செவ்வாய், 31 ஜூலை, 2012

பாத்துப் பேசுங்க

திட்டம் குறிப்பிட்டுள்ள தேதியில் முடிந்துவிடும்தானே?
ஆமாம் சார்.
உறுதியா சொல்லுறீங்களா?
ஆமாம் சார்.
நிச்சயமா அந்தத் தேதியில் போன் பண்ணினால், திட்டம் ஓவர்னு சொல்லுவீங்களா?
ஆமாம் சார். அந்தப் படத்துல இருக்கின்ற தேதியில் போன் பண்ணினீங்கனா - அந்தத் தேதியில் நாங்க முடிக்கவில்லை என்றால், உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுப்போம்!


அப்போ அன்றைக்கு போன் பண்ணுகின்றேன். 
  

திங்கள், 30 ஜூலை, 2012

எட்டெட்டு பகுதி 24:: இ கு ர எ சா கா சோ

             
இந்தத் தொடரின் முன்னுரை வெளியானது, ஆகஸ்ட் எட்டாம் தேதி, கி பி இரண்டாயிரத்துப் பதினொன்றாம் ஆண்டு, (ஹி ஹி போன வருஷம்தானுங்க!) காலை எட்டு மணி, எட்டு நிமிடங்களுக்கு. 
         
இந்த 2012 - ஆகஸ்ட் எட்டாம் தேதி, காலை எட்டு மணி எட்டு நிமிடங்களுக்கு, இந்தத் தொடரின் இறுதிப் பகுதி (26) வெளியாகும். 
            
இந்த சந்தோஷ சமாச்சாரத்துடன், பதிவைத் தொடர்கின்றேன்! - பதிவாசிரியர்.        
             
(போற்றுவோர் போற்றலும், தூற்றுவோர் தூற்றலும் போகட்டும் 
பதிவாசிரியருக்கே! ) 
************************************  
            
                      
அலைபேசியில் அழைத்த இன்ஸ்பெக்டர் கு.ரங்கன், 'ஒரு கேஸ் விஷயமாக, இந்தூர் போக இருப்பதாகவும், எ சா, தன்னுடைய குருநாதரையும், கா சோ தன்னுடைய தோழியையும் பார்க்க வருவதாக இருந்தால் அவர்களும் வரலாம்' என்று தெரிவித்தார். எ சா & கா சோ உடனே, 'தாங்களும் வரத் தயார்' என்று கூறினார்கள். 
             
மறக்காமல், காவிக் கலர் மாத்திரையையும் நீல நிற பாட்டிலோடு சேர்த்து எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள். 
*****************************  
      
இந்தூர். 
           
இன்ஸ்பெக்டர் கு ர - போலீஸ் ஸ்டேஷனுக்குப் புறப்பட்டுச் சென்றவுடன், எ சா & கா சோ கூட்டணி, குருநாதர் விலாசத்திற்குச் சென்றனர். எ சாமியாரின் குருநாதரின் வீடு, ஜோதிட நிலையம், மருத்துவ ஆலோசனை வழங்குமிடம், எல்லாம் ஒன்றுதான்! 
   
குருநாதர், ஒரு அதிசய மூலிகை, இமாலயத்தில் ஓரிடத்தில் கிடைக்கின்றது என்று (ரஜினிகாந்த் உடன் சென்ற ஒருவர் கூறிய தகவல் கேட்டு) தெரிய வந்ததால், அங்கு அவசர பயணம் சென்றிருந்தார். ஆனாலும், உதவியாளரிடம், எ சாமியார் கேட்கின்ற தகவல்கள், டாகுமெண்ட்ஸ், எல்லாம் கொடுத்து உதவும்படியும், உதவியாளர் செய்த ஒரு தவறை, எ சாமியாரிடம் எடுத்துக் கூற வேண்டும் என்றும் கூறியிருந்தார். 
      
எ சா & கா சோ வந்தவுடனேயே குருநாதரின் உதவியாளர், கண்களில் கண்ணீர் மல்க, சாமியாரின் கைகளைப் பிடித்துக் கொண்டு, "என்னை கடவுள் கூட மன்னிக்க மாட்டார் ... " என்றார். 
            
எ சா: "ஏன் வினோத் குமார்?" (ஆமாம் குருநாதரின் உதவியாளர் பெயர் வினோத் குமார். சென்ற பதிவில் கா சோ குறிப்பிட்டது, இவரைத்தான். வாசகர் வினோத் குமாரை அல்ல!
          
வி கே: "கவனக் குறைவாக, நான் மாத்திரைகளை, பாட்டிலில் போடும்பொழுது, இப்ரால் நூறு எம் ஜி, மற்றும் இப்ரால் ஆயிரம் எம் ஜி மாத்திரைகளை, மாற்றிப் போட்டுவிட்டேன். அந்த நேரத்தில், கரண்ட் கட் ஆனதும் ஒரு காரணம். அதனால இப்போ, பிங்கி இறந்து போக நேரிட்டுவிட்டது. உங்க குருநாதர், என்னுடைய பாஸ், இந்த உண்மையை உங்களிடம் கூறி, உங்களிடம் மீதி இருக்கின்ற மாத்திரையை, உங்கள் மனசாட்சி சொல்வது போல உபயோகித்துக் கொள்ளலாம் என்று சொன்னார்" 
    
எ சா: "ஆமாம், நான் இந்தூருக்குக் கிளம்புவதற்கு முன்பே, குருநாதரிடம் அலைபேசியில் பேசினேன். அவரும் இதைத்தான் சொன்னார். மாயா கன்சல்டேஷன் பற்றிய ஃபைலை எடு."
    
வி கே, எ சா கேட்ட ஃபைலை எடுத்துக் கொடுக்கின்றார். அந்த ஃபைலில், மாயா, ஜோதிட மருத்துவ ஆலோசனைக்கு வந்த நாள், அவர் கூறிய விவரங்கள், அவருக்கு குருநாதர் அளித்த மருந்து விவரங்கள், எல்லாம் இருந்தன. மாயா கொடுத்த ஜாதகங்களின் நகல்களும் இருந்தன. கடைசியாக, மாயாவின் புகைப்படத்துடன், உள்ளூர் தினசரியில், ஓ ஏயும், பிங்கியும் கொடுத்திருந்த 'கண்ணீர் அஞ்சலி' செய்தியும் இருந்தன. 
   
எ சா: "வி கே - எனக்கு சமீபத்தில் நமக்கு வந்த ஒரு போஸ்டல் கவர், அது விண்டோ கவர் போல இருக்கவேண்டும். பிறகு, இதோ இந்தக் கண்ணீர் அஞ்சலி விளம்பரத்திற்கு ஒரு ஜெராக்ஸ் வேண்டும். மேலும் இரண்டு வெள்ளைத் தாள்கள் வேண்டும். அவற்றைக் கொடுப்பாயா?" 
    
வி கே, எ சா கேட்ட எல்லாவற்றையும் கொண்டுவந்து கொடுத்தார். 
  
அவற்றை வாங்கிக் கொண்டு, எ சா & கா சோ, இருவரும் தாங்கள் வந்திருந்த வாடகை காருக்குச் சென்றனர்.
          
எ சா: " சோ - இந்த ஆபிச்சுவரி விளம்பர ஜெராக்ஸ் காப்பியின் மறுபக்கத்தில், இவ்வாறு எழுது:
            
" அன்புள்ள ஓ ஏ!
           
நீங்கள் தன்னிலை அறிய, ஜோதிட மருத்துவர் கொடுத்த மூன்று மாத்திரைகளில், முதலாவது என் கை தவறி, உங்கள் அறையில், ஆரஞ்சுக் கலர் கம்பளத்தில் விழுந்து விட்டது. அப்பொழுது எனக்குத் தெரியாது, இது கொடிய விஷம் என்று.
           
இரண்டாவது மாத்திரையை, உங்களை தன்னிலை அறியச் செய்ய, நீங்கள் அருந்தப் போகும் கோக்க கோலா பானத்தில் போடச் செய்தேன். என்ன துர் அதிருஷ்டம்! அதை பிங்கி அருந்தி உயிரை விட்டுவிட்டாள்.
             
இந்த மாத்திரை கொடிய விஷம் என்று இப்பொழுது தெரியவந்துள்ளது.
           
மூன்றாவது மாத்திரையை இந்தக் கடிதத்துடன் இணைத்துள்ளேன். இதைக் கொடுத்தவரின் பெயர், முகவரி விவரங்களை கீழே கொடுத்துள்ளேன். 
           
இந்த மாத்திரையை என்ன செய்வது என்பதை, உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகின்றேன்.
              
ஒன்று, நீங்கள் இந்த மாத்திரையையும், இந்தக் கடிதத்தையும், போலீசில் கொடுத்து, என்னுடைய மரணம் தொடங்கி, உண்மையில் நடந்தவை எல்லாவற்றையும் கூறி, ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்து, சட்டப்படி என்ன தண்டனை அடைய வேண்டுமோ அதைப் பெறலாம்.
             
இல்லையேல், இந்த மாத்திரையை, சிறையில் உங்களுக்கு காலுசிங் கொண்டுவந்து கொடுக்கும் கோக்ககோலா பானத்தில் கலந்து நீங்கள் குடிக்கலாம். அப்படிச் செய்வதாக இருந்தால், இதோடு இணைத்திருக்கும் வெள்ளைக் காகிதங்களில், உங்கள் வாக்குமூலத்தையும், உயிலையும் எழுதிக் கொடுத்துவிடலாம். அப்படி நீங்கள், நான் இருக்கின்ற உலகத்திற்கு வருவதாக இருந்தால், எனக்காக என்னுடைய அம்மா காத்திருந்தது போல, உங்களுக்காக நான் காத்திருப்பேன்.
           
என்றும் உங்கள்
மாயா. "
               
"எழுதிவிட்டாயா? அதை இப்படிக் கொடு.
            
எ சா அந்தக் கடிதத்தை வாங்கி, அதோடு கே வி யிடமிருந்து பெறப்பட்ட காவிக் கலர் மாத்திரையை ஒரு நீல நிற டிரான்ஸ்பெரன்சி காகிதத்தில் சுற்றி அதையும், வெள்ளைக் காகிதங்களையும் இணைத்து, மேலே ஒரு சிறிய காகிதம் இணைத்து, அதில் விலாசம் எழுதினார். அந்தத் துண்டுத் தாளின் மறுபுறத்தில், தன்னுடைய குருநாதரின் பெயர், விலாசம் ஆகியவற்றை எழுதினார். எல்லாவற்றையும் மடித்து, விண்டோ கவருக்குள் வைத்தார். 


கவரை ஒட்டி, தயாராக வைத்துக் கொண்டார்.   
           
            
டாக்சியில் செல்லும் பொழுது, மாயா ஹோட்டல் இருக்கின்ற தெருவில் சென்று, அதை, ஹோட்டல் வாசலில் இருந்த லெட்டர் பாக்சில் யாரும் பார்க்காத நேரத்தில் போட்டுவிட்டு வந்து டாக்சியில் ஏறிக் கொண்டார். 
    
(தொடரும்) 
           
ஓய் பதிவாசிரியரே - இ கு ர எ சா கா சோ என்றால் என்ன? அதைச் சொல்லாமல் தொடரும் போட்டுவிட்டீர்களே! 
           

வெள்ளி, 27 ஜூலை, 2012

வாசகர்களுக்கு மூன்று கேள்விகள் 07

                             
பத்திரிகைகளுக்கு நாம் கேள்விகள் அனுப்பினால், அது பிரசுரமானால், அந்தக் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்வார்கள். 
                  
இங்கு ஒரு மாறுதல்.
      
இங்கு எங்கள் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லுங்களேன்.......
               
1)  இவன் மனதை தாமரைப்பூவோடும்  அவள் மனதை முல்லை மொட்டோடும் ஒப்பிடும் தலைவன், தலைவி மணப் பெண்ணாக ஒரு காலம் வரும் என்று காத்திருக்கும்போது தலைவி, ஊரில் இருக்கும் வேறு ஒரு பெண்ணைத் தேடிக் கொள்ளச் சொல்கிறாள். ஒருகணம் தவறாகி பல யுகம் தவிக்கும் சோதனைக் களமான அவள் ரகசியச் சுரங்கமாம் நாடக அரங்கமாம் யாருடைய முகத்தைப் பார்த்தாலும் சந்தேகத்தில் தவிப்பாளாம்! கண்டுபிடிக்க வேண்டியது ரெண்டு பாடல்கள்!
                 
2)  தற்போதைய இந்தியாவை நினைக்கும்போது நல்ல வகை / கெட்ட வகை ஏதோ ஒரு வகையில் 'சட்'டென நினைவுக்கு வரும் முதல் ஐந்து பேர்?
               
3)  அந்தக் காலம் முதல் நிறைய சினிமா பார்த்திருப்போம். சமீபத்தில் பார்த்த படங்களை மறந்து விடுங்கள். எப்போதோ பார்த்த சினிமாவில் இன்றும் மனதில் நிற்கும் இரண்டு சிறந்த, அல்லது மனம் கவர்ந்த வசனங்கள்........ 

              

வியாழன், 26 ஜூலை, 2012

உள் பெட்டியிலிருந்து 07 2012

            
எதிர்பார்ப்பும், ஏமாற்றமும் ...
            
அவள் : "இன்று எனக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை"
            
அவன் : "தெரியும்"
            
அவள் : "ஐ லவ் யூ.."
           
அவன் : ஐயும் லவ் யூடா செல்லம் லவ் யூ... லவ் யூ..."
 
             
சர்ஜரி முடிந்து, அவள் கண் விழித்துப் பார்த்த போது அவள் தந்தை மட்டும்தான் எதிரில் இருந்தார். 
          
அவள் : "எங்கேப்பா அவர்..?"
          
தந்தை : "உனக்கு இதயம் கொடுத்தது யார் என்று தெரியுமா...?"
            
அவள் : (அதிர்ச்சியுடன்) "என்ன?" (அழத் தொடங்குகிறாள்)
          
தந்தை : "அட, ஏம்மா... உன் ஆளு வெளியில் போய் இருக்கான். நான் அந்தக் கேள்வி சும்மாதான் கேட்டேன்.. இதோ வர்றான் பாரு..."
           
இது சினிமாவா என்ன... கண் கலங்கும் திருப்பம் வர...!!
                  
=======================
கடை உள்ளே நீதான் காப்பியாத்தணும்...!
   
ஒவ்வொரு புன்னகைக்கும் கடவுளுக்கு நன்றி சொல்லாத உங்களுக்கு, கண்ணீருக்குக் கண்டனம் சொல்ல மட்டும் என்ன உரிமை?
              
=========================================       
ப்ளீஸ்....  ப்ளீஸ்....
            
என்னைப் பற்றிக் கேட்டதை வைத்து அல்ல, என்னைப் பற்றி அறிந்ததை வைத்து என்னை எடை போடுங்கள்.
     
உங்களுக்குத் தெரியவில்லை என்றால் என்னைக் கேளுங்கள்.
          
உங்களால் ஒத்துக் கொள்ள முடியா விட்டால் என்னுடன் வாதம் செய்யுங்கள்.
        
உங்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை என்றால் என்னிடமே சொல்லுங்கள்.
           
ஆனால் மெளனமாக என்னை எடை போட மட்டும் ஆரம்பித்து விடாதீர்கள்.
             
===================================
                
காதலைச் சொல்ல புதிய வழி
           
அவன் : "உங்களை ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளலாமா..."
அவள் : "எதற்கு?"
அவன் : "சும்மா என் குழந்தைகளுக்கு அவர்களின் அம்மா இளவயதில் எப்படி இருந்தார்கள் என்று காட்டத்தான்.."
             
==================================
சார்...ஒரு நிமிஷம்...
                 
வாழ்க்கையோட அர்த்தம் என்ன கடவுளேன்னு கேட்டானாம் ஒருத்தன். 
            
உண்மைல வாழ்க்கைக்குன்னு அர்த்தம் ஏதுமில்லைடா மகனே... அர்த்தத்தை உருவாக்க உனக்குக் கொடுக்கும் ஒரு வாய்ப்புதாண்டா மகனே வாழ்க்கைன்னாராம் கடவுள்.




==================================================
              
அட...!
                
சிலர் உங்களைக் குருட்டுத் தனமாய் நம்பும்போது தயவு செய்து அதை நிரூபித்து விடாதீர்கள்.
            
=================================================
             
நம்ப முடியாத மெசேஜ்...

நாம் குருட்டுத் தனமாய் நம்பும் சிலர் மாறத் தொடங்கும்போது நம்மை வெறுக்கிறோமே தவிர அவர்களை வெறுக்க முடிவதில்லை.
              
=========================================
            
ரொம்பக் கஷ்டமுங்க...
   
நோயுற்ற கணவனை மருத்துவரிடம் அழைத்துச் சென்றாள் மனைவி.
            
மருத்துவர் மனைவியிடம் சொன்னார். "ரொம்பப் பேசாதீங்க.. ரொம்பக் கேள்வியா கேட்டுகிட்டு இருக்காதீங்க... அவர் அப்பா அம்மா பற்றி தப்பாப் பேசாதீங்க... உங்க ஷாப்பிங் எல்லாம் குறைச்சுக்கோங்க... அவருக்கு அட்வைஸ் பண்ணிகிட்டே இருக்காதீங்க... திட்டாதீங்க.. அவர் சொல்றதைக் கேளுங்க.. டிவி சீரியல் எல்லாம் பார்க்காதீங்க... நகை வாங்கணும்னு எல்லாம் சொல்லாதீங்க... இப்படி ஒரு வருஷம் இருங்க.. உங்க கணவர் பிழைச்சிடுவார்..."

திரும்பும் வழியில் கணவன் மனைவியிடம் கேட்டான். "டாக்டர் என்ன சொன்னார்?"

மனைவி சொன்னாள், "நீங்க பிழைக்கிறது கஷ்டம்னு சொல்லிட்டார்.."  
===============================
                   

புதன், 25 ஜூலை, 2012

ராம ஜோசியம்

            
'ராம ஜோசியம், சீதா சாஸ்த்திரம் ' 'டொய்ங்....டொய்ங் ..' என்று ஒற்றைத் தந்தி தம்புராவை மீட்டிக் கொண்டு நெற்றியில் ஒரு குங்குமப் பொட்டுடன, தோளில் ஒரு ஜோல்னாப் பையுடன், யாரும் கூப்பிடும் முன் நிற்காது தானுண்டு தன் நடையுண்டு என்று போகிற பைராகிகளை அந்தக் காலத்தில் வீதிகளில் நிறையவே காணலாம்.

http://www.sanatansociety.org/india_travels_and_festivals/images/12a_jpg.jpg
    
தெருக் கோடியில் நின்று எல்லோர் வீட்டையும் பற்றி யாரிடாமாவது கேட்டுத் தெரிந்து கொண்டுதான் வருவார்களா அல்லது நம் முகத்தைப் பார்த்தவுடனேயே இதெல்லாம் சொல்லலாம் என்று சொல்வார்களோ தெரியாது, ஆனால் சொல்லப் படுபவை நமக்கு நன்கு பொருந்தி வரும்.அல்லது அப்படித் தோன்றும் படியாக வார்த்தைகள் அமைந்திருக்கும். 
             
உதாரணமாக எங்கள் வீட்டு முன் சற்றே தயங்கி நடந்து போன ஒரு தம்புராக் காரரைப் பார்த்து விட்டு "டேய், அவரைக் கூப்பிடுடா" என்று அம்மா சொன்னவுடன் நான் கூப்பிடும் முன்னரே அவர் வந்து திண்ணையில் உட்கார்ந்து கொண்டு 'ஒரு டம்ப்ளர் தண்ணீர்  கொடுக்கறீங்களா ?' என்றார்.  நான் தண்ணீர் [அப்பொழுதெல்லாம் கிணற்றுத் தண்ணீரை அப்படியே வடிகட்ட வேண்டிய அவசியம் கூட இல்லாமல் குடிக்க முடிந்ததற்கு காரணம் நம்முடைய அறியாமையா அல்லது தண்ணீரின் மாசற்ற தன்மையா என்று நான் அடிக்கடி கேட்டுக் கொள்வதுண்டு ] எடுத்துக் கொண்டு வரும் பொழுது 
             
"ஏம்மா, உன்னை ஒரு கவலை அரிக்கிறது இல்லையா ? " என்று கேட்டுக் கொண்டே அம்மாவின் முகத்தை ஏறிட்டார்.  "கவலை என்ன ஒன்றா இரண்டா" என்று அலுத்துக் கொண்ட அம்மாவிடம் 'ஒரு குழந்தையைப் பற்றிய கவலை ...' என்றார்.  
    
"உண்டுதான்" என்ற அம்மாவிடம், 'ராமர் என்ன சொல்றாருன்னு பார்ப்போமா ?' என்று அவர் கேட்டதற்கு அம்மா பதில் கூறும் முன்னரே நான், பக்கத்து வீட்டு தண்டு, ஸ்ரீனிவாசன், பிருந்தா, எல்லோருமாக ' ஒ, பார்ப்போமே ' என்று ஒரே கோரசாகக் கத்த, அவர் உள்ளே வந்து, தாழ்வாரத்தில் தன்னுடைய குடை, பை, தம்புரா எல்லாவற்றையும் மூன்று திசைகளிலும் எல்லையாக வைத்துப் பின் நடுவில் இருந்த காலியிடத்தில் வைக்க ஒரு மனைப் பலகை கேட்டார்.   
       
அதற்குள் முன் போர்ஷனில் குடி இருந்த உபாத்தியாயர் பாலசுப்ரமணியம், இவர்களை எல்லாம் உள்ளே விடுவதே தப்பு என்று சொல்லி கதவைச் சார்த்திக் கொண்டாலும், சற்றே திறந்து வைத்து, இடுக்கில் ஒரு கண் வைத்துப் பார்த்துக் கொண்டிருக்க, அவர் மனைவி, பெண், பையன்கள் - ஜெயராம் - சின்னவன் பெயர் என்ன ? கிருஷ்ணாவா, இல்லை, நாராயணன்! அவன் - இப்படி கூட்டம் கூடியதில் அப்பா வந்ததையே யாரும் கவனிக்கவில்லை. 

http://www.sanatansociety.org/india_travels_and_festivals/images_babas/saints_babas_saddhus2_jpg.jpg
               
'என்ன கூட்டம் இங்கே ?' என்று கேட்டுக் கொண்டே வந்தவர், 'அட, நானும் ஒரு நாளாவது இவரைக் கூப்பிட்டு என்னதான் சொல்றார்னு பார்க்கணும்னு இருந்தேன் ' என்றவாறு ஒரு மனைப் பலகையை எடுத்துப் போட்டுக் கொண்டு உட்கார,
                
தாடிக்காரர் சட்டென்று 'உங்களுக்கு வெளியூரில்  உள்ள பிள்ளையை விட உள்ளூரில் இருக்கும் பிள்ளை பற்றி தான் கவலை' என்று ஆரம்பிக்க அம்மா, அப்பா, நான் எல்லோரும் எங்களை அறியாமல் தலையை ஆட்ட
நடுவில் இருந்த மனைப் பலகையின் மேல் ஒரு நாலு வெற்றிலை, பாக்கு எல்லாம் வைத்து விட்டு 'ஒரு வராகன், ஒரு வராகன்' என்று கேட்டு ஒரு வெள்ளி ரூபாயை அதன் மேல் வைத்து விட்டு,

               
ஒரு கிண்ணத்தில் இருந்த தண்ணீரில் ஒரு கல்பூரத்தைக் கொளுத்திப் போட, அது எரிந்துகொண்டே மிதந்தது.  கையில் கொஞ்சம் விபூதியை எடுத்துக் கொண்டு ஏதேதோ உச்சாடனங்களுடன் கிண்ணத்தில் இருந்த தண்ணீரில் போட, கல்பூரம் சுற்றி சுற்றி வர ஆரம்பித்தது. 
                     
இப்பொழுது அப்பாவைப் பார்த்து 'உன் பிள்ளைக்கு உடம்பு சரியாக வேண்டும் என்று மனதார வேண்டிக்கொள்' என்றார்  எதுவும் நடக்கவில்லை - கற்பூரம் கூட அசைவதை நிறுத்திக் கொண்டது. ' இன்னும் கொஞ்சம் உண்மையாக, நான் அதற்கு என்ன பரிகாரம் வேண்டுமானாலும் செய்வேன்' என்று சொல்லி வேண்டிக்கொள்'  என்றதும் மற்றொரு முறை வேண்டுவதற்கு முன் 'பரிகாரம்னா என்ன பண்ணணும்?' என்று அப்பா கேட்க, "சரியான முன் ஜாக்கிரதை முனுசாமி " என்று சொல்லாவிட்டாலும், அந்த பாவனையுடன் 'ஒரு நூறு பேருக்கு சாப்பாடு போட வேண்டும்' 
                   
'நூறு பேருக்கு சாப்பாடு போடுவதானால் அதற்கு எவ்வளவு செலவு ஆகும்' என்று அப்பா திரும்பிக் கேட்க, 'அதி அந்தாம் அதிகம் லேது சுவாமி - ஒக மூடு வரஹால்லே அவுதுன்னாய் '  இருநூறு ரூபாய் பக்கம் ஆகலாம்' என்றதும் இரண்டு மாத சம்பளத்துக்கு சமானமாயிற்றே என்று யோசித்தாலும் "சரி, செய்கிறேன்" என்று சொல்லி விட்டு வருடா வருடம் நவம்பர்  பத்தொன்பதில் இப்பொழுது வரும் சாலிடாரிட்டி வாக்கு மாதிரி மீண்டும் ஒரு முறை தன் இஷ்ட தெய்வங்களை எல்லாம்  வேண்டிக் கொண்டு 'நான் கேட்டது எல்லாம் நடக்கும் என்றால் என் அருகில் வா!' என்று கூப்பிட,
                 
மனை  மேல் இருந்த வெற்றிலை பாக்கு, ஒரு ரூபாய் எல்லாமாக  ஒரு மூன்றங்குலம்  இடம் பெயர்ந்தன. 'நடக்கும் என்று அந்த வெங்கடாசலபதியே சொல்லி விட்டார். என் தக்ஷிணை மூன்று வராஹன் கொடு' என்று தாடிக்காரர் ஆரம்பிக்க, 'இதென்னடா புது ரோதனை! நடந்தால் மூன்று வராஹன் தருவியா என்னும் பொழுதே எது நடந்தால் என்று கேட்டிருக்க வேண்டும்  இப்படி வெற்றிலை பாக்கு நடந்ததற்கெல்லாம் மூன்று வராஹன் தந்தால் நான் என்ன ஆவது' என்று அப்பா எடுத்துரைக்க [ஏன், கொஞ்சம் இடித்தே உரைத்தார் கூட !] 
                     
"நெனன்நானு  - ஆ சமாசாரம் ஜரிஹிதே மீறு நாக்கு மூடு வராஹாலுலு ஈவலனி.  இப்புடு ஜரிஹிந்தானிக்கி வெனக மீறு இலா செப்படம் சரி லேது " என்று கையை ஆட்டிப் பேச அப்பா, "ஒய் ராம ஜோசியம், நீங்க என்ன சொன்னாலும் என் கிட்ட இருப்பது பத்து ரூபாய் தான். அதை வேணா தருகிறேன் "  என்று புத்தம் புதிதான இரண்டு ஐந்து ரூபாய் நோட்டுகளை எடுத்து வைக்க, 





தாடிக்காரர் சட்டென்று அதை எடுத்துக் கொண்டு தெலுங்கும் இல்லாத ஒரு புரியாத மொழியில் ஒரு சாபம் தான் கொடுத்திருக்க வேண்டும்  பின்னே வெங்கடாசலபதியே போட்ட உத்தரவு செல்லாமல் போனதற்கு யார் காரணம் ? தம்பி செத்துப் போகும் வரை அவனுக்கு உடம்பு குணமாகவில்லை ! 

படங்கள் உதவி : நன்றி இணையம்
 
                  

செவ்வாய், 24 ஜூலை, 2012

ஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து...?


ஆஸ்பத்திரியில் ஒரே வார்டில் தினம் ஒரு மரணம் என்பதை ஆராய்ந்த நிபுணர் குழு அதற்கு வார்டு சுத்தம் செய்யும் முனியம்மா தான் காரணம் என்பதை ஒரு இரண்டு மூன்று நாளில் கண்டு பிடித்த கதையை நாம் எல்லோரும் கேட்டும் படித்தும் இருக்கிறோம்

இதோ இன்னொரு முனியம்மா கதை. 

எங்கள் அடுக்கு மாடி குடியிருப்பு.  மாடிப்படி, சுற்றுச் சுவர் இங்கெல்லாம் இருக்கும் விளக்குகளுக்கும், செக்யூரிட்டி அறைக்கும் சூரிய ஒளியில் இயங்கும் சாதனங்களைப் போட்டு விட்டால் நன்றாக இருக்கும் என்று யோசித்து யோசித்து கடைசியில் போட்டும் விட்டார்கள்.  ஒரு வாரத்துக்கு எங்கும் P V  பற்றி தான் பேச்சு.  இதை இன்னும் கொஞ்சம் பெரியதாகச் செய்தால் நம் வீடுகளுக்கு மின்சார விநியோகம் நிறுத்தப் படும் பொழுது இன்னும் உபயோகமாக இருக்குமே என்று எண்ணி வரும் ஞாயிறன்று மதியம் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் ஒரு கூட்டம் போடலாம் என்று எல்லோருக்கும் மாதவன் சொல்லியதும் அன்றி நேரம் கிடைத்த பொழுதெல்லாம் இன்னும் என்னென்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே புகார்கள் வரத் தொடங்கின.


'மாதவன் சார், நேற்று நான் ஷிப்ட் முடிந்து வரும் பொழுது மாடிப்படியில் விளக்குகளே இல்லை ரொம்ப கஷ்டப் பட்டுப் போனேன்' என்ற கணேஷிடம் ' இல்லையே, நான் நேற்று ஒரு ரிசப்ஷனுக்குப் போய் விட்டு கொஞ்சம் லேட் ஆகத்தான் வந்தேன். அப்போ எல்லாம் எரிந்து கொண்டிருந்ததே ! செக்யூரிட்டி பாலன் வந்ததும் எதற்காகவாவது அணைத்து வைத்திருந்தாரா என்று கேட்கிறேன்'  என்றார்.  அடுத்த நாளும் அதற்கடுத்த நாளும் புகார்கள் பெருகின.  மாதவனே ஒன்பது மணிக்கு விளக்குகள் எரியவில்லை என்பதை உறுதி செய்து கொண்டார்.


'நான் அப்பவே சொன்னேன்  இந்த கம்பெனியில் வாங்கினால் 'நேர்கொண்டு போமளவும் நில்லாய் நெடுஞ்சுவரே' என்கிற மாதிரி அவர்கள் பில் பாஸ் செய்யும் வரை வேலை செய்யும். அப்புறம் நாம் அவர்கள் பின்னே ஓடி ஓடி கால் முழங்கால் வரை தேய்வதுதான்  மிச்சம்  'நீங்கள் அப்பவே இன்னும் இரண்டு கம்பெனியில் விசாரித்திருக்கலாம்' என்ற பாண்டுரங்கனுக்கு பதில் சொல்லாமல் நகர்ந்த மாதவனை சாரதாவின் குரல் தயங்கச் செய்தது. 

" நீ லீவு போட்டு விட்டு கல்யாணத்துக்கு தான் போவியோ வேறெங்கேயோ போவியோ எனக்குத் தெரியாது ஆனால் இந்த முறை முன் பணம் எதுவும் கிடையாது  போன தடவை கூட நான் வாங்கிக் கொள்ளச் சொன்னதாக ஐயாவிடம் முன்பணம் வாங்கிப் போயிட்டே...."



சரி, இப்பொழுது உள்ளே போனால் நாமும் ரொம்ப இன்வால்வ் ஆகிவிடலாம் என்று எண்ணி,  மாடியில் ஒரு முறை போய் எல்லாம் எப்படி இருக்கு என்று பார்த்து விட்டு வரலாம் என்று படியில் காலை வைத்தவுடன் பாண்டுவும் வந்து சேர்ந்து கொண்டார்.

Switchboard : Back side of electronic equipment with cables

"சார் நான் என்ன சொல்றேன்னா இப்போ எல்லாம் கம்பெனிகள் ஆப்டர் சேல்ஸ் சர்வீஸில் தான் லாபமே பார்க்கறா. இருந்தாலும் நம்பளும் ஒரு வாரமா வாங்க வந்து பாருங்க என்று கூப்பிட்டால், பாட்டரியை செக் பண்ணுங்க, எல்லா விளக்குகளையும் அணைத்து வையுங்க என்று நமக்கு உபதேசம் செய்கிறார்களே ஒழிய வந்து பார்ப்பதாக இல்லை."

' அட இங்கே பாருங்க சார். ஒயர் ஒண்ணு விட்டுப் போயிருக்கிற மாதிரி இருக்கு' என்று அதை திரும்பி எடுத்து ஒரு காலியாக இருந்த சிவப்பு 'பிளக்'கில் செருகினார்.


அன்று மாலை வீட்டுக்கு வந்தவர் வெளியில் வந்து நின்று எல்லா விளக்குகளும் எரிகின்றனவா என்று பார்த்தவர் பாண்டுரங்கனைப் பார்த்ததும் "கங்க்ராட்ஸ் பாண்டு, நீங்க பண்ணின ரிப்பேர் வேலை செய்யுது பாருங்க ! "  என்றதும் பாண்டு சற்று வெட்கப் பட்டுக்கொண்டு [மாதவன் மாதிரியா என்று கேட்காதீர்கள் - மாதவன் எதிரில் மாதவன் மாதிரி வெட்கப் பட்டால் அப்புறம் மாதவன் என்ன நினைத்துக் கொள்வார் ? ] உள்ளே போய் விட்டார்.

ஞாயிற்றுக் கிழமை. குடியிருப்போர் சங்க மீட்டிங்.  எல்லோரும் ஒரு மனதாக இன்னும் கொஞ்ச நாள் கருவிகள் எப்படி வேலை செய்கின்றன என்று பார்த்து விட்டுப் பின் வேறு கருவிகள் வாங்குவது பற்றி யோசிக்கலாம் என்றதும் பாண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்ட மாதிரி தோன்றியது மாதவனுக்கு.  ஒருக்கால் அவரே கழட்டிவிட்டு புகார்கள் வரத்தொடங்கியதும் சரி பண்ணிய மாதிரி காட்டி விட்டாரோ என்றெல்லாம் எண்ண ஆரம்பித்தார்.

Dark Building : night life (insomnia)

சொல்லி வைத்த மாதிரி திங்களன்று முன்னிரவிலேயே விளக்குகள் அணைந்து விட்டன.


சரி காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்றிருந்து விட்டு காலையில் மாடிக்குப் போனவரை பாண்டுவின் குரல் வரவேற்றது. 'சமயத்தில் கூடு கட்ட குச்சி தேடும் காக்காய்  ஒயர்களை எல்லாம் இழுத்து பழுது பண்ணிவிடும் அந்த மாதிரி ஏதாவது இருக்கா என்று பார்க்கத்தான் வந்தேன் எல்லாம் சரியாக இருக்கிறது என்று தோன்றுகிறது' என்றார்.   

கீழே வந்தவரை பார்த்து சாரதா 'எங்கே போயிட்டீங்க ? மணி அண்ணா வீட்டு கிரஹப் பிரவேசத்துக்குப் போகணும் சீக்கிரம் ரெடி ஆகுங்க' என்றாள்.. மாதவனுக்கு பாண்டு பற்றி ஏதோ யோசனையில் இருந்தோம் என்பது தான் நினைவிருந்ததே தவிர, சாரதாவின் பின் சீட் உத்தரவுகளுக்கு ஈடு கொடுத்து வண்டி ஓட்டியதில் மற்றெல்லாம் மறந்தே போனது.

Car And The Driver : Driver's hands on a steering wheel of a retro car during riding on an empty asphalt road Stock Photo

வீட்டுக்குப் போனதும் இந்த மணியைக் கேட்க வேண்டும் இவர் வீடு கட்டியிருப்பது தமிழ் நாட்டில்தானா இல்லை வேறு மாநிலத்திலா என்று!  'ஹைவே'யை விட்டு வந்து ரொம்ப தூரமும் நேரமும் ஆயிருந்தாலும் மணியின் வீடு தென்படாததால் சரியான வழியில் தான் வந்திருக்கிறோமா இல்லையா என்று ஆத்ம சந்தேகங்கள் எல்லாம் வரத் தொடங்கின  ஒரு வழியாக சாப்பாட்டுக்கு முன் [ரொம்ப முக்கியம் - வழியில் ஒரு டீக்கடை கூட இல்லை !] போய் சேர்ந்தாயிற்று.  எல்லாம் ஒரே நிசப்தமாக இருப்பது போல் தோன்ற மின்வெட்டு காரணமாக இந்தக் கிராமம் இந்த நேரத்தில் இப்படி அமைதியாக இருப்பதைப் பார்த்துதான் நான் இங்கே வீடு கட்ட நினைத்தேன் என்ற மணி 'உங்கள் காலனியில் சூரிய சக்தியில் விளக்குகள் எரிகிறதாமே, சாரதா சொன்னாள்' என்று கேட்கவும், 'ஆமாம் ஆனால் கொஞ்ச நாட்களாய் அது சரியாக வேலை செய்ய வில்லை.  பிறகு சரியான பின் வந்து பாருங்களேன்' என்றார்.  

'அண்ணா!  போன வாரம் முழுக்க அது வேலை செய்யவில்லை என்று எல்லோரும் இவரைப் பிய்த்து எடுத்து விட்டார்கள். அது தான் இப்படி இழுக்கிறார் ' என்று சாரதா சொல்ல, அன்றைக்குப் பாண்டு ரிப்பேர் செய்த பின் ஓரிரு நாள் மட்டும் வேலை செய்த விளக்குகள் ஏன் மீண்டும் இயங்காமல் போயின என்பது தெரிகிற வரை யாருக்கும் இந்தக் கருவிகளை சிபாரிசு செய்வதில்லை என்று மனதுக்குள் தீர்மானித்துக் கொண்டார்.

அன்று மாலை வீடு திரும்பும் பொழுது விளக்குகள் எல்லாம் சற்றுப் பிரகாசமாகவே இருந்த மாதிரி தோன்றியது.

Building In Night : City street at night Stock Photo
கதவு அருகில் போகும் பொழுதே யாரோ நின்று கொண்டிருப்பது தெரிந்தது - முனியம்மா தான்!  பேரன் டெங்கு மாதிரி ஜுரத்தில் ஆஸ்பத்திரியில் இருப்பதால் இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு வரமுடியாது என்று சொன்னதுடன் முடியாது என்று சொல்லாமல் கொஞ்சம் முன்பணம் கொடுக்கும்படியும் மன்றாட சாரதாவுக்கு இல்லை என்று சொல்ல மனது வரவில்லை [வெள்ளிக்கிழமை மாலை - இல்லை என்று சொல்ல மாட்டோம் என்ற தைரியத்தில் கேட்கிறாளோ ? ] கையில் கிடைத்ததைக் கொடுத்தாள்.

சனிக்கிழமை கருவிகள் சப்ளை செய்தவர்கள்.வந்து பார்த்து விட்டு "இங்கே பாருங்க சார், ஒரொரு பேனலில் இருந்தும் பதினாறு வோல்ட் - எட்டு ஆம்பியர் ஷார்ட் சர்க்யூட் கரண்ட் என்று எல்லாமும் சரியாக இருக்கிறது  பாட்டரியும் சார்ஜ் ஆகி இருக்கிறது  விளக்கெல்லாமும் கூட வந்த உடனேயே செக் பண்ணிட்டோம்" என்று ஒரு படிவத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு போய் விட்டார்கள் 

அடுத்த புதன் கிழமையிலிருந்து மீண்டும் புகார்கள் மேலும் புகார்கள், மென்மேலும் புகார்கள்....! மாதவன் புகார்களுக்குள் புதைந்தே போனார்.  வியாழனன்று மீண்டும் கம்பெனிக்கு ஃபோன் செய்து உடனே வரச் சொன்னார்.  'கியாரண்டீ இருக்கு என்பதால் நீங்க அடிக்கடி கூப்பிடுகிறீர்களா என்ன ? ' என்று மறு முனையில் கேட்டவரை நோகடிக்கிற மாதிரி என்ன சொல்லலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே அவர் ஃபோனை வைத்து விட்டார்.

Switchboard : Call center operator with headset

பதினைந்து நிமிடங்களில் வாசலில் மணியடித்துக் கூப்பிட்டவர், சிவப்பாக உயரமாக இருந்தார். தன்னை சௌந்தரராஜன் என்று அறிமுகம் செய்து கொண்டு, 'ஆபீசுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தேன், இங்கே நாங்கள் சப்ளை செய்த கருவிகளில் ஏதோ கோளாறு வந்து வந்து போகிறது என்று சொன்னார்கள் .  சில சமயம் நாம் எப்பொழுதும் பார்க்கும் நேரங்களில் தெரிந்து கொள்வதை விட திடீரென்று செக் செய்தால் நிறையத் தெரிய வரும் ' என்று சொல்லிக் கொண்டே போனவர், ஒரு விசிட்டிங் கார்டை எடுத்து நீட்ட அதிலிருக்கும் பெயரிலிருந்து தான் அவர் அந்த சூரிய சக்தி கம்பெனியை சேர்ந்தவர் என்கிற உண்மை புலப்பட்டது மாதவனுக்கு.

Switchboard : A man doctor consultant with a laptop on a white background.

மாடிக்கு மாதவனைத் தொடர்ந்து வந்த சௌந்தரராஜன் திடீரென்று விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தார்.  என்ன என்று புரியாவிட்டாலும் சிரிப்பு மாதவனுக்கும் தொற்றிக் கொண்டது. மாடியை கவனமாகப் பார்த்தவர் மீண்டும் சிரிக்க ஆரம்பித்தார்.

Laughing : portrait of young man laughing in suit and sunglasses against a blue sky background  Laughing : A happy cartoon toddler laughing and pointing.

சிரிப்பின் காரணம் இந்த நேரத்துக்கு உங்களுக்குத் தெரிந்து உங்களையும் சிரிப்பு தொற்றியிருக்க வேண்டுமே ?

ஞாயிறு, 22 ஜூலை, 2012

ஞாயிறு - 159:: 22/7 !!


எங்கள் (விஞ்ஞானி) ஆசிரியர், எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். 

'ஞாயிறு நூற்று ஐம்பத்தொன்பது வருகின்ற தேதியை கவனித்தாயா? 22/7 ! இந்த பின்னத்தை நீ கணக்கில் நூற்றுக்கு சைபர் எடுத்த நாட்களில் அடிக்கடி கேள்விப் பட்டிருப்பாயே!' என்று எழுதியிருந்தார். 

"ஆமாம், ஆமாம்! 'கேள்வி'ப் பட்டிருக்கின்றேன்; ஆனால் பதில்தான் சரியாக சொன்னது இல்லை" என்றேன், அவரைத் தொலைபேசியில் அழைத்து. 

"அதனாலத்தான் நீ நூற்றுக்கு சைபர் எடுத்த நாட்களில் என்று சொன்னேன்" என்றார்.

நான், "இந்த மாதம் பூச்சிகள் மாதம் ஆயிற்றே" என்றேன். 

அவர், "அதனால் என்ன? பையையும், பூச்சியையும் இணைத்துப் படம் போடு" என்றார்! 

போட்டு விட்டேன். 
********************************
ஆனால், அவர் சொன்னது இந்தப் பை இல்லையாம்! 

மேலே கண்ட வரைவு வடிவத்தைப் படித்துப் பார்த்து அவர் சொன்னது, " தம்பீ ! பை தெரியுமா பை?" என்று கேட்டார். "இதில் ஒவ்வொரு வார்த்தையிலும் எவ்வளவு எழுத்துகள்?" என்றும் கேட்டார். 

நான் சொன்னேன்: "3 1 4 1 .."

அவர்: "ஆச்சரியக் குறிக்கு பதில், ஒரு புள்ளி வெச்சுப் பார்த்தால், அது 'பை'யின் அப்ராக்சிமெட் வால்யூ" என்றார். (3.141) 

"அட! இப்படி ஒரு வழி, இருக்கின்றதா! எண்களை நினைவில் கொள்ள ..!" என்று வியந்து போனேன். 

இந்தத் தகவலை எங்கள் மற்ற ஆசிரியர் ஒருவரிடம் பகிர்ந்துகொண்ட போது, அவர்,  "அடேடே! வா அனுஷ்கா வா. இப்போதான் இராயலாநகருக்கு ரோடு போட்டாங்களா? போகட்டும் - டிபன் தின்னாச்சா .... தின்னவில்லைன்னா சரவணபவனுக்கு தொலைபேசிவிட்டு ... " என்று சொன்னார். 

"என்ன இதெல்லாம்?" என்று கேட்டேன். 

"இதுவும் 'பை' வால்யூதான். வார்த்தைகளை எண்ணினால் 3.1415926535897 என்று வரும்" என்றார்! 

'பை' யின் முதல் நூறு தசமஸ்தான்ங்களை இங்கே கொடுக்கின்றோம். 


3.14159 26535 89793 23846 26433 83279 50288 41971 69399 37510 58209 74944 59230 78164 06286 20899 86280 34825 34211 70679

வாசகர்களின் படைப்பாற்றல் திறமைக்கு தீனி போடுவதற்காக, இந்த பயிற்சி: 


இதை வைத்து, அர்த்தமுள்ள பாரா எழுதவேண்டும். அந்தப் பாராவில் உள்ள வார்த்தைகளில் உள்ள எழுத்துகளைக் கொண்டு, 'பை' யின் மிக நீளமான மதிப்பை நினைவு கொள்ள வசதியாக இருக்கவேண்டும். நூறு வார்த்தைகளும் வரவேண்டும் என்றில்லை. அர்த்தமுள்ள + அதிக பட்சம் வார்த்தைகள் புனைவோருக்கு பரிசு கொடுப்போம். 
                

சனி, 21 ஜூலை, 2012

எட்டெட்டு பகுதி 23:: ஆஸ்காரும் டாய் காரும்!

                      
            
சாமியார் பேச்சு இன்றி விழுந்ததும், கே வி திகைத்தார். அறையில் இருந்த தொலைபேசியை நோக்கி ஓடினார். ஆம்புலன்சுக்கு போன்  செய்வதா அல்லது போலீசுக்கு போன் செய்வதா என்ற குழப்பத்தில் டெலிபோன் டைரக்டரியைத் தேடின அவருடைய கண்கள். அவசரத்தில் நூறு, நூற்று எட்டு எல்லா எண்களும் மறந்து போய்விட்டன அவருக்கு. 
          
 
           

"கவலைப் படாதீர்கள் கே வி, எனக்கு ஒன்றும் ஆகவில்லை. அந்த மாத்திரையில் விஷம் இல்லை. அதை உங்கள்  மனதில் சந்தேகத்துக்கு இடம் இல்லாமல் உறைக்கும்படி செய்ய வேண்டும் என்று நினைத்துதான் இந்த ஆக்ட் கொடுத்தேன்! பிங்கி மரணத்திற்கு, நீங்கள் காரணம் இல்லை." என்றார் அவர் பின்னே வந்து நின்றுகொண்டிருந்த எலெக்டிரானிக் சாமியார்! 
         
மேலும், "மனதில் எந்தக் குழப்பமும் வேண்டாம்; என்னுடைய குருநாதர் கொடுத்த மாத்திரை, விஷ மாத்திரை இல்லை. நீங்கள் கவலைப் படாமல் வீட்டிற்குப் போகலாம். உங்கள் பெண்ணின் பெயரை ANOOSKA என்று இல்லாமல், ANUSHKA என்று மாற்றிவிடுங்கள். இந்தக் கதையை இத்துடன் நீங்கள் மறந்துவிடலாம்!" என்றார். 
     
கே வி சந்தோஷமாக, மன நிறைவுடன் கிளம்பிச் சென்றார். 
==============================  
            
கே வி புறப்பட்டுச் சென்றவுடன், அந்த அலுவலகத்தின் உட்கதவு ஒன்றைத் திறந்து, அறையிலிருந்து வெளியே வந்தார் காசு சோபனா! 
            
எ சா: "எப்பிடிம்மா என்னுடைய நடிப்பு? ஆஸ்கார் கிடைக்குமா?" 
              
சோபனா: "ஆஸ்கார் கிடைக்காது. ஏன், டாய்  கார் கூடக் கிடைக்காது."
             
எ சா: "அட ஏம்மா அப்படி சொல்லுறே ?"
            
சோபனா: "கே வி, நீங்கள் கேட்ட பிளாஸ்டிக் பெட்டியை எடுப்பதற்கு, மேஜை இழுப்பறையைத் திறக்கத் திரும்பியபொழுது, நீங்க விஷ மாத்திரையை சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டு, காவிக் கலர் காட்பரி'ஸ் ஜெம் ஒன்றை, பேப்பரின் மீது வைத்ததை, நான் என்னுடைய அறையிலிருந்து, கணினியில், வெப் கேம் வழியா பார்த்துகிட்டு இருந்தேன். உங்களையும், உங்க குருநாதரையும் கைது செய்து, விசாரணை செய்யவேண்டும் என்று இன்ஸ்பெக்டர் ரங்கனிடம் சொல்லப் போகின்றேன்." 
           
எ சா: "நீ செஞ்சாலும் செய்வே. சரி, இன்று காலை ஆபீஸ் வந்ததும், நீ சொன்னதை, உன் கனவை, மீண்டும் ஒருமுறை சொல்லு."
           
சோபனா: "இது, இன்று நேற்று மட்டும் வந்த கனவு இல்லை. கடந்த ஒரு வாரமாகத் திரும்பத் திரும்ப வந்த கனவுதான். என்னுடைய கனவில், அனுஷ்கா வந்து, 'உன்னுடைய ஆவி அக்கா சொல்கிறேன், கேட்டுக்கோ. கே வியிடம் இருக்கும் காவி மாத்திரையை வாங்கி, இந்த ஊருக்கு அனுப்பு' என்று சொல்வார். நான், 'இந்த ஊருன்னா எந்த ஊர்?' என்று கேட்டால், 'இந்த ஊருன்னா இந்த ஊருதான்' என்று சொல்லி மறைந்து விடுவார். 
            
எ சா: "எந்த அனுஷ்கா?"
          
சோபனா: "விக்ரமாற்குடு படத்தின் கதாநாயகிதான்." 
           
எ சா: "பாத்தியா சோ! நீ உன்னுடைய கனவை என்னிடம் சொல்லியிருந்ததால்தான், வந்தவர் தன பெயரை 'கே வி' என்று கூறியதும், அவரை உட்கார வைத்து, அவரிடம் கதை கேட்டு, அவரிடமிருந்த காவி கலர் மாத்திரையை, சாமர்த்தியமாக  வாங்கி வைத்துவிட்டேன். என்னைப் போய் போலீசில் மாட்டிவிடுகின்றேன் என்று சொல்கிறாயே!" 
            
சோபனா: "அந்தக் கதையை எல்லாம் வினோத் குமார் போல, நீங்க, சொல்லுறதை எல்லாம் நம்பறவங்க கிட்டே சொல்லுங்க. உங்க குருநாதரைக் காப்பாற்ற, நீங்க அந்த மாத்திரையை அபகரித்து அதற்கு பதிலாக காட்பரி'ஸ்  ஜெம் சாப்பிட்டு, ஃபிலிம் காட்டிட்டீங்க. இது எனக்குத் தெரியாதா?" 
            
எ சா: "சரி எது எப்படியோ போகட்டும்  இப்போ இந்த மாத்திரையை, இந்த ஊருக்கு  .... அடேடே ... ... இந்தூருக்கு அனுப்பணும். அதற்கு என்ன வழி? 'ஆவி சொல்லைத் தட்டாதே!' என்று ஆன்றோர் சொல்லியிருக்கிறார்கள்!"
             
அந்த நேரத்தில் அவருடைய அலைபேசி, காபி ராகத்தில் கீதமிசைத்தது. 
        
" Inspector K_Rangan calling ..." 
                        
(தொடரும்) 
                      

வெள்ளி, 20 ஜூலை, 2012

காற்றினிலே வரும் கீதம் !

                     
பொதிகையில் ஒரு ஞாயிறு இரவு ஒன்பது 
மணிக்குமேல் எம்மெல்வி பற்றி வயலின் கன்னியாகுமரி பேசிக் கொண்டிருந்தார். அப்புறம் தெரிந்து கொண்டது என்னவென்றால்,  ஞாயிறு இரவுகளில், ஒன்பது மணி, ஐந்து நிமிடங்களுக்கு 'காற்றினிலே வரும் கீதம்' என்ற தலைப்பில் பிரபல இசைக் கலைஞர்கள் பற்றிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது என்று! (பொதிகைத் தொலைக்காட்சியில் மட்டும்தான் இந்த ஐந்து நிமிடக் கணக்குகள் நிகழ்ச்சி நிரல்களில் காணப்படும்! மற்ற சானல்களில் ஒன்பது மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமாகும் என்று நிரலில் சொல்லியிருந்தாலும், விளம்பரங்கள் முடிந்து, நிகழ்ச்சி ஆரம்பமாக பன்னிரண்டு நிமிடங்கள் ஆகும்!) இந்த நிகழ்ச்சி என்று ஆரம்பித்ததோ ... நாகார்ஜுன் அனுஷ்கா படம் ஒன்றை ஜெமினியிலும், 'டைம்ஸ் நவ்' வில் R D பர்மன் பற்றிப் பார்த்து, கேட்டுப் புல்லரித்துப் போனதற்கும் நடுவில் வைத்த போது தெரிந்தது. அதில் கேட்ட சில சுவாரஸ்ய விஷயங்கள்.  

           
-எம் எல் வி தான் பாடிய பாடல்களை-ரெகார்டை- போட்டுக் கேட்பதில்லை. மற்றவர்கள் பாடிய பாடல்களைத்தான் கேட்பார்.
              
-கச்சேரிக்குமுன் பிராக்டீஸ் செய்து பார்த்ததில்லை. கஷ்டமான பல்லவி என்றால் ஓரிருமுறை பாடிப் பார்த்துக் கொள்வார்.
               
-அபாரமான கல்பனாஸ்வரம். பாலமுரளிக்கும் இந்தத் திறமை உண்டு. சொல்லிக் கொடுக்கும் வாத்தியாரிடத்திலிருந்து வருவதில்லை இந்தத் திறமை. தனக்குள்ளேயே இருக்க வேண்டும்.
             
-உடன் பாடியது யார் என்று பார்த்தால் சின்னப் பெண்ணாய் சுதா ரகுநாதன். எம்மெல்வி கல்பனாஸ்வரம் பாடும்போது அமைதியாகக் கவனித்து உள்வாங்கிக் கொண்டிருந்தார்.
              
-ஸ்ரீலங்காவில் எண்பத்தி மூன்றாம் வருடம் ரேடியோ நிகழ்ச்சிக்குப் பாடப் போனபோது கலவரம் நடந்த போது சிறிய அறையில் முப்பது பேர்கள் சத்தம் போடாமல் அமர்ந்திருந்த நிலை பற்றியும், அரசாங்கத்தின் சார்பில் ஒரு அம்பாசடர் கார் வந்து அதில் எட்டு பேர் மட்டுமே போக முடியும் என்றபோது கூட இருந்தவர்களை முதலில் அனுப்பிய பெருந்தன்மையைச் சொன்னார்.
               
மணி கிருஷ்ணஸ்வாமி அமெரிக்க சான்ஸ் வந்தபோது தனக்கு வயலின் வாசிக்க கன்னியாகுமரியை அழைத்தபோது எம்மெல்வி கன்னியாகுமரியை அவருடன்  போகுமாறு  பணித்தாராம்.  'அக்கா, நான் போக மாட்டேன்... இங்கே உங்களுக்கு கச்சேரி வாய்ப்புகள் இருக்கு. உங்களுடன்தான் வாசிப்பேன்' என்றாராம் இவர். எம்மெல்வி தான் நிறைய கச்சேரிகள் ஒத்துக் கொள்ளப் போவதில்லை என்று கூறியதோடு அடுத்த ஒன்றரை மாதத்தில் சான்பிரான்சிஸ்கோவில் சங்கீத கிளாஸ் எடுக்க தான் வரப் போவதைச் சொல்லி, 'நான்தான் வந்துடுவேனே, ஒன்றரை மாதம்தானே, போ' என்றாராம். பெட்ரோல் விலை ஏறியது போன்ற காரணங்களினாலும் மணி கிருஷ்ணஸ்வாமி பண விவகாரங்களை முன்னரே சரியாகப் பேசிக் கொள்ளாததாலும் நஷ்டமேற்பட்டது என்றறிந்த எம்மெல்வி அந்த சான்பிரான்சிஸ்கோ சான்சை மணி  கிருஷ்ண ஸ்வாமிக்குக் கொடுத்த பெருந்தன்மையையும் கன்னியாகுமரி சொன்னார்.
                
இதற்கடுத்த இரண்டு வாரங்கள் டி கே பட்டம்மாள் பற்றிய நிகழ்ச்சி. விஜய் சிவா பேசினார். டி கே பட்டம்மாள் பற்றி நிறையப் பகிர்ந்து கொண்டார். ஒரு பாடலை பாடுவதற்குமுன் டி கே பட்டம்மாள் அதைப் பலமுறைப் பயிற்சி செய்வாராம். என்னதான் கச்சேரிகள் செய்தாலும் ஒரு குடும்பத் தலைவியாகத் தனது கடமைகளை அவர் நிறைவேற்றத் தவறியதே இல்லை என்றார். டி கே பி கச்சேரி போடும்போது சிறு பெண்ணாக நித்தியஸ்ரீயை அவருடன் பார்க்க முடிந்தது. இரண்டாவது வாரம், ஜூலை பதினைந்து அன்று, டி கே பி யுடன் மேடைகளில் பாடிய, அவருடைய மருமகள் திருமதி லலிதா சிவகுமார் (நித்யஸ்ரீ அவர்களின் அம்மா) நித்யஸ்ரீ மகாதேவன், காயத்ரி (நித்யஸ்ரீயின் அக்கா ) எல்லோரும், டி கே பி பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்கள். ஜூலை பதினாறு, டி கே பி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள். 
             
எல்லாவற்றையும் விட ஆச்சரியமான விஷயம், பேட்டி கண்டவர், யு எம் கண்ணன்! அந்தக் காலத்தில் எதிரொலி நிகழ்ச்சிகளில்  கருந்தாடி குறுந்தாடியுடன் காணப்பட்ட யு எம் கண்ணன், தாடி, முடி எல்லாவற்றுக்கும் டினோபால் போட்டது போல மின்னலடிக்கும் வெண்மை முடியுடன்!! 
               
அடுத்த வாரம் (வரும் ஞாயிறு) எம் எஸ் பற்றி என்று தெரிகிறது. பார்க்க வேண்டும்.  
                  

வியாழன், 19 ஜூலை, 2012

ஒரிஜினல் சூப்பர் ஸ்டார்...

              
இந்தியத் திரை உலகின் முதல் சூப்பர் ஸ்டார்,  ஒரிஜினல் சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கன்னா நேற்று   காலமானார். 69 வயது. (பிறந்த தேதி, டிசம்பர் 29, 1942)    
             

நீண்ட நாட்களுக்குப் பிறகு வேணுவனம் பதிவுக்குச் சென்று படித்துக் கொண்டிருந்தேன். அங்கு ராஜேஷ் கன்னா பற்றிக் குறிப்பிட்டு அந்த மின்விசிறி விளம்பரத்தில் வரும்போது அவர்தானா அது என்று அதிர வைக்கும் உருவம் பற்றிக் குறிப்பிட்டு 'மூப்பு' பற்றி எழுதியிருந்ததைப் படித்துக் கொண்டு வரும்போது தொலைக்காட்சிச் செய்திகளில் 'காகா' வின் மறைவு பற்றிய அறிவிப்பு. விளம்பரத்திலும், கடந்த இரண்டு வாரங்களாக சேனல்களில் வரும் அந்த ராஜேஷ் கன்னா நினைவில் நிற்பதை விட, 'பீகி பீகி ராத்தோன்மே' என்றும் 'ஏக் அஜநபி'  என்றும், 'ரெஹ்னே தோ சோடோ யே ஜானே தோ யார் ஹம நா  கரேங்கே ப்யார்'  என்றும் ஆடும் அந்த ராஜேஷ் கன்னா தான் நினைவில்....!  

தேவ் ஆனந்த் மறைவுக்குப் பின் மனதில் சோகத்தைக் கூட்டிய இன்னொரு திரையுலக மறைவு.


கிஷோர் குமார் குரல் இவருக்குப் பொருந்தியதைப் போல வேறு எவருக்கும் பொருந்தியதில்லை என்று நினைக்கிறேன். அந்தக் கிஷோரும் ஆர் டி பர்மானும்தான் இவரின் நெருங்கிய நண்பர்களாம்.


வரிசையாகப் பதினைந்து படங்கள் பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் கொடுத்த இவரின் சாதனை இன்று வரை முறியடிக்கப் படாதது என்கின்றன அனைத்துச் சேனல்களும்.

ஆராதனா, கட்டி பதங், தாக், மேரே ஜீவன் சாத்தி, அப்னா தேஷ், பாவார்ச்சி, ஆனந்த், சஃபர், ஆப் கி கசம், ஹாத்தி மேரே சாத்தி, சச்சா ஜூட்டா, ஹம சக்கல்,அமர் பிரேம்,மெஹ்பூபா, துஷ்மன், அஜ்நபி ....தென் இந்தியாவிலும் இவரை அறிய வைத்து என் போன்ற ஏராளமான ரசிகர்களை ஏற்படுத்திய எத்தனை எத்தனைப் படங்கள்...


இவர் கார் டயரின் மண்ணை எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்ட பெண்கள், இவர் புகைப்படத்துக்கு மாலையிட்டு தாலி கட்டிக் கொண்டு பைத்தியமான பெண்கள், கார்க் கண்ணாடி முழுவதும் முத்தமிட்டு லிப்ஸ்டிக் கறையாக்கிய பெண்கள்.... பாடலாசிரியர் ஜாவேத் அக்தரும், தயாரிப்பாளர்/டைரக்டர் சக்தி சாமந்தாவும் இந்த விஷயங்களை அர்நாபுடன் பகிர்ந்து கொண்டார்கள்.

1970, 1971  இந்த இரண்டு வருடங்களும் ராஜேஷ் கன்னாவின் வருடங்கள். 

2009 இல் வாழ்நாள் சாதனையாளர் விருது வாங்கும்போது கூட கொழுகொழுவென்றுதான் இருந்திருக்கிறார். 'பாபு மொஷாய்' கையால் விருது வாங்கி உணர்ச்சி வசப்படுவதைக் காட்டினார்கள்.  .


இன்னும் எவ்வளவோ பாடல்கள் இணைக்க நினைத்தோம். ஆனால் பதிவு ரொம்ப நீண்டுவிட வேண்டாம் என்பதால், அடுத்த காணொளியுடன், பதிவை நிறைவு செய்கிறோம். 
   
வீ  ரியலி மிஸ் யு காகா ....   


                     

புதன், 18 ஜூலை, 2012

பேச்சுக் கலை!

                    
"சார்.... பஸ்ஸை எப்போ எடுப்பீங்க..." 
            
கண்டக்டர்: (எரிச்சலுடன்) "ம்.... சொந்தக்காரங்களுக்கெல்லாம் சொல்லியனுப்பியிருக்கு... எல்லோரும் வந்துடட்டும், எடுத்துடலாம்"
            
தினமணி கதிரில், இந்த ந. துணுக்குப் படித்த போது சிரிப்பும் வந்தது; என் அனுபவங்களும் ஞாபகம் வந்தன. 
    
இரண்டு நாட்களுக்கு முன்னால் வந்த ஒரு குறுந்தகவல் இதே துணுக்கை ஞாபகப் படுத்தியது. குறுந்தகவல்: 'பிறந்த பிறகு பேச்சு வர மூன்று வருடங்களுக்கு மேலாகிறது. ஆனால் 'எப்படிப் பேச வேண்டும்' என்பது வாழ்நாள் முழுக்க சிலருக்கு வருவதேயில்லை'
      
கொஞ்ச வருடங்களுக்கு முன்னால் - கொஞ்ச வருடங்கள் என்றால் திருவள்ளுவர் காலம்! அதாவது, விரைவு போக்குவரத்துக் கழகம் திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம் என்ற பெயரில் வழங்கி வந்த காலம் - மனைவியையும் மாமியாரையும் குழந்தையோடு பஸ் ஏற்றி விடச் சென்ற நேரம். முன்பதிவு செய்யப் பட்டிருந்த பேருந்து கிளம்பும் நேரம் இரவு பத்தே முக்கால். இவர்கள் செல்ல வேண்டிய ஊருக்கு அது அதிகாலை மூன்றரை நாலு மணிக்குச் சென்று விடும். இவர்களை அழைத்துச் செல்ல மைத்துனரை பேருந்து நிலையத்துக்கு எத்தனை மணிக்கு வரச் சொல்வது என்று சொல்ல வேண்டுமே...
           
நடத்துனரிடம் கேட்டேன். "இந்த பஸ் நாளைக் காலை எத்தனை மணிக்கு ஊர் சென்று சேரும்?"
            
வந்ததே கோபம் நடத்துனருக்கு! கிளம்பத் தயாராய் இருந்த பேருந்தின் என்ஜினை அணைத்துவிட்டு, ஓட்டுனரும் இறங்கி விட்டார். இரண்டு பேரும் வசைமாரிப் பொழிந்தனர். அபசகுனமாம். கிளம்பும் நேரத்தில் இப்படிக் கேட்டால், பேருந்து விபத்துக்குள்ளாகி விடுமாம்.  பக்கத்து டீக்கடையில் வெந்நீர் வாங்கிக் குடித்து, சகுனப் ப்ரீத்தி செய்து வந்தனர்.
          
இதில் இன்னொரு கஷ்டம். இது மாதிரி சமயங்களில் பேருந்து எங்கள் ஏரியா வழியாகத்தான் செல்லும் என்பதால், மின்வண்டி, அலைச்சல், அங்கிருந்து இன்னொரு பேருந்து அல்லது ஆட்டோ செலவுகளைச் சிக்கனப் படுத்தி, அந்தப் பேருந்திலேயே ஏறி வந்து விடுவேன். நடத்துனருக்கு இருபது அல்லது முப்பது ரூபாய்க் கொடுத்து விடுவேன். 'நீங்கள் பாட்டுக்கு உட்காருங்க' என்று சொல்லி எங்கு நிறுத்தினால் எனக்கு வசதியாக இருக்கும் என்று கேட்டு நிறுத்தி இறக்கி விடுவது வழக்கம்.
   
இந்த முறை அதுமாதிரிக் கேட்கவே தயக்கமாகிப் போக, நான் மின்வண்டி, ஆட்டோ என்று, கிடைத்தவைகளைப் பிடித்துச் சென்று கொள்கிறேன் என்று சொல்லியும் மனம் கேட்காமல் மாமியார் நடத்துனரிடம் கேட்டு சம்மதமும் வாங்கி விட்டார்! பேருந்து தேனாம்பேட்டையைத் தாண்டியதும், நடத்துனர் எத்தனை மணிக்கு பேருந்து ஊரை அடையும் வாய்ப்பு இருக்கிறது என்று அவராகவே சொல்லி விட்டு, கிளம்பும் சமயம் எந்தப் பேருந்திலும்,  இந்தக் கேள்வி கேட்கக் கூடாது என்று சொன்னார். அதே அன்போடு, இறங்க வேண்டிய இடத்திலும் இறக்கி விட்டார். நான் கொடுத்த ஐம்பது ரூபாயை மறுத்து விட்டார். வற்புறுத்தவும் முப்பது ரூபாய் மட்டும் பெற்றுக் கொண்டார்.
 ++++++++++++++++++++ 
   
வேலைக்குப் போக ஆரம்பித்த காலத்தில் நடந்த இன்னொரு சம்பவம். அதிகாலை ஐந்து மணிக்கு, மதுரைப் புறநகர்ப் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து ஏறும் வழக்கம். பெரியார் பேருந்து நிலையத்துக்கு எதிரில் இருக்கும் பேருந்து நிலையம். நண்பனுடன் பேசிக் கொண்டிருந்த போது, அரசியல் பற்றியும் பேச்சு வந்தது. ஓர் அரசியல் தலைவரைப் பற்றிப் பேசும்போது, அவர் பெயரைக் குறிப்பிட்டுப் பேசத் தொடங்கியபோதே பின்னால் தலையில் ஓர் அடி விழுந்தது. திரும்பிப் பார்த்தேன். இரண்டு பேர்."உன் வயசென்ன, அவர் வயசென்ன? பேரைச் சொல்றே.... (பட்டத்தைச் சொல்லி) ........னு சொல்லு" என்றனர். நான் மதிக்காமல் இந்தப் பக்கம் திரும்பி நண்பனுடன் பேசியபோது மறுபடி அவர் பெயர் வர, மறுபடி தலையில் அடி, மறுபடி அறிவுரை!
          
"ஏன்? இதுக்கென்ன, அதானே அவர் பெயர்?" என்றேன்.
      
கோபமடைந்த இருவரும் என்னை ஆளுக்கொரு பக்கமாக நெருங்கி கையைப் பற்றி முறுக்கி, அவர்கள் நினைத்த பெயரைச் சொல்லச் சொல்லி துன்புறுத்தி, என்னை வலி தாங்காமல் சொல்லச் செய்த பிறகே விட்டனர்! 
+++++++++++++++++++++++++++++
   
பேருந்திலும், மின் வண்டியிலும் இன்னும் இன்னும் பொது இடங்களிலும் மக்கள் அலைபேசியில் பேசும் குரலும், பாஷையும் இருக்கிறதே.... அடடா.... பக்கத்தில் இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள், அவர்களுக்கு கர்ணகடூரமாக இருக்காதா என்றெல்லாம் யோசிப்பதேயில்லை. சாலைகளில் பெரும்பாலும் எல்லோரும் அலைபேசியும் கையுமாகத்தான் அலைகிறார்கள். ஒருவர் சத்தமாக, "வீட்டுக்கு வாயேண்டா...." என்பார். சற்றுத் தளளி பேசும் இன்னொருவர் அதே நேரம் "வந்தா காலை உடைப்பேன்.... காசா கேக்குறே" என்று அவர் அலைபேசியில் அலறுவார். 
           
ஆனால் பெண்கள் இந்த விஷயத்தில் ரொம்ப நாசூக்கு. அலைபேசியில் பேச மாட்டார்களா என்று கேட்காதீர்கள். ஒரே ஒரு மிஸ்ஸுடு கால் கொடுத்தால் போதும்! அவர்களுக்காகவே படைக்கப் பட்டதுதான் அலைபேசி. (பேசுகிற பெண்களைப் பற்றி மட்டும் சொல்கிறேன். நம் பெண் வாசகர்கள் சண்டைக்கு வர வேண்டாம்!) பீச் முதல் தாம்பரம் வரை காதில் வைத்த அலைபேசியை எடுக்கவே மாட்டார்கள். ஆனால் அதே சமயம் என்ன பேசுகிறார்கள் என்று மிக அருகிலேயே இருக்கும் நபரால் கூடக் கேட்க முடியாத அளவில் பேசுவார்கள். அவர்களிடமிருந்து இந்த அலறும் ஆண்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.
          
அலைபேசியில் அழைப்பு வரும். புதிய எண்ணாக இருக்கும். 'யாராக இருக்கும்' என்று எடுப்போம். எதிர்முனையிலிருந்து நமக்கு முதல் கேள்வி வரும், "ஹலோ.... யார் பேசறது?" 
          
வாகனங்கள் வாங்கும்போது போக்குவரத்து விதிகள் பற்றிக் குறிப்பேடுகள் தருவது போல (இப்பொழுதெல்லாம் தருகிறார்களோ? முன் காலத்தில் தந்தார்கள்!) அலைபேசிகள் வாங்கும்போது, இந்த நாகரீகங்கள் பற்றியும் குறிப்புக் கையேடுகள் கொடுத்தால் நலம்! 
   
நிற்க! 
            
இந்தக் காலத்தில் பொது இடங்களில், ஆரோக்கியமான விவாதங்களைக் கூடக் காண முடிவதில்லை. நம்முடன் பேசுபவர்களை மறுத்து எதாவது சொன்னாலே அவர்களுக்குக் கோபம் வந்து விடுகிறது!
          
முன்பு எங்கள் ப்ளாக்கில் வந்த பேச்சு பற்றிய பதிவு!
                 

திங்கள், 16 ஜூலை, 2012

"அப்படியே ஒன்று போடட்டுமா?"

                 
"நானே நானா? - யாரோ தானா?
மெல்ல மெல்ல மாறினேனா?"  
            
ரேடியோ மிர்ச்சியில் பாட்டுக் கேட்டுக் கொண்டே, அரைத் தூக்கத்தில் ஆழ்ந்த ராகவனின் மனம் மெதுவாக என்னென்னவோ யோசனைகளில் வீழ்ந்தது. 
     
இன்னும் ஒரே மாதம்தான்.  பிறகு என்ன! ஐயா காரில்தான் ஆபீசுக்கு போவார்.  இந்த பைக் வேண்டவே வேண்டாம்.  அதுவும் ராமாபுரம் டெலிபோன் எக்ஸ்சேஞ்சுக்கு அருகே நடந்த அந்த கோர விபத்தைப் பார்த்த கணத்திலிருந்து ஒரே யோசனைதான்.  என்ன 2  பைக் காசு போட்டால் ஒரு கார்.  மழையில் நனையாமல், வெயிலில் வற்றிப் போகாமல் நினைத்த நேரத்தில் குழந்தையையும் அழைத்துக் கொண்டு அவசரத்துக்கு ஒரு செட் உடுப்பு கூட எடுத்து செல்லலாம் ......  
   
அப்பா அம்மா வாங்கித் தருவதாகச் சொன்ன பொம்மையை, உடனேயே கையில் இருப்பது போல பாவனை செய்துகொள்ளும் சிறுவனைப் போல, ராகவன் கையை ஸ்டீரிங் வீல் பிடித்து இப்படியும் அப்படியும் திருப்புவது போல திருப்பிப் பார்த்துக் கொண்டான்! 
====================  
   
கார் டெலிவெரி எடுத்துக் கொள்ளலாம், தயார் என்று அலைபேசியில் அழைத்துச் சொன்னார்கள். பைக்குக்கு விடை கொடுக்கும் நாள் வந்தே விட்டது! 'பைக்கே! இன்றோடு உனக்கு விடுதலை. எனக்கும் உன்னிடமிருந்து விடுதலை! இப்போ வா நாம் இருவரும் டீலர் பாயிண்டுக்குப் போகலாம்!' 
   
அடா டா டா - என்ன அழகான கார்! பள  பள என்று சூரிய வெளிச்சத்தில் இப்படி மின்னுகிறதே!  பெட்ரோல் வாசனை வருவது போல இருக்குதே! டீலரிடம், "வண்டியில லீகேஜ் எதுனாச்சும் இருக்குமோ? நல்லா செக்  பண்ணிட்டீங்களா? ஏதோ பெட்ரோல் வாடை வருதே!"


"சார் என்ன  அப்பிடி கேட்டுட்டீங்க! கார் வொர்க் ஷாப்புல பெட்ரோல் வாசனை வராம இருக்குமா? கார்க் கம்பெனிக்காரங்களே எங்களுக்கு ரீஃபில், டாப் அப் செய்ய பெட்ரோல்  சப்ளை செய்யுறாங்க.  அதோ அங்கே பாருங்க ஒரு மெக்கானிக் பெட்ரோல் கேன் எடுத்துக்கிட்டுப் போறாரு!" என்றார் டீலர். 

"வண்டியை நல்லா கிளீன் பண்ணி, ரிப்பன் கட்டி உங்க வீட்டுக்கு அனுப்பி வெச்சுடறேன் சார்."
  
"சரி."
================  
           
"ரேவதி! சாயங்காலம் சீக்கிரமே வந்துடுவேன். அக்ஷயாவை தயார் பண்ணிட்டு [என்ன ஒரு பாம்பெர்ஸ் மாட்டி விடணும் - அவ்வளவுதானே] நீயும் ரெடியாக இரு. சுப்பு வீட்டுக்குப் போகணும். ஒவ்வொருத்தன் மாதிரியா நாம காரை வைச்சிருக்கோம், என்ன இல்லை நம்ம காரில்? ஏ சி கம்பெனி பிட்டிங்காகவே போட்டாயிற்று. சீட்டுகளுக்கு எல்லாம் நமக்குப் பிடித்த கலரில், கவர் போட்டாச்சு. 
             
ஆட்டோமாடிக்  ஆக கண்ணாடி ஏறி இறங்குது, காரை விட்டுக் கீழே இறங்கி - அவ்வளவு ஏன், - கண்ணாடியைக் கூட கீழே இறக்காமல், ஜி பி எஸ் துணையுடன் நீலக் கோட்டைத் தொடர்ந்து போனால் எங்கு வேண்டுமானாலும் போகலாம்.  அக்ஷயாவுக்கு போர் அடித்தால் டி வி டி பிளேயரில் ஒரு கார்ட்டூன் போட்டு விட்டால் குழந்தை காரிலேயே கன்யாகுமரிக்குப் போனால் கூட எதுவும் கேட்க மாட்டாள்.  ஸ்ரீராம் காரில் ஒரு ஃபிரிஜ் கூட இருக்கிறதாம் நம் காரில் போட முடியுமா என்று பார்க்க வேண்டும். அப்படியே அந்த மல்டி பின் மொபைல் சார்ஜெர் ஒன்றும் கட்டாயம் போட்டுடணும்.  ..."  
  
"அப்படியே ஒன்று போடட்டுமா?" என்று ரேவதி குரலில் டீலர் அதட்டிக் கேட்க .... 
      
"கட்டாயம் போட்டுடனும் ...." என்றான் ராகவன்.  
     
"குழைந்தைங்களை அடிக்கவே கூடாது, அடிச்சா அவங்களுடைய கிரியேட்டிவிட்டி ஸ்பாயில் ஆகி விடும் என்று சொல்வீர்கள்; இப்போ நீங்களே இப்படிச் சொல்கிறீர்களே!" ஆச்சரியப்பட்டுப் பேசினாள் ரேவதி. 
     
"என்ன? ஹா? நான் எங்கே இருக்கின்றேன்? என்ன நடக்குது இங்கே? ரேவதி - எந்தக் குழந்தையை அடிக்கப் போகிறாய்? ஏன்?"
    
"சரிதான் போங்க! ரேடியோ கேட்டுகிட்டே தூங்கிட்டீங்களா? அட ராகவா! உங்களை இல்லீங்க! இந்த அக்ஷயாவைப் பாருங்க! உங்க பைக்குல ஏதோ விஷமம் செய்து, மூஞ்சி எல்லாம் கிரீசைப் பூசிக்கிட்டு வந்து நிக்குது! கை எல்லாம் ஒரே பெட்ரோல் வாடை! இப்போதான் தலை வாரி, ரிப்பன் கட்டி அனுப்பினேன். அதுக்குள்ள, பைக்குல விஷமம் செய்து, ரிப்பன் அவுந்துடுச்சு அதைக் கட்டி விடு என்று வந்து நிக்குது! அதுக்குத்தான் 'அப்படியே ஒன்று போடட்டுமா?' என்று கத்தினேன்! 
                              

வியாழன், 12 ஜூலை, 2012

அலேக் அனுபவங்கள் 07:: அசோக் லேலண்டு முதல் தரிசனம்!

                     
அசோக் லேலண்டு எழுத்துத் தேர்வு முடிந்த இரு மாதங்கள் கழித்து, நேர்முகம் காணலுக்கான அழைப்பு வந்தது. 

அதற்குள்ளாகவே நான் சென்னையில் மற்றும் பெங்களூரில் இரண்டு மூன்று கம்பெனிகள் நேர்முகம் சென்று வந்தேன். சென்னை அண்ணா சாலையில் கே சி பி எஞ்சினீரிங் பிரிவுக்கான டிராஃப்ட்ஸ் மேன் வேலைக்கு, பெயர் தெரியாத 'வால்வ்ஸ் அண்ட் பைப் பிட்டிங்க்ஸ்' கம்பெனி ஒன்று, எம் எப் எல், பாம்பே கம்பெனி ஒன்றிற்காக பெங்களூரில் ஹோட்டல் பிருந்தாவனில் ரூம் போட்டு டெஸ்ட் வைத்து, நேர்முகம் கண்ட கம்பெனி ஒன்று. 
     
ஹிந்து பேப்பரில் ஒரு மருந்து மாத்திரை கம்பெனியில் டி எம் இ படித்த ஆட்கள் வேலைக்கு வேண்டும் என்று எழுதியிருந்ததைப் பார்த்து, அதற்கும் அப்ளிகேஷன் அனுப்பினேன். பதில் வரவில்லை. ஒருவேளை 'டி எம் இ' என்று மருத்துவ சம்பந்தப்பட்ட படிப்பு ஏதேனும் இருந்திருக்குமோ அல்லது டி எம் ஓ (டிஸ்ட்ரிக்ட் மெடிக்கல் ஆபீசர்?) என்பது போன்ற அச்சுப் பிசாசு (பிரிண்டர்'ஸ்  டெவில்) செய்த வேலையோ  .... தெரியவில்லை! அசோக் லேலண்டு செய்த புண்ணியம் - என்னை வேறு யாரும் அதற்குள் வேலைக்கு எடுத்துக் கொள்ளவில்லை! 
                 
நான் பாலிடெக்னிக் இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருந்த போதே, டி என் பி எஸ் சி (தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன்) பரீட்சை எழுதியிருந்தேன். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் கழித்து, இதே நேரத்தில், என்னை வேலைக்கு வந்து சேரும்படி (மதுரையில், ஷிப்பெர்ஸ் - செய்லர்ஸ் அலுவலகத்தில்  எழுத்தராக சேரும்படி ) ஒரு சாணிக் கலர் காகிதத்தில் டைப் அடித்து, அனுப்பி வைத்திருந்தார்கள். நான் போய் வேலையில் சேர்ந்தவுடன், அங்கு வேலையில் இருக்கும் 10A1 கிளார்க் ஒருவரை அந்த வேலையிலிருந்து தூக்கிவிடுவார்கள் என்று குறிப்பிட்டு, அவருக்கும் ஒரு நகல் அனுப்பப்பட்டிருந்தது. அவர் அநேகமாக என்னை திட்டிக்கொண்டே இருந்திருப்பார். ஆனால், வேலையில் சேரவேண்டிய கடைசி நாள் வரையில் நான் வந்து சேரவில்லை என்று தெரிந்த பிறகு, என்னை வாழ்த்தியிருப்பார் என்று நினைக்கின்றேன்! 
              
அசோக் லேலண்டு எண்ணூர் பயிற்சி மையத்தில் எனக்கும், மற்ற நண்பர்களுக்கும், நேர்முகம் காணல் நடைபெற்றது. அதுவரையிலும் எனக்கு, எண்ணூர், சென்னையின் எந்தக் கோடியில் இருக்கின்றது என்பது கூட தெரியாது. அண்ணனிடம் இருந்த பழைய சிடி மேப்பில், பொத்தல்களுக்கு  நடுவே பார்த்ததில், ஜியார்ஜ் டவுனுக்கு வடக்கே வெற்றுத் தாளாக விட்டிருந்தார்கள். ஒரு அம்புக்குறி போட்டு, ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், எண்ணூர் (செல்லும் வழி) என்று போட்டிருந்தார்கள். 
             
அண்ணன் குடியிருந்த போர்ஷனுக்குப் பக்கத்துப் போர்ஷனில், தாம்சன், ஜான் என்று இரண்டு நடத்துனர்கள் (சென்னை நகரப் போக்குவரத்து) இருந்தனர். இருவரும் எனக்கும், அண்ணனுக்கும் நண்பர்கள். அதில், ஜான், என்னை அசோக் லேலண்டில் நேர்முகம் காணல் அன்று என்னை அங்கே கொண்டு போய் விடுவதற்கு வந்தார். புரசவாக்கத்திலிருந்து ஒரு பேருந்து பிடித்து தங்கசாலைக்கும், பிறகு அங்கிருந்து வேறு ஒரு பேருந்து பிடித்து, எண்ணூருக்கும் போய்ச் சேர்ந்தோம். 

இந்தப் பயணத்தில் நான் தெரிந்துகொண்ட ஒரு சிறிய தகவல் - இங்கே எழுதுகின்றேன். ஜானுக்கு டூட்டி பாஸ் இருந்ததால், அவர் எனக்காக (மட்டும்) காசு கொடுத்து, டிக்கெட் வாங்க முற்பட்ட பொழுதெல்லாம், அந்தந்தப் பேருந்தில் இருந்த நடத்துனர்கள், அவரிடம் காசை வாங்காமல், அவரிடமே கொடுத்துவிட்டு, அவரை தோளில் ஒரு தட்டு, என்னை தோளில் ஒரு தட்டு என்று செல்லமாகத் தட்டிச் சென்றனர்!  பிறகு ஜான் என்னிடம், அவருடைய யூனியனைச் சேர்ந்த நடத்துனர்கள் என்றால் இப்படி செய்வார்கள் என்றும், வேற்று யூனியன் ஆள் என்றால், எனக்கு பைசா வாங்கிக் கொண்டு, பயணச் சீட்டு கொடுத்திருப்பார் என்றும் சொன்னார். 
           
அசோக் லேலண்டு வாசலில் நாங்கள் இருவரும் இறங்கியவுடன், கம்பெனி காம்பவுண்டைப் பார்த்ததுமே, ஜான் உறுதியாகச் சொன்னார்: "சாரே! உனக்கு நிச்சயம் இங்கே வேலை கெடச்சிடும்"  எனக்கு ஒரே சந்தோஷம்! அவருக்கு நன்றி கூறினேன். பிறகு அவர் விடை பெற்று சென்றார். நான் கம்பெனியின் கேட் அருகே சென்று, அங்கு இருந்த செக்யூரிட்டி அலுவலரிடம், என்னுடைய நேர்முகம் காணல் அழைப்புக் கடிதத்தைக் காட்டினேன். அவர் என்னிடம், "இண்டர்வியூவுக்கு வந்திருக்கீங்களா? உள்ளே போய், லெப்டுல திரும்பி கடைசி வரை போங்க. அங்கே லெப்டுல இருக்கு டிரெயினிங் செண்டர்." என்றார். சென்னை மாநகரத்தில், முதன் முதலாக ஒருமையில் பேசாமல், பன்மையில் மரியாதையாக 'நீங்க, வாங்க, போங்க' என்று ஒருவர் பேசியதைக் கேட்டு, எனக்கு மயக்கமே வந்தது.
                  
மயக்கம் தெளிந்து எழுந்தவுடன் மீண்டும் தொடர்கின்றேன்!