சனி, 31 அக்டோபர், 2009

நண்பர்களுக்கு வலை விரிக்கும் ...


Here, I have written an article about my friends with the hope I may get some lead about our old school friends. Please help me ... Rangan.

என் இனிய நண்பர்கள்.
நான் நாகையில் 1953யிலிருந்து 1964வரை பள்ளியில் படித்த காலத்தில் எனக்கு நிறைய நண்பர்கள் இருந்தார்கள். பலவேறு கால கட்டத்தில் நட்பு பலப்பட்டது. பல்கிப் பெருகியது. சில நட்புக்கள் ஆழப்பட்டது. சில சுருங்கின. சில நண்பரகள் கருத்து வேறுபட்டு விலகினர்.ஆனால் பொதுவாக நட்பு வட்டம் பெருகி வளர்ந்தது. சந்தானம், ராமன், சிவராமகிருஷ்ணன், முத்து ரத்தினம்.போன்றோரின் நட்பு முதல் வகுப்பு தொடங்கி, பள்ளி இறுதிவரை தொடர்ந்தது. சில நண்பர்கள் அவர் தம் பெற்றோரின் அலுவல் மாற்றம் காரணமாகத் தொடர இயலவில்லை. அந்த வகையில் நான் நாகநாதர் கோவில் சன்னதி தெருவில் வசித்த ஜி.ராம்குமார், ஞானப்பிரகாசம், திருக்கடையூர் நாகராஜன், பாண்டியன், வங்கி ஏஜண்ட் மகன் மூர்த்திவாசன், கஸ்டம்ஸ் ஆபிஸ் சூபரிண்டெண்ட் மக்ன் ,மணி (பாலக்காட்டு கொழுக்குமொழுக்கு பையன்) போன்றோரின் பிரிவை இன்றும் உணர்கிறேன். பள்ளி இறுதிவரை வலுப் பட்ட நட்பு, கல்லூரியில் சேர்ந்த பின் விடுபட்டது. அப்படியும் விடேன் தொடேன் என்று வளர்ந்த நட்பு இன்று வரை தொடர்கிறது.

சந்தானம், புஷ்பவனம், ராமன்(சாக்ரடீஸ்), ஷ்யாம்சுந்தர்,, உப்பிலி ஸ்ரீனிவாசன், தேவாஜி (audco valves), ஜோசஃப் ராயன் போன்றவர்களின் நட்பு இறுக்கம் 1964க்குப் பின்பும் தொடர்ந்தது, தொடர்கிறது. பின்பு அலுவலகத்தில் சேர்ந்த பின்அங்கும் ஒரு நட்பு வட்டம் மலர்ந்து வளர்ந்தது. சிறு வயது முதலே ஒரு சில நட்புதான் தொடர்கிறது. எல்லோரிடமும் பிரியமாக இருந்தாலும் ஒரு சிலரிடம் மட்டும்தான் நாம் இணைந்து பழகுகிறோம். காதலுக்குமட்டுமல்ல. நட்புக்கும் ரசாயனம் தேவைப்படுகிறது.


நட்பு வட்டத்திலும் ஒரு நெருங்கிய வட்டம் உண்டு. சந்தானத்திடம் பழகிய அளவு வேறு யாரிடமும் நான் பழகவில்லை. சந்தானம் மறைந்த பின்பும் அந்த ஸ்தானத்தை யாருக்கும் அளிக்கும் மனப்பாங்கும் வரவில்லை. நெருங்கிய நண்பர்களும் மிகச சிலரே. நானும் என் நெருங்கிய நண்பர் ஷ்யாமும் 55 வயதிலேயே இருக்கும் நட்பை வளர்ப்பதில் மிகுந்த கவனம் செலுத்தினோம். அந்த வயதிற்கு பிறகு புது நட்பு வருவது கடினம். வந்தாலும் அது சுய நலமில்லா நட்பாக வளர்வது அரிது. எங்கள் உடன் படித்த ஒரு அன்பருடன் நட்பை வளர்க்க முயற்சி செய்து மிகப் பெரிய பாடம் கற்றோம். 15வயதில் பார்த்தவர் 50 வய்திலும் அதே உள்ளப் பாங்குடன் இருப்பதில்லை.
 
அலுவலக நண்பர்கள் அலுவல் காரணமாகவோ, உயர்பதவி பெறுவதாலோ பல வேறு காரணங்களால் நட்பு இடைவெளி அதிகமாக சாத்தியங்கள் உண்டு.. எனக்கு பல நட்பு வட்டங்கள் உணடு. நாகை நண்பர்கள், அலுவலக் நண்பர்கள், சபரிமலை செல்வதால் வளர்ந்த நட்பு, கூட்டு முயற்சியில் வர்த்தகம் செய்வதால் உருவான (time tested) நண்பர் குழாம் என. அதிகமான நண்பர்களைப் பெற்றிருப்பதில் எனக்கு மிகுந்த சந்தோஷம். நண்பர்களுடன் பேசுவதில்,பழகுவதில்.அவர்கள் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்வதில் விவரிக்க இயலாத மன திருப்தி உண்டாகிறது. Tell me your friends, I will tell you who you are என்று சொலவடை உண்டு. சில நண்பர்களை இனனமும் நான் தேடிக்கொண்டு இருக்கிறேன். திரு.ஜோசஃப் ராயன் ( microbiologist KMC) குப்புசாமி (Ex police wireless dept), ஸ்ரீதர் ( sivakavi family) மாங்குடி சிவராமகிருஷ்ணன்,(M.K.Varadarajan's brother) என சிலர்.


நாங்கள் கடந்த 15 வருடங்களாக Ngt Friends' Meet தொடர்ந்து நடத்தி வருகிறோம். எல்லோரும் வருடத்தில் ஒரு நாள் அல்லது நண்பர்கள் வசதிக்கேற்ப வேறிடத்திலோ சேர்ந்து, பழைய, நாகையில் வாழ்ந்த,வளர்ந்த நாட்களை, நினைவுகளை அசை போடுவதில் சுவை காண்போம். பழைய நண்பர்கள் புது வரவாக மீண்டும் கிடைப்பார்களோ என்ற எதிர்பார்ப்பும் உண்டு!!

with love and affection,
rangmani1951@gmail.com

வெள்ளி, 30 அக்டோபர், 2009

வாழ்க்கையில் முன்னேற ...014

பாடம் பதினான்கு:
நாம் விழித்திருக்கும் நேரங்களில் செய்யும் செயல்களை - இரு வகைகளாகப் பிரிக்கலாம்.
ஒன்று - நமக்காகச் செய்துகொள்வது.
இரண்டு மற்றவர்களுக்காகச் செய்வது.
நமக்காக நாம் செய்யும் செயல்கள் - வேறு யாராலும் சாதாரணமாக செய்ய முடியாது. உதாரணம் - பல் தேய்ப்பது, காபி குடிப்பது, உணவருந்துவது, வலைப் பதிவு படிப்பது, பாட்டுக் கச்சேரி கேட்பது - இது போன்றவை. - நம் கட்டுப்பாட்டில் இருப்பவை. இவைகளை நாம் திட்டம் போட்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்யலாம்.
மற்றவர்களுக்காகச் செய்வது - அலுவலக வேலை, நண்பருக்கு உதவுவது, குழந்தைகளை பள்ளிக்குக் கொண்டுபோய் விடுவது / திரும்ப அழைத்து வருவது,  வலைப் பதிவு எழுதுவது, சமைப்பது, பரிமாறுவது, கடைக்குப் போய் காய்கறி பழங்கள் பொருட்கள் வாங்கி வருவது இதுபோல் எவ்வளவோ பட்டியலிடலாம். இதில் சில நம் கட்டுப்பாட்டில் - பல நம் கட்டுப்பாட்டில் இருக்காது. பஸ் அல்லது டிரைன் பிடித்து வேலைக்கு சென்று / திரும்புதல் - நேரக் கட்டுப்பாடு - மற்றவர்கள் சம்பந்தப்பட்டது - என்பதால் கடினமானது.
இன்றைய பாடத்தின் முக்கியமான விடயம்: சிந்திப்பதும் ஒரு செயல்தான். வள்ளுவர் 'பயனில நினையாமை' குறித்து ஏதேனும் எழுதியுள்ளாரா - இல்லையா என்று ஞாபகம் இல்லை - ஆனால் - உங்கள் சிந்தனை பயனுள்ளதாக இருக்கட்டும், உங்களுக்கும், உங்களைச் சார்ந்துள்ளவர்களுக்கும், உங்கள் (மனித)  சமூகத்திற்கும். உங்கள் செயல்கள் உங்கள் சிந்தனையின் அடிப்படையில் இருக்கட்டும். யாரையும், எதற்கும் வசை பாடாதீர்கள்; யாரையும், எதற்கும் சிந்திக்காமல் பின்பற்றாதீர்கள்.
(தொடரும்)


விவரம் அறிய ஆவல்

எங்கள் அன்பு ரசிகர்களே!
இன்று பெங்களுருவில் - ஒரு கறிகாய்க்கடையில் - ஒருவர், சில நெல்லிக்காய்கள் உள்ள கிளைகளுடன் கூடிய கொத்துகள் சிலவற்றை  வாங்கிச் சென்றார். கடைக்காரரிடம், அது என்ன, எதற்கு என்று கேட்டேன். அவர் "எனக்கு சரியாகத் தெரியவில்லை சார் - ஆனால் நேற்றைக்கும் இன்றைக்கும் - நிறைய விற்பனை ஆகிறது. அதை வைத்துப் பூஜை செய்வார்களாம்." என்றார்
மேற்கொண்டு விவரங்கள் அறிய ஆவலாக உள்ளது. இந்தப் பதிவைப் படிக்கும் இரசிகர்களில் யாருக்காவது - இன்று என்ன பண்டிகை / பூஜை - நெல்லிக்கனி / கிளைகளுக்கு அதில் என்ன பங்கு என்பது குறித்து - இதில் தமிழ் / ஆங்கிலத்தில் பின்னூட்டம் இடுங்கள். அல்லது engalblog@gmail.com க்கு மெயிலுங்கள் - அறிய ஆவலாக உள்ளோம்..
 நன்றி.

வியாழன், 29 அக்டோபர், 2009

உள்ளம் கவர் ஆட்டக்காரர்கள் 2

திலிப் வெங்க்சர்கார் 

பொதுவாக மும்பையிலிருந்து விளையாடும் ஆட்டக் காரர்கள் எல்லோருமே கவர்ச்சியான தோற்றம் கொண்டவர்கள்! வெங்க்சர்க்கார் விதிவிலக்கல்ல. இங்கிலாந்தில் தொடர்ந்து மூன்று மேட்ச்களில் சதமடித்த அழகான ஆட்டத்துக்கு சொந்தக்காரர். லார்ட்சில் தொடர்ந்த மூன்றாவது சதத்தை அடித்ததும் இரண்டு கையையும் உயர்த்திஅவர் உணர்ச்சி வசப் பட்டதுதான் அவர் அதிகமாக உணர்ச்சியைக் காட்டியது என்று தோன்றுகிறது!

 ஏப்ரல் 6 ஆம் தேதி பிறந்த வெங்க்சர்கார் அவர் ஆடிய கால கட்டங்களின் மிக Stylish Batsman ஆக அறியப் பட்டவர். Colonel என்ற பட்டப் பெயர் அவருக்கு உண்டு.

75 - 76 களில் நியூசிலாந்துடன் நடந்த மேட்சில் அறிமுகமானவர் அந்த மேட்சில் சோபிக்காவிட்டாலும், 79 இல் பாகிஸ்தானுடன் நடந்த டெஸ்ட் மேட்ச்சில் கடைசி நாளில் வெற்றி பெற 390 தேவை என்ற நிலையில் வெற்றியின் மிக அருகில் ஆட்டத்தைக் கொண்டு வந்தவர். 146 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இப்போதைய ICC  தர வரிசைப் பட்டியல் போல அப்போது வந்த ரேங்கிங்கில் முதல் பேட்ஸ்மேனாக இருந்தவர். வெஸ்ட் இண்டீஸ் அதிவேகப் புயல்கள் மார்ஷல், ஹோல்டிங், ராபர்ட்ஸ் போன்றோர் உலகைக் கலக்கிய பொது அஞ்சாமல் அவர்களை அழகாய் சமாளித்து ஆறு சதங்கள் பெற்றவர்.

உலகக்கோப்பை வென்ற அணியில் அவரும் இருந்தார். 86 இல் லண்டன் லார்ட்சில் நடந்த டெஸ்ட் மேட்சுகளில் மூன்று அடுத்தடுத்த சதங்கள் அடித்து இந்தியா அந்த சீரிசை வெல்லக் காரணமாக இருந்தவர். இந்தியாவில் அப்போதைய Highest Average க்கு சொந்தக்காரர். 

கபிலுக்குப் பிறகு கேப்டன் ஆகவும் இருந்தார். ஒரு வெஸ்ட் இண்டீஸ் பயணப் படுதோல்விக்குப் பின் தலைமை வழக்கம்போலே அவரிடமிருந்து பறிக்கப் பட்டது!

இந்தப் பதிவு வரும் சமயம் இங்கிலாந்தின் பிரபல நடுவர் டேவிட் ஷெப்பர்ட் மரணச் செய்தி வந்துள்ளது. மனம் கவர்ந்த நடுவர். அவர் குடும்பத்தார்க்கு 'எங்கள்' அனுதாபங்கள்.

 

வாழ்க்கையில் முன்னேற ... 013

பாடம் பதின்மூன்று: 
குருவின் சிஷ்யன் ஒருவன் கேட்டான்.
'குருவே - எனக்கும் ஞானம் வேண்டும். கடற்கரைக்குத் திரும்பிச் செல்லவா?'
குரு: 'சென்று?'
சிஷ்: கூழாங்கல் தேடுவேன்!
குரு : (சந்திரமுகி ரஜினி பாணியில்) நான் கேட்டேனா?
சிஷ்: அவரைக் கேட்டீர்களே!
குரு: அதை நான் வாங்கிக் கொண்டேனா?
சிஷ் : இல்லை - அப்படியானால் குருவே -- நல்ல கூழாங்கல் ஒன்று எடுத்து கடலில் வீசிவிட்டு - உட்கார்ந்து யோசிக்கிறேன்.
குரு : இதை எல்லாம் செய்ததால்தான் அவருக்கு ஞானம் வந்தது என்று நினைக்கிறாயா?
சிஷ்: வேறு எதனால் வந்தது - சொல்லுங்க குருவே!
குரு - எல்லா சிஷ்யர்களையும் பார்த்துக் கேட்டார். ' உங்க எல்லோருக்கும் தெரியணுமா?'
சிஷ்யர்கள் : ஆமாம்.
குரு: அப்படியானால் - வாழ்க்கையில் முன்னேற - சென்ற பாடத்தில் - மீனாக்ஷி அவர்கள் பதிந்துள்ள பின்னூட்டத்தைப் படியுங்கள். உங்களுக்கு ஞானம் வரவேண்டும் என்று இருந்தால் - அது ஒரு கூழாங்கல்லிலிருந்து கூட வந்துவிடும்.' இப்பொழுது' அவசியமில்லை என்று இருந்தால் - என் பின்னாலேயே - சிஷ்யர்களாகத் திரிந்து கொண்டிருப்பீர்கள். .. ஞானம் வரும் வரை.
(தொடரும்)

புதன், 28 அக்டோபர், 2009

கனவா இல்லை நினைவா?

தினமலர் வாரமலர் - அக்டோபர் இருபத்தைந்து இதழில் எஸ் எஸ் ஆர - கட்டுரை - (சந்திப்பு கே ஜி ஜவஹர்) - ஒரு பகுதி :
தேவர், 1963ல் மறைந்தார்; நான் (எஸ் எஸ் ஆர) கதறி அழுதேன். மதுரை திருநகரில் மூக்கையா தேவர் மயக்கமுற்று சாய்ந்தார். அண்ணா துரையும், எம்.ஜி.ஆரும் பத்திரிகையாளர் தென்னரசுவின் திருமண விழாவில் கலந்துகொள்ள வந்திருந்தனர். என் காரிலேயே பசும்பொன் விரைந்தோம். போகும் வழியில் ஆண்களும், பெண்களும் அழுதுகொண்டே போய்க் கொண்டிருந்தனர்.
அந்த காலத்து கிராமத்துப் பெண்கள் ரவிக்கை அணியமாட்டார்கள். ஒரு பெண், "ஐயோ, தேவர் பெருமான் இறந்துட்டாரு... தாங்க முடியலையே...' என்று தலைவிரி கோலமாக காரின் எதிரே ஓடி வந்தாள். தன், மாராப்பு கூட நழுவிய நிலையை மறந்து,கதறியபடி அவள் ஓடி வர, உடனே அண்ணா துரை, தன் மேல் துண்டை என்னிடம் கொடுத்து, "போய் அவளுக்கு இந்தத் துண்டை கட்டு...' என்று பணிக்க, நான் ஓடிப்போய் அவளுக்கு துண்டை கட்டிவிட்டேன். அப்போதும் கூட அவள் சுய நினைவு வராதவளாய் கதறியபடியே ஓடினாள்.
"இதுதான் ஒரு தலைவனுக்கு தமிழ்ப் பெண் காட்டும் உணர்வு. கென்னடி இறந்து போனபோது விக்டோரியா ராணி விமானத்தில் வந்தார்களாம். அவர்களுக்கு இதைப்போல் ஒரு உணர்வு இருந்திருக்குமா?' என்று கேட்டார் அண்ணா துரை.

அய்யா பெரியோர்களே - 
தேவர் அய்யா அவர்கள் காலமானது அக்டோபர் முப்பது. அமெரிக்க ஜனாதிபதி கென்னடி சுடப்பட்டு இறந்தது நவம்பர் இருபத்து மூன்று. இரண்டுமே ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்து மூன்று. அப்படி இருக்கையில் அண்ணாதுரை அவர்களுக்கு தீர்க்க தரிசனமா - அல்லது எஸ் எஸ் ஆர அண்ணாதுரை அவர்கள் பேசாததை எல்லாம் பேசியதாகக் கனவு கண்டாரா ? அட்லீஸ்ட் தினமலர் / பேட்டி காண்பவர் - யாராவது கொஞ்சம் கிராஸ் செக் செய்திருக்கக் கூடாதா?

இலக்கிய ரசனை.2

அண்மையில் ஒரு உறவினர் மறைய மறைந்தவரின் சகோதரர் கொடிய விபத்துக்கு உள்ளாகி தன உறவினர்களையே அடையாளம் கண்டு கொள்ள  முடியாத நிலையில் இருக்கிறார்.  அதனின்றும் சில நாட்களுக்குள்ளேயே மேலும் ஒரு விபத்தில் ஒரு அன்புக்குரிய நல்ல மனிதர் அகால மரணம் எய்தினார்.

மரணம். எல்லாவற்றுக்கும் முடிவு.  இதை இதன் தாக்கத்தை திருமூலரின் திருமந்திரம் எவ்வளவு வலுவாகச் சொல்கிறது என்று பார்ப்போமா?

ஊரெல்லாம் கூடி உரக்க அழுதிட்டு
பேரினை நீக்கி பிணம் என்று பேரிட்டு
சூரையங்காட்டிடை சுட்டுப் பொசுக்கிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந்தார்களே.

மரணத்தில் முற்றத்திலேயே நின்று கொண்டு சாப்பிடும் புகைக்கும், சிரிக்கும், மனித இயல்பை இதை விட வலுவாகச் சொல்ல முடியுமா என்ன?

மேலும் ஒன்று அது போலே.

அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடியோடு மந்தணம் புகுந்தார்
இடப்பக்கமே இறை  நோந்ததேன்றார்
கிடைக்கப் படுத்தார் கிடந்தொழிந்தாரே.

இதுவும் திருமந்திரம் தான்.
(அடிசில்: சமையல்.  மந்தணம்: படுக்கை அறை.)

என்னய்யா இது அபசகுனம் மாதிரி என்று தோன்றுகிறதா? அதிலும் ஒரு படைப்பாற்றல் திறன் ஜொலிப்பதைப்  பாருங்கள். ரசியுங்கள். வேறு என்ன சொல்ல!

முதல் முதலாக

மலையாளத்தில் பல பாடல்கள் பாடியிருந்தாலும் சித்ரா தமிழில் அறிமுகமான படம் "நீதானா அந்தக் குயில்" என்ன பொருத்தம்? ஆனால் அவர் பிரபலமானது சிந்து பைரவி பாடல்களால். தேசிய விருது பெற்றுத் தந்தது அது அவருக்கு.

1977 இல் காமன் என்ற ஹிந்திப் படத்தில் முதல் பாடல் பாடிய ஹரிஹரன் கர்நாடக இசைப் பாடகி அலமேலு-மணியின் மகன். அது ஒரு கஜல் பாடல். உத்தரப்ப்ரதேச அரசின் விருதை பெற்றுத் தந்தது அது அவருக்கு.கஜல் ஆல்பங்கள் கொடுத்துப் புகழ் பெற்ற அவருக்கு முதல் தமிழ்ப் பாடல் ரோஜாவில் வரும் "தமிழா தமிழா" பாடல்.

K J யேசுதாசுக்கு (கட்டசெரி ஜோசெப் யேசுதாஸ்). முதல் குரு அவர் தந்தை அகஸ்டின் ஜோசப். பிறகு மியூசிக் அகடமியில் சேர்ந்து தங்க விருது பெற்றவர் செம்பையிடம் சங்கீதம் பயின்றார். தமிழில் அவர் முதல் பாடல் 'பொம்மை' படத்தில் வரும் "நீயும் பொம்மை நானும் பொம்மை" பாடல். ஹிந்தியில் அவர் திறமையை முழுதும் பயன் படுத்திக் கொண்டவர்கள் சலீல் சௌத்ரியும்,ரவீந்தர ஜெயினும். தமிழிலும்,ஹிந்தியிலும் ஏன் எல்லா மொழிகளிலும் பல மெலடிகளுக்குச் சொந்தக்காரர்.

த்வாரம் வேங்கடசாமி நாயுடு பிரின்சிபாலாக இருந்த விஜயநகரம் மியூசிக் காலேஜிலும், பின்னர் முசிறி சுப்ரமணிய ஐயர் பரின்சிபாலாக இருந்த சென்னை மியூசிக் காலேஜிலும் படித்த P. சுசீலா கர்நாடக இசை கச்சேரிகள் செய்தும் ஆல் இந்தியா ரேடியோவில் பாடியும் புகழ் பெற்றிருந்தார். தெலுங்கில் கன்னதல்லி என்ற படமும் தமிழில் 'பெற்றதாய்' என்ற படமும் அவர் பாடிய முதல் சினிமா பாடல்கள். தென்னகத்து லதா மங்கேஷ்கர் என்று அறியப் படுகிறார் இவர். இவர் குரலின் மேன்மைக்கு மயங்காதவரே இருக்க முடியாது.

வாணி ஜெயராம் தாயும் சேயும் என்ற படத்தில் பாடிய ஒரு பாடல் தமிழில் முதல் பாடலாகச் சொல்லப் பட்டாலும் '1973 இல் TMS உடன் அவர் பாடிய "ஓர் இடம் உன்னிடம்" என்ற பாடலே வெளிவந்த படத்தில் அவர் பாடிய முதல் பாடலாக அறியப் படுகிறது. அது அறியப் படாத பாடலாக இருந்தாலும் விண்ணுலகில் இருந்து, மல்லிகை ஏன் மன்னன் போன்றா பலப்பல நல்ல பாடல்கள் பாடி உள்ளார்.

ஸ்ரீபதி பாண்டிராத்யுல பாலசுப்ரமணியம். S. P. பாலசுப்ரமணியம். ஹரிகதா காலட்சேபம் செய்யும் S. P. சாம்பமூர்த்தி மகன். AMIE பட்டதாரி. 1966 ஆம் வருடம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாதை ராமுடு தெலுங்குப் படத்தில் முதல் பாடலைப் பதிவு செய்த SPB, தமிழில் முதலில் L R ஈஸ்வரியுடன் பாடிய "அத்தான் இப்படி இருந்து எத்தனை நாள்" என்ற 'ஹோட்டல் ரம்பா' பாடல் வெளிவராத போதும் 'சாந்தி நிலையம்' படத்தில் வரும் "இயற்கை என்னும்" பாடலே அவர் முதல் தமிழ்ப் பாடலாக அறியப் படுகிறது. பாடகர், இசை அமைப்பாளர், நடிகர், கமலுக்கு தெலுங்குப் பட வுலகில் டப்பிங் குரல் கொடுப்பவர், தயாரிப்பாளர், ரெக்கார்டிங் ஸ்டுடியோ சொந்தமாக வைத்துள்ளவர் ...பல முகங்கள் இவருக்கு.

எட்டு மொழிகளில் - தமிழ், தெலுங்கு, கன்னடா, உருது, ஹிந்தி, சமஸ்க்ரிதம், மலையாளம், ஆங்கிலம் - பாடல் எழுதவும் தெரிந்த P B ஸ்ரீநிவாஸ் குழந்தையாக இருக்கும்போது ரொம்பநாள் பேசாமலேயே இருக்க அவர் பெற்றோர்கள் வேண்டாத தெய்வமில்லையாம். 1951 இல் ஹிந்தியில் 'மிஸ்டர் சம்பத்' என்ற படத்தில் பாடினார். பின்னர் அது தமிழில் 'மிஸ் மாலினி'யாக வெளிவந்தது. தமிழில் அவர் நேரடியாக பாடிய முதல் படம் 'ஜாதகம்'. பின்னர் பிரேமபாசம் படத்தில் எல்லாம் பாடியிருந்தாலும் அவர் ஹிட் அடுத்த வீட்டுப் பெண் தான்.

மூன்று வயதில் தன் இசைப் பயணத்தைத் தொடங்கிய S ஜானகி பாடிய முதல் தமிழ்ப் பாடல் 'விதியின் விளையாட்டு' என்ற படத்தில் - 1957 இல் அவரது பத்தொன்பதாம் வயதில்.

P. ஜெயச்சந்த்ரன் ஏசுதாசுடன் சேர்ந்து மலையாள உலகைக் கலக்கி இருந்தாலும் தமிழில் அவர் பாடிய முதல் பாடல் 'அலைகள்' திரைப் படத்தில் "பொன்னென்ன பூவென்ன கண்ணே.." பாடல். மிக இனிமையான குரலுக்கு சொந்தக்காரர்.

மலேசியா வாசுதேவன். தமிழில் முதல் பாடல் டெல்லி டு மெட்ராஸ். பிறகு குமாஸ்தாவின் மகள் படத்தில் வரும் 'காலம் செய்யும் விளையாட்டு'. பாடல். மலேசியா வாசுதேவன் என்று அவரை அழைக்கத் தொடங்கியவர் A P நாகராஜன். பல படங்களில் நடித்தும் உண்டு. இசை அமைத்துள்ளார். ஒரு சில ஹிந்திப் பாடல்கள் பாடி உள்ளதாக தகவல். பாரதிராஜா இளையராஜா வந்தபிறகுதான் இவர் வாழ்வில் வசந்தம். ரசிகர்களுக்கும் பல இனிமையான பாடல்கள் கிடைத்தன.

மெய் சொல்லப் போறோம்

அக்டோபர் இருபத்தெட்டு முதல் நவம்பர் மூன்று வரை.
 • மேஷம்: இடுக்கண் வருங்கால் நகுக - நெற்றிச் சுருக்கம் இன்றி வெற்றி காணுங்கள். புதிய முயற்சிகளில் வெற்றி வரும். பிறர் விஷயங்களில் தலையிட வேண்டாம். உங்க பே ஸ்லிப் தவிர வேறு எங்கேயும் கையெழுத்துப் போடாதீங்க.
 • ரிஷபம் : தேக ஆரோக்கியம் நல்லா இருக்கும். நண்பர்கள் வட்டத்தின் விட்டத்தை அதிகப் படுத்திக்குங்க. ஆயுர் வேத டாக்டரா இருந்தா அத்தனைக்கும் ஆசைப் படுங்க.  
 • மிதுனம் : ஆராய்ச்சி செய்பவர்கள் அபிவிருத்தி அடைவீர்கள். அது எப்படிங்க - உங்களால மட்டும் வெளியே அமைதியாகவும், உள்ளே புயலோடும் இருக்க முடிகிறது? ஆர்வப் புயலைச் சொல்கிறேன். இந்த வாரம் வெறும் மஞ்சப் பை கூட தூக்காதீங்க - களைப்பாகிவிடுவீர்கள். அறிவுபூர்வமான பேச்சுகள் உங்களுக்குப் பிடிக்கும். நீண்ட தூரப் பயணம் - திட்டம் - இப்பவே ரெடி பண்ணி வெச்சிக்குங்க.
 • கடகம் : சில சினேகிதங்களை மறு பரிசீலனை பண்ணுங்க. மன்னியுங்க - மன்னிக்கப் படுவீங்க. உங்க மேல அன்பு காட்டறவங்களோட இன்னும் அதிக நேரம் செலவழியுங்க. சில்லரை யோகா ஏதாவது கத்துக்கிட்டா - நல்லது - பெரிய தொந்தரவுகள் வராம பாத்துக்கலாம்.
 • சிம்மம் : அண்ணே / யக்கோவ் - நானும் உங்க மாதிரிதான் - பல செயல்பாடுகளைத் தள்ளிப் போட்டு தள்ளிப்போட்டே - டென்சன் ஏத்திக் கொண்டுவிடுவேன். உதாரணம் - இந்த வார ராசி பலன். இப்போ வலையாபதி என் கழுத்து மேல ஏறி உக்காந்துகினு - எழுது எழுதுன்னு .... ஹூம் -- டி வி யில வானிலை முன்னறிவிப்பு பாத்திருக்கீங்கதானே - அதுல கூட துல்லியமா - வானிலை பத்திச் சொல்லிடுவாங்க - ஆனா உங்க மூட் பத்தி முன்னறிவிப்பு யாராவது சரியா சொன்னாங்கன்னா - அவங்களுக்கு நோபல் பரிசே கொடுக்கலாம்! நண்பர்கள் உதவப் போறாங்க. 'இவன் தந்தை எந்நோற்றான்கொல்?' என்று எல்லோரும் வியக்கும்படி ஒரு செயல் செய்வீங்க.
 • கன்னி : சமாதான நடவடிக்கைகள் - சமயோஜிதமான நடவடிக்கைகள் எல்லாம் - உங்களை - நோபல் பரிசு ரேஞ்சுக்கு உயர்த்தும். அட ஏங்க இப்பிடி தொட்டாச் சுணங்கியா - இருக்கீங்க? சொல்றவங்க ஆயிரம் சொல்லுவாங்க - 'தன் நெஞ்சறிய பொய்யற்க' - இத மனசுல வெச்சிகிட்டு, நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா' பாடுங்க.
 • துலாம் : வருமானத்தை உயர்த்திக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகமாகக் காணப் படுதுங்கோ. தூள் கிளப்புங்கோ. 'அமைதியான நதியினிலே ஓடம் ஓட்டினீங்கன்னா - ஒரு பணப் பிரச்னையை சமாளிக்கலாம். நிறைய வரவேற்புகளும் - வாய்ப்புகளும் வரும். இந்த வாரம் சுயக் கட்டுப்பாடு மிகவும் அவசியம். அவ்வளவுதான் நான் சொல்லுவேன். பாக்கியை நீங்களே தெரிஞ்சிக்குங்க.
 • விருச்சிகம் : அதிர்ஷ்டம் - உங்க பக்கம். வியாபார, வர்த்தக நடவடிக்கைகளில் முழுக் கவனம் செலுத்துங்க. நீங்க போலீஸ் அதிகாரியா இருந்தா - என்றுமே நினைவில் நிற்பது போல ஒரு சம்பவம் ஏற்படும்.
 • தனுசு : கண்களால் எடை போடும் சாமர்த்தியம் - உங்களைப் போல யாருக்கும் வராதுங்க. நிறைய வெளிநாட்டுத் தோழர்கள் கிடைப்பாங்க. உங்க அளவுக்கு - நட்பை மதிப்பவர்கள் வேறு யாருமே கிடையாது. எந்த வாகனத்தில் சென்றாலும் ஹெல்மெட் முக்கியம். மறந்துடாதீங்க. உங்க தெருவில சின்ன அளவு கலாட்டா - ஒன்று உருவாகலாம். ஆமை ஓடு கொள்கையைப் பின்பற்றுங்க. ஒளிந்துகொள் - அல்லது ஓடு.
 • மகரம் : உங்க கனவுக் கண்ணன் / கன்னிக்காக கண்களைத் திறந்து வெச்சிக்குங்க. கண்ணடிக்கிறது எல்லாம் கெட்ட பழக்கம். நல்ல நடத்தையால மனசுல அடியுங்க. சொத்து சேரும். உங்க பேச்சு உங்களுக்கே - சாதகமாக அமையும். எங்கியாவது மேடைப் பேச்சு சந்தர்ப்பம் கெடச்சா - சும்மா புகுந்து விளையாடுங்க.
 • கும்பம் : அலுவலகத்தில் - அனல் வீசாதீர்கள். சாந்தி நிலவ வேண்டும். ஆத்ம சக்தி ஓங்க வேண்டும். எதையும் எளிதில், சரியாகப் புரிந்துகொள்ளும் ஆற்றல் கொண்டவர் நீங்க. கோபம் அந்த ஆற்றலை அழிக்காமப் பாத்துக்குங்க. விலை உயர்ந்த பொருள் ஒன்று வாங்குவீர்கள். அதனால உங்க பர்ஸ் எடை குறைந்து போகும். செல்லப் பிராணி எதையாவது வளர்க்கிறீர்கள் - என்றால் - அதுக்கு உங்க நேரம் அதிகமாக செலவாகும். மேல் / ஃபீ மேல் படிப்புப் படிக்க நினைப்பவர்கள் - திட்டம் ஒன்றை இந்த வாரமே போட்டு வையுங்க.
 • மீனம் : சிறிய வாய் - பெரிய பாதுகாப்பு! எங்கேயோ கேட்டாப்புல இருக்கு இல்ல? அது உங்களுக்குத் தான் - இந்த வாரம் முழுவதும்!! மனுஷன் சோம்பேறியா இருக்கலாம் - ஆனா - எப்போ - எவ்வளவு நிமிடங்களுக்கு -- என்பதில்தான் சிக்கல். இதோ எங்கள் ஃபார்முலா - ஒரு மணி நேரத்தில் - ஐந்து நிமிடங்கள் மட்டும் சோம்பேறியாக இருக்கலாம். ஆனா - அந்த நேரத்துல - சிந்திக்கக் கத்துக்குங்க. ஆசிரியர்கள் - இந்த வாரம் கலக்குவீங்க.

செவ்வாய், 27 அக்டோபர், 2009

யார் அவர்?

தி.நகரில் வைத்தியராமன் தெருவில் இருக்கும் இவரது வீட்டின் கீழேயே ஒரு நூலகத்தைத் துவக்கியிருக்கிறார். அதில் தன்னிடமிருக்கும் புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கிறார். வெறும் நூறு ரூபாய் அட்வான்ஸாக கட்டிவிட்டால் போதும்.. சிலரிடம் அதைக் கூட கேட்பதில்லை.. ஒரு நேரத்தில் இரண்டு புத்தகங்களை எடுத்துச் செல்லலாம். 5 அல்லது 6 நாட்கள் டைம் கொடுக்கிறார். படித்துவிட்டு மீண்டும் வந்து வேறு புத்தகங்களை எடுத்துச் செல்லலாம் என்கிறார்.
Read more: http://truetamilans.blogspot.com/#ixzz0V8onxenO


வாழ்க்கையில் முன்னேற ...012

பாடம் பன்னிரண்டு:
குரு கடல் மணலில் கடலைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தார். ஒருவர், அவர் அருகே வந்து, "சுவாமி - எனக்கு ஞானம் வேண்டும்" என்றார்.
குரு : "என்றைக்கு? எப்பொழுது?"
அவர் : "இன்றைக்கு  - இப்பொழுதே!"
குருவைச் சுற்றியுள்ள சீடர்கள் சிரித்தார்கள்; குரு சிரிக்கவில்லை.
ஆனால் அவரைப் பார்த்துக் கூறினார்:
குரு : "இங்கு என்னவெல்லாம் இருக்கிறது?"
அவர் : "கடல், மணல்."
குரு : "அப்புறம்?"
அவர் : "மணலில் கிளிஞ்சல்கள், கூழாங்கற்கள்."
குரு : "நல்லது - இந்த மணலில் தேடி, நல்ல கூழாங்கல் ஒன்று கொண்டு வா".
அவர் செல்கிறார். கையில் கிடைத்த கூழாங்கல் ஒவ்வொன்றாக எடுத்துப் பார்க்கிறார். நல்லதாக ஒன்று! எடுத்துக் கொண்டு வருகையில், கையில் இருப்பதைவிட இன்னும் ஒன்று மணலில் நல்லதாக இருந்தால் அதை எடுத்துக் கொண்டு பழையதை வீசி விட்டு வருகிறார். இப்படியே அவர் தேடித் தேடி, பார்த்துப்  பார்த்து - இறுதியில் அவர் கையில் இருப்பதைக் கொண்டு வந்து குருவிடம் கொடுக்கிறார். குரு அதை கைகளில் வாங்காமல் கேட்கிறார்,- "நல்ல கூழாங்கல் ஒன்று கொண்டு வந்தாயா?"
"ஆமாம்"
"இப்பொழுது அதை கடலில் வீசி எறி"
"குருவே - நான் உங்களுக்காகக் கஷ்டப்பட்டு ...."
"இப்பொழுது அதை கடலில் வீசி எறி"
"உங்களுக்கு இது வேண்டாமா - குருவே?"
"நான் சொன்னது என்ன ?"
"இந்த மணலில் தேடி, நல்ல கூழாங்கல் ஒன்று கொண்டு வா"
" அதை செய்துவிட்டாய் அல்லவா?"
"ஆமாம்"
"இப்பொழுது அதை கடலில் வீசி எறி"
வந்தவர் - அந்த கூழாங்கல்லை தலை சுற்றி கடலில் வீசி எறிகிறார்.
குரு : "உட்கார்"
அவர் உட்காருகிறார்.
குரு : "கண்களை மூடு."
அவர் மூடிக் கொள்கிறார்.
குரு : "நீ இந்தக் கடற்கரைக்கு இன்று வந்ததிலிருந்து, இந்தக் கணம் வரை நடந்ததை ஒவ்வொன்றாக நிதானமாக யோசித்துப் பார்."
அரை மணி நேரம் கழித்து அவர் கண்ணைத் திறந்து பார்த்தபொழுது - குருவும் சிஷ்யர்களும் அங்கு இல்லை. அவர் தேடவும் இல்லை.
இரண்டு கிலோ மீட்டர் தள்ளி - குரு சிஷ்யர்களிடம் கூறிக் கொண்டிருந்தார்.
" அவர் இங்கு வந்தார் என்றால் - வரவில்லை என்று அர்த்தம்; வரவில்லை என்றால் வந்துவிட்டது என்று அர்த்தம்"
(தொடரும்)

திங்கள், 26 அக்டோபர், 2009

அனுபவத்தின் விலை

சமீபத்தில் கோவையிலிருந்து ஸ்ரீதர் தொலைபேசினார். என்னுடைய பழைய ஏமாந்த அனுபவம் ஒன்றை ஞாபகப் படுத்தினார். ஏனென்றால் சமீபத்தில் அவர் மனைவி கீதா அபபடி ஏமாந்ததுதான்....!
   சில மாதங்களுக்குமுன் தொலைபேசியில் ஒரு அழைப்பு வந்தது. என் பெயரை சொல்லி, என் தகப்பனார் பெயரைக் கேட்டு, தனக்கும் அதே பெயர்தான் என்றும், தகப்பனார் பெயர் வேறே தவிர, முதல் எழுத்து ஒன்றுதான் என்றும், கிட்டத் தட்ட அந்த மாதிரிப் பெயரை தொலைபேசி டைரக்டரியில் தேடி பேசுவதாகவும் சொல்லி, தான் ஒரு ஏழை பிராமணர் என்றும் தன் பெண் கல்யாணத்தை நடத்த காஞ்சிப் பெரியவர் உத்தரவுப் படி மாங்கல்யம் வாங்க இந்த மாதிரி பெயருடையவர்களிடம் உதவி வாங்கி நடத்துமாறு ஆணை வந்ததால் பேசுவதாகவும் கூறி, இன்னும் என்னென்னமோ கூறி சந்திக்க இடம் கேட்டு ஐநூறு ரூபாய் ஏமாற்றி சென்றார். அவர் எங்கள் வீட்டுக்கு வர ஆர்வம் தெரிவித்தும் அதற்கு சம்மதிக்காமல் பொது இடத்தில் சந்தித்து ஏமாந்ததும், அவர் 'ஆயிரம் இரண்டாயிரமாவது எதிர்பார்த்தேன்' என்ற இடத்தில் ஐநூறு மட்டும்(!) ஏமாந்ததும் என் சாமர்த்தியம்! 'டிசம்பரில் திருமணம் திருப்பதியில் நடக்கும் பத்திரிகை அனுப்புவேன் கண்டிப்பாக வந்து ஆசீர்வாதம் செய்ய வேண்டும்' என்று சொல்லி சென்றார். அட்சதையோடு இன்னமும் இரண்டு வருடங்களாகக் காத்திருக்கிறேன்....அவராக சொன்ன பெண்ணின் பெயர் என் தாயின் பெயர் என்பது ஹை லைட்.
   ஸ்ரீதர் சொன்னது, அவர் இல்லாத நேரத்தில் அவர் மனைவியிடம் ஒருவர் Printing Order தருவதாகக் கூறி சில பேப்பர்களையும் மாடல்களையும் நீட்டி உங்கள் கணவர் என் பெஸ்ட் நண்பர் என்றெல்லாம் கூறி அட்வான்ஸ் கொடுக்க முயன்று 'ஆயிரம் ரூபாயாக இருக்கிறது ஐநூறு ரூபாய் கொடுங்கள் இதோ வருகிறேன்' என்று கூறி வாங்கி சடுதியில் காணாமல் போனாராம். அவரே கூட அதற்கு ஆறேழு மாதங்கள் முன்பு ஏமாந்த கதை ஒன்றையும் சொன்னார்...
   ஷீரடி பாபா மேல் பக்தி கொண்ட அவருக்கு அவர் தாயின் மூலம் அவர்பற்றி ஒரு புத்தகம் கிடைத்ததாம். அது கிடைத்த இரண்டு நாட்களுக்குப் பிறகு தெருவில் எதிரில் பாபா படம் வைத்து ஒரு தள்ளு வண்டி வந்துள்ளது. அதற்குப் பிறகும் இரண்டு, மூன்று நாள் தொடர்ந்து கண்ணில் பட, புத்தகம் கிடைத்த நேரம் பாபா வண்டி தினசரி கண்ணில் பட்டதில் ஏதோ விசேஷம்தான் என்பது போல மனதில் பட்டதாம் அவருக்கு...ஒருநாள் பக்கத்தில் போனவர் என்னதான் இருக்கு அதில் என்று பார்த்துள்ளார். கிளம்ப எத்தனித்தவரை அவர்கள் நிறுத்தி கற்பூர ஆரத்தி பார்த்துப் போக சொல்லி உள்ளார்கள். மறுக்க முடியாமல் நின்றிருக்கிறார். பையில் ஏதாவது ரூபாய் நோட்டு இருந்தால் ஆரத்தித் தட்டில் வையுங்கள்...கற்பூரம் காட்டி முடித்ததும் தந்து விடுகிறேன் என்று சொல்லி உள்ளார்கள். தயங்கிய இவர் பையில் சோதனையாக ஆயிரம் ரூபாய் நோட்டு மட்டும்! தொடர்ந்து அவர்கள் வற்புறுத்திய வார்த்தை ஜாலத்தில் இவரும் வைத்து விட்டார். பிறகென்ன...ஆரத்தி முடிந்து அவர்கள் கிளம்ப, இவர் பணத்தைத் திரும்பக் கேட்க, அவர்கள் வசனம் : "பாபாவுக்கு துணிமணி கேட்டால் தருவீர்களா?" இவர், "மாட்டேன்" அவர்கள் "சரி என்று சொல்லு, சரி என்று சொல்லு...நல்லது நடக்கும்..." என்று சொல்ல இரண்டு மூன்று முறைக்குப் பிறகு இவர் சரி என்று சொல்லி இருக்கிறார். "சாப்பாடு தருவீர்களா?" இவர், "சரி!". அவர்கள் "வீடு வாங்கித் தருவீர்களா?", இவர், "சரி!!". அவர்கள், "ஏன் சார், இதெல்லாம் தரத் தயாரா இருக்கீங்க...ஒரு ஆயிரம் ரூபாய் பாபாவுக்குத் தர மாட்டீங்களா..." என்று கேட்டு விட்டு நடந்து விட்டார்களாம்...!
   பெண்ணுக்குக் கல்யாணம் என்று கேட்ட இடத்தில் நான் ஏமாந்ததும் சரி, கீதா ஐநூறு ரூபாய், ஸ்ரீதர் ஆயிரம் ரூபாய் எமாந்ததற்கும் என்ன காரணம்? இது ஏமாற்று வேலையாய் இருக்குமோ என்று எனக்குத் தோன்றினாலும் ஒன்றிரண்டு பேரைக் கேட்டு, அவர்களும் வேண்டாம் தராதே என்று சொன்ன பிறகும், என்னை தர வைத்தது எது? அவர் என்பெயர் குறிப்பாக சொல்லி வந்ததா? நான் கடைசி வரை சொல்லாத என் அம்மா பெயரை அவர் பெண்ணின் பெயராக சொன்னதா? கீதா ஸ்ரீதருக்கு தொலைபேசி இவர் உங்கள் நண்பரா என்று கேட்கத் தோன்றாதது ஏன்? பாபா வண்டி பின்னாலேயே சென்று ஆயிரம் ரூபாயைத் திருப்பி வாங்க முடியாமல் ஸ்ரீதரை நிறுத்தியது எது? அவர்கள் பேச்சுத் திறமையா? ஏதாவது கண்கட்டு போல மயங்கவைக்கும் மந்திரவித்தையா?
   ஏதோ ஒன்று...போன ஜென்மக் கடன் என்றும் வைத்துக் கொள்ளலாம்... அல்லது நாம் பெற்ற அனுபவத்துக்கு விலை என்றும் எடுத்துக் கொள்ளலாம்.எல்லோரும் எத்தனையோ விதத்தில் ஏமாறுவார்கள்...நாங்கள் இந்தவிதத்திலும் ஏமாந்தோம்...!

வாழ்க்கையில் முன்னேற 011

பாடம் பதினொன்று.
மகிழ்ச்சி என்றால் என்ன?
மகிழ்ச்சி என்பது, ஒரு செயலை, திட்டமிட்டு, திட்டமிட்ட நேரத்தில் அல்லது அதற்கு முன்பாக, செவ்வனே செய்து முடித்தல். 
திட்டமிடுதல் என்றால் என்ன?
எதை எண்ணிக்கை அடிப்படையில் அளவிட முடியாதோ அதை நமது கட்டுப் பாட்டில் கொண்டு வர இயலாது. இதனால் தான் நிமிடங்களைப் பற்றி இதற்கு முன் அவ்வளவு விரிவாக எழுதியிருந்தேன்.
எதை திட்டமிட்டாலும், அதை ஏதேனும் ஒரு அளவிடமுடிந்த அலகுக்குள் கொண்டுவருவதில்தான் நம் சாமர்த்தியம் உள்ளது.
உதாரணங்கள் : 
நான், இன்று படுக்கைக்குச் செல்லு முன் - ஒரு புதிய ஆங்கில வார்த்தை கற்றுக் கொண்டு, அதை வாக்கியத்திலும் அமைத்துப் பார்ப்பேன்.
நான் இன்று வலையில் பூத்த மலர்களில் - ஏதேனும் ஒன்றையாவது ஊன்றிப் படித்து, அதில் உள்ள நல்ல அம்சத்தைப் பாராட்டி - அந்த பதிவுக்குப் பின்னூட்டம் இடுவேன்.
இன்று பழைய நண்பர்களில் யாராவது ஒருவரையாவது - கண்டு பிடித்து - அவரின் நலன் அறிய அவருக்கு மின் அஞ்சல் அனுப்புவேன்.
இன்று இந்த வாரத்தில் நான் முடிக்கவேண்டிய ஐந்து முக்கிய பணிகளை ஒரு வெள்ளைத் தாளில் பட்டியலிட்டுக் கொள்வேன்.

ஞாயிறு, 25 அக்டோபர், 2009

ஞாயிறு 15

இந்த இரண்டு படங்களுக்கும் இடையே குறைந்த பட்சம் ஆறு வித்தியாசங்கள் உள்ளன. என்ன என்று கண்டு பிடித்துப் பதியுங்கள் பார்க்கலாம்!
(படங்களின் மீது சொடுக்கினால் - பெரிய அளவில் பார்க்கலாம்!)

இலக்கிய ரசனை

அந்தக் காலத்தில் பத்திரிக்கைகளில் இலக்கிய ரசனைக்காக ஓரிரு பக்கங்கள் ஒதுக்கப் பட்டிருக்கும்.  கம்பர் தரும் காட்சி, சித்திர ராமாயணம் என்று ரசிகமணி டி.கே.சி.  அல்லது பி.ஸ்ரீ சுவைபட எழுதுவர். இப்போது குற்றுடை தரித்த சிற்றிடை செல்விகள் படங்கள் போடவே இடம் போதவில்லை. இலக்கியத்தைக் கட்டிக் கொண்டு யார் அழுவர்? 

ஆனாலும் நம் பாரம்பரிய செல்வம் ஆகிய இலக்கியங்களில் இளைய தலைமுறைக்கு இன்ட்ரெஸ்ட் இருக்க வேண்டும் என்பதற்காக ரொம்ப போர் அடிக்காமல் கொஞ்சம் ரசிக்கலாமா?  சில செய்திகள் பலருக்கும் தெரிந்தும் வெகு சிலருக்கு தெரியாமலும் இருக்கும். தெரிந்தோர் புரிந்தோர் தெரியாதோர் நலன் கருதி பொறுத்தருள்க.  அவ்வப்போது இப்படியாக எழுதலாம் என்று எண்ணம்.  பிடிக்காவிட்டால் உரிய முறையில் உங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கவும்!! 
 •  ***
ஆரை என்று ஒரு சிறு செடி. மூன்று அங்குல உயரம் இருக்கும். வெந்தயக் கீரை அளவினது.  மேலே சரியாக நான்கே நான்கு இலைகள் சமதளத்தில் ஆகாயத்தைப் பார்த்தபடி இருக்கும்.
 
அவ்வையாருக்கும் வேறு ஒரு புலவருக்கும் சதா போட்டி.  ஓட்டக் கூத்தர் அல்லது கம்பர் என்று கர்ண பரம்பரையாகச் சொல்வர். 
 
அவ்வையைக் கண்டு அந்தப புலவர்
 
"ஒற்றைக் காலடி நாலிலைப் பந்தரடி"
 
 என்று இளக்காரமாக விடுகதை போட்டாராம். 
 
அவ்வை சொன்ன பதில் பாட்டு இதோ:
 
எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே முட்டமேல்
கூரை இல்லா வீடே குலராமன் தூதுவனே
யாரையடா சொன்னாய் அது.
 
 
தமிழ் எழுத்துக்களில் எண்களை எழுதும்போது அ என்று எழுதினால் எட்டு. வ என்று எழுதினால் கால்.  அதனால் எட்டேகால் லட்சணமே என்றால் அட அவலட்சணமே என்று பொருள்.
 
எமனேறும் பரி எருமை மாடு என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
 
 பெரியம்மை என்றால் மூதேவி. ஸ்ரீதேவி (நடிகை அல்ல மகாலக்ஷ்மி) தங்கை என்றும் மூதேவி அக்கா என்றும் சொல்வர்.  மூதேவியின் வாகனம் கழுதை.
 
முட்டம் என்றால் வீட்டின் மேல் பகுதியில் ஓடு வேயப் போடப் படும் கூரைப் பகுதி. முட்டம் மேல் கூரை இல்லா வீடு குட்டிச் சுவர்தான்.
 
ஆரையடா சொன்னாய் என்றால் ஆரைக் கீரையை சொன்னாய் என்றும் யாரைப் பார்த்தடா இப்படிப் பேசினாய் என்றும் கொள்ளலாம்.
 
அட அவலட்சணக் கழுதையே, எருமை மாடே யாரைப் பார்த்து சொன்னாய், நீ சொன்னது ஆரைக் கீரையை என்று பதில் தந்தாளாம் அவ்வை. 
 

 

சனி, 24 அக்டோபர், 2009

'எங்களு' க்கு ஏன் இந்த ஊர் வம்பு?

இன்று படித்து ரசித்தது:
(dondu வில் )

சாதி மதம் பத்தி எந்த சந்திலாவது யாரவது பேசினால் உடனே டார்ஜான் போல ஆங்கே பிரசன்னமாகி கருத்து மழை பொழியும் பதிவர் யார்? தேவை இருக்கோ இல்லையோ அடிக்கடி நான் நாத்திகவாதி என்று கூறவும் செய்வார்? அப்பப்ப சரக்கு கவிதை எல்லாம் போடுவாரு, யார் அவர்?
பதில்: வால் பையன். நமக்கு தோஸ்த். இக்கேள்விக்கான அவரது பதில் உங்களுக்கு இருக்கிறது மண்டகப்படி. பார்க்க நானும் ஆவலாக உள்ளேன்.

(நாங்களுந்தான்!)

என் 'உள்பெட்டி'யிலிருந்து......2


வாழ்க்கையில் ஒரு வாய்ப்பை இழக்கும் போது கண்களில் கண்ணீரைத் தேக்கினால் அது அடுத்து உங்கள் முன்னால் வரும் வாய்ப்பை மறைத்து விடும்.

கனவு என்பது தூக்கத்தில் காண்பது அல்ல ; தூங்க விடாமல் அடிப்பது.


தீவிரவாதியை மன்னிப்பது கடவுளாக இருக்கட்டும். கடவுளுடனான அவர்கள் சந்திப்பை தீர்மானிப்பது நாமாக இருப்போம்.


   உங்கள் சிறிய தவறுகளைத் திருத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால் மலைகள் தடுக்கி யாரும் விழுவதில்லை. சிறு கற்கள் இடறிதான் விழுகிறோம்.


    நயாகரா நீர்வீழ்ச்சியின் குறுக்கே இறுக்கமாகக் கட்டப் பட்ட கயிறில் நடப்பது திறமையாக இருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யாமல் இருப்பது புத்திசாலித்தனம்.


    எதிரிகளை வெறுக்காதீர்கள். சிலர் உங்களுக்கு அனுபவங்களைக் கொடுக்கிறார்கள். சிலர் பிரச்னைகளை சமாளிக்க கற்றுத் தருகிறார்கள்.


  வாழ்க்கையின் மிக ஆழமான உணர்வுகள் மௌனத்தில் வெளிப் படுகின்றன. உங்களின் மிக்க அனுக்கமான நபரே அந்த மௌனத்தின் ஆழமான அர்த்தத்தை உணர்வார்கள்.


    வாழ்க்கையில் என்னவாக இருக்கிறீர்கள் என்பதற்கு கோபமோ மனவருத்தமோ, பெருமையோ படாதீர்கள். சதுரங்க ஆட்டத்தில் வெட்டுப் பட்ட வீரனும் அரசனும் ஒரே பெட்டிக்குள்தான் போகிறார்கள்.


    எல்லா சரியான விஷயங்களும் எப்போதும் சாத்தியமாவதில்லை. சாத்தியமாகும் எல்லா விஷயங்களும் சரியானவையும் அல்ல.


  வாழ்க்கையின் கடின தருணங்களில் யாருக்கும் எந்த விளக்கமும் அளிக்காதீர்கள். ஏனென்றால் உங்களைத் தெரிந்தவர்களுக்கு அது அவசியமில்லை. உங்களைப் பிடிக்காதவர்கள் அதை நம்பப் போவதில்லை.

வெள்ளி, 23 அக்டோபர், 2009

வாழ்க்கையில் முன்னேற ...010

ஒன்பதாவது பகுதியின் இறுதியில், நான் கேட்டிருந்த கேள்வி - உங்கள் சென்ற நிமிடம் எப்படி செலவழிந்தது - அடுத்த நிமிடம் எப்படி செலவழிக்கப் போகிறீர்கள் என்பதுதான். ஒரு சுவாரஸ்யமான உண்மை என்ன என்றால், ஒரு நிமிடத்தை உபயோககரமான விதத்தில் செலவழிக்க, நான்கு நிமிட திட்டமிடல் தேவை! எய்ட்டி ட்வென்டி பிரின்சிபில் தான். நாம் செய்கிற எந்த செயலாக இருந்தாலும், அதற்கு திட்டமிடல் மிகவும் அவசியம். திட்டமிடுவது என்பதை உடனே ஆரம்பித்துவிட முடியாது. ஆனால், அதை நோக்கிச் செல்ல - முதல் படி, இந்த ஸ்டடி எக்சர்சைஸ் :
ஒரு வெள்ளைத் தாளில், நீங்க ஸ்டடி பண்ணவேண்டிய நேரத்தை, கால் மணி நேர இடை வெளிகளாக பிரித்து இடப் பக்கமாக எழுதிக் கொள்ளுங்கள். அதற்கு நேரே - நீங்க அந்த நேரத்தில் செய்ததை இரண்டே வார்த்தைகளில் எழுதுங்கள்.
உதாரணம் :
7.45 to 8 pm : prepared VM010
 8.00 to 8.15 pm : Watching TV
8.15 to 8.30 pm : prepared food.
8.30 to 8.45 pm : eating dinner
8.45 to 9 pm : seeing cricket
9 to 9.15 pm cricket continued
and so on --- just jot down. Do not destroy that paper. File it or put it in a folder, with date.
(தொடரும்)

உள்ளம் கவர் ஆட்டக்காரர்கள்


பழைய பதிவில் முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரர்களைப் பற்றி பேசும்போது சில ஞாபகங்கள் வந்தன. அந்த நாளில் எல்லார் வீட்டிலும் டீவிப்பெட்டி கிடையாது. அதற்கு முன்னாளிலும் சொல்ல வேண்டுமென்றால் ரேடியோவில் ஆட்ட நேர்முகவர்ணனை கேட்கும்  நாள் முதலே சொல்லலாம். ஆங்கில நேர்முக வர்ணனைகள், ஆட்டம் சென்னையில் நடக்கும்போது தமிழ் நேர்முக வர்ணனைகள், அதில் ராமமூர்த்தி,வல்லுநர் மணி, "பந்தை வெட்டி அடித்தார்.." போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் ... ஆனால் நினைவு அதைப் பற்றி அல்ல. அழகான ஆட்டக் காரர்களின் உண்மையிலேயே அழகான, ஸ்டைல் ஆன ஆட்டம் பற்றி தோன்றிய நினைவுகள்....!


 கேட்டலின் பார்த்தல் நன்று! நேர்முகவர்ணனையாக கேட்டு ரசித்ததை எழுத முடியாது. தொலைக் காட்சியில் பார்த்து ரசித்ததை எழுதமுடியும்.                                                                                                                            இவை எல்லாமே ஓடி ஓடி எங்கு டிவி இருக்கும் யார் வீட்டில் இருக்கும் என்று தேடித் தேடிப் பார்த்தது! சில சமயம் கல்லூரி ஹாஸ்டலில். சில சமயம் கடைகள் வாசலில்...சில சமயம் யார் வீடு என்றே தெரியாமல் நண்பனின், நண்பனின், தம்பியின் நண்பனின் வீடாக இருக்கும்! அப்போது டிவியும் குறைச்சல்..மேட்சுகளும் குறைச்சல்... பின்னர் வீட்டிலேயே டிவி வாங்கியவுடன் நம் வீட்டிலும் யார் என்றே தெரியாத புது முகங்கள் எல்லாம் ஆட்டம் பார்த்துக் கொண்டிருக்கும்! எனினும் உலகக் கோப்பை ஜெயித்த அந்த இரவில் (இந்திய நேரப் படி) நம்ப முடியாத அந்த செய்தியை யாரிடம் பகிர்ந்து கொள்வது என்று தெரியாமல்... ஆளில்லாத அந்த சாலையில் தெரியாத நபராக இருந்தால் கூட, யாராவது கண்ணில் பட மாட்டார்களா என்று அலைந்த அந்த நாள்...வயது காரணமா...மறக்க முடியாது!  
       பட்டோடி நவாப் உம்ரிகர் காலத்துக்கெல்லாம் செல்லாமல் அதற்குப் பின்னரே தொடங்குகிறேன். அழகான Little Master கவாஸ்கர் தன் முதல் ரன்னை பெரும்பாலும் லெக் திசையில் Flick செய்தே பெறுவார். பின்னர் நேர்முகவர்ணனையாளர்கள் பேசும்போது இங்கிலாந்தின் ஜெப் பாய்காட் கூட அப்படிதான் தொடங்குவார் என்பார்கள். நான் பார்த்ததில்லை. கவாஸ்கர் பந்தை வானத்தில் தூக்கி அடித்து வாண வேடிக்கை காட்டும் ரகமில்லை. டெக்னிகலாக பந்தை திருப்புதல், கவர் டிரைவ், ஸ்ட்ரைட் டிரைவ் என்று அழகாக ஆடக் கூடியவர். டெஸ்ட் மேட்சுக்கு ஏற்ற ஆட்டக் காரர். பின்னாளில் ஒரு நாள் போட்டிகள் தொடங்கிய போது அதற்கு ஏற்றார்போல மாறக் கஷ்டப் பட்டவர்.ஒருநாள் போட்டியில் ஒருமுறை தொடக்க ஆட்டக் காரராக களம் இறங்கி கடைசி வரை ஆட்டமிழக்காமல் சொற்ப ரன்னுடன் இருந்தாராம். என்னவென்று கேட்டால் ஆட்டத்தை Draw வாவது செய்ய முடியுமா என்று பார்த்ததாக சொன்னாராம். பொய்யோ நிஜமோ..ஒருநாள் போட்டிகளில் அவர் சற்று slow தான் என்றாலும் அவர் Retire ஆன நியூ சிலாந்துடனான ஆட்டத்தில் (கான்பூர் என்று நினைக்கிறேன்) ஸ்ரீகாந்துடன் சேர்ந்து அதிரடி ஆட்டம் ஆடி வெளியேறினார். கல்கத்தா, மன்னிக்கவும், கொல்கத்தா ரசிகர்கள் அவரை வெறுப்பேற்றியதில் இனி கொல்கட்டாவில் விளையாடவே மாட்டேன் என்று சொல்லி விளையாடாமலும் இருந்தவர்.
      சொந்த நலனுக்கு ஆடுபவர் என்று பெயருண்டு. ஒரு மேட்சில் தவறாக அவுட் தரப் பட்டபோது உடன் ஆடுபவரையும் அழைத்துக் கொண்டு உள்ளே வந்து விட்டார். அவருக்கும் இன்னொரு ஜாம்பவான் கபிலுக்கும் நடுவில் பனிப் போர் உண்டு என்றெல்லாம் சொல்வதுண்டு. என்றாலும் அழகான ஆட்டக்காரர். பின்னாளில் மிக அழகான ஆங்கிலத்துடன் சுவராஸ்யமாக நேர்முக வர்ணனை செய்து வருபவர், சமீபத்தில்தான் அறுபது வயதை முடித்தவர்.                                     (தொடரக் கூடும்)

வியாழன், 22 அக்டோபர், 2009

உலகத் தமிழ் மகாநாடு

உலகத் தமிழ் மகாநாடு என்பது தமிழ் அறிஞர்கள் ஆர்வலர்களால் நடத்தப் படுமானால் அரசியல் கட்சி பேதம் இன்றி அனைத்து அறிஞர்களும் பங்கு தமிழுக்குப் பெருமை சேர்க்கும் நடவடிக்கைகளுக்கு அடிகோலலாம். முதல்வரின் புகழ் பாட கிடைத்த ஒரு அரிய சந்தர்ப்பம், கலைமாமணி போன்ற பட்டங்களும் பரிசுகளும் பெற ஒரு குறுக்கு வழி என்று ஆகி விட்டால், அதன் பின் தமிழாவது தமிழ் வளர்ச்சியாவது!
இதுவரை இரண்டு மகாநாடுகள் நடைபெற்றிருக்கின்றன. கரகம், காவடி ஆட்டம், பொய்க்கால் குதிரை போன்ற தமிழ் நாட்டுப்புறக் கலைகள் கவனத்தை ஈர்த்தது தவிர வேறு என்ன சாதித்தது என்று அறிஞர்கள் சொன்னால் கேட்டுக் கொள்ள தயாராக இருக்கிறோம். கணினியில் தமிழ் விசைப்பலகை ஒருமுகமாக்கவும் தமிழ் எழுத்துக்களுக்கு தர ஒருமைப்பாடு செய்யவும் முயற்சிகள் மகாநாட்டை மீறி நடந்ததாகவே எண்ணுகிறேன்.
ஆட்சி மொழி அந்தஸ்து மத்திய அரசில் தமிழுக்குக் கிடைக்கவேண்டும், நாடாளுமன்றத்தில் தமிழ் மொழி பெயர்ப்பு, தமிழ் பேசும் உரிமை போன்ற சில்லறைத தகுதிகள் தமிழுக்கு என்ன பெருமை சேர்க்க முடியும்? . நீதி மன்றத்தில் தமிழ் வேண்டும் என்கிறார்கள். தமிழ் கலைச் சொற்களை வளப்படுத்த யாரும் ஏதும் செய்ததாகத் தெரியவில்லை. மத்திய அரசு என்றால் வடமொழி, நடுவண் அரசு என்றால் தமிழ் என்று தனித்தமிழ் பைத்தியம் பிடித்து அலைகிறார்கள். சென்றிடுவீர் எட்டு திக்கும் கலை செல்வங்கள் யாவும் கொணர்ந்து இங்கு சேர்ப்பீர் என்று பாரதி பாடினார் என்றால், பிக்காசோ ஓவியங்களை திருடிக் கொண்டு வந்து இங்கு வைப்பது அல்ல, வேற்று மொழியிலிருந்து கலைச் சொற்களை கொண்டு வருவது என்று ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது?

குருணை தவிர்த்துக் குத்திய நெல்லே,
கருணாநிதியே கவிகளின் அரசே,
உதவிக்கு முந்தும் உத்தமத தலைவனே
பதவிக்கு வந்தும் பாங்குகள் செழிப்போனே
ஸ்டாலின் என்றொரு தத்துவப் பேழையில்
ஸ்டேஇன் செய்ய வந்தது தமிழே
கனிமொழி என்றொரு கவிக்குயில் போன்று
இனியொரு மேதை இனியும் வருமோ

என்ற பாணியில் புகழ் பாட ஒரு சந்தர்ப்பமாக இது அமையலாம்.
எம் ஜி ஆர என்ற ஏழை பங்காளனுக்குப் பின்
எஞ்சிய தர்மம் யாவும் ஏற்றமாய்ச் செய்ய
வயதறியா வள்ளண்மை வாய்த்த செல்வியே
ஜெயலலிதா வேவாழ்க நின் கொற்றம்
எனப் பரணி பாடி பரிசு வாங்கலாம். கலை மாமணி, கவிக்கோ போன்ற பட்டங்களும், இயல் தமிழ் விருதுகளும் பண முடிப்பும் பெறலாம். மற்ற படி தமிழ் வாழ, வளர என்ன செய்யவேண்டும் என்ற ஆய்வுக்குக் கூட அவகாசம் அளிக்காமல், தேர்தலுக்கு முன் காண்ட்ராக்ட்டில் காசு பார்க்கும் உரிமம் யாருக்கு என்று ஏலம் விடலாம்.
புற நானூற்றில் பூரி மசால் என்று ஆராய்ச்சி செய்வதில் பொருள் இருக்கிறதா என்று யோசிக்க வேண்டும்.


K.G.Y.Raman

புதன், 21 அக்டோபர், 2009

யாமறிந்த....

உலகத் தமிழ் மாநாடு உலகத் தமிழ் செம்மொழி மாநாடாகி ஜூன் ஜூலை என்று அல்லாடி இப்போது ஜனவரியில் நடக்கப் போகிறதாம்.உலகத் தமிழ் ஆராய்ச்சி சங்கம் ஒப்புதல் தராததால் ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு உலக செம்மொழி மாநாடாகி விட்டது.
தமிழ்த் தாய் என்கிறோம். தெலுங்கில் மா தெலுகு தல்லி என்கிறார்கள். கனாடர்களும் கன்னட தல்லி என்கிறார்கள். ஆக மொழியை வைத்துக் கொண்டு ஆளாளுக்கு உணர்ச்சி வசப் படுகிறோம். தகவல் பரிமாற்றத்தில் உதவும் இந்த மொழியை யோசிக்கும் போது இந்தியாவில் தமிழ், மலையாளம் தெலுகு, கன்னடம், அப்புறம் ஹிந்தி என்று நினைக்கத் தோன்றும். அதாவது வட இந்திய பாஷை முழுதும் ஹிந்தி போலத் தோன்றும்

நண்பர் விக்கியை கேட்டபோது இந்தியாவில் இந்தோ யுரோபியன், இந்தோ ஆர்யன், திராவிட, என்றெல்லாம் பிரித்து ஆக மொத்தம் 1991 கணக்கெடுப்பின்படி 1576 தாய்மொழிகள் இந்தியாவில் உள்ளதாக நீளப் பட்டியல் வந்தது! 2001 கணக்கெடுப்பின்படி 29 மொழிகள் ஒரு மில்லியன் மக்களுக்கு மேல் பேசும் மொழியாகவும், 60 மொழிகள் ஒரு லட்சத்துக்கும் மேல் மக்கள் பேசும் மொழியாகவும், 10,000 மக்களுக்கு மேல் பேசும் மொழிகள் 122 எனவும் கணக்கிடப் பட்டுள்ளது.

தேவநாகரி எழுத்துருவில் ஹிந்தி இந்தியாவின் அங்கீகரிக்கப் பட்ட ஆட்சி மொழி. ஆனாலும் ஆங்கிலம் இரண்டாவது மொழியாக துணை நிற்கிறது.

மிகுந்த பழமை மொழியாக தமிழ் அறியப் பட்டு 2004 இல் செம்மொழியாக அறிவிக்கப் பட்டது. பிறகு 2005 இல் சமஸ்க்ருதமும் 2008 இல் கன்னடமும் தெலுங்கும் செம்மொழியாக அறிவிக்கப் பட்டன. இன்னும் சில நாட்களில் திரைப்பட விருது போல எல்லா மொழிகளுக்கும் இது வழங்கப் பட்டு விடும் என்று நம்பலாம்.

எல்லாவற்றையும் பட்டியலிட இடமும், படிக்கப் பொறுமையும் இருக்காது என்பதால் இந்தியாவின் சில முக்கிய மொழிகள் பற்றி...
அஸ்ஸாமிஸ், அவாதி, பாக்ரி, பெங்காலி, பில்லி, போஜ்புரி, சத்திஸ்கரி, டெக்கான், டோக்ரி-காங்க்ரி, கார்வாலி, குஜராத்தி, ஹர்யான்வி,ஹிந்தி, ஹோ, கநௌஜி, கன்னட, கான்தேசி, காஷ்மிரி,கான்தேசி, கொங்கனி (2), குமாணி, கருக்ஸ், லாமணி, மகாஹி, மைதிலி, மலையாளம், மாளவி, மராத்தி, மார்வாரி, மெயதெய், முண்டாரி, நேபாளி, நிமாடி, ஒரியா, புன்ஜாபி, சாத்ரி, சந்தாலி, சிந்தி, தமிழ், தெலுகு, துளு, உருது, ...

அப்பாடி... இன்னும் எவ்வளவோ மொழிகள் இருந்தாலும் குறைந்த பட்சம் ஒரு மில்லியன் மக்களாவது பேசும் மொழிகள் இவை.

73 மில்லியன் மக்களுக்கு மேல் பேசப் படுகிறது தமிழ் மொழி. கிறிஸ்து பிறப்பதற்கு முன்னாலிருந்தே தமிழ் மொழி இருப்பதாக அறியப் படுகிறது. தமிழ்நாடு, புதுவை, மாநிலங்களில் ஆட்சி மொழியாகவும், மலேசியா, பிஜி, இலங்கை போன்ற இடங்களில் ஆட்சி மொழிகளில் ஒன்றாகவும் தமிழ் உள்ளது.

வாழ்க்கையில் முன்னேற ...009


அரை நிமிடம் ப - இரண்டு நிமிடங்கள் யோ - உடன் கடை.
பாடம் ஒன்பது: நீங்க இந்த நிமிடம் - இதைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்க கணினிக்கு அருகில் நீங்க வந்து, அதை ஆன் செய்வதற்கு முந்தைய ஒரு நிமிட நேரத்தில் - என்ன செய்தீர்கள்; இந்த வலைப்பதிவை விட்டு அகன்ற பின் வருகின்ற ஒரு நிமிடம் என்ன செய்யப் போகிறீர்கள்?
பதில் எதுவும் எனக்குச் சொல்ல வேண்டும் என்கிற அவசியம் இல்லை. சொன்னால்  - நான் கேட்டுக் கொள்வேன்.
நான் என்ன செய்தேன்? கணினிக்கு அருகில் இந்தப் பதிவை இட வருவதற்கு முன் - ஐந்து வயதுக்குட் பட்ட இரண்டு பையன்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தேன். 
என்ன செய்வேன்? இந்தப் பதிவை வலைக்கு அனுப்பியவுடன், அதை Tamilish பக்கத்திற்கு Submit செய்வேன். பிறகு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை - ஒரு நிமிட நேரம் - இந்தப் பதிவிற்கு எவ்வளவு வோட்டுகள் விழுந்துள்ளன, என்னென்ன பின்னூட்டங்கள் வந்துள்ளன என்பதை - முழு கவனத்துடன் படிப்பேன். ஏன் என்பதை, அடுத்த பதிவில் பார்ப்போம்.
(தொடரும்)

செவ்வாய், 20 அக்டோபர், 2009

எங்கள் ஜோதிடம் - உங்களுக்கு

அக்டோபர் இருபத்தொன்று முதல் இருபத்தேழு வரை ...

மேஷம்: உங்க கடின உழைப்பும், கலங்காத் தன்மையும், பல வெற்றிகளை உங்க காலடியில் கொண்டு சேர்க்கும். யாரு வந்து என்ன சொன்னாலும் நம்பிடாதீங்க - நல்லா கவனமா பாத்து ஒப்பந்தங்களில் கையெழுத்துப் போடுங்க. வங்கி, இன்சூரன்ஸ் சட்ட வல்லுனர்களுக்கு சிறப்பான வாரம். பலரைக் கவர்ந்து இழுத்து, அவங்க நண்பர் பட்டியலில் முதல் ஆளாக இடம் பெறுவீங்க. குடும்பத்தில் இருக்கும் வயதான ஒருவரால் சொத்து சேரும் வாய்ப்பு உள்ளது.

ரிஷபம் : உங்க குழந்தைகளின் படிப்பு, மேல் படிப்பு விஷயங்கள இந்த வாரம் கொஞ்சம் கவனிங்க. எல்லோரையும் எல்லா காலங்களிலும் திருப்தி பண்ண முடியாது - ஆனா நெருக்கமான சிலரை ஏமாற்றாமல் - அவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை எப்பாடு பட்டாகிலும் நிறைவேத்துங்க. உங்களுக்குப் பிடிக்காதவங்களை எல்லாம் வாய்க்கு வந்தபடி கண்டபடி பேசாதீங்க - பாவம் அவங்க - உங்களைப் போல் ஒருவர்! சொத்து எதுவும் இருந்தா - வீசி எறியாம - யோசிச்சி வெச்சிக்குங்க. ஆசிரியர்களும், விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்க்ளும் - இந்த வாரம் ரொம்பக் கஷ்டப் படுவாங்க.

மிதுனம் : நோக்கம் உயரியதாக இருந்தால் வெற்றி நிச்சயம். நிதி சமாச்சாரங்க - நீங்க கை வைக்கணும்னு வெய்ட் பண்ணுது. முதலீடு செஞ்சி லாபம் அடையுங்க. உங்களுடைய உற்சாகமான அணுகுமுறை உங்களுக்கு வெற்றிகளை வாரி வாரி வழங்கும். அரசியல்ல இருப்பவரா இருந்தா - கூட்டத்துல கோவிந்தா போடாம - துணிச்சலா மேடையேறி கருத்துங்கள சொல்லுங்க.இதமாகச் சொல்லுங்க.

கடகம் : அலுவலகத்தில் உங்களுக்குத் தெரிஞ்ச தகவல்களாலும், உங்க நட்பான நடவடிக்கைகளாலும், பல நன்மைகள் உண்டாகும். அதிகாரத்தில் உள்ள சிலரது நட்பால் செயற்கரிய செயலகள் செய்துமுடிப்பீர்கள். பிடித்த டூயட் பாடல் ஏதாவது இருந்தாக்க கொஞ்சம் பாடிப் பழகிக்குங்க - இந்த வாரம் பாடுவதற்கு சந்தர்ப்பங்கள் அதிகம். உடன் பிறப்புகளையும், ஒன்று விட்ட சொந்தங்களையும் ஐஸ் வெச்சி தாஜா பண்ணிக்குங்க - அவங்களால இந்த வாரம் உங்களுக்கு லாபம் வரும். ஆங்கில அறிவு / சொற்பொழிவு - உங்களுக்கு இந்த வாரம் உதவும்.

சிம்மம் : பெற்றோர்களால் - பேருதவி கிடைக்கும் - அவங்கள சந்தோசமா பாத்துக்குங்க. அலுவல் சம்பந்தமாக முக்கிய முடிவுகளை எதையும் இந்த வாரம் எடுக்காமல் பத்து நாளைக்கு ஒத்திப் போடுங்க. கணினி சம்பந்தப்பட்ட சிலருக்கு, வெளி நாட்டில் அதிக சம்பளம் பெறும் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. சாப்பாட்டு விஷயத்தில் எச்சரிக்கையா இருங்க - சங்கடத்தைத் தவிர்க்கலாம். இசைபட / இசை பாட வாழ்பவர்கள் - சிறப்பு பெறுவீர்கள். எதிரணியரிடம் - பேச்சுவார்த்தை நடத்தும்போது ஜாக்கிரதையா இருங்க.

கன்னி : மனைவிக்குக் கணவராலும், கணவருக்கு மனைவியாலும் நல்ல அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. நண்பர்கள் கைகொடுத்து உதவுவார்கள். பேச்சுத் திறமையாலும், வள்ளல் தன்மையாலும் பல நல்ல காரியங்களை ஈடேற்றிக் கொள்வீர்கள். உங்க கொடைத் தன்மை, சுற்றி இருப்பவர்களால் புகழப் படும். மாமியார் தவிர மற்றவர்கள் உங்க புகழ் பாடுவார்கள். இந்த வாரம் முழுவதும், சந்தோசமாகவும், ஆரோக்கியமாகவும் துள்ளித் திரிவீர்கள்.

துலாம் : பழகுவதற்கு இனிமையானவர் நீங்க - உங்க உணர்ச்சிகளை உங்க கட்டுப்பாட்டில் வெச்சிருப்பீங்க. இதுவரை இருந்த இறுக்கமான சூழ் நிலை சற்றே தளரும். துணைவர் / துணைவி உங்கள 'பின்னோக்கி' இழுக்க முயற்சி செய்வார்கள் - மாட்டிக்காதீங்க - தைரியமா முன்னோக்கி நகருங்க! 'மறப்போம்; மன்னிப்போம் - இத மனசுல வையுங்க.

விருச்சிகம் : 'காசு' விஷயத்துல எச்சரிக்கையா நடந்துக்குங்க. விவரம் நிறைய அறிஞ்சவர் நீங்க; சுயக் கட்டுப்பாடோடு நடந்துகிட்டீங்கன்னா நல்லது. திருமணம் ஆகவேண்டியவர்களுக்கு, இனிமையான அழகான வாழ்க்கைத்துணை அமையும். இந்தவாரம் பிரயாணங்களை ஒத்திப் போட முடியும்னா - ஒத்திப் போடுங்க - சிறு விபத்துகள் ஏற்படலாம். சில்லரை வரவுகள் இருக்கும் - பெரிய செலவுகள் எதுவும் இந்த வாரம் வேண்டாம்.

தனுசு : கோழிப்பண்ணை அதிபர்கள் கொழிப்பார்கள். பேன்களால் - மன்னிச்சுக்குங்க - பெண்களால் தொல்லை ஏற்படும் - ஜாக்கிரதையா இருங்க. உங்கள்ள சில பேருங்க தர்மஸ்தாபனங்களுக்கு வாரி வழங்குவீர்கள். எழுத்தார்வம் உள்ளவங்க பயணம் செய்து, உங்க அனுபவங்களை எழுதிப் புகழ் பெறுவீர்கள். எங்கேயும் சட்ட மீறல் எதுவும் இல்லாமப் பாத்துக்குங்க - சட்ட சிக்கல் ஒன்றில் மாட்டும் வாய்ப்பு உள்ளது.

மகரம் : வீடு மாற்றம், வேலை மாற்றம் - உண்டு - ஏமாற்றம் கிடையாது. அடக்கமான பேச்சு - அளவிலா நலங்களைப் பெற்றுத் தரும். அலுவலகத் தோழர்களிடையே உங்க புகழ் ஓங்கும். வீட்டிலும், அலுவலகத்திலும் எல்லோரும் உங்களைப் புகழ்வார்கள். எதிரியுங்க உங்களைப் பார்த்ததும் புறமுதுகிட்டு ஓடுவாங்க. சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னை ஒன்றுக்கு சுமுக முடிவு ஏற்படும். மருத்துவப் படிப்பு படிப்போருக்கு பரிட்சையில முதல் மார்க் கிடைக்கும்.

கும்பம் : மத்தவங்க யாரையும் குறை சொல்லாதீங்க. உங்க மன நிலையை - மற்றவர் மனம் புண்படாதபடி சொல்லுங்க. இல்லையேல் பிரச்னை ஏற்படும். உங்க பேர்ல வீண் பழி சுமத்த ஒருத்தர் தயாரா இருக்காரு - அதை சமாளிக்க நீங்க தயாரா இருங்க - இறுதி வெற்றி உங்களுக்கே! பல திறன் கொண்ட உங்களை பதவிகள் தேடி வரும். இனிமையாகப் பழகும் குணம் கொண்ட உங்களுக்குப் பாராட்டு மழைதான். புன்னகையுடன் புண்ணாக்கு வியாபாரம் செஞ்சாக் கூட லாபம் ஏற்படும்.

மீனம் : பத்திரிக்கையாளர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்களுக்கு போனஸ் கிடைக்கப் போகுது. எங்களுக்கும் ஏதாச்சும் பாத்துப் போட்டுக் கொடுங்க! இந்த வாரம் கொஞ்சம் மாத்தி யோசியுங்க. ஆக்க பூர்வமான யோசனைகள் ஊக்கத் தொகை பெற்றுத் தரும். வீடு மனை சம்பந்தமான வியாபாரங்க லாபம் தரும். சிலருக்கு புது வீடு, புது காரு கெடைக்கும். யாரையும் குறை கூறாமல் நிறை காணுங்கள்.

வாழ்க்கையில் முன்னேற ... 008

அரை + இரண்டு + கடை
பாடம் எட்டு: ஒரு நிமிடத்தில் நீங்க சம்பாதிப்பது எவ்வளவு என்று நேற்று கணக்கு பண்ணி வெச்சிட்டீங்க தானே? ஒ கே - யாரு கிட்டயும் சொல்லாதீங்க. ஆனா உங்க மனசுல நல்லா பதிஞ்சி வெச்சிக்குங்க.
இப்போ இதைப் படியுங்க: இந்தியாவில் உள்ள வருமானம் பெறுபவர்கள் எல்லோருடைய ஆண்டு வருமானத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு கணக்கீடு செய்தால், சராசரி இந்தியனின் வருமானம் ஒரு நிமிடத்திற்கு, ஐந்து பைசா.
உலகத்திலேயே பணக்கார நாட்டில், சம்பளம் பெறுபவர் வரிசையில், முதல் இடத்தைப் பெற்றுள்ள வேலையில் உள்ள ஒருவரின் சராசரி ஆண்டு வருமானத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு பார்க்கையில், அவருடைய வருமானம் ஒரு நிமிடத்திற்கு பதினெட்டு ரூபாய், இருபது பைசா. அதாவது, ஆயிரத்து எண்ணூற்று இருபது பைசா.
(தொடரும்)

திங்கள், 19 அக்டோபர், 2009

விஞ்ஞான உண்மைகளும் விபரீத வியாக்யானங்களும்...

ஆமை மூன்று வருடங்கள் வரை தூங்கும்.
அலார்ம் இல்லை போல இருக்கு!
எறும்புகள் தூங்குவதே இல்லை.
இது சரியான போட்டி!
போலார்க் கரடிகள் இடது கைப் பழக்கம் கொண்டவை.
அதற்காக இடது கைப் பழக்கம் கொண்டவர்கள் எல்லாம் போலார்க் கரடி அல்ல!
வண்ணத்துப் பூச்சிகள் கால்களால்தான் சுவையை உணர்கின்றன.
வர்ணபேதம் இங்கு இல்லை போலேருக்கு..
நாய்வகைகளில் German shepherd நாய்கள்தான் மனிதர்களை அதிகம் கடிக்கின்றன.
மற்ற நாய்கள் குரைப்பதோட சரியா?
கொசுவால்தான் அதிகபட்ச மரணங்கள் உலகில் நிகழ்கின்றன.
சின்ன Size... பெரிய Result...!
பாம்பிற்கு அதன் விஷம் அதை ஒன்றும் செய்யாது!
அப்போ தன் வினை தன்னை சுடாதா?
பூனைகள் நூறு வகையாகவும் நாய்கள் பத்துவகையாகவும் கத்தும் தன்மை கொண்டவை.
மனிதர்கள் எத்தனை வகையாக ...?
உடலமைப்பு வகையால் பன்றியால் ஆகாயத்தைப் பார்க்க முடியாது.
என்ன நஷ்டம்?
யானைகளால் குதிக்க முடியாது.
அப்போ யானையால் கிரிக்கெட் விளையாட முடியாது!
ஹைட்ரா என்ற நீர் உயிரி சாவதில்லை. அதன் செல்களை அது அவ்வப்போது புதுப்பித்துக் கொள்கிறது.
மனிதன் இப்போது கண்டுபிடித்துள்ள 'நானோ டெக்னாலாஜி'
Shrimp எனப்படும் உயிரினத்துக்கு இதயம் அதன் தலையில் உள்ளது.
ரெண்டும் ஒண்ணா இருக்கறதால 'மனசுக்கு தெரியுது, புத்திக்கு தெரியலையே...; என்று வசனம் பேச முடியாது!
எலி மிக, மிக மிக, மிக மிக மிக வேகமாக இனப்பெருக்கம் செய்யக் கூடிய உயிரினம்.
சீக்கிரமே தனி நாடு கோரிக்கை எழலாம்..
உலகின் மிகப் பொதுவான பெயர் முஹம்மத்.
பொதுவான ஆசை..?
ஆல்பர்ட் ஈன்ஸ்டீன்க்கு கார் ஓட்டத் தெரியாது.
வீணாகப் பொழுதை ஓட்டவும்தான்...
குதிரை வீரன் சிலை தத்துவமும் : குதிரையின் முன் இரண்டு காலும் அந்தரத்தில் இருந்தால் அவன் போர்க்களத்தில் இறந்தான் எனவும், ஒருகால் நிலத்திலும், ஒருகால் அந்தரதிலும் இருந்தால் போரினால் ஏற்பட்ட காயத்தால் இறந்தான் எனவும், இரண்டு காலும் தரையில் இருந்தால் அந்த வீரன் சாதாரணமாக ஏதோ நோயுற்று இறந்தான் எனவும் கொள்ள வேண்டும்.
குதிரை உட்கார்ந்திருந்தால்...?
மா சே துங் தன் வாழ் நாளில் பல்லே தேய்ததில்லை!
---------------- --------- ------------- -------- (பின்னூட்டத்தில் பூர்த்தி செய்வீர்களா?)

வாழ்க்கையில் முன்னேற ... 007


அரை + இரண்டு + கடை.
பாடம் ஏழு : சுய மதிப்பீடு கணக்கு. நீங்க விலை மதிப்பிடமுடியாதவர். உங்களைப் போன்றே சிந்திப்பதற்கு, செயல் படுவதற்கு யாராலும் முடியாது. உங்களைப் போலவே சிந்திக்க, செயல்பட - ஒரு கம்பியூட்டர் உருவாக்க வேண்டும் என்றால் - அதற்கு ஒரு மில்லியன் டாலருக்கு மேல் தேவைப் படும். அப்பவும் - உங்க சிந்தனை + செயல் திறனில் அதற்கு, பாதி அளவு கூட இருக்காது.
இந்தக் கணக்கின் விடை உங்களுக்கு மட்டும்தான். உங்களுடைய கடந்த ஆண்டு வருமானம், (உங்க வருமான வரி படிவத்தில் உள்ள Gross salary - அந்த படிவத்தில் காணப் படும் பெரிய தொகை அதுவாகத்தான் இருக்கும்!) ஒரு வெள்ளைத் தாளில் மேலே எழுதிக் கொள்ளுங்கள். வேறு வகை வருமானம் - நில, புலன்களிலிருந்து வருவது உண்டு என்றால் அதையும் எழுதிக் கொள்ளுங்கள். உங்க எல்லா வருமானங்களையும் ஆண்டுக் கணக்கில் எழுதிக் கொள்ளுங்கள் (இந்திய ரூபாய் மதிப்பில்). இந்த ஆண்டு வருமானத்தை, 360 ஆல் வகுத்துக் கொள்ளவேண்டும். கஷ்டமா இருந்தா, பத்தால் வகுத்து, பிறகு நாலால் வகுத்து பிறகு ஒன்பதால் வகுத்துக் கொள்ளுங்க. இப்போ வர்ற விடையில் பாதியை, ஏழால் வகுங்கள் - கடைசியாக வருகின்ற விடை உங்கள் ஒரு நிமிட வருமானம் - பைசாவில். 
உதாரணம் : வலையாபதியின் வலை நண்பர் ஒருவர் (நேற்று சாட்டில் கூறிய தகவல் அடிப்படையில்) அவருடைய ஆண்டு வருமானம் - எல்லாவற்றையும் சேர்த்து, மூன்று இலட்சத்து அறுபத்தாறாயிரத்து எண்பது ரூபாய். 
3,66,080 / 10 = 36608
36,608 / 4 = 9152
9152 / 9 = 1017
1017 / 2 = 508
508 / 7 = 72. 
எனவே அந்த நண்பரின் ஒரு நிமிட வருமானம் எழுபத்து இரண்டு பைசாக்கள் (சென்ற ஆண்டு).
(தொடரும்)

ஞாயிறு, 18 அக்டோபர், 2009

வாழ்க்கையில் முன்னேற - இதுவரை

'எங்கள்' ரசிகப் பெருமக்களே!
ஒவ்வொரு வாரமும் - ஆறு அல்லது ஐந்து பதிவுகள், ஞாயிற்றுக் கிழமையில் - அந்த பதிவுகளின் மீள் பார்வை; சந்தேகங்கள் ஏதும் இருந்தால் அந்த சந்தேகங்களைப் போக்குதல்.
பாராட்டியவர்களுக்கும் (maximum india, senthil, நிகழ்காலத்தில்) - வோட்டுப் போட்டு - இந்தப் பதிவுகளை - Tamilish இன் முதன்மைப் பக்கங்களுக்கு முன்னேற்றியவர்களுக்கும், எங்கள் நன்றி.
ஒரே வரியில் வலையாபதி சொன்னவைகளை - இங்கே பட்டியலிடுகிறோம்:
ஒன்று : காலை ஆறு மணிக்கு படுக்கை விட்டு எழுந்திருங்கள். ஏற்கெனவே எழுந்திருச்சாச்சா - வெரி குட். 
இரண்டு : ஐந்து வார்த்தைகள் ' எனக்கு இன்று எல்லாமே நன்றாக நடக்கும்'  இதைக் குறைந்த பட்சம் ஐந்து தடவைகள் கூறுங்கள். இயன்றால் ஜதியோடும் ஸ்ருதியோடும் பாடுங்க - சொந்த இசை அமைப்பு? இன்னும் சூப்பர்.
மூன்று : FOOD நான்கெழுத்து - அளவு மூன்றெழுத்து - சுவை - இரண்டெழுத்து. !
நான்கு : நடங்க - நல்லது; சவாரி - ஊஹூம (நீங்க காங்கிரசா இருந்தா கூட!)
ஐந்து : நீர் , யார் -- நீர் குடியுங்க - யார் யாருக்கு - சிறப்பு தினம் - பிறந்தநாள் - மணநாள் - பட்டியல் போட்டுக் கொள்ளுங்க மனசுல.
ஆறு : வாழ்த்துப் பெறுங்கள், வாழ்த்துங்கள்.
சந்தேகங்களில் - முக்கியமானது - கெவின் மாதியுஸ் அவர்கள் எழுப்பிய ஒரு சந்தேகம் - வா மு(பகுதி ஒன்று) பின்னோட்டத்தில் - மாலையில் சூரிய அஸ்தமன நேரம் - அலாரம் வைத்துத் தூங்கிவிடலாமா? - இது நகைச் சுவைக்காக எழுப்பப் பட்ட கேள்வியாக இருந்த போதும் - இதைக் குறித்துச் சிந்தனை செய்தபோது - இரண்டு விஷயங்கள் தோன்றியது. உறக்கத்திலிருந்து விழிக்க - அலாரம் தேவை - அலாரம் அடித்தவுடன் டபக் என்று எழுந்துவிடலாம் - ஆனா அலாரம் அடித்தவுடன் டபக் என்று - தூங்கமுடியுமா ? ஆங்கிலப் பழமொழி ஒன்று உண்டு. ஆணுக்கு ஆறு - பெண்ணுக்கு ஏழு - முட்டாளுக்கு எட்டு -- அதாவது தூக்க நேரம் - மணிக் கணக்கில் - எனவே - நீங்க தூங்கப் போகுமுன் கணக்கு பண்ணி - அலாரம் வெச்சிக்குங்க - ! (நான் ஏழரை மணி நேரம் தூங்குவேன்:-) இரண்டாவது பாய்ண்ட்: உறங்கப் போவதற்கு அலாரம் வெச்சி உறங்கப் போயிட்டீங்கன்னா - விழித்துக் கொள்ள யாரு அலாரம் வெப்பாங்க? 
முதல் பாடத்தைவிட இரண்டாவது பாடம் சுலபமானதுன்னு ஹேமா சொல்லியிருக்காங்க. நன்றி. இதுவரை சொல்லப்பட்ட ஆறு பாடங்களுமே - இது இருந்தால்தான் அடுத்தது என்று ஒன்றுமே கிடையாது. எது எல்லாம் உங்களுக்குப் பிடிச்சிருக்கோ அதை எல்லாம் - கடைபிடியுங்க. There are no hard and fast rules in these. 
தொடர்ந்து படியுங்க, சிந்தியுங்க - கடை பிடிங்க - இரண்டாயிரத்துப் பத்து - ஜனவரி ஒன்று அன்று நீங்க இப்போ இருப்பதைவிட முன்னேறிய மனிதர் -- அதுக்கு நான் கியாரண்டீ!
(தொடரும்) 

ஞாயிறு-14


சனி, 17 அக்டோபர், 2009

வாழ்க்கையில் முன்னேற ... 006


அரை நிமிடம் படியுங்க, இரண்டு நிமிடங்கள் சிந்தியுங்க; உடனே கடைபிடியுங்க.
பாடம் ஆறு: எங்கள் Blog வலைப் பதிவில், சென்ற வாரம் நாங்கள் நடத்திய வோட்டெடுப்பு - 'தீபாவளிக்கு நீங்கள் வாங்குவது' -- என்ற தலைப்பு - அதில் வழக்கமான தீபாவளி சமாச்சாரங்களோடு - போட்டி போட்டு, அதிக வோட்டுகள் வாங்கிய ஒரு வார்த்தை "வாழ்த்து". அதுதான் இன்றைய பாடம். வாழ்த்து பெறுங்கள்; வழங்குங்கள். எங்கெல்லாம் வாழ்த்துப் பெறமுடியுமோ அங்கெல்லாம் வாழ்த்து பெறுங்கள். எங்கெல்லாம் வாழ்த்து வழங்க முடியுமோ அங்கெல்லாம் வாழ்த்து வழங்குங்கள். ஆத்மார்த்தமாக வணங்கிப் பெறுங்கள். மனதார - எல்லோர் காதுக்கும் கேட்கும்படி, வாழ்த்துங்கள். நான் நடை பயிலும் தெருக்களில் - ஏதேனும் கல்யாண மண்டபம் கண்ணில் பட்டால், அங்கு திருமணம் நடைபெறும் நாட்களில், வாசலில் மணமகன் பெயரும், மணமகள் பெயரும் - கண்ணில் படும்படி வைத்திருப்பதைப் படிப்பேன். படித்துவிட்டு, அவர்கள் இருவரும், பன்னெடுங்காலம் எல்லா வளமும் பெற்று, ஆரோக்கியமாக, சந்தோஷமாக வாழவேண்டும் என்று மனதிற்குள் வாழ்த்தி என் நடையைத் தொடருவேன். நீங்களும் இதை செய்து பாருங்கள்.
(தொடரும்)

தீபாவளி தீபாவளிதான்..

தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் போல, அன்று ரிலீஸ் ஆகும் புதுப் படங்களை முதல் நாள் முதல் ஷோவே பார்ப்பது போல பழைய நினைவுகள் கிளர்ந்தெழுவதும் தவிர்க்க முடியாதது. ஒவ்வொரு பக்கத்திலும் அவரவர் நினைவுப் பதிவை படிக்க வேண்டியதும் அவ்வண்ணமே.....!

சில விஷயங்கள் பொதுவானவை. சில பிரத்யேகமானவை. அவரவர்க்கு அவரவர் அனுபவம்.

நினைவு தெரியாத வயதில் பெற்றோரின் கட்டாயத்துக்காக எழுந்து, கண்களில் கண்ணீருடன் எண்ணெய் தேய்த்துக் குளித்து, பயந்து பயந்து ஊசி வெடியில் தொடங்கி, பிறகு சிறிது சிறிதாக பெரியவர்களாகத் தொடங்கும் போது வெடியின் அளவும், வெடிக்கும் ஸ்டைல் மாற செய்யும் பந்தாக்களின் அளவும் கூடிக் கொண்டே போகும்.

முதலில் நம் வீட்டு வாசலில் நண்பர்கள் வெடித்தால் உரிமைப் பிரச்னையாகப் பார்க்கப் பட்டு, பிறகு குப்பை விழும் அளவில் மானப் பிரச்னை இருக்கிறது என்பதை உணரத் தொடங்கிய கால கட்டத்தில் நண்பர்களை நம் வீட்டு வாசலில் 'சேர்ந்து வெடிக்கலாம் வா' என்று சீனப் பிரதமர் போல அழைத்து வெடிக்கத் தொடங்குவோம். சூட்சுமம் புரிந்த நண்பர்கள் மாநாடு போட்டு அடுத்த தீபாவளியில் அவசரத் தீர்மானம் போட, பிறகு எல்லார் வீட்டிலும் 'சேர்ந்து வெடிப்பது' என்ற தீர்மானம் ஒருமனதாய் நிறைவேறும்!

குப்பை மானம் மலையேறும் நாளும் உண்டு. வீட்டு வாசலில் வெடி வெடித்து சற்றே சம்ப்ரதாயத்தை முடித்த உடன், சிலபல வெடிகளை பையில் திணித்துக் கொண்டு நண்பர்கள் வீடு ஒவ்வொன்றாக சென்று, ஜமா சேர்ந்து வீதி வலம் கிளம்புவோம். நண்பர்களுக்குள் சொல்லிக்கொள்ளப் படாத புரிந்துணர்வு ஒப்பந்தம் உண்டு. நண்பர்களின் சகோதரிகளைப் பற்றி யாரும் பேச மாட்டோம். அவர்களிடம் சகஜமாக நாங்களும் சகோதர பாவத்தில்தான் பேசுவோம். ஒவ்வொரு தெருவிலும் சில வீடுகள் அருகில் நின்று எங்கள் ஜமா இளைப்பாறும். 'பேசி'க் கொண்டிருப்போம். காத்திருந்தது வீண் போகாது! அகாரியமாய் வெளிப் படும் மின்னல் தேவை இல்லாத குப்பையை வெளியே கொட்டும், அல்லது ஒரு மத்தாப்பூவோ, புஸ் வாணமோ விடும். ஜமாவில் காத்திருந்த சம்பந்தப் பட்ட நண்பன் அல்லது ஜமாவே வெடி வெடிப்பதில் லேட்டஸ்ட் பயங்கர டெக்னாலஜியை அரங்கேற்றும். அவை ஒரு சிறிய மறைமுக இதழோரக் குறுஞ்சிரிப்புடன் acknowledge செய்யப் படும்!

காசு இல்லாத காரணத்தால் கொண்டாடாத தீபாவளி ஒன்றிரெண்டு வரும். அப்போது நண்பர்கள் மத்தியில் வீட்டில் யாராவது தெரியாத அல்லது இல்லாத ஒரு உறவினர் சாகடிக்கப் படுவார். காலை எல்லார் வீட்டிலும் வெடி சத்தம் கேட்கும்போது நம் வீட்டில் செய்ய முடியாத துக்கம் வார்த்தைகளாய் வெளிப் பட்டு அப்பா, அம்மாவைத் தாக்கும். அவர்கள் எந்த மாதிரி வேதனையில் இருந்திருப்பார்கள் என்று அப்போது உணர முடியாத பருவம்.

இப்போது அவைகளை நினைத்துப் பார்க்கும்போது சுகமான சந்தோஷங்கள், சொல்ல முடியாத சோகங்கள் மனதைக் கவ்வினாலும், நம் வீட்டுக் குழந்தைகள் நாம் பெற்ற இன்பங்களை பெற வேண்டும் என்று எல்லாம் செய்யும்போது நம் நினைவுகள் பின்னோக்கிப் போவதை தடுக்க முடியவில்லை. நாங்கள் அந்தக் காலத்தில் இருந்தது ஐநூறு வீடுகளுக்கும் மேல் இருந்த வீட்டு வசதிக் குடியிருப்பு. ஆட்கள், நண்பர்கள், பொழுது போக்குகள் அதிகம். இப்போது கட்டிடக் காடுகளாகிவிட்ட (வார்த்தை உபயத்துக்கு நன்றி ஹேமா!) இந்த நாளில் என் மகன்களுக்கு பக்கத்தில் வீடுகளும் குறைவு. கவனத்தை திசை திருப்ப டிவி என்ற மிகப் பெரிய அரக்கன் இயற்கை சந்தோஷங்களை பறித்து விடுகிறது...

தீபாவளி தீபாவளிதான்...