சனி, 29 செப்டம்பர், 2012

பாசிட்டிவ் செய்திகள் 23/9/2012 To 29/92012


முன்னர் குடிநீர் வாரியம் ஆறாயிரம் லிட்டர் குடிநீர் நானூறு ரூபாய்க்கும், ஒன்பதாயிரம் லிட்டர் அறுநூறு ரூபாய்க்கும் தருவதை இதே பாசிட்டிவ் செய்திகளில் வெளியிட்டிருந்தோம். இப்போது அதிலேயே இன்னொரு செய்தி. வீட்டு உபயோகத்திற்கான குடிநீர் ஆயிரம் லிட்டர் ரூபாய் நாற்பதுக்குக் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது குடிநீர் வாரியம். இந்த விலையில் குடிநீர் பெற விரும்புபவர்கள் தங்கள் சொந்த செலவில் லாரிகள் மூலம் நீரேற்று நிலையங்களிலிருந்து குடிநீர் கொண்டு செல்லலாம் என்று அறிவித்துள்ளது குடிநீர் வாரியம்.

======================================
தென்னக ரயில்வேயில் துணைப் பொது மேலாளராகப் பணி புரிகிறார் இளங்கோவன். அரசு ஊழியராக இருந்தாலும் கூட 'சுடர்' என்ற அமைப்பின் மூலம் 12 ஆம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாத பல ஏழை மாணவிகளின் மேல் படிப்புக்கு வழி ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.  அதில் சரண்யா என்ற மாணவி எஞ்சினியரிங் படித்து விட்டு இப்போது ஐ ஏ எஸ் படித்து வருகிறாராம்.  இவருடைய மனைவி கீதா. அவரும் 'கூடு' என்கிற அமைப்பை பெண்களுக்காக நடத்தி வருகிறார். மாத விலக்கு நாட்களில் ஊரிலிருந்து ஒதுக்கி வைக்கப் பட்டு அல்லலுறும் பெண்களின் மூட நம்பிக்கைகளை அகற்ற இவர் அமைப்புப் பாடுபடுகிறது. இவரும் ஒரு அரசு ஊழியரே. இருவருமே சமுதாய விழிப்புணர்வுக் குறும்படங்கள் இயக்கி உள்ளார்கள். தினமணியில் இவர்களின் பேட்டி....

====================
ஸ்கேட்டிங்கிலும் 'இன்லைன்' ஹாக்கிப் போட்டியிலும் சாதித்துக் கொண்டிக்கும் சென்னையைச் சேர்ந்த பதினைந்து வயது பி என் ரவுஷில். சமீபத்தில் சீனாவில் நடைபெற்ற உலக ஜூனியர் ஃப்ரீ ஸ்டைல் இன்லைன் ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்று ஒட்டுமொத்தத்தில் 19 வது இடத்தையும், இந்திய வீரர்களில் 2 வது இடத்தையும் பெற்றுள்ளார்.  "வழக்கமாக எல்லா அணிகளுக்கு எதிராகவும் 20, 30 கோல்கள் போடும் பஞ்சாபிகள், எங்களுக்கு எதிரான ஆட்டத்தில் 7 கோல்கள் மட்டுமே அடித்தனர். போட்டி முடிந்த பிறகு எங்களைச் சந்தித்த பஞ்சாபிகள் எங்களைப் பாராட்டி விட்டுச் சென்றது மறக்க முடியாதது" என்கிறார் இவர் தினமணிக்கு அளித்த பேட்டியில்....

===================

மின் சிக்கனத்தை மேம்படுத்தும் விதமாக நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில் சென்னை நீங்கலாக சில மாவட்டங்களில் தெரு விளக்குகளை எல் இ டி விளக்குகளாக மாற்றும் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. ரிமோட் டில் கட்டுப் படுத்தக் கூடியதாக தனியார் பங்களிப்புடன் செயல் பட இருக்கும் இந்தத் திட்டத்தால் 30 முதல் 35 சதம் மின்சாரம் சிக்கனப் படுத்த முடியும் என்கிறது தினமலர் செய்தி.

=================

அரசு மருத்துவர்களோ, மருத்துவமனைப் பணியாளர்களோ நோயாளிகளிடம் எரிந்து விழுந்தால் 104 என்ற 'டோல் ஃப்ரீ'எண்ணுக்கு தொலைபேசி புகார் தரும் புதிய வசதி மிக விரைவில் அறிமுகம் ஆக இருக்கிறதாம்.

=================

தேனியைச் சேர்ந்த மீனா, ஹோட்டல் சப்பளையரான கணவனின் வருமானம் போதாமல் அவதிப் பட்ட ஒரு நாளில், பக்கத்து வீட்டில் இவர் தந்த இவர் கைத் தயாரிப்பான ஊறுகாயைச் சாப்பிட்டு விட்டு அவர்கள் சொன்ன 'உன் கைப் பக்குவத்துக்கு ஊறுகாய் போட்டே பொழச்சுக்கலாம்' என்ற வார்த்தையில் உற்சாகமடைந்து, 'முனீஸ்வரன் ஊறுகாய்' என்ற பெயரில் ஊறுகாய்ப் போடத் தொடங்கி அதன் அபார வரவேற்பால், இன்று கணவர் தன் வேலையை விட்டு விட்டு இந்தத் தொழிலில் முழு மூச்சாய் இறங்கி உதவி செய்ய, பிசினசில் வெற்றிக் கொடி நாட்டியுள்ளார், (தினமலர்)

===========


'படிக்கிற காலத்தில் கேம்ஸ் பீரியடில் ஓரமாக உட்காரவைக்க'ப் பட்டபோது மனம் நொந்து போனதாகச் சொல்லும் கலையரசி, உயரக் குறைபாடு, போலியோ பாதிப்புகள் கொண்ட மாற்றுத் திறனாளி. அவர் மற்ற மாற்றுத் திறனாளிகளுக்காக 'பூர்ணோதயா தொண்டு நிறுவனம்' நடத்தி வருகிறார். மாற்றுத் திறனாளிகளின் கஷ்டத்தைப் போக்க அவர்களுக்கு அங்கே தொழிற்பயிற்சி அளிக்கச் செய்யும் இவர் இதற்காகச் சில காலம் ஒரு கிறிஸ்துவ மிசனரியில் பணி புரிந்து களமிறங்கிப் பணி புரியும் திறன்கள் கற்றுக் கொண்டதாகக் கூறுகிறார். 'நானே அவர்களுக்கு உதவவில்லை என்றால் எப்படி' என்று கேட்கிறார்.  (முகப்புத்தகம்)

=================

ஒன்றரை அடி உயரம் கொண்ட மாற்றுத் திறனாளி சேலத்தைச் சேர்ந்த 16 வயது இளைஞர் பெரியசாமி. உயரக் குறைவை சக மாணவர்கள் கிண்டல் செய்த காரணத்தினால் பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்திக் கொண்டாராம். இசையின் மீது ஆர்வம் என்பதால் தாளம் போடும் போடும் பழக்கம் வர, அப்புறம் குறை தீர்க்கும் நாளன்று கலெக்டர் மகாபூஷணத்தைச் சந்தித்து மனு கொடுக்க, அவர் இசைக் கல்லூரி முதல்வரை அங்கு வரவழைத்து இவரின் இசை ஆர்வத்தைச் சோதனை செய்து, மிருந்தங்க வகுப்பில் இலவசமாகச் சேர்த்துக் கொண்டதோடு இலவச உணவு, ஹாஸ்டலில் தங்கிக் கொள்ளும் வசதியோடு மாதம் நானூறு ரூபாய் ஊக்கத் தொகையும் வழங்க ஆவன செய்துள்ளாராம். (தினமலர்)

===============

ரயிலில் பயண முன்பதிவு செய்யும்போது பயணச்சீட்டின் அப்போதைய நிலை- ஸ்டேடஸ் - குறித்து அலைபேசியிலேயே சுலபமாக அறிந்து கொள்ள வசதியான முறை ஒன்று இருப்பதை விகடன் சுட்டிக் காட்டுகிறது. டிக்கெட்டின் PNR என்னை 139 என்ற எண்ணுக்கு எஸ் எம் எஸ் அனுப்பினால் நொடியில் குறுஞ்செய்தியாக தேவைப்படும் தகவல் வந்து விழுகிறதாம்.

================

பிரசவத்துக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட் கதிரிபுரம் கிராமத்தைச் சேர்ந்த செல்வத்தின் மனைவி அலமேலுவுக்கு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே ஏகத்துக்கும் ரத்தப்போக்கும், மருத்துவமனையில் சோதனை செய்த போது தொப்புள்கொடி அறுந்து குழந்தை இறந்து விட்டது தெரிந்த  நிலையில் அறுபட்ட தொப்புள்கொடி வழியாக தாய்க்கு தொடர் ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அவரது ரத்தத்தின் உறையும் தன்மையும் பாதிக்கப் பட்டது. உடனடியாக புதிய ரத்தம் கொடுக்கப்பட்டால் மட்டுமே அலமேலுவின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்ற நிலையில் டோனர்ஸ் யாரும் கிடைக்காத நிலையில் அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர் கவிதாவே தனது ரத்தத்தைக் கொடுத்து அலமேலுவைக் காப்பாற்றி இருக்கிறார். இருவரின் ரத்தமும் ஓ பாசிட்டிவ்.

============

 

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

வாசகர்களுக்கு மூன்று கேள்விகள் 09


பத்திரிகைகளுக்கு நாம் கேள்விகள் அனுப்பினால், அது பிரசுரமானால், அந்தக் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்வார்கள். 
   
இங்கு ஒரு மாறுதல்.

எங்கள் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லுங்களேன்...


மூன்றுமே சுஜாதா பதில் சொன்ன கேள்விகள். 
நீங்களும் படித்திருக்கக் கூடும்! 
படித்திருந்தாலும் உங்கள் பதில்கள் எங்களுக்கு முக்கியம். 
வாசக நண்பர்களின் பதில்கள் வந்தவுடன் இந்தக் கேள்விகளுக்கான சுஜாதா பதில்கள் தனிப்பதிவில் தரப்படும்!!


1) விதியை நம்புகிறீர்களா?

2) கடவுளா.... விஞ்ஞானமா?


3) நம்பிக்கைத் துரோகியை மன்னிக்க முடியுமா?

                      

வியாழன், 27 செப்டம்பர், 2012

உள் பெட்டியிலிருந்து 09 12


தத்துபித்துவங்கள் 

காலிப் பர்ஸ் பல கோடி அனுபவப் பாடங்களைத் தரலாம். பணம் நிரம்பிய பர்சோ பல கோடி வகைகளில் உருப்படாமல் அடிக்கலாம்/கெடுக்கலாம்!
உங்களுக்குள்ளேயே நீங்கள் செய்யும் பயணம்தான் உங்களுக்கு ஆழ்ந்த அமைதியைத் தரும்! 
எல்லா முயற்சிகளும் வெற்றியாக மாறுவதில்லைதான்...ஆனால் வெற்றிக்கான அஸ்திவாரமாக/படிக்கட்டாக அமையலாம்.
ஆணின் மௌனம் பெண்ணின் இதயத்தை உடைக்கும். பெண்ணின் மௌனம் ஆணின் இதயத்தை அமைதியாக்கும்.
கடவுள் நம் கையிலிருந்து எதையாவது பறித்து விட்டாரோ என்று கவலைப் படுவதை விட, அடுத்து ஒரு சிறந்த பொருள் கிடைக்க கையைக் காலி செய்திருக்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாம்.

தப்பாயிடுமோ என்று பயந்து ஒண்ணும் செய்யாமலிருப்பதை விட முயற்சி செய்து தப்பானாலும் கத்துக்கறது பெட்டருங்க....
தோல்வி இதயத்துக்கு போகக் கூடாது. வெற்றி தலைக்கு போகக் கூடாது.
=============================
 
சத்தியமா ஜோக்குதாங்க.... (ஏற்கெனவே படிச்சதுதான்...)

அவன் : "சார், என் மனைவியை ரெண்டு நாளாக் காணோம்!"

போஸ்ட் மாஸ்டர் : "மிஸ்டர்...இது போஸ்ட் ஆபீஸ்...நீங்கள் இதை போலீஸ் ஸ்டேஷன்ல சொல்லணும்..."

அவன் : "ஐயோ சந்தோஷத்துல எங்க போறதுதுன்னே தெரியலையே..."

--------------------------

தத்துபித்துவத்துல சேர்த்திருக்கணுமோ...!

கோபம் என்பது அடுத்தவர் தவறுகளுக்கு நம்மைத் தண்டித்துக் கொள்வது!

===================================

புத்தம்புதுக் காலை...
ஒரு புதிய தொடக்கம்...
புதிய ஆசீர்வாதங்கள்...
புதிய நம்பிக்கைகள்...
கண் விழிக்கும்
ஒவ்வொரு நாளும் 
இந்தப் புதிய காலைகள்
கடவுளின் கொடைகள்
===================================

இந்த உலகம் இருக்கே... உலகம்...
போராடும்வரை வீண் முயற்சி என்பார்கள்...வெற்றி பெற்றவுடன் விடா முயற்சி என்பார்கள்...(ஃபி. கேஸ்ட்ரோ)

=================================
கடவுள் மீது சந்தேகம்...!!
 
இதயத்தில் மட்டுமல்ல நாக்கிலும் கடினம் இருக்கக் கூடாது என்பதை உணர்த்தத்தான் கடவுள் இவ்விரண்டு அவயங்களையும் எலும்பில்லாமல் படைத்தாரோ...

================================
நம்பிக்கைங்க... நம்பிக்கை!
 
ஒரு சின்னக் குருவி/பறவை கிளையின் மீது உட்காருவது கிளையின் மீதுள்ள நம்பிக்கையால் அல்ல, தன் சிறகின் மீதுள்ள நம்பிக்கையால்...

=============================

 படங்கள் : நன்றி இணையம்!

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

P. சுசீலா


சுசீலாம்மாவின் குரலை, அவர் குரலில் பாடல்களை ரசிக்காதவர்கள் யார்? நிறைய நிறைய அவரின் பாடல்கள் பிடிக்கும் என்றாலும் இங்கே கொஞ்சம் பகிர்கிறேன். மனம் வராமல்தான் நிறுத்துவேன்! சமீபத்தில் ஜெயா டிவி எம் எஸ் விஸ்வநாதன் நிகழ்ச்சியில் அவர் பாடலை அவரே பாடியபோது பாவமாக இருந்தது. அவருக்கு வயதாகி விட்டது. அவர் பாடிய பாடல்களுக்கு இல்லை! நம்மால் அதை இப்போதும் தெரிவு செய்து கேட்க முடியும்...


1) "கங்கைக்கரைத் தோட்டம்..."
ஆரம்ப அறிமுக வரிகள் கேட்டு ஓடிவிடாதீர்கள்! ரெண்டு வரிகள்தான்... !!

"கண் திறந்து பார்த்தேன்... கண்ணன் அங்கு இல்லை... கண்ணீர் பெருகியதே...." ஆமாம் கேட்கும் நமக்கும்தான்!
2) "காவிரிக் கரையின் தோட்டத்திலே...."
என்ன ஒரு உற்சாகமான பாடல்...
 3) "என்னை மறந்ததேன்...."
சோகம் சொல்லக் குரல் போதுமா, வரி போதுமா, டியூன் போதுமா... ஆஹா..4) "உன்னை ஒன்று கேட்பேன்..."
வரிகள் பிரசித்தம். முதல் நாலு வரிகளில் தலைப்பாக வைத்து மணியன் தனிதனிக் கதைகளே எழுதியிருந்தார்!
"பேசாத பெண்மை பாடாது உண்மை... கண்ணை மெல்ல மூடும்... தன்னை எண்ணி வாடும்..."5) "கண்ணன் வருவான்...."
"உனக்கென்றும் எனக்கென்றும் உறவு வைத்தான்... இருவரின் கணக்கிலும் வரவு வைத்தான்.."


6) "காதல் சிறகைக் காற்றினில் விரித்து..."
"பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி.. பேச மறந்து சிலையாய் நின்றால்...."


7) "மாலைப் பொழுதின் மயக்கத்திலே...."
"இன்பம் கனவில் துன்பம் எதிரில்..."
"இளமையெல்லாம் வெறும் கனவு மயம்தான்... மயங்குது எதிர்காலம்..."

8) "கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல..."
"அக்கம் பக்கம் யாரும் பார்த்தால் வெட்கம் வெட்கம்.... அன்பே உன்னை நேரில் கண்டால் நாணம் நாணம்..."
மீனாக்ஷி... !  சமீபத்தில் 'மூன்றாம் சுழி'யில் பின்னூட்டத்தில் 'எங்கள் ப்ளாக்கில் பாடல்கள் பகிர்ந்து நாட்களாகி விட்டன' என்று சொல்லியிருந்தீர்கள்... இப்போது திருப்தியா? எல்லா பாடல்களும் (மறுபடியும்) கேட்டீர்களா?

பாடல்கள் பகிரும்போது வழக்கமாகவே தோன்றுவது இதுதான். யார் 'க்ளிக்' செய்து கேட்கப் போகிறார்கள்? அவர்களிடம் இல்லாத பாடல்களா? அப்புறம் ஏன் பகிர்வு? இதெல்லாம் எனக்குப் பிடிக்கும்... இன்னும் கூடப் பிடிக்கும்... உங்களுக்கும் இந்தப் பாடல்கள் இப்போது நினைவுக்கு வருகிறதா என்று நினைவூட்டத்தான்!

திங்கள், 24 செப்டம்பர், 2012

இப்படியும் ஒரு வெற்றி பெற்ற காதல் கதை! சற்றே நீண்ட சிறுகதை 2

                                                                       [2]

 முன்கதைச் சு.....ட்டி!

அவர் கைகளை விடாமல் பற்றிக் கொண்டு அவர் கண்களைப் பார்த்தேன்.


"அப்பா.... உங்களைப் பார்த்ததும் பவானி எப்படி உங்களைத் தாத்தான்னு சொன்னா....?"

"ஆமாம்... எப்படிம்மா.... பழைய ஆல்பம் எதாவது கொண்டு வந்துட்டியா.... அப்படிக் கூட எதுவும் கொண்டு வந்த மாதிரித் தெரியவில்லையே...." 

திரும்பி பவானியைப் பார்த்தவர் அவளை இழுத்து அணைத்து அவள் நெற்றியிலும் தலையிலும் உதடுகளை ஒற்றினார்.

ஏதோ நினைவு வந்தவராக திடீரென நிமிர்ந்து என்னைப் பார்த்தவர் "அவர் எங்கேம்மா..."

"யாருப்பா...." ஒன்றும் தெரியாதவள் போலக் கேட்டேன்.

"இவங்கப்பா...."

"எவங்கப்பா...." 

அவ்வளவு உடனே மாப்பிள்ளை என்று சொல்வார் என்று நானும் எதிர்பார்க்கவில்லைதான். ஆனாலும் என் கேள்வியில் லேசான ஆர்வம் இருந்தது.

"உன் வீட்டுக்காரன்.... உன்னை இழுத்துகிட்டு வந்தானே.. அவனைத்தான்மா கேட்கிறேன்..."

தவிர்க்க நினைத்தும் என் முகம் லேசாக சிணுங்கியது.

  "அப்பா.... அப்படிச் சொல்லாதீங்கப்பா... அவர் மாதிரி ஒருத்தர் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும்பா  ...."

"ம்...ஹூம்!" என்றார் வெறுப்புடன். "எங்கே..?" என்றார் மறுபடி ஒற்றை வார்த்தையில்.

"வெளியூர் ஷூட்டிங் போயிருக்கார்பா...ஒரு வாரம் ஆகும்!"

ஒரு நிம்மதி தெரிந்தது அவர் முகத்தில்.

"சாப்பிடலாம்பா...." தயக்கத்துடன் அவர் முகம் பார்த்தேன்.

"வேண்டாம்மா.... இதோ கிளம்பிடுவேன்.."

"அப்பா... அவள் ஸ்கூல் கிளம்ப...." 

அவர் நிமிர்ந்து பார்க்க, "வேண்டாம்பா.... யு கே ஜிதான.... இன்னிக்கி அவ ஸ்கூல் போக வேண்டாம்.... நீங்க நிதானமா போலாம் இல்லையாப்பா.... இருப்பீங்கதான....?" கேள்வியிலேயே ஏக்கத்தையும் பாசத்தையும் வெளிப்படுத்தினேன்.

அவர் ஒன்றும் பேசவில்லை என்றாலும் டிரைவர் கொண்டுவந்து கொடுத்த பார்சலை எடுத்து பவானி கையில் கொடுத்தார்.

அங்கேயே அதைப் பிரித்த பவானி, "ஹை..... டெடிபேர்" என்று கத்தினாள். 
அவள் அதனுடன் விளையாடத் தொடங்க அவளையே பார்த்துக் கொண்டிருந்தவர்,

"கயல்.... டிரைவரைக் கூப்பிடு.." என்று தொடங்கியவர் தலையை ஆட்டி, தானே எழுந்தார்.

"இருங்கப்பா... நானே கூப்பிடறேன்.." என்று வாசலுக்கு வந்து டிரைவரைக் கூப்பிட்டேன்.

இவன் நான் அங்கு இருந்தபோது இருந்த டிரைவர் இல்லை. நான் வந்தபிறகு டிரைவர், வேலைக்காரர், சமையல்காரர் எல்லோரையும் மாற்றி விட்டார். தெரியும்!

என்னைக்கூப்பிட்டு வேலை ஏவி விட்டு, தானே கிளம்பியது உறுத்தலாக இருந்தாலும் என்னை பழைய மாதிரி 'கயல்' என்று அழைக்க வாய் வந்ததே சந்தோஷமாக இருந்தது.

பவானி அருகில் வந்து அவளிடம் என்ன வேண்டும் என்பது போல ஏதோ கேட்டார். டிரைவரிடம் ஏதோ சொல்லி பணம் கொடுத்து அனுப்பினார். அரை மணி நேரம் கழித்து டிரைவர் வந்து இன்னும் சில பார்சல்களைக் கொடுத்து வெளியில் சென்றான். அதில் சிலவற்றை எடுத்து பவானியிடம் கொடுத்தார். டிரைவர் வாங்கி வந்ததில் மிச்சம் இருந்த ஒன்றை எடுத்து என்னிடம் நீட்டினார். வாங்கிக் கொண்டேன். உள்ளே என்ன இருக்கும் என்று தெரியும்.

"நாம சேர்ந்து போய் வாங்கியிருக்கலாம்பா...." என்றேன். நிமிர்ந்து பார்த்தவர் முகத்தைத் திருப்பிக் கொண்டார். நான் உள்ளே ஏதோ வேலை இருப்பது போல "இதோ வந்துடறேன்பா...." என்று சொல்லி உள்ளே வந்தேன். 

வேலை ஒன்றும் ஓடவில்லை. அவர் என்ன செய்கிறார் என்று உள்ளிருந்தே வேவு பார்த்துக் கொண்டிருந்தேன்.

அந்த இடைவெளி எங்கள் இருவருக்குமே தேவை என்று தோன்றியது. இப்போது கொடுத்துள்ள இந்த இடைவெளி எங்களுக்குள் இருக்கும் தற்போதைய தயக்க இடைவெளியை சற்று குறைக்கும். எங்களுக்குள் என்று சொல்லக் கூடாது. அவருக்கு இருக்கும் தயக்கத்தைக் குறைக்கும். அவர்தான் எங்களை நீண்ட நாள் கழித்துப் பார்க்கிறார். நாங்கள் அல்ல! விஷயங்கள் தெரியும்போது அவர் எப்படி நடந்து கொள்ளுவாரோ.... எப்போது எப்படிப் பேச வேண்டும் என்றும் தெரியவில்லை. சீக்கிரம் பேச மனதில் ஆர்வம் இருக்கிறது.அப்பா எழுந்து ஹாலைச் சுற்றி வந்தார். புத்தகங்களைப் புரட்டினார்.  டிரஸ்ஸிங் டேபிள் மேலே இருந்த தன்னுடைய, மற்றும் பாட்டியின் புகைப் படத்தைப் பார்த்து விட்டு பாராதது போலத் திரும்பி நான் பார்க்கிறேனா என்று பார்த்துக் கொண்டார்! பவானியை விட்டு நீண்ட தூரம் போகாமல் அவளைக் கூடக் கூட அழைத்துக் கொண்டார்.நல்லவேளை, அவளைப் பள்ளி செல்ல விடவில்லை நான்! இப்போது எங்களுக்குள் இருக்கும் நல்லெண்ணத் தூதர் அவள்தான்! அவளை வைத்துதான் இந்த இடைவெளி குறைக்கப்பட வேண்டும்.

'சட்'டென இயல்பு நிலைக்குத் திரும்புவதுதான் எங்கள் இருவருக்குமே நல்லது என்று தோன்றியதால் ஏதோ மனதில் திடீரென அந்த தைரியம் தோன்ற ஒரு தட்டில் சூடாக ஆப்பங்கள் எடுத்துப் போட்டு, ஒரு பீங்கான் கிண்ணத்தில் பாயாவைப் போட்டு எடுத்துக் கொண்டு இயல்பாக அப்பாவிடம் நடந்தேன். "ஏய் வாலு.... தள்ளுடி... தாத்தா சாப்பிடணும்.... அப்பா.... இந்தாங்கப்பா... இதைப் பிடிங்க...." அவர் மறுக்குமுன் அவர் கையை இழுத்து ஒரு 'மக்'கில் நீட்டி டம்ப்ளரில் இருந்த தண்ணீரை ஊற்றி கை கழுவ வைத்தேன். டீபாய் மேல் ஆப்பத் தட்டை வைத்து சேரை எடுத்து எதிரே போட்டேன்.

அந்த தைரியம் எப்படி வந்தது என்று எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. காரணம் வீட்டை விட்டு வந்த அந்த நிகழ்வும், அதன்பின் அவரின் கோபமும்! யோசித்துப் பார்க்கும்போது வீட்டில் இருந்த நாட்களில் கூட இந்த வேலை நான் செய்தது இல்லை. பாட்டிதான் செய்வாள். குழந்தையாய், மகளாய் நான் எதிரே இருப்பேன். அவ்வளவுதான்!  

என்னதான் கோபமிருந்தாலும் அப்பாதானே என்ற சொந்தம் தந்த உணர்வு மட்டுமில்லை, அவரின் கோபம் நிறையவே கரைந்து போயிருந்தது என்பதும் தெரிந்துதானே அவர் கையில் இந்த முகவரி கிடைக்கச் செய்தார் அவர்!

எதுவும் சொல்லாமல் அவர் வந்து உட்கார்ந்தபோது மனம் நிம்மதியடைந்தது. கண்கள் கலங்க முயற்சிப்பதைக் கட்டுப் படுத்தினேன்.

"நானும்.... நானும்..... நானும் சாப்பிடணும்.....எனக்கு..." என்று பவானி அந்தத் தட்டிடம் ஓட, எனக்கு பதற்றம் கலந்த கோபம் வந்தது. 

'கெடுத்துடுவா போலேருக்கே... இவ கிட்டக் கொடுத்துட்டு ஒதுங்கிடப் போறார்....'  
                                                                                                                          
                                                                                                                                 (தொடரும்)  


படங்கள் உதவி : நன்றி இணையம்.
                    

சனி, 22 செப்டம்பர், 2012

பாசிட்டிவ் செய்திகள் இந்த வாரம் 16/09 To 22/09/12


திண்டுக்கல் மேட்டுப் பட்டியைச் சேர்ந்த மிக்கேல்-சந்தியாகு அம்மாள் புதல்வர் நீதியரசர் எம் லியோ இத்தாலி வாடிகன் கத்தோலிக்கத் திருச்சபை உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக இருக்கிறார். பெற்றோர் இருவரும் ஆசிரியர்கள். நல்லாசிரியர் விருது பெற்ற தந்தை. விடுமுறையில் தமிழகம் வந்திருக்கும் இவர் பற்றி தினமணி கட்டுரை வெளியிட்டிருக்கிறது.

=============================


சாலையில் அடிபட்டுக் கிடப்பவரையோ மயங்கிக் கிடப்பவரையோ பார்த்துக் கடந்து செல்லும் எண்ணிறந்த நபர்களில் நானும் ஒருவன்தான். அப்படிச் செல்லாத, உடனே அவர்களைத் தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்து, அப்புறமும் ஆன உதவிகள் செய்து இன்னும் பல உதவிகள் செய்யும் உன்னத மனிதர் ஆனைக்குட்டி ஆனந்தன். மிக ஆரம்ப காலங்களில் பிறருக்கு உதவ வேண்டும் என்பதாலேயே மிகக் குறைந்த விலையில் சாலையோர டிபன் கடை வைத்தவராம் இவர்.1977 ல் இவர் ஒட்டிய ஆட்டோவின் பின்புறத்தில் இவரால் எழுதப் பட்ட 'பிரசவத்துக்கு இலவசம்' தான் அநேகமாக அந்தவகை இலவசங்களுக்கு முதலாம். இவரைப் பற்றியும் தினமணியில்...

========================== 

 
ஒரு ரூபாய்க் கூடக் கட்டணம் வாங்காமல், அதே சமயம் மாணவர்கள் ஒவ்வொருவர் பெயரிலும் ஒவ்வொரு லட்சம் இன்சுரன்ஸ் வங்கியில் போட்டும் ஆங்கில வழிக் கல்வியை போதிக்கும் பள்ளி. தமிழகத்திலேயே முதல் முறையாக சூரிய ஒளியில் மின்சாரம் பெற்று இயங்கும் பள்ளி. இத்தனை பெருமையும் பெற்றுள்ள பள்ளி திருவண்ணாமலை வேடப்பநூர் கிராமத்தில் உள்ள 'அருணாச்சலா வில்லேஜ் ஸ்கூல்'.  (முகப்புத்தகத்திலிருந்து)

=======================


கேரளாவில் பள்ளியில் பயிலும் குழந்தைகளை வைத்துத் தொடங்கப்பட்ட 'ஸ்டூடன்ட் போலீஸ் கேடட் ஆப் கேரளா' ஆரம்பத்தில் 120 மாணவர்களுடன் தொடங்கப்பட்டு இப்போது 16,000 மாணவர்களை வைத்து நடத்தப் படுகிறது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது, வனப் பாதுகாப்பு, விழாக்காலங்களில் பொது மக்கள் பாதுகாப்பு என்று வெற்றிகரமாக நடத்தப் படும் இத்திட்டத்தில் மாணவர்களுக்கு தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், உடற்பயிற்சி, கராத்தே, குங்க்ஃபூ , வாள் சண்டை, கலரி, வர்மக் கலை, யோகா என்று சகலமும் கற்றுக் கொடுக்கப் பட்டு மாணவர்களுக்கும் தன்னம்பிக்கை அளிக்கிறது. தமிழ்நாட்டிலும் பின்பற்றக் கூடிய நல்லதொரு திட்டம். (ஆனந்த விகடன்)

=============================


8695959595 ....... சென்னைக்குப் புதிதாக வரும் பலருக்கும் அவர்கள் போக வேண்டிய இடத்துக்கு இடங்களுக்குப் போகும் வழியைக் கூறும் நம்பர். பெயர் 'ரூட்ஸ்'. சென்னையில் எங்கு போக வேண்டுமானாலும் ரூட் இந்த நம்பரில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். (ஆனந்த விகடன்)

===========================


சென்னைப் பல்கலைக் கழக அரசியல் மற்றும் பொது நிர்வாகத்துறைத் தலைவர் பேராசிரியர் இராம மணிவண்ணன். வேலூரிலிருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் கணியம்பாடிக்கு அருகில் குரும்பப்பாளையம் என்ற கிராமத்தில் அமைதிப் பூங்கா என்ற பெயரில் ஆரம்பப் பள்ளி அமைத்து, யாரிடமும் எந்தக் கட்டணமும் வாங்காமல், மத்திய உணவு, பாடப் புத்தகம் எல்லாம் இலவசமாகத் தந்து படிக்க வைக்கிறார். எல்லாச் செலவையும் தன் சொந்த சம்பாத்தியத்திலேயே நடத்தும் இவரைப் பற்றி விளக்கமாக பேட்டி கண்டு எழுதி இருக்கிறது விகடன்.

==============================
======

மூணாறில் முப்பதடி ஆழம் கொண்ட, சுற்றுச்சுவர் இல்லாத கிணற்றில் விழுந்து அழுத மகனின் குரல் கேட்டுத் தவித்த சிறுவனின் தாய் சுஜா நீச்சல் தெரியாவிடினும் துணிச்சலாகக் கிணற்றில் குதித்து மகனை மீட்டு, அங்கிருந்த குழாயைப் பிடித்துப் போராட, ஊர் மக்கள் அவர்களை மீட்டனர்.

==========


வேலூர் 'உதவும் உள்ளங்கள்' தொண்டு அமைப்பு,  தெருவில் சுற்றிக்கொண்டிருந்த மனநலம் பாதிக்கப் பட்ட ஒருவரை மீட்டு சிகிச்சை அளிக்க, மெல்ல நினைவு திரும்பிய அவர் 26 ஆண்டுகளுக்கு முன் மன நிலை பாதிக்கப் பட்டு வீட்டை விட்டு வெளியேறிய நினைவுகள் வந்து, தன்னைப் பற்றிய விவரங்களைச் சொல்ல,  அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப் படார். பெயர் ஹிரேமட். அவர் ஒரு ஹோமியோபதி மருத்துவராம்.


====================

 

வியாழன், 20 செப்டம்பர், 2012

அலேக் அனுபவங்கள் 10 :: லஞ்ச எதிர்ப்பு!

                 
இது அசோக் லேலண்டு அனுபவம் இல்லை என்றாலும், அசோக் லேலண்டில் சேருவதற்காக, எனக்கு ஏற்பட்ட அனுபவம் என்ற வகையில் பகிர்கின்றேன். 
           
அசோக் லேலண்டு இண்டர்வியூ முடிந்து சில மாதங்கள் (!) கழித்து, என்னை, இங்கே குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களுடன், டிசம்பர் இரண்டாம் தேதி (1971) வந்து பார்க்கும்படி, கடிதம் எழுதியிருந்தனர். 
 
ஒன்று: மார்புப் பகுதியின் எக்ஸ் ரே படம். 
இரண்டு : வாக்சினேஷன் சான்றிதழ். 
மூன்று : டிப்ளோமா சான்றிதழ் மற்றும் மார்க் ஷீட் ஒரிஜினல். 
                       
அண்ணனுக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் மூலமாக, கீழ்ப்பாக் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடலில், டாக்டர் ப்ரிஸ்க்ரிப்ஷன் இல்லாமல், எக்ஸ் ரே (அதற்குரிய கட்டணத்துடன்தான்!)  எடுத்துக் கொண்டேன். நாங்கள் கேட்காமலேயே அதில் ஒரு ரிப்போர்ட் வேறு - கவர் மீது ஒட்டிக் கொடுத்துவிட்டார்கள். அதிலே பார்த்தால் - எனக்கு பிராங்கிடிஸ் இருப்பதாக கண்டுபிடித்து எழுதியிருந்தார் யாரோ ஒருவர். ('என்னை நீ முன்னே பின்னே பாத்துருக்கியா ஐயா? அப்புறம் ஏன் இந்தக் கொலை வெறி!') 
                  
நான் அந்த ரிப்போர்ட்டைப் பார்த்த பிறகு, என்னுடைய கனவில் அடிக்கடி வியட்நாம் வீடு சிவாஜி வந்து இரத்தம் கக்கியபடி " நா  ம ஒண்ணு நெனச்சா தெய்வம் வேறு நெனைக்குதே  .... நாம என்னப்பா பண்ணமுடியும், என்ன்ன்ன.......ப்ப்ப்பா பண்ண முடியும் ....." என்று வசனம் பேசி மார்பைப் பிடித்துக் கொண்டு 'லொக்கு லொக்கு ..' என்று இருமினார்! !   
                
சரி எப்படியோ போகட்டும் (எப்படிப் போனது என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்!) - அடுத்த விஷயம் இன் தி அஜெண்டா ஈஸ் - வேக்சினேஷன் சான்றிதழ். 
                 
எனக்கு வேக்சினேஷன் செய்யப்பட்டது, கடலூரில் ரெட்டிச் சத்திரத் தெருவில், குடியிருந்த வீட்டில், நான் தவழ்ந்து முடிந்து, தத்தித் தத்தி நடக்க ஆரம்பித்திருந்த நாட்களில். அப்போ யாரோ வீட்டுக்கு வீடு வந்து, குழந்தைகள் எல்லோரையும் கட்டாயப் படுத்தி அம்மை ஊசி குத்தி சென்றார்கள் என்று அம்மா சொன்ன ஞாபகம். அது மட்டும் அல்ல, அம்மை ஊசி குத்தப்பட்ட இடம் கையில் (இரண்டு கைகளிலும்) புஜ பல பராக்கிரமன் போல வீங்கிக் கொண்டு, என்னுடைய அம்மா ரயில் ஓடு, மண்டை ஓடு என்று கிடைத்த ஓடுகளை எல்லாம் இழைத்து போட்டு அந்தக் காயங்களை ஆற்றினார்கள் என்பதும் வரலாறு. தினமும் நான் வலி பொறுக்காமல் அழும்போதெல்லாம், அம்மா அம்மை ஊசிக் குத்தியவர்களை அர்ச்சனை செய்துகொண்டே இருப்பார்கள். இப்போ போய் அவர்களைப் பார்த்து எனக்கு வேக்சினேஷன் சான்றிதழ் வேண்டும் என்று கேட்டால் - அவர்கள் என்னை துரத்தித் துரத்தி அடிக்க மாட்டார்களோ! 
           
புரசைவாக்கத்தில், எதிர் போர்ஷனில் குடியிருந்த எவர்சில்வர் கோபால் (பெரம்பூர் பாரக்ஸ் ரோடில் எவர்சில்வர் பாத்திரங்கள் செய்கின்ற சிறிய தொழிற்சாலை வைத்திருந்தார்) எளிய யோசனை ஒன்று கூறினார். 'கங்காதீஸ்வரர் டாங்க் பக்கத்தில் சென்னை கார்ப்பொரேஷன் ஹெல்த் செண்டர் ஒன்று இருக்கின்றது. அங்கே போய் சுலபமாக சான்றிதழ் பெற்று வரலாம்' என்றார். 
                   
நவம்பர் இருபத்தொன்பதாம் தேதி, திங்கட்கிழமை. காலை இராகு காலத்தில், அந்த அலுவலகம் சென்றேன். அங்கே ஒரு செவிலி உள்ளும் புறமும் வேகமாக நடந்துகொண்டே இருந்தார். எதையோ எடுத்து வருவார். அதை வைத்துவிட்டு வேறு எதையோ எடுத்துச் செல்வார். முகத்தில் ஒரு கடு கடு. என்னைப் பார்த்ததும், "என்ன வேண்டும்?" என்று கேட்டார், கடு கடு குறையாமல். 
            
நான் சற்றுத் தயக்கமாக, 'வேக்சினேஷன் சர்டிபிகேட்' என்றேன். 
"எப்போ அம்மை குத்திகிட்டே?"
"ரொம்ப நாள் (!) முன்னாடி."
"எங்கே?"
"கையில" 
"அத்த கேக்கல ... எந்த ஊருல?"
"க .. க ... கடலூருல ...."
"வெளையாடுறியா? இங்க குத்திகினாதான் நாங்க சர்டிபிகீட்டு அல்லாம் குடுப்போம்."
"சரி. குத்திக்கிறேன்."
" செத்த நேரம் குந்து. ஆபீசரு ஒம்பது மணிக்கு வருவாரு. அவரு சொன்னாதான் குத்துறது, சர்டிபிகேட்டு எல்லாம்...."
குந்தினேன். 
ஆபீசர் வந்தார். நீல பாண்ட் வெள்ளை சட்டை. நர்சிடம், என்னைக் காட்டி ஏதோ கேட்டார். நர்ஸ் ஏதோ ஜாடை காட்டி ரகசியமாக கூறினார். ஆபீசர் ஜாடை காட்டி என்னை தன் மேஜைக்கருகே அழைத்தார். சென்றேன். பேரு என்ன? எங்கேயிருந்து வாறீங்க? விலாசம்? போன்ற கேள்விகளுக்கு பதில் சுலபமாக சொல்லிவிட்டேன். 
"வேலை பாக்குறீங்களா?"
"இல்லை."
"எதுக்காக சர்டிபிகேட்டு?" 
(மாட்டிகிட்டேனோ? - அசோக் லேலண்டில் வேலையில் சேர என்று சொன்னால் - முதல் மாத சம்பளத்தை லஞ்சமாகக் கேட்பாரோ என்றெல்லாம் பயம் வந்துவிட்டது.) 
"வேலை தேடி அலைந்து கொண்டிருக்கின்றேன். இண்டர்வியூ செய்பவர்கள் என்னுடைய எல்லா சர்டிபிகேட்டுகளையும் பார்க்க ஆசைப் படுகின்றார்கள். வேக்சினேஷன் சர்டிபிகேட் மட்டும்தான் இல்லை; மீதி எல்லாம் இருக்கு. அதனாலத்தான் ..." என்றேன். அவர் நம்பியதாகத் தெரியவில்லை. 
"இங்கே யாரோடு தங்கி இருக்கின்றீர்கள்?" 
"அண்ணனோடு."
"அவர் எங்கே வேலை பார்க்கின்றார்?"
"கீழ்ப்பாக் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல்."
"டாக்டரா?"
"இல்லை"
கொஞ்ச நேரம் என் முகத்தைப் பார்த்தார். நானும் பேசாமல் அவர் முகத்தைப் பார்த்தேன். சரி இந்த ஆளை வேறு விதத்தில் மடக்கலாம் என்று தீர்மானித்து விட்டார் போலிருந்தது. 
"இன்றைக்கு வேக்சினேஷன் போட்டுகிட்டா அடுத்த வாரம்தான் சர்டிபிகேட் கிடைக்கும்."
பதறிப் போய்விட்டேன். "இல்லை சார். எனக்கு இன்றைக்கே சர்டிபிகேட் வேண்டும்."
அவர் வெற்றிப் புன்னகையுடன், "அதற்கு பீஸ் கொடுக்கணும்" என்றார். 
"எவ்வளவு?" என்றேன். 
அவர் கண்களைத் தாழ்த்தி ... "ஏதோ நீங்க இஷ்டப்பட்ட அமௌண்ட்..." என்றார். 
அப்போதான் எனக்கு, 'இது சம்திங் விவகாரம்'  என்று தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. சென்னை மாநகரத்திலே எனக்கு அறிமுகமான முதல் லஞ்ச லாவண்ய நிகழ்வு இதுதான். 
"ஓ கே" என்றேன். 
அவர் சந்தோஷமாக, "போய் வாக்சினேஷன் குத்திக்குங்க. நான் சர்டிபிகேட் தாறேன்." என்றார். 
என் சட்டைப் பையில் அப்பொழுது இருந்தது ஒரே ஒரு எட்டணா காசுதான். ஆனாலும் என்ன தைரியம்! 
நான் ஆறாம் கிளாஸ் படிக்கும் பொழுது கூட அம்மை ஊசி குத்திக் கொண்டது அப்போ ஞாபகம் வந்தது. கையில் முழங்கை பகுதி மடியும் இடத்தில், இரண்டு இடங்களில் ஓரங்குல இடைவெளியில் அம்மைப் பால் வைப்பார்கள். பிறகு சின்னச் சின்ன ஊசியாக கால் அங்குல வட்டத்தில் அமைந்த ஓர் ஊசியை அம்மைப் பால் புள்ளிகளுக்கு மேலே வைத்து, கொஞ்சம் அமுக்கி ஒரே ஒரு சுற்று சுற்றுவார்கள். லேசாக எறும்பு கடித்தது போல இருக்கும். அவ்வளவுதான். 
கடு கடு நர்சும் இப்படிச் செய்வார் என்று (நம்பி) கையை நீட்டினேன். 
இரண்டு சொட்டு அம்மைப் பால் வைக்கும் வரை எல்லாம் எதிர்பார்த்தபடி நடந்தது. 
அப்புறம் ..... ஐயோ கொடுமை! கூரான கோணூசி (போன்ற) ஒன்றை எடுத்துக் கொண்டு, 'சைக்கோ' படத்தில் நடக்கின்ற கொலை போல, 'சதக், சதக், சதக்' என்று ஒவ்வொரு இடத்திலும் ஐந்து சதக்குகள் ... குத்திவிட்டார் கடு கடு. 
   
'ஹூம் முன்பாவது எட்டணா கொடுக்கலாம் என்று நினைத்தேன் - பாவிகளா - இந்த சைக்கோ கொலைக்கு நான் ஒன்றும் தரமாட்டேன்' என்று முடிவெடுத்தேன். 
நர்ஸ் சென்று, ஆபீசர் தயாராக வைத்திருந்த சர்டிபிகேட்டைக் கொண்டு வந்து கொடுத்தார். 
             
அதை நான்காக மடித்து, பாண்ட் பைக்குள் பத்திரமாக வைத்துக் கொண்டு, "தாங்க்ஸ்" என்று கூறியபடி, வாயிலை நோக்கி வேகமாக நடந்தேன். 
ஆபீசர், நர்சிடம், 'என்ன சொல்லிவிட்டுப் போறாரு அந்த ஆளு?' என்று கேட்டது மங்கலாகக் காதில் கேட்டது.  
              
நர்ஸ் ஏதோ சொல்லிவிட்டு, 'துரத்திப் பிடிக்கட்டுமா' என்று கேட்டது போல இருந்தது.   
            
"வேண்டாம் - போகட்டும். விட்டுடுங்க...." 
                   

புதன், 19 செப்டம்பர், 2012

'மெய்யாலுமே' எவ்வளவு சுவாரஸ்யங்கள்?"நம்ம ஊர் கர்நாடக இசையில் வயலினுக்கு எந்த அளவு முக்கியத்துவமோ, அதே முக்கியத்துவம் ஹிந்துஸ்தானி இசையில் சாரங்கிக்கு உண்டு. சாரங்கி என்றால் எந்தவிதமான இசையையும் இசைக்கும் தன்மை உடையது என்று பொருள். சாரங்கி என்கிற இசைக்கருவி நேபாளத்தில் மிகவும் பிரபலம். அங்கே மூங்கிலிலிருந்து தயாரிக்கப்படும் இந்த இசைக் கருவி, பஞ்சாபில் மரத்தில் செய்யப் படுகிறது. இரண்டடி நீளமும், அரையடி அகலமும் உள்ள சாரங்கி என்கிற இசைக்கருவியில் மூன்று அறைகள் உண்டு. கீழே இருக்கும் அறையில் வாய்ப் பாகம் செம்மறி ஆட்டின் தோலால் மூடப் பட்டிருக்கும். கீழே இருக்கும் பகுதியையும் மேலே இருக்கும் அறையையும் ஒட்டகம் அல்லது எருமைத் தோலாலான பட்டையான பாலம் போன்ற அமைப்பு இணைக்கிறது.  அதற்கு மேலே 35 அல்லது 37 தந்திகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. அந்தத் தந்திகளில் குதிரை வால் முடியாலான வில்லின் மூலம் இசைக்கப்படுவதுதான் சாரங்கி என்கிற வாத்தியம். 

ராக்ஸ்டார் இந்திப்படத்தில் கவிதா கிருஷ்ணமூர்த்தி பாடும் 'தும்கோ' பாடலில் ஏ. ஆர்  
ரஹ்மான், தில்ஷத்கான் வாசித்த சாரங்கி இசையைப் பின்னணி சேர்த்திருப்பார்........ 

=========================

புத்த மதத்தைத் தழுவிய இரண்டு இந்தியப் பேரரசர்கள் அசோகரும், ஹர்ஷவர்த்தனரும். 
              
முதலாமவர் கிறிஸ்து பிறப்பதற்கு 304 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர் என்றால், பின்னவர் 590 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்தவர். முன்னவர் ஆப்கானிஸ்தானிலுள்ள இந்துகுஷ் மலைத் தொடர்ச்சியிலிருந்து குமரி முனை வரை ஆண்ட முதல் சக்கரவர்த்தி என்றால், இரண்டாமவரோ, குஜராத்த்திலிருந்து அஸ்ஸாம் வரை, இமயமலையிலிருந்து விந்தியமலை வரை ஆண்ட மாமன்னன். 
           
முதன்முதல் கடல்கடந்து போய் புத்தமதத்தைப் பரப்ப வழி கோலியவர் அசோகன். முதன்முதலில் கி பி 641 ல் சீனாவுடன் ராஜாங்க ரீதியாக உறவு வைத்துக் கொள்ள வழிகோலியவர் ஹர்ஷவர்த்தனர். இன்றும் பல மாநிலங்களில் இந்த இரண்டு மாமன்னர்களின் பராக்கிரமத்தின் மீதுள்ள மரியாதையால் இருவருடைய பெயரையும் இணைத்துப் பலர் தங்கள் குழந்தைகளுக்குப்பெயர் சூட்டுகிறார்கள்.........


==================
   
மேலே உள்ளது தினமணியில் புதன்தோறும் 'மெய்யாலுமா' என்ற தலைப்பில்  தமிழகத்தின் அரசியல் தகவல்களை மறைமுகமாகச் சொல்லும் பகுதியில் வந்ததன் பகிர்வு!  தகவல்களை என்று சொல்வதை விட ரகசியங்களை என்று சொல்லலாம்! சொல்ல வரும் விஷயம் என்னமோ வேறு. அதை ஆரம்பிக்கும்போது இந்த விவரங்கள் / இத்தனை விவரங்கள்! இதிலிருந்து பின்னர் வரப்போகும் கிசுகிசுவில் வரப்போகும் நபர் யார் என்று அறிந்து கொள்ளக் கொஞ்சம் ஏதுவாக இருக்கும் என்றாலும் இதைப் படிக்கவே சுவாரஸ்யமாய் இருக்கிறதே!   


இதில் வரும் தகவல்கள் மிகவும் நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து திரட்டப் படுபவை என்று தினமணி எடிட்டர் திரு கே வைத்தியநாதன் அவர்கள் முன்பு ஒருமுறை சொல்லியிருந்தார். தினமணியில் முதலில் இந்தப் பகுதி சனிக்கிழமைகளிலோ, அல்லது ஞாயிற்றுக் கிழமைகளிலோ வந்து கொண்டிருந்தது! இப்போது புதன் கிழமைகளில்.  சுவாரஸ்யமான பகுதி. 

இதே போன்று அந்தக் காலத்தில் கிசு கிசுக்கள் ஆரம்ப காலத்தில் குமுதத்தில்தான் வந்ததாக நினைவு. வேறெதிலும் வந்ததா தெரியவில்லை! கிசுகிசுவில் சொல்லப் பட்டிருக்கும் மறைமுகத் தகவல்களுக்கு சம்பந்தப் பட்டவர்கள் குமுதத்தின் அடுத்தடுத்த இதழ்களில் பதிலும் சொல்லியிருக்கிறார்கள்.

 


                                                         


1972 களில் குமுதத்தில் வந்த, பேராசிரியர் க. அன்பழகனின் கடிதம் ஒன்று கீழே! இது கிசுகிசுவில் சம்பந்தப் பட்டது இல்லையென்றாலும், 'சொன்னார்கள்' என்ற பகுதியில் வந்த இது சுவாரஸ்யம் கருதிக் கீழே பகிரப் படுகிறது!


"குற்றச்சாட்டுகளுக்கு பதில் தந்தால் இவ்வளவு பெரிய விளக்கமா என்று கேட்கிறார் எம் ஜி ஆர். உன் முட்டாள்தனமான மூளைக்கு உரைக்கும்படியாகவே பதிலைத் தந்திருக்கிறோம்!"

துகுறித்து சொல்லியிருக்கிறார் என்று சொல்லத் தேவையில்லை!! 

எதுவும் புதுசு இல்லை போல!  
                   

திங்கள், 17 செப்டம்பர், 2012

இப்படியும் ஒரு வெற்றி பெற்ற காதல் கதை! சற்றே நீண்ட சிறுகதை 1

                                                                 [ 1 ]

அப்பா என்னைப் பார்க்க வரப் போகிறார் என்று தெரிய வந்த போதே இதயம் எதிர்பார்ப்பில் துடிக்க ஆரம்பித்து விட்டது. கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்குப் பிறகு என்னை, இல்லை இல்லை எங்களைப் பார்க்க வருகிறார்! அவர் வரப்போவது எங்களுக்கு, எனக்குத் தெரியும் என்பதும் அவருக்குத் தெரியாது. அவரை இப்போது இங்கு வரவைத்தது நாங்கள்தான் என்பதும் அவருக்குத் தெரியாது.  எல்லாக் க்ரெடிட்டும் என் கணவருக்குத்தான் சேர வேண்டும்.

காதல் கணவர். நாங்கள் ஓடிவந்த ஜோடி!

காதலில் வெற்றி பெறுவது என்றால் கல்யாணத்தில் முடிவது மட்டும்தான் என்ற கருத்தில் எனக்கும் சரி, என் கணவருக்கும் சரி, உடன்பாடில்லை. வாழ்நாள் பூரா உடன் வரப் போகும் துணைதான். அதற்காகப் பெற்று வளர்த்தவர்களைத் துறப்பது என்பதில் இருவருக்குமே உடன்பாடில்லை என்பது எத்தனை பேருக்குக் கிடைக்கும் வாய்ப்பு? இதோ.....  கார் வந்து நிற்கிறது. அப்பா இறங்கி வீட்டை, சுற்றுப்புறத்தை ஒரு நோட்டம் விடுகிறார். மெல்ல, மெல்ல அவர் பார்வை எல்லா இடத்தையும்,  வீடு உட்பட,  அளவெடுக்கிறது. அதிருப்தி இல்லை முகத்தில்.

உள்ளே நுழையும்போது சிறிய தயக்கம் இருக்கும் என்று எதிர்பார்த்திருந்தேனானால் ஏமாந்தே போனேன். கம்பீரமாக உள்ளே வந்து ஜம்மென்று ஸோஃபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தார். டிரைவர் ஒரு சிறிய பார்சலை தூக்கி வந்து அவர் அருகில் வைத்து விட்டுப் போனான்.

கணவரின் பி.ஏ இன்டர்காமில் அழைத்ததும் நான் கீழே இறங்கினேன்.  பி.ஏ  சொல்லிக் கொண்டு கிளம்பினார். இதுவரை ஒரு திட்டமிட்ட காட்சி போல நடந்தது  இனி நடக்கப் போவது கைக்கு மீறிய காட்சி போல மனதில் பட்டு நடையில் தயக்கம் வந்தது.படி இறங்கும்போதே என்னைக் கவனித்து விட்ட அப்பா முகத்தில் மாறுதல் ஏதாவது தெரிந்ததா.... கவனிக்க முடியாத தயக்கம்  

"காரியத்தைக் கெடுத்துடாத கயல்..... புதுசா தெரியறா மாதிரி நடந்துக்கோ.... உன் சாமர்த்தியம்தான்..." - மனம் 

இயல்பை விட சற்று வேகமாகவே நடந்து ஆர்வப் படபடப்பைக் காட்டுவதற்கு நடிப்புத் தேவைப் படவில்லை. பாசம் தானாகவே கொண்டு வந்தது.

"அப்பா..... வாங்கப்பா..... வாங்க.... எப்படிப்பா...." வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாறி அங்கிருந்த நாற்காலியின் கைகளைப் பிடித்து நின்று விட்டு மெல்ல அவர் எதிரே அமரப் போனவள் 'சட்'டெனத் தோன்றி அவர் கால்களில் விழுந்தேன். சாதாரண சமயங்களில் என்னுடைய இயல்புக்கு செயற்கையாகத் தோன்றும் இந்தச் செயலை இந்த சமயத்தில் என்னை மீறி நானே எப்படிச் செய்தேன் என்று ஆச்சர்யமாக இருந்தது.

என்னைப் பற்றியே நான் இன்னும் முழுதாக உணரவில்லை போலும்!

இன்னமும் அப்பா பேசவில்லை. எழுந்து அவர் அருகில் உட்காரும் முடிவை மாற்றிக் கொண்டு எதிரில் அமர்ந்தேன்.

"நல்லா இருக்கீங்களாப்பா...."

"ம்....."

"என்னைப் பார்க்கத்தான் வந்தீங்களாப்பா....?" வார்த்தைகளில் தவறாக ஏதும் தொனி வந்து விடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு உடனே தோன்ற, "வேற ஏதும் வேலையா வந்தீங்களாப்பா.... அட்ரஸ் எப்படிக் கிடைச்சுது?

"குழந்தை எங்கே..."

"அப்பா.... !"

ஒரு பெண்தானே உனக்கு.... எங்கே அவள்..."

"அப்பா.... உங்களுக்கு....உங்களுக்கு எப்படி தெரியும்?"   என் நடிப்பின் மீது எனக்கே திருப்தி இல்லை.

உள்ளே திரும்பி "குட்டிப்பொண்ணு..." என்று கூப்பிட்டேன்.

"எஸ் மம்மி.....ஐம் கமிங் மம்மி..." குரல் மட்டும் வந்தது. அவள் வர இன்னும் சில நிமிடங்களாகும். ஒரு குரலில் அவள் வந்தால் அது வரலாறு!

அப்பாவின் பார்வை அலைந்தது. எதிர்பார்ப்பைக் கண்டிப்பான பார்வை போலக் காட்டினார். "ம்... வரச்சொல்லு..." அவரின் அந்த செயற்கையான மிடுக்கு எனக்கு தங்கப்பதக்கம் சிவாஜியை நினைவுபடுத்தியது.

"சொல்லுங்கப்பா.... எங்கேருந்து வர்றீங்க.... (தெரியும்!) எப்போ சாப்பிட்டீங்க.... இன்னிக்கி யதேச்சையா உங்களுக்குப் பிடிச்ச ஆப்பமும் பாயாவும்பா.... வாங்க சாப்பிட்டுகிட்டே பேசலாம்..."

"நான் சாப்பிட வரலைம்மா... இந்தப் பக்கமா வந்தேன்... காதுல பட்ட நியூஸ் சரிதானான்னு பார்த்துப் போக வந்தேன்..." ஓடிவந்த பவானியைக் கண்டு அவர் கண்கள் விரிந்தன.  தன்னை மீறி தன் கைகளை நீட்டினார்.

ஓடிவந்த பவானி என்மேல் விழுந்து "மா....மா...  அங்க... அங்க...  அந்த ராபின் இல்லை..." என்று ஏதோ செய்தி சொல்லத் தொடங்கியவள் அப்பாவைக் கண்டதும் மகிழ்ந்து போனாள்...

"ஹை..... தாத்தா.... அம்மா!  எப்போ வருவார்னே தெரியாதுன்னு சொன்னே.... என்னைப் பார்க்க வந்துட்டார்...   தா.....த்தா...."

நான் செய்யத் தயங்கிய செயலை என் மகள் செய்தாள். ஓடிப் போய் அவர் மடி மீது விழுந்தாள். எனக்குப் பொறாமையும் ஏக்கமுமாக இருந்தது. நான் அங்கே உட்கார்ந்திருந்து அவர் கைகளுடன் என் கைகளைக் கோர்த்துக் கொண்டு அவர் அன்பை அனுபவித்திருக்க வேண்டும். ஒரு கையால் தலையை மென்மையாகக் கோதுவார். செய்தார்.

உடனடியாக என் கண்கள் கலங்கின. பவானியின் தலையிலிருந்து கைகளை எடுத்து அவளைத் தூக்கி மடியில் உட்கார வைத்தவர் "உன் பேர் என்னடா...." என்றார் கரகர குரலில். உணர்ச்சிகளை அடக்க அவர் பாடுபடுவது புரிந்து எனக்கு மூச்சடைத்தது. "என் பேரு பவானி தாத்தா.... உனக்கு இது தெரியாதா...."

அது பாட்டியின் -  அவர் அம்மாவின் பெயர். அவர் 'சட்'டென என்னை நிமிர்ந்து பார்த்தார்.  என்னை மீறி, என் கட்டுப் பாட்டை மீறி என்னிடமிருந்து அந்த விம்மல் புறப்பட்டது. அதற்கு மேலும் தாங்க முடியாமல் எழுந்து வேகமாக அவர் அருகில் சென்று உட்கார்ந்து அவர் கைகளை எடுத்துக் கோர்த்துக் கொண்டு "அப்பா..." என்றேன். அதற்கு மேல் பேச முடியவில்லை.

கட்டுப்பாடுகள் உடைய,  அவர் கண்களும் கலங்கின. "ஏம்மா....நானா வந்து பார்த்தாதான் இல்லே...." என்றார்.

"அப்பால்லாம் அவ்வளவுதான் இல்லே...."

"அப்படிச் சொல்லாதீங்கப்பா... உங்களைப் பற்றி நினைக்காத நாளில்லை தெரியுமா..."

"ஹூம்....." விரக்தியாகச் சிரித்தவர் "எல்லோரும் சொல்றதுதானேம்மா.... நீ மட்டும் மாத்தியா சொல்லப் போறே..."

என் வழக்கமான பேச்சு என்னிடமும் திரும்பத் தொடங்கியது.                                                                                                                      -தொடரும்-

சனி, 15 செப்டம்பர், 2012

பாசிட்டிவ் செய்திகள் 9/9/12 To 15/9/12(முகப் புத்தகத்திலிருந்து)
                  
ஈரோட்டைச் சேர்ந்த ஆனைக்கல்பாளயத்தைச் சேர்ந்த கண்பார்வை இல்லாத முதியவர் பழனிச்சாமி 50 ஆண்டுகளாக மாடு மேய்த்து, நம்பிக்கையாகத் தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்து வருகிறார்.    
================
                      
நெருக்கடி மிகுந்த உ.பி மாநிலம் வாரணாசி பகுதியில் சிறிய அறை கொண்ட வீட்டில் வசித்தவர் கோவிந்த் ஜெயிஸ்வால். இவரின் அப்பா ஒரு ரிக்ஷா  ஓட்டுனர். வீட்டைச் சுற்றி தொழிற்சாலைகளின் புகை, பதினாலு மணி நேர மின்வெட்டு எல்லாவற்றையும் வென்று ஐ ஏ எஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.(தினமலர்)           
===========
                   
சமீபத்திய கலவர பூமி அசாம் மாநிலத்தில் அங்குள்ள கோல்பரா மாவட்டத்தில் மட்டும் அமைதி மற்றும் பாசிட்டிவ் நியூஸ்! அந்த மாவட்டத்தில் உள்ள ஜெய்பும் கிராமத்தில் உள்ள காமாக்யா இந்துக் கோவிலை எந்த வித சேதாரமும் இல்லாமல் பாதுகாத்தது வருவது அங்கு பெருமளவில் உள்ள முஸ்லிம் மக்கள். அந்தக் கோவிலின் புரோகிதர் முகுந்த் பர்மன் மற்றும் அவரது குடும்பத்தினரையும் எல்லாவிதமான சூழ்நிலைகளிலும் பத்திரமாகப் பாதுகாத்து வருகின்றனர். அந்தக் கிராமத்தில் உள்ள ஒரே இந்துக் குடும்பம் அவர்கள்தானாம்.              
==================
                
தவிர்க்க முடியாமல் ஒரு வெளிநாட்டு நியூஸ்: தற்கொலை செய்ய முயன்று ரயில் தண்டவாளத்தில் குடித்து விட்டுப் போய்ப் படுத்துக் கொண்ட எஜமானனை அவன் வளர்த்த நாய் தூரத்தில் ரயில் வருவதைக் கவனித்து விட்டு, கவ்வி இழுத்து ஓரமாகத் தள்ளிக் காப்பாற்றி, தான் நகரமுடியாமல் ரயிலால் மோதப் பட்டு,  உயிரிழந்தது. (தினமலர்)   
=====================
135 மணி நேரம் தொடர்ந்து தமிழ்ப்பாடல்களைப் பாடி சாதனை செய்துள்ளார் திரைத்துறையில் ஆர்வமுடைய, சென்னையை அடுத்த செஞ்சியில் விஸ்வம் கம்யூநிகேஷனில் டிப்ளமா படித்த திரு பி ரஹிமான். உலக அளவில் அதிக நேரம் தொடர்ந்து பாடியுள்ளதால் அசிசிஸ்ட், யுனிக் மற்றும் லிம்கா சாதனைகள் அவரை உடனடியாக அங்கீகரித்துள்ளன.    
==========================
                 
ஜனவரி முதல் சென்னை - பெங்களுரு டபிள் டெக்கர் ரயில். இந்தியாவின் முதல் டபுள் டெக்கர் ரயில் கொல்கத்தா மாநிலம் ஹௌரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் இடையே கடந்த 2011 ல் தொடங்கப் பட்டது. சதாப்தி ரயிலை விட பயண நேரம் ஒரு மணி நேரம் அதிகமாக இருக்கும். சதாப்தியில் 510 ரூபாய் கட்டணம், பிருந்தாவன் சேர் காரில் 386 ரூபாய்க் கட்டணம். இதில் 370 ரூபாய்க் கட்டணமாக தற்சமயத்துக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளதாம்.    
=====================
                    
சென்ற வாரம் நம் நாட்டுக்கு வந்த Boeing 787 விமானம் சென்னை, டெல்லி, மற்றும் சென்னை பெங்களுரு வழி தடங்களில் பறக்கப் போகிறது !    
=================== 


பிச்சைக்காரர்களின் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் உமா: நானும், என் கணவரும், 10 வயதிலிருந்தே நண்பர்கள். மற்றவர்களுக்கு உதவும் குணம், சின்ன வயதில் இருந்தே எங்கள் இருவருக்கும் உண்டு. கல்லூரிப் படிப்பு முடிந்த பிறகும் அது தொடர, தொண்டு அமைப்பை துவங்கி, அதன் மூலம் உதவி செய்யலாமே என, நண்பர்கள் கூறினர். அப்படி, 13 ஆண்டுகளுக்கு முன் உருவானது தான், "சுயம்' தொண்டு அமைப்பு. ஒரு கட்டத்தில் வாழ்க்கையிலும், இணைந்து விட்டோம்.கல்வி மற்றும் மருத்துவம் பற்றிய விழிப்புணர்வை, ஏழை மக்களுக்கு ஏற்படுத்துவது தான் முதல் கடமையாக எடுத்து செயல்பட்டோம். நூற்றுக்கணக்கான பேருக்கு கல்வி, மருத்துவ உதவிகள் பெற வழிவகை செய்தோம். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆளுமை திறன் பயிற்சி கொடுக்கிறோம். சிந்தாதரிப்பேட்டை அரசுப் பள்ளியில், 57 சதவீதமாக இருந்த தேர்ச்சி விகிதம், எங்கள் பயிற்சிக்குப் பின், 87 சதவீதமாக உயர்ந்துள்ளது.   
                         
முத்துராம்: கீழ்ப்பாக்கம், பிளாட்பார பகுதியில் உள்ள, பிச்சைக்கார குடும்பங்களின் வாழ்க்கையை, "நடைபாதை பூக்கள்' எனும் பெயரில், குறும்படமாக எடுத்தோம். கல்வி கிடைக்காததால், குழந்தைகள் பிச்சை எடுக்கும் அவலத்தை சுட்டிக் காட்டினோம். பலரிடம் இருந்து, நிதி உதவி கிடைத்தது. அதைக் கொண்டு, 20 குழந்தைகளை படிக்க வைத்தோம். ஆனால், தினமும் பள்ளி முடிந்ததும், அவர்கள் பிச்சை எடுக்கத்தான், செய்தனர். உண்டு, உறைவிடப் பள்ளியைத் துவங்கினால்தான், முழுமையாக மாற்ற முடியும் என தீர்மானித்து, பெரும் போராட்டத்திற்குப் பின், 2003ம் ஆண்டு, 30 குழந்தைகளுடன், "சிறகு மாண்டிசோரி' பள்ளி ஆரம்பமானது.தற்போது, 20 ஆசிரியர்களுடன், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு படிக்கின்றனர். இதில், 150க்கும் மேற்பட்ட மாணவர்கள், பிச்சைக்காரர்களின் குழந்தைகள். இனி, பிச்சைக்காரர்களின் குழந்தைகளும், டாக்டர், இன்ஜினியர், கலெக்டர் ஆவர்.            
                                   

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

எல் ஆர் ஈஸ்வரியும் கிரிக்கெட்டும் யூ டியூப் ஆங்கிலமும் - வெட்டி அரட்டை

           

சாதாரணமாகவே நல்ல விஷயங்கள் என் மண்டையில் அவ்வளவு சுலபத்தில் ஏறுவதில்லை.  அப்படியே ஏறினாலும் அங்கேயே நிலைத்து நிற்பதும் இல்லை. காலை உட்கார்ந்து உபாதான காரணம், ஸஹகாரி காரணம் நிமித்த காரணம் என்றெல்லாம் உருவேற்றிக் கொண்டிருந்தால் மனம் அதில் பதியவே இல்லை! மனோவும் எல் ஆர் ஈஸ்வரியும் விட்டால்தானே....  டிவியை அணைத்துத் தொலைத்திருக்க வேண்டும். ஜெயா டிவியில் மனதோடு மனோவில் இருவரும் உரையாடியதில் நினைவில் நின்றவை...

               

பட்டத்து ராணி பாட்டை எம் எஸ் வி இவருக்கு என்றே தெரிவு செய்து வைத்திருந்தாராம். ஸ்ரீதரோ அந்தப் பாடலை பி சுசீலாதான் பாட வேண்டும் என்று சொல்ல, வாதமாம். பி. சுசீலா பாடட்டும், ஆனால் அதற்கு வேறு டியூன் ரெடி செய்கிறேன் என்றாராம் எம் எஸ் வி. கடைசியில் ஈஸ்வரி பாடினாராம். ஹிந்தியில் இதை தர்த்தி என்ற பெயரில் எடுத்த போது இதே சீனில் பாட வேண்டிய லதா மங்கேஷ்கர் இந்த மாதிரி பாட முடியாது என்று சொன்னதையும், தமிழில் பாடியது யார் என்று கேட்டுக் கொண்டு சென்னை வந்தபோது சந்தித்ததையும் பெருமையாகச் சொன்னார். கீழ்ஸ்தாயியில் பாடிய காதோடுதான் நான் பேசுவேன் பாடலை, (அம்மம்மா கேளடி தோழி என்று இவர் பாடிய பாடலைக் கேட்டு விட்டு பாலச்சந்தர் கீழ் ஸ்தாயியில் பாடுவது போல இவருக்கு ஒரு பாடல் கொடுக்க வேண்டும் என்று பேசியே, அதனால் தரப் பட்ட பாடலாம் இது) பளிங்கினால் ஒரு மாளிகை பாடல, எல்லா மேடைகளிலும் இன்றும் பாடப் படும் துள்ளுவதோ இளமை பாடல, எலந்தப் பயம், மாரியம்மா பாடல்கள்  என்று எல்லாவற்றையும் நினைவு கூர்ந்தார். ஒவ்வொரு பாடலையும் பற்றிச் சொல்வதற்கு நிறைய விஷயம் வைத்திருந்தார்.     


=====================

            
நாம் இதுவரை பார்த்திராதவர்கள் தொலைபேசியில் பேசினால் குரலைக் கேட்கும்போது நம்மனதில் ஒரு கற்பனை உருவம் தோன்றும் இல்லையா? தோன்றும்தானே...? எனக்கும் தோன்றும். ஆனால் ஒருமுறை கூட கற்பனையில் தோன்றும் உருவமும், அவர்களை நேரில் சந்திக்கும்போது அவர்கள் இருக்கும் தோற்றமும் ஒத்துவந்ததே இல்லை! உங்கள் அனுபவம் எப்படியோ?             

=============================
               
சமீபத்தில் மூன்றாம் முறையும் ஸ்டம்ப் எகிறியதும் சச்சின் ஸ்டம்ப்களை அடிக்கப் போவது போல பேட்டை ஆட்டி வீட்டுச் சென்றார். வேறு யாராவது அபபடி செய்திருந்தால் அம்பயர் சொல்லி ஒழுங்கு நடவடிக்கைக் கூட எடுக்கப் பட்டிருக்கும்! ஏதோ சச்சின் என்பதால் கண்டு கொள்ளாமல் விட்டார்களோ என்னமோ.... முன்பு படித்த ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. 1950 களில் ஒரு பெயர் பெற்ற பேட்ஸ்மேன் (பெயர்தான் நினைவில்லை!) எல் பி டபிள்யூ என்று அவுட் கொடுக்கப் பட,  அது தவறான தீர்ப்பு என்று நினைத்த பேட்ஸ்மேன் கடுப்பானாராம். அம்பயரைய்த் தாண்டிச் செல்லும்போது "உங்கள் கையில் உள்ள குச்சி எங்கே" என்று கேட்டாராம். அம்பயர் புரியாமல் "இல்லையே... என்ன குச்சி" என்று குழம்ப, நாயை உள்ளே அழைத்து வர முடியாது, குச்சியாவது எடுத்து வந்திருக்கலாம்" என்று சொல்லி விட்டுப் போனாராம். அதாவது அம்பயர் கண் தெரியாதவர் என்று குறிப்பிடும் வகையில்!                   

===================
 
யூ டியூபில் வாசித்தது!Elephant has come to peal ant's skin!Mud pan hurt me My hand left that

Mind has got corrupted! It's touched my heart!
I found good and bad after everything had taken place!
God was watching half of the heart.
Animal dominated the balance of the heart.
The animal which dominated has got controlled.
Peaceful God stayed in full of my heart!
Shouting devils had run off. Temple bell's sound stayed in my heart!
There is bright light in the temple of charity God!
Heart has taken rest as Peace Peace Peace
Elephant has come to peal ant's skin!
Wisdom has come for me to peal my hearts skin and see
I got the heart which was there before I was born
I've got the peace that I'll get after death!
                     

வியாழன், 13 செப்டம்பர், 2012

தோனியும், சென்னை ரசிகர்களும், எதிர்வீட்டு நாயும்!
"சென்னை மேட்ச் பார்த்தீங்களா...?"

"ம்.....கெட்ட நேரம்.... எப்பவும் பார்க்க மாட்டேன்... அன்னிக்குப் பார்த்துத் தொலைச்சேன்!"

"எப்படி இருந்தது? அனாவசியமா தோத்துட்டோம்....!"

"யுவராஜ் மீண்டு வந்தது ரொம்ப சந்தோஷம். உடம்பு சரியில்லைன்னாலும் நல்லா விளையாடினார். கோஹ்லி பிரமாதப் படுத்தினார். என்ன, மத்தவங்க வந்து அடிச்சுடுவாங்கன்னு விட்டுட்டுப் போகக் கூடாது... தானே அடிச்சுடுவோம்னு பொறுமையா விளையாடியிருக்கலாம்.... ம்ஹூம்"

"என்ன பெருமூச்சு? ஒரே ரன்னுல தோத்ததா?"

"தோல்வியில் என்ன இருக்கு... ஏன் தோத்தோம்னு நினைச்சாத்தான்..."

 
 "தோனி விளையாடினதைப் பார்த்தீர்களா?"

"அவர் எங்கேங்க விளையாடினார்? சும்மாத்தானே நின்னுகிட்டிருந்தார்?"

"அப்போ அவர் விளையாடலைன்னு சொல்றீங்களா?"


"அபபடி இல்லை... விளையாடியிருந்தா நல்லாயிருக்கும்னு சொல்றேன்.."

"அதாவது நல்லா விளையாடியிருந்தா... இல்லையா?"

"ஒருவகைல நல்லாத்தான் விளையாடிட்டார்.... ரசிகர்களோட எதிர்பார்ப்போட நல்லா விளையாடிட்டார்"

"ம்ம்ம்ம்....ஏழு ஓவர்ல 49 ரன் வேணும்னு இருக்கும்போது உள்ளே வந்தார்..."

"என்னது.... இருபது ஓவர் மேட்சா... ? ஆட்டம் ஓவரா...! ஐம்பது ஓவர் மேட்ச்னு நினைச்சு இல்லே நின்னு விளையாடினேன்..." 


"கடைசி ஓவர்ல அவர் ஒரு Four அடிச்சவுடனே கவாஸ்கர் கூடச் சொன்னார் பார்த்தீங்களா....  He is a finisher னு... அதற்கு அர்த்தம் என்னன்னு இப்போதானே புரியுது... சென்னை ரசிகர்களோட எதிர்பார்ப்பை எல்லாம் Finish செஞ்சுட்டாரே..."

மீண்டு வந்த யுவராஜ்...

"அவங்களுக்கு ஒரே கொண்டாட்டம்... ஒரே ரன்... ஒரே ரன்ல ஜெயிச்சிட்டாங்க... T20 ல இதுவரை இந்தியா அவங்களை ஜெயிச்சதே இல்லையாமே... ஆட்டம் முடிஞ்சதும் அற்புதமான ஓவரைப் போட்ட அந்த பவுலரை விக்கெட் கீப்பர் ஓடிவந்து தூக்கிட்டான் பார்த்தீங்களா?"

"பார்த்தேன்.. பார்த்தேன்... அவனை ஏன் தூக்கினான்னுதான் புரியலை! தோனியை இல்லை தூக்கியிருக்கணும்? அவர்தானே ஆறு விக்கெட் கையில் இருந்தாலும் அவங்களுக்காகப் பாடுபட்டார்?"

"கோஹ்லி கலக்கிட்டார் இல்லை?" 

"என் உழைப்பெல்லாம் பாழாப் போச்சே...."

"ஆமாம், அது மட்டுமில்லாமல் கடைசி ஓவர்கள்ள ஆட்டம் போற போக்கைப்பார்த்து கலங்கவும் கலங்கிட்டார்.. அதுவும் பார்த்தேன்... இருங்க ஃபோன் வருது..."

"ஹலோ..... ஆமாம்... ஆமாம்... சொல்லுங்க... அடடா.... ஓ... அட இதாங்க சென்னை ரசிகர்ங்க்றது.... இந்தியர்கள் எப்பவுமே உணர்ச்சிவசப்பட்டவங்கதான்... ஓகே ஓகே..."

"என்னங்க சிரிக்கறீங்க.. யார் ஃபோன்ல? என்ன விஷயம்?"

"மாமா பேசினார். அவங்க வீட்டுக்கு எதிர்த்த வீட்டுல ஒரு நாய் இருந்தது  நம்ம சென்னை ரசிகர் இல்லையா... அன்பா தோனின்னு பேர் வச்சிருந்தார். ராத்திரி கேம் முடிஞ்சவுடன் வீட்டைப் பூட்ட வெளியில் வந்து பார்த்திருக்கார் மாமா. எதிர் வீட்டுக்காரர் அந்த நாயை வெளியில தள்ளிக் கதவைச் சாத்திட்டாராம். அது என்னன்னே புரியாம கேட்டுக்குப் பக்கத்துல நின்னுகிட்டிருக்காம்..."

                                       

புதன், 12 செப்டம்பர், 2012

இதையும் படியுங்க அப்புறமா..

                          
எல்லா பத்திரிகைகளிலும் பிரசித்தமான பகுதிகள் உண்டு.
ஒன்று, சினிமா.
இரண்டு கேள்வி பதில்.
மூன்று ஆசிரியருக்குக் கடிதங்கள்.

    
இதில் சினிமா பகுதி தெலுங்கு பத்திரிகைகளில் ரொம்ப விசேஷம். இந்தப் படத்துக்கு இருபத்தேழு ஷாட்டுகள் முடிந்து விட்டன. இரண்டாம் நிலை எடிட்டிங் நடக்கிறது என்பது போன்ற அரிய செய்திகள் தொடர்ந்து இடம்பெறும்.  நட்சத்திரங்களின் கட்டவுட்டுகளுக்கு பியர் அபிஷேகம் செய்யும் நம் புண்ணிய பூமியில் இது ஒன்றும் வியப்பதற்கான செய்தி இல்லை.  குஷ்புவுக்கு கோயில் கட்டின வம்சம் அல்லவா நம்முடையது. கலி முற்றியதன் அறிகுறியாக நடிகர்களும் கலைஞர்களும் (சிலேடை இல்லை) அதீத செல்வாக்கு பெறுவார்கள் என்று சொல்லப் பட்டிருப்பதாகச் சொல்லப் பட்டிருக்கிறது.  
              
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இதைச் சொன்ன அந்தப் புண்ணியவானின் வாய்க்கு சர்க்கரை போட வாய்ப்பில்லை (வயதும் இல்லை) ஆதலால் அவருக்கு கோயில் கட்டிக் கும்பிடலாம் என்றால் அவர் பெயரே தெரியவில்லை.  உபயம்  சுப்பு ரத்தினம் & சன்ஸ் என்று கோயில் டியூப் லைட்டுகளில் பொறிக்கப்பட்டு இருப்பது  போல் இந்த மாதிரி சமர்த்து சொலவடைகளை முதலில் சொன்னவர்களும் தகுந்த காபி ரைட் தகவலை நிலை நிறுத்திக் கொண்டிருக்க வேண்டும். நமது துரதிருஷ்டம் அவர்களுக்கு காப்பியும் தெரியாது ரைட்டும் தெரியாது. பெயர் தெரியாத அந்த மேதைகளுக்கு மவுன அஞ்சலி செலுத்துவோமாக.
                    
அடுத்து ஆசிரியருக்குக் கடிதம்.  ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஒவ்வொரு மாதிரியான கடிதம் எடுபடும். குமுதத்துக்கு " உம்மை ஐஸ் கட்டியில் நிற்கவைத்து ஆறிப்போன காப்பியை குடிக்க வைக்க வேண்டும் என்பது போன்ற ஆசைகளை உள்ளடக்கி எழுதினால் பெரும்பாலும் பிரசுரம் ஆகும்.  அல்லது இந்தப் பகுதியையும் அவர்கள் வெவ்வேறு பெயர்களில் ஆசிரியர் குழுவை விட்டு எழுதிக் கொள்வார்களா என்பது தெரியவில்லை.  ஒரு தொடர் ஆரம்பிக்கும் போது " முதல் அத்தியாயமே கண்ணில் நீரை அல்லது குபீர் சிரிப்பை வரவழைத்து விட்டது என்று எழுதினால் நிச்சயம் பிரசுரம் ஆகலாம்.  பல எழுத்தாளர்கள் காசு கொடுத்து, கார்டு வாங்கிக் கொடுத்து இப்படி எழுத வைக்கிறார்கள் அல்லது தாங்களே எழுதி அனுப்புகிறார்கள் என்றும் நம்பப் படுகிறது. எந்தப் புற்றில் எந்தக் கரையான் இருக்குமோ யார் கண்டது? காங்கிரசை திட்டி எழுதினால் பிரசுரம்., கழகத்தைத் தாக்கி எழுதினால் பிரசுரம் என்ற எழுதா விதிகளும் உண்டு.
                
(தொடரும்.. நீங்கள் விரும்பினால்..)