திங்கள், 31 ஆகஸ்ட், 2015

'திங்க'க்கிழமை 150831:: வெள்ளை அப்பம்.


வெள்ளை அப்பம் 

தேவையான பொருட்கள்: 
    

வெள்ளை உளுந்து : நூறு கிராம். 
பச்சை (கலர் அல்ல Raw)) அரிசி: முன்னூறு கிராம். 
  

வெள்ளை உப்பு : ஒரு கரண்டி (உத்தேச அளவு. தேவைக்கேற்ப எடுத்துக்கொள்ளவும்)  
கருப்பு மிளகு: அரை  தேக்கரண்டி. 
சீரகம்: ஒரு தேக்கரண்டி. (சீரகம் என்ன கலர் என்று அண்ணனுக்கு போன் செய்து கேட்டேன். குதிரைச்சாணி கலர் என்றார். ஹூம் இதைக் கேட்காமலேயே இருந்திருக்கலாம்!) 
பச்சை மிளகாய் : ஐந்து. 
  

இஞ்சி : பாதி கட்டை விரல் அளவு. (இஞ்சி என்ன கலர் என்று அண்ணனிடம் கேட்கவில்லை புத்தி , புத்தி!) 
பச்சைக் கறிவேப்பிலை : பதினைந்து இலைகள். 
நல்லெண்ணெய் : அரை லிட்டர் 

முதலில், உளுந்து எடுத்து, கழுவி, சுத்தமான தண்ணீரில் ஊற வைக்கவும். 
    
பச்சரிசியையும் அவ்வாறே கழுவி, சுத்தமான தண்ணீரில் வேறொரு பாத்திரத்தில் ஊற வைக்கவும். 
               
இப்போ போய் ஏதாவது தமிழ் சானலில் ஒரு முழு தமிழ்ப்படம் விளம்பரங்கள் சேர்த்துப் பார்த்து முடித்துவிட்டு (அல்லது உருப்படியாக ஏதாவது செய்யவேண்டும் என்றால் - படுத்துத் தூங்கிவிட்டு ) மூன்று மணி நேரம் கழித்து வாருங்கள். 
                
உளுந்தை, இட்லிக்கு அரைப்பது போல, கிரைண்டரில் அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். அரிசியையும் அவ்வாறே நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும். 
                  
இரண்டு மாவையும் கூட்டணி சேருங்கள். உப்பு போட்டுக் கலக்கவும். 

மாவுக் கலவை கெட்டியாக இருக்கவேண்டும். 

இப்போ மிளகு, சீரகம் இரண்டையும் மேற்படி மாவில் போட்டுக் கலக்கவும். 

(சிலர் மிளகு சீரகம் போடாமலும் வெள்ளை அப்பம் செய்வார்கள்) 
    

பிறகு, பச்சை மிளகாய்களை நறுக்கவேண்டும். ஒவ்வொரு துண்டும் மூன்று முதல், ஐந்து மி மீ நீளம் இருக்கலாம். இஞ்சியை தோல் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக  வெட்டி, இஞ்சித் துண்டுகளையும், ப மி துண்டுகளையும் மேற்படி மாவில் போட்டுக் கலக்கவும். கறிவேப்பிலையையும் சிறு துண்டுகளாக நறுக்கி, மாவோடு சேர்த்துக்கொள்ளவும். 

இப்போ மாவு தயார். 

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, பூரி செய்ய எவ்வளவு எண்ணெய் விடுவீர்களோ அந்த அளவுக்கு எண்ணெய் விடவும். 

எண்ணெய் காய்ந்ததும், ஒரு இட்லிக் கரண்டியால், (ஒரு இட்லி அளவுதான் மாவு எடுத்துக்கொள்ளவேண்டும்) மாவு எடுத்து, எண்ணெயில் ஊற்றவும்.  
    
வெள்ளையப்பம் முதலில் எண்ணையில் கீழே போய் செட்டில் ஆகும்; பிறகு மிதக்கும். ஒருபுறம் சிவக்கப் பொரிந்ததும், அதைக் கண் கரண்டியால் திருப்பிவிடவும். இரு பக்கங்களும் சிவக்கப் பொரிந்தவுடன், வெள்ளையப்பத்தை, இரண்டு கண் கரண்டிகளுக்கு இடையே வைத்து அமுக்கி, எண்ணையை  வடித்து, எடுத்துக்கொள்ளவும். 

இப்படியாகத்தானே எல்லா வெள்ளையப்பத்தையும் செய்து எடுத்துக் கொள்வீர்களாகுக! 
                 
     

பச்சைக் கமெண்ட்: (இதில் அரிசி, உப்பு தவிர வேறு எதுவும் வெள்ளை கிடையாது. அதையும், சிவக்கப் பொறித்து எடுக்கிறோம்! அப்புறம் ஏனப்பா வெள்ளை அப்பம் என்று பெயர்? ) 
                 ========================================================   
ஏழு  நாள் தொடர்கதை ::  वह कौन है?


நீண்டு நிமிர்ந்திருந்த அந்தத் தெருவின் கடைசியில் - அல்லது முதலில் என்றும் சொல்லலாம்.  அது நீங்கள் எந்தத் திசையிலிருந்து பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது - அவன் உதயமானான். 
மதியம் இரண்டரை மணி இருக்கலாம்.  பாதி வீடுகளில் அலுவலகத்துச் சென்றிருக்கக் கூடியவர்களைத் தவிர்த்து வீட்டிலிருப்பவர்கள் மதிய உணவை முடித்து தொலைக்காட்சியின் அழுகைத் தொடர்களிலோ, அல்லது நித்திரையின் வசப்படும் நேரமாகவோ இருக்கலாம்.  
                                                                                                                                              நாளை.....

சனி, 29 ஆகஸ்ட், 2015

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.
1)  அட்மிஷன் தரத் தயங்கிய கல்லுாரி 'பிளக்ஸ்' வைத்து பாராட்டியது.  100 சதவீதம் நிறைவுடன் யாரும் பிறக்கிறது இல்லை. ஆரோக்கியம், அறிவு, குணம் என, எல்லாருக்கும் ஒரு குறைபாடு இருக்கிறது. அந்த வகையில், எனக்குப் பார்வை குறைபாடு. அதை விதி என நோகாமல், நம்பிக்கையுடன் நடை போட்டேன்; இன்று வெற்றி நடை போடுகிறேன்.  திவ்யா.
 


2)  அர்ப்பணிப்பு உணர்வுள்ள ஆசிரியர்.   நீலகிரி மாவட்டம், தேனாடு ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆசிரியர் தர்மராஜ்.
 3)  "தமிழகத்தில், அரசு பள்ளிகள் என்றாலே அசுத்தமான சூழல்களுடன் காணப்படும்; அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் அவதிப்பட வேண்டும்' என்பது பொதுவாக மக்கள் மனதில் பதிந்த ஒன்று. ஆனால், அனைத்து அரசு பள்ளிகளுக்கும் முன் உதாரணமாக சுத்தம், சுகாதாரத்தை முன்வைத்து இப்பள்ளி செயல்பட்டு வருகிறது."
 


4)  நன்றி பாராட்டுதலில் இது நல்ல ரகம்.
 


5)  விளையும் பயிர்.  வேதாந்த்.
 


6)   மலையைக் குடைந்து  தனி ஆளாய் பாதை அமைத்த மனிதன்.

7)  வானவில் சகோதரி. (நன்றி மது (கஸ்தூரி)
 


8)  வாடிய பயிரைக் காணும்போதெல்லாம் வாடும் நவீன வள்ளலார்.
புதன், 26 ஆகஸ்ட், 2015

பல்சுவைக் கதம்பம்

கோவை ஆவி கைவண்ணத்தில் தோழி அனன்யா நடிப்பில் "தலைவாரிப் பூச்சூட்டி உன்னை" குறும்படம்.  நேற்று வெளியிட்டிருக்கிறார் ஆனந்த் விஜயராகவன். 

உங்கள் அபிப்ராயங்களைச் சொல்லுங்கள்!

கடைசிக் காட்சிகளில் வரும், ப்ரின்சிபால் பாத்திரத்துக்குக் குரல் கொடுக்கும் பாக்கியத்தைக் எனக்குக் கொடுத்திருக்கிறார் ஆனந்த்.=================================================
                                                                Image result for passengers in a train images

மூன்று நாட்டுக்காரர்கள் ஒரு வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.

இறங்குமிடம் வந்ததும் மூவரும் இறங்க ஆயத்தமானார்கள்.

முதலாமவர் வண்டி நின்றதும் சட்டென இறங்கிச் சென்று விட்டார்.

இரண்டாமவர் இறங்குமுன் தான் எதையாவது விட்டு விட்டு இறங்குகிறோமா என்று செக் செய்து கொண்டு இறங்கினார்.

மூன்றாமவர் மற்ற இருக்கைகளுக்குப்போய் யாராவது எதையாவது விட்டு விட்டுப் போயிருக்கிறார்களா என்று பார்த்து விட்டு இறங்குகிறார்.

மூன்று நபர்களுக்கும் எந்தெந்த நாட்டை ஒதுக்குவது என்பது படிப்பவர் பாடு!  அவர்களுக்கு எந்த நாட்டின்மேல் என்ன மதிப்பு, கோபம் இருக்கிறது என்பதைப் பொறுத்தது.  
 
ஏனென்றால் நான் இதை இரண்டு இடங்களில் வெவ்வேறு நாட்டினர் பெயரில் படித்தேன்.
 

===================================
ஹிஹிஹி....


எழுதிவைத்த கவிதையை
வெளியிட கை வைத்தபோது,
படிக்க நேர்ந்தது
பக்கத்துக் கவிதைகளை!

இப்போது
என் கைகளே
நிராகரித்தது
கவிதைகள் என்ற பெயரில்
நான்
எழுதி வைத்திருந்ததை...

========================================

ரசனை! நான் ரசித்த காட்சித்துணுக்கு!


படம் வேட்டைக்காரன்.  "உன்னை அறிந்தால்..."  பாடல்   சாவித்ரியின் நடை.


குதிரையிலேயே வரும் வாத்தியார் பாடலின் நடுவில் குதிரையிலிருந்து இறங்கி நடந்து வரும் நடை.

=====================================


                                                                   Image result for vaali images
                                                         
பாண்டிச்சேரிக் கவியரங்கத்தில் ஒருமுறை வாலி கவி பாடியபோது தலைப்பு 'கம்பநாடன் சைவமா? வைணவமா?'  இந்தத் தலைப்பில் கவி பாடியபோது,


"சாதியில் சமயந்தன்னில்
        சிக்கியே நோய்வாய்ப்பட்டு
பதியில் கிடந்த மக்கள்
         பிழைக்கவே மருந்துதந்தோர்
ஆதியில் இங்கிருந்தார்;
          ஆதலால் இந்த ஊரின்
வீதியில் கிடக்கும் மண்ணை
            விபூதியாய் இட்டுக்கொள்வேன்!"

என்றும் பாடினாராம்.


கவியரங்கம் முடிந்ததும் ஒரு முதுபெரும் தமிழ்ப்புலவர் வாலியிடம் "ஐயா.. இவ்வளவு அற்புதமாக் கவியரங்கத்துல பாடுற நீங்க, சினிமாலப் பாட்டுல மட்டும் வர்த்தக நோக்கோடு செயல்படற மாதிரித் தெரியுதே.."  என்றாராம்.


அதற்கு வாலி,
"இங்கே நான்
வண்ணமொழிப் பிள்ளைக்குத்
தாலாட்டும் தாய்;
அங்கே நான் விட்டெறியும் 
எலும்புக்கு வாலாட்டும் நாய்"


என்றாராம்.ஆனால் திரைப்படங்களிலும் வாலியின் பாடல்கள் சோடை போகவில்லை என்பது நமக்குத் தெரியும்.

வாரியாரும் வந்திருந்த ஒரு விழாவில் எம் ஜி ஆரை வாலி வாழ்த்திக் கவி பாடியதும், பிறகு பேச எழுந்த வாரியார் சொன்னாராம். 

 
"பொன்மனச்செம்மலைப் பாராட்டி 'வாலியார்' சொன்னதை, இந்த வாரியார் அப்படியே வழிமொழிந்து வாழ்த்திப் பேசுகிறேன்"

==============================
===============

லில்லி எல் ஆர் ஈஸ்வரி

                                                                     Image result for L R eswari images


நாலுகால் ஜீவனைப் பற்றி எல் ஆர் ஈஸ்வரி குரலில் ஒரு பாடல்.  நீண்ட நாட்களாய்த் தேடிக் கொண்டிருந்தேன் இந்தப் பாடலை.  ஃ பேஸ்புக்கில் ஒரு நண்பர் கண்டெடுத்துக் கொடுத்தார்!   நாலு கால் ஜீவனுக்கு
எத்தனை பெயர்கள்! ========================


இந்தப் பாடலை என் பள்ளி நாட்களில் படித்தது.  அதை நினைவுக்குக் கொண்டு வந்த நண்பர் கரந்தை ஜெயக்குமாருக்கு நன்றி!


வானார்ந்த பொதியின்மிசை வளர்கின்ற மதியே
     மன்னியமூ வேந்தர்தம் மடிவளர்ந்த மகளே
தேனார்ந்த தீஞ்சுனைசால் திருமாலின் குன்றம்
     தென்குமரி யாயிடைநற் செங்கோல்கொள் செல்வி
கானார்ந்த தேனே, கற்கண்டே, நற்கனியே
      கண்ணே, கண்மணியே,  அக்கட்புலம்சேர் தேவி
ஆயாத நூற்கடலை அளித்தருளும் அமிழ்தே
       அம்மே நின் சீர்முழுதும்அறைதல்யார்க் கெளிதே?

என்று தமிழ்த் தாய்க்கு வாழ்த்துப் பாடலை இயற்றிய பெருமைக்கு உரியவர், கரந்தைக் கவியரசு அரங்க. வேங்கடாசலம் பிள்ளை.

===================================

                                                            Image result for peace sleep images

நிம்மதியான தூக்கத்துக்கு....

மனதை 'ரிலாக்ஸ்டாக' வைத்துக் கொள்வதுஅவசியம்!

நித்ரா இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்லீப் மெடிசின் மருத்துவர் என்.ராமகிருஷ்ணன்:

"ஒரு சில ஒழுங்கு முறைகளை, தினப்படி வாழ்க்கையில் கடைபிடித்தாலே, துாக்கமின்மை பிரச்னையை எளிதாக சரி செய்து விடலாம்.

முதலில், தினமும் துாங்கப் போகும் நேரத்தையும், காலை எழுந்திருக்கும் நேரத்தையும் முறைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதாவது, இரவு, 10:00 மணிக்குத் துாங்கி, காலை, 6:00 மணிக்கு எழுந்திருப்பது என்றால், முடிந்த அளவு தினமும் குறிப்பிட்ட இந்த நேரத்தில் துாங்கி எழ வேண்டியது முக்கியம்.

என்றைக்கோ ஒரு நாள் சினிமா, ரிசப்ஷன் என்று போனதால் நேரம் தவறி விட்டது எனில் பரவாயில்லை.இந்த முறையான பயிற்சிக்கு, 'துாக்க சுகாதாரம்' என்று சொல்வோம். எப்படி உடம்புக்கு சுற்றுப்புறச் சுகாதாரம் அவசியமோ, அப்படி ஒவ்வொருவருக்கும், 'ஸ்லீப் ஹைஜீனும்' அவசியம்.

அடுத்தது, துாங்கும் அறை; உங்களின் வசதிக்கு ஏற்ப படுக்கை, அறையின் வெப்பம், சுத்தம், வெளிச்சம் போன்றவை எப்படி இருந்தால் உங்களுக்கு சவுகரியமாய் இருக்குமோ அப்படி வைத்துக் கொள்ள வேண்டியது, இரண்டாவது விஷயம்.

அடுத்தது, நடைபயிற்சி; பொதுவாக எந்த நேரத்தில் நடந்தாலும், உடலுக்கு நல்லது தான் என்றாலும், இந்தத் துாக்கமின்மை பிரச்னை இருப்பவர்கள், காலை வேளையில் நடப்பது நல்லது.துாக்கப் பிரச்னை இருப்பவர்களுக்கு காபி, டீ குடிக்கும் பழக்கம் இருந்தால், ஒரு நாளில், 2 - 3 கப் குடிக்கலாம் தவறில்லை; ஆனால், மாலை, 5:00 மணிக்கு மேல் இவர்கள் காபி, டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும். அதுபோலவே சிகரெட்டும். காலையில் குளித்தாலும், மாலை, 5 - 7 மணிக்குள், ஒரு முறை குளிப்பது, துாக்கமின்மையை தவிர்க்க உதவும்.

சாப்பிட்ட உடன் துாங்கப் போவது கண்டிப்பாகக் கூடாது. துாங்குவதற்கு, இரண்டு மணி நேரத்திற்கு முன், இரவு சாப்பாட்டை முடித்துவிட வேண்டும். துாங்குவதற்கு முன் வாழைப்பழம், இளஞ்சூடான பால் குடிக்கலாம்.

அலுவலகம் உட்பட உங்களின் அன்றாட வேலையிலிருந்து வீட்டிற்கு வந்த உடன், மீண்டும் அதையே பேசி, அலுவலகம் தொடர்பான வேலையை வீட்டிலும் தொடர்ந்து செய்தபடி இருக்கக் கூடாது; இது, ஒருவித மன இறுக்கத்தைத் தரும்.

புத்தகம் படிப்பது, இசை கேட்பது, 'டிவி' பார்ப்பது என, உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒன்றைச் செய்யலாம். இதைவிட குடும்பத்தினரோடு மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவது நல்லது.

எல்லாவற்றையும் விட முக்கியம், மனதை, 'ரிலாக்ஸ்டாக' வைத்துக் கொள்வது. இந்த முறைகளை தொடர்ந்து, இரு வாரம் பின்பற்றிய பின்னும் துாக்கமின்மையை துரத்த முடியாவிட்டால், கண்டிப்பாக டாக்டரை சந்தித்து ஆலோசனையைப் பெற வேண்டியது கட்டாயம்.

- தினமலர் - 'சொல்கிறார்கள்.

===============================================படங்கள்  :  இணையத்திலிருந்து நன்றியுடன்!

திங்கள், 24 ஆகஸ்ட், 2015

'திங்க'க்கிழமை 150824:: பூண்டின் மகத்துவம்.

                
பூண்டு பிடிக்காதவர்கள் கூட, ஒருமுறை படித்துப் பாருங்க. 
    
பூண்டு மகத்துவம். 
   


சமையல் அறையில் பயன்படுத்தும் முக்கியமான மூலிகைப் பொருட்களில் ஒன்று வெள்ளைப் பூண்டு. இதய வியாதி மற்றும் புற்றுநோய்க்கு எதிர்ப்பு ஆற்றல் தர வல்லது. கடுமையான மணமுடைய குமிழ் வடிவக் கிழங்கினையும் தட்டையான இலைகளையும் உடைய சிறுசெடி. பூண்டு செடியின் வேர்தான் உணவில் சேர்க்கப்படும் 
வெள்ளைப்பூண்டில் மரபு ரீதியாகவே நிறைய தாதுக்கள், வைட்டமின்கள், நோய் எதிர்ப்பொருட்கள் மற்றும் சத்துப் பொருள்கள் உள்ளன. பூண்டு 100 கிராமில் 5346 மைக்ரான் அளவு நோய் எதிர்ப்பொருட்கள் உள்ளன. தயோ சல்பினேட்’எனும் உயிர்ப் பொருள் பூண்டு வகையில் உள்ளது. இது பிற உயிர் மூலக்கூறுகளுடன் இணைந்து ‘ஆலிசின்’எனப்படும் நொதி செயற்பாட்டு காரணியை உருவாக்கும்.
கெட்ட கொழுப்பான ‘கொலஸ்டிரால்’ உற்பத்தியை தடுக்கும் ஆற்றல் ‘ஆலிசின்’ மூலக்கூறுகளுக்கு இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கிறது.
கிழங்கு 10-12 பற்களாக உடையும் தன்மையுடையது. கிழங்குகளே மருத்துவப் பயனுடையவை. பசிதூண்டுதல், செரிமானம் மிகுத்தல், வயிற்று வாயு அகற்றல், சிறுநீர் பெருக்குதல், குடற்புழுக்கொல்லுதல், கோழையகற்றுதல், உடல் தேற்றுதல், உடலுரம் மிகுத்தல், வியர்வை பெருக்குதல், நோவு தணித்தல், அழுகலகற்றல், திசுக்களழித்தல், தாகமகற்றுதல், காய்ச்சல் தணித்தல், என்புருக்கி தணித்தல், காமம் பெருக்குதல் ஆகிய மருத்துவப் பண்புகளையுடையது.
ரத்தத் தட்டுக்கள் உறைந்துவிடாமல் பாதுகாப்பதிலும், ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைப்பதிலும் ‘ஆலிசின்’உதவுவதாக தெரிய வந்துள்ளது. ரத்தக்கட்டிகள் ஏற்படாமல் பாதுகாப்பதிலும், உருவான ரத்தக் கட்டிகளை நீக்குவதிலும் பங்கெடுக்கிறது. இச்செயலால் ‘கரோனரி’தமனி பாதுகாக்கப்படுகிறது. மேலும் இதய பாதிப்புகள், முடக்குவாதம், பி.வி.டி. போன்ற வியாதிகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
இரப்பைப் புற்றுநோய் பாதிப்பை குறைக்கும் ஆற்றல் பூண்டிற்கு உண்டு என்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை போன்ற நோய்த் தொற்று நுண்கிருமிகளை ஒடுக்கும் ஆற்றலுடைய நோய் எதிர்ப்பொருட்கள் வெள்ளைப் பூண்டில் உள்ளது. ஆலிசின் சிறந்த நோய் எதிர்ப்பொருளாகும்.
பொட்டாசியம், இரும்பு, கால்சியம், மாங்கனீசு, மக்னீசியம், துத்தநாகம், செலீனியம் போன்ற அத்தியாவசிய தாது உப்புக்கள் உள்ளன. செலீனியம் இதயத்திற்கு ஆரோக்கியம் வழங்கும் தாதுவாகும். நோய் எதிர் நொதிகள் செயல்பட சிறந்த துணைக் காரணியாகவும் இது செயல்படும். மாங்கனீசு, நொதிகளின் துணைக் காரணியாகவும், சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்தியில் இரும்புத் தாது பங்குபெறுகிறது.
பீட்டா கரோட்டின், ஸி-சான்தின் போன்ற நோய் எதிர்ப் பொருட்களும், ‘வைட்டமின்-சி’போன்ற வைட்டமின்களும் உள்ளன. ‘வைட்டமின்-சி, நோய்த் தொற்றை தடுக்கும், தீங்கு விளைவிக்கும் ஆக்சிஜன் பிரீரேடிக்கல்களை விரட்டியடிக்கும் தன்மையும் கொண்டது.  
பூண்டு மருத்துவம்.   

10 கிராம் உரித்த வெள்ளைப் பூண்டை பாலில் வேக வைத்துக் கடைந்து சாப்பிட வாயு, செரியாமை, சளி ஆகியவை தீரும். குடல் புழுக்கள் மடியும்.
வெள்ளைப்பூண்டு, மிளகு சேர்த்தரைத்து சாப்பிட வயிற்றுப்பிசம் தீரும்.
பூண்டை இழைத்துப் பருக்கட்டிகளில் பூச அவை உடைத்துக் கொள்ளும்.
வெள்ளைப் பூண்டின் சாற்றில் நவச்சாரத்தைக் குழைத்து வெண்மேகத்தில் தடவி வர வெண்ணிறம் மாறி இயல்பு நிறமாகும்.
10 கிராம் உரித்த வெள்ளைப் பூண்டை 50 மி.லி. நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி இரண்டொரு துளிகள் காதில் விட்டுவரக் காது வலி, காது மந்தம் ஆகியவை தீரும்.
வண்டு, குளவி, பூச்சி ஆகியவை கடித்த இடத்தில் வெள்ளைப் பூண்டை அரைத்துக் கட்டி எரிச்சல் தாங்க முடியாத நிலையில் எடுத்து விட நஞ்சு அகலும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
வெள்ளைப்பூண்டானது வியர்வையை பெருக்கும் உடற்சக்தியை அதிகப்படுத்தும், சிறுநீர் தாராளமாக பிரிய வகை செய்யும், சிறுநீர்ப்பை, ஈரல், ஆகியவற்றின் வேலையைத் தூண்டி விடும்.
உடல் பருமன், மூக்கடைப்பு, பீனிச தொல்லைகள் நீக்கும்.
Cholosterol-ஐ கட்டுப்படுத்தும். இருதய இரத்தக்குழாய்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கிறது
மூட்டுவலி, முடக்குவாதம், ஆகியவற்றை குறைக்கும்.
பூண்டு ,நெய், சர்க்கரை சேர்த்து பிசைந்து உண்ண சீதக்கழிச்சல் தீரும்.
இரைப்பை புற்று நோயை வளரவிடாமல் முளையிலேயே கிள்ளி எறியக்கூடியது.
புற்றை உண்டாக்கும் Nitrosamines என்ற பொருளை உடலில் உற்பத்தியாக விடாமல் பூண்டு தடுத்து உதவுகிறது. புற்று நோயை எதிர்க்கும் சக்தியும் உடலில் உருவாகிறது.
பூண்டுப்பால்: 
உரித்த பூண்டு 15 பற்கள்
பால் 1/4 லிட்டர்
பாலில் பூண்டை வேகவைத்து, இரவு உணவிற்கு பிறகு உண்ணலாம். வாயு நீங்கும், கபம் கரையும் Eosinophilia, BP நீங்கும்.
பூண்டுப்பால் , மஞ்சள் பொடி சேர்த்து கலந்து அருந்தும்போது Tropical Eosinophilia போன்ற ஈளை, இரைப்பு நோய்கள் கட்டுப்பட்டு குணமடைகிறது.   
நன்றி:  thamil.co.uk 
எங்கள் வழி: பூண்டை எளிதாக உரிக்க, பூண்டுப் பற்களை, மைக்ரோ வேவ் ஓவனில் பத்து நொடிகள் சுட்டு எடுத்தால் சுலபமாக உரிக்க முடியும். நகம் / விரல் வலிக்காமல் இருக்கும். பூண்டு சேதமடையாமல் முழுசாக இருக்கும். 
   

சனி, 22 ஆகஸ்ட், 2015

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.


1)  உயர்ந்த மனிதர் ஹஜ்ஜப்பா.  இவர் போன்ற மனிதர்களால்தான் நாடு வாழ்கிறது.  (நன்றி துளசிஜி / கீதா)
 


 
2) உயர்ந்த மனிதர் ஹிமான்ஷு பக்ஷி.  அவர் கதையை வரி வரியாகப் படிக்க வேண்டும்.  ஒவ்வொரு வரியும் மேற்கோள் காட்டத் தகுதியானது.
 


 
3)  பாராட்டப்பட வேண்டிய மிருகாபிமானம் மிக்க கிராமத்தினர்
 


 
4)  இந்தியா எனது (நமது)  நாடு என்பதில் நிஜமாகப் பெருமைப் படவைக்கும் நிகழ்வு.  
 5)  நிகழ்ந்தது ஒரு மரணம்.  ஜனனமானது புதிய எண்ணம்.  வேத மித்ரா சவுத்ரி.


 

 
6)   24 நாட்களில் 173 கழிப்பிடங்கள்.  கிராமப் பஞ்சாயத்துத் தலைவியின் சாதனை.  நடிகையின் விளம்பரம் இவருள் ஏற்படுத்திய உத்வேகம்.  பிரேமா திம்மனகௌடர்.
 


 
7)  சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே ஆலவிளாம்பட்டி கிராமத் தினர், பல தலைமுறைகளாக மதுவிலக்குக் கொள்கையை கடைபிடித்து வருகின்றனர். வேலைக்காக வெளியூர், வெளி நாடு சென்றாலும் இந்த ஊர் இளைஞர்கள் கட்டுப்பாட்டை மீறாமல் கண்ணியத்துடன் இருந்து வருகின்றனர்.  உதாரண கிராமம்.
 


 
8)  அன்பான போலீஸ் என்பது ஆக்ஸிமோரான் அல்ல!  அம்பத்தூர் போக்குவரத்துக் காவலர் - சப்-இன்ஸ்பெக்டர் - நடராசன்.  [நன்றி எல்கே] 
 


 
9)  கோட்டூர் மக்களின் சாதனை.

 
10)  கற்பித்தல் நன்றே... கற்பித்தல் நன்றே...  பிச்சை புகினும் கற்பித்தல் நன்றே...  சென்னை ஆர். .செல்வராஜ்.
 


 
11)  கத்தி முனையைப் பற்றிக் கவலையில்லை.  வயதுக்கும் துணிவுக்கும் தொடர்பில்லை.  உத்தம் பட்கர்.
 


 
12)  பாம்புகளின் வயிற்றில் பால் வார்ப்பவர்கள்.
 


 
13)  இரண்டு சிறுவர்களின் முயற்சியில் பயன்பெறும் ஏழைக் குழந்தைகள்.
 


 
14)  கடமையைத்தான் செய்தார்.  ஆனால் கருத்தாகச் செய்தார்.  155 உயிர்களைக் காத்தார்.
 
 
 


 
15)  முடியும் என்று நினைத்தால் முடியும்.  படிக்கவும் முடியும்.  எடையைக் குறைத்து மெடலும் வாங்க முடியும். சோனாலி.
 


 
16)  நாடென்ன செய்தது நமக்கு?  என்று கேள்விகள் கேட்பது எதற்கு?  மேலூர் அருகே கூலிப்பட்டி மக்களும்,  பள்ளி ஆசிரியர்களும்.
புதன், 19 ஆகஸ்ட், 2015

தற்கொலை செய்து கொண்ட எழுத்தாளர்சமீபத்தில் ஒரு பழைய புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தபோது கண்ணில் பட்ட செய்தி.  ஒரு எழுத்தாளர் தற்கொலை செய்து கொண்டாரா?  புதிய செய்தியாக இருக்கிறதே..  இதற்குமுன் இப்படி நடந்திருக்கிறதா என்று தேடிப் பார்த்தால் ஒரு பெரிய லிஸ்ட்டே விரிகிறது!  கவிஞர்கள் தனி லிஸ்ட்!
 

 
Syliviya plath effect என்றால் என்ன தெரியுமோ?  கவிஞர்களின் தற்கொலைக்கு இதைக் காரணமாகச் சொல்கிறார்கள்.

 
ஹிட்லர் விஷயத்தில், அவர் தற்கொலை செய்து கொண்டதுபோல நாடகமாடி வேறு நாட்டுக்குத் தப்பிச் சென்று விட்டார் என்ற வதந்தி உண்டு.
 

 
நமக்குத் தெரிந்து நிறைய நடிகைகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.  சிலுக்கு ஸ்மிதா, விஜி, ஷோபா, திவ்யபாரதி இப்படி பெண் பிரபலங்கள்தான் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
 
உலக அளவில் தற்கொலை செய்து கொண்ட நடிக நடிகையரும் அதிகம். 
மர்லின் மன்றோ மரணம் கூட தற்கொலைதான் என்று சொல்வார்கள்.  அவர் தன 36 ஆம் வயதில் மரணமடைந்தார்.  வருடம் 1962. 
 
இந்தியாவில் 1965 இல் முப்பத்தைந்து வயது மலையாள எழுத்தாளர் ராஜலக்ஷ்மி தற்கொலை செய்து கொண்டார்.
 
 
இன்றுவரை அவரது மரணத்தின் மர்மம் விடுவிக்கப் படவில்லை.
 
இவர் தற்கொலை செய்து கொண்டபிறகு மாத்ருபூமி ஆசிரியர் எம் டி வாசுதேவன் நாயர் உள்ளிட்ட பிரபலங்கள் இவரைப் பற்றி நிறைய எழுதி இருக்கிறார்கள்.
 
அவர் நாட்களில் மிகவும் கொண்டாடப் பட்ட எழுத்தாளர் இவர்.  அவரது எழுத்து நடை வாசகர்களை மிகவும் வசீகரித்திருக்கிறது.
 
அவரின் ஆரம்ப எழுத்துகளிலிருந்தே தற்கொலை கூடவே வந்திருக்கிறது.  திருமணம் செய்யாமல் வாழ்ந்த ராஜலக்ஷ்மி தற்கொலை செய்து கொள்வதற்குமுன் அவர் வேலை செய்து கொண்டிருந்த கல்லூரியில் தற்கொலை பற்றி பொதுவாகப் பேசி இருக்கிறார்.  அவர் அப்போது NSS கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக இருந்திருக்கிறார்.
 
கவிதாயினிகள் பொதுவாக இது மாதிரி சில்வியா ப்ளேத் எபெக்ட் (‘Sylvia Plath effect,’) டால் பாதிக்கப் பட்டிருப்பார்கள் என்கிறார்கள்.  இவர் நிறைய கவிதை எழுதியதில்லை என்றாலும் மன்னிப்பு, தற்கொலை போன்ற இவரின் புகழ் பெற்ற சிறுகதைகள் இவரது மனத்தை வெளிப்படுத்தியே வந்திருக்கின்றன.  வாசகர்கள், இவரின் எழுத்தை ரசித்த அளவு அவரின் மனநிலையைக் கவனிக்கத் தவறி விட்டார்கள் போலும்.
 
திருமணமே செய்து கொள்ளவில்லை ராஜலக்ஷ்மி.  இவரின் படைப்புகளை, "இது என் கதை, இது அவளின் கதை" என்று கூப்பாடு போட்டு, பிரச்னையாக்கி நிறுத்த அப்போது ஒரு கூட்டமே இருந்திருக்கிறது.
 
நடுவில் இரண்டு மூன்று வருடங்கள் எழுதுவதையே நிறுத்தியும் இருந்திருக்கிறார்.  இவரின் ஒரு நாவல் இதே காரணத்தினால் பாதியிலேயே நிறுத்தப் பட்டிருக்கிறது.  பாதியிலேயே நிறுத்தப் பட்ட இவர் நாவல் 'உச்சி வெயிலும் இளம் நிலவும்'
 
அவருடைய கவிதை ஒன்று.  இது அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு இரண்டு வருடங்கள் முன்பு மாத்ருபூமியில் எழுதியது.
 
"சாவே,
அங்கு நான் வாழ்க்கையைத்
தொடங்க விரும்புகிறேன்.
நான் என்ற இந்தக் குமிழ்
உன் காலடிகளில்
மிதிபட்டு அழியாதிருக்குமாக!
என்னில் அமைந்த
இயலாமைகள்
சந்கோஷங்கள்
சின்னச்சின்ன அபிலாஷைகள்
ஆனந்தங்கள்
மேலோங்கிய சிந்தனைகள்
வேதனைகள் -
துச்சமான வேதனைகள்
இரக்கங்கள்
சுகம் நாடும் தவிப்புகள்
எல்லாம்
அங்கு என்னுடன் இல்லாதிருக்குமாக"

இவரின் 'ஒரு வழியும் சில நிழல்களும்' வாசகர்களின் அமோக வரவேற்பைப் பெற்று, தனிப் புத்தகமாகவும் வெளியிடப்பட்டது.

 

திங்கள், 17 ஆகஸ்ட், 2015

'திங்க'க்கிழமை 150817 : செம்பருத்தி சாப்பிடுங்கள், நலமாக இருங்கள்!

       

இதோ இருக்கிறார் திருவள்ளுவர். 
அல்லது 
தாகூர் 
அல்லது 
பாரதியார். 

சித்தர்கள் செம்பருத்தியை தங்க பஸ்பத்திற்கு ஈடாக கூறுகின்றன. இதனால் இதை தங்க புஷ்பம் என்று அழைக்கின்றனர். இதனை சப்பாத்து எனவும் அழைக்கின்றனர். செம்பருத்திப் பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. இவற்றின் இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மையுள்ளவை. இந்த செம்பருத்திப் பூவின் மருத்துவக் குணங்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.

வயிற்றுப்புண், வாய்ப்புண் நீங்க...

அஜீரணக் கோளாறால் வயிற்றில் வாய்வுக்கள் சீற்றமடைந்து வயிற்றின் உட்புறச் சுவர்களைத் தாக்குகின்றன. இதனால் வாயிலும் புண்கள் உருவாகின்றன. இப்படி வயிற்றுப்புண், வாய்ப்புண்ணால் பாதிக்கப் பட்டவர்கள் தினசரி 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகும்.

பெண்களுக்கு...

கருப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்களுக்கும், வயது அதிகம் ஆகியும் ருதுவாகாமல் இருக்கும் பெண்களுக்கும் செம்பருத்திப்பூ சிறந்த மருந்து. 10 செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும்கொடுத்துவந்தால் வெகுவிரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும். பூப்பெய்தாத பெண்களும் பூப்பெய்துவார்கள்.

சிலருக்கு மாதவிலக்குக் காலங்களில் அடிவயிற்றில் அதிக வலி உண்டாகும். மேலும் அதிக இரத்தப்போக்கு உள்ளவர்களுக்கு மயக்கம், தலைவலி ஏற்படும். இவர்கள் செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து கசாயமாக காய்ச்சி அருந்தி வந்தால் மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகள் குறையும்.

சில பெண்கள் வெள்ளைப்படுதலால் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த வெள்ளைப் படுதல் குணமாக செம்பருத்தியின் இதழ்களை கசாயம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

தலைமுடி நீண்டு வளர...

சிலருடைய தலையில் பொடுகு, பேன், ஈறு தொல்லைகள் அதிகமாக இருக்கும். இவர்கள் எவ்வளவுதான் மருந்துகள், ஷாம்புகள் உபயோகித்துப் பார்த்தாலும் அவர்கள் முழுமையாக இந்த தொல்லையிலிருந்து விடுபடமுடிவதில்லை.

இதற்கு அருமையான மருந்து செம்பருத்திதான். செம்பருத்தி பூவின் இதழ்களை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு நீங்கும்.

செம்பருத்தி இதழ்களை நிழலில் உலர்த்தி எடுத்து வெந்தயப்பொடி, கறிவேப்பிலைபொடி கலந்து எண்ணெயில் கொதிக்க வைத்து எடுத்து பாட்டிலில் அடைத்து வைத்து தினமும் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.

செம்பருத்திப் பூவை காயவைத்து பொடி செய்து காபி, டீ போல காலை மாலை கசாயம் செய்து அருந்தி வந்தால் இரத்தம் தூய்மையடையும், உடல் பளபளப்பாகும்.

நீர் சுருக்கு நீங்க...

நீர் சுருக்கைப் போக்கி சிறுநீரைப் பெருக்கி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு செம்பருத்திப் பூவின் கஷாயம் மருந்தாகிறது.

இருதய நோய்க்கு...

இருதய நோயாளிகள் செம்பருத்திப் பூ இதழ், வெள்ளைத் தாமரையின் இதழ் எடுத்து கஷாயம் செய்து பாலில் கலந்து அருந்தி வந்தால் இரத்தக் குழாயில் உள்ள அடைப்பு நீங்கி இருதய நோய் குணமாகும்.

-ஜெயஸ்ரீ மகேந்திரன், ச‌ங்க‌ர‌ன்கோவில்.
Link: