சனி, 30 ஜனவரி, 2010

மிரட்டும் காதல்.


முன்குறிப்பு :
இது ஒரு மிரட்டும் காதல்.
திரைப் படத்திலும் நேரிலும் எத்தனையோ காதல் கதைகள் பார்த்திருக்கிறோம், கேட்டிருக்கிறோம்.
கல்லூரிப் பருவத்துக் காதலும் பார்த்திருக்கிறோம். அலைகள் ஓய்வதில்லை, பன்னீர் புஷ்பங்கள் போன்ற படங்களில் +2 பருவ காதலும் பார்த்திருக்கிறோம். இன்னமும் முன்னால் 'ஓ..மஞ்சு' படத்தில் ஒன்பதாம் வகுப்பிலேயே காதல் வருவது போலவும் காட்டியதாய் நினைவு.
நிஜமாய் நடந்த சம்பவத்தைக் கதையாய் சிறிய மாற்றங்களுடன் செய்தது.
சிறுகதையான உண்மைச் சம்பவம்...

பள்ளியில் பெண்ணைக் கொண்டு விட்டவள், இனிய பாடல் ஒன்றை இசைக்கத் தொடங்கிய அலைபேசியை எடுத்துக் காதில் வைத்தாள். "ஆமாம், நினைவிருக்கு..பணம் கொண்டு வந்திருக்கிறேன்.." என்று கூறி கட் செய்தாள். அன்றுதான் ஃபீஸ் கட்டக் கடைசி நாள் என்பதால் பள்ளி அலுவலகம் சென்றாள். பணம் கட்ட வரிசையில் நின்ற போது அருகில் வந்தவளைப் பார்த்து முகம் மலர்ந்தாள்.

"என்ன, ஜெகதீஷ் அம்மா...., .ஃபீஸ் கட்டவா..நானும் அதற்குத்தான் நிக்கறேன்.. வாங்க.."என்றாள்.

இவளுடைய பெண் எட்டாம் வகுப்பில் படிக்கிறாள். ஜெகதீஷ் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவன். துறு துறு என்று இருப்பான் ஜெகதீஷ்.

"இல்லை பவித்ரா அம்மா... பிரின்சிபாலை பார்க்க வெயிட் பண்றேன்..."

"என்ன விஷயம்...ஃபீஸ் கட்ட நாள் கேக்கவா..."

சில பேர் தவணை வாங்கிக் கொண்டு பின்னர் கட்டுவார்கள்.

"இல்லை பவித்ராம்மா...ஒரு சின்னப் பிரச்னை..."

"என்ன..."

சற்றே தயங்கினாள் ஜெகதீஷம்மா...

கேட்டிருக்கக் கூடாதோ... "பரவாயில்லை விடுங்க..."

"இல்லை..இல்லை..சொல்வதற்கென்ன...புதுவிதமா ஒரு பிரச்னை..பையன் 'வாம்மா... நீ வந்து விளக்கம் சொல்லு..' என்றான்...அதான்..." என்ற ஜெகதீஷம்மா வரிசையை விட்டு வெளியே வந்தாள்.

"சொல்லலாம்னா சொல்லுங்க.."

"சொல்றேன்.. போன வருஷம் ஜெகதீஷ் தன் (UKG) கிளாஸ்ல படிக்கற ஒரு பொண்ணைப் பார்த்து, "I Love You" ன்னு சொல்லிட்டான். எங்க பிடிச்சானோ அந்த வார்த்தைகளை!. என்ன அர்த்தம்னு கூடத் தெரியுமோ என்னமோ...சொல்லியிருக்கான்...அந்தப் பொண்ணு அழுதுகிட்டே டீச்சர் கிட்ட சொல்லி இருக்கு...டீச்சர் கண்டிச்சதோட இல்லாமல லஞ்ச் டயத்துல ப்ரின்சி கிட்ட்டயும் கேஷுவலா.விஷயத்தை சொல்லி இருக்காங்க..அப்புறம் அவங்களும் கூப்பிட்டு அவனை மெல்லக் கண்டிச்சுட்டு என்னையும் அவன் அப்பாவையும் கூப்பிட்டு ரெண்டு மூணு கேள்வி கேட்டுட்டு, எச்சரிச்சி அனுப்பிச்சிட்டாங்க...."

போன வருஷம்கறீங்க...இப்போ அதுக்கென்ன புதுசா வந்தது?" ஆச்சர்யத்துடன் கேட்டாள் பவித்ராம்மா.

"அதை ஏன் கேட்கறீங்க..இந்த வருஷம் ஒண்ணாவதுல வேற ஸ்கூல்லயிருந்து புதுசா ஒரு பொண்ணு வந்து சேர்ந்துருக்கு... ஒரு வாரமா அது ஜெகதீஷ் கிட்ட வந்து 'நீ போன வருஷம் ஒரு பொண்ணு கிட்ட I love you சொல்லி டீச்சர், ப்ரின்சி கிட்ட திட்டு வாங்கினாயாமே...இப்போ என் ஹோம் வொர்க் முடிச்சிக் குடு..இல்லாட்டா நீ என் கிட்டயும் I love you னு சொன்னேன்னு சொல்லி complaint பண்ணிடுவேன்'ன்னு மிரட்டறாளாம் ...தினமும் ஏதாவது மிரட்டிகிட்டே இருக்காளாம்.."

"டீச்சர் கிட்ட சொல்ல வேண்டியதுதானே.."

"போன வருஷம் அபபடி நடந்ததால இப்போ இவன் சொன்னா நம்புவாங்களோன்னு பயம் இவனுக்கு...அவள் ஏதாவது சொல்றதுக்கு முன்னாடி வந்து நீ சொல்லுன்னான்...அதான்..என்னென்ன தோணுது பாருங்க இதுகளுக்கு..." என்றாள் கவலையுடன் ஜெகதீஷம்மா.

"அடப் பாவமே...சரி பாருங்க...சொல்லுங்க...கலி காலம்..." என்றபடி நடந்தாள் பவித்ராம்மா.

UKG படிக்கும் சிறுவன் உடன் படிக்கும் பெண்ணிடம் I love you சொன்னது ஆச்சர்யமா...

ஒன்றாவது படிக்கும் பெண் இதைக் கேள்விப் பட்டு இவனை புத்திசாலித் தனமாக மிரட்டுவது ஆச்சர்யமா...

இவர்களை இப்படி செய்யத் தூண்டுவது டிவியா, அதை வரைமுறை இல்லாமல் போடும் பெற்றோர்களா, சேரும் நண்பர்களா...?

இது நடந்து இரண்டு மூன்று நாள் ஆகியிருக்கும். I love you என்ற சினிமாப் பாடல் ஒன்று கேட்கும்போது திடீரென இந்த சம்பவம் மீண்டும் நினைவுக்கு வந்தது.

தன்னுடைய செல்லை எடுத்தாள். ஜெகதீஷ் அம்மாவைத் தொடர்பு கொண்டாள். குசல விசாரிப்புகளுக்குப் பின் அன்று பிறகு என்ன நடந்தது, அந்தப் பெண்ணை அழைத்து விசாரித்தார்களா என்று கேட்டாள்.

"ஆமாங்க...அந்தப் பெண்ணை உடனே கூப்பிட்டுக் கேட்டார்கள். அது ஆமாம்னு ஒத்துகிச்சுங்க...ஏன் பண்ணினேன்னு கேட்டா, இனி ஒரு தரம் உங்க பையன் வேற எந்தப் பொண்ணு கிட்டயும் இது மாதிரி இனிமேல் சொல்ல மாட்டான் இல்லே..அதனால்தான்..அப்படிங்குதுங்க..ப்ரின்சி எல்லாம் ஆச்சர்யப் பட்டு போய் அவளை வார்ன் செய்து அனுப்பினாங்க.."

"அட..ஆச்சர்யமா இருக்கே..இந்த வயசுல எப்படிங்க அந்தப் பொண்ணு இப்படிப் பேசுது..?"

செல்ஃபோனை கீழே வைத்து ரொம்ப நேரத்துக்குப் பிறகும் ஆச்சர்யம் மிச்சமிருந்தது...

வெள்ளி, 29 ஜனவரி, 2010

ஓடும் ரயிலில் ஊசியும், பேசியும்!

பல வருடங்களுக்கு முன்னே - தாம்பரம் பீச் மின்வண்டியில், ஒருவர் - பல சிறிய கண்ணாடி குழாய் பாட்டில்களைக் கையில் வைத்துக்கொண்டு, அதேபோல நிறைய குழாய்களை கையில் உள்ள பையில் வைத்துக்கொண்டு, இவ்வாறு கூவியவண்ணம் வருவார்:


" நோட்டு தைக்கலாம், துணி தைக்கலாம், கிழிந்த துணிகள் தைக்கலாம், ஜாக்கெட் தைக்கலாம், பாவாடை தைக்கலாம், டிராயர் தைக்கலாம், சட்டை தைக்கலாம், கோணி தைக்கலாம், பேப்பர் தைக்கலாம், ஹெமிங் பண்ணலாம், பூ வேலை செய்யலாம், பூ கோர்க்கலாம், மாலை செய்யலாம், இருபத்தொரு விதமான ஊசிகள், ஐந்தே ரூபாய்."


எதையும் முதன் முறையாகப் பார்க்கும்பொழுது அல்லது கேட்கும்பொழுது - அது சல்லிசான விலையில் இருந்தால், வாங்கிவிடுவது என்னுடைய வழக்கம். அந்தக் கண்ணாடிக் குழாயை வாங்கிச் சென்று, வீட்டில் உள்ள பழைய 'சைபால்' டப்பாவில் போட்டு வைத்தேன். அதில் இருந்த ஊசிகளில் இரண்டை மட்டும் - இரண்டு சந்தர்ப்பங்களில் உபயோகித்திருப்பேன் என்று ஞாபகம்.

இப்போ ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், இன்னும் சில வருடங்களில் - இதே மின்சார வண்டியில், அலைபேசிகள்  - இவ்வாறு விற்கப்படலாம் - என்று தோன்றியதால்தான். அப்போ விற்பவர் என்ன கூறி விற்பார்?

" அவசரமா பேசலாம், ஆதரவா கேட்கலாம், இயல்பாகச் சிரிக்கலாம், ஈயையும், ஈ என்று சிரிப்பவரையும் படமெடுக்கலாம், உண்மை பேசலாம், ஊருக்குப் பேசலாம், எப் எம் கேட்கலாம், ஏதும் பார்க்கலாம், ஐங்கரனையும் (பின்னணிப் படமாக) சேமிக்கலாம், ஒரு நாள் முழுவதும் ஓயாம செய்தி அனுப்பலாம் / படிக்கலாம், ஔவையார் படம் கூடப் பார்க்கலாம்.... ஃபைவ் ஹண்ட்ரட் தான் ஒண்ணு!!"


"நெட் பார்க்கலாம், பங்கு வாங்கலாம், பார்த்து விற்கலாம், (எம் பி த்ரீ) பாட்டுக் கேட்கலாம், (எஸ் ஜே சூர்யா) போட்டுத் தாக்கலாம், ட்விட்டர் ட்விட்டலாம்.... வாங்குங்க சார் - அலைபேசி - ஐநூறு ரூபாய்க்கு ஒன்று!" 
" ஏம்பா - ஐநூறு ரூபாய்க்கு ரெண்டு  தருவியா?"

வியாழன், 28 ஜனவரி, 2010

எங்கள் பற்றி எம்ஜியார்!


என்னதான் நடக்கும் நடக்கட்டுமே,
இருட்டினில் நீதி மறையட்டுமே,
தன்னாலே வெளிவரும் தயங்காதே,
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே!
இது சமீபத்தில் சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவரால் பாடப் பெற்றப் பாட்டு.


இது தன்னைக் குறித்துத்தான் பாடினார் - எம்ஜியார்  என்று 'நெஞ்சுக்கு நீதி' எழுதியவர் சொன்னார். அப்புறம் அது அண்ணா அவர்கள் குறித்துத்தான் பாடினார் எம்ஜியார்  என்று பாடியவர் ஆதாரங்களுடன் விளக்கினார்.


இன்று ஜெயா டி வி இல், எம்ஜியார் - 'அம்மா' பற்றி ' ராமன் தேடிய சீதை' படத்தில் பாடிய பாட்டாக, "திருவளர் செல்வியோ? நான் தேடிய தலைவியோ?" என்ற பாட்டு, 'கோட்' செய்யப்பட்டது.


இதை எல்லாம் பார்க்கும் பொழுது, கேட்கும் பொழுது, புரட்சித் தலைவர் அவர்கள் 'எங்கள்' பற்றிப் பாடியவை - எங்கள் கவனத்திற்கு குரோம்பேட்டைக் குறும்பனால் கொண்டுவரப்பட்டது.  நாங்க அதைப் பார்த்து மெய் சிலிர்த்தோம். அட 'எங்கள்' பற்றி, எம்ஜியார் அந்தக் காலத்திலேயே பாடி விட்டாரே!
" ஒரு தாய் மக்கள் நாம் என்போம்; ஒன்றே 'எங்கள்' குலம் என்போம்!"
" ஒன்று 'எங்கள்' ஜாதியே, ஒன்று 'எங்கள்' நீதியே !
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே!"
இதே பாட்டில், 'ஆதிமனிதன்' பற்றி கூட வந்திருக்கு!
ஹி ஹி !!    

புதன், 27 ஜனவரி, 2010

அலைபேசி படம் பாகங்கள் விவரங்கள்


மாதவன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி - ஒரே ஒரு அலைபேசி படம் வரைந்து பாகங்களைக் குறித்தால் எப்படி இருக்கும் என்று ஒரு முயற்சி செய்து பார்த்தார் ஓர் ஆசிரியர்.
படமும் எண்களும் தரவிறக்கம். 
விவரம் மட்டும் நம் கைங்கரியம்.

1. ஒலி கேட்கும் பகுதி. குயிலோ வீணையோ - குழைந்தால் காதருகே வைத்து கேட்டு ஆனந்தப்படுங்கள். சிங்கம் கர்ஜித்தால் - கொஞ்சம் தூரத்தில் வைத்துக் கேளுங்கள். கடன் கொடுத்தவர் கூப்பிட்டால் - வேறு யாரையாவது விட்டு பேசச் சொல்லுங்கள், கேட்டுச் சொல்லச் சொல்லுங்கள். 


2. ஃபிலிம் பார்க்கும் பகுதி. உங்கள் கற்பனை திறனுக்கேற்றாற்போல் உபயோகம். நாங்க அதிகமா இது பற்றி சொல்லாமல் இருப்பது நல்லது என்று நினைக்கிறோம். 


 3. விரும்பியவற்றைத் தேர்ந்தெடுக்கும் விசைகள்.


 4. கூப்பிடு தூரத்தில் இருப்பவரைக் கூட - இதைத் தட்டி அழைத்து - பேசி மகிழலாம், (உங்கள் கணக்கில் நிறைய பைசா இருந்தால்.)


 5. குறுக்குச் சந்துகள் எவை என்று தட்டிப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.


 6. எடுப்பது, தொடுப்பது - எல்லாத்துக்கும் இது.


 7. (வழி) நடத்தும் விசை 


 8. விசைகளைப் பூட்டி வைக்கும் விசை. (விசை எண் மூன்றுடன் கூட்டணி அமைத்து செயல்படும்)


 9. பெரிதாக்கும் விசைகள் - சத்தத்தையும், திரைக் காட்சிகளையும்.


10. (ஃபிலிம்) படமெடு / நிறுத்து. (Start Camera - Action - Cut)


11. முடி விசை / மேலும், திற / அணை (ஐயோ! ஆன் / ஆஃப் தான் வேற எதுவும் இல்லை)


12. பிடித்த காட்சிகளை / நபர்களை பிடித்து வை.


13. சுத்தமா துடைத்தெறி 


14. இதுதாண்டா படமெடுக்கும் கண்ணாடி - படமெடுப்பவர் இதுக்குப் பின்னாடி.


15. இதுல நீங்க எந்த கேபிள் சொருகுகிறீர்களோ அதற்குத் தகுந்தாற்போல் - அலை பேசி விவரங்களை அனுப்பும் / பெறும் அல்லது சக்தி பெறும் !    

திங்கள், 25 ஜனவரி, 2010

தாயின் மணிக்கொடி பாரீர்...நாட்டின் அறுபத்தோராவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. செங்கோட்டையிலும் ஜார்ஜ் கோட்டையிலும் இன்னும் பல இடங்களிலும் கொடி ஏற்றப் படும். கொடி ஏற்றுவதற்கு என்று சில விதிமுறைகள் உண்டு. Flag Code of India 2002 என்று சொல்லப் படும் இது சில விதிமுறைகளை பின்பற்றச் சொல்லி மக்களை கேட்டுக் கொள்கிறது. நமது தேசியக் குறியீட்டுக்கு ஒவ்வொரு குடிமகனும் செய்ய வேண்டிய மரியாதைகளைப் பற்றி சொல்கிறது.


நடுவில் வெண்மை நிறத்துடன் மேல் பாகம் காவி நிறமும், கீழ் பாகம் கரும்பச்சை நிறமும் கொண்டது நமது கொடி. நடுவில் அசோகச் சக்கரம்.


1) கொடி ஏற்றப் படும் போது காவி நிறம் மேலே இருக்கும் வண்ணம் ஏற்ற வேண்டும்.


2) வேறு எந்தக் கொடியோ, முத்திரையோ தேசியக் கொடியை விட மேலேயோ, அதற்கு வலது புறமோ இருக்கக் கூடாது.


3 மற்ற அனைத்துக் கொடிகளும் வரிசையாக பறக்க விடப்பட்டால் தேசியக் கொடியின் இடதுபுறம் வரிசையாக பறக்க விடப் பட வேண்டும்.


4) அணிவகுப்பில் தேசியக் கொடியை ஏந்திச் செல்லும்போது குறிப்பாக மற்ற கொடிகளையும் ஏந்திச் செல்லும் நிலையில், அணிவகுப்பின் முன்னணியிலோ, அல்லது வலது புறமோ தேசியக் கொடியை ஏந்திச் செல்ல வேண்டும். ...


5) சாதாரணமாக தேசியக் கொடிகள் பாராளுமன்றம், ஜனாதிபதி அலுவலகம், உச்ச நீதிமன்றம், தலைமை நீதிமன்றங்கள், தலைமைச் செயலகங்கள், கமிஷனர் அலுவலகங்கள் போன்ற முக்கிய அரசு அலுவலகங்களில் பறக்க விடப் படலாம்.


6) வியாபாரங்களுக்கோ, மற்ற விளம்பர விஷயங்களுக்கோ தேசியக் கொடியை உபயோகிக்கக் கூடாது.


7) சூர்ய அஸ்தமனத்துக்கு முன் கொடி இறக்கப் பட வேண்டும்.


குடியரசு தினம், சுதந்திர தினம், மகாத்மா காந்தி பிறந்த தினம் தவிர மற்ற நாட்களில் சாதாரண பொது ஜனம் தேசியக் கொடியை எங்கும் ஏற்ற அனுமதி இல்லாமல் இருந்தது. தொழிலதிபர் நவீன் ஜிண்டால் தன்னுடைய அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைக்க, அவர் மேல் கொடி அவமதிப்பு வழக்கு தொடரப் பட்டது. அவரும் தன் உரிமைக்கு வாதாடினார். அந்த வழக்கில் சமீபத்தில் வந்த தீர்ப்பின் படி சில மாறுதல்கள் செய்யப் பட்டுள்ளன. தகுந்த மரியாதைகள் செய்யப் பட்டால் கொடி ஏற்றிக்கொள்ள அனுமதிக்கப் பட்டுள்ளது. மேலும் இருட்டு இல்லாத இடமாக இருக்கும் படியும், நல்ல ஒளி விளக்குகள் கொடியின் மீது படும் வண்ணமும் வைத்தால் மாலை ஆறு மணிக்குமுன் கொடி இறக்கப் பட வேண்டும் என்ற விதியும் தளர்த்தப் பட்டுள்ளது.


தேசியக் கொடி பற்றி சில சுவாரஸ்ய விவரங்களும் கூடவே தரப் பட்டுள்ளன.


* முதல் முறை அந்நிய மண்ணில் இந்திய தேசியக் கொடி ஏற்றப் பட்டது ஜெர்மனியில்...ஸ்டாட்கராத் என்ற இடத்தில் பிக்காஜி ருஸ்தம் காமா என்ற அம்மையாரால்...1907 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் நாள்.


* 1953 மே 29 ஆம் தேதியன்று உலகின் உயரமான இடமான எவரெஸ்ட் மலையின் மீது தேசியக் கொடி ஏற்றப் பட்டது.


1984 ஆம் ஆண்டு தேசியக் கொடி விண்வெளியில் பறந்தது..! விங் கமாண்டர் ராகேஷ் ஷர்மா விண்வெளிப் பயணம் மேற்கொண்ட போது அவரது விண்பயண உடையில் பதக்கமாக அணிவிக்கப் பட்டது

அலைபேசி - சில சௌகரியங்கள்

அலைபேசி வாரத்தை அதனால் ஏற்படும் சௌகரியங்களுடன் ஆரம்பிப்போம்.
இன்றைய பதிவில், ஆரம்ப நாட்களில் வந்த - அடிப்படை அலைபேசி பற்றி *அலை பேசியில் பேசும்பொழுது,  இஷ்டத்துக்கு ரீல் விடலாம் -  உதாரணம் : "ஆமாம் சார் நான் இப்போ ஆபீஸ் தான் வந்துகிட்டு இருக்கேன் - டிராபிக் ஜாம்ல மாட்டிகிட்டு இருக்கேன்". (இதை டாய்லெட்டில் உட்கார்ந்துகொண்டு சொன்னால் கூட பாஸ் நம்பிவிடுவார் - யாருக்குத் தெரியும் - அவர் கூட உங்க சுபாவம் தெரிந்து, டாய்லெட்டில் உட்கார்ந்துகொண்டு 'ஏனையா இன்னும் ஆபீஸ் வரவில்லை?' என்று உங்களைக் கலாய்த்துக் கொண்டிருக்கலாம்!) - 'அப்படியா? டிராபிக் சத்தமே இல்லையே? ' - 'அதான் சொன்னேனே சார் - டிராபிக் ஜாம் - எல்லோரும் எஞ்சின் ஆப பண்ணி வெச்சிட்டாங்க' - நான் ஏ / சி காருக்குள்ள உக்காந்துகிட்டு இருக்கேன் - அதனாலதான் உங்களுக்கு சத்தம் கேட்கலே ... ' அப்பா வரிசையா எவ்வளவு பொய்கள் வாயில வருது! 
-- மேலும் சில :
- ஆமாம் நான் இப்போ கோயம்புத்தூருல தான் இருக்கேன். இது, 'டுப்பு'ன்னு நண்பர்கள் கண்டுபிடித்துவிட்டால் - சுலபமாக - 'அடேடே நான் கோயம்பேடுல என்றுதானே சொன்னேன், உனக்கு கோயம்புததூருன்னு கேட்டுச்சா?' 
- அலைபேசியில் அழைப்பு வந்து, ஒரு பெண் குரல், 'சார் அயம் காலிங் ஃபரம் சிட்டி  பேங்க் -- ' என்று சொன்னால், 'அயம் வைஸ் பிரசிடென்ட் ஆஃ ப் ஐ சி ஐ சி ஐ பேங்க்' என்று சொல்லலாம்.  அதற்கு அவர்கள் அயரவில்லை என்றால், 'இப்போ என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள் - நான் நிதி அமைச்சகத்துடன் கான்ஃபரன்ஸ்ல இருக்கேன்' என்று சொல்லலாம். - பாத்தீங்களா - ஒரு அலைபேசி இருந்தால் நமக்கு எவ்வளவு கற்பனைத் திறன், ஃபாண்டஸி எல்லாம் வருதுன்னு.
* பிறகு நம் அலைபேசியில், நமக்குப் பிடித்தவர்கள் / பிடிக்காதவர்கள் எல்லோருக்கும் நிக் நேம் கொடுத்து - அதை சேமித்துவைக்கலாம். என்னுடைய அலைபேசியில் - நான்சென்ஸ் 'அ' தொடங்கி, நான்சென்ஸ் தொன்னூற்றொன்பது வரை - நிறைய நம்பர்கள் உள்ளன - தினமும் ஒவ்வொரு நம்பர் இதில் சேர்ந்து கொண்டிருக்கும்!


எங்கள் ஆசிரியர் குழுவில் இருக்கும் ஆசிரியர்களின் அலை பேசியில் காணப்பட்ட சில அழைப்பாளர் விவரம் சுவாரஸ்யமாக இருக்கிறது. அவையாவன :
கனவுக் கன்னி.
கிழக் கோட்டான்.
ஜொள்ளு எண் ஒன்று 
ஹூம் பேசித் தொலை.
மிஸ் பண்ணாதே 
டைம் பாஸ்.
கடலை 
ஆயுள் தண்டனை.
ரீல் மாமா 
ராக்ஷஷி 
பேசுடா செல்லம் 
குயில் 
நிக்காதே ஓடு 
அன்புத் தொல்லை 
ரம்பன்   
சொறியன் 
சொறிநாய் 
சோம்பி  
எந்தப் பெயர்கள்  யாருடைய அலைபேசியில் காணப் படுவது என்ற விவரங்களை உங்கள் ஊகத்திற்கே விட்டுவிடுகிறோம்!    

ஞாயிறு, 24 ஜனவரி, 2010

ஞாயிறு-28

 

தயிர் சாதம் ரெடி பண்ணுங்கோ!


தயிர் சாதம் சமைப்பது(!)  எப்படி என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.
முதலில் தயிர் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

மேல் நாட்டறிஞர் மேந்தினுஸ் புர்வாங் என்பவர் அவர் எழுதாத ' The art of curd making' என்னும்  நூலில்  சொல்ல நினைத்து சொல்லாமல் (ஏப்பம்) விட்ட பகுதி இதோ: 
நல்ல தயிர் என்பது நல்ல பாலிலிருந்து, நல்ல முறையில் தயார் செய்யப்பட வேண்டும்.


உங்க ஊர்ல சந்தையில் விற்கும் பால் (எங்க ஊர்ல ஆவின் என்று பெயர்; பக்கத்து ஊருல நந்தினி என்று பெயர்.) எது என்று பார்த்து, அதை ஓர் இனிய மாலைப் பொழுதில் வாங்கி வந்து வீட்டில், ஃப்ரிட்ஜுக்குள் வையுங்கள். வெச்சிட்டீங்களா?


இரவு விஜய் டீ வி இல் ஏர்டெல் சூப்பர் சிங்கர் - ஜூனியர் சீசன் 'n' நடக்கும்பொழுது அந்தப் பாலை, உங்களுக்குக் கிடைத்த அடுப்பு எதுவாக இருந்தாலும், அதற்கேற்றப் பாத்திரத்தில் தண்ணீர் கலக்காமல், காய்ச்சுங்கள். எச்சரிக்கை : பால் பொங்கும்போது, படார் என்று அடுப்பை அணைத்துவிடவேண்டும். பிறகு, குற்றம் நடந்தது என்ன பார்க்கும் நேரத்தில், பாலை பாத்திரத்துடன் பெரிய நீர்ப் பாத்திரத்தில் இறக்கி, அந்தப் பாலின், உஷ்ண நிலையைக் குறைக்கவேண்டும். தொண்ணூற்றைந்து முதல் நூறு டிகிரி (சென்டிகிரேடு) வரையிலும் இருக்கின்ற பால், படிப் படியாகக் குறைந்து, நாற்பது / நாற்பத்தைந்து டிகிரிக்கு வந்தவுடன், நல்ல, புளிக்காத, கெட்டித் தயிர் ஒரு ஸ்பூன் எடுத்து, பாலில் ஊற்றி, ஒரே ஒரு கலக்குக் கலக்கிவிட்டு. பால் பாத்திரத்தை, அப்படியே மூடி வைத்துவிடுங்கள். மறுநாள் காலையில், நல்ல சுவையான கெட்டித் தயிர் தயாராக இருக்கும். 


குளிர் பிரதேசங்களில் இருப்பவர்கள் curd maker  உபயோகிக்கலாம்.  அடியில் heater பொருத்தப் பட்ட ஒரு பாத்திரம் - lacto bactor எனப் படும் தயிர் [உயிர்] வளர சரியான வெப்ப நிலையை நிர்வகிக்கிறது 3 மணி நேரத்தில் தயிர் தயார். 


தயிர் சாதம் பிசைய, நல்ல பச்சரிசிச் சாதம் வேண்டும். அதுவும் குழைந்து இருக்கவேண்டும். சாதம் சூடாக இருக்கக் கூடாது, சில்லென்றும் இருக்கக் கூடாது. இளம் சூட்டில் இருக்கவேண்டும்.  தேவையான அளவு சாதம் எடுத்து, ஒரு எவர்சில்வர் பாத்திரத்திலிட்டு, அதனோடு சிறிதளவு பொடி உப்பு சேர்த்து, நன்றாகப் பிசையவும். கையிடவேண்டாம் என்று நினைப்பவர்கள், ஒரு கரண்டியால் நன்றாகக் கலக்கலாம். உப்பும் சோறும் கலந்த இந்தக் கலவையில், கொஞ்சம் கொஞ்சமாக தயிர் ஊற்றி, தொடர்ந்து பிசையவும்.  சிலர் இந்தத் தயிர் சாதம் புளிக்காமல் இருக்கவேண்டும் என்றால், சிறிதளவு காய்ச்சிய பால் விட்டு, தயிருடன் சேர்த்துப் பிசைவார்கள்.
திரவம் நிறைய இருப்பது நல்லது - இல்லையானால் ஆற ஆறக் கெட்டியாகி விடும் - அப்புறம் மாடல்லிங் க்ளேதான்!
இனி, இந்த சாதத்தில், மேற்கொண்டு என்னென்ன அயிட்டங்கள் போடலாம் என்று பார்ப்போம். முதலாவதாக, இதற்கு கடுகு தாளிப்பு (இந்த பெயரில் இப்போ ஒரு வலைப் பதிவு இருக்கு) செய்யலாம். கடுகு தாளிப்போடு சேர்த்து, பெருங்காயம் - பொறித்து, பொடித்துப் போடலாம். 
அப்புறம்? உளுத்தம் பருப்பை விட்டு விடலாமோ? சேர்த்துக்குங்க! அதையும்விட நல்ல விஷயம் முந்திரிப் பருப்பு - பொன்னிறமாக வறுத்துப் போட்டுக்குங்க!
உப்பு (மோர்) மிளகாய் - பொன்னிறமாக வறுத்து, கிள்ளிப் போடலாம். எனக்கு பொன்னிறமாக வறுத்து எடுத்த மோர் மிளகாயின் கோமாளிக் குல்லாய் பகுதி மிகவும் பிடித்தமானப் பகுதி.
அதற்கப்புறம்?
மாங்காய்த் துண்டுகள், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை.
அப்புறம்?
மாதுளை முத்துக்கள்.
அப்புறம்?  சின்ன திராட்சை கருப்பு பச்சை எது வேண்டுமானாலும். 
அதற்கப்புறம்?கை நிறைய எடுத்து வாய் நிறையச் சாப்பிடுங்க.  
இந்தத் தயிர் சாதத்திற்கு, தொட்டுக்கொள்ள - (சென்னை செந்தமிழில் 'கடிச்சிக்க') எதுவும் தேவை இல்லை. இதில் நாம் போட்டிருக்கும் பல விஷயங்கள் - நமக்கு இதை அப்படியே சாப்பிட உதவும். 
பக்கோடா, பருப்பு வடை, மாவடு, இதில் ஏதாவது இல்லாவிடில் தயிர் சாதம் சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடிப்போரும் உண்டு.   

வெள்ளி, 22 ஜனவரி, 2010

கற்சட்டி சமையல்.

கற்சட்டி என்று ஒருவகைப் பாத்திரம் உண்டு. அதில் சமைப்பதற்கு தனிக் கவனமும் பொறுமையும் வேண்டும். கற்சட்டி வாங்கினால் முதலில் அதைப் பழக்க வேண்டும் என்பார்கள்!  சரியான முறையில் வீட்டிலுள்ள பெரியவர்கள் அதை கொஞ்சம் கொஞ்சமாக அடுப்பில் வைத்து சூட்டுக்குப் பழக்கிக் கொடுப்பார்கள். இல்லா விட்டால் அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றினாலோ எண்ணெய் இட்டாலோ விரிசல் விட்டு விடும். பழக்குதல் என்றால் என்ன?சரியாக முற்றாத கருங்கல்லை மாக்கல் என்பர்.  மக்னீசியம் சிலிகேட் அதிகம் இருப்பதால் இதைத் தேய்த்தால் கைக்கு வழ வழப்பாகத் தெரியும். மாக்கல் துண்டுகளை குடைந்து செய்யப் படுபவை இந்தக் கல் சட்டிகள். பருமனான சுவர்கள் இருந்தாலும் டென்ஷன் கொடுத்தால் உடைந்துவிடும்.  பழக்குதல் என்பது 'வெல்டிங்'குக்குப்  பின் செய்யப்படும் 'ஹீட்' ட்ரீட்மென்ட் போல் 'இன்டெர்னல் ஸ்ட்ரெஸ் ரிலீவிங்'.   கொஞ்சம் சட்டிகளை உடைத்துக் கற்றுக் கொண்ட வரை - வெப்பத்தை மிக வேகமாக அதிகரித்தால், உள்பக்கத்துக்கும் வெளிப்பக்கத்துக்கும் சுமார் 2௦௦ டிகிரி வித்தியாசம் இருக்கும் பொழுது விரிசல் விடுகிறது. அதேபோல் தீயிலிருந்து எடுத்துக் குளிர்ந்த தரையில் வைத்தாலும் விரிசல் விடும்.  குழம்பு சட்டியின் நுண் துளைகளில் நீங்கள் நேற்று வைத்த [மீன்] குழம்பு தங்கியிருந்து சரித்திரம் படைத்துவிடும் என்பதால், பழக்குதல் என்ற பெயரில், சீக்கிரம் ஆக்ஸிடைஸ் ஆகாத எண்ணையை நுண் துளைகளில் ஊடுருவச் செய்கிறார்கள். சூடு படுத்தி, எண்ணை ஊற்றி, குளிர்வித்து - மீண்டும் சூடு, எண்ணை, ....இப்படி.  மீண்டும் மீண்டும் உபயோகிக்கப்பட்ட சட்டியின் பரப்புகள் கண்ணாடி போல் ஆனாலும் நுண் துளைகள் இருப்பதால், சட்டியின் உபயோகம் மாறுவதற்கில்லை. உடைந்த துண்டுகளிலும் உபயோகம் உண்டு. எடுத்து தரையில் எழுதலாம்!


 கடலூரில் இருந்த பொழுது பாடலீஸ்வரர் திருக்கோயில் திருவிழா சமயத்திலும், நாகையில் நீலயதாக்ஷி மேலும் பெருமாள் கோயில் திருவிழாக் காலங்கள் தவிர, திருவாரூர் தெப்பம், அங்கே இங்கே என்று அம்மாவுக்கு கல்சட்டி வாங்குவதில் அலாதி பிரியம். சின்னது, பெரியது, மிகப் பெரியது என்று சைஸ் வாரியாக வாங்கி விடுவார். குடையும் பொழுது ஏற்பட்ட பின்னங்களை மறைக்க வியாபாரிகள் மாக்கல் மாவைப் பூசி அது சரியாகச் சுத்தம் செய்தால் நன்றாக இருக்கும் என்ற தோற்றத்தை உண்டாக்கி இருப்பார்கள்.. மிக அழகாகச் செதுக்கப் பட்ட சட்டியில் ஏதேதோ கோடுகள் போட்டிருக்கும். பக்கத்து வீட்டு மாமி அதைக் கையில் எடுத்தவுடன் அம்மாவுக்கு, "ஐயே! நாம் இதை முதலில் பார்க்காமல் போனோமே" என்று தோன்றும். அதே சமயத்தில், 'அக்கா அதை சுரண்டாதீங்க' என்று ஜஸ்ட் மீசை முளைத்துக் கொண்டிருக்கும் 'கடையுதவி' சொன்னவுடன், மாமிக்கு சட்டியை உடனே வாங்கி விட வேண்டும் என்று தோன்றும். எதனால் அப்படி என்கிறீர்களா?  பின்னே?  மாமியை, யாராவது 'அக்கா' என்று கூப்பிட்டு வருடம் ஆறு ஆனது மாமிக்கு மட்டும்தானே தெரியும்! மலரும் நினைவுகளைத் தூண்டல் (நல்ல) வியாபாரிக்கு அழகு!


பழகிய கற்சட்டியில் வத்தக் குழம்பு செய்வார்கள்...அதுதாங்க ..காரக் குழம்பு...அதில் செய்யப் படுவதால் தனி சுவை வருகிறது என்று பெரிசுகள் அடித்துக் கூறுவார்கள். மெல்லச் சூடானாலும் சூடு நின்று தாங்கி சரியான அளவில் கொதிக்கும். நீண்ட நேரம் சூடு நிற்கும்.


சூப், குருமா எல்லாம் செய்யும்பொழுது மிதமான சூட்டில் சிம்மரிங் என்று செய்வோமே அது இங்கே நடக்கிறது. மிகக் குறைவான வெப்பம் கடத்தும் திறன் படைத்ததால் சீக்கிரம் சூடாகி விடுவதும் இல்லை - தீயிலிருந்து அகற்றப் பட்ட பின் சூட்டை இழப்பதுமில்லை.


     அடுப்புக்கு என்று இல்லை. பழைய சாதம் தண்ணி ஊற்றி வைக்கவும் கற்சட்டி ஸ்பெஷல். மறுநாள் காலை தண்ணீர் ஊற்றிய சாதத்தில் முதல் நாள் வைத்த ஓமக் குழம்பு ஊற்றி சாப்பிடுவார்கள். சில நேரம் அந்த சாதத்தில் நல்லெண்ணெய் ஊற்றி ஓமத்தைப் பிசைந்தும் சாப்பிடுவார்கள்.


   ஓமம் ஒரு ஆண்டி பாக்டீரியல் கிருமி நாசினி அதைக் கலப்பது நம் கண்ணில் படாத சால்மநல்லா பூசனத்தை அழிப்பது தான்.  காய்ச்சல் வந்தவர்களுக்கு, சரியான பின், முதலில் குளிக்கும் பொழுது ஓமம் அரைத்துப் பூசிக் குளிப்பதும் இதற்குத் தான்.


     கற்சட்டியிலும் சரி பீங்கான் ஜாடியிலும் -  வெவ்வேறு அளவுகளில் கிடைக்கும் -  மாவடுவும், மோர் மிளகாயும் போட்டு வைப்பார்கள். நீண்ட காலம் உதவும் ஊறுகாய் வகைகள் அவை. மாவடுவை கழுவி, சுத்தம் செய்து, ஈரம் போக துடைத்து விட்டு, விளக்கெண்ணெய் தடவி அப்புறம் உப்புப் போட்டு 24 மணி நேரம் ஊற வைப்பார்கள். பிறகு அதில் கடுகு, விரலி மஞ்சள், காய்ந்த மிளகாய் அரைத்து சேர்த்து ஊற வைத்து விடுவார்கள். ஊறிய பிறகு தினமும் திருவிழாதான்.


     தஞ்சாவூர்க் குடை மிளகாய் என்று ஒரு ரகம் உண்டு. அதுவும் இதே போலதான்..வாங்கி சுத்தம் செய்தபின் ஊசியால் ஒரு துளை இட்டு உப்பு போட்டு தயிரில் அல்லது புளித் தண்ணீரில் ஊற வைத்து விடுவார்கள். ஊறியபின் தினமும் வெய்யிலில் வைத்து (இல்லா விட்டால் புழு வந்து விடும்) எடுப்பார்கள். ஊறிய உடனே ஒரு ருசி என்றால் காயக் காய தனி ருசி. நன்கு காய்ந்தபின் எண்ணெயில் வறுத்து மோர்க்கூழ், உப்புமா போன்றவற்றிலும், மோர் சாதத்துக்கு தொட்டுக் கொள்ளவும் உபயோகப் படும். தண்ணீர் ஊற்றாத தயிரில் ஊறவைத்த, அளவான உப்பிடப் பட்ட அந்த மிளகாயை (கடைகளில் நிறைய உப்பிடுவார்கள்) வறுக்கும் போது ஒருவித நெய் வாசனை வரும்.


     மாகாளிக் கிழங்கு விரல் பருமனில் வெண்மையாக வாங்கி - உடைத்தால் எளிதாக உடைய வேண்டும், நடுவில் தண்டு மிக மெல்லியதாய் இருக்க வேண்டும் - கழுவிச் சுத்தம் செய்து தோல் மற்றும் தண்டு நீக்கிய பின் சிறிய துண்டுகளாக்கி உப்பு போட்டு 24 மணி நேரம் ஊறியபின், தயிரில் ஊறப் போடும் சமயம் கடுகு, மிளகாய், மஞ்சள் அரைத்து விட்டு ஊற ஊற சாப்பிட வேண்டும். மலையில விளைஞ்சா மாகாளி, நாட்டுல விளைஞ்சா நன்னாரி என்பார்கள்.


     கத்தரிக்காய் வாங்கும்போது பூச்சி அடிக்காமல், காம்பு (பாவாடை என்பார்கள்) கனமாக இருக்க வேண்டும். முருங்கை முறுக்கிப் பார்த்து வாங்க வேண்டும். உடையக் கூடாது. வெண்டைக் காய் முனையில் கிள்ளினால் எளிதாக உடைவதாய்ப் பார்த்து வாங்க வேண்டும். காலி ஃபிளவர் வெள்ளை நிறமாய் வாங்க வேண்டும். மஞ்சள் நிறம் கூடாது.   (எதற்கும், சமைக்குமுன் வெதவெதப்பான உப்பு நீரில் போட்டு ஒளிந்திருக்கும் பூச்சிகளை நீக்க வேண்டும்). வாழைத் தண்டு புடலங்காய் கீறிப் பார்த்து வாங்க வேண்டும். காரட் கிள்ளிப் பார்த்து (கடைக்காரரை  அல்ல)  வாங்க வேண்டும். (காயாமல் ஈரப் பசையுடன் இருக்கவேண்டும்).   

வியாழன், 21 ஜனவரி, 2010

செய் / செய்யாதே!


சமையலில் (சமையலறையில்) செய் / செய்யாதே (Dos / Don'ts)
 • தினமும் காலையில் கேஸை நேரடியாகப் பற்ற வைக்கப் போகாமல், ஜன்னல் கதவுகளைத்திறந்து வைத்து சற்று நேரம் கழித்து பற்றவைக்கும் பழக்கம் வைத்துக் கொள்ளலாம்.
 • எந்த சுவிட்சும் ஆன்/ஆஃப செய்யும் முன்பு காஸ் வாசனை வருகிறதா என்று பார்த்தல் மிகவும் நலம். If you smell gas, do not light anything or switch on / off anything in that area.
 • நறுக்கவேண்டிய பொருட்களை முன்னரே தயாராக நறுக்கி தயாராக வைத்துக் கொண்டும், தாளிதப் பொருட்களையும் எடுத்து வைத்துக் கொண்டும் அடுப்பு பற்ற வைக்கலாம்.
 • குழிவான குறுகிய பாத்திரங்களை அடுப்பில் வைப்பதைவிட அகலமான பாத்திரங்கள் வைப்பதால் எளிதில் சூடாகி, எரிபொருளை மிச்சப்படுத்தும். அடுப்பில் என்றால் குழிவான குறுகிய வாய் உடைய பாத்திரங்கள் கை சுடுவதைக் கட்டுப்படுத்தும்.  கொதிக்கும்பொழுது கன்வெக்ஷன் முறையில் கிளறிவிட வேண்டிய அவசியம் குறையும். மின் அடுப்பு காஸ் இவற்றுக்கு அகலப் பாத்திரங்கள்தான் சரி.  அம்மாவிடம் சொல்லிப் பாருங்கள் "அவ்வளவு அகலச் சட்டியில் வடை போடணும்னா எவ்வளவு எண்ணெய் செலவாகும் தெரியுமா?" என்பார்.  சந்தர்ப்பத்துக்கு ஏற்றபடி தேர்ந்தெடுங்கள்.
 •  ஈயச் சொம்பு ரசம் என்றால் தனி ருசிதான். இன்னமும் என் பாட்டி ஈயச் சொம்பில் ரசம் வைக்கிறார். ஆனால் ஒன்று, கவனமில்லாமல் சீரியல் பார்க்கப் போய் விட்டாலோ, தொலை பேசிக் கொண்டிருந்தாலோ திரும்பி வந்து பார்க்கும் போது சொம்பே உருகி காணாமல் போய் இருக்கும். ( ஈயச் சொம்பை குக்கருக்குள் வைத்து ரசம் பண்ணிப் பாருங்களேன்.)
 • வேலை முடிந்தவுடன் கேஸ் சிலிண்டர் ரெகுலேடர் வால்வ் மூடி வைத்துவிடுதல் நலம்.  •  வெந்நீர், பால் போன்றவற்றுக்கு, ஏன் இட்லிக்குக் கூட induction stove வும், திரும்பச் சூடு படுத்தும் வேலைகளுக்கு microwave oven உம உபயோகித்தால் எரிபொருள் மிச்சப் படுத்தலாம்.
 •  Induction stove இல் அதிக பட்ச சூட்டில் வைக்காமல் சற்றுக் குறைவான அளவில் வைத்து உபயோகப் படுத்தினால் load shedding தவிர்க்கலாம். ( ஆம். திரவப் பொருள்களைக் கொதிக்கவைக்கும் எந்த சமையலுக்கும் induction stove மிகவும் பொருத்தம். Induction stove இல் அதிக பட்ச சூட்டில் வைக்காமல் சற்றுக் குறைவான உஷ்ண நிலை அளவில் வைத்து உபயோகப் படுத்தினால் மின்செலவு குறைக்கலாம்.) • நான் எப்பவுமே ஃபிரிட்ஜ் பால் பாக்கெட் வைக்கும்பொழுது, பாக்கெட்டின் வெளிப்புறம் நன்றாகக் கழுவி, ஏற்கெனவே இருக்கும் பால் பாக்கெட்டுகளை, பிராண்ட் பெயர் மேலே வரும் வகையில் - திருப்பி வைத்து, புது பாக்கெட்டின் நிறமில்லா வெள்ளைப் பக்கம் மேலே வரும்படி வைப்பேன்.  இதன் மூலம், பால் பாக்கெட்டை, ஃபிரிட்ஜிலிருந்து எடுக்கும்பொழுது, பழைய பால் பாக்கெட் எது, புதியது எது என்று ஈசியாகத் தெரியும்.
 • ஃப்ரிஜ்ஜில் வைத்திருப்பதை நேரடியாக அடுப்பில் ஏற்றாமல் சற்று நேரம் வெளியில் வைத்திருந்து பின்னர் அடுப்பில் வைத்தால் எரிபொருள் மிச்சமாகும். ஃ ப்ரீசரிலிருந்து எடுக்கப் பட்ட பொருட்கள் மைக்ரோவேவ் ஓவனில் வைக்கும்பொழுது உள்ளிருந்து சூடாவதால், வெடித்துச் சிதற வாய்ப்பிருக்கிறது.  பலாக்கொட்டையை சூடாக்கிப் பின் படாத பாடு பட வேண்டி வந்தது ஓவனை சுத்தம் செய்ய!)
 • ஃபிரிஜ், கேஸ் ஸ்டவ் அருகருகே இருக்கக் கூடாது.  ஃ பிரிஜ் என்றில்லை.  மின் பொறி உண்டாக்கக்கூடிய எந்த உபகரணமும் காஸ் அடுப்பு அருகிலோ அல்லது காஸ் அடுப்புக்குக் கீழோ கட்டாயம் இருக்கக்கூடாது.     

புதன், 20 ஜனவரி, 2010

என்ன சமையலோ...

இப்போதெல்லாம் வெளியூரில், மற்றும் வெளிநாட்டில் நிறையப் பேர் வேலை செய்வதால் ஆண்கள் சமையல் கட்டாயமாகி விடுகின்றது..ஒரு அறையில் தங்கியிருக்கும் பல கல்யாணமாகாத 'பையன்கள்' , மற்றும் கல்யாணமாகியும் தனியாக இருக்கும் மக்கள் சுழற்சி முறையில் சமைப்பது சாதாரணம்.


எனவே ஆண்கள் சமையல், பெண்கள் சமையல் என்றெல்லாம் தனிப் படுத்திச் சொல்ல ஒன்றுமில்லை என்று நினைக்கிறேன்...பெண்கள் ஆண்கள் செய்யும் வேலையை செய்தாலோ ஆண்கள் பெண்கள் செய்யும் வேலைகளைச் செய்தாலோ சற்று சிரமம் எடுத்து 6 சிக்மா (!) எல்லாம் உபயோகித்து excel ஆக முயற்சிப்பது இயல்பு. செய்யப் பட்ட வேலையை உடனே எல்லோரும் பாராட்டி விடுவார்கள். ஆனால் அதற்குக் காரணம் மாறுதல்கள் உடனடியாக வரவேற்பைப் பெறும் தத்துவம்தான்..ஒரே சமையலைச் சாப்பிட்டு வந்தவர்கள் கை மாறிய சமையலை ரசிப்பது இயற்கைதான்..


மேலும் ஒருவர் ஒரு செயலைச் செய்துவிட்டால் அடுத்து முயற்சிப்பவர் அதில் சில புதுமைகள், வித்யாசங்கள் செய்யத் தோன்றி, செய்வதும் கூடுதல் கவர்ச்சிகள்.


அந்தக் காலம் முதல் அம்மாக்களின் மாதாந்திர விடுப்பில் வீட்டிலுள்ள ஆண்கள் கோலம் போடுவது முதல் சமையல் பொறுப்பு வரை ஏற்பது நடக்கக் கூடியதுதான். அப்பா, குழந்தைகள் விவரம் தெரிந்து செய்யும் காலம் வரை செய்வார்கள். அவர்கள் பொறுப்பேற்றால் இவர்கள் பொறுப்பு போய் விடும்!


நான் ஆறாவதோ ஏழாவதோ படிக்கும் போது முதல் முதலாக சமையல் முயற்சி செய்த ஞாபகம். அது வரை அப்பா 'புளி இவ்வளவு போதுமா? தண்ணீர் இவ்வளவு வைக்கலாமா?' என்றெல்லாம் நடந்து நடந்து கேட்டு வருவதைப் பார்த்தபின் வந்தது ஆர்வம்.


விறகு அடுப்புதான்...நாராயண நாயர் புண்ணியத்தில் மாத அக்கௌண்டில் ஒரு வண்டி விறகு வந்து விடும். வாங்கி சமையலறை பரணில் அடுக்கி விடுவோம். ஒரு நாளைக்கு இரண்டு விறகுக்கு மிகாமல் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்வோம்! வெந்நீர், சமையல் விறகடுப்பில். காபி, அப்பளம், துவையலுக்கு கத்திரிக்காய் ஆகியவை கரி அடுப்பில். கரி அடுப்பு பற்ற வைப்பதே ஒரு சுவாரஸ்யம் அந்த நாளில்.


விறகு அடுப்பிலோ வரட்டித் துண்டை மண் எண்ணெயில் நனைத்து, பற்ற வைத்து, விறகை அதில் வைத்து அது அழகாய் எரியும் நேரம் வரைப் போராட்டம்தான். நடுவில் அணைந்து விட்டால் ஊதுகுழல் கொண்டு சத்தம் வர, கண்கள் சிவக்க ஊதுவதும் அவஸ்தை.


வெண்கல பாத்திரம் சாதம் வடிக்க. 'முக்கால் அளவு தண்ணீர் ஊற்று..அதன் விளிம்பில் உள்ளங்கையை வைத்து உள்புறமாக கையை மடக்கினால் தண்ணீர் ஆள்காட்டி விரல் நுனியில் படவேண்டும்' என்பார் அம்மா. வடி தட்டு வைத்து மூடி, கொதித்ததும் களைந்த அரிசி போட்டு மூடி, பதம் பார்த்து இறக்கியபின் ஒரு முக்கிய வேலை அதில் உண்டு...


கஞ்சி வடிப்பது... வடி தட்டை வைத்து மூடி, இரு புறமும் துணி பிடித்து உயரமான இடத்தில் வைத்து கீழ் பாத்திரத்தில் கஞ்சி வடிப்பது சின்ன வயதில் ரிஸ்கான ஒன்று! வடித்த கஞ்சியை துணி அயர்ன் செய்வது முதல் மோர், உப்பு, பெருங்காயம், ப.மிளகாய், இஞ்சி இட்டு குடிப்பது வரை உபயோகிப்போம்.


பெரும்பாலும் நான் செய்வது வெந்தயக் குழம்பு அல்லது வத்தக் குழம்பு அல்லது 'பொரிச்ச குழம்பு'தான். அதுதான் ஈசி. மணத்தக்காளி, மிதுக்க, சுண்டைக்காய், கத்தரிக்காய், கொத்தவரைக்காய் போன்றவற்றில் வத்தல் தயார் செய்து ரெடியாக இருக்கும் அதை காயாக வைத்து குழம்பு செய்தால் வத்தக் குழம்பு. கத்திரி, முருங்கை போன்ற பச்சைக் காய்கறிகள் வைத்து தயார் செய்தால் வெந்தயக் குழம்பு. இது இல்லாமல் அப்பள வெந்தயக் குழம்பு வைக்க அம்மா கற்றுக் கொடுத்திருந்தாள். அது வீட்டில் எல்லோருக்கும் பிடித்த ஐட்டம்.


சாம்பாரில் சுவை வரவழைக்க தனித் திறமை வேண்டும். நாங்கள் எப்போதும் எல்லாவற்றிலும் வெங்காயம் சேர்ப்பது இல்லை.. வெங்காயம் இல்லாத சாம்பார்தான். வெந்தயக் குழம்புக்கும் சாம்பாருக்கும் பருப்புதான் வித்தியாசம். (தெரியாதாக்கும் என்று திட்ட வேண்டாம்..) வெங்காயம் மட்டும் போட்டு வெங்காய சாம்பார் வைப்போம்.


பொரியல் என்று ரொம்பச் சிரமப் பட்டதாய் ஞாபகம் இல்லை. அது ரொம்பச் சுலபமான விஷயம். வாழைக்காய், உருளைக் கிழகு, கோஸ் கை கொடுக்கும். அல்லது அப்பளம் கரி அடுப்பில் வாட்டி விடுவோம். கரி அடுப்பில் அப்பளம் என்றால் அப்பள அடுப்பில்...? என்று கேட்காதீர்கள்!


இப்போதெல்லாம் சமைத்தால் ஒரே டெக்னிக்தான்...முடிந்தவரை லேட் செய்து விடுவது...நல்ல பசி வந்து விடும் மக்களுக்கு...அப்போது சாப்பாடு போட்டால் ஆஹா..ஓஹோ..என்று பாராட்டி விடுவார்கள். 'அப்பா நீ சமைப்பா' என்று குழந்தைகள் நச்சரிப்பார்கள். மேலும் வித்யாசமாக ஏதாவது முயற்சிப்பதும் வழக்கம்...அந்த நாளில் நான் சாப்பிட மைதா மாவு கார பிஸ்கட், இனிப்பு பிஸ்கட் முதல் இன்று எல்லாக் காய்களையும் அரைத்து (!) சாம்பார், சப்பாத்தி மாவிலேயே வெங்காயம், குடை மிளகாய், காரம் என்று சேர்த்து பிசைந்து சப்பாத்தி முயற்சிப்பது (எங்கள் வீட்டில் புதுசுங்க...உங்களுக்கு பழசா இருக்கலாம்...!) ஆப்பிள், பைனாப்பிள் ரசங்கள். பொடி தூவிக் கறி...


எந்த வேலையையும் ரசித்து பொழுதுபோக்காய்ச் செய்தால் நன்றாக இருக்கும்தான்...


முதல் முறை உப்பு, காரம் அளவு தெரியாமல் செய்து எல்லோரும் கஷ்டப் பட்டு சாப்பிட்ட காட்சிகள் மறக்காது. எண்ணெய் பாட்டில் கீழே போட்டு உடைத்தது, அப்புறம் பாத்திரத்தில் வைத்தாலும் பாத்திரம் வழுக்கிக் கீழே விழுந்து கொட்டியது, அப்பாவிடம் அடி வாங்கியது, கையிலும் காலிலும் ஏற்படுத்திக் கொண்ட சமையல் வீரத் தழும்புகள்...! விறகுகளுக்கு நடுவிலிருந்து ஓடிய தவளையை பாம்பு என பயந்தது, அடுத்த முறை 'தவளைதான். எனக்குத் தெரியும்' என்று அசால்டாய் பயப்படாமல் இருந்த போது பாம்பே வந்தது கண்டு அலறியது...(அப்போ பல்லியை டில்லி என்று பயந்தீர்களா என்று கிண்டல் செய்ய வேண்டாம்..)

பாட்டில் இட்லி படங்கள்.பாட்டிலில் ஒரு கரண்டி இட்லி மாவு ஊத்தியாச்சு!


இதோ - நிலக்கடலை, பாதாம் போட்டாச்சு. அதற்குமேல் இன்னும் ஒரு கரண்டி மாவு ஊற்றியாச்சு.இரண்டு நிமிடங்கள், பாட்டில் மைக்ரோ வேவ் ஓவன் உள்ளே - மூடி இல்லாமல்.

வெளியே எடுத்து, அட! இதோ தயார் இட்லி. மூடியணிவிக்கப்பட்ட பாட்டில் - சற்று ஆறட்டும். ஆக்கப் பொறுத்தவர்கள், ஆறப் பொறுக்கவேண்டும் - ஐந்து நிமிடங்கள்.இதோ ஸ்பூனில் எடுத்தாச்சு - சமத்தா சாப்பிடுங்க!  

செவ்வாய், 19 ஜனவரி, 2010

பாட்டில் இட்லி !

ஏதோ ஒரு படத்துல (எதிரி?) மாதவன் (நம்ம maddy73 இல்லை) 'பாட்டில் மணி'யாக வந்து கலக்குவார். இன்றைய (நம்ம கலக்கல்) சமையல், பாட்டில் இட்லி.
                                     இது, நான், டாபர் ஹனி தேன் (காலி) பாட்டில் மற்றும் மைக்ரோ வேவ் ஓவன் துணையோடு வாரத்தில் நான்கு நாட்களாவது செய்து சாப்பிடும் காலை உணவு.
                     இட்லி மாவு செய்யும் முறை : (சீரியசாகத்தான் எழுதியுள்ளோம்)


ஒரு கப் முழு வெள்ளை உளுந்து, நான்கு (அதே) கப் வெள்ளைப் புழுங்கல் அரிசி. இவைகளைத் தனித் தனியே, சுத்தமான நீரில் ஊறவைக்கவும். அரிசியோடு இரண்டு ஸ்பூன் வெந்தயமும் சேர்த்து ஊற வைப்போரும் உண்டு. (நாங்க எப்பவுமே அப்பிடித்தான் - வெந்தயத்தைக் கொஞ்சம் தாராளமாகவே போடுவோம். - அதாவது நான்கு ஸ்பூன் அளவு)
இந்த தானியங்கள் யாவும் குறைந்தபட்சம் நான்கு மணி நேரம்  ஊறுவது நல்லது.


'மிக்சி' அரவை வேண்டாம் - முடிந்தவரையிலும் தவிருங்கள். வெட் கிரைண்டர்தான் இட்லி மாவரைக்க ஏற்ற சாதனம். வேறு வழி இல்லை என்றால், (மட்டும்தான்) மிக்சி. 


முதலில் ஊறவைத்த அரிசி (வெந்தயக் கலவையை) கிரைண்டரிட்டு, பொறுமையாக, அதிகம் தண்ணி சேர்க்காமல், விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். எனக்குத் தெரிந்து ஒரு சிலர், இட்லி மாவு அரைக்கும்போது, ஐஸ் கட்டிகள் போட்டு அரைப்போம் என்று சொன்னார்கள். மாவு அரைக்கும்போது அந்த மாவு சூடாகக் கூடாதாம். அப்பொழுதுதான் இட்லி மிருதுவாக இருக்கும் என்றார்கள். பிறகு ஊறிய உளுந்து அரைக்கப் படவேண்டும்.


அரிசி மாவையும், உளுந்து மாவையும், பிறகு ஒன்றாகக் கலந்து, தேவையான அளவு உப்புப் போட்டு கலக்கி, ஒரு பாத்திரத்தில் அல்லது பல பாத்திரங்களில் - முக்கால் அளவுக்குக் கீழே வரும் வகையில் விட்டு, ஒரு இரவு முழுவதும் அப்படியே பாத்திரங்களை மூடி வைத்துவிட வேண்டும். சிலர் அரைத்த மாவை பாத்திரத்துடன், ஒரு குக்கருக்குள் வைத்து குக்கரை மூடி வைக்கலாம் என்கிறார்கள். அப்படிச் செய்தால், மாவு பொங்கும் என்று கூறுகிறார்கள். ஆனால், மாவு பொங்கவேண்டும் என்பதற்காக, ஆப்ப சோடா போன்ற விஷ(ய)ங்களை தயவு செய்து இட்லி மாவில் சேர்க்காதீர்கள்.


இவ்வளவு கஷ்டங்கள் வேண்டாம் என்றால் - கடைகளில் விற்கின்ற அரைத்த மாவை வாங்கலாம். சில பிராண்டுகள் சுமாராக உள்ளன. சில பிரயோஜனம் இல்லை. சிலர் உப்பு சேர்த்து மாவு விற்கிறார்கள். சிலர் உப்பு இல்லாத மாவு விற்கிறார்கள். நான் பயன்படுத்திய அரைத்த மாவு பிராண்டுகளில், குரோம்பேட்டை கடையில் காலை மணி எட்டு நாற்பத்தைந்து மணிக்கு டான் என்று பிரெஷ் ஆக வரும் 'உதயம்' இட்லி மாவு நன்றாக இருந்தது. அதில் உப்பு சேர்க்கப்பட்டுள்ளதாக, வெந்தயம் சேர்க்கப்பட்டுள்ளதாக மேலே கவரில் போட்டிருப்பார்கள். ஆனால் நான் இன்னும் கொஞ்சம் உப்பு சேர்த்துக் கலந்து விடுவேன்.


இட்லி தயாரிப்பில் இதுவரை நாம் பார்த்ததுதான் சற்றுக் கடினமான, சமாச்சாரங்கள்.  இனி இரண்டு நிமிட இட்லி தயாரிப்பு - இதோ :


நம்முடைய ஆஸ்தான டாபர் ஹனி பாட்டிலை எடுத்துக் கொள்ளுங்கள். மூடியை கழற்றிவிடுங்கள். ஒரு கரண்டி இட்லி மாவை அதனுள் ஊற்றுங்கள். பிறகு, பொடியாக நறுக்கிய தக்காளி ஒன்று , நறுக்கிய சாம்பார் வெங்காயம் இரண்டு , அரை பச்சைமிளகாய் - நறுக்கியது, இஞ்சி ஒரு துண்டு, பச்சைப் பட்டாணி பதினான்கு , நிலக்கடலை, முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு, என்று எதெல்லாம் தோன்றுகிறதோ அதை எல்லாம் (அல்லது இவற்றுள் ஏதேனும் ஒன்றிரண்டை மட்டும்) மாவின் மேல் போடுங்கள். அப்புறம் இன்னும் ஒரு கரண்டி மாவு ஊற்றவும். ஒரு ஸ்பூனால் இந்த மாவுக் கலவையை நன்றாகக் கலக்கவும். எல்லாமாகச் சேர்ந்து பாட்டிலின் பாதி அளவுக்குக் கீழே இருக்கவேண்டும். இது மிகவும் முக்கியம்.


இந்த பாட்டில் மாவை அப்படியே மைக்ரோ வேவ் ஓவனுக்குள் வைத்து, (பாட்டிலுக்கு மூடி போடக்கூடாது) அறுநூறு வாட் பவரில் இரண்டு நிமிடங்கள் ஓவனை இயக்கவும். ஓவனை ஆப் செய்யுமுன், பாட்டில் இட்லியின் மேல் பகுதி வெந்திருக்கிறதா - அல்லது ஈர மாவாக இருக்கிறதா என்பது, பார்த்தாலே தெரியும்.  மேல்பகுதி வேகாமல் இருந்தால், மேலும் அரை நிமிட நேரம் ஓவனில் வைத்து ஓட்டவும். பிறகு ஓவனை 'ஆப்' செய்து, பாட்டிலை வெளியே எடுத்து, மூடி போட்டு, ஐந்து நிமிடங்கள் ஆறவிடவும்.


அதற்கப்புறம்? ஒரு ஸ்பூன் கொண்டு பாட்டிலிலிருந்து அப்படியே - பாட்டில் இட்லியை சாப்பிட்டு மகிழுங்கள்.    

திங்கள், 18 ஜனவரி, 2010

காஃபி கலக்கல்

ஆண்கள் சமையல் வாரத்தை, காபியுடன் இனிதே ஆரம்பிப்போம்.


காபி தயாரித்தல்தான் ஆண்கள் எல்லோரும் முதலில் கற்கும் அடுப்படி அனுபவம் என்று நான் நினைக்கிறேன்.


மக்கள் எல்லாவற்றையும் மூன்று மூன்றாகப் பிரித்து அடையாளம் காணுவது மரபு. சங்க காலம், கற்காலம், பொற்காலம் என்றெல்லாம் (என்னுடைய) தூக்கத்திற்கு நடுவே எங்கள் சமூக பாட ஆசிரியர் ராஜசுந்தரம் கூறியவை, கதம்பமாக நினைவுக்கு வருகிறது.


அதுபோல - சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியை எடுத்துக்கொண்டால், காபிக் காலத்தை - கீழ்க்கண்ட வகைகளில் பிரிக்கலாம்.
1) கரியடுப்புக் காலம்.
2) மண்ணெண்ணெய் ஸ்டவ் காலம்
3) இலவச காஸ் அடுப்புக் காலம்.
4) Microwave oven / Induction stove காலம்.


நான் இந்த நான்கு வகை அடுப்புகளிலும் நானே தயார் செய்த காபியைப் பருகி ஆனந்தித்தவன்.


இதில் நான்காவது கால அடுப்பில் காபி தயாரித்தல்  மிக மிக எளிதானது. ஒரே நிமிடத்தில் காபி தயார் செய்து, அதை மூன்று நிமிடங்கள் ஆனந்தமாக, ருசித்துச் சாப்பிடலாம்.
'பாத்திரமறிந்து காபி போடு' என்னும் புதுமொழிக்கிணங்க, உங்களிடம் என்ன பாத்திரம் இருக்கு (எவர்சில்வர் / ஸ்டெயின்லஸ் ஸ்டீல் பாத்திரமா அல்லது பிளாஸ்டிக் / கண்ணாடிப் பாத்திரமா) என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள் இதை, சுலபமாக - கீழ்க் கண்ட சோதனை மூலமாகத் தெரிந்துகொள்ளலாம்:


உங்களிடம் உள்ள பாத்திரத்தை, சுமார் ஒரு மீட்டர் உயரத்திலிருந்து கீழே போடவும்.


ஒன்று: பாத்திரம் கீழே விழுந்ததும் எழும் ஓசை, கே வி மகாதேவன் இசை அமைத்த ஏ பி நாகராஜன் பட பாடல் (உதாரணம் 'மன்னவன் வந்தானடி ஈ ஈ தோழி) பி சுசீலா பாட ஆரம்பிக்கும் முன் எழும் தாம்பாள ஓசையை ஒத்திருந்தால், அந்தப் பாத்திரம் எ சி / ஸ்டெ. ஸ்டீல் என்று அறிந்துகொள்ளுங்கள்.


இரண்டு: போட்டமாத்திரத்தில், பாத்திரம் துள்ளல் இசைக்கு (குத்துப் பாட்டுக்கு) குத்துப் போடும் உங்கள் அபிமான நடிகை போன்று - குதித்தால் - அது பிளாஸ்டிக் பாத்திரம்.


மூன்று: போட்டவுடன் - சிலிங் என்ற சத்தத்துடன் பீஸ் பீஸாகி- உங்கள் காலைப்  பதம் பார்த்தால், அது கண்ணாடிப் பாத்திரம் - உடனே ஓடிச் சென்று அதே போல ஒன்றை, கடையிலிருந்து வாங்கி வந்துவிடுங்கள். இல்லையேல் உங்களுக்கு உங்கள் அம்மா / மனைவி / பெண் / இவர்களில் யாராவது ஒருவரிடமிருந்தோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடமிருந்தோ - உங்கள் தாய் மொழியில் அர்ச்சனை நடைபெறும். 


எவர்சில்வர் / எஸ் எஸ் பாத்திரங்கள், கரியடுப்பு முதல் (மைக்ரோ வேவ் அவன் தவிர மீதி) எல்லாவற்றுக்கும் ஒத்து வரும். பிளாஸ்டிக் / கண்ணாடிப் பாத்திரங்கள் மைக்ரோ வேவ் அவன் தவிர வேறு எதற்கும் லாயக்குப் படாது. 


செய்முறை - மிகவும் எளிய விஷயம் தான். 
* முதலில் பாத்திரத்தில் பாலையோ / நீரையோ / அல்லது இவை இரண்டையும் ஏதேனும் ஒரு விகிதாச்சாரத்தில், வேண்டிய அளவுக்கு எடுத்துக் கொள்ளவும். 


* அந்தப் பாத்திரத்துடன் கூடிய பா / நீ / பா + நீ - யை, அதற்கேற்ற அடுப்பில் வைத்து, அடுப்பைப் பற்ற வைத்து  / ஆன் செய்து - (மொத்தத்தில்) கொதிக்க வைக்கவும். 


* பால் பொங்கும் பொழுது அல்லது நீர் கொதிக்கும் சமயம், அந்த அடுப்பை அணைத்துவிடவும்.


* அடுத்தபடியாக, ஒரு டம்ப்ளரில், இரண்டு ஸ்பூன் சர்க்கரையும், ஒரு ஸ்பூன் இன்ஸ்டன்ட் காபி பவுடரும் போட்டு, இரண்டையும் கலக்கிக் கொள்ளவும்.


* அதற்குப் பிறகு சூடான அந்த பா/ நீ / பா நீ யை இந்த சர்க் + கா ப கலவை மேலே ஊற்றி, அந்தக் கலவையை, நன்றாக நுரை வரும் வரை ஆற்றி,


* அதற்குப் பிறகு அதை வாயிலே மெது மெதுவே ஊற்றி, வயிற்றுக்கு மிதமான சூட்டில் அனுப்பவும்.


நான் தினமும் செய்து அருந்துவது, வெந்நீர் + சர்க்கரை + நெஸ்கபே கிளாசிக் - எல்லாம் சேர்ந்து எழுபத்தைந்து மி லி. 


பாத்திரம் : கண்ணாடி பாட்டில் - டாபர் ஹனி காலி பாட்டில் - மூடி இல்லாமல்.

அடுப்பு : மைக்ரோ வேவ் அவன். 
இதோ சில படங்கள். 
ஞாயிறு, 17 ஜனவரி, 2010

பட்டக் கவிதை !
வாலறிவன் தாள் பணிந்து வண்ணங்கள் பல குழைத்து
நூலறுந்து விழாது நுணுக்கமாய் அமைத்திட்டு
சூத்திரங்கள் ஆராய்ந்து சுத்தமாய் பொருத்திட்டு
ஸ்தோத்திரங்கள் சொல்லி வெற்றிக்கு வழிசெய்து
நண்பர்கள் புடைசூழ நல்ல வெளி தேடி 
வம்பர்கள் வயிறெரிய வல்லுனர்கள் போட்டி இட 
மாஞ்சாவுக்குத் தப்பி  மனம் கவர விண்ணேறி
பாஞ்சால் பட்டம் பேருவகை தாராதோ?  
 
சடசடக்கும் வால் பகுதி மீன் போலும் மேலேறும்
படபடக்கும் இதயத்தை பதமாய் மகிழ்விக்கும்
திமிறி மேலெழும்பும் தலை நெளியும் வளைந்து தரும்
சமரில் இருந்தன்ன சடுதியாய் பாய்ந்து செல்லும்
காற்றைக் கிழிக்கும் காண்போரை வசப்படுத்தும்
மாற்றேதும் உண்டோ மயக்கம் தர இது போலே!
 
உயரப் பறந்தால் உவகை களி பெருகும்
துயரமும் வருவதுண்டு துண்டாகிப் பறந்து சென்றால்
கூண்டுகள் குருவி மீன் மலைப் பாம்பு
வேண்டும் வடிவத்தில் விசித்திரமாய் அமைக்கப்படும் 
பைசா பத்து முதல் பல்லாயிரம் வரையில்
நைசாக விலையுண்டு நாடுவோர் பலவுண்டு
வடபுலத்தில் பலபேரும் வள்ளல் பந்தயங்கள்
இடவுறுதி செய்திட்டு இறுதியாய் தோற்பதுண்டு 
பந்தயம் வேண்டாமே, பார்த்து பரவசிப்போமே! 
 
எந்தையர் முன்னவர் எடுத்துச் செய்த பட்டம்
விந்தையாய் பெருவிலையில் விற்கிறது ஆங்காங்கே 
அழுக்குப் படாது ஆராவாரம் செய்யாது 
விலைக்கு வாங்கி விடப் புகுந்தால் வெட்ட
வெளிக்குப் பஞ்சம் விபத்தின் அபாயம்
காலி மனை இல்லை கவரும் திடல் இல்லை
ஜாலி செய்வதற்கே ஜகா வாங்கும் பேரவலம்.
ஓடியாடி பட்டத்தின் பின் செல்ல
நாடி தளர்ந்த சவலையரால் ஆவதில்லை.
 
ஜன்க் உணவு தின்றவர்கள் ஜிம் செல்ல மறந்தவர்கள்
பிங்க் ஆப் ஹெல்த்தில் பிளே செய்ய வருவதில்லை. 
இணையத்தில் தேடி, இறக்குமதி செய்து,
தனயர்கள் தந்தையர் தாம் களித்துப் பார்க்கிறார்!
ஆகா! பட்டம் இதுதானா? அடடா இதுதான் பறப்பதுவா?
ஓகோ நன்று, ஒப்புகிறேன், ஒன்டர்ஃபுல்! பலர்க்கும் அனுப்புகிறேன்!

ஞாயிறு- 27


சனி, 16 ஜனவரி, 2010

பட்டம் பெறுதலும் பட்டம் வழங்குதலும்
பட்டம் பெறுதலும் பட்டம் வழங்குதலும் சாணக்கியத் தனமான வெற்றித் தந்திரங்கள்.  அழகிய மூக்கன் என்று ஒரு பட்டத்தை விழா எடுத்துக் கொடுத்தால் அதை வாங்க ஆயத்தமாக இருக்கும் ஐம்பது தலைகளை நான் உங்களுக்கு அடையாளம் காட்ட வேண்டியதில்லை.  சிறந்த  சினிமா நடிக நடிகை இயக்குனர் தொகுப்பாளர் உணவு உபசரிப்பாளர் ப்ளோர் பெருக்குபவர் என்று தேடித் தேடி பட்டம் வழங்கி விழா நடத்தி அதை படம் எடுத்து அதை பகுதி பகுதியாக ஷாம்பு  சீயக்காய் தூள் சிவப்பழகு க்ரீம் விளம்பரங்களுடன் பரவலாகக் கலந்து அளித்து நம்மை வாழ வைக்கும் தெய்வங்களைப்  பற்றி தனியாக சொல்ல வேண்டுமா என்ன?
 
பெறுபவருக்குத் தெரியாமல் வழங்கப்படும் பட்டங்களும் உண்டு.  வாத்தியார்களில் நொண்டி சார்,  பொடி மூக்கன், சபக் டிஜின்  (இது எதோ ஒரு முகலாய முற்றுகை யாளர் பெயர்.  சற்று கால் தாங்கிதாங்கி நடப்பதால் அந்த ரிதம் கருத்தில் கொள்ளப் பட்டு வைக்கப் பட்ட பெயர் - இது குறித்து பலமுறை நான் பின்னாளில் வெட்கப் பட்டிருக்கிறேன்.)  என்று கற்பனை வளத்துடன் சூட்டிய பட்டங்கள் கொஞ்ச நாளில் பட்டத்துக்கு உரியவருக்கே தெரிய வரும்.  என்ன செய்வது! பழகிப் பழகி பட்டமும் நிலை கொண்டு விடும். 
 
தெருப் பெண்களுக்கு பட்டப் பெயர்கள் இன்னும் அதிக ரசனையுடன் வைக்கப் படும்.  வெள்ளைக் காக்கை என்று ஒரு யுவதிக்கு பெயர் வைத்தோம்.   காரணம் அவள் நல்ல அழகி.  ஆனால் வாயைத் திறந்தால் போதும் கலவரப் பட்ட காக்கைக் குஞ்சு போல் இருக்கும் குரல்.  இறைவன் ஏன்தான் வரத்தையும சாபத்தையும் ஒரு சேர அளிக்கிறானோ என்று வியக்க வைக்கும் கலவை.  பொருத்தமாக உடை உடுத்தும் ஒரு ஹீரோயினுக்கு சப் ஸ்டேஷன் என்று பெயர் வைத்தார்கள் எங்கள் தெரு ஹீரோக்கள்.  அது என்ன சப் ஸ்டேஷன்?  சப் ஸ்டேஷனுக்கு  சுருக்கம் எஸ். எஸ்.   பெண் Simply Superb ஆம்.  எனவே எஸ். எஸ்.  எனவே சப் ஸ்டேஷன்.  எப்படி இருக்கிறது கற்பனை வளம்?
 
பையன்களுக்கு பெண்கள் என்ன பெயர் என்ன அடிப்படையில் வைப்பார்களோ அதை பெண் வாசகர்தாம் சொல்லவேண்டும்.  பையன்களே பையன்களுக்கு வைக்கும் பெயர்கள் எளிதில் புரியக் கூடிய காரணப் பெயர்கள்.  ஒட்டடைக் குச்சி சாரங்கன், புளிமூட்டை சிதம்பரம், குள்ளச் சாமியார் இப்படிப் பலப் பல.
 

திருவாரூரில் நான் படிக்கும் போது இரண்டு சாமிநாத அய்யர்கள் இருந்தனர். ஒருவர் முடிகொண்டான் வேங்கட ராம அய்யர் என்ற மகா வித்வானின் புதல்வர். இன்னொருவர் எப்போதும் பாண்ட்டும் புஷ் கோட்டும் அணிந்து நவ நாகரிகமாக இருப்பவர்.  ஒரு சமயம் எங்கள் வகுப்பு ஆசிரியர் இல்லாமல் அமளி துமளிப் பட்டுக் கொண்டு இருந்தது.  கையில் பிரம்புடன் தலைமை ஆசிரியர் ராஜாராமய்யர் வந்தார்.  " என்ன இங்கே இரைச்சல் ? யார் கிளாஸ் எடுக்கணும்? " என்று அதிகாரமாக கேட்டார். 
 
"சாமிநாத அய்யர் சார்  " என்று பையன்கள் கோரஸ் ஆக கத்தினார்கள்
 
"ஸ்டைல் சாமிநாத அய்யரா பூனைக்கண் சாமிநாத அய்யரா " என்று இயல்பாகக் கேட்டார் தலைமை ஆசிரியர்! முடிகொண்டான் ஐயர் நல்ல சிவந்த மேனி. கண்கள் பச்சை விழியுடன் வெளிநாட்டு பூனைக் கண்ணாக ஜொலிக்கும்.
 
சங்கரன் என்று எங்களுக்கு ஒரு மேற்பார்வை பொறியாளர் இருந்தார்.  காலை ஆபீஸ் திறந்ததும் நிதானமாக ஒரு சுற்று ஆபீசை வலம் வருவார்.  ஒவ்வொருவராக குடைந்து குடைந்து கேள்விகள் கேட்பார்.  அவர் வரும்போது கவனிக்காத ஒரு தோழரை சக தொழிலாளி ரகசியமாக எச்சரிக்க,  பக்கத்தில் வந்து நின்ற சங்கரன் " தெரியுமய்யா நீ என்ன சொல்லி இருப்பே என்று.  கிங்கரன் வந்துட்டான்னு தானே." என்று விளம்பி தனக்குத் தானே ஒரு சரியான பட்டப் பெயர் சூட்டிக் கொண்டார்.