ஒற்றையடிப் பாதை திரும்பும். அந்தப் பாதைதான் கல்யாணமகாதேவி செல்லும் வழி.

 
பற்பல வருடங்களுக்கு முன்னர் எங்கள் குடும்பம் வாழ்ந்த ஊர்.  அவ்வப்போது என் மாமாக்கள் அங்கு சென்று வருவது வழக்கம்தான். சில வருடங்களுக்கு முன்னர் இங்குள்ள பெருமாள் கோவில் மற்றும் சிவன் கோவில் எப்படிச் சிதைந்துள்ளது என்பதை ஒரு படத்துடன் ஒரு சிறு பத்திரிகையில் வந்திருந்தது. அதைப் பார்த்த ஒரு பெரிய மனதுக்காரர் அங்குள்ள பெருமாள் கோவிலைப் புதுப்பிக்க முன்வந்தார்.  
    
திரு கௌதமன் சில வருடங்கள் முன்பு அந்தக் கோவில் கட்ட நிதியுதவி செய்யச் சொல்லி முகநூலில் பகிர்ந்திருந்தது சில நண்பர்களுக்கு நினைவிருக்கலாம்.

கல்யாண வரதராஜப் பெருமாள் கோவில் 

 
   
குடும்பத்தார் மற்றும் நண்பர்களிடம் பெற்ற சிறு தொகையையும் சேர்த்து அந்தப் பெரிய மனதுக்காரரிடம் அணிலின் சிறு உதவியாய் ஒப்படைக்க அவர் பெருமாள் கோவிலைப் புதுப்பித்து, சென்ற வருடம் அந்தக் கோவிலுக்குக் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.   

கும்பாபிஷேகம் முடிந்தவுடன் அதை நடத்தி முடித்தவர்கள் வீட்டில் திருமணம் நடந்தது ஒரு விசேஷம். இங்கு வந்து வேண்டிக் கொள்பவர்களுக்கு உடனே திருமணம் கைகூடுவதாக நம்பப் படுகிறது. அங்கு நாதஸ்வரம் வாசித்த கார்த்திக் அருண் அவர்களுக்குக் கூட திருமணம் நிச்சயமாகி இருக்கிறது.
     
கும்பாபிஷேகம் நடந்து ஒருவருடம் பூர்த்தி ஆன நிலையில் அங்கு நடந்த ஹோமத்துக்கு அழைப்பு வந்தபோது கிளம்பிய மாமாக்களுடன் என்னையும் சேர்த்துக் கொண்டார்கள்.  
    

                    


அடுத்து அங்கு குடிசையில் அமர்ந்து அருள்பாலிக்கும் சிவனுக்கும் ஆலயம் எழுப்பத் தீர்மானித்திருக்கிறார்கள்.

   
திருவாரூர் சாலையிலிருந்து கல்யாணமகாதேவி செல்லும் வழியில் ஓர் ஆறு காணப்படுகிறது. பாண்டவ ஆறு என்று சொல்கிறார்கள். வனவாசத்தின்போதோ எப்போதோ பாண்டவர்கள் இங்கு வந்ததாகச் சொல்கிறார்கள்.
               
     
ஊருக்குள் நுழைந்ததும் 1940, 1950 களில் இருப்பதுபோல உணர்வு ஏற்படுகிறது. கட்டிடங்கள் இல்லாத சாலைகள். காலில் மிதிபடும் மென்மணல் பாதைகள். ஓங்கி உயர்ந்த மரங்கள். பெரிய ஏரி. மூங்கில் புதர்கள். எங்கோ உயரத்தில் கேட்கும் பெயர் தெரியா ஒரு பறவையின் டுட்டூ ஒலி.
             

                  
அங்கிருந்த ஐயனார் கோவில்.
   


    
அங்கு பார்த்ததுமே நட்பு பாராட்டிய திடீர் நண்பன்.
                 

மரத்திருட்டு! 

இந்த ஊர்ப் பயணத்துக்காகக் கிளம்பியதில்தான் மற்ற ஊர்ப் பயணங்களும் சாத்தியமாகின. இங்கு ஹோமம் முடிந்து சாப்பிட்டானதும் தஞ்சையை நோக்கிக் கிளம்பினோம்.

திங்கள், 28 ஏப்ரல், 2014

திங்க கிழமை 140428 :: இனிப்பு அவள் .... இல்லை அவல்

 
   
அரை கிலோ கெட்டி அவல் வாங்கிக் கொள்ளவும் (கடையில்தான்!). 
           
போதிய அளவு சுத்தமான தண்ணீரில் அதை அரைமணி நேரம் ஊற வைக்கவும். 
    
பிறகு தண்ணீரை வடித்து விடவும். 
   
ஊறிய அவலை நன்றாகப் பிசையவும். 
   
 
   
கால் கிலோ சீனி, ஒரு மூடி தேங்காய்த் துருவல் இதை, பிசைந்த அவலோடு போட்டுக் கிளறி வைக்கவும். 
                             
அவ்வளவுதான். இனிப்பு அவல் தயார். (அவள், தாயார் என்றெல்லாம் படிக்காதீர்கள்!) 
                           

ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

ஞாயிறு 251 : கங்கை கொண்ட சோழபுரம்


சிறு மரநிழலின் பின்னணியில் கோவில். சிறு மர நிழலில் ஓய்வெடுக்கும் ஜீவன் தெரிகிறதா?

சனி, 26 ஏப்ரல், 2014

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்


1) "வெற்றி நிச்சயம்  .. இது வேத சத்தியம்.." (ஒரு பாட்டில் அல்ல.. இவர் படும் பாட்டில்..கல்லூரி மாணவன் சுந்தரேசன்.
 
 
2) லட்சியத்தை அடைந்தது மட்டுமில்லை, அதைச் சிறப்பாகச் செயல்படுத்துவது இன்னும் சிறப்பு.சாதனையாளர் ஹக்கீம்.
 
 
 

4) மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வந்த வேலையை விட்டு விட்டு இயற்கை விவசாயத்துக்கு வந்த சிவகங்கை மாவட்டம் கல்லலை ஒட்டியுள்ள முத்துப்பட்டியைச் சேர்ந்த ரூசோ
 
 
5) கஷ்டம் என்று நினைத்தால்தான் கஷ்டம். பவானியின் தன்னம்பிக்கை.
 


 


7) செய்யும் வேலையை கடமைக்குச் செய்வதற்கும், மனமார அனுபவித்துச் செய்வதற்கும் உள்ள வித்தியாசம்! இவர் இரண்டாவது வகை!
 
 

புதன், 23 ஏப்ரல், 2014

திருவாரூர்


தூரத்திலிருந்து பார்க்கும்போதே மனத்தைக் கொள்ளை கொண்டது கோவிலின் தோற்றம். பைபாஸ் செய்து சென்று விடலாமென்றும் பேச்சு இருந்தது. அப்புறம் மனம் மாறி கோவிலுக்குச் சென்றோம்.

                                                                   


9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்), 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் என பிரமாண்டமாக விளங்கும் தியாகராஜர் கோவிலைப் பார்க்க எங்களுக்குக் கிடைத்த நேரம் ஜஸ்ட் ஒரு மணிநேரம் மட்டுமே.
                                                     
அதுவும் அரைமணியில் வந்துவிடுங்கள், கிளம்பிடுவோம் என்று சொல்லப்பட்டு, உள்ளே சென்று வேகமாகத் திரும்பிவரவே ஒரு மணி நேரமானது.

                                                            
 
கேமிரா வெளியே எடுக்க நேரமில்லாமல் கொடுக்கப்பட்ட குறைந்த அவகாசத்தில் கோவிலைப் பார்க்க உள்ளே ஓடினோம். உண்மையில் நிதானமாகப் பார்க்க்க வேண்டுமானால், முழுதும் பார்க்க ஒருநாள் போதாது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

                                              
 
கேமிரா இல்லாததால் அலைபேசியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன் திருப்திப் பட்டுக் கொண்டோம்.தியாகராஜரின் முக தரிசனம் காண்பவர்கள், 3 கி.மீ. தொலைவிலுள்ள விளமல் சிவாலயத்தில் பாத தரிசனமும் செய்யவேண்டும் என்று படித்தேன். ஊர் பெயர் மட்டும் பார்த்துத் தாண்டிச் சென்றோம்!

நாங்கள் போன அன்று பிரதோஷம் வேறு. ஒரே கூ.....ட்டம். எனவே அந்தப் பக்கம் செல்லவில்லை. ஒருபக்கக் கோவிலைப் பார்க்காமல் பாதி கோவில் அதுவும் அவசர அவசரமாக, ஓட்டமும் நடையுமாகப் பார்க்கவே ஒருமணிநேரம் பிடித்தது.
அம்மன் சன்னதியின் பின்னால் உள்ள சுவற்றில் காத்து வைத்துக் கேட்டால் வீணையொலி கேட்கும் என்று சொல்லி என் ஒரு மாமா சுற்றிச் சுற்றி வந்து சுவரில் காதை வைத்துக் கேட்டு எங்களையும் கேட்கச் சொன்னார்.
நான் சுவரில் காது வைத்ததும் "இங்க வந்துடு செல்லம்... பேசலாம்" என்று குரல் கேட்டது. திகைத்துப் போய் மாமாவைப் பார்க்கத் திரும்பினால் அருகில் ஒரு பெண் அலைபேசியில் சிறு குரலில் பேசியபடி தாண்டிச் சென்றாள். மறுபடி மறுபடி காது வைத்துக் கேட்டும் ஒன்றும் கேட்காததால், வீணையொலி கேட்க என் பாஸுக்கு அலைபேசினேன். (உண்மையில் தினம் ஒரு கோவில் செல்வது என் பாஸ்தான். அவரில்லாமல் நான் மட்டும் சென்றிருந்ததால் இதுமாதிரிக் கோவில்கள் பார்ப்பதை அவரிடம் அவ்வப்போது வர்ணனை செய்துகொண்டே இருந்தேன்)

மீண்டும் ஒருமுறை இந்தக் கோவில் பார்க்க என்று மட்டுமே வந்து பார்க்கவேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தியது.
                                                        
 
அடுத்தது கமலாலயம். திருக்குளத்தைப் பார்த்ததுமே எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இந்தத்  திருக்குளத்தில் ஒரு படகில் அமர்ந்து சிரித்தபடி போஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் எங்கள் அப்பா, அம்மாவின் ஃபோட்டோ பார்த்துக் கொண்ருந்தது நினைவுக்கு வந்தது. அவர்கள் திருமணமான புதிதில் இங்கு வந்து எடுத்துக் கொண்ட கருப்பு வெள்ளைப் புகைப்படம்.
                                               
 
தண்ணீர் நிறைந்து நின்ற திருக்குளத்தின் காட்சியைப் பார்க்கவே பரவசமாக இருந்தது. தெப்போற்சவம் நடைபெறும் நாளில் அங்கு நடக்கும்/நடந்த மகாராஜபுரம், எம் எஸ் கச்சேரிகள் பற்றி மறுபடி ஒரு முறை பேசினோம்.
                                                   

அப்புறம் கிளம்பிதான் மன்னார்குடி சென்றோம்!

செவ்வாய், 22 ஏப்ரல், 2014

காங்கிரஸ் கோஷ்டி ஆரசியலும் சினிமா விமர்சனமும் -1930 ஸ்டைல்!காங்கிரசில் கோஷ்டி இருப்பது இப்போதல்ல, 1930 களிலேயே இருந்திருக்கிறது. தீரர் சத்தியமூர்த்தி ஒரு கோஷ்டி. ராஜாஜி ஒரு கோஷ்டி.

இது சம்பந்தமான சுவையான ஒரு சம்பவம்.

நாடகங்களிலிருந்து திரைப்படங்களுக்கு தமிழகம் பழக்கப் பட்டுக் கொண்டிருந்த சமயம். நிறைய படங்களில் பெண் வேஷத்தை ஆண்களே ஏற்று நடிப்பது சாதாரணமாய் இருந்தது. நாடக மேடையில் செய்வதை அப்படியே திரையிலும் செய்து கொண்டிருந்ததற்குக் காரணம் பெண்கள் அந்தக் காலத்தில் சினிமாவில் நடிக்க அதிக அளவில் வரவில்லை. வந்தாலும் கட்டுப்பாடுகள் இருந்தன.

பிராமண விதவை வேடத்தில் நடிக்க மொட்டை போட்டுக்கொள்ள வேண்டுமென்றால் அந்த நடிகை தயாராக இல்லை. எனவே அந்த வேடத்தில் ஒரு ஆணே நடித்திருந்தார். (படம் மேனகா)

   
எஸ் ஜி கிட்டப்பா மறைவுக்குப் பிறகு திரைப்படங்களில் நடிப்பதில்லை என்ற கொள்கை வைத்திருந்த கே பி சுந்தராம்பாளை நந்தனார் படத்தில் ஆண் (நந்தனாராக)  வேடத்தில் நடிக்க வைக்க ரூபாய் ஒரு லட்சம் அந்தக் காலத்திலேயே கொடுத்து ஒப்பந்தம் செய்து படமெடுத்தது எல்லோருக்கும் தெரியும். இதற்கு கே பி எஸ் முதலில் ஒத்துக் கொள்ளவில்லை. நந்தனாராக (ஆணாக) நடிப்பதால் வேறொரு ஆண்மகனோடு ஜோடி சேரவேண்டிய அவசியம் இல்லை என்பதும், சத்யமூர்த்தி அவர்களும் சிபாரிசு செய்தார் என்பதாலும் ஒத்துக் கொண்டார். 
 
            

இந்த முயற்சி கூட ஒரு போட்டியின் விளைவாகத்தான் அவசரம் அவசரமாக எடுக்கப் பட்டதாம். எஸ்.டி சுப்புலட்சுமியை வைத்து டைரக்டர் கே. சுப்பிரமணியம் 'பக்த குசேலா' என்று படம் எடுத்துக் கொண்டிருந்தாராம். அதில் எஸ் டி எஸ் (சோமசுந்தரம் அல்ல!) தான் கிருஷ்ணராம். அந்தப் படம் வெளிவருமுன் நந்தனாரை வெளியிட்டுவிட முடிவு செய்து, அதேபோல வெளியிட்டும் விட்டார்களாம்.

இந்தப் படத்துக்கு எதிர் கோஷ்டியான ராஜாஜியின் ஆதரவாளரான கல்கி விகடனில் எழுதிய விமர்சனம் " நந்தனார் படத்தில் பனைமரம், எருமைக்கடா, வெள்ளாடு ஆகியவை சிறப்பாக நடித்திருந்தன"

அந்த சமயம் உண்மையிலேயே பத்திரிகைகளில் ஆண் வேடத்தைப் பெண்களும், பெண் வேடத்தை ஆண்களும் சினிமாவில் நடிப்பதற்கு எதிர்ப்பு இருந்ததாம்.

இந்த எதிர்ப்பினாலும் 'பக்த குசேலா' எடுத்த கே சுப்பிரமணியம் அதில் நடித்த எஸ் டி சுப்புலட்சுமியை அழைத்துக் கொண்டு கல்கியை நேரில் சந்தித்து அந்தப் படத்துக்கான பிரத்தியேகக் காட்சியைப் பார்க்க அழைத்தாராம். கல்கி 'பெண் ஆண் வேடம் இது நடிப்பதற்கு நானும் எதிர்க் கருத்து உடையவன்தான், தெரியுமில்லையா?' என்று கேட்டாலும் மகள் ஆனந்தியோடு படத்தைப் பார்த்தாராம். கிருஷ்ணரைப் பார்த்த ஆனந்தி 'அது கிருஷ்ணனேதான்' என்று கத்தி விட, 
 
                        

சத்தியமூர்த்தி ஆதரவு பெற்ற நந்தனார் படத்துக்கு 'அப்படி' விமர்சனம் எழுதிய கல்கியின் பேனா, இந்தப் படத்துக்கு 'முல்லைச் சிரிப்பு எஸ் டி சுப்புலட்சுமி' என்று பாராட்டியிருந்தாராம். கூடுதல் தகவல் இந்தப் படத்தில் எஸ் டி சுப்புலட்சுமி அவர்கள் கிருஷ்ணனாக மட்டுமல்லாமல் மிசஸ் குசேலனாகவும் நடித்திருந்தாராம்!