சனி, 31 ஆகஸ்ட், 2013

சென்றவார பாஸிட்டிவ் செய்திகள்..



1) ஈர நெஞ்சத்தின் இந்தவார நற்செயல்.
                                          


2) "வழியா இல்லை பூமியில்" - வசந்தி மேகநாதனின் சாதனைகள்.
                                             



3) மீண்டும் வழியா இல்லை பூமியில்தான்... இவை இரண்டுமே குங்குமம் தோழியில் வந்ததன் பகிர்வுதான். ஏரோப்ளேன் ஓட்டும் பெண்கள் இருக்கிறார்கள். பஸ், கார் ஓட்டும் பெண்கள் இருக்கிறார்கள். டிராக்டர் ஓட்டும் 3 பெண்களைப் பற்றி அறிய....
                                                   


4) 11 தினங்களில் சர்க்கரை அளவைக்  கட்டுப்படுத்திய லண்டன்காரர்.
                                            

                                            

5) அமெரிக்கத் தமிழ்ப் பத்திரிகை பாராட்டியிருக்கும் கோவை சமூக சேவகர் மகேந்திரன் அவர் தம் நேரத்தையும்  ஓ பொருளையும் செலவிட்டு சுமார் 100 பேருக்கு அனாதையாக திரிந்தவர்களை குடிம்பத்துடன் சேர்த்து வைப்பது, விபத்தில் அடி பட்டவரை மருத்துவ மனையில் சேர்த்து உற்றார் உறவினருக்கு செய்தி தெரிவிப்பது, அனாதையாக மரித்தவர்களை அடக்கம் செய்வது இப்படி பல  செய்திருக்கிறார். திருப்பூரை சேர்ந்த அறம் டிரஸ்ட் "அறச் செம்மல்" என்றொரு பட்டம் தந்து கௌரவப் படுத்தி இருக்கின்றனர்.
                                          



6) மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகிலுள்ள, திரளி ஊராட்சி மன்றத்தின், தலைவியாக பணியாற்றும்  ஊராட்சி தலைவி சந்திரா,  கணவர், முன்னாள் ராணுவ வீரர், முதியோர் கல்வி, மாணவர்களுக்கு இலவச பாடம் எடுப்பது, சான்றிதழ் மற்றும் இலவச திட்டங்களுக்கான விண்ணப்பங்களை, பூர்த்தி செய்யவும் உதவுவது,  செயல்களால்  பெற்று ஊ.ம.,த ஆகி, ஊராட்சிக்கு உட்பட்ட வரைபடம் மூலம், 50 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதை அறிந்து, மதுரையில், அரசியல் செல்வாக்கு மிக்கவர்களிடமிருந்து, மிரட்டல்கள் வந்தும், பெண்ணாக இருந்தும், துணிச்சலுடன் செயல்பட்டு, நடவடிக்கை எடுத்து,  நிலத்தை மீட்டு, அதில் மழைநீர் சேமிப்பு குளம், பண்ணை குட்டை, மீன் குட்டை ஏற்படுத்தி, ஊராட்சியின் வருவாயை அதிகரித்து என பல்வேறு சாதனைகள் செய்திருக்கிறார்.
                                                         


7) கைலாசபுரத்தில் IG ஆபீஸ் பின்புறம் ரோட்டரி க்ளப் உதவியுடன்  நடிகர் எஸ் வி சேகர் சேவை. 9 உரிமை கோரப்படாத உடல்கள் அடக்கம்.


                                                  



8) சூரிய ஒளி மின்சக்தியிலும், தொடர்ந்து காற்றிலும் சுழலும் மின்விசிறியை வடிவமைத்திருக்கும்,  பத்தாம் வகுப்பு மட்டுமே முடித்துள்ள, மாணவர்கள் புருசோத்தமன், மங்களராஜ், விவேக் ஆகியோர் 

                                           



9) ஒரு கையாலேயே சுவாமி சிலைகள் செய்யும் தன்னம்பிக்கை இளைஞர் பாண்டி.


                                         




10) கொசுவின் வளர்ச்சியைத் தடை செய்ய, சப்பாத்திக் கள்ளி உதவும் என்று கண்டுபிடித்து புதுச்சேரி, பாரிஸ் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய போட்டியில் வென்ற காஸ்ட்ரோ.

                                             

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

வெள்ளிக்கிழமை வீடியோ 130830:: நான் ஒரு ... ... ?


 
 
வீடியோ உபயம் : முகநூல். 
பாட்டு: ஜே பி சந்திரபாபு. 
எடிட்டிங்: எங்கள் ப்ளாக். 
                                                                                             

புதன், 28 ஆகஸ்ட், 2013

ஆதார் அப்டேட், ஒல்லி விக்ரம், மோசர் விளக்கு - வெட்டி அரட்டை

       
தினமணியில் 24/8 அன்று படித்த செய்தியின்படி  சமையல் எரிவாயு உருளைக்கு மானியம் பெற ஆதார் எண் அவசியமில்லை என்று மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்திருப்பதாக மாநிலங்களவையில் சொல்லப் பட்டிருக்கிறது.
  

ஒரு டென்ஷன் குறைந்தது.

ஆனால் இந்த நிலைப்பாடும் பின்னர் மாற்றப் படலாம். இந்த அரசைக் குறித்து எதுவும் நிச்சயமாகச் சொல்ல முடியாதே....!

]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]
ஐ விக்ரம் எடை குறைந்திருப்பதாய்ச் சொல்லி விகடனில் போடப் பட்டிருக்கும் படம் பார்க்க பரிதாபமாய் இருக்கிறது. அழகான விக்ரம் காணமல் போய்  சூம்பிய கன்னங்களுடன் நோயால் தாக்குண்டவர் போல இருக்கிறார்!   
   
((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((
எப்போதோ ஹுஸைனம்மா பதிவில் படித்தேன் என்று ஞாபகம். ஒரு 2 லிட்டர் பிளாஸ்டிக் பாட்டிலில் சுத்தமான தண்ணீரை நிரப்பி மூடி, (கருப்பு மூடியாக இருந்தால் பயன் அதிகம்) கூரையில் கச்சிதமாக ஓட்டை போட்டு திறப்பைக் கச்சிதமாக மூடி விட்டால் சூரிய ஒளி வீட்டினுள் கொடுக்கும் வெளிச்சம் காரணமாக பல ஏழை நாடுகளில் மின்சாரக் கட்டணம் குறைவாகச் செலுத்த முடிந்ததாம். பிரேசில் நாட்டு மெக்கானிக் ஆல்ஃபிரெட் மோசர் என்பவர் தன் வீட்டில் செய்து பார்த்தது, அருகிலிருப்போர், அருகிலிருப்போர் என்றே பரவி இப்போது உலகம் முழுக்க இதற்கு மோசர் விளக்கு என்றே பெயராம். 
   
விகடனில் பாரதி தம்பி இதைப் பற்றி எழுதி இருக்கிறார்.
  
)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
அதே விகடனில் பொக்கிஷம் பகுதியில் மகேந்திரன் சாசனம் என்ற ஒரு படம் எடுத்தபோது எடுத்த பேட்டியைப் பிரசுரம் செய்திருக்கிறார்கள். முத்தாய்ப்பாக அவர் சொல்லியிருந்தது கவர்ந்தது. "நான் நினைவுகொள்ளப்பட வேண்டும் என்பது அவசியம் இல்லைனு தோணுது. ஒரு நல்ல சிற்பம் செதுக்குறவன் அதன் கீழ தன் பெயரை எழுத வேண்டியது இல்லை. பின்னால வர்றவங்க பார்க்க, சிற்பம் மட்டும் இருந்தால் போதும். காத்துல எழுதின பாட்டு மாதிரி கரைஞ்சு போயிடணும்னு ஆசைப்படறேன்" 
   
மகேந்திரன் படங்களில் மிகவும் பிடித்தது முள்ளும் மலரும். அடுத்து நெஞ்சத்தைக் கிள்ளாதே, அப்புறம் உதிரிப் பூக்கள். (பூ.பூ ஏனோ கவரவில்லை!)

[][][][][]][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

ஃப்யோதர் தஸ்தவேஸ்கி எழுதிய 'இடியட்' என்ற 1000 பக்க நாவலை 'அசடன்' என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கிறார் திருமதி எம் ஏ சுசீலா. முன்னரே தஸ்தயெவ்ஸ்கியின் 'கிரைம் அண்ட் பனிஷ்மெண்ட்' புத்தகத்தை 'குற்றமும் தண்டனையும்' என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கும் இவரது பேட்டியும் இந்த வார விகடனில். 
    
"ஒரு கலாச்சாரச் சூழலில் இருந்து மற்றொரு கலாச்சாரச் சூழலுக்கு ஒரு படைப்பைப் பரிவுடன் விரல் பற்றி இட்டுச் செல்வதுதான் மொழிபெயர்ப்பின் தலையாய சவால்" என்ற ஜெயகாந்தன் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த டாக்டர் கே எஸ் சுப்பிரமணியன் கருத்தை முன்வைக்கிறார்.
     
என் மனைவி இவரிடம் படித்தவர் என்பதில் எனக்கு ஒரு சந்தோஷம்.  
                
{}{}{}{}{}{}{}}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}}}   
      
மும்பையில் மறுபடி ஒரு கொடூர பாலியல் பலாத்காரச் சம்பவம். அதுவும் பாதிக்கப்பட்டவர் ஒரு ஜர்னலிஸ்ட்.  பழைய சம்பவங்களில் பிடிக்கப் பட்ட குற்றவாளிகள் என்னவானார்கள்? இவர்களை பொது இடத்தில் நிற்கவைத்து சுட்டாலொழிய இது மாதிரி சம்பவங்கள் நிற்கப் போவதில்லை.
              
*************************************************************************
பாஸிட்டிவ் செய்திகள் தொடரவா வேண்டாமா என்ற வாக்கெடுப்புக்கு எல்லோரும் பாஸிட்டிவாகவே பதில் சொல்லியிருந்தீர்கள். நல்ல யோசனைகளும் சொல்லியிருந்தீர்கள். குறிப்பாக, ஹுஸைனம்மாவின் கமெண்ட் "நச்" !  'உண்மைதான் இல்லை?' என்று ஆடிப் போய் விட்டேன்!
சற்றே மாறுதல்களுடன் வெளியிடப்படும் பாஸிட்டிவ் செய்தித் தொடருக்கு இப்போது வாசகர்கள் கூடியிருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்!
                          
   

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

சைக்கிள் வண்டி மேலே! :: 03

       
           
   
நாங்கள் மூன்று பேரும் ஏன் செய்வதறியாது திகைத்தோம் என்றால், வீட்டு சொந்தக்காரரின் உறவினர்தான் வாடகை வசூல் செய்ய வருபவர். அவர் உள்ளே வந்து சுவற்றை நான் சைக்கிளால் உழுது வைத்திருந்ததைப் பார்த்தால், எங்கள் கதை கந்தல் ஆகிவிடும். அவர் சுவற்றையும், சைக்கிளையும், என்னையும் பார்த்தால், 2+2+2 =டுட்டுடூ என்று ஈசியாகக் கணக்குப் போட்டு விடுவார். இதை எப்படி சமாளிப்பது என்று யோசனை செய்தோம். 
     
சின்ன அண்ணன்தான் ஐடியா மாஸ்டர் ஆயிற்றே. சைக்கிளை அப்படியே குண்டுக் கட்டாகத் தூக்கி அதை என்னிடமும் தம்பியிடமும் கொடுத்து, "ஆளுக்கொரு பக்கமாகத் தூக்கி ரூமுக்குள் ரெண்டு பேரும் சைக்கிளோட பதுங்கிடுங்க" என்று சொன்னான். 

இல்லை, இல்லை அப்படி சொல்லவந்தான். ஆனால் என்ன நடந்தது? அவன் அப்படி சைக்கிளைத் தூக்கும்பொழுது, சைக்கிள் பார்ட் எல்லாம் பொல பொல என்று உதிர்ந்து, முன் சக்கரம் முன்னால் ஓட, பின் சக்கரம் பின்னால் ஓட, கிரான்க் கழண்டு அண்ணன் காலில் விழ, அவன் இடது பாதம் தூக்கி ஆட ......  
  
அவசரம் அவசரமாக கைக்குக் கிடைத்த ஃபிரேம், சீட்டு, ஹாண்டில் பார் மட்கார்ட் எல்லாவற்றையும் அண்ணன் ரூமுக்குள் வீச, நான் முன் சக்கரத்தை  உருட்டிக் கொண்டு ரூமுக்குள் பாய்ந்தேன். பின்னால் என்னுடைய தம்பி பின் சக்கரத்தை 'சர்க்கஸில் இப்படித்தான் ஒற்றைக்கால் சைக்கிள் விடுவார்கள்' என்று கூறியபடி,  மட்கார்ட் மீது பாதி உட்கார்ந்து பாலன்ஸ் செய்தபடி ரூம் வாசல்படி வரை வந்து, ரூமுக்குள் வழுக்கி விழுந்தான். 
  
மகாதேவன் உள்ளே வந்தார். எங்கும் நிசப்தம் நிலவியது. ஆனால் அவர் உள்ளே வருவதற்கும், தம்பி பாலன்ஸ் செய்துகொண்டே வந்து உள்ளே விழுவதற்கும் சரியாக இருந்தது. 
  
காதலிக்க நேரமில்லை படத்தில், வேஷம் கட்டிய முத்துராமன், பாலையாவிடம், "விஸ்வநாதன், இந்த இடத்தை ஏதாவது நாடகக் கம்பெனிக்கு வாடகைக்கு விட்டிருக்கீங்களா?" என்று கேட்பது போல, மகாதேவன், " கோபாலன் சார், இந்த இடத்தை ஏதாவது சர்க்கஸ் கம்பெனிக்கு உள்வாடகைக்கு விட்டிருக்கீங்களா?" என்று கேட்டார். 

எங்க அப்பா பாலையா போலவே "அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லீங்களே .... " என்று சொல்லி சிரித்துச் சமாளித்தார்.  சுவற்றையும் அதன் ஆழமான வடுக்களையும் பார்த்த மகாதேவன், "இது எல்லாம் என்ன? என்னிடம் சொல்லாமல் நீங்களே ஏதோ கொத்தனார் வெச்சு வொர்க் ஆரம்பிச்சுட்டீங்க போலிருக்கு?" என்று கேட்டார். 

அண்ணன், "நீங்க போன மாதம் அனுப்பிய எலெக்ட்ரீசியன் இங்கே ஒயரிங் பண்ணச் சொல்லி அவருடைய ஆள் கொத்த ஆரம்பிச்சாரு. அப்புறம் இது ரொம்பக் கீழே இருக்கு வேண்டாம் என்று சொல்லி மேலே ஓபன் ஒயரிங் பண்ணிட்டாரு. இப்போ பாருங்க இந்த சுவிட்ச் போட்டால் - ..... "

நான் சொன்னேன், " இல்லை இல்லை நீங்க ரெண்டு மாசம் முன்பு கதவு, தாழ்ப்பாள் எல்லாம் சரி செய்ய அனுப்பிய கார்பெண்டர், கதவுகளைக் கழற்றி, டேபிள் மீது வைத்து, இழைத்து, அறுத்து துவம்சம் செய்யும் பொழுது கதவு சுவற்றில் மோதி, அதனால் ஏற்பட்ட காயம் இது".  

மகாதேவன் இரண்டில் எதை நம்பினாரோ! மற்ற சுவர்களைப் பார்க்கக் கிளம்பிவிட்டார். ரூமுக்குள் நான்கு சுவர்களும் நன்றாக இருக்கின்றன என்று சொல்லி ரூமுக்குள் அவர் வராமல் பார்த்துக் கொண்டோம். 

இவ்வளவு டாமேஜஸ் ஆனதால், அப்பா என்னிடம், இனிமேல் வீட்டுக்குள் யாரும் சைக்கிள் விடக்கூடாது என்று கூறிவிட்டார். அப்புறம் சைக்கிளை தினமும் மாலை வேளைகளில் ஆளரவம் குறைந்த சந்தர்ப்பத்தில், ஏழுபடிகள் தாண்டி, வீதியில் இறக்கி, ஜாக்கிரதையாக காரியரில் அமர்ந்துகொண்டு, உந்தி, உந்தி, சைக்கிளை பாலன்ஸ் செய்யக் கற்றுக் கொண்டேன். 
  
தெருவில் (காக்கா குளத்தில் ஸ்நானம் செய்து வந்த) நான்கு குட்டிப் பன்றிகள், ஒரு பெரிய பன்றி, மூன்று சொறி நாய்கள், ஒரு கிழவர், இரண்டு கிழவிகள், ஒரு மூட்டை தூக்குபவர், ஆகியோர் மீது மட்டும் மிதமாக மோதி, காரியரில் உட்கார்ந்து சைக்கிள் விடுவது எப்படி என்று கற்றுக் கொண்டேன். 

ஆனாலும் சைக்கிளில் ஏற இறங்கத் தெரியவில்லையே என்ற குறை இருந்தது. 

*** *** ***  
அந்தக் குறையை, நான் வேலை பார்க்க ஆரம்பித்த பன்னிரண்டு வருடங்கள் கழித்து, ஒருநாள், மதுரைக்குச் சென்றிருந்த பொழுது, என்னுடைய அக்காவின் பையன்கள் இருவரிடமும் பேச்சு வாக்கில் சொன்னேன். 
            
அவ்வளவுதான்! அக்காவின் பையன்கள் இருவரும் எனக்கு சைக்கிள் ஏறு படலம், இறங்கு படலம் இரண்டையும், அன்று மாலையே - சொல்லிக் கொடுத்துவிடுகிறோம் என்று உறுதியளித்தனர். 
  
இந்த உறுதிமொழிக்குப் பின்னால் ஒரு பெரிய சதித் திட்டமே அவர்கள் இருவரும் தீட்டியிருக்கின்றார்கள் என்பது எனக்கு அப்போது புரியவில்லை! 
     
(தொடரும்) 
              
(அடுத்த பதிவுடன் கண்டிப்பாக முடியும். அந்தப் பதிவில் தலைப்புக்கான தொடர்பு, நிலை நிறுத்தப்படும்!) 
                  

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

ஆஞ்சநேயா....



அரசாங்கம் கையகப் படுத்திய ஆஞ்சநேயரை ( ! ) குடும்பத்துடன் தரிசனம் செய்தோம்!

மாட்டிய நாளில், இருபத்திரண்டு ஆண்டுகளாக ஒருவரிடம் ஒருவர் மாட்டிக் கொண்டிருக்கும் கஷ்டங்களை அவரிடம் புலம்பி விட்டு வந்தோம்! ஆஞ்ஜி புன்னகையுடன் கை கூப்பியவண்ணம் எங்களைக் குனிந்து பார்த்துக் கொண்டிருந்தார்! உண்டியல் வைத்திருப்பது புதிதாக இருந்தது என்று நினைக்கிறேன். பணத்தை உண்டியலில் போடவும் படிக்கும்போதே 'உண்டியலில்' என்ற வார்த்தையில் அழுத்தம் தொனித்தது!

                                                       
Photo
 
கோதண்டராமர் சன்னதியில் இருந்த பட்டர் ஏதோ பூஜை செய்வது போலவே ஆயத்தங்கள் செய்கிறாரே என்று நின்ற கூட்டத்துடன் நாங்களும் நின்றோம். வெளியில் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்த எங்களைப் பார்த்த பட்டாச்சாரியார் நிலைமையை உணர்ந்து உடனே உள் சன்னதியிலிருந்து வெளி சன்னதிக்கு வந்து ஓரமாக சும்மா நின்று,'தான் எதுவும் செய்யப் போவதில்லை' என்று குறிப்பால் உணர்த்தினார்! நகர்ந்தோம். இந்த பட்டர்கள் எல்லாம் நியூ அப்பாய்ண்ட்மெண்ட்டா, பழைய ஆட்களேதானா என்று கோவிலின் ரெகுலர் பக்தர்கள்தான் சொல்ல வேண்டும்.

ஆஞ்ஜி உம்மாச்சி பிரம்மாண்டமாய் நின்று அருள் பாலித்துக் கொண்டிருந்தார். வலதுபக்கத் தூணில் பெரிய ஆஞ்ஜி உம்மாச்சி படம் மாட்டப் பட்டிருந்தது. அதில் பக்தர்கள் தங்கள் கையால் துளசி வைத்து பயனடைந்தார்கள். சுமார் ஒரு 23 வயது பச்சை சுடிதார் பெண்ணொருத்தி கண்களில் நீர் வடிய பரபரப்பாக சன்னிதியைச் சுற்றிக் கொண்டிருந்ததை இளையவன் சுட்டிக் காட்டினான்.

"அவள் துன்பத்துக்கு அவளேதான் காரணமாக இருக்கும். ஆனால் அதை அறியாமல் சுற்றுகிறாள்" என்றேன்.

"எப்படிச் சொல்றே?"

"படபடப்பாக இருக்கிறாள். பொறுமையாகப் பிரகாரத்தைச் சுற்றாமல் அவசரமாக ஒன் பாத்ரூம் வந்ததும் ஓடுவது போல வேகமாகச் சுற்றுகிறாள். அவள் வாய் அசைவதைப் பார்த்தால் மந்திரம் சொல்வது போல இல்லை.."

"அது எப்படிச் சொல்றே?"

"ஒரு யூகம்தான்.."

"சாமியைப் பாருங்க... " என்று அ(இ)டித்து விட்டு 'அடிப்ரதட்சணம்' செய்தாள் சகதர்மிணி!

வேணுகோபால ஸ்வாமி சன்னதியில் தூரத்தில் கற்பூரத் தட்டு வைக்கப் பட்டிருந்தது. தட்டில் சில்லறைகள் தென்பட்டன. இங்கும் பட்டர் செல்ஃப் சர்வீஸ் கவுண்டரில் நிற்கும் சேல்ஸ்மேன் போல ஓரமாக. அசுவாரஸ்யமாக நின்று கொண்டிருந்தார்.

                                                      
Photo
 
அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னும் பொங்கல் அதே தரத்தில் இருந்தது ஆச்சர்யம். புளியோதரை இன்னும் நன்றாக இருக்குமாம். எங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு சக பக்தர் சொன்னார்.

கோவில் காவலர்கள் ஆங்காங்கே நின்றுகொண்டு 'யார் என்ன தப்பு செய்கிறார்கள்' என்று ஊன்றிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

செருப்பு வைக்குமிடம் காணாமல் போயிருந்தது. அதேபோல பொங்கல் சாப்பிட்டு கைகழுவ, பக்கவாட்டில், கோவிலைச் சேர்ந்த திருமண மண்டபம் தாண்டி நடக்க வைத்திருக்கிறார்கள்.

                                                      
Photo
 
அங்கு ஒரு வெளியாள் கைகழுவக் காத்திருந்தவர்களை லட்சியம் செய்யாமல் நான்கு 2 லிட்டர் பாட்டில்களில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார்.

எதிர்த்த கடையில் வாழைக்காய் காரச் சிப்ஸும், பச்சை மிளகாய் ஊறுகாயும் வாங்கிக் கொண்டு திரும்பினோம்.
[ முகநூலில் பகிர்ந்தது ]

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

சனி, 24 ஆகஸ்ட், 2013

சென்ற வார பாசிட்டிவ் செய்திகள்


1) நாயைக் கண்டாலே கல்லை எடுக்கும் மனிதர்களிடையே அனாதையாகத் திரியும் நாய்களுக்கு உணவளிக்கும் மனிதர்.

                                        
                             
 
2) முகநூல் உதவியுடன் திருச்சியில் குளத்தைத் தூர்வார ஏற்பாடு செய்த  மாணவர் (இந்தச் செய்தியின் சுட்டி வேலை செய்யவில்லை. மன்னிக்கவும்) மற்றும் ஈ வேஸ்ட் கழிவுச் செய்தி   விழிப்புணர்வை ஏற்படுத்தும் மாணவி...



Cherub Crafts கொடுத்துள்ள சுட்டி     நன்றி.                                     
         

3)  வறுமை, பாலியல் வன்கொடுமை மற்றும் அனாதையாக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கு, பாதுகாப்பு மற்றும் கல்வியறிவு தரும், கவுதமன் சொல்வது :

[குறிப்பு : தினமலர் நாளிதழில் ஸ்பெஷல் கட்டுரையாக வெளிவரும் சில செய்திகளுக்குச் சுட்டி தரும்போது அவை அங்கு அடுத்த நாள் அதே பகுதியில் காணப்படும்/வெளிவரும் வெவ்வேறு செய்திகளுக்கு அழைத்துச் செல்கிறது. எனவே இதற்கு மாற்று ஏற்பாடு அடுத்த வாரம் முதல் முயற்சிக்கிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்]
                              
4) சிறுநீரகக் கோளாறால் அவதியுறும் வசதியில்லா நோயாளிகளுக்கு செய்யும் அமைப்பு ஒன்று பற்றியும்,  எந்த நோயால் அவதிப்படுவோருக்கும் மருத்துவ ஆலோசனை,  ஆரம்ப நிலையிலிருந்து, எல்லாக் கட்டத்துக்கும் வழங்கி வழிகாட்டும் சேவை அமைப்பு ஒன்று பற்றியும் திருமதி மனோ சாமிநாதன் அவர்கள் பகிர்ந்துள்ளார்கள். அதை இங்கு படிக்கலாம், பயன் பெறலாம், இது மாதிரி உதவி தேவைப்படும் தெரிந்தவர்களுக்குச் சொல்லலாம்.

5) மதுரையில் ஆட்டோ ஓட்டும் மதன் பட்டப்படிப்பு முடித்தவர். பெண்களிடம் சகோதரனாகப் பழகுவது, நியாயமான விலை, ஆட்டோ காலியாகப் போனால் நடந்து போகும் முதியவர்களை இலவசமாக ஏற்றிச் செல்வது என இவரிடம் படிக்க ஏராளமான பாசிட்டிவ் பாடங்கள்.

                                       




 6)  ஒரு புகழ்பெற்ற நடிகராக இருந்தாலும் பணம் சம்பாதிப்பது மட்டுமே குறி என்று இல்லாமல் நடிகர் அஜீத் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை, விழிப்புணர்வை பொது மக்களிடம் ஏற்படுத்தச் செய்யும் செயல் பாராட்டுக்குரியது.

                                                          

7) மத்தியப் பிரதேசம் கடியாஹார் என்ற ஊரில் வசிக்கும் 56 வயது மகேஷ் என்பவருக்கு 12,672 பெண்கள் "ராக்கி" கட்டி தம் சகோதரராக ஏற்றனர். கடந்த 21 ஆண்டாக சகோதரர் இல்லாப் பெண்களின் திருமணங்களுக்கு சகோதரர் செய்ய வேண்டிய மரியாதை செய்ததால் இந்த கௌரவம் கிடைத்துள்ளது

8) போலீசார் லஞ்சம் வாங்குவதைத் தடுக்க பலவகைகளில் சோதனைகள் மேற்கொள்ளும் அதிகாரி பற்றி...
                                        



9)  முன்னாள் காவல்துறை அமைச்சர் கக்கனின் பேத்தி, இந்நாள் தீயணைப்புத்துறை அதிகாரி திருமதி மீனாட்சி அவர்களின் பன்முகத் திறமை. திரு. வெ. நீலகண்டனால் குங்குமம் தோழியில் எழுதப்பட்டு, முகநூலில் பகிரப்பட்டது.
                                         

புதன், 21 ஆகஸ்ட், 2013

தமிழ்ப்பட டயலாக், தானாய் எரியும் விளக்கு, ஜோக், காஞ்சூரிங் - வெட்டி அரட்டை

         
"தெரிஞ்சோ தெரியாமலோ..."  என்று தொடங்கி பேசப்படும் வசனங்களை நிஜ வாழ்வில் எத்தனை முறை உபயோகப்படுத்தும் சந்தர்ப்பம் வந்திருக்கிறது?

                
'தெரிஞ்சோ தெரியாமலோ....'  செய்தால் தவறில்லை என்று அர்த்தமா!


                                                          

தவறு என்பது தவறிச் செய்வது... தப்பு என்பது தெரிந்து செய்வது... தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும்... தப்பு செய்தவன் வருந்தியாகணும்... வாலி வரிகள்!

              
தமிழ்ப்படங்களில் கதா நாயக / நாயகியரின் சுயபரிதாப ஒப்புதல் வாக்குமூலங்களுக்கு இந்த ஆரம்பவரிகள் தப்பாமல் தளம்  கொடுக்கின்றன. எத்தனை ஹீரோக்கள் எத்தனை எத்தனை படங்களில் இந்த வசனத்தை உபயோகித்திருக்கிறார்கள்....
                
'சும்மா' போல அர்த்தமில்லாமல் போகப்போகும் வரிகளில் ஒன்று!
]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]

ஆஸ்பத்திரியில் ஊழியர் "உங்க பேர் சொல்லுங்கம்மா..."


"மங்கை"

"மங்கையா...மங்கையர்க்கரசியா?"

"மங்கைதாங்க"

"புருஷன் பேரு சொல்லும்மா..."

"ஐயோ மாட்டேன்லா....ஆயுசு குறைஞ்சு போகும்..."

"அட, சொல்லும்மா...உயிரை வாங்காத!"

"வானத்துல போகுமே..."

"என்னம்மா வேலை நேரத்துல விளையாடிகிட்டு... புதிர் போடாமச் சொல்லும்மா... ஏரோப்ளேனா?"

" இல்லீங்க... அங்கேயே இருக்குமே... "

"மேகமா....என்னம்மா எங்கெங்க மரியாதை காட்டறதுன்னு இல்லையா?"

"ஐயோ.. இல்லீங்க.... ஆ.....ங்....ராத்திரியில வருமே..."

"ராத்திரில வருமா?! நட்சத்திரமா....ஓ... ..நிலவு... சந்திரனா?"

"அ...ஆமாங்க...அதேதாங்க...அதுக்கு முன்னாடி சீதை புருசன் பெயரைச் சேர்த்துக்குங்க..."

"ராமச்சந்திரன்?"

"கரெக்டுங்க....அதாங்க அந்தக் கருமம் பிடிச்சவன் பேரு...."
[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[
   
லண்டன் வாழ் தமிழர் (என்று ஞாபகம்) ஒருவர் தெருவிளக்குகள் ஆட்கள் நடமாட்டம் இருந்தால் மட்டும் விளக்கு எரியும் வண்ணம் (உதவி :சென்ஸர்)  தயாரித்திருப்பதாகப் படித்தேன். இந்தச் செய்தியின் மூலத்தைப்  பிடிக்க முடியாததால் ( நோ நோ அந்த மூலம் இல்லீங்க....ஸோர்ஸ்) பாஸிட்டிவ் செய்திகளில் பகிர முடியாமல் போனது! நல்ல சிக்கன நடவடிக்கையாக இருக்கும். 

                                                       

ஆனால் நாய் கம்பத்தடியில் படுத்திருந்தால் விளக்கு மட்டும் எரிந்து கொண்டேயிருக்கலாம்! இருளான  தெருக்களைப் பார்க்கும்போதே ஒரு தயக்கம், பயம் வரும் - இரவில்! இரவில்! இந்நிலையில் தாண்டி நடக்க நடக்க தானாக விளக்குகள் எரிந்தால்... பழகும் வரையில் தெருவுக்கு ஒரு 108 ஆம்புலன்ஸ் (ஒரு.. 108.. ! என்ன முரண்!)  நிறுத்திவைக்க வேண்டியிருக்கலாம்!
[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][[][][][][][][]
    
இந்த பயத்தைப் பற்றிப் பேசும்போது வேறொன்று நினைவுக்கு வருகிறது. சென்னையில் மக்கள் ஒரு ஆங்கிலப் படத்தைப் பார்த்து பரவசமாக பயந்து போகிறார்கள். ஏதோ கைதட்டும் பேய் பற்றிய படமாம்... படம் பெயர் என்னவோ வருமே.... என்னவோ வருமே....
 
                                                          

"கொண்டையில் தாழம்பூ.." பாடலில் ரஜினி "கூடையில் என்ன பூ..." என்று வாயசைத்து விட்டு ரசிகர்களைப் பார்த்து 'என்ன' என்று கைஜாடையில் கேட்பார்! அது நினைவுக்கு வருகிறது இல்லை?!!
{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}
      
உங்களிடத்தில் முப்பது ரூபாய் மட்டும் கொடுத்து இன்றைய பொழுதை  இந்தப் பணத்துக்குள் ஓட்ட வேண்டும், கடனோ உடனோ வாங்கக் கூடாது என்று சொன்னால் என்ன வாங்குவீர்கள், பசியாறுவீர்கள்?!!! ஒருமுறை மட்டுமே 'அம்மா உணவக'த்துக்கு அனுமதி!  






மேலே உள்ளவை சில முகநூல் கருத்துகள். 
மற்ற வாசகர்களின் கருத்துகளையும் அறிய ஆவலாக உள்ளோம். 
               

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

முதல் பதிவின் சந்தோஷம்... தொடர்பதிவு - DD கேட்டுக்கொண்டபடி.

          
DD என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் திண்டுக்கல் தனபாலன் என்னை(யும்) ஒரு தொடர்பதிவு எழுத .அழைத்திருந்தார். சரி, ஆளைக் காணோம்...லாங் லீவில் போயிருக்கிறார், அது முடிந்து அவர் திரும்பி வருவதற்குள் எழுதி விடலாம் என்று எண்ணியிருந்தால். இன்றைய சைக்கிள் பதிவில் வந்து ரிமைன்டர் போட்டு விட்டுப் போய் விட்டார்! மெமோ கொடுப்பதற்குள் எழுதி விட வேண்டும் என்று தொடங்கி விட்டேன்.
   
உண்மையில் மூன்று நாட்களுக்கு முன்னரே முயற்சியைத் தொடங்கி விட்டேன். ராஜி மற்றும் திரு வே. நடனசபாபதி அவர்கள் பக்கம் சென்று அவர்கள் எழுதியிருப்பதைப் படித்து வந்தேன்.
    
தலைப்பு என்னவென்றால் 'முதல் பதிவின் சந்தோஷம்'.
     
பதிவுலகில் முதல் பதிவு என்றில்லாமல்...
    
அங்க இருக்கற அந்த டார்டாயிசைக் கொஞ்சம் எடுங்க..... சுருள் சுருளா விஷ்ணு சக்கரம் மாதிரி இருக்கே.....அதான்.....ஆங்...உடைந்துவிடப் போகிறது... ஜாக்கிரதையாப் பார்த்து எடுங்க....ஆங்... எடுத்துட்டீங்களா... அப்படியே ஒரு குச்சியில் சொருகி உங்கள் முகத்துக்கு எதிரே சுழற்றுங்கள்.... ஆமாங்க....ஃபிளாஷ்பேக்தானுங்க....
      
முதல் பதிவு இப்போதல்ல, என்  பள்ளிப்பிராயத்துக்குப் போகிறேன். பதின்ம வயதுகளில் என் அண்ணனும் அவன் தோழனும் 'வசந்தம்' என்ற பெயரில் ஒரு கையெழுத்துப் பத்திரிக்கை நடத்தினர். ஆர்வமான நானும் என்னுடைய ஒன்றிரண்டு படைப்புகளை அதில் வெளியிடச் சொல்ல, அவர்கள் மறுத்து விட்ட காரணத்தால் நானே 'தென்றல்' என்ற பெயரில் ஒரு கை.ப. தொடங்கினேன்.
     
பிரபல பத்திரிகைகளில் வந்த, கொஞ்சம் பழசாகி வாசகர்கள் நினைவிலிருந்து மறந்து போன பிரபல ஓவியர்களின் படங்களை ஒரு காகிதத்தில் அதன் அவுட்லைன் மட்டும் கார்பன் வைத்துப் பிரதி எடுத்துக் கொள்வேன். ஏற்கெனவே பத்திரிகைக்காக வெட்டி வைத்திருக்கும் பக்கங்களில் இரண்டில் (இரண்டு பிரதிகள் வெளியிடப்படும்.  ஒன்று 'வாசகர்'களுக்கு! இன்னொன்று அலுவலகக் காபி!!!) அந்த அவுட்லைனை பிசிறடிக்காமல்  ஒற்றி எடுத்து வைத்துக் கொண்டு அப்புறம் லேசாக அதில் பதிந்திருக்கும் அந்த அவுட்லைனில் முகம், உடல் எல்லாம் வரைந்து வண்ணம் கொடுப்பேன்.
     
அம்மா, நண்பர்கள் சொன்ன ஜோக்ஸ், காலனி நிகழ்வுகள், ஸ்போர்ட்ஸ் செய்திகள், மற்றும் வெவ்வேறு பெயரில் என் சிறுகதைகள்!
     
லைப்ரேரியனைக் கெஞ்சிக் கூத்தாடி புத்தகத்தை லைப்ரேரியில் போட்டு விட்டு, யாராவது படிக்கிறார்களா, அவர்கள் முகம் எப்படி மாறுகிறது என்று வேறொரு புத்தகம் படிப்பது போல பாவ்லா செய்து, பார்த்துக் கொண்டிருப்பேன். பதிவுலகம் மாதிரியேதான்! பெரும்பாலும் யாரும் சீந்துவதில்லை.
       
முதல் கதை எல்லாம் அபத்தம் என்றாலும், மரணத்தைப் பற்றிக் கவலைப் படக்கூடாது, ஆன்மா உடல் என்னும் சட்டையை மாற்றுகிறது துக்கம் கூடாது என்று எல்லாம் மேடைகளில் பேசும் சத்தியமூர்த்தி வீடுவந்ததும் தனது தாயார் மரணம் அடைந்திருப்பது கண்டு துக்கப்படுவது என்று நான் எழுதியிருந்த கதையைப் படித்துப் பலர் பாராட்டாவிட்டாலும், ஒரே ஒரு கிழவர் விசாரித்தது அறிந்து என்னைத் தேடி வந்து சிலாகித்தார்.
     
வாசகர் கடிதங்கள் கேட்டிருந்தும் எதுவும் வராததால், நண்பர்களிடம் வற்புறுத்தி கடிதம் வாங்கிப் போட்டதன் விபரீத பலன், செடி, கொடி, மலர், புயல் என்றெல்லாம் பத்திரிகைகள் முளைக்க, மிரண்டு போன லைப்ரேரியன் வசந்தம், தென்றல் உட்பட எல்லாவற்றையும் தடை செய்தார்.
     
ஆனாலும்  இலக்கிய தாகம் ( ! ) தணியாத நான் பத்திரிகையைத் தொடர்ந்து 'நடத்தி', தனிச்சுற்றில் விட்டு இலக்கியச் சேவை செய்து வந்தேன். வெவ்வேறு சுவாரஸ்யங்கள் தலைதூக்கிய நாட்களில், தாகம் சற்றுத் தணிய, புத்தகம் நிறுத்தப்பட்டது!
     
பதிவுலகில் பதிவு பற்றிய சந்தோஷம் என்றால்....
     
நான் முதலில் எழுதிய பதிவு கன்னா பின்னா என்று எக்கச்சக்க சந்தோஷத்தைக் கொடுத்தது - (எனக்கு மட்டும்!)
    
பலமுறை மீண்டும் மீண்டும் படித்துப் பார்க்கப்பட்டது - என்னால் மட்டும்.
      
அப்போது ஆரம்பகாலங்களில் எல்லாப் பதிவர்களையும் போலவே எங்கள் பதிவுகளுக்கு நாங்கள் மட்டுமே வாசகர்கள்! முதல் வெளி கமெண்ட் என்பது திரு பாலராஜன் கீதாவிடமிருந்து. இரண்டாவது  நெற்குப்பைத்தும்பியிடமிருந்து. அப்புறம் மெண்டல் பாண்டி.
     
கொஞ்சம் படிக்கிற மாதிரி நான் எழுதிய கமல்ஹாசன் பதிவுக்கு அப்பாதுரை முதல் தடவையாக பின்னூட்டம்! அப்புறம் மரணம் பற்றிய சிந்தனைப் பதிவு.
    
பதிவுகள் எழுதுவதைவிட, நண்பர்கள் தளங்களில் பின்னூட்டமிடுவது மிகவும் பிடித்திருந்தது. படைப்பை விட, விமர்சனம் எளிது! வெண்ணிற இரவுகள், புலவன் புலிகேசி, வடலூரான், சைவக் கொத்து பரோட்டா போன்ற இன்னும் பல தளங்களில் தொடர் வாசிப்பு. அப்பாதுரையின் அமானுஷ்யப் பதிவுகளுக்கும் நூடன் பதிவுகளுக்கும் பின்னூட்டம். பல்வேறு தளங்களிலும் பின்னூட்டமிட்ட வகையில் 'எங்களை'ப் பற்றி மெல்ல வெளியில் தெரியத் தொடங்கியது.
           
அப்புறம் இன்டலி, தமிழ் 10, தமிழ்மணம் ஆகியவற்றில் இணைத்துப் பயனடையத் தொடங்கினோம்.
             
முதல் பதிவில் என்றில்லை, இன்னும் என்  எந்தப் பதிவிலும்  சந்தோஷம் இல்லை, என் எழுத்தில் எனக்கே முழு திருப்தி இல்லாததால்.
             
ஆனாலும் ஜீவி ஸார் போன்ற ஜாம்பவான்களின் ஊக்கப்படுத்தும் பின்னூட்டங்கள், கீதா சாம்பசிவம், வல்லிம்மா  போன்ற மூத்த பதிவர்களும், ராமலக்ஷ்மி, ஹேமா அப்பாதுரை போன்ற சக, ஆனால் திறமையான பதிவர்களும் நம் எழுத்தைப் படித்தாலே சந்தோஷம்தான்.  அவர்கள் மனமுவந்து பாராட்டி ஊக்கப்படுத்தும்போது இன்னும் சந்தோஷம். நண்பர்கள் பின்னூட்டமிட்டால்தான் யார் யார் படித்தார்கள் என்று தெரிகிறது.
     
DD யாரையாவது தொடர அழைக்கலாம் என்று சொன்னாரா என்று தெரியவில்லை. எனினும் நான் மன்னை மைந்தன் மாதவனையும், பின்னூட்ட அரசி மஞ்சுபாஷிணியையும் தொடர அழைக்கிறேன். 
                

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

சைக்கிள் வண்டி மேலே 02

                
முதல் பகுதி சுட்டி இங்கே! 
    
நாங்கள் திகைத்தது இரண்டு விநாடிகள்தான்! முதலில் சுதாரித்துக் கொண்டவன் அண்ணன்தான்! 
         
என் அண்ணன் என்னைப் பார்த்து, "இப்போ பாரு என் நடிப்புத் திறமையை .... " என்று சொன்ன மறுநொடி - அந்த விடாக்கண்டரின் முன்னால் பிரசன்னமானான்!  
      
அட யாரு இவனுடைய சட்டையின் கையை இப்படிக் கிழித்து விட்டது? அது மட்டுமா - கையில் கிழிந்த இடத்தில் கொஞ்சம் செம்மண் - யார் அங்கே தீற்றியது? கண்களில் கண்ணீர் எங்கேயிருந்து வந்தது! 
    
அது மட்டுமா? மூன்றரை வினாடிகளுக்கு ஒரு முறை மூச்சை 'மூஸ்  .... மூஸ்  ...' என்று இழுத்து, 'விசுக் ...விசுக்'என்று விட்டவாறு, அவரிடம் " அய்யா நீங்க என் மேலே வாடகை சைக்கிளை மோதி ....  .... என்னைக் கீழே தள்ளிவிட்டு ... ... என் கையை ஒடித்துவிட்டு (கையை பாகப்பிரிவினை சிவாஜி மாதிரி வைத்துக் கொண்டிருந்தான்) ... .... இப்படியே போறீங்களே !! ... ... இது நியாயமா? ...  ... இப்படியே போனீங்கன்னா பஸ் ஸ்டாண்டுக்கு முன்னாடி இருக்கு ... ... போலீஸ் ஸ்டேஷன் ... அங்கே போவோம். ... அங்கே என்னுடைய அப்பா ... ... ரைட்டரா இருக்கார் (அடப் பாவி - ஒரு நொடியில் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு போஸ்ட் உருவாக்கி, அங்கே எங்க அப்பாவை அப்பாயிண்ட் பண்ணிட்டானே!) அவர்கிட்டே நாம நியாயம் கேக்கலாம்......."  
     
(மூன்று புள்ளிகள் இருக்கின்ற இடங்களில் எல்லாம் 'மூஸ் மூஸ்' மற்றும் 'விசுக் விசுக்' என்ற அவனுடைய சுவாச ஜாலங்களை சேர்த்துக் கொள்ளவும்)  

விடாக்கண்டர் திகைத்துப் போய் விட்டார்.  சைக்கிளை என்னுடைய அண்ணன் கைகளில் திணித்துவிட்டு, குதிகால் பிடரியில் இடிபட ஓட்டமும் நடையுமாகப் போனார்! 
    
என்னால் வியப்பைத் தாங்க முடியவில்லை! "டேய் - எப்பிடிடா இப்பிடி எல்லாம் ஆக்ட் கொடுக்கிறே! - கண் சிமிட்டும் நேரத்தில் ஒரு ஸ்க்ரிப்ட் எழுதி, வசனம் பேசி, நடித்து, பரிசும் வாங்கிட்டே!" என்று கேட்டேன்.  
   
"ஓ அதுவா? அண்ணன் கே ஜி என்னை அடிக்க வரும் பொழுதெல்லாம் - நான் என்ன பண்ணுவேன் என்று பார்த்திருக்கின்றாயா - அவர் கை என் கிட்டே வருவதற்குள்ளாகவே ' ஓ ' என்று அலறி, அவர் அடித்து, அதனால் எனக்கு என்னென்ன ரியாக்ஷன் வருமோ எல்லாவற்றையும்  முன் கூட்டியே கொண்டு வந்து, அம்மா அடுக்களையிலிருந்து வந்து பார்க்கும் பொழுது, மூன்றாவது அண்ணனை அக்னிப் பார்வை பார்க்க வைப்பேனே  ... ஞாபகம் இருக்கா?" 
   
பார்த்த ஞாபகம் வந்தது. அட! இதுதான் டெக்னிக்கா! இனிமேல இதை நான் இவன் விஷயத்தில் ஃபாலோ பண்ணலாமே என்று நினைத்தேன். 
   
"அது சரி. ஆனால் - ரோலிங் மில்லில் கோ ஆப்பரேடிவ் ஸ்டோரில் வேலை பார்க்கும் அப்பாவுக்கு ஏன் அவசரமாக போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றல் உத்தரவு கொடுத்தாய்?"
           
"ஐயோ, நீ என் தம்பின்னு சொல்லிக்கவே லாயக்கு இல்லை. சைக்கிளை பறித்துச் சென்றவர் ரோலிங் மில் தொழிலாளி - அவரிடம் போயி எங்க அப்பா ரோலிங் மில் ஸ்டோர்ல வேலை பார்க்கிறார் என்று சொன்னால், அவரு நேரா போயி, நம்ம அப்பாகிட்ட சொல்லி, அவரு கிட்டேயும் திட்டு வாங்கிக் கொடுத்துவிடுவார் என்பது உனக்குத் தெரியலையா!" அதுவுமில்லாம போலீஸ் ஸ்டேஷன் என்று நான் சொன்னதும் அவரு மூஞ்சி காத்துப் போன சைக்கிள் டயராட்டம் ஆயிடுச்சே பார்த்தியா ? " என்று சொல்லிக் கொண்டே மாரியம்மன் கோவில் வாசலில் கப்பில் இருந்த குங்குமத்தை ஒரு கையளவு அள்ளினான். 
   
"இது எதுக்குடா?"என்று நான் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே பக்கத்தில் தெருக்குழாய் மேடையில் தேங்கியிருந்த  தண்ணீருடன் அந்தக் குங்குமத்தைக் கலந்து, அதைக் குழைத்து, 'குன்னக்குடி நெற்றிப்பொட்டு ' அளவுக்கு கையில், சட்டை கிழிந்த செம்மண் படர்ந்த இடத்தில் இட்டுக் கொண்டான். 
   
"இது என்ன? ஏதாவது வேண்டுதலா?"
   
"அடப் போடா - ஏற்கெனவே தொத்தல் சைக்கிள். இப்போ இடிபாடுகளில் சிக்கி கொஞ்சம் பார்ட்ஸ்தான் மீதி இருக்கு. இதை வாடகைக்குக் கொடுத்த பாபு கிட்ட போயி, இந்தா எல்லா பார்ட்டும் இருக்கா எண்ணிப் பாத்துக்க என்று சொன்னால், அவன் என்னுடைய எலும்பை எண்ணிவிடுவானே!" என்று சொல்லிக் கொண்டே வந்தான்.
   
சைக்கிள் கடை அருகே வந்ததும், மீண்டும் பாகப்பிரிவினை சிவாஜி வேடம் ஏற்று, எக்ஸ்ட்ராவா காலையும் சற்று நொண்டிக்கொண்டே சென்று, " பா .. பு - ப்ரேக் பிடிக்கின்ற சைக்கிளா கொடுத்திருக்கக் கூடாதா ..." என்று ஈனஸ்வரத்தில் முனகியபடி, கை காயம்(!) பாபுவின் கண்களில் படும்படி காட்டியபடி, சைக்கிள் வாடகையை கொடுத்தான். அண்ணனுடைய காயத்தையும், சட்டையையும், நொண்டிக்கொண்டே வந்ததையும் பார்த்த பாபு, அதிர்ந்து போய், அண்ணனிடம் வாங்கிக் கொண்ட சில்லறையை எண்ணிக்கூடப் பார்க்காமல் கல்லாவில் போட்டுக் கொண்டு, 'சரி, சரி, போயிட்டு வா' என்பது போல தலை ஆட்டினான். 
          ------------------ X -------------------- 
     
 மேற்கண்டவைகள் யாவும் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்வது என்று யாராவது சொன்னால் என் நினைவுக்கு வருகின்ற முதல் விஷயம்.  
         
ஆக - சைக்கிள் விடுவது என்பதை பாடம் பாடமாகப் பிரித்து - சைக்கிளின் அங்கங்கள் என்னென்ன, சைக்கிளைத் தள்ளிக்கொண்டு நடப்பது எப்படி என்கிற எல் கே ஜி, யு கே ஜி பாடங்களை ஒதுக்கி விட்டுப் பார்ப்போம். சைக்கிளில் உந்தி ஏறுவது, சைக்கிளில் சீட்டில் உட்கார்ந்து பாலன்ஸ் செய்து ஓட்டுவது, இலக்கை அடைந்தவுடன் சைக்கிளிலிருந்து லாவகமாக இறங்குவது ஆகிய மூன்று மேஜர் ஸ்டெப்ஸ்தான். 
         
முதல் பாடமாகிய உந்தி ஏறுவதை கற்றுக் கொள்ள, நான் எங்கள் (வாடகை) வீட்டு சுவற்றைத்தான் மலை போல நம்பி செயல் பட்டேன். சைக்கிளை, எனக்கும் சுவற்றுக்கும் இடையில் நிறுத்திக் கொள்வேன். சில சமயம் சுவற்றின் மீது சார்த்தி வைத்தே ஆரம்பிப்பேன். பெடலை வாகாக வைத்துக் கொண்டு, பெடல் மீது இடது கால் கொண்டு ஓர் உந்து உந்துவேன். சைக்கிள் முன்னோக்கி நகரும். சொல்ப நேரத்தில் சைக்கிள் என் பக்கம் சாய்ந்தால் - ப்ரேக் பிடித்தபடி காலை ஊன்றிக்கொண்டு நின்றுவிடுவேன். சைக்கிள் சுவர் பக்கம் சாய்ந்தால் - வலது பக்க ஹாண்டில் பார் - (நான் அவசரமாக என் வலது கையை அகற்றிக் கொள்ள) சுவற்றில் 'டர்ர்..ர்ர்ர்... ' என்று அழியாத கோலங்கள் இட்டு, நிற்கும். நாளடைவில் ஹாண்டில்பார், சுவற்றின் காரையைப் பெயர்த்து, செங்கல் எல்லாம் கண் திறந்து சுவற்றைப் பார்ப்போரைப் பார்த்துப்  பல்லிளித்தன!  சுவற்றை ஹாண்டில்பார் கொண்டு, அகலமாகவும் ஆழமாகவும் உழுது வைத்திருந்தேன். 
          
வீட்டு வாடகையை வாங்கிக் கொள்ள மாதா மாதம் வருகின்ற மகாதேவன் என்பவர், சாதாரணமாக வாடகையை வாசலோடு வாங்கிக் கொண்டு சென்று விடுவார். அவரிடம் ஒவ்வொரு மாதமும் அப்பா வாடகைப் பணம் கொடுக்கும் பொழுது வீட்டில் பார்க்கப்பட வேண்டிய பழுதுகள் பற்றி சிறு குறிப்பு வரைவார். மகாதேவன் 'ஆள் அனுப்புகிறேன்' என்று சொல்லிக் கொண்டே, பணத்தை எண்ணியபடி சென்று விடுவார். 
         
அந்த மாதம் வாடகைப் பணம் வாங்க வந்த மகாதேவனிடம், அப்பா 'வீட்டு சுவர் எல்லாம் காரை பெயர்ந்து உதிர்கிறது. கொத்தனாரை அனுப்பி சரிசெய்யச் சொல்லணும்' என்றார். வழக்கம் போல தலை ஆட்டி, 'ஆள் அனுப்புகின்றேன்' என்று சொல்லிச் செல்வார் என்று பார்த்தால், அவர் 'அப்படியா? எங்கே? நான் பார்க்கிறேன் ... ' என்று சொல்லியவாறு படி ஏறி (எங்கள் வீட்டுக்கு ஏழு படிகள்!) வர ஆரம்பித்தார். 
    
நாங்கள் மூன்று பேரும் (சென்ற அத்தியாய இறுதி போலவே)  'செய்வதறியாது திகைத்தோம்.' 
      
(தொடரும்) 
          
பின் குறிப்பு:
கொஞ்சம் பொறுமையா இருங்க. இன்னும் ஒன்று அல்லது இரண்டு பதிவுகளில் முடித்து விடப் பார்க்கின்றேன்! 
   
பின் பின் குறிப்பு: 
இன்னும் தொடர்வதற்கு பதிவர்கள் கிடைக்கவில்லை! 
             

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

ஞாயிறு 215:: கண்டுபிடியுங்கள்!

               
  

                   
1) ஒரிஜினலா அல்லது மாடலா? 

2) எந்த ஊரில் எடுக்கப்பட்டது? 

3) இந்த வண்டியில் / பெட்டியில் யாராவது இருக்கின்றார்களா / இல்லையா? 
   
உங்கள் விடைகளை, (அல்லது கற்பனைகளை!) காரணங்களுடன் பதியுங்கள். 
          

சனி, 17 ஆகஸ்ட், 2013

பாஸிட்டிவ் செய்திகள் கடந்தவாரம் ...


1) ஆட்டோவுக்கு பதிலாக வரப்போகும் குவாட்ரிசைக்கிள் பற்றிய செய்தி 

                                      


2) சிறுவயதில் வீட்டை விட்டு ஓடி, பல்வேறு அனுபவங்களின் மூலம் 'வாழ்க்கையை'ப் படித்து, இன்று முன்னேறியிருக்கும் திரு பிரேம் கணபதி.
                                          


உலக அளவில் முதல் முறையாக, இரைப்பை புற்றுநோய்க்கு காரணமான மரபணுவை கண்டுபிடித்துள்ள, எம்.எஸ். சந்திரமோகன்

                                                                            
 
4) தனிமனிதராய் ஒரு காட்டியே உருவாக்கிய திரு ஜாதவ் பயேங் பற்றிப் படிக்க...
                                                                 


5) விளக்கம் தேவையில்லை அல்லவா!

                                    

6) உலகிலேயே மிகவும் இளம் வயது யோகா ஆசிரியை என்ற பெருமையைப் பெற்றுள்ளார் உ.பியைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஸ்ருதி பாண்டே.

ஜன்சி நகரில் உள்ள பிரமானந்த் சரஸ்தி தாம் என்ற ஆசிரமத்தில் தினசரி காலை 5.30 மணிக்கு தனது யோகா வகுப்பை தொடங்கி சொல்லிக் கொடுக்கிறார் இந்த குட்டி ஆசிரியை.

கடந்த 2 வருடங்களாக யோகா சொல்லிக் கொடுத்து வருகிறார் ஸ்ருதி. அதாவது தனது 4 வயது முதலே அவர் யோகா ஆசிரியையாக மாறி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.