செவ்வாய், 31 ஜனவரி, 2012

அலுவலக அனுபவங்கள் 04

    
அது ஓர் அரசு அலுவலகம்.
காலை ஏழு மணிக்கே சுறுசுறுப்பாகும் அலுவலகம். 
ஒவ்வொருவராக வரத் தொடங்கினார்கள். 
கொஞ்ச நேரத்தில் கோவிந்தன் ஓடிவந்தார். 

"தொங்கறான் சார்.... தொங்கறான் சார்..."
"யாரு கோவிந்து?"
"சாரதி சார்.... தொங்கறான் சார்..."
"புரியலையே....."
"போய்ட்டான் சார்.... தூக்குல தொங்கிட்டான் சார்..."  

அதிர்ந்து போய் எல்லோரும் ஓடினார்கள். சாரதி குறைந்த உயரத்தில் காலை மடக்கி அசௌகர்யமாகத் தொங்கியபடி மரணித்திருந்தார். கடைசி நிமிடத்தில் கால் தரையைத் தொடும் உயரத்துக்குக் கால்கள் தாழ்ந்திருக்க வேண்டும். கொள்கைப் பிடிப்புடன் கால்களை மடக்கி முடிந்திருந்தார்.
     
மெல்ல இறக்கினார்கள். அருகில் ஒரு கடிதம். 
             
"என் குடும்பம் கஷ்டத்தில் இருக்கிறது.... என் மகனுக்கு எவ்வளவு முயன்றும் வேலை கிடைக்கவில்லை. எனவே நான் போகிறேன். என் வேலையை என் மகனுக்கு வாங்கித் தரும்படி அதிகாரிகளைக் கடைசியாகக் கேட்டுக் கொள்கிறேன்.  எனக்குச் சேர வேண்டிய தொகை வரும்போது கீழ்க் கண்ட வகையில் என் கடன்களை அடைத்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன்..." என்றிருந்த கடிதத்தில் இட்லி சாப்பிட்ட கடன், டீக்கடைக் கடன் என்று வந்த பட்டியலில் அலுவலகத்தில் கடைசியாக முதல் நாள் வாங்கிய பத்து ரூபாய்க் கடன் வரை இருந்தது.
            
அரசுப் பணியில் ஒருவர் இறந்தால், அவர் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை என்பதை உபயோகித்துக் கொள்ளும் வண்ணம் அமைந்த தற்கொலை.
    
குறைந்த வருமானத்தில் தன் பெரிய குடும்பத்தைக் காப்பாற்றி வந்தவர், மாதக் கடைசியில் கிடைக்கும் சொற்பக் காசைக் குடும்பத்திற்குக் கொடுத்து விட்டு பட்டாணி சாப்பிட்டே உயிர் வாழ்ந்தவர். சற்றே மனநிலை சரியில்லாத தன் மனைவி மேல் பிரியமாக இருந்தவர். 
     
உடன் பணிபுரிந்தவர்கள், தங்கள் வாரிசுகளுக்குப் பலவகையிலும் முயன்று வேலை வாங்கித் தந்ததைப் பார்த்து தானும் எவ்வளவோ முயன்றார். லெப்ரசி இருந்து சரியானதாக சான்றிதழ் பெற்றால் வேலை கிடைக்கும் என்று யாரோ சொன்னார்கள். அதுவும் முயன்று பார்த்தார். வளர்ந்த மகன் பலமுறை அடிக்கவே வருகிறான் என்று வருத்தப் படுவார்.
                          
அதிர்ச்சி விலக நீண்ட நாள் ஆனது எல்லோருக்கும். தற்கொலை செய்து கொண்டவரின் மகனுக்கு வேலை கிடைக்குமா என்ற சந்தேகம் விவாதங்களாகி, கடைசியில் அவர் மகனுக்கு வேலை கிடைத்தது. 
      
பட்டியலில் இருந்தபடி, பத்து ரூபாய்க் கடன் வரை செட்டில் செய்யப்பட்ட போது சம்பந்தப்பட்டவர்கள் நெகிழ்ந்து போனார்கள். 
     
அனுபவம் இங்கு முடியவில்லை. அனுபவம் மேலும் பாடம் கற்றுக் கொடுத்தது. சர்வீஸ் முடியப் போகும் நிலையில் இருந்த இன்னும் இரு கடைநிலை ஊழியர்கள், மர்மமான முறையில் 'இயற்கை மரணம்' அடைய, அப்புறம் உரிய காலத்தில் அவர்கள் வாரிசுகளும் வேலை வாங்கினார்கள்....  
                    

திங்கள், 30 ஜனவரி, 2012

ஈஸ்ட் ஆர் வெஸ்ட் சர்ஜரி இஸ் பெஸ்ட்! மருத்துவ வியாபாரம்.

            
என் நண்பர் ஒருவர் ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்புக்குக் கீழே விழுந்தார்! ஒன்றுமில்லை, ஓரமாக சென்று கொண்டிருந்தவரை சாலை நெரிசலில் அவசர இடுக்குகளில் நுழைந்த இரு சக்கர வாகனம் ஒன்று இடித்துத் தளளி விட்டுப் பறந்தது. விழுந்தவர் எழுந்தபோது கையில் மட்டும் வலியை உணர்ந்தார். வேறு ஒன்றும் அடியில்லை.
              
வீடு வந்தபோது இடது கை முஷ்டி லேசாக வீங்கியிருந்தது. விரல்களை அசைக்க முடிந்தது.வலி இருந்தது. அன்று வலி நிவாரணி ஒன்று லோகல் மெடிகல் ஷாப்பில் வாங்கிச் சாப்பிட்டு விட்டு மறுநாளும் வலி தொடர்ந்தாலும், நட்பு மற்றும் உறவுகள் சொன்னதாலும் மருத்துவமனை சென்று எக்ஸ்ரே எடுத்தார். 
            
சிறு கோளாறு இருப்பது தெரிந்தது. அதாவது 'சிறிய' என்று இவர் நினைத்தார்! முதலில் கட்டுப் போட்டு அனுப்பிவிடத் தீர்மானித்தது அவர் இருந்த ஏரியா சிறிய மருத்துவமனை. இவரின் நண்பர் ஒருவர் மருத்துவர். அவர் பார்த்து விட்டு "சர்ஜரி பெஸ்ட்.... இருபதாயிரம் ரூபாய் வரை ஆகும்.... ரொம்ப அதிகம்னா முப்பதாயிரம் ஆகலாம்"  என்று சொல்ல, தென் சென்னையில் பெரிய பெயரை உடைய ஒரு மருத்துவமனை சென்றார்.
             
ஐம்பத்தைந்தாயிரம் ரூபாய்.
               
ப்ளேட், ஸ்பூன் (!) எல்லாம் வைத்து சர்ஜரி தேவையா, அல்லது மாவுக் கட்டு மட்டும் போதுமா என்று விவாதித்து செகண்ட் ஒபீனியன் என்று அண்ணா நகர் பக்கம் இன்னொரு பெரிய ஸ்பெஷாலிடி மருத்துவமனைக்குச் சென்றார்கள். எக்ஸ்ரே எல்லாம் புதிதாக மறுபடி கூடுதல் விலையில் எடுக்கப் பட்டு, 'சர்ஜரி தான் பெஸ்ட்' என்று சொல்லி, அவர்கள் கொடேஷனைக் கொடுத்தார்கள்.
            
ஒன்றரை லட்சம் ரூபாய்!
                     
முப்பதாயிரம் ருபாய் ஆகும் என்று சொன்ன (நண்ப) மருத்துவரிடம் அணுகியபோது அவர் சற்றே சுதாரித்திருந்தார்! ஆனாலும் ரீசனபில்! தன் தோழைமை மருத்துவருக்கு சிபாரிசு செய்தால் அறுபதுக்குள் முடியும் என்றார். சரி, ஐமபதையிரம் சொன்ன இடமே தேவலாம் என்று முடிவு செய்து மறுபடி அங்கேயே சென்று அட்மிஷன் நடைமுறைகளை ஆரம்பித்த போது இவர்கள் கொடேஷன் கொடுத்தார்கள்! ஒரு லட்சத்து இருபதாயிரம்!
             
வீக்கம் ரொம்பக் கம்மியாய் இருக்கிறது, வலியும் இல்லை பேசாமல் அப்படியே இருந்து விடுகிறேன் என்கிறார் இவர்.
                  
மாவுக் கட்டு போட்டால் நேராக உட்காருமா, அப்புறம் பிசியோதெரபி செய்ய வேண்டும் அதற்கு இவர் வயது தடையாக இருக்கும், சர்ஜரி என்றால் உடனடி ரிசல்ட், ஆனால் அதற்கும் பிசியோதெரபி உண்டு... "மாவுக் கட்டு எல்லாம் இப்போ யார் சார் போடறாங்க... சர்ஜரிதான்" என்றார் மருத்துவத் துறை நண்பர் ஒருவர். 
              
ஏகப் பட்ட விவாதங்கள்.
               
என்ன ராசியோ நண்பரின் மகனும் சமீபத்தில் இதே மாதிரி கையில் சர்ஜரி செய்து கொண்ட வகையில் முப்பதாயிரம் ரூபாய் செலவாகி இருந்தது. அது கேரளாவில்! இதை விடப் பெரிய சிகிச்சை- ஒரு விபத்தில் ஏற்பட்டது. அங்கு விலை நிலவரம் கம்மி போலும்!
             
"நீங்க என்ன கையிலிருந்தா கொடுக்கப் போறீங்க.... இன்சியூரன்ஸ்காரங்க கொடுக்கப் போறாங்க...உங்களுக்கென்ன...உங்கள் கையிலிருந்து பத்தாயிரமோ இருபதாயிரமோதான் செலவாகப் போகுது... நீங்கள் சொன்ன ரேட்டை விடவும் இது கம்மிதானே..." என்று கூறின ரிசப்ஷன்கள்! 
            
அறுவைச் சிகிச்சை முடிந்தது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் இந்த விலை நிலவரங்கள்தான் ஆச்சர்யமேற்படுத்தியது. 
               
இன்சியூரன்ஸ்,  மெடிக்ளெய்ம் எல்லாம் போடாதவர்கள் கதி என்ன?
                    
என் மாமா ஒருத்தர் ஒரு வடை ஒன்றே முக்கால் லட்சம் ரூபாய் என்று இரண்டு வடை சாப்பிட்ட கதை தெரியுமோ.... அதுவும் இதே போலதான். வடையில் ஆரம்பித்த கோளாறு எங்கெங்கோ சென்று நிம்மோனியா வரை சென்று, 'பிழைப்போமா' என்று சரியாகும்போதுதான் வடைக்குக் கொடுத்த விலை தெரிந்தது!


புதன், 25 ஜனவரி, 2012

கோடு போடுங்கள்!

                                
புதிர்கள் வெளியிட்டு வெகு நாட்கள் ஆகிவிட்டனவே - சீக்கிரம் ஒரு புதிர் பதிவிடுங்கள். நாங்கள் எல்லோரும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றோம் என்று மின்னஞ்சலும், கெஞ்சலும், கோபமும் காட்டிய வாசகர்களுக்காக இந்தப் பதிவு. 

பதிவுக்கு விடையை ஒரு காகிதத்தில் வரைந்து, அதைப் படம் எடுத்து, அல்லது கம்பியூட்டர் பெயிண்ட் / மற்ற வழிகள் மூலமாக வரைந்து, engalblog@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும். ஒருவரே எவ்வளவு விடைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம். (ஆனால் எங்களுக்குத் தெரிந்து இதற்கு ஒரே ஒரு சரியான விடைதான் உள்ளது.)

இதோ புதிர்: 

A,B,C,D,E,F,G,H,I, என்று ஒன்பது புள்ளிகள், படத்தில் காட்டியுள்ளபடி 3 X 3 வரிசையில் உள்ளன. 

                                           
இதோ விதிகள்: 

* இந்த ஒன்பது புள்ளிகளையும் (அதிக பட்சம்) நான்கு நேர்க் கோடுகளால் இணைக்கவேண்டும். 
                    
* அந்த நான்கு நேர்க் கோடுகளையும் ஆரம்பத்திலிருந்து, கடைசி வரையிலும் கை எடுக்காமல் (without break) வரையவேண்டும். 
            
* எந்த ஒரு கோட்டின் மீதும் மீண்டும் கோடு போடக் கூடாது. 
            
* கோடுகள் ஒன்றை ஒன்று கிராஸ் செய்து (குறுக்காக) கடக்கலாம். 
              
ஆன் யுவர் மார்க், கெட் செட், ரெடி ................ கோ! 
           

திங்கள், 23 ஜனவரி, 2012

பால்காரர்

     
அமைதியான இரவு; பெங்களூர்க் குளிர். போர்த்திக்கொண்டு படுத்து, நல்ல தூக்கம்.

மின் விசிறிச் சத்தம் கூட இல்லாமல் இருந்த அமைதியையும், தூக்கத்தையும் ஒருங்கே கெடுத்தது, நாய் குரைப்புச் சத்தம். வீட்டிலே உள்ள மற்ற மக்கள் எல்லோரும் ஆறு வருடங்களுக்கு மேலாக இந்தக் குளிருக்கும், குரைப்புச் சத்தங்களுக்கும் பழகிய கும்பகர்ணர்கள். நான் ஒருவன்தான் இந்தச் சூழ்நிலையில் இரண்டுங்கெட்டான். 

குறைக்கின்ற அந்த நாய் பக்கத்துத் தெருவிலிருந்து குறைப்பது போல தூரத்திலிருந்து குறைத்துக் கொண்டிருந்தது. 'போ போ போய் விடு' என்று சொல்வது போல குரைப்புகள்; சில சமயங்களில் அழுகை கலந்த முறையீடு! இது தெரு நாய் குரைப்புதான். வீட்டு நாய் குரைத்தால், அந்தந்த வீட்டு மக்கள் அதை எப்படியாவது சமாதானம் செய்து அமைதியை நிலைநாட்டி விடுவார்கள். 

திடீரென்று ஒரு மௌனம் - நிசப்தம். நம்ப முடியாத சூழ்நிலையை மனம் வாங்கி, நாய்க்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானங்களை நிறைவேற்றி,  உறக்கம் வந்து கண் இமைகளை அழுத்தும் நேரம் --- திரும்பவும் குரைக்கத் தொடங்கியது அந்த நாய். 

இந்த மாதிரி சந்தர்ப்பங்களில், ஓஷோ சொன்ன யுக்தியைப் பின்பற்றினால் என்ன என்று தோன்றியது. அதாவது அந்த நாய், நமக்குப் பிடித்த கடவுள் பெயரையோ அல்லது நமக்குப் பிரியமானவர்களின் பெயரையோ சொல்வது (குரைப்பது!) போல கற்பனை செய்து கொள்ளலாம். அப்போ நமக்கு அது ஒரு தொந்தரவாகத் தெரியாது என்ற யுக்தி அது. 

ஊ ஹூம் - அதுவும் சரிப்பட்டு வரவில்லை. அந்த நாயின் குறைப்பு எனக்குப் பிடித்தவர்களின் பெயரின் எழுத்துகளை சரியாகச் சொல்லவில்லை! அதற்காகவே அதை நேரில் சந்தித்து, ஒரு கல்லால் அடித்து, அதை ஓட ஓட விரட்டி விட வேண்டும் என்று தோன்றிற்று. 

நேரம் என்ன என்று பார்த்தேன். காலை மணி நாலரை. சரி. எப்படியாவது அந்த நாயை விரட்டிவிடுவோம் என்று நினைத்து, படுக்கையிலிருந்து எழுந்து, ஸ்வெட்டர், கம்பளிக் குல்லாய், போர்வை எல்லாம் அணிந்து, போர்க்கோலம் பூண்டு வந்து, வாசல் கதவைத் திறந்தேன். அடேடே - வாசல் கிரில் கேட் பூட்டப்பட்டிருக்கின்றதே! இந்தப் பூட்டின் சாவி எங்கே இருக்கின்றது என்று வீட்டில் இருக்கின்றவர்கள் யாரையாவது எழுப்பிக் கேட்டால்தான் தெரியும். அப்படி எழுப்பினால், எழுப்பப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், அந்த நாயை விடக் கடுமையாக என்னைப் பார்த்துக் குரைக்க ஆரம்பிப்பார்கள் என்பது சர்வ நிச்சயம். 

'என்ன செய்யலாம்?' என்று யோசித்துக் கொண்டிருக்கையில், ஆபத்பாந்தவனாக சைக்கிளில் வந்து இறங்கினார், எதிர் வீட்டுப் பால்காரர். 
       
மாத முதல் ஞாயிற்றுக் கிழமைகளில், வாடிக்கையாளர் வீடுகளுக்கு கூப்பன் விற்க, பணம் வசூல் செய்ய அவர் வருகின்ற நேரங்களில்,  அவரைப் பார்த்ததுண்டு. தமிழ் தெரிந்தவர் என்பதால், என்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் தமிழில் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டுச் செல்வார். எங்கள் வீட்டுப் பால்காரர் காலை ஏழுமணி சுமாருக்குத்தான் வருவார். எதிர் வீட்டுப் பால்காரர் இவ்வளவு சீக்கிரமாக வருகின்றாரே என்று வியப்பாக இருந்தது. அதை அவரிடமே கேட்டுவிட்டேன். "என்ன பால்காரரே - இவ்வளவு சீக்கிரம்?" 

"நான் இன்றைக்கு கொஞ்சம் முன்னதாகத்தான் வந்துவிட்டேன். சட்டென்று பால் பாக்கெட் போடுகின்ற வேலையை முடித்துக் கொண்டு, ஹோசூர் போகணும். அதான் காரணம்" என்றார். அவருடைய குரல் முற்றிலும் கரகரப்பாக மாறியிருந்தது. 'சரி இந்தப் பனி காலத்தில் இப்படி வெளியே உலவுபவருக்கு தொண்டை கட்டிக் கொள்வது இயற்கைதான்' என்று நினைத்துக் கொண்டேன். 

"பால்காரரே - எனக்கு ஒரு உதவி செய்வீர்களா?"
           
"என்ன சார் வேண்டும்?"
           
"பக்கத்துத் தெரு நாய் - இப்படி பயங்கரமாக, பேயைக் கண்டது போல குரைத்துக் கொண்டு இருக்கின்றதே; அதை அந்தப் பக்கம் போகும் பொழுது, விரட்டி நாலைந்து தெருக்கள் தாண்டி போகின்றாற்போல துரத்தி விடுங்கள். அல்லது எப்படியாவது அது சத்தம் போடாமல் இருக்க வையுங்கள்."
           
"இனிமேல் அது சத்தம் போடாது சார். இப்போ நிறுத்திடும். நீங்க போய் தூங்குங்க." என்று சொல்லி விட்டு, எதிர் வீட்டுப் பால் பையில் பால் பாக்கெட்களைப் போட்டு விட்டுக் கிளம்பினார். அவர் பக்கத்துத் தெரு போகின்ற வரையிலும் பார்த்திருந்து விட்டுப் போகலாம் என்று பார்த்திருந்தேன். ஆனால் சைக்கிளில் ஏறிச் சென்றவர், சைக்கிளுடன் திடீரென்று பனி மூட்டத்தில் கரைந்து காணாமல் போனார். கொஞ்ச தூரம் போனவுடனேயே அவர் எங்கு போனார், என்ன ஆனார் என்றே தெரியவில்லை. ஆனால் நாய் குரைப்பு மட்டும் உடனே மந்திரம் போட்டாற்போல் நின்றது. எனக்கு அது போதும். 
            
வாசல் கதவைத் தாளிட்டு, வந்து படுத்து, இரண்டரை மணி நேரம் தூங்கினேன். ஏழு மணிக்கு வாசல் பக்கம் வந்து பால் பாக்கெட்களை எடுக்க வந்தால், எதிர் வீட்டுக்காரர் அவர்கள் வீட்டு கேட்டுக்கருகே, தெருவைப் பார்த்தபடி நின்றிருந்தார். 
           
"என்ன சார்? காஃபி சாப்பிட்டுட்டீங்களா?" என்று கேட்டேன். 
   
"ஊ ஹூம் ... இன்னும் பால்காரர் வரவில்லை" என்றார் எதிர்வீட்டுக்காரர். 
                       

சனி, 21 ஜனவரி, 2012

உள் பெட்டியிலிருந்து 1 2012

       
இரண்டில் ஒன்று !
   
ரோடில் ஒரு ஐநூறு ரூபாய் நோட்டும் ஒரு நூறு ரூபாய் நோட்டும் கிடக்கிறது. எதை எடுப்பாய்...?

"நிச்சயம் ஐநூறு ரூபாய் நோட்டைத்தான்..."

"முட்டாளே! ஏன்? இரண்டையும் எடுக்கக் கூடாது என்று யாராவது சொன்னார்களா?"
-----------------------------------------------------------

அரை மனிதன்! 

குருட்டுப் பெண் எல்லோருக்கும் இனிப்பு கொடுத்துக் கொண்டிருந்தாள். அவள் கண் தெரியாதவள் என்று அறிந்திருந்த மாணவன் ஆடை இல்லாமல் குளியறையிலிருந்து வந்து இனிப்பை எடுத்துக் கொண்டான்.
      
"என்ன விஷயம்...? எதற்கு ஸ்வீட்?"    
    
"எனக்குக் கண் கிடைத்து விட்டது"
-----------------------------------------------------------

கோன் பனேகா குரோர்பதி?
  
'நீ ஒரு கோடீஸ்வரன் ஆனால்..' என்ற தலைப்பில் உளமார யோசித்து ஒரு கட்டுரை எழுதச் சொன்னார் ஆசிரியர்.

எல்லோரும் எழுதத் துவங்க, ஒரு மாணவன் மட்டும் சும்மா இருந்தான். ஆசிரியர் காரணம் கேட்டார்.
   
"என்னுடய காரியதரிசிக்காகக் காத்திருக்கிறேன் அய்யா..."  
----------------------------------------------------

இருள் கணங்கள்

வாழ்வில் நாம் எல்லாவற்றையும் விட மேலாக நினைக்கும் சிலரது வாழ்வில் நாம் ஒரு வந்து செல்லும் விருந்தாளி போலத்தான் என்று அவ்வப்போது நிரூபிக்கும் தருணங்கள்.

எனக்காக கவலைப் பட நிறைய இதயங்கள் இருப்பதாக நான் உறுதியாக நம்புகிறேன். ஆனால் வாழ்க்கை பெரும்பாலும் அதை என் கற்பனை என்றே நிரூபிக்கிறது. 
-----------------------------------------------------------
   
 தத்துபித்துவம்
 
எதை இழக்கிறோம் என்று வருந்துவதை விட, எதை விட்டுச் செல்கிறோம் என்பது முக்கியம்.
-----------------------------------------------------------

நட்பு என்பது ....

எப்படி மறக்கிறோம் என்பதல்ல, எப்படி மன்னிக்கிறோம் என்பதில்
(முன்பு வந்தது : துரோகத்தை மன்னித்து விடு. ஆனால் மறக்காதே)

எப்படி கேட்கிறோம் என்பதில் அல்ல, எப்படி புரிந்து கொள்கிறோம் என்பதில்  
(முன்பு வந்தது : நான் சொல்வதற்குத்தான் நான் பொறுப்பு. நீங்கள் புரிந்து கொள்வதற்கல்ல)

எப்படிப் பார்க்கிறோம் என்பதில் அல்ல, எதை உணர்கிறோம் என்பதில்,

எப்படி நழுவ விடுகிறோம் என்பதில் அல்ல, எப்படி தக்க வைத்துக் கொள்கிறோம் என்பதில்.
 -----------------------------------------------------------
  
ஆயுள் தண்டனை 

அன்பை சொல்லி விட ஒரு நிமிடம் போதும் ஆனால் அதை நிரூபிக்க ஒரு வாழ்க்கை காலம் வேண்டும்.
 -----------------------------------------------------------
       
சந்தோஷம் வேண்டுமா

அருகில் இல்லாத மூன்றாவது மனிதர்களைப் பற்றி பேசவோ நினைக்கவோ கூடாது. அதே சமயம் அந்த மூன்றாவது நபர்கள் நம்மைப் பற்றி என்ன பேசுவார்கள், நினைப்பார்கள் என்று எண்ணவும் கூடாது.
-----------------------------------------------------------

சூஸ் த பெஸ்ட்./ ஆப்ஷன் உங்கள் சாய்ஸ் 

காலையில் உங்களுக்கு இரண்டு வாய்ப்பு.
தொடர்ந்து தூங்கிக் 
கனவைத் தொடர்வது
அல்லது எழுந்து கனவைத் 
துரத்துவது...  

-----------------------------------------------------------

தனிமையில் இனிமை 

பலருக்கு நடுவில் இருந்தாலும் 
தனியாக இருப்பது 
போல் உணர்ந்த பிறகு
தனிமை
சோகம் தரவில்லை
சுகம்தான் தருகிறது.   
-----------------------------------------------------------

உறவுடைப்பு

பொய்கள் உறவைக் காக்கின்றன. உண்மைகளோ உறவை  உடைக்கின்றன.   
========================   
              

வியாழன், 19 ஜனவரி, 2012

யானை, கிரிகெட், பட்டிமன்றம், எஸ் எம் எஸ் கட்டணங்கள்...வெட்டி அரட்டை.

       
ஆடாத மனமும் உண்டோ? 
   
தோனிக்கு ஒரு மேட்ச் தடையாம்.... காரணம் மெதுவான ஓவர் ரேட்டாம்...     
    
மொத்த டீமும் தோனியைப் பார்த்துப் பொறாமைப் படும்.
     
திட்டு குறையுமே... ஏதாவது ஐடியா செய்து மொத்த டீமுக்குமே தடை வரும்படி ஏதாவது செய்ய முடியுமா என்று யோசித்துக் கொண்டிருப்பார்கள்... அடுத்த மேட்ச் விளையாடித்தான் ஆக வேண்டுமா என்ன? (அதுவும் ஊர்ப் பெயரைப் பாருங்கள் - அடிலயிட் (அடி + Laid) ரிசல்ட் தெரியும். பேசாமல் நீங்களே ஜெயித்ததாக வைத்துக் கொள்ளுங்கள் என்று அறிவித்து விட்டு கார் விளையாட்டு, மூணு சக்கர சைக்கிள், பனிச் சக்கரச் சறுக்கு என்று போய் விளயாடியாவது பொழுதைக் கழிக்கலாம்.
                             
"ஐ பி எல் வந்ததும் பாருங்கள்.. இவர்கள் எல்லாம் மிகப் பிரமாதமாய் விளையாடுவார்கள் மக்களும் ஆஹா ஓஹோ என்று கொண்டாடுவார்கள்" என்று பிஷன் சிங் பேடி சொல்வதிலும் அர்த்தம் இருக்கிறது!
********************************
 So & சோ 

  
ஜெயா செய்தியில் துக்ளக் ஆண்டு விழா பற்றிச் சொல்லும்போது ஸோ ஸோ என்று பத்து முறை சொன்னார் அந்தப் பெண் செய்தி வாசிப்பவர். அவர் குறிப்பிட்டது துக்ளக் ஆசிரியர் 'சோ'வை!
**********************************
 ஆன மட்டும் பார்க்கிறார்கள்!  

கேரளாவிலிருந்து யானைகளை வண்டியில் அழைத்து வந்து உலவ விட்டு தமிழக மக்களை பயமுறுத்துவதாக சில மக்கள் சொல்வதை செய்திச் சேனல்கள் காட்டின, சொல்லின.
                  
மனிதர்களை அவை  கொல்வதில்லை என்றாலும் கேஷுவலாக சுற்றி வருகின்றன என்றார்கள். காட்டு யானைகள் என்றால் மனிதர்களைக் கண்டால் ஓடுமே... அல்லது எதிர்க்குமே என்றார்கள். சிலர் அபபடி சர்வ சாதாரணமாக இவற்றை அழைத்து வந்து விட்டுச் செல்வதற்கு சீப்பான விஷயமில்லை யானை என்றும் கருத்து வந்தது.
                     
காடுகளை அழிப்பதிலும் வன விலங்குகளின் இடத்தை மனிதன் ஆக்ரமிப்பதாலும் அவை தற்சமயம் கிராமங்களுக்குப் படை எடுக்கின்றன என்றும் கூடிய விரைவில் நகரங்களுக்குள்ளும் அவை நுழையும் என்று வன ஆர்வலர்கள் சொல்கின்றனராம்.
                   
அப்போ கொஞ்ச நாளில் சென்னைத் தெருக்களிலும் மற்ற இடங்களிலும் ஆடு மாடுகள் மேய்வது போல யானைகள் திரிவதைக் காணலாம் என்று எதிர்பார்க்கலாமா... !    
***************************************
உன்னை வாழ்த்திப் போடுகிறேன்! 


   
இந்தமுறை பழைய முறையில் பொங்கல் வாழ்த்துகள் வாங்கி நண்பர்களுக்கு அனுப்பலாம் என்ற யோசனை இருந்தது. முன்பு போல மூலைக்கு மூலை பொங்கல் வாழ்த்துகள் விற்கும் கடை கிடைக்காததாலும், தேடிச் சென்று வாங்கும் பொறுமை இல்லாததாலும் செய்ய முடியவில்லை. வேலை மும்முரத்தில் முகவரி சேகரித்து வைக்க வேண்டும் என்று நினைத்ததும் மறந்து போனது.

அடுத்த முறையாவது செய்ய வேண்டும்!   
***************************************
  குறுஞ்செய்திக் குமுறல்   


    
தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் என்று வந்தால் எஸ் எம் எஸ் ஸுக்கு ரகம் ரகமாகக் காசு வாங்கும் அலைபேசி நிறுவனங்களைப் பார்க்கும்போது மக்கள் அனைவரும் ஒன்றாகப் பேசி முடிவு செய்து அந்த மாதிரி நாட்களில் முன் பின்னாக ஒரு மூன்று நாட்கள் எஸ் எம் எஸ் அனுப்புவதையே சுத்தமாக நிறுத்தினால்  என்ன என்று தோன்றுகிறது. ஒரு நபர் என்றால் ஒரு நபர் கூட எஸ் எம் எஸ் அனுப்பக் கூடாது. முடியுமா?             
**********************************
 பட்டி சுட்டதடா!           
       
  
இந்த முறை சாலமன் பாப்பையா பட்டிமன்றத்தில் அந்த அளவு சுவை இல்லை. குறிப்பாக ராஜா பேச்சில். முன்பெல்லாம் ராஜாதான் கடைசியாகப் பேசுவார். கடந்த சில முறைகளாக பாரதி பாஸ்கர்.

அந்த நேரத்தில் எந்த சேனலைத் திருப்பினாலும் எல்லா சேனல்களிலும் பட்டிமன்றங்கள். எவ்வளவு பேச்சாளர்கள்...எவ்வளவு நடுவர்கள்...தென்றல் தொலைக் காட்சியில் பட்டிமன்றம் மணிக்கணக்கில் நீண்டிருந்தது. ஆனால் ராஜா, பாரதி பாஸ்கர் பேச்சு தவிர வேறு எதையும் கேட்பதில்லை!  
     
நிற்க! 
   
பதினெட்டாம் தேதி காலை எட்டு மணிக்கு சன் டி.வி 'வாங்க பேசலாம்' நிகழ்ச்சியில், 'பன்னிரண்டு' மகத்துவம் பற்றி பாரதி பாஸ்கரும் ராஜாவும் அரட்டை அடித்துக் கொண்டிருந்தபோது, ராஜா, ஒரு ரூபாய்க்கு, பன்னிரெண்டனா என்று கூறினார். எந்த ஊரில் இப்படி ஒரு கணக்கு? எங்களுக்குத் தெரிந்து, ஒரு ரூபாய்க்கு பதினாறு அணாக்கள்தான்!     

   
  ***************************************   
                                       

புதன், 18 ஜனவரி, 2012

புத்தகத் திருவிழா 2012


நீண்ட நிழல் 
 

இந்த முறை புத்தகத் திருவிழாவுக்கு இரண்டு முறை விஜயம்.

முதல் முறை உள்ளே இருந்த போது பெய்த பெருமழையில் மேலே உள்ள தகரக் கூரை அதிர்ந்து பிரளயச் சத்தம் உண்டாக்கி பீதியை வர வழைத்தது! வேலை நாள் என்பதாலும் மழையாலும் கூட்டம் குறைவுதான். மழை பெய்த போது வெளியில் நடைபாதையில் கடை விரித்திருந்த வியாபாரிகளுக்கும்,அந்தப் புத்தகங்களுக்கும் என்ன ஆயிற்றோ என்று கவலை ஏற்பட்டது.

திரளும் மேகம்...

சுஜாதா புத்தகம் இரண்டு மட்டும் வாங்கி முற்றும் போட்டாயிற்று.
 
இனி அவர் ஏதாவது எழுதினால்தான் வாங்க வேண்டும்!
    
காவல்கோட்டம் மிகப் பெரிய புத்தகமாக ஸ்டாலுக்கு ஸ்டால் காட்சி தந்தது.
   
டால்ஸ்டாயின் வார் அண்ட் பீஸ் தமிழ் மொழி பெயர்ப்பு இருந்தது. "போரும் வாழ்வும்"
   
இப்படியும் அடுக்கலாம்....

   
மூலிகை மணி ஸ்டால்... நிஜமா பிளாஸ்டிக்கா....!    





 

   
ரா கி ரங்கராஜன் புத்தகங்கள் இரண்டு மூன்று கண்ணில் பட்டன. கிருஷ்ணகுமார் கதைகள் கண்ணில் படவில்லை அப்பாஜி...!
    
முதல்முறை கூட்டமில்லா நாளும் இரண்டாம் முறை கூட்டமும்....

   
கு. அழகிரிசாமி கதைகள், பு.பித்தன் கதைகள், தீபம் தொகுப்பு...
     
திருக்குடந்தை பதிப்பகத்தில்.திரு முக்தா சீனிவாசனிடம் கையெழுத்து வாங்குவதற்காக ஒரு புத்தகம். வெளியே நின்று நோட்டமிட்டபோது "சும்மா உள்ளே வந்து பாருங்க.... அப்போதான் புத்தகம் என்ன இருக்கு என்று தெரியும்... வாங்கித்தான் ஆகணும்னு கட்டாயமில்லே"
    
"உங்கள் வீட்டிலேயே ஒரு நூலகம் நடத்திக் கொண்டிருந்தீர்களே..." என்று தொடங்கியவுடனேயே இடைமறித்துத் திருத்தம் செய்தார்...
    
"நடத்திகிட்டிருந்தீர்களே இல்லை... இன்னும் நடந்திண்டு இருக்கு... பணமே கட்ட வேண்டாம்.... எடுத்துப் போய்ப் படித்து விட்டு பத்திரமாகத் திருப்பித் தரவேண்டும்... நாலாயிரம் புத்தகங்கள் இருக்கு.." என்றார்.
     
அப்போது உள்ளே நுழைந்தனர் ஒரு தாயும் சிறுவனும். சிறுவனிடம் முக்தா, "டேய் பயலே... படிப்பியா...... பாரு.. நீ எடுக்கற புக் காசு வாங்க மாட்டேன்... உனக்கு ஃப்ரீ..." என்றார்.
     
'ஓ பக்கங்கள்' விற்கும் ஸ்டாலில் ஞானி அமர்ந்திருந்தார். விடாது ஃபோனில் பேசிக் கொண்டிருந்தார்.
   
எழுத்தாளர்-வாசகர் சந்திப்புக்காக என்று இந்த இடம். போன முறை இப்படி பார்த்ததாக எனக்கு நினைவில்லை.
வெ. இறையன்பு வின் 'ரேண்டம் தாட்ஸ்' எங்கு தேடியும் கடைசி வரை கிடைக்கவேயில்லை.
      
இப்படி அடுக்கினால் புத்தகத் தலைப்பைப் படிக்க தமிழ்ப் பட ஹீரோ வில்லன்களை அடிக்குமுன் கழுத்தைத் திருகுவாறே அப்படித் திருக வேண்டியதாயிருக்கிறதாயினும்  பார்க்க அழகாகவே இருக்கிறது.  
  

    
திருப்பூர் கிருஷ்ணன்...
    
வயதான ஒருவரை ஒரு தள்ளுவண்டியில் தள்ளிக் கொண்டு வந்ததைப் பார்த்தேன். சொந்த ஏற்பாடா... பபாசி ஏற்பாடா தெரியவில்லை.
 
ஆனந்த விகடன் ஸ்டாலில் ஆர்வமாக 'பொன்னியின் செல்வனை'ப் புரட்டினேன். ஏனோ திருப்தியில்லை. கல்கியில் வந்த அளவிலேயே படங்கள் எதிர்பார்த்ததா, நிறையப் படங்கள் எதிர்பார்த்ததா, என்னுடைய எந்த  எதிர்பார்ப்பு தவறு?
    
கீதா பிரஸ் கடையில் பகவத் கீதை பொழிப்புரையுடன் பாக்கெட் சைஸ் பத்து ரூபாய்க்கும், விஷ்ணு சஹஸ்ரநாமம், ஹனுமான் சாலீசா போன்றவை மூன்று நாலு ரூபாய்க்கும் கிடைத்ததை பதினைந்து வாங்கிக் கொண்டேன். புத்தாண்டுக்கு சிலருக்கு இதைத் தரலாம் என்று தோன்றியதால்!
    
பீட்சா எண்பது ரூபாய்க்கும், பர்கர்கள் ஐம்பது ரூபாய்க்கும், ஃப்ரூட் சாலட் முப்பது ரூபாய்க்கும் கிடைத்தன. தேங்காய்ப் பூ நிறைய வைத்து விற்பனை செய்தார்கள். முப்பது ரூபாய், நாற்பது ரூபாய்...நான்காக நறுக்கித் தரப் பட்ட அவற்றை மக்கள் அப்படியே சாப்பிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்த என் டி ஜி எல் பதறியது!

   
வெளியே நடைபாதைக் கடைகளில் ஒன்று பத்து ரூபாய், இருபது ரூபாய், முப்பது ரூபாய் என்று பழைய, நடுவாந்தர, ஆங்கில, தமிழ்ப் புத்தகங்கள் விற்றுக் கொண்டிருந்தனர். உள்ளே இருக்கும் பெரும்பாலான விலையுயர்ந்த புத்தகங்களுக்கு,  மலிவு விலைக் காபி இவர்களிடம் இருந்தது. உள்ளே கிடைக்காத புத்தகங்களும் கிடைத்தன. ஏதாவது புத்தகத்தைத் தேடினால் அருகில் வந்து எதை தேடுகிறோம் என்று கேட்டு அறிந்து, எடுத்துக் கொடுப்பது அல்லது கொஞ்ச தூரத்தில் எங்கோ சென்று அங்கிருந்து நாம் தேடும் புத்தகத்தை உடனே கொண்டு வந்து தருவதும் நடை பெற்றுக் கொண்டிருந்தது.