புதன், 29 ஜூலை, 2015

ஏமாந்த அனுபவம்



பிரபாகரனுக்கு அன்று சம்பளம்.  முதலாளி ரப்பர் பேன்டால் சுற்றப்பட்ட ஐம்பது ரூபாய் நோட்டாக ஒரு கட்டு அப்படியே கையில் கொடுத்திருந்தார். உண்மையில் சென்ற மாதம் வரவேண்டிய பணமும் சேர்ந்த சம்பளம் அது.
 

இப்படிப் புது நோட்டுகளாக பிரபா பார்த்ததில்லை.  அவ்வப்போது அதை எடுத்து, எடுத்துப் பார்த்துக் கொண்டான்.
 

பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொண்டான்.  டிக்கெட் எடுத்துக் கொண்டு சீட்டில் அமர்ந்தவன் கனவுக்குப் போன நேரம்..

 

கோடம்பாக்கம் பாலத்தில் ஏறிக் கொண்டிருந்தது பஸ்.
 

கூட்டத்தில் அந்தப் பொன்னான நேரத்துக்காகக் காத்திருந்த இரண்டு விரல்கள் பிரபாவின் பைக்குள் லாவகமாக நுழைந்தன. இரண்டு விரல்களில் மாட்டிய பணக்கட்டு,  பையை விட்டு வெளியேறும் நேரம் பிரபாவின் கைகள் தன்னிச்சையாக மறுபடியும் தொட்டுப் பார்க்க வந்தது, அதைச் சட்டெனப் பற்றிக் கொள்ள,  கட்டில் பாதி அந்தத் திருடன் கைகளுக்குச் சென்றது.
 

சட்டெனக் கூட்டத்திலிருந்து நழுவிய அந்த மனிதன், ஓடும் பஸ்ஸிலிருந்து லாவகமாகக் குதித்தான்.  இவனும் பின்னாலேயே துரத்திக் கொண்டு கீழே குதித்தான்.

 
முன்னால் ஓடியவன் பாலத்தின் நடுவிலிருந்த படிக்கட்டுகளில் விரைந்து இறங்கியவன், எதிர்த் திசையில் ஓடினான்.
 
"ஓடறான்...பிடிங்க... பிடிங்க..."  என்று கத்திக் கொண்டே பின்னால் ஓடினான் பிரபா.


கொஞ்ச நேரம் இங்கும் அங்கும், திரும்பித் திரும்பி, வளைந்து நெளிந்து ஓட்டம்... 

 
துரத்திக் கொண்டு ஓடியவன் அவனை ஓரிடத்தில் அவனை
எட்டிப் பிடித்து விட்டான்.
 
தோளை எட்டிப் பிடித்தவன், சட்டைக் காலரைப் பற்றிக் கொண்டான்.
 
பின்னாலேயே வேகமாக வந்த ஒருவன் "யே...என்னப்பா... ஓடி ஓடி அடிச்சுக்கறீங்க.." என்றான்.
 
அவன் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடியதை பிரபா சொல்லத் தொடங்குமுன் அவன் முந்திக் கொண்டான்.
 
"ஐயா... நல்ல நேரத்துல வந்தீங்க... சம்பளம் வாங்கிகிட்டு பஸ்ல வந்து இறங்கினேனுங்க..  இவனும் இன்னொருத்தனும் பின்னாடியே வந்து மடக்கினாங்க..  அந்த இன்னொருத்தன் கத்தியைக் காட்டி 'பாக்கெட்ல வச்சிருக்கற பணத்த எடு' ன்னு மிரட்டினான்.  நான் பயந்துபோய் பணத்தை எடுத்துக் கொடுக்கற மாதிரிக் காமிச்சுத் தப்பிச்சு ஓடி வந்தேன்.  அப்படியும் கட்டுல பாதி அவன் கைல மாட்டிடுச்சு ஐயா..  அவன் சட்டைப் பைல பாருங்க..  அதை உள்ளே வச்சுகிட்டிருக்கான்.   மிச்சத்தைப் பிடுங்க 
இவன் என்  பின்னாலேயே துரத்திகிட்டு வர்றான்..   கேக்க ஆளே இல்லையா...  காப்பாத்துங்கையா...." என்றவன், பிரபாவைப் பார்த்து

 
 "டேய்! ஏழைங்க பாவம் உன்னைச் சும்மா விடாதுடா..  இரு! போலீசைக் கூப்பிடறேன்?" என்றான்.
 
அயர்ந்துபோய் நின்றிருந்த பிரபாவின் பாக்கெட்டில் 'சட்'டெனக்
கைவிட்ட புதியவன்,  பாக்கி இருந்த ரூபாய்க் கட்டை எடுத்துப் பார்த்தவன், எதிர்பாராமல் ஒரு காரியம் செய்தான்.

 
திரும்பி ஒரே ஓட்டமாய்....  ஓடியே போனான்!!!
 
திடுக்கிட்டு அவனைப் பார்த்துக் கத்திய பிரபாவின் கையிலிருந்து திமிறி விடுபட்ட இந்தத் திருடன் இந்தப் பக்கமாய் ஓடி மறைந்தான்.
 

காலியாய் இருந்த அந்தத் தெருவின் நடுவே பிரமை பிடித்தது போல
நின்றிருந்தான் பிரபாகர்.

இதற்கு என்ன நியாயம் சொல்வீர்கள்?




திங்கள், 27 ஜூலை, 2015

'திங்க'க்கிழமை 150727 :: தேங்காய்ப்பால் சேர்த்த ஸொஜ்ஜி



1960  களில் அமுத சுரபியில் வந்த சமையல் குறிப்பு!  சொஜ்ஜி என்பதில் வரும் 'சொ'  எனும் எழுத்து, 'ஸ' என்ற எழுத்தைக் கொண்டு வரவேண்டும்.  ஆனால் எவ்வளவு முயற்சித்தாலும் அந்த எழுத்தில் நெடில் 'ஸோ' தான் வருகிறது.  என் செய்வேன்?  என் செய்வேன்?

பிறகு செல்ஃபோனில் டைப் செய்து அந்த எழுத்தைக் காபி செய்து டிராப்டில் போட்டுக் கொண்டு, அதைக் காபி செய்து இங்கு இட்டு நிரப்பியிருக்கிறேன்!

சரி போகட்டும்..  இனி ரெசிப்பி!  புத்தகத்தில் இருந்தபடியே...

[பாவம் நீங்க... வெங்கலப்பானைக்கும்,  ஈயம் பூசின தவலைக்கும் எங்க போவீங்களோ!]


அரிசி ஒரு படி , பயற்றம் பருப்பு ஒரு படி, இவ்விரண்டையும் தனித்தனியே வறுத்து ஒன்றாய்க் கலந்து வைத்துக் கொள்ள வேண்டியது.


                                     Image result for rice  images            
Image result for moong dal images


தேங்காய்த் துருவல் பத்து பலம் அம்மியில் போட்டு கொஞ்சம் ஜலத்தைத் தெளித்துக்கொண்டு, வெண்ணெய் போலரைத்து இரண்டு படி ஜலத்தில் கரைத்து,  வடிகட்டிச் சக்கையைப் பிழிந்தெறிந்து விட்டு,  தேங்காய்ப் பாலை மட்டும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.


                                                                                   Image result for thengai paal images


நெய் 3 பலம் - இதை 5 படி ஜலம் கொத்திக்கிற வெங்கலப்பானை அல்லது ஈயம் பூசின தவலையில் விட்டுக் காய்ச்சி, அது காய்ந்த உடனே,


                                                                          Image result for ghee  images
                                                  Image result for dry mirchi  images   Image result for orid dhal  images


மிளகாய் அரை பலம், உளுத்தம் பருப்பு அரை பலம், கடுகு அரை பலம் இவைகளைக் காய்ந்து கொண்டிருக்கும் நெய்யில் தாளிதம் செய்துகொண்டு,


                                                                           Image result for karuveppilai images


கரிவேப்பிலை அரை பலம் தயாரான தாளிதத்தில் போட்டுத் தயாரான உடனே, அதாவது சடபடவென்ற சப்தம் நின்றவுடனே, மேலே சுத்தப்படுத்தி வைத்திருக்கும் தேங்காய்ப்பாலை அதில் கொட்டி,

மஞ்சள்பொடி அரை ஸ்பூன் தேங்காய்ப் பாலில் போட்டு கொதிக்கத் தொடங்கிய உடன் தயாராக வைத்திருக்கும் அரிசி - பருப்பின் கலப்பை செம்மையாய்க் களைந்து ஜலத்தை வடித்து விட்டு, கொதிக்கும் தேங்காய்ப் பாலில் கொட்டி, கரண்டியினால் கிளறி விட்ட பிறகு, மேலோடு பாத்திரத்தை மூடி வைக்க வேண்டியது.

                                                                          Image result for salt images


அரைப்பலம் உப்பைப் பொடித்து, கொதித்துக் கொண்டிருக்கும் ஸொஜ்ஜியில் போட்டு நன்றாகக் கிளறி விட்டு அடுப்பிலிருந்து இறக்கி புகையாத தணலில் வைக்க வேண்டும்.


பிறகு இரண்டு பலம் நெய்யைக் காய்ச்சி அதில் அரை பலம் சீரகம், மிளகு அரை பலம் போட்டு பொரித்துக் கொள்ளவும்.  பின் இவைகளை ஸொஜ்ஜியில் போட்டு நன்றாகக் கிளறி விட வேண்டும்.  ஐந்து நிமிடம் கழித்துத் தணலை விட்டு எடுத்து விடலாம்.  பிடிப்பவர்கள் வேண்டிய அளவு பெருங்காயத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.



















படங்கள்  ::  இணையம், இணையம், இணையம்தானுங்க!