திங்கள், 30 டிசம்பர், 2013

அலுவலக அனுபவங்கள் - டிரான்ஸ்ஃபர் மேட்டர்!


தலைமை அலுவலகம்.

இடமாறுதல்கள் கிடைப்பது கஷ்டமாக இருந்த நேரம். சில டிபார்ட்மெண்ட்களில் 'கொடுக்கவேண்டியதை'க் கொடுத்தால் கிடைக்கும். 

ஒருவர் வெளியூரிலிருந்து வேறு இடத்துக்கு மாறுதல் கேட்டிருந்தார். 

அப்ளிகேஷன் அனுப்பிய கையோடு நேரிலும் சொல்லிப் போக வந்திருந்தார். 

இயக்குனரைப் பார்க்கச் சென்றார். இயக்குனர் "என்ன காரணத்துக்காக இப்போது மாறுதல் கேட்கிறீர்கள்?"

"அதைச் சொல்ல முடியாது ஸார்..."

இயக்குனர் நிமிர்ந்து பார்த்தார். இல்லை, திமிரான பதில் இல்லை இது!

"சொல்லுங்க ஸார்.. சொன்னால்தானே அதில் நியாயமா இல்லையான்னு பார்க்க முடியும்?" 

"இல்லை ஸார்.. சொல்ல முடியாத காரணம் ஸார்...ஆனா நியாமான காரணம்தான் ஸார்..."

"அட, விளையாடாதீங்க... உங்களுக்குச் சொல்ல காரணமில்லை... அப்படித்தானே..."

"இல்லை ஸார்.. அப்படி இல்லை. காரணமில்லைன்னா கேட்பேனா..."
"அப்ப சொல்லுங்க.."

"சொல்ல முடியாத காரணம் ஸார்..."

'சில்லறை புரளாத இடமாயிருந்தாலும் சில்லறை தாராளமாகப் புழங்கும் இடத்துக்கு மாறுதல் கேட்பார்கள். இந்த இடம் 'அந்த' வகையில் 'நல்ல' இடமாச்சே...'

இயக்குனர் மோவாயைத் தடவினார். 'பெல்'லை அடித்தார். உள்ளே வந்த பியூனிடம் விஸ்வநாதன் ஸாரை வரச் சொல்லு" என்றார். 

விஸ்வநாதன் உள்ளே வந்தார். 

"விஸ்வம்.... இவரைக் கொஞ்சம் கேளுங்க... டிரான்ஸ்ஃபர் கேக்கறார். காரணம் கேட்டா சொல்ல முடியாத காரணம்கறார். நீங்க கேளுங்க... காரணம் தெரியாம எப்படி மாறுதல் கொடுப்பது?"

இரண்டு மூன்று முறை கேட்டும் விஸ்வநாதனுக்கும் அதே பதில்தான் 
வந்தது.  இருவருமே ஆர்வமாயினர். 

"அட அஃபீஷியலாக் கூட வேண்டாம்... என்ன காரணம்னு சொல்லுங்க.. அப்பத்தான் எங்களால ஒரு முடிவுக்கு வர முடியும்.."

"ஸார்... அது வந்து...எப்படிச் சொல்றது.. "

"அட, சொல்லுங்க... 


".............................."

இல்லாட்டிப் போங்க ஸார்.. எங்களால ஒன்னும் பண்ண முடியாது"

"இல்லை ஸார்... வந்து... நீங்க அஃபீஷியல் இல்லைன்னு சொல்லியிருக்கீங்க... தப்பாவும் நினைக்கக் கூடாது... கேட்கவும் கூடாது..."

இவ்வளவு பீடிகை ஆர்வத்தை அதிகப்படுத்தியது. 

"அட! சொல்லுய்யா..."

"அது வந்து... வந்து...(சுற்றிலும் பார்த்துக் கொண்டார்) ஸார்.. கேட்டுடாதீங்க ஸார்.. ............................  குவார்ட்டர்ஸ்ல இருக்கேன்னு உங்களுக்குத் தெரியும். நான் குடியிருக்கற வீட்டுக்குப் பக்கத்து வீட்டுலதான் ஸார் ரகுராமன் ஸார் இருக்கார் ... (ரகுராமன் என்பவர் இந்த இயக்குனருக்கு அடுத்தபடி அந்தஸ்து உள்ள இயக்குனர்) அவருடைய மிஸஸ் குறி சொல்றாங்க ஸார்... "

"அதுல உங்களுக்கு என்ன?"

"சங்கடமே அதான ஸார்... அவங்க மேல அம்மன் இறங்கி அருள் வருதுன்னுட்டு குறி சொல்றாங்க... நடு ராத்திரிலதான் குறி சொல்றாங்க..."

"ஓ.. உங்க தூக்கம் கெடுதா அதுல.." - விஸ்வநாதன்.

"சும்மா இருங்க விஸ்வம்...அவர் சொல்லட்டும். நீங்க சொல்லுங்க.." என்றார் இயக்குனர்.

"நடு ராத்திரிலதான் அவங்களுக்கு அருள் வருமாம்... அப்போ குறி சொல்றாங்க... ஏகப்பட்ட கூட்டம்.. என்னைத்தான் ஸார் கூப்பிட்டு டோக்கன் குடுக்கச் சொல்றாங்க... என்னைத்தான் வசூல் பண்ணிக் கொடுக்கச் சொல்றாங்க... வாரத்துல நாலு நாள் ராத்திரி கண்ணு முழிச்சு டோக்கன் கொடுக்கணும்... காசு வசூல் பண்ணனும்...மறுநாள் காலை அவங்க வீட்டுக்குப் போய் வசூல் ஆன ரூபாயை அவங்க கிட்ட கொடுக்கணும். டோக்கன் கணக்கோட 'டேலி' ஆகுதான்னு பார்த்து வாங்கிப்பாங்க... ரொம்பக் கஷ்டமா இருக்கு ஸார்... பலநாளா இப்படியே நடக்குது... வேற யாரையும் கூப்பிடவும் மாட்டேங்கறாங்க... தாங்க முடியல... கேட்டுடாதீங்க ஸார்..."

இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

"உண்மைதான். இதை என்ன காரணம்னு குறிப்பிட முடியும்?"

"குறி சொல்றது பலிக்குதாமா?" என்று கேட்டார் இயக்குனர்.

'இது என்ன கேள்வி?' என்பது போலப் பார்த்தார் விஸ்வம்.

ஏதோ பலிக்குது போல ஸார்.. இல்லன்னா ஒரு நாளைப் போல இவளவு கூட்டம் வருமா?" 

"சரி, நீங்க போங்க... நாங்க பார்த்துச் செய்யறோம்" என்று அவரை அனுப்பி வைத்தார் விஸ்வம். 

"என்னைய்யா சொல்றே... என்ன செய்யலாம் இவருக்கு?  

"பாவமாத்தான் இருக்கு"

"நடுவுல வந்து டிரான்ஸ்ஃபர் கேட்டு, நாம கொடுத்தா பிரச்னையாகுமா..." 

"வேற யாராவது இதே இடத்துக்குக் கேட்டிருந்தாதான் பிரச்னை. நல்லவேளையாய் இந்த இடத்துக்கு வேற ஒரே ஒரு ஆளைத் தவிர வேற யாரும் கேட்கலை. அவரும் ரொம்ப நாளைக்கு முன்னால கேட்டதுதான். அப்புறம் எதுவும் ப்ரெஸ் செய்யவில்லை. ஏதாவது சொல்லி இவருக்குப் போட்டுடலாம்"

"அவர் பிரச்னை பண்ணுவாரா?"

"மாட்டார்னு நினைக்கறேன். பார்த்துக்கலாம் சார்..."

"ரகு மிஸஸ் கிட்ட குறி கேட்கலாமா" என்றார் ஸீரியசாக! 

"இவரைப் பத்தி அவங்க கிட்டயேவா... போங்க ஸார்..."

"இவரைப் பத்தி இல்லீங்க... நம்ம சொந்தப் பிரச்னையைப் பத்தி கேட்டுப் பார்க்கலாமா?"

சிரித்து விட்டு வெளியே போய் விட்டார் விஸ்வநாதன். 

சனி, 28 டிசம்பர், 2013

பாஸிட்டிவ் செய்திகள்


1) குளிர்சாதனம் செய்தோ, குடிதண்ணீருக்கென்றோ அனாவசியச் செலவு செய்யாமல், சோம்பல் பாராமல், யோசித்து, அழகாக தன்னுடைய வீட்டை வடிவமைத்திருக்கும் பம்மல் இந்திரகுமார்.2) இதுவும் கட்டுமானத்துறை சம்பந்தப் பட்ட செய்தியே. முயற்சி இருந்தால் வெற்றியடையலாம் என்று நிரூபித்திருக்கிறார் சென்னை முகப்பேரைச் சேர்ந்த பொறியாளர் எஸ்.நடேசன்.  ‘தமிழகத்தை குறைந்த நீராதாரம் கொண்ட மாநிலம் என்று கூறமுடியாது. முறையான நீர்நிர்வாகம் இல்லாததே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்குக் காரணம்’ என்று ஆணித்தரமாக கூறுகிறார் அவர்.   எவ்வளவு செலவை மிச்சப்படுத்த முடிகிறது....!


புதன், 25 டிசம்பர், 2013

தினமணி, தி இந்து தீபாவளி மலர்கள்,லபக்தாஸ் ஃபோன், கல்கி சிறுகதை, கிரி ட்ரேடிங் - வெட்டி அரட்டை.


முன்னாள் கலெக்டருக்கு தொலைபேசிய 'லபக்தாஸ்':

இன்றைய தமிழகத்தில் லஞ்சம், ஊழலைக்கூட ஒழித்துவிடலாம். ஆனால், மதுவை ஒழிக்க முடியுமா என்பதுதான் பெரிய கேள்வியாக உள்ளது. மதுரை மாவட்டத்தில் நான் ஆட்சியராகப் பணியாற்றியபோது நள்ளிரவு 12 மணிக்கு ஒருவர் தொலைபேசியில் அழைத்தார். எனக்கோ எங்காவது சட்ட - ஒழுங்குப் பிரச்னை ஏற்பட்டு விட்டதா... அல்லது எங்காவது கலவரமா என்ற பதற்றத்தில், 'சொல்லுங்க..’ என்றேன். 

'ஐயா... கலெக்டர் சார் பேசுறீங்களா?’

'ஆமாம்... சொல்லுங்க!’

'நான் உசிலம்பட்டியில் இருந்து பேசுறேன்’ என்று சொல்லவும், எனக்கு பதற்றம் மேலும் அதிகமானது. 'என்ன பிரச்னை சொல்லுங்க...’

'ரொம்ப முக்கியமான பிரச்னைங்க ஐயா...’

'என்னன்னு சொல்லுங்க...’ என்றேன் மேலும் பதற்றமாக.

'உசிலம்பட்டி பஸ் ஸ்டாண்ட் இருக்குல்ல.. அந்த பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல ஒரு டாஸ்மாக் கடை இருக்குதுல்லய்யா... அந்த டாஸ்மாக் கடையில விற்கும் ரம்ல ஒரு வாரமா கிக்கே இல்லைய்யா... அதுக்கு நீங்கதான் எதாவது செய்யணும்’ என்றார்.

'ரம்'மில் 'கிக்' இல்லை என்று மாவட்ட ஆட்சித் தலைவரை நள்ளிரவு 12 மணிக்கு அழைத்துப் பேசும் அளவுக்கு தமிழன் முன்னேறிவிட்டான்.

முன்னாள் கலெக்டர் சகாயம், சமீபத்திய கூட்டம் ஒன்றில், அவரே சொன்னது.

========================================================


சமீபத்தில் கிரி ட்ரேடிங் ஏஜன்சி செல்ல வேண்டிவந்தது. 'ஆஞ்சி' கோவில் போனால், மாலை 4.30 க்குத்தான் திறக்கும் என்றார்கள். காலை 5 மணி முதல் மதியம் 12 மணி  வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும் நேரமாம். 
அது தெரியாமல் சீக்கிரம் சென்று விட்டதால் காத்திருக்கும் நேரத்தில் பக்கத்துக் கடைகளைப் பொறுக்கலாம் என்றால் ஓரிரண்டு கடைகள் தவிர மற்ற எல்லாம் மூடியிருந்தது. ராகவேந்தரா கோவில் கூட மூடியிருந்தது. ஹாட் சிப்ஸ் போனோம். அப்புறம் 'கிரி ட்ரேடிங்'குள் நுழைந்தோம். 

பக்தி மணம்!  ஊதுபத்தி வாசனை. புத்தகங்களில் (இங்கு வாங்க) சுவாரஸ்யம் இல்லை. நேரம் போக வேண்டுமே... சுற்றி வந்தால் ஒரு பெண் ரயில்வே டிக்கெட் கவுண்டரில் ஒரு டச் ஸ்க்ரீன் போர்ட் இருக்குமே, அது போல ஒன்றின் அருகே நின்று பாட்டு ஆர்டர் தந்து கொண்டிருக்க, ஊழியர் ஒருவர் அவர் கேட்ட பாடல்களை 'டச் ஸ்க்ரீனி'ல் தொட்டு டவுன்லோட் செய்து ஒரு சிடியில் பதிவு பண்ணித் தந்தார். 5 நிமிடங்களில் வேலை முடிந்தது. அந்தந்த பாடல்களுக்கு விலை அதிலேயே குறிப்பிடப் பட்டிருக்கிறது.


ADD என்ற இந்த வசதி நாமே தெரிவு செய்து விரும்பும் சாதனத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
நானும் நீண்ட நாட்களாய்த் தேடிக் கொண்டிருந்த சில பாடல்களை 169 ரூபாய்க்கு ரெகார்ட் செய்து கொண்டு வந்தேன்!
ஆஞ்சி கோவிலில் என் ராசி, நாங்கள் போகும் நேரமெல்லாம் சர்க்கரைப் பொங்கல்தான் தருகிறார்கள். புளியோதரை வாங்க முடியவில்லை.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அபூர்வப் பெயர் :

என் மாமா ஒருவரின் பெயர் விசுவேஸ்வரன். அவர் வேலை செய்த அரசு டிபார்ட்மெண்ட்டில் இவர் பெயரில் இவர் ஒருவர் மட்டும்தானாம். இந்தப் பெயர் அவ்வளவு அபூர்வம் என்பது ஆச்சர்யமாக இருந்தது. இன்னொரு மாமா பெயர் யக்ஞராமன். இந்தப் பெயரிலும் நிறையப் பேர்கள் பார்க்க முடியாது!

======================================================
பழைய செய்தி :

கல்கியில் நமது ப்ளாக்கர் நர்சிம் சிறுகதை. இதற்கு முன்னரும் கல்கியில் இவர் சிறுகதை ஒன்று படித்திருக்கிறேன். சாதாரணமாக இருந்தது. நான் படித்தது அவர் எழுதியுள்ள 'லவ் இச் சம்திங்'.  ஓகே ரகம். சிலசமயம் சில கதைகள் அமைந்து விடுகின்றன! அந்த வகையில் இதுவும் ஒன்று.


ஓவியர் மணியம் அவர்களைத் தொடர்ந்து அவர் மகன் மணியம் செல்வன் படம் வரைய வந்தது தெரியும். மூன்றாவது தலைமுறையாக  மணியம் செல்வன் மகள்கள் சுபாஷிணியும் தாரிணியும் படம் வரைகிறார்கள் என்ற செய்தியைத் தருகிறது கல்கி. புதிய தலைமுறை வார இதழில் கவிஞர் பா. விஜய் எழுதிய புலிகளின் புதல்வர்கள் தொடருக்கு வண்ண ஓவியங்கள் வரைந்திருக்கிறார் தாரிணி.

பிரபஞ்சனின் காலம் தோறும் தர்மம்-மகாபாரத மாந்தர்கள் பகுதியில் ஒரு  வாரம் சகுனி. அழகாய் எழுதியிருக்கிறார் பிரபஞ்சன். எந்த அளவு சுவாரஸ்யம் என்றால், அட்டைப்படமாக அந்த தொடரைக் குறிப்பிட்டு சகுனியையே அட்டைப் படமாகப் போடுமளவு!
புத்தக மதிப்புரையில் ஆனந்த் ராகவ் சிறுகதைத் தொகுப்புகள் பற்றி எழுதி ஆவலைத் தூண்டியிருக்கிறார்கள். நான் இதுவரை அவர் எழுத்துகள் படித்ததில்லை. படிக்கும் ஆவலைத் தூண்டுகிற்றன. (டாக்சி டிரைவர், துளி விஷம்)

============================================
எவ்வளவு சீக்கிரம் சொல்லிட்டேன்?

இந்தமுறை தினமணி தீபாவளி மலர் இலக்கிய மலராக மலர்ந்திருக்கிறது. ஆர். சூடாமணி, நா.ரகுநாதன், ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள், தேவனின் குறுநாவல், திகசி, ஜெயகாந்தன், விக்ரமன், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, கு, சின்னப்பா பாரதி பற்றி வேறு சில பிரபலங்களின் கருத்துகள், சா. கந்தசாமி, ஜெயமோகன், நெல்லை கண்ணன், தமயந்தி போன்றோரின் சிறுகதைகள், விளம்பக் காலம் என்ற நாஞ்சில் நாடனின் சுவாரச்ய்ச்மான கட்டுரை, எம் ஜி ஆரிடம் ஜெயலலிதா அந்தக் காலத்தில் எடுத்த பேட்டி...


தி இந்து இந்த வருடம்தான் வெளியிடப்பட்ட செய்தித் தாள் என்றாலும் தீபாவளி மலர் வெளியிட்டு விட்டார்கள். ஒரே சினிமா செய்திகள். என்றாலும் இதிலும் சுஜாதா, வாஸந்தி, அழகிய பெரியவன் போன்றோரின் சிறுகதைகள் உண்டு. சினிமா பற்றி சாரு நிவேதிதா, எஸ்ரா, பட்டுக்கோட்டை பிரபாகர் போன்றோர் கட்டுரைகள் இருக்கிறது.

இரண்டுமே சுவாரஸ்யத்துக்குக் குறைவில்லை. அதனாலேயே மெதுவாகத்தான் படிக்க முடிந்தது ((சாக்கு!)  என்றாலும் தினமணிக்கு அதிக மார்க்!

திங்கள், 23 டிசம்பர், 2013

ஒரு பக்கா ரசிகரின் பார்வையிலும், ஒரு பாமரனின் பார்வையிலும் ...
சங்கீத சீசன் என்பது எப்பொழுது துவங்குகிறது?

அது சென்னையில் நவம்பர் மாதமே துவங்கிவிடுகின்றது. பல இடங்களில் குறிப்பாக 12 B பஸ் செல்கின்ற தடங்களில் ஏதாவது நான்கு இடங்களில் இரண்டு வாழை மரங்கள் கட்டி, ஒரு வெள்ளைத்துணி பானர் அந்த மரங்களுக்கு இடையே கட்டி, ஒருநாள் மாலை நாதசுரக் கச்சேரியுடன் துவங்கும். மறுநாள் முதல் காலையில் ஒரு லெக் டெம் 'ஷாடவ/ஔடவ ராகங்களில் ஸ்வாதித் திருநாள் கிருதிகள்' என்று ஏதாவது ஒரு முழ நீளத் தலைப்பு. அவ்வளவுதான் - விழா ஆரம்பமாகிவிட்டது. 
மேடையில் இருக்கின்ற மக்களில் பாதிப்பேர் அளவுக்கு ஆடியன்ஸ். அதிலும் அரைவாசிப் பேரு அரைத்தூக்கத்தில் - கை தட்டும் ஓசை கேட்கும் பொழுதெல்லாம் தூக்கத்திலிருந்து விழித்து, நான்கு தடவை கை தட்டி, தூக்க ஆவர்தனத்தின் அடுத்த காலத்திற்கு செல்வார்கள். இந்தத் திருவிழா சில இடங்களில் நான்கு அல்லது ஐந்து நாட்கள் மட்டும் நடைபெறும். மேடையில் பாடுபவர்களது / பக்க வாத்தியம் வாசிப்பவர்களின் சுற்றமும் நட்பும் ஆடியன்ஸாக அமர்ந்து ஒவ்வொரு ராக ஆலாபனைக்கும், பாட்டுக்கும், கை தட்டி உற்சாகப்படுத்துவார்கள்!

பெரிய சபாக்கள் தங்கள் கடையை விரித்தவுடன், இந்த வாழை மர பார்ட்டிகள் சைலண்ட் ஆகிவிடுவார்கள்.

அடுத்த வகை இசை மண்டபங்கள் செவிக்கும், வயிற்றுக்கும் ஒருங்கே விருந்து படைப்பவர்கள். கச்சேரி வசூலை விட காண்டீன் விற்பனை வசூல் கொள்ளை போகும். ஒரு கப் காபியின் விலை ஒவ்வொரு சீசனுக்கும் ஏறிக்கொண்டே போகின்றது. சென்ற சீசனில் இருபது ரூபாய் என்று பார்த்தேன். இப்போ என்ன விலை என்று சொல்லுங்க ரசிகர்களே!  


எனக்கு என்னவோ சங்கீத சீசன் என்கிற பீலிங் மியூசிக் அகடமியில் மார்கழி ஒன்றாம் தேதி காலை வேளையில் நுழைந்து, அங்கு நுழைவு வாயில் / ஃபிரன்ட் டெஸ்க் இருக்கின்ற இடம் அருகே சுவற்றில் இருக்கின்ற இசைக் கலைஞர்களின் படங்களைப் பார்க்கும் பொழுதும், நான் பிறந்த ஆண்டில் யார் சங்கீத கலாநிதி என்று பெயர்ப் பட்டியலைப் பார்க்கும் பொழுதும், அந்த இடத்திற்கு முதன் முதலில் என் அப்பாவுடன் சென்ற நினைவுகளை அசை போடும் பொழுதும்தான், (ஒவ்வொரு வருடமும்) சங்கீத சீசன் ஆரம்பிக்கின்றது என்கிற ஆழமான உணர்வு வரும்.

(இன்னும் சொல்வேன்)


======================================================

காலை முதலே சபாக்களில் கச்சேரிகள் இருக்கும். காசு கொடுக்காமல் பார்க்கலாம் / கேட்கலாம். அவ்வளவாக பிரபலம் ஆகாத கலைஞர்களின் கச்சேரிகள் அவை.நெய்வேலி சந்தானகோபாலன் மகள் ஸ்ரீரஞ்சனி சந்தான கோபாலன் அருமையாகப் பாடுகிறார். அவரை மாலை ஸ்லாட்டுக்குக் கூப்பிடுகிறார்கள் என்று சொன்னார்கள். ஆனாலும், இவ்வளவு கூட்டம் அலைமோதினாலும், அவர் தந்தை 'நெய்வேலி' அவரை இலவசக் கச்சேரி டைமில் பாடுவதையே ஊக்குவிக்கிறாராம். நல்ல விஷயம். அவர் பாண்டித்தியம் எல்லாருக்கும் சென்று சேர வேண்டும் என்ற அவா.  இன்னும் பிரபலம் அடைய வேண்டும் என்பதும் காரணமாயிருக்கலாம். எப்படியோ, நல்ல விஷயம்.ரித்விக் ராஜா அடுத்த வருடம் 'காசுக் கச்சேரிக்கு'ச் சென்று விடுவார் என்று நம்பலாம். T M கிருஷ்ணாவின் சிஷ்யர். இந்தமுறை கேட்டதில் ராமகிருஷ்ண மூர்த்தி நன்றாகப் பாடுவதாக மாமா சொன்னார். ஸ்வர்ண ரேதஸ் இன்னும் பிற்பகல் கச்சேரிதான் செய்து கொண்டிருக்கிறார்.

சபாக்களில் மெயின் கச்சேரி 6 மணிக்கு, 6.15 மணிக்கு, 6.30 மணிக்கு அல்லது 7 மணிக்குத் தொடங்குகின்றன. மெயின் கச்சேரி என்பது எல்லாம் 'காசு'க் கச்சேரிகள்.  (சீசன்) டிக்கெட் வாங்க வேண்டும். இப்போதெல்லாம் கல்யாண விருந்தில் ஒரே மாதிரி 'செட்'டில் உணவு வகைகள் பரிமாறுவது போல, ஒரு வர்ணம், ஒரு கன ராகம், ஒரு ராகம் தானம் பல்லவி, அப்புறம் ஒன்றிரண்டு துக்கடாக்கள், மணி என்ன ஆச்சு? 9.15? சபா செயலர் கொஞ்சம் ஓகே என்றால் 9.30 க்கு தில்லானாவோ, மங்களமோ பாடி கச்சேரியை முடித்து விடுவார்கள்.

Finished. Package system மாதிரி!

ரசிகர்களும் ராகம் தானம் பல்லவியிலேயே வாட்சைப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். ஒன்று, கேண்டீனில் போய் குறைந்தபட்சம் ஒரு காஃபியாவது சாப்பிட்டு வர வேண்டும், அல்லது டிஃபன். சாப்பிட்டு விட்டு உடனே கிளம்பினால்தான் சென்னை டிராஃபிக்கில் காலாகாலத்தில் வீடு போய்ச் சேர முடியும். படுக்க முடியும். காலை அலுவலகம் செல்ல வேண்டுமே...
'தனி' வாசிக்க ஆரம்பிக்கும்போது மக்கள் கலைய ஆரம்பிப்பது பார்க்கவே சங்கடமான காட்சி.

சென்ற சீசனில் அபிஷேக் ரகுராம் சொன்னார் : "இந்தப் பாடலில் தனி ஆவர்த்தனம் வரும். அது தொடங்கும்போது கிளம்பிச் செல்வது என்பது அவர்களை அவமதிப்பது போலாகும். காஃபி அல்லது டிஃபன் சாப்பிடப் போக விரும்புபவர்களுக்காக இந்தப் பாடல் தொடங்குமுன்னர் செல்வதற்கு 3 நிமிடம் இடைவெளி விடுகிறேன்" கொஞ்சம் அனா பினாத் தனமாக இருந்தாலும் கலைஞர்களுக்கு ஏற்படும் இன்சல்ட்டுக்கு முன்னால் இது ஒன்றுமில்லை என்றுதான் தோன்றியது.கல்கி விமர்சனத்தில் டி எம் கிருஷ்ணா கச்சேரி பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். இன்னொரு (ஃப்ளூட்) மாலி உருவாகிறாரோ என்று பேசுகிறார்களாம். கச்சேரியில் சம்பிரதாயங்களை உடைக்கிறார். சென்றமுறை ஒரு ராக ஆலாபனை செய்துவிட்டு, பாடலுக்குப் போகாமல் அப்படியே அடுத்த பாடலுக்குப் போய்விட்டார். 
இந்த முறை வாணி மகாலில் ஆலாபனை, நிரவல் என்று அற்புதமாய் ஒரு பாடலைப் பாடி விட்டு (அப்போது மணி எட்டு) இன்னும் ஒன்றேகால் மணி நேரம் இருக்கிறது, என்ன பாடப் போகிறாரோ என்று பார்த்தால் 'போதும், இதற்குமேல் நான் பாடினால் போலியாக இருக்கும்' என்று கச்சேரியை முடித்து விட்டாராம்! என்னதான் ஓசிக் கச்சேரி என்றாலும் இப்படியா என்று முணுமுணுத்துக்கொண்டே கலைந்தனராம் ரசிகர்கள். 

இத்தனைக்கும் இந்தப் பாடலைத் தொடங்குமுன் எத்தனை மணி வரை பாடலாம் என்று சபா செயலரைக் கேட்டுக் கொண்டாராம். அவரும் 9.15 மணி வரை பாடலாம் என்று சொல்லியிருந்தாராம்!

அந்தக் காலத்தில் கச்சேரிகள் 6 மணிநேரம், 7 மணி நேரம் கூட நடந்திருக்கிறது. மதுரை சோமு இரவு 9 மணிக்கு மேல்தான் கச்சேரியே தொடங்குவாராம். முடியும்போது காலை மணி 3 அல்லது நான்காகுமாம். மதுரை மணி, செம்மங்குடி, மகாராஜபுரம் விஸ்வநாதையர் பற்றியெல்லாம் தெரியாது. சோமு கச்சேரி தஞ்சையில் கண்காட்சியில் கேட்டிருக்கிறேன். 
அது மட்டுமா? இப்படியா டிக்கெட் போட்டு உள்ளே விட்டார்கள்? ஒவ்வொரு உற்சவத்திலும் ஒவ்வொரு கோவிலிலும் கச்சேரிகள் இருக்கும். அதுவும் புகழ் பெற்றவர்கள் கச்சேரி. மக்கள் 'உங்கள் ஊரில் திருவிழாவில் இந்த வருடம் யார் கச்சேரி?' என்றுதான் கேட்பார்களாம். சிறு பிள்ளையார் கோவிலாக இருக்கும். நான்கு சந்துகள், அல்லது தெருக்கள் கூடும் சங்கமமாக இருக்கும். பெரிய பெரிய பாடகர்கள் அங்கு உட்கார்ந்து கச்சேரி செய்வார்கள். இன்னார்தான் என்றில்லாமல் எல்லோரும் ரசித்த கச்சேரிகள் அவை. பிடிக்காதவர்கள் போய்க்கொண்டே இருக்கலாம். ஆனாலும் பெரும் கூட்டம் குழுமி கேட்டுக்கொண்டிருக்கும். 
கர்னாடக சங்கீதம் ஜாதி, மத வித்தியாசமின்றி எல்லாரையும் சென்றடைந்த காலம் அது. 

[T M கிருஷ்ணா தன் புத்தக வெளியீட்டு விழாவில் பேசியது படித்ததும் இவை நினைவுக்கு வந்தன.] 
====================================================
[முக நூலில் பகிரப்பட்டவை]