வியாழன், 31 அக்டோபர், 2013

அலேக் அனுபவங்கள் 24:: சினிமா தொடர்பு ... ...

      
என்னுடைய நண்பர் பி ராஜேந்திரன் என்பவர் பற்றி முன்பு ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். 
   
அவர் 'இண்டஸ்ட்ரியல் மேனேஜ்மெண்ட்' பகுதியில் வேலை பார்த்து வந்தார். அந்தக் காலத்தில் நங்கநல்லூர் பகுதியிலிருந்து வேலைக்கு வந்துகொண்டிருந்தார். அவரும் நானும் பலநாட்கள், சென்னை கடற்கரை நிலையத்திலிருந்து, அவர் இறங்கிச் செல்கின்ற பழவந்தாங்கல் இரயில் நிலையம் வரை பல விஷயங்களையும் பேசிச் செல்வோம். 
   


அவர் அப்பொழுது வசித்து வந்த நாற்பத்து இரண்டாவது தெரு (என்று நினைக்கின்றேன்) சார்பாக வருடா வருடம் டிசம்பர் முப்பத்தொன்றாம் தேதி இரவு, ஜனவரி ஒன்றாம்தேதி காலை வரை அந்தத் தெருவில் கலை நிகழ்ச்சிகள் நடை பெறும். அதற்காக அவர் பல நிகழ்ச்சிகளை திட்டமிடுவார். அந்த சமயம் அவருக்கு சிறிய நகைச்சுவை உரையாடல்கள், பாடல்கள் எழுதிக் கொடுத்தது உண்டு. 
            
அவருக்கு, அப்பொழுது, ஒரு திரைப்படக் குழுவினரின் அறிமுகம் கிடைத்தது. படம் எடுப்பதில் ஐந்து  லட்ச ரூபாய்க்குள் (அந்தக் காலத்தில்) ஒரு படத்தை எடுத்து, அதை விநியோகம் செய்தால் / விற்றால், நிறைய லாபம் சம்பாதித்துவிட முடியும் என்று அந்தக் குழுவினர் அப்பொழுது நம்பியிருந்தார்கள். இவர், அந்தக் குழுவினரின் இயக்குனரை எங்கேயோ சந்தித்து நண்பராகியிருந்தார். இவர், தனக்குத் தெரிந்த இண்டஸ்ட்ரியல் மேனேஜ்மெண்ட் யுக்திகளை (Critical path analysis, Resource scheduling, Planning, Scheduling, Controlling etc) அந்தப் படக் குழுவினருடன் பகிர்ந்து கொண்டு, அந்தக் குழுவின், சம்பளம் பெறாத ஆலோசகராக இருந்தார். அந்தக் குழுவினரோடு சென்று, நடிக நடிகையரை தேர்ந்தெடுத்து, அவர்களை படத்திற்காக புக் செய்து, அட்வான்ஸ் கொடுத்து, கால் ஷீட் வாங்கி, பல முனைகளிலும் ஆர்வத்தோடு பங்கேற்று வந்தார். 
             

சில காட்சிகள் படமாக்கப் பட்டுவிட்டன. கதைச் சுருக்கம் தயார். கதாநாயகி - 'அந்த ஏழு நாட்கள்' படத்தில் அம்பிகாவின் தங்கையாக நடித்த மனோஹரி. (மனோஹரியை படத்திற்கு ஒப்பந்தம் செய்யச் சென்று வந்த கதையை அவர் விலாவாரியாகக் கூறினார். அதை இப்போது இங்கே பதியப் போவது இல்லை. பிறகு ஒரு பதிவில் பகிர்கின்றேன்) கதாநாயகன் இன்னும் முடிவாகவில்லை.  
        
அவர் கூறிய கதைச் சுருக்கம்: ஒரு லேடீஸ் ஹாஸ்டல். அங்கே கதா நாயகி, தன் தோழியுடன் தங்கி, படித்து வருகின்றாள். கதாநாயகி எந்த வம்பு தும்புக்கும் போகாத சாது. தோழி அப்படியே ஆப்போசிட். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று வாழ்கிறவள். தோழி விளையாட்டாக எழுதிய காதல் கடிதம், கதாநாயகன் கைக்குக் கிடைக்கின்றது. அவன் கடிதத்தை எழுதியவள் யார் என்று அறிய வரும்பொழுது, அந்த விலாசத்தில் இருக்கின்ற கதாநாயகியைப் பார்த்து,  அவள்தான் கடிதம் எழுதியவள் என்று தவறாக நினைத்து, அவளைக் காதலிக்கத் துவங்குகிறான். இது கதையில் வருகின்ற முடிச்சு. பிறகு என்ன ஆகிறது, எங்கே போகிறது, எப்படி முடி(க்)கிறது என்று என்னைக் கேட்டார்.  நான் இரண்டு மூன்று கண்டினூயிட்டி நூல் விட்டேன். அது அவருக்கு ஏற்றுக்கொள்ளத் தக்கதாகத் தெரியவில்லை. 
   

"நீ வந்து தி நகர் ப்ரிவியூ தியேட்டரில் இதுவரை எடுத்துள்ள படத்தைப் பார். அப்போ உனக்கு ஐடியா ஏதாவது வரும் என்றார். தி நகர் பனகல் பார்க் பக்கத்தில் இருந்த பிரிவியூ தியேட்டருக்கு ஒரு திங்கட்கிழமை, என்னையும் அழைத்துச் சென்றார். 
    
   
படம் மொத்தம் ஏழு நிமிடங்களே திரையில் ஓடியது. ஏதோ ஒரு மலைச் சாரல். ஒற்றையடிப் பாதை, ஒரு பெண். (மனோஹரி இல்லை) ஒரு பிட் பேப்பரைப் பறக்க விட்டாள். ஒரு வயதான அம்மாள் தலைவிரி கோலமாக தலையில் அடித்துக் கொண்டு அழுதாள். மீண்டும் மலைச் சாரல். ஆடுகள், மாடுகள் மேய்ந்தன. கடற்கரை. சூரியோதயம். திடீரென்று ஒரு மரத்திலிருந்து பறவைகள் பறந்தன. அவ்வளவுதான். சவுண்ட் ரெகார்டிங் எதுவும் இல்லை. ப்ரொஜெக்டர் ஓடிய சப்தம் மட்டும் கேட்டது. படக் குழுவினரோடு இந்த மாஸ்டர் பீஸைப் பார்த்துவிட்டு, எல்லோருமாக மூன்று கார்களில் ஏறிக் கொண்டு, நங்கநல்லூரில் உள்ள நண்பர் ராஜேந்திரன் வீட்டுக்குச் சென்றோம். 
      

படத்தின் டைரக்டர் (பார்ப்பதற்கு இயக்குனர் மகேந்திரன் சாயலில், அவருடைய ஒன்றுவிட்ட, பெரிய சகோதரன் போல இருந்தார்) உதவி இயக்குனர்கள், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என்று ஒரு ஆறேழு பேர்கள், ஸ்டோரி டிஸ்கஷன் என்று வட்டமாக உட்கார்ந்து கொண்டார்கள். குழுவில் ஒருவர் மூன்று சீட்டுக் கட்டுகளை எடுத்து, ஜமக்காளத்திற்கு நடுவே போட்டார். 
             
அவ்வளவுதான். ரம்மியாட்டம் ஆரம்பமாகியது. ஆட்டத்துக்கு நடுவே யாரோ ஒருவர், இசையமைப்பாளரைப் பார்த்து, அந்த டைட்டில் சாங் பிட்டை சொல்லுங்க என்றார். இசையமைப்பாளர், "தானனனா ..... தனதனனானா .... " என்றார். கவிஞர் அதற்கு, "கற்பனையோ .... கவியுள்ளமோ ... " என்றார். சுற்றியிருந்தவர்கள் "ஆஹா --- ஆஹா " என்றார்கள். திருமதி ராஜேந்திரன் தயாரித்த பஜ்ஜிகள் எல்லோருக்கும் நடுவே ஒரு பேசினில் கொண்டுவந்து வைக்கப் பட்டது. குழுவினர் ஆளுக்கு நான்கைந்து பஜ்ஜிகளை கபளீகரம் செய்தனர். பிறகு ஆளுக்கு ஒரு டம்ப்ளரில் காபி வழங்கப் பட்டது. காபி குடித்த சூட்டுடன் சூடாக ஒருவர் ரம்மி டிக்ளேர் செய்தார். டைரக்டர் அவருக்கு பத்து ரூபாய் கொடுத்தார். மற்றவர்கள், "கணக்குல எழுதிக்க .." என்றார்கள். சீட்டுக் கட்டை எடுத்து அடுத்தவர் கலைக்கத் துவங்கினார்.    
    
 

இயக்குனர், தொப்பி + கூலிங் க்ளாஸ் அணிந்துகொண்டு, சிறிய குழந்தை ஒன்றை நடந்து வரும்படி கூறுகின்ற பாவத்தில் சில ஸ்டில் படங்கள் என்னுடைய பார்வைக்கு காட்டினார்கள். ஒரு (ப்ரேக்) வாய்ப்புக் கிடைத்தால், அவர் அப்படியே அசத்திவிடுவார் என்று கூறினார்கள் உதவி இயக்குனர்கள்.   
    
நான் வீட்டுக்குக் கிளம்பினேன். ராஜேந்திரன் தன்னுடைய ஸ்கூட்டரில் என்னை பழவந்தாங்கல் இரயில் நிலையத்திற்குக் கொண்டுவந்து இறக்கிவிட்டார். 
           
"ஐடியா ஏதாவது வந்ததாப்பா?" என்று கேட்டார். 
      
"உம்ம்ம் .... வந்துவிட்டது."
      
"என்ன ஐடியா?"
   
"இந்தக் குழுவிலிருந்து, நீங்களும் நானும் எவ்வளவு விலக முடியுமோ அவ்வளவு விலகி இருப்பது நல்லது என்ற ஐடியா." 
                      

புதன், 30 அக்டோபர், 2013

உள்பெட்டியிலிருந்து 10 2013



 அன்பு மனித பலவீனத்தைக் காட்டுகிறது. சூழ்நிலை உண்மை மனிதனைக் காட்டுகிறது!

                                            


 சிரிப்பைவிடக் கண்ணீரின் மதிப்பு எப்போது தெரியும்? எல்லோருக்கும் முன்னால் சிரிக்க முடியும். ஆனால் நெருக்கமானவர்கள் முன்னே மட்டுமே அழ முடியும்!


 இவருக்கு இப்படி ஒரு ஆதங்கம்!

புதிய மனிதர்களுடன் பேசாதே என்று அறிவுரை கூறும் அதே பெற்றோர்கள்தான் காதல் திருமணத்தை எதிர்த்து, நிச்சயிக்கப்படும் திருமணத்தை ஆதரிக்கிறார்கள்.



 உன் முகத்தைப் பார்க்கும்முன்பே உன்னை நேசிக்கத் தொடங்கிய உன் அம்மாவின் அன்பை விடவா பார்க்காத காதல்கள் பெரிது?


 

 உங்கள் கண்ணீரைத் துடைப்பவரா? அவர் நினைவினாலேயே கண்ணில் நீரை வரவைப்பவரா? இருவரில் யார் உங்களுக்கு மனதுக்கு நெருக்கமானவர்?


 நிரூபிக்க முடியாவிடில் குற்றம் சாட்டாதீர்கள்.
மன்னிக்க முடியாவிட்டால் குறை சொல்லாதீர்கள்.
மறக்க முடியாவிட்டால் மன்னிக்காதீர்கள்.




 எந்தச் செல்வத்தினாலும் வாங்க முடியாதது நேரம். அந்த நேரத்தை உங்களுக்காகச் செலவழிப்பவர்களைப் புண்படுத்தாதீர்கள். அவர்கள் உங்களிமேல் வைத்திருக்கும் மதிப்பைப் புரிந்துகொள்ளுங்கள்.


 சினிமாத் திரை எல்லா கேரக்டர்களையும் பிரதிபலித்தாலும் வெண்மையாகவே இருப்பது போலவே நம் மனதையும் வைத்துக் கொள்ளலாமே...!



 நீங்கள் அறிந்ததற்கும், நீங்கள் உணர்வதற்கும் நடக்கும் யுத்தமே பெரிய யுத்தம்!


 நெருக்கம் மறையும்போது சம்பிரதாயங்கள் பிறக்கின்றன.


 வசதியான வரவைவிட உள்நுழைவைவிட வெற்றிகரமான வெளியேற்றம் நல்லது. பிரவேசிக்கும் பொழுதின் கைத்தட்டலை விட, வெளியேறிய பின்னும் நாம் நினைக்கப்படுவது சிறந்தது. 

 இதயம் என்பது சென்ட் பாட்டில் மாதிரி. திறக்காவிட்டால் வாசம் தெரியாது. திறந்தே இருந்தால் வாசம் இருக்காது!


 உங்கள்மேல் ஒருவர் கோபம் கொள்வது குறைந்து வருகிறது என்றால் நிச்சயம் அவரது வாழ்வில் உங்களுக்குள்ள முக்கியத்துவம் குறைகிறது என்று பொருள்! 


 சரியான மனிதர்களுடன் ஒத்துப் போவது எப்போதுமே தவறான மனிதர்களுடன் விவாதிப்பதைவிடச் சிறந்தது. பொருளில்லா வார்த்தைகளைவிட, அர்த்தமுள்ள மௌனம் சிறந்தது.

திங்கள், 28 அக்டோபர், 2013

"ஒரு வழக்கு... துரியோதனனை ஆதரித்து..." - படித்ததன் பகிர்வு


"மனிதர்களில் 'இவர் நல்லவர் இவர் கெட்டவர்' என்று கோடு கிழித்து விடமுடியுமா,  என்றால் 'முடியாது' என்கிறார் வியாசர். பாரதம் முழுக்க முக்கியமான பாத்திரங்கள் 50 பேர்களை எடுத்துப் பட்டியல் போட்டேன். பாத்திரங்களில் உயர்வு, தாழ்வு என்று மேலே எழுதிக் கீழே ஒன்று, இரண்டு என்று எழுதிக் கொண்டே வந்தேன்.  உதாரணமாக, கர்ணன் கீழே, 'சொன்ன சொல்லை உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றுகிற மகா மனிதன்' என்று இடப்புறம் எழுதினால், வலப்புறம் 'பாஞ்சாலியின் ஆடையைக் களையச் சொன்ன மகா இழிஞன்' என்றும் எழுத வேண்டியிருந்தது.  


இதுதான் வியாசஞானி.  கூட்டிக் கழித்துப் பார்த்தால் மனிதன் உன்னதமானவனும் இல்லை, இழிவானவனும் இல்லை.  பாவம், அவன் மனிதன்' என்ற முடிவுக்கே வரவேண்டி இருக்கிறது.  இதுதான் வியாசஞானி பாரதம் முழுதும் நமக்கு ஓதும் நீதி....

இது பிரபஞ்சன் கல்கியில் எழுதி வரும் 'மகாபாரத மாந்தர்கள்' தொடரில் சொல்வது. இதுதான் பாரதத்தைப் படிக்கும் எல்லோருக்குமே தோன்றுவதும் கூட. நல்லவர் என்றும் கெட்டவர் என்றும் நீங்கள் கொள்வதுதான். அவர் எதையும் மாற்றிப் பேசாமல் அவரவர் குறைகளுடன் சொல்லி விட்டார்.

உலக அளவில் வியாசர் போல பெரிய கதைசொல்லி இனிதான் பிறக்கவேண்டும் என்கிறார் பிரபஞ்சன்.

பிரபஞ்சனின் இந்தத் தொடர் சுவாரஸ்யமாய் இருப்பதை ஏற்கெனவே வெட்டி அரட்டையில் சொல்லி இருந்தேன். புத்தகமாக வரக் காத்திருக்கிறேன்!


துரியோதனனை ஆதரிக்கும் இந்தப் புத்தகத்தில் அதற்கான காரணங்களைப் பட்டியலிடுகிறார் எஸ். விஜயராஜ். 

                                                  

பலமுறை, மீண்டும் மீண்டும் பல்வேறுபட்ட மகாபாரதத்தின் படைப்புகளைப் படித்தும், டிவிடியில் மிக அடிக்கடி மகாபாரதம் பார்த்தும் எழுந்த எண்ணங்களைப் பட்டியலிடுகிறார். 


மூன்று வகை நீதிகள். தேவ நீதி. ராஜ நீதி. மனித நீதி. இதில் ராஜ நீதியைப் பற்றிச் சொல்லித் தொடங்குகிறார்.
 

ராஜநீதி என்பதன் அடிப்படையில் துரியோதனன் செய்தது எல்லாம் நியாயமே என்கிறார். ஒரு அரசன் வெற்றி கொள்ள எந்த வழியை வேண்டுமானாலும் பின்பற்றலாம், பத்து வழிகள் உண்டென்றால் அதில் ஒன்பது தந்திர வழிகளையே சாஸ்திரங்கள் பரிந்துரைக்கின்றன என்கிறார்.  பெரும்பாலும் நமக்கும் தெரிந்தவைதான்.

போர் என்று தொடங்கியவுடன் துரியோதனன் முடிந்த அளவு அல்லது முழு அளவு போர்க்கால விதிமுறைகளைப் பின்பற்றி நேர்மையாகவே சண்டையிட்டான் என்கிறார்.   அதேநேரம் கண்ணன் வழிகாட்டலில் பாண்டவர்கள் செய்தது எல்லாம் வஞ்சகமே என்கிறார்.

வெற்றி கொள்ளவே முடியாத- மரணம் தனக்கு எப்போது வரவேண்டும் என்று தானே முடிவு செய்யக் கூடிய - பீஷ்மர், ஆயுதங்கள் கையில் இருக்கும் வரை வெற்றி கொள்ள முடியாத துரோணர், கிருபர், கர்ணன், சல்லியன் என்று மிகச் சிறந்த படைத்தலைவர்களும் வீரர்களும் அவன் பக்கம் இருந்தும் அவர்களுக்கு -கர்ணன் நீங்கலாக - உடல் கௌரவர்கள் பக்கமும், மனம் பாண்டவர்கள் பக்கமும் இருந்ததை அந்தச் சம்பவங்களை எடுத்துச் சொல்லி, சொல்கிறார். 

மூத்த மகனுக்குத்தான் ஆட்சி உரிமை. அப்படிப் பார்க்கையில் திருதராஷ்டிரனுக்கு வரவேண்டிய அந்த உரிமை, அவன் அங்கஹீனன் என்பதால் பாண்டுவுக்குப் போகிறது, சரி. திருதராஷ்டிரனுக்கு, உரிமையுள்ள அந்த மூத்த புதல்வனுக்கு, பிறக்கும் மூத்த புதல்வன் துரியோதனன்தானே? அவனுக்குத்தானே முதல் உரிமை வரவேண்டும்? பாண்டவர்கள் முதலில் பாண்டுவின் புத்திரர்களே இல்லையே.. இப்படிப் போகிறது விவாதம்.  
                                                  

தன்னை எப்படித் தோற்கடிக்க வேண்டும் என்று தர்மருக்குச் சொல்லிக் கொடுத்த பீஷ்மர், துரோணர் செய்தது, தன்னையே நம்பி பாண்டவர்களை எதிர்க்கும் துரியோதனனைக் கேட்காமல் கர்ணன் கவச குண்டலங்களை தானம் செய்தது மற்றும் குந்திக்கு வரமளித்தது, தன் பக்கம் இருந்தும் சல்லியன் எதிரணிக்காகவே பேசியது, என்று துரோகங்களைப் பட்டியலிடுகிறார்.

துரியோதனன் சபையில் துகிலுரிப்பு என்ற சம்பவம் நடந்திருக்கவே வாய்ப்பில்லை. ஏனென்றால் அப்புறம் வனவாசத்தின்போது அங்கு வரும் கண்ணனிடம் பேசும்போது, கண்ணன்,  தான் அந்த சமயத்தில் வேறு இடத்தில் மாட்டிக் கொண்டதாகக் குறிப்பிடுவதைச் சொல்கிறார். 


துகில் என்பதற்கு ஆடை என்பதைவிட மேலாடை என்பதே பொருத்தமாக இருக்கும் என்கிறார். அந்தக் காலத்தில் அடிமைகள் மேலாடை அணியக் கூடாது என்பது எழுதப் படாத் விதியாக இருந்ததையும் அந்த வழக்கம் 1940, 50 களில் கூட இருந்ததையும் சொல்கிறார். பின்னர் அங்கு என்ன நடந்திருக்கும் என்ற கேள்வியை எழுப்பி அவரே அதற்கு ஒரு பதிலையும் சொல்கிறார்.  

புத்தகத்தில் ஒரு குறை. வரிக்கு வரி புள்ளிகள் தெளித்து பிரசுரம் பண்ணியிருப்பதால் மூச்சு இரைக்க இரைக்க படிக்க வேண்டியிருக்கிறது. 


உதாரணத்துக்கு,

"ஒரு நாள்கூட....முழுசாக....அந்தக் குழந்தைகளை சீராட்டி....பாராட்டி....சோறூட்டி...அவள் அழகு பார்த்ததே கிடையாது."

இப்படியே கடைசி வரை இருப்பது படிக்கச் சிரமமாக இருக்கிறது. ஆனாலும் சுவாரஸ்யமாக ஒரு மூச்சில் படித்து முடிக்க முடிகிறது.

வழக்கு என்பதால் ஒருமுறை சொல்லியதே மீண்டும் மீண்டும் வருகிறது. கடைசியில் மறுபடியும் எல்லாவற்றையும் ஒருமுறை தொகுத்து வழங்குகிறார்.
                                                 

                             
ஆசிரியர் எஸ் விஜயராஜ் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். தினத்தந்தி நாளிதழில் நிருபராகவும் பின்னர் உதவி ஆசிரியராகவும் பணியாற்றியவர். வானொலிக்கு பல நாடகங்கள், 2 திரைப்படங்களுக்கு கதைவசனம் பாடல்கள் எழுதியவர். இதைத் தவிர, 'இது கவிதை அல்ல விதை' 'இது வேரில் பழுத்த பலா', இது சுடுமணல் சுரந்த நீர்' போன்ற புத்தகங்களை எழுதியவர் என்கிறது ஆசிரியர் பற்றிய குறிப்பு.

"ஒரு வழக்கு... துரியோதனனை ஆதரித்து..."
ஆசிரியர் : எஸ். விஜயராஜ்.
பூம்புகார் பிரசுரம்.
272 பக்கங்கள். 220 ரூபாய்.

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

ஞாயிறு 225:: என்ன? யாரு? எங்கே?


                 
கேள்வி: நாம் அன்றாடம் சமையலில் உபயோகிக்கின்ற ஒரு பொருள், ஒரு கிலோ எட்டாயிரத்து அறுநூறு ரூபாய். அது, எது? 
      

சனி, 26 அக்டோபர், 2013

பாஸிட்டிவ் செய்திகள்


1) படிக்கவில்லை. ஆனால் புத்தகங்கள் வெளியிட்டுள்ளார். குறைந்த செலவில் மின்சாரம் உட்பட புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தும் சுப்பிரமணியம்.
                                    

2) சம்பளத்துக்காக மட்டும்தான் வேலையா? இல்லை என்கிறார் புதுமைப் பெண் பிரான்சிஸ் ஆரோக்கிய மேரி!
                                                    


3)  சென்னையை சேர்ந்த அருண் கிருஷ்ணமுர்த்தி என்ற இளைஞர் 2012 கான "rolex award" ஐ சுவிஸ் நாட்டில் உள்ள ஜெனிவாவில் பெற்றுள்ளார் .  

                                                    
 

இவர் முன்பு கூகிள் நிறுவனத்தில் ஒரு பொறுப்பான பதவியில் இருந்தார். அதை துறந்து விட்டு ஒரு சுற்று சூழல் பாதுகாக்கும் நிறுவனத்தை சென்னையில் நிறுவி, அதை வேறு இரண்டு இந்திய மாநிலங்களிலும் விரிவு படுத்தி உள்ளார், இவரது தொண்டு நிறுவனத்தில் 900கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இலவசமாக வேலை செய்கின்றனர்.

அவருக்கு rolex நிறுவனம் அளித்த பரிசு தொகையான "50'000 சுவிஸ் பிராங்குகளை" அதாவது "2'993'792.70 ரூபாய்களை சென்னையில் உள்ள கீழ்கட்டளை பெரிய ஏரியை சீர் அமைக்க பயன்படுத்துவார். இவருக்கு நாமும் எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு எம்மால் முடிந்த பங்களிப்பை வழங்குவோம்.


அந்த இளைஞரின் தொடர்பு விபரம் :
Arun Krishnamurthy:
9940203871, 9500043483, 9884737757
Mail us at: arunoogle@gmail.com, efievents@gmail.com
 
4) இது ஒரு பாஸிட்டிவ் செய்தியா என்று நீங்கள் நினைக்கலாம். ஏற்கெனவே இதய நோயை 80 களிலேயே எதிர்த்து நின்று இது வரை தாக்குப் பிடித்திருக்கிறார், இந்த 90 வயதில் வந்திருக்கும் புற்று நோயை எண்ணி மனம் தளராமல் மிகுந்த பாஸிட்டிவாக இருக்கும் இவரைப் பார்த்து மற்றவர்களுக்கும் தைரியம் வரலாமே. நாகேஸ்வர ராவ்
                                                 
 
5) அரசாங்கத்தை நம்பாமல், நடமாட முடியாத நிலையிலும் கூட, ஏற்கெனவே நடத்தி வரும் ஆதரவோற்றோருக்கான ஆறுதல் நிழலைத் தரும் திரு சிவப்பிரகாசம் பற்றிய செய்தி. 89 இல் சின்னதா ஆரம்பிக்கப்பட்ட அறக்கட்டளை, இப்போது முதியோர், சிறுவர்கள், மனநலம் பாதித்தவர்கள் என சுமார் 100 பேருக்கு நிழலா இருக்கு. 2004-ல் சாலை விபத்தில் சிக்கி இவர் படுத்த படுக்கையாய் ஆனாலும், பொள்ளாச்சி மகாலிங்கம், கோவை அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் கௌரி சங்கர், நெய்வேலி என்.எல்.சி. தொழிலாளர்கள் போன்றவர்கள் உதவியோடு தொடர்ந்து ஆதரவு தரும் நல்ல மனிதர்.
                                      
 
6) அடுத்தவரைச் சொல்வதை விட, நாமே செய்து காட்டினால் நல்ல உதாரணமாக இருக்கும் என்று செய்து காட்டி மாணவர்களை வழி நடத்தும் பாசிட்டிவ் ஆசிரியர் ஜோதிமணி
                                            
 
7) சட்டம் படித்திருந்தால்தான் சட்ட நுணுக்கங்கள் தெரியுமா என்ன? இல்லை கோர்ட்டில் தனக்கு வாதாடிக் கொள்ள சட்டம் படித்திருக்க வேண்டுமா?  இல்லை என்று நிரூபிக்கும் பெரம்பலூர் எளம்பலூர் ராஜேந்திரன், அதை மக்களுக்கும் எடுத்துரைக்கிறார்.
                                          

 
8) ஈர நெஞ்சம் அமைப்பினரின் இன்னொரு நற்செயல். செய்யப்பட்டு துரத்தி விடப்பட்டு நடக்க இயலாத நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு நடக்க முடியாமல் எங்கு செல்வது என்று தெரியமால் மழையில் நனைந்த அவரின் நிலையைகண்டு B3 காவல் துறையினர் ஈரநெஞ்சம் அமைப்பிற்கு தகவல் கொடுத்தனர். அதனைதொடர்ந்து ஈரநெஞ்சம் அமைப்பு அந்த முதியவரை மீட்டு கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்த்தது.
                                                    

ஸ்ரீராமலுவை விசாரித்ததில் அவர் இரயில்வே துறையில் பணியாற்றியதும் மேலும் அவருக்கு கிடைக்கும் பென்ஷன் பணத்தை கேட்டு தனது மகன்கள் சித்ரவதை செய்து கைவிடப்பட்டதும் தெரியவந்தது. யாரும் உதவாத நிலையில் தன்னை மீட்டு காப்பகத்தில் சேர்த்ததற்கு ஸ்ரீராமலு ஈரநெஞ்சம் அமைப்பிற்கு நன்றியை தெரிவிதுகொண்டார்.
 
 
9) சாதனை ஆட்சியாளர் சகாயத்தின் இன்னொரு சாதனை. 'சத்து' இல்லாத துறையில் அவரைத் தூக்கிப் போட்டது அரசு. ஆனால் அங்கும் தன்னால் என்ன முடியும் என்று நிரூபித்திருக்கிறார். நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த கோ ஆப்டெக்சை நம்பிக்கையுடன் புதிய திட்டங்களால் நிமிர்த்தி இருக்கிறார். (நேரடிச் செய்திக்காக 'தி இந்து' பக்கத்தில் தேடித் தேடித் தேடி... கிடைக்காததால் இந்த லிங்க்!)




செவ்வாய், 22 அக்டோபர், 2013

எலி வேட்டை



மறுபடியும் எலியின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. எப்படித்தான் உள்ளே வருகின்றனவோ..

கடையிலிருந்து எலி கேக் வாங்கி வைத்தோம். அதைத் துளிக்கூடத் தொடவில்லை சமர்த்து எலிகள். எலிகள்? ஆம்... பன்மையில்தான் சொல்ல வேண்டும். இரண்டு மூன்று சைஸ்களில் பார்த்த ஞாபகம். 


கர்ப்பமான எலி ஒன்று முதலில் உட்புகுந்திருக்க வேண்டும். பிரசவம் எங்கள் வீட்டினுள் நடந்திருக்க வேண்டும். (என்ன ஒரு கண்டுபிடிப்பு!)
                                     
கூகிள் கொடுக்கும் படங்களில் பழைய மாடல் பொறியின் படம் கிடைக்கவில்லை. இப்போது இருக்கும் மாடல்கள் போலும் இவை.


முன்பு L ஷேப்பில் ஒரு பொறி இருக்கும். அதில் மாட்டும் எலி முதுகில் செம அடி வாங்கி மாட்டியிருக்கும். அதை மாட்டும்போதே சாம்பிள் அடி நானும் வாங்கியிருக்கிறேன்!
                                            


அப்புறம் இந்தக் கூண்டு.  நடுவில் எலிகள் தொந்தரவு இல்லாத காரணத்தால் எங்கே வைத்தோம் என்றே மறந்திருந்த எலிப்பொறியைத் தேடி எடுத்தோம். தூசியைத் துடைத்து செட் செய்தோம். மறுபடி வைத்து விட்டுக் காத்திருந்தோம்.


பக்கத்து வீட்டு வாண்டை விட்டு மசால்வடை வாங்கி வரச் செய்தோம். இரண்டு வடை வாங்கி வந்து தந்தான் பொடியன்.


மேஜை மேல் வைத்திருந்த வடையிலிருந்து அரை வடையை மட்டும்  பிய்த்து எடுத்துக் கம்பியில் சொருகி கதவைக் கம்பியில் மாட்டினேன். பின்னால் இருக்கும் கம்பிகளின் இடைவெளியில் அட்டை சொருகி அடைத்தேன். முன் அனுபவம்! பொடி எலிகளாயிருப்பதால் நக்கல் சிரிப்புடன் பின் கம்பி வழியே துள்ளிக் குதித்து ஓடிவிடும்.


பகல் வேளையிலேயே குழந்தைகள் விளையாடுவதுபோல குறுக்கும் நெடுக்குமாக எலி(கள்) ஓடிக் கொண்டிருந்ததால் பகலிலேயே வைத்து விட்டோம்.

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி என்று பாடிக் கொண்டே (மனதுக்குள்தான்) மற்ற வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தோம். 


'டப்' என்ற சத்தம். துள்ளி அருகில் ஓடினோம். உள்ளே மாட்டியிருந்தது. உறுதிப் படுத்திக் கொள்ள உள்ளே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பின்னால் இருக்கும் அட்டையைக் கிழித்துக் கொண்டு குதித்து வெளியே ஓடியது குட்டி எலி!
வெறுத்துப் போனோம். பொறியை எடுத்து மறுபடி தயார் செய்து, பின்னால் அது வெளியேற முடியாமல் கெட்டியான அட்டையை வைத்து மறுபடி மற்ற வேலைகளைப் பார்த்துக் கொண்டே காத்திருந்தோம்.

சத்தத்தையே காணோம். அவ்வப்போது சென்று எலி ஏதாவது உள்ளே மாட்டிக் கொண்டிருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தோம். ஊ..ஹூம்!
                               
                                                   
மிச்சம் வைத்த ஒன்றரை வடையை  உள்ளே எடுத்து வைத்து அப்புறம் உபயோகிக்க பத்திரப்படுத்தலாம் என்று வைத்திருந்த இடத்தைத் தேடினேன். எங்கே வைத்தேன்... இங்கேதானே வைத்திருந்தேன்... ஃபிரிஜ் மேலேயா...? ஆ...!  மேஜை மேலே...

                                           
மேஜை மேல் வைக்கப் பட்டிருந்த பொட்டலம் கிழிக்கப் பட்டிருந்தது. உள்ளேயிருந்த ஒன்றரை வடைகளில் மிச்சச் சிதறல்கள் வடை இழுத்துச் செல்லப் பட்ட வழியைக் காட்டிக் கொண்டிருந்தன. எலிப்பொறிக்கு நேரெதிர் திசை!

                                              
எலி பிடித்து வாழ்வோரே வாழ்வார் - மற்றோரெல்லாம்
கிலி பிடித்துப்போவார்! - எலிக்குறள்!

பின் பயமுறுத்தல் :
'எங்களி'ன் முந்தைய எலிப் பதிவுகள் 
மீண்டும் வாழ்வேன் 

============================================================

இன்று காலை செய்தித் தாளில் படித்த இந்தச் செய்தி இந்தப் பதிவுக்குப் பொருத்தமாக இருப்பதால் காலையே இங்கு இணைக்க முயற்சி செய்தேன். அப்போது நாளிதழின் இணையப் பக்கத்தில் இது வெளியாகவில்லை. இப்போது பார்த்தால் கிடைக்கிறது. எனவே பதிவிலும் இதை இணைத்திருக்கிறேன்!
பின்னூட்டத்திலும் சேர்க்கிறேன்!

"அச்சச்சோ... தப்புப் பண்ணிட்டேனே..." மனிதர்களைப் போலவே சிந்திக்கும் எலிகள்!